அற்புதம் -6
தன் நண்பர்கள் அனைவரையும் திட்டி தீர்த்தவாறு, சற்று குழப்பமான மனநிலையோடும், அதேநேரம் புதிதாக என்ன பிரச்சினை ஆரம்பித்திருக்கிறதென்று தெரியவில்லையே? ஒருவேளை இப்பிரச்சினையால் தன் தங்கைக்கு ஏதேனும் கெட்ட பெயர் வந்து விடுமோ? அவள் மனம் புண்படும் படியான நிகழ்வுகள் ஏதேனும் நிகழ்ந்துவிடுமோ? என்ற அச்சத்துடனே தான் மந்தைவெளிக்கு வந்து சேர்ந்தான் மிகிரன்..
அவனது முகம் கடுகடுவென்று இருப்பதைக் கண்டதால் அதன் பிறகு அவன் தோழர்கள் எதுவும் வாய் திறந்துப் பேசவில்லை. ஆனால் அவர்களுக்குள்ளேயே எதையோ விவாதித்தவாறு வந்தனர். அது மிகிரனுக்கும் தெரிந்தாலும் இப்போது தன் தங்கைக்கு எந்த அவப்பெயரும் வந்து விடாதவாறு ஏற்ப்பட்டிருக்கும் பிரச்சினையை தீர்க்கவேண்டும். கூடவே தன் தங்கையின் பிரச்சனையின்றி, வேறு ஏதேனும் பிரச்சனையாக இருந்தாலும் எக்காரணத்தைக் கொண்டும் தான் எதற்காக நள்ளிரவு நேரத்தில் வெளியுலகிற்கு சென்று விட்டு வருகிறோம் என்பதை யாருக்கும் சொல்லக்கூடாது என்று சிந்தித்து முடிவெடுத்தவாறு தான் மந்தையை அடைந்தான்..
மந்தை வெளியில் கூடியிருந்த அவன் இன மக்கள் அனைவரும் அவனைப் பார்த்து விட்டு தங்களுக்குள் ஏதோ பேசிக் கொள்ள, இன்னுமே மிகிரனுக்கு நெஞ்சில் கலக்கம் கூறியது. வரவழைத்த தைரியத்தோடு மந்தையின் மத்தியில் மரத்தினால் எழுப்பப்பட்டிருந்த மேடையில் கம்பீரமாக அமர்ந்திருந்த தன் தந்தையை நெருங்கியவன்,
“அழைத்தீர்களா தந்தையே? ஏதேனும் பிரச்சினையா என்ன? ஏன் அனைவரும் இங்கு ஒன்றாகக் கூடி இருக்கிறார்கள்?” என்று எதுவும் அறியாதவனாய் கேட்டிட.
அவன் தந்தையோ விருட்டென்று எழுந்து நின்றவர்,
“என்ன பிரச்சினையென்று உனக்கு தெரியாதா? அல்லது உனக்கு தெரியாமல் தான் ஏதேனும் பிரச்சனை இங்கு வரக் கூடுமா? என்னிடம் எதையும் அவ்வளவு எளிதில் மறைக்க இயலாது மிகிரா? ” என்று பாறைகளுக்கிடையில் கஷ்டப்பட்டு புகுந்து வெளிவருவதை போல் அத்தனை கடினமான குரலில் வெளிவந்தது அவர் உதிர்த்த வார்த்தைகள் யாவும்.
அதை சிறிதும் இலட்சியம் செய்யாத மிகிரன், அதை அலட்சியப்படுத்திவிட்டு,
“பிரச்சினை என்னவென்று தெரியாததால் தானே தங்களிடம் அதை பற்றி அறிந்து கொள்வதற்கான வினாவை எழுப்பிக்கொண்டு இருக்கிறேன். பிரச்சினை என்னவென்று தெரிந்திருந்தால் அதற்கான தீர்வையும் நானே கண்டறிந்திருப்பேனே தந்தையே! உங்கள் செவியிற்கு இதை வரவிட்டுருக்க மாட்டேனே!”என்று எப்போதும் போல் துடுக்குத்தனமாகச் சொன்னவன் கூரிய கம்பு ஒன்று தன் நெஞ்சில் ஆழப் புதைந்து நிற்பதை உணர்ந்து சடாரென்று விடைத்த நெஞ்சோடு உடலை முறுக்கிக் கொண்டு நிமிர்ந்து பார்த்தான்..
அவனின் தந்தை தான் தன் கையிலிருந்த கூரிய செங்கோல் என்று விளிக்கப்படும் பழுக்கக் காய்ந்த சலாகையை அவன் நெஞ்சுப் பகுதியில் வைத்து அழுத்தம் கொடுத்தவர்,“கூறடா நள்ளிரவு நேரத்தில் நீ வெளியில் சென்று வருவதற்கான காரணம் என்ன? நீ சென்றது நன்மைக்கே என்றாலும் இப்போது புதியதொரு பிரச்சினை உன்னால்தான் முளைத்திருக்கிறதென்று அனைவரும் நம்பும்படியான ஒரு சூழ்நிலை அமைந்து விட்டதே இதை எப்படி மாற்ற போகிறாய்? இப்பிரச்சினையை எப்படி நிவர்த்தி செய்யப் போகிறாய்?” என்றிட.
“என்ன தந்தையே இதெல்லாம்? பிரச்சனை என்னவென்று கூறாமல், பிரச்சனையை நிவர்த்தி செய்ய வேண்டுமென்று கேட்டால் என்னால் என்ன செய்திட இயலும். பிரச்சனை என்னவென்று தெளிவாக உரைத்திடுங்கள். பின் அதனை நிவர்த்தி செய்யும் முறைகள் என்ன என்பது பற்றி சிந்திக்கலாம்” என்று இன்னும் விடாப்பிடியாக எதுவும் அறியாத சிறு பாலகன் போல் பேசியவனைக் கண்டு சினம் மிகுந்தது அவன் தந்தைக்கு.
அவன் கரத்தை பிடித்து இழுத்துக்கொண்டு மரமேடைக்குப் பின்புறமிருந்த காலி இடப்பகுதிக்கு அழைத்துச் சென்றார். அங்கே பிரத்தியேகமான முறையில் மரத்திலிருந்து பிரிக்கப்படும் நார்களிலிருந்து, கயிறு போல் பின்னப்படும் வலைப்பின்னல்களுக்குள் இருந்தவற்றை கைநீட்டி காண்பித்தவர்,
“அவை என்ன என்பதை தெளிவாக எங்களாலையே ஆராய முடியவில்லை? முடிந்தால் நீ ஆராய்ந்து இது எந்த மாதிரியான பிரச்சினை என்பதை கண்டறிந்து அதற்கான தீர்வுகளையும் கண்டறி. எனக்கு பின் இப்பொறுப்புகளை கையில் எடுக்கப் போவது நீ தான். அப்படி இருக்கையில் உன் திறமைக்கு இது ஒரு சோதனை. கூடவே இரவு வேளையில் எவருக்கும் தெரியாமல் உலா செல்வதற்கான தண்டனையுமாகவும் இதுவே இருக்கட்டும்” என்று தீர்க்கமாக உரைத்ததைக் கேட்டு ஒரு நிமிடம் சிந்தனையில் ஆழ்ந்த மிகிரன் நொடியில் அவருடைய சவாலை ஏற்றுக் கொண்டவனாய்,
“நிச்சயமாக இந்த ஜந்து எங்கிருந்து வந்திருக்கிறது? எதற்காக வந்திருக்கிறது? கூடவே குடுவையில் என்ன இருக்கிறது? இதெல்லாம் எங்கிருந்து வந்ததென்பதையும் கண்டறிந்து உங்களனைவருக்கும் தெரியப்படுத்தவில்லை எனில் நான் உங்கள் மைந்தன் மிகிரன் இல்லை என்பதை அனைவருக்கும் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு சொல்லி விடுகிறேன்” என்று நிமிர்வுடன் கூறியவன் மற்றவர்கள் அனைவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு அந்த குடுவையும் விசித்திர ஜந்துவும் இருந்த இடத்தை நெருங்கினான்.
அவன் அவற்றை தொடுவதற்கு முன்பு தகவலறிந்த அந்தரி ஓடிச்சென்று மூலிகை வகைகள் சிலவற்றை பறித்துக் கசக்கி கொண்டு வந்தவள் அதை தன் தமயனின் கைகளில் தடவினாள்.கூடவே கை முட்டி வரை தடவி விட்டவள்,
“இப்பொழுது எந்த வித நஞ்சும் தங்களை தாக்காது தமயனே! தைரியமுடன் எதுவாக இருந்தாலும் கையாளுங்கள். எனக்கு தாங்கள் எத்தனையோ நல்லது செய்து இருக்கிறீர்கள்! அதற்கெல்லாம் பிரதி உபகாரமாக என்னால் இதை மட்டும் தான் செய்ய முடிந்தது மன்னித்துவிடுங்கள். ஒருவேளை தங்களுக்கு ஏதேனும் அவப்பெயர் வருவதுபோல் இருந்தால் நிச்சயம் என்னைப் பற்றிய அனைத்து உண்மைகளையும் அனைவரிடமும் எடுத்தியம்பி இருப்பேன். எப்படியாவது அதை அனைவருக்கும் புரிய வைத்து தங்களை இந்த இக்கட்டிலிருந்து காத்திருப்பேன்.. அதனால் தைரியமாக நீங்கள் செய்ய நினைத்ததை செய்யுங்கள்” என்று அவன் செவி அருகே குனிந்து மூலிகைச் சாற்றைத் தடவும் போது உரைத்தவள், அவனது புன்சிரிப்பைக் கண்டு முகம் மலர்ந்து தானும் புன்னகைத்தவள், அனைவருடனும் சென்று நின்று கொண்டாள்..
மிகிரனோ குனிந்து அவற்றை தன்னில் அடக்கிக் கொண்டிருந்த வலைப் பின்னல்களை மெதுவாக விடுவித்தவன், தன் விரல் கொண்டு அது எந்தவகை ஜந்து என்பதை ஆராய்ந்தான். அது நான்கு கால்களையும், முதுகெலும்புகளையும் கொண்ட ஜந்துவாக இருக்க, விழிகளிரண்டும் மூடிய நிலையில் மரணிக்கும் தருவாயில் இருந்தது. மேலும் வலைப்பின்னலில் இருந்து தப்பிக்க முயற்சி செய்திருக்கும் போல, அதன் மேற்புறமெங்கும் காயங்களும், கீறல்களுமாய் ரத்தச் சுவடுகளோடு இருந்தன..
மீண்டும் ஒரு முறைக்கு இருமுறை அதைத் திருப்பித் திருப்பிப் பார்த்தும் அது எந்த வகை உயிரினம், எங்கு வாழக்கூடியது? எதற்கு இங்கே வந்தது என்பதை அவனால் கண்டறிய முடியவில்லை. அதே நேரம் அவர்கள் இனத்தில் மிகப்பழமை வாய்ந்த மூத்த குடியானவர் ஒருவர் இன்னும் உயிர்த்திருக்க, அவரிடம் இவ்வுயிரினத்தைப் பற்றி விசாரித்தால் ஏதேனும் விளக்கங்களும், செய்திகளும் கிடைக்கக் கூடும் என்று சிந்தித்த மிகிரன் அவரை நாடிச் சென்றான்..
கிட்டத்தட்ட தனது 90வது அகவையை எட்டியிருந்தார் அந்த மூத்த குடிமகன். மூப்பின் காரணமாக தேகத்தளர்வுகள் இருந்தபோதும் சற்று எழுந்து நடமாடும் அளவிற்கு திடகாத்தரமாகத் தான் இருந்தார் அவர். தன் குடிலில் அமர்ந்து மூங்கில் மரங்களை வளைத்து கூடைப் புனைந்துக் கொண்டிருக்கும் தன் பெயர்த்திக்கு கூடை பின்னும் செயல்முறையை விளக்கிக் கொண்டிருந்தவர் குடிலின் வாசலில் நிழலாடுவதை உணர்ந்து நிமிர்ந்து பார்த்தார். அதற்குள் மந்தையில் இருந்து திரும்பி வந்துவிட்டார்களா? தன் மகளும், மருமகனும் என்ற நினைவில் நிமிர்ந்து பார்த்தவர் அங்கு நின்றிருந்த மிகிரனை சற்றும் எதிர்பார்க்கவில்லை..
அவரைக் கண்டதும் அவர் பாதம் பணிந்து ஆசி பெற்று, அவரை வெளியில் அழைத்து வந்தவன் அந்த உயிரினத்தைக் காட்டி அதைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்று கூறிட. அவரோ தன்னிடமிருந்த மிகப் பழமையான செப்பேடுகளை அவன் கையில் ஒப்படைத்தார்..
‘இவையனைத்தும் தங்களது மூதாதையர்களிடமிருந்து கிடைத்ததாகவும், இதில் ஏதேனும் தகவல் குறிப்புகள் இருந்தாலும் இருக்கலாம்’ என்றவர் கூற. அவனும் அவ்வாறே அதை ஆராய்ந்தான்.
அவற்றை எவ்வளவு ஆராய்ந்தாலும் அதில் எந்த குறிப்புகளும் இல்லை என்றதும் தளர்வுடன் தன் இல்லம் வந்தவன் தன் தந்தையிடம்,
“இங்கிருந்தே என்னால் எதையும் கண்டறிய முடியாது தந்தையே. வெளியில் சென்றால் தான் கண்டறிய முடியும் என்ற சூழ்நிலை வந்துவிட்டது, நான் சென்று வர அனுமதி கொடுத்திட இயலுமா தந்தையே?” என்றிட.
“கண்டிப்பாக அனுமதியுண்டு மிகிரா. கவனமுடன் சென்று விட்டு வருவாயாக.!” என்று அனுமதி அளித்து அவனை அனுப்பி வைத்தார். பெரும்பாலும் பகல் வேளையில் யாரும் அங்கிருந்து வெளியே வருவதில்லை. ஆனால் இம்முறை வெளியே செல்ல வேண்டிய கட்டாயம் இருந்ததால் பகல் வேளையிலேயே பாதாள லோகத்திலிருந்து வெளியுலகிற்கு வந்தான் மிகிரன்..
பெரும்பாலும் அவர்கள் இருக்கும் பகுதிக்கு சூரியனின் ஒளிக் கற்றைகள் பாய்ந்து பூமியை துளைத்து ஊடுருவிச் செல்வது என்பது அவ்வளவு எளிதல்ல. ஆகையால் பெரும்பாலும் அவர்கள் மங்கிய செந்நிறத்திலோ, அடர் கருமை நிறத்திலோ அல்லது வெளிர் பழுப்பு நிறத்திலேயோ தான் இருப்பார்கள். தற்போது பகல் வேளையில் அதுவும் மனிதர்கள் நடமாடும், வாழும் இப்பகுதியில் மிகிரன் செல்கையில் அவனை அவர்கள் காண வாய்ப்புகள் இருக்கிறது. ‘அவ்வாறு அவர்கள் தன் தோற்றத்தைக் காண நேரிட்டால் அச்சம் கொண்டு தன்னை தாக்கவோ? அல்லது இன்ன பிற தேவையற்ற குழப்பங்களோ வந்தால் என்ன செய்வது?’என்று எண்ணி சில பல மூலிகைகளைக் கண்டறிந்து பறித்து, கசக்கி சாறெடுத்து தன் தேகத்திலும், வதனத்திலும் தடவி கொண்டவன், மானுடர்களைப் போல் தன் தேகம், சற்று மாநிறமாக மாறியதை நீரின் பிம்பத்தில் கண்டறிந்து விட்டு அதன் பிறகே வெளியே வந்தான்..
ஒரு கரத்தில், பின்னப்பட்ட வலையில் அந்த உயிரினத்தை போட்டுக்கொண்டு, இன்னொரு கரத்தில் அந்தக் குடுவையை பிடித்துக்கொண்டு நடந்தான். அந்த குடுவைக்குள் இருந்து ஏதோ ஓசை கேட்டுக் கொண்டே இருந்தது. ஆனால் மிகிரன் அதை லட்சியம் செய்யவில்லை. சரியாக அந்த வனப்பகுதியில் அவன் நடந்து சென்று கொண்டிருந்த போது, அவன் பாதத்தில் ஏதோ ஊர்வது போல் இருக்க சட்டென்று குடுவையைக் கீழே வைத்துவிட்டு காலைத்தடவிப் பார்த்துக் கொண்டிருந்தான். அவ்வனப்பகுதிகளில் சிறிய விலங்கினங்கள் முதற்கொண்டு பெரிய விலங்கினங்கள் வரை பாரபட்சமின்றி வாழ்ந்து கொண்டிருக்கின்றன. அது என்னென்ன விலங்கினங்கள், எத்தகைய சாராம்சம் கொண்டவை என்பது பற்றி இன்று வரை எவராலும் துல்லியமாகக் கண்டறிய முடியவில்லை. இவை உயிரினங்கள் தானா? என்று கண்டறிய முடியாத அளவிற்கு கூட சில பல அரிய வகை உயிரினங்களும் இந்த மாதிரியான வனங்களில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. வனம் என்பது ஒரு உயிரினம் உயிர் வாழ்வதற்கான அனைத்து சாராம்சத்தையும் கொண்டதாக இருக்கும்.
சிறு குரங்கு ஒன்று அவன் அசந்த நேரம் பார்த்து அவன் கீழே வைத்திருந்த குடுவையை லாவகமாக கைப்பற்றிக் கொண்டு ஒரே ஓட்டமாக ஓடி விட்டது. அதை அறிந்தவன் அதை துரத்திக் கொண்டு ஓட முற்பட்ட வேளையில், பெரிது பெரிதாக வளர்ந்திருந்த மரங்களின் வேர்த்தண்டுகள் தடுக்கி கீழே விழுந்து விட்டான். அதில் அவன் வசம் இருந்த அந்த உயிரினத்தை அடைத்து வைத்திருந்த வலை சட்டென்று சிறிது தூரம் சென்று விழுந்தது. கீழே விழுந்த மிகிரன் எழ முயற்சித்தான். ஆனால் அவனது கால்கள் இரண்டும் செழிப்பாக வளர்ந்து இருந்த ஒருவகைக் காட்டு கொடியால் கட்டுண்டு நகர முடியாதவாறு மாட்டிக்கொள்ள, அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் விழிபிதுங்கி கையறு நிலையில் கிடந்தான்.
ஆனால் அவ்வுயிரினமோ?காயம்பட்டு இருந்தாலும் திறந்திறந்த வலையின் வாயில் வழியாக மெல்ல மெல்ல தண்ணீரை நோக்கி நகர்ந்தது. தன்னுடல் நகர்வதற்கு ஒத்துழைக்கவில்லை என்ற போதும் அந்த வனத்தில் இருந்து மெதுவாக வெளி வந்து கடலை நோக்கி நகர்ந்தது. அதைப் பார்த்தும் தன்னால் எதுவும் செய்ய முடியாதவாறு கால்களில் மாட்டியிருந்த கொடிகளை காலில் இருந்து அகற்றும் பணியில் இருந்தான் மிகிரன். சிறியதொரு மரக்கிளையொன்று அவன் கையில் அகப்பட அதை கொண்டு வேர்களை அறுத்திட முயன்றான். அதைக்கொண்டு தடுத்த, பெருத்த வேர்த்தண்டுகளை அறுக்க முடியாததால், அதை தூர எறிந்து விட்டு கரத்திற்கு அகப்பட்ட கற்களை ஒன்றுடன் ஒன்று உரசி தன்னெதிரே இருக்கும் மரத்தின் மேல் விளிம்பில் வைத்து தேய்த்து கூர்மையாக்கியவன், மீண்டும் ஒரு முறை அதே போல் முயற்சி செய்து இன்னும் கூர் தீட்டியவன் வேர்களை பரபரவென்று அறுத்து விட்டு தட்டுத்தடுமாறி எழுந்தவன் ஒரே ஓட்டமாக ஓடி அந்த உயிரினத்தைப் பற்றிட முனைவதற்குள் நீருக்குள் மூழ்கி கடலுக்குள் சென்றிருந்தது அது..
நீர், நிலம் என இரண்டிலும் வாழக்கூடிய இத்தகைய விலங்குகள் ஈரூடகவாழிகளென அழைக்கப்படுகின்றன.
இவை குளிர் குருதி வகையைச் சேர்ந்த முதுகெலும்புடைய நான்கு கால்கள் அமைந்த இருவாழி வகுப்பைச் சார்ந்த விலங்குகளாகும். தற்பொழுது வாழும் இருவாழ்விகள் அனைத்தும் இலிசாம்பிபியா எனும் உள்வகுப்பைச் சார்ந்தவை. இவற்றின் வாழிடங்கள் தரைச் சூழல், புதர்ச் சூழல், மரச் சூழல், நன்னீர்ச் சூழல் ஆகிய சூழல் அமைப்புகளில் அமைகின்றன. இருவாழ்விகள் தம் வாழ்க்கைச் சுழற்சியை நீரில் வாழும் இளவுயிரிகளாகத் தொடங்கினாலும், சில இருவாழ்விகள் இவற்றைத் தவிர்க்கும் தகவமைப்பைப் பெற்றுள்ளன.
செவுள்களால் மூச்சுயிர்க்கும் இந்த இளம் உயிரிகள், மெல்ல மெல்ல நுரையீரலால் மூச்சுவிடும் வளருயிரி வடிவத்துக்கு உருமாற்றம் அடைகின்றன. இவை துணை மூச்சுயிர்க்கும் பரப்பாகத் தன் தோலையே பயன்படுத்துகின்றன. சில தரைவாழ் சலமாண்டர்களும் தவளைகளும் நுரையிரல் இல்லாமலே தம் தோலால் மட்டுமே மூச்சுயிர்க்கின்றன. இவை புறவடிவில் பல்லிகளைப் போலவுள்ளன என்றாலும், இவை பாலூட்டிகள், பறவைகள், ஊர்வன போல முட்டையிடும் விலங்குகள். ஆகையால் இனப்பெருக்கத்துக்காக நீரூடகம் ஏதும் இவ்வகை உயிரினங்களுக்கு தேவையில்லை. சமீபகாலமாக உலகெங்கும் இருவாழி இனங்களின் தொகை அருகிவருகிறது.
மிகப் பழைய வாய்ந்த தொடக்கநிலை இருவாழிகள் (நில, நீர் வாழ் உயிரினங்கள்) நுரையீரலும் என்புமுள்ளாலான துடுப்பும் அமையப்பெற்ற இதழ்த்துடுப்பு மீன்களில் இருந்து தோன்றிப் படிமலர்ந்தனவென கண்டறியப்பட்டுள்ளது.
இவை தான் நில வாழ்க்கைக்கு ஏற்ற தகவமைப்புக்கு உதவின. இருவாழிகள் கரியூழிக் காலத்திலும் பெர்மியக் காலத்திலும் பல்கிப் பெருகி உலகெங்கும் ஓங்கலான வீச்சுடன் வாழ்ந்தனவாம். ஆனால் பின்னர் இவை ஊர்வனவற்றாலும் முதுகெலும்பிகளாலும் பதிலீடு செய்யப்பட்டனவெனவும் கூறப்படுகிறது. கால அடைவில், இருவாழிகள் அளவில் சுருங்கி, பன்முக வளர்ச்சியையும் இழந்தன. இப்போது இலிசாம்பிபியா உள்வகுப்பு சார்ந்த இருவாழிகள் மட்டுமே இறுதியாக தப்பிப் பிழைத்துள்ளன.
மிக நீண்டகாலம் வாழும் இருவாழ்வி, ஆந்திரியாசு தேவிதியானசு எனும் சீனப் பெருஞ்சலமாண்டர் தான். இதன் நீளம் 1.8 மீ ஆகும். இதுவும் கூட 9 மீ நீளமுள்ள அழிந்துவிட்ட பிரியோனோசச்சசு எனும் இருவாழியின் குறுவடிவமே.
இருவாழிகளின் உடலானது, தலை, உடம்பு எனும் இரு பகுதிகளாக உள்ளது. இவை வழுவழுப்பான ஈரமான தோலையும், மூன்று அறைகளைக் (இரு மேலறைகளும் ஒரு கீழறை யும்) கொண்ட இதயத்தையும் பெற்றுள்ளன..
தன் கையிருப்பில் இருந்த குடுவையும் காணாமல் சென்று விட்டது, அதேபோல் அந்த உயிரினமும் நழுவிச் சென்று விட்டதே என்று திகைத்துப் போய் நின்றிருந்த மிகிரனுக்கு அடுத்து என்ன செய்வதென்று தெரியவில்லை. குழப்பத்துடன் அதே இடத்தில அவன் கற்சிலையென நின்றிருக்க. அவனிடம் இருந்து தப்பிச்சென்ற உயிரினமோ தன் இருப்பிடம் சென்று சேர்ந்ததோடு தான் சேகரித்த தகவல்களையும் உரியவரிடம் சேர்ப்பித்தது..
அதேபோல் மிகிரனிடமிருந்து குடுவையை பிடுங்கிச் சென்ற சிறு குரங்கானது ஒரு மரத்தின் அருகில் அமர்ந்து குடுவையை மரத்தின் மீது மோதச்செய்ததில் அக்குடுவை உடைத்து அதிலிருந்து அசரீரியாக வார்த்தைகள் ஒலித்தன. சுயவடிவமான சரீரத்தைக் காட்டாமல் வெறும் ஒலி வடிவில் வார்த்தைகள் மட்டும் ஒலிப்பது அசரீரியாகும்.
“உரிய இடத்தை விட்டு விட்டு வேறெங்கோ உயிர் வாழும் உன்னத கோமனே! உனக்காக ஓர் உலகே காத்திருக்க..!
ஓர் இனமே தவித்திருக்க..!
ஓர் குலமே அழிந்திருக்க..!
விரைந்து வாராய்! உன்னுலகை, உறவை, குலத்தைக் காத்திட!” என்று வெளி வந்த வார்த்தைகள் யாவும் எதுவும் புரியாத குரங்கின ஜீவனிடம் எவ்வித மாற்றத்தையும் தோன்றுவிக்கவில்லை. மாறாக இவை சேர வேண்டிய இடத்தில் சேராமலேயே பயனற்று போனது..!
மரணமதை வென்ற ஓர்
ஜீவனது ஜீவித்திருக்கும்
இனமும் இடமும்..!
உலகும் வேறென்று
அறிந்திடுகையில்
உளமார அவ்வுண்மையை
ஏற்றிடுமா? அன்று
புதுவுலகின் உறவை
வெறுத்து வளர்த்தோரின்
நிழலில் தங்கிடுமா?
- அற்புதமது பிறக்கும்..
சகாப்தம் வாசகர்களுக்கு அன்பு வணக்கம் 🙏🙏🙏, வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டி ஆரம்பமாகிவிட்டது.💃💃💃💃 உங்களுக்கு விருப்பமான கதைகள் பல இடம்பெறவிருக்கின்றன. அதில் இந்த கதையும் ஒன்றாக இருக்கலாம். வாசித்துப் பாருங்கள். பிடித்திருந்தால் தொடர்ந்து வாசித்து மகிழுங்கள். அப்படியே பின்னூட்டம் கொடுத்து எழுத்தாளரை...
www.sahaptham.com