உயிர் துடிப்பாய் நீ!
அத்தியாயம் 6
நாம் நினைப்பது போல் எல்லாம் நடந்து விட்டால் ,வாழ்க்கை மிக அழகாக தான் இருக்கும்.ஆனால் அப்படி யாருக்கும் இங்கே நடப்பதில்லை.
இன்பமோ, துன்பமோ யாருக்கும் தொடர்ந்து வருவதில்லை.. இரண்டும் கலந்து வருவது தான் வாழ்க்கை.
நடக்கும் நிகழ்வுகள் மிகனுக்கு இன்பமாகவும், .திகழொளிக்கு துன்பமாகவும் இருந்தது.மிகனுக்கு திகழொளியை அனுதினமும் காண்பதும், தான் நினைத்தபடி அவளை ஆட்டி வைப்பதும் அவனுக்கு இன்பத்தை கொடுத்தது.
திகழொளிக்கோ, தான் உயிராக நேசித்தவனை இன்னொருத்தியின் கணவனாக ஏற்றுக் கொள்ள முடியாமல் தவித்தாள். அதுமட்டுமன்றி தன்னைக் கண்டாலே தீயாக காயும் அவனின் இந்த பரிணாமத்தை அவளால் தாங்கவே முடியவில்லை.
ஒவ்வொரு நொடியும் நெருப்பின் மீது நிற்பதைப் போல் உணர்ந்தாள்.யாரிடமும் தன் மனக்கவலையை பகிரவும் முடியாமல் தனக்குள்ளேயே மருகினாள்.
உலகமாறனோ, மகனின் நடவடிக்கைகளில் குழம்பிப் போனார்.அவனின் இயல்பு வெகுவாக மாறி இருந்தது.
தன் தோற்றத்தில் மிகுந்த அக்கறை எடுத்துக் கொண்டான்.எப்போதும் ஏதோ யோசனையுடனேயே வலம் வந்தான்.குழந்தையிடம் நேரம் செலவழிப்பதும் குறைந்தது.யாரிடமும் சரியாக பேசுவதும் இல்லை.
மிகனின் மாற்றம் பெற்றவரை மிகுந்த கலக்கமடையச் செய்தது. அந்த கலக்கமே விரைவில் அவனுக்கு திருமணம் செய்ய வேண்டுமென்ற எண்ணத்தை வலுக்கச் செய்தது . அவர் அதற்கான வேலையில் தீவிரமாக இறங்கினார்.
அறவாணனும்,பொன்னியும் மகளுக்கு உடல்நிலை சரியில்லாமல் ஆனதிலிருந்தே, தங்கள் கோவத்தை எல்லாம் மறந்து மகளிடம் கொஞ்சம் ,கொஞ்சமாக பேச ஆரம்பித்து இருந்தார்கள்.
இனியும் மகளை அவள் போக்கில் விடக் கூடாதென்று நினைத்தவர்கள், விரைவில் மகளுக்கு திருமணம் செய்ய வேண்டுமென்று எண்ணினார்கள்.
மகளுக்கு திருமணம் முடிந்தால் , தங்கள் குடும்பம் தொலைத்த மகிழ்ச்சி எல்லாம் திரும்ப கிடைக்கும் என்று நம்பினார்கள்.
மகளிடம் நேரடியாக திருமணத்தை பற்றி பேசாமல், அமுதனிடம் விஷயத்தை சொல்லி மகளிடம் பேச சொன்னார்கள்.
அமுதனோ, அக்காவிடம் எப்படி சொல்வது என்று இரண்டு நாட்களாக அதே யோசனையுடனேயே சுற்றிக் கொண்டு இருந்தான்.
திகழொளிக்கோ, தம்பியின் யோசனையான முகம் பயத்தை கொடுத்தது.அவனுக்கு ஏதாவது பிரச்சினையா என்று மனம் கலங்கினாள்.
அன்று இரவு உணவு உண்டு முடித்ததும் , தம்பியை அழைத்துக் கொண்டு மாடிக்கு சென்றவள், "அம்மு இரண்டு நாளாக நீ சரியே இல்லை. ஏதாவது பிரச்சனையா..? என்று கேட்டவளிடம்.
" பிரச்சினை எல்லாம் ஒண்ணும் இல்லை கா.."
"அப்புறம் ஏண்டா உன் முகமே சரியில்லை.."
"அக்கா நான் ஒண்ணு சொல்லுவேன் நீ கோவப்படாமே கேட்கனும்.."
"என்னடா பீடிகை எல்லாம் பலமா இருக்கு. என்ன விஷயம்.."
"ம்ம்..எப்படி கேட்கறதுன்னு தெரியலை.."
"என் அம்முக்கா கேட்கத் தெரியலை..இது நம்பற மாதிரி இல்லையே.."
"அக்கா.. நான் கேட்ட பின் நீ என் மீது கோவப்படக்கூடாது.."
"ஓகே. கோவப்படலே முதல்லே என்னன்னு சொல்லு.."
"அக்கா.. அம்மாவும் ,அப்பாவும் உனக்கு கல்யாணம் பண்ணும்ன்னு நினைக்கிறாங்க. உன்கிட்ட சம்மதம் கேட்கச் சொன்னாங்க.."என்று தயங்கிய படியே கூறிவிட்டான்.
திகழொளியோ, தம்பி சொன்னதைக் கேட்டவள்,ஒரு நிமிடம் உயிரற்ற சிலையாக நின்றாள்.
அமுதனோ , உறைந்து நின்ற தமக்கையை மெல்ல கன்னம் தட்டி, ..அக்கா ..அக்கா.." என்று பதட்டமாக அழைத்தான்.
தம்பியின் அழைப்பில் நிகழ்வுக்கு வந்தாள். ஆனால், மொழி தெரியாத குழந்தை போல் தம்பியை விழி விரிய பார்த்தாள்.
அமுதனோ, அக்காவின் அதிர்ச்சியை புரிந்து கொண்டு "ப்ளீஸ் கா ஏதாவது பேசு .."என்றவுடன்.
ஒரு நிமிடம் கண்களை இறுக மூடி தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு? "எனக்கு சம்மதம் அம்மு.." என்று தம்பியின் முகம் பார்க்காமல் பரந்து கிடந்த ஆகாயத்தை வெறித்து பார்த்தபடி சொன்னாள்.
அமுதனுக்கோ, அக்காவின் பதிலை நம்ப முடியலை. அதிர்ச்சியோ! மகிழ்ச்சியோ! அது அவனுக்கே புரியாமல், திரும்ப, திரும்ப தன் தமக்கையிடம் "நிஜமா உனக்கு சம்மதமா?" என்று கேட்டுக் கொண்டே இருந்தான்.
தம்பியின் நிலை புரிந்து, "அம்மு எனக்கு முழு சம்மதம்.போதும், இத்தனை நாள் நான் அவர்களை கஷ்டபடுத்தியது.இனியாவது அவர்கள் ஆசைப்படி நடக்கட்டும் .என்னால் முடிந்த இந்த சந்தோஷத்தையாவது அவர்களுக்கு தரேன்.."
" அக்கா, நீ இதை முழுமனதுடன் தானே சொல்றே.."என்று நம்பாமல் கேட்டவனிடம்..
" ஆமா , முழு மனதுடன் உணர்ந்து தான் சொல்றேன். அவர்கள் பழசை மறந்து இப்போது தான் என்னுடன் பேச ஆரம்பிச்சு இருகாங்க.. அதே கெடுக்க விரும்பலே.."
"அக்கா, உனக்கு நான் சொல்ல வேண்டியது இல்லை.கல்யாணமங்கிறது விளையாட்டு காரியம் இல்லை. எல்லாவற்றையும் மறந்து நீ புது வாழ்க்கையை தொடங்கனும்.."
" அம்மு எனக்கு எல்லாம் புரியுது. கஷ்டம் தான். ஆனால், எனக்கு வேறு வழி இல்லை..நான் கொஞ்சம், கொஞ்சமாக என்னை மாற்றிக்கிறேன்.."என்றாள்.
"தேங்க்ஸ் கா.. இந்த வார்த்தைக்காகத் தான் நான் காத்திருந்தேன். இனி என் அக்கா வாழ்க்கையில் சந்தோஷம் மட்டும் தான் இருக்கனும்.." என்று தமக்கையின் முகத்தை கையில் ஏந்தி சொன்னான்.
திகழொளியோ, தன் மனக்குமுறலை முகத்தில் காட்டிக் கொள்ளாமல் தன் உயிர் தம்பியிடம் சிரித்தபடியே தலையை ஆட்டினாள்.
தமக்கையின் மகிழ்ச்சியை தன்னுள் பொக்கிஷமாக சேமித்துக் கொண்டவன். "அக்கா நான் அப்பா அம்மாவிடம் உன் சம்மதத்தை சொல்லிடவா..?"
"ம்ம் ..! "என்று தலையை ஆட்டினாள்.
அமுதனோ, எல்லையில்லாத ஆனந்தத்துடன் தன் தமக்கையை அணைத்து தன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டவன், பெற்றவர்களிடம் தன் தமக்கையின் சம்மதத்தை கூற ஓடினான்.
திகழொளியோ, மனதிற்குள் சொல்ல முடியாத துக்கத்துடன் நின்றிருந்தாள். அத்தனை நேரம் தம்பிக்காக கட்டுப்படுத்தி வைத்திருந்த கண்ணீர் அவன் சென்ற பின் அருவியாக கொட்டியது.
தன் பெற்றவர்களுக்கு இதற்கு மேல் எந்த துன்பத்தையும் கொடுக்க வேண்டாம், என்று எண்ணித்தான் தம்பியிடம் சம்மதம் சொனனாள். ஏற்கனவே நடந்த திருமண பேச்சால் பெற்றவர்களுக்கு கொடுத்த துன்பத்தை இந்த திருமணத்தால் இன்பமாக்க நினைத்தாள்.
போதும் அவர்கள் தன்னால் பெற்ற வேதனை.இனியாவது அவர்கள் நிம்மதியாக இருக்கட்டும்.
அவள் ஆசைப்பட்டது தான் கிடைக்கவில்லை.அவர்கள் ஆசையாவது நிறைவேறட்டும் . என்று எண்ணினாள்.
அது மட்டுமின்றி தனக்கு திருமணமாகாத காரணத்தால் தான், மிகன் இன்னும் தன்னை பார்க்கும் போது எல்லாம் குத்தி குதறுகிறான். நாம் இன்னொருவருடைய மனைவி என்றனால் தன்னிடம் இப்படி நடந்து கொள்ள மாட்டான் என்று நினைத்தாள்.
தன்னால் எல்லாவற்றையும் மறந்து புது வாழ்க்கையை தொடங்க முடியுமா? என்று அவளுக்கே தெரியாது. ஆனால், இதுவரை நமக்காக வாழ்ந்து விட்டோம் .இனியாவது பெற்றவர்களுக்காக வாழலாம் என்ற எண்ணமே அவளின் மன மாற்றத்திற்கு காரணமானது.
தன் அழுகை, கவலை, குழப்பம் எல்லாவற்றையும் தனக்குள் புதைத்துக் கொண்டு, வீட்டிற்குள் வந்து மகளை பொன்னி ஆரத்தழுவிக் கொண்டு, "என் தங்கமே அம்மாவுக்கு இப்ப தான் நிம்மதியாக இருக்கு.." என்றார்.
மகளோ, தாயின் அரவணைப்பில் ஆசையாக ஒன்றிக் கொண்டாள்.
அறவாணனோ, " திகழி இங்கே வாடா ..!"என்று பல வருடம் கழித்து மகளை அன்போடு அழைத்தார்.
தந்தையின் அழைப்பை கேட்டவுடன், அளவுகடந்த மகிழ்ச்சியுடன் தந்தையிடம் ஒடிச் சென்று அவர் காலடியில் அமர்ந்து, மடியில் தலை சாய்த்தாள்.
அவரோ, தன் மடியின் மீதிருந்த மகளின் தலையை மென்மையாக தடவியபடி, " பாப்பா அமுதன் சொன்னது உண்மையா? உனக்கு சம்மதமா டா.." என்றார்.
அவளோ, பல வருடங்கள் கழித்து தன் தந்தையின் 'பாப்பா 'என்ற விழிப்பில் உருகி கரைந்தவள் , நிமிர்ந்து தந்தையை விழி எடுக்காது பார்த்தபடி ,பேச்சற்று விழிகளில் நீர் அருவியாக கொட்ட தலை ஆட்டினாள்.
மகளின் கண்ணீரை மென்மையாக துடைத்த படியே, "என் பாப்பா இனி எதுக்கும் கலங்க கூடாது. போதும் நீ பட்டது எல்லாம்.இனியாவது உனக்கு சந்தோஷம் கிடைக்கட்டும் .."என்றார்.
அவளோ, தன் கண்ணீரை துடைத்த தந்தையின் கைகளை பிடித்துக் கொண்டு, "அப்பா சாரிப்பா..சாரிப்பா உங்களை ரொம்ப கஷ்டபடுத்திட்டேன் .என்னே மன்னிச்சுடுங்கப்பா.." என்று அவர் கைகளில் முகம் புதைத்து கதறினாள்.
அவரோ, " நீ தான் டா எங்களை மன்னிக்கனும். என்ன தான் உன் மீது கோவமாக இருந்தாலும், உங்கிட்ட பேசாம இருந்திருக்க கூடாது.உன் மனசு என்ன பாடுபட்டிருக்கும்..சாரிடா .."என்றார் வருத்தத்துடன்.
அமுதனோ, தந்தை மகளின் பாசப்போரட்டத்தை பார்த்துக் கொண்டு இருந்தவன், அவர்களிடம் வந்து "போதும்..போதும் சாரி கேட்டது. போனது போகட்டும், இனி நடப்பதை பார்ப்போம் . நம்ம கஷ்டகாலம் இன்னையோட முடிஞ்சுச்சு.." என்றவன், தம்கையையும் தந்தையையும் தோள் சேர்த்து அணைத்துக் கொண்டான்.
பொன்னியோ விழிகள் ஆனந்த கண்ணீர் மின்ன அந்த காட்சியை நிம்மதியுடன் கண்டார்.
அடுத்து வந்த நாட்களில் அறவாணன் தரகரிடம் மகளின் ஜாதகத்தையும், நிழற்படத்தையும் கொடுத்து நல்ல வரனாக பார்க்கச் சொன்னார்.
திகழொளியோ, பெற்றவர்களின் அன்பு திரும்ப கிடைத்ததில் மகிழ்ச்சியுடனேயே வலம் வந்தாள்.
மிகனின் கடுமையை கூட பெரிதாக கண்டுகொள்ளவில்லை.
திகழொளி திருமணத்திற்கு சம்மதித்த மகிழ்ச்சியை கொண்டாட விரும்பிய கமலியும், அமுதனும் ,அவளை அழைத்துக் கொண்டு மாலுக்கு சென்றார்கள்.
மூவரும் பழைய படி மகிழ்ச்சியாகவே சுற்றி திரிந்தனர். கமலி ஐஸ்கிரீம் கேட்டாள் என்று மூவரும் அவரருக்கு பிடித்த (ஃப்ளேவர்)சுவைக்கு, கோன் ஐஸ் வாங்கிக் கொண்டு, சுற்றுப்புறம் மறந்து பேசியபடியே ருசித்து உண்டு கொண்டு இருந்தார்கள்.
அப்போது திகழொளியின் சுடிதார் துப்பட்டாவை, யாரோ இழுப்பது போல் இருக்கவும் சட்டென்று திரும்பி பார்த்தாள்.
அங்கே நின்ற குழந்தையை பார்தவள் குழப்பத்துடன் "என்னடா குட்டி.." என்று கன்னம் தொட்டு கேட்டாள்.
அதுவோ, இவள் கையிலிருந்த ஜஸ்கிரீமை காட்டியது
.
"ஐஸ்கிரீம் வேணுமா..?" என்று கேட்டவளிடம் குழந்தை தலையை ஆட்டியது. குழந்தையுடன் யாராவது வந்து இருக்காங்களா? என்று சுற்றும், முற்றும் பார்த்தபடியே நின்றாள்.
கமலியும்,அமுதனும் "யார் குழந்தை இது..?" என்று கேட்டபடி குழந்தையின் அருகில் வந்தவர்களிடம். "அம்மு யாருன்னு தெரியலே, ஐஸ்கிரீம் கேட்கிறா.. இதே ஃப்ளேவர் ஐஸ்கிரீம் ஒண்ணு வாங்கி கொடுடா .."என்றாள்.
அமுதனோ, தமக்கையின் பேச்சுக்கு மறு பேச்சு பேசாமல், அருகில் இருந்த கடையில் ஐஸ்கிரீம் வாங்கி வந்து தமக்கையிடம் கொடுத்தான்.
திகழொளியோ, அதை வாங்கி கொண்டு குழந்தையின் முன் மண்டியிட்டு அமர்ந்தாள்.
அதுவோ, அவளிடம் ஆசையாக ஐஸ்கிரீம் வாங்க தன் பிஞ்சு கைகளை நீட்டியது.
திகழொளியோ, ஐஸ்கிரீமை கொடுக்காமல், தன் கன்னத்தைக் காட்டி , "முத்தம் கொடுத்தால் தான் ஐஸ்க்ரீம்.."என்று குழந்தையிடம் பேரம் பேசினாள்.
குழந்தையும் தன் பட்டு இதழ்களால் அவளின் கன்னத்தில் மென் முத்தத்தை பதித்தது. உடனே குழந்தையிடம் ஐஸ்கிரீமை கொடுத்து விட்டு, குழந்தையை தூக்கி அதன் பட்டு கன்னங்களில் மென்மையாக முத்தமிட்டாள்.
அப்போது, " வெரிகுட்.. சூப்பர்!" என்ற குரலில் தூக்கி வாரிப் போட திரும்பினாள்.அங்கே மிகனோ, கைகளை கட்டிக் கொண்டு இவளையே பார்த்தவாறு அருகில் வந்தான்.
மூவரும் அவனை பார்த்து திகைத்து நின்றனர்.
மிகனோ, அவளிடமிருந்த குழந்தையை வேகமாக பிடிங்கியவன்,அதே வேகத்துடன் குழந்தையின் கையிலிருந்த ஐஸ்கிரீமை பிடிங்கி அருகில் இருந்த குப்பை தொட்டியில் வீசி எறிந்தான்.
குழந்தையோ ஐஸ்க்ரீம் பிடிங்கியதில் உதடு பிதுக்கி அழுக தொடங்கியது.
அவனோ, குழந்தையின் அழுகையை சட்டை செய்யாமல் , "மகிழி யார் எது வாங்கிக் கொடுத்தாலும் வாங்கிக் கொள்வாயா? அப்பா அடிக்க போறேன் பாரு.." என்று தன் கோவத்தை குழந்தையிடம் காட்டினான்.
மகிழியோ, "அப்பா, அம்மா.. அம்மா ஐஸ்கிரீம்.." என்று திகழொளியை காட்டிய படியே, அம்மா தான் வாங்கி கொடுத்தாங்க என்று சொல்லத் தெரியாமல் சொன்னது.
மிகன், மகிழியை அழைத்துக் கொண்டு அன்று விடுமுறை என்பதால் மாலுக்கு வந்திருந்தான்.
அங்கிருந்த துணிக்கடையில் அவன் மகிழியை இறக்கி விட்டுவிட்டு துணிகளை பார்த்துக் கொண்டிருந்தான்.
மகிழியோ, கடையிலிருந்த கண்ணாடி வழியாக வெளியில் ஐஸ்கிரீம் உண்டு கொண்டிருந்த திகழொளியை பார்த்ததும் ,அவளிடம் மிகனுக்கு தெரியாமல் ஓடி வந்து விட்டாள்.
மிகன் சிறிது நேரம் கழித்து, மகிழியை காணோம் என்று தேடும் பொழுது தான், அவள் திகழொளியிடம் சென்று நிற்பது தெரிந்தது.
திகழொளி, அமுதன் , கமலியுடன் அங்கு வந்திருப்பதை கண்டவனுக்கும், சிறு அதிர்ச்சி தான்.அவளை இங்கு அவன் எதிர்பார்க்கவில்லை.
மகிழி வேறு அவளைக் கண்டால், அவள் பின்னாடியே போகிறாள் என்று மனதிற்குள் சலித்துக் கொண்டான்.அதனால் எல்லா கோவத்தையும் குழந்தையிடம் காட்டினான்.
திகழொளியோ அவனின் செயலில் உறைந்து போய் சிலையாக நின்றாள். அவளுக்கு மகிழியை ஓரே ஒரு முறை பார்த்திருந்தால், இன்று சரியாக அடையாளம் தெரியவில்லை.அதுவும் அன்று பல வருடங்கள் கழித்து மிகனை பார்த்த அதிர்ச்சியில் அவள் நினைவில் எதுவுமே நிற்கவிலலை.
.
கமலிக்கோ, அன்று மிகனின் தோளிலிருந்த குழந்தையை அரைகுறையாக பார்த்தால், இன்று பார்க்கும் போது சுத்தமாக அடையாளம் தெரியவில்லை.
அமுதனோ, கை மூஷ்டி இறுக, பற்களை கடித்த படி அடங்கா சினத்துடன் மிகனை நோக்கி நகர்ந்தவனை கமலி தடுத்து நிறுத்தினாள்.
கமலிக்கோ, மனதிற்குள் பெரும் குழப்பம் ஆட்கொண்டது.தன் தோழியின் வாழ்க்கையில் என்ன தான் நடக்கிறது.
பார்த்த இரண்டு முறையும் அந்த குழந்தை திகழியிடமே வருகிறது. இப்போது வேறு திகழியைப் பார்த்து 'அம்மா..அம்மா 'என்று அழுகிறதே என்று குழம்பினாள்.
திகழொளியோ, தன்நிலை மறந்து தொய்ந்து போய் அமர்ந்தாள்.
அமுதனுக்கும்,கமலிக்கும் திகழொளி இப்போது தான் அனைத்தையும் மறந்து நிம்மதியாக இருந்தாள் .பாவி அவள் நிம்மதியை கொடுப்பதற்கே வருகிறான் என்று அவனை திட்டி தீர்த்தனர்.
விதியின் விளையாட்டை யார் அறிவார்..?
தொடரும்..
(அடுத்த யூடி வியாழக் கிழமை மாலை)
என்னுடைய தொடுக்காத பூச்சரமே ! நாவல் புத்தகமாக வெளிவந்துள்ளது.இப்போது புத்தக கண்காட்சியில் கிடைக்கும் விலை 230/-
Priyanilayam stall number 251,252 -
Fourth row.
YMCA Nandanam
Subam Publications
Stall no 250
YMCA Nandanam