கொல்வதெல்லாம் உண்மை
அத்தியாயம் 9
பாதர் ஜேம்ஸ் அடைக்கலராஜ் மறுநாள் மாலை தன்னை சந்திக்க அவர்கள் இருவருக்கும் அப்பாய்ண்ட்மெண்ட் கொடுத்திருந்தார். மறுநாள் காலை அருணின் செல்போன் ஒலித்த போது அவன் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தான்.அருகே கனவில் காஜல் அகர்வாலுடன் கட்டி பிடித்து உருண்டு கொண்டிருந்த வினோத் எரிச்சலுடன் போனை எடுத்தான்.
"ஹலோ யார்?"
"குட் மார்னிங். நான் கமிசனர் ரஞ்சன் பேசுகிறேன்.அருண் இருக்கிறாரா?"
"தூங்கி கொண்டு இருக்கிறார். என்ன விசயம் என்று சொல்லுங்கள். நம் ஆண்டி ஹீரோ மீண்டும் தன் திருவிளையாடலை ஆரம்பித்து விட்டானா?"
"இல்லையென்றால் நான் ஏன் அதிகாலையில் உங்களை எழுப்பி குட் மார்னிங் என்று சொல்லிவிட்டு கெட்ட விசயங்களாக சொல்லி கொண்டிருக்கப் போகிறேன்."
"இந்த முறை ஆசாமி போட்டு தள்ளியது ஆணா?பெண்ணா, சார்?"
"இந்த முறை ஆண் "
" ஒரு ஆண் அடுத்தது பெண் மறுபடியும் ஆண் என்று ஏதாவது பேட்டர் னை பயன்படுத்துகிறானோ என்னவோ? நான் வேண்டுமானால் உங்களிடம் பந்தயம் கட்டுகிறேன். அடுத்தது பெண் தான் "
"வினோத் இது விளையாடும் நேரமில்லை. அடுத்ததுஆணா பெண்ணா என்பது நமக்கு முக்கியமில்லை. அடுத்த கொலை நடப்பதற்குள் நாம் அவனை பிடித்தாக வேண்டும்"
"புரிகிறது சார். இல்லையென்றால் தினமும் அதிகாலையில் இழவு செய்தியோடு நீங்கள் போன் செய்து கொண்டிருப்பீர்கள். உங்களுக்காகவாவது அவனை அந்த கிழட்டு பயலை பிடித்து விடுகிறோம்."
"இந்த முறை அவன் செய்த கொலையில் ஓரு வித்தியாசம் இருக்கிறது."
"என்ன சார் அது?"
"நேரில் வந்து பாருங்கள். உங்கள் பாஸை எழுப்பிக் கொண்டு சீக்கிரமாக நான் சொன்ன இடத்திற்கு வாருங்கள்."
"ஒகே சார்" என்ற வினோத் "நாங்கள் மெதுவாக வந்தால் பிணம் எழுந்து ஓடிவிடுமா? என்ன?" என்று முணுமுணுத்தான் வினோத்.
அவன் பேசுவதை காதில் வாங்கி கொண்டு கண்ணை மூடி படுத்து கொண்டிருந்த அருண் "என்னவாம்?" என்றான்.
"எனக்கு மறுபடியும் பொண்ணு பார்க்க போக போகிறோம் பாஸ்" என்றான் வினோத் கடுப்புடன்.
" அடக்கமான பெண் வேண்டும் என்பாயே? நான் வேண்டுமானால் கொலைகாரனிடம் பேசி தேடட்டுமா?"
" அவன் அடக்கமாக போகிற பெண்ணையல்லவா காட்டுவான். கிண்டல் " என்ற வினோத் தன் பிரஸ்ஸில் பேஸ்டை வைத்தபடி பாத்ரூமிற்குள் நுழைந்தான்.
அவன் பாத்ரூமிற்குள் நுழைந்து கதவை சாத்தியவுடன் அருண் எழுந்து உட்கார்ந்து கொண்டான். இந்த வழக்கில் கொலைகாரன் ஏதோ ஓரு ஓழுங்கமைவில் இயங்கி கொண்டிருப்பதாக அவனுக்கு தோன்றியது. அவனுக்கும் கொலை செய்யப்பட்டவர்களுக்கும் ஏதோ ஒரு கண்ணுக்கு தெரியாத நூலிழை தொடர்பு இருப்பதாக அவன் நினைத்தான். அந்த தொடர்பை அவிழ்க்கும் முடிச்சு அவர்களின் கையில் எழுதப்படும் எண்ணில் இருப்பதாக அவனது உள் மனது சொன்னது.
இருவரும் குளித்து முடித்து ரெடியானதும் அருண் "பாடிஸ்பிரே போடவில்லை?" என்று வினோத்தை சீண்டினான்.
கை எடுத்து கும்பிட்ட வினோத் "எனக்கு இன்னும் வேணும் பாஸ்" என்றான்.
அருண் சிரித்தபடி தலையாட்டி கொண்டான்.
சம்பவ இடத்தில் அவர்கள் காரை நிறுத்திய போது ரஞ்சன் அவர்களை வரவேற்றார்.
"அந்த கொலைகாரனுக்கு என்ன சார் அவசரம்? ஊருக்கு போகப் போகிறவன் போல் தினமும் ஒரு கொலையை செய்து கொண்டிருக்கிறான்." என்றான் அருண்.
"அதுதான் எனக்கும் புரியவில்லை. சட சடவென்று ஒரு வாரத்தில் மூன்று பேரை கொன்று விட்டான். ஆனால் இந்த கொலைகளுக்கு முன்பே நிறுத்தி நிதானமாக கொலைகளுக்கான முஸ்தீபுகளை செய்து வைத்திருக்கிறான். அதனால் தான் அவனால் வெகு எளிதாக கொலை செய்ய முடிகிறது." என்றார் ரஞ்சன்.
"சரி வாருங்கள். பாடியை பார்க்கலாம்"
மூன்று பேரும் கூட்டத்தை விலக்கி கொண்டு நுழைந்தனர். மஞ்சள் கருப்பு ரூ நாட் எண்ட்ரி க்ராஸ் பெல்ட் அவர்களை வரவேற்றது.வழக்கமான சம்பிரதாய வேலைகளில் ஈடுபட்டிருந்தனர் பாரன்சிக் ஆட்கள்
" இவர்களுக்கு விடாமல் வேலை கொடுக்கிறான் அவன். இவர்களின் கையில் அவன் சிக்கினால் கொன்றே விடுவார்கள்" என்றான் வினோத்.
மூவரும் நின்றிருந்த காரை நோக்கி நடந்தனர். காரின் கதவு திறந்து கிடந்தது. காருக்கு அருகே மூன்றடி தூரத்தில் அவன் சர்வ நிச்சயமாக செத்து போயிருந்தான். திறந்திருந்த அவன் வாயில் சில ஈக்கள் சுதந்திரமாக போய் வந்து கொண்டிருந்தன. மார்பில் குத்துப்பட்டு வெளியான ரத்தம் உறைந்து கெட்டிப் பட்டு கருப்பு நிறமாக மாறியிருந்தது. அவன் கழுத்து அறுபட்டிருந்தது.
" சுற்றிலும் நன்றாக தேடிப் பார்த்தீர்களா? போன கொலையில் லிப்ஸ்டிக் கிடைத்தது. இந்த முறை வேறு ஏதாவது கிடைக்கிறதா என்று பார்க்கலாம்."
" சுற்றியுள்ள இடங்களை நன்றாக சலித்து விட்டோம். வேறு எதுவும் கிடைக்கவில்லை."
"இந்த முறை என்ன எண்களை எழுதி வைத்திருக்கிறானோ தெரியவில்லையே?"
"அதில் தான் ஒரு பெரிய மாறுதல் இருக்கிறது. அவனது கையை பாருங்கள்." என்றார் ரஞ்சன்
அவனது கையில் மணிக்கட்டுக்கு மேலாக ரத்த பொறுக்குகளுடன் காய்ந்து போய் அந்த எண்கள் தெரிந்தன.
7, 8, 9/10
"இது என்ன பாஸ் டீக்கடை அக்கவுண்ட் பாக்கியை கையில் எழுதி வைத்திருக்கிறான்?" என்ற வினோத்தை முறைத்தான் அருண்.
"இது வரை சிங்கிள் எண்களை வகுத்து கொண்டிருந்தான். இப்போது மூன்று எண்களை வகுக்கும் படி முன்னேறி இருக்கிறான்"
"எனக்கென்னவோ இது பள்ளிக்கூடத்தில் படிக்கும் போது வாத்தியார் போட்ட மார்க் போல் தெரிகிறது" என்றார் ரஞ்சன்.
"முதல் கொலை பத்துக்கு ஐந்து மார்க். இரண்டாவது கொலை பத்துக்கு ஆறு மார்க். இப்போது செய்த கொலைக்கு அவன் சிங்கிள் மார்க் போடவில்லை. மூன்று விதமான மார்க்குகளை போட்டிருக்கிறான்." என்றான் வினோத்.
" அவன் இந்த கொலைகளின் மூலம் எதையோ சொல்ல வருகிறான். அது என்னவென்று கண்டுபிடித்தால் அவனை கண்டுபிடித்து விடலாம்."
"எண்களை வரிசைப்படுத்தி பார்த்தால் அவன் இன்னும் ஒரு கொலை செய்தால் பத்துக்கு பத்து மார்க் வாங்கி விடுவான். 5, 6, 7, 8, 9 இன்னும் ஒரு கொலை பாக்கி. அத்தோடு கொலைகள் நின்று விடும் என்று நினைக்கிறேன். அதற்குள் நாம் அவனை கண்டு பிடிக்காவிட்டால் ஜாக்தி ரிப்பர் போல் கடைசி வரை கண்டுபிடிக்கப்படாத கொலைகாரனாகவே இருந்து விடுவான்."
"நீங்கள் ஏன் அப்படி நினைக்கிறீர்கள்? கொலைகாரன் o, 1,2,3,4 என்று முன்னால் இருந்தும் வரலாம் இல்லையா?" என்ற ரஞ்சனை திடுக்கிட லோடு இருவரும் பார்த்தனர்.