- Messages
- 726
- Reaction score
- 1,126
- Points
- 93
காதலொரு கலைடாஸ்கோப் திருப்பம்
எழுதியவர்: ஷிவானி செல்வம்
அத்தியாயம் 9
உத்ரா தன் வீட்டிற்கு வந்த பின்னும் விக்கி சொன்னதையே நினைத்துக் கொண்டிருந்தாள்.
“விக்கி இடியட்! நீ உன் லவ்வ அக்செப்ட் பண்ணிக்க மாட்டேங்குற. பட், என்ன மட்டும் உதய்கிருஷ்ணா கூட ஜோடி சேர்த்து வைக்க துடியா துடிக்கிற. எல்லாம் இந்த அம்மாவ சொல்லனும். அவன்கிட்டப்போய் நான் கல்யாணமே பண்ணிக்க மாட்டேங்குறேனு பொலம்பி இப்ப புரோக்கர் வேலப் பாக்க ஆரம்பிச்சிட்டான்.” என்று இருவரையும் சேர்த்து திட்டினாள்.
அப்போது தான் அவளது தம்பி கவின், “அக்கா நாளைக்கு நான் யூபிஎஸ்சி எக்ஸாம் எழுதப்போறேன். எப்பவும் போல நீதான் வந்து என்னை டிராப் பண்ணனும்” என்றான்.
“ம், ஓகேடா.” என்றவள் மீண்டும் விக்கியை மனதுள் குதறத் துவங்கினாள்.
கவினுக்கோ ஆச்சரியம். தனது கையிலிருக்கும் புத்தகத்தை பிடிங்கி அவள் இரண்டு கேள்வி கேட்காததும், ஒரு மணி நேரம் அறிவுரை வழங்கி அறுக்காததும் அவளின் மாற்றத்தை பறைசாற்றுவனவாய் இருந்தன. அதில் அவன் சற்று ஆசுவாசப்பட்டான். பானுமதியும் கவிலயாவும் கூறியபோது கூட அவன் உத்ரா மாறிவிட்டதாக நம்பவில்லை. ஆனால், இப்போது முழுமையாக நம்பினான்.
உத்ரா வேறு பிரச்சனைக்குள் தலையை நுழைத்திருந்ததில் தன் இயல்பை தொலைத்தாள். ஏன் அந்தப் பெட்டிக்கடைக்காரன் போதைபொருள் வினியோக வழக்கில் கைது செய்யப்பட்டதை விக்கியிடம் சொல்லவேண்டும் என்பதையே கூட மறந்திருந்தாள்.
ஆனால், அவளால் பாதிக்கப்பட்டவன் அவளை மறக்கவில்லை. அவனை கைது செய்த காவல்துறை அதிகாரி அவனை பற்றிய துப்பு கிடைத்த விவரத்தையும் சொல்ல, உத்ரா மேல் தீரா வஞ்சம் கொண்டான் அந்த பழைய ரௌடி முருகேசன். ஆனால், இதையெதையும் அறியாமல் தன்போக்கிலிருந்தாள் உத்ரா.
மறுநாள் காலை தனது தம்பியை ஸ்கூட்டியில் தேர்வு மையம் வரை கொண்டுபோய் விட்டவள் ‘ஆல் த பெஸ்ட்’ கூறி வீடு வந்தபோது அதிர்ச்சியொன்று காத்திருந்தது.
உதய்கிருஷ்ணா தனது அக்கா, அக்கா கணவனை அழைத்துக்கொண்டு அவள் வீட்டிற்கே வந்திருந்தான்.
அவனை பானுமதி ஏகபோகமாய் கவனித்துக் கொண்டிருந்தபோது கவிலயா உத்ராவின் காதருகே குனிந்து, “அம்மா ரொம்ப டூ மச்சா பண்றாங்க இல்லக்கா?” என்றாள்.
“ஆமாம்” என்று ஆமோதித்தாலும் வெட்கப் புன்னகை சிந்தினாள் உத்ரா.
கவிலயா அதனை குழப்பமாய் பார்த்தாள்.
பானுமதி உதய்கிருஷ்ணாவுக்கு பெண் பார்த்தாகிவிட்டதா என்று விசாரிக்க, அவர்கள் அனன்யாவை பற்றி கூறினார்கள். பானுமதியின் முகம் உடனே இருளடைந்துவிட்டது. உத்ராவும் அவஸ்தையாய் உணர்ந்தாள். ஆனால், அடுத்து அவள் எதிர்பாராத செய்தியொன்றை கூறினாள் அவனின் அக்கா ரஞ்சனி.
நேற்றிரவு அனன்யாவின் பெரியப்பா அலைபேசியில் தொடர்புகொண்டு சம்பந்தத்தை இத்தோடு நிறுத்திக்கொள்ளலாம் என்று சொன்னதாய் கூற, உத்ரா அதிர்ச்சியாகப் பார்த்தாள்.
பானுமதி ஆர்வமாக அவர்களை ஏன், என்ன காரணம் என்று தூண்டித் துருவ, “ஒரு ட்ரக் அடிக்ட்டுக்கு எம்பொண்ண குடுத்து கஷ்டப்படச் சொல்றீங்களா?” என்றுவிட்டாராம் அனன்யாவின் பெரியப்பா நந்தகோபன்.
யார் உங்களிடம் அப்படி பொய் சொன்னது என்று கேட்டதற்கும் எல்லாம் வெளியே விசாரித்துவிட்டு தான் சொல்கிறோம் என்று சொல்லி அழைப்பை துண்டித்ததோடு எண்ணையும் பிளாக் செய்துவிட்டாராம்.
இதையெல்லாம் ரஞ்சனி ஆக்ரோசமாகச் சொல்லும் போது, “என் தம்பியப் பத்தி இப்படி அவர்கிட்ட தப்பா சொன்னவன் மட்டும் என் கையில கெடச்சான்? அவன ஒரு வழி பண்ணாம விடமாட்டேன்!” என்று சபதம் எடுத்தாள்.
உத்ராவுக்கோ பகீரென்று இருந்தது. அதெப்படி அவர் இப்படி சொல்ல முடியும்? உதய்கிருஷ்ணா எந்தவொரு போதைப் பழக்கமும் இல்லாதவன் என்றல்லவா நான் அவருக்கு கொடுத்த அறிக்கையில் சொல்லியிருந்தேன். இப்போது அவர் இப்படி மாற்றி சொல்கிறார் என்றால்? என்று அதிலேயே உழன்று கொண்டிருந்தாள்.
உதய்கிருஷ்ணா அவளிடம், “நேத்து நான் குடுத்த அசைன்மெண்ட டிஸ்கன்டினியூ பண்ணிடுங்கங்க.” என்று இறங்கிய குரலில் சொன்னான்.
குழப்பத்திலிருந்தவளும் சரியென்று தலையாட்டினாள்.
ரஞ்சனியின் கணவன் அகிலன் பதிலுக்கு உத்ராவின் வரன் பற்றி கேட்க, நல்ல இடமாய் பார்த்துக்கொண்டே இருப்பதாய் சலிப்போடு சொன்னார் பானுமதி.
கவிலயாவையே பார்த்துக் கொண்டிருந்த ரஞ்சனி, “ஆமா மூத்தப்பொண்ணுக்கு முன்னாடி உங்க ரெண்டாவது பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறதுல உங்களுக்கு ஆட்சேபனை ஏதாவது இருக்கா?” என்று கேட்க, கவிலயாவின் உடம்பில் மின்சாரம் பாய்ந்தது.
ரஞ்சனி தெளிவாகத் தான் அவ்வாறு கேட்டாள். ஏற்கனவே ஒருமுறை கோவிலில் வைத்து பானுமதி உத்ராவின் புகைப்படத்தை காண்பித்து சம்பந்தம் பேசியபோது வேண்டாம் என்று மறுத்துவிட்டு, இப்போது மீண்டும் அவளையே பெண் கேட்டால் அவளின் கௌரவம் என்னாவது? ஆகையால் தான் கவிலயாவிடம் தாவினாள்.
பானுமதி, “அய்யயோ! என்னம்மா நீ இப்படியெல்லாம் கேட்குற? அதெப்படிம்மா பெரியவ இருக்கும்போது சின்னவளுக்கு முடிக்க முடியும்?” என்று பதறி மறுத்தார்.
உதய்கிருஷ்ணாவும் தன் அக்காவை மனதிற்குள் கடிந்தான். உத்ரா இனிமையான மனநிலை கலைந்து அவர்கள் எப்போது வீட்டை விட்டு வெளியேறுவார்கள் என்ற மனநிலைக்கு வந்துவிட்டாள்.
அகிலனோ வந்ததிலிருந்து உதய்கிருஷ்ணாவையே கவனித்துக் கொண்டிருந்தவன், “உங்களுக்கு பெருசா மறுப்பு ஒன்னும் இல்லைனா உங்க பெரியப் பொண்ணயே என் மாப்பிளைக்கு கட்டிக் குடுங்க.” என்று கேட்க, பானுமதி தயக்கமாய் உத்ராவைப் பார்த்தார்.
ஏன் அனைவருமே அவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
மொத்த ஸ்பாட்லைட்டும் தன் மேல் விழ, “உங்க இஷ்டம்மா” என்று சொல்லி தலை குனிந்தாள்.
முதல்முறையாக அந்த அதிசயம் நிகழ்ந்தது.
கவிலயாவிற்கோ தான் கனவு காண்பது போன்ற பிரம்மை உண்டானது. கூடவே நிம்மதிப் பெருமூச்சும். தனது தந்தையாலும், அக்கா கணவனாலும் திருமணத்தையே வெறுக்கும் நிலைக்குச் சென்ற தன் அக்கா எப்படி திடீரென்று இப்படி மாறினாள் என்று நடப்பதை தன் கண்களையே நம்ப முடியாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.
மகிழ்ச்சி பொங்க சாமியை கும்பிட்டுவிட்டு, “உங்க குடும்பத்துக்கூட சம்பந்தம் வச்சிக்க நாங்க குடுத்து வச்சிருக்கனும்.” என்று தன் சம்மதத்தை தெரிவித்தார் பானுமதி.
ரஞ்சனிக்கோ இந்த சம்பந்தம் சுத்தமாகப் பிடிக்கவில்லை. ஆனாலும், நந்தகோபன் மூஞ்சில் கரியைப் பூச வேண்டும் என்ற ஆத்திரத்தில் அமைதியாக இருந்தாள். அகிலன் அடுத்த வாரமே நிச்சயம் செய்துக் கொள்ளலாம் என்று சொல்ல, பானுமதியும் சரியென்றார்.
உதய்கிருஷ்ணா உத்ராவையே வைத்தக்கண் வாங்காமல் பார்த்ததும், “கெளம்பலாமா உதய்?” என்று அவன் தோளில் கைவைத்தான் அகிலன்.
“கெளம்பலாம் மச்சான்.” என்று நெளிந்தான் அவன்.
தாங்கள் கொண்டு வந்த பழங்களை கொடுத்துவிட்டு பானுமதியை உடல்நலத்தை பேணுமாறு கூறிவிட்டு அவர்கள் விடைபெற்றபோது, ஆசுவாசமாக இருந்தது உத்ராவுக்கு.