ஃபாரின் வீடு
வழக்கமாக கடற்கரையில் ஜாகிங் பொகும் போது தான் நான் சுரேஷைப் பார்த்தேன். அவன் சுரேஷ் தானா? என்று தீர்மானிப்பதற்குள் அவன் வந்து வியர்வையையும் பொருட்படுத்தாமல் என்னைக் கட்டிக்கொண்டு "ஹேய்! நீ ஜெகன் தானே? கடையத்துல எங்க தெருவுல இருந்தியே? இப்ப இங்கேயா இருக்க? என்ன பண்ற? எங்கே வேலை? ..." என்று செக்கண்டுக்கு நாலு வார்த்தைகள் வேகத்தில் பேசினான். அவன் மாறவே இல்லை அதே சூப்பர் மேன் சுரேஷ் தான் என நினைத்துக்கொண்டேன் . பல ஆண்டுகள் கழித்து நண்பனைப் பார்த்ததில் ஏகப்பட்ட சந்தோஷம். இருவரும் ஃபோன் நம்பரையும் சில தகவல்களையும் பரிமாறிக் கொண்டோம். வீடு திரும்பி ஷேவ் செய்து வழக்கம் போல அலுவலகம் சென்று வேலை செய்து திரும்பி உணவு உண்டு மொட்டை மாடிக்குப் போனேன். கொஞ்ச நேரத்தில் கையில் பால் தம்ளரோடு கவிதா வந்தாள்.
"அபிஷேக் என்ன பண்றான் கவி?"
"தூங்கிட்டான்"
அந்த நிலவில் கவிதாவின் தோற்றம் உண்மையிலேயே கவிதையாகத்தான் இருந்தது. கணவன் மனைவி என்பதை மீறி எங்கள் இருவருக்குள்ளும் நல்ல நட்பு இருந்தது. அவளிடம் எதைப் பற்றி வேண்டுமென்றாலும் பேச முடியும் என் ஆபீசில் வேலை செய்யும் ராகினி உட்பட. அது நான் செய்த பாக்கியம் தான்.
"நீ என்னவோ யோசிச்சுக்கிட்டே இருந்தியே ஜெகன்! ஆபீசுல ஏதாவது பிரச்சனையா?"
"இல்லடா கவி! நான் உங்கிட்ட சொல்லியிருக்கேன் இல்ல? எங்க ஊர்ல சூப்பர் மேன் சுரேஷ்னு ஒருத்தன் இருந்தான்னு. அவனைப் பார்த்தேன்"
"என்ன இப்ப ரொம்ப கஷ்ட நிலையில இருந்தானா?" சிரித்து விட்டேன்.
"சேசே! அப்படி ஒண்ணும் இல்ல! "
"அப்ப என்ன யோசிச்ச?"
"இல்ல! அவன் ரேவதியை கல்யாணம் செஞ்சுக்கிட்டானான்னு தெரியலையே?"
"அவர்ட்டயே கேக்க வேண்டியது தானே?"
அதானே என்று எனக்கும் தோன்றியது. ஆனாலும் ஏதோ ஒன்று என்னைத் தடுத்தது,. அதன் பெயர் தான் நாகரீகம் என நினைக்கிறேன். வேலை இருப்பதாகச் சொல்லி கவிதா கீழே போய் விட்டாள். அந்த அரை இருட்டில் என் மனம் பின்னோக்கி பயணிக்கத் தொடங்கியது.
அது 1980களின் தொடக்கம். எங்கள் ஊர் நெல்லை மாவட்டத்திலேயே கடைக்கோடியில் ஒரு மூலையில் ஒளிந்து கொண்டிருந்தது என்றாலும் பாப்பாங்குளம், ஆழ்வார்குறிச்சி, சிவசைலம் போன்ற குக்கிராமங்களுக்கு எங்கள் ஊர் கடையம் தான் டவுன். அங்கு தான் அந்த வட்டாரத்தின் ஒரே தியேட்டரான கோபால கிருஷ்ணா இருந்ததும் அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். ஊரில் மொத்தம் ஆறோ அல்லது ஏழோ தெருக்கள் இருந்தால் அதிகம். எங்கள் தெரு பஸ் ஸ்டேண்டை ஒட்டினாற் போல இருந்ததால் மக்கள் நடமாட்டம் இருக்கும். ஊரில் வசிப்பவர்கள் பெரும்பாலும் விவசாயம் செய்பவர்கள் தான். ஒன்றிரெண்டு கல்லூரி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் உண்டு. மற்றபடி அதிகம் படிக்காதவர்களே வாழ்ந்தனர். எங்கள் ஊர்க்காரர்களுக்கு திருநெல்வேலி என்பதே எட்டாக்கனவு என்றால் சென்னையைத்தாண்டி ஒரு உலகம் இருக்கிறது என்பதே பலருக்குத் தெரியாமல் இருந்தது. ஊர் திருவிழாவும் அவ்வப்போது நடக்கும் சொத்து தகறாருகளும் தான் பொழுது போக்கு எங்களுக்கு .
எந்த சம்பவங்களுமே அதிகம் எட்டிப்பார்க்காத அந்த ஊருக்கு ஒரு அதிசயமாக வந்தவன் தான் சுரேஷ். அவன் அப்பாவுக்கு ஏதோ ஒரு பேங்கில் வேலை. சென்னையில் இருந்த அவரை தூக்கி அஸ்ஸாமில் போட்டு விட்டார்கள். அங்கே படிப்பு எப்படி இருக்குமோ என்று கவலைப்பட்டு தாத்தா பாட்டி வீட்டுக்கு அனுப்பினார்கள் அவன் பெற்றோர். கணபதி ஐயா எங்கள் ஊரில் கொஞ்சம் சொத்து உள்ளவர். அவர் வீடு எங்கள் தெருவில் தான் இருந்தது. பத்தாம் வகுப்பு முடிந்து +1 சேர வந்தான் அவன். எங்கள் பள்ளியில் ஆங்கில மீடியம் இல்லை என்பதால் பாவநாசம் பள்ளியில் சேர்த்தார்கள். டிராயரும் கைலியுமே எங்கள் உடைகளாக இருந்த காலத்தில் முதல் முதலில் பேண்ட் என்ற பணக்கார உடையைப் போட்டான் அவன். எந்நேரமும் பேண்டும் சட்டையும் காலில் செருப்புமாக திரியும் அவனை நட்பு செய்து கொள்ள எங்களுக்குள் போட்டா போட்டி இருந்தது. ஆனால் அவன் எந்த பந்தாவும் இல்லாமல் எல்லாரிடமும் சகஜமாகப் பேசினான். பேச்சில் அடிக்கடி ஆங்கில வார்த்தைகளை உபயோகப்படுத்தி எங்களை வாய் பிளக்க வைத்தான். சென்னைக் கடற்கரையின் அழகு, தார் ரோடு உள்ள தெருக்கள் என தமிழகத் தலைநகரைப் பற்றி அவன் அளந்து விட்டவை எவ்வளவு தூரம் உண்மை என எங்களுக்குத் தெரியவில்லை. அங்கு குடிசை வீடுகளே இல்லை அவன் சொன்னதை நம்பியவர்களில் நானும் ஒருவன்.
அவனது ஸ்டைல், பேச்சு நடை உடை இவைகள் எங்களுக்குக் கொஞ்சம் கொஞ்சமாக பழகத் தொடங்கிய காலத்தில் மற்றொரு மகத்தான சம்பவம் எங்கள் ஊருக்கு அதிலும் எங்கள் தெருவிலேயே நடந்தது . ஆம்! கடையம் ஊருக்கு வெளியே இருக்கும் அணைக்கட்டுக்கு இன்ஞ்சினியராக வந்து சேர்ந்தார் ஸ்ரீனிவாசன் சார்! அவர் மட்டும் வந்திருந்தால் இந்தக் கதையே இல்லையே! உடன் இரு பெண்களையும் மனைவியையும் அழைத்து வந்தது தான் எங்கள் இதிகாசமானது. அவர்களது வரவை தெருவே வேடிக்கை பார்த்தது, அப்படி ஒன்றும் எங்கள் ஊருக்கு யாரும் புதிதாகக் குடிவராமல் இல்லை. ஆனால் ஸ்ரீனிவாசன் சார் வரவு மற்றவர்களைப் போலவா என்ன? காரணம் அவரது குடும்பம். அப்படிக்கூட சொல்ல முடியாது அவரது குடும்பத்தினரின் நிறம். கலர் என்றால் கலர் அப்படி ஒரு கலர். அதை வெள்ளை என்று கூடச் சொல்ல முடியாது. என் நண்பன் சுடலையாண்டியின் பாஷையில் சொல்வதானால் ரோசாப்பூவுக்கு லைட்டு போட்டா மாதிரி ஒரு நிறம்.
மாநிறமே அசத்தலான கலராக இருந்த எங்கள் ஊருக்கு இப்படி வெள்ளைக்காரன் ரேஞ்சில் பெண்களையும் மனைவியையும் அழைத்து வந்தால் எங்கள் ஊர் பார்க்காமல் இருக்குமா? கடவுள் பார்த்த பக்தர்கள் போல வாயே பேசாமல் அப்படி நின்றிருந்தோம். பாவாடை தாவணி அணிந்து ஒரு பெண்ணும், ஃபிராக் அணிந்து ஒரு பெண்ணும் இறங்கினார்கள். அந்தப் பாவாடை தாவணிப் பெண்ணைப் பார்த்ததும் எங்களுக்கும் தோன்றிய முதல் எண்ணம் தேவதைகள் ஒருவேளை இப்படித்தான் இருக்குமோ என்பது தான். தனிதனியாக கண்கள் மூக்கு முகவாய் என்று பார்த்தால் எதுவும் குறிப்பிடும்படி இல்லை. ஆனால் மொத்தத்தில் அவளது முகம் அழகோ அழகு. சுருண்ட கேசத்தை ஸ்டைலாக காதின் பின்புறம் செருகிய போது எங்கள் ஜென்மம் பூர்த்தியானது. வந்து இறங்கி சுற்று முற்றுமுற்றும் பார்த்த அவள் திகைத்தாள். பின்னே சுமார் இருப்பத்தைந்து ஜோடிக்கண்கள் அவளையே வெறித்தன என்றால்? எந்தப் பொருளையும் எடுக்காமல் உள்ளே ஓடி விட்டாள். என் தங்கை ரமா அப்போதே அவளை சினேகம் செய்து கொள்ளும் நோக்கத்தோடு இருந்தாள்.
அவர்களது நிறம் பற்றிய பிரமிப்பு கொஞ்சம் விலகியது என்றாலும் பெண்களிடம் அதைப்பற்றிய சர்ச்சை மிக அதிகமாக இருந்தது. "வெளி நாட்டுல இருந்து சோப்பாம். அதுல குளிச்சா இப்படித்தான் நிறம் வருமாம்" என உமா அண்ணி கொளுத்திப் போட அந்த சொப்பு தான் வேணுமென்று பல பெண்கள் என் தங்கை உட்பட வீட்டில் அடம் பிடித்தது அடி வாங்கியது நிஜம். புளி சேர்த்துக்க மாட்டாங்களாம், காரம் சாப்பிட மாட்டாங்களாம் என்று ஆளுக்கொன்று சொன்னார்கள். அதை விட அவர்கள் வீட்டில் வேலை செய்யும் இசக்கி அளந்து விட்டது தான் உச்சம்.
"நேத்து அவுக வீட்டுல ஏதோ விருந்து போல! சாப்பிட்டுட்டு அந்தம்மா வெத்தலை போட்டாக பார்த்துக்கங்க! அந்த வெத்திலைச் சாறு தொண்டையில இறங்குறது அப்படியே தெரியி" என்றாள். அது எவ்வளவு தூரம் சாத்தியம் என நாங்கள் யோசிக்கவே இல்லை. அனைத்து ஆண்களும் நான் உட்பட அந்தப் பாவாடை தாவணிப் பெண்ணின் தரிசனம் பெற தவமிருந்தோம். அவளை பார்த்தாலே போதும் என்றிருந்தது எங்களுக்கு. சுரேஷ் ஒருவன் தான் அந்த வீட்டுக்கு சுதந்திரமாகப் போய் வந்தான். காரணம் அவன் தாத்தா வீடு அதைத்தான் இஞ்சினியருக்கு வாடகைக்கு விட்டிருந்தார்கள் . தவிர அவன் வீட்டுக்கு நேர் எதிரே அந்த வீடு இருந்தது. வேண்டுமென்றே ரேவதியோடு அது தான் தாவணிப்பெண்ணின் பெயர். பேசுவான். நாங்கள் இமைக்கவும் மறந்து அவளை ரசிப்போம். ரேவதி ஒன்பதாம் வகுப்பாம். படிப்பில் வெகு சுட்டியாம் என்ற விவரங்களை சுரேஷ் மூலம் அறிந்து கொண்டோம். இதனிடையில் எங்கள் தெருவில் இருந்த மற்ற பெண்கள் அவளோடு நட்பானார்கள். என் தங்கை தான் ஒரு நாள் சொன்னாள்
"ஆளு நல்லா அழகா தான் இருக்கா! ஆனா ரொம்ப திமிரு! நம்மை மதிக்கவே மாட்டேம்கா! அவுக அப்பாரு இஞ்சினியருன்னா என்ன? அதுக்காக இப்படி வானத்தைப் பார்த்தா நடக்கணும்? என்னவோ இங்கிலீஸ் மீடியத்துல படிக்காளாம். அலட்டுதா" என்றாள். கட்டாயம் இதற்கு பொறாமை தான் காரணம் என்று நினைத்தேன். ஆனாலும் மற்ற பெண்களிடம் ரேவதியின் செல்வாக்கு குறையத்தான் செய்தது.
பள்ளி விடுமுறை முடிந்து அவளையும் பாவநாசம் ஸ்கூலியேயே சேர்த்தார்கள். தினமும் அவளை கூட்டிப்போவதும் கூட்டி வருவதும் சுரேஷின் வேலை ஆனது. அப்போது தான் சுரேஷ் சூப்பர் மேன் சுரேஷ் ஆனான். நாங்கள் நெருங்கவே பயந்த அந்த அழகு தேவதையை வழி நடத்துகிறானே? அவன் சூப்பர்மேன் இல்லாமல் வேறு என்னவாம்?
ஒரு நாள் கணபதி ஐயா புளியந்தோப்பு கிணற்று மேட்டில் அமர்ந்து திருட்டு பீடி பிடித்துக்கொண்டிருக்கும் போது தான் சூப்பர் மேன் தனது காதலைச் சொன்னான்.
"டேய்! அவ என்னைக் காதலிக்குறான்னு நினைக்கிறேண்டா" என்றான் மொட்டையாக. எனக்கு என் தங்கையை நினைத்து பக்கென்றது.
காதல் லவ் என்பது போன்ற வார்த்தைகள் கெட்ட வார்த்தைகளாக மட்டுமே அறிந்திருந்த எங்களுக்கு அவன் வெளிப்படையாக அப்படிப் பேசியது அதிர்ச்சியாகவும் அதே நேரம் கிளுகிளுப்பாகவும் இருந்தது. அவன் சூப்பர்மேன் தான் என்பதை அவன் தைரியம் உறுதிப்படுத்தியது.
"யாருடா?" என்றான் முத்து எங்களைப் பார்த்து கண்ணடித்தபடி.
"வேற யாரு இங்க எனக்கு சமமா இருக்காங்க? எல்லாம் ரேவதி தான்." என்றான்.
என் மனதில் எழுந்தது ஏமாற்றமா? நிம்மதியா என எனக்கே தெரியவில்லை.
"எப்படிச் சொல்லுத?"
"பஸ்ல என் பக்கத்துல உக்காருரா! எனக்கு உக்கார இடம் கிடைக்கலைன்னா என் பையை வாங்கி வெச்சுக்குறா! என்ன சாப்பிட்டீங்க? உங்க அம்மா அப்பா எங்கேன்னு அக்கறையா கேக்குறா?" என்றான்.
மதுரை வரை போய் வந்திருந்த மாணிக்கத்துக்கு இது சரியாகப்படல்லை.
"இதுல என்னலே இருக்கு? சாதாரணமா கேக்கா?"
சட்டென கோபம் வந்தது சூப்பர் மேனுக்கு.
"அவ உன்னை இது மாதிரி கேட்டாளா?"
"இல்லையே?"
"அப்ப? என்னை மட்டும் தானே கேட்டா? இதுல இருந்தே தெரியலையா?" என்றான் காலரைத்தூக்கி விட்டபடி. மற்றவர்கள் அவளோடு பேசியதே இல்லை என்ற உண்மையை நாங்கள் அப்போது சொல்லவில்லை. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக சுரேஷ் ரேவதி காதல் வளர்ந்தது. கடலை மிட்டாய் பரிமாறிக்கொள்ளுதல், புளியங்காய் கொடுத்தல் என வளர்ந்தது. அவன் காக்காக்கடி கடித்துக்கொடுத்ததை ஆவலோடு வாங்கிக்கொண்டாள் என்று சொன்னான் ஒரு நாள்.
ஒரு ஞாயிற்றுக்கிழமை. அம்மா செய்திருந்த கறிக்குழம்பை ஒரு பிடி பிடித்து விட்டு வாசலுக்கு வந்த போது ரேவதி எங்கள் வீட்டுப்படியேறிக் கொண்டிருந்தால்! ஆம் அவளே தான் வந்தாள். என் இதயத்துடிப்பு எகிறியது.
"வந்து.." என்று இழுத்தாள்.
"ரமா உள்ள இருக்கா" என்றேன் உளறலாக.
"இல்ல நான் உங்களைத்தான் பாக்க வந்தேன்"
எனக்கு கால் வெலவெல வென்று வந்தது. வாய் உலர்ந்து போனது. ஆனால் அவளோ எதையோ என் கையில் திணித்தாள்.
"இதை அவரு கிட்ட கொடுத்திருங்க" என்று சொல்லி விட்டு விருட்டென ஓடி விட்டாள். பிரித்துப் பார்த்தேன் ஒரு காகிதம். இந்த சம்பவத்தை நான் கிணற்று மேட்டில் சொன்ன போது ஊய் என பல விசில் சத்தங்கள் கேட்டன.
"சுரேசு! நீ சொன்னது சரி தான். அந்தப்புள்ள உன்னிய லவ் பண்ணுது. அதான் உன் பேரைகூடச் சொல்லாம அவருன்னு பேசியிருக்கு. " என்றான் மாணிக்கம்.
"அப்ப நீ எங்களுக்கு பொட்டல் புதூர் ஏ 1 கடையில பரோட்டா சால்னா வாங்கிக்குடு. " என்றான் ராமதுரை. அந்த கடிதத்தில் என்ன இருக்கிறது என பிரித்துப் பார்க்கச் சொன்னோம். வீட்டில் தனியாக இருக்கும் போது தான் அதைச் செய்வேன் என தீர்மானமாகக் கூறி விட்டான் சுரேஷ். எங்களுக்கு ஒரே ஏமாற்றம். சினிமாவைத்தவிர காதல் கடிதத்தைக் கண்ணால் கூட கண்டிராத எங்களுக்கு அதை வாசிக்க கிடைத்த ஒரு சந்தர்ப்பமும் போய் விட்டதே என வருந்தினோம். ஆனால் மறு நாள் அவன் கண்களில் நீரோடு வந்தான்.
"என்னலே? அந்தப் பிள்ளை ஆப்பு வெச்சிருச்சா?" என்றான் சுடலை.
"இல்லடா! அவ என்னையே நம்பியிருக்காடா! எனக்காக உயிரையும் கொடுப்பேன்னு எழுதியிருக்கா! "
"சே! என்ன பொண்ணுடா அவ! உன்னையே நினைச்சுக்கிட்டு இருக்கா போலயே" என்றான் ராமதுரை. பொட்டல் புதூர் ஏ 1 பரோட்டா உறுதி என்பதில் அவனுக்கு ஆனந்தம். இருவரின் நெருக்கமும் அதிகரித்தாகத் தோன்றியது எனக்கு. எந்நேரமும் சுரேஷ் அவர்கள் வீட்டிலேயே கேரம் போர்டு சீட்டு என்று விளையாடினான். அவனுக்கு அந்த வீட்டில் காப்பி டிஃபன் கொடுக்கப்பட்டது. ஒரு நாள் என் அம்மா அதிசயமாக செய்திருந்த பூரி கிழங்கை இஞ்சினியர் வீட்டில் கொடுத்து வருமாறு என்னைப் பணித்தார். அது தான் என் வாழ்க்கையில் லட்சியம் என்பது போல தூக்கிக்கொண்டு ஓடினேன்.
"அம்மா குடுத்து விட்டாக" என்றேன். அதற்கே முகம் சிவந்து போனது.
"யாரு உங்கம்மா?" என்று ரேவதி கேட்ட போது எனக்கு அழுகை வந்து விட்டது. அதான் சுரேஷ் வீட்டுக்கு நாலு வீடு தள்ளி. என்று சொல்வதற்குள் துக்கம் தொண்டையையை அடைத்து. அன்னைக்கு எங்க வீட்டுக்கு வந்து லெட்டர் குடுத்தியே?" என்றேன் குரல் கம்ம.
"ஓ! அதுவா! அது நீங்க தானா?" என்றாள் அலட்சியமாக. என் தங்கை சொன்னது உன்மை என்று உணர்ந்து கொண்டேன். ஆனால் என் மனதில் இருந்த ஏதோ ஒன்று அப்போது மளுக்கென உடைந்தது. அவள் மேல் இருந்த பக்தி, பிரமிப்பு விலகி அவளும் சாதாரணப் பெண் தானே என்ற உண்மை புலப்பட்டது. அப்போது அவள் அத்தனை அழகாக எனக்கு தோன்றவில்லை. நடந்ததை கினற்று மேட்டு மாநாட்டில் சொன்ன போது அனைவரும் சிரித்தார்கள்.
"தப்பா நினைக்காதே ஜெகன்! அவ என்னைத்தவிர வேற ஆம்பிளைங்களை நிமிர்ந்து கூடப் பாக்க மாட்டாடா!" என்றான். நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம். எனக்கு ஏனோ சிரிப்பு வந்தது.
நாட்கள் இறக்கை கட்டிக்கொண்டு ஓடின. இல்லை பறந்தன. இப்போது நாங்கள் +2 வந்து விட்டோம். ரேவதி 10வது. எனக்கு எப்படியாவது சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் இடம் வாங்கி விட வேண்டும் என்ற வெறி இருந்ததால் என் ஆசிரியர் வீட்டுக்கு ஃபிசிக்ஸ் படிக்கப் போனேன். படிப்பு முதலிடம் பெற்று மற்ற விஷயங்கள் பின்னுக்குப் போயின. சூப்பர் மேனைப் பார்ப்பதும் குறைந்தது.
சுரேஷின் பெற்றோர் இப்போது டெல்லிக்கு வந்து விட்டதால் அவனை கல்லூரிப்படிப்புக்கு அங்கே அழைத்துச் சென்று விடுவார்கள் என்று சொன்னான். அதை அவன் சொன்ன போது குரல் விம்மியது. எங்களை விட்டுப் பிரிய மனம் இல்லாமல் இருக்கிறான் என்று நான் நினைத்தேன். ஆனால் என்னை நிஜ உலகுக்கு இழுத்தவன் சுடலை தான்.
"அப்ப ரேவதி?" என்றான்.
"அவளை ஒரு நாளும் கை விட மாட்டேண்டா! எங்க அப்பா பெரிய ஆபீசர். எனக்கு டெல்லியில மெடிக்கல் சீட்டு வாங்கிக்கொடுத்துருவார். நானும் அவளும் லெட்டர் போட்டுக்குவோம். படிச்சு முடிச்சதும் அவங்க வீட்டுக்கே போய் பொண்ணு கேப்பேன். டாக்டர் மாப்பிள்ளைன்னா கசக்குதா என்ன?" என்றான். அடுத்த மாதத்தைக்கூட திட்டமிட்டுப் பழக்கமில்லாத என் நண்பர்கள் அவனது தொலை நோக்குப் பார்வையை வியந்தனர்.
இஞ்சினியர் ஸ்ரீனிவாசன் சாருக்கும் எங்கேயோ தேனிக்குப் பக்கத்தில் மாற்றலாகி விட்டது. ரேவதியும் போய் விடுவாள் என்ற செய்தியும் வந்தது. என் நண்பர்கள் பெருமூச்சு விட்டனர். என் தங்கையோ ஊருக்கே நல்லது என்றாள். எனக்குத் தெரியாதது ஏதேனும் அவளுக்குத் தெரிந்திருக்குமோ என்ற சந்தேகம் வந்தது.
கண்ணீரையும் முகவரிகளையும் பரிமாறிக்கொண்டு பிரிந்து சென்றான் சுரேஷ். அதன் பிறகு சில மாதங்கள் லெட்டர் போட்டுக்கொண்டோம். எனக்கு மிகவும் நல்ல மார்க்குகள் கிடைத்து நான் ஆசைப்பட்ட படியே சென்னை கிண்டி கல்லூரியில் இடம் கிடைத்த விவரத்தை அவனுக்கு எழுதியிருந்தேன். வாழ்த்து சொல்லி வந்த கடிதம் தான் சுரேஷிடமிருந்து வந்த கடைசிக் கடிதம் என நினைக்கிறேன் . அதன் பிறகு புதுக்கல்லூரி புது இடம் என நான் என் வட்டத்துக்குள் அடங்க சுத்தமாக தொடர்பு விட்டுப்போய் இதோ இப்போது தான் மீண்டும் நேரில் பார்க்கிறேன். அவனிடம் கட்டாயம் ரேவதி பற்றிக் கேட்க வேண்டும். ஓ! நீ இன்னமும் அவளை நினைவு வெச்சிருக்கியாடா எனத்தான் கேட்பான் நிச்சயம்.
அடுத்த ஞாயிறன்று ஏதோ ஒரு ரிசார்டுக்கு என்னை வரச் சொல்லியிருந்தான். தனியாக வரச் சொல்லியிருந்ததால் நான் மட்டும் போனேன். ஈ சி ஆர் ரோட்டில் அழகான இடத்தில் கடற்கரையை ஒட்டி அமைந்திருந்தது அந்த இடம். கொஞ்சம் உள் நாட்டு மற்றும் வெளி நாட்டு சரக்குகள் உள்ளே போனது. தைரியம் வர நான் கேட்டேன்.
"சுரஷ்! உனக்கு ரேவதியை நினைவு இருக்கா?"
சில கணங்கள் அமைதிக்குப் பிறகு "என்ன இப்படி கேக்குற ஜெகன்? ஷீ இஸ் மை வைஃப் நௌ!!" என்றான்.
எனக்கு தூக்கிவாரி போட்டது. டீனேஜ் காதலை தொடர்ந்து வளர்த்து கல்யாணத்தில் முடித்திருக்கிறானே! சொன்னபடியே செய்து விட்டானே இவனல்லவோ ஆண்பிள்ளை என்று தோன்றியது. கை கொடுத்துப் பாராட்டினேன்.
"வீ ஆர் ஹேப்பிலி மேரீட் ஃபார் மோர் தான் எய்ட் இயர்ஸ் ஜெகன். "
"ஓ! வெரி குட்! நீ இப்ப என்ன பண்ற?"
"வாட் நான்சென்ஸ் மேன்! இந்த ரிசார்டு என்னுது! இது தவிர எனக்கு சொந்தமா இஞ்சினியரிக் டூல்ஸ் கட்டிங்க் ஃபேக்டரி ஒண்ணு அம்பத்தூர்ல இருக்கு. நான் எப்பவுமே ஸ்பெஷல் தானே!" என்றான் தோரணயாக.
உண்மையிலேயே சூப்பர் மேன் தான் என நினைத்துக்கொண்டேன்.
"அப்ப நீ மெடிக்கலுக்குப் படிக்கலையா?"
"வேஸ்ட் ஆஃப் டயம். அதுல இந்த அளவுக்கு பணம் சம்பாதிக்க முடியாது. " என்று சொல்லி விட்டு என்னைப் பற்றிக் கேட்டான். பெரிய கம்பெனியில் வேலை செய்வதாக சொன்னேன். எகத்தாளமாக சிரித்தான். என் கூட பார்ட்னரா சேர்ந்திடு! மாசம் ரெண்டு லட்சம் கியாரன்டி. என்றான். வாயூற யோசிக்கிறேன் என்றேன். இரவு கவிந்து கொண்டூ வந்தது. கிளம்பணும்டா என்றேன்.
"சரி! நானும் இன்னைக்கு அக்கவுண்ட்சை முடிக்கணும். என் ரூமுக்குப் போறேன். நீ கிளம்பு! சிக்கன் சாப்பிட்டுட்டு கிளம்புடா ஜெகன். அடிக்கடி வா" என்று விடை கொடுத்தான். தனிமையை, அலையை, சிக்கனை ருசித்து விட்டு கால் மணி கழித்து எழுந்து வெளியேற வந்தேன்.
"சார் பில்" என்றான் வெயிட்டர்.
"உங்க முதலாளி குடுக்கலையாப்பா?" என்றேன். அவன் புரியாமல் விழித்தான்.
"உங்க முதலாளி ஃபிரெண்டுப்பா நானு! அவர் கிட்ட போயி சொல்லு!" என்றேன்.
"இல்ல சார்! எங்க முதலாளி ரொம்ப ஸ்டிரிக்ட் நீங்களே வந்து சொல்லுங்க" என்று என்னை அழைத்துச் சென்றான். ரூமைப் பார்த்து வியந்து போனேன். அத்தனை வேலைப்பாடுகள் ஆடம்பரங்கள்.
"என்ன சார் சொல்லுங்க?" என்ற குரல் கேட்டு அதிர்ந்தேன். காரணம் முதலாளி இருக்கையில் இருந்தது அறுபது வயதான ஒரு வட இந்தியர். மயங்கி விழாமல் இருக்க மேஜையைப் பிடித்துக்கொண்டேன். அப்படியானல் சுரேஷ் இல்லையா இதன் முதலாளி? என்று யோசித்தபடியே பணத்தைக் கொடுத்து விட்டு வெளியே வந்து அவனுக்கு ஃபோன் செய்தேன். ஸ்விட்ச் ஆஃப் என்ற மெக்கானிக்கல் குரல் முகத்தில் அறைந்தது.