Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Regular-Update தொடுக்காத பூச்சரமே கதை திரி

Initha Mohan

Well-known member
Saha Writer
Messages
403
Reaction score
659
Points
93
தொடுக்காத பூச்சரமே!

அத்தியாயம் 9

ஆடலரசும், செந்தழையும்.. இனியும் நிறையாழிக்கு திருமணத்தை தாமதிக்க வேண்டாம் என்று முடிவு செய்தார்கள்.


தாழ்குழலியும் திருமணத்திற்கு அவசரப்படுத்திக் கொண்டே இருந்தார்.

ஆடலரசுக்கோ, தன் தங்கை தாழ்குழலி என்ன தான் உதியனம்பி நான் சொன்னால் திருமணத்திற்கு சம்மதித்து விடுவான் என்று கூறியிருந்தாலும், அதில் அவருக்கு உடன்பாடில்லை.. தானே நேரடியாக உதியனம்பியிடம் பேசிவிட வேண்டும் என்று முடிவு செய்தார்.

அதன்படி நம்பியை தனியாக சந்தித்து பேசினார்.. தான் சொல்ல நினைத்ததை எல்லாம் சொல்லி முடித்து விட்டு.. "உன் முடிவை சொல்லுப்பா.. எனக்காகவும், உன் அம்மாவுக்காவும் சம்மதம் சொல்லாதே.. இது உன் வாழ்க்கை உன் மனப்பூர்வமான சம்மதம் எனக்கு வேண்டும்.. நீ எனக்கும் பையனைப் போல.. உன்‌முகத்தில் மகிழ்ச்சி இருந்தால் தான் நான் நிம்மதியாக இருக்க முடியும்.." என்று கண்கலங்க கூறினார்.

நம்பியோ, "மாமா! அம்மா ஏற்கனவே எல்லாம் சொல்லிட்டாங்க.. எனக்கு பரிபூரண சம்மதம்.. உங்க மனசுக்கும், அம்மா மனசுக்கும் எல்லாம் நல்லபடியாக நடக்கும்.. எனக்கு இந்த திருமணத்தில் முழு சம்மதம்.." என்று அவரின் கைகளைப் பிடித்துக் கொண்டு சொன்னான்.

அவரோ, அவன் கைகளை தன் கண்களில் ஒற்றிக் கொண்டு, "உன் மனசுக்கு நீ நல்லா இருப்பேப்பா.. எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை.. வயசுல நீ சின்னவனா இருந்தாலும் மனசுல உயர்ந்துட்டே.. ஆனால் எனக்கு மட்டும் குற்றவுணர்வா இருக்குப்பா.. இப்படி ஒரு பெண்ணை உன் தலையில் கட்டி உன் வாழ்க்கையை சீரழிக்கிறேனோன்னு.." என்று கூறி வருந்தினார்.

உதியனம்பியோ, "மாமா என்ன பேச்சு இது.. நீங்களே இப்படி சொல்லலாமா? நிறை போல் மனைவி அமைய நான் தான் கொடுத்து வைத்திருக்கனும்.. அவள் மனசு குழந்தை மாமா.. அவ மனசுக்கு எல்லாம் நல்லதாகவே நடக்கும். நாம் நல்லதையே நினைப்போம். நீங்க கவலைப் படாதீங்க. எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை.. நான் நிறையை முழுமனதாகத் தான் கல்யாணம் பண்ண ஆசைப்படுகிறேன். நீங்க வருத்தப்படாம கல்யாண வேலையை ஆரம்பிங்க .." என்றவன் சிறு தயக்கத்துடன்,
"மாமா நிறை சம்மதித்துவிட்டாளா?" என்று தயங்கியபடியே கேட்டான்.

அவரோ, "உன்னிடம் பேசிவிட்டு நிறையிடம் பேசலாம்ன்னு இருந்தேன்ப்பா.. இனிமேல் தான் பேசனும்.. அவள‌ சம்மதிக்க வைப்பது என் பொறுப்பு.."

"மாமா, அவளிடம் தயவுசெய்து உண்மையை‌ சொல்லிடாதீங்க.. அவ தாங்க மாட்டா.." என்றவனை கட்டி அணைத்துக்கொண்டவர்..

"சொல்ல மாட்டேன் பா. நீ நிம்மதியா இரு.." என்றார்.
"மாமா, எனக்கு ஒரே ஒரு ஆசை! கல்யாணத்தை எளிமையாக கோயிலில் வைத்துக்கலாம்.. அப்புறம் ஏதாவது ஆசிரமத்திற்கு சென்று உணவு வழங்கலாம்ன்னு நினைக்கிறேன்.." என்றவனிடம்,

"சரிப்பா உன் விருப்பப்படியே செய்யலாம்.." என்ற ஆடலரசு மருமகனின் குணத்தை நினைத்து பெருமைபட்டவருக்கு மனம் நிறைந்திருந்தது. அதே மகிழ்ச்சியுடன் வீடு வந்தார்.
நம்பியோ, தன் மாமாவுடன் பேசிய பிறகு நிறை என்ன சொல்வாளோ? என்று பயத்திலேயே சுற்றிக் கொண்டிருந்தான்.

ஆடலரசோ, தன் மருமகனிடம் பேசிவிட்டு வந்த பின் அவருக்கு இனி எல்லாம் நல்லதாகவே நடக்கும் என்ற நம்பிக்கை வந்தது.

நிறையிடம் கல்யாண விசயத்தை பேசும் பொறுப்பை மனைவியிடமே கொடுத்தார்.

நிறையோ, செந்தழை திருமண விசயத்தைச் சொன்னதிலிருந்து வானத்துக்கும் பூமிக்கும் குதித்துக் கொண்டிருந்தாள்.

"அம்மா எப்படி உங்களுக்கு இப்படிச் செய்ய மனசு வந்தது.. என்னால் இதை ஜீரணிக்கவே முடியலை.." என்ற மகளை சலனமே இல்லாமல் பார்த்தார் செந்தழை.

தாய் அமைதியாகவே இருப்பதைக் கண்டவளுக்கு மேலும் ஆத்திரம் பொங்கியது.

தன் கோபத்தைக் கஷ்டப்பட்டு அடக்கியபடியே, "அம்மா நான் எம்.பில் முடித்து இருக்கேன். அவனோ, வெறும் பத்தாவது.. அப்படி இருக்க நான் எப்படிம்மா அவனை கல்யாணம் செய்து கொள்வது.." என்றாள்.

செந்தழையோ, "அவன், இவன்னு பேசினே பல்லைத் தட்டிவிடுவேன்.. கொஞ்சம் படித்தால் மட்டு மரியாதை தெரியாதா உனக்கு..?" என்றார் கோபமாக.

அவளோ, தாயின் கோபத்தைப் பொருட்படுத்தாமல், ஏம்மா இப்படி ஒரு முடிவு எடுத்தீங்க? நான் எந்த விதத்தில் எதில் குறைந்தேன். அப்பா எப்படிம்மா இதற்கு சம்மதித்தார்..?" என்று கலங்கியவாறு கூறிய மகளை நெஞ்சில் தவிப்புடன் பார்த்தார் செந்தழை.

எப்படி சொல்வார் உண்மையை.. மகள் அதை தாங்குவாளா? என்று மனதிற்குள் துடிதுடித்தவர், தன் கோபத்தை முகமூடியாக போட்டுக்கொண்டு, மகளிடம், "நிறை நானும் அப்பாவும் முடிவெடுத்தது, எடுத்தது தான். அதில் மாற்றம் இல்லை.. நாங்கள் எது செய்தாலும் அது உன் நன்மைக்குத் தான்னு நினை.." என்றார்.

மகளோ, "அம்மா எனக்கு அவனைச் சுத்தமாகப் பிடிக்கவே இல்லை.. பேரைப் பார் பேரை உதியனம்பியாம்.. நம்பியார்ன்னு வெச்சிருக்கலாம்.." என்ற மகளை முறைத்தவாறே..

"பேருக்கு என்னடி குறைச்சல், அழகான தமிழ் பெயர்.. பெயரைப் போல் ஆளும் ராஜகுமாரன் தான்.. குணத்திலும் தங்கம்.." என்ற தாயாரிடம்,

"ஆமாம் தங்கத்தை உருக்கி நீங்களே மாலையா போட்டுக்கோங்க.." என்ற மகளை என்ன சொல்லி சமாதானப்படுத்துவது என்று தெரியாமல் செந்தழை குழம்பி நின்றார்.

"அம்மா அவன் வேலையும் பிடிக்கலை.. அவனையும் பிடிக்கலை.. பிளீஸ் மா புரிஞ்சுக்கோங்க.."

"நிறை வர.. வர உனக்கு வாய் ஜாஸ்தியாகிடுச்சு.. வேலைக்கு என்னடி குறைச்சல். இந்த வயசுலையே சொந்தமா கடை வைத்து நல்லபடியா சம்பாதிக்கிறான். நீ தான் நாங்க சொல்வதைப் புரிஞ்சுக்கனும்.."

"நீங்க என்ன சொன்னாலும் என்னால் ஒரு மெக்கானிக்கை கல்யாணம் செய்துக்க முடியாது.." என்றாள்.

செந்தழையோ, தன் மகளிடம் இனி அன்பாக பேசினால் வேலைக்காகாது என்று எண்ணியவர், "நிறை அப்பாவும் நானும் முடிவெடுத்தாச்சு.. கொஞ்சமாவது எங்கள் மீது மதிப்பும், மரியாதையும் வைத்திருந்தால் நாங்கள் சொல்வதைக் கேளு.. நாங்க என்னைக்கும் உனக்கு தீங்கு செய்ய மாட்டோம்.." என்று கூறியவர் அவளுக்கு யோசிக்க டைம் கொடுத்து பேச்சை முடித்துக் கொண்டு தன் வேலைகளைப் பார்க்க சென்றார்.

நிறையோ, என்ன செய்வது என்று புரியாமல் கலங்கினாள். இப்படி ஒரு நிலை வருமென்று அவள் கனவில் கூட நினைக்கவில்லை.

பனிநிலவும் திருமண விசயத்தை கேள்விப்பட்டதும் பெரிதாக ஆச்சரியப்படலை. அவள் இதை எதிர்பார்த்தது‌தான்.
தன் பெற்றோருக்கு நம்பி என்றால் என்றுமே தனிப்பிரியம். அதனால் நிறையின் வாழ்க்கை உதியனம்பியுடன் தான் என்று முன்னமே‌ பனிநிலவு நினைத்திருந்தாள்.

நிறையோ, தன் தாயிடம் பேச முடியாமல் தந்தையிடம் பேசிப் பார்த்தாள்.. ஆனால் அவரோ, "நம்பியை விட வேறு நல்ல மாப்பிள்ளை எங்களால் பார்க்க முடியாது.. இது உன் வாழ்க்கை தான்.. உன் முடிவு தான்.. ஆனால் உன் அப்பா உனக்கு கெடுதல் செய்ய மாட்டார்ன்னு நீ நம்பினால் திருமணத்திற்கு சம்மதி.." என்று‌ கூறிவிட்டார்.

நிறையோ, எதுவும் செய்ய முடியாமல் தவித்தாள். தன் தோழி பூவணியிடம் புலம்பித் தள்ளினாள்.

பூவணியோ, "நிறை நம்பியண்ணா‌ மாதிரி ஒரு ஆள் கிடைக்காது. அம்மா, அப்பா சொல்வதைக் கேட்டு ஒழுங்காக கல்யாணத்துக்கு ஒத்துக்கோ.." என்றாள்.

நிறையோ‌, கோபத்துடன் பூவணியிடம் எதுவும் பேசாமல் வந்துவிட்டாள்.

திருமணத்தை நிறுத்த தன்னால் எதுவும் செய்ய முடியவில்லையே என்று தவித்தாள்.

உதியனம்பி தான் இத்தனைக்கும் காரணம் என்று நினைத்து அவன் மீது அளவுகடந்த கோபத்தை வளர்த்துக் கொண்டாள்.

நிறையின் மெளனத்தைச் சம்மதமாக நினைத்து கல்யாண வேலைகளை ஆரம்பித்தார் ஆடலரசு.

உதியனம்பியோ, தன் மாமாவின் மூலம் நிறையின் சம்மதத்தை அறிந்து கொண்டவன் நிம்மதி அடைந்தான்.

திருமணம் எளிமையாகத் தான் நடக்கப்போகிறது என்று அறிந்தும், நிறை எந்த வருத்தமும் படவில்லை..

திருமணத்தைப் பற்றி அவள் பெரிதாக எந்த கனவும் இதுவரை கண்டதில்லை..

பிடிக்காத திருமணம் எப்படி நடந்தால் என்ன? என்ற எண்ணமே! அவள் மனம் முழுவதும் நிரம்பி வழிந்தது.

திருமண நாளும் அழகாக விடிந்தது!
உதியனம்பியின் ஆசைப்படியே பெரியவர்கள் குலதெய்வக் கோவிலில் எளிமையாக திருமணததை ஏற்பாடு செய்திருந்தார்கள்.

உதியனம்பியோ, பட்டு வேட்டி சட்டையில் கம்பீரமாக பார்ப்போரை கவர்ந்திழுக்கும் வசீகரத்துடன் மணமேடையில் அமர்ந்திருந்தான். அவன் முகம் மட்டும் யோசனையிலேயே இருந்தது.

நிறையாழியோ, அவன் அருகில் செந்நிறப் பட்டுப்புடவையில் எளிமையான ஒப்பனையில் நேர்த்தியாக தயாராகி மணமேடையில் அமர்ந்திருந்தாள். ஆனால் அவள் முகத்தில் மருந்துக்குக் கூட மலர்ச்சி இல்லை.

மணமக்களைத் தவிர அனைவரும் மனம் கொள்ளா மகிழ்ச்சியில் திளைத்திருந்தார்கள்!

குறித்த நேரத்தில் தாழ்குழலி, திருமாங்கல்யத்தை தன் கையால் எடுத்து.. மனதார மகன் வாழ்வு செழிக்க வேண்டுமென்று, கண்களை மூடி.. கைகூப்பி கடவுளை வணங்கிவிட்டு மகனிடம் தந்தார்.

உதியனம்பியோ, மகிழ்ச்சியுடன் தாயிடமிருந்து திருமாங்கல்யத்தை வாங்கி பெரியோரின் ஆசியுடன் நிறையாழியின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டான்.

தாழ்குழலி, மகனிடம் மாங்கல்யத்தை தான் எடுத்து கொடுக்க கூடாது, என்று சொல்லி தயங்கியவரை,

உதியனம்பியோ, "அம்மா உங்களை விட நான் நல்லா இருக்கணும்ன்னு யார் நினைப்பார்கள், அதனால் நீங்க தான் எடுத்து தரனும்.." என்று பிடிவாதம் பிடித்து அவரை சம்மதிக்க வைத்தான்.

நிறையாழியோ, தன் கழுத்தில் புதிதாக மின்னிய மஞ்சள் கயிறை வெறித்து பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.

உதியனம்பியோ, முழுமனதுடன் அனைத்து சடங்குகளையும் செய்தான்.. நிறையாழியோ சடங்கு செய்யும் பொழுது கூட நம்பியின் சிறு தொடுகைகளை நாசூக்காக தவிர்த்தாள்.

உதியனம்பிக்கோ, அவளின் செய்கை வலிக்கச் செய்தாலும் வெளியில் காட்டிக்காமல் அமைதியாகவே அமர்ந்திருந்தான்.

திருமணம் இனிதாக முடிந்தவுடன் பெரியவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கிய மணமக்கள்! நேராக ஆசிரமம் சென்று அங்கிருந்த குழந்தைகளுக்கு உணவை வழங்கினார்கள்.

ஆடலரசும் செந்தழையும் நிம்மதியுடனும், எல்லையில்லா மகிழ்ச்சியுடனும் வலம் வந்தார்கள்.

சேத்தனும், பனிநிலவும் வற்றாத புன்னகையுடன் மணமக்களுடனேயே சுற்றினார்கள்.

நிறையாழியின் தோழியாக பூவணி மட்டுமே வந்திருந்தாள்.. அவளுக்கு தன் மனம் கவர்ந்த இருவரும் திருமணம் செய்து கொண்டது அளவில்லா ஆனந்தத்தை அளித்தது.

மணமக்களோ, ஆசிரமத்திலிருந்து நேராக உதியனம்பி வீட்டிற்குச் சென்றனர். அங்கு தாழ்குழலியே அவர்களை ஆலம் சுற்றி வரவேற்றார்.

பனிநிலவும், பூவணியும் நிறையுடன் வந்திருந்தார்கள்.

தாழ்குழலியோ, மூவரையும் நம்பியின் அறையில் ஓய்வெடுக்கச் சொல்லி அனுப்பி வைத்தார்.

நம்பியும் சேத்தனும் வெளியில் வராண்டாவில் அமர்ந்து கொண்டார்கள்.

தாழ்குழலி, பாலும், பழமும் எடுத்து வந்து பனிநிலவிடம் கொடுத்து புதுமணத் தம்பதியருக்கு கொடுக்கச் சொன்னார்.

பனிநிலவோ, இருவரையும் அழைத்து அருகருகே அமரவைத்து பாலையும் பழத்தையும் கொடுத்தாள்.

உதியனம்பியிடம் முதலில் கொடுத்து குடிக்கச் சொல்ல.. அவனோ, தான் முதலில் குடிக்காமல் நிறையை‌ குடிக்கச் சொன்னான்.

நிறையோ மற்றவர்கள் முன் வழியில்லாமல் முதலில் குடித்து விட்டு மீதியை நம்பியிடம் தந்தாள்.

அவனோ, அதை ஆசையாக வாங்கிக் குடித்தான். அவனுக்குத் தெரியும் தான் முதலில் பாதி பாலைக் குடித்து விட்டு கொடுத்தால், நிறை அதை குடிக்க மாட்டாளென்று, அது தான் அவன் அவளை முதலில் அருந்த வைத்தான்.

மாலை வரை அனைவரும் அவர்களுடன் இருந்து விட்டுச் சென்றனர்.

சேத்தனோ, உதியனம்பியின் வாடிய முகத்தைத் கண்டு ஆறுதலாக.. "நம்பி எல்லாம் சீக்கிரம் சரியாகும்.. நிறை உன்னைப் புரிந்து கொள்வாள். நீ எதையும் நினைத்து கவலைப்படாதே.." என்று தேற்றிச் சென்றான்.

நிறையோ, அவர்கள் சென்ற பின் நம்பியின் அறையில் தான் இருந்தாள்.. அவள் நம்பியின் அறைக்குள் வந்து பலவருடங்கள் இருக்கும்.. இன்று தான் வந்திருக்கிறாள்.

கண்களாலேயே அறையை வலம் வந்தவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவள் எதிர்பார்த்தற்கு வேறாக அவன் அறை காட்சி தந்தது. அலமாரி முழுவதும் புத்தகம்தான்.. உடைகள் உட்பட அனைத்தும் மிக நேர்த்தியாக அடுக்கி வைத்திருந்தான்.

அவன் அறையில் புத்தகத்தைக் கண்டவளுக்கு மிகுந்த வியப்பாக இருந்தது. அதை எடுத்து பார்த்தவளுக்கு திகைப்பே மிஞ்சியது. அத்தனை புத்தகமும் இன்ஜினியரிங் படிப்பு சம்மந்தமான புத்தகங்கள்..

அவள் மனமோ மெக்கானிக்கும் இன்ஜினியரிங்குக்கும் என்ன சம்மந்தம் என்று குழம்பியது.
அதைப் பற்றி யோசித்துக்கொண்டே தன் உடைமைகளை எல்லாம் எடுத்து, அங்கே காலியாகயிருந்த அலமாரியில் அடுக்கி வைத்தாள்.

உதியனம்பியோ, கைகால் முகம் கழுவ தன் அறைக்கு வந்தவன், நிறையிடம் ஒரு வார்த்தைக் கூட பேசாமல், தான் வந்த வேலையை மட்டும் பார்த்துச் சென்றான்.

தாழ்குழலியோ,
மருமகளிடம் இரவு உடுத்திக்கொள்ள பட்டுப் புடவையைக் கொடுக்க வந்தவர், நிறை தன் உடைமைகளை அடுக்குவதைக் கண்டு அவளுக்கு உதவினார்.

நிறையோ தன் அத்தையிடம் பேசியபடியே தன் வேலையை கவனித்தாள்..

பேச்சுவாக்கில் புத்தகங்களைப் பற்றி கேட்க தாழ்குழலியோ அனைத்தையும் மருமகளிடம் ஒப்புவித்தார்.

நிறையோ, அதைக் கேட்டு திகைத்தாள். நம்பியை தான் படிக்கவில்லை என்று அவமானப்படுத்தியதால் படிக்கிறானோ! சான்றிதழ் இல்லாமல் படித்து என்ன செய்யப் போகிறான் என்று எண்ணினாள்.

அவளுக்கு நடப்பது எதுவும் புரியவில்லை. அவள்

மனம் முழுவதும் குழப்பமே நிரம்பி வழிந்தது.

தாழ்குழலியோ, இரவு உணவு உண்டபிறகு நிறையின் கையில் பால் சொம்பைக் கொடுத்து மகனின் அறைக்கு அனுப்பி வைத்தார்.

தொடரும்..

Hi friends,

அடுத்த அத்தியாயம் நாளை காலை..இன்றைய அத்தியாயத்தை படித்து விட்டு உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்..
நன்றி
அன்புடன்

இனிதா மோகன்
 

Initha Mohan

Well-known member
Saha Writer
Messages
403
Reaction score
659
Points
93
தொடுக்காத பூச்சரமே!



அத்தியாயம் 10



நிறையோ, வேறு வழியில்லாமல்.. வேண்டா வெறுப்பாக நம்பியின் அறைக்குச் சென்றவள் கதவை மூடி தாழிட்டாள்.



நம்பியோ, சாளரத்தின் வழியாக வான்வெளியில் காயும் வெண்ணிலவை வெறித்துக் கொண்டிருந்தான். அவன் மனமோ கரையில் துடிக்கும் மீனைப் போல் துடித்துக் கொண்டிருந்தது.



நிறையாழி அறைக்குள் வந்ததை அறிந்தும் திரும்பாமல் அப்படியே நின்றிருந்தான்.



நிறையோ, அவன் திரும்பாமல் இருப்பதைக் கண்டு, மனதில் தோன்றிய ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு, பால் சொம்பை மேஜை மீது வைத்துவிட்டு அவன் அருகில் சென்றாள்.



அவனோ, அருகில் அவள் வருவதை அறிந்தும் அமைதியாக அதே நிலையில் நின்றான்.



நிறைக்கோ, அவனின் செயல் மேலும் ஆத்திரத்தை வரவழைக்க.. பலமாக கைதட்டியபடி, "நடிப்பு பிரமாதம்.." என்றாள்.



அவனோ, அவளின் கைதட்டும் ஓசையில் திரும்பி அவளைப் பார்த்தான்.



அவளோ, "ஆஸ்கார் விருது தான் தரனும் உங்கள் நடிப்புக்கு.." என்றாள் நக்கலாக.



அவனோ, "என்ன சொல்றே.. எனக்கு எதுவும் புரியலை.."



"உங்களுக்கு புரியாது.. புரியாது.. செய்வதெல்லாம் செய்துவிட்டு எப்படி உங்களால் இப்படி ஒன்னும் தெரியாத பாப்பா மாதிரி பேச முடிகிறது.."



"நிறை நிஜமாகவே, நீ சொல்வது எனக்கு தலையும் புரியல.. வாலும் புரியல.."



"பொய் சொல்லாதீங்க.. நீங்க நினைச்ச மாதிரியே என் அப்பா அம்மாவிடம் நல்லவனாக நடித்து ஏமாத்தி என்னை கல்யாணம் பண்ணிட்டீங்க தானே.."



"நிறை உளராதே... நான் எதற்கு நடிக்கனும்.. நான் யாரையும் ஏமாத்துலே.."



"நான் உளரலே, உண்மையைத் தான் சொல்றேன். நீங்க சொல்வதையெல்லாம் நம்ப நான் ஒன்னும் முட்டாள் இல்லை.. எனக்கு உங்களைச் சுத்தமா பிடிக்காதுன்னு தெரிந்தும் எவ்வளவு திமிரிருந்தால் என்னை கல்யாணம் செய்திருப்பீங்க.."



"நிறை இந்த திருமணம் என் ஆசை இல்லை.. பெரியவங்க ஆசை.."



"ஓ! அப்படி சொல்லி நீங்க தப்பிக்கலாம்ன்னு பார்க்காதீங்க.. நான் அத்தனை முறை அன்று உங்களிடம் சொல்லியும அதை கேட்காமல் திட்டம் போட்டு உங்க ஆசையை சாதிச்சுட்டீங்க தானே.."



"நான் எந்த திட்டமும் போடவில்லை, நீ நம்பினாலும், நம்பாட்டியும் அது தான் உண்மை.."



"நீங்க என்ன சொன்னாலும் நான் உங்களை நம்பவும் மாட்டேன்.. நீங்க நினைச்ச மாதிரி உங்க கூட வாழவும் மாட்டேன்.. ஏன்டா இவளை கல்யாணம் செய்தோமென்று காலமெல்லாம் உங்களை வருத்தப்பட செய்யலைன்னா பாருங்க.." என்று கூறியவள் படுக்கையில் சென்று படுத்துக் கொண்டாள்.



நம்பியோ, அவள் பேசிய வார்த்தைகளின் வலியை தாங்க முடியாமல் அப்படியே சுவரோடு சுவராக சாய்ந்து நின்று கொண்டு சாளரத்தின் வழி தெரிந்த இருளை வெறித்தான்.



எத்தனை நேரம் அப்படி சிலையாக நின்றானோ, அவனுக்கே தெரியாது. கடிகாரத்தில் மணி அடிக்கும் சத்தத்தில் உணர்வு வந்தவன், மணியைப் பார்க்க அதுவோ பன்னிரெண்டை காட்டியது.



உதியனம்பியோ, பெருமூச்சு விட்டவன், உறங்கலாம் என்று படுக்கையை நோக்கி சென்றான்.



நிறையோ, ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். அவள் அருகில் சென்று நின்றவன், அவளை பார்வையால் வருடினான்.



பட்டுப்புடவையும், தலை நிறைய மல்லிகை பூவுடன் அழகு தேவதையாக படுத்திருந்தாள்..



மாசுமருவற்ற குழந்தை முகத்துடன் அவள் உறங்கும் அழகு அவன் மனதைக் கொள்ளை கொண்டது.



அவள் தன்னை என்ன தான் பேசினாலும், அவனால் அவளை என்றுமே வெறுக்க முடியாது.. அது ஏனென்று அவனுக்கும் தெரியாது.



‘அவளுக்கு என்று தான் தன்னைப் பிடிக்கும்!’ என்று எண்ணியவனுக்கு மனம் ஊமையாய் அழுதது.



எங்கு படுப்பது என்று யோசித்தவன் கண்களில் கட்டிலின் கீழே கிடந்த தலையணையும், போர்வையும் தான் படுக்க வேண்டிய இடத்தை உணர்த்தியது.



நிறை தான் அதை எடுத்து கட்டிலின் கீழே போட்டிருந்தாள். எங்கே அவன் தன் அருகில் படுத்துக்கொள்வானோ! என்ற பயத்தில்.



நம்பியோ, கசப்பான சிரிப்பை உதட்டில் தவழவிட்டபடி போர்வையை விரித்து, தலையணையை எடுத்து வைத்து படுத்தவன், தன் இரு கைகளையும் தலைக்கு அணைவாக கொடுத்து, இனி அடுத்து தன் வாழ்க்கை எப்படி போகப் போகுதோ என்ற சிந்தனையிலேயே படுத்திருந்தான்.



உறக்கம் தான் அவன் மனைவியை போலவே அவனைத் தழுவ மறுத்தது.



மனதில் தேவை இல்லாததைப் போட்டு குழப்பிக் கொண்டு படுத்திருந்தவன், நடு இரவுக்கு மேல் தன்னையும் அறியாமல் உறங்கினான்.



உதியனம்பி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். அவன் மீது ஏதோ தொப்பென்று விழவும், என்னவோ! ஏதோவென்று.. உறக்கம் கலைந்து விழித்துப் பார்த்தான்.



தன் மேல் விழுந்து கிடந்தவளை கண்டவனுக்கு ஒரு நிமிடம் ஒன்றும் புரியவில்லை.



இது எப்படி என்று குழம்பியவனுக்கு, அவள் உறக்கத்தில் படுக்கையிலிருந்து உருண்டு தன் மீது தெரியாமல் விழுந்திருக்கிறாள் என்று புரிந்தது.



அவளோ, கீழே ஒருவன் மீது தான் விழுந்து கிடக்கிறோம் என்று அறியாமல்...

என்னமோ! பஞ்சு மெத்தையில் படுத்திருப்பது போல், சொகுசாக அவன் நெஞ்சில் முகத்தை அழுத்திக் கொண்டு உறக்கத்தில் ஆழ்ந்திருந்தாள்.



உதியனம்பியோ, இரவு தன்னை என்ன பேச்சு பேசினாள்.. இப்போது தன் மீது பசை போல் ஓட்டிக் கொண்டு கிடப்பதை நினைத்து அழுவதா? சிரிப்பதா? என்று எண்ணினான்.



நிறையாழிக்கு சிறுவயது முதலே தூக்கத்தில் தன்னை அறியாமல் புரண்டு.. புரண்டு.. படுக்கும் பழக்கமிருந்தது.

பாதிநாள் படுக்கையிலிருந்து இப்படி விழுவது அவளின் வாடிக்கை.. அதனாலேயே ஆடலரசு அவள் படுக்கும் கட்டிலில் மருத்துவமனை கட்டிலில்களில் உள்ளதைப் போல் படுக்கையின் இருபுறமும் தடுப்பு வைத்து செய்திருந்தார்.



அப்படியிருந்தும் சில சமயம் சோம்பேறி தனம் பட்டுக்கொண்டு, இரவு உறங்கும் பொழுது படுக்கையின் தடுப்பை மாட்டாமல் படுப்பவள், உறக்கத்தில் இப்படி தான் விழுவாள்.



நம்பிக்குமே, அது நன்கு தெரியும்.. திருமணம் முடிவான உடனேயே கட்டிலுக்கு இருபுறமும் தடுப்பு வைக்க வேண்டும் என்று எண்ணி இருந்தான்.. ஆனால் வேலைப்பளுவில் அவனுக்கு அதற்கு நேரம் கிடைக்கவில்லை.



அதுமட்டுமின்றி தானும் அவள் அருகில் தானே படுப்போம்.. அவள் விழுகாமல் பார்த்துக்கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டான்.



முதல் நாளே தன் அன்பு மனைவி! தன்னை இப்படி கீழே படுக்க வைப்பாள் என்று அவன் கனவிலும் நினைக்கவில்லை.



ஆனால், அதுவும் நல்லதுக்கே என்று இப்போது தோன்றியது. இல்லையென்றால் இப்படி அவள் தன் மீது பூங்கொடியாய் கிடப்பாளா? என்று எண்ணினான்.



மனமோ, அவளை தன்னுடன் இன்னும் புதைத்துக்கொள்ள துடித்தது. ஆனால் மூளையோ, அவள் விருப்பம் இல்லாமல் அவளைத் தொடக்கூடாது என்று அறிவுறுத்தியது.



மனதுக்கும், மூளைக்கும் நடுவில் போராடியவன், கடைசியில் மூளை சொல்லியதைப் புறம் தள்ளிவிட்டு, மனம் சொல்வதையே ஏற்றவன், அவளை தன்னுள் புதைத்துக்கொண்டு மனம் கொள்ளா சந்தோஷத்துடன் உறக்கத்தை தழுவினான்.



பொழுது அழகாக புலர்ந்தது. கதிரவன் சாளரத்தின் வழியாக செங்கதிர்களைப் பரப்பி தான் வந்துவிட்டதை அறிவித்தது.



நிறையாழிக்கு மெல்ல உறக்கம் கலைந்தது. எழுந்துகொள்ள மனமில்லாமல் தலையணையில் முகத்தை அழுத்தியவளுக்கு ஏதோ வித்தியாசமாக பட்டது.



‘ஏன் தலையணை இவ்வளவு கடினமாக இருக்கிறது!’ என்று நினைத்தபடியே விழித்தவள், தான் இருக்கும் நிலை கண்டு தூக்கிவாரிப் போட எழுந்தாள்.



ஆனால், அவளால் அசையக் கூட முடியவில்லை.. தன் அருமைக் கணவன் தன்னை விட்டால் ஓடிவிடுவாளோ! என்று நினைத்தோ! என்னமோ! தன் கைவளைவுக்குள் அவளை இறுக்கி அணைத்திருந்தான்.



நிறையோ, அவனிடமிருந்து விலக தன் பலம் கொண்டமட்டும் போராடிப் பார்த்தாள். ஆனால் அவளால் அசையவே முடியவில்லை.

வேறு வழியில்லாமல் தன் கணவனை எழுப்பினாள்.



அவனோ, தூக்கத்திலேயே, "ஏன்டி பேசாமல் தூங்கு.." என்றபடியே அவளை இன்னும் வாகாக தன்னுள் அழுத்திக் கொண்டான்.



நிறைக்கோ, அவன் அணைப்பை விட, அவனின் டீ என்ற அழைப்பு திகைப்பை தந்தது.

என்ன செய்வது என்று யோசித்தவள், அவனின் பிடியிலிருந்து தன் கைகளை மெல்ல பிரித்தவள், அவன் கன்னத்தை தட்டி எழுப்பினாள்.





அவனோ, மெல்ல உறக்க கலக்கத்திலேயே விழித்தவன், தன் கண்முன்னே மனைவியின் மதி முகத்தைக் கண்டு வியப்புடன் பார்த்தான்.



அவளோ, அவனின் வியந்த பார்வையை புறம் தள்ளியவள், கொஞ்சம் கைய எடுக்கிறீங்களா!? உங்களுக்கு எவ்வளவு தைரியம் இருந்தால் என்னை இப்படி அணைத்துக்கொண்டு படுத்திருப்பீங்க.." என்று காலையிலேயே சண்டையை ஆரம்பித்தாள்.



அவனோ, "ஹலோ நீ வந்து என் மேலே விழுந்துட்டு என்னையா கேள்வி கேட்கிறே..." என்றான்‌ நக்கலாக.



"நான் தெரியாமல் தூக்கத்தில் விழுந்துட்டேன்.. அதற்காக இப்படி தான் அணைப்பிங்களா..?"



"எனக்கு என்ன தெரியும் நீ தூக்கத்தில் தெரியாமல் விழுந்தேன்னு‌! நான்‌என்னமோ‌ நீ ஆசையாக‌ வந்து என் மேல் தூங்கறேன்னு நினைத்தேன்.."



"ஆமாம் நீங்க பெரிய ஹீரோ!‌ உங்க மேலே ஆசைப்பட்டு வந்து தூங்க.."



"ஏய் நீ சொன்னாலும் சொல்லாட்டியும் நான் ‌ஹீரோ தான் யாழி மேடம்.. மனசுக்கு பிடித்தவளையே கல்யாணம் பண்ணிருக்கேனே.." என்றவனை முறைத்தபடியே அவனிடமிருந்து விலக முற்பட்டாள்.



அவனோ, இன்னும் தன் பிடியை தளர்த்தாமலேயே அவளின் முயற்சியைப் பார்த்து சிரித்தான்.



அவளுக்கோ, அவனின் சிரிப்பு கோபத்தைக் கிளப்பியது. "உங்களுக்கு எவ்வளவு தைரியம். இப்போ விடப்போறீங்களா இல்லையா..?" என்று ஆத்திரத்தில் கத்தியவளிடம்,



"பொண்டாட்டியை கட்டிப்பிடிக்க எதுக்குடீ தைரியம் வேண்டும்? என்ன இந்த அறுபது கிலோ வெயிட்டை சுமக்க பலம் தான் வேண்டும். நைட்ல இருந்து உன்னை இப்படி சுமந்து கொண்டு அசையாமல் படுத்திருந்ததால் கை கால் தான் பிடிச்சுகிச்சு.."



"நான் ஒன்னும் அறுபது கிலோ கிடையாது. அதை விட குறைவு தான்.. சும்மா கடுப்படிக்காமல் விடுங்க.."



"அப்படியா! சோதித்துப் பார்த்தரலாமா? என்னமோ! உன்னை விட எனக்கு மனசே வரமாட்டேங்குதே டீ.."



ஹலோ, இந்த டீ போடற வேலை வெச்சுட்டீங்க நடக்கிறதே வேறே..!"



"அப்படி தான் டீ போடுவேன் என்ன செய்வே..?"



"ஹலோ என்ன கொழுப்பா மரியாதையாக விடுங்க.."



"ஆமா டீ.. இதோ! இது கொடுத்த கொழுப்பு.." என்று அவள் கழுத்தில் தொங்கிய மாங்கல்யத்தை எடுத்துக் காட்டினான்.



அவளோ, தன் பொறுமையை கொஞ்சம் கொஞ்சமாக கைவிட்டுக் கொண்டிருந்தாள்.



உதியனம்பிக்கோ, அவளிடம் வம்பளப்பது ஆனந்தமாக இருந்தது.



சரியாக அந்த நேரம்‌ தாழ்குழலி கதவை தட்டும் சத்தம் கேட்கவும், நம்பி அவளை விடுவித்தான்.



அவளோ, தன்னை விட்டால் போதுமென்று எழுந்து நின்றவள், தன் புடவையிருந்த நிலை கண்டு பதறிப்போனாள்.



தாழ்குழலியோ, மீண்டும் கதவை தட்டிய படியே வெளியிலிருந்து, "நிறை.. உதிம்மா.." என்று அழைத்தார்.



நிறையோ, என்ன செய்வது என்று புரியாமல் திகைத்தபடி, நழுவிய சேலையைப் பிடித்துக்கொண்டு நம்பியை பரிதாபமாக பார்த்தாள்.



நம்பியும் அவள் நிலையை புரிந்து கொண்டு, "நீ சேலையை சரி பண்ணு நான் போய் கதவை திறக்கிறேன்.." என்றவன் மறக்காமல் போர்வையையும், தலையணையையும் எடுத்து கட்டில் மேல் போட்டு விட்டு சென்று கதவை திறந்தான்.



நிறையோ, கதவுக்கு முதுகுகாட்டி நின்றபடி சேலையை சரி செய்து கொண்டிருந்தாள்.



தாழ்குழலியோ, கதவை திறந்த மகனை மலர்ந்த முகத்துடன் எதிர்கொண்டவர், "உதிம்மா நீயும், நிறையும் சீக்கிரம் குளித்து கிளம்பி வாங்க.. பக்கத்தில் இருக்கும் அம்மன் கோவிலில் பூஜைக்கு ஏற்பாடு செய்திருக்கேன். இரண்டு பேரும் போய்ட்டு வாங்க.." என்றவரிடம் "சரிம்மா.." என்றான்.



தாழ்குழலியோ, மகன், மருமகளின் நிலை கண்டு ஒரு தாயாக மனநிம்மதி அடைந்தார். மகனின் மகிழ்ச்சியான முகம் அவருக்கு எல்லையில்லா ஆனந்தத்தையும், நிம்மதியையும் கொடுத்தது.



மனதிற்குள் 'கடவுளே என் குழந்தைகள் இருவரும் எப்போதும் இதே போல் சந்தோஷமாக வாழ வேண்டும்..' என்று வேண்டிக் கொண்டார்.



ஆனால், தன் மகனுக்கு அவ்வளவு எளிதாக மகிழ்ச்சி கிடைத்துவிடாது! என்று அந்த தாயுள்ளத்திற்கு அப்போது தெரியவில்லை.


தொடரும்..

அடுத்த அத்தியாயம் நாளை காலை.. இன்றைய அத்தியாயத்தை படித்து விட்டு உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்..

நன்றி!
அன்புடன்
இனிதா மோகன்

 

Initha Mohan

Well-known member
Saha Writer
Messages
403
Reaction score
659
Points
93
தொடுக்காத பூச்சரமே!



அத்தியாயம் 11

உதியனம்பி, நிறையாழி திருமணம் முடிந்து பத்து நாட்கள் கடந்திருந்தது. மறுவீட்டு விருந்தெல்லாம் முடிந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியிருந்தார்கள்.



நிறை‌‌ ஒரு‌வாரம் மட்டும் கல்லூரிக்கு லீவு எடுத்திருந்தாள். அதன் பின் வழக்கம் போல பணிக்கு சென்றாள். நம்பியும் ஒரு வாரம் கடையை திறக்கவில்லை.



சங்குமணியின் பாட்டி இறந்துவிட்டார். அதனால், அவன் நம்பி கல்யாணத்திற்கு வர முடியவில்லை. அவன் மிகவும் ஆசைப்பட்ட தன் முதலாளியின் திருமணத்தை காணமுடியவில்லையே என்று வருத்தப்பட்டவன்..

தன் பாட்டியின் காரியம் முடிந்த பின், மணமக்கள் இருவருக்கும் சங்கு மணி பரிசு பொருள் வாங்கிக் கொண்டு நம்பியின் வீட்டிற்கு சென்று தன் வாழ்த்தை தெரிவித்தான்.



அடுத்து வந்த நாட்களில்.. உதியனம்பி, நிறையாழியின் வாழ்வில் பெரிதாக எந்த மாற்றமும் நிகழவில்லை.



தாழ்குழலியின் கட்டாயத்தின் பெயரில் நிறை நம்பியுடன் வண்டியில் கல்லூரிக்குச் செல்வாள். அதுவும் அவர்கள் தெருவை தாண்டினால் வண்டியிலிருந்து இறங்கி, பேருந்து நிறுத்தத்திற்கு நடந்துச் சென்று, கல்லூரிக்கு பேருந்தில் தான் செல்வாள்.



நம்பிக்கு அவளின் செயல்கள் முதலில் வருத்தம் தந்தாலும், பின் பழகிப் போனது.



நிறையாழியை, உதியனம்பி எந்த விஷயத்திலும் கட்டாயப்படுத்துவதில்லை.. அவள் விருப்பப்படியே விட்டான்.



நிறைக்கு நம்பியுடன் கல்லூரிக்குச் செல்வதில் விருப்பம் இல்லை.. நம்பியுடன் கல்லூரி வரைச் சென்றால் தன் கணவனைப் பற்றி உடன் பணிபுரிபவர்கள் கேட்பார்களே! அவர்களிடம் அவனை எப்படி அறிமுகப்படுத்துவது என்ற தயக்கத்தினாலேயே, அவனுடன் கல்லூரிக்குச் செல்ல தயங்கினாள்.



நம்பிக்கும் அவள் மனம் புரிந்தது. அதனாலேயே அவளைச் சங்கடப்படுத்தாமல் ஒதுங்கிப் போனான்.



கணவன், மனைவி இருவருமே ஒன்றில் மட்டும் ஒற்றுமையாக இருந்தனர். அது தங்கள் மனவேறுபாடு தாழ்குழலிக்கு மட்டும் தெரியவே கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்கள்.



தாழ்குழலி முன்பு இருவருமே நன்றாக நடித்தார்கள்.



தங்கள் அறையில் தனிமையில் இருக்கும் போது இருவரும் பேசிக் கொள்வது கூட அரிது தான்!

நம்பியும், நிறையும் தனியாக எங்கும் வெளியில் செல்லவில்லை. தாழ்குழலி கூட எத்தனையோ முறை வெளியில் சென்று வாருங்கள் என்று வற்புறுத்தினாலும் அந்த ஒன்றை மட்டும் இருவரும் கேட்பதே இல்லை. இருவரும் வேலை இருக்கிறது என்றே சாக்கு சொல்லி வந்தனர்.



நம்பியும் தன் திருமண நாளன்று அவளிடம் கொஞ்சம் அதிகப்படி உரிமை எடுத்து பேசியது தான் கடைசி.. அதன் பிறகு அவன் அது போல் அவளிடம் எந்த உரிமையும் எடுத்து கொள்ளவில்லை.



எப்போதும் நம்பியை பார்த்தாலே நிறையாழி தீயாக காய்ந்தால், அவன் தான் என்ன செய்வான். முடிந்தவரை அவளிடம் பேச்சை குறைத்ததுடன், வீட்டில் இருக்கும் நேரத்தையும் குறைத்தான்.



தன் கனவை நிறைவேற்ற அதே வேலையில் மூழ்கினான். அதுவே அவன் மனதிற்கு ஆறுதலாக இருந்தது.



இருவரும் இப்படி தங்கள் வேலையிலே உழன்று கொண்டிருந்தவர்களை, பூவணியின் அவசர திருமணம் அவர்களுக்கு ஒரு மாற்றத்தை தந்தது.



நிறைக்கு பூவணியின் திருமண விசயத்தைக் கேள்விப்பட்டதும் சிறு அதிர்ச்சியாக இருந்தது. ஆனாலும், அவள் நன்றாக இருந்தால் போதும் என்ற எண்ணத்தில்! தன் கணவனுடன் திருமணத்தில் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டாள்.



அவசர கோலமாக பூவணியின் திருமணம் முடிந்தது. பூவணியின் முகத்தைப் பார்த்தாலே அவளுக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்று அப்பட்டமாக தெரிந்தது.



மாப்பிள்ளை நல்ல வசதி.. பார்ப்பதற்கும் நன்றாகத் தான் இருந்தான். ஆனாலும், நம்பி நிறை இருவருக்குமே ஏனோ மாப்பிள்ளையைப் பார்த்தவுடன் பிடிக்கவில்லை.



இருவர் மனதுக்கும் கிளியைப் பிடித்து பூனை கையில் கொடுத்தது போல் தோன்றியது. மனதில் குழப்பமிருந்தாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல் பூவணியை மனதார வாழ்த்தினார்கள்.



நம்பியோ, ஒரு படி மேல் சென்று, "வணிம்மா உனக்கு எப்போ எந்த கஷ்டம் வந்தாலும் இந்த அண்ணன்‌ இருக்கிறேன் என்பதை மறந்து விடாதே.." என்று கூறினான்.



உதியனம்பியின் வார்த்தைகளைக் கேட்டு பூவணியோ, கண்களுக்கு எட்டாத சிரிப்பை உதிர்த்தாள்.



நம்பிக்கு எப்போதுமே பூவணி மேல் ஒரு தனிப்பிரியம். சிறுவயது முதல் தன்னை அண்ணா என்று அழைத்ததாலோ! தன் மீது கள்ளம் கபடம் இல்லா பாசம் காட்டியதாலோ! என்னவோ அவன் மனதில் அவளை உடன் பிறவா சகோதரியாகவே நினைத்திருந்தான்.

அதனாலேயே, பூவணியிடம் அப்படி சொன்னான்.



அவளின் மனம் ஒட்டாத சிரிப்பு அவனுக்கு மேலும் கவலையை தந்தது. அது மட்டுமின்றி அவனுக்கு மாப்பிள்ளையைப் பார்த்ததிலிருந்தே ஏனோ பிடிக்கவில்லை..



மாப்பிள்ளை சரியில்லை என்று அவன் உள்ளுணர்வு எச்சரித்தது.



அதே யோசனையில் இருந்தவன்.. திருமணத்தில் கலந்து கொண்டு வீடு திரும்பும் போது, நிறையிடம், ரொம்ப நாள் கழித்து கொஞ்சம் இயல்பாக பேசினான்.



அதுவும் பூவணியைப் பற்றித் தான் கேட்டான்.

"நிறை நீ பூவணியிடம் பேசினாயா? திருமணத்தில் அவளுக்கு சம்மதமா? மாப்பிள்ளையைப் பற்றி ஏதாவது சொன்னாளா?" என்று அடுக்கடுக்காக கேள்வி கேட்டான்.



நிறையோ, "நான் அவளிடம் நன்றாக பேசி ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது.. அம்மா சொல்லித் தான் அவளுக்கு திருமணம் என்றே எனக்கு தெரியும்.." என்றவளிடம்,



"ஏன்‌‌? நீ அவளிடம் பேசவில்லை.. இரண்டு பேருக்கும் என்ன‌ பிரச்சனை‌?" என்று சந்தேகமாக கேட்டான்.



"பிரச்சனையெல்லாம் இல்லை.. நம் திருமணத்திற்கு பிறகு எனக்கு சரியாக பேச வாய்ப்பு கிடைக்கவில்லை.."



“ஓ! நீ போனிலாவது பேசி இருக்கலாம்.. எனக்கு என்னவோ மாப்பிள்ளையை சுத்தமாக பிடிக்கவில்லை. நீ பேசியிருந்தால் திருமணத்தைப் பற்றி முன்னமே தெரிந்திருந்தால் தடுத்து இருக்கலாம்‌.." என்று மனதார வருந்தினான்.



அவளோ, "எனக்கும் அப்படித்தான் இப்போது தோன்றுகிறது.. இனி என்ன செய்வது‌! எப்படியோ அவள் நன்றாக இருந்தால் போதும்.."



"ம்! இனியாவது அடிக்கடி அவளிடம் பேசு.." என்றவன் அத்துடன்‌ பேச்சை நிறுத்தியவன், சிந்தனையுடனேயே வீடு வந்து சேர்ந்தான்.



அதன் பிறகு வந்த நாட்களில் கணவன், மனைவி இருவரும் கொஞ்சம் இயல்பாக பேசிக் கொண்டனர். ஆனாலும் இருவருக்குள்ளும் ஒரு ஒட்டுதல் இல்லாத பேச்சு தான் தொடர்ந்து.



உதியனம்பி முடிந்தவரை நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் நிறையை தன் மாமனார் வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.



ஆடலரசும், செந்தழையும் மகளும் மருமகனும் சந்தோஷமாக வாழ்கிறார்கள் என்று மகிழ்ந்தார்கள்.



அப்படியே வாழ்க்கை அழகாக நகர்ந்திருந்தால் ஒரு பிரச்சனையும் இல்லை தான்.. ஆனால், விதி தன் ஆட்டத்தை தொடங்கியது.



அன்று, நிறையாழி கல்லூரி முடிந்து வீட்டிற்கு வரும்போதே, சோர்வாகத் தான் வந்தாள். தாழ்குழலி வேறு‌ வீட்டில் இல்லை.. வீடு பூட்டியிருந்தது. அதுவே அவள் சோர்வை இன்னும் அதிகமாக்கியது.



எப்போதும் வீட்டிற்கு வரும் போதே, இன்முகத்துடன்‌ வரவேற்கும் அத்தையின் ‌முகத்தை காணாமல்.. அன்று அவள் மனதில் சிறு எரிச்சலும் குடிகொண்டது.



அதே எரிச்சலுடன் வழக்கமாக சாவி வைக்கவும் இடத்திலிருந்து, சாவியை எடுத்து வீட்டை திறந்து உள்ளே சென்றாள்.



உடல் சோர்வில் சிறிது நேரம் அப்படியே நாற்காலியில் அமர்ந்திருந்தவள்.. இனி தானே தான் காஃபி கலந்து குடிக்கனும் என்ற எண்ணம் அவளுக்கு மேலும் எரிச்சலைக் கூட்டியது.



சரியாக அந்த நேரம் உதியனம்பியும் வீட்டிற்கு வந்தான்.



அன்று நம்பிக்கு கடையிலிருந்து கிளம்பும் போதே சரியான தலைவலி.. ஒரு காஃபி குடித்தால் தேவலாம் போல் இருந்தது.



வீட்டிற்குள் நுழையும் போதே எதிர்ப்பட்ட தன் மனைவி நிறையாழியிடம், "யாழி ஒரே தலைவலியாக இருக்கு.. கொஞ்சம் காஃபி கலந்து தர முடியுமா..?" என்று தன்மையாக கேட்டவனிடம்..



"ஆமாம் கலெக்டர் வேலை பார்க்கிறீங்க பாரு.. அது தான் வீட்டுக்குள் வரும்போதே தலைவலியும் வரும்.. பொண்டாட்டிங்கிற திமிர்ல அதிகாரமும் தூள் பறக்கும்‌.." என்று முனங்கினாள்.



அவளும் அப்போது தான் கல்லூரியிலிருந்து வந்திருந்தாள். உடல் களைப்பில் தன்னை அறியாமல் வார்த்தைகளைக் கொட்டினாள்.



உதியனம்பிக்கோ, அவளின் நக்கல் பேச்சு மனதை ரணமாக்கியது. அவனுக்கிருந்த தலைவலியில் சட்டென்று கோபம் தலைதூக்க, "கலெக்டர் வேலை பார்க்கிறவங்களுக்குத் தான் தலைவலி வரனும்ன்னு இருக்கா? ஏன் என்னை மாதிரி உடல் நோக வேலை செய்றவனுக்கு தலைவலி வரக்கூடாதா? உனக்கு பலமுறை சொல்லிட்டேன் என்னைப் பற்றி என்ன வேணா சொல்லு.. ஆனால் என் வேலையைப் பற்றி கேவலமா பேசினே நான் மனுசனா இருக்க மாட்டேன்.." என்றவனின் கோபத்தைக் கண்டு நிறையாழி ஒரு நிமிடம் திகைத்து நின்றாள்.



அவனோ, "நம் திருமணம் முடிந்த நாளிலிருந்து இன்று வரை நான் என்னைக்கு உன்னை பொண்டாட்டின்னு அதிகாரம் செய்து இருக்கேன்னு நீயே சொல்லு.." என்று ஆத்திரத்துடன் கேட்டான்.



அவளோ, அவனின் கோபத்தைக் கண்டு வாயடைத்து நின்றாள்.



"இன்று‌ ஏனோ‌ மதியத்திலிருந்தே தலைவலி... அது தான் காஃபி கேட்டேன்.. அதுவும் அம்மாவை காணலைன்னு உன்னைக் கேட்டேன். அது தப்பு தான்.." என்றவனிடம்..



"நானும் இப்ப தான் வந்தேன். ரொம்ப டயர்டா‌ இருந்துச்சு.. அது தான் ‌இப்படி தெரியாமல் பேசிட்டேன் சாரி.." என்றாள் கொஞ்சம் தன்மையாக.



அவனோ, "நீ எதற்கு சாரி கேட்கனும்.. நான்‌ தான் சாரி கேட்கனும் உன்னிடம் காபி கேட்டதற்கு.." என்றவன், மீண்டும் வெளியில் செல்ல திரும்பினவனைக் கண்டு பதறியவள்.. "ஒரு நிமிடம் இருங்கள், இதோ காஃபி கலந்து எடுத்துட்டு வரேன்.." என்றவளிடம்..



"நீ பேசியதே காஃபி குடித்த மாதிரி இருக்கு.. போதும்.." என்று கோபமாக கூறியவனிடம்..



"நான் தான் சாரி கேட்டேனே அப்புறம் ஏன் இப்படி பேசறீங்க.." என்றாள். அவளுக்கே தான் இன்று பேசியது அதிகப்படி என்று புரிந்தது.



அவனோ, "நீங்க எதற்கும்மா என்னிடம் போய் சாரி கேட்கனும்.. அதுவும் நான் படிக்காதவன், மெக்கானிக்.. என்னிடம்‌ பேசினாலே உங்களுக்கு கெளரவக் குறைச்சல்.. உங்க‌ ப்ரெண்ட்ஸ் கிட்ட என்னை உங்க கணவர்ன்னு சொல்ல உங்களுக்கு கேவலமா இருக்கும்.." என்று‌ அவனின் மனதில் இத்தனை நாளாக இருந்த குமுறலை என்றுமில்லாமல் இன்று‌ கொட்டித் தீர்த்தான்.



அவளோ, அவனின் பேச்சைக் கேட்டு திகைத்து நின்றாள்.



அவனே, தொடர்ந்து.. "நீ சரியா தான் சொன்னே.. நான் தான் முட்டாள். அது தான் உன்னை கல்யாணம் பண்ணிட்டு சீரழிகிறேன்.." என்றான். அன்று‌ அவன் வாயில் சனி தான் இருந்திருக்கும் போல.



நிறைக்கோ, அவன் பேச.. பேச அவளுக்கும் கோபம் தலைக்கு ஏறியது. அவளும் பொறுக்க முடியாமல் திரும்ப வார்த்தையை விட்டாள்.



"நான் சொல்ல வேண்டியதை நீங்க சொல்றீங்க.. உங்க மனசாட்சியைத் தொட்டு சொல்லுங்க.. உங்கள கல்யாணம் செய்து என் வாழ்க்கை சீரழிந்ததா? உங்க வாழ்க்கை சீரழிந்ததா?"



“ஓ! அப்படி என்ன டி உன் வாழ்க்கையை நான் சீரழித்துட்டேன்.. உன்னை எந்த விதத்தில் தொந்தரவு செய்தேன். எனக்கு என்ன தான் உன்‌ மேல் விருப்பம் இருந்தாலும், உன் விருப்பத்திற்கு மதிப்பு கொடுத்து கணவன் என்ற‌ உரிமையை உன்னிடம் காட்டாமல் விலகி தானே இருக்கிறேன்.."



"ஓ! நான் அந்த உரிமையைக் கொடுக்கலைன்னு தான்‌ இப்படி பேசறீங்களா?"



"ஏய் நான் என்ன சொல்றேன் நீ என்ன‌ உளருகிறாய்.."



"நான் ஒன்னும் உளறலை சரியாகத் தான் சொல்றேன்.."



"பைத்தியம் மாதிரி பேசாதே.."



"ஆமாம் நான்‌ பைத்தியம் தான்.. அது தான் எனக்கு விருப்பம் இல்லாட்டியும், எங்க அப்பாவுக்காகவும், அத்தைக்காகவும் பேசாமல் உங்களை கல்யாணம் செய்துட்டு இங்கே இருக்கேன் பாரு‌ நான் பைத்தியம் தான்.." என்று புலம்பியவளிடம்,



"அப்படி ஒன்றும் கஷ்டப்பட்டு மத்தவங்களுக்காக நீ இங்கே என் கூட இருக்க வேண்டாம்‌. தாராளமாக இப்பவே விவாகரத்து வாங்கிட்டுப் போ.." என்றவனின் வார்த்தைகளைக் கேட்டு திகைத்தவள் எல்லையில்லா கோபத்துடன்.



"ஆமாம் முதலில் அதைச் செய்யுங்க.. உங்களைக் கண்டாலே எனக்கு சுத்தமாக பிடிக்கலை.. இந்த நரகத்திலிருந்து எப்போ போவோம்ன்னு இருக்கு.." என்றாள்.. தான்‌என்ன சொல்கிறோம்‌ என்றே அறியாமல்.



சரியாக அந்த நேரம் "உதியனம்பி.." என்ற‌ குரலில் இருவரும் திகைத்து போய் திரும்பி பார்த்தனர்.



தொடரும்..

Hi friends,
அடுத்த அத்தியாயம் நாளை காலை..இன்றைய அத்தியாயத்தை படித்து விட்டு உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்..
நன்றி
அன்புடன்
இனிதா மோகன்
 

Initha Mohan

Well-known member
Saha Writer
Messages
403
Reaction score
659
Points
93

அத்தியாயம் 12



உதியனம்பியும், நிறையாழியும் அங்கே நின்றிருந்த தாழ்குழலியைப் பார்த்து உறைந்துப் போனார்கள்.



தாழ்குழலியோ, இருவரையும் கண்களில் சொல்ல முடியாத வலியுடன் பார்த்துக் கொண்டிருந்தார்.



அவருக்கு இரண்டு நாட்களாக ஏனோ, மனமே சரியில்லை. சரியான தூக்கம் இல்லை. அப்படியே தூங்கினாலும் ஏதேதோ கெட்ட கனவு வந்தபடியே இருந்தது. அதனால், மனநிம்மதிக்காக அருகிலிருக்கும் கோவிலுக்குச் சென்றார்.



தன்னை மறந்து கோவிலில் அமர்ந்திருந்தவருக்கு மணியானதே தெரியவில்லை.

அருகில் யாரோ? மணி ஆறாச்சு என்று பேசியது அவர் செவியில் விழவும், பதறியடித்து வீட்டிற்கு வந்தார்.



நிறை கல்லூரியிலிருந்து வந்து இருப்பாளே! என்ற எண்ணத்திலேயே வந்தவர் வீட்டிற்குள் உதியனம்பி நுழைவதைக் கண்டவர், மனதிற்குள், மகன் என்ன? ‌என்றும் இல்லாமல், இன்று சீக்கிரம் வந்துவிட்டானே! என்ற யோசனையுடனேயே வேகமாக வீட்டுப் படி ஏறியவருக்கு.. மகனும், மருமகளும் பேசியது அவர் காதுகளில் விழவும் அதை கேட்டவர், அதே இடத்தில் திகைத்துப் போய் அசையாமல் நின்றுவிட்டார்.



இருவரின் பேச்சும் எல்லை மீறவும் தான் பொறுக்க முடியாமல், கோபத்துடன் மகனை முழுபெயரிட்டு அழைத்தார்.



தாழ்குழலி, மகன் மீது அளவுகடந்த கோபம் வந்தால் மட்டுமே, முழு பெயரிட்டு அழைப்பார்.



உதியனம்பியோ, தன் தாயுக்கு எது தெரியக் கூடாதென்று‌ நினைத்தோமோ! அது தெரிந்து விட்டதே! என்று துடித்துப் போனான். தாயின் முகத்தை நேராக காணமுடியாமல் குற்றவுணர்வில் தத்தளித்தவன், உடனே வெளியில் சென்று விட்டான்.



நிறையாழியோ, அப்படியே உறைந்துப் போய் கல்லாக நின்றாள். அவளாலும் தன் அன்பு அத்தையின் முகத்தை தைரியமாக காணமுடியவில்லை.



தாழ்குழலியோ, நிறையிடம் எதுவும் பேசாமல் தன் படுக்கையில் சென்று அமைதியாக அமர்ந்தார்.



அவரின் மனதிற்குள் பெரும் சூறாவளி அடித்துக் கொண்டிருந்தது.

முதல்முறையாக தான் தவறு செய்துவிட்டோமோ? என்று மனதிற்குள் நினைத்து தாழ்குழலி தவித்துப் போனார்.



நிறையோ எத்தனை நேரம் அப்படி நின்றாளோ! அவளே அறியவில்லை.. உணர்வு வந்தவுடன் தன் அத்தையை தயக்கத்துடன் பார்த்தாள்.



தாழ்குழலி அமர்ந்திருந்த நிலையைக் கண்டவள், அதை காணமுடியாமல், ஓடிப்போய் அவரின் காலடியில் மண்டியிட்டவள், அவரின் மடியில் முகத்தைப் புதைத்துக் கொண்டு அழுது கரைந்தாள்.



மருமகள் அழுவதை பொறுக்க முடியாத தாழ்குழலி, "நிறை முதலில் நீ அழுவதை நிறுத்து.." என்றார் சற்றே குரலை உயர்த்தி..



அவரின் சத்தம் அவளிடம் சரியாக வேலை செய்தது. மெல்ல அழுவதை நிறுத்தியவள், தன்னை சமன்படுத்திக் கொள்ள சில நிமிடங்கள் அவகாசம் எடுத்துக் கொண்டாள்.



தாழ்குழலியோ, அவள் தன்நிலைக்கு வரும் வரை எதுவும் பேசாமல் ஊமையாகவே அமர்ந்திருந்தார்.



தன்னை நிலைப்படுத்திக் கொண்ட பின்னர், நிறை அவரின் கைகளை ‌பற்றியவள், "அத்தை என்னை மன்னித்து விடுங்கள்.. நான் அப்படி பேசியிருக்க கூடாது. இன்று கல்லூரியிலிருந்து வரும்போதே மனம் சோர்வாக இருந்தது. அந்த குழப்பத்தில் தெரியாமல் பேசிட்டேன். நீங்கள் ஏதும் தவறாக நினைக்காதீங்க.. இனிமேல் இது போல் நடக்காது.." என்று தயங்கியபடியே சொன்னாள்.



"நிறை இது மனச்சோர்வில் வந்தது போல் தெரியவில்லையே.. மனதிற்குள்ளிருந்து வந்தது போல் தானே இருக்கு. இத்தனை நாள் அடைத்து வைத்திருந்தது இன்று வெளியில் வந்துவிட்டது. நான் தான் தவறு செய்து விட்டேன். உன்னிடம் ஒரு முறையாவது உதியை திருமணம் செய்து கொள்ள சம்மதமா? என்று கேட்டிருக்கனும். முட்டாளாக இருந்து விட்டேன்.."



"அய்யோ! அத்தே அப்படியெல்லாம் இல்லை.. ஏன் இப்படி பேசுறீங்க..?"



"என்ன செய்ய.. இன்று நீங்க இருவரும் என்னை இப்படி பேச வச்சுட்டீங்களே.."



"அத்தே, நீங்க மனசை போட்டு குழப்பிக்காதீங்க.. அது உங்க உடம்புக்கு நல்லதில்லை.. எனக்கு உதி மாமாவ எப்போதும் பிடிக்கும்.. இன்று எனக்கு என்னமோ ஆகிவிட்டது. அது தான் தேவை இல்லாததைப் பேசிட்டேன். என்னை மன்னித்துவிடுங்கள்.."



"நிறை‌ உனக்கு தெரியுமோ? தெரியாதோ? என் உயிரே அவன் தான்..! அவன் வாழ்க்கை நல்லா இருக்க வேண்டுமென்று தான் பெத்த மனசு தவிக்குது‌. ஆனால், உங்க இருவருக்கும் இடையே இத்தனை மன வேறுபாடு இருக்குமென்று எனக்கு தெரியாம போச்சே.." என்று கண்கலங்கியவரை பார்த்த நிறையாழியும் துடித்துப் போனாள்.



"அத்தே, நீங்க கவலைப்படுவது போல் எதுவும் இல்லை.. நாங்க நன்றாகத் தான் வாழ்கிறோம். இன்று நடந்ததெல்லாம் என் ‌அவசரப்புத்தியால் வந்தது. இனி இதுபோல் நான் எப்போதும்‌ மாமாவிடம் பேசமாட்டேன்.." என்றவளும் மனதார கலங்கினாள்.



நிறைக்கு அப்போது தான் அவள் பேசிய வார்த்தைகளின் தீவிரம் புரிந்தது. அதை விட தன்னோட அன்பு அத்தை கலங்குவதற்கு தானே காரணம் என்ற எண்ணமே! அவளை வதைத்தது.



"நிறை நான் கேட்பதற்கு பதில் சொல்லு.. உங்கள் இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்திருந்தால், விவாகரத்து என்ற வார்த்தை இருவரின் வாயிலிருந்து அத்தனை எளிதாக வருமா? இந்த வார்த்தையை கேட்கவா நான் உயிரோடு இருக்கேன்.." என்று வருத்தத்துடன் தாழ்குழலி கூறியவுடன்,



"அத்தே, அது ஏதோ கோபத்தில் பேசியது. நீங்க அடிக்கடி சொல்வீர்களே! கோபத்தில் பேசும் வார்த்தைகளுக்கு அர்த்தம் எடுக்க கூடாதுன்னு. அது போல் நாங்க பேசியதை பெரிதாக எடுக்காமல் எங்களை மன்னித்து விடுங்களே!"



"நிறை கோபத்தில் பேசுவதற்கும் ஒரு வரைமுறை இருக்கு.. நீங்க இருவரும் என் இரு கண்கள் போல.. நீங்க சந்தோஷமாக வாழ்வதைப் பார்க்கத் தானே நான் உயிரைப் பிடித்து வைத்திருக்கேன். ஆனால், இப்போது உங்கள் இருவரின் பேச்சை கேட்டதிலிருந்து, உங்களின் விருப்பம் இல்லாமலேயே திருமண வாழ்வில் இணைத்து விட்டோமோ! என்ற குற்றவுணர்வு என்னை கொல்லுது.."



"அத்தே, நீங்க நினைப்பது போல் எதுவும் இல்லை.. நிச்சயமாக நீங்க சந்தோஷப்படற மாதிரி நாங்க வாழ்வோம். இனி நான் இது போல் பேசவும் மாட்டேன், நடக்கவும் மாட்டேன் என்னை நம்புங்கள்.."



"நிறை நீ ஏன் உதியை ஒதுக்கிறாய் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால், அவனைப் போல் ஒருவன் கணவனாக கிடைக்க நீ கொடுத்து வைத்திருக்க வேண்டும். இதை நான் என் மகனென்று சொல்லவில்லை.. என்றாவது ஒரு நாள் நீ‌யே இதை புரிந்து கொள்வாய்.." என்றார்.



அவளோ, எதுவும் பேசாமல் குற்றவுணர்வில் பேசாமலிருந்தாள்.



அவரே தொடர்ந்து, "நிறை, உதி பற்றி உனக்கு என்ன தெரியுமோ! எனக்கு தெரியாது. அவன் தன் கஷ்டத்தை அவ்வளவு எளிதாக யாரிடமும்‌ பகிர்ந்து கொள்ள மாட்டான். தன்னுள்ளேயே புதைத்துக் கொள்வான். அவன் சின்ன வயதிலிருந்தே கஷ்டத்தைப் பார்த்தே வளர்ந்தவன். உன்னை திருமணம் புரிந்த பிறகாவது அவன் வாழ்வில் மகிழ்ச்சி வரும் என்று நினைத்தேன்.." என்று பெருமூச்சு விட்டவரிடம்,



"அத்தே, இனி நீங்க நினைப்பது போல் அவர் வாழ்வில் மகிழ்ச்சி மட்டுமே என்னால் வரும். நீங்க கவலைப்படாதீங்க.." என்றாள்.



அவரோ, "நிறை நீ என்றால் அவனுக்கு ரொம்ப பிடிக்கும். அதை பலமுறை நான் உணர்ந்திருக்கேன்.. அவன் மனசு குழந்தை மாதிரிம்மா.. தனக்கு எது வேண்டுமென்று‌கூட தெரியாது. எனக்கு பிறகு நீ அவனை நல்லா பார்த்துப்பேன்னு நினைத்தேன்.." என்றவர் ஒரு நிமிடம் பேச்சை நிறுத்திவிட்டு தொடர்ந்து..



"நிறை நான் உங்கிட்ட ஒன்று கேட்கிறேன்‌ உண்மையை சொல்வாயா?"

"நிச்சயமா அத்தை சொல்லுங்க.."



"உனக்கு.. உனக்கு உண்மையாலுமே உதியை பிடிக்குமா?" என்று கண்களில் தவிப்புடன் அவள் முகத்தையே பார்த்தவாறு கேட்டார்.



நிறைக்கோ, தன் அத்தையின் தவிப்பைக் காண முடியவில்லை. ஒரு நொடி கூட யோசிக்காமல் "எனக்கு உதிமாமாவ ரொம்ப பிடிக்கும் அத்தை.. பிடிக்கலைன்னா நான் அவரை கல்யாணம்‌ செய்திருக்க மாட்டேன்.." என்றவளை கண்டு நிம்மதி பெருமூச்சு விட்டவர்,



"நான் பயந்தே போய்ட்டேன்.. உனக்கு உதியைப் பிடிக்கலையோன்னு.." என்றவர் தொடரந்து, "நிறை அவன் உன் மேல் உயிரையே வைத்திருக்கான். அவன் பாவம்மா.. வாழ்க்கையில் அவன் எந்த சந்தோஷத்தையும் பார்த்ததில்லை. நீயும் அவனை உதாசீனப்படுத்தினால் அவன் என்ன செய்வான்.." என்று ‌கண்கலங்கினார்.



"அத்தே ப்ளீஸ் அழாதீங்க நான் தெரியாமல் பேசிவிட்டேன்.. இனி என்றும்‌ அவரிடம் இப்படி நடந்துகொள்ள மாட்டேன். என்னை தயவு செய்து மன்னித்து விடுங்கள்.." என்று தன் தப்பை உணர்ந்து மன்னிப்பு கேட்டாள்.



"நிறைம்மா எனக்கு இருக்கும் ஒரே ஆசை! எனக்கு பின் நீ உதியை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது தான்.

பார்த்துக் கொள்வாயா? உங்கிட்ட இதை நான் ஒரு பிச்சையாக கேட்கிறேன்.." என்றார் ஒரு தாயின் தவிப்புடன்.



"அத்தே, ஏன்‌ இப்படி பெரிய.. பெரிய, வார்த்தையெல்லாம் பேசறீங்க.." என்றவள், அவரின் உள்ளங்கைகளில் தன் கைகளை வைத்து அழுத்தியபடியே, "அத்தே, இனி உதி மாமாவை என் உயிருக்கு மேலாக நான் பார்த்துப்பேன். அவர் தான் என் வாழ்க்கை.." என்றவளுக்கும் தாங்க முடியாத மனப்பாரம்‌ கண்ணீராக‌ வழிந்தோடியது.

உதியனம்பியிடம் வாய்க்கு வாய் சண்டை போட்டவளால், இப்போது தன் அத்தையிடம் ஒரு வார்த்தை கூட மறுத்து பேச தோன்றவில்லை.



தாழ்குழலியோ, அவளின் வார்த்தைகளைக் கேட்டு சொல்ல முடியாத நிம்மதி அடைந்தவர், "நிறைம்மா எனக்கு இது போதும்! இனி நான் நிம்மதியாக கண்ணை மூடுவேன்.." என்றவரிடம்,



"அத்தை.." என்று கத்தியவள், "இன்னொரு‌ முறை இப்படி பேசாதீங்க! எனக்கு கெட்ட கோபம் வரும். நீங்க நூறு வருசம் நல்லா இருக்கனும். எங்க ரெண்டு பேருக்கும் எப்போதும் நீங்க வேண்டும்.." என்று கோபத்தில் தொடங்கி கண்ணீருடன் முடித்தாள்.



அவரோ, மருமகளின் கண்ணீரைக் கண்டு, "நெருப்புன்னு சொன்னா வாய் சுட்டுடாது.." என்று வியாக்கியானம் பேசினார்.



அவளோ, "அது சுடுமோ? சுடாதோ? எனக்கு அதெல்லாம் தெரியாது. ஆனால் நீங்க இனியொரு முறை அப்படி சொல்லக் கூடாது. நீங்க எனக்கு எப்போதும் வேண்டும். உங்களுக்கு உங்க மகன் உயிரா இருக்கலாம். ஆனால், எனக்கு நீங்க தான் உயிர்.. நீங்க நூறு வருஷம் வாழனும்.." என்று மனதாரச் சொன்னாள்.



அவரோ, மருமகளின் வார்த்தைகளைக் கேட்டு கண்கலங்கிய படியே, “மாமியாரிடம் இப்படி அன்பு காட்டும் மருமகள் யாருக்கு கிடைக்கும்.." என்றவர், ஆனாலும், இந்த அன்பையெல்லாம் நீ உன் புருஷனிடம் காட்டினால் அதை விட எனக்கு வேறொரு சந்தோஷம் இந்த உலகில் இல்லை.." என்றவரிடம்..



"அத்தே, நான் இன்று மாமாகிட்ட ரொம்ப தவறா பேசிட்டேன்.. இன்று மட்டுமில்லை நிறைய டைம் கோபம் வந்தால் இப்படி தான், தப்பு.. தப்பா, வார்த்தைகளை விட்டிருக்கேன். அதற்காக என்னை மன்னித்து விடுங்கள்.. இனி என்றும் நான் அப்படி நடந்து கொள்ளமாட்டேன்.." என்றவள், கைகூப்பி மன்னிப்பை வேண்டினாள்.



தாழ்குழலியோ, அதை கண்டு பதறியவர், அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு, "நிறை என்ன இது! எப்போது நீ உன் தவறைப் புரிந்து கொண்டாயோ, அதுவே போதும். நீங்க இருவரும் சந்தோஷமாக வாழ்ந்தால் அதை விட வேறென்ன வேண்டும் எனக்கு.." என்றார் நிம்மதியுடன்.



நிறையோ, மனதிற்குள் அத்தையின் சந்தோஷத்திற்காக தான் எதை வேண்டுமானாலும் செய்யலாம்.. உதியனம்பியுடன் சந்தோஷமாக வாழ்வது தான் அவருக்கு மகிழ்ச்சியென்றால், அந்த மகிழ்ச்சியையும் அத்தைக்கு கொடுத்தாக வேண்டுமென்று எண்ணினாள்.



தாழ்குழலியோ, சிறிது நேரம் மருமகளிடம் பேசிக் கொண்டிருந்தவர், மருமகள்‌ கொடுத்த காஃபியை வாங்கி குடித்து விட்டு, மனச்சோர்வின் காரணமாக அப்படியே படுத்துக் கொண்டார்.



நிறையோ, மனதிற்குள் தன்னைப் பற்றிய‌ ஆராய்ச்சியில் இறங்கினாள். தான் நடந்து கொண்டது மிகப் பெரிய தவறு என்பதை கொஞ்சம் கொஞ்சமாக உணர ஆரம்பித்தாள்.



மனதிற்குள், ‘என்ன படித்து என்ன? தானும் புத்தியில்லாமல் நடந்து கொண்டோமே! கணவன் தன்னிடம் சொன்னது போல் கணவன் என்ற உரிமையையோ, அதிகாரத்தையோ அவன் என்றுமே தன்னிடம் காட்டியதில்லையே.. இன்று வரை தன் விருப்பத்தைத் தான் முதலாவதாக அவன் மதித்து நடக்கிறான்.’என்று நினைத்தாள்.



‘உண்மையாலுமே அவனிடம் அப்படி என்ன குறை... படிப்பில்லை என்று நினைத்ததற்கு மாறாக.. இப்போது அவன் படிக்கும் புத்தகங்களைப் பார்க்கும் போது தன்னை விட அவன் தான் அறிவாளி என்று எண்ண வைக்கிறான்.



ஆண்மகனுக்கே உரிய அத்தனை கம்பீரமும்‌, அழகும் அவனிடம் நிறைந்து இருக்கு. ஒழுக்கமும், நேர்மையும், கண்ணியமும் அவனிடம் இருப்பது போல் யாரிடமும் தான் கண்டதில்லை. குறை கண்டு பிடித்தே பழகிய தன் மனதுக்குத் தான், இத்தனை நாள் அவனின் நிறைகள் தெரியாமல் போய்விட்டது.’ என்று எண்ணினாள்.



உதியனம்பி தனக்கு விவரம் தெரிந்த நாளிலிருந்து தன்னிடம் நடந்து கொண்ட ஒவ்வொரு நிகழ்வையும் அசைபோட்டவள், மெல்ல.. மெல்ல, தன் கணவன் மேல் மனதை திசை திருப்பினாள்.



தன் அத்தையால் தான்! இன்று தன் கணவனைப் பற்றி உணர்ந்து கொள்ள தனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. என்று நினைத்தவளின் மனமோ, கணவன் புறம் சாயத் தொடங்கியது.



தன் மனமாற்றத்தை கணவனிடம் சொல்ல ஆசையாக அவனுக்காக காத்திருந்தாள்.



உதியனம்பியோ, வெளியில் சென்றவன் இரவு பத்தாகியும் வீட்டிற்கு வரவே இல்லை.



தாழ்குழலி மகனின் வரவுக்காக, வழி மீது விழி வைத்துக் காத்திருந்தார்.

நிறையும் கணவனுக்காக சாப்பிடாமலேயே காத்திருந்தாள்.



தாழ்குழலியை மட்டும் மாத்திரை போடவேண்டுமென்று நிறை கட்டாயப் படுத்தி உணவு உண்ண வைத்தாள்.



உதியோ, இரவு பதினொரு மணிக்குத் தான் ஓய்ந்துப் போய் வீடு வந்தான். அவனைக் கண்டதும் தாழ்குழலி நிம்மதி அடைந்தவர், மகனிடம மாலை நடந்ததைப் பற்றி எதையும் காட்டிக் கொள்ளாமல் இன்முகமாகவே வரவேற்றார்.



உதியனம்பியோ, கை, கால் முகம் கழுவி வந்து, தாயாரிடம் தப்பு செய்த குழந்தை போல் முகத்தை வைத்துக்கொண்டு அமர்ந்தான்.



நிறையோ கணவனுக்கு அவசரமாக உண்பதற்கு உணவை எடுத்து வைத்தாள்.



தாழ்குழலியோ நிறையிடம், "நிறைம்மா அதை கொடு.." என்று உணவுத் தட்டை வாங்கியவர், நிறையையும் அழைத்து அருகில் அமரவைத்து, தன் கையாலேயே இருவருக்கும் ஊட்டிவிட்டார்.



உதியும், நிறையும் கண்களில் நீர் தேங்க, அவரின் அன்பில் உருகி, மனமும், வயிறும் போதும் என்று நிறையுமளவு உண்டனர்.



நிறையோ, உண்டு முடித்த பின் பாத்திரங்களைச் சுத்தப்படுத்தி விட்டு, தாயுக்கும், மகனுக்கும் தனிமை கொடுத்து விட்டு, தங்கள் அறைக்குச் செல்ல திரும்பினாள்.



தாழ்குழலியோ, அவளை அருகில் அழைத்தவர், என்றுமில்லாமல் அன்று, அவள் நெற்றியில் முத்தமிட்டு, "நிறைம்மா நீ எப்போதும் இப்படியே‌ மகிழ்ச்சியாக வாழனும் டா‌.." என்று‌ ஆசிர்வதித்தார்.



நிறையாழியோ, அவரின் செயலில் மகிழ்ந்தவள், அவரின் கன்னத்தில் தன் இதழ்களைப் பதித்து தன் அன்பை தெரிவித்தவள், தாயுக்கும், மகனுக்கும் தனிமை‌ கொடுத்து தங்கள் அறைக்குச் சென்றாள்.



உதியனம்பியோ, அதை எல்லாம் சலனமே இல்லாமல் பார்த்தவன், நிறை தங்கள் அறைக்கு சென்றதுமே, தாயின் மடியில் தலை வைத்து படுத்தான்.



தாழ்குழலியோ, எதுவும் பேசாமல் மகனின் தலையை மென்மையாக வருடினார். மகனோ, அந்த சுகத்தை அனுபவித்தபடி கண்களை‌ மூடி‌ப் படுத்திருந்தான்.



தாழ்குழலிக்கோ, அவரையும் அறியாமல் கண்களிலிருந்து கண்ணீர் வடிந்து மகனின் கன்னம் தொட்டது.



உதியோ, தன் கன்னத்தின் மீது விழுந்த நீர் துளிகளைக் கண்டு பதறி விழித்தான்.



தாயின் விழிகளில் கண்ணீரைப் பார்த்து பதறி எழுந்து "அம்மா.." என்று அழைத்தான்.



தாழ்குழலியோ, மகனின் கன்னத்தை மென்மையாக தடவிய படியே, "உதிம்மா, அம்மா உன்னை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேனா? என்னை‌ மன்னித்து விடுப்பா.." என்றார் கண்கலங்கிய படியே..



"அம்மா என்னம்மா என்னிடம்‌ போய் மன்னிப்பெல்லாம் கேட்கிறீங்க..நீங்க என்ன தப்பு செய்தீங்க..நான் தான் தப்பு செய்துட்டேன்..நிறையிடம்‌ ஏதோ ஒரு டென்ஷனில் மாலை அப்படி பேசிட்டேன்.நீங்க தான் என்னை மன்னிக்கனும் .."என்றவனிடம்..



"உதிம்மா, என் சுயநலத்துக்காக உன் வாழ்க்கையைக் கெடுத்து விட்டேனோன்னு குற்றவுணர்வா இருக்குப்பா. உனக்குன்னு நான் எதுவுமே செய்ததில்லை.. சுமையை தான் ஏற்றியிருக்கேன்.." என்று வருந்தினார்.



உதியனம்பியோ, "அப்படி எல்லாம் எதுவும் இல்லை.. ஏம்மா இப்படி எல்லாம் சொல்றீங்க.. நீங்க இப்படி பேசினா? என்னால் தாங்க முடியாது. நான் உங்க மனம் நோக நடந்திருந்தால் என்னை அடிக்க வேண்டுமானாலும் செய்யுங்க. ஆனால், இப்படி பேசாதீங்க.." என்று கலங்கியவனிடம்,



"உதிம்மா, உன்னால் என்றுமே என் மனம் நோக நடக்க முடியாது. என்று எனக்கு தெரியுமே! நீ என் உயிர்ப்பா.. நான் வாழ்வதே உனக்காகத் தானே! நீ மகிழ்ச்சியாக வாழ்ந்தால் அதை விட எனக்கு வேறு‌ என்ன வேண்டும்.." என்றவரிடம்,



"அம்மா நான் மகிழ்ச்சியாகத் தான் வாழ்கிறேன். மாலை நடந்ததை நினைத்து நீங்க வருந்தப்படாதீங்க.. இனி அதுபோல் என்றும் நடக்காது.." என்றவனிடம்,



"உதிம்மா, நிறை சின்ன பெண்! அவள் அறியாமல் ஏதாவது தவறு செய்தாலும், நீ தான் பொறுத்துப் போகனும். நான் இருந்தாலும், இல்லாவிட்டாலும் நிறை தான் உனக்கு எல்லாம். அவள் மனம் நோக எந்த விஷயத்திலும் நடந்துவிடாதே.. மாமாவும், அத்தையும் தாங்க மாட்டாங்க.. இனிமேல் எப்போதும் இந்த மாதிரி விவாகரத்து என்றெல்லாம் பேசக் கூடாது. என்னால் தாங்க முடியாது.." என்று கூறியவரிடம்,



"அப்படி பேசியது தப்புதான்.. இனி ஒருபோதும் நான் அப்படி பேசமாட்டேன்.. நீங்க இல்லாமல் எங்க போவீங்க.. இந்த மாதிரி தேவை இல்லாததை பேசாதீங்க எனக்கு கெட்ட கோபம் வரும்.." என்ற‌ மகனிடம்..



“புருஷனும், பொண்டாட்டியும் எதில் ஒற்றுமையோ! இல்லையோ.. இந்த ஒன்றில் ஒற்றுமையாக இருக்கீங்க.." என்றவரிடம்,



"ஏன் நிறை என்ன சொன்னா..?"



"நான் என்னமோ இன்னும் நூறு வருசம் வாழனுமாம்.."

"ஆமாம்! அவள் சொன்னதில் என்ன தப்பு.. எங்களுக்கு இருப்பது நீங்க தானே. நீங்க நல்லாயிருந்தால் தானே நாங்க நல்லா இருப்போம்.."



"நீங்க ரெண்டு பேரும் சண்டை போடாம இருந்தாலே நான் நல்லா இருப்பேன்.."



"அம்மா.. இனி பாருங்க நாங்க சண்டையே போட மாட்டோம். நீங்களே ஆச்சரியப்படுவது போல் வாழ்வோம்.." என்ற மகனிடம்..



"போதும்.. போதும் உன் வாய்பேச்சு.. அதை செயலில் காட்டு.." என்றவர், மீண்டும் உதிம்மா, உனக்கு நிறையை பிடிக்கும் தானே! நான் சொன்னதற்காக அவளை கல்யாணம் செய்துட்டியா?"



"அம்மா எனக்கு நிறையை ரொம்ப பிடிக்கும். அப்படி பிடிக்காமலிருந்தால் கூட என் அம்மாவுக்கு பிடித்தால் எனக்கும் பிடிக்கும்.." என்றான்.

தாழ்குழலியோ, மகனின் பதிலில் மயங்கியவர், "உதிம்மா நீங்க ரெண்டு பேருமே எனக்கு உயிர்! நீங்க சந்தோஷமா வாழ்ந்தால் தான் நான் நிம்மதியாக இருப்பேன்.." என்றவரிடம்,

"அம்மா நீங்க கவலைப்படாதீங்க! நீங்களே பெருமைப்படுமளவு நாங்கள் நன்றாக வாழ்வோம்.." என்றான். மனதிற்குள், 'கடவுளே என் அம்மாவுக்காகவாது நிறை என்னுடன் மகிழ்ச்சியாக வாழனும்' என்று வேண்டிக் கொண்டான்.

தாழ்குழலியோ, "உதிம்மா எனக்கு இப்போது தான் நிம்மதியாக இருக்கு. எங்கே உன் வாழ்க்கையைக் கெடுத்து விட்டேனோ என்று அம்மாவை தவறாக நினைத்திருப்பாயோ? என்று கவலையாக இருந்தது.."



"உங்களை நான் எப்படிம்மா தவறாக நினைப்பேன். உங்களால் என்னை வாழ வைக்கத் தான் முடியுமே தவிர கெடுக்க முடியாது. எனக்கு வாழ்க்கை தந்த தேவதை நீங்க! எனக்கு நல்லது மட்டுமே செய்யும் என் தேவதைம்மா நீங்க! தேவையில்லாத கவலையைப் போட்டு மனதை குழப்பிக்காதீங்க.. அது உங்க உடம்புக்கு நல்லதில்லை.. "

என்றவனிடம்,



"நீ என் வயிற்றில் பிறந்ததுக்கு நான் தான் பெருமைப்படனும். உன் இந்த நல்ல மனசுக்கு நீ எப்போதும் நல்லா இருப்பே உதிம்மா. எனக்கு இனி எந்த கவலையும் இல்லை.. இனி மேல் நடப்பது எல்லாம் நல்லதாகவே நடக்கும். நேரமாகுது போய் தூங்குப்பா.. என்றவர்,

அறைக்குச் செல்ல எழுந்த மகனை தடுத்து அவனின் நெற்றியில் அன்பாக முத்தமிட்டவர், "நீ எப்போதும் மகிழ்ச்சியாக வாழனும் உதிம்மா.." என்று‌ அடிமனதிலிருந்து வாழ்த்தினார்.



மகனோ, தாயின் செயல்களையும், வார்த்தைக்கு‌.. வார்த்தை உதிம்மா என்று அழைத்ததையும், அதிசயமாக பார்த்தவன்,

"நீங்களும் தூங்குங்க.." என்று சொல்லியவன் அறைக்குச் செல்ல திரும்பினான்.

தாழ்குழலியோ, மறுபடியும் "உதிம்மா.." என்று அழைத்தபடி, அவன் அருகில் சென்று, மகனின்‌ தலையை மென்மையாக ஒரு முறை வருடியவர், "போய் நிம்மதியாக தூங்குப்பா.." என்று கூறிவிட்டு தன் படுக்கையில் வந்து படுத்துக் கொண்டார்.



தாழ்குழலிக்கு மகனிடமும், மருமகளிடமும் வெளிப்படையாக பேசியது பெரும் நிம்மதியைக் கொடுத்தது.



அதே நிம்மதியுடன் மனதிற்குள், ‘கடவுளே‌ என்‌ குழந்தைகளை நிம்மதியாக வாழ வை.. அது போதும் எனக்கு..’ என்றவர் மனம் முழுதும் நிம்மதியுடனும், மகிழ்ச்சியுடனும் உறக்கத்தை தழுவினார்.



மகனோ, தாயின் செயல்களில் குழம்பியவன், தாயை திரும்பி.. திரும்பி பார்த்தபடி தங்கள் அறைக்குச் சென்றான்.



நிறையோ, ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்.

உதியனம்பியோ, ஒரு நெடிய பெருமூச்சுடன் தன் வழக்கமான இடத்தில் படுத்துக் கொண்டான்.



நாளைய விடியல் இருவருக்கும் என்ன வைத்து காத்திருக்கோ? தெரியவில்லை..

தொடரும்

Hi friends ,
கொடுக்காத பூச்சரமே! அடுத்த அத்தியாயம் நாளை காலை.. இன்றைய அத்தியாயத்தை படித்து விட்டு உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்..
நன்றி
அன்புடன்
இனிதா மோகன்


 

Initha Mohan

Well-known member
Saha Writer
Messages
403
Reaction score
659
Points
93

தொடுக்காத பூச்சரமே!அத்தியாயம் 13

நிறையாழிக்கு மெல்ல உறக்கம் கலைந்தது. தூக்க கலக்கத்திலேயே திரும்பி கடிகாரத்தில் மணியைப் பார்த்தவள், பதறியடித்து எழுந்து அமர்ந்தாள்.



மணி எட்டாச்சே! இத்தனை நேரமா தூங்கினோம்! இன்று ஏன் அத்தை கூட நம்மை‌ எழுப்பவில்லை..? என்று குழப்பதுடனேயே கணவனைத் தேடினாள்.



உதியனம்பியும், ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். நம்பி உறங்குவதைக் கண்டவள், அவரும் இத்தனை நேரம் தூங்கறாரே! மனச்சோர்வா? உடல்சோர்வா? தெரியவில்லையே.. எதுவாக இருந்தாலும் அதற்கு தான் மட்டுமே காரணம் என்று வருந்தியவள், இனிமேலாவது இப்படி நடந்து கொள்ளாமல் தன்னை மாற்றிக் கொள்ளவேண்டும் என்ற உறுதியுடன் குளியலறைக்குள் புகுந்தாள்.



உதியனம்பியோ, நிறையாழி குளியலறையிலிருந்து வெளியில் வரும் வரையும் விழிக்கவே இல்லை.



நிறையோ யோசனையுடன் கதவைத் திறந்து கொண்டு வெளியில் வந்தாள். அங்கே, தாழ்குழலியும் விழிக்காமலேயே படுத்து இருப்பதைக் கண்டாள்.



எப்போதும் சரியாக ஆறுமணிக்கு அலாரம் அடிக்கும் முன் எழுந்து கொள்ளும் தன் அத்தை, இன்று இத்தனை நேரம் தூங்குவது அவளுள் பிரளயத்தையே ஏற்படுத்தியது!



அவருக்கு உடம்பு தான் சரியில்லையோ? என்று பதறியபடி அவர் அருகில் சென்று எழுப்பினாள்.





"அத்தே.. அத்தே.." என்று அவரின் தோள்களைப் பிடித்து மெதுவாக உலுக்கியபடியே எழுப்பினாள். ஆனால் தாழ்குழலியிடம் எந்த அசைவும் இல்லை.



நிறையாழிக்கோ, மனதிற்குள் மெல்ல.. மெல்ல, பயம் கவ்வியது. கை, கால்கள் நடுங்க ஆரம்பித்தது. அவள் மூளையோ வேலை நிறுத்தம் செய்தது.



உடனே எழுந்து தங்கள் அறைக்கு ஓடிச் சென்று உதியனம்பியின் தோள்களைப் பிடித்து, "மாமா.. மாமா.." என்று உலுக்கி எழுப்பினாள்.



உதியனம்பியோ, நிறையாழியின் செயலில் பதறியடித்துக் கொண்டு எழுந்து அமர்ந்தான்.



நிறையாழிக்கோ, அவனிடம் பேச வாயே வரவில்லை. அவன் முகத்தை பார்த்தவாறு வெளியில் கைகாட்டிக் கொண்டே "அ..அ..அத்தே..அத்தே.." என்று தவிப்புடன் கூறினாள்.



உதியனம்பிக்கோ, முதலில் ஒன்றும் புரியவில்லை.. என்றும் இல்லாமல் நிறையாழி தன்னைத் தொட்டு எழுப்பியதில் திகைத்திருந்தவனுக்கு, அவள் சொல்ல வருவது சுத்தமாக புரியலை..



நம்பி புரியாமல் பேந்த.. பேந்த, விழிப்பதைக் கண்டவள், வலுக்கட்டாயமாக அவனின் கைகளைப் பிடித்து எழுப்பி தன் அத்தையிடம் இழுத்துச் சென்றாள்.



நம்பிக்கோ, தன் தாயைப் பார்த்ததும் தான் ஓரளவுக்கு விபரீதம் புரிந்தது. உடனே தாயருகில் சென்று "அம்மா.. அம்மா.." என்று அழைத்தபடியே அவரை எழுப்ப முயன்றான்.



ஆனால் தாழ்குழலியோ மீளா உறக்கத்திற்கு சென்றிருந்தார். கணவன், மனைவி இருவருக்கும் அவரின் உயிர் கூட்டை விட்டு பிரிந்து சென்றதைப் புரிந்து கொள்ளவே அதிக நேரம் எடுத்தது. அந்த உண்மையை ஏற்றுக்கொள்ள முடியாமல் இறுகிப் போனார்கள்.



சிறிது நேரம் நிகழ்வை நம்ப முடியாமல் இருவரும் அதிர்ச்சியில் கல்லாக உறைந்தார்கள்.



உதியனம்பியோ, சிலையாக நின்றான். நிறையாழி தான் கத்தி கதறினாள். அவளின் சத்தம் அக்கம் பக்கத்தினரை வரவழைத்தது.



அடுத்து என்ன செய்ய வேண்டும்! யாருக்கு சொல்ல வேண்டும்! என்று எதுவுமே அவர்கள் மூளைக்கு எட்டவில்லை.

அக்கம்பக்கத்தினர் மூலம் சங்குமணி விஷயம் கேள்விப்பட்டு ஓடி வந்தான்.



கணவன், மனைவியின் நிலையைக் கண்டு பொறுப்பை தன் கையில் எடுத்துக் கொண்டுஆடலரசுக்கு தகவல் சொன்னான்.



ஆடலரசும், செந்தழையும் விஷயத்தைக் கேள்விப்பட்டு, துடித்துப் போனவர்கள் அழுதபடியே வந்தனர்.



உதியனம்பி இருந்த நிலையைப் பார்த்த ஆடலரசோ, துக்கம் தாங்காமல் அவனை இழுத்து தன் நெஞ்சோடு ஆரத்தழுவிக் கொண்டு அழுது தீர்த்தார். அவனோ தன் நினைவிலேயே இல்லை.



தன் தாய் இனி இல்லை என்பதை அவன் மனம் ஏற்றுக் கொள்ளவே மறத்தது.



சேத்தனும் விஷயம் கேள்விப்பட்டவுடன் தன் குடும்பத்துடன் வந்திருந்தான்.



அவனுக்கோ, உதியனம்பிக்கு எப்படி ஆறுதல் சொல்வதென்றே தெரியவில்லை.



ஆடலரசும், சேத்தனுமே செய்ய வேண்டிய அனைத்தையும் முன்னின்று செய்தனர்.



உதியனம்பியோ, இடிந்துப் போய் அமர்ந்திருந்தவன், இறுதிச்சடங்கு செய்யும் போது கூட சுயநினைவில் இல்லை.



நிறையாழியோ, தன் அன்பு அத்தையை நினைத்து அழுது கரைந்தாள். இந்த துக்கத்திலிருந்து எப்படி தான் வெளியே வரப்போகிறோம் என்றே அவளுக்கு புரியவில்லை.



தன்னை விட தன் கணவன் இதை எப்படி தாங்கிக் கொண்டு மீண்டு வருவானோ? என்று நினைத்து கலங்கினாள்.



செந்தழையும், பனிமலருமே அவளுக்கு பெரும் ஆறுதலாக இருந்தார்கள்.



உதியனம்பியோ, ஒரு சொட்டு கண்ணீர் கூட சிந்தவில்லை. தன் துக்கத்தை எல்லாம் மனதிற்குள்ளேயே அடக்கியவன் யாரிடமும் ஒரு வார்த்தை பேசவில்லை.



சேத்தனும், ஆடலரசும் அவன் நிலையைக் கண்டு பயந்தனர்.



ஆடலரசோ, "நம்பி எதுவாக இருந்தாலும் மனசு விட்டு அழுதுடுப்பா.. இப்படி துக்கத்தை மனதிற்குள் அடக்கி வைக்காதே! அது நல்லதில்லை.." என்று கெஞ்சினார்.



ஆனால் அவனோ, இடிந்து போய் இருந்தான். யாருடைய ஆறுதலும் அவன் மனதை எட்டவில்லை.. அவன் மனம் முழுவதும் வெறுமையே நிரம்பியிருந்தது. அவனின் நிலை அனைவரையும் பெரும் கவலை கொள்ளச் செய்தது.



நிறையாழியோ, மனதிற்குள் தன்னால் தான்! தன் அத்தைக்கு இப்படி ஒரு முடிவு இவ்வளவு விரைவாக வந்தது என்ற குற்றவுணர்வில் தவித்துப் போனாள்.



காரியம் முடியும் வரை ஆடலரசு மருமகனின் கூடவே இருந்து கவனித்துக் கொண்டார்.



தாழ்குழலி இறந்து பத்து நாட்கள் கடந்திருந்தது. ஆடலரசும், செந்தழையும் அங்கே தங்கியிருந்து எல்லா வேலைகளையும் கவனித்துக் கொண்டார்கள்.



ஆடலரசு தன் தங்கை இறந்த துக்கத்தைக் கூட தாங்கிக் கொண்டு, தன் மருமகனுக்காக இயல்பாக இருந்து அவனைத் தேற்ற முயன்றார். ஆனால் அவரால் முயற்சி மட்டுமே செய்ய முடிந்தது.



உதியனம்பியோ, ஒரு சதவீதம் கூட தேறவில்லை. அவன் உலகமாகவே இத்தனை வருடம் இருந்தவர், இன்று இல்லை! என்பதை அவன் மனதால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. அவனின் கண்களில் எப்போதும் இருக்கும் சிரிப்பு இல்லை. உயிர்ப்பும் இல்லை..

தன் தாயின் படுக்கையிலேயே படுத்து கிடந்தவனை அவர்களால் கண் கொண்டு பார்க்க முடியவில்லை.. சேத்தனும் முடிந்த அளவு ஆறுதல் கூறினான்.



ஆடலரசோ இப்படியே விட்டால் சரிப்படாது. எப்படியாவது அவனை கடைக்காவது அனுப்பி வைத்தால்.. வேலையில் ஈடுபட்டாலாவது, மனம் மாறுவான் என்று நினைத்து அவனிடம் பேசினார்.



"நம்பி பத்து நாள் ஆகிடுச்சு.. என்ன செய்ய, அம்மாவுக்கு ஆயுசு அவ்வளவு தான். நீ தான் மனதை தேற்றிக் கொண்டு அடுத்து ஆகவேண்டியதைப் பார்க்க வேண்டும். நீயும் சின்ன வயசு! இன்னும் வாழவேண்டிய காலம் எவ்வளவோ இருக்கு. இப்படி இடிந்துப் போனால் நாங்கள் என்ன செய்வது? இந்த கோலத்தில் உன்னை எங்களால் பார்க்க முடியவில்லையே..." என்றவரிடம்,



முதல் முறையாக வாயைத் திறந்தவன், "மாமா என்னால் முடியலையே! எனக்கு எல்லாமுமாக இருந்தவர் இப்போது இல்லை என்பதை என்னால் நம்ப முடியவில்லை. எனக்குன்னு யார் இருக்கா.." என்றவனிடம்..



"நம்பி இப்படி பேசாதேப்பா.. நான் இருக்கேன் டா. அம்மா எங்கேயும் போகலை நம் கூடவே தான் இருக்காங்கன்னு நினை! அந்த ஆத்மா உன்னைச் சுற்றிக் கொண்டே தான் இருக்கும். நீ இப்படி இடிந்துப் போனால் அந்த ஆத்மா தாங்குமா? நடந்ததை மறந்து நடப்பதை நினை! என் உயிர் நீதானே! உனக்காக நான் இருப்பேன். நிறை இருக்கா..

எங்களுக்கு நீ வேண்டும். நீ கடைக்குப் போ.. உன் மனதை வேலையில் செலுத்து.. கொஞ்சம் கொஞ்சமாக இதிலிருந்து மீண்டு வர முயற்சி செய்.." என்றவரிடம்,



அவரை வெறுமையாக பார்த்தவன், "முடியலையே மாமா.. நான் என்ன செய்வேன்” என்று தவித்தவனை தாவி அணைத்துக் கொணடவர்..



"நீ நினைத்தால் முடியும். இந்த பூமியில் பிறப்பவர்கள் எல்லாம் ஒரு நாள் போய்த்தான் ஆகனும். இன்று அவர்கள்! நாளை நாம்.. மனதைத் தேற்றிக் கொண்டு நீ முதலில் கடைக்குப் போ.. எல்லாம் சரியாகும்.." என்று பேசிப் பேசி.. அவனின் துக்கத்திலிருந்து மெல்ல மெல்ல அவனை மீட்டார்.



தன் அன்பு மாமாவின் கட்டாயத்தால் உதியனம்பி கடைக்குச் சென்றான்.



முதலில் மனம் ஒட்டாமல் கடைக்குச் சென்றவன், சங்குமணியின் கவனிப்பிலும், ஆறுதலிலும் மெல்ல.. மெல்ல தன் கூட்டை விட்டு வெளியில் வந்தான்.



உதியனம்பி, தன் வேலையைச் பார்க்க தொடங்கியதுமே ஆடலரசும், செந்தழையும் தங்கள் வீட்டிற்குச் சென்றனர்.



நிறையாழியோ, தன் அத்தையின்‌ இறப்புக்கு தானும் ஒரு காரணம் என்ற குற்றவுணர்வில் தனக்குள்ளேயே ஒடுங்கிப் போனாள்.



உதியனம்பியோ, தன் தாய் இறந்ததிலிருந்து அவளிடம் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை.. தன் கவலையை மறக்க வேலையிலேயே முழ்கியவன், வீட்டிற்கு வருவதே இரவு பதினொரு மணிக்குத் தான்.



நிறையாழி சமைத்ததைச் சாப்பிடுவதும் இல்லை.. சங்குமணியே முழுநேரமும் அவனின் சாப்பாட்டைக் கவனித்துக் கொண்டான்.



நிறையாழியோ, கல்லூரிக்குச் செல்ல துவங்கியிருந்தாள். அவளுக்கு நன்றாக சமைக்க தெரியாது. தெரிந்ததை சமைத்து வைத்துச் சென்றால் நம்பி தொட்டுக் கூட பார்ப்பதும் இல்லை.



நிறையாழி, உதியனம்பி தன்னுடன் பேசமாட்டானா? என்று ஏங்கித் தவித்தாள்.



அவனோ இரவு தாமதமாகவே வீட்டிற்கு வந்தான். தங்கள் அறைக்கும் சென்று படுக்காமல், தன் தாயின் படுக்கையிலேயே படுத்து உறங்குவதை வழக்கமாக்கிக் கொண்டான்.



நிறையாழிக்கு அவன்‌ அறைக்குள்ளே வராமல் இருப்பது, மிகுந்த வருத்தத்தை தந்தது.



அவளாக ஏதாவது அவனிடம் பேசினாலும் அவனிடம் பதில் இருக்காது. என்ன ‌செய்வதென்றே புரியாமல் இருந்தாள்.



அடுத்து வந்த நாட்களில், அவளும்‌‌, உதியனம்பியின் படுக்கையின் கீழ் வந்து படுத்துக் கொண்டாள்.



நம்பியோ, அவள் செயல்களை கண்டும் காணாமல் போனான்.



நிறைக்கோ, நன்றாக தெரிந்தது. நம்பிக்கு தன் மேல் கோபமென்று‌! ஆனால் அந்த கோபத்தை எப்படி போக்குவதென்றுதான் தெரியவில்லை. தினமும் மானசீகமாக தன்‌ அத்தையிடம் மனதிற்குள் மன்னிப்பு கேட்டுக் கொண்டே‌ இருந்தாள்.



தன் கணவன் தன்னை வெறுத்து விடுவானோ? என்ற பயம் அவளைக் கொஞ்சம், கொஞ்சமாக ஆட்கொண்டது. ஆனால் என்ன செய்வது என்று தான் புரியவில்லை.

உதியனம்பி நிறையிடமிருந்து விலகிப் போக.. போக, நிறையாழிக்கு அவன் மீது தன்னை அறியாமலேயே ஈடுபாடு வந்தது. அது தானே மனித மனம். விரும்பி போனால் நோகடிப்பதும், விலகிப் போனால் தேடுவதும் இயல்பு தானே!



நிறையாழியின்‌ மனதில் தனக்கே தெரியாமல் நம்பி அவளின் மனதை முழுதாக ஆட்கொண்டிருந்தான்.



உதியனம்பியின்‌ ஒவ்வொரு செயலையும் ரசிக்க தொடங்கியிருந்தாள். அவன்‌ வீட்டில் இருக்கும் நேரம் முழுவதும் அவளின் கண்கள் அவனையே வட்டமிட்டது. அவனைப் பற்றி முன்பு புரியாதது எல்லாம்‌ இப்போது புரிந்தது.



இப்படியே இரண்டு மாதம் கடந்திருந்த நிலையில் ஒரு நாள் கல்லூரி விடுமுறையன்று தானே கணவனுக்காக சமைத்து எடுத்துக் கொண்டு கடைக்குச்‌ சென்றாள்.



அவன்‌ தான் இவள் சமைத்தால் சாப்பிடுவதே இல்லையே! அதனால், இன்று சமைத்து கடைக்கு எடுத்துச் சென்றாள். சங்கு மணி முன்பு‌ எதையும் காட்டிக் கொள்ளாமல், சாப்பிடுவான் என்று நம்பினாள்.



ஆனால் அவளின் ‌நினைப்பை பொய்த்து போகச் செய்தான் அவளின் கணவன்.



நிறையாழி தான் சமைத்ததையெல்லாம் அழகாக பேக் செய்து கொண்டு‌, வேர்க்க, விறுவிறுக்க கடைக்குச் சென்றாள். அங்கே, அவள் கண்ட‌ காட்சி‌அவளை கோபத்தின் எல்லைக்கு கொண்டு சென்றது.



தொடரும்..
அடுத்த அத்தியாயம் நாளை காலை.. இன்றைய அத்தியாயத்தை படித்து விட்டு உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்..
நன்றி
அன்புடன்

இனிதா மோகன்
 

Initha Mohan

Well-known member
Saha Writer
Messages
403
Reaction score
659
Points
93
தொடுக்காத பூச்சரமே!

அத்தியாயம் 14



நிறையாழி, தன் கணவனுக்காக யூட்டூப் சேனல் எல்லாம் பார்த்து, அழகாக சமைத்து எடுத்துச் சென்றால், கணவனோ தன் மாமனார் கொண்டு வந்த உணவை உண்டு கொண்டிருந்தான்.



அதைப் பார்த்த நிறையாழிக்கு எல்லையில்லா கோபம் வந்தது. நேராக தன் தாய் வீட்டிற்கு சாப்பாட்டு பேக் உடனேயே சென்றாள்.



வேகமாக வீட்டிற்குள் சென்றவள், தன் தாயின் வரவேற்பை கூட காதில் வாங்காமல் "என்ன தான் நினைத்துக் கொண்டு இருக்கிறீர்கள்.." என்றாள்.



செந்தழைக்கோ, ஒன்றும் புரியவில்லை.. "என்னடீ வந்ததும் வராததுமாக இப்படி புதிராக பேசுகிறாய்.."



"ஆமாம், நான் பேசுவது புதிராகத் தான் தெரியும். மகள் ஒருத்தி இருக்கிறாள் என்ற நினைப்பு உங்களுக்கு இருந்தால் தானே?"



"இல்லாமல் என்ன? உனக்கு தான் பெற்றவர்கள் நினைப்பு இல்லை.. வீட்டு பக்கம் வருவதே இல்லை.."



"பேச்சை மாற்றாதீர்கள். என் புருசனுக்கு நீங்க எதுக்கு சமைச்சு அப்பா கிட்ட கொடுத்து விடறீங்க. அவருக்கு சமைத்து போட நானிருக்கேன்.."



"ஆமா.. ஆமா, நீ சமைத்து போட்டதை இரண்டு மாசமா நானும் தான் பார்த்தேனே.."



"ஏன்? நான் சமைக்காமலா போனேன். நீங்க சாப்பாடு கொடுப்பதால் தான் அவர் நான் சமைப்பதைச் சாப்பிடுவதே இல்லை.."



"நம்பி மதியம் சரியாக சாப்பிடுவதில்லைன்னு சங்குமணி சொன்னான். சரி நீயும்‌ வேலைக்கு போகும் அவசரத்தில் சரியாக சமைக்க நேரம் இருக்காது! அதுவும் உன் சமையல் லட்சணம் தான் எனக்கு தெரியுமே! அந்த பையன் ஒரு நேரமாவது ஒழுங்காக நல்ல சாப்பாடு சாப்பிடட்டும்ன்னு தான், அப்பாவிடம் கொடுத்து அனுப்பினேன். அப்பாவும் பக்கத்திலிருந்து நம்பி சாப்பிடும் வரை இருந்து, சாப்பிட வைத்து விட்டுத் தான் வருவார். அவருக்கு அது ஒரு நிம்மதி.."



"ஆமாம் புருசனும், பொண்டாட்டிக்கும் பெற்ற பெண்ணை விட மாப்பிள்ளை தானே உசத்தி.. இருந்துட்டு போங்க. ஆனால் என் புருஷன் நான் சமைப்பதைத் தான் இனி சாப்பிட வேண்டும்.. இப்படியே தினமும் அவருக்கு நீங்கள் சமைத்துக் கொடுத்தால், என் சாப்பாட்டை அவர் எப்போ சாப்பிடுவார்.."



"அம்மா தாயே, இனி நீயே உன் புருஷனுக்கு சமைத்து போடும்மா.. ஒழுங்கா சமைத்து போட வழியில்லை. இங்கே என்கூட சண்டைக்கு வந்துட்டா.." என்று கூறிக் கொண்டிருக்கும் போதே ஆடலரசும் காலி சாப்பாட்டுக் கூடையுடன் வந்தார்.



மகளைக் கண்டதும் நலம் விசாரித்தார். அதற்குள் செந்தழை கணவரிடம் மகள் அடித்த கூத்தைச் சொன்னார்.



ஆடலரசோ, மகளிடம் தன்மையாக, "நிறை உனக்கு லீவு இருக்கும் போது நீ சமைத்துக் கொடுடா.. மத்தநாள் அம்மா சமைத்து கொடுக்கட்டும். நம்பி ரொம்ப மெலிந்துட்டான் மா.. அது தான் அம்மா சமைத்து தருகிறாள்.." என்றவரிடம், பதிலே பேசாமல் தலையை மட்டும் ஆட்டிய மகளை வியப்புடன் பார்த்தார் செந்தழை.



நிறையாழிக்கும் தன் தந்தை சொல்வது சரியென்றே பட்டது. உதியனம்பி ரொம்பவே மெலிந்து தான் இருந்தான். அதைவிட தன் சமையல் திறமையும் அவள் நன்கு அறிந்ததால் பேசாமல் இருந்தாள்.



சிறிது நேரம் தாயுடன் வாயாடிவிட்டு, தன் வீட்டுக்கு வந்தவளுக்கு, மனம் முழுவதும் கணவனின் நினைவே நிரம்பி வழிந்தது. இன்று கணவனிடம் எப்படியாவது பேசிவிட வேண்டுமென்று நினைத்தாள்.



அன்று இரவு உதியனம்பிக்காக காத்திருந்தாள். அவன் வீட்டிற்கு வந்து தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வரும் வரை அமைதியாக இருந்தவள், அவனிடம் சண்டையைத் தொடங்கினாள்.



"உங்க மனசுலே என்ன தான் நினைச்சுட்டு இருக்கிங்க.. என் மேல் கோபம்ன்னா அதை எங்கிட்ட காமிங்க. ஆனால் அதை விட்டு நான் சமைத்த சாப்பாட்டு மேலே காட்டாதீங்க.." என்றவளை

அவனோ, சலனமே இல்லாமல் பார்த்து வைத்தான்.



அவளோ, "நான் அன்னைக்கு பெரிய தப்பு செய்துட்டேன் தான். அதுவும் மன்னிக்கவே முடியாத தப்பு தான். என்னால் தான் அத்தைக்கு இப்படி ஒரு நிலை வந்தது. நானே அதை தினம்.. தினம், நினைத்து குற்றவுணர்வில் தவிக்கிறேன். நீங்களும் என்னிடம் பேசாமல் இருந்தால் நான் என்ன செய்வேன்.." என்று கோபத்தில் தொடங்கி அழுகையில் முடித்தாள்.



அவனோ, அதற்கும் எதுவும் பேசவில்லை..



நிறையாழிக்கோ, எப்படித் தான் தன் மனதை அவனுக்கு புரியவைப்பது என்று புரியாமல் தவித்தவள், "நான் செய்த தப்புக்கு நான் எத்தனை முறை வேண்டுமானாலும் மன்னிப்பு கேட்கிறேன். என்னிடம் பேசாமல் நீங்க என்னை வெறுத்துடாதீங்க! அதை மட்டும் என்னால் தாங்க முடியாது.." என்றவளுக்கு அதற்கு மேல் பொறுக்க முடியாமல் கண்ணீர் அருவியாக கொட்டியது.



உதியனம்பியோ, அவளிடம் என்ன சொல்வதென்றே தெரியாமல் நின்றான். அவளிடம் இப்படி ஒரு மாற்றத்தை அவன் எதிர்பார்க்கவில்லை.



நிறையாழியோ, இத்தனை நாள் மனதிற்குள் அடக்கி வைத்திருந்த அத்தனை துக்கத்தையும் கணவன் முன் கண்ணீரில் கரைத்தாள்.



உதியனம்பியோ, அவள் கண்ணீரைப் பொறுக்க முடியாமல், "நிறை ப்ளீஸ் அழுகையை நிறுத்தும்மா. இப்ப என்ன நீ சமைத்ததை நான் சாப்பிடனும் அவ்வளவு தானே, இனிமேல் தினமும் நீ சமைத்ததை சாப்பிடுகிறேன் போதுமா.." என்றவனிடம்,



"அது மட்டுமில்லை என் கூட பேசனும். நான் தெரியாமல் செய்த தப்பை மன்னித்து விடுங்கள்.."



"பழசை விடு. எனக்கு பழைய படி மாற கொஞ்சம் அவகாசம் வேணும். எனக்கு உன் மேல் கோபமெல்லாம் இல்லை.. இன்னொன்று நீ எந்த குற்றவுணர்விலும் என்னை ஏற்று வாழவேண்டும் என்ற அவசியமும் இல்லை.." என்று அவன் கூறிக் கொண்டிருக்கும் போதே..



"நிறுத்துங்கோ.. நான் அப்படி சொன்னேனா? அன்னைக்கும் அப்படித் தான் சொல்லி என்னை கோபப்படுத்துனீங்க. இந்த மாதிரி பேச்சால், நாம் இருவரும் இழந்தது எத்தனை பெரிய பொக்கிஷம். இனியொரு முறை இப்படி பேசுனீங்க நான் உயிரோடவே இருக்க மாட்டேன். இனி நான்‌ எதுவும் உங்களிடம் கேட்கலை. ஆனால் ஒன்று மட்டும்‌ சொல்றேன்.

உங்களுக்கு எப்ப பிடிக்குதோ, அப்ப பேசுங்க. எந்த சூழலிலும் நான் இங்கிருந்து போக மாட்டேன். அப்படி போனால் என் பிணம் தான் போகும்.." என்றவள் வேகமாக தங்கள் அறைக்குச் சென்று படுத்துக் கொண்டாள்.



உதியனம்பியோ, ‘தான் என்ன சொன்னோம்! இவள் என்ன சொல்லிட்டு போறா?’ என்று குழம்பினான்.



நிறையாழியால், கண்ணீரை அடக்கவே முடியவில்லை. கணவனின் ஒட்டாத பேச்சு அவளை மிகவும் பாதித்தது. தனக்கு யாருமே இல்லையோ? என்ற எண்ணத்தை விதைத்தது.



தனக்காக இருந்த தன் அன்பு அத்தையையும் தன்‌ அவசரபுத்தியால் இழுந்து விட்டோமே! என்று துடித்தாள். தன் கணவனிடம் பேசியதைக் கேட்டுத் தான், தன் அத்தை மனமொடிந்து தன் உயிரை விட்டார்.. என்ற எண்ணமே அவளைக் கொல்லாமல் கொன்றது.



அவளோ, தேற்றுவாரற்று அழுது கரைந்தாள். நம்பியோ, அறையின் வெளியில் என்ன செய்வதென்றே தெரியாமல் நடை பயின்றான்.



நிறையாழி அழுவது அவனுக்கு மிகுந்த மன உளைச்சலை தந்தது. கொஞ்ச நேரம் பொறுத்து பார்த்தவன், அது முடியாமல் போகவே, மெல்ல அறைக்குள் சென்றான்.



நிறையாழியோ, அவன் வருவது கூட தெரியாமல் அழுது கொண்டிருந்தாள்.



உதியனம்பி, அவள் அருகில் சென்று அமர்ந்தவன், மென்மையாக "யாழி.." என்று அழைத்தான்.

நிறையோ, அவனின் குரலைக் கேட்டதும், தாயைக் கண்ட சேய்யைப் போல் எழுந்து அமர்ந்தவள், உரிமையுடன் அவனின் நெஞ்சில் சாய்ந்து, "சாரி மாமா.. இத்தனை நாள் நான் உங்களைப் புரிந்து கொள்ளாமல் நடந்து கொண்டேன். நீங்களும் என்னை வெறுத்து விட்டால் எனக்கு யாருமே இல்லை.." என்றவளிடம்,



"அப்படியெல்லாம் இல்லை. என்னால் உன்னை என்றுமே வெறுக்க முடியாது. நீ எதையும் போட்டு குழப்பிக்காதே. நிம்மதியா தூங்கு.." என்று கூறி எழப்போனவனை கைப்பிடித்து தடுத்தவள்..



"நான் கொஞ்ச நேரம் உங்க மடியில் படுக்கட்டுமா? எனக்கு அத்தை நினைப்பாகவே இருக்கு.."



"ம்!" என்றவன் பேசாமல் அவள் அருகில் அமர்ந்தான்.

அவளோ, சந்தோஷமாக அவனின் மடியில் தலை வைத்து படுத்தாள்.



அவனோ, மென்மையாக அவளின் தலையை வருடினான்.



அவளுக்கோ, அந்த செயல் அவள் மனதில் எல்லையில்லா நிம்மதியைக் கொடுத்தது. அப்படியே கண்களை மூடி அதை அனுபவித்தவள், தன்னையறியாமல் அப்படியே உறங்கிப் போனாள்.



உதியனம்பியோ, யோசனையுடனேயே இருந்தான். அவள் உறங்கியவுடன் அவளை தலையணையில் படுக்க வைத்தவன், அன்று தங்கள் அறையிலேயே கீழே படுத்துக் கொண்டான்.



அவன் மனமோ, நிறையாழியின் பேச்சையும், செயலையுமே அசைபோட்டது. நெடுநேரம் விழித்து இருந்தவன், பொழுது விடியும் வேளையில் தான் உறங்கினான்.



அடுத்த நாள் விடியல் இருவருக்கும் அழகாகவே விடிந்தது. நிறையாழி அன்று தன் கணவன் முகத்தில் தான் விழித்தாள். தன்னை மறந்து உறங்கிக் கொண்டிருந்தவனின் அமைதியான அழகு அவளை ஈர்த்தது.



சிறிது நேரம் தன்னை மறந்து கணவனை ரசித்தவள், பின் குளியலறை சென்று பல்துலக்கி, முகம் கழுவி விட்டு சமையலறைக்குள் புகுந்தாள்.



கணவனுக்காக பார்த்து.. பார்த்து, சமைத்தாள். சமையல் வேலையை முடித்து விட்டு பாத்திரங்களை ஒதுங்க வைத்தவள், தானும் குளித்து கல்லூரிக்கு தயாராகினாள்.



உதியனம்பியோ, அதுவரையும் உறக்கத்திலிருந்து விழிக்கவே இல்லை. நிறையோ, அவன் விழிக்காததைக் கண்டு குழப்பத்துடனேயே அவனை எழுப்பினாள்.



உதியனம்பியோ, அன்று மனைவியின் மதி முகத்தில் தான் விழித்தான்.



மனைவியின் மலர்ந்த முகம் அவனுக்கு மிகுந்த உற்சாகத்தை தந்தது.

"நீ கிளம்பியாச்சா.. சாரி நைட் லேட்டாத் தான் தூங்கினேன். உனக்கு டைமான நீ கல்லூரிக்குப் போ.. நான் கிளம்பி வீட்டைப் பூட்டிட்டு கடைக்குப் போய்க்கிறேன்.."



"எனக்கு டைமெல்லாம் ஆகலை.. நீங்க சீக்கிரம் எழுந்து குளிச்சுட்டு வாங்க.. சாப்பிட்டு விட்டு நீங்களே என்னை கல்லூரியில் கொண்டு வந்து விடுங்க.." என்றவளை வியப்பாக பார்த்தான்.



அவளோ, அவனின் வியந்த பார்வையைப் புரிந்து கொண்டு, "இனிமேல் நீங்க தான் தினமும் கல்லூரியில் என்னை விடனும்.. நடந்ததை எல்லாம் மறந்திடலாம். நான் உங்களை ரொம்ப கஷ்டப்படுத்தியிருக்கேன். அதற்கெல்லாம் என்னை மன்னித்து விடுங்கள். இனி ஒரு போதும் உங்கள் மனம் நோக நடக்க மாட்டேன்.." என்றவள்,



அவன் காலடியில் மண்டியிட்டு அமர்ந்து, "இந்த சின்ன‌ப் பெண்‌! அறியாமல் சொன்ன வார்த்தைகளையும், செயல்களையும் மன்னித்து மறந்து விடுங்களே!" என்று முகத்தை அப்பாவியாக வைத்துக் கொண்டு கேட்டாள்.



அவனுக்கோ, அவளின் இந்த புதிய அவதாரம் பயங்கர குழப்பத்தைக் கொடுத்தது. எதுவும் சொல்லாமல் ஒரு மென் சிரிப்புடன் குளியலறைக்குள் புகுந்து கொண்டான்.



நிறையாழிக்கோ, அவனின்‌ அமைதி மனதைச் சங்கடமாக்கியது. மனதிற்குள் 'இந்த நம்பியாரை‌ வழிக்கு கொண்டு வர ரொம்ப கஷ்டப்படனும் போல இருக்கே ..' என்று எண்ணினாள்.



அவன் குளித்து தயாராகி வந்தவுடன், அவனுக்கு டிபனை எடுத்து வைத்தாள். அவன் சாப்பிட்டு முடியும் வரை அமைதியாக அவனுக்கு பரிமாறினாள்.

அவன் உண்டு முடித்தவுடன் தானும் உண்டவள், அவனிடம், "டிபன் நல்லா இருந்துச்சா? உங்களுக்காக பார்த்து பார்த்து சமைத்தேன்.." என்றவளிடம்,



"ம்! நல்லா இருந்துச்சு தேங்க்ஸ்.."



"எதுக்கு தேங்க்ஸ்.."



"எனக்காக மெனக்கெட்டு சமைத்திருக்கிறாயே அதுக்குத் தான் .."



"உங்களுக்காக இல்லை.. என் புருசனுக்காக.." என்றவளை ஆச்சரியமாக பார்த்தவனுக்கு அவளின் ஒவ்வொரு செயலும் தலை சுற்ற வைத்தது.



நிறையாழி, நினைத்ததைப் போலவே, அடம் பிடித்து அவனை கல்லூரி வரை அழைத்து வர வைத்தாள். அது மட்டுமில்லாமல் பயணம் முழுவதும் அவன் தோளில் கை போட்டபடியே பயணித்தாள்.



கல்லூரியில் இறக்கி விட்டவனிடம், "மாலையும் நீங்களே வந்து கூட்டிட்டு போங்க.." என்று சொன்னாள்.



உதியனம்பியோ, தன் வேலைப் பளுவில் அவள் கூறியதை சுத்தமாக மறந்தான்.



அவளோ, தன் கணவனுக்காக கல்லூரி பேருந்து நிலையத்திலேயே காத்திருந்தாள்.



தொடரும்..

Hi friends,
தொடுக்காத பூச்சரமே!
அடுத்த அத்தியாயம் நாளை காலை..இன்றைய அத்தியாயத்தை படித்து விட்டு உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்..
நன்றி
அன்புடன்
இனிதா மோகன்

 

New Threads

Top Bottom