Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


நிழல் நிலவு - Story

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
628
Reaction score
799
Points
93
அத்தியாயம் 69

“பைத்தியம் பிடிச்சிடுச்சா உங்களுக்கு? என்ன நெனச்சுக்கிட்டு இதெல்லாம் பண்ணிக்கிட்டு இருக்கீங்க? ஆர் யு கான் மேட்?” - ஆத்திரத்துடன் கத்தி கொண்டிருந்த ஷோபாவின் கோபமும் பதட்டமும் அவரை சற்றும் பாதிக்கவில்லை. மனைவிக்கு செவி சாய்க்கும் எண்ணம் கூட இல்லாதவராக, ஒரு வெள்ளை தாளில் அச்சிடப்பட்ட பெயர் பட்டியலை தீவிரமாக ஆராய்ந்து சில பெயர்களை டிக் மார்க் செய்து கொண்டிருந்தார் பகவான்.

கணவனிடமிருந்து அந்த பேப்பரை பிடுங்கி தூர போட்ட ஷோபா கடும் கோபத்துடன் அவரை முறைத்தாள்.

“கொஞ்சம் தவறியிருந்தாலும் நம்ம பொண்ணு இந்நேரம் இல்லாம போயிருப்பா. புரியுதா இல்லையா உங்களுக்கு?” - கத்தினாள்.

ஆக்ரோஷத்துடன் இருக்கையிலிருந்து எழுந்த பகவான், மனைவியை ஓங்கி அறைந்தார். பொறி கலங்கிப்போய் தரையில் விழுந்தாள் ஷோபா. தீயாக தகிக்கும் முகத்துடன் அவளை முறைத்துப் பார்த்தவர், “யாருடி பைத்தியம்? யாரு முட்டாள்?” என்று கர்ஜித்தார்.

அடிப்படையில் அவர் ஒரு தேர்ந்த சிப்பாய். தலைவனுக்காக உயிரை கொடுக்க தயங்காதவர். கோர்த்தாவுக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர். அவருடைய பாதுகாப்பில் இருக்கும் போது ஜெகன் நாயக் கொல்லப்பட்டுவிட்டது அவருக்கு பெரிய அடி. மனிதன் வெறி பிடித்த மிருகம் போல் மூர்க்கமாகிவிட்டார்.

அவரை பொறுத்தவரை இனி இழப்பதற்கு எதுவும் இல்லை. பொத்தி பொத்தி பாதுகாத்து வந்த சொத்து - அவர் தலைமையின் வாரிசு, ஜெகன் நாயக் இன்று இல்லாமல் போய்விட்டான். அவனை அழித்தவன் அர்ஜுன் ஹோத்ரா.

அவர் உயிர் இருக்கும் போதே அவனை அழித்து பழி தீர்த்து விட வேண்டும். குறுக்கே மகள் வந்தால் என்ன? மனைவி வந்தால் என்ன? எதைப் பற்றியும், யாரைப் பற்றியும் அவருக்கு அக்கறை இல்லை. மதம் பிடித்த யானை போல் உக்கிரமாக மனைவியை முறைத்தார்.

“நம்மளோட ஆணிவேரையே பிடுங்கி எறிஞ்சுட்டான். பழிவாங்க போன வெல் ட்ரைன்ட் ரிசோர்சஸ் ஆறு பேரு அவன் மேல சின்ன கீறல் கூட போட முடியாம பிணமா கிடக்குறாங்க. அந்த பிணத்தை கூட நம்மளால க்ளைம் பண்ண முடியல. வெட்கமா இல்ல? உன் உடம்புல கோர்த்தா இரத்தம் ஓடுதா இல்ல கழிவு தண்ணி ஓடுதா?” - எரிமலையாக வெடித்தார்.

ஷோபா அஞ்சவில்லை. நிதானமாக எழுந்து அவரை நேருக்கு நேர் பார்த்தாள். “மிருதுளா உங்க பொண்ணு. அவ உடம்புல உங்க இரத்தம் ஓடுது.”

“அப்படின்னா அவனை பழிவாங்க என் பொண்ணு இரத்தம் சிந்தட்டும். அதுல எனக்கு பெருமைதான்” - ஷோபா கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டாள். அவர் சொன்ன வார்த்தையை சகித்துக்கொள்ள போராடியது அவள் தாய் மனம்.

“என்ன வேணுன்னாலும் செய்யுங்க. யாரை வேணுன்னாலும் கொல்லுங்க. ஆனா என் பொண்ணுக்கு மட்டும் எதுவும் ஆகக் கூடாது.”

“கடவுள்கிட்ட வேண்டிக்க” - தன்னுடைய குறிக்கோள் அர்ஜுனை அழிப்பதுதான். மிருதுளாவை பாதுகாப்பது அல்ல என்பதை அவர் திட்டவட்டமாக கூறிவிட, ஷோபா அதிர்ந்து போனாள்.

********************

அசல் வீரனை பிரேக்கிங் பாயிண்டிற்கு கொண்டு செல்வது மிக கடினம். ஆனால் ஒரு முறை அவனுடைய பிடிவாதத்தையும், நம்பிக்கையையும் உடைத்துவிட்டால் பிறகு அவனை பேச வைப்பது மிகவும் சுலபமானது. சுஜித்தும் பேசினான்.

சுஜித்துக்கும் சுமனுக்குமான உறவு பிளவுபட்டு ஓரிரு மாதங்கள் ஆகிவிட்டது. அந்த பிரிவை பெரும் கொடுமையாக உணர்ந்த சுமன் அவனை சமாதானம் செய்ய பல வழிகளில் முயன்றாள். அவனுடைய பிடிவாதத்தை வெல்ல முடியவில்லை. அப்போதுதான் அவள் தனக்குள் நிகழ்ந்துக் கொண்டிருக்கும் இன்னொரு மாற்றத்தை உணர்ந்தாள். அது சாதாரண விஷயம் அல்ல. அவளுக்குள் ஒரு உயிர் வளர்ந்து கொண்டிருந்தது. இது எப்படி இத்தனை நாட்களாக அவள் கருத்தில் பதியாமல் போனது! - மிகப்பெரிய ஆச்சரியம் தான். ஆனால் அவளிருந்த அழுத்தமான மனநிலையை எண்ணி பார்த்தால் இந்த விஷயத்தை அவள் கவனிக்க தவறியதிலும் ஆச்சரியம் இல்லை.

தனக்கும் சுஜித்துக்கும் இடையே பலமான பாலம் ஒன்று உருவாகிவிட்ட உற்சாகத்துடன்தான் அன்று அவனை பார்க்க சென்றாள் சுமன். அவனை சமாதானம் செய்ய முயன்றாள். ஆனால் அவன் எதையும் காது கொடுத்து கேட்கவில்லை. அவளை வெட்டிவிடுவதிலேயே குறியாக இருந்தான்.

அவன் அப்படியொரு மனநிலையில் இருக்கும் போது அவனிடம் தன் நிலையை வெளிப்படுத்த அவளால் முடியவில்லை. எதுவும் பேசாமல் திரும்பிவிட்டாள். ஆனால் அவன் உணர்ந்தான். அவள் சொல்லவில்லை என்றாலும் தன் உயிர் அவளுக்குள் உருவாகியிருப்பதை அவன் உள்ளுணர்வு அவனுக்கு சுட்டிக்காட்டியது.

அவள் ஏன் வாய்விட்டு எதையும் சொல்லவில்லை. அவள் சொல்லாமல் அவன் எப்படி கேட்பான்! - விலகி செல்பவளை தடுக்க முடியாமல் செயலற்று நின்றான் சுஜித்.

சுமன் அங்கிருந்து வெளியேறிய சற்று நேரத்திலேயே சுஜித்தின் அலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது. சுமன் கடத்தப்பட்டுவிட்ட செய்தி கிடைத்தது. அதற்கு மேல் அவன் தன் கட்டுப்பாட்டில் இல்லை. பகவான் ஆட்டுவித்த பொம்மையாக அவர் சொன்னதையெல்லாம் செய்துவிட்டு சுமனை மீட்டுக்கொண்டு வந்தான்.

இருந்தும் என்ன பயன்? இப்போது அவனோடு சேர்ந்து அவளுமல்லவா அர்ஜுனிடம் மாட்டியிருக்கிறாள். நடந்ததையெல்லாம் சொல்லி சுமனை மட்டும் விட்டு விடுமாறு கெஞ்சினான் சுஜித்.

அர்ஜுனின் இறுகிய முகம் அவன் மனம் சுஜித்தின் சமாதான வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை காட்டியது. ஆனாலும் அவன் வார்த்தைகளில் இருக்கும் உண்மை தன்மையை உறுதிப்படுத்திக்கொள்ள நினைத்து பேஸ்மெண்ட்டிலிருந்து வெளியே வந்து பின்புல விசாரணைக்கு ஏற்பாடு செய்தான்.

பொழுது விடிந்துவிட்டது. அர்ஜுன் தன் அலுவலக அறையில் கண்களை மூடி சேரில் தளர்ந்து அமர்ந்திருந்தான். ‘கொல்லப்படுவதற்கு முன் கொன்றுவிடு.. கொல்லப்படுவதற்கு முன் கொன்றுவிடு’ என்கிற வார்த்தைகள் அவன் தலைக்குள் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்க, ‘நம்மளோட உறவை எப்படியாவது காப்பாத்துங்க அர்ஜுன்’ என்கிற மிருதுளாவின் மென்மையான குரலும் அவன் சிந்தனையில் குறுக்கிட்டு அவனுடைய அமைதியை குலைத்தது. நீண்ட பெருமூச்சுடன் தலையை அழுந்த கோதியபடி நிமிர்ந்து அமர்ந்தான். கதவை தட்டிவிட்டு உள்ளே நுழைந்தான் மாலிக்.

“முக்கியமான விஷயமா?” - சுருக்கமாக கேட்டான்.

சுஜித், அர்ஜுனுக்கு நண்பன். நண்பனை சித்திரவதை செய்வது எந்த விதத்திலும் அவனுக்கு மகிழ்ச்சியை கொடுக்காது. மகிழ்ச்சியென்ன.. இதெல்லாம் பெரிய சவால். இப்படிப்பட்ட சவால்களை அர்ஜுனை போன்ற ஆட்கள் தினம் தினம் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். உறவுகளையும் நண்பர்களையும் கடுமையாக தண்டிப்பதும் கொலை செய்வதும் சாதாரண மனிதர்களுக்கு கற்பனை கூட செய்து பார்க்க முடியாத காரியம். அதை உண்மையில் நடத்திக் கொண்டிருப்பவர்களின் மனநிலை எப்படி இருக்கும்?

இதையெல்லாம் நன்றாகவே அறிந்திருந்த மாலிக் அர்ஜுன் பேஸ்மெண்ட்டிலிருந்து வந்த பிறகு வெகு நேரம் அவனுக்கு தனிமையை கொடுத்துவிட்டு ஒதுங்கியிருந்தான். மற்ற நாட்களாக இருந்திருந்தால் அவனாக கூப்பிடும் வரை அவனை தொந்தரவு செய்திருக்க மாட்டான். ஆனால் இன்று அப்படி இருக்க முடியவில்லை. சுமனின் நிலைமை அவனை கவலை கொள்ளச் செய்தது. தவிர்க்க முடியாமல் அர்ஜுனுக்கு எதிரில் வந்து நின்றான்.

“ஐம் வெய்ட்டிங் மாலிக். எனிதிங் இம்பார்ட்டண்ட்?” - மீண்டும் கேட்டான் அர்ஜுன்.

தொண்டையை செருமி சூழ்நிலைக்கு தன்னை சற்று தயார்படுத்திக் கொண்டு, “சுமன், ஷி இஸ் வெரி வீக்” என்று இழுத்தான்.

“சோ?” - கண்கள் இடுங்க கேட்டான் அர்ஜுன்.

“அவ மேல தப்பு எதுவும் இல்ல அர்ஜுன்..”

“ஐ நோ தட்” - கோபத்துடன் கூறினான்.

மாலிக் சற்று நேரம் எதுவும் பேசவில்லை. பிறகு தயக்கத்துடன், “கர்ப்பமா இருக்கா அர்ஜுன்” என்றவனின் குரல் கரகரத்தது.

சுமன் மீது தனக்கு இருக்கும் விருப்பத்தை அவன் அவளிடம் வெளிப்படுத்திய போது அவள் சுஜித்தின் மீது தனக்கு இருக்கும் காதலை கூறி அவனை நிராகரித்தாள். ஆனாலும் அவள் மீது அவனுக்கு இருக்கும் ஒருவித ஆழ்ந்த அன்பு இன்றுவரை சிறிதும் குறையவில்லை. அதை சுஜித்தும் அறிவான்.

பல சமயங்களில் சுஜித் இதை மனதில் வைத்துக் கொண்டு வேறு காரணத்தைக் காட்டி மாலிக்குடன் சண்டை கூட போட்டிருக்கிறான்.

கடைசியாக அவன் கேஜ் ஃபைட்டில் தோற்ற போது கூட மாலிக்கிடம் தோற்று போனதுதான் அவனுக்கு மிகப்பெரும் அடியாக இருந்தது. அதை ஏற்றுக்கொள்ள முடியாமல்தான் சுமனிடம் வெறுப்பை உமிழ்ந்தான். அனைத்தையும் அறிந்திருந்த அர்ஜுன் சற்று நேரம் மெளனமாக அமர்ந்திருந்தான். பிறகு “டேக் ஹேர் அவுட்” என்றான். மாலிக்கின் முகத்தில் நிம்மதி மீண்டது.
 

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
628
Reaction score
799
Points
93
அத்தியாயம் 70

அன்றைய விடியல் எதையோ பெரிதாக இழந்துவிட்டது போன்றதொரு உணர்வுடனே விடிந்திருந்தது மிருதுளாவுக்கு. காரணம் பெரிதாக ஒன்றும் இல்லை. அவள் கண் விழிக்கும் போது படுக்கையில் அவளுக்கு அருகில் அர்ஜுன் இல்லை.

‘விடியற்காலை மூன்று மணியாகிவிட்டது, ஓய்வெடுக்க வேண்டும் என்று சொன்னவன் எப்போது எழுந்தான்? எங்கு சென்றான்? ஏன் அவளை எழுப்பவில்லை?’ - அடுக்கடுக்கான கேள்விகள் அவளை கொக்கி போட்டு இழுக்க, நிம்மதியாக படுத்திருக்க முடியாமல் எழுந்து அமர்ந்தாள்.

காயம்பட்ட இடம் விண்ணென்று தெறித்தது. சட்டென்று கண்களில் திரண்ட கண்ணீர் கன்னங்களில் உருண்டோடியது. பற்களை கடித்து வலியை சகித்தவள், மெல்ல முயன்று கட்டிலின் ஹெட்போர்ட் பக்கம் நகர்ந்து சாய்ந்து அமர்ந்தாள்.

அர்ஜுன் அருகில் வேண்டும் என்கிற எண்ணம் அவளுக்குள் கோபமாக உருவெடுத்தது. அவன் பெயரை சொல்லி கத்த வேண்டும் போல் இருந்தது. சரியாக அதே நேரம் அந்த அறையின் கதவை திறந்துக் கொண்டு உள்ளே நுழைந்தான் அர்ஜுன்.

கன்றி சிவந்திருந்த அவள் முகத்தை பார்த்ததும், “மிருது! எப்போ எழுந்த? ஏன் ஒரு மாதிரி இருக்க? என்ன ஆச்சு?” என்று பதட்டத்துடன் கேட்டபடி அவளிடம் நெருங்கினான்.

அதுவரை அவளை ஆக்கிரமித்திருந்த கோபம் கரைந்து கண்ணீராக பெருகியது. “ஹேய்! என்ன? வலிக்குதா? நீட் எனி ஹெல்ப்? பெயின் கில்லர் வேணுமா? மிருது” - அவன் பதற பதற அவளுடைய அழுகை அதிகமானது. விக்கி விக்கி அழுதாள்.

“மை காட்! யூ ஆர் நாட் எ பேபி மிருது. வாயை திறந்து ஏன் சொல்ல மாட்டேங்கிற? என்ன பண்ணுது? ஸ்பீக் அவுட்” - அவன் குரலை உயர்த்த, அதைவிட உயர்ந்த குரலில், “ஐ ஃபெல்ட் அலோன்” என்று கத்தினாள் மிருதுளா.

அர்ஜுன் திகைத்துப் போனான். ஓரிரு நொடிகள் அவனால் எதுவுமே பேச முடியவில்லை. தன் கைகளை பிடித்துக் கொண்டு குலுங்கி அழுது கொண்டிருப்பவளை சமாதானம் கூட செய்ய தோன்றாமல் உறைந்துப் போயிருந்தவன், “வாட்?” என்றான் கம்மிய குரலில்.

மிருதுளா அவனை நிமிர்ந்துப் பார்த்தாள். “ஐ மிஸ்ட் யூ. ஐ மிஸ்ட் யூ மேட்லி. என்னை விட்டு போகாதீங்க. எப்பவும் போகாதீங்க” - பைத்தியம் போல் உளறுகிறோம் என்று அவளுக்கே தெரிந்தது. ஆனாலும் கட்டுப்படுத்திக்கொள்ள முடியவில்லை. ஏன் இத்தனை பலகீனமாகிவிட்டோம் என்று அதற்காகவும் அழுதாள்.

அவன் முகத்தில் சின்னதாய் ஒரு புன்னகை தோன்றியது. எத்தனையோ பிரச்சனைகள் அவனை சூழ்ந்திருந்தாலும், அவளுடைய அந்த ஒரு வார்த்தை அவனை நிம்மதி படுத்தியது. அவனுக்கான அவளுடைய தேடல் அவனை மகிழ்வித்தது. திருப்தியுடன் அவளை அணைத்துக் கொண்டவன், “எங்க போய்ட்டேன் நான்? உன் கூடவேதான் இருக்கேன். என்ன ஆச்சு உனக்கு?” என்று ஆறுதல் சொன்னான்.

“ஏதோ தப்பு நடக்க போகுது அர்ஜுன். பயமா இருக்கு. தனியா ஆயிட்ட மாதிரி.. நீங்க தூரமா போயிட்ட மாதிரி.. அர்ஜுன்.. எல்லாம் சரியாயிடும் தானே? நாம சந்தோஷமா இருக்க போறோம் தானே?” - புலம்பியபடி அவனோடு ஒண்டி கொண்டாள்.

“ஷ்ஷ்ஷ்.. காம் டௌன். நமக்கு எதுவும் ஆகாது. நீண்ட எதிர்காலம் நமக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கு. வெப்பன்ஸ், புல்லெட்ஸ், ப்ளெட் எல்லாம் ரொம்ப பக்கத்துல பார்த்துட்ட. இந்த மாதிரி ஃபீலிங்ஸ் இருக்கத்தான் செய்யும். கொஞ்ச நாள் தான். அப்புறம் எல்லாம் சரியாயிடும். ரிலாக்ஸ்” - அவள் நெற்றியில் முத்தமிட்டு சமாதானம் செய்தான். பேண்ட் பாக்கெட்டில் இருந்த அலைபேசி ஒலித்தது.

அது பிரத்தியேக அலைபேசி. அழைப்பது ராகேஷ் சுக்லாவாகவோ அல்லது அவருக்கு நெருக்கமானவர்களாகவோ தான் இருக்க முடியும் என்று தெரிந்தும், மிருதுளாவை விலக்க மனமில்லாதவனாக அலைபேசி அழைப்பை ஏற்கவில்லை. அலைபேசி மீண்டும் ஒலித்தது. விடாமல் ஒலித்துக் கொண்டே இருந்தது. புலன்கள் விழிப்புற்று அவளிடமிருந்து மெல்ல விலகினான். அனிச்ச மலராக வாடிவிட்ட அவள் முகத்தில் அழுத்தமான முத்தமொன்றை பதித்துவிட்டு அலைபேசியுடன் அங்கிருந்து வெளியேறினான்.

கணித்தபடி அஞ்சானி லால் தான் அழைத்திருந்தார். சுஜித் சிங் தன்னிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்கிற சுக்லாவின் கட்டளையை தெரியப்படுத்தினார். அர்ஜூனின் முகம் தீவிரமாக மாறியது.

“இது என் மேல நடந்த அட்டாக். நான் பார்த்துக்கறேன்” என்றான்.

அவர் முடியாது என்று மறுத்தார். தாக்குதல் அவன் மீது நடந்திருந்தாலும் அதை தனிப்பட்ட தாக்குதலாக எடுத்துக்கொள்ள முடியாது. கோர்த்தாவின் தளபதியை தாக்கியிருக்கிறார்கள். அதுமட்டும் அல்ல. தாக்குதல் நடத்தப்பட்ட இடம், கோர்த்தாவின் முக்கிய பிரமுகர்கள் சந்தித்துக்கொண்ட இடம் என்பதை எடுத்துக் கூறி நிலைமையின் தீவிரத்தை அவனுக்கு விளக்கியதோடு, சுக்லாவின் கடுமையான கோபத்தையும், அர்ஜுனின் அலட்சியப்போக்கின் மீதான அவருடைய அதிருப்தியையும் எடுத்து சொல்லி சுஜித்தை உடனே அனுப்பி வைக்குமாறு கூறினார்.

அதுமட்டும் அல்ல. தாக்குதல் நடந்த அன்று, அர்ஜுனின் சார்பாக எதிர் தாக்குதல் நடத்தியது யார் என்பதையும் விசாரித்தார் அஞ்சானி.

“பெர்சனல் கார்ட்ஸ்” என்று சுருக்கமாக முடித்துக் கொண்ட அர்ஜுனின் முகம் இறுகியது. அவனுக்கு வேறு வழியில்லை. சுஜித்தை அனுப்பியே ஆக வேண்டும். அன்று மட்டும் மீட்டிங் முடிந்ததும் கிளம்பியிருந்தால் இந்த பிரச்சனையே வந்திருக்காது என்று எண்ணியபடி, “அனுப்பறேன்” என்றான் ஒப்புதலாக.

*****************

பகவான் ஆட்களால் கடத்தப்பட்டதிலிருந்து இன்று வரை சுமன் சந்தித்த கொடூரங்கள் எண்ணிலடங்காது. உடலளவிலும் மனதளவிலும் மிகவும் நலிந்துப் போயிருந்தாள். கோர்த்தாவின் மருத்துவர் அவளுக்கு தரமான சிகிச்சை அளித்தார். அதற்கு மாலிக்கின் உந்துதல் தான் முக்கிய காரணம்.

எப்படியாவது அவளை தேற்றிவிட வேண்டும் என்று அவன் உள்ளம் துடித்தது. அவளுடைய துன்பத்தை சகிக்க முடியாமல் தவித்தான். சுஜித் விடுதலை பெற்று வழக்கம் போல் அவளோடு சேர்ந்துவிட மாட்டானா என்றிருந்தது அவனுக்கு. ஆனால் அது நடக்கவே போவதில்லை என்பது போன்றதொரு செய்தி அவன் செவியை எட்டிய போது சுமனை எண்ணி அவன் வெகுவாக கலங்கினான்.

கோர்த்தா தளபதிகளின் வேலைகளில் எப்போதாவதுதான் சுக்லா தலையிடுவார். அப்படி அவர் தலையிடுகிறார் என்றால் நிலைமை வெகு தீவிரம் என்று பொருள்.

இன்று சுஜித் அவருடைய கஸ்டடிக்கு கொண்டு செல்லப்படுகிறான். அவன் உயிரோடு திரும்பி வருவானா? அதற்கான சாத்தியக்கூறு இருக்கிறதா? யோசித்துப் பார்த்தால், இதற்கு முன் அப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்ததில்லை. குறிப்பாக உள்ளே இருந்துக் கொண்டு எதிரிகளுக்கு துப்புக் கொடுப்பவர்களுக்கு கோர்த்தாவில் ஒரே தண்டனைதான், மரணம். - மாலிக்கின் மனம் வலித்தது. கூடவே இருந்த நண்பன். இன்று குற்றவாளியாக நிற்கிறான். உணர்வுகளை கொன்றுவிட்டு இயந்திரமாக வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதன் அவன். அவனுக்கே வலிக்கிறது. சுமன் எப்படி தாங்குவாள்!

கனத்த மனதுடன் நண்பனின் காயங்களுக்கு மருந்திட்டு அவனுக்கு நல்ல உடை அணிவித்து அவனை பயணத்திற்கு தயார்படுத்தினான். என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை புரிந்துக்கொண்ட சுஜித் இறுகிப் போயிருந்தான். இரண்டு மூன்று முறை மாலிக் அவனிடம் பேச்சு கொடுத்தான். அவன் பேசவில்லை. கடைசியாக, “சுமனை வர சொல்லட்டுமா?” என்றான்.

அவனிடம் ஒரு அதிர்வு தெரிந்தது. அவளை கடைசியாக ஒரு முறை பார்த்துவிட வேண்டும் என்கிற துடிப்பு அது. ஆனால் அவன் அழுத்தக்காரனாயிற்றே! அவ்வளவு எளிதில் அசைந்து கொடுத்துவிடுவானா என்ன? அழுந்த மூடிய உதடுகளுடன் சிலை போல் அமர்ந்திருந்தான். குறித்த நேரம் வந்ததும் ஆட்கள் அவனை அழைத்துக் கொண்டு புறப்பட்டார்கள். காரில் ஏறுவதற்கு முன் ஒரு நொடி தயங்கிய சுஜித் மாலிக்கை ஏறிட்டுப்பார்த்தான்.

“பார்த்துக்க..” - ஒற்றை வார்த்தையில் மொத்த பொறுப்பையும் அவனிடம் ஒப்படைத்துவிட்டு, செயலற்றவனாக காரில் ஏறினான்.
 

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
628
Reaction score
799
Points
93
அத்தியாயம் 71

இந்தியப் பெருங்கடலில், இந்தியாவின் எல்லையிலிருந்து வெகுதூரம் தள்ளி ஈக்வேடார் கோட்டுக்கு வெளியே, இந்தோனேஷியா எல்லையில் நங்கூரமிடப்பட்டிருந்தது ஒரு கார்கோ கப்பல். அதாவது சரக்குக் கப்பல்.

விசாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து புறப்படும் டேங்கர் கப்பல்களில் சில கப்பல்கள் நடுக்கடலில் நிறுத்தப்பட்டு, ஒரிஸாவிலிருந்து மீன்பிடி படகுகளின் மூலம் கொண்டுவரப்படும் கனிமங்கள் அவற்றில் ஏற்றப்பட்டு, இந்தோனேஷியா எல்லையில் நிறுத்தப்பட்டிருக்கும் கார்கோ கப்பலுக்குக் கொண்டு சேர்க்கப்படுவதும், அந்தக் கப்பலின் மூலம் இந்தியாவின் கனிமங்கள் சட்ட விரோதமாக வெளிநாடுகளுக்குக் கடத்தப்படுவதும் பல ஆண்டுகளாக நடந்துக் கொண்டிருக்கும் கோர்த்தாவின் ரகசிய ஆபரேஷன்.

விசாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து புறப்படும் டேங்கர் கப்பல்களில் சில கப்பல்கள் நடுக்கடலில் நிறுத்தப்பட்டு, ஒரிஸாவிலிருந்து மீன்பிடி படகுகளின் மூலம் கொண்டுவரப்படும் கனிமங்கள் அவற்றில் ஏற்றப்பட்டு, இந்தோனேஷியா எல்லையில் நிறுத்தப்பட்டிருக்கும் கார்கோ கப்பலுக்குக் கொண்டு சேர்க்கப்படுவதும், அந்தக் கப்பலின் மூலம் இந்தியாவின் கனிமங்கள் சட்ட விரோதமாக வெளிநாடுகளுக்குக் கடத்தப்படுவதும் பல ஆண்டுகளாக நடந்துக் கொண்டிருக்கும் கோர்த்தாவின் ரகசிய ஆபரேஷன்.

கோர்த்தாவின் பிரதான சரக்குக் கப்பல் ஒரு அல்ஜீரிய கம்பெனியின் பெயரில் இருந்தது. அது இந்திய எல்லைக்குள் வருவதே இல்லை. டேங்கர் கப்பல்களில் கூட கனிமங்கள் நடுக்கடலில் தான் ஏற்றப்படுகிறது என்பதால் அது அதிகாரிகளின் கணிப்பிற்கு அப்பாற்பட்டதாக இருந்தது.

அரசு நிர்ணயித்த அளவை விட கோர்த்தா பல மடங்கு அதிகமாக கனிமங்களை வெட்டியெடுப்பது ஊரறிந்த ரகசியம் என்றாலும் அதை நிரூபிக்க சிறு துறுப்புக் கூட கிடைக்கவில்லை. கோர்த்தாவின் வியாபார கட்டமைப்பு அத்தனை நெருக்கமாக இருந்தது. அதிகாரிகள் உள்ளே ஊடுருவ முடியாமல் தடுமாறினார்கள். அந்த நேரத்தில் தான் கோர்த்தாவின் வியாபார தலைமை மாறியது.

வயதில் மூத்தவர் என்பதாலோ என்னவோ பழைய தலைவர் டெக்னாலஜியை நம்பமாட்டார். சேட்டிலைட் போன் என்றாலுமே வியாபார சம்மந்தப்பட்ட தகவல்களை போனில் பரிமாறக் கூடாது என்பதை கட்டளையாகவே பிறப்பித்திருந்தார். மின்னஞ்சல்களையும் தள்ளியே வைத்திருந்தார். ‘கொரியர்-மேன்’ முறையிலேயே அவர் தகவல்களை பரிமாறிக் கொண்டார். அதுமட்டும் அல்ல, பேமண்ட் வராமல் ஒரு பிடி சரக்கைக் கூட கைமாற்ற மாட்டார். வெகு கறாரான ஆள்.

புதிய தலைவர் அத்தனை கெடுபிடி காட்டவில்லை. கழுகு போல் காத்திருந்த அதிகாரிகளுக்கு அது வசதியாகிவிட்டது. தொலைபேசி உரையாடல்கள் ஒட்டு கேட்கப்பட்டன. மின்னஞ்சல்கள் இடைமறித்துப் படிக்கப்பட்டன. அதன் தாக்கம் மிகப்பெரியதாக இருந்தது.

வழக்கம் போலவே அன்றும் சரக்கை ஏற்றிக் கொண்டு கார்கோ கப்பலை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த கோர்த்தாவின் ஐந்து டேங்கர் கப்பல்கள் பல இடங்களில் இந்திய ராணுவ கப்பல்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டது. மற்றொரு இந்திய ராணுவ கப்பல் இந்தோனேஷியா எல்லை வரை பயணித்தது. அதிலிருந்த அதிகாரிகள் கோர்த்தாவின் சரக்குக் கப்பலை ரேடியோவில் தொடர்பு கொண்டு கப்பலின் அடையாள விபரங்களை கேட்டார்கள்.

சரக்குக் கப்பலில் இருந்தவர்கள் தங்களிடம் விபரம் கேட்பது ஆஸ்திரேலியா நாட்டு கடற்படை என்றே நினைத்தார்கள். இந்திய கடற்படை அவ்வளவு தொலைவிற்கு தங்களை மோப்பம் பிடித்து வருவார்கள் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை. எனவே ரேடியோ தொடர்பில் வந்தவர், இந்திய உச்சரிப்புடன் கூடிய ஆங்கிலத்தில், அல்ஜீரியாவை சேர்ந்த சரக்குக் கப்பல் என்று கூறி, கப்பலின் பெயர் மற்றும் லாயிட்ஸ் பதிவு எண்ணை கூறினார்.

அவர் கூறிய விபரங்கள் அனைத்தும் போலியானது என்பதை ஏஐஎஸ் கருவியின் மூலம் சில நொடிகளில் தெரிந்துக் கொண்ட கடற்படையினர் அடுத்த சில நிமிடங்களில் தாக்குதலை ஆரம்பித்து, கோர்த்தாவின் கார்கோ கப்பலை தங்களுடைய கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்தார்கள்.

***********

அதே நேரம் மகல்பாட்னாவிலிருந்து சுஜித் சிங்கை அழைத்துக் கொண்டு ராகேஷ் சுக்லாவின் கோட்டையை நோக்கி புறப்பட்ட கார் பாதி வழியிலேயே தாக்குதலுக்கு உள்ளானது. காரிலிருந்தவர்கள் எதிர்தாக்குதல் நடத்த வேண்டும் என்று யோசிப்பதற்குள், அவர்களுடைய கார் சல்லடையாக துளைக்கப்பட்டு இரத்தத்தில் குளித்திருந்தது. சில நிமிடங்கள் காத்திருந்து மறைவிடத்திலிருந்து வெளியே வந்த கூலி கொலையாளிகள், தாக்கப்பட்ட காரில் வந்த யாரும் உயிரோடு மிஞ்சவில்லை என்பதை உறுதி செய்துக் கொண்டு பகவானுக்கு தகவல் கொடுத்தார்கள்.

சுஜித் கோர்த்தாவின் ஆள் என்பதை தாண்டி அவன் மீது தனிப்பட்ட முறையிலும் கடுமையான கோபத்தில் இருந்தார் பகவான். அர்ஜுனை முடிக்க வேண்டும் என்பதற்காகத்தான் சுமனை கடத்தி சுஜித்துடன் டீல் பேசினார். அவனும் ஒப்புக்கொண்டு துப்புக் கொடுத்தான். பிறகு எப்படி அது நடந்தது? அர்ஜுனை காப்பாற்ற அந்த ஹோட்டலில் இன்னொரு டீம் எப்படி திடீரென்று முளைத்தது? அவருடைய திறமையான ஆட்கள் எப்படி பலியானார்கள்? சுஜித் டபுள் கேம் ஆடியிருக்கிறான். தன்னை ஏமாற்றி காதலியை காப்பாற்றிக் கொண்டு, அந்த பக்கம் அர்ஜூனுக்கும் தகவல் கொடுத்திருக்கிறான் என்பது தான் அவருடைய எண்ணம். அந்த எண்ணத்தில் எழுந்த கோபம் தான் இந்த தாக்குதல்.

‘எதிரியை கூட விட்டுவைக்கலாம். துரோகியை விட முடியுமா?’ ஜெகன் நாயக்கின் படுகொலையால் அவருக்குள் எழுந்திருந்த அகங்கார பேய்க்கு கிடைத்த சின்ன தீனி தான் சுஜித்தின் உயிர். அவருக்கு இன்னும் வேண்டும்! நிறைய வேண்டும்!

‘அடுத்த இலக்கில் கவனம் செலுத்து!’ பசித்த புலியின் உறுமலாக ஒலித்தது அவர் குரல்.

*************

குண்டடிப்பட்டு சிகிச்சையில் இருந்த மிருதுளாவை மருத்துவர் பரிசோதித்துக் கொண்டிருந்தார். கூடவே அர்ஜுனும் இருந்தான்.

“நயன்ட்டி பர்சன்ட் காயம் ஆறிடுச்சு. இனி சப்போர்ட் இல்லாம நடக்க ட்ரை பண்ணுங்க. முடியலைன்னா அடுத்த வாரத்துல ஸ்கேன் பண்ணி பார்த்துடலாம்” என்றார்.

“இப்போவே எழுந்து நட” என்று அர்ஜுன் அவளை ஊக்கப்படுத்த, அலைபேசி அவனை அழைத்தது. எடுத்து பேசியவனின் முகம் சட்டென்று மாறியது.

ஏதோ சொல்ல வாயெடுத்த மருத்துவரை கையை உயர்த்தி தடுத்தவனின் முகத்திலிருந்த தீவிரம் அந்த அறையில் இருந்த மற்ற இருவரையுமே அச்சம் கொள்ளச் செய்தது.

அந்த பக்கத்திலிருந்து வந்த செய்தியை எந்த இடையீடும் இல்லாமல் உள்வாங்கிக் கொண்டு அழைப்பை துண்டித்துவிட்டு மெத்தையில் அமர்ந்தான்.

“சார்” மெல்ல அழைத்த மருத்துவரை,

“ஐ’ல் கால் யூ லேட்டர். ப்ளீஸ் லீவ் நௌ” என்று கத்தரித்து பேசினான். அவர் பதில் பேசாமல் வெளியேறிவிட்டார். மிருதுளாவின் மென்கரம் அவன் தோளில் படிந்தது.

“எனிதிங் சீரியஸ்?” பீதியுடன் கேட்டாள். அடுத்த நொடி தரை தளத்திலிருந்து எழுந்த ‘ஓ’ என்ற அலறல் ஒலி அந்த கட்டிடத்தையே அதிரச்செய்தது.

************

கத்தி கதறினாள் சுமன். தரையில் விழுந்த மீனாக துள்ளி துடித்தாள். தாங்கிப் பிடிக்க முயன்றவர்களை எல்லாம் உதறித் தள்ளினாள். மேடிட்ட வயிறோடு தலைவிரி கோலமாக நடுவீட்டில் ஆக்ரோஷமாக நின்று கோர்த்தாவை சபித்தாள், அர்ஜுன் அழிந்து போவான் என்றாள். கொந்தளிக்கும் கோபத்தில் அவள் நா குழறியது, முகம் நெருப்பாய் தகதகத்தது, கண்களில் கண்ணீர் இரத்தமாக வடிந்தது.

சத்தம் கேட்டு அர்ஜுன் கீழே இறங்கி வர, அவனோடு படிக்கட்டை பிடித்துக் கொண்டே மிருதுளாவும் வந்தாள். அவர்களை பார்த்ததும் வெறிப்பிடித்தவள் போல் பாய்ந்தாள் சுமன். அவளை மூன்று பேர் சேர்ந்து வலுவாக பிடித்துக் கொண்டார்கள். துள்ளி திமிறியவள் முடியாமல் போனதும், “கொன்னுட்டியேடா” என்று கத்தினாள்.

அர்ஜுன் இறுகிப் போய் பாதி படிக்கட்டிலேயே நின்று விட்டான். மிருதுளாவும் மிரட்சியுடன் சுமனை பார்த்தாள். என்ன விஷயம் என்று உறுதியாக தெரியவில்லை என்றாலும், சுஜித்திற்கு ஏதோ ஆகிவிட்டது என்பது மட்டும் புரிந்து போக அடிவயிறெல்லாம் தடதடத்தது. தோழியை நெருங்கக் கூட பயந்தவளாக உறைந்துப் போய் நின்றாள்.

“எவ்வளவு அடி, எவ்வளவு சித்திரவதை, என் கண்ணு முன்னாலேயே! உயிரைக் கூட விட்டு வைக்காம இப்படி என்னை கதற வச்சுட்டியே! என் வாழ்க்கையை அழிச்சுட்டியே! நல்லா இருக்க மாட்ட அர்ஜுன். நீ நல்லாவே இருக்க மாட்ட!” வயிறு காந்த, நெஞ்செல்லாம் தீ பற்றிக் கொண்டது போல் எரிய, அபலையாய் சுமன் இட்ட ஓலம் மிருதுளாவின் நெஞ்சை உலுக்கியது.

பாதுகாவலர்கள் சுமனை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று அறைக்குள் தள்ளி கதவை அடைக்க முயன்றார்கள். அவர்களுக்கு ஒத்துழைக்க மறுத்து கத்தியபடி எதிர் திசையில் இழுத்து அவர்களோடு போராடினாள் சுமன்.

“ஏய்!” என்று கத்தியபடி எங்கிருந்தோ ஓடிவந்த மாலிக் சுமனை பிடித்திருந்த பாதுகாவலர்களை தள்ளி விட்டுவிட்டு அவளை தன் பிடியில் கொண்டுவந்தபடி, “அவளோட மனநிலை புரியலையா உனக்கு?” என்று அர்ஜுனை முறைத்தான்.

அதற்குள் தன்னுடைய கோபம், ஆத்திரம், அகங்காரம் அனைத்தையும் மாலிக்கின் மீது காட்ட துவங்கியிருந்தாள் சுமன். அதனை பொறுத்துக் கொண்ட மாலிக், அவளுடைய வலியை தனதாக ஏற்றுக்கொள்ள தயங்கவில்லை. சற்று நேரத்திலேயே அவளுடைய ஆக்ரோஷமும், கோபமும் அழுகையாக மாறியது. தாய் பசுவை பிரிந்த கன்று போல ‘ஓ’ வென்று கதறியவளை தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டான் மாலிக். அது விரசமில்லாத, அன்பை மட்டுமே வெளிப்படுத்தும் அணைப்பு.

எந்த உணர்வும் இல்லாமல் கற்சிலை போல் அவர்களை பார்த்துக் கொண்டு நின்ற அர்ஜுன் கீழே இறங்க எத்தனித்தான். சம்பவ இடத்தில் என்ன நடந்தது என்பதை விசாரிக்க வேண்டிய கடமை அவனை அழைத்தது. ஆனால் மிருதுளா அவன் கையைப் பிடித்து தடுக்க, அவன் திரும்பிப் பார்த்தான். கலவரம் சூழ்ந்த முகத்துடன் அவனை ஏறிட்டவள், “நீங்களா?” என்றாள்.

கலக்கமும் தவிப்புமாக வெளிப்பட்ட அந்த ஒற்றை வார்த்தை அவன் மனதில் சுருக்கென்று தைத்தது. ஓரிரு நொடிகள் அவளை இமைக்காமல் பார்த்தவன் மறுப்பாக தலையசைத்துவிட்டு திரும்பினான்.

“பின்ன எப்படி?” அவளிடமிருந்து அவசரமாக வெளிப்பட்டது அடுத்த கேள்வி.

‘உன் அப்பாதான் என்று நுனி நாக்கில் இருந்த வார்த்தைகளை கொட்டிவிடலாம். ஆனால் அவள் தாங்குவாளா?’ “ஸீ யூ லேட்டர்” முணுமுணுத்துவிட்டு படியிறங்கினான்.

*****************

தான் கட்டியெழுப்பிய சாம்ராஜ்யம் தன் கண் எதிரிலேயே சரிந்துக் கொண்டிருக்கும் கசப்பான உண்மை ராகேஷ் சுக்லாவின் நம்பிக்கையை அசைத்துப் பார்த்தது. சோதனைகளை கடக்காமல் அவர் இந்த நிலையை அடைந்துவிடவில்லை. ஆனால் இன்று வந்திருப்பது சோதனை அல்ல. அடிப்படையே ஆட்டம் கண்டுவிட்டது. ஒருபக்கம் கோர்த்தாவின் பிரதான கார்கோ கப்பல் பிடிபட்டுவிட்டது. இன்னொரு பக்கம் சுஜித்தை தொடர்ந்து இரண்டு நாள் இடைவெளியில், அஞ்சனி லால் அவருடைய வீட்டில் படுக்கையிலேயே கொல்லப்பட்டுக் கிடந்தார். விபரீதம் அதோடு நின்றுவிடவில்லை. அடுத்து வந்த நாட்களில் கோர்த்தாவின் முக்கிய பிரமுகர்கள் குறிவைத்து படுகொலை செய்யப்பட்டார்கள். அனைத்தும் ப்ரொஃபஷனல் டச். நன்கு திட்டமிட்டு சிந்தாமல் சிதறாமல் முடிக்கப்பட்ட ஆபரேஷன்ஸ். என்ன நடக்கிறது என்று அவர் யோசிப்பதற்குள் தளபதிகள், ஆலோசகர்கள் பலரும் தட்டி வீழ்த்தப்பட்டார்கள். நிலைகுலைந்து போனார் சுக்லா.

மிக நுட்பமாக தகவல்கள் பரிமாறப்படவில்லை என்றால் இத்தனை பலமாக கோர்த்தாவை தாக்குவது என்பது இயலாத காரியம். கூடவே இருந்தவர்கள் கூட அறியாத வண்ணம், அன்று இரவு இருளில் கரைந்த நிழல் போல தடம் தெரியாமல் மகல்பாட்னாவிற்கு பயணம் செய்து அதிகாலையில் அர்ஜுனை சந்தித்தார்.

அது அர்ஜுனின் அலுவலக அறை. உள்ளே ராகேஷ் சுக்லா அமர்ந்திருக்க அவருக்கு எதிரில் நின்றுக் கொண்டிருந்தான் அர்ஜுன். காற்றில் ஆக்சிஜனின் அளவு குறைந்துக் கொண்டிருந்தால் எப்படி இருக்கும். அப்படித்தான் இருந்தது அந்த அறையின் சூழ்நிலை. வெகு இறுக்கமான சூழ்நிலை. சுக்லா அர்ஜுனின் கண்களுக்குள் கூர்ந்து பார்த்தார். அவனுக்குள் ஒளிந்திருக்கும் ரகசியங்களை படித்துவிடுவது போன்ற பார்வை. அர்ஜுன் அவருடைய பார்வையை தயக்கமின்றி எதிர்கொண்டான்.

“ஷிப் மாட்டிடுச்சு. உள்ள இருந்த ஆளுங்க நூறு பேருக்கும் மேல அரெஸ்ட் ஆகியிருக்காங்க. மொத்த சரக்கும் இப்போ கவர்மெண்ட் கையில. எப்படி நடந்தது? ஏதாவது ஐடியா இருக்கா?” உள்ளடங்கிய குரலில் கேட்டார்.

அவர்களுடைய வியாபார தடத்தைப் பற்றியோ, அந்தக் கப்பலைப் பற்றியோ இத்தனை ஆண்டுகளில் இப்போதுதான் அர்ஜுனுக்கே தெரியும். அரசாங்கத்திற்கு எப்படி தெரிந்திருக்க முடியும்! புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட வியாபார தலைவர் மூலம் தான் விஷயம் லீக் ஆகியிருக்க முடியும். அதைத்தான் அவரிடம் அர்ஜுனும் கூறினான். ஆனால் அதிலும் ஒரு ஓட்டை இருந்தது. சமீபத்தில் கொல்லப்பட்ட கோர்த்தாவின் முக்கிய பிரமுகர்களின் அந்த நபரும் ஒருவர். தகவல் கொடுப்பவர்களையே கொலை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அப்படியென்றால் அவர் நேரடியாக துரோகம் செய்யவில்லை. ஆனால் துரோகம் அவர் மூலமாகத்தான் நடந்திருக்கிறது. அந்த விளக்கத்தை சுக்லாவே கூறினார்.

“பிசினஸ் ஹெட் போன் டேப் ஆகுது.”

“எப்படி?

“அதைத்தான் நான் கேட்கறேன் எப்படி?” அவருடைய பார்வை மாறியது.

“வாட் டூ யூ மீன்?

“அவரு தான் பிசினஸ் ஹெட் அப்படிங்கற விஷயம் எப்படி வெளிய போச்சு. கரெக்ட்டா அவரோட போனை எப்படி டார்கெட் பண்ணினாங்க?”

“அப்படின்னா எலி ரொம்ப நெருங்கின வட்டத்துல இருக்கு” அர்ஜுனின் முகம் தீவிரமானது.

“எஸ்.. டாப் லெவல்ல க்ளீனப் ப்ராஸஸ் பண்ணனும்.

“ம்ம்ம்”

“அதுக்கு முன்னாடி இன்னொரு வேலை இருக்கு.”

“என்ன?”

“வேர் இஸ் ஷி?”

“யாரு?”

“நா யாரை கேட்கறேன்னு உனக்கு தெரியும்.”

“மிருதுளாவையா?”

அவர் வாய் திறக்கவில்லை. ஆனால் அவருடைய பார்வை பதில் சொன்னது.

“நோ.. மிருதுளா இதுல சம்மந்தப்படல” திட்டவட்டமாக மறுத்தான்.

“நூத்துக்கணக்கான எவிடன்ஸ், சாலிட் எவிடன்ஸ், எனக்கு எதிரா மாட்டியிருக்கு. இது சாதாரண விஷயம் இல்ல. யாரையும் விடமாட்டேன். யூ திங்க் யு கேன் ஸ்டாப் மீ?” கடுகடுத்தார்.

“ஐம் சாரி. நா ஏற்கனவே சொல்லிட்டேன். மிருதுளாவுக்கும் இந்த குழப்பத்துக்கும் எந்த சம்மந்தமும் இல்ல. நீங்க அவளை விசாரிக்க முடியாது” பதட்டமோ, தயக்கமோ சிறிதும் இல்லாமல் வெகு நிதானமாக கூறினான்.

ராகேஷ் சுக்லாவின் முகம் மாறியது. அவர் உள்ளத்தின் கொதிப்பு முகத்தை கோரமாக மாற்றியது.

“ஆர்த்தியை நியாபகம் இருக்கா உனக்கு? உனக்காக உயிரை விட்டவ. என் பொண்ணு. யூ ஸ்டில் ரிமெம்பர் ஹர்?” வார்த்தையால் குத்தினார்.

அவருடைய வார்த்தைகள் அர்ஜுனை பாதிக்கவில்லை. அல்லது பாதிப்பை காட்டிக்கொள்ளும் அளவிற்கு அவன் பலகீனமாக இல்லை. நிமிர்வாகவே நின்றான்.

“ஆர்த்தியோட உயிர் பலியானதுக்கு காரணம் நீங்க சேர்த்து வச்ச பகை, நா இல்ல. அப்பாவோட பகைக்கு பலியான கடைசி பொண்ணு ஆர்த்தியாவே இருக்கட்டும். மிருதுளாவை அந்த வரிசையில சேர விடமாட்டேன்” உறுதியாகக் கூறினான்.

அந்த நேரடி மோதலை சற்றும் எதிர்பார்க்காத சுக்லா, அர்ஜுனை வெறுப்புடன் பார்த்தார். “துரோகி” வன்மத்துடன் வார்த்தையை உமிழ்ந்தவர் சட்டென்று அந்த அறையிலிருந்து வெளியேறினார்.

அவர் அங்கிருந்து செல்லப் போகிறார் என்று எண்ணி அர்ஜுன் பெருமூச்சுடன் கண்களை மூடித் திறக்க, அவரோ சட்டென்று படியேறி மாடிக்கு விரைந்தார்.

அதை சற்றும் எதிர்பார்க்காத அர்ஜுன் அவரை தடுக்க முயன்றபடி அவர் பின்னால் ஓடினான். கண்மூடி திறக்கும் நேரம் தான். அதற்குள் அவர் அவனுடைய அறைக்குள் நுழைய, கூடவே அர்ஜுனும் உள்ளே நுழைந்தான்.

மின்னல் வேகத்தில் யாரோ உள்ளே நுழைவதை உணர்ந்து விருட்டென்று கட்டிலிலிருந்து எழுந்த மிருதுளா, அங்கே கடும் கோபத்துடன் நின்ற ராகேஷ் சுக்லாவை கண்டதும் மிரண்டு போனாள்.

மனிதத்தின் சாயல் துளியும் இல்லாத அரக்கனாக மாறியிருந்த ராகேஷ் சுக்லா இரத்த தாகத்துடன் அவளைப் பார்த்தார். அவர் கையிலிருந்த துப்பாக்கி அவள் நெற்றியை குறிப்பார்த்திருந்தது.

“வெயிட்! அவசரப்படாதீங்க, பேசிக்கலாம்” அவர் முதுகுக்கு பின்னால் நின்றுக் கொண்டிருந்த அர்ஜுனின் இதயம் நின்று துடித்தது, முகமெல்லாம் சூடாகி சிவந்துவிட்டது, உடல் முழுவதும் வியர்வையில் குளித்துவிட்டது.

அடர்ந்த மீசைக்கு கீழே தடித்திருந்த அவர் உதடுகள் அலட்சியமாக நெளிந்தன. “இவளை.. இந்த டாஷை உன்னால என்கிட்டேருந்து காப்பாத்த முடியும்னு நினைக்கிற?” நக்கலாகக் கேட்டார்.

அடுத்த நொடியே தோட்டா பாய்ந்தது. அவர் பின்னந்தலையில் இறங்கி நெற்றியை துளைத்துக் கொண்டு வெளியே தெறித்து விழுந்தது. மாமிச மலை போல அவர் சடலமாக மண்ணில் சரிந்தார்.

“சாரி மிஸ்டர் சுக்லா” மெல்ல முணுமுணுத்தான் அர்ஜுன்.
 

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
628
Reaction score
799
Points
93
அத்தியாயம் 72

அதிர்ச்சி என்று ஒற்றை வார்த்தையில் அவளுடைய உணர்வுகளை சொல்லிவிட முடியாது. தற்போது அவள் உயிரோடு இருக்கிறாள் என்பதை நம்புவதற்கே அவள் போராடிக் கொண்டிருந்தாள். இருட்டிக் கொண்டு வரும் கண்களை மீறி, அடங்க மறுத்து எகிறிக் குதிக்கும் இதயத்துடிப்பை தாண்டி, துணி போல் துவண்டு கீழே விழ விழையும் உடலோடு போராடி, தான் உயிரோடு தான் இருக்கிறோம் என்னும் உண்மையை மூளைக்குள் மெல்ல மெல்ல ஏற்றிக் கொண்டிருந்தாள் மிருதுளா.

அவளிடம் நெருங்கி அவளை தாங்கிப் பிடித்தான் அர்ஜுன். “ஆர் யூ ஓகே?” அவள் கன்னத்தை தட்டினான். பதில் சொல்ல விரும்பினாள், ஆனால் உதடுகளை பிரிக்க முடியவில்லை. கண்கள் அவன் முகத்தில் தான் படிந்திருந்தது. ஆனால் பார்வை எங்கோ தூரத்தில்.. புலம் தெரியாத காரிருளுக்குள் மூழ்கிக் கொண்டிருந்தது.

“மிருது.. மிருது..” பதட்டத்துடன் அவள் கன்னத்தை இன்னும் வேகமாக தட்டினான் அர்ஜுன். கிணற்றுக்குள் ஒலிப்பது போன்ற அந்தக் குரலை கேட்டுக் கொண்டே முற்றிலும் நினைவிழந்தாள் மிருதுளா. அவளை தூக்கி படுக்கையில் கிடத்திவிட்டு, தரையில் கிடக்கும் சுக்லாவை சற்று நேரம் வெறித்துப் பார்த்தான். பிறகு எழுந்து உள்ளே சென்று எதையோ கொண்டு வந்தான். அது ஒரு பை. பிணத்தை மூட்டை கட்டும் பாடி பேக். சுக்லாவை அலுங்காமல் குலுங்காமல் பேக் செய்தான். செய்துவிட்டு, அலைபேசியை எடுத்து ப்ளூ ஸ்டாருக்கு அழைத்தான்.

“க்ளவ்ட் நம்பர் 11, லேக் ரோட், ஃபைவ் ஏஎம், டுடே” என்றான்.

இதில் ‘க்ளவ்ட் நம்பர் 11’ என்பது ஆபரேஷன் பெயர். ‘க்ளவ்ட்’ என்பது மேகம். உருவம் இருப்பது போல தான் தோன்றும். ஆனால் பிடிபடாது. அதுதான் இந்த ஆபரேஷன். மறைந்த ஒருவருக்கு மாயையாய் உருவம் கொடுப்பது. இந்த ஆபரேஷன் ஏற்கனவே எங்கோ எக்ஸிக்யூட் செய்யப்பட்டதுதான். அதை மீண்டும் இப்போது இங்கே இம்ப்ளிமென்ட் செய்ய வேண்டும் என்பதுதான் அவனுடைய குறியீடு.

‘லேக் ரோட்’: இடம். ‘ஃபைவ் ஏஎம்’” அதிகாலை ஐந்து மணி. ‘டுடே’: நாள் இன்று.

அவன் கொடுத்த சுருக்கமான செய்தியை புரிந்துக் கொண்டவர், “டார்கெட்?” என்றார். ‘யாருக்கு உருவம் கொடுக்க வேண்டும்?’ என்பதுதான் அவருடைய கேள்வி.

“ராகேஷ் சுக்லா” உள்ளடங்கிய குரலில் கூறினான் அர்ஜுன்.

“வாட்!” அதிர்ச்சியில் அவர் குரல் இருமடங்காக உயர்ந்தது.

“யு ஹியர்ட் மீ”

“யு ஹவ் கான் கிரேஸி” என்கிற வார்த்தைகள் அதிருப்தியுடன் ஒலித்தன.

“அவாய்ட் பண்ண முடியாத சூழ்நிலை” என்றான் அர்ஜுன்.

“அந்த பொண்ணுக்காகவா?” சரியாகக் கேட்டார்.

அர்ஜுன் பதில் சொல்லவில்லை. இப்போது அவர் கோபத்துடன் கத்தினார். “நீ என்ன செஞ்சிருக்கனு தெரியுதா உனக்கு? சாகப் போற நீ.”

“பிரச்சனையை நேரடியா ஃபேஸ் பண்ணறவன் நான். பதட்டப்பட வேண்டிய நிலை எனக்கா இல்ல உங்களுக்கா?” அழுத்தமாகக் கேட்டான்.

அவர் ஓரிரு நிமிடங்கள் எதுவும் பேசவில்லை. பிறகு, “ஐ’ல் டூ மை பெஸ்ட்” என்று கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்தார்.

தான் சொன்ன காரியத்தை அவர் சரியாக செய்து முடித்துவிடுவார் என்கிற பரிபூரண நம்பிக்கையுடன் மணியைப் பார்த்தான். மூன்று என்றது கடிகாரம். மிருதுளாவை பார்த்தான். அசைவில்லாமல் கிடந்தாள். அவளை தூக்கிச் சென்று அவளுடைய அறையில் படுக்க வைத்து அறையை பூட்டிவிட்டு கீழே சென்றான். காவலுக்காக ஆட்கள் வீட்டுக்கு வெளியே உலாத்திக் கொண்டிருந்தார்கள். உள்ளே ஒருவன் மட்டும் தான் இருந்தான். அவனுக்கும் வேலை சொல்லி வெளியே அனுப்பிவிட்டு, சர்வைவல் கேமிராவின் கண்களை ஏமாற்றிவிட்டு, சுக்லாவின் பாடியை பேஸ்மென்ட் வழியாக கராஜிற்கு எடுத்துச் சென்று சுக்லாவின் கார் ட்ரங்கில் அடைத்தான். நேரம் நான்கு என்றது அவன் கைக்கடிகாரம். சத்தம் எழுப்பாமல் மேலே வந்தான். அந்த பெரிய ஹாலில் அவனைத் தவிர வேறு யாரும் இல்லை. சாதாரணமாக அவனுடைய அலுவலறையில் சென்று அமர்ந்தான்.

நேரம் நான்கு முப்பது. அர்ஜுன் சொன்ன வேலையை முடித்துவிட்டு அவனிடம் ரிப்போர்ட் செய்ய வந்தான் அந்தக் காவலன். அவன் கையில் சுக்லாவின் கார் சாவியைக் கொடுத்தான் அர்ஜுன்.

“லேக் ரோட் போ. நியூஸ் வரும்” என்றான். மறு பேச்சில்லாமல் சாவியை வாங்கிக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தான் அவன்.

சரியாக ஐந்து மணிக்கு லேக் ரோடில் சுக்லாவின் காரை துப்பாக்கி முனையில் சிலர் சுற்றி வளைத்தார்கள். காரை ஒட்டிக்கொண்டு வந்தவன் திகைத்தான். அவன் எதிர்வினையாற்றுவதற்குள் அவனை மடக்கிப் பிடித்து வேறு ஒரு காருக்குள் தள்ளியவர்கள், ட்ரங்கில் இருந்த சுக்லாவின் பாடி பேகையும் தங்களுடைய காருக்கு மாற்றினார்கள்.

அடுத்த சில மணி நேரங்களில், ‘அர்ஜுனின் வீட்டிலிருந்து புறப்பட்டு லேக் ரோடில் பயணம் செய்த சுக்லா அடையாளம் தெரியாதவர்களால் கடத்தப்பட்டார்’ என்னும் செய்தி ஊடகங்களில் கசிந்தது. அந்த அடையாளம் தெரியாதவர்கள் பகவானின் ஆட்கள் தான் என்று கோர்த்தா அழுத்தமாக நம்பியது.

அந்த நம்பிக்கையின் காரணமாக அடுத்து வந்த நாட்களில் பகவானின் ஆட்கள் விரட்டி விரட்டி வேட்டையாடப்பட்டார்கள். பதிலுக்கு அவர்களும் திருப்பிக் கொடுத்தார்கள். மிகப்பெரிய கேங் வார் அரங்கேற துவங்கியது. பொது மக்களுக்கு பிரச்சனை வராதவரை வேடிக்கை மட்டுமே பார்ப்பது என்கிற முடிவோடு அமைதியாக இருந்தது அரசு.

ஒரு வாரம் இரு பக்கமும் இரத்தம் ஆறாக ஓடியது. தடுப்பதற்கு யாரும் இல்லை. மறைந்து மறைந்து அடித்துக் கொண்டிருந்த பகவான் வலுவிழந்து போனார். “சுக்லாவை தாங்கள் கடத்தவே இல்லை” என்று கூறி பிரபல சாமியார் மூலம் சமாதான தூது அனுப்பினார்.

தூது வந்தவனையே போட்டுத்தள்ளிவிடும் வெறியோடு கோர்த்தா இருந்த போதிலும், சுக்லாவை பத்திரமாக மீட்க வேண்டும் என்கிற அர்ஜுனின் ஆலோசனையை ஏற்று பேச்சுவார்த்தைக்கு உடன்பட்டார்கள்.

கோர்த்தாவின் வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு மிகப் பெரிய ரகசிய மீட்டிங் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் கோர்த்தாவை சேர்ந்த முக்கிய புள்ளிகள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று பெயர் பட்டியல் தயார் செய்யப்பட்டது. அதே போல் பகவான் பக்கத்திலிருந்தும் யார் யாரெல்லாம் கலந்து கொள்ள வேண்டும் என்கிற பட்டியலும் தயார் செய்யப்பட்டது.

ஆரம்பத்தில் கோர்த்தாவை சேர்ந்த அனைவருக்குமே அதில் தயக்கம் இருந்தது. முக்கியமானவர்கள் அனைவரும் எதிரியை ஒரே இடத்தில் சந்திப்பதில் பல நடைமுறை சிக்கல்கள் இருப்பதை எடுத்துக் கூறி மறுத்தார்கள். ஆனால் சுக்லா என்னும் சிங்கம் சிறைப்பட்டிருப்பதை நினைவுப் படுத்தினான் அர்ஜுன். அனைவரும் சங்கடத்துடன் மௌனமானார்கள்.

அவனை பொறுத்தவரை பகவானின் ஆட்கள் அனைவரையும் ஒரே இடத்தில் ஒன்று திரட்ட வேண்டும். கோர்த்தாவின் ஆட்கள் ஒன்று கூடினால் மட்டும் தான் அவர்களும் நம்பிக்கையுடன் வருவார்கள். அவர்களை ஒட்டுமொத்தமாக ஒழித்துக்கட்ட அவனுக்கு இதைவிட பெரிய வாய்ப்பு ஒருபோதும் கிட்டாது. ரிஸ்க் தான், ஆனால் அவனுடைய வாழ்க்கையே ரிஸ்க் தானே!

*******************

பொன்மாலை நேரம்.. மிருதுளா தோட்டத்தில் நடந்துக் கொண்டிருந்தாள். இப்போது அவளுடைய காயம் நன்றாகவே ஆறிவிட்டது. அவளுடைய நடை கூட இயல்புக்கு திரும்பிவிட்டது. என்ன ஒன்று முன்பு போல் வேகமாக நடக்கவோ, ஓடவோ முடியாது. திரும்பும் போது கூட கவனமாகத்தான் திரும்ப வேண்டும். மற்றபடி எந்த பிரச்னையும் இல்லை. பெருமூச்சுடன் தோட்டத்தில் கிடந்த பெஞ்சில் அமர்ந்தாள்.

கிட்டத்தட்ட இருபது நாள் ஆகிவிட்டது அந்த சம்பவம் நடந்து. கனவோ என்று கூட பலமுறை யோசித்திருக்கிறாள். அவளை பாதுகாக்க அர்ஜுன் எந்த எல்லைக்கும் செல்வான் என்று அவளுக்கு தெரியும். ஆனால் தன்னுடைய தலைவனையே கொலை செய்யத் துணிவான் என்பது அவளுடைய கற்பனைக்கும் அப்பாற்பட்டது. அதை கூட ஏதோ உணர்ச்சிவசப்பட்டோ அல்லது அவள் மீது உள்ள காதலினாலோ செய்துவிட்டான் என்று வைத்துக்கொள்ளலாம். ஆனால் அதற்கு பிறகு அவனுடைய செயல்பாடுகள்! அதை எந்த கணக்கில் சேர்ப்பது! அவன் என்ன நினைக்கிறானோ அதை அவனை சுற்றி இருக்கும் அனைவரும் நம்புகிறார்கள்! அவன் நம்ப வைக்கிறான்! இவன் எப்பேர்பட்டவன்!

‘டேஞ்சரஸ் மேன்!’ உள்ளுக்குள் எச்சரிக்கை மணி அடித்தது. அதே நேரம் அவளை நோக்கி அந்த டேஞ்சரஸ் மேன் வந்துக்கொண்டிருந்தான். அவனை பார்த்ததும் காற்றில் களைந்த மேகம் போல் அவளுடைய அனைத்து சிந்தனைகளும் மறைந்து போய்விட, மலர்ந்த முகத்துடன் அவனை எதிர்நோக்கினாள்.

தன்னை கண்டதும் மலரும் அவள் முகத்தை ஓரக்கண்ணால் உள்வாங்கி மனதிற்குள் சேமித்துக் கொண்டவன், சின்ன புன்னகையுடன் அவளுக்கு அருகில் வந்து அமர்ந்தான். உதட்டோரம் ஒளிந்திருந்த அந்த புன்னகை அவன் கண்களை எட்டவில்லை என்பதை அவள் கவனிக்க தவறவில்லை.

“ஹௌ வாஸ் த டே?” தலையை லேசாக சரித்து பார்வையை அவள் பக்கம் திருப்பிக் கேட்டான்.

“மிஸ்ட் யு” அவன் கையை சுற்றி வளைத்து தோள் மீது தலை சாய்த்துக் கொண்டாள். அவள் உச்சந்தலையில் முத்தமிட்டான் அர்ஜுன்.

“ஆர் யு ஓகே?” நலிந்த குரலில் கேட்டாள்.

“ம்ம்ம்..”

“இல்ல.. எனக்கு வித்தியாசம் தெரியுது. கவலை படற மாதிரி ஏதாவது..” அவள் முடிப்பதற்குள் நன்றாக திரும்பி அமர்ந்து அவள் கண்களுக்குள் பார்த்தான். மிருதுளாவின் பேச்சு தடைபட்டது.

“நாளைக்கு எனக்கு ஒரு மீட்டிங் இருக்கு. ரொம்ப முக்கியமான மீட்டிங். என்ன ஆகும்னு சொல்ல முடியாது.”

“என்ன ஆகும்னு சொல்ல முடியாதா! அப்படின்னா? வாட் டூ யு மீன் பை தட்?” அவனை பேச விடாமல் படபடத்தாள்.

“லிசன்.. ஷ்ஷ்ஷ்.. காம் டௌன் மிருது பேபி. என்ன நம்புறேல்ல?”

கலங்கிய கண்களுடன் மேலும் கீழும் தலையசைத்தாள் மிருதுளா.

“இங்கிருந்து நீ கிளம்பனும்.”

“நோ! ஐ காண்ட் லீவ் யு” அவன் கைகளை இறுக்கமாக பிடித்துக் கொண்டாள்.

“யு ஹேவ் டு.”

“ப்ளீஸ்” உதடு துடிக்க அவன் முகத்தை பரிதாபமாக பார்த்தாள். அவள் முகத்தை கைகளில் ஏந்தி இதழோடு இதழ் ஒற்றியெடுத்து, “உனக்காக வருவேன்.. உன்ன தேடி வருவேன்” என்றான்.

மிருதுளா மறுப்பாக தலையசைத்தாள். “பயமா இருக்கு.. ஏதோ தப்பா தோணுது. ப்ளீஸ், எங்கேயும் போகாதீங்க. என்னையும் அனுப்பாதீங்க” கெஞ்சினாள்.

அவன் பதில் பேசாமல் அவள் கையைப் பிடித்து உள்ளே அழைத்துச் சென்றான். அவளுடைய அலைபேசி மற்றும் டிராக்கிங் டிவைஸ் அனைத்தையும் செயலிழக்க செய்துவிட்டு புதிதாக ஒரு அலைபேசியை அவளிடம் கொடுத்தான்.

“பத்திரமா வச்சுக்கோ. இந்த போனுக்கு ரெண்டே நம்பர்லேருந்துதான் கால் வர முடியும். ஒன்னு நான் பண்ணுவேன். இன்னொன்னு ப்ளூ ஸ்டார். நியாபகம் இருக்கா? கொஞ்ச நாள் முன்னாடி சொல்லியிருந்தேன்.”

“ம்ம்ம்..”

“அவரை நீ முழுசா நம்பலாம். அவர் என்ன சொன்னாலும் கேட்கலாம்.”

“அர்ஜுன் ப்ளீஸ்.”

“பீ பிரேவ். பீ சேஃப். ஐ’ல் கம் ஃபார் யு.”

அவன் சொல்ல சொல்ல மிருதுளா தளர்ந்து அமர்ந்து தேம்பி அழுதாள். அர்ஜுன் இறுகிப்போனான். அவள் அழுது ஓயும் வரை அழுத்தமாக அவளைப் பார்த்துக் கொண்டே நின்றவன், அவளுடைய தேம்பல் குறைந்ததும், அவளை எழுப்பி முகம் கழுவ வைத்தான்.

இரவு உணவை அறைக்கு வரவழைத்து அவளை சாப்பிட வைத்தான். கூடவே அவனும் சேர்ந்து உண்டான். அப்போதுதான் மிருதுளா அந்தக் கேள்வியை கேட்டாள்.

“நாளைக்கு நீங்க போற மீட்டிங்ல என்னோட பேரண்ட்ஸ் ஏதாவது விதத்துல சம்மந்தப்பட்டிருக்காங்களா?” கவலையுடன் கேட்டாள்.

ஒரு கணம் அர்ஜுனின் அசைவுகள் உறைந்து போயின. பின் சுதாரித்துக் கொண்டு, “நோ” என்றான்.

அவள் மனம் சமாதானம் ஆகவில்லை. உள்ளுணர்வு எதிர்மறையாக எதையோ உணர்த்திக் கொண்டே இருந்தது. சரியாக புரிந்துகொள்ள முடியவில்லை. கனத்த மனதுடன் எழுந்து கைகழுவிவிட்டு வந்தாள்.

“ரெடி?”

“இப்பவே கிளம்பணுமா?”

எதுவும் சொல்ல தோன்றாமல் ஓரிரு நிமிடங்கள் அவளை ஊன்றிப் பார்த்தவன், “இதே மாதிரி எப்பவும் இருப்பியா?” என்றான்.

அவள் புருவம் சுருங்கியது. “சரி விடு” தலையை உலுக்கிக் கொண்டு, “ட்ரைவர் வெயிட் பண்ணறான், கம்” என்று முன்னோக்கி நடந்தான். சட்டென்று பாய்ந்து அவன் முதுகை கட்டிக் கொண்டாள் மிருதுளா. மூச்சைப் பிடித்துக் கொண்டு ஒருகணம் இறுகி நின்றவன், மறுகணமே முரட்டுத்தனமாக அவள் கையைப் பிடித்து முன்பக்கம் இழுத்து சுவற்றோடு தள்ளி இதழோடு இதழ் பொருத்தினான்.

புயலாக மாறிய அசுரனின் வேகத்தை தாளாமல் தளர்ந்தாள் தளிர்க்கொடி. மூச்சுக்காற்றுக்காக அவள் முகத்தை திருப்பிய போது, அவள் கன்னம், காது, கழுத்து என்று கணக்கில்லாமல் முத்திரையை பதித்துவிட்டு, அவளை இறுக்கமாக கட்டிக் கொண்டான். அவளை இழக்க விரும்பாதவன் போல்.. அவளை தனக்குள்ளேயே புதைத்துக்கொள்ள விழைபவன் போல்.. மேலும் மேலும் இறுக்கமாக கட்டிக் கொண்டான். கூடவே, “ஐ லவ் யு, ஐ டோண்ட் வாண்ட் டு லூஸ் யு” என்று முணுமுணுத்தான். கரகரத்த அவன் குரல் உடைந்து போன அவன் மனநிலையை வெளிச்சம் போட்டு காட்டியது. அவன் முதுகை வருடி, நெஞ்சில் முத்தமிட்டாள் மிருதுளா.

இருவரும் இயல்பு நிலைக்கு மீள வெகுநேரம் பிடித்தது. அதன் பிறகு பல மென்மையான முத்தங்களை பரிசளித்துவிட்டு அவளை பேஸ்மெண்ட் வழியாக கராஜிற்கு அழைத்துச் சென்றான் அர்ஜுன். அங்கே அவளுக்காக காத்திருந்த ட்ரைவர் வேறு யாரும் அல்ல டேவிட் தான். தன்னை தவிர வேறு ஒருவனை நம்பி மிருதுளாவை அர்ஜுன் ஒப்படைக்கிறான் என்றால் அது வேறு யாராக இருக்க முடியும்?
 

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
628
Reaction score
799
Points
93
அத்தியாயம் 73

கண் மூடி கார் கதவில் சாய்ந்திருந்தாள் மிருதுளா. மூடிய இமைகளுக்குள் ஓய்வின்றி உருளும் விழிகள், அமைதியற்ற அவள் மனநிலையை உரக்கக் கூறியது. வாடிய முகமும், தளர்ந்த மேனியுமாக அவள் கிடப்பதைக் கண்டும் காணாதது போல் காரை ஒட்டிக் கொண்டிருந்த டேவிட், நெடுஞ்சாலை ஓரத்தில் இருந்த ஒரு உணவகத்தைக் கண்டு காரை ஓரம் கட்டினான்.

கார் தன் ஓட்டத்தை நிறுத்திவிட்டதை உணர்ந்து விழி திறந்த மிருதுளா, “எந்த ஊர் இது? அர்ஜுன் சொன்ன இடம் இது தானா?” என்றாள்.

தலையை குறுக்காக அசைத்த டேவிட், “பாதி வழிதான் வந்திருக்கோம். ரெஃப்ரெஷ் பண்ணிட்டு ஏதாவது சாப்பிட்டுவிட்டு போகலாம்” என்றான்.

“ரெஸ்ட் ரூம் அந்தப் பக்கம். நான் இங்கயே வெயிட் பண்ணறேன். நீ போயிட்டு வா” என்று அவளுடைய இயற்கை உபாதைகளுக்கு வழிவகை செய்தவன், தனக்கான தேவைகளை பொருட்படுத்தவே இல்லை. கண்ணின் மணி போல கருவிழிக்குள் அவளை பாதுகாத்து, பத்திரமாக கொண்டு சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்த்துவிட வேண்டும் என்பது மட்டுமே அவன் குறியாக இருந்தது.

சில நிமிடங்களில் மிருதுளா வெளியே வந்துவிட, காலியாக இருந்த ஒரு டேபிளில் இருவரும் சென்று அமர்ந்தார்கள். அவர்களிடம் நெருங்கிய வெய்ட்டர் தயாராக இருக்கும் காலை உணவு பட்டியலை படபடவென்று பொரிந்தான். தனக்கு எதுவும் வேண்டாம் என்று மறுத்த மிருதுளாவை பொருட்படுத்தாமல், அவளுக்கும் சேர்த்து தானே ஆர்டர் கொடுத்தான் டேவிட். உணவு அவள் தொண்டை குழிக்குள் இறங்க மறுத்தது.

“ரொம்ப வீக்கா தெரியிற. கொஞ்சமாவது சாப்பிடு” - அக்கறையோடு கூறினான் டேவிட்.

“என்னோட வீக்னஸுக்கு காரணம் பசி இல்லன்னு உனக்கே தெரியும் டேவிட்” - மிருதுளாவின் பார்வை அவனிடம் மன்றாடியது.

அந்தப் பார்வைக்கான அர்த்தம் அவனுக்கு புரியாமல் இல்லை. ஆனால் அவள் கேட்கும் விபரத்தை சொல்லவோ, அவளுடைய வேண்டுகோளை நிறைவேற்றவோ அவனுக்கு எந்த அதிகாரமும் இல்லையே! பதில் சொல்லாமல் எழுந்து கை கழுவச் சென்றான்.

காருக்கு வரும் வரை அமைதியாக இருந்த மிருதுளா, அவன் சீட் பெல்ட்டை அணிந்ததும், “டேவிட் ப்ளீஸ்” என்று மீண்டும் ஆரம்பித்தாள்.

“பிலீவ் மீ மிருது. உனக்கு எது நல்லதோ அதைத்தான் நான் செய்றேன். ரிலாக்ஸா இருக்க முயற்சி பண்ணு, ப்ளீஸ்..” - கனிவுடன் கூறினான்.

அவன் குரலிலும் முகத்திலும் தெரிந்த இளக்கம் அவளுக்குள் நம்பிக்கையை விதைக்க சட்டென்று அவன் கையைப் பிடித்துக் கொண்டாள். கண்ணீர் குளம் கட்டிய கண்களுடன் அவனை நோக்கினாள். “ப்ளீஸ் டேவிட்” - அவள் உதடுகள் முணுமுணுத்தன.

டேவிட் அவளுடைய மன்றாடலை தவிர்க்க முடியாமல் தடுமாறினான். அவள் கைகளுக்குள் சிக்கியிருக்கும் தன் கரத்தை உறுவிக்கொள்ள முயன்றான். அவள் பிடி இறுகியது. “ப்ளீஸ்.. ப்ளீஸ்..” - பற்றுக்கோலை இறுக்கிப் பிடித்துக் கொள்பவள் போல் அவன் கரத்தை இறுக்கிப் பிடித்துக் கொண்டாள். அதற்கு மேல் அவனுடைய உறுதிக்கு ஆயுள் இல்லாமல் போனது.

“இட்ஸ் அபௌட் சுக்லாஸ் ரெஸ்க்யூ ஆபரேஷன். அர்ஜுன் லீட்ஸ் திஸ் ஆபரேஷன் பை பீஸ்.”

“வாட்!” – அதிர்ச்சியும், குழப்பமுமாக வாயைப் பிளந்தாள் மிருதுளா.

‘செத்துப்போன ஒருவனை காப்பாற்றுவதற்கு ஒரு திட்டமா! அதற்கு ஒரு மீட்டிங்கா! அதென்ன.. கடைசியில் ‘பை பீஸ்’ என்றான்! அமைதிப் பேச்சு வார்த்தை யாரோடு நடக்கவிருக்கிறது!’ - அவளுடைய சிந்தனையின் ஓட்டம் வேகமெடுத்தது. அர்ஜுன் யாருக்கோ வலை விரிக்கிறான் என்பது கண்ணாடி போல் அவளுக்குத் தெளிவாக தெரிந்தது.

சுக்லாவின் மரணத்தைப் பற்றி அறிந்தவர்கள் மிருதுளாவும், அர்ஜுனும் மட்டும் தான் என்பதால் அவன் யாரை ஏமாற்றிக் கொண்டிருக்கிறான், யாருக்கு வலை விரிக்கிறான் என்பதை புரிந்துக்கொள்வதில் அவளுக்கு குழப்பம் இருந்தது. ஆனால் அவனுடைய பிரதான எதிரி அவளுடைய பெற்றோர் தானே! அவர்களை தான் குறி வைத்துவிட்டானா! அதற்காகத்தான் அவளை அப்புறப்படுத்தினானா! - மிருதுளாவின் வெளிறிய முகத்தைக் கண்டு டேவிட்டின் புருவம் சுருங்கியது.

“மிருது! வாட்ஸ் ராங்?”

“ஆங்!” - பயமும் குழப்பமுமாக அவனை நோக்கினாள் மிருதுளா.

“என்ன ஆச்சு?”

“டேவிட், வி நீட் டு கோ பேக்.”

“வாட்! திரும்பிப் போகனுமா! எதுக்கு?”

மிருதுளா ஓரிரு நொடிகள் அவனை இமைக்காமல் பார்த்தாள். பிறகு “சுக்லா இப்போ உயிரோட இல்ல” என்றாள் மெல்லிய குரலில்.

டேவிடின் முகம் வெகு தீவிரமாக மாறியது. “நோ.. நோ வே..” - அவன் வார்த்தையில் மறுப்பு இருந்தது. ஆனால் குரலில் உறுதி இல்லை. முகத்தில் குழப்பமும், கலவரமும் ஒன்றன் பின் ஒன்றாக குடியேற, மிருதுளாவை வெறித்துப் பார்த்தான்.

அவன் இதயத் துடிப்பு சட்டென்று அதிகமாகிவிட்டது. முகமெல்லாம் வியர்வை முத்துக்கள் அரும்பிவிட, மூச்சுக்காற்றில் வெப்பம் கூடியது. தொண்டையை கவ்வி பிடித்துக் கொண்ட குரலை வலுக்கட்டாயமாக விடுவித்து, “உனக்கு எப்படி தெரியும்?” என்றான்.

அதற்கு அவள் பதில் சொல்லவில்லை. மாறாக, “நா அர்ஜூன்கிட்ட பேசனும். பெருசா எதுவும் நடக்கறதுக்கு முன்னாடி தடுக்கனும். ப்ளீஸ், கூட்டிட்டு போ” என்றாள்.

பதட்டம் - அவசரப்படுத்தும். தவறை சரியென்றும், சரியை தவறென்றும் குழப்பிவிடும். மனதில் தத்தளிக்கும் ஊகங்களை எல்லாம் உண்மை என்று நம்ப வைக்கும். டேவிட் அப்போது உச்சக்கட்ட பதட்டத்தில் இருந்தான். அதனால்தானோ என்னவோ மிருதுளாவின் வார்த்தைகளை முழுவதும் ஆராயாமல், ஊகங்களுக்கு இடம் கொடுத்து, அவள் சொன்னதை வேறு விதமாக புரிந்துக் கொண்டான்.

‘சுக்லாவை பகவான் தான் கொலை செய்திருக்கிறார். மிருதுளா அதை அறிந்திருக்கிறாள். ஆனால் அதை அர்ஜுனிடம் தெரிவிக்கவில்லை. இப்போது இந்த மீட்டிங் மூலம் பகவான் அர்ஜூனுக்கும் குறி வைத்திருக்கலாம். அது தெரியாமல் இவன் சமாதான பேச்சு வார்த்தை என்று போய் மாட்டிக்கொள்ள போகிறான்’ - இவையெல்லாம் நொடிப்பொழுதில் டேவிட்டின் மனதில் தோன்றிய ஊகங்கள். அதன் உண்மைத்தன்மை பற்றி ஆராயவும், அறிந்து கொள்ளவும் அவனுக்கு பொறுமையில்லை. அவசர அவசரமாக அர்ஜுனை அலைபேசியில் தொடர்புகொள்ள முயன்றான். பல முறை முயன்றும் பலன் கிடைக்கவில்லை.

விஷயம் வெகு தீவிரமானது என்பதால் வேறு யாரிடமும் இதைப் பற்றி பேச முடியாது. அப்படி பேசினால் அது மிருதுளாவின் உயிருக்கு ஆபத்தாக கூடும். அதற்கு மேல் அவனால் தாமதிக்க முடியவில்லை. உடனே காரை வந்த வழியிலேயே திருப்பினான்.

***********

ஷூவின் அடிப்பாகத்தில் மறைத்து வைத்திருந்த கையடக்க துப்பாக்கியின் பாகங்களை சேகரித்து கோர்த்து அதில் தோட்டாக்களை லோட் செய்து, கண்ணாடியில் தெரியும் தன் பிம்பத்தை குறிப்பார்த்தான் அர்ஜுன். மனதில் அன்று காலை நடந்த சம்பவம் நினைவிற்கு வந்தது.

இன்னும் சற்று நேரத்தில் நடக்கவிருக்கும் அந்த ரகசிய சந்திப்பிற்கு மாலிக்கும் அழைக்கப்பட்டிருந்தான். ஆனால் அவன் அன்று காலையே அர்ஜுனை சந்திக்க வந்திருந்தான்.

“இனி நான் கோர்த்தாவோட பார்ட்டா இருக்க முடியாது அர்ஜுன். எனக்கு வேறு ஒரு முக்கியமான பொறுப்பு இருக்கு” என்றான்.

அர்ஜுன் அவனை இமைக்காமல் பார்த்தான். “சுமன் ரைட்?”

மாலிக் ஆமோதிப்பாக தலையசைத்தான். “தனியா இருக்கா. வீக்கா இருக்கா. ஐ ஹேவ் டு டேக் கேர் ஆஃப் ஹெர். ப்ளீஸ் என்னை போக விடு” - அவன் உறுதியாக முடிவெடுத்துவிட்டான் என்பதை அர்ஜுன் புரிந்துக் கொண்டான்.

ஆனால் கோர்த்தா போன்ற மிகப்பெரிய நிழலுலக மாஃபியா குழுவிலிருந்து பிரிந்து செல்வது என்பது சாத்தியமில்லாதது. அதுவும் மாலிக் இருந்த பொசிஷன் முக்கியமானது. பல ரகசியங்கள் அவனுக்கு தெரியும். இவன் வெளியேறிவிட்டான் என்று காத்துக் கொண்டிருக்கும் கழுகுகளுக்கு தெரிந்தால் ஒரே நொடியில் கொத்திக் கொண்டு போய்விடுவார்கள். பிறகு எப்படி இவன் சுமனுக்கு அமைதியான வாழ்க்கையைக் கொடுப்பான். பெருமூச்சுடன் நண்பனை ஏறிட்டான் அர்ஜுன்.

“நல்ல முடிவுதான் எடுத்திருக்க. ஆனா சாத்தியப்படாத முடிவு. உனக்கே தெரியாம நீ கோர்த்தாவுக்கு த்ரெட்டா மாறலாம்” - எச்சரித்தான்.

“என்னோட ஐடென்டிட்டி, பிஸிக் எல்லாத்தையும் மாத்திக்கிறேன். யாராலயும் கண்டுபிடிக்க முடியாத வேற ஒரு மனுஷனா மாறிடறேன். என்னால முடியும், அது உனக்கும் தெரியும்.”

அர்ஜுன் ‘ஆம்’ என்று தலையசைத்தான். “எஸ், யு ஆர் ரைட். உன்னால முடியும். உன்னோட விருப்பப்படி நா உன்ன கோர்த்தாலேருந்து விடுக்கிறேன். ஆனா அதுக்கு முன்னாடி கடைசியா நீ எனக்கு ஒரு வேலை செஞ்சு கொடுக்கனும்.”

“நிச்சயமா. என்ன செய்யனும் சொல்லு?” - உற்சாகமாக கேட்டான்.

அர்ஜுன் தன்னுடைய அறைக்கு சென்று ஒரு கவரை கொண்டு வந்து மாலிக்கிடம் நீட்டினான்.

“ஹோட்டல் ‘வுட்-ஹவுஸ்’ ரூம் நம்பர் 333.”

அந்த குறிப்பிட்ட ஹோட்டலில் அறை எண் 333 தங்கியிருக்கும் நபரிடம் அந்தக் கவரை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதை புரிந்துக் கொண்டு, விடைபெற்று கிளம்பினான் மாலிக்.

அலைபேசியை எடுத்து ப்ளூ ஸ்டாருக்கு அழைத்து, இரை ஒன்று வுட்-ஹவுஸை நோக்கி வந்து கொண்டிருக்கிறது என்று கூறியபடி, ஜன்னல் வழியாக கீழே பார்த்தான்.

தன் கையிலிருப்பது டம்மி கவர் என்று அறியாமல் தூண்டில் புழுவை நோக்கி பாயும் மீன் போல காரில் ஏறி ‘வுட் ஹவுஸை’ நோக்கி விரைந்தான் மாலிக்.

அர்ஜுனின் முகத்தில் ஒரு அலட்சிய புன்னகை தோன்றியது. அதே புன்னகை இப்போது கண்ணாடியில் தெரியும் அவனுடைய பிம்பத்திலும் இருந்தது. தலையை உலுக்கிக் கொண்டு துப்பாக்கியை இறக்கியவன், அதை இடுப்பில் சொருகிக் கொண்டு அந்த அறையிலிருந்து வெளியே வந்தான்.

அது ஒரு ரிசார்ட். அங்குதான் சந்திப்பு நடக்கவிருக்கிறது. சந்திப்பு நடக்கவிருக்கும் பகுதிக்கு வெளியே கோர்த்தாவின் ஆட்களும், பகவான் ஆட்களும் ஒன்றாக நின்று, வரும் ஆட்களை சோதித்து அவர்களிடம் இருக்கும் துப்பாக்கி மற்றும் கைபேசியை வாங்கி கொண்டு அவர்களை உள்ளே அனுமதித்துக் கொண்டிருந்தார்கள்.

அர்ஜுனும் சோதிக்கப்பட்டான். ஆனால் ஆயுதத்தை எப்படி மறைத்து உள்ளே கொண்டு வர வேண்டும் என்பது அவனுக்கு தெரிந்திருந்தது. அவனைப் போல் இன்னும் எத்தனை பேர் உள்ளே ஆயுதத்தோடு வந்திருக்கிறார்களோ! உள்ளே வரும் ஆட்களை ஆராய்ச்சி கண்களோடு நோக்கினான். பகவான் மற்றும் ஷோபாவை தவிர கிட்டத்தட்ட அவன் எதிர்பார்த்த அனைவரும் வந்துவிட்டார்கள்.

மணிக்கட்டை திருப்பி கடிகாரத்தில் நேரத்தை பார்த்தான். அவன் முகம் இறுகியது. வரமாட்டாரோ என்கிற எண்ணம் மனதில் தோன்ற உள்ளே சின்ன பதட்டம் உண்டானது. கண்களை மூடி ஆழ மூச்செடுத்தான். வெளியே பரபரப்பு தெரிந்தது. பகவான் தான்! அருகில் ஒரு பெண் உருவம் தெரிந்தது. பார்வையை கூர்மையாக்கினான்.

‘அவளே தான். இருவரும் வந்துவிட்டார்கள்’ - நிம்மதி பெருமூச்சுடன் அவர்களையே பார்த்துக் கொண்டு நின்றான்.

சோதனைகளை எல்லாம் முடித்துக் கொண்டு அர்ஜுனை நோக்கித்தான் இருவரும் வந்தார்கள்.

“வெல்கம்..” - கை கொடுத்தான்.

“தேங்க்யூ, இந்த அமைதி பேச்சுவார்த்தை வெற்றிகரமா முடியனும்” - பகவான்.

“மிருதுளா எப்படி இருக்கா?” - ஷோபா.

“ஷி இஸ் ஃபைன்.”

“வந்திருக்காளா? நாங்க மீட் பண்ணலாமா?”

“வருவா. மீட் பண்ணலாம். முதல்ல பிசினஸ். அப்புறம் பர்சனல். லெட்ஸ் கெட் இன்” - வார்த்தைகளை வளர்க்க விரும்பாமல் அவர்களை உள்ளே அழைத்துச் சென்றான்.
 

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
628
Reaction score
799
Points
93
அத்தியாயம் 74

மீட்டிங் தொடங்கி பத்து நிமிடம் இருக்கும். இரு பக்கத்திலிருந்தும் பேச்சு வார்த்தை நாசுக்காக துவங்கியது. கேங் வார் ஆரம்பித்ததிலிருந்து தங்கள் பக்கம் ஏற்பட்ட இழப்புகளை எடுத்துக் கூறினார்கள். ராகேஷ் சுக்லாவை தங்களிடம் ஒப்படைக்கவில்லை என்றால் இந்த வார் முடிவிற்கு வர வாய்ப்பே இல்லை என்று கோர்த்தாவின் பக்கத்திலிருந்து அர்ஜுன் சொன்னான். பகவானின் முகம் சீற்றத்தில் சிவந்தது. ராகேஷ் சுக்லா தங்களிடம் இல்லை என்பதை அழுத்தம் திருத்தமாகக் கூறினார். நொடி பொழுதில் அங்கே சூழ்நிலை பதட்டமானது. இரு பக்கத்திலிருந்தும் ஆளாளுக்கு ஒவ்வொன்றை சொல்ல சலசலப்பு எழுந்தது. அதே நேரம் வாயிலில் யாரோ உள்ளே நுழையும் அரவம் தெரிந்தது.

அனைவருடைய பார்வையும் வாயில் பக்கம் திரும்ப, ஷோபா மகிழ்ச்சியுடன் எழுந்தாள்.

“மிருது!” - ஆனந்த அதிர்ச்சியில் குரல் உடைந்து தழுதழுத்தாள். அமர்ந்திருந்த சேரை பின்னுக்கு தள்ளிவிட்டு அவசரமாக எழுந்து மகளிடம் அவள் நெருங்க முற்பட, அவளை முந்திக் கொண்டு மிருதுளாவிடம் விரைந்த அர்ஜுன் அவள் கையைப் பிடித்து பின்னுக்கு இழுத்து, “இங்க என்ன பண்ற?” என்றான் உறுமலாக.

“அர்ஜுன், ராகேஷ் ஜீ உயிரோடவே இல்ல. இந்த மீட்டிங் ஒரு டிராப்” என்றான் டேவிட்.

ஒரு கணம் அர்ஜுனின் முகத்தில் இனம் காண முடியாத உணர்வு வந்து போனது. பிறகு பல்லை கடித்துக் கொண்டு, “உன்கிட்ட நா என்ன சொன்னேன், நீ என்ன பண்ணிக்கிட்டு இருக்க இடியட்” என்று அடி குரலில் கத்தினான்.

அதே நேரம் எங்கிருந்தோ பாய்ந்து வந்த தோட்டா உள்ளே மீட்டிங் அறையில் அமர்ந்திருந்த ஒருவனின் கதையை முடித்தது. என்ன நடக்கிறது என்பதை உணர்ந்து மற்றவர்கள் பதட்டமும் பரபரப்புமாக பாதுகாப்பான இடத்தில் பதுங்க முயல, அதற்குள் அடுத்தடுத்து சீறிப்பாய்ந்த தோட்டாக்கள் குழு பேதமின்றி அனைவரின் மீதும் பாயத் துவங்கியது. கூடவே கருப்பு சீருடை அணிந்த உருவங்கள் சில மின்னல் வேகத்தில் மறைவிடங்களை மாற்றி பதுங்குவதை கவனித்த டேவிட் கமாண்டோ குழு ஒன்று உள்ளே இறங்கியிருப்பதை புரிந்துக் கொண்டு அர்ஜுனுக்கு சிக்னல் கொடுத்தபடி தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்தான். மறுகணமே உதிரம் கசிய அவனும் கீழே விழுந்தான்.

“டேவிட்” என்று அலறியபடி மிருதுளா அவனிடம் பாய, அர்ஜுன் அவள் கையைப் பிடித்து கீழே இழுத்து சாய்க்க, அதற்குள் மகளை பாதுகாக்கும் பதட்டத்தில் ஷோபா மறைவிடத்திலிருந்து சற்று தலையை வெளியே நீட்ட அவள் மூளை சிதறியது. மிருதுளா வீறிட்டு அலறியபடி தாயிடம் பாய முயன்றாள். அவளை தன்னோடு சேர்த்துப் பிடித்துக் கொண்டு அவள் முகத்தை வலுக்கட்டாயமாக தன் நெஞ்சோடு சேர்த்துப் பிடித்துக்கொண்டான். அந்தக் கோரத்தை அவள் பார்த்துவிட்டாளே என்று அவன் மனம் பதைபதைத்து.

சற்று நேரத்திலெல்லாம் திமுதிமுவென்று உள்ளே நுழைந்த கமாண்டோக்கள் சிலர் அர்ஜுனை சுற்றி வளைக்க மற்றும் சிலர் மறைந்திருந்தவர்களை துப்பாக்கி முனையில் வெளியே இழுத்து வந்து மண்டியிட வைத்தார்கள். மிருதுளா மிரட்சியுடன் சுற்றும் முற்றும் பார்த்தாள். அவளுடைய தந்தையும் இழுத்துவரப்பட்டார். அர்ஜுன் அவள் முகத்தை திருப்ப முயன்றான். பார்வையை மறைக்க முயன்றான். என்ன நடக்க போகிறது என்று அவள் யோசிப்பதற்குள் அவள் கண் எதிரிலேயே அவள் தந்தையை மண்டியிடச் செய்து பின்னந்தலையில் சுட்டு தள்ளினார்கள்.

மிருதுளா துடிதுடித்துப் போனாள். சற்று நேரத்திற்குள் அவள் உலகமே தலைகீழாக புரண்டுவிட்டது. கதறி துடித்தவளை அர்ஜுன் தன்னோடு சேர்த்து அணைத்துக்கொள்ள அவன் பிடியிலிருந்து அவளை கமாண்டோக்கள் பிரிக்க முயன்றார்கள். அவன் மறுத்து அவளை தன்னோடு இன்னும் இறுக்கமாக பிணைத்துக் கொண்டான். அவனுடைய மறுப்பிற்கு மதிப்பு கொடுத்து பின்வாங்க அவர்கள் என்ன கோர்த்தாவின் ஆட்களா? அரசாங்கம் அனுப்பிய கமாண்டோக்கள். அவளை அவனிடமிருந்து பிரித்துவிட்டு அர்ஜுனையும் சுட்டுத்தள்ளப் போகிறார்கள் என்று எண்ணி, பெருங்குரலில் கத்தியபடி அவள் அவனோடு மேலும் இறுக்கமாக ஒட்டிக்கொள்ள, அவள் எதிர்பார்ப்பிற்கு முற்றிலும் எதிர்மறையாக இருந்தது அதற்கு மேல் அங்கே நடந்த சம்பவம்.

அர்ஜுனின் மறுப்பிற்கு கமாண்டோக்கள் கட்டுப்பட்டார்கள். அப்போதுதான் மிருதுளாவின் கவனத்தில் ஒன்று பட்டது. அர்ஜுனை சுற்றி வளைத்திருந்த கமாண்டோக்களின் துப்பாக்கிகள் அவனை குறி வைக்கவில்லை. எதிர் திசையில் குறிபார்த்திருந்தது. அதாவது அவனுக்கு முதுகுக்காட்டி அவனை ஆபத்திலிருந்து பாதுகாப்பவர்கள் போல் அவனை சுற்றி வளைத்திருந்தார்கள். அந்த வளையத்திற்குள் மிருதுளாவையும் அவன் நிறுத்திக்கொள்ள அவர்களிடம் மறுப்பு இல்லை. மாறாக, “கமான் ஆஃபீஸர். லெட்ஸ் மூவ்” என்று மரியாதையுடன் விளித்து அவனை அங்கிருந்து அழைத்துச் சென்றார்கள், கூடவே அவளையும்.

**************

மிருதுளாவின் உணர்வுகளுக்கு சமாதி கட்டப்பட்டு மூன்று முழு நாட்கள் முடிந்துவிட்டது. ஆம், அன்று நடந்து முடிந்த விபரீதத்திற்குப் பிறகு அவளுக்குள் ஏதோ மரத்துப் போனது போல், உள்ளே எதுவுமே தோன்றவில்லை. சிந்தனைகள் கூட எதுவும் இல்லை. மூளை, மனது இரண்டுமே வெறுமையாக இருந்தது. தலை சிதறிக் கிடந்த தாயும் தந்தையும் அவள் மனக்கண்ணை விட்டு அகலவில்லை. ஆனால் அது எப்படி, யாரால், ஏன் நடந்தது போன்ற எந்த யோசனையும் இல்லை. இப்படி ஆகிவிட்டதே என்று வலிக்கவும் இல்லை. அழுகையும் வரவில்லை. செத்துப்போன பிணம் போல் அப்படியே அமர்ந்திருந்தாள்.

அவளிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை என்றாலும், அவ்வப்போது யாரோ ஒரு ஆஃபீஸர் வந்து அவளிடம் ஏதேதோ கேட்டுவிட்டு சென்றார். ஓரிருமுறை மருத்துவ பரிசோதனை கூட செய்தார்கள். மற்றபடி அந்த அறையும் இருளும் தனிமையும் தான். ஆம், அவள் இருப்பது ஒரு இன்டராகேஷன் அறை. மூன்று நாட்களாக அந்த அறையில் தான் இருக்கிறாள். பசி உறக்கம் எதுவும் இல்லை. தனிமை - வெறுமை, வெறுமை - தனிமை அதற்கு மேல் எதுவும் இல்லை என்று அவள் அமர்ந்திருக்கும் சமயத்தில், கண்ணாடி தடுப்புக்கு வெளியே நின்று அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் அவன், அர்ஜுன் ஹோத்ரா! இல்லையில்லை.. அபிமன்யு! துஷ்டர்களுக்கு எதிராக களமிறங்கி சக்கரவியூகத்தில் சிக்கி அழிந்த துவாபர யுக அபிமன்யு அல்ல. இவன் புதியவன். கோர்த்தா என்னும் கொள்ளை கூட்டத்திற்குள் சத்தமில்லாமல் ஊடுருவி, உளவு பார்த்து, களமாடி வெல்ல வியூகம் அமைத்து கொடுத்துவிட்டு, வெற்றிகரமாக வெளியே வந்த கலியுக அபிமன்யு.

ஊர் எல்லையில் நிற்கும் வீரனார் போல அந்த விசாரணை அறைக்கு வெளியிலேயே மூன்று நாட்களாக நின்று கொண்டிருக்கிறான். உள்ளே சென்று அவளை நேருக்கு நேர் சந்திக்கவும் தைரியம் இல்லை. அவளை விட்டு விலகிச் செல்லவும் மனம் இல்லை.

“அந்த பொண்ணு மேல உனக்கு இவ்வளவு கன்ஸர்ன் இருக்கு. உள்ள போய் பாரேன்” - ராஜ்வீர் அவன் தோள் தொட்டார். கோர்த்தா ஆபரேஷனுக்கு தலைமை அதிகாரி. அந்த ஆபரேஷனை பொறுத்தவரை ‘ப்ளூ ஸ்டார்’ என்பது தான் அவருடைய அடையாளம்.

அவனிடம் பதில் இல்லை. ஒரு பெருமூச்சு மட்டுமே வெளிப்பட்டது.

“அபி, உன்னோட மிஷன் சக்ஸஸ் ஆயிடிச்சு. எதிர்மறை விளைவுகள் இருக்கத்தான் செய்யும். ரியாலிட்டியை ஃபேஸ் பண்ணு. யு ஆர் எ டாம் ஃபைட்டர் மேன்” என்றார்.

இது போல் நீண்ட நாட்கள்.. இல்லை, நாட்கள் என்று சொல்ல முடியாது. வருட கணக்கில் அண்டர்கவர் ஆபரேஷனில் இருக்கும் அதிகாரிகளுக்கு மனஅழுத்தம் உச்சத்தில் இருக்கும். அவர்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவது மிகவும் கடினம். சில சமயங்களில் முடியாமலே கூட போய்விடும். அவனுக்கும் அந்த அழுத்தம் இருந்தது. போஸ்ட் ட்ரமாடிக் ஸ்ட்ரெஸ்!

ட்ரீட்மெண்டில்தான் இருந்தான். ஓய்வு தேவை, மாற்றம் தேவை. ஆனால் அவன் ஒத்துழைக்க மாட்டேன் என்கிறான். அவளைவிட்டு விலக மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கிறான்.

நிழல் வாழ்க்கையில் அமைந்த அல்லது அமைத்துக் கொண்ட உறவுகளோ நட்புக்களோ நிஜ வாழ்க்கையில் நிலைக்காது. நிலைக்க முடியாது. அதை அவன் புரிந்துகொள்ள வேண்டும் என்பது அவருடைய எண்ணம். ஆனால் அவனுடைய எண்ணம் அவனுக்கு. அதில் அவள் மட்டும் தான் இருக்கிறாள் என்பது அவருக்கு என்ன தெரியும்?

அவர் சொல்வதெல்லாம் அவன் காதில் எறியதா என்றே தெரியவில்லை. அவன் பார்வை மட்டும் அவளிடமிருந்து அசையவில்லை. அவள் பகவானுடைய மகள். கடந்த சில மாதங்களாக கோர்த்தா குழுவோடு வசித்திருக்கிறாள். இறுதி நாள் ஆபரேஷன் நடந்த போது கூட சம்பவ இடத்தில் இருந்திருக்கிறாள். இது போன்ற காரணங்களால் அவளுடைய பெயரும் விசாரணை பட்டியலில் இடம் பிடித்திருந்தது. அர்ஜுன் என்கிற அபிமன்யு அதை கடுமையாக எதிர்த்தான். மூன்று நாட்களாக அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்து அவளுடைய பெயரை பட்டியலிலிருந்து இன்றுதான் நீக்க முடிந்தது. அதை அவளிடம் சொல்லி இங்கிருந்து அவளை வெளியே அழைத்துச் செல்ல வேண்டும். உடன் வருவாளா அல்லது விட்டுச் சென்றுவிடுவாளா? உள்ளுக்குள் பதைபதைத்தது.

அவன் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அவள் தலையை மெல்ல மேஜையின் மீது சரித்தாள். ஏதோ சரியில்லையோ என்று அவன் யோசித்து முடிப்பதற்குள் அவள் நாற்காலியிலிருந்து கீழே சரிந்துவிட்டாள். பதறியடித்துக் கொண்டு உள்ளே ஓடினான் அவன்.

மருந்து வீரியத்தில் நன்றாக உறங்கி கொண்டிருந்தாள் மிருதுளா. மூன்று நாட்களாக நீர் கூட அருந்தாததால் உடம்பில் நீர் சத்து குறைந்து மயங்கிவிட்டாள். ட்ரிப்ஸ் ஏறிக் கொண்டிருந்தது. அருகிலேயே அவன் அமர்ந்திருந்தான்.

வெகு நேரம் கழித்து அவள் கண்விழித்த போது முதல் பார்வையிலேயே அந்த முகம்தான் அவள் கண்ணில் பட்டது. முகம் பரிட்சையமானது தான். ஆனால் அந்த முகத்திற்கு சொந்தக்காரனை தான் அவளுக்கு தெரியவில்லை. அவன் யாரோ ஒரு புதியவன். அறிமுகமற்றவன். அந்நிய பார்வையோடு அவனை நோக்கினாள். ‘யார் நீ?’ என்னும் பார்வை.

ஆம், அன்று அவளுடைய பெற்றோரும் பழகிய தோழனும் குண்டடிப்பட்டு மறைந்து போன போது, அவள் அனைத்துமாக நம்பியிருந்த அவளுடைய அர்ஜுன் காற்றில் மறைந்துவிட்டான். அர்ஜுன் என்கிற ஒருவன் அவளுடைய ரியாலிட்டியில் இல்லாமலே போய்விட்டான். அவளுடைய மொத்த உலகமும் அழிந்து போய் நிர்கதியாகிவிட்டாள். ஆனால் அவளுக்கு வலிக்கவில்லை. மனதிற்குள் கவலை தோன்றவில்லை. காரணம், இப்போது அவளோடு யாரும் இல்லை, எதுவும் இல்லை. வாழ்வில் ஆசையோ பிடிப்போ கூட இல்லை. எப்போது வாழ்க்கை முடியும், அல்லது முடித்துக்கொள்ளலாம் என்று தான் தோன்றியது. அயர்வுடன் கண்களை மூடினாள்.

அவளுடைய அந்நியப் பார்வையும், உணர்வற்ற நிலையும் அவன் இதயத்தை அறுத்தது. நிவாரணம் தேடி அவன் கை தானாக நீண்டு அவள் நுனிவிரலை வருடியது.

அந்த நுனிவிரல் ஸ்பரிசத்தில், சமாதிகட்டப்பட்ட அவள் உணர்வுகளெல்லாம் உயிர்பெறுவது போல் தோன்ற, உள்ளுக்குள் மின்னல் போல் சுரீரென்று ஒரு வலி. மூடிய விழிகளை திறக்காமல் கையை விலக்கிக் கொண்டாள். அவன் உதடுகள் அழுந்த மூடின.

ஒரு வாரம் கழிந்துவிட்டது. மிருதுளா இன்னமும் மருத்துவமனையில் தான் இருக்கிறாள். அவளிடம் பெரிதாக எந்த மாற்றமும் இல்லை. அவள் டீப் டிப்ரஷனுக்குள் சென்றுக் கொண்டிருப்பதாக மருத்துவர் கூறினார். ஸ்பெஷல் கேர் கொடுத்து அவளை மீட்டெடுக்கவில்லை என்றால் நிலைமை விபரீதமாகிவிடும் என்றார். அடி வயிற்றிலிருந்து சுருண்டு எழுந்த ஓர் உணர்வு அவன் நெஞ்சை அடைத்தது. துக்கமும் பயமும் கலந்த அந்தக் கலவையான உணர்வு மூச்சு குழலை நெறிப்பது போல் தோன்ற கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டான்.

“மிஸ்டர் அபிமன்யு, அவங்களுக்கு ஒரு ஸ்பெஷல் டாக்டர் வேணும்.”

“அரேன்ஞ் பண்ணுங்க” - கனத்த குரலில் கூறினான்.

அவன் கேட்டுக் கொண்டது போலவே அவளுக்கு மனநல சிறப்பு மருத்துவர் ஏற்பாடு செய்யப்பட்டார். தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டது. தன் கண் எதிரே அரங்கேறிய பெற்றோரின் படுகொலைக்கு, இரண்டு வாரங்களுக்கு பிறகு அவள் கண்களிலிருந்து கண்ணீர் கசிந்தது. கூடவே இருந்த தோழனை இழந்ததுவிட்ட வலியை அப்போதுதான் மனம் உணரத் துவங்கியது. இல்லாத ஒருவனை எண்ணி மனக்கோட்டை கட்டிவிட்ட ஏமாற்றம் அவள் உயிரை குடித்தது. புரையோடி போன புண்ணை கீறிவிட்டால் சீழும் ரத்தமும் பொங்குமே, அப்படித்தான் இருந்தது அவள் உள்ளமும் அப்போது. துரோகம், வலி, ஏமாற்றம், இழப்பு, துக்கம் எல்லாம் அவளுக்குள் பொங்கிப் பொங்கி எழுந்தது. அவளால் தாங்க முடியவில்லை. மருத்துவரை கட்டிப் பிடித்துக் கொண்டு தேம்பி தேம்பி அழுதாள்.

வழக்கம் போல அவள் பார்வை படாத இடத்திலிருந்து அவளை பார்த்துக் கொண்டிருந்த அபிமன்யு, யார் என்றே தெரியாத மருத்துவரை அவள் அப்படி கட்டிப் பிடித்துக் கொண்டு கதறி அழுததைக் கண்டு கலங்கி போனான். அவளுடைய துக்கம் அவனை வெகுவாகப் பாதித்தது. பாறையை விழுங்கியது போல் மனம் கனத்து போய்விட, அன்று இரவு உறங்க முடியாமல் வெகு நேரம் நடந்துக் கொண்டே இருந்தவன் நள்ளிரவுக்கு மேல் அவள் அனுமதிக்கப்பட்டிருந்த அறை பக்கம் வந்தான்.

வெளியிலேயே நின்று அவள் முகத்தை மட்டும் பார்த்துவிட்டு போகலாம் என்று கண்ணாடி வழியாக அறைக்குள் பார்த்த போது படுக்கை காலியாக இருந்தது. சட்டென்று மனம் பதற உடனே உள்ளே நுழைந்தான். நொறுங்கி போன கண்ணாடி சிற்களாக வெறும் தரையில் கை ஒரு பக்கம் கால் ஒரு பக்கமாக சிதறிக் கிடந்தாள் அவள்.

மயங்கி விழுந்துவிட்டாளோ என்று எண்ணி இவன் கீழே குனிந்த போது, அவள் மூடியிருந்த கண்களை திறந்து அவனை பார்த்தாள். ஓரிரு நொடிகள் அந்த விழிகளின் வழியாக மனங்களுக்குள் ஏதேதோ பரிமாற்றம், அர்த்தமில்லா தேடல்.. அவள் இதழ்கள் மெல்ல பிரிந்தன.

“தூங்க முடியல.. வலிக்குது.. நெஞ்சுக்குள்ள.. ஆழத்துல.. ரொம்ப வலிக்குது” - அவன் கண்களில் கண்ணீர் கசிந்தது. உதடுகளை அழுந்த மூடிக் கொண்டு நன்றாக குனிந்து அவளை தூக்கினான். அவள் எதிர்க்கவில்லை. பின்னியிருந்த பார்வைகள் ஒன்றைவிட்டு ஒன்று விலகவில்லை. பூமாலை போல் தன் கையில் துவண்டுக் கிடந்தவளை மெத்தையில் படுக்க வைத்தான்.

“பேர் என்ன?” - மெல்லிய குரலில் கேட்டாள்.

அவன் தாடை இறுகியது. அவள் கண்களை சந்திக்க முடியாமல் பார்வையை தாழ்த்தியபடியே போர்வையை அவள் மீது இழுத்துவிட்டபடி, “அபிமன்யு” என்றான்.

“பேர் கூட நிஜம் இல்ல..” - கசப்புடன் புன்னகைத்தாள்.

சட்டென்று அவள் பார்வையை சந்தித்தவன், “பேர் மட்டும்தான் நிஜம் இல்ல. மற்ற எல்லாமே நிஜம்தான்” என்றான்.

அவள் மறுப்பாக தலையசைத்தாள். அவள் முகத்தை தன் கைகளுக்குள் அடக்கி, அவள் கண்களை ஆழ்ந்து நோக்கியவன், “அந்த பேர் மட்டும் தான் நானா? அந்த பேருக்குள்ள என்ன அடக்கிடுவியா நீ?” என்றான்.

அவள் பதில் சொல்லாமல் கண்களை மூடிக் கொண்டாள்.

“மிருது, லுக் அட் மீ.. லுக் அட் மீ ப்ளீஸ்” அவளை உலுக்கி எழுப்பியவன், “இட்ஸ் ஆல் ஓவர். இனி எந்த பிரச்சனையும் இல்ல. நமக்கு பின்னாடி யாரும் இல்ல. நாம யாருக்கும் பயப்பட வேண்டாம். நம்மள துரத்தி யாரும் வர மாட்டாங்க. இனி நீயும் நானும் மட்டும் தான். எனக்கு நீ உனக்கு நான். மற்ற எல்லாத்தையும் மறந்துடு. புதுசா வாழ்க்கையை ஆரம்பிக்கலாம். சந்தோஷமா வாழலாம். நீ எப்படி சொல்றியோ அப்படி” என்று பேசிக் கொண்டே போனவன் அவள் முகத்தில் தெரிந்த மாற்றத்தைக் கண்டு பேச்சை நிறுத்தினான்.

கோபம் என்று ஒற்றை வார்த்தையில் சொல்லிவிட முடியாது. அவதாரமெடுத்த காளியின் முகத்தில் தெரியும் ஆக்ரோஷம் அவள் முகத்தில் அப்போது தெரிந்தது. முகமெல்லாம் செக்கச்செவேலென்று சிவந்து போய்விட, பற்களை கடித்துக் கொண்டு இரண்டு கைகளையும் அவன் நெஞ்சில் கொடுத்து அப்படியே அவனை பின்னால் தள்ளிவிட்டுவிட்டு எழுந்து நின்றாள்.

அவளிடமிருந்து அவ்வளவு வேகத்தை எதிர்பார்க்காத அபிமன்யு தடுமாறி காலை தரையில் ஊன்றினான்.

“எல்லாத்தையும் மறக்கனுமா! சந்தோஷமா வாழனுமா! எப்படி உன்னால இப்படி பேச முடியுது! பாரு.. உன் கைய பாரு.. எவ்வளவு பேரோட இரத்தம்! டேவிட் உனக்காகவே வாழ்ந்தான்! அவனை கூட கொன்னுட்டியே!” என்று மேல்மூச்சு வாங்கக் கத்தியவள், “உனக்கு மனசே இல்லையா!” என்றபடி பாய்ந்து அவன் சட்டையைப் பிடித்து உலுக்கி, முகமெல்லாம் கீறி, கன்னத்தில் அறைந்து பித்துப் பிடித்தவள் போல் நடந்துக் கொண்டாள்.

அவள் கைகளைப் பிடித்து அவளை கட்டுப்படுத்த முயன்றான் அவன்.

“என் அம்மாவை, அப்பாவை, என்னை எல்லாரையும் கொன்னுட்ட.. என் அர்ஜுனையும் கொன்னுட்ட.. நீ நிஜம் இல்ல.. விடு.. என்னை விட்டுடு..” - துள்ளி திமிறி அவனிடமிருந்து விலகினாள்.

அவன் செயலற்றவனாக அவளை பார்த்தான். இயலாமையின் வேதனை அவன் முகத்தில் தெரிந்தது.

“யு ஆர் ப்ரோக்கன், லெட் மீ ஃபிக்ஸ் யு. என்னால மட்டும் தான் அதை செய்ய முடியும். யு நீட் மீ, அண்ட் ஐ நீட் யு” - மன்றாடினான்.

“நோ, ஐ டோன்ட் நீட் யு” - மறுப்பாக தலையசைத்தாள் மிருதுளா. அவனுக்கு வலித்தது. அவளை எப்படி சமாதானம் செய்வது என்று புரியாமல், “மை ஃபீலிங்ஸ் ஆர் ட்ரூ. ஐ காண்ட் லீவ் யு” என்றான் தவிப்புடன்.

“ஐம் லீவிங் யு” என்றாள் மிருதுளா உறுதியாக.

அவன் முகம் வெளிறிப் போனது. “நோ.. நோ.. யு காண்ட்.. விடமாட்டேன். மிருது ப்ளீஸ். நா உன்ன ப்ரொடக்ட் பண்ணனும். கேர் பண்ணனும்.. பேம்பர் பண்ணனும்.. லவ் பண்ணனும்.. நீ இல்லாம என்னால வாழ முடியாது. ஐ காண்ட் லீவ் யு” - நெஞ்செல்லாம் வறண்டு போய் தவித்தான்.

அவன் அப்படி தவிக்கும் போது அவள் அடிவயிற்றை பிசைந்தது. நெஞ்சுக்குள் கூர்மையாக ஏதோ பாய்ந்தது. நேசித்துவிட்டாளே!

‘மி..ரு..து!’ - அம்மாவின் குரல் எங்கோ தூரத்தில் கேட்டது. மூளை சிதறி அவள் மண்ணில் விழுந்தது மனக்கண்ணில் தோன்றி மறைய, அவள் கண்களில் இரத்தக் கண்ணீர் வடிந்தது.

“என்னை பாதுகாக்க நீ தேவையில்லை. என்னால என்னை பார்த்துக்க முடியும். இப்போ சொன்னியே, உன்னோட ஃபீலிங்ஸ் எல்லாம் ட்ரூன்னு. அதுல ஒரு பர்சன்ட் உண்மை இருந்தாலும் நீ என்னை தடுக்கக் கூடாது. என் பின்னாடி வரக் கூடாது. நா எங்க இருக்கேன்னு தேடக் கூடாது” என்று அவன் கண்களை பார்த்து உறுதியாக கூறிவிட்டு அந்த அறை வாயிலை நோக்கி நடந்தாள்.

அதிர்ச்சியும் திகைப்புமாக ஓரிரு நொடிகள் அசையாமல் நின்றவன், அவள் கதவில் கை வைத்ததும், “போயிடு.. என்கிட்டேருந்து எவ்வளவு தூரம் ஓட முடியுமோ அவ்வளவு தூரம் ஓடிப் போயிடு. நா உன்ன தேடி வரமாட்டேன். உன் பின்னாடி அலைய மாட்டேன். ஆனா என்னைக்காவது ஒரு நாள் நீ என் முன்னாடி வந்த.. அதுக்கப்புறம் நீ செத்தாலும் என் கூட தான்” என்று கத்தினான். கோபம், ஆற்றாமை, இயலாமை எல்லாம் கலந்திருந்தது அவன் குரலில்.

ஒரு நொடி தயங்கி நின்ற மிருதுளா, திரும்பிப் பார்க்காமல் அங்கிருந்து வெளியேறினாள். சற்று நேரம் அசைவற்று இறுகி நின்ற அபிமன்யு, விருட்டென்று திரும்பி ஜன்னல் பக்கம் சென்றான். கீழே மிருதுளா வாயில் கேட்டை நோக்கி சென்றுக் கொண்டிருந்தாள். கிழக்கே வானம் வெளுக்க துவங்கியது. அவர்கள் வாழ்வு மெல்ல மெல்ல இருளில் மூழ்கிக் கொண்டிருந்தது.
 

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
628
Reaction score
799
Points
93
முதல் பாகம் முடிவடைந்தது....
இரண்டாம் பாகம் கர்வம் அழிந்ததடி மற்றொரு திரியில் உள்ளது.
 
Top Bottom