Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


கனவு மெய்பட வேண்டும் - மாரிமுத்து சக்திவேலு

Meena

Saha Moderator
Staff
Messages
1,070
Reaction score
85
Points
48
“ஒகேய்.... சாப்பாடு ரெடியாச்சு.... எல்லாரும் சாப்பிட வாங்க”

சமையல்காரர் மணியின் குரல் கேட்டு அங்கங்கே அமர்ந்திருந்தவர்கள் அனைவரும் சாப்பிடும் இடம் நோக்கி செல்ல ஆரம்பித்தனர்.பூந்தோட்டதில் அமர்ந்திருந்த வள்ளியம்மையும் அவரது சக தோழிகளான வீரம்மா மற்றும் ராணியும் உணவருந்த தயாராகினர்.வள்ளியம்மையும் ராணியும் ஓரளவு சட்டென எழுந்து விட்டாலும் வீரம்மா சற்று கஷ்டபட்டு எழுந்து நின்றார்.வயதாகி விட்டதல்லவா.மூவரும் சாப்பிடச் சென்றனர்.

அன்றைய உணவு கொஞ்சம் நன்றாகவே இருந்தது.சாம்பாருடன் பரங்கிக்காய் பிரட்டலும் வெண்டைக்காய் பொரியலும் சாப்பிட கொஞ்சம் ருசியாகவே இருந்தது.மணியின் சமையல் சில நேரங்களில் சாப்பிட இதமாக இருக்கும்.பல நேரங்களில் சொல்லவே வேண்டாம்.

அனைவரும் சாப்பிட்டுவிட்டு தத்தம் ஓய்வெடுக்கும் இடங்களை நோக்கி நகர ஆரம்பித்தனர்.

வள்ளியம்மையும் ஒரு சிலரும் பூந்தோட்டதில் உலாவிக் கொண்டிருந்ததனர்.வள்ளியம்மைக்கு கால் லேசாய் வலியெடுக்க கொஞ்சம் கால் நீட்டி படுத்தால் பரவாயில்லை என தோன்றியது. பூந்தோட்டத்தில் இருந்த அந்த சாய்வு நாற்காலியில் அமர்ந்தார்.சாப்பிட்டவுடன் படுக்க வேண்டாமே என நினத்துக் கொண்டார்.

வள்ளியம்மைக்கு வயது 58 ஆகி வரும் ஏப்ரல் முதல் தேதியுடன் 59 தொடங்கவுள்ளது. கொஞ்சம் ஒடிசலான தேகம் அவருக்கு. தன் மகனுக்காக உழைத்தது போக மிஞ்சியிருக்கும் தெம்புடன் வாழ்பவர்.

சாய்வு நாற்காலியில் அமர்ந்தவரின் நினைவுகள் சற்றே பின்னோக்கி செல்ல ஆரம்பித்தன.



வள்ளியம்மை கோலசிலாங்கூர் புக்கிட் செராக்கா தோட்டத்தைச் சேர்ந்தவர்.திருமணமாகி மூன்றே வருடத்தில் தன் கணவன் முருகப்பனை இழந்து விட்டவர்.அதன்பிறகு அவருடைய ஓரே துணை மகன் குமரன் மட்டுமே.வள்ளியம்மையும் முருகப்பனும் அந்த காலத்திலேயே சாதிவிட்டு சாதிமாறி கல்யாணம் செய்து கொண்டதால் உறவினர்களுடன் அவ்வளவு நெருக்கமில்லை.தோட்டத்தில் இருந்த மக்கள், அவர்களுக்கு சற்று ஆதரவாக இருந்து வந்தனர்.

வள்ளியம்மை அந்த தோட்டத்திலேயே வெளிகாட்டு வேலை செய்து குமரனை வளர்க்க ஆரம்பித்தார்.வெளிகாட்டு வேலையானது, தோட்டத்தில் உள்ள எல்லா சின்ன வேலைகளையும் செய்வதாகும்.உரம் போடுதல்,தோட்டத்து கிராணிமார்களின் வீடுகளைச் சுத்தம் செய்வது, எலி மருந்து போடுதல் இப்படி இன்னும் பல பல.

குமரனும் வளர்ந்து பெரியவன் ஆனான்.அவன் நன்றாகப் படித்ததால் நல்ல வேலையும் கிடைத்தது.இதற்குப் பின்னால் வள்ளியம்மையின் கஷ்டமும் தியாகமும் கலந்திருந்தது என்பது மறுக்க முடியாத ஒன்று.ஆனால் குமரனுக்குத் தன் தாய் மீது எப்போதும் ஒரு வருத்தம் உண்டு .சின்ன வயதில் அவன் கேட்ட பல பொருட்களும் அவனுக்குக் கிடைக்காததே அதற்கு காரணம். அம்மாவின் கஷ்டம் அம்மாவுக்கு மகனின் வருத்தம் மகனுக்கு.

முதலில் தோட்டத்தில் இருந்தே வேலைக்குச் சென்றவன், சில மாதங்கள் கழித்து கிள்ளான் நகரில் ஒரு வீடு பார்த்து தன் அம்மாவுடன் குடியேறினான்.தான் பட்ட கஷ்டங்கள் அனைத்தும் கரைந்து போனதாய் உணர்ந்தார்.வள்ளியம்மை தோட்டத்தை விட்டு கண்ணீருடன் பிரிந்து போனார்.

வள்ளியம்மைக்கு சில நாட்களில் பட்டணத்து வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமாய் ஒத்துப் போனது.குமரனும் தன் அம்மாவை நன்றாகவேப் பார்த்துக் கொண்டான்.சில மாதங்கள் கழித்து தன்னுடன் வேலை பார்க்கும் மாலினியைத் தன் தாயின் சம்மதத்துடன் மணம்புரிந்துக் கொண்டான்.

ஆரம்பத்தில் தன் மாமியாரை நன்றாகக் கவனித்துக் கொண்ட மாலினிக்குப், போகப்போக அவரைப் பிடிக்காமல் போய்விட்டது.பட்டணத்தில் பிறந்து வளர்ந்த அவளுக்கும் தோட்டத்தில் இருந்த வந்த வள்ளியம்மைக்கும் நிறைய கருத்து வேறுபாடுகள் தோன்ற ஆரம்பித்தன. சிறிதாய் ஆரம்பிக்கும் அனைத்தும் பெரிய சண்டையில் போய் முடிந்தன.

குமரன் இருதலைகொள்ளி எறும்பானான்.கடைசியில் மாலினி தற்கொலை கொள்வதாய் மிரட்ட வேறு வழியில்லாமல் தன் தாயாரை முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டான்.வள்ளியம்மையும் தன் விதியென ஒன்றும் சொல்லாமல் வந்து விட்டார்.

வள்ளியம்மை இந்த இல்லத்திற்கு வந்து நான்கு ஆண்டுகள் ஆகி விட்டன.அந்த முதியோர் இல்லத்தில் ஆரம்பத்தில் 31 பேர் இருந்தனர்.இன்றைய தேதியில் 29 பேர்கள் மட்டுமே உள்ளனர்.ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கதைகள் உண்டு.அவற்றில் பாதிக்குப்பாதி வள்ளியம்மையின் கதையின் சாயல் தான்.அங்குள்ள ராணியும் வீரம்மாவும்தான் அவருக்கு நல்ல நண்பர்கள்.

**********

வள்ளியம்மை பழைய நினைவுகளை அசைப் போட்டுக் கொண்டே அப்படியே தூங்கிப் போனார்.திடிரென தன்னை யாரோ தட்டி எழுப்புவது போல் உணர்ந்தார். கண்விழித்துப் பார்க்கையில் அவர் எதிரில் ஒரு குட்டி சிறுவன் நின்றுக் கொண்டிருந்தான்.அப்படியே குமரனின் சாயலில்.

“பாட்டி நான்தான் முருகன்.உங்கப் பேரன்.அப்பாவும் அம்மாவும் உங்க ரூம்லெ வெயில் பண்றாங்க,வாங்க”

வள்ளியம்மைக்குத் தன் கண்களையே நம்ப முடியவில்லை.தன் பேரனை அப்படியே வாரியணைத்து முத்தமழை பொழிந்தார்.பிறகு அவனைத் தூக்கிக் கொண்டு தன் அறையை நோக்கி வேகமாய் நடந்தார் இல்லை ஓடினார். அவர் ஓடி வருவதை அங்குள்ள அனைவரும் வியப்புடன் நோக்கினர்.யாரும் எதிர்பார்க்கா வண்ணம் திடிரென கால்தடுக்கி கீழே விழுந்தார். ராணி ஓடிவந்து அவரின் தோளைப் பிடித்து தூக்கி உலுக்க ஆரம்பித்தார்.

“வள்ளியம்ம, வள்ளியம்ம”

சட்டென விழித்தவர் தன்னைச் சுற்றி யாருமின்றி ராணி மட்டும் நின்றிருக்க,வியப்புடன் அவரை நோக்கினார்.

“என்ன வள்ளியம்ம? இங்கயே தூங்கிட்டெ? வா ரூம்புக்கு போலாம்”

தான் கண்டது வெறும் கனவென்று சட்டெனப் புரிந்துக் கொண்ட வள்ளியம்மை,சற்று ஏமாற்றுத்துடன் சாய்வு நாற்காலியில் இருந்து எழுந்தார்.ராணியிடம் ஒரு சின்ன சிரிப்பு சிரித்துவிட்டு அப்படியே தன் அறையை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.

போகும் வழியில் அந்தப் பூந்தோட்டதில் வீரம்மாவும் வேறு ஒருவரும் வள்ளியம்மையைப் போல சாய்வு நாற்காலியில் தூங்கிக் கொண்டிருந்தனர்.

“இங்கப் பாரு வள்ளியம்ம, உன்ன மாரியே இவங்களும் தூங்கிட்டாங்க.இரு போய் எழுப்பிட்டு வந்தர்ரன்” என ராணி சொல்ல ....

“ வேணா ராணி கொஞ்ச நேரம் கழிச்சு எழுப்பலாம்.வா போலாம்.”

ராணி பாட்டி குழப்பத்துடன் வள்ளியம்மை பாட்டியின் கையைப் பிடித்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தார்.

வள்ளியம்மையின் நோக்கம் என்னவென்று இந்நேரம் உங்களுக்குப் புரிந்திருக்கலாம்.



பின்குறிப்பு: இன்னும் முதியோர் இல்லங்களில் தனித்து வாழும்,வாழ்ந்துக் கொண்டிருக்கும் தாத்தாக்களுக்கும் பாட்டிகளுக்கும் இந்த கதை ஒரு சின்ன சமர்ப்பணம்.அவர்களின் கனவு எப்போதும் ஒன்றே ஒன்றுதான்.அந்தக் கனவு மெய்பட வேண்டும்.

படைப்பு:

மாரிமுத்து சக்திவேலு
 

Latest Episodes

Latest posts

New Threads

Top Bottom