உயிரினை மனம் தேடுதே -- முதல் பதிவு
இரவு 9 மணி...
" ஏய் ! துளசி வெளிய வாடி , எங்கடி போன வாடி இங்கே, இன்னிக்கு எத்தனை மணி ஆகும்? உன் பொண்ணு ஊர் சுத்திட்டு வர..." என்று கேட்டுக்கொண்டே தள்ளாடி நடந்து வீட்டு வாசலில் விழுந்தார் அந்த குடும்பத்தின் தலைவர் சரவணன்...
கீழே விழுந்தும் கூட பேச்சை நிறுத்தாமல் காதில் கேட்க முடியாத தகாத வார்த்தைகள் வந்து விழுந்தன அவர் வாயில் இருந்து...
அதே நேரம் கடைக்கு சென்றிருந்த அவர் மகன் முகில் வர, " வாடா அக்காவுக்கே மாமா வேலை பாக்குறவனே நீ எங்க போன கிராக்கி பிடிக்கவா? என அந்த 17 வயது தன் சொந்த மகனை பார்த்து கேட்டார் அவரின் தகப்பனான இந்நாட்டின் குடிமகன்...
முகில் " அம்மா ! அம்மா ! இங்க வா இந்தாளு இன்னும் என்னென்ன பேச போறாரோ ? சே ! புருஷனா பொண்டாட்டியும் பார்க்கல , அப்பனா புள்ளைங்களயும் பார்க்கல ஆனா நீ இன்னும் இவரோட குடும்பம் நடத்துற , ஏன் மா ? இவரு இப்படி இருக்காரு அக்கா பாவம் ம்மா அவ எவ்வளவு நேரம் வேலை பார்த்துட்டு வரா வரும் போது இவரு ஆரம்பிச்சுடுறாரு.. சரி தூக்கு இன்னிக்கும் இவரை குளிப்பாட்டி , உள்ளே கூட்டி போய் சோத்த போட்டு தூங்க வை, அந்தபுள்ள இன்னிக்காவது ஒழுங்கா சாப்பிடட்டும்.. "அப்படினு சொல்லிட்டு கடையில வாங்குன முட்டையும் மேகி பாக்கெட்டையும் உள்ளே கொண்டு போய் வைச்சுட்டு வந்து அப்பாவ குளிக்க வைக்க அன்னைக்கு உதவி கொண்டிருந்தான் அந்த வீட்டின் குட்டி தலைவரான இளவரசன் முகிலினியன்...
################
அதே நேரம் இரவு 9 மணி
திருச்சியின் இதயம்னு சொல்ற N S B ரோட்டில் உள்ள பெரிய நகைக்கடை ஒன்றின் பின் கதவு வழியே அக்கடையின் ஊழியர் அனைவரும் வெளியே வந்து கொண்டிருக்க நாம இன்னும் நெருக்கமா போய் பார்ப்போம் ...
அதோ அந்த மஞ்சள் சுடிதார் அவங்க தான் இன்னும் கொஞ்சம் கிட்ட போய் பார்ப்போம்...
கடையின் சீருடையான மேல் சட்டையை மாற்றி துப்பட்டா போட்டுக்கொண்டு மூனு பொண்ணுங்க பேசிட்டு வராங்க..
அமுதா " ருத்ரா நீ எப்படி சத்திரம் போய் தான் போகனுமா "
ருத்ரா " இல்லைக்கா இன்னிக்கும் மேடம் கூட தான் போய்ட்டு அப்புறம் வீட்டுக்கு பஸ் ஏறனும். ஜங்சன் போய் ஏறிப்பேன் நீங்க போங்க "
அமுதா " தினமும் லேட்டா போனா அம்மா திட்ட மாட்டாங்களா டி ஏன் இப்படி எது சொன்னாலும் கேட்க மாட்டேங்கிற , மகி! அடியேய் மகி! உன்னைத்தான்..." என ஒரு உலுக்கு உலுக்கு உலுக்க அவ்வளவு நேரம் எதுவும் கவனம் பதியாமல் வேறு சிந்தனையில் இருந்த நம் நாயகி மஹிமா நினைவுக்கு திரும்பினாள்...
மஹிமா " ஆங்! சொல்லுங்க அக்கா என்ன ?"
ருத்ரா " என்னாச்சு டார்லிங் என்ன சிந்தனைல வர ?
அமுதா " என்னாவா இருக்கும் இன்னிக்கும் அப்பா குடிச்சுட்டு வந்துருப்பாரா, இல்லை நார்மலா வந்துருப்பாரானு , தான்.. அதானே"
மஹி " ஆமாக்கா! நேத்து நாம மகேஷ் அக்கா கல்யாணத்துக்கு போய்ட்டு, சமயபுரம் கோவிலுக்கு போய்ட்டு சாயங்காலம் தானே வீட்டுக்கு போனோம். நான் வீட்டுக்கு போனதும் அவர் வந்துட்டார் . வந்ததும் ஆரம்பிச்சதுதான் ஒன்பது மணி வரை திட்டிட்டே இருக்கார் . ரொம்ப அசிங்கமா இருக்குக்கா".. என்றாள் வருத்தத்தோடு..
" சரி விடுடி என்னமோ அம்மாவும் அவரை திருத்தல, அவரும் திருந்தல நீ என்ன பண்ண முடியும்.. என்று ஆறுதல் மொழிந்தனர் நட்பு இருவரும்...
அதற்குள் அமுதாவிற்கு பேருந்து வர , மஹிக்கும் பேருந்து வந்தது. இவர்கள் பயணிக்கட்டும் நாம இவர்கள் அறிமுகம் பார்த்து வருவோம்..
இக்கதை நாயகி : மஹிமா ,
அவளின் தந்தை : சரவணன்,
அம்மா : துளசி,
தம்பிகள் : முகிலினியன் , புகழினியன்,
அப்புறம் ருத்ரா மஹிக்காக உயிரையே கொடுக்கும் நட்பு அப்பப்ப அவள் உயிரை தவணை முறையில் வாங்குபவளும் அவளே..
அமுதா இவர்கள் இருவரை விட மூன்று வயசு முதிர்ந்தவள் அவ்வபோது அறிவுரை , அக்கறை காட்டி வேலையின் போது அன்னையின் உருவத்தை பிரதிபலிப்பவள்..
இவ்வளவு தான் பா அறிமுகம்..
இப்ப பஸ்ல போன அமுதா பெரியார் நகர் அவ வீட்டுக்கே போய்ருப்பா...
நாம மஹிய பாலோ பண்ணுவோம் , அவர்கள் ஏறிய பேருந்து உறையூர் போலீஸ் ஸ்டேஷன் ஸ்டாப் ல நிற்க , இந்த இருவரோடு இன்னும் சிலரும் இறங்க பேருந்து நகர்ந்து விட்டது..
இருவரும் நடக்க மேட்டுத்தெரு திரும்பிய உடனே அந்த சத்தம்
" ஆத்தி! டார்லிங் இன்னிக்கு மாம்ஸ் செம்ம ஸ்ருதில இருக்கார் போல எதுக்கும் நீங்க முகிக்கு போன் போடுங்க " என்றாள் ருத்ரா..
" ம் ! சரி ருத்ரா " என்று தன் தம்பிக்கு அழைத்தாள் மஹி.. "முகி என்னடா என்னாச்சு அப்பா இன்னிக்குமா " என்று கேட்டாள்..
"ஆமா அக்கா இன்னைக்கும் தான் நீ வா, அவரு தூங்க போய்டாரு" என்றான் முகில். "என்ன ஆச்சுங்க மாம்ஸ் என்ன பண்றாராம்" என்று கேட்டாள் ருத்ரா.. மகி"தூங்க போறாராம்"
" அப்போ நீ சீக்கிரம் வீட்டுக்கு போங்க, அப்பறம் மாம்ஸ் எழும்புனா சுப்ரபாதம் பட தொடங்கிடுவாரு " என்று கூறினாள் ருத்ரா.. "சரிமா நீ பாத்து வீட்டுக்கு போ நாம நாளைக்கு பாக்கலாம் பாய்மா" என்று கூறி அனுப்பி வைத்தாள் ருத்ராவை.
மஹி வீட்டிற்குள் நுழைய அவளுக்காக விழித்திருந்த சரவணன் .
"வாடி ! எங்க டி போய் ஊர் சுத்திட்டு வர. நீ எனக்கு னு பிறந்து இருக்கியே பொட்ட கழுத" என வழக்கம் போல தன் அர்ச்சனை கொடுக்க கண்ணீரோடு தன் அறைக்குள் சென்று கட்டிலில் படுத்துக் கொண்டாள் மஹி.
இதை பார்த்ததும் தாயானவள் தடுக்க முயற்சி செய்தும்,
தன்னால் முடிந்த வரை போராடிய முகிலும் நீயெல்லாம் ஒரு அப்பனா, என்று சொல்லி விட்டு கண்ணீரை துடைத்துக் கொண்டு சமயலறைக்குச் சென்றான்...
தன் தாய் செய்த மேஹியை ஒரு தட்டில் வைத்து தன் கரத்தால் ஆம்லெட் ஒன்று போட்டு எடுத்துக் கொண்டு தன் அக்கா அறைக்குள் நுழைந்தான் முகில்.
அக்காவின் அருகில் அமர்ந்த முகி தன் மடியில் அக்கா தலையை வைத்து கண்ணீரை துடைத்து "அக்கா உனக்கு தெரியாதா அந்தாளு எப்போதும் இப்படி தான் எப்பவுமே கத்துவாரு னு நீ இல்லனா நம்ம குடும்பத்தில் மூன்று வேளை உணவு கிடையாது,
முகத்தை கழுவிட்டு வா" என்றான்.
முகம் கழுவி வந்தவளுக்கு உணவை கொடுத்து உண்ண சொல்லி விட்டு, தமக்கையின் அலைபேசியுடன் வெளியே வந்தவன், ருத்ராவை அழைத்து நடந்ததை சொல்லி அக்காவை பார்த்துக் கொள்ள வேண்டிக்கொண்டான்.
இவள் உணவை உண்டு முடித்திருக்க, அவனும் உள்ளே வந்தவன், தட்டை எடுக்க அவன் தலையில் கைவைத்து முடியை ஆட்டி விட்டு நீ போய் படு சென்று சொல்லி அனுப்பினாள் மஹி.
காலையில் எழுந்து புத்துணர்ச்சியோடு கிளம்பினாள் மஹி மறுபடியும் சரவணன் வார்த்தைகள் காதில் விழ சாப்பிடாமல் கோபமாக வேலைக்குச் சென்றாள்..
கடையில் அழகு மயில் மஹி சோகமாக உட்கார்ந்து இருப்பதை கண்ட ருத்ரா "ஏன் அக்கா இவங்க காலையிலிருந்தே சோகத்தோடு இருக்காங்க மாம்ஸ் குடிச்சுட்டு என்ன பேசுச்சுனு தெரியலயே…"
" அதுக்குன்னு இவ எதுக்கு பீல் பண்ணுறானு " சொல்லி கொண்டே மஹி அருகில் வந்தனர்.
"என்னடா மஹி! ஏன் இப்படி அழும் படி முகத்தை வச்சி இருக்க எல்லாமே கடந்து போகும் மஹி" என்றாள் அமுதா.
"என்ன அழகம்மா இன்றைக்கும் என் மாம்ஸ் அர்ச்சனை வார்த்தைகள் அதிகம் போல" என்ற ருத்ராவை மஹி செல்லமாக முறைக்க, ஈஈஈ என இளித்து வைத்தாள்…
" நீதான் உன் மாமாவை மெச்சுக்கனும் ருத்ரா, இது அசிங்கமா இருக்குனு அவருக்கு ஏன் தெரியவே மாட்டுது? " என்று சோகத்தில் ஆழ்ந்தாள் மஹி.
" ஆமா! நான் ரொம்ப நாளா கேட்கனும்னு நினைச்சுட்டே இருந்தேன், இதோ இன்னிக்கு இவ மாம்ஸ்னு கேட்டதும் தான் நியாபகம் வந்துச்சு…"
"என்னாக்கா என்னா கேட்கனும்?" என்று அமுதாவை பார்த்து எதிர் கேள்வி கேட்டாள் மஹி…
"அது இவ ஏன் சரவணன் அப்பாவ மாமானு சொல்றா முன்னாடி அப்பானு தானே சொல்லுவா இப்ப என்ன புதுசா? ம்! சொல்லுங்க" என்று கேட்க…
ருத்ரா தன் முட்டைகண்ணை திருத்திரு வென உருட்டிக்கொண்டிருக்க , மஹி
" எனக்கும் தெரியாதுக்கா இவ ஆறு மாசமா அப்படித்தான் கூப்பிடுறா, நான் எனக்கு இருக்க டென்ஷன்ல அதை கவனிக்கல… ருத்ரா சொல்லுமா! ஏன் அப்பாவ மாமானு சொல்ற எதும் காரணம் இருக்கா?" என கேட்க… "ஆத்தி! மாட்டிக்கிட்டோமே…" என்று ஓட பார்க்க.
ஒரு கையை அமுதாவும் மறுக்கையை மஹியும் பிடித்துக்கொள்ள அவள் தப்பிக்க வழியின்றி தவித்தாள், " சொல்லுடி " என அமுதா கேட்க, " அது நான் மஹிய லவ்வாங்கி, அதான் அவரை மாமானு சொன்னா இவங்க மாமா பொண்ணு சோ சைட்டிங் க்கா அதான் காரணம், வேற நீங்க எதிர் பார்க்குற அளவுக்கு இல்லை க்கா" என இளித்து வைக்க , இருவரும் தன்னால் முடிந்த அளவு முறைத்து விட்டு நகர, அமுதா ருத்ரா தலையில் இரண்டு கொட்டு கொட்டிவிட்டே சென்றாள்..
நாட்கள் அதன் போக்கில் நகர, அட்சயதிருதியை வந்தது.
பொதுவாக துணிக்கடைகளில் தீபாவளிக்கு முதல் நாளன்று பகலும் இரவும் விடிய விடிய வாடிக்கையாளர்கள் வந்து கொண்டிருப்பர், அது போல நகைக்கடைகளில் அட்சயதிருதியை தான் சிறப்பு தினம்.
நம் நாயகி வேலை செய்யும் கடையிலோ முன்பதிவு என்ற முறை இருக்க, பத்து நாட்களாக மிகவும் அதிகமாக வாடிக்கையாளர்கள் வரவு இருக்க, இவள் சற்று திணறித்தான் போனாள்…
அந்த வெள்ளிப் பொருட்கள் பிரிவில், உள் பகுதி மேற்பார்வையாளராக பார்வையிடுவது இவள் வேலை, அதனை சிறப்பாக செய்தால் இந்த வருட பணி உயர்வாக புதிய நகை மதிப்பிடும் பணிக்கு பரிந்துரைக்கப் படுவாள்…
மூன்று வருட வேலையை காட்டிலும் இந்த வருடம் சற்று சிரமமும் அதே நேரம் ஆர்வமும் சேர்ந்தே கழிந்தது அட்சயதிருதியை தினம் நம் நாயகிக்கு…
அது முடிந்த மறுநாளே இவளுக்கு வார விடுமுறை என்பதால், எப்போதும் போல் மதியம் இரண்டு மணிக்கு உணவு உண்டு முடித்து தன் பணப்பையை எடுத்துக்கொண்டு வீட்டில் ஒருமுறை பார்வையிட்டு விட்டு யாரும் பார்க்கும் முன் கிளம்பினாள்…
தன் தெருவில் இருந்து மூன்று தெரு தள்ளி உள்ள ஒரு பொதுத்தொலைபேசி கடையில் உள்ளே சென்று அரைமணி நேரம் பேசிவிட்டு வெளியே வர யாரும் தன்னை பார்க்கவில்லை என்று தைரியமாக நடக்க எதிரே இருந்தவரை கண்டு திகைத்து நின்றாள்.
மஹி போன் பேசியது யாரிடம்?
வந்தது யாராக இருக்கும்? யார் வந்தால் என்ன என்று சென்றவள் திகைத்து நின்றது ஏன்?
வரும் அத்தியாங்களில் காண்போம்