❤️ காதல் கடிதமடி நான் உனக்கு 02 ❤️
ஒரு மணி நேரத்திற்கு பிறகு...
குடும்பத்தில் உள்ள நால்வரும் கிளம்பித் தயாராகி, காரில் திருமங்கலத்தை நோக்கி பயணித்தார்கள்.
அன்பு வாகனத்தை செலுத்த... பின் சீட்டில் அமர்ந்த வண்ணம் கிசுகிசுவென ரகசியம் பேசிக் கொண்டிருந்தார்கள் இவர்களின் தந்தை விக்ரமன் மற்றும் தாய் திரிபுரசுந்தரி.
இனியனோ அன்பின் அருகே அமைதியாய் அமர்ந்திருந்தான்.
கார் பயணம் முழுவதும் இனியன் யாரிடமும் பேசிக்கொள்ளவில்லை. அன்பு காரை ஓட்டிக் கொண்டிருக்க, சீட்டில் சாய்ந்த வண்ணம் ஜன்னல்
வழியாய் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தான் இனியன்.
அவனுக்கோ அவளின் நினைவுகள் தான் விடாமல் துரத்தியது.
'டேய் அழகா... டேய் அழகா...' என்று தான் அவனை எப்பொழுதும் அழைப்பாள் அவள்.
"டேய் அழகா, எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா? நீ என்கூட இருந்தா போதும், எனக்கு வேற எதுவும் தேவையில்லை. எனக்கு உன்னை மாதிரியே ஒரு ஆண் குழந்தை, அப்பறம் உன்னோட இந்த அழகான கண்கள் இருக்கிற மாதிரி ஒரு பெண் குழந்தை வேணும். உன்னையும், நம்ம குழந்தைகளையும் நான் காலம் முழுக்க ரசிச்சுப் பார்க்கணும். நூறு வருஷம் நான் உன்கூட வாழனும் டா அழகா. அப்பறம் கடைசியில் உன் இதயத்தில் தலை சாய்ந்து, உன்னோட இந்த அழகான கண்ணைப் பார்த்துட்டே நான் என் உயிரை விட்டு விடனும்." என்று கொஞ்சும் கண்களுடன், சிரித்த உதடுகளால் உருகி உருகிப் பேசிய அவளே தான், சில நாட்களுக்குப் பிறகு...
"அழகிற்கு இனியன், தயவு செஞ்சு என்னை விட்டிரு. எனக்கு இன்னும் ரெண்டு மாசத்தில் கல்யாணம். அவன் உன்னை விட பெரியப் பணக்காரன். நீ நல்லா வசதியான வீட்டுப் பையன் தான்... ஆனா என்ன உன் மொத்த சொத்தையும் சேர்த்தா என்ன ஒரு 20 கோடி வருமா? அதுல பாதி உன் தம்பிக்கு போக மீதி 10 கோடி... இந்தக் காலத்தில் ரொம்பவே கம்மி. ஆனா, அவன் சொத்து மதிப்பு 100 கோடி. உன்னை விடப் பத்து மடங்கு அதிகம்! அவன் வீட்டுக்கு ஒரே பையன்... சோ, நான் அவனைக் கல்யாணம் பண்ணிக்க முடிவுப் பண்ணிட்டேன். ஏதோ சில மாதங்கள் உன்னை நான் லவ் பண்ணித் தொலைஞ்சுட்டேன். இனியும் என்னால உன்னை மாறி ஒருத்தன் கூட எல்லாம் குப்பைக் கொட்ட முடியாது." என்று மூஞ்சியில் அடிப்பது போல தான் சொல்லிவிட்டு சென்றாள்.
எதற்கும் கலங்காத, கட்டுக்கடங்காத இனியனை முதன் முதலில் கலங்கடித்த பெருமை அவள் ஒருத்தியையே சேரும்.
அனைத்து விஷயங்களிலும் தெளிவாய் இருக்கும் இனியன் கடைசியில் காதலில் ஏமாறுவான் என்பதை அவனே எதிர்பார்த்தது இல்லை.
அந்த வலி தான் அவனை அதிகமாய் வாட்டியது.
என்ன செய்தாலும் அவனால் அவள் செய்த துரோகத்தை மட்டும் மறந்திட முடியைவில்லை.
இவ்வாறு ஏமாந்து விட்டோமே என்று தன்னைத் தானே கடிந்த வண்ணம் அமர்ந்திருந்தான்.
சுமார் ஐந்து மணி நேரத்திற்குப் பிறகு... கோயம்புத்தூரிலிருந்து,
திருமங்கலத்தில் இருக்கும் சாமன்யாவின் வீட்டை வந்து அடைந்தார்கள் அழகிற்கு இனியன் மற்றும் குடும்பத்தினர்.
அன்பு தனதுக் காரை அந்த இரண்டு அடுக்கு வீட்டின் முன்னால் நிறுத்த...
காரில் இருந்து இறங்கினார்கள் விக்ரமன் மற்றும் திரிபுரசுந்தரி.
இனியன் மட்டும் ஏதோ ஒரு யோசனையில் காரின் உள்ளேயே அமர்ந்து இருக்க...
"அண்ணா, பொண்ணு வீட்டுக்கு வந்துட்டோம்." என்று இனியனின் தோள்களை உலுக்கினான் அன்பு.
அவன் குழுக்களில் நினைவுத் திரும்பிய இனியன்... "நான் இங்க சாமன்யா வீட்டுக்கு வரல. எனக்கு டயர்டா இருக்குது, நான் தூங்கனும். இங்க தான் நமக்குன்னு ஒரு சொந்த வீடு இருக்கே. அப்பறம் ஏன் நான் இங்கே தங்கனும்? என்னை நம்ம வீட்டில் இறக்கி விடு. அதைக் கல்யாணத்துக்காக சுத்தம் பண்ணி தான வெச்சு இருப்பாங்க? நான் நம்ம வீட்டுக்குப் போறேன்... சாவிக் கூட என்கையில் தான் இருக்குது." என்று இறங்க மறுத்தான்.
அதனால் வேறுவழியின்றி விக்ரமன் மற்றும் திரிபுரசுந்தரியை சாமன்யா வீட்டில் இறக்கி விட்ட அன்பு... தன் அண்ணனை அழைத்துக் கொண்டு திருமங்கலத்தில் தங்களுக்கென சொந்தமாய் இருக்கும் அந்த பூர்வீக வீட்டில் கொண்டுப் போய் இறக்கி விட்டான்.
விக்ரமனின் சொந்த ஊர் திருமங்கலம் தான்.
வேலைக்காக 30 வருடங்களுக்கு முன்பு விக்ரமன் கோயம்பத்தூருக்குக் குடிப் பெயர்ந்து விட... அங்கே தான் வளர்ந்தார்கள் இனியன் மற்றும் அன்பு. எப்பொழுதாவது எதாவது விஷேசம், திருவிழா என்றால் தான் திருமங்கலம் பக்கமே வருவார்கள் இவர்கள். அதனாலேயே சொந்தங்களுடன் இனியன் மற்றும் அன்பிற்கு பெரிதாய் பழக்கமில்லை.
அன்பாவது சற்று உறவுகளுடன் ஒட்டுவான். இனியன் பெரிதாய் யாரிடமும் ஒட்டமாட்டான். அவன் உலகம் மிக சிறியது தான்... அதில் அவன் குடும்பம் மற்றும் நண்பர்கள் பத்து பேர் மட்டுமே அடக்கும்.
அதனால் தனித்து இருந்தே பழக்கப்பட்ட இனியன், அன்றும் யாரிடமும் ஒட்டி உறவாட விருப்பமின்றித் தங்கள் வீட்டிற்கு சென்று விட... அவனை அங்கே இறக்கிவிட்ட அன்பு திருமண வேலைகளை கவனிக்க வேண்டி அங்கிருந்து நேராக மண்டபத்திற்கு சென்று விட்டான்.
அன்று மாலை...
இனியனுடைய நட்பு வட்டாரமும் இவர்களுடைய ஊருக்கு வந்து விட... அவர்களிடம் தான் அமர்ந்து அன்றைய பொழுதை கழித்தான் இனியன்.
*****
அடுத்த நாள் காலை...
திருமண மண்டபத்தில்...
அந்த கல்யாண மண்டபம் முழுக்க சொந்த பந்தங்கள் நிரம்பியிருக்க... ஆளுக்கொரு திசையில் வேலைகளும் தீவிரமாய் நடந்துகொண்டிருந்தது. அனைவர் மனதிலும், முகத்திலும் அப்படி ஒரு மகிழ்ச்சி... அந்த மகிழ்ச்சியை மேலும் மெருகேற்றும் விதமாய் சத்தமாக கேட்டது மணமகள் அறையினுள் இருந்து வந்தன சிரிப்போசை சத்தங்கள்.
அழகுப் பதுமையாய் தயாராகி அமர்ந்திருந்த மணமகளைக் கிண்டல் செய்துக் கொண்டிருந்தார்கள் அவளின் தோழிகள்.
இப்படி ஆரவாரம் செய்யும் தோழிகளுக்கு நடுவில் அமைதியாய் அமர்ந்திருந்தாள் மணமகள் சாமன்யா ராமலிங்கம்.
எப்பொழுதும் கலகலவென இருக்கும் சாமன்யா, தன் தோழிகளின் கிண்டல்களுக்கும் கேலிகளுக்கும் செவி சாய்க்காமல் பதட்டத்துடன் அமர்ந்திருந்திருக்க...
அவளை புரியாமல் பார்த்த அவள் தோழி லேகா...
"இவளுக்கு என்ன டி பிரச்சனை, இப்படி மூஞ்சியை உம்முன்னு வெச்சு உட்கார்ந்து இருக்கா?" என்று நக்கலாக சிரிக்க...
"ஃபர்ஸ்ட் நைட்டை நினைச்சு பயம் போல?" என்று அதே நக்கலுடன் சிரித்தாள் ரியா.
தன் தோழிகளை ஒரு பார்வைப் பார்த்த சாமன்யா... "அய்யோ... சிரிக்காதீங்க டி, நானே அவரை நினைச்சு பயத்தில் இருக்கேன், நீங்க வேற." என்று பாவமாய் விழித்தாள்.
"எவரை நினைச்சு?" என்று ரியா கண்ணடிக்க...
தன் வாயைப் பிதிக்கிய சாமன்யா... "நான் எவரை சொல்றேன்னு உண்மையாவே உனக்கு தெரியலையா, இல்லை தெரியாத மாறி நடிக்கிறையா?"
"ஹிஹி... உன் வருங்கால ஆத்துக்காரரை தான சொல்லற?" என்று பல்லைக் காட்டினாள் ரியா.
லேகாவோ, சாமன்யாவிடம்... "சம்மு, அவரை நினைச்சு உனக்கு என்ன டி பயம்?" என்று தன் கிண்டலை விடுத்து பொறுமையாய் வினவ...
"நான் கேள்விப் பட்டிருக்கேன் லேகா. அவருக்கு கோபம் ரொம்ப வருமாம். கண்டிப்பா அவர் என்னை திட்டப் போறார்... எல்லாம் முடிஞ்சுது! எனக்கு அழுகையே வருது." என்று தன் அழகான முட்டைக் கண்கள் விரிய சாமன்யா மேலும் புலம்ப ஆரம்பிக்க...
"அவர் எதுக்கு டி உன்னை திட்டனும்?" என்று புரியாமல் தன் தோழியை நோக்கினாள் லேகா.
"அதான..! அவர் உன்னைத் திட்ட என்னடி காரணம் இருக்குது?" என்ற வண்ணம் சுகந்தியும், ரியாவும் சாமன்யாவின் எதிரில் வந்து அமர்ந்தார்கள்.
தோழிகள் மூவரையும் விழிகள் விரிய மாறி, மாறிப் பார்த்த சாமன்யா, நீண்ட ஒரு பெருமூச்சுடன் ஒரு வாரத்திற்கு முன்பு நடந்த அந்த நிகழ்வைப் பகிற ஆரம்பித்தாள்...
"அன்னைக்கு பொண்ணு பார்க்கிறபோது அவர் என்கிட்ட என்ன சொன்னாரு தெரியுமா?" என்று அன்று நடந்த விஷயங்களை எல்லாம் ஒன்று விடாமல் தன் தோழியிடம் கூறியவள்...
"இதை எல்லாம் சொல்லிட்டு கடைசியா அவர் ஒன்னு சொன்னாரு டி... 'நான் சொன்னது எல்லாம் உனக்கு புரிஞ்சுது தான சாமன்யா? உனக்கும் எனக்கும் கண்டிப்பா செட் ஆகாது. உன் வாழ்க்கையை நான் கெடுக்க விரும்பல. என் வீட்டில் தான் நான் என்ன சொன்னாலும் புரிஞ்சுக்கவே மாட்டேங்கிறாங்க. இன்னைக்கு எனக்கே சொல்லாம பொண்ணுப்பார்க்க ஏற்பாடு பண்ண மாதிரி நாளைக்கு என் விருப்பமே இல்லாம எனக்கொரு கல்யாண ஏற்பாட்டை அவங்க பண்ணவும் நிறைய வாய்ப்பு இருக்குது. அவங்களுக்கு என் விருப்பம் எல்லாம் முக்கியமே இல்ல... அவங்க சொல்லற பொண்ணு கழுத்தில் நான் தாலிக் கட்டணும் அவ்வளவு தான். அதனால், என்னைப் பிடிக்கலைனு நீயே உன் வாயால சொல்லி இந்த கல்யாணத்தை நிறுத்திடு. என் அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக், அது, இதுனு சொல்லி என்னை எல்லாப் பக்கமும் லாக் பண்ணிட்டாங்க. என்னால என் சைடில் இருந்து எதுமே பண்ண முடியல. அதனால் எனக்குத் தெரியாது சாமன்யா! நீ தான் இந்த கல்யாணத்தை நிறுத்தனும்.
நிறுத்துவ தான? இல்லேனா... அதுக்கப்பறம் நடக்கும் எந்த ஒரு விஷயத்துக்கும் நான் பொறுப்பு இல்ல. என் உண்மையான முகத்தை அப்போ நீ நிச்சயம் பார்ப்ப!" என்று அன்னைக்கு அவர் கோபமா சொல்ல...
நான் அப்போதிக்கு சரி, சரினு வேகமா பயத்தில் தலையசைச்சுட்டேன். ஆனா எனக்கு நிஜமாவே அவரைப் பிடித்து இருந்துச்சு டி. அதான்! அவர் அவ்வளவு சொல்லியும் அவரைக் கல்யாணம் பண்ணிக்க நான் முடிவுப் பண்ணிட்டேன்." என்று... வாடிய முகத்துடன், தன் எதிரே இருக்கும் தோழிகளிடம் அன்று நடந்த நிகழ்வை சொல்லி முடித்தாள்.
வாயைப் பிளந்து அவளைப்பார்த்த சுகந்தி... "அடிப்பாவி! இவ்வளவு பெரிய விஷயத்தை அவரு சொல்லி... உன்னை கல்யாணத்தையும் நிறுத்த சொல்லி இருக்காரு. இதுக்கு அப்பறமும் நீ எதுக்காக டி கல்யாணத்துக்கு சம்மந்தம் சொன்ன? அவர் சொன்ன விஷயத்தை எல்லாம் கேட்ட பிறகும் உனக்கு அவரை தான் கல்யாணம் பண்ணிக்கணுமா என்ன?" என்று அதிர்ச்சியாய் வினவினாள்.
நீண்ட ஒரு பெருமூச்சை இழுத்த விட்ட சாமன்யா... "இந்த ஒரு விஷயத்தை தவிற மத்த எல்லா விஷயத்திலும் அவரு பக்காவான ஆளு தான் டி. அதில்லாம, இந்த காலத்தில் எந்த பையன் தான் கட்டிக்கயிருக்கும் பொண்ணுக்கிட்ட தன்னைப் பத்தி இப்படி ஓபனா சொல்லுவான்? இதை மறைச்சு கல்யாணம் பண்ணி, அதுக்கு அப்பறம் எனக்கு இந்த விஷயம் தெரிய வந்திருந்தா தான் நான் கஷ்டப் பட்டிருப்பேன். அதில்லாம, அவர் செஞ்சது ஒன்னும் பெரியத் தப்பா எல்லாம் எனக்குத் தெரியல. இந்த காலத்தில் இது ரொம்பவே சகஜம் தான். எனக்கு அவர் நேர்மை பிடிச்சிருந்துச்சு... அதில்லாம அவரைப் பார்த்த உடனே எனக்கு அவரைப் பிடிச்சிருச்சு டி." என்று அவள் கூறி முடிப்பதற்குள்...
"இருந்தாலும்!" என்று விழித்தாள் சுகந்தி.
"என்ன டி இருந்தாலும்...னு இழுக்கிற?" என்று... சாமன்யா மற்றும் சுகந்திக்கு இடையில் வந்து வந்தமர்ந்த லேகா, தன் தோழிகளை நோக்கி...
"சாமன்யா மாப்பிள்ளைக்கு என்ன டி குறைச்சல்? நல்ல வசதியான வீட்டுப் பையன், பார்க்கவும் ஆளு நல்லா சமார்ட்டா இருக்காரு.
அதை விட நிறைய படிச்சு இருக்காரு, பெங்களூருல ஒருப் பெரிய கம்பனியில் பெரிய பதவியில் இருக்காரு, பொறுப்பான ஆளு. இந்த மாதிரி ஒரு பையன் எல்லாம் கிடைக்கவே குடுத்துவெச்சிருக்கணும். அதில்லாம சாமன்யா சொன்ன மாதிரி முக்கால்வாசி எந்த பையனும் தன்னைப் பத்தி முழுசா கல்யாணத்துக்கு முன்னாடி இப்படி ஓபனா எல்லாம் சொல்லமாட்டாங்க." என்று தன் தோழிக்கு ஆறுதலாய் பேசினாள்.
புன்னகைத்துக் கொண்டே... "ஆம்!" என்பது போல வேகமாய் தலையசைத்தாள் சாமன்யா... நடக்கவிருக்கும் விஷயத்தைப் பற்றி அறியாமல்!
சுகந்தி மற்றும் ரியாவும்... "உனக்கே சரி'னா நாங்க என்ன சொல்றது? எங்களுக்கு ஹாப்பி தான்." என்று சாமன்யாவைக் கட்டிக் கொண்டார்கள்.
____________________________________
தொடரும்...❤️ கதை எப்படி போகுது என்று கீழே இருக்கும் லிங்க்/ விஷயத்தை அமுக்கி... மறக்காமல் கமென்ட் பண்ணுங்க நண்பர்களே. நன்றி. -
சுவிட்ஷரா.
சகாப்தம் வாசகர்களுக்கு அன்பு வணக்கம் 🙏🙏🙏, வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டி ஆரம்பமாகிவிட்டது.💃💃💃💃 உங்களுக்கு விருப்பமான கதைகள் பல இடம்பெறவிருக்கின்றன. அதில் இந்த கதையும் ஒன்றாக இருக்கலாம். வாசித்துப் பாருங்கள். பிடித்திருந்தால் தொடர்ந்து வாசித்து மகிழுங்கள். அப்படியே பின்னூட்டம் கொடுத்து எழுத்தாளரை...
www.sahaptham.com