Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


சிவகாமியின் சபதம் - பாகம் - 2 :காஞ்சி முற்றுகை

Meena

Saha Moderator
Staff
Messages
1,070
Reaction score
85
Points
48
இருபத்து நான்காம் அத்தியாயம்

புள்ளலூர்ச் சண்டை

கண்ணபிரான் ரதத்தை விட்டுக் குதித்துக் குதிரைகளின் தலைக்கயிறுகளைப் பிடித்துக் கொண்டே, சிவகாமியை நெருங்கி வந்து, "தங்கச்சி! இதென்ன? இங்கே எப்போது வந்தீர்கள்? இது என்ன ஊர்?" என்று துரிதமாய்க் கேட்டான். "சிதம்பரம் போகலாமென்று கிளம்பி வந்தோம். அண்ணா! வழியில் இங்கே தங்கினோம். இந்த ஊருக்கு அசோகபுரம் என்று பெயராம். அதோ அசோக மகாராஜாவின் ஸ்தம்பம் தெரிகிறதே; நீங்கள் பார்க்கவில்லையா?" என்றாள் சிவகாமி.

"அதையெல்லாம் பார்க்க எனக்கு இப்போது சாவகாசமில்லை. ஆமாம், நீங்கள் என்னத்திற்காக இவ்வளவு அவசரப்பட்டுக்கொண்டு யாத்திரை கிளம்பினீர்கள்!..." "அந்தக் காட்டு வீட்டில் இந்த யுத்த காலத்திலே தனியாக இருப்பானேன் என்றுதான் கிளம்பினோம். குமார சக்கரவர்த்தியுந்தான் எங்களை அடியோடு மறந்து விட்டாரே!.." "என்ன வார்த்தை, அம்மா சொல்கிறாய்? மாமல்லராவது, உங்களை மறப்பதாவது? போர்க்களத்துக்குப் போகும்படி சக்கரவர்த்தியிடமிருந்து அனுமதி வந்ததும், முதலில் உங்கள் வீட்டைத் தேடிக்கொண்டுதானே வந்தோம்! வீடு பூட்டிக் கிடந்ததைக் கண்டதும் மாமல்லருக்கு என்ன கோபம் வந்தது தெரியுமா?"

"எட்டு மாதம் எங்களை எட்டிப் பாராமலே இருந்தவருக்குக் கோபம் வேறேயா? போகட்டும், எங்கே இப்படி எல்லோரும் தலைதெறிக்க ஓடுகிறீர்கள்?" "புள்ளலூர்ச் சண்டையைப்பற்றி கேள்விப்படவில்லையா?" என்று சொல்லிக் கொண்டே கண்ணன் ரதத்தில் ஏறினான். "ஓகோ! சண்டைக்குப் பயந்துகொண்டா இப்படி ஓடுகிறீர்கள்?" என்று சிவகாமி பரிகாசச் சிரிப்புடன் கேட்டாள். "இல்லை, அம்மா, இல்லை; சண்டைக்குப் பயந்து ஓடுகிறவர்களை நாங்கள் துரத்திக்கொண்டு ஓடுகிறோம். தங்கச்சி! நீ மட்டும் இங்கேயே இருந்தால், நான் திரும்பி வரும்போது இந்த ரதத்தின் சக்கரத்திலே கங்கபாடி அரசன் துர்விநீதனைக் கட்டிக் கொண்டு வருவதைப் பார்ப்பாய்!" என்றான். அண்ணா! நான் கட்டாயம் இங்கேயே இருக்கிறேன். மாமல்லரிடமும் சொல்லுங்கள்!" என்று சிவகாமி கூறி, மறுபடியும் தயக்கத்துடன், "நான் ஏதாவது தவறு செய்திருந்தாலும் மன்னித்துக் கொள்ளும்படி சொல்லுங்கள்!" என்றாள். அதே சமயத்தில் கண்ணன் சாட்டையைச் சுளீர் என்று கொடுக்கவே, குதிரைகள் பிய்த்துக்கொண்டு கிளம்பின. கண்ணன் தலையை மட்டும் திருப்பி, 'ஆகட்டும்' என்பதற்கு அறிகுறியாகக் குனிந்து சமிக்ஞை செய்தான். மறுகணம் ரதம் மாயமாய்ப் பறந்து சென்றுவிட்டது.

அப்போது உள்ளே இருந்து வந்த ஆயனர், "சிவகாமி! யாருடன் பேசிக்கொண்டிருந்தாய்? ரதத்திலே போனது யார்?" என்று கேட்டார். "கண்ணபிரான், அப்பா! ரதத்துக்கு முன்னால் குதிரை மேல் மாமல்லரும் பரஞ்சோதியும் போனார்கள்!" "அப்படியா? நாம் அவர்களை விட்டுவிட்டு வந்தாலும் அவர்கள் நம்மை விடமாட்டார்கள் போலிருக்கிறதே?" "அவர்கள் நமக்காக வரவில்லை, அப்பா!" "நமக்காக அவர்கள் ஏன் வரப்போகிறார்கள். சிற்பியின் வீட்டைத் தேடிச் சக்கரவர்த்திகள் வந்த காலம் எல்லாம் மலை ஏறிப் போய்விட்டது, சிவகாமி!" "அப்படிச் சொல்லாதீர்கள், அப்பா! கோட்டையை விட்டுக் கிளம்ப அனுமதி கிடைத்தவுடனே மாமல்லர் நம்முடைய வீட்டைத் தேடிக்கொண்டுதான் வந்தாராம்." "அப்படியானால் குண்டோதரன் சொன்னது உண்மைதானா?" "ஆமாம், நாம் வீட்டில் இல்லாமற் போனதில் மாமல்லருக்குக் கோபம் என்பதும் உண்மைதான்." "அதனால்தான் நான் சொன்னேன், இருக்கும் இடத்திலேயே இருப்போம் என்று. நீ பிடிவாதம் பிடித்து, தேச யாத்திரை கிளம்ப வேண்டுமென்று ஒற்றைக் காலால் நின்றாய்! அதன் பலனைப் பார்!"

ஆயனருக்கும் மனம் கசந்து போயிருந்தபடியால், இப்படியெல்லாம் பிறர்மேல் குறை சொல்வது கொஞ்ச நாளாக வழக்கமாய்ப் போயிருந்தது எனினும், இப்போது அவர் கூறியது உண்மையானபடியால், சிவகாமிக்குப் பெரிதும் வேதனை உண்டாயிற்று. "போனதைப்பற்றிச் சொல்லி என்ன பயன், அப்பா?" "ஒன்றுமில்லைதான்; இருந்தாலும், இந்த வழியாய்ப் போனவர்கள் சற்று நின்று நம்மைப் பார்த்துவிட்டுப் போகக்கூடாதா? ஒரு காலத்தில் மாமல்லர் நம்மிடம் எவ்வளவு பிரியமாயிருந்தார்?"

"பிரியத்துக்கு இப்போதுதான் என்ன குறைவு வந்தது? இது யுத்த காலமல்லவா? அதனால் எல்லாருக்கும் அவசரமாயிருக்கிறது. திரும்பி வரும்போது மாமல்லர் இங்கே வந்து நம்மைப் பார்ப்பார் என்று கண்ணபிரான் சொன்னான், அப்பா!" "அந்தமட்டில் சந்தோஷம் ஆனால், எதற்காக இப்படி எல்லாரும் ஓடுகிறார்களாம்?" "புள்ளலூர் என்னுமிடத்தில் பெரிய யுத்தம் நடந்ததாம்!.." "ஓகோ! யுத்தக்களத்திலிருந்துதான் இப்படி ஓடுகிறார்களாக்கும்! ஆஹா! காலம் எப்படி மாறிவிட்டது! முன் காலத்தில் போருக்குப் புறப்படுகிறவர்கள் வெற்றி அல்லது வீரசொர்க்கம் என்று உறுதியுடன் கிளம்புவார்கள். போர்க்களத்தில் முதுகு காட்டி ஓடுவதைப்போல் கேவலம் வேறொன்றுமில்லை என்று நினைப்பார்கள்..."

"அப்பா! இந்த யுத்தத்தில் போர்க்களத்திலிருந்து ஓடியவர்கள் எதிரிகள்தான்; அது உங்களுக்குத் திருப்திதானே?" "அதிலே என்ன திருப்தி? சுத்த வீரர்களை வென்று ஜயக்கொடி நாட்டினால் புகழும் பெருமையும் உண்டு. புறமுதுகிட்டி ஓடுகிறவர்களைத் துரத்தி ஜயிப்பதில் என்ன கௌரவம் இருக்கிறது?" எந்த வழியிலும் ஆயனரைத் திருப்தி செய்யமுடியாது என்பதைக் கண்ட சிவகாமி அவருடன் பேசுவதில் பயனில்லையென்று தீர்மானித்து மௌனம் பூண்டாள். இருவருடைய உள்ளங்களும் வெவ்வேறு சிந்தனையில் ஆழ்ந்தன.

அன்று சூரியன் அஸ்தமிக்க ஒரு நாழிகை இருக்கும்போது குண்டோதரன் திடும்பிரவேசமாக வந்து சேர்ந்தான். அவன் எங்கே போயிருந்தான், புத்த பிக்ஷுவைக் கண்டுபிடித்தானா, குதிரை திரும்பக் கிடைத்ததா என்னும் விஷயங்களைப் பற்றி ஆயனரும் சிவகாமியும் ஆவலுடன் அவனை விசாரித்தார்கள். "அதை ஏன் கேட்கிறீர்கள், போங்கள்! உங்களுடைய சொல்லைத் தட்டிவிட்டு, புத்த பிக்ஷுவைப் பிடிப்பதற்காக ஓடினாலும் ஓடினேன்; நேரே யுத்த களத்திலேயே போய் மாட்டிக் கொண்டேன். அப்பப்பா! இந்த மாதிரி பயங்கர யுத்தத்தை நான் கண்டதுமில்லை; கேட்டதுமில்லை!" என்றான் குண்டோதரன். சிவகாமி, "என்ன சண்டை? எங்கே நடந்தது? சண்டை முடிவு என்ன ஆயிற்று?" என்று கேட்டாள். அதன் பேரில் குண்டோதரன் புள்ளலூர் சண்டையைப் பற்றி விவரமாகக் கூறினான். பழந்தமிழ் நாட்டின் சரித்திரத்தில் பிரசித்தி பெற்ற அந்தப் புள்ளலூர்ச் சண்டையைப்பற்றி இப்போது வாசகர்களும் தெரிந்து கொள்வது அவசியமாகும்!

வாதாபிப் புலிகேசியின் சைன்யம் பல்லவ சாம்ராஜ்யத்தின் மீது படையெடுத்து வந்த சில நாளைக்கெல்லாம் கங்கநாட்டு அரசன் துர்விநீதனுடைய சைன்யம் திரண்டு பல்லவ இராஜ்யத்தின் மேற்கு எல்லையில் வந்து நின்றது. வாதாபி சைன்யத்தினால் பல்லவர் படை முறியடிக்கப்பட்டது என்ற செய்தி வந்ததும் பல்லவ இராஜ்யத்துக்குள் பிரவேசிக்க ஆயத்தமாக அந்தச் சைனியம் காத்துக்கொண்டிருந்தது. ஆனால், திடீரென்று துர்விநீதனுக்கு என்ன தோன்றிற்றோ என்னவோ, தெரியவில்லை. ஒரு நாள் கங்கநாட்டுச் சைனியம் பல்லவ இராஜ்யத்துக்குள் நுழைந்துவிட்டதென்றும் காஞ்சியை நோக்கி முன்னேறி வருகிறதென்றும் தெரிந்தது. இதையறிந்த மகேந்திர பல்லவர் வடக்குப் போர் முனையிலிருந்து குமார சக்கரவர்த்திக்குக் கட்டளை அனுப்பினார். திருக்கழுக்குன்றத்திலுள்ள பாதுகாப்புப் படையுடன் சென்று கங்கநாட்டுச் சைனியம் காஞ்சியை அணுகுவதற்கு முன் அதை எதிர்க்கும்படியாகச் சொல்லி அனுப்பினார். இத்தகைய கட்டளைக்காக எட்டுமாத காலமாகத் துடிதுடித்துக் கொண்டிருந்த மாமல்ல நரசிம்மர் தளபதி பரஞ்சோதியுடன் உடனே கிளம்பிச் சென்று திருக்கழுக்குன்றத்திலிருந்த படைக்குத் தலைமை வகித்து நடத்திச் சென்றார். காஞ்சி நகருக்குத் தென் மேற்கே இரண்டு காத தூரத்தில் புள்ளலூர்க் கிராமத்து எல்லையிலே இரண்டு சைன்யங்களும் சந்தித்தன.

மாமல்லர் தலைமை வகித்த பல்லவ சைனியத்தைக் காட்டிலும் கங்கநாட்டுச் சைனியம் மூன்று மடங்கு பெரியது. ஆனாலும், மாமல்லரின் வீரப்படை கங்கநாட்டுச் சைன்யத்தின் மேல் எதிர்பாராத சமயத்தில் இடி விழுவதுபோல் விழுந்தது. மாமல்லரும் பரஞ்சோதியும் கையாண்ட யுத்த தந்திரங்களும், போர்க்களத்தில் முன்னணியில் நின்று நிகழ்த்திய வீரச் செயல்களும், பல்லவ வீரர்களுக்கு இணையில்லாத உற்சாகத்தையும் துணிச்சலையும் அளித்தன. போர் உச்ச நிலை அடைந்தபோது கங்க சைனியத்தை மற்றொரு பக்கத்தில் இன்னொரு புதிய படை தாக்குவதாக வதந்தி உண்டாயிற்று. அவ்வளவுதான்! அத்தனை நேரமும் ஒருவாறு தைரியமாகப் போரிட்டு வந்த கங்க சைனியத்தின் வீரர்களைப் பீதி பிடித்தது. உயிர் பிழைத்தாற் போதும் என்று கங்க வீரர்கள் சிதறி ஓட ஆரம்பித்தார்கள்.

கங்க நாட்டரசன் துர்விநீதன் பட்டத்து யானை மேல் ஏறிக் கொண்டு தெற்குத் திக்கை நோக்கி ஓடிக் கொண்டிருந்ததாகச் செய்தி வந்தது. அவனை எப்படியாவது சிறைப்படுத்த வேண்டுமென்று தீர்மானித்து மாமல்லரும் பரஞ்சோதியும் பல்லவ சைனியத்தைச் சிறு சிறு படைகளாகப் பிரித்துத் தெற்கு நோக்கிப் பல வழிகளிலும் போகச் சொல்லிவிட்டுத் தாங்களும் அதே திசையில் அதிவேகமாகச் சென்றார்கள். போர்க்களத்தில் தறிகெட்டு ஓடிய ஒரு குதிரையைக் கைப்பற்றி அதன் மேல் ஏறிக்கொண்டு குண்டோதரனும் அவர்களைப் பின்தொடர்ந்து வந்தான். துரதிருஷ்ட்டவசமாக வழியில் அவன் ஏறிவந்த குதிரை காலை ஒடித்துக்கொண்டது. அதனால் அவன் பின்னால் தங்கிவிடும்படி நேர்ந்தது. குதிரையை அப்படியே விட்டு விட்டுக் கால்நடையாக நடந்து அசோகபுரம் வந்து சேர்ந்ததாகக் கூறிக் குண்டோதரன் அவனுடைய வரலாற்றை முடித்தான்.
 

Meena

Saha Moderator
Staff
Messages
1,070
Reaction score
85
Points
48
இருபத்தைந்தாம் அத்தியாயம்

"திருப்பாற் கடல்"

புள்ளலூர்ச் சண்டையைப் பற்றிக் குண்டோதரன் கூறிய விவரங்களைக் கேட்கக் கேட்க, மேலும் மேலும் அதைப்பற்றித் தெரிந்துகொள்ள வேண்டுமென்னும் ஆவல் ஆயனருக்கும் சிவகாமிக்கும் பொங்கிப் பெருகியது. முக்கியமாகப் போர்க்களத்தில் மாமல்லர் நிகழ்த்திய அதி அற்புத தீரச் செயல்களைப் பற்றிக் கேட்பதில் சிவகாமி அடங்காத தாகம் கொண்டிருந்தாள். குண்டோதரனும் குதூகலத்துடன் அந்த வீரச் செயல்களை வர்ணித்தான். "ஆஹா! போர்க்களத்தில் எதிரிகளுக்கிடையில் புகுந்து மாமல்லர் வீர வாளைச் சுழற்றியபோது எப்படியிருந்தது தெரியுமா? அது கேவலம் வாளாகவே தோன்றவில்லை. திருமாலின் சக்ராயுதத்தைப் போலவே சுழன்று ஜொலித்தது! அந்த வாளிலிருந்து கணந்தோறும் நூறு நூறு மின்னல்கள் மின்னின. ஒவ்வொரு மின்னலும் ஒவ்வோர் எதிரியின் தலையைத் துண்டித்து எறிந்தது..."

இப்படி வர்ணித்துக் கொண்டே இருந்த குண்டோதரன் திடீரென்று நிறுத்தி, "குருவே! ("விஹாரம்" என்பது புத்தபெருமானின் கோயிலும் பௌத்த பிக்ஷுக்கள் தங்கும் மடமும் சேர்ந்து அமைந்தது. 'சைத்யம்' என்பது புத்த பகவானின் தனிப்பட்ட ஆலயமாகும்.) இந்த விஹாரத்திலிருந்த வயோதிக புத்த பிக்ஷு எங்கே?" என்று கேட்டான். "அப்பனே! நாங்கள் வந்ததிலிருந்து அவர் பெரும்பாலும் இங்கே இருப்பதில்லை. அநேகமாக சைத்யத்திலேயே இருக்கிறார். தினம் இரண்டு தடவை இங்கே வந்து எங்களுக்கு என்ன வேண்டும் என்று விசாரித்துவிட்டுப் போய்விடுகிறார்!" என்றார் ஆயனர். "குருவே! அவரை அவசரமாகப் பார்க்க வேண்டும், பார்த்து விட்டு வருகிறேன்" என்று சொல்லிவிட்டுப் போனான்.

குண்டோதரன் விஹாரத்திலிருந்து கிளம்பி வாசலில் வந்தபோது சூரியன் அஸ்தமித்து அந்தி மயங்கிக் கொண்டிருந்த நேரம். ஆனால், அன்று சாதாரண அந்தி நேரமாகக் காணப்படவில்லை. இரவானது திடீரென்று இருண்டு திரண்டு நாற்புறமும் சூழ்ந்து வந்ததாகத் தோன்றியது. இதற்குக் காரணம் என்னவென்று குண்டோதரன் வானத்தை நோக்கியபோது, வடக்குத் திக்கில் மைபோல் கறுத்துக் கொண்டல்கள் திரள் திரளாக மேலே எழுந்து வருவதைக் கண்டான். "ஆஹா! இன்றிரவு பெருங்காற்றும் மழையும் திருவிளையாடல் புரியப் போகின்றன. பகலெல்லாம் அவ்வளவு புழுக்கமாயிருந்த காரணம் இதுதான் போலும்!" என்று குண்டோதரன் தனக்குள் சொல்லிக் கொண்டான்.

அவர்கள் தங்கியிருந்த விஹாரத்திலிருந்து சற்றுத் தூரத்தில் தனித்திருந்த பாழடைந்த புத்த சைத்யத்தைக் குண்டோதரன் நெருங்கியபோது உள்ளேயிருந்து பேச்சுக்குரல் வந்தது. வௌியிலேயே இருள் கவிழ்ந்து சூழ்ந்திருந்த நிலையில், சைத்யத்துக்குள் குடிகொண்டிருந்த அந்தகாரம் எப்படியிருந்திருக்கவேண்டுமென்று சொல்ல வேண்டியதில்லை. அந்தக் கன்னங்கரிய இருளின் உதவியால் குண்டோதரன் பேச்சுக் குரல் வந்த இடத்துக்கு வெகு சமீபத்தில் போய் மூச்சுக்கூடக் கெட்டியாக விடாமல் தூண் மறைவில் நின்றான்: பின்வரும் சம்பாஷணை அவன் காதில் விழுந்தது.

"உடனே, இந்தக் கணமே, அவர்களை அழைத்துக் கொண்டு கிளம்புங்கள். பொழுது விடிவதற்குள்ளாக வராக நதியைத் தாண்டிவிட வேண்டும். வழியிலுள்ள கிராமங்களில் வண்டி கிடைத்தால் ஏற்றிக்கொண்டு போங்கள். எப்படியும் நாளைச் சூரியோதயத்துக்குள் வராக நதியைத் தாண்டி விடுங்கள்." "அவர்கள் கிளம்ப மறுத்தால்...?" "தொல்லைதான், ஏதோ ஒரு பிசகினால் நான் போட்ட திட்டமெல்லாம் வீணாய்ப்போய்விட்டது. ஆனாலும், புத்த பகவான் அருளால் எல்லாம் ஒழுங்காகிவிடும். அவர்களிடம் எதையாவது சொல்லிப் புறப்படச் செய்யுங்கள். இங்கே பெரிய சண்டை நடக்கப் போவதாகச் சொல்லுங்கள். இதெல்லாம் ஒன்றும் பலிக்காவிட்டால், திருப்பாற்கடல் உடைப்பு எடுத்துக் கொண்டு விட்டதாகச் சொல்லுங்கள்!" "சுவாமி! இது என்ன சொல்கிறீர்கள்?"

"ஆம்; திருப்பாற்கடல் ஏற்கனவே அலைமோதிக் கொண்டிருக்கிறது. புத்தபகவான் கருணையினால் இன்று மழை பெய்தால் கட்டாயம் கரை உடைத்துக் கொள்ளும்..." என்று கூறி நாகநந்தி தமது ஆழ்ந்த பயங்கரக் குரலில் சிரித்தார். புத்த பிக்ஷு மேலும் கூறிய மொழிகள் முன்னைக் காட்டிலும் மெதுவான குரலில் வௌிவந்தன! "அப்படியும் அவர்கள் கிளம்பாமல், உடைப்பு எடுத்து வெள்ளமும் வந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? விஹாரத்தில் இன்னும் ஒரு தெப்பம் மீதி இருக்கிறதல்லவா? அதில் ஏற்றிக்கொண்டு, போன மாதம் பார்த்த பாறை மேட்டுக்குப் போய்ச் சேருங்கள். மற்றவர்கள் எப்படியானாலும் சிவகாமியைக் கட்டாயம் காப்பாற்றியாக வேண்டும், தெரியுமா சுவாமி!"

மேற்படி சம்பாஷணையில் கடைசிப் பகுதியைக் கேட்டுக் கொண்டிருந்தபோது, குண்டோதரனுக்கு நெஞ்சு படபடவென்று அடித்துக்கொண்டது. நாகநந்தியின் சிரிப்பு அவனுடைய தேகத்தைச் சிலிர்க்கச் செய்தது. அன்று ராத்திரி ஏதோ பெரிய விபரீதம் ஏற்படப் போகிறதென்பதையும், அதைத் தடுக்கவேண்டிய பொறுப்பு தன்னுடைய தலையில் சாய்ந்திருக்கிறதென்பதையும் அவன் உணர்ந்தான். அந்தக் காரியத்தில் தனக்கு உதவி புரியும்படி தான் வழிபடும் தெய்வமாகிய பழனிமலையில் வீற்றிருக்கும் முருகக் கடவுளை வேண்டிக்கொண்டான்.

சம்பாஷணை முடிந்ததும் பிக்ஷுக்கள் இருவரும் சைத்யத்திலிருந்து வௌியில் வந்தார்கள். அவர்களைப் பின் தொடர்ந்து குண்டோதரனும் வந்தான். இதற்குள்ளாக மாலை போய் இரவு வந்து நன்றாக இருட்டிவிட்டது. வடகிழக்கிலிருந்து திரண்டு வந்த மேகங்கள் வானத்தைப் பெரும்பாலும் மூடியிருந்தாலும், தெற்கிலும் மேற்கிலும் இன்னும் சில நட்சத்திரங்கள் தெரிந்தன. சைத்தியத்திலிருந்து வௌியேறிய பிக்ஷுக்களில் ஒருவர் அருகிலிருந்த விஹாரத்தை நோக்கிச் சென்றார். மற்றொருவர் சைத்யத்தைச் சுற்றிக் கொண்டு தென்மேற்குத் திசையை நோக்கிச் சென்றார்.

ஒரு கணம் குண்டோதரனுடைய மனத்தில் ஒரு போராட்டம் நிகழ்ந்தது. விஹாரத்துக்குப் போய் ஆயனருக்கு எச்சரிக்கை செய்ய வேண்டாமா என்று எண்ணினான். ஆனால், என்ன விதமாக எச்சரிக்கை செய்வது? எப்படியும் அவர்கள் காப்பாற்றப்படுவார்கள் என்று மேற்படி பிக்ஷுக்களின் சம்பாஷணையிலிருந்தே நன்கு தெரிந்தது. எனவே, அச்சந்தர்ப்பத்தில் தன்னுடைய வேலை நாகநந்தியைப் பின் தொடர்வதுதான் என்று குண்டோதரன் தீர்மானித்தான். அவ்விதமே அவரைப் பின்தொடர்ந்து குண்டோதரன் சற்று தூரத்திலேயே நடந்து சென்றான். கொஞ்ச தூரம் போனதும் ஒரு மரத்தின் பின்னால் கட்டியிருந்த குதிரையை அவிழ்த்து அதில் நாகநந்தி ஏறிக் கொண்டார்.

ஆஹா! திருட்டுபோன குதிரை மறுபடியும் கிடைக்கப் போகிறது! என்று குண்டோதரன் எண்ணிக் கொண்டான். கணத்துக்குக் கணம் வேகமாகிக்கொண்டிருந்த காற்றினாலும் இருட்டினாலும் நாகநந்தி குதிரை மேல் ஏறியபோதிலும் மெதுவாகவே போக வேண்டியிருந்தது. எனவே அவரைத் தொடர்ந்து போவது கஷ்டமில்லை. சில சமயம் குதிரை அடிச் சத்தம் முன்னால் கேட்கிறதோ பின்னால் கேட்கிறதோ என்பது சந்தேகமாயிருந்தது. இரண்டு பக்கத்திலும் கேட்பது போலவும் இருந்தது. இது வீண் பிரமை என்று எண்ணிக் கொண்டு மேலே சென்றான்.

ஏறக்குறைய மூன்று நாழிகை வழிவந்த பிறகு, எதிரே நீண்ட மலைத்தொடர் போன்ற ஓர் இருண்ட கரை நெடுந்தூரத்துக்கு நெடுந்தூரம் தென்பட்டது. அதே சமயத்தில் கண்ணைப் பறிக்கும் மின்னல்களுடனும், அண்டம் அதிரும் இடி முழக்கங்களுடனும் மழை பெய்யத் தொடங்கியது. மின்னல் வௌிச்சத்தில் நாகநந்தி மேட்டின் ஓரமாக இருந்த ஒரு மரத்தில் குதிரையைக் கட்டிவிட்டு அந்தக் கரையின் மேல் ஏறுவது குண்டோதரனுக்குத் தெரிந்தது. அதே இடத்தில் மேட்டின் மீது அவனும் ஏறினான். மழையில் நனைந்த காரணத்தினால் கரையின் மண் சேறாகி வழுக்கத் தொடங்கிவிட்டபடியால் மேட்டில் ஏறுவது சுலபமாயில்லை. கடைசியில், கரையின் அடியிலிருந்து வளர்ந்திருந்த மரத்தின் உதவியால் கஷ்டப்பட்டு ஏறிக் குண்டோதரன் கரை உச்சியை அடைந்தபோது, பளீரென்று வீசிய மின்னல் வௌிச்சத்தில் ஓர் அபூர்வ பயங்கரக் காட்சி தென்பட்டது.

கரைக்கு அப்பால் இருந்த திருப்பாற் கடல் என்னும் ஏரி புயற்காற்றினால் கொந்தளித்தது. ஒரு மகா சமுத்திரத்தைப்போல் அலை மோதிக் கொண்டு காட்சி அளித்தது. கொந்தளித்து எழுந்த அலைகள் மின்னல் வௌிச்சத்தில் வெள்ளை வெளேரென்று ஜொலித்தபடியால், உண்மையிலேயே திருப்பாற்கடல் என்னும் பெயர் அந்த ஏரிக்கு அச்சமயம் மிகவும் பொருத்தமாயிருந்தது. அதே நேரத்தில் குண்டோதரன் நின்ற இடத்துக்குச் சற்றுத் தூரத்தில் அவனுடைய உடம்பின் இரத்தத்தையெல்லாம் சுண்டச் செய்யும்படியான இன்னொரு பயங்கரத் தோற்றமும் தென்பட்டது. அலைமோதிய ஏரிக்கரையில் கையை உயரத் தூக்கிக் கொண்டு நின்ற நாகநந்தி, 'ஹா ஹா' என்று பேய்க் குரலில் சிரித்த சத்தமானது, புயல் முழக்கத்தின் ஓசையையும் அலைகளின் ஆரவார ஒலியையும் அடக்கிக் கொண்டு மேலெழுந்தது. நாகநந்திக்குப் பக்கத்தில் ஏரிக்கரையைப் பிளந்து கொண்டு ஒரு சிறு கால்வாய் வழியாகத் தண்ணீர் ஓட ஆரம்பித்தது. நாகநந்தி அடிகளின் காலடியில் ஒரு மண்வெட்டி கிடந்தது!
 

Meena

Saha Moderator
Staff
Messages
1,070
Reaction score
85
Points
48
இருபத்தாறாம் அத்தியாயம்

இருளில் ஒரு குரல்

கணநேரம் ஜொலித்து உலகை ஜோதி வெள்ளத்தில் மூழ்குவித்த மின்னலின் ஒளியிலே, புத்த பிக்ஷு ஏரிக்கரையில் நின்று கைகளைத் தூக்கிப் பேய்ச் சிரிப்பு சிரித்த காட்சியைக் கண்டதும், சற்று நேரம் குண்டோதரன் பீதியினால் கைகால்களை அசைக்க முடியாதவனாய் மரத்தோடு மரமாக நின்றான். பிறகு மனத்தைத் திடப்படுத்திக்கொண்டு சேற்றில் தட்டுத் தடுமாறிக் கரைமேல் நடந்தான். கரையைப் பிளந்து கொண்டு தண்ணீர் ஓடிய இடத்தை நோக்கி உத்தேசமாக அவன் நடந்தபோது மறுபடியும் கண்ணைப் பறிக்கும் மின்னல் ஒன்று மின்னியது. அதன் ஒளியில், வெட்டப்பட்டிருந்த கால்வாய், முன்னால் பார்த்ததைக் காட்டிலும் அகன்றிருப்பதையும், தண்ணீர் முன்னைவிட வேகமாய்க் கரையைப் பிளந்துகொண்டு போவதையும் பார்த்தான். புத்த பிக்ஷு நின்ற இடத்தில் அவரைக் காணவில்லை. ஆனால், மண் வெட்டி மட்டும் கிடந்த இடத்திலேயே கிடந்தது.

உடனே குண்டோதரனுடைய மனத்தில் சிறிது தைரியம் உண்டாயிற்று. கால்வாயை ஒரே தாண்டாகத் தாண்டி அப்பால் குதித்தான். அக்கரையில் கிடந்த மண்வெட்டியைக் கையினால் தடவி எடுத்துக்கொண்டு அவசர அவசரமாக மண்ணைச் சரித்து வாய்க்காலில் தள்ளத் தொடங்கினான். அப்படி தள்ளிக்கொண்டிருக்கும்போதே 'ஆஹா! இது வீண் பிரயத்தனம் போலிருக்கிறதே!' என்ற எண்ணம் அவன் மனத்தில் தோன்றியது.

அதே சமயத்தில் அவன் கழுத்தண்டை ஏதோ ஸ்பரிச உணர்ச்சி ஏற்படவே, சட்டென்று மண்வெட்டியைக் கீழே போட்டுவிட்டு நிமிர்ந்தான். அவன் எதிரே கும்மிருட்டில் ஆஜானுபாகுவான ஒரு கரிய உருவம் நின்றது. அது புத்த பிக்ஷுவின் உருவந்தான் என்பதையும், அவர் தமது இரும்புக் கைகளால் தன்னுடைய கழுத்தைப் பிடித்துநெறிக்க முயல்கிறார் என்பதையும் ஒரு கணத்தில் தெரிந்துகொண்டான். குண்டோதரனுடைய வஜ்ரக் கைகள் புத்த பிக்ஷுவின் கை மணிக்கட்டுகளைப் பிடித்துக் கொண்டன. மறுகணத்தில் குண்டோதரனுடைய தலைக்கு மேலே நாகநந்தி பிக்ஷுவின் பேய்ச் சிரிப்பு மீண்டும் ஒலித்தது.

இடையிடையே வானத்தைக் கிழித்துக்கொண்டு தோன்றி மறைந்த மின்னல் வௌிச்சத்தினால் இன்னும் கன்னங்கரியதாகத் தோன்றிய காரிருளில், விளிம்பு வரை தண்ணீர் ததும்பி அலை மோதிக்கொண்டிருந்த ஏரிக்கரையில், கணத்துக்குக் கணம் அகன்று வந்த உடைப்புக்கு அருகில், குள்ள உருவமுடைய குண்டோதரனுக்கும் நெடிதுயர்ந்து நின்ற புத்த பிக்ஷுவுக்குமிடையே பிடிவாதமான மல்யுத்தம் ஆரம்பமாயிற்று. அந்த விசித்திரமான துவந்த யுத்தம் கால் நாழிகை நேரம் நடந்திருக்கலாம். அப்போது, கரையில் மோதிய ஏரி அலைகளின் 'ஓ' என்ற சத்தம், கரையைப் பிளந்துகொண்டு அப்பால் விழுந்த பிரவாகத்தின் 'ஹோ' என்ற சத்தம், வரவர வலுத்துக் கொண்டிருந்த 'சோ' என்ற மழைச் சத்தம், 'விர்' என்று அடித்த புயற்காற்றில் மரங்கள் பிசாசுகளைப்போல் ஆடிய மர்மச் சத்தம் ஆகிய இந்த நானாவிதப் பேரொலிகளையும் அடக்கிக்கொண்டு, "குண்டோதரா! குண்டோதரா!" என்ற கம்பீரமான குரல் கேட்டது.

துவந்துவ யுத்தம் செய்த இருவரும் ஒரு கணம் ஸ்தம்பித்து நின்றார்கள். ஆனால், அவர்களுடைய கைப்பிடி மட்டும் நழுவவில்லை. அது யாருடைய குரல் என்று குண்டோதரன் சிந்தித்தான். அசோகபுரத்திலிருந்து வரும்போது, தனக்குப் பின்னாலும் குதிரையடிச் சத்தம் கேட்டது அவனுக்கு நினைவு வந்தது. "குண்டோதரா! சண்டையை நிறுத்து! உடைப்பை அடக்க முயலாதே! வீண்வேலை! ஓடிப்போய் ஆயனரையும் சிவகாமியையும் காப்பாற்று! நான் சொல்லுவது காதில் விழுகிறதா?" அந்தக் குரல் தன் எஜமானருக்கும் எஜமானரின் குரல் என்று குண்டோதரன் அறிந்துகொண்டான். "விழுந்தது, பிரபு! ஆக்ஞை!" என்று கூவினான்.

குண்டோதரன் மறு குரல் கொடுத்தானோ இல்லையோ, இன்னொரு பெரிய மின்னல் ஆயிரம் சூரியன் ஒளியை ஒத்துக் கண்களைக் குருடாக்கிய மின்னல் மின்னியது! அடுத்தாற்போல் ஒரு பேரிடி இடிக்கப் போகிறதென்பதைக் குண்டோதரன் உணர்ந்தான். "இடி முழக்கம் கேட்ட நாகம் போல்" என்னும் பழமொழி அச்சமயம் அவனுக்கு ஞாபகம் வந்தது. பிக்ஷுவின் கை மணிக்கட்டுகளை அவன் இன்னும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான். அவன் எதிர்பார்த்ததுபோலவே இடி இடித்தது. அண்ட பகிரண்டங்கள் எல்லாம் இடித்து தடதடவென்று தலையிலே விழுவதுபோல இடித்தது. இடி இடித்து நின்றதும் குண்டோதரனுடைய காதில் அதற்கு முன்னால் கேட்டுக் கொண்டிருந்த அலைச் சத்தம், மழைச் சத்தம் எல்லாம் ஓய்ந்து 'ஙொய்' என்ற சப்தம் மட்டும் ஒலித்துக் கொண்டிருந்தது. "ஐயோ! காது செவிடாகி விட்டதா, என்ன?' என்று குண்டோதரன் ஒரு கணம் எண்ணமிட்டான். ஆனால், அதே இடிச் சத்தம் காரணமாக நாகநந்தியின் பிடி தளர்ந்திருக்கிறது என்பதை அவன் தேக உணர்ச்சி சொல்லிற்று. அவ்வளவுதான்! தன்னுடைய வஜ்ர சரீரத்தின் முழுப்பலத்தையும் பிரயோகித்துப் பிக்ஷுவை ஒரு தள்ளு தள்ளினான்.

ஏரிக் கரையின் அப்புறத்தில் பிக்ஷு உருண்டு உருண்டு போய் கீழே உடைப்புத் தண்ணீர் பிய்த்துக் கொண்டிருந்த பள்ளத்தில் தொப்பென்று விழுந்ததைக் குண்டோதரன் கண்டான். உடனே, ஒரு பெரிய அதிசயம் அவனைப் பற்றிக் கொண்டது. மின்னல் இல்லாதபோது புத்த பிக்ஷு கரையிலிருந்து உருண்டு பள்ளத்திலே விழுந்தது அவனுக்கு எப்படி தெரிந்தது? ஆஹா! இதென்ன வௌிச்சம்? குண்டோதரன் சுற்று முற்றும் பார்த்தான். சற்றுத் தூரத்தில் ஒரு பனைமரம் உச்சியில் பற்றி எரிவதைக் கண்டான். ஆ! அந்த மரத்தின் மேல் இடி விழுந்து தீப்பிடித்துக் கொண்டிருக்கிறது வௌிச்சத்திற்குக் காரணம் அதுதான்!

பற்றி எரிந்த பனை மரத்தின் வௌிச்சத்தில் குண்டோதரன் இன்னும் சில காட்சிகளைக் கண்டான். அந்தப் பனைமரத்தைத் தாண்டி ஒரு குதிரை அதிவேகமாய்ப் போய்க்கொண்டிருந்தது. அந்தக் குதிரை மேலிருந்தவர்தான் சற்று முன்னால் தனக்குக் குரல் கொடுத்தவர் என்பதை உணர்ந்தான். ஏரியின் ஓரமாக இன்னொரு மரத்தில் நாகநந்தி பிக்ஷு வந்த குதிரை கட்டப்பட்டிருப்பதையும் கண்டான். அதற்கு மேல் வேறொன்றையும் பார்க்கக் குண்டோதரன் விரும்பவில்லை. அந்தக் குதிரை இருந்த இடத்தை நோக்கிப் பாய்ந்து சென்றான். நடுவில் கால் சறுக்கிக் கீழே விழுந்ததைக் கூட அவன் பொருட்படுத்தவில்லை.

மரத்திலிருந்து குதிரையை அவிழ்த்துவிட்டு, அதன்மேல் குண்டோதரன் ஏறினானோ இல்லையோ, பனைமரத்து வௌிச்சமும் அணைந்து விட்டது. அதுவரையில் சிறு தூறலாக இருந்தது அப்போது பெருமழையாக மாறியது. எத்தனையோ பெருமழையைக் குண்டோதரன் பார்த்ததுண்டு. ஆனால் அன்றைய இரவு பெய்த மழை மாதிரி அவன் பார்த்ததேயில்லை. வானம் பொத்துக் கொண்டு, அதற்கு மேலே தங்கியிருந்த தண்ணீர் தொடதொடவென்று கொட்டுவதுபோல் மழை கொட்டிற்று.

"ஆஹா! ஏரி உடைப்புக்கும் இந்தப் பெரு மழைக்கும் பொருத்தந்தான். நல்ல நாள் பார்த்துத்தான் நாகநந்தி திருப்பாற்கடலை வெட்டிவிட்டார்!" என்று குண்டோதரன் எண்ணிக் கொண்டான். "எப்படியும் இந்த ஏரி வெள்ளம் அசோகபுரம் போய்ச் சேர்வதற்கு முன்னால் நாம் போய்ச் சேரவேண்டும்" என்று தீர்மானித்தான். ஆனால், அந்தத் தீர்மானத்தை அவனால் நிறைவேற்ற முடியவில்லை. அந்த இருளிலும், மழையிலும் குண்டோதரன் வழி கண்டுபிடித்துக் குதிரையை நடத்திக்கொண்டு அசோகபுரம் போய்ச் சேர்வதற்கு வெகுநேரம் முன்னாலேயே ஏரிக் கரை நெடுந்தூரத்துக்கு நெடுந்தூரம் உடைத்துக் கொண்டு வெள்ளம் பிரளயமாக ஓடத் தொடங்கி அசோகபுரத்தையும் அடைந்துவிட்டது.
 

Meena

Saha Moderator
Staff
Messages
1,070
Reaction score
85
Points
48
இருபத்தேழாம் அத்தியாயம்

"மாமல்லர் எங்கே?"

குண்டோதரனுக்கு எச்சரிக்கை செய்துவிட்டுக் குதிரை மேல் விரைந்து சென்ற மனிதர் யார் என்பதை நேயர்கள் ஊகித்துத் தெரிந்துகொண்டிருப்பார்கள். சிற்பம், சித்திரம், சங்கீதம் முதலான லளித கலைகளில் வல்லவராயிருந்தது போலவே யுத்தத் தந்திரக் கலையிலும் தேர்ச்சி பெற்றவரும், மாறுவேடம் பூணுவதில் நிகரற்ற சாமர்த்தியம் வாய்ந்தவரும், வாதாபியின் சமுத்திரம் போன்ற சைனியத்தை வடபெண்ணைக் கரையில் எட்டு மாதம் நிறுத்தி வைத்தவருமான மகேந்திர பல்லவ சக்கரவர்த்திதான். காஞ்சிக் கோட்டையிலிருந்து வடதிசையை நோக்கிக் கிளம்பியது முதல் மகேந்திர பல்லவர் கையாண்ட யுத்த தந்திரங்கள் இதைப் போல் பல சரித்திரங்கள் எழுதுவதற்குப் போதுமானவையாகும். நாகநந்தி என்னும் புத்த பிக்ஷுவின் வேஷம் பூண்டிருந்தவர் புலிகேசியின் அந்தரங்க நம்பிக்கைக்குப் பாத்திரமான ஒற்றர் என்று அவர் ஊகித்திருந்தார். அதைப் பரஞ்சோதி கொண்டு போன ஓலையிலிருந்து உறுதிப்படுத்திக் கொண்டார். நாகநந்தியின் கையெழுத்தையும் இலச்சினையையும் மேற்படி ஓலையிலிருந்து தெரிந்து கொண்டது அவருக்குப் பல விதங்களிலும் உபயோகமாக இருந்தது. அந்த உபயோகங்களில் ஒன்றுதான், பல்லவ ராஜ்யத்தின் எல்லைப்புறத்தில் காத்திருந்த கங்கநாட்டுத் துர்விநீதனை அவசரமாகக் காஞ்சி மாநகரை நோக்கி முன்னேறச் செய்தது.

புலிகேசியின் மாபெரும் சைனியத்திற்குப் பின்வாங்கிக் காஞ்சிக் கோட்டைக்குத் திரும்பி வந்து கொண்டிருந்த மகேந்திர பல்லவர் தாம் கோட்டைக்குள் புகுந்து கொள்வதற்கு முன்னால் ஒரு பெரு வெற்றியடைந்து பல்லவ வீரர்களுக்கும் பல்லவ சாம்ராஜ்யத்துக்கும் மக்களுக்கும் உற்சாகம் ஊட்டவேண்டுமென்று தீர்மானித்தார். போருக்குத் துடிதுடித்துக் கொண்டிருந்த குமார சக்கரவர்த்தியின் ஆத்திரத்துக்கு ஒரு போக்குக காட்டவும் இந்தச் சந்தர்ப்பத்தைச் சக்கரவர்த்தி பயன்படுத்திக்கொள்ள விரும்பினார். எனவே, நாகநந்தி எழுதியதுபோல் துர்விநீதனுக்கு உடனே காஞ்சியை நோக்கி முன்னேறும்படி ஓலை எழுதி அனுப்பினார். அதைப் பார்த்துவிட்டே துர்விநீதன் தன் சிறிய சைனியத்துடன் காஞ்சியை நோக்கி விரைந்து வந்தான்.

குண்டோதரன் கொடுத்த ஓலையைப் படித்ததும் நாகநந்திக்கு ஏற்பட்ட அளவில்லாத வியப்பையும் நேயர்கள் கவனித்திருப்பார்கள். அவருடைய ஓலையின்படி முன்னேறி வருவதாக துர்விநீதன் அதில் எழுதியிருந்தபடியால், தாம் அத்தகைய ஓலை ஒன்றும் அனுப்பவில்லை, இதில் ஏதோ சூழ்ச்சி நடந்திருக்கிறதென்று தீர்மானித்துக் கொண்டு நாகநந்தி குண்டோதரன் கொண்டு வந்த குதிரையில் ஏறிச் சென்று புள்ளலூர்ப் போர்க்களத்தை அடைந்தார். அதற்குள்ளாக, கங்கநாட்டுச் சைனியம் தோல்வி அடைந்து சேனாவீரர்கள் சிதறி ஓட ஆரம்பித்து விட்டார்கள். அந்த நிலைமையில், துர்விநீதனுடைய உயிரைக் காப்பாற்றுவது ஒன்றுதான் தாம் செய்யக்கூடியது என்பதை உணர்ந்த நாகநந்தி, அவனைத் தம்முடன் அழைத்துக்கொண்டு தெற்குத் திசையை நோக்கி விரைந்து ஓடினார்.

இந்தப் புள்ளலூர் யுத்தத்தில் மாமல்லரையும் பரஞ்சோதியையுமே முழுதும் நம்பி மகேந்திர பல்லவர் விட்டுவிடவில்லை. பொறுக்கி எடுத்த ஆயிரம் குதிரை வீரர்களுடன் புள்ளலூர்ப் போர்க்களத்துக்கு வந்து சேர்ந்தார். எதிர்பாராத இடத்தில் எதிர்பாராத சமயத்தில் வந்து தாக்கியபடியால், கங்கர் படை பீதியடைந்து ஓடலாயிற்று. புதிதாக வந்த குதிரைப்படைத் தலைவன் வஜ்ரபாகுவை மாமல்லர் சந்தித்தபோது, அந்த வீரன்தான் தம் தந்தையென்று அறிந்தார். அதனால் அவருடைய ஆத்திரம் அதிகமாயிற்று. இந்த ஒரு போரிலாவது தம்மை முழுதும் நம்பி விட்டுவிடக் கூடாதா என்று தந்தையிடம் சண்டை பிடித்த பிறகு, சிதறி ஓடும் கங்கர் படையைத் துரத்திச் சென்று நிர்மூலமாக்க அனுமதி கேட்டார். ஒரு நிபந்தனையுடன் சக்கரவர்த்தி அதற்கு அனுமதி கொடுத்தார். அந்த நிபந்தனை என்னவென்றால், 'தென்பெண்ணை நதி வரையில் எதிரிகளைத் துரத்திச் செல்லலாம்; நதியைக் கடந்து அப்பால் போகக் கூடாது' என்பதுதான். எதிரிகளைத் துரத்திச் செல்லும்படி மாமல்லரைத் தென் திசைக்கு அனுப்பிவிட்டு மகேந்திரர் திரும்பி போய்விடவில்லையென்பதைச் சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம். நாகநந்தியின் கொடூரச் சூழ்ச்சிகளை எதிர்ப்பதற்குக் கள்ளங்கபடமற்ற இளம் பிள்ளையான மாமல்லரையே நம்பி விட்டுவிட முடியுமா?

குண்டோதரனுக்கு எச்சரிக்கை செய்துவிட்டுக் கிளம்பிய மகேந்திர பல்லவர், இருட்டையும் புயலையும் பெரு மழையையும் பொருட்படுத்தாமல் தென்கிழக்குத் திசையை நோக்கிச் சென்றார். உதயமாவதற்கு ஒரு ஜாமம் இருக்கும் போது, தென்பெண்ணை நதிக் கரையை அடைந்தார். அப்போது மழையின் வேகம் குறைந்து வானத்தில் மேகங்கள் கலைந்து நட்சத்திரங்கள் கூடத் தெரிந்தன. அந்த இலேசான வௌிச்சத்தில் நதியும் நதிக்கரையும் அப்போது அளித்த காட்சியை வர்ணிப்பது இயலாத காரியம். நதியின் இரு கரையையும் தொட்டுக்கொண்டு 'ஹோ' என்ற இரைச்சலுடன் நொங்கும் நுரையுமாகப் பிரவாகம் போய்க் கொண்டிருந்தது. நேற்று அல்லது முந்தைய தினமாயிருந்தால் அத்தகைய பெரும் பிரவாகம் கூடச் சற்றுத் தூரத்திலிருந்த பார்வைக்கு தெரிந்திராது. அடர்ந்த தோப்புகளினால் அது மறைக்கப்பட்டிருக்கும், ஆனால் இப்போது நதிக்கரையில் நெருங்கி வளர்ந்திருந்த அவ்வளவு விருட்சங்களும் முறிந்து விழுந்து கிடந்தன!

மகேந்திரர் நதிக்கரையை நெருங்கியதும், முறிந்து விழுந்து கிடந்த மரங்களுக்கு மத்தியிலிருந்து குதிரை ஒன்று வௌியே வந்தது அதன் மேல் இருந்தவன் சத்ருக்னன். "பிரபு! இன்றிரவு நான் பட்ட கவலை என்றைக்கும் பட்டதில்லை. தங்களைத் தனியே அனுப்பிய என்னுடைய அறிவீனத்தை நினைத்து நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டிருந்தேன். இந்தப் புயலிலும் மழையிலும் தாங்கள் எப்படி வழி கண்டுபிடித்து வந்து சேர்ந்தீர்கள்?" என்றான் சத்ருக்னன். "நானும் எத்தனையோ இரவுகளைப் பார்த்திருக்கிறேன், சத்ருக்னா! ஆனால் இன்றைய இரவைப் போன்ற பயங்கரத்தைக் கண்டதில்லை. போகட்டும், நீ இங்கே காத்திருந்ததில் பயன் உண்டா?" என்று மகேந்திர பல்லவர் கேட்டார்.

"ஆம், பிரபு! இங்கேதான் அவர்கள் நதியைக் கடந்து சென்றார்கள்" என்றான் சத்ருக்னன். "துர்விநீதன் இருந்தானா? பார்த்தாயா?" "வெகு சமீபத்தில் நின்று பார்த்தேன்; துர்விநீதன் யானை மீதிருந்தான். மற்றவர்கள் ஏழெட்டுப் படகுகளில் சென்றார்கள். அப்போது புயல் ஆரம்பிக்கவில்லை கிட்டத்தட்ட அவர்கள் அக்கரையை அடைந்தபோதுதான் காற்று ஆரம்பித்தது. கரை ஓரம் போய்விட்டபடியால் தட்டுத் தடுமாறிக் கரையேறிவிட்டார்கள். அப்போது நதியில் பிரவாகமும் இவ்வளவு இல்லை.

"நீ சொன்ன இடத்துக்குத்தான் அவர்கள் போயிருக்கவேண்டும். பின்னால் படகு ஒன்றும் விட்டுவிட்டுப் போகவில்லையா?" "ஒரு படகை விட்டுப் போனார்கள் அதை நீங்களும் நானும் எடுத்துக்கொண்டு போய்ப் பிக்ஷுவைத் திண்டாடச் செய்யலாமென்று நினைத்தேன். ஆனால் புயல் நம்மையும் திண்டாட விட்டுப் படகை அடித்துக்கொண்டு போய் விட்டது!" "நல்லதாய்ப் போயிற்று, சத்ருக்னா! துர்விநீதனைத் தொடர இப்போது அவகாசமில்லை. அதைவிட முக்கியமான வேலை இருக்கிறது. மாமல்லனும் பரஞ்சோதியும் எங்கே இறங்கியிருக்கிறார்கள் என்று தெரிந்துகொண்டாயல்லவா?"

"இந்த நதிக்கரையில்தான் கிழக்கே அரை காத தூரத்தில் இருக்கிறார்கள். ஆ! இந்தப் பெரும் புயலில் அவர்கள் என்ன பாடுபட்டார்களோ; தெரியவில்லை!" "உடனே அவர்கள் இருக்குமிடம் போகவேண்டும். பொழுது விடிவதற்குள் அவர்கள் தென் பெண்ணையைக் கடந்து விட வேண்டும். உன் குதிரையின் உடம்பில் சக்தி இன்னும் இருக்கிறதா, சத்ருக்னா? என் குதிரை ரொம்பவும் தளர்ந்து விட்டது." "என் குதிரை இன்னும் போகும் பிரபு! இதன்மேல் ஏறிப் போங்கள், நான் இங்கேயே இருக்கிறேன்" "இல்லை, இரண்டு பேருந்தான் போகவேண்டும்..." "பிக்ஷு இங்கு வந்தால்...?" "பிக்ஷு இங்கு வரமாட்டார், சத்ருக்னா! நிச்சயமாக இன்னும் சில நாளைக்கு வரமாட்டார்." "ஏன் பிரபு!" "உன் சீடன் குண்டோதரன் அவரைத் தூக்கித் திருப்பாற்கடல் உடைப்பில் போட்டுவிட்டான்!" "என்ன? என்ன?" "அதோ அந்தச் சத்தம் உன் காதில் விழுகிறதா, சத்ருக்னா?"

"சத்ருக்னன் உற்றுக் கேட்டுவிட்டு, "ஆம் பிரபு! சமுத்திர கோஷம் மாதிரி இருக்கிறது! மறுபடியும் மழையா?" என்றான். "மழைச் சத்தம் அப்படியிராது திருப்பாற்கடல் உடைத்துக் கொண்டு விட்டது. நாளைப் பொழுது போவதற்குள் வராக நதியிலிருந்து தென்பெண்ணை வரையில் ஒரே பிரளயந்தான்!" "ஐயையோ? மாமல்லர்...?" என்று அலறினான் சத்ருக்னன். "வா! போகலாம்! மாமல்லனையும் பரஞ்சோதியையும் எச்சரித்துக் காப்பாற்றலாம்!" என்றார் மகேந்திரர். "சுவாமி, குண்டோதரன்?" "குண்டோதரன் திருப்பாற்கடல் உடைப்பை அடைக்க முயற்சி செய்தான். அது முடியாத காரியம்; 'ஓடிப்போய் ஆயனரையும் சிவகாமியையும் காப்பாற்று' என்று எச்சரிக்கை செய்துவிட்டு வந்தேன், என்ன செய்தானோ?" "ஆஹா! அவர்கள் வேறு அகப்பட்டுக் கொண்டார்களா? இன்றைக்கு உண்மையிலேயே மிகப் பயங்கரமான இரவுதான்!" என்று சத்ருக்னன் கூறி குதிரையைப் போகும்படி முடுக்கினான். "இது பயங்கரமான இரவானாலும் ஒரு பயன் கிடைத்தது சத்ருக்னா! புலிகேசியை வெல்வதற்கு இன்னொரு ஆயுதத்தைக் கண்டுபிடித்தேன்!" என்றார் சக்கரவர்த்தி. "பிரபு தாங்கள் உண்மையிலேயே விசித்திர சித்தர்தான்!" என்று சத்ருக்னன் வியப்புடன் கூறினான்.

இரு குதிரைகளும் நதிக்கரையோரமாகக் கிழக்குத் திசையை நோக்கிச் சென்றன. வழியெல்லாம் முறிந்து கிடந்த மரங்களைத் தாண்டிப் போவதில் அவர்களுக்கு எவ்வளவோ சிரமம் ஏற்பட்டது. எனினும், பொழுது புலரும் சமயத்தில் அவர்கள் பல்லவ சைனியத்தின் பாசறையை வந்தடைந்தார்கள். அல்லோல கல்லோலமாய்க் கிடந்த அந்தப் பாசறையில் நுழைந்ததும், பல்லவ வீரர்களுக்கெல்லாம் வந்திருப்பவர் மகேந்திர சக்கரவர்த்தி என்பது தெரிந்து விடவே, பலமான ஜயகோஷம் எழுந்தது. மகேந்திரர், தளபதி பரஞ்சோதியைப் பார்த்தவுடனே, அவருக்குப் பேச இடங்கொடாமல், "தளபதி! உடனே புறப்பட வேண்டும். இன்னும் ஒரு நாழிகைக்குள் தென் பெண்ணையைக் கடந்து அக்கரை போகவேண்டும். நீந்தத் தெரிந்தவர்கள் நீந்தட்டும், நீந்தத் தெரியாதவர்கள் மரம் மட்டை எதையாவது பிடித்துக்கொள்ளட்டும்! குதிரைகள், யானைகள் எல்லாவற்றையும் ஆற்றில் அடித்து விடுங்கள் ஆயுதங்கள், சாமக்ரியைகள் எது போனாலும் போகட்டும்; மனிதர்கள் பிழைத்தால் போதும்!" என்றார். இந்த விசித்திரமான கட்டளையைக் கேட்டுத் திகைத்து நின்ற பரஞ்சோதியைப் பார்த்து, "ஓஹோ! காரணம் தெரியவேண்டுமா? திருப்பாற்கடல் உடைத்துக்கொண்டு விட்டது! அதோ வினாடிக்கு வினாடி அதிகமாகும் கோஷத்தைக் கேளும்; இன்னும் ஒரு ஜாமத்திற்குள்ளே வெள்ளம் இங்கே வந்துவிடும்!" என்றார். பரஞ்சோதியின் முகத்தில் அப்போது சொல்ல முடியாத பீதி தோன்றியது. "பிரபு...பிரபு!.." என்று மேலே பேச முடியாமல் அவர் தயங்கி நிற்பதைக் கண்டு, "என்ன விசேஷம், தளபதி! மாமல்லன் எங்கே?" என்று சக்கரவர்த்தி கேட்டார். "நேற்று இருட்டிய பிறகு அசோகபுரத்துக்குப் புறப்பட்டுப் போனார் பிரபு! அங்கே...அங்கே..." என்று மேலும் சொல்வதற்குப் பரஞ்சோதி தயங்கினார். "தெரிந்து கொண்டேன், தளபதி! அசோகபுரத்திலே ஆயனர் இருக்கிறார்; அந்தச் சிற்ப சக்கரவர்த்தியைப் பார்ப்பதற்காகக் குமார சக்கரவர்த்தி புறப்பட்டுப் போனார்! நல்லது. மாமல்லனைக் காப்பாற்றும் பொறுப்பு இனி நமக்கு இல்லை; அது ஏகாம்பரநாதனுடைய பொறுப்பு! இங்குள்ள மற்றப் போர் வீரர்களை நாம் காப்பாற்ற முயல்வோம்!" என்றார் மகேந்திரர். மாமல்லரைப் பற்றிய அநாவசியமான கவலை நமது வாசகர்களையும் பீடிக்காமலிருக்கும், பொருட்டு அச்சமயம் அவர் எங்கே இருந்தார் என்பதைச் சொல்லிவிட விரும்புகிறோம். கிழக்கு வெளுத்துப் பொழுது புலரத் தொடங்கியிருந்த அந்த நேரத்தில் அசோகபுரத்துப் புத்த விஹாரத்தின் அருகில், மாமல்லர் ஏறியிருந்த குதிரையானது பெருகிவந்த எதிர் வெள்ளத்திலே நீந்தித் திணறிக் கொண்டிருந்தது. விஹாரத்தின் மேல் தளத்திலே ஆயனரும் சிவகாமியும் சிவகாமியின் அத்தையும் நின்று ஆவலுடனும் கவலையுடனும் அவருடைய வருகையை நோக்கிக் கொண்டிருந்தனர். ரதியும் சுகப் பிரம்ம ரிஷியுங்கூட அங்கே காணப்பட்டனர். அதே சமயத்தில் நீர் சூழ்ந்த புத்த விஹாரத்தின் ஓரமாகப் பானைத் தெப்பத்தில் குண்டோதரன் வந்து கொண்டிருந்தான். வீதியிலும் மற்றும் சுற்றுப்புறமெங்கும் வெள்ளம் சுழித்துக் கொம்மாளமிட்டு அதிவேகமாக ஓடிக்கொண்டிருந்ததுடன் கணத்துக்குக் கணம் பெருகிக் கொண்டுமிருந்தது.
 

Meena

Saha Moderator
Staff
Messages
1,070
Reaction score
85
Points
48
இருபத்தெட்டாம் அத்தியாயம்

சுகரிஷியின் வரவேற்பு

அதிசயமான பயங்கர சம்பவங்கள் நிகழ்ந்த அன்றிரவில், அசோகபுரத்துப் பாழடைந்த புத்த விஹாரத்தில் என்ன நடந்தது என்று இப்போது பார்ப்போம். அந்த விஹாரத்தில் தன்னந்தனியாக வசித்து வந்த வயோதிக பிக்ஷு இருண்ட சைத்யத்தில் நாகநந்தியுடன் பேசி விட்டுத் திரும்பி வந்தவுடனேயே, ஆயனரிடம் அங்கிருந்து உடனே புறப்பட்டுச் செல்வது நலம் என்று பிரஸ்தாபித்தார். சிவகாமியை அழைத்து ஆயனர் கேட்டபோது, சிவகாமி ஒரே பிடிவாதமாக அங்கிருந்து கிளம்ப முடியாதென்று சொல்லி விட்டாள். அங்கே சண்டை நடக்கலாமென்று பிக்ஷு சொன்னது அங்கே இருப்பதற்கு அவளுடைய ஆவலை அதிகமாக்கிற்று. அப்படி நடக்கும் சண்டையைக் கண்ணாலே பார்க்க வேண்டும் என்ற விசித்திரமான ஆசை அவள் உள்ளத்தில் உதித்தது. அந்த ஆசையின் மூலகாரணம் மாமல்லர் போர்க்களத்திலே நிகழ்த்தும் வீரச் செயல்களைப் பார்க்கவேண்டுமென்பதுதான். அவளுடைய கற்பனைக் கண்ணின் முன்னால் போர்க்களக் காட்சிகள் தென்படலாயின. நாலாபுறமும் சூழ்ந்துவரும் எதிரிகளுக்கு மத்தியில் மாமல்லர் தன்னந்தனியாக நின்று வாளைச் சுழற்றி எதிரிகளின் தலைகளை வெட்டி வீழ்த்துவதுபோல் அவள் கற்பனை செய்து கொள்வாள். மறுகணம் அந்தக் கற்பனைக் காட்சியின் கோரத்தைக் காணச் சகியாமல், மனத்தை விட்டு அக்காட்சியை அகற்றி விட முயல்வாள்.

இரவு ஒரு ஜாமம் ஆனபிறகு மறுபடியும் அந்த வயோதிக பிக்ஷு ஓடிவந்து, "அபாயம், அபாயம்! உடனே கிளம்புங்கள்! இல்லாவிட்டால், தப்பிப் பிழைக்க முடியாது!" என்று உரத்த குரலில் பரபரப்புடன் கூறினார். "அடிகளே! இன்னும் என்ன புது அபாயம் நமக்கு வரப்போகிறது?" என்று ஆயனர் அவநம்பிக்கையுடன் கேட்டார். "இங்கே யுத்தம் நடக்கலாமென்று நான் முன்னே சொன்னது. உண்மையைச் சொன்னால் ஒருவேளை நீங்கள் நம்பமாட்டீர்கள் என்றுதான். திருப்பாற்கடல் ஏரி உடைத்துக் கொள்ளும் போலிருக்கிறதென்று கேள்விப்பட்டேன். அதனால் தான் போய்விடலாமென்று யோசனை சொன்னேன் இப்போது உண்மையாகவே ஏரி உடைத்துக்கொண்டு விட்டது உடனே கிளம்புங்கள்!" என்றார்.

"சுவாமி! ஏரி உடைத்துக்கொண்டால் என்ன? அதற்காக நாம் ஏன் ஓடவேண்டும்!" என்று சிவகாமி சாவதானமாகக் கேட்டாள். "திருப்பாற்கடல் ஏரியை நீ பார்த்திருந்தால் இப்படிச் சொல்லமாட்டாய்! நாளைப் பொழுது விடிவதற்குள் இங்கேயெல்லாம் ஒரே வெள்ளமாயிருக்கும்!" என்றார் பிக்ஷு. சிவகாமி ஆயனர் பக்கம் திரும்பி, "அப்பா! நான் வெள்ளமே பார்த்ததில்லை. நாம் இங்கேயே இருந்து வேடிக்கை பார்க்கலாம் பிக்ஷு வேணுமானால் போகட்டும்!" என்றாள்.

"பெண்ணே! அறியாமையால் பிதற்றுகிறாய்! வெள்ளம் வந்தால் வேடிக்கையாயிராது! பனை மர உயரம் பிரம்மாண்டமாக வரும். இந்த விஹாரம், சைத்தியம் எல்லாம் மூழ்கிப் போய்விடும் அப்புறம் என்ன வேடிக்கையைப் பார்க்கிறது?" "சுவாமி! அவ்வளவு நிச்சயமாய்ச் சொல்லுகிறீர்களே தங்களுக்கு எப்படித் தெரியும்?" என்று ஆயனர் கேட்டார். "பத்து வருஷத்துக்கு முன்னால் இப்படித்தான் ஒரு தடவை திருப்பாற்கடல் ஏரி உடைப்பு எடுத்துக் கொண்டது, அப்போது நானே பார்த்திருக்கிறேன். இந்தப் பள்ளத்தாக்கில் ஆயிரக்கணக்கான ஜனங்கள் செத்துப் போனார்கள். மீதியிருந்தவர்கள் இங்கே குடியிருப்பது அபாயம் என்று வேறு மேட்டுப்பாங்கான இடங்களுக்குக் குடிபோய் விட்டார்கள். அந்த வெள்ளத்திற்குப் பிறகுதான் இந்த அசோகபுரம் இப்படிப் பாழடைந்து கிடக்கிறது!"

இதையெல்லாம் கேட்டபோது ஆயனருக்கும் சிவகாமிக்கும் மனக்கலக்கம் உண்டாயிற்று. ஆயினும், இரவில் கிளம்ப அவர்கள் மனம் இசையவில்லை. அதோடு, அப்போது பெருங்காற்றும் மழையும் ஆரம்பித்திருந்தன. சிவகாமி திடீரென்று நினைத்துக்கொண்டு, "அப்பா! குண்டோதரன் சாயங்காலம் வந்தான்; மறுபடியும் மாயமாய் மறைந்து விட்டானே? இந்தக் காற்றிலும் மழையிலும் எங்கே அகப்பட்டுக் கொண்டானோ, தெரியவில்லையே?" என்று கவலையுடன் கூறினாள்.

"அவனுடைய நடவடிக்கையே இப்போது விசித்திரமாய்த்தானிருக்கிறது!" என்றார் ஆயனர். "அதோ கேளுங்கள் சத்தத்தை!" என்றார் பிக்ஷு. ஆம்; அதுவரையில் கேளாத ஒரு புதுவிதமான சத்தம் அப்போது இலேசாகக் கேட்டது. ஆயனருக்கும் சிவகாமிக்கும் மனக் கலக்கம் அதிகமாயிற்று, சிவகாமி, "அது என்ன சத்தம்?" என்றாள். "ஏரி உடைத்துக் கொண்டுவிட்டது நாளைப் பொழுது விடிவதற்குள் இங்கே ஒரே வெள்ளமாயிருக்கும்!" என்றார் பிக்ஷு. "தெருவெல்லாம் தண்ணீர் ஓடுமோ? இந்த விஹாரத்துக்குள்ளே கூட ஜலம் வந்து விடுமோ?" என்றாள் சிவகாமி. "விஹாரத்துக்குள்ளே மட்டுமில்லை; விஹாரத்துக்கு மேலேயுங்கூட வந்துவிடும்!" என்றார் பிக்ஷு. "சுவாமி! இப்போது என்ன யோசனை சொல்கிறீர்கள்?" என்று ஆயனர் கவலையுடன் கேட்டார்.

"இப்போது நான் என்ன யோசனையைச் சொல்வது? சாயங்காலமே போய் விடலாமென்று சொன்னேன்; நீங்கள் கேட்கவில்லை. பக்கத்திலுள்ள கிராமத்துக்குப் போய் ஒரு பானைத் தெப்பம் கொண்டு வருகிறேன். அதுவரையில் நீங்கள் இங்கேயே இருங்கள். இன்றிரவு நாம் தப்பிப் பிழைத்தால், புத்த பகவானுடைய கருணைதான். ஆஹா! நாகநந்தியடிகள் எப்பேர்ப்பட்ட பொறுப்பை என்னிடம் ஒப்புவித்து விட்டுப் போய் விட்டார்?" இவ்விதம் கூறிவிட்டு அந்த வயோதிக புத்த பிக்ஷு நள்ளிரவில் புயலிலும் மழையிலும் விஹாரத்திலிருந்து வௌியில் சென்றார்.

புத்த பிக்ஷு வௌியில் போய்ச் சற்று நேரத்துக்கெல்லாம் அவர் கூறியபடியே உடைப்பு வெள்ளம் அசோகபுரத்தை அடைந்துவிட்டது. முதலில் கொஞ்சமாகத்தான் வந்தது அப்புறம் மளமளவென்று பெருக ஆரம்பித்து விட்டது. விஹாரத்துக் கதவுகளின் இடுக்கு வழியாகத் தண்ணீர் உள்ளே வரத் தொடங்கியது. சிறிது நேரத்துக்கெல்லாம் கதவுகளைப் பிளந்து தள்ளிவிட்டு உள்ளே குபுகுபுவென்று பாய ஆரம்பித்தது.

வெள்ளம் பெருகத் தொடங்கியதும் ஆயனர் முதலியோர் முதலில் விஹாரத்தின் வௌிவாசல் திண்ணையில் வந்து நின்றார்கள். ஆனால் மழை, புயல், மின்னல் அசாத்தியமாயிருந்தபடியால் அங்கே நிற்க முடியவில்லை. பிறகு உள்ளே சென்றார்கள்; உள்ளே தண்ணீர் புகுந்ததும் மேடைகளில் ஏறி உட்கார்ந்து கொண்டார்கள். மேடைகளிலும் தண்ணீர் வந்ததும், மேல் தளத்துக்குப் போகும் மச்சுப் படிகளில் ஏறி உட்கார்ந்து கொண்டார்கள். அப்படியும் அவர்களை விடாமல் தண்ணீர் மேலே மேலே வந்து கொண்டிருந்தது.

"அப்பா! என் அசட்டுத்தனத்தினால் உங்களை இந்த கதிக்கு ஆளாக்கினேன்!" என்று சிவகாமி ஆயனரின் கழுத்தைக் கட்டிக் கொண்டு புலம்பினாள். "ஐயோ! இந்த மானையும் கிளியையும் எதற்காக அழைத்து வந்தேன்?" என்று வருந்தி, அவற்றை அன்புடன் தடவிக் கொடுத்தாள். மானும் கிளியும் ஏதோ பெரிய ஆபத்து வந்திருக்கிறது என்பதை உணர்ந்து சிவகாமியின் அருகில் வந்து ஒட்டிக் கொண்டு நின்றன. "குழந்தாய்! நீ என்ன செய்வாய்? இப்படி நாம் கூண்டோடு கைலாசம் போகவேண்டுமென்று விதி இருக்கும் போது எப்படித் தடுக்க முடியும்? அந்த நாகநந்தியின் பேச்சைக் கேட்டு இப்படியாயிற்று!" என்று ஆயனர் கூறிச் சிவகாமியின் முதுகில் அருமையுடன் தட்டிக்கொடுத்தார். "நாகநந்தியின் மேல் ஒரு தவறுமில்லை; எல்லாம் மாமல்லரால் வந்தது, அப்பா!" என்றாள் சிவகாமி.

சிவகாமியின் உள்ளம் அன்றிரவு அடிக்கடி மாமல்லர்பால் சென்று கொண்டிருந்தது. வாசலில் நின்று தன்னைப் பார்த்தவர், ஒரு வார்த்தைகூடப் பேசாமல் போய்விட்டதை நினைத்து அவளுக்கு ஆத்திரம் ஆத்திரமாய் வந்தது. அவர் நின்று பேசித் தங்களையும் கூட அழைத்துப் போயிருந்தால் இப்படி நேர்ந்திராதல்லவா? எனவே இந்த வெள்ளத்தில் நாம் செத்துப் போவதே நல்லது. நம்மை இங்கே பார்த்துவிட்டுச் சென்ற மாமல்லருக்கு, ஒருநாள் இல்லாவிட்டால் ஒருநாள் நாம் இங்கேயே வெள்ளத்தில் முழுகிச் செத்துப்போனது தெரியாமல் போகாது. அப்புறம், அவர் வாழ்நாளெல்லாம் இதை நினைத்து நினைத்துத் துக்கப்படுவாரல்லவா? சற்று நின்று சிவகாமியுடன் பேசாமல் வந்து விட்டோமே என்று வருத்தப்படுவாரல்லவா? படட்டும்! படட்டும்! அவ்வளவு கல் நெஞ்சமுடைய மனிதருக்கு இதுவும் வேண்டும்; இன்னமும் வேண்டும்! அப்படி அவரை வருத்தப்படுத்துவதற்காகவே நாம் இங்கே வெள்ளத்தில் செத்துப் போவது நல்லதுதான். ஆனால், பாவம்! - அப்பாவும் அத்தையும் ரதியும் சுகரும் ஏன் இந்தக் கதிக்கு உள்ளாக வேண்டும்? பகவானே! திடீரென்று ஏதாவது ஒரு அற்புதம் நேரக்கூடாதா? தன்னைத் தவிர மற்றவர்கள் உயிர் பிழைக்கக் கூடாதா? நான் மட்டும் சாகக்கூடாதா? தன்னுடைய துரதிர்ஷ்டம், தலைவிதி, அவர்களையும் ஏன் பற்றவேண்டும்?

இப்படிப்பட்ட எண்ணங்களில் எவ்வளவு நேரம் போயிருக்கும் என்று தெரியாது. புயலும் மழையும் கொஞ்சம் ஓய்ந்திருப்பது போலத் தோன்றியது. மச்சுக்குப் போய்ப் பார்க்கலாம் என்று நினைத்து எல்லாரும் மேலே போனார்கள். உண்மையாகவே, புயல் ஓய்ந்து, மழையும் விட்டிருந்தது. சிறு தூறல்தான் தூறியது கீழ்த்திசையில் பரவியிருந்த மங்கலான வௌிச்சம் விரைவில் உதயமாகப் போகிறதென்பதைக் காட்டியது. அந்த உதய நேரத்து ஒளியில் ஆயனர் முதலியோர் சுற்று முற்றும் பார்த்தபோது அவர்கள் என்றும் பாரா அதிசயமான காட்சி தெரிந்தது. எங்கெங்கும் ஒரே தண்ணீர்ப் பிரவாகமாயிருந்தது. சற்றுத் தூரத்திலிருந்த கிராமத்துக் குடிசை வீடுகளின் கூரையைத் தொட்டுக்கொண்டு வெள்ளம் ஓடிற்று. வீட்டுக் கூரைகளும், வைக்கோல் போர்களும், பெரிய பெரிய விருட்சங்களும் அந்தப் பெரு வெள்ளத்தில் மிதந்து சென்றன.

சிவகாமியின் உள்ளத்தின் அந்தரங்கத்தில், 'ஒருவேளை எங்கிருந்தாவது எப்படியாவது மாமல்லர் நம்மைக் காப்பாற்றுவதற்காக வரக்கூடாதா?" என்ற எண்ணம் தோன்றியது. "வீணாசை!" என்று அவளே தன்னைத்தான் திருத்திக்கொள்ள முயன்றாள். ஆனால், இதென்ன விந்தை! - கனவு காண்கிறோமா? சித்தப் பிரமையா? - அல்லது உண்மைதானா? - நடக்காத காரியம் நடக்கிறதே? - கைகூடாத ஆசை கைகூடுகிறதே? அதோ வெள்ளத்தில் நீந்திக் கொண்டு வரும் குதிரைமேல் இருப்பவர் மாமல்லர்தானே?... கண்களே! சரியாகப் பாருங்கள்! நெஞ்சே! கொஞ்சம் நிதானித்துக்கொள்! ஆம், ஆம்; அவர்தான் சந்தேகமில்லை! நடராஜப் பெருமானே, பராசக்தித் தாயே! அருள் புரியுங்கள்! மீதியுள்ள தூரத்தை அவர் அபாயமில்லாமல் கடந்து வந்து சேர வேண்டுமே? அப்பா! அப்பா யார் வருகிறார் என்று பார்த்தீர்களா? அத்தை! நீ பார்த்தயா? - ரதி! உனக்குக் கண் தெரிகிறதா? சுகப்பிரம்ம ரிஷியே! உமக்கு வாய் அடைத்துப் போய் விட்டதா, என்ன?.. உண்மையில் சுகப்பிரம்ம ரிஷிக்கு வாய் அடைத்துப் போகவில்லை. இரண்டு மூன்று தடவை தலையை இந்தப்புறமும் அந்தப்புறமும் வளைத்துப் பார்த்துவிட்டுச் சுகப்பிரம்மரிஷி "மாமல்லா!" என்று கூவி வரவேற்புக் கூறினார்.
 

Meena

Saha Moderator
Staff
Messages
1,070
Reaction score
85
Points
48
இருபத்தொன்பதாம் அத்தியாயம்

பானைத் தெப்பம்

சுகரின் வரவேற்புக் குரலைக் கேட்டதும் மாமல்லரின் முகத்தில் புன்கையின் சாயல் தோன்றியது. சிவகாமி கிளியை அடிப்பதற்காகக் கையை ஓங்க, கிளி அவளுடைய அடிக்குத் தப்பி இறகுகளைச் சட சடவென்று அடித்துக் கொண்டு ஒரு வட்டமிட்டு வந்து சிவகாமியின் தோள்களில் உட்கார்ந்த காட்சி, அவருடைய முக மலர்ச்சியை அதிகமாக்கியது. அச்சமயம் விஹாரத்தின் ஓரமாகப் பானைத் தெப்பத்தில் வந்து கொண்டிருந்த குண்டோதரனை மாமல்லர் பார்த்தார். கையில் சமிக்ஞையினால் "நில்லு!" என்று ஆக்ஞையிட்டார்.

அதே நேரத்தில் மேலேயிருந்து குனிந்து பார்த்த சிவகாமி, "அப்பா! இதோ குண்டோதரனும் வந்து விட்டானே! பானைத் தெப்பம் கொண்டு வருகிறான்!" என்று கூறிக் கையைக் கொட்டி மகிழ்ந்தாள். இரவெல்லாம் அவளுடைய மனத்தில் குடிகொண்டிருந்த கவலையும் பீதியும் மறைந்து இப்போது ஏதோ பெரிய வேடிக்கையில் ஈடுபட்டிருப்பது போன்ற குதூகலம் காணப்பட்டது. தெப்பம் விஹாரத்தின் தூண்களின் மீது இடிக்காதபடி குண்டோதரன் அதைச் சாமர்த்தியமாகத் திருப்பி விட்டுக் கொண்டு மாமல்லரின் குதிரையண்டை வந்தான். "பிரபு! படகுக்கு வந்து விடுங்கள்!" என்றான்.

"யார் அப்பா நீ! எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கிறதே!" என்று மாமல்லர் கேட்டார். "சத்ருக்னனுடைய ஆள், சுவாமி!" என்று கூறிக் குண்டோதரன் தலைப்பில் முடிந்து வைத்திருந்த இலச்சினையைக் காட்டினான். "இங்கே எப்படி வந்து சேர்ந்தாய்?" "என்னுடைய எஜமானர் உத்தரவின் பேரில் எட்டு மாதமாக இவர்களுடன் இருக்கிறேன், பிரபு!" என்றான் குண்டோதரன். "தெப்பம் எப்படி கிடைத்தது?" "ஒரு வயோதிக புத்த பிக்ஷு தள்ளிக்கொண்டு வந்தார். அவரை வெள்ளத்தில் நான் தள்ளிவிட்டு இதைக் கொண்டு வந்தேன்!" "பிக்ஷுவையா வெள்ளத்திலே தள்ளினாய்? அட, பாவி! ஏன் அப்படிப்பட்ட காரியத்தைச் செய்தாய்?" "தெப்பத்தில் அவருக்கு இடம் காணாதென்று தான்! தங்களையும் சேர்த்துக் கணக்குப் பண்ணிப் பிக்ஷுவுக்கு இடம் காணாதென்று பிடித்துத் தள்ளினேன்!" "நான் வருவேனென்று எப்படித் தெரியும்?" "அதுகூடத் தெரியாவிட்டால் மஹேந்திர பல்லவரின் ஒற்றர் படையிலே இருக்க முடியுமா, பிரபு?

மாமல்லர் குதிரையின் முதுகிலிருந்து தாவி, பானைத் தெப்பத்தில் வெகு லாகவமாக ஏறிக்கொண்டார். பிறகு குதிரையின் முகத்தை இரண்டு தடவை தடவிக் கொடுத்து அருமை ததும்பிய குரலில், "தனஞ்செயா! எங்கேயாவது ஓடித் தப்பிப் பிழைக்கப் பார் கடவுள் உன்னைக் காப்பாற்றுவார்!" என்று கூறினார். உடனே, தனஞ்செயன் என்னும் அந்தக் குதிரை, வெள்ளத்தில் வேகமாக நீந்திக் கொண்டு, மரங்கள் இரு வரிசையாகத் தண்ணீருக்கு மேலே தலை நீட்டிக் கொண்டிருந்த சாலையை நோக்கிச் சென்றது.

குண்டோதரனும் மாமல்லரும் பானைத் தெப்பத்தைப் பத்திரமாகச் செலுத்திக் கொண்டு விஹாரத்தண்டை சென்றார்கள். மேல் மச்சில் இருந்தவர்களைத் தெப்பத்தில் இறக்குவதற்கு வெகு பிரயாசையாகப் போய்விட்டது. முக்கியமாக, சிவகாமியின் அதிகத் தொந்தரவு கொடுத்தாள். சற்று முன்னால் வெள்ளத்திலே சாவதற்குத் துணிந்திருந்தவளுக்கு இப்போது உயிரின் மேலே அளவில்லாத ஆசையும் வெள்ளத்தைக் கண்டு பெரும் பயமும் உண்டாகி இருந்தன. யார் முதலில் தெப்பத்தில் இறங்குவது என்பதிலேயே தகராறு ஏற்பட்டது. ரதியை முதலில் இறக்கப் பார்த்தார்கள் அது ஒரே பிடிவாதம் பிடித்து இறங்குவதற்கு மறுத்தது.

ஆயனர் ரொம்பவும் வற்புறுத்திச் சொன்னதின் பேரில் சிவகாமி இறங்கச் சம்மதித்தாள். மேலேயிருந்து ஆயனரும் அத்தையும் பிடித்து இறக்க கீழே தெப்பத்திலிருந்து மாமல்லர் கைகளினால் அவளைத் தாங்கி இறக்கிவிட்டார். இறங்கியதும் தெப்பம் ஆடியபோது, சிவகாமி ரொம்பவும் பயந்து அலறினாள். மாமல்லர் அவளைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு உட்காரவைத்துத் தைரியம் சொன்னார். பிறகு, அத்தையும் ஆயனரும் இறங்கியபோது தெப்பம் ஆடியதனாலும் சிவகாமிக்குப் பயம் ஏற்பட்டது. சுகர், மேலே வட்டமிட்டுக் கொண்டே இருந்தவர் எல்லோரும் தெப்பத்தில் இறங்கியதும், தாமும் வந்து ஒரு மூலையில் உட்கார்ந்து அண்ணாந்து பார்த்து, "ரதி! ரதி!" என்று கூவினார். அப்போது தெப்பம் கொஞ்சம் நகரவே, "ஐயோ! ரதியை விட்டு விட்டுப் போகிறோமே" என்று சிவகாமியும் சேர்ந்து அலறினாள்.

ரதி மேலேயிருந்து ஒரே தாவாகத் தாவித் தெப்பத்தில் குதித்தது. அதனுடைய முன்னங்கால் ஒன்று தெப்பத்துக்கு அப்பால் தண்ணீருக்குள் இறங்கிவிடவே, மறுபடியும் சிவகாமி, "ஐயையோ" என்று கூச்சலிட்டாள். எல்லோரும் உட்கார்ந்து எல்லாம் ஒழுங்கான பிறகு, குண்டோதரன், "பிரபு! சற்றே படகை நிறுத்தி வையுங்கள். இதோ வந்து விடுகிறேன்!" என்று சொல்லிவிட்டு, தெப்பத்திலிருந்து குதித்து நீந்திக் கொண்டு, விஹாரத்துக்குள்ளே போனான். குண்டோதரனுக்கு ஆபத்து வந்துவிடப்போகிறதே என்ற கவலை சிவகாமியைப் பிடித்தது. அவன் திரும்பி வருவதற்குள், நேரமாக ஆக அவளுடைய ஆர்ப்பாட்டமும் அதிகமாயிற்று.

கடைசியாகக் குண்டோதரன் மேல் மச்சின் வழியாக எட்டிப் பார்த்து, "இதோ வந்துவிட்டேன்!" என்றான். அவன் கையிலே ஒரு மூட்டை இருந்தது. மூட்டையை முதலில் கொடுத்துவிட்டுக் குண்டோதரனும் தெப்பத்தில் இறங்கியதும், "மூட்டையில் என்ன?" என்று ஆயனர் கேட்டார். அத்தை மூட்டையைத் தொட்டுப் பார்த்துவிட்டு, "அவல்!" என்று தெரிவித்தாள். "இந்த ஆபத்தான சமயத்தில்கூடக் குண்டோதரன் வயிற்றுப் பாட்டை மறக்கவில்லை!" என்று சொல்லிச் சிவகாமி சிரித்தாள்.

"உங்களுக்குத்தான் என் விஷயம் தெரியுமே, அம்மா! நான் எது பொறுத்தாலும் பொறுப்பேன்; பசி மட்டும் பொறுக்க மாட்டேன்!" என்றான் குண்டோதரன். "நல்ல முன் யோசனைக்காரன்!" என்றார் மாமல்லர். "சமயசஞ்சீவி என்றால் நம் குண்டோதரன்தான்! பிக்ஷு அவல் வைத்திருந்தது உனக்கு எப்படி அப்பா தெரிந்தது?" இப்படிக் குண்டோதரனை எல்லோரும் பாராட்டிய பிறகு, தெப்பத்தில் ஒரு முனையில் குண்டோதரனும், இன்னொரு முனையில் மாமல்லருமாக உட்கார்ந்து தெப்பத்தைச் செலுத்தினார்கள். விரைவாக ஓடிய வெள்ளத்தில் பானைத் தெப்பம் இலகுவாக மிதந்து சென்றது. ஆனால் வழியில் தென்பட்ட மரங்களில் மோதாமலும் வெள்ளத்திலே வந்த கட்டைகள் தாக்காமலும் தெப்பத்தை மிக ஜாக்கிரதையாக விட வேண்டியிருந்தது.

வானத்தில் மேகங்கள் இன்னும் குமுறிக் கொண்டிருந்தன. காற்றின் வேகம் குறைந்து போயிருந்ததென்றாலும், இலேசாக அடித்த காற்று உடம்பில் சில்லென்று பட்டது. அவ்வப்போது நீர்த் துளிகள் கிளம்பிச் சுரீரென்று மேலே விழுந்தன. சற்று நேரத்துக்கெல்லாம் சிவகாமியின் பயம் பறந்து விட்டது. குதூகலமாய்ச் சிரிக்கவும் விளையாடவும் ஆரம்பித்து விட்டாள். "இப்படியே தெப்பத்தில் எத்தனை நாள் போய்க் கொண்டிருப்போம்?" என்று அவள் மாமல்லரைப் பார்த்துக் கேட்டாள். "ஏன்! கஷ்டமாயிருக்கிறதா?" என்றார் மாமல்லர். "இல்லை, இல்லை, இந்தத் தெப்போத்ஸவம் முடிந்து விடப் போகிறதே என்றுதான் கவலையாக இருக்கிறது" என்றாள் சிவகாமி. "முடியக் கூடாதா?"

"ஆமாம்; இப்படியே முடிவில்லாமல் என்றென்றைக்கும் வெள்ளத்தில் மிதந்து போய்க் கொண்டிருந்தால் என்ன?" "ஒருவேளை நீ நினைத்தபடி நடந்தாலும் நடக்கலாம். இந்த வெள்ளம் நேரே சமுத்திரத்தில் போய்த்தான் சேரும் தெப்பமும் சமுத்திரத்துக்குப் போய்விட்டால்..." "முடிவேயில்லாமல் மிதந்து கொண்டிருக்கலாமல்லவா?... ஒன்று மட்டும் சந்தேகமாயிருக்கிறது. "என்ன சந்தேகம், சிவகாமி?" "இதெல்லாம் கனவா, உண்மையா என்றுதான்". "கனவு என்பதாக ஏன் உனக்குத் தோன்றுகிறது?" "இம்மாதிரி தெப்பத்தில் ஏறி முடிவில்லாத வெள்ளத்தில் மிதந்து செல்வதாக அடிக்கடி நான் கனவு காண்பதுண்டு அதனாலேதான் இதுவும் ஒருவேளை கனவோ என்று சந்தேகப்படுகிறேன்." "இந்த மாதிரி சம்பவம் ஒரு நாள் நேரிடக்கூடும் என்று நான் எப்போதும் எண்ணியது கிடையாது. ஆகையால் எனக்கு இது கனவோ என்று சந்தேகமாயிருக்கிறது." "ஆனால் என்னுடைய கனவிற்கும் இப்போது நடப்பதற்கும் ஒரு வித்தியாசம் உண்டு. கனவில் நான் காணும் படகிலே நானும் இன்னும் ஒரே ஒருவருந்தான் இருப்போம், இந்தப் படகிலே பலர் இருக்கிறோம்!" "அந்த ஒருவர் யார்?" "சொல்ல மாட்டேன்?"

பொழுது சாயும் சமயத்தில், கொஞ்ச தூரத்தில் பூமியும், பாறைகளும் மரங்களும் அடங்கிய காட்சி காணப்பட்டது. எப்போதும் முடிவில்லாமல் தெப்பத்தில் போய்க் கொண்டிருக்க ஆசைப்பட்ட சிவகாமிக்குக்கூட அந்தக் காட்சி ஆனந்தத்தை அளித்தது. ஒவ்வொருவரும் தத்தம் மகிழ்ச்சியையும் திருப்தியையும் பலவிதமாகத் தெரிவித்தார்கள். குண்டோதரனுடைய முகத்தில் மட்டும் மலர்ச்சி காணப்படவில்லை. "குண்டோதரா! இது என்ன இடம் தெரியுமா? இங்கே நாம் இறங்க வேண்டியதுதானே?" என்றார் மாமல்லர். "ஆம், பிரபு! இறங்கவேண்டியதுதான் ஆனால் தீவின் ஓரமாக வெள்ளத்தின் வேகம் கடுமை என்று தோன்றுகிறது. பாறைகள் வேறே இருக்கின்றன!" என்றான் குண்டோதரன்.

தெப்பத்தை அவர்கள் அத்தீவை நோக்கிச் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. தானாகவே வெள்ளத்தின் இழுப்பில் அகப்பட்டுத் தெப்பம் தீவை நோக்கிச் சென்றது. தீவை நெருங்க நெருங்க அதன் வேகம் அதிகமாயிற்று. கரையோரமாக நின்ற சிறு சிறு பாறைகள் தெப்பத்திலிருந்தவர்களின் கண்களுக்குப் பிரம்மாண்ட மலைகளாகத் தோன்றின. பாறைகளின் மீது மோதாமல் தெப்பத்தைத் தீவின் ஓரமாய்ச் செலுத்துவதற்குக் குண்டோதரனும் மாமல்லரும் தங்களாலான மட்டும் முயற்சி செய்தார்கள். ஆனால் தெப்பம் நேரே பாறையில் மோதுவதற்கே போவதுபோல் அதிவேகமாகப் போயிற்று. தெப்பத்திலிருந்தவர்கள் 'செத்தோம்' என்று தீர்மானித்தார்கள். சுகப்பிரம்மரிஷி அலறிக்கொண்டு பறந்து போய்ப் பாறையில் உட்கார்ந்து கவலையுடன் பார்த்தார். தெப்பம் பாறையில் மோதிற்று; பானைகள் சடசடவென்று உடைபட்டன. மூங்கில்கள் நறநறவென்று முறிந்தன. தெப்பம் ஒரு சுற்றுச் சுற்றிவிட்டுத் தபதபவென்று தண்ணீரில் மூழ்கிற்று.
 

Meena

Saha Moderator
Staff
Messages
1,070
Reaction score
85
Points
48
முப்பதாம் அத்தியாயம்

மாமல்லர் ஊகம்

பாறையிலே தெப்பம் மோதப்போன சமயத்தில், சிவகாமி 'ஆ' என்று சத்தமிட்டுக்கொண்டு படகில் எழுந்து நிற்க முயன்றாள். அடுத்த கணத்தில் அவள் தூக்கித் தண்ணீரில் எறியப்பட்டாள். கண் முன்னால் ஆயிரம் மின்னலின் ஒளிபோல் பிரகாசமாயிருந்தது; அப்புறம் ஒரே இருள்மயமாயிற்று. காதில் 'ஙொய்' என்ற சத்தம் ஒலித்துக் கொண்டிருந்தது. வெகு நேரமாகத் தோன்றிய உணர்ச்சியற்ற நிலைக்குப் பிற்பாடு ஏதோ உணர்ச்சி உண்டாவதுபோல் இருந்தது. கால் விரல்களிலே மணல் தட்டுப்படுவதுபோல் தோன்றியது. பானைத் தெப்பத்தில் ஏறி வந்தது, தெப்பம் பாறையிலே மோதப் போனது முதலிய விவரங்கள் ஒரு கணத்தில் ஞாபகத்துக்கு வந்தன. உடனே, தான் தண்ணீருக்குள்ளே மூழ்கியிருப்பதும், மூச்சு விடுவதற்குக் கஷ்டப்படுவதும் உணர்வில் தோன்றியது.

"ஆகா! மாமல்லரும் மூழ்கியிருப்பாரல்லவா? இரண்டு பேரும் சேர்ந்துதானே வெள்ளத்திலே மூழ்கினோம்? ஒருவர் கையை ஒருவர் பிடித்துக்கொண்டு செத்துப் போகக் கூடாதா?" என்ற எண்ணம் மின்னல் போல் உதித்தது. அதே கணத்தில் ஒரு கரம் அவளுடைய கரத்துடன் தட்டுப்பட்டது. மறுகணத்தில் அந்தக் கரம் அவளுடைய கையைப் பற்றியது. ஆகா! அது மாமல்லரின் உறுதியான கரம்தான்; சந்தேகமில்லை. நமது கடைசி மனோரதம் உண்மையிலேயே நிறைவேறப் போகிறதா? சண்டையும், சூழ்ச்சியும் வஞ்சகமும் கொடுமையும் நிறைந்த இந்த உலகை விட்டு நீங்கிச் சொர்க்கலோகத்தில் புகும்போது தானும் மாமல்லரும் கைகோத்துக் கொண்டு போகப் போகிறோமா? இதென்ன! கால் நன்றாய் ஊன்றுகிறதே! இதோ கூழாங்கற்கள் காலில் தட்டுப்படுகின்றனவே! இதோ திடீரென்று வௌிச்சம்.

தண்ணீர் வரவரக் கீழிறங்கி, கழுத்து மட்டுக்கும் வந்து மார்பு மட்டுக்கும் வந்து, பிறகு இடுப்பு மட்டுக்கும் வந்து விட்டது. ஆனால் பிரவாகத்தின் வேகம் மட்டும் குறைய வில்லையாதலால் சிவகாமியை உருட்டித் தள்ளப் பார்த்தது. அதோடு மூக்கிலிருந்தும் வாயிலிருந்தும் தண்ணீர் கொட்டியபடியால் சிறிது நேரம் மிக்க வேதனையாயிருந்தது. இவ்வளவு அவஸ்தைகளுக்கிடையில் தன் கரத்தை மாமல்லர் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு நிற்பதையும் தன்னைப் போலவே ஆயனர், குண்டோதரன், அத்தை எல்லோரும் வெள்ளத்தின் வேகத்தினால் தடுமாறிக் கொண்டிருப்பதையும் சிவகாமி கண்டாள். சுகர் வட்டமிட்டுக் கொண்டு 'கீச்' 'கீச்' என்று கத்துவதையும், ரதி எப்படியோ வெள்ளத்திலிருந்து பிழைத்து, கரை மீதிருந்த பாறையில் தலையை வைத்துக் கொண்டு ஏறமுடியாமல் கால்களை உதைத்துக் கொள்வதையும் பார்த்தாள்.

பானைத் தெப்பம் மோதிய இடத்தில் வெள்ளத்தின் வேகத்தினால் பெரிய பள்ளம் ஏற்பட்டிருந்தது. ஆனால் அடுத்தாற்போல் சமீபத்திலேயே ஆழம் குறைந்து தண்ணீர் மேட்டுப்பாங்கான இடத்தில் பரவிப் பரந்து சென்றது. இக்காரணத்தினால் எல்லாரும் தப்பிப் பிழைப்பது சாத்தியமாயிற்று. எல்லாரும் தட்டுத்தடுமாறிக் கரை ஏறியானதும், "ஐயோ! போச்சே!" என்றான் குண்டோதரன். மற்றவர்கள் திடுக்கிட்டு அவனைப் பார்த்தார்கள். "என்ன போய்விட்டது?" என்று ஆயனர் கேட்டதும், "அவல் மூட்டை போச்சே" என்றான்.

சற்று நேரம் எல்லாரும் கொல்லென்று சிரித்தார்கள். பிறகு புருஷர்களும் ஸ்திரீகளும் துணிகளைப் பிழிந்து உலர்த்திக் கட்டிக் கொள்வதற்காக வெவ்வேறு திசை நோக்கிச் சென்றார்கள். குண்டோதரனும் குமார சக்கரவர்த்தியும் ஒரு பக்கமாகப் போனபோது, "குண்டோதரா! அவல் மூட்டை போனதைப் பற்றி அழுகிறாயே? தெப்பம் போய்விட்டதே! அதற்கு என்ன செய்கிறது" என்று மாமல்லர் கேட்டார். "பிரபு! நல்ல வேளையாய் இந்தப் பாறைப் பிரதேசத்தில் தெப்பம் மோதி கவிழ்ந்ததே என்று எனக்குச் சந்தோஷமாயிருக்கிறது. இல்லாவிடில் கடலில் போய்த்தானே சேரவேண்டும்? சமுத்திரத்து அலைகளிலே இந்தப் பானைத் தெப்பம் என்ன செய்யும்?" என்றான் குண்டோதரன். "இருந்தாலும் தெப்பத்தையும் காப்பாற்றி இருக்கலாம். நீ மட்டும் இன்னும் கொஞ்சம் லாகவமாய் கழி போட்டிருந்தால்.." "அப்படி அவசியம் வேணுமென்றால், அதோ கிராமம் தெரிகிறதே - அங்கே பானைகள் சம்பாதித்துத் தெப்பம் கட்டிக் கொள்ளலாம், பிரபு! ஆனால், இப்போது தெப்பம் எதற்கு? இந்த வெள்ளம் அடங்குகிற வரையில் இங்கேயே இருப்பதுதான் நல்லது."

"அழகுதான் குண்டோதரா! என் சைனியத்தை எங்கேயோ விட்டுவிட்டு நான் இங்கே இருக்க வேண்டும் என்றா சொல்லுகிறாய்? இவர்களை ஒரு பத்திரமான இடத்தில் சேர்த்த உடனே நாம் இதே தெப்பத்தில் புறப்படலாமென்று எண்ணியிருந்தேன்.." "புறப்பட்டு என்ன பிரயோஜனம், பிரபு! இந்தப் பெரு வெள்ளத்தில் எங்கே போகிறது? என்ன செய்கிறது? சைனியம் தாங்கள் விட்ட இடத்திலேயே இருக்குமா? தென்பெண்ணை கரையெல்லாம் இப்போது ஒரே வெள்ளக் காடாய் இருக்குமோ!" "அதனால்தான் அவசியம் நான் போகவேண்டும்; பரஞ்சோதியும் மற்றவர்களும் என்னைப்பற்றி என்ன நினைப்பார்கள்?" "என்ன நினைப்பார்கள் தாங்கள் பத்திரமாய் இருக்க வேண்டுமே என்றுதான் நினைப்பார்கள். அவர்களைப்பற்றித் தங்களுக்குச் சிறிதும் கவலை வேண்டியது இல்லை. ஏரி உடைத்துக் கொண்ட செய்தி அவர்களுக்கு நல்ல சமயத்தில் போய்ச் சேர்ந்திருக்கும்!"

துணிகள் உலர்ந்து கொண்டிருக்கையில் குண்டோதரன் தன்னுடைய வரலாற்றை மாமல்லருக்கு விவரமாகக் கூறினான். நாகநந்தி விஷயமாக ஆதியில் சக்கரவர்த்திக்குச் சந்தேகம் ஏற்பட்டு, அதன் பேரில் ஆயனர் வீட்டுக்குச் சத்ருக்னர் தன்னைக் காவல் போட்டதில் தொடங்கி, முதல் நாள் இரவு நாகநந்தியைத் தொடர்ந்து ஏரிக்கரைக்குப் போய் அவருடன் துவந்த யுத்தம் செய்தது வரையில் விவரித்தான். அப்போது ஒரு அதிகாரக்குரல் தன்னை எச்சரித்ததையும் அதன்படியே தான் திரும்பி வந்து வயோதிக புத்தபிக்ஷுவை வெள்ளத்தில் தள்ளிவிட்டுத் தெப்பத்தைக் கைப்பற்றிக் கொண்டு வந்ததையும் விவரமாகக் கூறி முடித்தான்.

குண்டோதரன் கூறியதையெல்லாம் கேட்டு, மகேந்திர பல்லவரின் முன்யோசனையிலும், இராஜதந்திரத்திலும் மாமல்லருக்கு இருந்த மதிப்பு பன்மடங்கு அதிகமாயிற்று. குண்டோதரனுடைய சாமர்த்தியத்தைப் பற்றியும் அவர் மிக வியந்து பாராட்டினார். "ஆனால் நீ அந்த வயோதிக பிக்ஷுவைத் தெப்பத்திலிருந்து தள்ளியது மட்டும் எனக்குப் பிடிக்கவில்லை, குண்டோதரா! அந்தப் பாவத்தை ஏன் செய்தாய்?" என்று கேட்டார். "அது பாவமில்லை பிரபு! பெரிய புண்ணியம்! அவன் புத்த பிக்ஷுவுமில்லை; ஒன்றுமில்லை. காஞ்சி நகரத் தெற்குக் கோட்டை வாசலில் காவலனாக இருந்தவன். இந்த நாகநந்தியின் வலையில் விழுந்து தேசத் துரோகியாகி விட்டான். அவனை வெள்ளத்தில் தள்ளியது போதாது. அவன் தலையில் ஒரு கல்லையும் தூக்கிப் போட்டிருக்க வேண்டும்!" என்றான் குண்டோதரன். "அப்படியானால், எல்லாவற்றுக்கும் மூலகாரணமான நாகநந்தியை ஏன் உயிரோடு விட்டாய்? அவரையும் கொன்று விடுவதற்கென்ன?" என்று மாமல்லர் கேட்டார்.

"பிரபு! எப்படியும் அந்த நாகப்பாம்பைக் கொன்று தீர்த்துவிடுவது என்றுதான் எண்ணியிருந்தேன். ஆனால் 'சண்டையை நிறுத்து!' என்று இருளில் கேட்ட அதிகாரக் குரலின் கட்டளையை மீற முடியவில்லை. ஆகையினால்தான் உடைப்பிலே தள்ளிவிட்டு வந்தேன். யார் கண்டார்கள்? உடைப்பு வெள்ளத்தில் அந்த வேஷதாரி பிக்ஷு, மூழ்கி ஒழிந்து போயிருக்கலாமல்லவா?" "கூடாது! குண்டோதரா! கூடாது! அப்பேர்ப்பட்ட பாதகனுக்கு அவ்வளவு சுலபமான மரணம் கூடாது. அந்தக் கள்ள பிக்ஷுவால் ஆயனரும் சிவகாமியும் எப்பேர்ப்பட்ட அபாயத்துக்கு உள்ளாகி விட்டார்கள்!...

"பிரபு! மன்னிக்க வேண்டும் நாகநந்தியைப்பற்றி இவர்களிடம் ஒன்றும் பிரஸ்தாபிக்காமல் இருப்பதே நலம். இவர்களுக்கு விஷயம் ஒன்றும் விளங்காது; வீணில் மனத்துன்பம் அடைவார்கள்." மாமல்லர் அதை ஒப்புக்கொண்டார் பிறகு, "ஏரிக் கரையில் உனக்குக் கட்டளையிட்ட குரல் யாருடையது என்று தெரியவில்லையா?" என்று கேட்டார். "ஊகித்தேன் பிரபு! ஆனால் தங்களிடம் சொல்லத் தைரியம் இல்லை மன்னிக்க வேண்டும்!" என்றான் குண்டோதரன். எச்சரித்தவர் மகேந்திர சக்கரவர்த்தியாயிருக்குமோ என்ற எண்ணம் ஏற்கனவே அவர் மனத்தில் தோன்றியிருந்தது. குண்டோதரனும் அப்படியே ஊகிக்கிறான் என்று இப்போது தெரிந்தது.

மாமல்லரின் உள்ளத்தில் மகிழ்ச்சி, வெட்கம், வேதனை ஆகிய உணர்ச்சிகள் ஏக காலத்தில் உதயமாயின. குண்டோதரனை எச்சரித்தது மகேந்திர சக்கரவர்த்தியாயிருக்கும் பட்சத்தில் சைனியத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை எல்லோரும் காப்பாற்றப்பட்டிருப்பார்கள். ஆனால், தம்மிடம் நம்பிக்கையில்லாமல்தானே அவர் தொடர்ந்து வந்திருக்க வேண்டும்? அதற்குத் தகுந்தாற்போல் இருக்கிறதல்லவா தம்முடைய காரியமும்? நதிக்கரையிலே சைனியத்தை நிறுத்திவிட்டுத் தனியாக வந்து வெள்ளத்திலேயும் சிக்கிக் கொண்டோமல்லவா? சக்கரவர்த்தியை மறுபடியும் சந்திக்கும்போது, அவர் முகத்தை எவ்விதம் ஏறிட்டுப் பார்ப்பது?

இதற்கு மாறாக இன்னொருவித சிந்தனையும் உண்டாயிற்று. எது எப்படி வேணுமானாலும் போகட்டும்! என்ன அபகீர்த்தி, அவமானம் ஏற்பட்டாலும் ஏற்படட்டும். இந்த ஒரு நாள் ஆனந்த வாழ்வுக்காக எதைத்தான் சகித்துக் கொள்ளக்கூடாது? இனி வருங்காலமெல்லாம் இந்த ஒரு தினத்தின் இன்பமயமான வாழ்க்கையை நினைத்து நினைத்துப் பார்த்து மகிழ்ச்சியடையலாம் அல்லவா? "பிரபு! நடந்தது நடந்துவிட்டது இனிமேல் நடப்பதைப் பற்றித்தானே யோசிக்க வேண்டும்?" என்று குண்டோதரன் கூறி மாமல்லரின் சிந்தனையைக் கலைத்தான். "வேறு என்ன யோசனை செய்ய இருக்கிறது? வெள்ளத்திலே வந்து மாட்டிக்கொண்டு விட்டோம், இங்கிருந்து போகும் வழியைத் தேட வேண்டும்..."

"பிரபு! இன்றிரவு தங்குவதைப் பற்றி முதலில் யோசிப்போம். திறந்த வௌியில் தங்க முடியாதல்லவா, இரவு மழை பிடித்துக் கொண்டால் என்ன செய்கிறது?" "எங்கே தங்கலாம் என்று நினைக்கிறாய்?" "அதோ சற்று தூரத்தில் ஒரு கிராமம் தெரிகிறது அங்கே போய் நான் முதலில் விசாரித்துக்கொண்டு வருகிறேன்." "அப்படியே செய்" என்றார் மாமல்லர். அப்போது "மாமல்லா! மாமல்லா!" என்ற சுகரிஷியின் குரல் கேட்டது. அந்தக் குரல் வந்த வழியே சென்ற மாமல்லர், பாறையருகில் மகிழ மரத்தடியில் சிவகாமி தனியாக உட்கார்ந்திருப்பதைக் கண்டார், அவள் அருகில் தாமும் உட்கார்ந்தார்.
 

Meena

Saha Moderator
Staff
Messages
1,070
Reaction score
85
Points
48
முப்பத்தோராம் அத்தியாயம்

மகிழ மரத்தடியில்

விரைந்து சென்ற வெள்ளத்தின் இரைச்சலைத் தவிர வேறு சத்தம் எதுவும் சற்று நேரத்துக்கு அங்கு இல்லாமலிருந்தது. மாமல்லர் கண் கொட்டாமல் சிவகாமியின் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். சிவகாமி சிறிது நேரம் தரையைப் பார்ப்பாள்; சிறிது நேரம் வெள்ளத்தையும் வானத்தையும் பார்ப்பாள். இடையிடையே மாமல்லரின் முகத் தாமரையிலும் அவளுடைய இரு விழிகளாகிய கருவண்டுகள் ஒரு கணம் மொய்த்து விட்டு விரைவாக அவ்விடமிருந்து அகன்று சென்றன.

புயலுக்கு முன்னால் ஏற்படும் அசாதாரண அமைதியைப் போன்ற இந்த மௌனத்தைக் கண்டு சுகரிஷியும்கூட வாய் திறவாமல் சிவகாமியின் முகத்தையும் மாமல்லரின் முகத்தையும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டிருந்தார். கடைசியில் பொறுமை இழந்தவராய், "இந்த வாய் மூடி மௌனிகளுடன் நமக்கு என்ன சகவாசம்!" என்று சொல்கிறதைப் போல், இறகுகளைச் சட சடவென்று அடித்துக்கொண்டு, அங்கிருந்து பறந்து சென்றார். கிளி அங்கிருந்து அகன்றதும் மாமல்லரும் மௌனத்தைக் கலைக்க விரும்பியவராய், "சிவகாமி! என்ன சிந்தனை செய்து கொண்டிருக்கிறாய்?" என்று கேட்டார்.

சிவகாமி மாமல்லரின் முகத்தை ஏறிட்டு நோக்கி, "சற்று முன்னால் தண்ணீரில் மூழ்கினேனே, அப்படியே திரும்பிக் கரை ஏறாமல் வெள்ளத்தோடு போயிருக்கக்கூடாதா - என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்!" என்றாள். "அப்படியானால் நான் உன்னைத் தேடிக்கொண்டு வந்ததெல்லாம் பிசகு என்று ஏற்படுகிறது. ஆனால், இப்போது கூட ஒன்றும் மோசம் போய்விடவில்லையே? பெரு வெள்ளம் இங்கேயிருந்து வெகு சமீபத்தில்தானே ஓடுகிறது!" என்றார் மாமல்லர்.

"உண்மைதான்! வெள்ளம் வெகு சமீபத்தில் ஓடுகிறது! ஆனால் தானாக வெள்ளத்தில் வீழ்ந்து சாவதற்கு மனம் வருகிறதா? அதுவும் நீங்கள் அருகில் இருக்கையில்" என்று சிவகாமி கூறியபோது, அவளுடைய கண்களில் கண்ணீர் தளும்பிற்று. "இது என்ன! ஏதாவது சந்தோஷமாய்ப் பேசலாம் என்று பார்த்தால் நீ இப்படி ஆரம்பித்துவிட்டாயே!" என்றார் மாமல்லர். "பிரபு! இன்றைய தினத்தைப் போல் நான் என்றைக்கும் ஆனந்தமாயிருந்தது கிடையாது. அதனாலேதான் இன்றைக்கே என் வாழ்நாளும் முடிந்திருக்கக்கூடாதா என்று தோன்றுகிறது!" "அழகாயிருக்கிறது நீ ஆனந்தம் கொண்டாடுகிற விதம்" என்றார் நரசிம்மவர்மர்.

"சென்ற ஒரு வருஷகாலமாக நான் அனுபவித்த துன்பத்தையும் வேதனையையும் அறிந்தால் இப்படித் தாங்கள் சொல்லமாட்டீர்கள்?" என்றாள் சிவகாமி. "துன்பமா? உனக்கு என்ன துன்பம் நேர்ந்தது? ஏதாவது உடம்பு அசௌகரியமா? ஏன் எனக்குச் சொல்லி அனுப்பவில்லை?" "உடம்புக்கு ஒன்றுமில்லை, பிரபு! உடம்பு மூன்று வேளையும் சாப்பிட்டுக் கொண்டு, ஆடை ஆபரணங்களை அணிந்து கொண்டு சௌக்கியமாய்த்தானிருந்தது, எல்லாத் துன்பத்தையும் வேதனையையும் உள்ளந்தான் அனுபவித்தது!" "ஆஹா! துன்பமும் வேதனையும் உனக்கேன் வர வேண்டும்? யாராவது உன்னை உபத்திரவப்படுத்தினார்களா என்ன? உன் தந்தை ஆயனர் அதைத் தடுக்காமல் என்ன செய்து கொண்டிருந்தார்?"

சிவகாமி எதைக் குறிப்பிட்டு இவ்விதமெல்லாம் பேசுகிறாள் என்பது பல்லவ குமாரருக்குத் தெரிந்துதான் இருந்தது. எனினும், அவள் வாயினால் சொல்லிக் கேட்பதற்காகவே அவ்விதம் புரிந்து கொள்ளாதவர் போலப் பேசி வந்தார். அதற்குச் சிவகாமி, "ஒருவராலும் எனக்கு ஒரு உபத்திரவமும் ஏற்படவில்லை. காட்டிலே வளர்ந்த பேதைப் பெண்ணாகிய எனக்குப் பேசத் தெரியவில்லை. பிரபு! என் மன வேதனைக்கெல்லாம் காரணம் தங்களை மறக்க முடியாமைதான்!" என்று கூறிக் கண்களிலிருந்து கலகலவென்று கண்ணீர் வடித்தாள்.

மாமல்லர் ஆர்வம் பொங்கிய கண்களினாலே அவளைப் பார்த்து "இவ்வளவுதானே, சிவகாமி! அதற்காக இப்போது ஏன் கண்ணீர் விடவேண்டும்? நானுந்தான் உன்னுடைய நினைவினால் எவ்வளவோ வேதனைகளை அனுபவித்தேன்! என்னுடைய ஓலைகளையெல்லாம் நீ படிக்கவில்லையா?" "தாங்கள் எழுதியிருந்த ஒவ்வொரு எழுத்தையும் மனப்பாடம் செய்திருக்கிறேன். ஒவ்வொரு ஓலையையும் நூறு தடவை ரதிக்குப் படித்துக் காட்டியிருக்கிறேன். ஓலையைப் படிக்கும்போது சந்தோஷமாயிருக்கும். அப்புறம் அவ்வளவுக்கவ்வளவு வேதனை அதிகமாகும்; தங்கள் பேரில் கோபம் கோபமாய் வரும்..." "சிவகாமி! உனக்கு என்பேரில் கோபித்துக் கொள்ளும் சௌகரியமாவது இருந்தது. எனக்கு அதுகூட இல்லையல்லவா? யாருடைய துன்பம் அதிகம் என்று சொல்!" "என்பேரில் தாங்கள் கோபித்துக்கொள்ளவில்லையா? அப்படியானால், அசோகபுரத்துப் புத்த விஹாரத்தின் வாசலிலே என்னைப் பார்த்துவிட்டு ஒரு கண நேரங்கூடத் தாமதிக்காமல் போனீர்களே, ஏன்? என்பேரில் இருந்த அன்பினாலேயா?"

"ஆம், சிவகாமி! நான் வரும் வரையில் அரண்ய வீட்டிலேயே இருக்கும்படிச் சொல்லியிருந்தும் நீங்கள் கிளம்பி வந்துவிட்டீர்களே என்று எனக்குச் சிறிது கோபமாய்த்தானிருந்தது. ஆனால் அன்றிரவே புயலையும் மழையையும் பொருட்படுத்தாமல் நான் வரவில்லையா? எவ்வளவு முக்கியமான காரியங்களை விட்டு விட்டு வந்தேன்? இப்போதுகூட அங்கே என்ன நடந்திருக்கிறதோ என்னவோ? அதையெல்லாம் மறந்துவிட்டு உன்னுடைய பொன் முகத்திலே ஒரு புன்சிரிப்புக்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன். நீயோ கண்ணீர் விட்டு என்னைக் கலங்க அடிக்கிறாய்!" என்றார் மாமல்லர்.

"எல்லாம் உங்களால் ஏற்பட்ட மாறுதல்தான்; இரண்டு மூன்று வருஷத்துக்கு முன்னாலே ஓயாமல் சிரிப்பும் சந்தோஷமுமாய்த்தானிருந்தேன். காட்டில் யதேச்சையாய்த் திரியும் மானைப் போல் துள்ளி விளையாடிக் கொண்டிருந்தேன். என் தந்தைகூட என்னை அடிக்கடி 'இப்படிச் சிரிக்காதே, சிவகாமி, பாஞ்சாலி சிரித்துத்தான் பாரதப்போர் வந்தது. பெண்கள் அதிகமாய்ச் சிரிக்கக் கூடாது' என்று எச்சரிப்பதுண்டு. அந்தச் சிரிப்பும் குதூகலமும் இப்போது எங்கோ போய் விட்டது! நினைத்தால் எனக்கே ஆச்சரியமாயிருக்கிறது..."

"சிவகாமி! நீ சிரிப்பும் சந்தோஷமுமாய் இருந்த காலத்தைப் பற்றிப் பேசு! உன் குழந்தைப் பிராயத்தைப் பற்றிச் சொல்லு. அந்த நாட்களைப் பற்றிக் கேட்க வேணுமென்று எனக்கு ஆவலாயிருக்கிறது!" என்றார் நரசிம்மவர்மர். மேலும் அவர் வற்புறுத்திக் கேட்டதின் பேரில் சிவகாமி சொல்லத் தொடங்கினாள்: "நான் சின்னஞ்சிறு பெண்ணாயிருந்தபோது, என் தந்தையின் செல்வக் கண்மணியாய் வளர்ந்து வந்தேன். அரண்யம் சூழ்ந்த சிற்ப அரண்மனையிலே நான் ராணியாயிருந்து தனி அரசு செலுத்தினேன். என் தந்தையிடம் சிற்ப வேலை கற்றுக் கொண்ட சீடர்கள் என்னிடம் பயபக்தி கொண்ட பிரஜைகளாயிருந்து வந்தார்கள். கண்ணிமையை அசைத்தால் போதும்! அவ்வளவு பேரும் விரைந்து ஓடிவந்து, 'என்ன பணி?' என்று கேட்பார்கள். அப்போதெல்லாம் எனக்கும் கவலை என்பதே தெரியாது; துன்பம் என்பதையே நான் அறிந்ததில்லை.

"உலகத்திலே எதைப் பார்த்தாலும் எனக்கு வியப்பும் மகிழ்ச்சியுமாயிருக்கும். காலையிலே எழுந்ததும் தகதகவென்று பிரகாசித்துக்கொண்டு உதயமாகும் தங்கச் சூரியனைக் கண்டு ஆனந்திப்பேன். மாமரங்களில் தளிர்த்திருக்கும் இளஞ் சிவப்பு நிறத் தளிர்களைக் கண்டு களிப்படைவேன். மரம் செடி கொடிகளில் புஷ்பிக்கும் விதவிதமான வர்ண மலர்கள் எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சியை அளிப்பதுண்டு. செடி கொடிகளுக்கு மத்தியில் ஆடிக்கொண்டே பறக்கும் பட்டுப் பூச்சிகளை ஓடிப் பிடிக்க முயல்வேன். அவை என் கையில் அகப்படாமல் தப்பிக் கொள்ளும்போது கலீரென்று சிரிப்பேன். மது உண்ட வண்டுகளின் ரீங்காரத்தைக் கேட்கும் போதெல்லாம் எனக்கும் ஆனந்த போதை உண்டாகிவிடும். காட்டுப் பறவைகள் இசைக்கும் கீதத்தைக் கேட்டுப் பரவசமடைவேன்.

"இரவிலே அகண்ட வானத்திலே மின்னும் நட்சத்திரங்களெல்லாம் தங்களுடன் வந்து சேரும்படி என்னைக் கண் சிமிட்டி அழைப்பதுபோலத் தோன்றும். அவற்றின் அழைப்புக்கிணங்கி நானும் மனோரதத்தில் ஏறி உயர உயரப் பறந்து செல்வேன். சில சமயம் சந்திரனைப் பார்த்தால் எனக்கு அன்னப் பட்சியைப் போலிருக்கும். அதன்மேல் ஏறிக் கொண்டு நட்சத்திரங்களுக்கிடையே வட்டமிட்டுக் கொண்டிருப்பேன். சில சமயம் நிலாமதியானது ஒரு அழகிய சிறு தோணியைப்போல் எனக்குத் தோன்றும். அதன்மேல் ஏறிக் கொண்டு வானமாகிய நீலக்கடலில் மிதந்து வருவேன். வழியிலே தென்படும் நட்சத்திரச் சுடர் மணிகளையெல்லாம் கைநிறைய அள்ளி அள்ளி மடியிலே சேர்த்துக் கட்டிக்கொள்வேன்.

"இப்படிக் குதூகலமாகக் காலம் போய்க் கொண்டிருக்கையில் என் தந்தை எனக்கு நாட்டியக் கலை கற்றுக் கொடுக்க ஆரம்பித்தார். அது முதல் எனக்கு நடனக் கலைப் பைத்தியம் பிடித்துவிட்டது. சதா சர்வகாலமும் நாட்டியமாடிய வண்ணமாகவே இருந்தேன். காட்டுக்குள் விளையாடப் போனால் ஆடிக் கொண்டே போவேன்; தாமரைக் குளத்தில் குளிக்கப் போகையில் என் கால்கள் ஜதி போட்டுக் கொண்டே போகும். அந்த நாளில் பூமியும் வானமும் ஒரு பெரிய நடன அரங்கமாக எனக்குக் காட்சி தந்தன.

"தடாகத்தில் வண்ணத் தாமரைகள் தென்றல் காற்றில் அசைந்தாடும்போது அவை ஆனந்த நடனமாடுவதாகவே எனக்குத் தோன்றும். வான அரங்கத்தில் விண்மீன்கள் விதவிதமான ஜதி பேதங்களுடன் நடனம் புரிந்துகொண்டு திரும்பத் திரும்பச் சுழன்று வருவதாகத் தோன்றும். "இப்படி ஆனந்த வெள்ளத்தில் மிதந்த வண்ணமாக என் வாழ்க்கை நடந்து கொண்டிருந்த காலத்திலேதான் தாங்கள் ஒருநாள் தங்கள் தந்தையாருடன் எங்கள் அரண்ய வீட்டுக்கு வந்தீர்கள்..." என்று கூறிச் சிவகாமி கதையை நிறுத்தினாள்.
 

Meena

Saha Moderator
Staff
Messages
1,070
Reaction score
85
Points
48
முப்பத்திரண்டாம் அத்தியாயம்

மொட்டு வெடித்தது!

தடாகத்தில் ஒரு அழகிய தாமரை மொட்டு தண்ணீருக்கு மேல் தலை தூக்கி நின்றது. அதன் குவிந்த இதழ்களுக்குள்ளே நறுமணம் ததும்பிக் கொண்டிருந்தது. இரவெல்லாம் அந்த நறுமணம் வௌியில் வருவதற்கு முயன்று நாலாபுறமும் மோதிப் பார்த்தும் வௌியில் வரமுடியாதபடியால் உள்ளுக்குள்ளேயே குமுறிக் கொண்டிருந்தது. தாமரை மொட்டுக்கும் அது மிக்க வேதனையளித்தது.

உதய நேரத்தில் நறுமணத்தின் குமுறலும் மோதலும் அதிகமாயின. திடீரென்று கீழ் வானத்தில் ஒரு ஜோதி தோன்றியது. உதயசூரியனின் அமுதனைய கிரணங்கள் தடாகக் கரையில் இருந்த விருக்ஷங்களின் இடையே நுழைந்து வந்து தாமரை மொட்டைத் தொட்டன. அந்த இனிய ஸ்பரிசத்தினால் மொட்டு சிலிர்த்தது; இதழ்கள் விரிந்தன. இரவெல்லாம் உள்ளே விம்மிக் கொண்டிருந்த நறுமணம் விடுதலையடைந்து தடாகத்தையும் தடாகக் கரையையும் வானவௌியையும் நிறைத்தது. அவ்விதமே, சிவகாமியின் இதயமாகிய தாமரை மொட்டுக்குள்ளே இத்தனை நாளும் விம்மிக் குமுறிக் கொண்டிருந்த எண்ணங்களும் உணர்ச்சிகளும் மாமல்லரிடம் தனியாகப் பேசும் சந்தர்ப்பம் கிடைத்ததும், கரையை உடைத்துக் கொண்ட ஏரி வெள்ளத்தைப் போலப் பிரவாகமாய்ப் பெருகின. மாமல்லர் முதன் முதலில் அரண்ய வீட்டுக்கு வந்ததைக் குறிப்பிட்டபோதுதான் சிவகாமியின் வார்த்தைப் பிரவாகம் சிறிது தடைப்பட்டது.

அப்போது கிடைத்த சந்தர்ப்பத்தை மாமல்லர் பயன்படுத்திக் கொண்டு கூறினார்; "ஆம்! எனக்கு நன்றாய் நினைவிருக்கிறது. நானும் சக்கரவர்த்தியும் முதன் முதலில் உங்கள் அரண்ய வீட்டுக்கு வந்தபோது, உன் தந்தையின் தெய்வச் சிலைகளுக்கு மத்தியிலே நீ நடனமாடிக் கொண்டிருந்தாய். ஆயனர் ஸ்வரக்கோவை பாடிக் கொண்டும், தாளம் போட்டுக் கொண்டும் இருந்தார். எங்களைக் கண்டதும் ஆயனர் பாட்டையும் தாளத்தையும் நிறுத்தினார். நீயும் ஆட்டத்தை நிறுத்தினாய். உன்னுடைய விரிந்த கண்கள் இன்னும் மலருமாறு விழித்து எங்களை நோக்கினாய். என் தந்தை 'நிறுத்த வேண்டாம்; ஆட்டம் நடக்கட்டும்!' என்று வற்புறுத்தினார். அதன் மேல் ஆயனர் பாடத் தொடங்க, நீயும் ஆடத் தொடங்கினாய்! ஆட்டம் முடிந்ததும் நான் பலமாகக் கரகோஷம் செய்தேன். நீ மகிழ்ச்சி ததும்பிய கண்களினால் என்னை ஏறிட்டுப் பார்த்தாய். அந்தப் பார்வையில் நாணம் என்பது அணுவளவும் இருக்கவில்லை..."

"பிரபு! தாங்கள் கூறியதெல்லாம் உண்மைதான். அப்போது நான் பன்னிரண்டு பிராயத்துப் பெண்; உலகம் அறியாதவளாயிருந்தேன். தாங்கள் வானத்தில் ஜோதி மயமாய்ப் பிரகாசிக்கும் சூரியன் என்பதையும், நான் கேவலம் பூமியில் புல் நுனியில் நிற்கும் அற்பப் பனித்துளி என்பதையும் அறியாதவளாயிருந்தேன். ஆகையினால், தங்களை ஏறிட்டுப் பார்க்கச் சிறிதும் தயக்கமடையவில்லை. சூரியனை ஏறிட்டுப் பார்க்கத் துணியும் கண்கள் கூடிய சீக்கிரத்தில் கூசிக் குனிய நேரிடுமென்று அறியாமல் போனேன்!..." "சிவகாமி! நான் சூரியனுமல்ல; நீ பனித்துளியுமல்ல. நீ தீபச்சுடர்; நான் அதைச் சுற்றிச் சுற்றி வரும் விட்டில்!.."

"பிரபு! நான் சொல்ல ஆரம்பித்ததை விட்டு வேறு விஷயத்துக்குப் போனது தவறுதான் மன்னியுங்கள். நான் ஆடி நிறுத்தியதும் நீங்கள் கரகோஷம் செய்தீர்கள், எனக்கு அப்போது உண்டான மகிழ்ச்சிக்கு அளவில்லை. உங்கள் தந்தை உங்களைப் பார்த்து, 'சிவகாமியோடு சற்று நேரம் விளையாடிக் கொண்டிரு! ஆயனரோடு பேசியான பிறகு உன்னைக் கூப்பிடுகிறேன்' என்றார். நீங்கள் என் அருகில் வந்தீர்கள். இருவரும் கைகோத்துக் கொண்டு காட்டுக்குள்ளே குதித்தோடினோம்.

"காட்டிலே நான் பார்த்து வைத்திருந்த அழகான இடங்களையும் செடி கொடிகளையும் காட்டியான பிறகு தங்களை வீட்டுக்குள்ளே அழைத்துச் சென்று நான் வளர்த்து வந்த கிளிகளையும் புறாக்களையும் காட்டினேன். பிறகு என் தந்தை செய்து வைத்திருந்த சிலைகளைக் காட்டத் தொடங்கினேன். நடன வடிவச் சிலைகளைப் பார்க்கும் போது தாங்கள், 'நானும் நடனக் கலை பயில விரும்புகிறேன்' என்றீர்கள். அந்தச் சிலைகளில் ஒன்றைப்போல் அபிநயத் தோற்றத்தில் நின்றீர்கள். அதைப் பார்த்துவிட்டு நான் கலீரென்று சிரித்தேன். 'குழந்தைகள் அதற்குள்ளே வெகு சிநேகமாகி விட்டார்களே!' என்று நம் தந்தைமார் பேசிக் கொண்டார்கள்.

"அன்றுமுதல் தங்களுடைய வருகையை நான் ஆவலுடன் எதிர்பார்க்கலானேன். குதிரையின் சத்தமோ ரதத்தின் சத்தமோ கேட்கும் போதெல்லாம் தாங்கள்தான் வந்து விட்டீர்கள் என்று என் உள்ளம் துள்ளி மகிழ்ந்தது. உதய சூரியனையும் பூரண சந்திரனையும், வண்ண மலர்களையும், பாடும் பறவைகளையும், பறக்கும் பட்டுப் பூச்சிகளையும் பார்க்கும்போது எனக்குண்டான குதூகலம் தங்களைப் பார்க்கும்போது உண்டாயிற்று. ஆனால் சூரிய சந்திரர்களிடமும், புஷ்பங்கள் பட்சிகளிடமும் பேச முடியாது. தங்களிடம் பேசுவது சாத்தியமாயிருந்தபடியால், தங்களைக் கண்டதும் பேச ஆரம்பித்தவள் மூச்சுவிடாமல் பேசிக் கொண்டேயிருப்பேன்..."

"உண்மைதான், சிவகாமி! அந்த நாளில் உன்னைப் பார்க்கும்போது, உன் தந்தையின் அற்புதச் சிலைகளில் ஒன்றைப் பார்ப்பது போன்ற மகிழ்ச்சி எனக்கும் உண்டாகும். ஆனால் சிலை பேசாது; நீயோ ஓயாமல் பேசுவாய். பறவைகளின் குரல் ஒலிகளில் எவ்வளவு பொருள் உண்டோ, அவ்வளவு பொருள்தான் உன் பேச்சுக்களிலும் இருப்பதாக எனக்குத் தோன்றும். ஒன்றும் புரியாவிட்டாலும் நெடுநேரம் கேட்டுக் கொண்டிருப்பேன்..."

"என் பேச்சைப் போலவேதான் நமது சிநேகமும் அப்போது அர்த்தமற்றதாயிருந்தது. கொஞ்ச நாளைக்கெல்லாம், தாங்கள் சக்கரவர்த்தியுடன் தேச யாத்திரை சென்றீர்கள். அப்புறம் மூன்று வருஷ காலம் அரண்ய வீட்டுக்கு நீங்கள் வரவில்லை. மறுபடியும் எப்போதுமே தங்களைப் பார்க்கமாட்டோமோ என்ற ஏக்கம் எனக்குச் சிற்சில சமயம் உண்டாகும். இல்லை, தாங்கள் எப்படியும் ஒருநாள் வருவீர்கள் என்று தைரியம் அடைவேன். தாங்கள் வருவதற்குள்ளே நடனக் கலையிலே சிறந்த தேர்ச்சியடைந்துவிடவேண்டுமென்றும், தாங்கள் திரும்பி வந்ததும் அற்புதமாய் ஆட்டம் ஆடித் தங்களைத் திகைக்கச் செய்ய வேண்டுமென்றும் எண்ணுவேன். தாங்கள் மீண்டும் வரும்போது தங்களுடைய உருவம் எப்படியிருக்குமென்று கற்பனை செய்து பார்க்க அடிக்கடி முயல்வேன். ஆனால் மனத்தில் உருவம் எதுவுமே வராது.... கடைசியாக ஒருநாள் தாங்களே வந்துவிட்டீர்கள்! முற்றும் புதிய மனிதராய் வந்தீர்கள்..."

"நீயும் வெகுவாக மாறிப் போயிருந்தாய், சிவகாமி! உருவத்திலும் மாறியிருந்தாய்; குணத்திலும் மாறியிருந்தாய். நான் எதிர்பார்த்ததுபோல் என்னைக் கண்டதும் நீ ஓடிவந்து என் கரங்களைப் பற்றி வீட்டுக்குள் அழைத்துப் போகவில்லை. தூண் மறைவிலே நாணத்துடன் நின்று கடைக்கண்ணால் என்னைப் பார்த்தாய். 'கலகல' என்று சிரிப்பதற்கு மாறாகப் புன்முறுவல் செய்தாய்! அந்தக் கடைக்கண் பாணமும் கள்ளப் புன்னகையும் என்னைக் கொன்றன."

"ஓடிவந்து முகமன் கூறி உங்களை வரவேற்க முடியாமல் ஏதோ ஒன்று என்னைத் தடைசெய்தது. முன்னால் வரலாமென்றால் கால் எழவில்லை. ஏதாவது பேசலாமென்றால் நா எழவில்லை. நின்ற இடத்திலேயே நின்றேன். என்னை நானே, 'சிவகாமி! உனக்கு என்ன வந்துவிட்டது?' என்று கேட்டுக் கொண்டேன். அதே சமயத்தில் அப்பாவும், 'சிவகாமி! ஏன் தூண் மறைவில் நிற்கிறாய்? வந்து சக்கரவர்த்திக்கு நமஸ்காரம் செய்! பல்லவ குமாரரைப் பார்! எப்படி ஆஜானுபாகுவாய் வளர்ந்திருக்கிறார்?" என்றார். நான் தயக்கத்துடன் வந்து நமஸ்காரம் செய்தேன். அப்போது சக்கரவர்த்தி, 'ஆயனரே! சிவகாமியும் வளர்ந்து போயிருக்கிறாள்! முதலில் எனக்கு அடையாளமே தெரியவில்லை . கற்சிலை செய்வதோடு நீர் தங்கச் சிலையும் செய்ய ஆரம்பித்துவிட்டீரோ என்று நினைத்தேன்' என்றார். இதனால் என்னுடைய நாணம் இன்னும் அதிகமாகிவிட்டது. சற்று நேரம் பேசாமல் நின்றுவிட்டு அப்புறம் வீட்டிலிருந்து நழுவிக் காட்டுக்குள்ளே சென்றேன். தாமரைக் குளக்கரையில் உட்கார்ந்து எனக்கு என்ன வந்துவிட்டது என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.

"சற்று நேரத்துக்கெல்லாம் என் பின்னால் மிருதுவான காலடிச் சத்தம் கேட்டது. ஆனால் நான் திரும்பிப் பார்க்கவில்லை. தாங்கள் வந்து என் கண்களைப் பொத்தினீர்கள். மூன்று வருஷத்துக்கு முன்னால் இப்படிக் கண்களைப் பொத்தும் போது நான் உங்கள் பெயரைச் சொல்லிக் 'கலகல' என்று சிரித்துக் கைகளைத் தள்ளி விட்டுத் திரும்பிப் பார்ப்பேன். இப்போது தங்களுடைய கரங்கள் என் கண்களை மூடியபோது, என் தேகம் செயலற்று ஸ்தம்பித்தது. என் உள்ளத்திலோ ஆயிரக்கணக்கான அலைகள் எழுந்து விழுந்து அல்லோலகல்லோலம் செய்தன.

"பிறகு நீங்கள் என் பக்கத்தில் வந்து உட்கார்ந்து என் கையை உங்கள் கையோடு சேர்த்துக் கொண்டீர்கள். நான் செயலற்றுச் சும்மா இருந்தேன். 'சிவகாமி! என் பேரில் கோபமா?' என்றீர்கள். நான் மௌனமாய் உங்களைப் பார்த்தேன். 'ஆமாம் கோபம் தான் போலிருக்கிறது!' என்று கூறி, தங்களுடைய யாத்திரையைப் பற்றி ஏதேதோ சொல்லிக் கொண்டே போனீர்கள். ஆனால், நீங்கள் சொன்னது ஒன்றும் என் காதில் ஏறவேயில்லை. 'நீங்கள் என் அருகில் உட்கார்ந்திருக்கிறீர்கள்; நம் இருவருடைய கரங்களும் ஒன்றுபட்டிருக்கின்றன' என்னும் ஒரு உணர்ச்சி தான் என் மனதில் இருந்தது. அந்த நினைவு என்னை வான வௌியிலே தூக்கிக் கொண்டுபோய் மேக மண்டலங்களின் மேல், மிதக்கச் செய்தது. தடாகத்துத் தண்ணீரில் மிதக்கும் தாமரை இலைகளின் மேலே நின்று என்னை நடனமாடச் செய்தது. தண்ணீருக்குள்ளே அமுக்கிக் கீழே கீழே கொண்டு போய் மூச்சுவிட முடியாமல் என்னைத் திக்குமுக்காடச் செய்தது!..." "என்னை எத்தகைய அசடாகச் செய்துவிட்டாய் நீ! நான் சொன்னதையெல்லாம் நீ வெகு கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்ததாக எண்ணியல்லவா என் யாத்திரை அனுபவங்களையெல்லாம் உனக்குச் சொல்லிக் கொண்டிருந்தேன்?"

"கடைசியாக, நீங்கள் விடை பெற்றுச் சென்றபோது, 'சீக்கிரத்தில் திரும்பி வருவேன்' என்று சொல்லிவிட்டுச் சென்றீர்கள். அப்புறம் சில காலம் நான் தரையிலே நடக்கவேயில்லை. ஆனந்த வெள்ளத்தில் மிதந்து கொண்டேயிருந்தேன். என் வாழ்க்கையில் ஒரு மகத்தான அதிசயம் அபூர்வமான புதுமை - யாருக்கும் கிடைக்காத அற்புதமான பாக்கியம் கிடைத்துவிட்டதாகத் தோன்றியது. அதனால் என் கண்களுக்கு உலகமே புதிய தோற்றம் கொண்டது. வானத்திலும் பூமியிலும் அதுவரை காணாத வனப்புக்களையெல்லாம் கண்டேன். மல்லிகையும் முல்லையும் செண்பகமும் அதற்குமுன் நான் என்றும் அறியாத நறுமணத்தை அளித்தன. நீல வானம் புதிய மெருகுடன் பிரகாசித்தது. பட்சிகளின் கானத்தில் புதிய இனிமை தென்பட்டது. மூங்கில் காடுகள் காற்றில் அசையும்போது உண்டாகும் சத்தம் முன்னெல்லாம் அழுகைச் சத்தமாக எனக்குத் தோன்றும். இப்போது அதுவே ஆனந்த கீதமாக என் காதில் ஒலித்தது. செடிகளும் கொடிகளும் பட்சிகளும் பூச்சிகளும் ஆயிரம் ஆயிரம் குரல்களில் 'சிவகாமி! நீ கொடுத்து வைத்தவள்; பாக்கியசாலி என்ற ஆதரவோடு சொல்வதாகத் தோன்றியது. இரவிலே வானத்து நட்சத்திரங்கள் முன் எப்போதையும்விடக் குதூகலமாக என்னைப் பார்த்துச் சிரித்தன. வெண்மதியாகிய தந்தத் தோணியின் மேலே அமர்ந்து வானக் கடலில் அந்த விண்மீன்களிடையே சுற்றி வந்தபோது, இப்போது நான் தனியாகச் சுற்றவில்லை; தோணியில் என் அருகில் நீங்களும் வீற்றிருந்தீர்கள்! எல்லையற்ற உள்ளக் கடலிலே தாலாட்டிய சிந்தனை அலைகளுக்கு மத்தியில் மிதந்த வாழ்க்கைத் தெப்பத்தில் நான் மட்டும் தனியாக இருக்கவில்லை; பக்கத்தில் தாங்களும் இருந்தீர்கள். அப்போதெல்லாம் எனக்குத் தானாகவே பாட்டுப் பாடத் தோன்றியது. ஆட்டத்தில் அளவில்லாத உற்சாகம் உண்டாயிற்று. நடனக் கலையில் நான் அடைந்த துரிதமான அபிவிருத்தியைக் கண்டு என் தந்தையே பிரமித்துப் போனார்...."

"சக்கரவர்த்தியும் நானும் கூடத்தான் அதிசயம் அடைந்தோம். பரத சாஸ்திரம் எழுதிய முனிவருக்கே எட்டாத நடனக் கலை விந்தைகளெல்லாம் உன் ஆட்டத்தில் வௌியாவதாக என் தந்தை அடிக்கடி சொன்னார். காஞ்சி மாநகரில் இராஜ சபையில் அரங்கேற்றம் நடத்த வேண்டும் என்று அவர்தான் வற்புறுத்தினார்." "பிரபு! அந்தத் துரதிர்ஷ்டம் பிடித்த அரங்கேற்றம் நடக்கும் சமயத்தில் என் மன நிலை மாறிவிட்டது. அந்த மாறுதலை நினைத்தால் எனக்கே அதிசயமாயிருக்கிறது. மூன்று வருஷ பிரிவுக்குப் பிறகு தங்களைப் பார்த்ததும் எனக்குண்டான சந்தோஷம், குதூகலம் எல்லாம் சில நாளைக்குள் எங்கேயோ போய்விட்டன. வரவர, தங்களுடைய நினைவு எனக்கு மகிழ்ச்சியை அளிப்பதற்கு மாறாகத் துன்பத்தைத் தர ஆரம்பித்தது. எதைப் பார்த்தாலும் பிடிக்காமல் போய்விட்டது. சந்திரனும் நட்சத்திரங்களும் வெறுப்பை அளிக்கத் தொடங்கின. பொழுது விடிந்தால் ஏன் விடிகிறது என்று தோன்றியது. இரவு வந்தால் ஏன் இருட்டுகிறது என்று தோன்றுகிறது. பூக்களைக் கண்டால் கசக்கி எறியத் தோன்றியது. என் கண்களிலிருந்து தூக்கம் மாயமாய்ப் போய்விட்டது. அருமையாக வளர்த்த மான் குட்டியையும் கிளியையும் வெறுக்கத் தொடங்கினேன். நடனக் கலையிலே கூட எனக்கு ஆசை குன்றத் தொடங்கியது. 'ஆட்டமும் பாட்டமும் என்ன வேண்டிக் கிடக்கிறது?' என்று எண்ணத் தொடங்கி விட்டேன்... இந்தச் சமயத்தில்தான் அரங்கேற்றம் நடந்தது; அபசகுனம் போல் அது நடுவில் நின்றுபோனதில் எனக்குத் திருப்தியே உண்டாயிற்று..." "அரங்கேற்றத்துக்குப் பிறகு தாமரைக் குளக்கரையில் நாம் சந்தித்தபோதும் நீ ஒரு மாதிரி வருத்தத்துடனேதான் பேசினாய். என்னிடம் வாக்குறுதி கேட்டாய்! எனக்கு அதெல்லாம் பெருவியப்பாயிருந்தது.."

"பிரபு! அச்சமயம் தங்களுடைய திருமணத்தைப் பற்றிய பிரஸ்தாபம் என் காதில் விழுந்தது. ஏற்கனவே வேதனைக்குள்ளாயிருந்த என் உள்ளத்தில் அது வேலினால் குத்துவது போலிருந்தது. தாங்கள் எனக்கே முழுவதும் உரியவராயிருக்க வேண்டுமென்று கருதினேன். தங்களைப் பார்க்காமல் ஒரு கணம் போவது ஒரு யுகமாயிருந்தது. என்னுடைய தூண்டுதலினாலேதான் என் தந்தை காஞ்சிக்கு நாவுக்கரசர் பெருமானைப் பார்ப்பதற்கு வந்தார். அன்று நடந்ததைத் தாங்கள் அறிவீர்கள்..." "அன்று நடந்ததை மட்டும் அல்ல, சிவகாமி! உன் உள்ளத்தின் நிலைமையையும் அன்றைக்குத் தெரிந்து கொண்டேன். அதனாலேதான் மறுநாளே கண்ணபிரானிடம் ஓலை கொடுத்து அனுப்பினேன்."

"அந்த ஓலையிலிருந்து நான் காஞ்சிக்கு வருவது தங்களுக்கு விருப்பமில்லையென்று அறிந்தேன். தங்களைப் பார்க்காமல் நான் கழித்த எட்டு மாதமும் எனக்கு எட்டு யுகமாயிருந்தது. நாளுக்கு நாள் என் மன வேதனையும் நெஞ்சு வலியும் அதிகமாகி வந்தன. தங்களிடமிருந்து ஓலை வந்த இரண்டொரு தினங்கள் சிறிது உற்சாகமாயிருப்பேன், பிறகு துன்பம் அதிகமாகிவிடும். தங்களை ஒரு நாளும் இனிப் பார்க்கப் போவதில்லையென்றும், என்னுடைய பகற் கனவு ஒரு நாளும் நிறைவேறப் போவதில்லையென்றும் தோன்றும். 'இப்படி எதற்காக உயிர் வாழவேண்டும்? இந்த வாழ்நாளை முடித்துக் கொள்ளலாம்' என்று அடிக்கடி எண்ணமிடத் தொடங்கினேன். இப்படியே கொஞ்சநாளிருந்தால் எனக்குப் பைத்தியமே பிடித்துவிடலாம் என்று அடிக்கடி தோன்றியது.... பிரபு! தங்களுடைய விருப்பத்தின்படி அரண்ய வீட்டிலேயே காத்திராமல் ஏன் யாத்திரை கிளம்பி வந்தேன் என்று இப்போது தெரிகிறதா?" என்று சிவகாமி முடித்தாள். "தெரிகிறது, சிவகாமி! இப்படிப் பிரளய வெள்ளத்தில் அகப்பட்டுக் கொண்டு இரண்டு பேரும் திண்டாட வேண்டும். இந்த ஜன சூன்யமான ஏகாந்தத் தீவிலே வந்து ஒதுங்க வேண்டும் என்பதற்காகத்தான்! இது தெரியாதா என்ன?" என்று மாமல்லர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அந்தத் தீவைப் பற்றிய அவருடைய வார்த்தையைப் பொய்ப்படுத்திக் கொண்டு, சற்றுத் தூரத்தில் வாத்திய கோஷங்களும் ஜனங்களின் ஆரவார ஒலிகளும் கேட்டன. இருவரும் திடுக்கிட்டு எழுந்திருந்தார்கள்.
 

Meena

Saha Moderator
Staff
Messages
1,070
Reaction score
85
Points
48
முப்பத்துமூன்றாம் அத்தியாயம்

வரவேற்பு

வாத்திய கோஷத்தையும் ஆரவாரத்தையும் கேட்டு ஆயனரும் அத்தையும் அங்கே வந்து சேர்ந்தார்கள். ஜனக்கூட்டம் நெருங்கி வந்து கொண்டிருந்தது. கொஞ்ச தூரத்தில் கூட்டத்திலிருந்து ஒரு தனி உருவம் வௌிப்பட்டு முன்னதாக விரைந்து வந்தது. அந்த உருவத்தைப் பற்றி எவ்விதச் சந்தேகமும் ஏற்பட நியாயமில்லை; குண்டோதரனுடைய உருவந்தான் அது!

குமார சக்கரவர்த்திக்குப் பலமான கோபம் உண்டாயிற்று. ஆஹா! இந்த மூடன் என்ன காரியம் செய்தான். 'குமார சக்கரவர்த்தி வெள்ளத்தில் அகப்பட்டுக் கொண்டார்; இங்கே வந்து ஒதுங்கியிருக்கிறார்!' என்று ஊரிலே சொல்லியிருக்கிறான். இவ்விடம் தங்கும் சொற்ப நேரத்தைச் சிவகாமியிடம் பேசிக் கொண்டு கழிக்கலாம் என்று நினைத்தால், அதற்கு இடமில்லாமல் செய்து விட்டானே! சிவகாமிக்குச் சொல்ல வேண்டியது, கேட்க வேண்டியது இன்னும் எவ்வளவோ இருக்கிறதே! சைனியமின்றித் தாம் தனித்து வந்திருப்பது பற்றியும், ஆயனரும் சிவகாமியும் தம்முடன் இருப்பது பற்றியும் அவர்கள் என்ன நினைப்பார்கள்?... ஆ! இந்த மூடன் குண்டோதரன் எவ்வளவு சங்கடமான நிலையில் தம்மைக் கொண்டு வந்து வைத்து விட்டான்!

ஆயினும், அவனிடம் தற்போது கோபம் கொள்வதில் பயனில்லை. நடந்த தவறு நடந்துவிட்டது; எப்படியோ இந்தச் சங்கடமான நிலைமையைச் சமாளித்தாக வேண்டும்.... இப்படிச் சிந்தனை செய்துகொண்டு சற்றுப் பின்னாலேயே மாமல்லர் ஒதுங்கி நின்றபோது, குண்டோதரன் தம்மிடம் வராமல் ஆயனரிடம் நின்று ஏதோ சொல்லுவதைப் பார்த்தார். பிறகு சிவகாமியின் காதோடு ஆயனர் ஏதோ சொன்னார். இருவரும் மாமல்லர் இருந்த திசையை நோக்கிப் புன்னகை புரிந்தார்கள்.

ஜனக்கூட்டம் இதற்குள் அருகில் வந்துவிட்டது. கூட்டத் தலைவர்களாகத் தோன்றிய இருவர், பூரண கும்பத்துடனும் புஷ்பம் தாம்பூலம் பழம் வைத்திருந்த தட்டுக்களுடனும் எல்லோருக்கும் முன்னால் வந்தார்கள். குண்டோதரன் அவர்களுக்கு ஆயனச் சிற்பியாரைச் சுட்டிக் காட்டினான். கிராமத் தலைவர்களில் ஒருவர் கூறினார்; உலகத்தில் எப்பேர்ப்பட்ட தீமையிலும் நன்மை ஒன்று உண்டு என்பார்கள். அதுபோல், திருப்பாற்கடல் ஏரி உடைப்பு எடுத்ததனால், எங்கள் கிராமம் பாக்கியம் செய்ததாயிற்று. சிற்ப சக்கரவர்த்தி ஆயனரையும், பரத சாஸ்திர ராணி சிவகாமி தேவியையும் வரவேற்கும் பேறு எங்களுக்கு வாய்த்தது. வரவேண்டும், ஐயா! வருக, தேவி! உங்களுக்கும் உங்கள் சீடர்களுக்கும் எங்களால் முடிந்த சௌகரியங்களைச் செய்து கொடுக்கிறோம். எத்தனை நாள் முடியுமோ அத்தனை நாள் எங்கள் விருந்தினர்களாய்த் தங்கி இருக்க வேண்டுகிறோம்."

இவ்விதம் கிராமத் தலைவர் கூறி முடித்ததும், ஆயனர், 'மகா ஜனங்களே! உங்களுடைய அன்புக்கு நானும் என் குமாரியும் என் சீடர்களும் மிகவும் கடமைப்பட்டிருக்கிறோம்! இந்த வெள்ளம் வடிகிற வரையில் உங்களுடைய விருந்தாளியாக நாங்கள் இருந்துதான் தீரவேண்டும்!" என்றார். பிறகு, கிராமவாசிகளும் ஆயனர் முதலியோரும் கிராமம் இருந்த திசையை நோக்கி நடக்கத் தொடங்கினார்கள்.

எல்லாருக்கும் பின்னால் தங்கியிருந்த மாமல்லரோ ஆச்சரியக் கடலில் மூழ்கியிருந்தார். அவர் எதிர்பார்த்ததற்கு முற்றும் மாறாகக் காரியங்கள் நடந்தன. சிவகாமி அவ்வப்போது கடைக்கண்ணால் பார்த்துப் புன்னகை செய்ததைத் தவிர, மற்றபடி அவர் ஒருவர் அங்கு இருப்பதையே கவனிப்பாரைக் காணோம். அவருடைய வியப்பிலே மகிழ்ச்சியும் கலந்திருந்தது என்பதைச் சொல்ல வேண்டியதில்லையல்லவா? 'குண்டோதரனை மூடன் என்று கருதியது எவ்வளவு தவறு? அவனுடைய புத்திக் கூர்மையே கூர்மை!" என்று அவர் எண்ணமிட்டுக் கொண்டிருக்கும் போதே, "பிரபு! ஏன் நிற்கிறீர்கள்? போகலாம் வாருங்கள்!" என்று குண்டோதரன் அவர் பின்னாலிருந்து காதோடு சொன்னான்.

"என்னை அவர்கள் அழைக்கவில்லையே? அழையாத இடத்துக்கு நான் எப்படிப் போவது?" என்றார் மாமல்லர் நரசிம்மர். "ஏன் அழைக்கவில்லை? ஆயனரிடம், 'உங்களுடைய சீடர்களுக்கும் வேண்டிய சௌகரியம் செய்து கொடுக்கிறோம்!' என்று சொன்னார்களே! காதில் விழவில்லையா? நீங்களும் நானும் ஆயனரின் சீடப் பிள்ளைகள்!" என்றான் குண்டோதரன். "சத்ருக்னரின் ஆட்கள் எல்லாம் உன்னைப் போலவே புத்திசாலிகளாய் இருப்பார்களா, குண்டோதரா? அப்படியானால் ஆயிரம் புலிகேசி படையெடுத்து வந்தாலும் நாம் அத்தனை பேரையும் யுத்தத்தில் ஜயித்து விடலாம்!" என்றார் மாமல்லர். ஆயனரின் 'சீடர்'கள் இருவரும் ஜனக் கூட்டத்துக்குச் சற்றுப் பின்னால் தங்கிச் சென்றார்கள். மாமல்லர் அப்படி ரொம்பவும் பின் தங்கிவிடவில்லை என்பதையும் சிவகாமியின் கடைக்கண் பார்வையைத் தெரிந்து கொள்ளக்கூடிய தூரத்திலேயே போனார் என்பதையும் உண்மையை முன்னிட்டு நாம் குறிப்பிட வேண்டியிருக்கிறது.

கிராமத்துக்குக் கிட்டத்தட்டப் போனபோது ஜனக் கூட்டம் மேலும் அதிகமாயிற்று. ஊரே திரண்டு வந்து விட்டது போல் தோன்றியது. ஊருக்குள்ளே ஒவ்வொரு வீட்டு வாசலிலும் விதவிதமான வர்ணக் கோலங்கள் போட்டு அலங்கரித்திருந்தார்கள். ஊர்வலத்தை ஆங்காங்கு நிறுத்திக் கிராமத்துப் பெண்மணிகள், சிவகாமிக்கு ஆரத்தி எடுத்தார்கள். கடைசியில், கிராமத்தின் கீழ்ப் புறத்திலிருந்த சிவாலயத்துக்கு அனைவரும் போய்ச் சேர்ந்தார்கள்.

ஆலயம் சின்னதுதான்; ஆனால் அழகாயும் சுத்தமாயும் இருந்தது. செங்கல் சுண்ணாம்பினால் கட்டப்பட்ட வௌி மதிலைத் தாண்டி உள்ளே போனதும், விசாலமான பிரகாரம் ஒரு புல் பூண்டு இல்லாமல் வெகு சுத்தமாயிருந்தது. பலிபீடம், துவஜஸ்தம்பம், நந்தி மேடை ஆகியவற்றைத் தாண்டிச் சென்றதும், அடியார்கள் நின்று தரிசனம் செய்வதற்குரிய அர்த்த மண்டபம் இருந்தது. ஓட்டினால் கூரை வேயப்பட்ட அர்த்த மண்டபத்துக்கு அப்பால் கர்ப்பக்கிருகம். இதன் மேலே, அப்போது புதிதாகத் தமிழகத்தில் வழக்கத்துக்கு வந்து கொண்டிருந்த தூங்கானை மாடம் அழகாக விளங்கிற்று. கோவிலுக்குள் நுழையும்போதே சாம்பிராணி, சந்தனம் இவற்றின் சுகந்தமும், பன்னீர், பாரிஜாதம் செண்பகம், தாமரை முதலிய திவ்ய மலர்களின் நறுமணமும், நெய் விளக்கின் புகை, உடைத்த தேங்காய், உரித்த வாழைப்பழம் நாரத்தம்பழச் சாறு, பிழிந்த கரும்பின் ரசம் ஆகியவற்றின் சுவாசனையும் கலந்து வந்து, ஏதோ ஒரு தூய்மையான தனி உலகத்துக்குள்ளே வந்திருப்பது போன்ற உணர்ச்சியை உண்டாக்கின.

ஆயனரும் சிவகாமியும் ஆயனரின் சீடர்களும் அர்த்த மண்டபத்துக்குள் வந்ததும் சுவாமிக்குத் தீபாராதனை நடந்தது. பின்னர் அர்ச்சகர் அபிஷேக தீர்த்தமும் விபூதிப் பிரசாதமும் கொடுத்தார். அதே மாதிரி அம்பிகையின் சந்நிதியிலும் தீபாராதனை நடந்து குங்கும புஷ்பப் பிரசாதங்கள் அளிக்கப்பட்டன. எல்லாம் ஆனபிறகு, அவர்களை வரவேற்ற கிராமத் தலைவர் "ஆயனரே! தங்களுடைய குமாரியின் நடனவித்தைத் திறமையைக் குறித்து நாங்கள் ரொம்பவும் கேள்விப்பட்டிருக்கிறோம். எங்கள் பாக்கிய வசத்தினால் எதிர்பாராத விதமாக நீங்கள் இந்தக் கிராமத்துக்கு வரும்படி நேர்ந்தது. உங்களுக்கு இன்றைக்குத் தொந்திரவு கொடுக்க மனம் இல்லை. நாளைய தினம் தங்கள் குமாரி இந்தச் சந்நிதியில் நடனம் ஆடி எங்களை மகிழ்விக்க வேண்டும்!" என்று விநயமாகக் கேட்டுக் கொண்டார்.

இதற்கு மறுமொழி என்ன சொல்வதென்று தெரியாதவராய் ஆயனர் சிவகாமியை நோக்கினார். அவளுடைய முகத்தைப் பார்த்ததும் ஆயனருக்கு மனக் கலக்கம் அதிகமாயிற்று. அவர்கள் நின்றுகொண்டிருந்த அர்த்த மண்டபத்தில் மாமல்லர் எங்கே நிற்கிறார் என்பதைச் சிவகாமி ஏற்கெனவே தெரிந்து கொண்டிருந்தாள். இது வரையில் வெகு ஜாக்கிரதையாக அந்தப் பக்கமே பார்க்காமலிருந்த அவளுடைய கண்கள் பளிச்சென்று மாமல்லருடைய முகத்தை ஏறிட்டு நோக்கின. சிவகாமியின் கண்களில் தோன்றிய கேள்விக்கு, மாமல்லரின் முகமலர்ச்சியும் அவருடைய கண்களில் தோன்றிய குதூகலமும் மறுமொழி தந்தன. மறுகணம் சிவகாமி ஆயனரை நோக்கி, "ஆகட்டும், அப்பா!" என்று மெல்லிய குரலில் கூறினாள். "ஆயனரே! தங்கள் அருமைக் குமாரியின் மறுமொழி எங்கள் காதிலும் விழுந்தது மிகவும் சந்தோஷம்!" என்றார் கிராமாதிகாரி. இதற்குள்ளே, மறுநாள் நடனம் ஆடச் சிவகாமி சம்மதித்து விட்டாள் என்ற செய்தி பரவி, அர்த்த மண்டபத்திலும் வௌிப்பிராகாரத்திலும் நின்று கொண்டிருந்த ஜனங்களுக்குள் கலகலப்பு ஏற்பட்டு அது ஆரவாரமாக மாறியது.

இந்தக் கலகலப்புக்கும் ஆரவாரத்துக்கும் இடையே, ஆயனர் கிராமத் தலைவரைப் பார்த்து, "ஐயா! சிவகாமியின் நடனப்பயிற்சி நின்று ஏழெட்டு மாதமாகிறது. ஆனாலும் பாதகமில்லை, நீங்கள் காட்டும் அன்பானது சிவகாமியின் மனத்தை ரொம்பவும் கவர்ந்திருக்கிறது. ஆகையினால், நாளைக்கு உங்களுடைய விருப்பத்தை நிறைவேற்றி வைக்கச் சம்மதிக்கிறாள். ஆனால் சிவகாமியின் நடனக் கலையைப் பற்றி நீங்கள் இவ்வளவு தூரம் தெரிந்து கொண்டிருப்பது எனக்கு வியப்பாயிருக்கிறது. உங்களுக்கு எவ்விதம் தெரிந்ததோ? ஒருவேளை என் சிஷ்யன் குண்டோதரனுடைய வேலையோ இது?" என்று கூறிக் குண்டோதரனை நோக்கினார்.

அப்போது கிராமத் தலைவர், "இல்லை, ஐயா இல்லை! தங்கள் குமாரியைப் பற்றி ஏற்கனவே எங்களுக்கு நாவுக்கரசர் பெருமான் தெரிவித்திருந்தார்" என்றார். "ஆஹா! நாவுக்கரசர் இங்கே வந்திருந்தாரா? உங்களுடைய பாக்கியந்தான் என்ன!" என்றார் ஆயனர். "நாங்கள் பாக்கியச்சாலிதான் ஆறு மாதத்துக்கு முன்னால் நாவுக்கரசர் பெருமான் இந்தப் புண்ணியம் செய்த கிராமத்துக்கு வந்தார். அவருடைய திருக்கரத்தில் உழவாரப் படை பிடித்து இந்த ஆலயத்தின் பிராகாரத்தைச் சுத்தம் செய்தார். நாங்களும் அந்தத் திருப்பணியில் ஈடுபட்டோம். அன்றிரவு இந்தச் சந்நிதியில் நாவுக்கரசர் பெருமானின் சீடர்கள் அமுதொழுகும் தமிழ்ப் பதிகங்களைப் பாடினார்கள். அவற்றில், முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள். மூர்த்தி அவனிருக்கும் வண்ணம் கேட்டாள். என்னும் பதிகத்தைப் பாடியபோது நாவுக்கரசர் பெருமானின் கண்களிலிருந்து தாரை தாரையாய்க் கண்ணீர் வந்தது..."

இவ்விதம் கிராமத்தலைவர் கூறி வருகையில், ஆயனர், சிவகாமி மாமல்லர் ஆகிய மூன்று பேருக்கும் ஏககாலத்தில் ரோமாஞ்சனம் உண்டாயிற்று; அத்தலைவர் மேலும் கூறினார். "பதிகம் முடிந்த பிறகு பெருமான் எங்களுக்குச் சிவகாமி தேவியின் நடனத்தைப் பற்றிக் கூறினார். தாங்கள் தங்கள் குமாரியுடன் காஞ்சியில் அப்பெருமானுடைய மடத்துக்கு வந்திருந்ததையும், அப்போது சிவகாமி இந்தப் பதிகத்துக்கு அபிநயம் பிடித்து மூர்ச்சித்ததையும் பற்றித் தெரிவித்தார். நேரில் இவ்வளவு விரைவில் உங்களையே வரவேற்கும் பாக்கியம் எங்களுக்குக் கிடைக்குமென்று அப்போது நாங்கள் கனவிலும் கருதவில்லை." "வாகீசப் பெருந்தகைக்கு எங்களுடைய ஞாபகம் இருந்தது; நாங்கள் செய்த புண்ணியம்!" என்றார் ஆயனர். "நாவுக்கரசர் பெருமான் வந்து போன பிறகு இந்த ஊரில் அவருடைய திருப்பெயரால் ஒரு மடாலயம் கட்டியிருக்கிறோம். அந்த மடாலயத்தில் முதன் முதலாகத் தாங்களும் தங்கள் புதல்வியுந்தான் தங்கப் போகிறீர்கள். இதுவும் நாங்கள் செய்த புண்ணியந்தான்!" என்றார் கிராமத்தலைவர்.
 

Latest Episodes

Latest posts

New Threads

Top Bottom