Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


சிவகாமியின் சபதம் - பாகம்-1 : பூகம்பம்

Meena

Saha Moderator
Staff
Messages
1,082
Reaction score
91
Points
48
இருபத்தோராம் அத்தியாயம்

சித்தர் மலைச் சித்திரம்

பதினைந்து விதமான அபிநயப் பார்வைகளிலே சந்தேகமும் அருவருப்பும் தோன்றும் பார்வையைச் சிவகாமி புத்த பிக்ஷுவின் மேல் ஒருகணம் செலுத்திவிட்டு, ஆயனரைப் பார்த்து, "இவர்கள் இத்தனை நேரமும் இங்கே தான் இருந்தார்களா?" என்று கேட்டாள். "ஆம், குழந்தாய்! "புத்தர் சிலைக்குப் பின்னால் ஒளிந்திருந்தார்களா?" "ஆமாம்! ஆனால், இதைக் குறித்து நீ என்னவோ ஏதோ என்று சந்தேகப்பட வேண்டாம்.." ஆயனர் மேலே சொல்லுவதற்குள் சிவகாமி, "புத்த பகவானுடைய சிலைகளைப் பிரம்மாண்டமாய்ச் செய்வதில் எவ்வளவு உபயோகம் இருக்கிறது!" என்றாள். "அதனாலேதான் மகாயான சித்தாந்தத்தை ஏற்படுத்திய நாகார்ஜுன பிக்ஷுவை நான் போற்றுகிறேன்" என்றார் நாகநந்தி.

புத்தமதம் ஸ்தாபிக்கப்பட்டுச் சிலகாலம் வரையில் புத்த பகவானுடைய சிலைகள் அமைப்பிலும் சித்திரங்கள் எழுதுவதும் தடுக்கப்பட்டிருந்தன. இந்த வரலாறு நடந்த காலத்துக்கு இருநூறு வருஷத்துக்கு முன்னால், நாகார்ஜுன பிக்ஷு என்னும் மகான் தோன்றி மகாயான புத்த சித்தாந்தத்தை ஸ்தாபித்தார். பாரத நாட்டின் வடகோடியில் நாலந்தா என்னும் நகரில் பிரசித்தி பெற்று விளங்கிய பௌத்த மடத்தின் தலைவரான நாகார்ஜுனர் தேசமெங்கும் யாத்திரை செய்து, வாதப்போர் நடத்தி மகாயான சித்தாந்தத்தைப் பிரசாரம் செய்தார். ஆங்காங்கே ஸங்கிராமம் என்ற பெயரால் வழங்கிய பௌத்த மடங்களையும் நிறுவிக் கொண்டு போனார். அத்தகைய ஸங்கிராமம் ஒன்றை அவர் கிருஷ்ணா நதிக்கரையிலுள்ள ஸரீ பர்வதத்திலும் ஸ்தாபித்தார். அதுமுதல் ஸரீ பர்வதத்துக்கு நாகார்ஜுன மலை என்ற பெயரும் வழங்கலாயிற்று. நாகார்ஜூனர் ஸ்தாபித்த மகாயான பௌத்த மதம், புத்த பகவானுடைய சிலைகளை அமைப்பதற்கும் கோயில்கள் கட்டுவதற்கும் அநுமதித்தது. "நாகார்ஜுன பிக்ஷுவைப் போற்றுகிறேன்" என்று நாகநந்தி இரண்டுமுறை கூறியதன் கருத்து என்ன என்பது இப்போது நன்கு விளங்குகிறதல்லவா?

நாகநந்தி கூறியதைப் பொருட்படுத்தாமல் சிவகாமி, "அப்பா! இவர்கள் எதற்காக ஒளிந்துகொண்டிருந்தார்கள்?" என்று கேட்டாள். "அம்மா! நம் நாகநந்தி அடிகள் இராஜ குலத்தினரைப் பார்ப்பதில்லை என்று விரதம் வைத்துக்கொண்டிருக்கிறார். உனக்குத் தெரியாதா? இந்த வாலிபன் அவருடன் வந்திருந்தபடியால்..." "அப்பா! சக்கரவர்த்தியும் மாமல்லரும் இவரைப் பார்த்திருந்தால் எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பார்கள்? ஒன்று கவனித்தீர்களா? மாமல்லர் கையில் ஒரு வேல் வைத்திருந்தாரே? அது இந்த வீரருடைய வேல்தான்..."

நாகநந்தி மீண்டும் குறுக்கிட்டு, "அதில் என்ன வியப்பு, சிவகாமி! இப்போதுதான் பல்லவ சாம்ராஜ்யத்துக்கு ஆயுதம் தேவையாயிருக்கிறதே? ஊரிலுள்ள உடைந்த வேல், வாள், ஈட்டி எல்லாவற்றையும் தேடிச் சேகரிக்கிறார்களே?" என்றார். சிவகாமி அவரை எரித்துவிடுவது போல் பார்த்துவிட்டு, "அப்பா! குமார சக்கரவர்த்தி இந்த வீரரிடம் திருப்பிக் கொடுப்பதற்காகவே அந்த வேலைத் தம் கையிலே வைத்திருக்கலாம். சுத்த வீரத்தைப் பாராட்டுவதில் மாமல்லரைப்போல் யார் உண்டு? இவரை நீங்கள் சக்கரவர்த்தியின் சமூகத்துக்கு உடனே அழைத்துப் போக வேண்டும்" என்று கூறினாள். ஆயனர் தட்டுத் தடுமாறி, ஆகட்டும் "அம்மா! என் உத்தேசமும் அதுதான். பரஞ்சோதி வடக்கே போய்த் திரும்பி வந்ததும் சக்கரவர்த்தியிடம் அழைத்துப் போகிறேன்" என்றார்.

சக்கரவர்த்தி வந்திருந்த சமயத்தில் சிலையின் பின்னால் ஒளிந்திருக்க நேர்ந்த அவமானத்தினாலும், சிவகாமியின் விஷயத்தில் ஏற்பட்ட இயற்கையான சங்கோசத்தினாலும் இத்தனை நேரம் பரஞ்சோதி உள்ளமும் உடலும் குன்றி மௌனமாயிருந்தான். ஆனால், சிவகாமி பரிந்து கூறிய வார்த்தை அவனுடைய ஆன்மாவையும் நாவையும் கட்டியிருந்த தளையை அறுத்த மாதிரி இருந்தது. அவன் சிவகாமியை நன்றியுடன் நோக்கி விட்டு, ஆயனரைப் பார்த்து, "ஐயா! தங்கள் குமாரி சொல்வது உண்மைதான். குமார சக்கரவர்த்தியின் கையிலிருந்த வேல் என்னுடைய வேல் தான் என்று எனக்குக்கூடத் தோன்றியது. அதை வாங்கிக் கொடுத்தீர்களானால் நல்லது. நெடுந்தூரம் பிரயாணம் செய்வதற்குக் கையில் ஏதேனும் ஆயுதம் அவசியமல்லவா?" என்றான்.

அப்போது புத்த பிக்ஷு, 'ஆயுதத்துக்குத்தானா இப்போது அவசரம்? வேலும் ஈட்டியும் எத்தனை வேணுமானாலும் நான் சம்பாதித்துத் தருகிறேன்; முக்கியமான காரியம் ஆகவில்லையே! குதிரையும் இலச்சினையும் கேட்கத் தவறி விட்டீர்களே, ஆயனரே!" என்றார். "அது என் பொறுப்பு நாளை மாமல்லபுரத்துக்கு வரும்படி சக்கரவர்த்தி கட்டளையிட்டிருக்கிறார். அங்கே கேட்டு வாங்கிக்கொண்டு வருகிறேன். பிரயாணத்திற்கு மற்ற ஏற்பாடுகளைக் கவனியுங்கள்" என்றார் ஆயனர்.

"அப்பா! இந்த அண்ணன் நெடுந்தூரம் பிரயாணம் செய்யப் போகிறாரா? எந்த ஊருக்கு? எதற்காக? என்று சிவகாமி கேட்டாள். "நான்தான் அனுப்புகிறேன், குழந்தாய்! மிகவும் முக்கியமான காரியத்துக்காக. சென்ற ஒன்பது வருஷகாலமாக இரவும் பகலும் நான் கண்டுகொண்டிருந்த கனவு நிறைவேறப்போகிறது. சிவகாமி! இந்த உத்தம புத்த பிக்ஷுவின் உதவியினால் நிறைவேறப் போகிறது" என்று ஆயனர் கூறியபோது அவருடைய மொழிகளில் முன் போலவே ஆர்வமும் பரபரப்பும் பொங்கித் ததும்பின.

"நீங்கள் என்ன கனவு கண்டீர்கள்? அது எப்படி நிறைவேறப்போகிறது? எனக்கு ஒன்றுமே விளங்கவில்லையே?" என்றாள் சிவகாமி. "அஜந்தா மலைக் குகையிலுள்ள அதிசய வர்ண சித்திரங்களைப் பற்றி உனக்குப் பல தடவை சொல்லியிருக்கிறேனல்லவா? ஐந்நூறு வருஷம் ஆகியும் அழியாத அந்த வர்ணச் சேர்க்கையின் இரகசியத்தை அறிந்து வருவதற்காகத் தான் இந்தப் பிள்ளையை என் அருமை நண்பரின் மருமகனை, வடக்கே அனுப்பப் போகிறேன்..."

"ஐந்நூறு வருஷத்து வர்ணமாவது, அழியாதிருக்கவாவது? எனக்கு நம்பிக்கைப்படவில்லை, அப்பா!" என்று சிவகாமி கூறி, சந்தேகமும் அவநம்பிக்கையும் வௌிப்படையாகத் தோன்றிய பார்வையுடன் பிக்ஷுவை நோக்கினாள். "அதை நம்புவது கஷ்டந்தான் முதன் முதலில் கேள்விப்பட்டபோது எனக்கும் நம்பிக்கை உண்டாகவில்லை. ஐந்நூறு வருஷம் அழியாத வர்ணம் எப்படி இருக்கமுடியும் என்றுதான் எண்ணினேன். நானே கண்ணால் பார்த்த பிறகு தான் நம்பிக்கை உண்டாயிற்று!" என்றார்.

ஆயனர் இவ்விதம் கூறியதும், புத்த பிக்ஷுவும் சிவகாமியும் தங்களுடைய வியப்பை ஏககாலத்தில் தெரிவித்துக் கொண்டார்கள். "கண்ணால் பார்த்தீர்களா? எப்போது?" என்றாள் சிவகாமி. "என்னிடம் இத்தனை காலமும் சொல்லவில்லையே? தாங்கள் அஜந்தாவுக்குப் போனதுண்டா?" என்று பிக்ஷு கேட்டார். "இல்லை; அஜந்தாவுக்குப் போனதில்லை ஆனால், சித்தர் மலையிலே பார்த்தேன். அடிகளே! தாங்களும் சித்தர் மலைக்குப் போய்வந்ததாகச் சொன்னீர்களே? அங்கே என்ன என்ன அதிசயங்களைக் கண்டீர்கள்?" என்று ஆயனர் வினவியதும், பிக்ஷுவின் முகத்தில் பிரகாசம் உண்டாயிற்று.

"ஆ! தெரிகிறது...சித்தர் மலைக்குகையில் ஜீன தீர்த்தங்கரர்களின் உருவங்கள் அழியா வர்ணங்கொண்டு எழுதியிருப்பதைக் கண்டேன். குகையின் வாசற்புறத்தில் இரண்டு அப்ஸர ஸ்திரீகளின் திவ்ய வடிவங்களைப் பரத சாஸ்திரத்தில் சொல்லிய இரண்டு அபூர்வ அபிநயத் தோற்றங்களில் பார்த்தேன். அவற்றை எழுதிய மகா சித்திரக்காரர் யாரோ என்று அதிசயித்தேன்..." "யார் என்று தெரிந்ததா, சுவாமி?"

"இப்போது தெரிகிறது அப்பேர்ப்பட்ட தத்ரூபமான ஜீவ வடிவங்களை எழுதக்கூடிய மகா சித்திரக்காரர் தென்னாட்டிலே ஆயனச் சிற்பியைத் தவிர வேறு யார்?" "ஆம், அடிகளே! அந்த உருவங்களை எழுதியவன் அடியேன்தான். இன்னும் ஏதாவது விசித்திரத்தைக் கவனித்தீர்களா?" "அந்த அப்ஸர மாதரின் நடன உருவங்கள் இடைக்கு மேலே பிரகாசமாய் நேற்று எழுதியவைபோல் விளங்குகின்றன; இடைக்குக் கீழே வர்ணம் மங்கி விளக்கமின்றி இருக்கின்றன." "ஆ! ஒன்பது வருஷ காலத்தில் அதிகமாக மங்கித்தான் இருக்கும்!" என்றார் ஆயனர். பின்னர், மேற்சொன்ன சித்தர் மலைச் சித்திரங்களைக் குறித்து ஆயனர் முன்னும் பின்னுமாகத் தட்டுத்தடுமாறிக் கூறிய வரலாறு வருமாறு.

பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் மகேந்திர சக்கரவர்த்தி சமண சமயத்தினராயிருந்த காலத்தில் சோழ மண்டலத்துக்கு அவர் பிரயாணம் சென்றபோது ஆயனரையுங்கூட அழைத்துப் போயிருந்தார். உறையூரில் சோழ மன்னனுடைய உபசாரங்களைப் பெற்றுக்கொண்டு அங்கிருந்த சித்தர்வாச மலையில் சமண முனிவர்கள் ஏற்படுத்தியிருந்த பிரசித்திபெற்ற சமணப் பள்ளியைப் பார்க்கச் சென்றார். அந்தக் குகைப் பள்ளியில் தீட்டியிருந்த வர்ணச் சித்திரங்களைக் கண்டு சக்கரவர்த்தியும் ஆயனரும் அதிசயித்தனர்.

சித்தர் மலைப் பள்ளியில் மேற்படி ஓவியங்களைத் தீட்டிய முனிவர் அச்சமயம் அங்கே வாசம் செய்து கொண்டிருந்தார். அந்தச் சித்திரங்கள் ஆயிரம் வருஷம் ஆனாலும் அழியாதவை என்று அம்முனிவர் கூறியதைச் சக்கரவர்த்தியும் ஆயனரும் நம்பவில்லை. அஜந்தா சித்திரங்களைப்பற்றி அந்த முனிவர் கூறியதையும் இவர்கள் நம்பவில்லை. அதன்பேரில் அந்தச் சமண முனிவர் ஒரு பந்தயம் போட்டார். அந்தக் கோயிலின் வாசலில் ஆயனர் இரண்டு அப்ஸர மாதரின் நடனத் தோற்றங்களை எழுதவேண்டுமென்றும், மேற்பாதி உருவங்களைத் தாம் குழைத்துக் கொடுக்கும் வர்ணங்களைக்கொண்டும், இடைக்குக் கீழே ஆயனரின் சொந்த வர்ணங்களைக்கொண்டும் எழுத வேண்டுமென்றும், மூன்று வருஷம் கழித்து மீண்டும் வந்து பார்த்து, தாம் கூறுவது உண்மை என்று நிச்சயிக்கப்பட்டால், ஆயனர் சமண சமயத்தை ஒப்புக்கொள்ள வேண்டுமென்றும் முனிவர் பந்தயத்துக்கு நிபந்தனை விதித்தார். அப்படி ஒப்புக் கொண்டால் மேற்படி வர்ணச் சேர்க்கையின் இரகசியத்தைச் சொல்லிக் கொடுப்பதாகவும் கூறினார்.

நிபந்தனையை ஒப்புக்கொண்ட ஆயனர் மேற்சொன்ன இரு வகை வர்ணங்களை உபயோகித்து அப்ஸர மாதர் சித்திரங்களை எழுதினார். மூன்று வருஷத்துக்குப் பிற்பாடு சித்தர் மலைக்கு மறுபடியும் போய்ப் பார்த்தபோது, ஆயனர் தீட்டிய நடன உருவங்களின் மேற்பகுதிகள் அன்று எழுதியவைபோல் வர்ணம் மங்காமல் விளங்கின; கீழ்ப் பகுதிகள் பெரிதும் மங்கிப்போயிருந்தன. இதனால் பெரிதும் அதிசயமடைந்த ஆயனர், நிபந்தனைப்படி சமண மதத்தைத் தழுவி, அந்த இரகசியத்தை அறிந்துகொள்ளச் சித்தமாயிருந்தார். ஆனால், நிபந்தனை விதித்த சமண ஓவியர் அப்போது அங்கு இல்லை! சக்கரவர்த்தி சைவரானது பற்றிக் கோபங்கொண்டு பல்லவ சாம்ராஜ்யத்திலிருந்து போய்விட்ட அநேக சமண முனிவர்களைப்போல் அவரும் போய் விட்டார்! ஆனால், அந்த அழியாத வர்ணச் சேர்க்கையின் இரகசியத்தை அறிந்து கொள்வதில் ஆயனருக்கு அன்று ஏற்பட்ட ஆவல் இன்று வரையில் வளர்ந்துகொண்டே இருந்தது.

மேற்படி வரலாற்றைக் கேட்டுக் கொண்டிருந்த புத்த பிக்ஷு முடிவில், "ஆயனரே! கவலை வேண்டாம்! உங்களுடைய ஆவல் நிறைவேறும் காலம் நெருங்கிவிட்டது. பரஞ்சோதிக்கு நீங்கள் குதிரையும் பிரயாண அனுமதியும் வாங்கிக் கொடுப்பதுதான் தாமதம், வெகு சீக்கிரத்தில் உங்கள் மனோரதம் நிறைவேறும்!" என்றார். பரஞ்சோதியும் மிக்க உற்சாகத்துடன், "ஆம், ஐயா! தங்களுடைய மனோரதம் என்னால் நிறைவேறுவதாயிருந்தால் அது என்னுடைய பாக்கியம் தான். என்ன அபாயம் வந்தாலும் பின் வாங்காமல் காரியத்தை முடித்துக்கொண்டு வருகிறேன்" என்றான்.

சிவகாமியின் உள்ளத்திலோ முரண்பட்ட எண்ணங்கள் தோன்றிப் போட்டியிட்டன. ஆயனருடைய ஆவலையும், அந்த ஆவல் நிறைவேறினால் அவர் அடையக்கூடிய மகத்தான ஆனந்தத்தையும் அவள் அறிந்துதான் இருந்தாள். ஆனாலும், புத்த பிக்ஷுவின் தூண்டுதலால் நடக்கும் இந்தக் காரியத்தில் ஏதாவது சூதும் சூழ்ச்சியும் இருக்குமோ என்று அவள் மனம் ஐயுற்றது. ஆகவே, பரஞ்சோதியைத் தனியாகப் பார்த்து எச்சரிக்கை செய்ய வேண்டுமென்று அவள் தனக்குள்ளேயே தீர்மானித்துக் கொண்டாள்.
 

Meena

Saha Moderator
Staff
Messages
1,082
Reaction score
91
Points
48
இருபத்திரண்டாம் அத்தியாயம்

சத்ருக்னன்

ஆயனர் வீட்டிலிருந்து புறப்பட்ட மகேந்திர பல்லவர் குதிரையை விரைவாகச் செலுத்திக்கொண்டு சென்று சற்றுத் தூரத்தில் நின்று கொண்டிருந்த தம் பரிவாரங்களை அடைந்தார். அங்கே குதிரையைச் சற்று நிறுத்தி, கூட்டத்தில் ஒருவன் மீது பார்வையைச் செலுத்தினார். அந்த மனிதன் சக்கரவர்த்தியின் பார்வையில் இருந்த சமிக்ஞையைத் தெரிந்து கொண்டவனாய், அவரை நெருங்கி வந்து பணிவாக நின்றான். "சத்ருக்னா! உனக்குச் சிற்பக்கலையில் பயிற்சி உண்டா?" என்று சக்கரவர்த்தி கேட்டார். சத்ருக்னன் முகத்தில் எவ்வித உணர்ச்சியும் காட்டாமல், "இல்லை பிரபு!" என்றான். "இவ்வளவுதானா? சிற்பக்கலையில் கொஞ்சமாவது உனக்குப் பயிற்சி இருக்கவேண்டும். அதற்கு இந்த இடத்தைக் காட்டிலும் நல்ல இடம் கிடையாது. ஆயனருடைய சீடப் பிள்ளைகள் செய்யும் வேலைகளைக் கவனித்துக்கொண்டிருந்தாலே போதும்." "ஆக்ஞை, பிரபு! இப்போதே தொடங்குகிறேன்."

"சிற்பம் கற்றுக்கொள்ளப் புதிதாக வேறு யாராவது இங்கே வந்தால் அவர்களையும் நீ கவனித்துக்கொள்ள வேண்டும். ஆனால், அவர்கள் உன்னைக் கவனிக்க வேண்டியதில்லை." "அப்படியே" என்று சத்ருக்னன் கூறியபோது அவனுடைய புருவங்கள் சிறிது மேலே சென்றன. "நல்லது; சிற்பக்கலையைப்பற்றிப் புதிதாக ஏதேனும் தெரிந்துகொண்டால் உடனே வந்து எனக்குத் தெரிவிக்க வேண்டும்." இவ்விதம் கூறிவிட்டுச் சக்கரவர்த்தி மீண்டும் குதிரையை வேகமாக விட்டார். அவரைத் தொடர்ந்து குமார சக்கரவர்த்தியும் குதிரையை வேகமாகச் செலுத்த, மற்ற பரிவாரங்கள் அவர்களைப் பின்தொடர முடியாமல் பின் தங்கும்படி நேர்ந்தது.

சக்கரவர்த்திக்கும் சத்ருக்னனுக்கும் நடந்த சம்பாஷணை அரைகுறையாக நரசிம்மரின் செவியில் விழுந்தது. அது அவருடைய மனத்தில் பெருங்குழப்பத்தை உண்டாக்கிற்று. சிவகாமி கூறியபடி ஆயனரின் வீட்டில் வேலெறிந்த வாலிபனைக் காணாதது மாமல்லருக்கு ஏற்கனவே வியப்பை உண்டாக்கியிருந்தது. இப்போது சக்கரவர்த்தி, ஆயனர் வீட்டைக் காவல் புரியும்படி பல்லவ ராஜ்யத்தின் மகா சமர்த்தனான ஒற்றனை ஏவியது மாமல்லரின் வியப்பைப் பன் மடங்கு அதிகமாக்கியதுடன், அவருடைய மனத்தில் என்னவெல்லாமோ சந்தேகங்களைக் கிளம்புவதற்கு ஏதுவாயிற்று. அதைப்பற்றித் தந்தையைக் கேட்க வேண்டுமென்று அவர் எண்ணினார். ஆனால், மகேந்திரரோ அந்தக் காட்டு வழியில் குதிரையைப் பாய்ச்சலில் விட்டுக்கொண்டு போனார். சக்கரவர்த்தி குதிரையை விரைவாகச் செலுத்தினால் அவர் ஏதோ முக்கியமான விஷயத்தைப்பற்றிச் சிந்தனை செய்வதற்கு அறிகுறி என்பதை மாமல்லர் அறிந்தவரானபடியால், விஷயத்தைத் தெரிந்துகொள்ள அவருடைய ஆவல் இன்னும் அதிகமாயிற்று. அவருடைய குதிரையும் நாலுகால் பாய்ச்சலில் சென்றது.

காட்டைத் தாண்டியதும் காஞ்சியிலிருந்து மாமல்லபுரத்துக்குப் போகும் இராஜபாட்டை தென்பட்டது. அந்தச் சாலை ஓரமாக ஒரு பெரிய கால்வாய் ஓடிற்று. அந்தக் கால்வாயில் ஒன்றன்பின் ஒன்றாகப் படகுகள் காஞ்சியை நோக்கிப் போய்க் கொண்டிருந்தன. படகுகளில் பெரும்பாலும் நெல் மூட்டைகள் ஏற்றியிருந்தன. ஒவ்வொரு படகையும் இரண்டு ஆட்கள் தள்ளிக் கொண்டு வந்தார்கள்.

இருபுறத்திலும் மரமடர்ந்த விசாலமான சாலையும், தௌிந்த நீரையுடைய கால்வாயும், கால்வாயில் மிதந்துவந்த படகுகளும், கால்வாய்க்கு அப்பால் மரங்களின் வழியாக வெகு தூரத்துக்குத் தெரிந்த பசுமையான சமவௌியும் மனோகரமாய்க் காட்சியளித்தன. கால்வாய் நீரில் ஆங்காங்கு மரங்களின் கருநிழல் படிந்திருந்த இடங்கள் கண்களைக் குளிரச் செய்தன. சற்றுத் தூரத்திலே சென்ற படகுகளில் ஒன்றிலிருந்து படகோட்டி ஒருவன், செங்கனி வாயில் ஒரு வேய்ங்குழல் கொண்டிசைத்து தேனிசைதான் பொழிவோன் யார் யார் யார்? கிளியே! செந்தாமரை முகத்தில் மந்தகாசம் புரிந்து சிந்தை திரையாய்க் கொள்வோன் யார் யார் யார்? கிளியே! என்று இனிய குரலில் உணர்ச்சி ததும்பப் பாடிய இன்னிசைக் கீதம் இளங்காற்றிலே மிதந்து வந்தது. இத்தகைய சாந்தமும் இன்பமும் அமைதியும் அழகும் குடி கொண்ட காட்சியைக் குலைத்துக்கொண்டும், "இது பொய்யான அமைதி; சீக்கிரத்திலே இடியும் மழையும் புயலும் பூகம்பமும் வரப்போகின்றன!" என்று மௌனப் பறையறைந்து தெரிவித்துக் கொண்டும் அக்கால்வாயில் நெல்லேற்றிய படகுகளுக்கு நடுவிலே ஆயுதங்கள் ஏற்றிய படகு ஒன்றும் வந்துகொண்டிருந்தது. அதில் வேல், வாள், ஈட்டி, கத்தி, கேடயம் முதலிய விதவிதமான போர்க் கருவிகள் நிறைந்திருந்தன.

அதுவரையில் மௌனமாக நின்று அந்தக் காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்த சக்கரவர்த்தி ஆயுதப் படகைக் கண்டதும், "ஆக, பல்லவ சாம்ராஜ்யத்தில் யுத்த ஆயுதங்கள் பலமாகத்தான் நடக்கின்றன!" என்று பரிகாசமும் மனக்கசப்பும் தொனித்த குரலில் கூறிவிட்டு, பக்கத்திலே குதிரை மேலிருந்த தம் குமாரரைப் பார்த்தார். அவருடைய முகத்தோற்றத்தைக் கவனித்ததும், "நரசிம்மா! ஏதோ கேட்க விரும்புகிறாய் போலிருக்கிறதே!" என்றார். "எப்படித் தெரிந்தது, அப்பா!" என்றார் குமார சக்கரவர்த்தி. "உன் முகம் தெரிவிக்கிறது அபிநயக்கலை முகபாவம் ஆகியவைகளைப்பற்றி இப்போதுதானே பேசிவிட்டு வந்தோம்? கேட்க விரும்பியதைக் கேள்!" என்றார் தந்தை. "சத்ருக்னனை எங்கே அனுப்பினீர்கள்!" "ஆயனர் வீட்டுக்கு" "எதற்காக?" "ஒற்றனை வேறு எதற்காக அனுப்புவார்கள்? வேவு பார்ப்பதற்குத்தான்!" "என்ன சொல்கிறீர்கள், அப்பா! ஆயனச் சிற்பியின் வீட்டை வேவு பார்க்கும்படியான அவசியம் என்ன ஏற்பட்டது?"

"யுத்த காலத்தில் சர்வ ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். மாமல்லா! இம்மாதிரி சமயங்களில் சந்நியாசியின் காவித் துணிக்குள்ளே எதிரியின் ஒற்றன் ஒளிந்திருக்கலாம். சிற்பக் கலைக்குள்ளே சதியாலோசனை இருக்கலாம்..." நரசிம்மர் தம்மை மீறிய பதைபதைப்புடன், "ஆகா! இது என்ன? ஆயனச் சிற்பியா தமக்கு எதிராகச் சதி செய்கிறார்? என்னால் நம்ப முடியவில்லையே!" என்றார். "ஆயனச் சிற்பி சதி செய்வதாக நான் சொல்லவில்லையே? அந்தப் பரமசாது நமக்காக உயிரையே விடக் கூடியவராயிற்றே!"

மாமல்லர் சிறிது சாந்தம் அடைந்து, "அப்படியானால் ஆயனர் வீட்டுக்கு ஒற்றனுடைய காவல் எதற்காக?" என்று கேட்டார். "கள்ளங்கபடமற்ற அந்தச் சாது சிற்பிக்குத் தெரியாமல் அவர் வீட்டில் பகைவர்களின் ஒற்றர்கள் இருக்கலாம் அல்லவா?" "ஆயனர் வீட்டில் ஒற்றர்களா? தங்களுக்கு எப்படித் தெரிந்தது? நான் ஒருவரையும் பார்க்கவில்லையே?" "மாமல்லவா! இராஜ்ய நிர்வாகத்தில் ஈடுபட்டவர்களுக்கு எப்போதும் கண்ணும் காதும் திறந்திருக்க வேண்டும். யுத்த காலத்தில் இது மிகவும் அவசியம். ஆயனர் வீட்டில் நாம் இருந்த போது உன் கண்கள் என்ன செய்துகொண்டிருந்தன?" என்று கேட்ட வண்ணம் சக்கரவர்த்தி நரசிம்மரின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தார்.

அங்கே தம் கண்கள் சிவகாமியின் கண்களுடன் அந்தரங்கம் பேசுவதிலேயே பெரிதும் ஈடுபட்டிருந்தன என்பது ஞாபகம் வரவே நரசிம்மருடைய பால் வடியும் இளம் வதனம் வெட்கத்தினால் சிவந்தது. அதே சமயத்தில் முன்னைவிட அதிக தூரத்திலிருந்து படகோட்டியின் இனிய கீதம் மெல்லிய குரலில் பின்வருமாறு கேட்டது. கண்ணன் என்றங்கேயொரு கள்வன் உளன் என்று கன்னியர் சொன்னதெல்லாம் மெய்தானோ? கிளியே! வெண்ணெய் திருடும்பிள்ளை என்னுள்ளம் கவர்ந்ததென்ன? கண்ணால் மொழிந்ததென்ன? சொல்வாய்! பைங்கிளியே!
 

Meena

Saha Moderator
Staff
Messages
1,082
Reaction score
91
Points
48
இருபத்து மூன்றாம் அத்தியாயம்

இராஜ ஹம்சம்

நரசிம்மர் வெட்கமுற்றதைக் கண்டு அவருக்குத் தைரியம் சொல்பவர்போல் மகேந்திரர் கூறினார்: "நரசிம்மா! ஆயனர் வீட்டுக்குள் போனால் அங்குள்ள சிற்பச் சித்திர அதிசயங்களில் எவருமே கண்ணையும் கருத்தையும் பறிகொடுப்பது இயற்கைதான். நானே அப்படித்தான் மெய்ம்மறந்து விடுவது வழக்கம். இன்றைக்கு ஆயனர் வீட்டுக்குச் செல்லும்போதே சிறிது சந்தேகத்துடன் நான் சென்றபடியால் கூர்மையாகக் கவனித்தேன்..."

நரசிம்மர் தம் மனக் குழப்பத்தைச் சமாளித்துக்கொண்டு "கவனித்ததில் என்ன கண்டீர்கள், அப்பா? சிற்பங்களையும் சித்திரங்களையும் தவிர, ஆயனர் வீட்டில் வேறொன்றையும் நான் காணவில்லையே?" என்றார். "ஆயனரின் நடவடிக்கையில் உனக்கு எவ்விதமான சந்தேகமும் உண்டாகவில்லையா, நரசிம்மா!" மாமல்லர் மௌனமாயிருந்தார். "அடிக்கடி அவர் கவலையுடன் புத்தர் சிலையின் பக்கம் திரும்பினாரே, அதைக் கவனிக்கவில்லையா?"

மாமல்லரின் கண்கள் அகன்று விரிந்தன. "புத்தர் சிலைக்கு அருகில் நாம் சென்றதும், ஆயனர் தயங்கித் தடுமாறியதையும் நீ கவனிக்கவில்லையா?" நரசிம்மர் திடுக்கிட்டவராய், "அப்பா! அந்தப் பெரிய புத்த விக்கிரகத்துக்குப் பின்னால் ஒருவேளை யாராவது மறைந்திருந்தார்களா, என்ன?" என்றார். "ஆம், நரசிம்மா! இரண்டு பேர் இருந்தார்கள்! அன்றிரவு இராஜ விஹாரத்துக்கு அருகில் ஒரு புத்த பிக்ஷுவையும் ஒரு வாலிபனையும் நாம் பார்க்கவில்லையா, அந்த இருவரும் தான்!" "என்ன! அவர்களா ஆயனச் சிற்பியார் வீட்டில் புத்தர் சிலைக்குப் பின்னால் ஒளிந்திருந்தார்கள்?" "ஆம்; ஆனால், ஒளிந்துகொள்ளும் கலையை அவர்கள் அவ்வளவு நன்றாகக் கற்கவில்லை..."

தங்களுக்கு மூன்றாவது கண் உண்டு என்பது அவர்களுக்கு எப்படித் தெரியும் அப்பா? ஆயனரின் வீட்டில் தாங்கள் அவ்வளவு நேரம் தங்கியது எனக்குச் சிறிது வியப்பை அளித்தது. இப்போது காரணம் தெரிகிறது!" என்று நரசிம்மர் பெருமிதத்துடன் கூறினார். மகேந்திரர் இதற்கு விடையொன்றும் கூறாமல் கால்வாயின் மேற்குத் திசையை நோக்கினார். திடீரென்று, "அப்பா! ஆயனர் வீட்டுக்கு நான் மறுபடியும் போய்வர விரும்புகிறேன்" என்றார் மாமல்லர். "எதற்காக, நரசிம்மா?" "அந்த வாலிபனைப் பார்த்து இந்த வேலை அவனிடம் ஒப்புவிக்க வேண்டும். புத்த பிக்ஷுவுடன் அன்றிரவு நாம் பார்த்த வாலிபன்தான் இந்த வேலுக்குரியவன் என்று தாங்கள் சொன்னீர்கள் அல்லவா?"

"அன்று ஊகித்துச் சொன்னேன்; இன்றைக்கு நிச்சயமாயிற்று. ஆனால், அந்த வாலிபனுக்கு இந்த வேல் இனிமேல் தேவையில்லை, நரசிம்மா! அதோ போகிறதே, ஆயுதப் படகு அதிலுள்ள பழைய வேல்களுடன் இதையும் நீ சேர்த்து விடலாம்!" "ஏன், அப்பா?" "பரஞ்சோதி ஆயனரிடம் சிற்பக் கலை கற்கப் போகிறான்; அவனுக்கு வேல் வேண்டியதில்லை." "பரஞ்சோதி, பரஞ்சோதி! திவ்யமான பெயர்! அந்த வீர வாலிபனைப்பற்றி என்னவெல்லாமோ ஆசை கொண்டிருந்தேன் அவனை என் ஆருயிர்த் தோழனாகக் கொள்ள விரும்பினேன்!"

"அது நிறைவேறாதென்று நான் சொல்லவில்லையே!" "எப்படி நிறைவேறும்? நம் பகைவர்களின் ஒற்றர்களுடன் நாம் தோழமை கொள்வது சாத்தியமா?" "அந்த வாலிபனை ஒற்றன் என்று நான் சொல்லவில்லையே!" "பின் எதற்காக அவன் ஒளிந்துகொண்டான்?" "அந்த வாலிபன் குற்றமற்றவன் அவனைக்கொண்டு அந்தக் கள்ள பிக்ஷு ஏதோ சூழ்வினை செய்யப் பார்க்கிறான் என்று தோன்றுகிறது. வாதாபி சாம்ராஜ்யத்தின் மகா சதுரனான ஒற்றன் அந்தப் பிக்ஷு என்று நான் ஊகிக்கிறேன்!"

"அப்பா! சில சமயம் தங்களுடைய நிதானப் போக்கு எனக்கு மிகுந்த வியப்பை அளிக்கிறது." "எதைப்பற்றிச் சொல்லுகிறாய், நரசிம்மா?" "அன்றிரவே அந்தப் புத்த பிக்ஷுவைப்பற்றித் தாங்கள் சந்தேகம் கொண்டீர்கள். உடனே அவனை ஏன் சிறைப்படுத்தவில்லை? வௌியிலே விட்டு ஏன் வேடிக்கை பார்க்கிறீர்கள்?" "அன்றிரவு சிறைப்படுத்தியிருந்தால், பல்லவ ராஜ்யத்துக்கு ஏற்பட்டிருக்கும் ஒரு பெரிய அபாயம் எனக்குத் தெரியாமல் போயிருக்கும்." "பெரிய அபாயமா?" என்று கூறி நரசிம்மர் ஆவலுடனும் பரபரப்புடனும் மகேந்திரரை நோக்கினார்.

"ஆம்; அன்றிரவு நாம் புத்த பிக்ஷுவையும் வாலிபனையும் பார்த்தோம்; மறுநாள் காலையில் அவர்களை இராஜ விஹாரத்தில் காணவில்லை. ஆனால், அவர்கள் எந்தக் கோட்டை வாசலின் வழியாகவும் வௌியே போனதாகத் தெரியவில்லையல்லவா?" "ஆமாம்!" "அவர்கள் எப்படி மாயமாய் மறைந்திருக்கக் கூடுமென்று வியப்பாயிருந்ததல்லவா?" "ஆம், அப்பா!" "கோட்டைக்கு வௌியே போக ஏதோ கள்ள வழி இருக்க வேண்டும் என்று சந்தேகித்தேன். அந்தக் கள்ள வழி எங்கே இருக்கிறதென்று சற்று முன்னால்தான் தெரிந்தது." "அதைப்பற்றி யோசித்ததனால்தான் குதிரையை அவ்வளவு வேகமாய் விட்டுக்கொண்டு வந்தீர்களா?" சக்கரவர்த்தி மௌனமாயிருந்தார் "கள்ள வழி எங்கே இருக்கிறது, அப்பா?" "இராஜ விஹாரத்தில் புத்த பகவானுடைய விக்கிரஹத்துக்குப் பின்னால் பார்க்கவேண்டும், நரசிம்மா!"

சக்கரவர்த்தியின் அறிவுக் கூர்மையைப்பற்றி நரசிம்மர் அளவற்ற வியப்புக் கொண்டவராய்த் திகைத்து நிற்கையில், "அதோ இராஜஹம்சம்!" என்று மகேந்திரர் கூறியதைக் கேட்டு மேற்கே நோக்கினார். காஞ்சி நகர்ப் பக்கத்திலிருந்து மூன்று படகுகள் கால்வாயில் வந்துகொண்டிருந்தன. அவற்றில் நடுவில் வந்த படகு சங்கையொத்த வெண்ணிறமுடைய 'இராஜ ஹம்ச'த்தின் உருவமாக அமைக்கப்பட்டிருந்தது. அதில் ஒரு பக்கத்தில் அமைந்திருந்த தங்கச் சிங்காதனம் 'பளபள'வென்று மின்னிற்று. அதன் மேல் விசாலமான வெண்கொற்றக்குடை விரித்திருந்தது. எல்லாவற்றுக்கும் மேலே பல்லவ சாம்ராஜ்யத்தின் ரிஷபக்கொடி கம்பீரமாய்ப் பறந்து கொண்டிருந்தது.

முதலில் வந்த படகும், 'இராஜ ஹம்ச'மும் படகோட்டிகளைத் தவிர மற்றப்படி வெறுமையாயிருந்தன. கடைசியாக வந்த படகில் பலர் அமர்ந்திருந்தார்கள். "ஆ! மந்திரி மண்டலத்தாரும் வருகிறார்களே! தாங்கள் வரச் சொல்லியிருந்தீர்களா?" என்றார் நரசிம்மர். "ஆம்; இன்றைக்குத் துறைமுகத்தில் மந்திரி மண்டலம் கூடப் போகிறது. அதற்கு முன்னால் உன்னிடம் நான் சில விஷயங்கள் சொல்லவேண்டும். அதோடு, உன்னிடம் ஒரு வாக்குறுதி கோரப்போகிறேன்" என்றார் மகேந்திரர். நரசிம்மருக்குத் தூக்கிவாரிப் போட்டது. அவருடைய உள்ளத்தைக் கொள்ளை கொண்டவளான சிவகாமி தாமரைக் குளக்கரையில் அவரிடம் வாக்குறுதி கேட்டு வாங்கிக்கொண்டு ஒரு முகூர்த்த நேரம் கூட ஆகவில்லை. அதற்குள் அவருடைய அன்புக்கும் பக்திக்கும் உரியவரான தந்தை வேறு வாக்குறுதி கேட்கிறார். இவ்விதம் மாமல்லர் யோசித்துக் கொண்டிருக்கும்போதே படகுகள் மூன்றும் அவர்கள் இருந்த இடத்தை நெருங்கின.
 

Meena

Saha Moderator
Staff
Messages
1,082
Reaction score
91
Points
48
இருபத்துநான்காம் அத்தியாயம்

வாக்குறுதி

சக்கரவர்த்திக்குப் பின்னால் கால்நடையாக வந்த இராஜ பரிவாரங்களும் இதற்குள்ளே கால்வாயின் கரைக்கு வந்து விட்டன. "மகா ராஜாதிராஜ திரிபுவன சக்கரவர்த்தி குணபர மகேந்திர பல்லவேந்திரர் வாழ்க!" என்ற கோஷம் மந்திரி மண்டலத்தார் வீற்றிருந்த படகிலேயிருந்து கம்பீரமாக எழுந்தது. "மகா ராஜாதிராஜ அவனிசிம்மலளிதாங்குர சத்துருமல்ல விசித்திரசித்த மத்தவிலாச சித்தரக்காரப்புலி குணபர மகேந்திர பல்லவேந்திரர் வாழ்க!" என்ற கோஷம் கரையிலிருந்து எழுந்தது. "குமார சக்கரவர்த்தி மாமல்லர் வாழ்க!" என்ற கோஷம் இரு பக்கங்களிலிருந்தும் எழுந்து வானளாவியது.

சங்கங்களும், எக்காளங்களும் காது செவிடுபடும்படி முழங்கின. முரசங்களும் பேரிகைகளும் எட்டுத் திசையும் அதிரும்படி ஆர்த்தன. மகேந்திர பல்லவரைத் தொடர்ந்து வந்த வீரர்கள் முன்னால் வந்த படகிலே ஏறி அமர்ந்தார்கள். சக்கரவர்த்தியும் குமாரரும் குதிரைகளை ஏவலாளரிடம் ஒப்புவித்துவிட்டு, 'இராஜ ஹம்ச'த்தில் ஏறி வெண்கொற்றக் குடையின் கீழ்த் தங்கச் சிங்காதனத்தில் அமர்ந்தார்கள். படகுகள் மூன்றும் துறைமுகத்தை நோக்கிப் புறப்பட்டன.

வாத்திய முழக்கங்கள் நின்றதும், சக்கரவர்த்தி தம் குமாரரைப் பார்த்து, "நரசிம்மா! நான் உன்னிடம் வாக்குறுதி கேட்பதே உனக்கு விந்தையாயிருக்கும். அதற்கு நீ உடனே மறுமொழி கூறாததும் நியாயந்தான். விஷயம் இன்னதென்று தெரிந்து கொள்ளாமல் எந்த வாக்குறுதியும் கொடுக்க கூடாது. இராஜ்யம் ஆளும் பொறுப்பு உடையவர்கள் இதில் சர்வஜாக்கிரதையாயிருக்க வேண்டும்!" என்றார். "அதற்காக நான் தயங்கவில்லை, அப்பா! தாங்கள் என்னிடம் வாக்குறுதி கேட்க வேண்டுமா என்றுதான் யோசனை செய்து கொண்டிருந்தேன். எனக்குத் தாங்கள் கட்டளையிடுவது தானே முறை? தங்கள் விருப்பத்திற்கு மாறாக எப்போதாவது நான் நடந்ததுண்டா?" இந்த வார்த்தைகள் குமார சக்கரவர்த்தி இருதய பூர்வமாகக் கூறியவையானபடியால் அவருடைய நாத் தழுதழுத்தது.

மகேந்திரரும் உணர்ச்சி மிகுதியினால் சற்றுச் சும்மா இருந்துவிட்டு, பிறகு கூறினார்: "பல்லவ சிம்மா! நான் எவ்வளவு கசப்பான கட்டளையிட்டாலும் நீ நிறைவேற்றுவாய் என்று எனக்குத் தெரியும். ஆனாலும், காரியத்தின் முக்கியத்தைக் கருதி உன்னிடம் வாக்குறுதி பெறவேண்டியிருக்கிறது. அதற்கு முன்னால் நான் உனக்குச் சில முக்கியமான விஷயங்களைச் சொல்லியாக வேண்டும். நாளை மறுநாள் நான் வடக்கே போர் முனைக்குக் கிளம்புகிறேன். எப்போது திரும்பி வருவேன் என்று சொல்வதற்கில்லை..." "அப்பா! என்ன சொல்கிறீர்கள்? போர்முனைக்குத் தாங்கள் கிளம்புகிறீர்களா? என்னை இங்கே விட்டுவிட்டா?" என்று மாமல்லர் ஆத்திரத்துடன் கேட்டார். "நான் சொல்ல வேண்டியதையெல்லாம் சொல்லி விடுகிறேன். நரசிம்மா! பிறகு, நீ கேட்கவேண்டியதைக் கேட்கலாம்" என்று சக்கரவர்த்தி கூறியதும், நரசிம்மர் மௌனமாயிருந்தார்.

மகேந்திரர் பிறகு கூறினார்: இந்தப் புராதனமான பல்லவ சாம்ராஜ்யத்தில் யுத்தம் என்று நடந்து வெகுகாலம் ஆகிவிட்டது. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் நான் இந்த ராஜ்யத்தின் பொறுப்பை ஏற்றுக்கொண்டேன். பிறகு இதுவரை யுத்தம் என்பதே நடக்கவில்லை. என் தந்தை சிம்மவிஷ்ணு மகாராஜாவின் காலத்திலும் பெரிய யுத்தம் நடந்தது கிடையாது. அவருடைய ஆட்சியின் ஆரம்பத்தில், சோழ நாட்டுக்கும் பாண்டிய நாட்டுக்கும் நடுவில் புல்லுருவியைப் போலக் கிளம்பியிருந்த களப்பாள வம்சத்தை நிர்மூலம் செய்து உறையூர்ச் சிம்மாசனத்தில் சோழ வம்சத்தை நிலை நாட்டினார். அதன் பிறகு பல்லவ சைனியங்களுக்கு வேலையே இருக்கவில்லை! இப்போது தான் முதன் முதலாக என் காலத்தில் யுத்தம் வந்திருக்கிறது. இதை என் இஷ்டப்படி நடத்துவதற்கு மந்திரி மண்டலத்தாரின் அனுமதி கோரப் போகிறேன். அதற்கு நீயும் அனுமதி கொடுக்க வேண்டும். இந்த யுத்தத்தில் வெற்றியோ தோல்வியோ, எது நேர்ந்தாலும் என் தலையோடு போகட்டும் உனக்கு அதில் பங்கு வேண்டியதில்லை...."

இத்தனை நேரம் பொறுமையுடன் இருந்த நரசிம்மர் இப்போது குறுக்கிட்டு, "அப்பா! தோல்வி என்ற வார்த்தையை ஏன் சொல்லுகிறீர்கள்? யுத்தத்தில் நாம் அடையக்கூடியது வெற்றி அல்லது வீரமரணந்தானே? அதில் எனக்குப் பங்கு எப்படி இல்லாமற் போகும்?" என்று கேட்டார். "வீர பல்லவ குலத்துக்கு உகந்த வார்த்தை கூறினாய், நரசிம்மா! வெற்றி அல்லது வீர மரணந்தான் நமது குலதர்மம். ஆனால், வீர மரணத்தை நாம் இரண்டுபேரும் சேர்ந்தார் போல் தேடி அடைய வேண்டியதில்லை! ஒருவர் செய்த தவறுகளைத் திருத்த இன்னொருவர் உயிர் வாழ வேண்டுமல்லவா? ஒருவருக்காகப் பழி வாங்குவதற்கு இன்னொருவர் இருக்க வேண்டுமல்லவா?"

"அப்பா! போர் முனையிலிருந்து ஏதோ ரொம்பவும் கெடுதலான செய்தி வந்திருகிறது; அதனால்தான் இப்படியெல்லாம் தாங்கள் பேசுகிறீர்கள்!" "ஆம், குழந்தாய்! கெடுதலான செய்திதான் வந்திருக்கிறது! கங்கபாடிப் படை புலிகேசிக்குப் பணிந்து விட்டது. நரசிம்மா! வாதாபிச் சைனியம் வடபெண்ணையை நோக்கி விரைந்து முன்னேறி வந்துகொண்டிருக்கிறது." "இவ்வளவுதானே, அப்பா? துடைநடுங்கி துர்விநீதனிடம் அது நாம் எதிர்பார்க்கக் கூடியதுதான். அதனால் என்ன? வடபெண்ணைக் கரையில் நமது வடக்கு மண்டலத்துச் சைனியம் அணிவகுத்து நிற்கிறதல்லவா? வேங்கியிலிருந்து என் மாமன் பெரும்படையுடன் கிளம்பி வருகிறாரல்லவா?"

"நரசிம்மா! வேங்கி சைனியம் நமது உதவிக்கு வராது. புலிகேசியின் சகோதரன் விஷ்ணுவர்த்தனன் இன்னொரு பெரும்படையுடன் வேங்கியை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறானாம்." "ஆஹா! வாதாபி சைனியம் அவ்வளவு பெரிதா? நாம் மட்டும் ஏன்...? "என்று மாமல்லர் ஆரம்பித்து இடையில் நிறுத்தியபோது, அவருடைய குரலில் ஏமாற்றம் தொனித்தது. "அது என் தவறுதான்; நரசிம்மா! என் வாழ்நாளில் இப்படிப்பட்ட ஒரு யுத்தம் வருமென்று நான் எதிர்பார்க்கவில்லை. போர்க்கலையில் கவனம் செலுத்த வேண்டிய காலத்தை எல்லாம் ஆடலிலும் பாடலிலும் சிற்பத்திலும் சித்திரத்திலும் கழித்து விட்டேன்..."

"அதனால் என்ன, அப்பா! சற்று முன்னால் ஆயனர் சொன்னாரே? உலகத்தில் எத்தனையோ சக்கரவர்த்திகள் இருந்தார்கள்; மறைந்தார்கள். அவர்களுடைய பெயர்களைக் கூட உலகம் மறந்து போய்விட்டது. ஆனால் தங்களுடைய பெயரை என்றென்றைக்கும் உலகம் மறக்க முடியாது." "ஆயினும், இந்த யுத்தத்தில் நாம் ஜயிக்காமல் போனால், மாமல்லபுரத்து மகத்தான சிற்பங்கள் எல்லாம் என்றைக்கும் நமது அவமானத்துக்கே சின்னங்களாக விளங்கும்!" "ஒருநாளும் இல்லை, யுத்தத்தில் தோல்வியடைந்து உயிரையும் வைத்துக் கொண்டிருந்தாலல்லவா தாங்கள் சொல்கிறபடி ஏற்படும்? போர்க்களத்தில் புறங்காட்டி ஓடி ஒளிந்து கொள்கிறவர்களையல்லவா உலகம் பழித்து நிந்திக்கும்? வீர மரணத்துக்கு ஆயத்தமாகயிருக்கும்போது, அவமானத்துக்கும் பழிக்கும் நாம் ஏன் பயப்படவேண்டும்?" என்று மாமல்லர் ஆத்திரத்துடன் கூறினார்.

"முடிவில் போர்க்களத்தில் வீர மரணம் இருக்கவே இருக்கிறது. ஆனால், அதற்கு முன்னால் நம் பகைவர்களை வேரொடு அழித்து வெற்றியடையவே பார்க்கவேண்டுமல்லவா? அது அப்படி அசாத்தியமான காரியம் இல்லை. அவகாசம் மட்டுந்தான் வேண்டும்; வாதாபி மன்னன் யுத்த தந்திரத்தை நன்கு அறிந்திருக்கிறான், நரசிம்மா! ஆனாலும், முடிவில் அவனை முறியடித்து நாம் வெற்றி மாலை சூடுவோம் சந்தேகமில்லை. இதற்கு உன்னுடைய பூரண உதவி எனக்கு வேண்டும். நான் சொல்லுவது உனக்குப் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் அதன்படி நடக்க வேண்டும்..."

நரசிம்மர் மிக்க உணர்ச்சியோடும் உருக்கத்தோடும் தழுதழுத்த குரலில், "அப்பா! என்னிடம் தாங்கள் உதவி கோர வேண்டுமா? தாங்கள் என் அன்புக்குரிய அருமைத் தந்தை மட்டுமல்ல; என் உடல் பொருள் ஆவிக்கு உரிமையுடைய அரசர்; எனக்கு எப்பேர்ப்பட்ட கட்டளையையும் இடுவதற்கு அதிகாரமுள்ள பல்லவ சாம்ராஜ்யத்தின் பிரதம சேனாதிபதி. எவ்வளவு கசப்பான கட்டளை வேண்டுமானால் இடுங்கள்; நிறைவேற்றக் காத்திருக்கிறேன்" என்றார்.

மகேந்திரர் சற்று மௌனமாயிருந்தார் அப்போது கீழ்த் திசையில் சிறிது தூரத்தில் கடற்கரைத் துறைமுகத்தின் காட்சி தென்பட்டது. கப்பல்களின்மேல் கம்பீரமாகப் பறந்த ரிஷபக் கொடிகள் வானத்தை மறைத்தன. சற்று தென்புறத்தில் நெடுந்தூரம் பரவி நின்ற மாமல்லபுரத்துக் குன்றுகள் காட்சி அளித்தன. சிறிது நேரம் அந்தக் காட்சியில் கவனம் செலுத்திக் கொண்டிருந்த மகேந்திரர், சட்டென்று நரசிம்மரின் பக்கம் திரும்பி மாமல்லா! நாளை மறுநாள் நான் போர்க்களத்துக்குக் கிளம்புகிறேன் என்று சொன்னேனல்லவா? போர்க்களத்திலிருந்து திரும்பி வந்து இந்த மாமல்லபுரத்தில் நாம் ஆரம்பித்த சிற்ப வேலை பூர்த்தியாவதைக் காண்பேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது" என்றார்.

நரசிம்மர் மௌனமாய் இருக்கவே, மகேந்திரர் மேலும் கூறினார்: "அப்படி ஒருவேளை நான் திரும்பி வராவிட்டால் இந்தச் சிற்பப் பணியை நீதான் தொடர்ந்து நடத்திப் பூர்த்தி செய்ய வேண்டும்." "இந்த வாக்குறுதியைத்தானா என்னிடம் கோரினீர்கள்?" என்று மாமல்லர் வெடுக்கென்று கேட்டபோது அவருடைய குரலில் ஆத்திரமும் வெறுப்பும் தொனித்தன. "இல்லை; அதைக் கேட்கவில்லை நான் ஒருவேளை போர்க்களத்திலிருந்து திரும்பி வராவிட்டால் எனக்காக நீ பழிக்கு பழி வாங்கவேண்டும். புலிகேசியின் படையெடுப்பினால் பல்லவ சாம்ராஜ்யத்துக்கு ஏற்பட்ட அவமானத்தையும் பழியையும் துடைக்க வேண்டும்." "அது என் கடமையாயிற்றே? கடமையை நிறைவேற்றுவதற்கு வாக்குறுதி வேண்டுமா?" "குமாரா! அவ்விதம் பழிக்குப் பழி வாங்குவதற்காக நீ உன் உயிரைப் பத்திரமாய்க் காப்பாற்றிக்கொள்ளவேண்டும்." நரசிம்மர் மௌனமாயிருந்தார் இன்னும் ஏதோ வர போகிறதென்று அவர் கவலையுடன் எதிர்பார்த்ததாகத் தோன்றியது.

"குழந்தாய்! சென்ற ஐந்நூறு ஆண்டு காலமாக வாழையடி வாழையாக வந்திருக்கும் இந்தப் பல்லவ குலம், இனியும் நீடிப்பது உன் ஒருவனையே பொறுத்திருக்கிறது. உன்னிடம் நான் கேட்கும் வாக்குறுதி இதுதான்; நான் திரும்பி வரும்வரையில் அல்லது நான் திரும்பி வரமாட்டேன் என்று நிச்சயமாய்த் தெரியும்வரையில் நீ காஞ்சிக் கோட்டையிலேயே இருக்கவேண்டும். எக்காரணத்தை முன்னிட்டும் கோட்டைக்கு வௌியே வரக்கூடாது! இதோ என் கையைத் தொட்டுச் சத்தியம் செய்து கொடு" என்று கூறி மகேந்திரர் தம் வலது கரத்தை நீட்டினார். நரசிம்மர் அவருடைய நீட்டிய கையைத் தொட்டு, "அப்படியே ஆகட்டும், அப்பா! தாங்கள் திரும்பி வரும் வரையில் காஞ்சிக் கோட்டையிலேயே இருப்பேன்!" என்றார். திடீரென்று தூரத்தில் சமுத்திரம் 'ஹோ' என்று ஆங்காரத்துடன் இரையும் பேரொலி கேட்டது. மாமல்லரின் உள்ளத்திலும் ஆர்கலியின் அலைகளைப் போல் எத்தனை எத்தனையோ எண்ணங்கள் தோன்றி மறைந்தன.
 

Meena

Saha Moderator
Staff
Messages
1,082
Reaction score
91
Points
48
இருபத்தைந்தாம் அத்தியாயம்

கடல் தந்த குழந்தை

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் காஞ்சி ராஜ்யத்தின் புராதன ராஜவம்சம் சந்ததியில்லாமல் முடிவடைந்தது. "மன்னன் இல்லாத மண்டலம் பாழாய்ப் போய்விடுமே! அரசன் இல்லாத நாட்டில் குடிகள் எல்லையற்ற துன்பங்களுக்கு உள்ளாவார்களே!" என்று தேசத்தின் பெரியோர்கள் ஏங்கினார்கள். அப்போது அருளாளரான ஒரு மகான் மக்களைப் பார்த்து, "கவலை வேண்டாம்; காஞ்சி ராஜ்யத்துக்கு ஒரு மன்னனைக் கடல் கொடுக்கும்! இதை நான் கனவிலே கண்டேன்!" என்றார். அதுமுதல் அந்நாட்டில் கடற்கரையோரத்தில் காவல் போட்டு வைத்திருந்தார்கள்.

ஒருநாள் கடற்கரையோரமாகக் கப்பல் ஒன்று வந்தது. அது எந்த நாட்டுக் கப்பலோ, எங்கிருந்து வந்ததோ தெரியாது. கரையில் இருந்தவர்கள் பார்த்துக்கொண்டிருக்கையிலே திடீரென்று கொடிய புயற்காற்று வீசுகிறது. ஊழிக்காலம் வந்து விட்டதோ என்று தோன்றும்படி கடல் கொந்தளிக்கிறது. கரையோரமாக வந்த கப்பல் அப்படியும் இப்படியுமாக ஆடுகிறது! கப்பலின் கொடி மரங்கள் சின்னாபின்னமாகின்றன! ஆ! என்ன பயங்கரம்! தயிரைக் கடையும் மத்தைப் போலக் கப்பல் சுழலுகிறதே! சுழன்று சுழன்று, அடடா, அதோ கவிழ்ந்து விட்டதே! புயற்காற்றின் கோரமான ஊளைச் சத்தத்துடன், கப்பலிலுள்ளோர் அழுகுரலும் கலக்கின்றதே!

கப்பல் கவிழ்ந்து கடலுக்குள் முழுகிற்றோ, இல்லையோ, சொல்லி வைத்தாற்போல், காற்றும் நிற்கிறது. அதுவரை கரையிலே நின்று செயலற்றுப் பார்த்துக்கொண்டிருந்தவர்கள் இப்போது பரபரப்பு அடைகிறார்கள். படகுகளும் கட்டு மரங்களும் கடலில் விரைவாகத் தள்ளப்படுகின்றன. கப்பலில் இருந்தவர் யாராவது தெய்வாதீனமாக உயிருடன் கடலில் மிதந்தால், அவர்களைக் காப்பாற்றிக் கரை சேர்ப்பதற்காகப் படகுகளும் கட்டுமரங்களும் விரைந்து செல்லுகின்றன; படகோட்டிகளும் மீன்பிடிக்கும் வலைஞர்களும் பாய்ந்து செல்லுகிறார்கள்.

அத்தனை படகோட்டிகளிலும், வலைஞர்களிலும் அதிர்ஷ்டசாலி ஒருவன் இருக்கிறான். அதிர்ஷ்டம் அவனைத் தேடிக்கொண்டு வருகிறது. ஆனால், அவனுக்கு மட்டும் வந்த அதிர்ஷ்டமல்ல; நாட்டுக்கே வந்த அதிர்ஷ்டம்! நாட்டு மக்கள் செய்த நல்வினையினால் வந்த அதிர்ஷ்டம்! நீலக் கடலின் அலைமேல் சூரியன் மிதக்கிறானா என்ன? இல்லை, சூரியன் இல்லை; சின்னஞ்சிறு குழந்தை அது! பலகையிலே சேர்த்துப் பீதாம்பரத்தினால் கட்டப்பட்டிருக்கிறது. அக்குழந்தையின் முகத்திலே அவ்வளவு பிரகாசம்! அத்தனை தேஜஸ்! ஆனால், குழந்தைக்கு உயிர் இருக்கிறதா? ஒருவேளை...? ஆகா! இருக்கிறது; உயிர் இருக்கிறது! புயலுக்குப் பின் அமைதியடைந்த கடலில் இலேசாகக் கிளம்பி விழும் இளம் அலைகளின் நீர்த்துளிகள் குழந்தையின் முகத்தில் விழும் போது, அது 'களுக்' என்று சிரிக்கிறது!

படகோட்டி அடங்காத ஆர்வத்துடன் அந்தப் பலகையின் அருகில் படகைச் செலுத்துகிறான். குழந்தையைத் தாவி எடுத்துக் கட்டை அவிழ்த்து மார்போடு அணைத்து மகிழ்கிறான். அவனுடைய மார்பின் ரோமங்கள் குத்திய காரணத்தினால் குழந்தை அழுகிறது. படகோட்டி, படகுக்குள்ளே பார்க்கிறான். அங்கே கப்பலிலிருந்து இறக்கும் பண்டங்களைக் கட்டுவதற்காக அவன் அன்று காலையில் கொண்டு வந்து போட்ட தொண்டைக் கொடிகள் கிடக்கின்றன. அக்கொடிகளை இலைகளோடு ஒன்றுசேர்த்துக் குவித்துப் படுக்கையாக அமைக்கிறான். கொடிகளின் நுனியிலிருந்த இளந்தளிர்களைப் பிய்த்து எடுத்து மேலே தூவிப் பரப்புகிறான். அந்த இளந்தளிர்ப் படுக்கையின்மீது குழந்தையைக் கிடத்துகிறான். குழந்தை படகோட்டியைப் பார்த்துக் குறுநகை புரிகிறது! படகு கரையை நோக்கி விரைந்து செல்லுகிறது.

கரையை நெருங்கும்போதே படகோட்டி கூச்சலிட்டுக் குதூகலிப்பதைக் கண்டு, அந்தப் படகில் ஏதோ விசேஷம் இருக்கிறது என்று கரையிலே நின்றவர்கள் அறிந்துகொள்ளுகிறார்கள். படகு கரையோரத்தை அடைகிறது; கரையில் நின்ற ஜனங்கள் திரண்டு வந்து படகைச் சூழ்கிறார்கள். தீர்க்க தரிசனம் கூறிய மகானும் வருகிறார். வந்து, குழந்தையைப் பார்க்கிறார்! பார்த்துவிட்டு, "நான் கனவிலே கண்ட புதிய காஞ்சி மன்னன் இவன்தான்! இவனுடைய சந்ததியார் காஞ்சி சிம்மாசனத்தில் வீற்றிருந்து ஆயிரம் ஆண்டு அரசாளப் போகின்றனர்" என்று கூறுகிறார்; ஜனங்கள் ஆரவாரிக்கிறார்கள்.

திரைகடல் அளித்த தெய்வக் குழந்தைக்கு அப்பெரியவர், 'இளந்திரையன்' என்று பெயர் இடுகிறார். "தொண்டைக்கொடியின்மீது கண் வளர்ந்தபடியால், தொண்டைமான் என்ற பெயரும் இவனுக்குப் பொருந்தும். இவனால் இனிக் காஞ்சி ராஜ்யத்துக்குத் தொண்டை மண்டலம் என்ற பெயர் வழங்கும்" என்னும் தீர்க்க தரிசனமும் அவர் அருள்வாக்கிலிருந்து வௌிவருகிறது. வடமொழிப் புலவர் ஒருவர், இளந் தளிர்களின்மீது கிடக்கும் குழந்தையைப் பார்த்துவிட்டு, அதற்குப் 'பல்லவராயன்' என்று நாமகரணம் செய்கிறார். அதைத் தமிழ்ப் புலவர் ஒருவர் 'போத்தரையன்' என்று பெயர்த்துக் கூறுகிறார். கவிஞர்கள் வருகிறார்கள் கடல் தந்த குழந்தையைப்பற்றி அழகான கற்பனைகளுடன் கவிதைகள் புனைகிறார்கள். "இந்தத் திரைகடல் ஏன் இப்படி ஆர்ப்பரிக்கிறது, தெரியுமா? 'திரையனை நான் பயந்தேன்' என்ற பெருமிதத்தினாலேதான்!" என்று ஒரு கவிராயர் கூறியபோது, ஆர்கலியானது தன் அலைக்கைகள் ஆயிரத்தையும் கொட்டி ஆரவாரத்துடன் ஆமோதிக்கிறது.

பிற்காலத்தில் வந்த தமிழ்ப் புலவர்களுக்குப் பல்லவ குலத்தைக் கடல் தந்ததாகக் கூறி விட்டுவிட மனம் வரவில்லை. "கடல் தந்த குழந்தை உண்மையில் தமிழகத்தின் அநாதியான சோழ வம்சத்துக் குழந்தைதான்! சோழ குலத்து ராஜகுமாரன் ஒருவன், கடற் பிரயாணம் செய்வதற்காகச் சென்று மணி பல்லவம் என்னும் தீவையடைந்து, அந்நாட்டு அரசன் மகள் பீலிவளையைக் காதலித்து மணந்து கொண்டான். அவர்களுக்கு ஒரு குழந்தையும் பிறந்தது. அந்த அரசிளங்குமரன் தன் மனைவியோடும் குழந்தையோடும் தாய்நாட்டுக்குத் திரும்பி வந்தபோது கப்பலுக்கு விபத்து நேர்ந்தது. விபத்தில் தப்பிப் பிழைத்து வந்த குழந்தைதான் பல்லவ குலத்தைத் தோற்றுவித்த தொண்டைமான் இளந்திரையன்!" என்று கற்பனை செய்து கூறுகிறார்கள். வடமொழி புலவர்களோ, "பாண்டவர்களின் குருவாகிய துரோணருடைய புதல்வர் அசுவத்தாமாவின் வழிவந்தவர்கள் பல்லவர்கள்!" என்று கூறி, அதற்கு ஒரு கதை சிருஷ்டிக்கிறார்கள். (கடைசியாக, சமீப காலத்தில் இந்திய சரித்திர ஆராய்ச்சியில் ஈடுபட்ட ஐரோப்பியப் புலவர்கள், பல்லவர்களைத் தந்த பெருமையைத் தென்னிந்தியாவுக்கோ வட இந்தியாவுக்கோ தருவதற்கு விருப்பமில்லாதவர்களாய், இந்தியாவுக்கு வடமேற்கிலிருந்து வந்த அந்நியர்களாகிய சகர்தான் காஞ்சிபுரத்தைத் தேடி வந்து பல்லவர்கள் ஆனார்கள் என்று எழுதி, அதைப் புத்தகங்களிலும் அச்சுப் போட்டார்கள். நம் பழம் புலவர்களின் கதைகளையெல்லாம் கற்பனையென்று தள்ளிய நம்மவர்களோ, மேற்படி நவீன ஐரோப்பியப் புலவர்களின் வாக்கை வேதவாக்காக ஒப்புக்கொண்டு, 'பல்லவர்கள் அந்நியர்களே' என்று சத்தியம் செய்தார்கள். தமிழகத்துக்குப் பலவகையிலும் பெருமை தந்த காஞ்சிப் பல்லவர்களை அந்நியர்கள் என்று சொல்லுவதைப் போன்ற கட்டுக்கதை உலக சரித்திரத்தில் வேறு கிடையாது என்றே சொல்லலாம்.)

பல்லவ குலத்தின் உற்பத்தியைப்பற்றிய மேற்கூறிய வரலாறுகளில் எவ்வளவு வரையில் உண்மை, எவ்வளவு தூரம் கற்பனை என்பதை இந்நாளில் நாம் நிச்சயித்துச் சொல்வதற்கில்லை. அந்த நாளில் அந்தக் குலத்தில் பிறந்தவர்களுக்குக் கூட அதன் உண்மை நன்றாகத் தெரிந்திருக்கவில்லை. ஆனால், ஒன்று நிச்சயமாய்த் தெரிந்திருந்தது; அதாவது, பல்லவ குலத்தில் தோன்றியவர்களுக்கெல்லாம் கடற்பிரயாணத்தில் ஆசை அபரிமிதமாயிருந்தது. அந்த ஆசை அவர்களுடைய இரத்தத்தோடு ஒன்றிப் போயிருந்தது. கீழ்த்திசையில் கடல்களுக்கப்பால் இருந்த எத்தனையோ தீப தீபாந்தரங்களில், பல்லவர்களின் ஆதி பூர்வீக ரிஷபக் கொடியும் பிற்காலத்துச் சிங்கக் கொடியும் கம்பீரமாகப் பறந்தன.

பல்லவர் ஆட்சி நடந்த காலத்தில் தமிழகத்துக்கும் வௌிநாடுகளுக்கும் கடல் வாணிகம் அபரிமிதமாக நடந்து வந்தது. கப்பல்கள் வந்து நிற்பதற்கும், பண்டங்களை இறக்கி ஏற்றிக் கொள்வதற்கும் கீழ்க் கடற்கரையோரமாகப் பல துறைமுகங்கள் ஏற்பட்டிருந்தன. அவற்றுள் முதன்மையானது மாமல்லபுரத்துத் துறைமுகமாகும். மாமல்லபுரத்துக்கு வடபுறத்தில் கடலானது பூமிக்குள் புகுந்து தென்திசையை நோக்கி வளைந்து சென்று மாமல்லபுரத்தை ஏறக்குறைய ஒரு தீவாகச் செய்திருந்தது. இவ்விதம் காஞ்சி நகருக்கு அருகில் ஏற்பட்டிருந்த இயற்கைத் துறைமுகமானது ஏககாலத்தில் நூற்றுக்கணக்கான கப்பல்கள் வந்து நிற்பதற்கும், பண்டங்களை ஏற்றுவதற்கும் இறக்குவதற்கும் வெகு வசதியாக அமைந்திருந்தது.

மகேந்திரர் காலத்துக்கு முன்னால் அத்துறைமுகத் தீவில் பெரும்பாலும் வர்த்தகர்களின் பண்டக சாலைகளும், சுங்கமண்டபங்களும் மட்டுமே இருந்தன. படகோட்டிகளும் மீன் வலைஞருந்தான் அங்கே அதிகமாக வாசம் செய்து வந்தார்கள். மகேந்திர பல்லவர் அங்கே பல அரசாங்க அதிகாரிகளையும் சிற்பிகளையும் குடியேற்றினார். அரச குடும்பத்தினர் தங்குவதற்கு அழகிய கடற்கரை அரண்மனையைக் கட்டி வைத்தார். அத்துறைமுகத்தில் சிற்ப வேலை தொடங்குவதற்குக் காரணமாயிருந்த தமது செல்வப் புதல்வரின் பட்டப் பெயரையும் அப்புதிய பட்டினத்துக்கு அளித்தார். முதன்முதலில் அத்துறைமுகத்தில் சிற்ப வேலைகள் தொடங்கவேண்டும் என்று தந்தையும் குமாரரும் சேர்ந்து எந்த இடத்தில் தீர்மானித்தார்களோ அதே இடத்தில், சென்ற அத்தியாயங்களில் கூறிய சம்பவங்கள் நடந்த தினத்துக்கு மறுநாள் பிற்பகலில் சக்கரவர்த்தியும் மாமல்லரும் நின்று கொண்டிருந்தார்கள்.
 

Meena

Saha Moderator
Staff
Messages
1,082
Reaction score
91
Points
48
இருபத்தாறாம் அத்தியாயம்

கற்கோயில்கள்

கடல்மல்லைத் தீவின் தென்பகுதியில் விஸ்தாரமான வெட்ட வௌிப் பிரதேசத்தில் வரிசையாக ஐந்து சிறு குன்றுகள் நின்றன. அவற்றில் மூன்று குன்றுகளில் நூற்றுக்கணக்கான சிற்பிகள் வேலை செய்து கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு குன்றையும் குடைந்து கோயில் வடிவமாக அமைத்துக் கொண்டிருந்தார்கள். ஒரு கோயிலில் முன் மண்டபத்தைத் தூண்கள் வேலையாகிக் கொண்டிருந்தன. இன்னொரு கோயிலில் மேல் விமான வேலை நடந்து கொண்டிருந்தது. மூன்றாவது குன்றை அப்போதுதான் குடைய ஆரம்பித்திருந்தார்கள். சிற்பிகளும் பணியாட்களும் தங்குவதற்கான சிறு கொட்டகைகள் நெடுகிலும் காணப்பட்டன.

ஆயனரின் அரணிய வீட்டைச் சுற்றி நாம் பார்த்தது போன்ற நெடிதுயர்ந்த மரங்களோ, அடர்ந்த செடி கொடிகளோ அந்தப் பிரதேசத்தில் காணப்படவில்லை. வடக்கே வெகுதூரம் மணற்பாங்காயிருந்தது. அதற்கப்பால் கடல் அலைகள் வெண்ணுரையுடன் அவ்வப்போது மேலெழும் காட்சி தோன்றியது. தெற்கிலும் மேற்கிலும் சிறுசிறு பாறைகளும் அவற்றை விடக் குட்டையான புதர்களும் வெகு தூரத்துக்குக் காணப்பட்டன. ஆனால், வடக்கேயும் வடமேற்கேயும் பார்த்தால் முற்றும் மாறான காட்சி தென்பட்டது. வானளாவிய பெரிய கட்டிடங்களும் அவற்றின் இடையிடையே நெடிய தென்னை மரங்களும் காட்சியளித்தன. இன்னும் அப்பால் நூற்றுக்கணக்கான கப்பல்களின் பாய்மரத்து உச்சிகளிலே வரிசை வரிசையாக ரிஷபக் கொடிகள் காற்றிலே அசைந்தாடிக் கொண்டிருந்தன.

சிற்ப வேலை நடந்து கொண்டிருந்த குன்றுகளுக்கு மத்தியில் ஒரு கல்யானை கம்பீரமாக நின்றது. அதன் பின்னால் இன்னும் கம்பீரமாக அலங்கரிக்கப்பட்ட பல்லவ சாம்ராஜ்யத்தின் பட்டத்து யானை நின்றது. யானை மீது வந்த சக்கரவர்த்தியும் அவருடைய குமாரரும் கீழே இறங்கிக் கல்யானையின் அருகில் நின்றார்கள். அவர்கள் மீது வெயில்படாமல் ஒரு விசாலமான வெண்குடையைப் பணியாட்கள் பிடித்துக் கொண்டிருந்தார்கள்.

இதே இடத்தில் ஏழு ஆண்டுகளுக்கு முன்னால் மகேந்திர சக்கரவர்த்தியும் அவருடைய குமாரரும் வந்து இதே விதமாக நின்றதுண்டு. ஆனால், அங்கு நின்ற குன்றுகளும் பாறைகளும் அப்போது மொட்டைக் குன்றுகளாகவும், மொட்டைப் பாறைகளாகவும் இருந்தன. "அப்பா! அந்தப் பாறையின் நிழலைப் பாருங்கள்! அது யானையைப் போல் இல்லையா?" என்றான் பல்லவ குலந்தழைக்க வந்த நரசிம்மவர்மன். அவன் சுட்டிக் காட்டிய நிழலைச் சக்கரவர்த்தி பார்த்தார். "ஆஹா!" என்று அவர் வாயிலிருந்து புறப்பட்ட வியப்பொலியில் விவரிக்க முடியாத பல உணர்ச்சிகள் தொனித்தன.

சற்றுநேரம் மகேந்திரர் சிந்தனையில் ஆழ்ந்து வௌி உலகப் பிரக்ஞையே இல்லாதவராய் நின்றார். பிறகு நரசிம்மனைத் தழுவிக் கொண்டு, "குழந்தாய்! எப்பேர்ப்பட்ட அதிசயமான உண்மையை நீ கண்டுபிடித்துக் கூறினாய்! நீ கூறிய வார்த்தையின் மகிமை முழுவதும் உனக்கே தெரிந்திராது!" என்றார். பன்னிரண்டு பிராயத்துச் சிறுவனான நரசிம்மன் மேலும் உற்சாகத்துடன், "அப்பா! அதோ, அந்தக் குன்றின் நிழலைப் பாருங்கள்! கோயில் மாதிரி இல்லையா?" என்றான்.

"ஆமாம், நரசிம்மா! ஆமாம்! அந்தக் குன்றின் நிழல் கோயில் மாதிரிதான் இருக்கிறது. அதை கோயிலாகவே செய்து விடுவோம். இந்த ஐந்து குன்றுகளையும் ஐந்து கோயில்களாக்குவோம். இன்னும் இங்குள்ள சிறு பாறைகளை யானையாகவும் சிங்கமாகவும் நந்தியாகவும் ஆக்குவோம். இந்தத் துறைமுகத்தைச் சொப்பன லோகமாக்குவோம். ஆயிரம் ஆயிரம் வருஷங்களுக்குப் பிறகு இந்தத் துறைமுகத்துக்கு வருகிறவர்கள் எல்லாரும் பார்த்துப் பிரமிக்கும்படியாகச் செய்வோம்!" என்றார்.

சீக்கிரத்திலேயே அந்தப் பிரதேசத்துக்குச் சிற்பிகள் பலர் சிற்றுளிகளுடன் வந்து சேர்ந்தார்கள். குன்றுகளிலும் பாறைகளிலும் வேலை செய்யத் தொடங்கினார்கள். நேற்று வரை அமைதி குடிகொண்டிருந்த இடத்தில் நூற்றுக்கணக்கான சிற்றுளிகளின் சப்தம் 'கல்கல்' என்று கேட்க ஆரம்பித்தது. புதர்களில் வாழ்ந்திருந்த சிறு முயல்கள் திடீரென்று எழுந்த 'கல்கல்' சப்தத்தைக் கேட்டு வௌியே வந்தன. காதுகளைத் தூக்கிக் கொண்டு ஒரு நிமிஷம் வியப்புடன் கவனித்தன. பின்னர் அந்த இடத்திலிருந்து ஓட்டம் பிடித்தன.

அன்று தொடங்கிய சிற்பப்பணி இன்றைக்கும் அங்கே தொடர்ந்து நடந்துகொண்டிருந்தது. சக்கரவர்த்தியும் மாமல்லரும் அன்றைக்கு நின்ற அதே இடத்தில் இப்போது யானையாகவும் சிங்கமாகவும் ரிஷபமாகவும் உருவெடுத்த பாறைகளுக்கு அருகில் நின்றுகொண்டிருந்தார்கள். "நரசிம்மா! இந்த யுத்தம் இப்போது வந்ததில் எனக்குப் பலவகையில் சந்தோஷந்தான். ஆனால், இந்தக் கற்கோயில்களின் வேலை ஒருவேளை தடைப்பட்டுவிடுமோ, என் காலத்தில் இந்தத் திருப்பணி பூர்த்தியாகாமற் போகுமோ என்று மட்டும் கவலையாக இருக்கிறது. வடக்கே கன்யாகுப்ஜத்தில் ஹர்ஷவர்த்தனர் வருஷந்தோறும் நடத்தும் உற்சவத்தைப் பற்றித் தெரியுமல்லவா நரசிம்மா?" "தெரியும் அப்பா! சிவபெருமானுக்கும், சூரியநாராயண மூர்த்திக்கும், புத்தர் பெருமானுக்கும், அவர் மூன்று கோயில்கள் எடுத்திருக்கிறார். அந்த மூன்று கோயில்களிலும் வருஷந்தோறும் உற்சவம் நடத்துகிறார்; மூன்று மதத்தைச் சேர்ந்த பிரஜைகளும் வந்து ஒரே சமயத்தில் உற்சவம் கொண்டாடுகிறார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

"மாமல்லா! ஹர்ஷவர்த்தனர் இந்தப் பல்லவ சாம்ராஜ்யத்தைக் காட்டிலும் எவ்வளவோ பெரிய சாம்ராஜ்யத்தை ஆளுகிறார். அவருடைய செல்வமோ நம்முடையதைவிட பன்மடங்கு அதிகமானது. அவருடைய புகழ் இன்றைக்கு உலகமெல்லாம் பரவியிருக்கிறது. ஆனால், என்னுடைய உத்தேசம் மட்டும் நிறைவேறுமானால், ஹர்ஷர் மட்டுமல்ல; இந்தப் பாரதவர்ஷத்தில் இதுவரையில் எந்த அரசரும் சக்கரவர்த்தியும் அடையாத கீர்த்தியைப் பல்லவ குலம் அடையும். ஹர்ஷர் நிர்மாணித்திருக்கும் கோயில்கள் செங்கல்லினாலும் மரத்தினாலும் ஆனவை. நூறு வருஷத்தில் அவை சிதைந்து மறைந்துபோய்விடும். ஆனால் இந்தக் கற்கோயில்களுக்கு அழிவென்பதே கிடையாதல்லவா...?"

"இக்கோயில்களில் எந்த தெய்வங்களை எழுந்தருளச் செய்யப்போகிறீர்கள் அப்பா? சிவபெருமான், பார்வதிதேவி, விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேசுவரர் ஆகிய பஞ்சமூர்த்திகளுக்குத்தான் இந்த ஐந்து கோயில்களும் அல்லவா?" "இல்லை நரசிம்மா! ஹர்ஷவர்த்தனரைக் காட்டிலும் அதிகமாக ஒரு காரியம் செய்யப்போகிறேன். இந்தத் தமிழகத்தில் பரவியுள்ள நாலு பெரிய சமயங்களுக்கும் நாலு கோயில்களை அர்ப்பணம் செய்யப்போகிறேன். ஒரு கோயிலில் சிவபெருமானும் பார்வதி தேவியும் வீற்றிருப்பார்கள். இரண்டாவது கோயிலில் திருமாலும் திருமகளும் குடிகொள்ளுவார்கள். மூன்றாவது கோயிலைப் புத்தர் பெருமானின் பெரிய விக்கிரகம் அலங்கரிக்கும். நாலாவது கோயிலில் சமண சமயத்தை ஸ்தாபித்த வர்த்தமான மகாவீரர் எழுந்தருளுவார்...!" "ஹா!" என்று பெருவியப்புடனும் பெருமிதத்துடனும் மாமல்லர் கூறினார்.

"ஆம்; நரசிம்மா! உண்மையில் நான் சமண சமயத்திலிருந்து விலகிச் சைவத்தைத் தழுவியதே நமது ராஜ்யத்தில் இத்தகைய சமய சமரசத்தை, நிலைநாட்டுவதற்காகத்தான். சைவ சமயமானது மற்றச் சமயங்களையும் சம உணர்வுடன் கருதிப் போற்ற இடந்தருகிறது. மற்றச் சமயங்களோ அவ்விதம் இடம் கொடுப்பதில்லை. இதை முன்னிட்டே சைவத்தை மேற்கொண்டேன். நமது சாம்ராஜ்யத்திலுள்ள நாலு பெரிய சமயங்களுக்கும் சமமான கௌரவம் கொடுத்துப் போற்ற எண்ணினேன். இதையெல்லாம், வௌியிடுவதற்கு என்மேல் புத்தர்களும் சமணர்களும் கொண்டுள்ள கோபம் தணியும் காலத்தை எதிர்நோக்கிக் கொண்டிருந்தேன். அதற்குள்ளே சமண முனிவர்கள் அவசரப்பட்டு எல்லாக் காரியத்தையும் கெடுத்து விட்டார்கள்.." "சமண முனிவர்கள் கெடுத்துவிட்டார்களா!"

"ஆமாம் அவர்களால் வந்ததுதான் இந்த யுத்தம். சமண காஞ்சியிலிருந்து நாற்புறங்களுக்கும் புறப்பட்டுச் சென்ற சமண முனிவர்கள் சும்மா இருந்து விடவில்லை. நம் நெடுநாளைய சிநேகிதர்களைக்கூட நம் விரோதிகளாக்கி விட்டார்கள். இந்தக் கங்கை பாடித் துர்விநீதனுடைய தந்தைக்கு முடிசூட்டியது யார் தெரியுமா? உன் பாட்டனார் சிம்மவிஷ்ணு மகாராஜாதான். அந்தத் துர்விநீதன் இப்போது தமது பரம்பரை விரோதியான சளுக்க மன்னனுடன் சேர்ந்து கொண்டிருக்கிறான். புலிகேசியின் படைவீட்டில் ஜைன மகாகவி ரவிகீர்த்தியும், துர்விநீதனுடைய குரு பூஜ்யபாதரும் இருக்கிறார்களாம், சைனியத்துடன் சேர்ந்து அவர்களும் வந்து கொண்டிருக்கிறார்களாம். உலகப் பற்றற்ற முனிவர்கள் அதிலும் கொல்லாமை விரதங்கொண்ட சமண குருக்கள், போர்க்களத்துக்கு வருவது என்றால், ஆகா! அவர்களுக்கு என்மேல் எவ்வளவு துவேஷம் ஏற்பட்டிருக்க வேண்டும்?"

"அதைப்பற்றி என்ன கவலை! அப்பா? சமண முனிவர்கள், புத்த பிக்ஷுக்கள் எல்லோரும் நம் விரோதிகளுடன் சேரட்டும். திரிநேத்திரதாரியான சிவபெருமான் அருளாலும்; சக்கராயுதத்தை ஏந்திய திருமாலின் கிருபையினாலும் நம் வெற்றி கொள்ளுவோம்." "வெற்றி தோல்வியைப்பற்றி நான் அவ்வளவாகக் கவலைப்படவில்லை. என்னுடைய நோக்கத்துக்கு இடையூறு நேர்ந்துவிட்டதே என்றுதான் வருத்தப்படுகிறேன்" என்று சக்கரவர்த்தி கூறியபோது, அவருடைய குரலில் துயரம் தொனித்தது.

"மாமல்லர் சற்று மௌனமாயிருந்துவிட்டு, "ஐந்தாவது கோயில் எந்தத் தெய்வத்துக்கு அர்ப்பணம் செய்ய எண்ணியிருந்தீர்கள், அப்பா?" என்று கேட்டார். "மேலை நாடுகளில் சிலகாலமாகப் புதிதாக ஒரு மதம் ஸ்தாபனமாகியிருக்கிறதாம். அதை ஸ்தாபித்த அவதார புருஷரின் பெயர் ஏசுகிறிஸ்து என்று சொல்கிறார்கள். அந்தப் புதிய மதத்தைப்பற்றிய விவரங்கள் இன்னும் எனக்குத் தெரியவில்லை. தெரிந்தவுடனே அந்தப் புதிய மதத்தின் தெய்வம் எதுவோ அதை அந்த ஐந்தாவது கோயிலில் எழுந்தருளச் செய்ய எண்ணியிருந்தேன். ஆனால், அதெல்லாம் பகற்கனவாகப் போய்விடும் போலிருக்கிறதே?" மகேந்திரரின் யோசனைகளைக் கேட்டுப் பிரமித்த மாமல்லர், "ஏன் பகற்கனவாகப் போகவேண்டும்? யுத்தத்தினால் இந்தச் சிற்பப்பணி ஏன் தடைபடவேண்டும்?" என்று கேட்டார்.

"தடைபடாமலிருக்க வேண்டுமென்பதுதான் என் ஆசை. யுத்தம் முடிவதற்குள்ளே இந்த ஐந்து கோயில்களும் பூர்த்தியாக வேண்டுமென்று விரும்புகிறேன். அதற்காகவே ஆயனரை இன்றைக்கு இங்கே வரச் சொல்லியிருக்கிறேன். அவர் நடுக்காட்டில் போய் உட்கார்ந்திருப்பதால் வேலை நிதானமாக நடக்கிறது. அவரை இங்கேயே தங்கி வேலையைத் துரிதமாக முடிக்கும்படிச் சொல்லப்போகிறேன்...அதோ, ஆயனரும் வந்துவிட்டார்!".. நரசிம்மர் ஆவலுடன் திரும்பிப் பார்த்தார். அவருடைய ஆவல் பூர்த்தியாயிற்று. சற்றுத்தூரத்தில் வந்து கொண்டிருந்த சிவிகையில் ஒரு பக்கத்தில் ஆயனர் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார். மற்றொரு பக்கம், பட்டப் பகலில் பூரணச் சந்திரன் பிரகாசிப்பதுபோல் ஒரு காட்சி தென்பட்டது. அந்தப் பூரண சந்திரன் சிவகாமியின் வதன சந்திரன்தான் என்று சொல்லவும் வேண்டுமோ?
 

Meena

Saha Moderator
Staff
Messages
1,082
Reaction score
91
Points
48
இருபத்தேழாம் அத்தியாயம்

ஒரு குதிரை

பல்லவ சக்கரவர்த்தியையும் அவருடைய திருக்குமாரரையும் பார்த்தவுடனே, சற்றுத் தூரத்திலேயே சிவிகை தரையில் இறக்கப்பட்டது. ஆயனரும் சிவகாமியும் சிவிகையிலிருந்து இறங்கிப் பயபக்தியுடன் நடந்து வந்தார்கள். "ஆயனரே! வாருங்கள்! சிவகாமியையும் அழைத்து வந்தீர்களா? மிகவும் நல்லது. பிரயாணம் சௌக்கியமாயிருந்ததா?" என்று சக்கரவர்த்தி கேட்டார். "பல்லவேந்திரா! தங்களுடைய குடை நிழலின் கீழ்ப் பிரயாணம் சௌக்கியமாயிருப்பதற்குக் கேட்பானேன்?" என்று கூறிய வண்ணம் ஆயனார் அருகில் வந்து வணங்கினார்.

அவருக்கு பின்னால் அடக்கத்துடன் வந்த சிவகாமியும் சக்கரவர்த்தியை நமஸ்கரித்தாள். அவளுடைய உள்ளத்தில் சக்கரவர்த்தியிடம் பக்தியும் மரியாதையும் நிறைந்திருந்தன. அதே சமயத்தில் இன்னதென்று தெரியாத ஒருவகைப் பயமும் குடிகொண்டிருந்தது. "சிவகாமி! உனக்கு மங்களம் உண்டாகட்டும்! உன்னிடம் அடைக்கலம் புகுந்திருக்கும் பரத சாஸ்திரக் கலை மேலும் மேலும் வளர்ந்து பூரணம் அடையட்டும்!" என்று மகேந்திர பல்லவர் ஆசி கூறிவிட்டு, ஆயனரைப் பார்த்துச் சொல்லத் தொடங்கினார். "ஆயனரே! இன்றைக்கு உங்கள் பிரயாணம் சௌகரியமாயிருந்தது என்று சொன்னீரல்லவா? இனி நெடுகிலும் அப்படியே இருக்கும் என்று சொல்வதற்கில்லை. இந்த யுத்தம் முடியும் வரையில் சாலையிலே சைன்யங்களின் நடமாட்டம் அதிகமாயிருக்கும். ஆகையால் இன்னும் கொஞ்சகாலத்துக்கு நீர் இங்கேயே வந்து தங்கியிருப்பது நல்லது.."

ஆயனருக்கு தூக்கிவாரிப் போட்டது அரண்ய வீட்டில் அரை குறையாகச் செய்யப்பட்டுக்கிடந்த நடன சிற்ப உருவங்கள் எல்லாம் அவருடைய கண் முன்னால் நின்றன. "பல்லவேந்திரா!.." என்று ஏதோ சொல்லத் தொடங்கினார். மகேந்திரர் தமது குரலைச் சிறிது கடுமைப் படுத்திக் கொண்டு, "மறுவார்த்தை வேண்டாம் நீரும் உம் புதல்வியும் நாளை முதல் இங்கே வந்துவிட வேண்டியது இது நமது ஆக்ஞை!" என்றார். ஆயனர் நடுங்கியவராய், "பல்லவேந்திரா! தங்கள் ஆக்ஞைக்கு மறு வார்த்தையும் உண்டா? அவ்விதமே செய்கிறேன்" என்றார்.

"ஆயனரே! இந்தக் கோயில்களை எவ்வளவு சீக்கிரமாக வேலை செய்யலாமோ அவ்வளவு சீக்கிரமாக முடிக்க வேண்டும். கோயில்கள் பூர்த்தியாகும் வரையில் நீர் வேறு எந்த வேலையையும் கவனிக்க வேண்டியதில்லை. இந்த வேலைக்காக நீர் எப்போது எவ்வளவு திரவியம் கேட்டாலும் கொடுக்கும்படியாகத் தனாதிகாரிக்குக் கட்டளையிட்டிருக்கிறேன். இன்னும் உமக்கு வேண்டிய ஆட்களையும் வேறு வசதிகளையும் உடனுக்குடன் அனுப்பும்படி ஏற்பாடு செய்திருக்கிறேன். எந்தக் காரணத்தினாலாவது காரியம் குந்தகப்படுவதாயிருந்தால் நீர் குமார சக்கரவர்த்திக்குச் செய்தி அனுப்பி வேண்டியதைத் தெரியப்படுத்தலாம்" என்று சக்கரவர்த்தி கூறியதும், அருகில் நின்ற மாமல்லரை ஆயனர் நோக்கினார்.

"ஆம், ஆயனரே! இனிச் சிலகாலத்துக்கு உமக்கு வேண்டியதையெல்லாம் மாமல்லரிடந்தான் தெரியப்படுத்த வேண்டும். நாளைய தினம் பல்லவ சைனியத்துடன் நான் போர்க்களத்துக்குப் புறப்பட்டு செல்கிறேன். நான் திரும்பி வரும்வரையில் பல்லவ சாம்ராஜ்யத்தை நிர்வகிக்கும் சகல பொறுப்புக்களையும் மந்திரி மண்டலத்தார் மாமல்லருக்கு அளித்திருக்கிறார்கள். நாளை முதல் மாமல்லர்தான் சக்கரவர்த்தி" என்றார் மகேந்திர பல்லவர்.

சக்கரவர்த்தி ஆயனரிடம் சற்றுக் கடுமையான குரலில் கூறி வந்த மொழிகளைக் கேட்டுக் கவலையும் பயமும் கொண்டிருந்த சிவகாமி அவருடைய கடைசி வார்த்தைகளைக் கேட்டதும் அளவில்லாத குதூகலம் அடைந்தாள். அவளுடைய மனத்தில் பலவித இன்பகரமான எண்ணங்கள் பொங்கித் ததும்பின. அவற்றுள் முக்கியமானது மாமல்லர் இப்போது போர்க்களத்துக்குப் போகவில்லை என்பதுதான். அதனோடு, சக்கரவர்த்தியும் போய் விடுகிறார். மாமல்லர் சக்கரவர்த்திக்குரிய சர்வாதிகாரங்களுடன் இருக்கப் போகிறார். இனி அவரும் தானும் அடிக்கடி சந்திப்பதற்குத் தடையொன்றும் இராது! தாமரைக் குளக்கரையில் மாமல்லரைச் சந்தித்து அளவளாவுவதைப் பற்றிய பகற் கனவுகள் சிவகாமியின் உள்ளத்தில் எழுந்தன, முகத்தில் அவளை அறியாமல் முறுவல் தோன்றியது. ஆசை ததும்பிய கண்களின் ஓரத்தினால் மாமல்லரை அவள் பார்த்தாள். ஆனால், ஐயோ! இதென்ன? அவருடைய கருணை ததும்பும் முகத்தில் இப்போது ஏன் இந்தக் கடுகடுப்பு? தன்னை ஏன் அவர் திரும்பிப் பார்க்கவில்லை? ஒருவேளை தான் அவ்விடம் வந்ததே அவருக்குப் பிடிக்கவில்லையோ?

பின்னரும் இரண்டு மூன்று தடவை சிவகாமி மாமல்லரின் முகத்தை ஆவலுடன் நோக்கினாள். அவர் அவள் பக்கம் பார்க்கவே இல்லை. நேற்றுத் தாமரைக் குளத்தில் அகன்ற கண்களால் விழுங்கி விடுபவர் போல் தன்னைப் பார்த்தவர் பின்னர் வீட்டிலே சக்கரவர்த்தியும் ஆயனரும் பேசிக் கொண்டிருந்தபோது அடிக்கடி கண்களினாலே தன்னுடன் இரகசியம் பேசியவர், இப்போது தன்னைப் பார்க்கவும் விரும்பாதவர்போல் இருப்பதன் காரணம் என்ன? சிவகாமியின் கண்களில் கண்ணீர் ததும்பும் போலிருந்தது. அவள் விரைவாக அங்கிருந்து அப்பால் சென்று ஒரு பாறையின் பின்னால் ஒதுங்கி நின்றாள்.

ஆனால், நரசிம்மருடைய மனநிலை உண்மையில் எவ்வாறு இருந்தது? ஆம்; அவர் கோபம் கொண்டுதானிருந்தார், ஆனால் யார்மீது என்பதை நாம் அறியோம். அது நரசிம்மருக்கே தெரிந்திராதபோது நமக்கு எப்படித் தெரிந்திருக்க முடியும்? மாமல்லருடைய உள்ளத்திலே சிவகாமியிடம் பிரேமை பொங்கிக் கொண்டிருந்தது. சிவிகையிலே அவளுடைய திவ்விய வதனத்தைப் பார்த்ததும் அவருக்கு எல்லையில்லாத குதூகலம் ஏற்பட்டது. உடனே ஓடிச்சென்று அவளை வரவேற்க வேண்டுமென்றும், கையைப் பிடித்துச் சிவிகையிலிருந்து இறக்கி விடவேண்டுமென்றும் ஆவல் பொங்கிற்று. அதெல்லாம் முடியாமற்போகவே அவரது ஆசை கோபமாக மாறியது. அந்தக் கோபமானது எல்லாவற்றையும் எல்லாரையும் தழுவி நின்றது. பெரிய சாம்ராஜ்யத்துக்கு உரிமையுடன் பிறந்த தமது பிறப்பின் மேலேயே கோபங்கொண்டார். "எதற்காகச் சக்கரவர்த்தியின் அரண்மனையிலே நாம் பிறந்திருக்கவேண்டும்? ஏழைச் சிற்பியின் மகனாக ஏன் பிறந்திருக்கக் கூடாது?" என்று எண்ணினார்.

தாம் போர்க்களத்துக்குப் போகப்போவதில்லை என்று தந்தை சொன்னதும் சிவகாமியின் முகத்தில் பூத்த புன்முறுவல் அவருடைய கோபத்துக்குத் தூபம் போட்டது போலாயிற்று. போர்க்களத்துக்குப் போகாமல் அரண்மனையில் உட்கார்ந்திருப்பது அவமானம் என்பதை அவள் உணரவில்லை! போர்க்களத்துக்குப் போகாவிட்டாலும் அவளை அடிக்கடி பார்க்கவாவது முடியப் போகிறதா? அதுவும் இல்லை. காஞ்சிக் கோட்டையை விட்டு வௌிக் கிளம்பக் கூடாது என்று தந்தை வாக்குறுதி வாங்கிக் கொண்டிருக்கிறார். இதையெல்லாம் அறியாமல் சிவகாமி புன்னகை பூத்து மகிழ்கிறாள்! இம்மாதிரி எண்ணங்களினால் நரசிம்மருடைய கோபம் மேலும் மேலும் வளர்ந்து கொண்டு வந்தது.

மனோலோகத்தில் இந்த நாடகம் நடந்துகொண்டிருக்கையில், சக்கரவர்த்தியும் ஆயனரும் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். பேசும்போதே தம்முடைய முகத்தையும் மாமல்லருடைய முகத்தையும் ஆயனர் மாறி மாறி ஏறிட்டுப் பார்ப்பதைக் கவனித்த சக்கரவர்த்தி, "ஆயனரே! ஏதாவது கோரிக்கை உண்டா? என்னிடமோ மாமல்லரிடமோ தெரியப்படுத்த வேண்டியது ஏதாவது இருக்கிறதா?" என்று வினவினார். ஆயனர் தயங்கித் தடுமாறி, "ஆம், பல்லவேந்திரா! எனக்கு ஒரு குதிரை வேண்டும்!" என்றார். "என்ன கேட்டீர்?" "நல்ல குதிரை ஒன்று வேண்டும்!"

"குதிரையா? குதிரை வேண்டும் என்றா கேட்டீர்? ஆயனரே! அதைக்காட்டிலும் என்னுடைய உயிரை நீர் கேட்டிருக்கலாம். இந்தப் பல்லவ சாம்ராஜ்யத்தையே கேட்டிருக்கலாம்! நன்றாய்க் குதிரை கேட்டீர் ஆயனரே! தென்னாடு என்றும் கண்டிராத மகா பெரிய யுத்தம் வந்திருக்கிறது என்று உமக்குத் தெரியாதா! காஞ்சியிலிருந்து தினந்தோறும் எத்தனை தூதர்கள் நாலா பக்கங்களுக்கும் போக வேண்டியிருக்கும் என்று தெரியாதா? குதிரையைத் தவிர வேறு ஏதாவது கேளும்!" என்று சக்கரவர்த்தி சரமாரியாகப் பொழிந்து நிறுத்தினார்.

மகேந்திர பல்லவர் இவ்வளவு படபடப்புடன் பேசிக் கேட்டு ஆயனர் அறியாதவராதலால் மிரண்டு ஸ்தம்பித்து நின்றார். "ஓஹோ! உமக்கு வேறு ஒன்றும் வேண்டாம்; குதிரை தான் வேண்டும் போலிருக்கிறது. பல்லவ சாம்ராஜ்யத்தின் மகா சிற்பி ஒரு குதிரையை யாசித்தார், அதை மகேந்திர பல்லவன் கொடுக்கவில்லை என்ற பழிச்சொல் எனக்கு வேண்டாம். குதிரை தருகிறேன்; ஆனால், எதற்காக, என்றுமட்டும் சொல்லும். நீரும் சிவகாமியும் பிரயாணம் செய்வதற்கு வேண்டிய சிவிகைகளும் சிவிகை தூக்கும் ஆட்களும் இருக்கிறார்கள் அல்லவா? பின் குதிரை எதற்கு" என்று சக்கரவர்த்தி கேட்டு நிறுத்தினார்.

ஆயனர் சற்றுத் தைரியமடைந்து, "பல்லவேந்திரா! மிகவும் முக்கியமான ஒரு காரியத்தை முன்னிட்டுத்தான் கேட்டேன். ஆனால், அதனாலே யுத்த காரியங்கள் தடைப்படுவதாயிருந்தால்.." என்று நிறுத்தினார். "அந்த முக்கியமான காரியம் என்ன? எனக்குத் தெரியலாமல்லவா? அல்லது ஏதேனும் இரகசியமா, ஆயனரே?" "பிரபு! இரகசியந்தான்! ஆனால், தாங்கள் அறியக்கூடாத இரகசியம் அல்ல. அஜந்தா வர்ணச் சித்திரங்களின் இரகசியத்தை அறிய வேண்டுமென்று எத்தனையோ தடவை நாம் பேசிக் கொண்டதில்லையா? அந்த வர்ண இரகசியத்தை அறிந்தவர் ஒருவர் நாகார்ஜுன பர்வதத்தில் உள்ள புத்த சங்கிராமத்தில் தற்சமயம் இருக்கிறார்..."

"இதை முன்னமே ஏன் சொல்லவில்லை, ஆயனரே? அவ்வளவு முக்கியமான காரியமென்று தெரிந்திருந்தால், ஆட்சேபமே சொல்லியிருக்க மாட்டேனே? அஜந்தாவின் அற்புதச் சித்திரங்களை நேரில் போய்ப் பார்த்து வரவேண்டுமென்ற ஆசையினால் வாதாபி புலிகேசியுடன் சிநேகம் செய்து கொள்ள வேண்டுமென்றுகூட ஒரு காலத்தில் எண்ணியிருந்தேன். அதெல்லாம் பகற்கனவாய்ப் போய்விட்டது. போகட்டும், குதிரை அவசியம் தருகிறேன்; ஆயனரே! குதிரை மட்டும் போதுமா, இன்னும் ஏதாவது வேண்டுமா?"

"பல்லவேந்திரரின் ரிஷப இலச்சினை பதித்த பிரயாணச் சீட்டும் வேண்டும், இது யுத்த காலமல்லவா?" "அதுவும் தருகிறேன் இவ்வளவு முக்கியமான காரியத்துக்கு யாரை அனுப்புவதாக உத்தேசம், ஆயனரே, ஒருவேளை நீரே போவதாக உத்தேசமா?" "எனக்குக் குதிரை ஏறவே தெரியாது, பிரபு! என்னுடைய சீடன் ஒருவனை அனுப்புகிறேன்." "பகைவர் படைகள் வரும் வழியிலே அவன் போக வேண்டியிருக்குமே? கையில் நல்ல ஆயுதம் எடுத்துப் போக வேண்டும். இதோ இந்த வேலை அவனிடம் கொடுத்து அனுப்புங்கள்!" என்று கூறிச் சக்கரவத்தி, நரசிம்மரிடமிருந்து தாம் வாங்கி வைத்திருந்த வேலை நீட்டினார்.

ஆயனர் சற்றுத் தயங்கி நிற்கவே, "ஏன் தயக்கம்? இந்த வேல் நீர் அனுப்பப் போகும் வாலிபனுடைய வேல்தான்! மதயானையின் கோபத்திலிருந்து உம்மையும் சிவகாமியையும் பாதுகாத்த ஆயுதந்தான்; பரஞ்சோதி இதை வாங்கிக்கொள்ள ஆட்சேபிக்க மாட்டான்" என்றார் சக்கரவர்த்தி. "இதைக் கேட்ட ஆயனர் மட்டுமல்ல நரசிம்மரும் சிவகாமியும்கூட ஆச்சரியக்கடலில் மூழ்கினார்கள். ஆயனர் தட்டுத் தடுமாறி, "பல்லவேந்திரா! தங்களுக்கு எப்படித் தெரிந்தது?" என்றார்.

"புத்த பகவான் என் கனவிலே வந்து சொன்னார்! அன்று உம் வீட்டில் தம்முடைய சிலைக்குப் பின்னால் ஒளிந்திருந்தவர்களைப் பற்றியும் புத்தர் எனக்குக் கூறினார். ஆயனரே! பல்லவ சக்கரவர்த்தியின் கண்களுக்கும் காதுகளுக்கும் எட்டாமல் பல்லவ சாம்ராஜ்யத்தில் எதுவும் நடக்க முடியாது என்று உமக்குத் தெரியாதா?" உடனே ஆயனர், கைகூப்பி வணங்கி, "பல்லவேந்திரா! நான் ஏதேனும் தவறு செய்திருந்தால் மன்னிக்க வேண்டும். சித்திரக் கலையில் உள்ள ஆசையினால் இந்தக் காரியத்தில் இறங்கினேன்" என்று தொண்டையடைக்கக் கூறினார்.

"சிற்பியாரே! அஜந்தா இரகசியத்தை அறிவதில் உமக்கு எவ்வளவு ஆசையோ அவ்வளவு எனக்கும் உண்டு. திவ்வியமாய்ப் பரஞ்சோதியை அனுப்பி வையும். ஆனால், இதெல்லாம் எனக்குத் தெரிந்ததாக அந்தப் புத்த பிக்ஷுவிடம் மட்டும் சொல்ல வேண்டாம். ஏனோ தெரியவில்லை; பௌத்தர்களுக்கு என் பேரில் இல்லாத சந்தேகங்கள் எல்லாம் தோன்றுகின்றன. புத்த பகவானிடம் எனக்குள்ள பக்தியை அவர்கள் அறியவில்லை. ஆயனரே! குன்றைக் குடைந்து அமைக்கும் இந்த ஐந்து கோயில்களில் ஒன்றில் புத்த பகவானுடைய பிரம்மாண்ட சிலையொன்று செய்து வைக்கப் போகிறேன். அதைப்பற்றித்தான் நீர் வரும் போது மாமல்லரிடம் சொல்லிக் கொண்டிருந்தேன்!" என்றார் சக்கரவர்த்தி.

இவ்விதம் இங்கு ரஸமான சம்பாஷணை நடந்து கொண்டிருந்த போது, பாறை ஓரத்தில் சற்று மறைவாக நின்று இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த சிவகாமியின் உள்ளத்தில் பலவிதமான எண்ணங்கள் அலையெறிந்து எழுந்தன. "இந்தச் சக்கரவர்த்திதான் எவ்வளவு சதுரராயிருக்கிறார்! புத்த பிக்ஷுவைப்பற்றி மாமல்லரிடம் நாம் எச்சரிக்கை செய்ய வேணடுமென்றிருக்க, இவருக்கு ஏற்கெனவே எல்லாம் தெரிந்திருக்கிறதே! இவரிடம் எதையும் மறைத்து வைக்க முடியாது போலிருக்கிறதே! ஒருவேளை நம்முடைய இரகசியத்தையும் இவர் அறிந்திருப்பாரோ? அதனால் தான் ஒருவேளை குமார சக்கரவர்த்தி நம்மிடம் இவ்வளவு பாராமுகமாக இருக்கிறாரோ? நாம் ஏதேனும் தவறு செய்து விட்டோமோ?.."

இவ்விதம் எண்ணாததெல்லாம் எண்ணி அவள் உள்ளம் ஏங்கிற்று. விரைவிலே குமார சக்கரவர்த்தியைத் தனிமையில் பார்த்து அவருடைய கோபத்துக்குக் காரணம் தெரிந்து கொண்டாலன்றி, அவளுக்கு மனச்சாந்தி ஏற்படாதென்று தோன்றியது. தற்செயலாகச் சிவகாமியின் பார்வை கீழே தரையில் கிடந்த ஒரு காவிக் கட்டியின் மேல் விழுந்தது. சட்டென்று ஒரு யோசனை தோன்றிற்று. அந்தக் காவிக் கட்டியைக் குனிந்து எடுத்துக் கொண்டு பாறையில் சித்திரம் வரையலானாள்.

குளத்தின் தண்ணீருக்கு அடையாளமாக அலையைப் போன்ற இரு கோடுகளை இழுத்தாள். அதன்மேல் ஒரு தாமரைப் பூவை வரைந்தாள். பக்கத்தில் இரண்டு தாமரை மொட்டுகளையும் போட்டாள். குளத்தின் கரையிலே ஒரு மான் குட்டியின் சித்திரத்தை எழுதினாள். எழுதும்போதே கடைக்கண்ணால் பார்த்து, நரசிம்மவர்மர் தன்னைக் கவனிப்பதைத் தெரிந்து கொண்டாள். சித்திரம் எழுதி முடித்ததும் சிவகாமியின் மனத்தில் அமைதி ஏற்பட்டது. அந்தச் சித்திரத்திலடங்கிய செய்தியை நரசிம்மவர்மர் கட்டாயம் தெரிந்து கொள்வார். மற்றவர்களுக்கோ அதில் அர்த்தம் ஒன்றும் இராது. ஏதோ கிறுக்கியிருக்கிறது என்றுதான் எண்ணிக்கொள்வார்கள்! குமார சக்கரவர்த்திக்குத் தன்னிடம் அன்பு உண்டென்பது உண்மையானால், இந்தச் சித்திரத்தைப் பார்த்துவிட்டு அவசியம் அவர் தாமரைக் குளத்துக்கு வந்து சேருவார்.

அன்று மாலை சக்கரவர்த்தியும் குமாரரும் குதிரைகளின் மேல் ஏறிக் காஞ்சிக்கு இராஜபாட்டை வழியாகக் கிளம்பினார்கள். அந்தப் பாதை மத்தியானம் அவர்கள் வந்திருந்த ஐந்து குன்றுகளின் ஓரமாகத்தான் சென்றது. அவ்விடத்திற்கு வந்ததும் நரசிம்மர் சற்றுப் பின் தங்கினார். சிவகாமி சித்திரம் எழுதிய பாறைக்கு அருகில் வந்ததும் குதிரையை நிறுத்திவிட்டுக் கீழே இறங்கினார். அங்கே எழுதியிருந்த சித்திரத்தைப் பார்த்ததும் அவருடைய முகம் அந்தத் தாமரையைப் போலவே மலர்ச்சி அடைந்தது. தரையில் கிடந்த அதே காவிக் கட்டியை அவரும் எடுத்து மானுக்கும் தாமரைக்கும் நடுவில் ஒரு வேலின் சித்திரத்தை எழுதினார்.
 

Meena

Saha Moderator
Staff
Messages
1,082
Reaction score
91
Points
48
இருபத்தெட்டாம் அத்தியாயம்

மலை வழியில்

சென்ற அத்தியாயத்தில் கூறிய சம்பவம் நிகழ்ந்து நாலு தினங்களுக்குப் பிறகு பரஞ்சோதி போர் வீரனைப் போல் உடை தரித்து, கையில் வேல் பிடித்து, அழகிய உயர்சாதிப் புரவியின் மேல் அமர்ந்து, மலைப் பாதையில் தன்னந்தனியாகப் போய்க் கொண்டிருந்தான். சூரியன் அஸ்தமிக்க இன்னும் இரண்டு நாழிகைப் பொழுதுதான் இருந்தது. எனினும் அந்த மலைப் பிரதேசத்து மாலை வெயில் அவனுடைய இடது கன்னத்தில் சுளீரென்று அடித்தது.

பகல் நேரம் எல்லாம் தகிக்கும் வெயிலில் பிரயாணம் செய்து பரஞ்சோதி களைத்துப் போயிருந்தான்; குதிரையும் களைப்படைந்திருந்தது. எனவே, குதிரையை மெதுவாகச் செலுத்திக் கொண்டு சென்றான். குதிரை மெல்ல மெல்ல அம்மலைப் பாதையில் ஏறி மேலே சென்று கொண்டிருக்கையில், பரஞ்சோதியின் உள்ளம் அடிக்கடி பின்னால் சென்று கொண்டிருந்தது. சென்ற ஒரு வார காலத்தில் அவன் அடைந்த அதிசயமான அனுபவங்கள் எல்லாம் திரும்பத் திரும்ப அவனுக்கு ஞாபகம் வந்துக் கொண்டிருந்தன. காஞ்சி நகரில் புத்த பிக்ஷுவுடன் பிரவேசித்த அன்றிரவு நடந்த சம்பவங்கள் நினைவு வந்தபோதெல்லாம் அவை உண்மையில் நிகழ்ந்தவைதான அல்லது கனவிலே நடந்த சம்பவங்களா என்று பரஞ்சோதி அதிசயித்தான். பன்னிரண்டு நாளைக்கு முன்னால் திருச்செங்காட்டங்குடியிலிருந்து கால்நடையாகக் கிளம்பிய பட்டிக்காடுச் சிறுவனா இன்று இந்த அழகான புரவியின் மேலே ஏறிச் செல்பவன் என்று கூட அவன் ஆச்சரியப்பட்டான்.

வெயிலின் வேகத்தினால் வியர்வையைத் துடைக்கவேண்டியிருந்தபோதெல்லாம் பரஞ்சோதிக்குத் தமிழகத்துச் சாலைகளின் அழகும் வசதிகளும் ஞாபகத்துக்கு வந்து கொண்டிருந்தன. சோழ நாட்டிலும் தொண்டை நாட்டிலும் சாலை ஓரங்களில் பெரிய விருட்சங்கள் அடர்த்தியாய் வளர்ந்து, குளிர்ந்த நிழல் தந்து கொண்டிருக்கும். சாலைகளின் இரு புறத்திலுமுள்ள வயல்களில் பசுமையான நெற்பயிற் இளந்தென்றலில் அசைந்தாடும். முதிர்ந்த பயிர்கள் கதிரின் பாரம் தாங்கமாட்டாமல் வயல்களில் சாய்ந்து கிடக்கும். ஆங்காங்கே பசுமையான தென்னந் தோப்புகளும் மாந்தோப்புகளும் கண் குளிரக் காட்சி தந்து கொண்டிருக்கும் வாழைத் தோட்டங்களையும் கரும்புத் தோட்டங்களையும் கண்ணால் பார்த்தாலே நாவறட்சி தீர்த்து தணியும்.

ஆம்; வழிப் பிரயாணத்தின் போது தாகம் எடுத்துத் தவிப்பதென்பது அங்கெல்லாம் கிடையவே கிடையாது. தாமரையும், செங்கழுநீரும் நீலோற்பலமும் பூத்த குளங்களுக்குக் கணக்கேயில்லை. ஆறுகளும் சிற்றாறுகளும் சின்னஞ்சிறு வாய்க்கால்களும் அடிக்கொன்றாக வந்து கொண்டிருக்கும். இருபுறமும் பசுமையான செடி கொடிகள் படர்ந்த சிறு வாய்க்கால்களில் தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தால் அது ஓர் அழகு. தண்ணீர் இன்றி வாய்க்கால் வறண்டிருந்தால் அது இன்னொரு வகை அழகு. வறண்ட வாய்க்கால்களின் சிறு மணலில் நடப்பதைப் போன்ற இன்பம் வேறென்ன உண்டு? அப்படி நடக்கும்போது இரு கரைகளிலும் ஆங்காங்கே படர்ந்துள்ள காட்டு மல்லிகைக் கொடிகளில் பூத்த மலர்களிலிருந்து வரும் நறுமணம் எவ்வளவு மனோகரமாக இருக்கும்?

அதற்கிணையான இன்பம் இன்னொன்று சொல்ல வேண்டுமானால், உச்சி வேளையில் ஆலமரங்களும் வேப்ப மரங்களும் தழைத்து வளர்ந்த இராஜபாட்டைகளில் பிரயாணம் செய்வதுதான். இந்த பங்குனி மாதத்தில் சாலை ஓரத்து ஆல மரங்களிலே புதிய இளந்தளிர்கள் 'பளபள' என்று மின்னிக் கொண்டிருக்கும். வேப்ப மரங்கள் பூத்துக் குலுங்கும்! மாமரங்கள் புதிய தளிர்விடும் அழகைத்தான் என்னவென்று சொல்ல? ஒருநாளைக்கு மாமரம் முழுவதும் கருநீல நிறம் பொருந்திய இளந்தளிர்கள் மயமாயிருக்கும். மறுநாளைக்குப் பார்த்தால், கருநீல நிறம் இளஞ்செந்நிறமாக மாறியிருக்கும். அதற்கு அடுத்த நாள் அவ்வளவு தளிர்களும் தங்கநிறம் பெற்றுத் தகதகவென்று மின்னிக் கொண்டிருக்கும்.

இப்பேர்ப்பட்ட இயற்கை இன்பங்களை அளித்த இறைவனுடைய திருப்புகழை இன்னிசையிலே அமைத்து, மரக்கிளைகளில் ஊஞ்சலாடும் பூங்குயில்கள் இடைவிடாமல் பாடிக் கொண்டிருக்கும். திருச்செங்காட்டங்குடியிலிருந்து காஞ்சிக்கு வரும் வழியில் இம்மாதிரி இன்பக் காட்சிகளையெல்லாம் பார்த்துக் கொண்டு வந்த பரஞ்சோதி அச்சமயம் அந்தக் காட்சிகளின் அழகையோ இன்பத்தையோ அவ்வளவாக அனுபவிக்கவில்லை. இப்போது, எங்கே பார்த்தாலும் மொட்டைக் குன்றுகளே காணப்பட்ட பொட்டைப் பிரதேசத்தில், பசுமை என்பதையே காணமுடியாத வறண்ட பாதையில், அவன் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோதுதான், சோழ மண்டலத்து வயல்களும் தோப்புகளும், தொண்டைமண்டலத்து ஏரிகளும் காடுகளும் அவன் மனக் கண்ணின் முன்னால் அடிக்கடி தோன்றி இன்பமளித்தன.

மேற்குத் திசையில் மலைகளுக்குப் பின்னால் சூரியன் மறையத் தொடங்கியபோது பரஞ்சோதி, அந்த மலைப் பாதையில் ஒரு முடுக்கில் திரும்பினான். அன்றைக்கெல்லாம் முட்புதர்களையும் கள்ளிச் செடிகளையும் தவிர வேறு எதையும் காணாமல் வந்த பரஞ்சோதிக்கு எதிரே, அப்போது ஓர் அபூர்வமான காட்சி தென்பட்டது. கண்ணுக்கெட்டிய தூரம் நெட்டையும் குட்டையுமான புரச மரங்கள் ஆயிரம் பதினாயிரம் மரங்கள் இலை என்பதே இல்லாமல் ஒரே பூமயமாய்க் காட்சியளித்தன. அவ்வளவும் இரத்தச் சிவப்பு நிறமுள்ள கொத்துக் கொத்தான பூக்கள். மாலைக் கதிரவனின் செங்கிரணங்கள் அந்தப் புரசம் பூக்களின் இரத்தச் செந்நிறத்தை மிகைப்படுத்திக் காட்டின.

அது அபூர்வமான அழகு பொருந்திய காட்சிதான்; ஆனால், ஒருவகை அச்சந்தரும் காட்சியுமாகும். பரஞ்சோதி பிறந்து வளர்ந்த திருச்செங்காட்டங்குடி கிராமத்தில் தென்மேற்கு மூலையில் இருந்த மயானத்தில் சில புரச மரங்கள் உண்டு. அவை பங்குனி சித்திரையில் இவ்விதம் ஒரே செந்நிறப் பூமயமாயிருப்பதை அவன் பார்த்திருந்தான். எனவே, புரச மரங்கள் பூத்திருக்கும் காட்சியைப் பார்க்கும் போது அவனுக்கு ருத்ரபூமியின் நினைவு வருவது வழக்கம்.

இப்போது அவன் கிராமத்துக்கு எத்தனையோ தூரத்துக்கு அப்பால் தனியாகக் காட்டு வழியில் போய்க் கொண்டிருந்தபோது மேற்கூறிய மயானத்தின் ஞாபகம் தோன்றி அவன் மனத்தில் பயங்கரத்தை உண்டுபண்ணிற்று. மயானத்தின் நினைவோடு பேய் பிசாசுகளின் நினைவும் சேர்ந்துவந்தது. மற்ற விஷயங்களில் மகா தைரியசாலியான பரஞ்சோதிக்குப் பேய் பிசாசு என்றால் பயம் அதிகம். 'இன்றைக்கு இந்தக் காட்டு வழியே இருட்டிய பிறகும் போக வேண்டுமே!' என்று நினைத்த போது அவனுடைய நெஞ்சையும் வயிற்றையும் என்னவோ செய்தது. அதோ அந்த இரண்டு மலைகளும் கூடுகிற இடத்தில் தான் அன்றிரவு தங்க வேண்டிய சத்திரம் இருப்பதாக அவன் அறிந்தான். அங்கே போய்ச் சேருவதற்குள்ளே இருட்டி ஒரு ஜாமத்துக்கு மேலாகி விடலாம். நிலா வௌிச்சமே இராது முன்னிருட்டுக் காலம். 'அடடா! வழியிலே ஏன் இவ்வளவு தாமதித்தோம்?' என்று எண்ணியவனாய் பரஞ்சோதி குதிரையை வேகமாய்ச் செலுத்த முயன்றான். ஆனாலும் பகலெல்லாம் பிரயாணம் செய்து களைத்திருந்த குதிரை எவ்வளவுதான் வேகமாய்ப் போய்விடக் கூடும்? நிர்மானுஷ்யமான அந்த மலைப் பிரதேசம் உண்மையில் அச்சத்தைத் தருவதாய்த்தான் இருந்தது. பட்சிகள் மிருகங்கள் கூட அங்கே காணப்படவில்லை. இருட்டிய பிறகு நரிகள் ஊளையிட ஆரம்பிக்கும்; பயங்கரத்தை அவை இன்னும் அதிகப்படுத்தும்.

நேற்றெல்லாம் பரஞ்சோதி நேர் வடக்கே சென்ற விசாலமான இராஜபாட்டையில் பிரயாணம் செய்தான். அதன் ஜன நடமாட்டமும் குதிரைகளின் போக்குவரவும் அதிகமாயிருந்தன. பாதையில் பல இடங்களில் அவன் நிறுத்தப்பட்டான். சக்கரவர்த்தி தந்திருந்த பிரயாண இலச்சினையை அவன் அங்கங்கே காட்டிக்கொண்டு போக வேண்டியிருந்தது. இன்று காலையிலே இராஜபாட்டையை விட்டு மலைப் பாதையில் திரும்பிய பிறகு அத்தகைய தொந்தரவு ஒன்றுமில்லை. ஆனால் இப்போது பரஞ்சோதிக்கு ஒரு பெரிய குதிரைப் படையே அந்த வழியில் வரக்கூடாதா என்று தோன்றியது.

ஆ! அது என்ன சத்தம்! குதிரைக் குளம்படியின் சத்தம் போலிருக்கிறதே! ஆம்; குதிரைதான் பின்னால் வந்து கொண்டிருக்கிறது. வருவது யாராயிருக்கும்? யாராயிருந்த போதிலும் நல்லதுதான், இருட்டுக்கு வழித்துணையாயிருக்குமல்லவா? வருகிறது ஒரே குதிரையா? பல குதிரைகளா? பரஞ்சோதி தன் குதிரையை நிறுத்திவிட்டுக் காதுகொடுத்துக் கேட்டான். சட்டென்று சத்தம் நின்றுவிட்டது. ஒருவேளை வெறும் பிரமையோ? யாராவது வரக்கூடாதா என்று அடிக்கடி எண்ணியதன் பயனோ?

பரஞ்சோதி மேலே குதிரையைச் செலுத்தினான். மறுபடியும் பின்னால் குதிரை வரும் சத்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தால் ஒன்றும் தெரியவில்லை. மலைப்பாதை வளைந்து வளைந்து சென்றதனால் குதிரை சமீபத்தில் வந்தாலும் அதைத் தான் பார்க்க முடியாது. இதற்குள்ளே சூரியன் அஸ்தமித்து நாலாபுறமும் இருள் சூழ ஆரம்பித்துவிட்டது. அதிக வளைவு இல்லாமல் பாதை நேராகச் சென்ற இடத்துக்கு வந்தபோது பரஞ்சோதி குதிரையைச் சற்று நேரம் வேகமாக விட்டுக்கொண்டு போய்ச் சட்டென்று நிறுத்திவிட்டுத் திரும்பிப் பார்த்தான். கொஞ்ச தூரத்தில் ஒரு குதிரை வந்து கொண்டிருந்தது. அதன்மேல் ஆள் இருப்பதும் தெரிந்தது. பரஞ்சோதியின் குதிரை நின்றதும் அவனும் தன் குதிரையை நிறுத்தினான். பரஞ்சோதிக்குச் சொல்லமுடியாத கோபம் வந்தது. குதிரையை லாகவமாய்த் திருப்பிப் பின்னால் நின்ற குதிரையை நோக்கி விரைவாகச் சென்றான். அப்பொழுது கையெழுத்து மறையும் நேரம்.
 

Meena

Saha Moderator
Staff
Messages
1,082
Reaction score
91
Points
48
இருபத்தொன்பதாம் அத்தியாயம்

வழி துணை

குதிரையைத் திருப்பிவிட்டுக் கொண்டு பரஞ்சோதி பின்னால் வந்த குதிரையண்டை சென்றபோது அவன் மனத்தில் ஏற்கெனவே ஏற்பட்டிருந்த பீதியெல்லாம் கோபமாக மாறியிருந்தது. மார்பில் பாய்ச்சுவதற்குச் சித்தமாக அவனுடைய வலது கையானது வேலைத் தூக்கிப் பிடித்துக் கொண்டிருந்தது. ஆனால், பரஞ்சோதி அருகில் நெருங்கியதும் அந்தக் குதிரைமீது வந்த மனிதன் செய்த காரியங்கள் வேலுக்கு வேலை இல்லாமல் செய்து விட்டன!

ஆஜானுபாகுவாய் முகத்தில் பெரிய மீசையுடனும் தலையில் பெரிய முண்டாசுடனும் விளங்கிய அந்த திடகாத்திர மனிதன், பரஞ்சோதி தன் அருகில் வந்ததும், "ஐயையோ! ஐயையோ! பிசாசு! பிசாசு!" என்று அலறிக் கொண்டு குதிரை மீதிருந்து நழுவித் 'தொபுகடீ'ரென்று கீழே விழுந்தான். அதைப் பார்த்த பரஞ்சோதிக்குப் பயம், கோபம் எல்லாம் பறந்து போய்ப் பீறிக் கொண்டு சிரிப்பு வந்தது. கீழே விழுந்தவன் போர்க்கோலம் பூண்ட வீரன் என்பதையும், அவனுடைய இடையில் கட்டித் தொங்கிய பெரிய வாளையும் பார்த்ததும் பரஞ்சோதி 'கலகல'வென்று சிரிக்கத் தொடங்கினான். பேய் பிசாசுக்குப் பயந்தவன் தான் ஒருவன் மட்டும் அல்ல என்பதை நினைத்தபோது அவனுக்கு ஒரு வகையான திருப்தி உண்டாயிற்று. கீழே விழுந்த மனிதன் மீண்டும், "ஐயையோ! பிசாசு சிரிக்கிறதே! பயமாயிருக்கிறதே!" என்று அலறினான். அந்த வேடிக்கையை இன்னும் கொஞ்சம் அனுபவிக்க விரும்பிய பரஞ்சோதி, குதிரை மேலிருந்தபடியே வேலை நீட்டிக் கீழே கிடந்தவனுடைய கையில் இலேசாகக் குத்திய வண்ணம், பிசாசு பேசுவது போல் தானாகக் கற்பனை செய்துகொண்டு அடித் தொண்டைக் குரலில், "அடே! உன்னை விடமாட்டேன்! விழுங்கி விடுவேன்!" என்றான்.

அதற்கு அடுத்த கணத்தில் பரஞ்சோதி சற்றும் எதிர்பாராத காரியம் ஒன்று நடந்தது. அது என்ன என்பதையே அச்சமயம் அவனால் நன்கு தெரிந்து கொள்ளக்கூட முடியவில்லை. ஒரு கணம் அவன் தலை கீழாகப் பாதாளத்தில் விழுவது போலிருந்தது. உடனே அவன் தலையின் மேல் ஆயிரம் இடி சேர்ந்தாற்போல் விழுந்தது! அடுத்தபடியாக அவனுடைய மார்பின் மேல் விந்திய பர்வதம் வந்து உட்காருவதுபோல் தோன்றியது. பிறகு ஒரு பிரம்மாண்டமான பூதம், 'ஹா ஹா ஹ' என்று பயங்கரமான பேய்க்குரலில் சிரித்துக்கொண்டு அவனுடைய தோள்களைப் பிடித்துப் பலமாகக் குலுக்கியது. சற்று நிதானித்து, மனதைத் தௌிவுபடுத்திக் கொண்டு சிந்தித்த பிறகுதான் பரஞ்சோதிக்கு நடந்தது என்னவென்பது புலனாயிற்று.

பரஞ்சோதி தன்னுடைய வேலின் நுனியினால் கீழே கிடந்தவனுடைய கையை இலேசாகக் குத்தி, "விழுங்கி விடுவேன்!" என்று கத்தியவுடனே, அந்த மனிதன் பரஞ்சோதியின் வேலைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு ஓர் இழுப்பு இழுத்தான். அவ்வளவுதான், பரஞ்சோதி குதிரை மேலிருந்து தடாலென்று தலைகுப்புறக் கீழே விழுந்தான். உடனே, அந்த மனிதன் மின்னலைப் போல் பாய்ந்து வந்து அவனுடைய தோள்களைப் பிடித்துக் குலுக்கினான். அதோடு, "ஹா ஹா ஹா! நீ பிசாசு இல்லை, மனுஷன்தான்! பிசாசு மாதிரி கத்தி என்னைப் பயமுறுத்தப் பார்த்தாயல்லவா? நல்லவேடிக்கை! ஹா ஹா ஹ" என்று உரத்த குரலில் சிரித்துக் கொண்டே கூவினான். பின்னர், பரஞ்சோதியின் மார்பின் மேலிருந்து எழுந்து நின்று பரஞ்சோதியையும் தரையிலிருந்து தூக்கி நிறுத்தி, "தம்பி! இந்த மயான பூமியில் ஒண்டியாகப் போக வேண்டுமே என்று பயந்து கொண்டிருந்தேன். நல்லவேளையாய் வழித்துணைக்குக் கிடைத்தாய். நீ எங்கே போகிறாய், தம்பி?" என்று ரொம்பவும் பழக்கமானவனைப் போல் தோளின் மேல் கையைப் போட்டுக்கொண்டு சல்லாபமாய்க் கேட்டான்.

பரஞ்சோதி சற்று முன் நடந்த சம்பவங்களினால் பெரிதும் அதிர்ச்சியடைந்திருந்தான். ஒரு பக்கம் அவன் உள்ளத்தில் கோபம் பொங்கிக் கொண்டிருந்தது. அவமானம் ஒரு பக்கம் பிடுங்கித் தின்றது. தன்னை இப்படியெல்லாம் கதிகலங்க அடித்தவன் சாமானியப்பட்டவன் அல்ல; மகா பலசாலியான வீர புருஷன் என்பதை அவன் உணர்ந்திருந்தான். இதனால் அம்மனிதன் பேரில் ஒருவித மரியாதையும் அவன் மனத்தில் ஏற்பட்டிருந்தது.

ஆனால், "எந்த ஊருக்குப் போகிறாய் தம்பி?" என்று அந்த ஆள் கேட்டதும், புத்த பிக்ஷு செய்திருந்த எச்சரிக்கைகள் ஞாபகத்துக்கு வந்தன. தன் தோள் மேலிருந்த அவனுடைய கைகளை உதறித் தள்ளிவிட்டு, "நான் எந்த ஊருக்குப் போனால் உனக்கு என்ன?" என்று வெறுப்பான குரலில் கேட்டான் பரஞ்சோதி. "எனக்கு ஒன்றுமில்லை, அப்பா! ஒன்றுமே இல்லை. இன்று ராத்திரி வழித் துணைக்கு நீ கிடைத்தாயே, அதுவே போதும். ஏதோ இரகசியக் காரியமாய்ப் போகிறாயாக்கும் ஆனால்.."

இப்படிச் சொல்லி நிறுத்தி, அந்த வீரன் பரஞ்சோதியைச் சற்றுக் கவனமாக உற்றுப் பார்த்தான். அந்தப் பார்வையின் கருத்தை உணர்ந்து கொள்வதற்குள்ளே, மறுபடியும் அவன் தரையிலே விழும்படி நேர்ந்தது. ஒரே நொடியில் அவ்வீரன் பரஞ்சோதியைக் கீழே தள்ளியதுமல்லாமல், தரையில் அவன் அருகில் உட்கார்ந்து கழுத்தை நெறித்துப் பிடித்துக் கொண்டான். "நீ வாதாபி ஒற்றனா, இல்லையா? சத்தியமாய்ச் சொல்" என்று கடுமை நிறைந்த குரலில் கேட்டான். பரஞ்சோதிக்குக் கோபத்தினாலும் வெட்கத்தினாலும் கண்களில் ஜலம் வரும் போலிருந்தது. அவன் விம்முகிற குரலில், "நீ சுத்த வீரனாக இருந்தால் என்னோடு எதிருக்கெதிர் நின்று வாளோ வேலோ எடுத்துச் சண்டை செய்யும்..." என்றான்.

"உன்னோடு சண்டை போட வேண்டுமா? எதற்காக அப்பனே? நீ வாதாபி ஒற்றனாயிருக்கும் பட்சத்தில் உன்னை இப்படியே யமனுலகம் அனுப்புவேன். நீ ஒற்றனில்லையென்றால் உன்னோடு சண்டை போடுவானேன்? நாம் இருவரும் சிநேகிதர்களாயிருக்கலாம். நீ ஒற்றனில்லை என்பதை மட்டும் நிரூபித்து விடு. இதோ, இம்மாதிரி ரிஷப இலச்சினை உன்னிடம் இருக்கிறதா?" என்று கேட்டுக் கொண்டே அவ்வீரன் இடது கையினால் தன் மடியிலிருந்து வட்ட வடிவான ஒரு செப்புத் தகட்டை எடுத்துக் காட்டினான். பல்லவ சாம்ராஜ்யத்தில் பிரயாண அனுமதி பெற்ற இராஜ தூதர்களுக்கு அடையாளமாகக் கொடுக்கும் ரிஷப முத்திரை பதித்த தகடு அது.

பரஞ்சோதியும் வேண்டாவெறுப்புடன் தன் மடியிலிருந்து மேற்படி முத்திரைத் தகட்டை எடுத்துக் காட்டியதும் அவ்வீரன் பரஞ்சோதியின் கழுத்தை விட்டதோடல்லாமல் அவனைத் தூக்கி நிறுத்தி ஆர்வத்துடன் ஆலிங்கனம் செய்து கொண்டு, "தம்பி! என்னை மன்னித்துவிடு! உன் முகக் களையைப் பார்த்தாலே சொல்லுகிறது, நீ சத்ருவின் ஒற்றனாயிருக்க முடியாதென்று. இருந்தாலும், இந்த யுத்த காலத்தில் யாரையும் நம்பி எந்தக் காரியமும் செய்வதற்கில்லை. நல்லது, குதிரைமேல் ஏறிக்கொள் பேசிக்கொண்டே போகலாம்!" என்று கூறி அவ்வீரன் தன் குதிரையண்டை சென்று அதன்மேல் வெகு லாகவமாய்த் தாவி ஏறிக் கொண்டான்.

பரஞ்சோதி தனக்குள், "இவனுடன் பேச்சு என்ன வேண்டிக் கிடந்தது? இந்த மலைப்பாதையைத் தாண்டியவுடன் இவனை ஒரு கை பார்த்து இவனுக்குப் புத்தி கற்பிக்காமல் விடக்கூடாது" என்று எண்ணிக்கொண்டே தன் குதிரைமீது ஏறிக்கொண்டான். மாலை மங்கி இருளாகக் கனிந்து கொண்டிருந்த முன்னிரவு நேரத்தில், வானமெல்லாம் வைரச் சுடர்களென மின்னத் தொடங்கியிருந்த நட்சத்திரங்களின் இலேசான வௌிச்சத்தில் இரு குதிரைகளும் சேர்ந்தாற்போல் போகத் தொடங்கின.
 

Meena

Saha Moderator
Staff
Messages
1,082
Reaction score
91
Points
48
முப்பதாம் அத்தியாயம்

மயூரசன்மன்

அந்தக் காட்டுமலைப் பாதையில் சற்று நேரம் குதிரைகள் மெதுவாகக் காலடி வைக்கும் சத்தத்தைத் தவிர வேறு சத்தம் எதுவும் கேட்கவில்லை. பிரயாணிகள் இருவரும் மௌனத்தில் ஆழ்ந்திருந்தார்கள். பரஞ்சோதியின் மனத்தில் பற்பல எண்ணங்கள் தோன்றி மறைந்து கொண்டிருந்தன. பெரிய மீசையுடனும், பிரம்மாண்டமான தலைப்பாகையுடனும் தன் பக்கத்தில் குதிரை மீது வரும் மனிதன் யாராயிருக்கும்? அவன் போர் முறைகளில் கை தேர்ந்த மகாவீரன் என்பதில் சந்தேகமில்லை. சற்று நேரத்துக்குள் தன்னை என்ன பாடுபடுத்தி வைத்துவிட்டான்? சடக்கென்று குதிரை மேலிருந்து தன்னை அவன் இழுத்துக் கீழே தள்ளியதையும், மார்பின்மேல் ஒரு கண நேரம் மலைபோல் உட்கார்ந்திருந்ததையும், மறுபடியும் தான் எதிர்பாராத சமயத்தில் திடீரென்று கீழே தள்ளி இரும்புக் கையினால் தன் கழுத்தைப் பிடித்து நெரித்ததையும் நினைக்க நினைக்கப் பரஞ்சோதிக்குக் கோபமும் ஆத்திரமும் பொங்கின. அதே சமயத்தில் மேற்கூறிய செயல்களில் அந்த வீரன் காட்டிய லாகவமும் தீரமும் சாமர்த்தியமும் அந்த வீரனிடம் பயபக்தியை உண்டு பண்ணின. ஆஹா! இப்படிப்பட்ட ஒரு மகா வீரனுடைய சிநேகம் தனக்கு நிரந்தரமாகக் கிடைக்குமானால் அது எப்பேர்ப்பட்ட பாக்கியமாயிருக்கும்?

திருச்செங்காட்டங்குடியிலிருந்து காஞ்சிக்கு வந்தபோது வழியில் சிநேகமான புத்த பிக்ஷுவுக்கும் இந்த வீரனுக்கும் எவ்வளவு வித்தியாசம்? பிக்ஷு எவ்வளவோ தன்னிடம் அன்பாகப் பேசியிருந்தும், எவ்வளவோ ஒத்தாசை செய்திருந்தும் அவரிடம் தனக்கு ஏற்படாத பக்தியும் வாத்ஸல்யமும் தன்னைக் கீழே தள்ளி மேலே உட்கார்ந்த இந்த மனிதனிடம் உண்டாகக் காரணம் என்ன? அதே சமயத்தில், அவன் கிளம்பும்போது புத்த பிக்ஷு கூறிய எச்சரிக்கை மொழிகளும் நினைவுக்கு வந்தன. "வழியில் சந்திக்கும் யாரையும் நம்பாதே! சத்ருவாக நடித்தாலும் மித்திரனாக நடித்தாலும் நீ போகுமிடத்தையாவது ஓலை கொண்டு போகும் விஷயத்தையாவது சொல்லிவிடாதே! அஜந்தா வர்ண இரகசியத்தை அறிந்துகொள்ள ஆசை கொண்டவர்கள் ஆயனரைத் தவிர இன்னும் எவ்வளவோ பேர் உண்டு. அதற்காக அவர்கள் உயிர்க்கொலை செய்யவும் பின்வாங்கமாட்டார்கள். எனவே நீ போகும் காரியம் இன்னதென்பதைப் பரம இரகசியமாக வைத்துக் காப்பாற்ற வேண்டும். அதை உன்னிடமிருந்து தெரிந்து கொள்வதற்குப் பலர் பலவிதமான சூழ்ச்சிகளைச் செய்யலாம். அதிலெல்லாம் நீ ஏமாந்து விடக்கூடாது..."

இவ்விதம் புத்த பிக்ஷு கூறியதைப் பரஞ்சோதி நினைவு கூர்ந்து ஒருவேளை தன் அருகில் இப்போது வந்து கொண்டிருப்பவன் அத்தகைய சூழ்ச்சிக்காரர்களில் ஒருவன்தானோ, தன்னைக் குதிரையிலிருந்து கீழே இழுத்துத் தள்ளிப் படாதபாடுபடுத்தியதெல்லாம் ஒருவேளை பிக்ஷுவின் ஓலையைக் கவர்வதற்காகச் செய்த பிரயத்தனமோ என்று எண்ணமிட்டான். ஓலை தன் இடைக்கச்சுடன் பத்திரமாய்க் கட்டப்பட்டிருப்பதைத் தொட்டுப் பார்த்துத் தெரிந்து கொண்டு, அதைத் தன்னிடமிருந்து கைப்பற்றுவது எளிதில்லை என்று உணர்ந்து தைரியமடைந்தான். அப்போது சற்று தூரத்தில் ஒரு நரி சோகமும் பயங்கரமும் நிறைந்த குரலில் ஊளையிடும் சத்தம் கேட்டது. அடுத்த நிமிஷத்தில் முறைவைப்பதுபோல் அநேக நரிகள் சேர்ந்தாற்ப் போல் ஊளையிடும் சத்தம் கேட்கத் தொடங்கியபோது, பரஞ்சோதிக்கு ரோமம் சிலிர்த்துத் தேகமெல்லாம் வியர்த்தது. ஒரு கூட்டம் நரிகளின் ஊளை நின்றதும் இன்னொரு கூட்டம் ஊளையிட ஆரம்பிக்கும். இவ்விதம் நரிகள் கூட்டம் கூட்டமாக முறைவைத்து ஊளையிடும் சத்தமும், அந்த ஊளைச் சத்தமானது குன்றுகளில் மோதிப் பிரதிபலித்த எதிரொலியுமாகச் சேர்ந்து அந்தப் பிரதேசத்தையெல்லாம் விவரிக்க முடியாதபடி பயங்கரம் நிறைந்ததாகச் செய்தன.

இத்தனை நேரமும் மௌனமாய் வந்த வீரன், "தம்பி! இப்பேர்ப்பட்ட காட்டு வழியில் முன்னிருட்டு நேரத்தில் தன்னந்தனியாக நீ புறப்பட்டு வந்தாயே, உன்னுடைய தைரியமே தைரியம்! என் நாளில் எத்தனையோ தடவை நான் தனி வழியே பிரயாணம் செய்திருக்கிறேன். அப்படிப்பட்ட எனக்கே இந்தப் பிரதேசத்தில் சற்று முன்னால் கதி கலக்கம் உண்டாகி விட்டது!" என்றான். அப்போது பரஞ்சோதி சிறிது தயக்கத்துடன், "ஐயா! என்னைக் கண்டதும் தாங்கள் 'பிசாசு! பிசாசு!" என்று அலறிக் கொண்டு குதிரைமேலிருந்து விழுந்தீர்களே? அது ஏன்? உண்மையாகவே பயப்பட்டீர்களா? அல்லது என்னைக் கீழே தள்ளுவதற்காக அப்படிப் பாசாங்கு செய்தீர்களா? சற்று முன்னால் அப்படி அலறி விழுந்தவர், இப்போது கொஞ்சம் கூடப் பயப்படுவதாகத் தெரியவில்லையே!" என்றான்.

"ஆஹா! அது தெரியாதா உனக்கு? ஒருவன் தனி மனிதனாயிருக்கும் வரையில் ஒரு பிசாசுக்குக் கூட ஈடுகொடுக்க முடியாது. தனி மனிதனைப் பிசாசு அறைந்து கொன்று விடும். ஆனால், இரண்டு மனிதர்கள் சேர்ந்து விட்டால், இருநூறு பிசாசுகளை விரட்டியடித்து விடலாம்! இந்த மலைப் பிரதேசத்தில் இருநூறாயிரம் பிசாசுகள் இராவேளைகளில் "ஹோ ஹா!" என்று அலறிக் கொண்டு அலைவதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். அவ்வளவு பிசாசுகளும் சேர்ந்து வந்தாலும், இரண்டு மனிதர்களை ஒன்றும் செய்ய முடியாது! தம்பி! இந்தப் பிரதேசத்தைப் பற்றிய கதை உனக்குத் தெரியுமா?" என்று குதிரை வீரன் கேட்டான். "தெரியாது; சொல்லுங்கள்!" என்றான் பரஞ்சோதி. அதன்மேல் அந்த வீரன் சொல்லிய வரலாறு பின்வருமாறு:

ஏறக்குறைய இருநூற்றைம்பது வருஷங்களுக்கு முன்னால் வடதேசத்திலிருந்து வீரசன்மன் என்னும் பிராம்மணன் தன் சீடனாகிய மயூரசன்மன் என்னும் சிறுவனுடன் காஞ்சி மாநகருக்கு வந்தான். அவ்விருவரும் ஏற்கெனவே வேத சாஸ்திரங்களில் மிக்க பாண்டித்தியம் உள்ளவர்கள். ஆயினும் காஞ்சி மாநகரின் சம்ஸ்கிருத கடிகை (சர்வகலாசாலை)யைச் சேர்ந்த மகா பண்டிதர்களால் ஒருவருடைய பாண்டித்தியம் ஒப்புக் கொள்ளப்பட்ட பிறகுதான் அந்தக் காலத்தில் வித்தை பூர்த்தியானதாகக் கருதப்பட்டது. அதற்காகவே வீரசன்மனும் மயூரசன்மனும் காஞ்சிக்கு வந்தார்கள். ஒருநாள் அவர்கள் காஞ்சியின் இராஜவீதி ஒன்றில் போய்க் கொண்டிருந்தபோது, பல்லவ மன்னனின் குதிரை வீரர்கள் சிலர் எதிர்ப்பட்டார்கள். வீதியில் நடந்த வண்ணம் ஏதோ ஒரு முக்கியமான சர்ச்சையில் ஈடுபட்டிருந்த குருவும் சிஷ்யனும் குதிரை வீரர்களுக்கு இடங்கொடுத்து விலகிக் கொள்ளவில்லை. இதனால் கோபம் கொண்ட குதிரைவீரன் ஒருவன் குதிரை மேலிருந்தபடியே வீரசன்மனைக் காலால் உதைத்துத் தள்ளினான். குருவுக்கு இத்தகைய அவமானம் நேர்ந்ததைக் கண்டு சகியாத சிஷ்யன் அந்த வீரன் கையிலிருந்த வாளைப் பிடுங்கி வீசவே அவன் வெட்டுப்பட்டுக் கீழே விழுந்தான். மற்றக் குதிரை வீரர்கள் மயூரசன்மனைப் பிடிக்க வந்தார்கள். அவர்களிடம் அகப்பட்டால் தன் உயிருக்கு ஆபத்து நேரும் என்பதை அறிந்த மயூரசன்மன், கையில் பிடித்த வாளுடன் கீழே விழுந்த வீரனின் குதிரைமீது தாவி ஏறி தன்னைப் பிடிக்க வந்தவர்களையெல்லாம் வீராவேசத்துடன் வெட்டி வீழ்த்திக் கொண்டு காஞ்சி நகரை விட்டு வௌியேறினான்.

பல்லவ ராஜ்யத்துக்கே அவமானம் விளைவிக்கத் தக்க இந்தக் காரியத்தைக் கேட்டு, மயூரசன்மனைக் கைப்பற்றி வருவதற்காக இன்னும் பல குதிரை வீரர்கள் புறப்பட்டுச் சென்றார்கள். ஆனால், அவர்களிடம் அவன் அகப்படவில்லை. கடைசியில், மயூரசன்மன் கிருஷ்ணா நதிக்கரையில் உள்ள ஸரீ பர்வதத்தை அடைந்து, அங்கேயுள்ள அடர்ந்த காட்டில் சிறிது காலம் பல்லவ வீரர்களுக்குப் பயந்து ஒளிந்து வாழ்ந்தான். பின்னர், அந்தப் பிரதேசத்தில் வாழ்ந்த மலைச் சாதியரைக் கொண்டு ஒரு பெரிய சைனியத்தைத் திரட்டியதுமல்லாமல் அங்கே சுதந்தர ராஜ்யத்தையும் ஸ்தாபித்தான். பின்னர், அந்தப் பெரிய சைனியத்துடனே, காஞ்சியில் தன் குருவுக்கு நேர்ந்த அவமானத்துக்குப் பழி வாங்கும் பொருட்டுப் புறப்பட்டு வந்தான். மயூரசன்மனின் சைனியமும் காஞ்சிப் பல்லவ சைனியமும் இந்த மலைக்காட்டுப் பிரதேசத்திலே தான் சந்தித்தன. ஏழு நாள் இடைவிடாமல் யுத்தம் நடந்தது. ஆயிரக்கணக்கான வீரர்கள் போரில் மாண்டார்கள். இரத்த வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி மலைப் பிரதேசத்தையெல்லாம் நனைத்தது.

அப்படி இரத்த வெள்ளம் ஓடிய இடத்திலேதான் சில காலத்துக்குப் பிறகு இந்தப் புரசங்காடு முளைத்தது. மேற்சொன்ன பயங்கர யுத்தம் நடந்த அதே பங்குனி மாதத்தில் ஒவ்வொரு வருஷமும் புரசமரங்களின் இலை உதிர்ந்து இரத்தச் சிவப்பு நிறமுள்ள பூக்கள் புஷ்பிக்கின்றன. அந்தப் போரில் இறந்த ஆயிரக்கணக்கான வீரர்களின் ஆவிகள் இன்னமும் இங்கே உலாவிக் கொண்டிருப்பதாக அக்கம் பக்கத்துக் கிராம ஜனங்கள் நம்புகிறார்கள். ஆவிக் குதிரைகளின் மீதேறிய ஆவி வீரர்கள் வாள்களையும் வேல்களையும் ஏந்தி 'ஹா ஹா' என்று கூவிக்கொண்டு இந்த நிர்ஜனப் பிரதேசத்தில் அலைவதாகவும், யாராவது பிரயாணிகள் இரவு வேளையில் தனி வழியே வந்தால் அவர்களைக் கொன்று இரத்தத்தைக் குடித்துத் தாகத்தைத் தணித்துக் கொள்வதாகவும் சொல்லிக்கொள்ளுகிறார்கள்!

மேற்படி வரலாற்றைக் கேட்டுக் கொண்டிருந்த பரஞ்சோதிக்குக் கொஞ்சம் நஞ்சம் பாக்கியிருந்த பயமும் போய் விட்டது. அங்கே ஆவிகள் அலைவது பற்றிய கதையெல்லாம் வெறும் மூடநம்பிக்கை என்ற உறுதி ஏற்பட்டது. "என்னைக் கண்டதும் இருநூற்றைம்பது வருஷத்துக்கு முன் செத்துப்போன வீரனின் பிசாசுதான் வந்து விட்டதென்று நினைத்து அப்படி உளறி அடித்துக்கொண்டு விழுந்தீரோ?" என்று கூறி நகைத்தான்.

"இரத்தமும் சதையுமுள்ள மனிதனோடு நான் சண்டை போடுவேன். வில்போர், வாள்போர், வேல்போர், மல்யுத்தம் எது வேண்டுமானாலும் செய்வேன். ஆனால், ஆவிகளோடு யார் போரிட முடியும்?" என்று அவ்வீரன் சிறிது கடுமையான குரலில் கூறவே பரஞ்சோதி பேச்சை மாற்ற எண்ணி, "இருக்கட்டும் ஐயா! இங்கே நடந்த யுத்தத்தின் முடிவு என்ன ஆயிற்று? யாருக்கு வெற்றி கிடைத்தது?" என்று கேட்டான். "மயூரசன்மனுடைய சைனியத்தைப்போல் பல்லவ சைனியம் மூன்று மடங்கு பெரியது. ஆகையால், பல்லவ சைனியம் தான் ஜயித்தது. மயூரசன்மனை உடம்பில் முப்பத்தாறு காயங்களுடன் கைப்பற்றிப் பல்லவ மன்னன்முன் கொண்டுவந்து நிறுத்தினார்கள்...!" "அதன் பிறகு என்ன நடந்தது?" என்று மிகுந்த ஆவலுடன் கேட்டான் பரஞ்சோதி. "என்ன நடந்திருக்குமென்று நீதான் சொல்லேன்!" என்று அவ்வீரன் கூறிப் பரஞ்சோதியின் ஆவலை அதிகமாக்கினான்.
 
Top Bottom