அத்தியாயம் 1.2:
பெரிய பங்களா போன்ற வீடு அது.
ஓங்கி உயர்ந்த மதில் சுவர்கள். அதற்கு இணையான உயரத்தில் நுழைவாயில் கதவுகள். அந்தக் கதவைத் திறக்கவே இருவர் வேண்டுமோ என்று எண்ணும் படியான நெடிய, பலமான கதவுகள்.
அந்தக் கதவைத் திறந்து உள்ளே சென்றோமானால், நம்மை வரவேற்பது பச்சைப் பசேலெனப் புட்தரைகளும், பூச்செடிகளும், மரங்களுமே. வீட்டின் வாசற்படியை அடைய அந்தப் புட்தரைகளுக்கு நடுவே ஒரு கருங்கல் பாதை இருந்தது.
அந்தத் தோட்டத்தின் அழகில் மயங்கி, இரண்டு நொடிகள் அங்கே நின்றோமானால், அந்த ரம்மியமானச் சூழலைக் கெடுக்கும்படியாகக் கேட்கும், நாய்கள் குறைக்கும் சத்தம்.
கமலியுடன் அந்த வீட்டுக்குள் நுழைந்தப் பாட்டி, அந்தத் தோட்டத்தைப் பார்த்து, “வாவ்” என்று வாயசைக்க அடுத்த நொடி “வவ்.. வவ்” என்று கேட்டது நாயின் சத்தம்.
“என்ன சத்தம்” என்று பாட்டி சுற்றி முற்றி பார்ப்பதற்குள் ஒரு நாய் பாட்டியின் தோள் உயரம் வரை எகிறியிருந்தது.
“அவுச்!” என்று பாட்டி பதறிக் கீழே விழுவதற்குள் அந்த நாய்களைப் பராமரிக்கவென இருந்த ஆட்கள் அந்த நாயைப் பிடித்து இழுத்துச் சென்றிருந்தனர்.
அந்த நாயைப் போலவே இன்னும் நான்கு நாய்களைக் கண்ட பாட்டி, கமலியை முறைத்துவிட்டு, “வாட் த ஹெக் இஸ் திஸ்?இதுங்க வளர்ப்பு நாயா? வேட்டை நாயா?
உன் கற்பனை என்ன இவ்ளோ கொடூரமா இருக்கு” என்று கேட்க, முகத்தைச் சிலுப்பிக்கொண்ட கமலி, “தோட்டத்தோட அழகை ரசிச்சப்போ சுகமா இருந்துச்சோ!” என்றாள்.
“ம்கும்ம். உன் கற்பனைல இது மட்டும் தான் அழகா இருக்கும் போல. அது சரி, இது யார் வீடு?” என்று பாட்டி கேட்க, “என் ஹீரோ வீடு” என்றாள் கமலி பெருமையாக.
அந்தப் பதிலைக் கேட்டதும் ஏளனமாய் சிரித்த பாட்டி, “அவன் தான் சிங்கமாச்சே! அவன் வீட்டைக் காவல் காக்க எதுக்கு நாய்?” என்றார்.
பாட்டியை முறைத்த கமலி, “உனக்கு வயசாச்சே தவிர. அறிவுக் கொஞ்சமும் இல்ல. ஒருவேளை, நாளைக்கே என் ஹீரோ ஒரு பொண்ணைப் பார்க்கலாம். அந்தப் பொண்ணு கிட்ட லவ் ப்ரோபோஸ் பண்ணலாம். அந்தப் பொண்ணு அவனைப் பிடிக்கலன்னு சொல்லி அசிங்கப்படுத்தி அனுப்பலாம். அந்தப் பொண்ணை என் ஹீரோ கடத்திட்டு வந்து இந்த வீட்ல வைக்கலாம்!
அப்போ அந்த ஹீரோயின் தப்பிச்சி ஓட பார்க்கலாம். அப்போ, அவ தப்பிச்சி ஓடாம பார்த்துக்க காவல் நாய் வேணாம்!” என்று அதற்கென நெடிய விளக்கமொன்றைக் கொடுத்தாள் கமலி.
“அப்போ! உன் ஹீரோவுக்கு ஒரு பொண்ணுக்குத் தன்னைப் பிடிக்கவைக்கத் துப்பு இல்ல அப்படித் தான!” என்று பாட்டி கேட்க, “என்னது? துப்புக் கிடையாதா? தப்பு பாட்டி.
நீ இன்னும் என் ஹீரோவ பார்க்கல. அதனால தான் இப்படியெல்லாம் பேசற. என் ஹீரோவ மட்டும் நீ பார்த்தன்னு வையி. இந்த வயசுலயும் உனக்கு அவன் மேல லவ்வு லவ்வா வரும்” என்று கமலி சொல்ல மீண்டும் பாட்டியிடமிருந்து கேவலமானப் பார்வை ஒன்றே பரிசாகக் கிடைத்தது.
பாட்டி அதற்குப் பதில் பேசும் முன்னே, அந்த அந்த வீட்டின் அடியாள் ஒருவர், “எதுக்கு வந்திருக்கீங்க? யார பார்க்கணும்” என்று கேட்க, “லெனின் நிரஞ்சன்” என்றாள் கமலி.
“ஓஹ்! சின்ன ஐயாவையா. அப்போ காலேஜ் விஷயமா தான் இருக்கும்” என்றவர் அதற்கு மேல் கேள்விகள் கேட்காமல் அவர்களை உள்ளே விட்டார்.
அங்கிருந்து வாசற்படியை அடைவதற்குள்ளேயே பத்துப் பதினைந்து அடியாட்களைக் கடந்தனர் பாட்டியும் கமலியும். அனைவரும் ஹெவிவெய்ட் சாம்பியன்கள் போன்ற உடலமைப்பில், கரடு முரடானத் தேகத்துடன், முறையாகப் பராமரிக்கப்படாதக் கேசத்துடன் இருந்தனர்.
அவர்களைக் கடந்து சென்றதும் கமலி, “பாத்தியா! எவ்ளோ டெரரான அடியாளுங்க. என் ஹீரோ எவ்ளோ பெரிய கை பாத்தியா!” என்று காலரை உயர்த்த, “சிங்கங்கள் தன்னைத் தானே பாதுகாத்துக்கொள்ளும். சிங்கத்துக்குத் காவல் நாயோ, அடியாளோ இருந்தா அது சிங்கத்துக்குத் தான் அசிங்கம்” என்று பாட்டி சொல்ல, ஏறிய காலர் தானாக இறங்கியது.
இருவரும் வீட்டுக்குள் நுழைய, அழகான, மென்மையான, அமைதியான ஒரு பெண் அவர்களை எதிர்க்கொண்டார்.
வயது ஐம்பதுக்கும் அறுபதுக்கும் நடுவில் இருக்கும் என்று பார்த்தாலே கணிக்க முடிந்தது. கமலியிடம் வந்தவர், “யாரைப் பார்க்கணும்?” என்று கேட்க, “லெனின் நிரஞ்சன்” என்றாள்.
“அவன் இப்போதான் கிளம்பிட்டு இருக்கான். கீழ வர பத்து நிமிஷம் ஆகும். வெய்ட் பண்ணுங்க” என்று அவர் சொல்லிவிட்டு உள்ளே செல்ல, “இது யாரு?” என்றார் பாட்டி.
“இதுக் கூடவா தெரியல. ஹீரோ வீட்டுக்கு வந்திருக்கோம். அங்க இந்த வயசுல மான் மாதிரி அமைதியா ஒரு ஜீவன் வந்துட்டு போகுதுன்னா யாரா இருக்கும். நம்ப ஹீரோவுக்கு அம்மா தான் இவங்க” என்றாள் கமலி.
“ஹீரோ சிங்கம்ன்னா. அவங்க அம்மாவும் சிங்கம் மாதிரி இருப்பாங்கன்னு நினைச்சேன்” என்று பாட்டி புருவம் உயர்த்த, “அம்மா அப்படித் தான் இருக்கணுமா. அப்பா கூட அப்படி இருக்கலாம். அதனால கூட ஹீரோ சிங்கக்குட்டியா பிறந்திருக்கலாம்” என்றாள் கமலி திருதிரு முழியுடன்.
“அப்போ ஹீரோ, ஹீரோவோட அப்பா எல்லாம் சிங்கம், புலியா இருந்தாலும், ஹீரோவோட அம்மா, லவ்வர், பொண்டாட்டி எல்லாம் மானு, முயல்ன்னு இருந்து, அவங்கக் கிட்ட சிக்கித் தவிக்கணும்.
பெண் சிங்கமாவோ, புலியாவோ இருக்கக் கூடாது. அப்படித் தான” என்று பாட்டி கேட்க, “பாட்டி. ஆன்ட்டி-ஹீரோ ஸ்டோரி இலக்கணமே தெரியாம பேசற நீ. நீ கேக்கற லாஜிக் எல்லாம் பார்த்துக் கதை எழுதுனா, நான் ஆண்ட்டி-ஹீரோ எழுத முடியாது. பாட்டி-ஹீரோ தான் எழுத முடியும்” என்று பொரிந்தாள் கமலி.
‘ஐயோ! இந்த ஒத்த கதையை முடிக்கறதுக்குள்ள இந்தப் பாட்டி கிட்ட என்னென்ன கேள்வி வாங்கப்போறேனோ! அவ்வ்வ்வவ்!’ என்று உள்ளுக்குள் நொந்துக்கொண்டாள் கமலி.
அவர்கள் அப்படிப் பேசிக்கொண்டிருக்கும் போதே, பூட்டிய அறையிலிருந்து “ஐயோ!” என்று அலறல் சத்தம் கேட்க, இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.
அந்த அறையின் கதவைத் திறந்துக்கொண்டு, கையில் ரத்தக்கறைப் படிந்தக் கத்தி ஒன்றை ஏந்தியக் கையோடு வெள்ளை வேட்டி சட்டைப் போட்ட ஒருவர் வெளியே வந்தார்.
வந்தவர், இரண்டு அடியாட்களை அழைத்து, “அவன் பாடியை டிஸ்போஸ் பண்ணுங்கடா” என்று சொல்லிவிட்டுத் திரும்பினார். அவரின் பார்வை இவர்கள் இருவரின் மேலும் விழ, கமலி நடுநடுங்கி எழுந்து நிற்க, பாட்டியோ கால் மேல் கால் போட்டு அமர்ந்த வண்ணம் இருந்தார்.
“பாட்டி. இவரு ஹீரோவோட அப்பா. ஊருல பெரிய கையி. பெரிய ரவுடி. எழுந்து நின்னு மரியாதைக் குடு” என்று கமலி பாட்டியின் காதில் கிசுகிசுக்க, “கொலைப் பண்றவன், கொள்ளை அடிக்கறவன் எல்லாம் பெரிய ஆளு கிடையாது. மரியாதையும் குடுக்க முடியாது. நெவர்” என்று பதிலளித்தார் பாட்டி.
“ஐயா. அது இந்தப் பாட்டிக்குக் கால் ஊனம். அதான் எழுந்து நிக்க முடியல” என்று கமலி சொல்ல, வேண்டுமென்ற எழுந்து நின்று நடந்துக் காட்டினார்.
‘ஐயோ! கெழவி என்னைச் சாவடிக்காம விடாது போலயே’ என்று கமலி நடுங்கும் நேரத்தில் சரியாக வந்தார் அந்தப் பெண்மணி. பாட்டியின் பாஷையில் சொல்ல வேண்டும் என்றால், ‘மான்’. அந்தப் பாத்திரத்துக்கு கமலி வைத்திருந்தப் பெயர் பூங்கொடி.
“நிரஞ்சனைப் பார்க்க வந்திருக்காங்க” என்று அவர் கணவரிடம் சொல்ல, “ம்ம்ம்” என்றவர் அங்கிருந்து நகர்ந்தார்.
அந்தக் கூடத்திற்கு நடுவில், முதல் மாடிக்குச் செல்லும் படிகள் இருந்தன. அந்தப் படிகளிலிருந்து முதலில் கீழே வந்தது, ஒரு பதினைந்து வயது பையன்.
அவன் சீப்பைத் தூக்கிக்கொண்டு ஓடி வர, அவன் பின்னால், பாதித் தலைப் பின்னியும் பாதிப் பின்னாமலும் ஓடி வந்தாள் ஒரு பதினெட்டு வயது பெண்.
அந்தப் பெண் நேராக, தந்தையிடம் வந்து, “அப்பா! அவனைப் பாருங்க. என் சீப்பைத் தூக்கிட்டு ஓடி வந்துட்டான். குடுக்கச் சொல்லுங்கப்பா” என்று முறையிட, அந்தப் பையனோ தாயின் பின்னால் ஒளிந்துக்கொண்டு அவளைப் பழித்துக்கொண்டிருந்தான்.
அவள் தளிர்.
சிங்கமுத்து-பூங்கொடி இருவரின் ஒரே பெண். அவளிடம் வம்பு வளர்க்கும் சிறுவன், சந்தோஷ். அவர்களின் கடைசி மகன்.
பூங்கொடி ஒருவாறாக இருவரையும் சமாதானம் செய்து வைத்து தளிருக்கு தலைச் சீவி முடிக்க, உறுதியான காலடிச் சத்தம் கேட்டது.
சந்தன நிற முழுக்கால் சட்டை, அடர் நீல நிற முழுக்கைச் சட்டை, கருப்பு நிற ஷூ சகிதம், கையிலிருந்த விலையுயர்ந்தக் கைக்கடிகாரத்தை மாட்டிக்கொண்டே கீழே இறங்கிவர அனைவர் கவனமும் அவன் பக்கம் திரும்பியது.
அவன் ‘லெனின் நிரஞ்சன்’.
கம்பீர நடை, சுற்றி இருப்பவர்களை ஆராயும் பார்வை, இறுக்கமான உடல்வாகு, அனைவரையும் கவனிக்கவைக்கும் குரல், முக்கியமாக வயிற்றில் படிக்கட்டு வெட்டி வைத்தது போன்ற சிக்ஸ் பேக் பாடி. சுந்தரன் தான். ஆயினும், ‘கொஞ்சமே கொஞ்சமாகச் சிரித்தால் அழகுக்கு அழகுச் சேர்த்தது போல் இருக்குமே’ என்ற எண்ணம் தோன்றி அவன் சிரிப்பானா என்று எதிர்பார்க்க வைக்கும் எழில் வதனம்.
அவன் வந்ததும் பாட்டியை இடித்த கமலி, “எப்புடி? ஆன்ட்டி-ஹீரோவா இருக்குறதுக்கே அளவெடுத்து செஞ்ச மாதிரி இருக்கான்ல!” என்று கேட்க, “பாக்குறதுக்கு எல்லாம் நல்லா தான் இருக்கான். ஆனா, ஏன் சிரிக்கா மூஞ்சியா இருக்கான்? சிரிச்சா என்ன அழகா இருப்பான் தெரியுமா இவன்?” என்றார் பாட்டி.
“ஐயோ! எத்தனை தடவ உன்ன திட்டுறதுன்னு தெரியல. முதல்ல, ஆன்ட்டி-ஹீரோ இலக்கணம்ன்னு ஒரு புக்க எழுதி உன் கைல குடுக்கணும்.
சிரிச்சி கலகலன்னு இருந்தா அவனை ஆன்ட்டி-ஹீரோன்னு ஒத்துக்க மாட்டாங்க. ஆன்ட்டி-ஹீரோன்னா, அவன் சிரிச்சாலே எல்லாரும் பயப்படனும்” என்று கமலி சொல்ல, “ஏன்? அவ்ளோ கேவலமாவா இருக்கும்!” என்றார் பாட்டி வெள்ளந்தியாக.
“இல்ல. அவன் சிரிச்சா அதுல வில்லத்தனம் இருக்கணும். ‘ஐயோ. சிரிக்கறானே! அடுத்து என்ன பண்ணுவானோ’ன்னு யோசிக்கணும்” என்றாள் கமலி.
“அரக்கனா அவன்” என்று பாட்டி கேட்க, “இல்ல ஆன்ட்டி ஹீரோன்னு எத்தனை முறை சொல்றது” என்று அலுத்துக்கொண்டாள்.
அதற்குள் லெனின் நிரஞ்சன் கீழே இறங்கி வந்திருந்தான்.
நேராக தந்தையிடம் சென்றவன், அவரின் கையிலிருக்கும் கத்தியைப் பார்க்க, “மார்க்கெட் நடுவுல ஒருத்தனைப் போட்டோமே. அவனை நம்ப ஆளுங்க தான் போட்டாங்கன்னு எவிடன்ஸோட ஒரு போலிஸ்காரன் அரெஸ்ட் பண்றேன்னு வீட்டுக்குள்ளேயே வந்துட்டான். அவன் தான்” என்றார் சிங்கமுத்து.
“வயசாகிடுச்சு ப்பா உங்களுக்கு. எல்லாருக்கும் பயம் போய்டுச்சு உங்க மேல. போலீஸ் வீட்டுக்குள்ளயே வந்திருக்கான்” என்று அவரை ஆழமாகப் பார்த்தான் லெனின் நிரஞ்சன்.
“இதுக்குத் தான் சொன்னேன். எல்லாத்தையும் மொத்தமா என்கிட்ட குடுத்துடுங்க” என்று அவன் பார்க்க, “உன்கிட்ட பல தடவை சொல்லிட்டேன் லெனின். உனக்கு இந்தக் கைல ரத்தம் படியற வேலை எல்லாம் வேண்டாம். நம்ப காலேஜ் இருக்கு. அதைப் பார்த்துக்கோ. அதை மட்டும். இந்தக் கொலை, கட்டப்பஞ்சாயத்து எல்லாம் என்னோட முடியட்டும்” என்று சிங்கமுத்து சொல்ல, “முடியாது. எனக்கு எல்லாமும் வேணும். நீங்க இப்போ செஞ்சிட்டு இருக்க எல்லாமும் என் தலைமைக்குக் கீழ வரணும். நீங்க வேணாம்ன்னு சொன்னாலும். ஒரு நாள் வரும்” என்றவனை முறைத்தார் சிங்கமுத்து.
ஆனால், அதையெல்லாம் கண்டுக்கொள்ளாதவன், தாயைப் பரிமாறச் சொல்லி, காலை உணவை உண்ணத்தொடங்கினான்.
அதற்கு மேல் இங்கிருக்க விரும்பாமல், சிங்கமுத்து அவரின் அறைக்குள் நுழைந்தார்.
“நிரஞ்சா. அதான் அப்பா சொல்றாருல்ல. இந்த ரத்தம், கொலை எல்லாம் அவரோட போகட்டும்ப்பா. நீ நம்ப காலேஜ பார்த்துக்கோ. அதுல வர்ற காசு நமக்குத் தாராளமா போதும்” என்று பூங்கொடி சொல்ல, லெனின் நிரஞ்சன் “முடியாது” என்றதோடு சரி.
அதன் பிறகான ஐந்து நிமிடங்கள் அமைதியாகவே கடக்க, “நிரஞ்சன் அண்ணா” என்றாள் தளிர்.
“கால் மீ லெனி!” என்றான் அவன் தளிரை எரிக்கும் பார்வையுடன்.
அவன் பிறந்தபோது, ரஷிய புரட்சியாளர் லெனின் ஞாபகமாக, அவனுக்கு அந்தப் பெயரைச் சூட்ட ஆசைப்பட்டு அந்தப் பெயரை வைத்தார். “There are Decades Where Nothing Happen. There are Weeks Where Decades Happen” என்றவர் லெனின்.
தசாப்தங்களில் செய்து முடிக்க வேண்டியதை, வாரங்களில் செய்து முடிக்கும் வல்லமையோடு தன் மகன் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு அந்தப் பெயரை வைத்தார் சிங்கமுத்து. ஆனால், அவனோ இன்று, “வெள்ளைக் கையுறைகள் அணிந்து புரட்சி செய்ய முடியாது” என்று லெனினின் பொன்மொழி ஒன்றைக் கூறி, சிகப்புக் கையுறை அணிய துடித்துக்கொண்டிருக்கிறான்.
பூங்கொடியோ, எந்தக் குறையுமில்லாமல், அனைத்து மகிழ்ச்சிகளையும் பெற்று நிறைவான வாழ்வைத் தன் மகன் வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டு, ‘நிரஞ்சன்’ என்று சொல்ல, இரண்டு பெயர்களையும் சேர்த்து ‘லெனின் நிரஞ்சன்’ என்று வைத்தனர்.
தந்தை லெனின் என்றும், தாய் நிரஞ்சன் என்றும் அழைக்கும் போதும் அமைதியாக இருப்பவன், வேறு யாரும் அப்படி அழைத்தால் கோபத்தில் சீறுவான்.
மற்ற அனைவரும் அவனை, ‘லெனி’ என்று அழைப்பதையே விரும்புவான்.
“ஏன்டா. பாப்பா இப்போ நிரஞ்சன்னு கூப்ட்டா என்ன டா?” என்று பூங்கொடி கேட்க, “இல்ல ம்மா. என்னை லெனின்னு கூப்பிடறது தான் எனக்குப் பிடிச்சிருக்கு. உனக்குத் தெரியுமா! லெனின்னா சிங்கம்ன்னு அர்த்தம். எனக்கு அந்தப் பேர் தான் பொருத்தம்ன்னு எனக்குத் தோணிக்கிட்டே இருக்கு” என்றான் அவன்.
‘லெனி’ என்று பெயரைக் கேட்டதும் பாட்டியின் முகத்தில் அதிர்ச்சி.
“லெனி... இந்தப் பேர் நீ வச்சதா?” என்று கமலியிடம் கேட்க, “ஆமாம்! செமையா இருக்குல்ல” என்று கேட்க “ம்ம்” என்ற பாட்டியின் முகத்தில் தோன்றிய வியப்பு மறைய சில நிமிடங்கள் எடுத்தது.
லெனின் நிரஞ்சன்!
லெனி!
சிங்கம் என்ற பெயரையும், ‘சிங்கம் போல்’ என்ற உவமையையும், ‘தலைமை’ பதவியையும் வெகுவாக விரும்புபவன்.
அதற்காக எந்த எல்லைக்கும் போகக்கூடியவன்.
அவனின் இந்தக் குணம், அவனின் எதிர்க்காலத்தை மட்டுமில்லாமல், அவன் குடும்பத்தின் எதிர்க்காலத்தையே எப்படி மாற்றி அமைக்கப்போகிறது என்பதைப் பற்றித் துளியும் கவலையின்றி, தளிர் என்ன சொல்ல தன்னை அழைத்தாள் என்று வினவிக்கொண்டிருந்தான் லெனி.