Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


கழிபெருங் காரிகை - இந்திரா செல்வம்

Messages
81
Reaction score
60
Points
18
கழிபெருங் காரிகை

குக்கர் விசில் அடித்தது, அவசரமாக அதனை கீழே இறக்கி வைத்தாள் மதுரா..கணவன் ரஞ்சித் நல்ல தூக்கத்தில் இருந்தான். அந்த விசில் சத்தம் அவனது தூக்கத்தை கலைத்தது. புருவமுடிச்சிகளுடன் படுக்கையில் புரண்டு படுத்தான்.



தினமும் காலையில் அவன் கேட்கும் அலாரம் இது. எரிச்சலுடன் எழுந்து அமர்ந்தான். அருகில் குழந்தை அதிதி அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள். அவளை பார்த்ததும் ரஞ்சித்தின் எரிச்சல் சூரியனை கண்ட பனித்துளி போல் கரைந்து மறைந்து போனது. உதடுகளின் ஓரம் புன்னகை விரிந்தது. போர்வையை விலக்கி விட்டு அதிதியின் தூக்கம் கலைந்து விடாத வண்ணம் கட்டிலிலிருந்து எழுந்து கொண்டவன் பாத்ரூமினுள் நுழைந்தான்.



எல்லோரது வீட்டை போலவே அவர்களது வீடும் காலை வேளை அவசர கதியில் இயங்கத் தொடங்கியது.சமையலை முடித்து மூவருக்குமாக உணவை பேக் செய்தாள் மதுரா, அதிதியை குளிக்க வைத்து ஸ்கூலுக்கு கிளப்பியப்படி தானும் கிளம்பினான் ரஞ்சித் ரஞ்சித்தும் அதிதியும் டைனிங் டேபிளில் அமர்ந்து டிபனை சாப்பிடும் அந்த இடைவேளையில் மதுரா குளித்து விட்டு ரெடியாக வேண்டும் அப்போது தான் அவளால் காரில் சென்று ரெயில்வே ஸ்டேஷனில் இறங்கிக் கொள்ள முடியும் இல்லை என்றால் ஆட்டோ பிடிக்க வேண்டும்.



காலை வேளையில் ஆட்டோ பிடிப்பது கின்னஸ் ரெகார்டு தான். சில சமயம் விரக்தியில் மதுரா யோசிப்பதுண்டு அவளது சிறு வயதில் ஆட்டோக்கள் காலியாக போகும் ஆனால் அதில் ஏறிச் செல்ல அவளது அப்பாவிடம் பணம் இருக்காது. ஆனால் இப்போதோ கையில் பணம் இருக்கிறது. ஆனால் ஆட்டோக்கள் காலியாக வருவதில்லை அப்படியே வந்தாலும் நாம் சொல்லும் இடத்திற்கு வரமாட்டார்கள். எல்லாம் அனுபவப்பட்டுத், தெரிந்து கொண்டதால், எதற்கு வம்பென்று எது நடந்தாலும் ரஞ்சித்துடனே அவளும் கிளம்பி விடுவாள்.



டிபனை டிரெயினில் உண்ணப் பழகிக் கொண்டாள்.அப்படி உண்பது அவள் மட்டுமாக இருக்க மாட்டாள் மொத்த கம்பார்ட்மெண்ட்டில் 50% பேர் டிபனும் கையுமாக தான் இருப்பார்கள். வீட்டுக்குவீடு வாசப்படி தானே ?


மதுரா தனியார் கம்பெனி ஒன்றில் ஐம்பதாயிரம் ரூபாய் சம்பளத்தில் இருக்கிறாள். ரஞ்சித் கவர்மெண்டு உத்தியோகம் மாதம் நாற்பத்தி ஐந்தாயிரம் சம்பளம். குழந்தை அதிதி யுகேஜி படித்துக் கொண்டிருக்கிறாள். ரஞ்சித்தின் கார் முதலில் மதுராவை ஸ்டேஷனில் இறக்கிவிட்டு விட்டு பின் அதிதியின் பள்ளியை நோக்கி விரைந்தது.



பலத்த இடிபாடுகளுக்கு இடையே ஊர்ந்து சென்று ஜன்னலோரத்தில் நின்று கொண்டு டிபன் பாக்சை கையில் எடுத்தாள் இடம் கிடைத்துத் தான் உண்ண வேண்டும் என்றால் அலுவலகம் சென்று தான் உண்ண முடியும். ஆனால் அப்படி உண்ணவும் முடியாது. காரணம் மேனேஜரின் கழுகுப் பார்வை...



"வந்ததும், சாப்பாடா? சூப்பர்" என்று வாயால் சொல்ல மாட்டார் ஆனால் அவரது பார்வை சொல்லும். அதனால் தினமும் மதுரா கையேந்தி பவன் தான்.

அவளுக்கும் ஆசை தான் அமைதியாக நிதானமாக வீட்டில் அமர்ந்து சூடு ஆராத மொறுமொறு தோசையை பிய்த்து சட்டினியில் தொட்டு ரசித்து ருசித்து சாப்பிட வேண்டும் என்று... ஆனால் ஞாயிற்று கிழமைகளில் கூட அது முடியாது.



வாரநாட்களிலாவது டிபனை சாப்பிட்டு விடுகிறாள். ஆனால் ஞாயிற்றுக்கிழமையில் நேரே மதிய உணவு தான். உண்ண நேரமும் இருக்காது... தோன்றவும் தோன்றாது...



இப்படி மனதில் பலதும் ஓட, கையிலிருந்த சட்டினியில் குளித்த நமத்து போன தோசை அவளை பார்த்து சிரித்தது.



வேகமாக அதனை சுருட்டிவாயில் போட்டுக்கொண்டு அந்த காலி டப்பாவிலேயே அரைகுறையாக கையை கழுவிக் கொண்டு அடுத்த நிறுத்தத்தில் ரயில் நிற்கும் பொழுது ஜன்னல் வழியே அந்த தண்ணீரை வெளியே ஊற்றி விட்டு டிபன் பாக்சை மூடி பையினுள் வைத்தாள்.



அவளது நல்ல நேரம் அவளுக்கு இப்போது சீட் கிடைத்து விட்டது. அதுவும் ஜன்னலோர சீட் சிறு பிள்ளை போல் மனதில் சந்தோஷம் எழுந்தது ஆர்வமாக ஜன்னலில் தெரிந்த இயற்கை காட்சியை வேடிக்கை பார்க்கலானாள்.



எத்தனை முறை பார்த்தாலும் அவளுக்கு சலிக்காத காட்சி, இரயில் பயணம் இனிதாக கழிந்ததால் ஓர் மலர்ச்சியுடனே ஷேர்ஆட்டோ பிடித்து அலுவலகம் வந்தடைந்தாள்.



உள்ளே நுழைந்ததுமே " என்ன மேடம் இன்னைக்கு பிரைட்டா இருக்கீங்க?" என்று கேட்ட மோகனை பார்க்கையில் மலர்ச்சி மறைந்து எரிச்சல் பிறந்தது. ஆனால், அலுவலகத்தில் யாரையும் பகைத்துக்கொள்ள முடியாது.



ஓர் மென்னகையுடன் அவனைத் தாண்டிச் சென்றாள் இது ஆரம்பம் தான் காலை முதல் மாலை வரை இது போன்ற பேச்சுக்களை மதுரா கேட்டுத்தான் ஆக வேண்டும் காரணம் இவள் ஒரு பெண் !!! முதலில் நிறைய கவலைப்பட்டு அது அழுகையாக கூட வெளிப்பட்டது ஆனால் இப்போது அவள் பக்குவப்பட்டு விட்டாள்.



உடலிலிருந்த அத்தனை சக்தியையும் ஸ்ட்ரா போட்டு உருஞ்சிய பின் அவளை விடுவித்தது அவளது அலுவலகம்.



நேரம் மாலை ஆறு முப்பது வீட்டை நோக்கி பயணித்தாள் மதுரா. வீட்டிற்குள் நுழைந்ததும் மகள் அதிதி வீட்டுப் பாடத்தோடு காத்திருந்தாள்.கவர்மெண்ட் வேலை என்பதால் சரியாக ஐந்து மணிக்கே ரஞ்சித்தின் அலுவலகம் முடிந்துவிடும். நேரே அதிதியின் கிரச்சிற்கு சென்று அவளை அழைத்து வந்து விடுவான்.



மதுராவை பார்த்து விட்டால் அவனது டியூட்டி ஓவர் என்று பொருள் லேப்டாப்வை வைத்துக் கொண்டு அமர்ந்து விடுவான் ஃபேஸ்புக், டிவிட்டர், வாட்சப் என்று சோஷியல் மீடியாவினுள் புகுந்து விடுவான். இது தான் வாடிக்கை.



மதுரா கொடுத்த காப்பியை பெற்றுக் கொண்டவன் லேப்டாப்பிலிருந்து முகத்தை உயர்த்தவேயில்லை இதுவும் வழக்கம் தான் ஓர் பெருமூச்சுடன் அதிதியிடம் பால் கிளாசை நீட்டினாள். ஆனால் இவள் காப்பி குடித்தாளா? என்று கேட்க ஆள் இல்லை லேப்டாப்பிலிருந்து நிமிர்ந்து பார்த்தால் தானே அவள் காப்பி குடிக்கவில்லை என்பது அவனுக்கு தெரியும். ஆனால் அதற்காக அவன் மேல் மதுராவிற்கு கோபம் வரவில்லை காரணம் அது பழகி விட்டது.



அதற்கு மேல் யோசிக்க கூட நேரமில்லை மதுராவிற்கு. அதிதியின் வீட்டுப்பாடத்தினுள் மூழ்கிவிட்டாள். இப்போதெல்லாம் யூகேஜி படிப்பே மூன்றாம் வகுப்பு படிப்பு போல் இருக்கிறதே மதுரா அதிதி இருவருமே பாவம் தான்.



அப்போது அவளது செல்போன் அழைத்தது இந்த நேரத்தில் யார்.? அம்மாவிடம் மாலை ரயிலில் வரும் போதே பேசிவிட்டாளே வேறுயாராக இருக்கும்? மனதில் குழப்பத்துடனும் பயத்துடனும் கைப்பையிலிருந்து ஃபோனை எடுத்தாள். அலுவலக எண்ணை பார்த்ததும் அவசரமாக எடுத்து காதுக்கு கொடுத்தாள் மேனேஜர் தான் அவள் செய்த தவறு ஒன்றால் பெரும் பாதிப்பு ஏற்பட்டு விட்டதாக ஆங்கிலத்தில் சரமாரியாக அவளை திட்டித் தீர்த்தார்.



நாளை காலை வந்ததும் அந்த தவறை சரி செய்து விட்டுத்தான் மற்ற வேலைகள் பார்க்க வேண்டும் என்று கட்டளையிட்டு விட்டு போனை வைத்தார் உதடுகளை அழுந்தக் கடித்தபடி அத்தனை வசைகளையும் கேட்டு முடித்துவிட்டு அவள் திரும்பிப் பார்க்கையில் அதிதி புத்தகத்தின் மேலேயே படுத்து உறங்கி விட்டிருந்தாள்.



மனம் பகீரேன்றது ஐயோ! 'குழந்தை எதுவும் சாப்பிடவேயில்லையே!' - அதுவரை வாங்கிய திட்டும் அது ஏற்படுத்திய வலியும் காற்றில் பறக்க வேகமாக சென்று அதிதியை எழுப்ப முயன்றாள்.



"செல்லம் எழுந்திரிடா சாப்பிடனும், சாப்பிட்டு தூங்கலாம்" அவள் எழுப்ப எழுப்ப அதிதி பெருங்குரல் எடுத்து அழத் தொடங்கினாள்.



கணினியில் புதைந்திருந்த ரஞ்சித்தின் தலை நிமிர்ந்தது "குழந்தை தூங்குறது கூட தெரியாம அப்படியென்ன ஃபோன் பேச்சு" என்றான் ஏளனமான குரலில்.



"ஆபீஸ்லேயிருந்து தான் ஃபோன் நான் ஏதோ பெரிசா தப்பு பண்ணியிருக்கேன்னு மேனேஜர் திட்டுராரு" பதட்டத்துடன் பதிலளித்தாள்



"ஆபீஸ் வேலை ஆபீஸ்ல எதுக்கு ஆப்டர் ஆபிஸ் அவர்ஸ்ல ஃபோன் பண்றாங்க ? நீயும் எதுக்கு அட்டென்ட் பண்ணி பேசுற ? இப்போ பார் குழந்தை சாப்பிடாம தூங்கிட்டா. இந்த பொம்பளைங்க கிட்ட ஃபோனை கொடுத்தா அவ்வளவுதான் குடும்பம் உருப்பட்டிடும்" - சத்தமாய் முணுமுணுத்தபடி மீண்டும் கணினியில் புகுந்தான்.



மேனேஜர் திட்டும் போது வருத்தமாக இருந்தது மதுராவிற்கு ஆனால் இப்போது வலித்தது. ஆனால் அதனை உள்ளேயே வைத்து அழுத்தியது அவளது தாயுள்ளம் ...



இப்போது அதிதியை சாப்பிட வைக்க வேண்டும் அது தான் முக்கியம் என்று தனக்குத்தானே கூறிக் கொண்டவள் அவளை எழுப்ப முயன்றாள் அதிதி மீண்டும் சத்தமாக அழத் தொடங்கினாள்.



அதே நேரம் ரஞ்சித்தின் செல்போன் அவனது மடியில் கிடந்து சசிணுங்கியது எடுத்து நம்பரை பார்த்தவன் அவசரமாக மதுராவை பார்த்து "ஷ் ....ஷ்....ஆபீஸ்ல இருந்து ஃபோன் அதிதியோட அழுகையை நிறுத்து இல்லன்னா தூக்கிட்டு உள்ள போ... ம் .. சீக்கிரம் " என்று அவசரப்படுத்தினான்.



இவள் குழந்தையை தூக்கிக் கொண்டு உள்ளே சென்றதும் அவசரமாக செல்போனை எடுத்து காதுக்கு கொடுத்தவன் மிக பவ்யமாக "ஹலோ.... சார்....." என்றான்.



மதுராவின் காதுகளில் அவனது குரல் ஒலித்தது... 'ஆபீஸ் வேலை ஆபீஸ்ல... எதுக்கு ஆப்டர் ஆபிஸ் அவர்ஸ்ல ஃபோன் பண்றாங்க?' - அதன் தொடர்ச்சியாக அந்த காரிகையின் கண்களிலிருந்து கசிந்த ஒரு துளி கண்ணீர் அவள் மடியிலிருந்த மழலையின் மீது பட்டுத் தெறித்தது...

 

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
782
Points
93
ரொம்ப எதார்த்தமா மனச டச் பண்ற மாதிரி எழுதியிருக்கீங்க இந்திரா. நிறைய வார்த்தைகள் ரொம்ப அருமையா வந்து விழுந்திருக்கு...



பலத்த இடிபாடுகளுக்கிடையே என்கிற வரியாகட்டும்... உடம்புல உள்ள மொத்த சக்தியையும் ஸ்ட்ரா போட்டு உறிஞ்சிட்டு சக்கையா வெளியே தூக்கிப் போடுற வரியாகட்டும்... ரொம்பவே தாக்கத்தை ஏற்படுத்துணிச்சு...



பலத்த இடிபாடுகளை படிக்கிறப்ப பூகம்பம் ஃபீல் வந்தது... பீக் டைம்ல ட்ரைன்ல ஏறி இறங்கறதும் அவ்வளவு கஷ்ட்டமான விஷயம்ங்கறதை கனெக்ட் பண்ண முடிஞ்சுது...



மொத்த சக்தியையும் ஸ்ட்ரா போட்டு உறிஞ்சுட்டு என்கிற வரிகளை படிக்கும் போது ஒர்கிங் உமன்ஸ் நிலையை நல்லாவே உணர முடியுது... அந்த நிலையில வீட்டுக்கு வந்து ஒரு கப் காபி இல்லாம மறுபடியும் வீட்டு வேலையை செய்ய ஆரம்பிக்கும் போது எப்படி இருக்கும்னு நினைக்கும் போது ரொம்பவே பரிதாபமா இருக்கு. ஆனா இங்க நிறைய பெண்களோட நிலை அதுதானே...



ட்ரைன்ல நின்னுக்கிட்டே சாப்பிட்டு டிபன் பாக்ஸ்ல கை கழுவறது... ஆட்டோ கிடைக்காம அவஸ்தை படறது எல்லாம் தத்ரூபம்...



அப்புறம் மதுரா மேனேஜர்கிட்ட போன் பேசிக்கிட்டே இருப்பா... அவ திட்டு வாங்கும் போது நானே திட்டு வாங்கற மாதிரி இருந்தது... கால் கட் பண்ணிட்டு திரும்பினா குழந்தை தூங்கிரும்... அந்த நேரத்துல அவ மனநிலை நொடியிலே மாறும். அந்த இடம் ரொம்ப எதார்த்தம்...



"மேனேஜர் திட்டிய போது வருத்தமாக இருந்தது... இப்போது(கணவனின் கோபம்) வலித்தது... அந்த வலியை உள்ளேயே வைத்து அழுத்தியது அவள் தாயுள்ளம்..." - அம்மாக்களோட முதல் பிரையாரிட்டி குழந்தைங்கதான்... மத்த எல்லாம் அதுக்கு அடுத்துதான்னு சொல்ல இதைவிட பெட்டரான வரிகள் கிடைக்காது...



கணவனை விட மனைவி அதிகமா சம்பாதிச்சாலும் வசதிகளும், ஓய்வும், மரியாதையும் அவளுக்கு ரொம்பவே மட்டுதான்...



உங்களோட பெஸ்ட்னு இந்த ரைட்டிங்கை தான் நான் சொல்லுவேன்... அவ்வளவு எதார்த்தமா இருந்து...​
 
Top Bottom