'கெட்டிமேளம்.. கெட்டிமேளம்..' என்ற மேள தாளச் சத்தங்களுக்கிடையே..
‘மாங்கல்யம் தந்துனானே
மமஜீவன ஹேதுநா
கண்டே பத்நாமி ஸுபகே
த்வம ஜீவ சரதஸ்சதம்’
என்று ஒலித்த மந்திரத்தின் பொருள் புரியாமலேயே ஷ்ரதாவின் கழுத்தில் தாலியைக் கட்டி மூன்று முடிச்சிட்டான் வீசி.
யார் இந்த ஷ்ரதா?
இயற்பெயர்: ஷ்ரதாஞ்சலி
வயது: இருபத்தைந்து
படிப்பு: பிஇ
நிறம்: பாலும் ரோஜாவும் கலப்புத் திருமணம் செய்து கொண்ட நிறம்
உயரம்: ஐந்தடி நான்கு அங்குலம்
யார் இந்த வீசி?
இயற்பெயர்: வருண் சக்கரவர்த்தி
வயது: முப்பது
படிப்பு: டிஎம்இ
நிறம்: கோதுமை நிறம்
உயரம்: ஐந்தடி பத்து அங்குலம்
மணப்பெண்ணாய் அமர்ந்திருந்த ஷ்ரதா தன் மார்பில் புரண்ட தாலிச்சரடையே ஆனந்தக் கண்ணீருடன் பார்த்துக் கொண்டிருந்தாள். பின்னே அவளுக்கு எத்தனை வருட கனவு இது!
ஷ்ரதா முதன்முதலில் வீசியைப் பார்த்தது தனது பதினைந்தாவது வயதில்.
ஆசைப்பட்ட எல்லோருக்குமே நினைத்தபடி இல்வாழ்க்கை அமைந்து விடுகிறதா என்ன!
எத்தனை வருட போராட்டங்களுக்குப் பிறகு இந்த பாக்கியம் தனக்கு கிடைத்திருக்கிறது என்று நினைத்துப் பார்த்தவளின் கண்களிலிருந்து கண்ணீர் நிற்காமல் வழிந்தது.
என்றும் தனக்கு துணையாய் நிற்கும் முருகனை மனதில் வேண்டிக்கொண்டு திரும்பி தன்னவனின் முகம் பார்த்தாள்.
சுமார் பத்தாண்டுகளுக்குப் பிறகு இப்போது தான் அவன் முகம் காண்கிறாள் ஷ்ரதா.
அப்பா! எவ்வளவு மாற்றங்கள். குழி விழும் அவன் கன்னங்கள் எங்கே? குறும்பு மின்னும் அவன் கண்கள் எங்கே?
பெருத்த ஏமாற்றமாய் இருந்தது ஷ்ரதாவிற்கு.
எப்படியோ தைரியம் வந்து, "வருண் அத்தான், நீங்க வருண் அத்தான் தானா?" என்று அவனிடமே கேட்டுவிட்டாள்.
திரும்பியவன் அவளை உஷ்ணமாய் பார்த்தானே ஒரு பார்வை.
அப்பா! கண்ணகிக்கு கசின் பிரதராய் இருப்பான் போலும். அவன் பார்வைக்கு மட்டும் சக்தி இருந்திருந்தால் மதுரை மீண்டுமொருமுறை தீக்கு இரையாகி இருந்திருக்கும்.
'இப்போ நான் என்ன கேட்டுட்டேன்னு அத்தான் இப்படி முறைக்கிறாங்க?.. ஒருவேளை அவங்களுக்கு நம்மளை ஞாபகம் இல்லையோ?' என்று தனக்குள்ளேயே புலம்பிக் கொண்டிருந்தவள், "ம்ம் எழுந்து ஹோம குண்டத்தை சுத்தி வாங்கோ!" என்ற ஐயரின் குரலில் நடப்பிற்கு வந்தாள்.
ஆஜானுபாகுவாய் எழுந்து நின்றான் வருண் சக்கரவர்த்தி.
அவனின் அங்கவஸ்திரத்தோடு அவளின் மங்களப்பட்டு முடிந்து விடப்பட்டது.
"ம்ம் நட வருண்" என்று அவன் அக்கா மதுபாலா கூறவும் அவளை முறைத்துப் பார்த்தான் வீசி.
பின்னே அவள் தானே இந்தத் திருமணத்திற்கு மூலக்காரணம், சைடு காரணம் எல்லாம்.
"அத்தான், மெதுவா போங்க.."
முதல் முறையாய் தான் உடுத்திய பட்டுப்புடவையால் வேகமாய் நடக்க முடியாமல் அவனிடம் கெஞ்சினாள் ஷ்ரதா.
வீசிக்கு அந்தக் கெஞ்சல் ரொம்பப் பிடித்திருந்தது.
'என்கூட சமமா கூட நடக்க முடியல.. இதுல நீ எனக்கு சரிபாதியாடி?..' என்று கருவிக்கொண்டே வேகமாய் நடந்தான்.
ஒரு கட்டத்தில் அவன் நடைக்கு ஈடு கொடுக்க முடியாமல் ஓடத் துவங்கினாள் ஷ்ரதா.
அவள் அப்போது அவன் பின்னான தனது ஓட்டம் இப்போதே துவங்கிவிட்டது என்பதை அறிந்திருக்கவில்லை.
ஒருவழியாய் ஷ்ரதாவின் ஓட்டப்பந்தயமும் முடிவிற்கு வர, அவளின் ஓட்டத்திற்கு பரிசாய் அவள் காலில் மெட்டி அணியச் சொன்னார் ஐயர்.
தனது வெண்பஞ்சு பாதத்தை அம்மிக்கல்லின் மீது தூக்கி வைத்தாள் ஷ்ரதா.
முத்துக்கள் நிறைந்த அந்த மெட்டியை அவளின் காலில் அணிவிக்கும் போது, அவளுக்கு வலிக்க வேண்டுமென்றே மெட்டியை அவ்விரலில் அழுத்தி அழுத்திப் போட்டுவிட்டான் வீசி.
வலியில் தனது கீழுதட்டை பற்களுக்கிடையில் சிறையிட்டாள் ஷ்ரதா.
நிமிர்ந்துப் பார்த்தவன் அவள் படும் வேதனையை ரசித்தான்.
அவள் பார்வை அவனிடம் ஏன் என்றுக் கேட்டது.
அக்கேள்விக்கும் 'வலிக்குதா இன்னும் வலிக்கட்டும்' என்று அவன் விரல்களே அவளிடம் பதில் சொல்லின.
இவர்கள் இருவருக்குள்ளும் நடக்கும் இந்தத் தனிப்பட்ட சம்பாஷணையானது வெளியே யாருக்கும் கேட்கவில்லை. உண்மையில் யாரும் கேட்க பிரியப்படவில்லை.
"எல்லாம் நல்லபடியா முடிஞ்சிடுத்து.. போய் பெரியவா கால்ல விழுந்து ஆசி வாங்கிக்கோங்க" என்ற ஐயரின் வழிகாட்டலில் அவளுடன் சென்று தன் பெற்றோரின் காலில் விழுந்து வணங்கினான் வீசி.
இருவரையும் "நல்லாயிருங்கப்பா" என்று ஆசிர்வதித்துத் தூக்கிவிட்டனர் பிரகாஷ் - அபிராமி தம்பதியினர்.
அடுத்தபடியாக தன் பெற்றோரின் காலில் விழப்போனவளை கைப்பிடித்து தடுத்தவன், தனது அக்கா மதுபாலாவின் காலில் விழுந்து வணங்கச் சொன்னான்.
தன்னை அவன் இப்படி அனைவரின் முன்பும் அவமானப்படுத்தியதில் முகம் கன்றினார் ஷ்ரதாவின் தந்தை விஜயாதித்தன்.
ஷ்ரதாவிற்கு அவனின் இந்த மறுப்புக்கான காரணம் புரியவில்லை.
ஆனாலும் அவன் தமக்கையின் காலில் போய் விழுந்தாள்.
தன் காலில் வந்து விழுந்தவர்களை ஆசிர்வதித்துத் தூக்கிவிட்ட மதுபாலா, "ரொம்ப தான்க்ஸ் வருண்" என்றாள்.
ஷ்ரதா அந்த நன்றி நவிழ்தலை புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தது போலவே அவனது பெற்றோர்களும் அதனை புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தனர்.
அவன் தமக்கையிடமிருந்து விலகிய ஷ்ரதா மீண்டும் தன் பெற்றோரின் காலில் சென்று விழுந்தபோது, இம்முறை தன் பிடிவாதம் தளர்த்தி தானும் அவளோடு இணைந்து ஆசி வாங்கினான் வீசி.
அவன் தன் காலில் விழுந்தது மகிழ்ச்சியாய் இருந்தது விஜயாதித்தனுக்கு.
பாவம் அந்த மகிழ்ச்சியை ரொம்பநேரம் நீடிக்க விடாதவனாய் அவரது காலில் தனது கூர் மோதிரத்தால் கீறிவிட்டான் வீசி.
இஷ்ஷ் என்று காலை இழுத்தவர் நிமிர்ந்தவனை முகம் ஜிவுஜிவுக்க முறைத்துப் பார்க்க, குறும்பு மின்ன புன்னகைத்தான் வீசி.
அவனை நெருங்கியவர் மெதுவாக அவன் காதில் விஷத்தைக் கக்கினார். "உங்கக்காவுக்கு ஒரு சின்ன மிரட்டல் தான் விட்டேன்.. பயந்திட்டல்ல வீசி.. நான் எள்ளுங்கிறதுக்குள்ள என் பையன் அருண் எண்ணெய்யா நிற்கிறான்.. இருந்தாலும் அப்படி அவன் ரத்தம் கட்டுற அளவுக்கு உங்கக்காவை அடிச்சிருக்கக்கூடாது.." என்று பொய்யாய் வருத்தப்படவும், தன் உள்ளங்கை முஷ்டியை இறுக மூடி கோபத்தை கட்டுப்படுத்தினான் வீசி.
அவரைவிட்டு நகரச் சென்றவனை தொடர்ந்து விடாமல் பிடித்து வைத்துக் கொண்டவர், "என் எதிரி ராஜமாணிக்கத்தோட பொண்ணையேக் கட்டி எனக்கு ஆப்பு வைக்க நினைச்ச இல்ல?.. எப்படி உங்க அக்காவை வச்சே என் பொண்ணை கல்யாணம் பண்ணிக்க வச்சேன் பாத்தியா?.. எல்லாரும் நீ பெரிய இவன்னு உன்னைப் பார்த்து பயப்படலாம் வீசி.. ஆனா, பத்து வருஷத்துக்கு முன்னாடி நீ எனக்கு எப்படியோ இப்பவும் அப்படி தான்.. ராஜமாணிக்கம் இனி உன் பக்கம் தலைவச்சுக் கூட படுக்கமாட்டான்.. ஏன்னா நீ இப்போ என் மருமகன்.. நான் உன் மாமனார்.. கேட்கவே நல்லாயிருக்குதுல்ல.. ஹாஹாஹா" என்று தன் தொப்பை குலுங்க குலுங்க சிரித்தார்.
சுற்றி நின்றவர்கள் அனைவரும் விஜயாதித்தன் வீசியின் காதில் ஏதோ முணுமுணுத்து சிரிப்பதைக் கண்டு, "மாமனாரும் மருமகனும் அப்படி என்ன குசுகுசுன்னு பேசிக்கிறீங்க?.. அடுத்த சம்பிரதாயம் எல்லாம் கவனிக்க வேண்டாமா?" எனவும், பக்கத்தில் தன் அன்னையின் தோளில் முகம் புதைத்து அழுதுக் கொண்டிருந்த தன் மனைவியை திரும்பிப் பார்த்த வீசிக்கு ரத்த அழுத்தம் அதிகமாகியது.
புதிதாக திருமணமானப் பெண்களுக்கு இதுபோல் வீட்டைப் பற்றிய ஏக்கத்தில் அழுகை வருவது சகஜமே.
ஆனால், அதைப் புரியாத புரிய விரும்பாத வீசி 'என்கூட வாழ்றது உனக்கு அவ்வளவு கஷ்டமா என்ன?' என்று அதுக்கும் அவளையே வஞ்சித்தான்.
அடுத்தடுத்த நிகழ்வுகளில் அது தனக்குப் பிடித்திருக்கிறதோ இல்லையோ இவையெல்லாம் செய்வது என் கடமை என்பது போலவே தவறாமல் அனைத்தையும் செய்து முடித்தான் வருண் சக்கரவர்த்தி.
பரபரப்பான அக்கோவிலில் அனைத்து நிகழ்வுகளும் முடியப்பெற்று அனைவரும் வீடு திரும்பிய போது மதியம் மணி இரண்டாகியிருந்தது.
வீசி முன்பே திருமணம் எளிமையாய் நடந்தாலே போதுமானது என்று சொல்லிவிட்டதால் கோவிலில் தான் நடந்தது அவர்களது திருமணம்.
அப்போது ஊரைவிட்டு இவ்வளவு தொலைவில் அதுவும் அழகர்கோவில் பழமுதிர்ச்சோலையில் தான் தன் திருமணம் நடக்கவேண்டும் என்று பிடிவாதமாய் நின்ற வீசியைப் பலருக்கும் பிடிக்கவில்லை.
மதுரை ஜெயவிலாஸில் உள்ள அவன் வீட்டை அடைந்ததும் மணமக்கள் இருவரையும் சிரித்த முகமாய் ஆரத்திச் சுற்றி வரவேற்றாள் மதுபாலா.
முதல்முதலாக அவ்வீட்டிற்குள் அடி எடுத்த வைத்த ஷ்ரதாவிற்கு அவ்வீட்டின் பிரம்மாண்டம் ரொம்பவே மிரட்டியது.
அனைத்தையும் விழி விரித்துப் பார்த்துக் கொண்டிருந்தவளின் காதில் தேளாக கொட்டினான் வருண்.
"ம்ம் சொல்லு! இந்த ஏழையோட குடிசை எப்படியிருக்கு?.. என் அக்கா மொத மொத உங்க வீட்டுக்கு வந்தப்போ உங்க அப்பா என்ன சொன்னாரு? ம்ம்?.. உன் கனவுல கூட நீ இதையெல்லாம் பார்த்திருக்க மாட்டன்னு தானே?.. இப்போ அதே வார்த்தையை நான் அவர் பொண்ணுக்கும் சொல்லலாம் இல்ல?.."
"நீங்க எதையுமே மறக்கலையா, அத்தான்?.. அவங்க அப்போ லவ் மேரேஜ் பண்ணிக்கிட்ட கோபத்துல அப்பா அப்படி சொன்னாங்க.. மத்தபடி அப்பா ரொம்ப நல்லவங்க அத்தான்.. நீங்க இதனால தான் மொத அப்பாக் கால்ல விழமாட்டேன்னு சொன்னீங்களா?.."
"டோன்ட் கால் மீ தட் அத்தான் பொத்தான்.. எங்க வீட்டு முன்னாடி என்னங்க, ஏங்க.. என் ரூமுக்குள்ள சார்.. புரிஞ்சதா?.."
"டேய் வருண்! என்னடா சொல்லிக்கிட்டிருக்க அவ காதுல?.. வாங்க சோபால வந்து உட்காருங்க ரெண்டு பேரும்.. பால் பழம் கொடுக்கணும்.." என்று அதட்டி இருவரையும் அருகருகே உட்கார வைத்தார் அபிராமி.
பின், துரிதமாய் பால் ஆற்றிக் கொண்டு வந்தவர் டம்ளரை முதலில் வீசியிடம் கொடுக்க, அதனை வாங்கியவன் ஒரே மூச்சில் முழுதாக குடித்து முடித்தான்.
தன் மகனை கையில் பிடித்திருந்தவாறே சற்றுத்தள்ளி உட்கார்ந்திருந்த மதுபாலா, அவனைப் பார்த்து, "டேய்! டேய்!" என்று அலறியபடியே, "பாதியை உன் பொண்டாட்டிக்கும் கொடுக்கணும்டா" என்றாள்.
அவளுக்குச் சட்டென்று பதிலளித்த வீசி, "என் பொண்டாட்டிக்கு பால் எல்லாம் பிடிக்காது" என்றான்.
அதில் அவனை அதிர்ந்துப் பார்த்த ஷ்ரதா, 'இவருக்கு எப்படி எனக்குப் பால் பிடிக்காதுன்னு தெரியும்?' என்று தனக்குள்ளேயே குழம்பிக் கொண்டாள்.
அவளின் அந்த மண்டைக் குடைச்சலானது அப்போது அக்கணத்திலிருந்து தான் தொடங்கியது.
காதல் கணம் கூடும்...