Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


வேரின் தாகம்...

Megala Appadurai

Saha Writer
Team
Messages
66
Reaction score
66
Points
18
வேரின் தாகம் 7

அத்தியாயம் - 7

வாழ்க்கை தான் எத்தனை விந்தை மிகுந்தது..? மனம் என்பது ஒரு குரங்கு என்பது சரிதானோ...? தனக்குப் பிடித்த ஒன்று கிட்டாதவரை அதற்காய் ஏங்கும். எப்பொழுது கிடைக்குமென காத்திருக்கும். கிட்டாமலே போய்விடுமோவென அஞ்சும். எப்படியாவது அடைந்துவிட மாட்டோமா என அதற்காய் துடிக்கும். ஆனால் அது தானாய் கையில் கிடைக்கும் பொழுது இது தனக்காதது தானா? எனக் கேள்வி எழுப்பும்; நம்ப மறுக்கும். நாம் இதற்கு தகுதிதானா? என தன்னையே சோதித்துப் பார்க்கும்.

கயலும் இதற்கு விதிவிலக்கல்ல. அவள் தன் மனதைத் திறந்து அவளிடம் கூறிவிட்டு போய்விட்டான். ஆனால், அவளால் அதை எதிர்கொள்ள இயலவில்லை. அவனைக் கண்டதும் மனதில் ஓர் இனிமையான உணர்வு தோன்றுவது உண்மை. பார்த்தாலே அவனுடைய மகிழ்ச்சியை அவளிடம் தானாய் பதியம் போட்டு விடுகிறான்தான். கண்கள் அவனை ஆவலாய் தேடுகிறது. ஆனால், அவனோடு தன் வாழ்க்கை என்று அவள் எண்ண வில்லை.

ஏன் இப்படி ஒரு முடிவை எடுத்தான்?இன்னொரு வாழ்க்கையை எண்ணிப் பார்க்க இயலுமா தன்னால்..? மற்றொரு மணவாழ்க்கையை பற்றி யோசிக்கக்கூட இயலவில்லை அவளால். திருமணம் என்ற ஒன்றை எண்ணினாலே அவள் உடல் பதறி நடுங்கியது. அவள் அனுபவித்த துன்பங்கள் அத்தகையது. கணவன் என்ற சொல் அவளுக்கு அருவருப்பைத் தரும் அளவுக்கு மாற்றியிருந்தான் அவளை மணந்தவன்.

அவன் உயிரோடு இருந்த நாட்களில் கயல் அத்தனை வேதனையை அனுபவித்திருந்தாள். பசி என்ற போது அவள் நினைத்த நேரத்தில் உண்ண முடியாது. "புருஷன் வருவான் அவனுக்காக காத்திருக்க வேண்டும் என்று கூட தெரியாதா? என்ன வளர்த்தா உன் அம்மா...?" என இறந்து போன அவள் அன்னை வரை காது கூசும் வார்த்தைகளால் அர்ச்சனை செய்வான்.

குடித்துவிட்டு அவன் வர பன்னிரண்டு, ஒன்று ஆனால் கூட அவள் உண்ணாமல், உறங்காமல் காத்திருக்க வேண்டும். அமர்ந்த நிலையிலேயே உறங்கிப் போனவளை அவன் உதைத்த உதையில் உதடு கிழிந்து ரத்தம் கொட்டியது ஒரு நாள்.

பெண்ணுக்கு மாதத்தில் வரும் மாதவிடாய் காலத்தில் கூட அவளை ஓய்வாய் விட்டதில்லை. அந்த நேரத்திலும் கூட, அவனது குரூர முகத்தை காட்டி, அவளை வழலியால் துடிக்க வைப்பான். அவள் வலியில் துடிக்கும் துடிப்பை அனுபவித்து ரசிப்பான். எழுந்து நடக்கவே இயலாமல் தள்ளாடி நடக்கையில் கூட அவனுக்கு வேண்டிய பணிவிடைகளை அவள் செய்து ஆக வேண்டும். இதுவெல்லாம் ஒரு சோறு பதம் மட்டுமே.

நீண்ட ஏழு வருடங்கள் அவள் காயங்கள் எதையும் ஆற்றி விடவில்லை. மாறாய், அதற்கு பின்னால் இந்த காலங்களில் அவள் பார்த்த ஆண்கள் அவற்றை மறக்க விடவும் இல்லை. ஆண் என்றாலே வெறுத்து ஒதுக்கும் நிலைக்கு அவளைத் தள்ளி இருந்தது இச்சமூகம்.

அப்படி இருக்க, மீண்டும் இன்னொரு ஆணோடு தன் வாழ்க்கையை இணைப்பது பற்றி கயல் எப்பொழுதுமே எண்ணி இருக்கவில்லை. வளவனைப் பற்றி அவள் அறிந்த போதும், அவன் குடும்பத்தினரையும், அவன் தங்கைகளையும் அவன் கரையேற்றி, இன்னும் மணம் புரியாமல் இருக்கிறான் என்ற போது அவள் சற்றே வியந்து தான் அவனை நோக்கினாள். அவள் தாமதிக்கும் நாட்களில் அவள் அறியாமல் வீடு வரை அவன் பாதுகாப்பாய் பின்வருவதை அறிந்து அவன் மேல் மதிப்பு கூடியது. ஒரு பெண்ணைக் கண்டதும் வலிந்து பேசும் ஆண்களுக்கு மத்தியில் அவளை மதிப்பாய் கண் பார்த்து பேசிய அவனது கண்ணியம் அவன் மீது மரியாதையை வரவழைத்தது. நட்பாய், கேலியாய் அவன் பேசும் பேச்சுக்கள் யாவும் அவள் மனதை லேசாக்கியது. இனம் புரியாத ஏதோ ஒரு மகிழ்ச்சி அவனைக் காண்கையில் ஏற்பட்டது. ஆனால், இவற்றையெல்லாம் காதல் என்று அவள் எண்ணவில்லை.

அவன் காதலைக் கூறிவிட்டு, 'நல்ல முடிவாக நாளை கூறு' என்று கிளம்பி விட, அவன் காதல் தெரிவித்த கணம் முதல் அவள் நிலை கொள்ளாமல் தவித்திருந்தவள் அதற்கு மேல் தாளவே முடியாது போல் மூச்சு முட்டியது அவளுக்கு. உடனே கிளம்பி வீடு வந்தவள் நேராய்த் தன்னறைக்குச் சென்று தஞ்சமடைந்தாள்.

உள்ளே நுழைந்தவள், கதவைத் தாழிட்டவுடன் இத்தனை நாட்கள் அடக்கி வைத்திருந்த துயரங்கள் எல்லாம் ஒரு சேரத் தாக்க, அவளது எண்ணங்கள் தாறுமாறாக ஓடி, அவள் மனதைத் தாக்கி, அதுவரை அடக்கி வைத்திருந்த துயரங்கள் எல்லாம் அழுகையாய்ப் பொங்கியது.

இப்படி ஒருவனை, தான் ஏன் முன்னரே சந்திக்காமல் போனோம்? ஏன் விதி என் வாழ்க்கையை இப்படி புரட்டிப் போட்டது? மனதால் கூட நான் யாருக்கும், எந்த தீங்கும் எண்ணியதில்லையே? என் வாழ்க்கையை ஏன் இப்படி சிதைத்தாய் இறைவா..? என்றெல்லாம் மறுகலானாள். ஒரு பெண்ணிற்குக் கிடைக்க வேண்டிய எந்த ஒரு மகிழ்ச்சியையும் நான் அனுபவித்ததில்லையே? ஒரு சராசரி பெண்ணாய் திருமணத்தைக் கூட எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்தானே செய்து கொண்டேன்? இப்படியெல்லாம் வேண்டும் என்ற ஒரு சாதாரண ஆசையும், எதிர்பார்ப்பும் கூட இல்லையே எனக்கு? பிறகு ஏன் எனக்கு இப்படியான ஒரு வாழ்க்கை? என்ற அவளின் மனக்குமுறல்கள் யாவும் ஒருசேரத் தாக்க கதறி அழலானாள். அவளின் மன சஞ்சலங்களும், அவளின் கண்ணீரும் விடிந்தும் கூட நின்றபாடில்லை.

பேத்தியைக் கூட்டிக்கொண்டு பார்க் போய்விட்டு கடை வரை போயிருந்த அவளின் தந்தை இதை எதையும் அறிந்திருக்கவில்லை.

கயலிடம் அவன் காதலை தெரிவித்து இன்றோடு நான்கு நாட்கள் கடந்து விட்டிருந்தன. அன்று போனவள் தான்.. அதன்பின் அவள் வரவே இல்லை. அவளை கைபேசியில் தொடர்பு கொள்ள முயன்று தோற்றுப் போனான் வளவன். ஏனெனில், அது அணைத்து வைக்கப்பட்டு இருந்தது. அவள் ஏன் வரவில்லை என மனம் நிலை கொள்ளாமல் தவித்தது. அவள் மனம் தெரியாமல் அவளை வருத்தி விட்டோமோ என வருந்தினான். யாரிடமும் அவளை விசாரிக்க அவனுக்கு மனம் வரவில்லை.

நான்கு நாட்களுக்கு மேல் பொறுத்து விட்டு, அவளைத் தேடி அவன் வீடு செல்வதாய் முடிவெடுத்தான். ஆனால் அவன் வீட்டினரிடம் யாரென அறிமுகப்படுத்துவான்? வெறுமனே துணியை தைக்கக் கொடுக்கும் ஒரு வாடிக்கையாளர் வீடு வரை வந்தால் என்ன நினைப்பார்கள்? அதுவும் தான் ஒரு ஆண். அவளைத் தேடிப் போவதால் அவளுக்கு எதுவும் பிரச்சனைகள் நேர்ந்து விடக்கூடாது என கவலை உற்றான். அவன் ஆழ் மனது எதுவோ சரியில்லை என உணர்த்த, என்ன ஆனாலும் சரி, நேரில் சென்று பார்த்து விடுவது என முடிவெடுத்தான். அவளுக்குப் பிடிக்கவில்லை எனில், தன்னை மன்னித்து விடும்படி கூறிவிட்டு தன் வழியைப் பார்க்க வேண்டியது என்ற உறுதியோடு கிளம்பினான்.

ஏற்கனவே, கலைவாணி மூலமாக அவளின் மொத்த கதையையும் அறிந்த செந்திலகம் அதை வளவனிடம் கூறியிருந்தார். குழந்தை இருக்கும் வீடு வெறுங்கையோடு செல்லப் பிடிக்காமல், அவளின் குழந்தைக்கு பொம்மை மற்றும் சில சாக்லேட் வகைகளோடு, சிறிது பழங்களும் வாங்கிக் கொண்டு புறப்பட்டான். கதவை திறந்து அவனை வரவேற்றது கயலின் ஏழு வயது மகள் ஜீவா. அவளைப் பார்த்த மாத்திரத்திலேயே அள்ளி எடுத்துக் கொஞ்ச வேண்டும் என்ற பேராவல் அவனுள். எனினும் புதியவனைக் கண்டதும் அந்த குழந்தை கேள்வியாக நோக்க..

"கயல் இருக்காங்களா குட்டிம்மா...?" என்ற வாஞ்சையான பேச்சில்

"அம்மா ஹாஸ்பிடல்ல இருந்து வந்து தூங்குறாங்க அங்கிள்.. தாத்தா பக்கத்துல தான் போயிருக்காங்க.. இருங்க, நான் அம்மாவை எழுப்புகிறேன்..." என மழலை மாறாத குரலில் கூறியவள் உள்ளே ஓட, அவளைத் தடுத்தபடி உள்ளே வந்தான் வளவன்.

"வேண்டாம் தங்கம்.. டிஸ்டர்ப் பண்ண வேணாம். நான் அம்மாவோட ஃப்ரெண்ட்.. அம்மாவுக்கு என்ன ஆச்சு..?" என்று கேட்டான்.

"காய்ச்சல் அங்கிள்.." என்றாள் முகம் வாட அந்த குழந்தை.

'என்ன ஆயிற்று இவளுக்கு? நன்றாய் தானே இருந்தாள்..' என நினைத்தவன்,

'அம்மா எங்க இருக்காங்க குட்டிம்மா..? என்னைக் கூட்டிட்டுப் போறியா.." என்று அவன் தயக்கத்தோடு கேட்க

அன்பாய் 'குட்டிம்மா' எனக் கூறிய அவனைப் பார்த்த மாத்திரத்திலேயே ஜீவாவுக்கு பிடித்து விட, "வாங்க அங்கிள்..." என அவனை அங்கிருந்து இரண்டாவது அறைக்கு அந்த மழலை அழைத்துச் செல்ல, அங்கே பிடுங்கி எறியப்பட்ட வாடிய கொடியாய்க் கிடந்தவளைக் கண்டு அவன் உள்ளம் பதறியது.

கண்களைச் சுற்றி கருவளையங்களோடு, உறங்கும்போதும் நெற்றியின் மீது கவலை சுருக்கங்கள் விழ, சவலைப் பிள்ளை போல் கிடந்தவளை, அள்ளி அணைத்து நான் இருக்கிறேன் உனக்கு என அவளை நெஞ்சோடு சாய்த்துக் கொள்ள துடித்தது அவன் உள்ளம். அமைதியாய் அவன் அருகில் நின்றிருந்த குழந்தையிடம்,

"குட்டிம்மா.. கொஞ்சம் தண்ணீர் தர்ரியா..?" என்று கேட்டான்.

"எடுத்து வர்றேன் அங்கிள்..." என ஓடினாள் குழந்தை.

மருந்தின் வீரியத்திலும், காய்ச்சலின் களைப்பிலும், துவண்டு களைத்து உறங்கிக் கொண்டிருந்தவளைக் காண்கையில் அவன் உள்ளம் துடித்தது. பூத்துக் குலுங்கும் மல்லிகை கொடி, நீரின்றி வாடி வதங்கி காய்ந்து கிடப்பது போன்ற தோற்றத்தில் அவளைக் காண சகிக்க வில்லை அவனுக்கு. தூக்கத்திலும் கூட தன் துன்பத்தை அவளால் மறக்க முடிய வில்லை என அவள் நெற்றி மீது படிந்திருந்த சுருக்கங்கள் கூறின..

உறக்கம் இல்லா அவளது இரவுகளை கண்ணின் கருவளையங்கள் பறைசாற்றின.. காற்றில் படபடத்து மயில் தோகை போன்ற அவளது கூந்தல் கற்றைகள் அவள் முகத்தில் படர்ந்திருக்க தன் விரல் கொண்டு மெல்ல அவள் தூக்கம் கலையாமல் ஒதுக்கி விட்டவன், அவள் நெற்றியை தொட்டுப் பார்த்தான். காய்ச்சல் இல்லை என்று சற்றே பெருமூச்சோடு நிம்மதியுற்றவன், மெல்ல குனிந்து அவள் நெற்றியில் தன் முதல் முத்திரையைப் பதித்தான். உறக்கத்தில் இருந்தவள் முகம் சுருங்க, பட்டும் படாமலும் அவள் புருவங்களை விரல்களால் நீவியவன் மூடி இருந்த இமைகள் மீது மெதுவாய் முத்தமிட்டு நிமிர்ந்தான்.

'ஏன்டி என்ன இப்படி கொல்ற..? இனி நீயே என்னை வேண்டாம் என்று ஒதுக்கினாலும் உன்னை விட்டு நான் போக மாட்டேன்.. நீ இல்லாத ஒரு வாழ்க்கையை என்னால நெனச்சுக்கூட பார்க்க முடியலடி.' என்று எண்ணியவனுக்கு, அவளை அப்படியே அள்ளி, தன் மார்போடு அணைத்து, உனக்கு நான் இருக்கிறேன் கண்மணி என அவளை நெஞ்சோடு இறுக்கிக் கொள்ளத் துடித்த கரங்களை கட்டுப்படுத்திக் கொண்டு, சட்டென அறையை விட்டு வெளியேறினான்.

தண்ணீர் கொண்டு வந்த குழந்தையிடம் "தாத்தா எங்கேடா..?" என்றபடியே நீரை வாங்கிப் பருகி, தன்னை சமனப்படுத்திக் கொண்டு அங்கே இருந்த நாற்காலியில் அமர்ந்தான்.

வெளியே சென்றிருந்த பிரகாசம் வந்து சேர, புதிதாய் ஒருவனைப் பார்த்து கேள்வியாய் முகம் சுருக்கினார். மரியாதையாய் எழுந்து நின்றவன் "சார், நான் வளவன்.. இன்ஜினியர்.. ஒரு தனியார் கன்ஸ்ட்ரக்ஷன்ல வொர்க் பண்றேன். கயல் கடைக்கு எதிர்ல இப்போ ஒரு ப்ராஜெக்ட் செய்து கொண்டு இருக்கேன்" என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்.

"ஓ அப்படியா தம்பி? உட்காருங்க.." என்று அமர வைத்து தானும் அமர்ந்தார் பிரகாசம்.

"என் தங்கை கல்யாணத்துக்கு கயல் கிட்ட தான் திருமண உடைகள் அத்தனையும் தைத்தோம் சார்.. உறவினர் ஒரு வருட விசேஷம் வருது.. அதற்காக அவங்களைக் கேட்கலாம் என்று பார்த்தால் கடைக்கு வரல.. அதான் நேர்ல பாத்துட்டு போலாம்னு வந்தேன் சார்" என்றான் வளவன்.

"ஓ அப்படியா தம்பி?" என்றவர் தன் மகளைத் தேடி வீடு வரை வந்த அவனை முழுவதுமாய் உள்வாங்கிக் கொண்டார். வளவனை அவருக்கு முதல் பார்வையிலேயே பிடித்துப்போனது. அவனை யாருக்குத்தான் பிடிக்காமல் போகும்..?

தொடரும்..
 

Megala Appadurai

Saha Writer
Team
Messages
66
Reaction score
66
Points
18
அத்தியாயம் - 8

அடர்ந்ததொரு கானகம். கருமையைக் குழைத்துப் பூசியது போன்றதொரு இருள். சுழற்றியடிக்கும் பெருமழை. சுற்றிலும் மிருகங்களின் ஓலம். திக்குத் தெரியாமல் தவித்து, இங்குமங்குமாய் அலைமோதிக் கொண்டிருக்கிறாள் அவள். எங்கோ ஓரிடத்தில் இருந்து "அம்மா.." என அவள் மகளின் குரல்... பதற்றத்துடன் குரல் வந்த திசையை நோக்கி ஓடுகிறாள். "பயப்படாதே கயல். நான் இருக்கிறேன்.." என்றபடி அவள் மகளை அள்ளி அணைத்தபடி அருகில் வந்து நிற்கிறான் அவன். ஆதரவாய் அவள் நெற்றியில் முத்தமிட்டு அணைத்துக் கொள்கிறான். இத்தனை நேரம் கடந்து வந்த துன்பம் தாளாமல் அவன் மார்பில் சாய்ந்து அழுகிறாள். வழிந்த அவளின் கண்ணீரைத் துடைத்து, இமைகளின் மீது முத்தமிட்டு, அவளை அணைத்தபடி, அந்த அடர்ந்த கானகத்தை விட்டு அழகியதோர் வண்ணப் பூஞ்சோலைக்கு அழைத்துச் செல்கிறான் அவன். நிமிர்ந்து அவனைக் காண்கிறாள். அவளைப் பார்த்து புன்னகைக்கிறான். சிரித்த சிரிப்பில் விழுந்து, அவன் கன்னக்குழியில் அவள் கரைந்தே போகிறாள்.

சட்டென துயில் கலைய, அடித்துப் பிடித்து எழுந்து அமர்ந்தாள் கயல். அது அவன்...‌ அவன்... வளவன்... அவளுக்கு நெற்றியில் குறுகுறுத்தது. இமைகளைத் தன் விரல்களால் தடவிப் பார்த்தாள். கண்டது கனவு போலத் தோன்றவில்லை அவளுக்கு. அவன் இங்கே வந்தானா...? அவன் குரல் அவள் காதுகளுக்குள் கேட்டது. இது பிரமையா..‌ ? அவனையே நினைத்து நினைத்து அவன் இருப்பது போல் தோன்றுகிறதா எனக்கு..? மெல்ல கட்டிலை விட்டு எழுந்து வெளியே வந்தாள்.

அங்கே அவள் தந்தையிடம் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பது அவன்தான்.. அவனேதான். வந்து விட்டானா? என்னைக் காண என் வீடு வரை வந்து விட்டானா..? கால்கள் வலுவிழந்து நிற்க முடியாமல் அவள் தடுமாறினாள்.

"கயல் .." என்ற அழைப்புடனே இரண்டே எட்டில் அவளை தாங்கிப் பிடித்திருந்தான்.

அவனின் சத்தத்தில் கயலைப் பார்த்த தந்தை பதறி எழுவதற்குள், அவளை வளவன் தாங்கிப் பிடித்தது கண்டு நிம்மதிப் பெருமூச்சு விட்டார் பிரகாசம்.

"ஏம்மா எழுந்து வந்த..? இந்நேரம் கீழே விழுந்து இருந்தால் என்ன ஆயிருக்கும்..?" என்று அவரும் தாங்கிப்பிடித்தார்.

அவள் விழிகள் அவனையே பார்த்துக் கொண்டிருந்தன. மீண்டும் படுக்கை அறைக்குள் அவளை அழைத்துச் செல்ல முற்பட்ட அப்பாவைத் தடுத்தவள், "நான் கொஞ்சம் உக்காந்து இருக்கேன்பா.. என்றாள் ஜீவன் இல்லாத குரலில்.

இருவரும் கைத்தாங்கலாய் அழைத்து வந்து, அவளை இருக்கையில் அமர வைத்து அவர்களும் அமர்ந்தனர்.

"இப்படித்தான் தம்பி. ஜுரத்தைக் கூட தாங்க முடியாத அளவுக்கு உடம்புல சத்தே இல்லாம இருக்கா... மிரட்டி சாப்பிட வைக்க இவ என்ன சின்ன பொண்ணா..? எதையும் விரும்பி சாப்பிடறதே இல்ல. அப்புறம் இப்படித்தான் ஒரு சின்ன காய்ச்சலைக் கூட தாங்க முடியாம போய்டுது..." என்று குறைபட்டுக் கொண்டார் பிரகாசம்.

அவளைப் பார்த்தான் வளவன். அவள் தலையைத் தாழ்த்திக் கொண்டாள்.

"இனி சரியாகிடுவாங்க சார்.." என்றான்.

"என்னமோ தம்பி.. எம்பொண்ணு நல்லாருந்தா அதுவே எனக்கு போதும்.." என்றார்.

"கண்டிப்பா நல்லாருப்பாங்க... நீங்க கவலைப்படாதீங்க..." என்றவன், "என்ன கயல்.." என அவளை கேட்க,

என்ன கூறுவதென்று விழித்தவாறே "ம்ம்..." என்றாள்.

"சார், ரொம்ப களைப்பா தெரியுறாங்க.. ஜூஸ் மாதிரி ஏதாவது குடுக்கலாமா..? என வினவினான் அவளது களைப்பு உணர்ந்து.

"பாருங்க நானே மறந்துட்டேன். இருங்க தம்பி வர்றேன்..." என்றவாறே அவர் உள்ளே எழுந்து செல்ல,

"என்னாச்சு... ஏன் இப்படி உடம்பை கெடுத்துக்கற.." என்றவன் "அழுதயா...?" என்றான் கோபமாய்.

அவனுடைய உண்மையான அன்பும், அக்கறையும் அவன் கேள்வியில் தெரிய.. அவனை நேருக்குநேர் பார்க்க மாட்டாமல் தலை குனிந்தாள்.

"என்னைப் பாரு கயல்..." என்றவன் தணிந்த குரலில் "என்னை பிடிக்கலேன்னா நேரா சொல்லிடு.. உன்னை நீயே வருத்திக்காதே.. அதை என்னால தாங்க முடியல.." என்று முடிக்க,

அவனின் வார்த்தையில் பட்டென தலையை உயர்த்தியவள் "அப்படி இல்ல..." என அவசரமாய்க் கூறி, உதடு கடிக்க..

அவளின் வார்த்தையின் பொருள் உணர்ந்தவன் "அப்போ பிடிச்சிருக்கா...?" என்றான் அதே தணிந்த குரலில்.

அவள் பதில் கூறாமல் தலை கவிழ்ந்தாலும் அவளின் முகச்சிவப்பு அவள் சம்மதத்தை சூசகமாய் அவனுக்கு உரைத்தது.

கோபம் கொஞ்சம் குறைய "ஏன் அழுதேன்னு நான் கேட்கப் போறதில்ல... ஆனா இனி நீ அழவே கூடாது. சரியா..?" என்றான்.

"ம்ம்..." என அவள் மெல்ல தலையசைத்தாள்.

பிரகாசம் அவளுக்கும் அவனுக்குமாய் கொண்டு வந்த பழச்சாறை அவள் பருகுவதை கவனித்தவாறே தானும் பருகிவிட்டு, பிள்ளையை அழைத்து அவன் வாங்கி வந்த பொம்மை மற்றும் சாக்லேட்களை அவன் கொடுக்க, அந்த பிஞ்சோ தன் தாத்தாவையும், அன்னையையும் நோக்கினாள்.

"வாங்கிக்கோ சாமி.." என்று பிரகாசம் கூற மகிழ்ச்சியோடு பெற்றுக் கொண்டவள், ஆசையாய் அதைப் பார்த்தவாறே,

"எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு அங்கிள், தேங்க்யூ..." என்றவாறே சிட்டாய்ப் பறந்து போனாள்.

"உடம்ப பாத்துக்கோங்க கயல்.. நல்லா ரெஸ்ட் எடுத்துட்டு அதுக்கப்புறம் வாங்க. அப்போ நான் கெளம்புறேன் சார்.." என்று பிரகாசத்திடமும் விடைபெற்றுக் கிளம்பினான் வளவன். எழுந்து வாசல் வரை வந்து அவனை அனுப்பியவளை ஆச்சர்யத்தோடு நோக்கி மனதினுள் குறித்துக் கொண்டார் அந்த தந்தை.

வளவன் கயல் வீட்டிற்கு சென்று வந்து சில தினங்கள் கயல் கடைக்கு வரவில்லை. அவளைக் காணவில்லை என்றாலும் தினமும் இரு முறையாவது அவளை அழைத்து உடல் நலம் விசாரிப்பதும், உணவு உட்கொண்டாளா..? மருந்து மாத்திரை எடுத்துக் கொண்டாளா..? என்று கேட்பதும் வாடிக்கையாகிப் போனது அவனுக்கு.

அவன் தன்னுடைய காதலைப் பற்றி பேசியதாகக் கூட காட்டிக் கொள்ளவில்லை அவளிடம்.. ஆனால், அதைத் தவிர அனைத்தும் செய்யலானான். அவனின் அழைப்பு ஒருமையில் மாறி இருப்பதை உணர்ந்தாள் அவள். அவன் அவளிடம் உரையாடும் தருணங்களில் எல்லாம் தன் மனம் நிறைவாய் உணர்வதைக் கண்டாள். ஒவ்வொரு முறை அவன் அழைக்கும் தருணங்களில் எல்லாம் 'குழந்தை என்ன செய்கிறாள்..' என்பதைக் கேட்க தவறுவதே இல்லை அவன்.

அலைபேசி ஒலித்தால் அது அவனாக இருக்குமோ என்ற எதிர்பார்ப்பு தோன்றுவதை தடுக்க இயலவில்லை அவளால். நாளுக்கு நாள் அவன் மீது ஒரு இனம் புரியாத அன்பு உருவாவதை உணர்ந்தாள். இதுதான் காதலா..? அவனைக் காணும்பொழுது முகம் சிவந்து நாணுவதும், அவன் இல்லாத நேரங்களில் அவனைச்சுற்றி நினைவுகள் செல்வதும், அவனைக் கண்டால் பரவசமடைந்து, அவன் குரலை கேட்டாலே உள்ளம் குதூகலிப்பதும், அவன் இல்லாத நேரங்களில் வெறுமையை உணர்வதற்கும் பெயர்தான் காதலோ...? தான் இதுவரை உணராத உணர்விது என்பது அவளுக்கு தெள்ளத் தெளிவாய் புரிந்தது.

அவன் மீதான காதல் சாத்தியமா..? எத்தனை தூரம் இது சாத்தியம்..? மணமாகாத ஒருவன் ஏழு வயதில் ஒரு பெண் குழந்தையோடு இருக்கும் விதவையான பெண்ணான தன்னை மணப்பதா..? இச்சமூகம் அதை ஏற்குமா..? அவன் தாய் ஏற்றாலும் அவன் வீட்டில் உள்ளவர்கள் என்னை அவன் மணக்க சம்மதிப்பார்களா..? நாளை இந்த குழந்தைக்கு தந்தை அவன் என்றா கூறுவான்..? வீதியில் நடக்கும்போது அவனைக் கேலி செய்ய மாட்டார்களா..? என ஆயிரம் கேள்விகள் துளைத்தது. எது எப்படி இருந்தாலும் அவள் அவனை நேசிக்கத் தொடங்கி இருந்தாள்.

வளவனுக்கு அவளைக் காண வேண்டும் என்ற உந்துதல் இருந்தாலும், அவள் உடல் நலம் தேறி வரட்டும் என்று காத்திருந்தான். அவள் சகஜமாக உரையாடவில்லை என்றாலும் கூட அவன் அழைப்பை ஏற்பதும் அவன் கேட்கும் கேள்விகளுக்கு உரிய பதில் அளிப்பதுமே அவனுக்கு போதுமானதாக இருந்தது. அதற்கு மேல் ஏதாவது பேசி அவள் பேசும் சிறு வார்த்தைகளும் கூட தடைபட்டுவிடக்கூடாது என்று எண்ணினான்.

ஒரு வாரம் நீண்ட விடுமுறைக்கு பின் கடைக்கு வந்தாள் கயல். அவளுக்கு முன்னரே வந்து காத்திருந்தான் வளவன். இந்த ஒரு வாரமாய் அவளைக் காணாது பட்ட பாடு அவனுக்குத்தானே தெரியும்..? ஏற்கனவே மெலிந்த தேகமுடையவள் மேலும் மெலிந்து போயிருப்பது தெரிந்தது. அவள் கண்கள் அவனைக் கண்டதும் பரபரப்பாவதைக் கண்டு மனதிற்குள் மகிழ்ச்சி கொண்டான்.

கடையின் ஷட்டரைத் திறக்க உதவியவாறு "இப்போ தேவலையா..?" என்றான்.

"ம் நல்லாருக்கேன்.." என்றவள் "இவ்வளவு சீக்கிரமா வந்துட்டிங்க..?" என வினவினாள்.

'உன்னைப் பார்க்கத்தான்..' என வாய் வரை வந்த வார்த்தையை அடக்கிக்கொண்டு, "கொஞ்சம் வேலை இருந்தது, அதான் நேரமா வந்தேன்.." என்றவன் தன் பாக்கெட்டில் இருந்து ஒரு பொட்டலத்தை எடுத்து "அம்மா கோவிலுக்கு போனாங்க.. உனக்காக கொடுத்து விட்டாங்க.." என்றபடியே அவளிடம் நீட்டினான்.

வியப்புடன் அதைப் பெற்றுக் கொண்டு "எனக்காகவா..?" என்றாள்

"ம் உனக்காகத்தான், உனக்கு உடம்பு சரி இல்லைன்னு சொன்னேன். போயிட்டு வந்தாங்க.."

அமைதியாய் அங்கிருந்த சுவாமி படம் முன் கண்ணை மூடி ஒரு நொடி நின்றவள், அதைப் பிரித்து அதில் இருந்த திருநீறை மட்டும் வைத்துக் கொண்டவள், குங்குமத்தை எடுக்காமல் மடித்து வைத்து விட்டதை அவன் கவனித்தான்.

"சாப்பிட்டியா..?" என்றான்

"ம் ஆச்சு..." என்றவள் "நீங்க..?" என கேள்வி எழுப்ப,

"இல்ல சீக்கிரமா கிளம்பிட்டேன். ஹோட்டல் போகணும்.." என்றான்.

டிபன் பாக்ஸை எடுத்து வைத்தபடி கேட்டுக் கொண்டிருந்தவள், தன் உணவை கொடுக்கலாமா என யோசித்தவாறே கையிலிருந்த டப்பாவைக் காட்டி "இதை வேணா சாப்பிடறீங்களா...?" என கேட்க

"தாராளமா.." என்று கை நீட்டி வாங்கிக்கொண்டு, "என்ன ஸ்பெஷல் இன்னைக்கு...?" என்றவாறே அதைத் திறந்தான்.

"தக்காளி சாதம், உருளைக்கிழங்கு வறுவல்.. ஜீவிக்கு பிடிக்கும்.." என்றாள்.

தக்காளி சாதத்தின் மணம் அந்த இடத்தை நிரப்பியது.

"ஹா... வாசனையே அள்ளுதே.." என்றவன் "இங்கேயே உட்கார்ந்து சாப்பிடவா... இல்ல, உனக்கு ஏதும் தொந்தரவா இருக்குமா..?" என்றான்.

என்ன கூறுவதென்று தெரியவில்லை அவளுக்கு. ஆனால், உணவைக் கொடுத்து விட்டு உண்ணவா என்று கேட்பவனை இங்கே வேண்டாம் உன் இடத்திற்குப் போய் சாப்பிடு என்றா கூறுவது..?

"சாப்பிடுங்க.." என்றவாறே அங்கிருந்த நாற்காலியை நகர்த்தி, அவன் அமர்ந்து சாப்பிட வசதி செய்து கொடுத்தாள். தண்ணீர் பாட்டிலை எடுத்து அருகில் வைத்தாள்.

அவன் ரசித்து உண்டவாறே "ரொம்ப நல்லா இருக்கே.. சமையலும் சூப்பரா வரும் போல.." என்றவாறு சீக்கிரம் உண்டு முடித்து விட, அவனுக்கு அது போதுமானதாய் இருந்திருக்குமோ என்ற சந்தேகம் அவளுக்கு. அவள் சாப்பிட போதுமானதாக எடுத்து வந்தது அவனுக்கு பசி தாங்குமா என்ற சந்தேகம். அதே சந்தேகத்துடன் "உங்களுக்கு இது போதுமா..?" என்றாள்.

"மதியம்ன்னா கண்டிப்பா இது போதாது. இப்போ இது போதும்.." என்று எழுந்து கை கழுவினான்.

டப்பாவை எடுத்து கழுவி மூடி வைத்து விட்டு வரும் வரை அவளை அமைதியாக கவனித்துக் கொண்டிருந்தவன், "சரி, கிளம்பவா..?" என கேட்க

"ம்.." என்றாள்.

"வேலை விஷயமா வெளியூர் போறேன். வர பதினைந்து நாள் ஆகும்.." என்று அவன் அமைதியாய்க் கூற, சட்டென நிமிர்ந்து அவனைப் பார்த்தவள் ஏதும் கூறவில்லை. ஆனால் அவள் முகம் அவனுக்கு பல செய்திகளை உணர்த்தியது.

"சரி நான் கிளம்புறேன்.." என்று கூறி கிளம்பி சென்றான். அவன் சென்ற சில நிமிடங்களில் கலைவாணியும், தேவியும் வந்து விட, அவள் யோசிக்க நேரமில்லாமல் வேலை ஓடியது.

பதினொரு மணிக்கெல்லாம் பழச்சாறு அடைக்கப்பட்ட டம்ளரும், கலைவாணி, தேவிக்கு பஜ்ஜியும் டீயும் வளவனுக்கு கீழ் பணிபுரியும் சித்தாள் பெண்ணொருத்தி வந்து "கயல் அக்காவுக்கு ஜூஸும், அந்த அக்காங்களுக்கு பலகாரமும், டீயும் இன்ஜினியர் ஐயா கொடுத்துட்டு வரச் சொன்னாங்க.." எனக் கொடுத்து விட்டுப் போனாள்.

"பார்ரா.. எங்களுக்கு மட்டும் டீயும், பலகாரமும்.. முதலாளி அம்மாவுக்கு மட்டும் ஜூஸா..." என்று கலைவாணி கிண்டலடிக்க அவளுக்கு முகம் சிவந்து போனது.

"வாணிக்கா.." என்று வெட்கி முகம் சிவப்பதைக் கண்ட கலைவாணி, இவளைப் பார்த்த இத்தனை ஆண்டுகளில் இதுவரை கண்டிராத முகச்சிவப்பு இது என்பதனை உணர்ந்தாள். தங்கள் முன் அவள் பழச்சாறை எடுக்க மாட்டாள் என்பதை உணர்ந்து, பழச்சாறு டம்ளரை எடுத்து அவள் கையில் கொடுத்துவிட்டு மற்றதை இருவரும் பகிர்ந்து கொண்டார்கள்.

அவள் அருந்துவதை இங்கிருந்தே கவனித்தவன் "குட்.." என வாட்ஸ்அப்ல் செய்தி அனுப்பினான்.

மேசை மீதிருந்த அலைபேசியை எடுத்து அதில் வந்திருந்த அவன் செய்தியைக் கண்டவளின் கண்கள் அவனைத் தேடின.

"மேலே பாரு.." என்று மீண்டும் ஒரு குறுஞ்செய்தி வர, சட்டென நிமிர்ந்து நோக்கினாள். மாடியில் டீ டம்ளரைப் பற்றியபடி கயலை நோக்கிப் புன்னகைக்க.. அவள் தலை தானாய் தாழ்ந்தது.

"தேங்க்ஸ்.." என்று விரல்கள் டைப் செய்தன.

"எதற்கு..?" என்று கோப ஸ்மைலியோடு அவன் பதில் அனுப்பினான்.

"எல்லாத்துக்கும்.." என்று பதில் அனுப்பினாள்.

"எல்லாத்துக்கும்னா தேங்க்ஸ் சொல்ல கூடாது..."

"வேற...?"

இதய வடிவத்தை அவன் பதிலாக அனுப்பினான். அதற்கு மறு பதிலாய் என்ன அனுப்புவது என்று தெரியாமல் அவள் விரல்கள் தடுமாறின.

சில நிமிடங்களில் சிரிப்பு ஸ்மைலிகள் சில வந்தன. "உன்கிட்ட இருந்து மௌனம்தான் பதிலாக வரும்னு எனக்கு தெரியும்.." என்றிருந்தான்.

அடுத்து "போய் வேலையை பார்.." என்று அனுப்பியவனுக்கு, முகத்தைச் சுழிப்பது போன்றதொரு ஸ்மைலியை பதிலாக அனுப்பிவிட்டு அவளது வேலையை தொடர்ந்தாள்.

ஆனாலும் தன் நினைவுகள் அவனைச் சுற்றியே வருவது அறிந்தாலும், அவளால் முழுவதுமாய் ஏற்றுக்கொள்ள இயலாமல் தவித்து மறுகினாள். ஆனால் முற்றிலுமாய் அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது என்பதை விரைவில் உணரப் போகிறாள் என்பதை அப்போதைய அவள் மனம் உணரவில்லை.


தொடரும்...
 

Megala Appadurai

Saha Writer
Team
Messages
66
Reaction score
66
Points
18
அத்தியாயம் - 9

வளவன் இல்லாத இந்த பத்து நாட்களில் நிறைய மாறுதல்கள் ஏற்பட்டிருந்தது. கயலின் சமீபகால நடவடிக்கைகளில் மாறுதலைக் கண்ட அண்ணி வேணிக்கு அவளின் மேலிருந்த வன்மத்தை மேலும் அதிகரிக்கச் செய்தது. ஜாடைப் பேச்சுகள் நேரடித் தாக்குதல்களாக மாறி இருந்தன.

அது ஜீவாவை பாதிக்கும் அளவுக்கு மாறிப் போகும் என கயலோ அவளின் தந்தையோ சற்றும் எதிர்பார்க்கவில்லை.

கயல் தன் தேவைகளை தன் வருமானத்திலேயே பார்த்துக் கொண்டாலும் அவள் மகளின் தேவைகள் மற்றும் படிப்பு என அனைத்தையுமே பிரகாசம் அவரது பணத்திலிருந்து செய்வதை வேணியால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. தன் குழந்தைகளுக்கு மட்டுமே கிடைக்க வேண்டியது எவனோ பெற்று போட்டுவிட்டுப் போன பிள்ளைகளுக்குச் செய்ய வேண்டுமா..? என நேரடியாக சண்டையிட ஆரம்பித்தாள். என்றோ ஒரு நாள் அவள் கணவன் தன் தங்கைக்கு வாங்கி வரும் தின்பண்டங்களுக்குக் கூட பேச ஆரம்பித்தாள்.

"ஊர்ல இருக்கிறவன் பெத்துப் போட்டுட்டு செத்துப்போவான். அதுக்கெல்லாம் வாங்கிப் போட்டு வளர்க்க முடியுமா..? என்றாள்.

தன் பிள்ளைகளோடு விளையாடும் குழந்தையிடம் "போ.. போய் கீழே விளையாடு.. என்றைக்கு உங்க அம்மா இங்கே வந்தாளோ, அன்னைக்கே எங்களப் பிரிச்சு மேலே அனுப்பிட்டா.. நீ வேற உன் பங்குக்கு என் பிள்ளைகளுக்கு எதுவும் கிடைக்காம பண்ணிட்ட.. இன்னும் என்ன..?" என துரத்தினாள். வாடிப்போய், கீழே வந்து முடங்கிக் கொள்ளும் அந்த பிஞ்சு மனது.

ஒன்றாக இருக்கும் வரை பிரகாசமே அனைத்து செலவுகளையும் செய்து வந்ததார். தனியே வந்த பின் தன் கணவனின் வருமானத்தில் செய்வது அவளுக்கு வெறுப்பை ஏற்படுத்தியது. எல்லாம் தாராளமாய் புழங்கிக் கொண்டிருந்தது போய் இப்பொழுது எதற்கெடுத்தாலும் கணவன் சிக்கனம் பேசுவது அவளுக்கு எரிச்சலைக் கொடுத்தது.

தன் குடும்பம், குழந்தைகளுக்கான பொறுப்பு தங்களுக்கு இருக்க வேண்டும். எவரையும் எதிர்பார்க்கக் கூடாது என்ற அடிப்படைப் புரிதல் கூட வேணிக்கு இல்லை. அவளைப் பொறுத்தவரை தன் கணவனது மொத்த வருமானமும் தனக்கான நகைகளையும், சொத்துக்களையும் சேர்க்கவும் மட்டுமே பயன்பட வேண்டும் என்று எண்ணினாள். மகனுடைய பிள்ளையை பார்ப்பதுபோல், மகன் பிள்ளைகளையும் பார்க்கட்டுமே என்ற எண்ணம் அவளுக்கு.

அப்படி ஒன்றும் பிரகாசம் முழுவதுமாய் குழந்தைகளைக் கவனிக்காமல் இருந்து விட வில்லை ஆனால் தன் மகளுக்குச் செய்யாததும் சேர்த்து தன் பேத்திக்கு அவர் செய்ய முனைய, அதுவே வேணிக்கு அதிக ஆற்றாமையாய் போனது.

தனக்குக் கிடைத்திருக்க வேண்டிய உரிமைகளும், சுகங்களும் கிடைக்காததாலேயே, அவள் வாழ்க்கையில் பட்ட துன்பங்களைச் சகித்துக்கொண்டு, தங்களிடம் எதுவும் கூறாமலேயே விட்டுவிட்டதாய் உணர்ந்தார். பிரகாசம் தன் மகளின் நரக வாழ்க்கைக்கும், அவளின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறியதற்கும், அவளின் தற்போதைய சூழ்நிலைக்கும் தன்னுடைய வளர்ப்பு முறையே காரணம் என்று எண்ணினார். முடிந்த அளவு அவற்றையெல்லாம் மாற்றி விட முனைந்தார்.

கயலுக்கு முழு சுதந்திரம் கொடுத்திருந்தார். அவளால் தன் முடிவுகளைத் தானே எடுக்க முடியும். அதற்கு தந்தையோ, தமையனோ மறுக்கப் போவதில்லை. ஆனால் சிறுவயது முதல் அவள் வளர்ந்த நிலை அவளை அவ்வளவு எளிதாக மாற்றி விட வில்லை. அவள் மாறவும் இல்லை. கல்லூரியில் படிக்கும் காலத்தில் பிரகாசத்தின் வற்புறுத்தலில் இரண்டு சக்கர வாகனம் ஓட்டிப் பழகி, அவர் வாங்கிக் கொடுத்த வண்டியில் கல்லூரி சென்று வர ஆரம்பிக்கவே, மூன்றாம் வருட முடிவில்தான் சாத்தியப்பட்டது அவளுக்கு. அத்தனை பயம். அவள் தன் தொழில் என்று வந்து விட்ட பின் தேவையான மூலப் பொருட்களை வாங்கவும் யாரையும் எதிர் நோக்கி இருக்க முடியாது என்று உணர்ந்த பின்னரே தானே சென்று வரப் பழகியிருந்தாள்.

மறைமுகமாய் பிரகாசம் அவற்றை பழக்கினார் என்றே சொல்லலாம். அவள் தொழிலில் தன் தலையீடு இருந்தால், அவள் தன்னையே சார்ந்திருக்க ஆரம்பிப்பாள் என்று அவர் ஆரம்பித்துக் கொடுத்ததோடு சரி, அதற்கு மேல் என்னவானாலும் நீயே பார்த்துக்கொள் என்று இருந்து விட்டார். அது கயல் லேசாய் வெளி உலகில் காலடி வைக்க காரணமாயிருந்தது. பின் அவள் எங்கே சென்றாலும் தனித்துச் சென்று வரப் பழகி இருந்தாள். அவள் பயந்தது வேணியின் நாக்கு ஒன்றிற்குத்தான்.

வெளியே செல்லும்போதும், உள்ளே வரும்போதும் வேணியின் குத்தல் பேச்சு அதிகரிக்கவே மூச்சு முட்டியது கயலுக்கு. வளவனைக் காணாத இந்த நாட்கள் ஒருபுறம் அவளை வாட்டி எடுக்க, வேணி ஒருபுறம் குடைந்து எடுத்தாள்.

கடைசியாய் அவனை சந்தித்த தினத்தில் இருந்து அவன் சென்ற இந்த ஏழு நாட்களில் ஒரு முறை கூட அவன் அழைக்காதது அவளை பெரிதும் வாட்டியது. தன் கைப்பேசியை எடுத்து அவனிடம் இருந்து ஏதும் குறுஞ்செய்தி வந்திருக்கிறதா என நிமிடத்திற்கு ஒருமுறை பார்த்து சலித்து போனாள்.

கைபேசி ஒலிக்கும் போதெல்லாம் அவனாய் இருக்குமோ என்ற ஆவலாய் எடுத்து அவனில்லை என்றதும் சோர்ந்து போனாள். சில தினங்கள் இப்படியே செல்ல அவன் மீது கோபம் முளைக்கத் தொடங்கியது. 'என்னவோ அவ்வளவு பேச்சு பேசினான். இப்போ என்ன வந்துச்சாம் ஒரு போன் கூட செய்யல...' என்று அவனை மனதினுள் அர்ச்சித்துக் கொண்டிருந்தாள்.

சில நொடிகளிலேயே, ஏன் அவன் அழைக்கவில்லை? அவனுக்கு ஏதோ நேர்ந்து இருக்குமோ? என அச்சம் கொள்ள ஆரம்பித்தாள். தினமும் இரண்டு முறையாவது பேசுபவன் குறுஞ்செய்தி மூலம் என்ன செய்கிறாய் என்று விசாரிப்பவன் ஒரு வார காலம் எந்த தகவலும் இல்லை என்பதில் கோபம் ஒருபுறமும், பதட்டம் ஒருபுறமும் அவளை அலைக்கழிக்க.. இனி அவன் குரல் கேட்காமல் முடியாது என்று அவன் எண்ணிற்கு அழைத்தாள்.

அவளின் அழைப்பில் உடனே எடுத்தவன் எடுத்தவுடன் "இதற்கு உனக்கு ஒரு வாரம் ஆச்சா..?" என கடிந்து கொண்டான்.

அவன் குரல் கேட்டவுடன் மனதில் ஒரு நிம்மதி பரவ 'நான் தானே கோவப்படனும்? இவன் என்ன கோபப்படறான்..?' என நினைத்து அவன் கேட்டது நினைவு வர "எதற்கு..?" என்றாள்.

"எனக்கு போன் செய்ய.." என்றான் அவன்.

"ஏன் நீங்க பண்ணல..? என்னமோ ஏதோன்னு பயந்துட்டேன்.." என்றாள் மனதை மறைக்காமல்.

"நான் தானே எப்பவும் பேசுறேன்..? அங்கே இருந்து ஒரு எதிரொலியும் வரலையே..? பின்ன எப்படி பேசுறது..? நானும் வந்த அன்றைல இருந்து இப்ப பேசுவ, அப்ப பேசுவேன்னு எவ்வளவு நேரம் தான் மொபைலை பார்த்துட்டு இருக்கிறது..? ஒரு மெசேஜ் ஆவது செஞ்சயா..? ஒவ்வொரு முறை போன் வரும்போதும் நீயாய் இருப்பியோன்னு தவித்தது எனக்குத்தானே தெரியும்..? அம்மணி என்னன்னா சாவகாசமா ஒரு வாரம் கழிச்சு பேசுறீங்க..?" என்றான் வளவன்.

தன்னைப் போலவேதான் அவனும் தவித்திருக்கிறான். தான் செய்தது போலவே அவனும் செய்திருக்கிறான். பிறகு பேசுவதற்கு என்ன? என மீண்டும் அவளது மனக்குரங்கு மரத்தில் ஏறியது.

"அப்போ ஏன் போன் செய்யல..?" என்றாள் கோபக் குரலில்.

"பார்ரா, கோவம் எல்லாம் வருது. நீதான் எதுவும் சொல்லவே இல்லையே..? எந்த உரிமையில் பேசுறது..?" என்றான்.

ஓ... அப்படியா.. அன்னைக்கு எந்த உரிமைல பேசினீங்க..?" என்றாள் பதிலுக்கு.

"உரிமை இருக்குன்னு உன் வாயால் இன்னும் பதில் வராதபோது பேசறது நாகரீகம் இல்லைன்னு தோணுச்சு.." என்று அவன் நிறுத்த, உதடுகளை அழுந்தக் கடித்தபடியே அவன் கூறுவதை கேட்டு "அப்போ இனி பேச மாட்டேன்னு சொல்றீங்களா..?" என்றபோதே அவள் குரல் உடைவது போல் அவனுக்குத் தெரிந்தது.

"கயல்.."

குரல் கமற "ம்ம்.." என்றாள்.

"எனக்கு தினமும் உன்னோடு பேசணும், விடிய, விடியப் பேசணும். உன்னைப் பார்த்துக்கிட்டே இருக்கணும். உன் குரலைக் கேட்டுக்கிட்டே இருக்கணும். நாம கணவன் மனைவியாக, நம்ம குழந்தையோடு வெளியே சுத்தணும். இப்படி நிறைய ஆசை இருக்கு. உனக்கும் இருக்குன்னு எனக்கு தெரியும். ஆனால் ஏதோ ஒண்ணு உன்னைத் தடுக்குது. அதை ஒதுக்கிட்டு நீ வெளியே வரணும்னு நான் விரும்பறேன். உன் பதிலைச் சொன்னபின் தான் உன்கிட்ட பேசணும்னு இருந்தேன். என் மனசுக்குள் வந்த முதல் பெண் நீ தான். உனக்கும் அப்படித்தான்னு எனக்குத் தெரியும். ஆனா உன் மனசைக் கஷ்டப்படுத்திப் பார்க்க எனக்கு விருப்பம் இல்லை. நீ முழுமனதோடு என்னை விரும்பணும், ஏத்துக்கணும். அதற்காக நான் காத்திருப்பேன்.." என்று முடித்தான்.

அவன் பேசப் பேச அவளுக்கு அழுகை உடைத்துக் கொண்டு வந்தது. என்ன காரணம் சொல்வேன் நான்..? என் மனது எனக்கே புரியலையே? என நினைத்து கண்கலங்கியவள்,

"நீங்க நல்லா இருக்கீங்கல்ல? அது போதும்.." என்றபடி அதற்கு மேல் அவன் பதிலுக்குக் காத்திராமல் அலைபேசியின் அழைப்பைத் துண்டித்தாள்.

அவளுக்கு அவன் மீது காதல் என்பது அவனுக்கும் தெளிவு தான். ஆனால் அவள் தயக்கத்தை உடைத்து அதைக் கூற வேண்டும் என அவன் விரும்பினான். அவள் அதை முழுமையாய் வெளிக்காட்டவில்லை. மறைமுகமாகக் கூட வெளிப்படுத்தவில்லை. அவளின் தவிப்பையும், உணர்வுகளையும் கொண்டு மட்டுமே அவள் விரும்புவதாக உறுதியாக நம்பினான். அவள் ஏதேனும் ஒரு செயல் வழியாகவேனும் கூறாவிட்டால் எப்படி மேற்கொண்டு அவளை அணுகுவது என்றே எண்ணினான். வலுக்கட்டாயமாக, தன் காதலை அவள் மீது திணிக்க அவனுக்கு விருப்பமில்லை. எவ்வளவு வெளிப்படையாக தான் தன் மனதைத் திறந்த பின்னும், இன்னும் அவள் தன்னை வெளிப்படுத்தாமல் இருப்பது அவனுக்கு வருத்தமாய் இருந்தது.

ஆனால், அவளுக்கோ இப்படி ஒருவனுக்கு தான் ஏற்றவள் தானா? என்ற எண்ணம் தலைதூக்க ஆரம்பித்தது. மணமாகாத ஒருவனுக்கு, பிள்ளையுடன் இருக்கும் நான் எப்படி தகுதியானவள் ஆவேன்..? ஊரும், உறவும் என்ன பேசும்? அவன் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்க வேண்டியவன்..? ஆனால், நான் அவனை மணந்தால் அவன் மகிழ்ச்சி குறைந்து போகாதா..? என்ன இருந்தாலும் நான் இன்னொருவன் கை பட்டு கசங்கிய மலரல்லவா..? அவன் மனைவி ஆனால் அவன் தன்னை நாடும் போதெல்லாம் இந்த குற்ற உணர்வு என்னைக் கொன்று விடாதா..? என் வாழ்க்கை சூனியம் ஆனது சூனியமானதாகவே இருக்கட்டும். மீண்டும் ஒரு முறை காயப்பட அவள் விரும்பவில்லை. அவளால் அவன் வாழ்க்கை கெடுவதையும் அவள் விரும்பவில்லை. இனி அவனிடம் பேசவே கூடாது. அவனைத் தவிர்த்து விட்டால் புரிந்து விலகி விடுவான். அவனை மறப்பது கடினம் தான் என்றாலும் அவனை ஏற்பது அதை விடக் கடினம் என்று தனக்குத்தானே ஒரு வேலியை அமைத்துக் கொண்டாள்.

அவள் இன்னொருவனை மணந்தவளாக இருக்கலாம். ஆனால், என்றும் அதில் காதல் என்ற ஒன்று இருந்ததே இல்லை. அங்கு காமம் மட்டுமே பிரதானமாக இருந்தது. அதையும் கூட அவள் வலியுடன் மட்டுமே உணர்ந்திருக்கிறாள். ஒரு அன்பான காதல் கணவனின் ஸ்பரிசம் எப்படி இருக்கும் என்பதைக் கூட உணராத பேதை அவள். நரகமாய் வாழ்ந்த நாட்களில் பரிசாய் கிட்டிய குழந்தையைக் கூட வெறுக்கத் தெரியாத அவளும் ஒரு குழந்தையே. ஏனெனில், குழந்தைகள் எப்போதும் மற்ற குழந்தைகளை வெறுப்பதில்லை.

மனதிற்குள் ஒரு திடமான முடிவுடன், வலுக்கட்டாயமாக அவன் நினைவுகளை ஒதுக்கி, இறுகிய மனதுடன் தன் வேலையை அவள் தொடர, வளவனோ தன் பணியை முடித்துவிட்டு வர இன்னும் தாமதம் ஆனது.

என்னதான் அவனை நினைக்கக் கூடாது என்று அவள் தன் மனதிற்குள் கட்டுப்பாடுகள் விதித்து கடிவாளத்தைப் போட்டுக் கொண்டாலும், அவன் வர தாமதம் ஆகவே அவள் மனம் கலங்க ஆரம்பித்தது. நிலையில்லாது புலம்பும் தன் மனதை வெறுக்கலானாள். என்ன மாதிரியான பிறப்பு என்னுடையது..? ஏன் எனக்கு மட்டும் இப்படி ஒரு வாழ்க்கை? என மனதிற்குள் மறுகலானாள்.

தொடரும்...
 

Megala Appadurai

Saha Writer
Team
Messages
66
Reaction score
66
Points
18
வேரின் தாகம் 10

அத்தியாயம் 10

காதல் என்பது ஒரு மனிதனை இத்தனை மாற்றும் என்ற சில மாதங்களுக்கு முன் வரை வளவன் அறிந்திருக்கவில்லை. இப்பொழுது அவன் அனுபவிக்கும் பொழுது தான் நிதர்சனம் புரிந்தது. சொல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் தொண்டைக்குழிக்குள் துக்கத்தை அடைத்துக்கொண்டு திரிவது போன்று இருந்தது அவனுக்கு.

அவளின் நிலை அவன் உணர்ந்தே இருந்தான். அவ்வளவு எளிதில் அவள் முடிவெடுத்து விட முடியாது என்பதும் அவனுக்குப் புரிந்தது. அவள் கடந்த காலத்தை மறந்து சட்டென மற்றொரு ஆண் மகனை மனதில் ஏற்றுவது என்பது இயலாத காரியம் தான். ஆனால், அவளுக்குத் தன்னைப் பிடித்திருக்கும் பட்சத்தில் தன் காதலைச் சொல்ல ஏன் இவ்வளவு தயக்கம் காட்டுகிறாள்? அன்று அவ்வளவு கூறிய பின்னும் கூட பட்டென போனை வைத்து விட்டாளே? ஒருவேளை அவளுக்குப் பிடிக்க வில்லையோ? எனக்குத்தான் அப்படித் தோன்றுகிறதோ..? நாம் தான் அவசரப்பட்டு அவளிடம் அளவுக்கு அதிகமாய் உரிமை எடுத்து கொள்கிறோமோ? என்று பயமும் உண்டானது வளவனுக்கு.

அவளிடமிருந்து நேர்மறையான பதில் வராத பட்சத்தில் அவளை விட்டு விலகுவது தனக்கு சாத்தியமா? என்ற கேள்விக்கு இயலவே இயலாது என்று அவன் மனம் கூக்குரலிட்டது. பின், எங்கனம் சாத்தியம் இது என்று யோசித்தவனுக்கு, அவளே முன் வந்தாலொழிய இது நடக்க வாய்ப்பில்லை என புரிந்தது. அவளை எப்படி சம்மதிக்க வைப்பது என்று யோசித்து அவனுக்கு அவளின் கடைசி உரையாடல் நினைவிற்கு வந்தது. 'நீங்க நல்லா இருக்கீங்கள்ல? அதுவே போதும்' என்றாளே, அப்போ எனக்கு ஒண்ணுனா அவ துடித்து போவாள் அப்படித்தானே என மனம் மகிழ்ச்சியால் பொங்கியது.

'உடனே சந்தோஷப்பட்டுக்காதேடா வளவா.. அவ கல்லுளி மங்கி.. அவளை அவ்வளவு சீக்கிரம் வழிக்குக் கொண்டு வர முடியும்னு தோணலை..' என அவன் மனசாட்சி கூறியது.

அவளின் மனதை அவளே அறிவிக்க வேண்டும். அதுவும் முழு மனதோடு அவனை ஏற்க வேண்டும். அதற்கு என்ன செய்வது என்று யோசித்தவன், அதற்கான விடையையும் கண்டறிந்தான்.

அவன் கூறியதற்கு மேல் கூடுதலாய் நான்கு தினங்கள் கழித்து அவன் ஊர் திரும்பினான். அவன் வழக்கம் போல் வேலைக்கு வந்து விட, அவன் வந்ததைக் கயல் அறியவில்லை. வழக்கம் போல் தன் வேலையை தொடர்வதும் அவன் வந்து விட்டானாவென அடிக்கடி எதிர் கட்டிடத்தைப் பார்ப்பதுமாய் அவள் இருக்க, அவனைக் காணாது போகவே வாடி போனாள் அவள். ஏக்கத்தோடு எதிரே பார்ப்பதும், வாடிய முகத்தோடு வேலையைத் தொடர இயலாது அவள் தொய்ந்து போய் அமர்வதும் அவன் கண்டு கொண்டிருந்தானிருந்தான்.

அவளின் அந்நிலையை அவனால் சகிக்க முடிய வில்லை தான். ஆனால், அது அவசியமானது என்று தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டான். எப்பொழுதும் கயலின் கடை எதிரே, அவன் வேலை செய்யும் கட்டிடத்தின் முன்புறம் அவனது வாகனத்தை நிறுத்துவது வழக்கம். ஆனால், இன்று அவளது கடையின் பக்கவாட்டு மர நிழலில் நிறுத்தி விட்டு அவன் உள்ளே சென்றதை அவள் கவனிக்கவில்லை.

வெளியே செங்கல் எடுத்துக்கொண்டிருந்த சித்தாள் பெண்மணியிடம் பொதுவாய்க் கேட்பது போல் "என்ன, உங்க இன்ஜினியர் சார் இன்னுமா வரல..?" என்றாள்.

"அவரு காலையிலேயே வந்தாச்சுங்களே.." என்றபடியே சித்தாள் பெண் செங்கலைச் சுமந்து கொண்டு உள்ளே செல்ல, அவள் அங்கேயே கல்லாய் சமைந்து நிற்பது தெரிந்தது. அவன் மேலே இருக்கிறானாவென அவள் மேலே பார்க்க, அங்கேயும் அவனைக் காணாது அவளது பார்வை தாழ்ந்தது. மாலை வேலை முடிந்து எல்லோரும் கிளம்பும் வரையிலும் அவன் அவள் கண்ணில் படவே இல்லை. எல்லோரும் கிளம்பிய பின் எப்படியும் அவன் வருவான் என அவள் வாசலையே பார்த்திருக்க, அவனும் வந்தான், ஒரு வாரத்திற்கு மேலாக மழிக்கப்படாத தாடியுமாய். ஆனால், அவள் இருக்கும் திசை புறமாக கூட அவள் திரும்பவில்லை. நேராகச் சென்று அவனது வாகனத்தை எடுத்துக்கொண்டு அவன் கிளம்பிவிட, அவன் போவதைப் பார்த்தபடி திகைத்து நின்றாள். "என்ன ஆயிற்று இவனுக்கு? ஏன் இப்படி இருக்கிறான்?" என்று மனதிற்குள் வருந்தினாள்

தன்னால் தான் இப்படி இருக்கிறானா..? இல்லை, வேறு ஏதேனும் காரணமா? என மனதிற்குள் புலம்பினாள். எதுவாக இருந்தாலும், அவனை அவ்வாறு பார்க்க இயலவில்லை அவளால். திரும்பிக்கூட பார்க்காமல் போகிறானே என வருந்தினாள்.

மேலும் ஒரு வாரம் இப்படியே கழிந்தது. அவன் அவளின் புறம் திரும்பவே இல்லை. அவனது பாராமுகம் அவளை வெகுவாக பாதித்தது. அவனைப் பார்க்காமல் தவிர்க்க வேண்டும் . அப்படித் தவிர்த்தால் அவன் விலகி விடுவான் என்று நினைத்தாள் தான். ஆனால் அதை அவன் செய்யும் போது இதுவும் நல்லது என்று விலகிவிட இயலவில்லை அவளால்.

அவளால் இயல்பாய் இருக்க முடியவில்லை. கவனம் சிதறியது. எதையோ யோசித்துக்கொண்டு, எங்கோ வெறித்தபடி, வெறுமனே அமர்ந்து இருந்தாள். வளவன் சில நாட்களாய் அவள் கண்ணில் படுவதே இல்லை. அப்படியே தென்பட்டாலும், அவளை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. அவன் முகத்தில் சிரிப்பு மறைந்து விட்டதோ என்று எண்ணத் தோன்றும் அளவுக்கு முகத்தை கடுகடுவென வைத்திருந்தான். அவனை பார்த்த நாள் முதல் அவனை தாடியுடன் அவள் கண்டதில்லை ஆனால், அவன் வெளியூரில் இருந்து வந்த நாள் முதலாய் இப்படித்தான் இருக்கிறான். தன்னால்தான் அவனுக்கு இந்த துன்பம் என எண்ணி வருந்தினாள். தன்னால் யாருக்கும் எந்த பயனும் இல்லை என அவள் மனம் நிம்மதி இல்லாமல் தவிக்க... 'ஏன் இப்படி ஒரு வாழ்க்கை விதித்தாய் இறைவா..?' என இறைவனை நிந்தித்தாள்.

கயலின் தவிப்பு ஒரு புறமும், வளவனின் குழப்பம் ஒரு புறமுமாய் இருக்க.. குழந்தை ஜீவாவின் நடவடிக்கைகளில் சில மாறுதல்களைக் கண்டார் பிரகாசம்.

எப்பொழுதும் கலகலப்புடன் விளையாடும் குழந்தை, இப்பொழுதெல்லாம் சோர்வுடன் ஏதோ ஒரு புறமாய் சோகமே உருவாய் அமர்ந்து இருக்கக் கண்டார். என்னவென்று கேட்டால் "ஒண்ணுமில்லை தாத்தா.." என முடங்கிக் கொண்டாள்

காலையில் பள்ளிக்கு அனுப்பிவிட்டு தன் தொழிலைப் பார்க்க வரும் கயலால் இந்த வேறுபாட்டை உணர இயலவில்லை. ஏழு வயதுக் குழந்தைக்கு என்ன பெரிய காரணம் இருந்துவிட போகிறது என்று எண்ணினார் பிரகாசம். பள்ளியில் ஏதாவது நண்பர்களோடு சண்டையாக இருக்கும். விசாரிப்போம் என்று நினைத்திருந்த பிரகாசம் உறவினர் ஒருவரின் இறப்பிற்கு வெளியூர் சென்றுவிட, எப்பொழுதும் பள்ளி முடிந்ததும் பள்ளிப் பேருந்திலேயே வீட்டிற்கு வரும் குழந்தை, கயலின் அண்ணன் குழந்தைகளோடு விளையாடுவதே வாடிக்கை.

பிரகாசம் வெளியூர் சென்று விட்டதால் சீக்கிரம் வீடு திரும்பலாம் என்று கயல் நினைத்துக் கொண்டிருக்கும்போதே, அவளின் அண்ணன் மகன் தீபக், "அத்தை, ஜீவிதாவைக் காணோம்.. நாங்களும் தேடிப் பார்த்தோம்.. அவ எங்கே போனான்னு தெரியலை" என்று அழுகையோடு கூற, கையிலிருந்த கைபேசி நழுவ, கீழே விழுந்து மயங்கிச் சரிந்தாள் கயல்.

வேலை முடித்துக் கிளம்பிக் கொண்டிருந்த அவள் மயங்கி சரியவும், என்னவென்று புரியாத கலைவாணி 'என்னடி ஆச்சு' என்று அலற,

சம்பளப் பட்டுவாடா செய்து கொண்டிருந்த வளவன் காதுகளில் அந்த அலறல் சத்தம் விழுந்தது. என்னவோ என்று விரைந்து வந்தவன் கண்டது விழுந்து கிடந்த கயல்விழியைத்தான்.

"என்னவென்று தெரியல தம்பி.. போன் வந்தது; பேசினா; அப்படியே கீழே விழுந்துவிட்டா.." என்று கூற, இரண்டே எட்டில் உள்ளே நுழைந்து, அவளை அள்ளி தன் மடியில் கிடத்தியவாறே..

"கயல்.. கயல்.." என்று அவள் கன்னத்தை தட்ட அதற்குள் கலைவாணி தண்ணீரை முகத்தில் தெளித்துவிட லேசாக கண் விழித்தளுக்கு தண்ணீரை புகட்ட முயல,

"வேணாக்கா தண்ணி குடுக்காதீங்க.." என்றபடியே தன் கைக்குட்டையால் அவள் முகத்தை துடைத்து விட்டான்.‌

மலங்க, மலங்க விழித்தவளை அவன் குரல் உலுக்கியது.

"கயல் இங்கே பாரு.. என அவள் தாடையை தன் புறமாய் திருப்ப, அவனைக் கண்டவள் கண்ணீர் மல்க கேவியபடி "ஜீவி.. ஜீவி..." என சொல்ல முடியாமல் திணறினாள்.

"என்னாச்சு ஜீவிக்கு.. கொஞ்சம் பொறுமையா சொல்லு.." என அதட்டினான்.

எச்சிலை விழுங்கி துக்கத்தைத் தொண்டைக்குள் அடைத்தபடி "ஜீவியைக் காணோம்.." என்று கதறி அழுதாள்.

"முட்டாள்! குழந்தையை காணோம்ன்னா.. என்னன்னு பாக்காம இப்படியா அழுது மயங்கி விழுவாங்க..? முதல்ல எழுந்திரி.." என அவளைக் கைகொடுத்து தூக்கியபடி அவனும் எழுந்தான்.

"கலைவாணிக்கா.. நீங்க கடையை மூடிட்டு சாவி கொண்டு போங்க. நான் என்னன்னு பார்த்துட்டு உங்களுக்கு கால் பண்றேன்.." என்றவன் விழுந்து இருந்த அவளது அலைபேசியை சேகரித்துக்கொண்டு, மேஸ்திரியிடம் சம்பளப் பட்டுவாடாவை ஒப்படைத்துவிட்டு அவளைத் தன் கைப்பிடிக்குள்ளேயே வைத்துக்கொண்டு தன் பைக்கை கிளப்பி "ஏறு.." என்றான்.

பதிலேதும் கூறாமல் அழுதபடியே ஏறியவளை "முதல்ல அழறதை நிறுத்து. நீ அழறதா இருந்தா அழுது முடிச்சுட்டு வா.. நாம அப்புறமா கிளம்பலாம்.." என்று சற்றே அதட்டலுடன் கூறினான்.

கப்பென வாயைப் பொத்தி, முந்தானையால் கண்களைத் துடைத்து, அழுகையை நிறுத்த முயன்றாள் அவள். அடுத்த பத்தாவது நிமிடம் கயலின் வீட்டு வாசலில் நின்றான்.

அக்கம்பக்கத்தினர் கூடியிருக்க அவளின் அண்ணன் மக்கள் தீபனும், தாரணியும் அழுதபடி நின்றனர். அவளைக் கண்டதும் ஓடி வந்த குழந்தைகள் "அத்தை.. ஜீவியக் காணோம் நாங்க விளையாடிட்டுதான் இருந்தோம்.. ஜீவிய அம்மா திட்டானாங்களா... அப்போ அழுதுக்கிட்டே கீழே போனா... எங்களை ரூம்ல போட்டுப் பூட்டிட்டாங்க அம்மா. திரும்ப வந்து பார்த்தா ஜீவியைக் காணோம். தாத்தாவும் இல்லை.." என அழுதபடி குழந்தைகள் கூறியதைக் கேட்டு பதறிப் போனாள் கயல்.

என்ன நடக்கிறது இங்கே? தன்னை எவ்வளவோ காயப்படுத்தி இருக்கிறாள், ஆனால் அதை எல்லாம் பொறுத்துப் போனாளே..? ஆனால் மழலைமொழி மாறாத அந்த பிஞ்சைக் கூட விட்டுவைக்க வில்லையே இவள்..? எத்தனை நாட்கள் இந்த கொடுமை நடந்ததோ? என எண்ணியவளுக்குத் தன்னை பேசியபோதெல்லாம் பொறுத்துக் கொண்டவள் தன் மகளைக் காணோம்; அதற்குக் காரணம் வேணி எனத் தெரிந்ததும் ஆவேசம் கொண்டவள் ஆனாள்.

எதுவும் நடக்காதது போல் இருந்த வேணியிடம் வந்தவள் "என்னை எத்தனையோ பேசினீங்க.. எத்தனையோ காயப்படுத்தற மாதிரி நடந்துக்கிட்டீங்க அது அத்தனையும் பொறுத்துக்கிட்டேன். ஏன்னா என் அண்ணன் மனைவி நீ.. என்னோட நிலை எந்த பெண்ணுக்கும் வரக்கூடாதுன்னு தான்.. ஆனால், என் பொண்ணு பச்ச குழந்தை. அது என்ன பண்ணுச்சு உன்னை.. என் பிள்ளைக்கு ஏதாவது ஆச்சு..?" என பேசப் பேச ஆத்திரத்தில் அவள் உடல் நடுங்கியது..

இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த வளவன் அங்கிருக்கும் சூழ்நிலையின் விபரீதம் புரிந்து, அவள் அருகே வந்தான்.

"குழந்தையை காணவில்லைன்னு போலிசில் புகார் தரப்போறேன். இங்க நடந்ததை உங்க பிள்ளைகளே சாட்சி சொல்வார்கள். என்ன நடந்தது? எப்போது இருந்த குழந்தையைக் காணோம்..? நிஜமா காணாமல் தான் போனாளா.. இல்ல, நீங்களே ஏதாவது பண்ணிட்டு, குழந்தையைக் காணோம்னு சொல்கிறீங்களா.." என்று இவன் கேள்வி கேட்க..

எதுவும் இல்லாத வாய்க்கு அவல் கொடுத்தது போன்று ஆயிற்று.. "நீ யாரு? எங்க வீட்டு குழந்தை.. நான் என்ன வேணா பேசுவேன், அடிப்பேன்.. என்ன வேணா செய்வேன்.. என்னவோ பெத்தவன் மாதிரி வந்து உரிமையா கேட்கிறே..? அதானே பார்த்தேன்.. என்னடா கொஞ்ச நாளா புருஷனை தின்னவங்கறதையும் மறந்துட்டு கலர் கலரா, புதுசு புதுசா புடவை கட்டுவதும், பொட்டு வைத்துக் கொள்றதும், அடிக்கடி கண்ணாடியில் பார்க்கிறதுமா இருக்கிறாளேன்னு.. இதான் விசயமா.." என மனதில் இருந்த நஞ்சை கக்கினாள் வேணி.

"ச்சை... நீங்கல்லாம் ஒரு பொம்பளையா.. இதுக்கு மேல பேசினா நான் மனுசனா இருக்க மாட்டேன். போலீஸ் வந்து விசாரிச்சா உண்மை தானா தெரியும்.." என்று உறுமியவன் முதலில் மளமளவென வீடு முழுக்கத் தேடினான். அங்கிருந்தோரிடம் விசாரிக்க, யாருக்கும் எதுவும் தெரியவில்லை. அக்கம்பக்கத்தினரும் ஆளுக்கொரு புறமாய்த் தேடத் தொடங்கினர். கயலின் அண்ணன் குழந்தைகளிடம் விசாரித்தான் வளவன். உடைந்து போய் கண்ணில் நீர் வழிய, பித்துப் பிடித்தவளாய் அமர்ந்திருந்தவளை அவனுக்குக் காணச் சகிக்கவில்லை.

குழந்தை காணாமல் போய் ஒரு மணி நேரத்திற்கும் மேல் ஆகியிருந்தது. சுற்று வட்டாரம் முழுக்கத் தேடியாகிவிட்டது. கயலை அழைத்து, கூறியது போலவே, அந்த குழந்தைகள் தன் தந்தை கணேசமூர்த்தியையும் அழைத்திருக்க, அடித்துப்பிடித்து வந்தவன், அத்தனை பேர் முன்னிலையிலும் பளார் என தன் மனைவியை அறைந்தான்.

"அண்ணா.... என வீறிட்டாள் கயல். "என்ன செய்யற..? நீ என்ன செய்யறேண்ணா..." என்றவள் அவன் சட்டையை பிடித்து உலுக்கியவாறே "வேண்டாம்ண்ணா... அடிக்காதே.. அந்த கொடுமை எல்லாம் என்னோட போகட்டும்ணா.. என்ன தப்பு வேணா செய்யட்டுமே.. அடிக்காதேண்ணா.. அது பொண்ணுக்கு அவமானம்ணா.. அந்த வலி அந்த நேரத்துக்கு மட்டுமில்லே, அவ ஆயுசுக்கும் வலிக்கும்ணா.." என கதறியழுதாள்.

"பாருடி பாரு... தன் புள்ள காணாமல் போன வேதனைல கூட உன்னை அடிக்க கூடாதுன்னு பரிஞ்சிகிட்டு வர்றாளே... அவள் பட்ட துன்பத்தை யாரும் படக்கூடாதுன்னு நினைக்கிற அவ மனசை எவ்வளவு காயபடுத்திருப்ப..? ச்சை.." என வெறுப்பை உமிழ்ந்தான்.

கயலின் கதறலைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்து நின்ற வளவன், அவள் எத்தகைய துன்பத்தை எல்லாம் அனுபவித்திருக்கிறாள் என்று புரிந்தது. சட்டென சுதாரித்தவன் கணேசமூர்த்தியை அணுகி

"இனி தாமதிக்க வேண்டாம். போலீஸ்க்கு போயிடுவோம் ‌.." என யோசனை கூற கணேசமூர்த்திக்கும் அதுவே சரி எனப்பட்டது. ஏற்கனவே பிரகாசத்திடன் விவரம் தெரிவிக்கப்பட்டிருக்க அவரும் அடுத்த ஒரு மணி நேரத்தில் அடித்துப் பிடித்து வாடகைக்காரை ஏற்பாடு செய்து வந்து கொண்டு இருந்தார்.

வளவன் தன் நண்பர்களின் மூலமாய் காவல்துறையினரை முடுக்கிவிட, கயலின் வீடு இருந்த திசையிலிருந்து அனைத்து கண்காணிப்பு கேமராக்களும் ஆராயப்பட்டது. குழந்தை எங்கு சென்றது என்ற தடயம் எதுவுமே புலப்படவில்லை. ஏதாவது செய்து இருப்பாளோ என்ற கோணத்தில் பெண் போலீசார் வீட்டில் வைத்து விசாரிக்க, பயத்தில் நடுங்கிப் போனாள் வேணி. நடந்ததை ஒன்று விடாமல் கூறியவள் தான் ஆதங்கத்தில் பேசியது உண்மைதான்.. ஆனால், தான் பிள்ளையை எதுவும் செய்யவில்லை என அழுதாள்.

நேரம் கடந்து கொண்டிருக்க அதுவரை எந்த ஒரு தகவலும் கிடைத்தபாடில்லை. ஆறு மணிக்கு காணாமல் போன குழந்தை.. கிட்டத்தட்ட 4 மணி நேரம் ஆகிவிட்ட நிலையில் எந்த தடயமும் கிடைக்கப் பெறாமல் இருப்பது காவல்துறையினரைக் குழப்பியது. கயலின் வீட்டு அருகில் எந்த சிசிடிவி கேமராவும் இல்லாததால் வீட்டிலிருந்து எப்படி குழந்தை போனாள் என்பது தெரியவில்லை. தெருமுனையில் உள்ள காமிராக்களை ஆராய்ந்த போது, அவள் தனியே எங்கும் செல்லவும் இல்லை என்பது உறுதியானது.

சோர்ந்து உறங்கிப் போயிருந்த தீபன், தாரணியை எழுப்பியவர் அவன் அவர்களிடம் மீண்டும் விசாரித்தான். ஜீவா வழக்கமாக எங்கெங்கெல்லாம் சென்று விளையாடுவாள்? அவர்களுடன் விளையாட்டில் கோபித்துக் கொண்டால் எங்கே செல்வாள்..? விளையாடும்போது எங்கெல்லாம் ஒளிந்து விளையாடுவார்கள்? என்று அவன் விசாரிக்க குழந்தைகள் அளித்த பதிலில் துள்ளிக் குதித்து எழுந்தான் வளவன்.



தொடரும்....
 

Megala Appadurai

Saha Writer
Team
Messages
66
Reaction score
66
Points
18
அத்தியாயம் 11

'குழந்தைகளிடம் குழந்தை வளர்ப்பை கற்றுக் கொள்ளுங்கள்... ஆம், குழந்தைகளிடம் கற்றுக் கொள்ளுங்கள் நீங்கள் குழந்தை வளர்ப்பை.. ஏனெனில், எந்த குழந்தையும், பொம்மை அடிப்பதேயில்லை."

பேச்சாளர் முனைவர் பர்வீன் சுல்தானா ஒரு மேடைப்பேச்சில் கூறியிருப்பார். அது உண்மைதான். எந்த குழந்தைகளும் தன் பொம்மைகளை அடிப்பதே இல்லை. மனதைக் காயப்படுத்தும் வார்த்தைகளை உபயோகிப்பதில்லை. அவர்கள் கேட்டதை மட்டுமே பேசுகிறார்கள். கெட்டதை என்றுமே பேசுவதில்லை.

குழந்தைகள் களிமண் போன்றவர்கள். நாம் பொம்மையாகப் பிடித்தால் பொம்மை. தெய்வமாகப் பிடித்தால் தெய்வம். குரங்காகப் பிடித்தால் குரங்கு. எதை உருவாக்க வேண்டும் என்பதை நம் வளர்ப்பே உறுதி செய்கிறது. சிறிது தவறினாலும் அது அக்குழந்தையின் நிகழ்காலத்தை மட்டுமல்ல, எதிர்கால வாழ்க்கையையும் ஒன்றும் இல்லாமல் ஆக்கிவிடும். ஒவ்வொருவரின் வாழ்க்கையுமே இதற்கு உதாரணங்கள் தான்.

கயலின் வளர்ப்பு முறையே அவளுக்கு நேர்ந்த துன்பத்தின் காரணம். அவளின் கணவன் என்ற காமுகனின் வளர்ப்பு அவன் அழிவிற்கு காரணம். வளவனின் நல்ல வளர்ப்பு முறையே அவனைச் சுற்றிலும் நடக்கும் நல்ல விஷயங்களுக்குக் காரணம்.

குழந்தையை அனைவரும் ஆளுக்கு ஒரு புறமாய் தேடிக் கொண்டிருக்க, தீபன் தாரணி கூறியதை கேட்ட வளவன் உடனே வீட்டின் பின்புறம் விரைந்தான். அங்கே, புதர் மண்டிக்கிடக்க, தன் பாக்கெட்டில் இருந்த கைபேசியில் ஒளியை ஏற்படுத்தி, புதரின் ஓரத்தில் சென்ற ஒற்றையடிப் பாதையில் விரைந்தான். அங்கே இருந்த அடர்ந்த மகிழ மரத்தடியில் கையில் இருந்த பொம்மையை அணைத்தபடி உறங்கி போயிருந்த ஜீவாவைக் கண்டான்.

கண்ணீர்க் கோடுகள் காய்ந்த தடத்தோடு, அந்த இடத்திலேயே உடல் குறுகி உறங்கிக் கொண்டிருந்த குழந்தையைக் கண்டவன் மனம் பதறியது. இந்த இரவு நேரத்தில் ஏதாவது விஷப்பூச்சிகள் குழந்தையைத் தீண்டி இருந்தால்?

பதற்றத்தோடு "குட்டிமா.." என்றபடி அவளை தூக்கி முத்தமிட்டு தோளில் போட்டுக் கொண்டான். அப்பொழுதும் கையில் இருந்த பொம்மையை விடவில்லை குழந்தை. அவன் வாங்கிக் கொடுத்த பொம்மை அது. பின்னாலே பதற்றத்தோடு வந்த கயல் மகளைக் கண்டு ஜீவி என்றபடி ஓடி வந்து அவனிடமிருந்து குழந்தையை வாங்க எத்தனிக்க,

"இருட்டில் நீ குழந்தையைத் தூக்கிட்டு போக முடியாது கயல்.." என்றபடி அவளையும் கைப்பற்றி அழைத்துக் கொண்டு வீட்டிற்குள் வந்த பின்னரே அவளிடம் குழந்தையை கொடுத்தான்.

'ஜீவி ஜீவி' என்றபடி குழந்தைக்கு முத்தமிட்டு தன்னோடு இறுக அணைத்துக் கொண்டு அவள் கரைய, அவள் தோள் பற்றி அவளை அங்கிருந்த சோபாவில் அமரச் செய்தவன், வெளியே இருந்த காவல்துறை அதிகாரிக்கு விஷயத்தை விவரிக்க, அவரும் உள்ளே வந்து குழந்தையை பார்த்து, அவர் "எல்லா இடத்திலும் தேடி பார்த்துட்டு கம்ப்ளைன்ட் பண்றதில்லையா சார்?" என அவனைக் கடிந்து கொண்டார்.

"மன்னிக்கணும் சார்.. குழந்தை இங்கே கிடைத்ததால் பரவாயில்லை. காலம் தாழ்த்தும் ஒவ்வொரு நொடியும் ஆபத்தில்லையா சார்..? அதுவும் பெண் குழந்தை சார். அதான் பதறிட்டோம். நீங்க விரைவா செயல்பட்டதாலேயே, எங்க குழந்தை எங்களுக்கு உடனே கிடைச்சா.. ரொம்ப நன்றி சார்..." என பணிவாய் அவருக்கு நன்றி கூறினான்.

கயலில் அரற்றலில் விழித்து விட்ட ஜீவா "ம்மா" என அவளை கட்டிக் கொள்ள குழந்தையிடம் சில தகவல்களை உறுதிப்படுத்தி விட்டு வேணியைக் கடிந்து மிரட்டி விட்டே கிளம்பினர் காவல் துறையினர்.

"குட்டிமா" என்றபடி ஜீவாவின் அருகே வந்தவன் அவள் கை, கால்கள், உடை என ஆராய, விழித்த கயலை "கயல் .. முதல்ல குழந்தையோட உடையக் கழற்றி உதறிட்டு, அவள் உடலைக் கழுவி வேறு உடை மாற்று.. இருட்டில் அந்த புதர்ல, மரத்தடியில் எவ்வளவு நேரம் தூங்கி இருக்கா..? ஏதாவது பூச்சி ஏறி இருந்தா ஆபத்தா போயிடும்.." என எச்சரிக்க, அவனை சொல்படியே குழந்தைக்கு உடல் கழுவி, உடை மாற்றி கயல் வரும் முன் சமையல் அறையில் இருந்த பாலை சூடு செய்து கொண்டு வந்து குழந்தைக்கு புகட்டினான் அவன் அவன் செயல் கண்டு உள்ளம் உருகி நின்றாள் அவள்.

அதற்குள் குழந்தையைத் தேடச் சென்ற கணேசமூர்த்தியும், பிரகாசமும் வந்து சேர்ந்தனர்

"ரொம்ப நன்றி தம்பி.. சமயத்துல வந்து உதவி செஞ்சீங்க.." என்ற பிரகாசத்தின் குரல் அவளைக் கலைத்தது.

"எதுக்கு சார் பெரிய வார்த்தை எல்லாம்? ஒருவருக்கொருவர் இது கூட செய்யாம நாம மனுஷனா வாழ்ந்து என்ன புண்ணியம்." என்றவாறே நடந்தவற்றை கணேசமூர்த்தியிடமும், பிரகாசத்திடமும் அவன் விவரித்தான்.

"உங்களுக்கு எப்படி தம்பி தோணுச்சு..?" என கேள்வி எழுப்பினார் பிரகாசம்

"பொதுவா நாம கூட ஏதாவது ஒரு கஷ்டம்னா எங்காவது ஒரு தனிமையான இடத்தைத்தானே சார் நாடுவோம்.. கண்காணிப்பு கேமராவுல குழந்தை எங்கேயும் வெளியே போகலைன்னு உறுதியா தெரியும். அவ இங்கேதான் எங்கேயாவது இருக்கணும்னு தோணுச்சு. பொதுவா குழந்தைங்க கட்டில் அடியிலயோ, இல்ல தனக்குன்னு புடிச்ச ஒரு இடத்தில்தான் போய் உட்காருவார்கள். அது தான் நம்ம ஜீவா விஷயத்துலயும் நடந்துச்சு. பின்புற தோட்டத்தில் இருக்கிற மகிழ மரத்தடியில்தான் எப்பவும் இருப்பான்னு சொன்னதும் வேறு எங்கும் போக வாய்ப்பில்லைன்னு தோணுச்சு. போய்ப்பார்த்தா குழந்தை பொம்மையை கட்டிப் பிடிச்சு அங்கேயே தூங்கிட்டா போலிருக்கு. என்ன? வந்ததும் பின்னாடி தோட்டத்திலும் தேடி இருந்தா, போலீஸ் வரை போயிருக்க வேணாம். இருட்டின பிறகு அங்க போகமாட்டா ன்னு தீபன் சொன்னதாலயும், சுற்றிலும் புதர் இருந்ததாலயும் அங்க போயிருக்க மாட்டான்னு நானும் போகாமல் விட்டுட்டேன்.. முதல்லயே அங்கே பாத்திருக்கணும். இருட்டும் முன்னாடியே ஜீவி அங்கே போயிருக்கணும். குழந்தை அழுதுட்டு அங்கேயே தூங்கிட்டா.." என்றபடியே அவன் கயலை நோக்க, அவள் கண்களில் இருந்து வழிந்த கண்ணீர் அவன் முகத்தை மாற்றியது. அவன் கூறுவதைக் கேட்டபடியே அவனைப் பார்த்திருந்தவள் அவன் முகம் மாற்றத்தைக் கண்டாள்.

"சரி சார் நான் கிளம்புறேன்.." என்றபடி அவன் கிளம்ப, மடியில் குழந்தை இருந்ததால் அவள் சட்டென எழ முடியாமல் அவள் குழந்தையைத் தூக்க முயல...

"இருங்க கயல்.." என்றபடியே அவளிடம் குழந்தையை வாங்கி, வாகாய்த் தூக்கி தன் தோளில் கிடத்தியவன் அவள் தலையை வருடி உச்சி முகர்ந்து "எங்கே தூங்குவாள்..?" என கேட்டு, குழந்தையைப் படுக்க வைத்து விட்டு வந்தவன், விடை பெற்றுக் கிளம்பினான்.

வளவனின் செயலில் நெகிழ்ந்து நின்றிருந்த கயலை அவன் திரும்பியும் பார்க்கவில்லை. கணேசமூர்த்தியிடம் மட்டும் "பத்திரமா பார்த்துக்கோங்க.." என்றவன் "நான் காலை வந்து பார்க்கிறேன்.." என்று விடைபெற்றுச் சென்றான்.

அத்தனையும் கவனித்துக் கொண்டிருந்த வேணியின் மனது வன்மத்தில் கனன்று கொண்டிருந்தது. 'ஊர்ல போறவங்க வர்றவங்க எல்லாம் என்ன திட்ற மாதிரி வச்சுட்டாங்களே..' என அவள் உள்ளம் குமறியது. "பார்த்துக்கொள்கிறேன் டி.." என கறுவியவள் வளவனின் செய்கையும் தன் மனதில் குறிக்க மறக்கவில்லை.

'என்னவோ இவனே பெத்தது போல இந்த துடிதுடிக்கிறான்..?" என எண்ணியவள் 'கத்தரிக்காய் முத்தினால் கடைத்தெருவுக்கு வந்துதானே ஆகணும்..? அப்போ தெரியும் இந்த வேணியைப் பற்றி..' என்று மேலும் மனதில் விஷத்தை ஏற்றிக் கொண்டு அவள் வீடு சென்றாள்.

அடுத்த நாள் ஜீவாவை வந்து பார்த்தவன், சில நிமிடங்கள் அவளோடு விளையாடினான். எப்பொழுதும் அந்த பொம்மையுடனே அவள் இருப்பதை கண்ட வளவன், "இந்த பொம்மை உனக்கு அவ்வளவு புடிச்சி இருக்கா குட்டிமா..?" என வினவினான்.

கையில் இருந்த அந்த சின்ன டெடி பியரைத் தன்னோடு அணைத்துக் கொண்டவள் "இதே மாதிரி பெருசா தீபன் வச்சிருக்கான் அங்கிள்.. விளையாட போகும்போது அத்தை அதை தொடக்கூட விட மாட்டாங்க.. எனக்கு இந்த பொம்மைன்னா ரொம்ப பிடிக்கும்.." என்றாள் குழந்தை. நிமிர்ந்து கயலைப் பார்த்தவன்,

"குழந்தையைக் கொஞ்ச நேரம் வெளியே கூட்டிட்டு போயிட்டு வரவா சார்..?" என பிரகாசத்திடம் அனுமதி வேண்டினான்.

"தாராளமா கூட்டிட்டுப் போங்க தம்பி.." என பிரகாசம் கூறினார். திரும்பி வரும்போது ஜீவாவின் கையில் அவள் உயரத்திற்கு மேல் அவள் ஏங்கிய அந்த பொம்மை இருந்தது. அதோடு ஒரு மூங்கிலால் பின்னப்பட்ட ஊஞ்சலும்.. பிரகாசத்திற்கு கண்கள் பனித்துப் போனது. தான் மட்டும் அவசரப்படாமல் இருந்திருந்தால், இவனைப் போன்றதொரு நல்ல துணை தன் மகளுக்கு வாய்த்து இருக்குமே? என மனதில் குமைந்தார்.

பிரகாசத்தின் உதவியுடன் நடுக்கூடத்தில் ஊஞ்சலை மாட்டி விட, அவன் காலைக் கட்டிக்கொண்டு "லவ் யூ அங்கிள்.." என்றது அந்த குறிஞ்சிப்பூ.

குழந்தையை அதில் அமர வைத்தவன் "லவ் யூ பட்டுக்குட்டி.." என அவள் கன்னத்தில் முத்தமிட்டு மகிழ்ந்தான். கண்ணில் நீர் திரையிட இந்த காட்சியைக் கண்டு மனம் நெகிழ நின்றிருந்தாள் கயல்.

ஒரு தந்தையும், மகளுமாய்த்தான் அவள் கண்களுக்கு தோன்றியது அந்த காட்சி. தந்தை என்பவன் இப்படித்தான் இருக்க வேண்டுமோ என எண்ணினாள். அதே எண்ணம் பிரகாசத்திற்கும் தோன்றியதோ என்னவோ அவரும் அவளை நோக்கினார்.

என் மகளை ஒரு முறையேனும் இப்படி கொஞ்சி இருக்கிறேனா என்ற கேள்விக்கு இல்லை என்ற பதிலை அவர் மனசாட்சி கூறியது. என் மகளுக்குக் கிட்டாதது, என் பேத்திக்கும் கிட்டாமல் போய் விட்டதே என வருந்தினார். தகப்பன் என்றால் என்னவென்று அறியாமலே அவள் வளர தான்தானே காரணம்? என அவரின் மனசாட்சியே அவரைக் கொன்றது.

சிறிது நேரம் ஜீவாவிடம் விளையாடி விட்டுக் கிளம்பியவன் அப்பொழுதும் கூட கயல் புறம் திரும்பினானில்லை. இதை அவள் உணர்ந்தே இருந்தாள்.

அதன் பின்னான நாட்களில் கூட அவன் அவள் புறமாய் தன் பார்வையை நகர்த்த வில்லை. அவனது முடிவில் அவன் உறுதியாய் இருந்தான். அவள் அறியாமல் அவளைக் கண்காணித்தவன், அவள் மனம் கனியும் நாளுக்காகக் காத்திருந்தான்.

ஆனால் அவளின் மனமோ அவனை ஏற்கவும் இயலாமல், அவனைத் தவிர்க்கவும் முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தது. நாளுக்கு நாள் அவளின் தவிப்பு கூடிக் கொண்டே சென்றது. அவன் செய்கைகள் அனைத்தும் அவளின் உள்ளத்தில் இன்னும் அவன் நினைவுகளை விதைத்துக் கொண்டிருந்தது.

பள்ளி விட்டு வரும் குழந்தையை பார்க் கூட்டிச்செல்லும் பிரகாசத்தோடு, அவனும் சேர்ந்து கொள்ள, ஜீவாவுக்கு அவனுடன் ஆன பொழுதுகள் அழகானதாய் இருந்தன. சமமாய் அவன் விளையாடுவதைக் கண்டு, இப்படி ஒரு தந்தை ஏன் தன் பேத்திக்குக்கு இல்லாமல் போனது எனக் குமுறினார் பிரகாசம். அவன் வேண்டுமென்று திட்டமிட்டு எதையும் செய்யவில்லை. ஆனால் அவன் செய்கைகளால், அந்த குடும்பத்திற்கு அவன் வேண்டும் என்று எண்ண வைத்தான். அதுவும் ஜீவாவின் மனதில் ஆழமாய்.. வீட்டிலும் வளவனின் புராணமாகவே இருந்தது.

'என்னை ஏறெடுத்து பார்க்க மாட்டான். ஆனால், குழந்தையோட தினமும் பார்க் போய் கொஞ்சி விளையாடுறது, எங்க அப்பாவோட அரட்டை அடிக்கிறது..' என அவள் மனம் முரண்டியது. 'நீதானே அவனை வேண்டாம்ன்னு சொன்ன? அதைத்தானே அவன் செய்கிறான்..? இப்போ திரும்ப அவனையே குற்றம் சொல்ற..?' என அவள் மனசாட்சி கேள்வி எழுப்பியது.

நாளுக்கு நாள் அவன் இறுகிய முகம் அவளை மிகவும் பாதித்தது. அவள் மகிழ்ந்த அவனது கன்னக்குழி சிரிப்பை, அவள் அதன் பின் காணவே இல்லை. சிரிப்பைத் தொலைத்து விட்டு, முகம் முழுக்க கடுமையா இருக்கும் அவனைக் காணவே சகிக்கவில்லை அவளுக்கு. ஆனால், நான் என்ன செய்வேன்? என்னால் அவனை ஏற்க முடியவில்லையே..? தனக்கு மட்டும் மணம் ஆகாமல் இருந்திருந்தால் என்னவாகினும் அவனை ஏற்றிருப்பேனே? ஆனால், நான் காலம் முழுமைக்குமாய் இப்படியே அழுது சாவதுதான் என் விதி என விதித்திருக்கையில் நான் என்ன செய்ய முடியும்? என உள்ளுக்குள் அழுது கரைந்தாள்.

'ஒரு பத்து வருடம் முன்னே ஏன்டா வராமல் போன..?' என எதிரில் இல்லாதவனிடம் கேள்வி எழுப்பினால் காற்றில்.

தொடரும்
 

Megala Appadurai

Saha Writer
Team
Messages
66
Reaction score
66
Points
18
அத்தியாயம் 12

ஒரு பெண்ணின் மனதென்பது கடலின் ஆழத்தைப் போன்றது என்று முன்னோர் சொன்னது மிகச்சரியே.. அதற்குள் மூழ்கி அதன் ஆழம் கண்டோர் எவர்..?

அவளின் வாழ்க்கையில் அவனது வாட்சப் ஸ்டேட்டஸ் பார்ப்பது இப்பொழுதெல்லாம் கயலுக்கு முக்கிய விஷயமாய்ப் போயிற்று. அவள் தினமும் பார்க்கிறாள் என்பதற்காகவே வளவன் தினமும் அவளுக்காக தேடித்தேடி ஸ்டேட்டஸ் வைக்கலானான். அவன் கூற நினைக்கின்ற விஷயங்களை, பாடல் வரிகள் மூலம் உணர்த்த விரும்பினான்.


வளையாமல் நதிகள் இல்லை
வலிக்காமல் வாழ்க்கை இல்லை
வருங்காலம் காயம் ஆற்றும்...
நிலவொளியை மட்டும் நம்பி
இரவெல்லாம் வாழ்வதில்லை
மின்மினியும் ஒளிகொடுக்கும்....



உனக்கென இருப்பேன்
உயிரையும் கொடுப்பேன்
உன்னை நான் பிரிந்தால்
உனக்கு முன் இறப்பேன்
கண்மணியே.... கண்மணியே...

என ஹரிசரணின் உருகும் குரல் வளவனின் சொற்களாய் அவள் மனதைப் பிழிந்தது. அவனுடனான இந்த மௌனப் போராட்டத்தை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. நாளுக்கு நாள் அவளின் மனபாரம் கூடிக்கொண்டே சென்றது.

இதுவெல்லாம் ஒருபுறமிருக்க வளவனை கண்ட நாளுக்கு, இப்பொழுது நாளுக்கு நாள் அவன் உடல் மெலிவது போல் உணர்ந்தாள். அதை உண்மை என்பது போல் சித்தாள் செல்வி "இந்த இன்ஜினியர் சார்க்கு என்ன ஆச்சோ தெரியலக்கா.. மனுஷன் காலையில எட்டு மணிக்கு வந்தா, வெறும் டீய குடிச்சிட்டே பொழுத ஓட்டுறாரு.." என போகிற போக்கில் உரைத்து விட்டுப் போக காரணம் அறிந்தவளுக்கு தன்னால் தானே என்ற குற்ற உணர்வு மேலெழுந்தது.

'ஏன் இப்படி செய்கிறான்..? இவன் என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறான்.. தேவதாஸ் போல திரிஞ்சு என்னை கொல்வது போதாதுன்னு, சாப்பிடாம வேற பட்டினி கிடக்கணுமா.." என கறுவியபடியே எதையும் யோசிக்காமல் போன செல்வியைத் திரும்ப அழைத்தாள்.

தான் கொண்டு வந்த உணவை எடுத்து "உங்க இன்ஜினியர் கிட்ட கொண்டு போய்க் குடு..." கோபமாய்க் கொடுத்தவளை வியந்து பார்த்தபடியே அதை வாங்கியவள் "சரிக்கா.." என்று எடுத்துச் சென்றாள்.

எதிரே வெளியில் போர்டிகோவில் வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்தவனிடம் உணவைக் கொண்டு கொடுத்தாள் செல்வி. அதைக் கையில் வாங்கியவன் திரும்பிப் பார்க்க, இங்கே இருந்து பார்த்துக் கொண்டிருந்தவள் முறைத்தாள்.

“செய்யறதெல்லாம் இதை செஞ்சுட்டு என்னை ஏன் முறைக்கிற? இது எதுக்கு? என்ன?” அவன் உருவத்தை உயர்த்தியபடி என்ன சொன்ன? என்றான் செல்வியிடம்.

“நீங்க சாப்பிடறது இல்லைன்னு சொன்னேன்” என்றாள் பயந்தபடியே செல்வி.

“ஓஹோ, வேற என்ன சொன்ன?

“வேற ஒன்னும் சொல்லல சார்” என அவள் பின்வாங்க,

"அவளை என்ன மிரட்டுறீங்க? போய் சாப்பிடுங்க...” என்று பல நாட்கள் கழித்து அவளிடம் இருந்து செய்தி வந்தது. அதை எடுத்து அவளைப் பார்த்தபடியே உள்ளே சென்றவன், அவள் கொடுத்த உணவை இரசித்து உண்டான். மதியம் உணவு நேரத்திற்கு அவளுக்கும், தனக்குமாய் உணவை வாங்கி ஒன்றைக் காலி டப்பாவுடன் சேர்த்து செல்வியிடமே கொடுத்து அனுப்பினான்.

"எப்படியோ சாரை சாப்பிட வெச்சிட்டீங்கக்கா..." என சிரித்தபடி செல்வி கொடுத்துவிட்டுப் போன உணவை உண்கையில் நிறைவாய் உணர்ந்தாள் கயல்.

“என்னை வேண்டாம் என்று எண்ணுபவளுக்கு நான் உண்டால் என்ன..? இல்லை என்றாலென்ன..? என்மேல் அவளுக்கு விருப்பம் இருக்கப் போய்த்தானே அவளுடைய உணவை கொடுத்து விட்டாள்?” என மகிழ்ந்தான் வளவன். "சாப்பிட்டீங்களா..?" என்று அவளிடம் இருந்து குறுஞ்செய்தி வர அவனுக்கு முகம் மலர்ந்தது. அவன் எண்ணம் சரிதானென உள்ளம் குதூகலமிட்டது.

"ம்.." என்று பதில் அனுப்பியவன், "நீ..?" என கேள்வி எழுப்பினான்.

"ம்.." என உடனே அவளிடமிருந்து பதில் வந்தது. மகிழ்ச்சி எமோஜியைப் பதிலாய் அனுப்ப, அவள் திரும்ப பதிலேதும் அனுப்பவில்லை. இதுவரை வந்தவள் இன்னும் முழுமையாய் மனம் மாறி வருவாள் என அவன் உள்ளம் கூறியது. வேறு எந்த முன்னேற்றமான பேச்சுக்கள் இல்லை என்றாலும், உணவு நேரங்களில் எல்லாம் "சாப்டீங்களா..?" என அவளின் குறுஞ்செய்தி மட்டும் தவறாது வந்தது. இல்லை என்று அவன் பதில் அளிக்கும் தருணங்களில் எல்லாம் ஏன் இல்லை என்ற கோப எமோஜியுடன் கேள்வி வரும். இல்லை என்றால் அவளிடமிருந்து செல்வி மூலமாய் உணவு வருவதும் வாடிக்கையானது.
அவளுக்கு அது மட்டுமே போதுமானதாக இருந்தது.


காதல் மொழி இல்லை; கொஞ்சல் இல்லை; கெஞ்சல் இல்லை; வேறு எந்த எதிர்பார்ப்பும் கூட இல்லை.. ஆனாலும் அந்த "சாப்பிட்டீங்களா?" என்ற ஒற்றை வார்த்தையில் காதல் நிரம்பி வழிந்தது. அதற்கு மேல் அவள் மனதை அவள் திறக்கவில்லை. ஆனால் பூட்டி வைத்த மொத்த காதலையும் அப்பட்டமாய் அவளாய்க் காட்டும் நாளும் விரைவிலேயே வந்ததது.

அன்று கயல் கடைக்குத் தேவையான பொருட்களை வாங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. உடனே செய்து முடிக்க வேண்டிய வேலைக்கு சில சீக்வென்ஸ், லேஸ் வகைகளும், சில துணி வகைகளும் தேவைப்படவே, வழக்கம் போல கலைவாணியைக் கடையைத் திறக்கச் சொல்லிவிட்டு கயல் சென்றுவிட, எப்பொழுதும் நேரமாய் வருபவள் இன்று வராமல் போகவே, அவன் தவித்துப் போனான். வழக்கமாய் அவள் அனுப்பிய "சாப்டீங்களா.." என்ற செய்திக்கு அனுப்பிய மறுமொழியை அவள் கண்டிருந்தாள்.

அவளை காணாது, "எங்கே போன..?" என்ற அவனது செய்தியை அவள் பார்க்கவே இல்லை. நேரம் தாண்டியும் அவள் வராமல் போகவே, நிமிடத்திற்கு ஒரு முறை வழியை பார்ப்பதும், வேலையைக் கண்காணிப்பதுமாய் இருந்தவன், அவனது செய்தியை பார்த்தாளா என எடுத்து பார்த்தவன், அதையும் அவள் பார்க்காமல் போகவே, அவளை அழைத்து விடலாம் என்ற முடிவோடு அவளது எண்ணிற்கு முயற்சித்தான். அது ஏற்கப்படவில்லை. தொடர்ந்து இரண்டு, மூன்று முறை அழைத்தும் எடுக்கப்படாமல் போகவே... 'என்ன இவ..? எங்கே போனா..? கலைவாணியிடம் விசாரிக்கலாமா..?’ என்று எண்ணி, அவன் சற்று நேரம் பார்க்கலாம் என காத்திருந்தான். சிறிது நேரம் கழித்து அவளின் ஸ்கூட்டி சத்தம் போன்று கேட்கவே, மேலே நின்று மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்தவன், அப்படியே அவள் வந்து விட்டாளாவென சட்டென திரும்பிப் பார்க்க, பால்கனியின் கைப்பிடிச் சுவர் கட்டப்படாமல் விட்டிருக்க... அவன் சுதாரிக்கும் முன் கண்ணிமைக்கும் நொடியில் நிலை தவறி கீழே விழுந்திருந்தான்.

பொதுவாகவே அவள் கைபேசியை கைப்பையில் வைப்பதே வாடிக்கை. அவள் பொருட்களை வாங்கிக் கொண்டு வெளியே வந்து அவனிடமிருந்து வந்திருந்த தவறிய அழைப்புகளைக் கண்டு யோசித்தபடி கைபேசியை உயிர்ப்பிக்க, அவனது குறுஞ்செய்திகள் வந்து கொட்டியது. தன்னைக் காணாது இத்தனை செய்திகளா? என எண்ணியபடியே அவனுக்கு அழைத்துச் சொல்ல எண்ணி, அவன் எண்ணிற்கு அழைத்தாள். அது எடுக்கப்படவேயில்லை.

சரி, வேலையை முடித்தாயிற்று.. நேரில் போய் பார்த்துக் கொள்ளலாம் என்று அவள் கிளம்பி வந்து சேர்ந்தபோது அங்கே அவள் வாகனம் செல்லக் கூட இயலாத அளவிற்கு கூட்டம் கூடி இருந்தது. என்னவாயிருக்கும் என ஒதுக்கி, உள் நுழைந்து வாகனத்தை நிறுத்திய அவளிடம் கலைவாணி படபடப்புடன் தெரிவித்த செய்தி அவள் இதயத்துடிப்பை அப்படியே நிறுத்தும்படியாய் இருந்தது.

"கயல்.. வளவன் தம்பி மாடியில் இருந்து தவறி விழுந்துட்டாரு.. ஹாஸ்பிடல் கொண்டு போய் இருக்காங்க.." என்று பதட்டத்துடன் கூற, அவள் நெஞ்சே பிளப்பது போல் உணர்ந்தாள். கண்கள் தானாய் அவன் விழுந்த இடத்தைத் தேட, அங்கே சிந்தியிருந்த அவன் குருதி கண்டு உறைந்து போனாள்.

வார்த்தை வராமல், தடுமாற்றத்துடன் "எந்த ஹாஸ்பிடல்.." என்று வினவ

"தெரியல கயல்.. ஆனா ரொம்ப அடி, ரத்தம் நிக்கவே இல்ல, தூக்கித்தான் வண்டியில் கொண்டு போனாங்க.." என அவள் மேலும் கூற, சட்டென தடுமாறி கலைவாணியின் கைப்பற்றியபடியே "முருகா!" என அவள் சுற்றுப்புறம் மறந்து கதற, இத்தனை நாட்களாய் சிறிது குழப்பத்தோடு இருந்த கலைவாணிக்கு அவள் மனது தெளிவாய் புரிந்து போனது.

அழுதபடியே செல்வியை அவள் தேட, இவளைக் கண்டு ஓடி வந்த செல்வி
‘அக்கா’ என கலங்கினாள்

“செல்வி.. அவர.. அவர எங்க கொண்டு போனாங்கன்னு தெரியுமா?” என அவள் கேவியபடி கேட்டாள்.

“தெரியல அக்கா.. கூட மேஸ்திரியும், இன்னும் ரெண்டு பேரும் போயிருக்காங்க அக்கா.. அவங்களுக்கு போன் செய்து பார்க்கலாம்” என்று செல்வி தன்னிடம் இருந்த பட்டன் போனை எடுத்து மேஸ்திரிக்கு அழைத்தாள்.

மறுமுனையில் அழைப்பு எடுக்கப்படவில்லை. அவள் முகவாட்டத்துடன் மீண்டும் அழைக்க எதிர்முனையில் பதட்டத்துடன் மேஸ்திரி பேசுவது இருவருக்கும் தெளிவாய் கேட்டது.

"என்ன செல்வி..?" என்றார் அவர்.

"அண்ணாவுக்கு என்ன ஆச்சு..? எந்த ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போனீங்க.." என்றாள் செல்வி.

"பக்கத்துல ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு போனோம் செல்வி, அவங்க இங்க பார்க்க முடியாது, பெரியாஸ்பத்திரிக்கு கொண்டு போக சொல்லிட்டாங்க. இன்ஜினியர் சார் ஒரு ஆஸ்பத்திரி சொன்னாரு.. அங்கதான் போறோம்” என ஒரு பெரிய தனியார் மருத்துவமனையின் பெயரைச் சொல்லி விட்டு வைத்து விட, அவன் பேசும் நிலையில் இருக்கிறான் என்பதே அவளுக்கு பெரும் நிம்மதியை கொடுத்தது. உடனே மருத்துவமனைக்கு விரைந்தாள்.

அங்கே அவள் கண்ட காட்சி, அவள் இத்தனை நாட்களாய் மனதில் இல்லை என்று உருப்போட்டு வைத்திருந்த அத்தனையும் வெளிக்கொணர்ந்தது.

அங்கே ஸ்ட்ரெச்சரில் அவன் படுக்க வைக்கப்பட்டிருக்க, அவன் அணிந்திருந்த சந்தன நிற சட்டை முழுவதும் ரத்தத்தால் செம்மை பூசி அது அவன் ஜீன்ஸ் வரை பரவியிருந்தது. தலையில் குருதி வடிந்து கைகள் சிராய்த்து, உள் சதை தெரிந்தது. ‘ஐயோ’ என அவள் அலறிய அலறலில் லேசான மயக்கத்திலே இருந்தவன் விழித்துப் பார்க்க, அவள் அரக்கப் பரக்க மருத்துவரை நாடி ஓடியது தெரிந்தது.

“இப்படி அடிபட்டு கிடக்கிறவரைப் பார்த்து முதல் உதவி கூட செய்யாமல் நீங்கள் என்ன மருத்துவம் பாக்குறீங்க?” என அவள் சரமாரியாய் அங்கிருந்த செவிலியரைக் கேள்வி கேட்டு, “எங்க டாக்டர்? ப்ளீஸ் சீக்கிரம் வர சொல்லுங்க.. அவரைக் காப்பாத்துங்க சிஸ்டர்”

செவிலியர்கள் அவனை உள்ளே கொண்டு செல்ல, ஓடி வந்து அவன் கை பற்றியவள், “உங்களுக்கு ஒன்னும் ஆகாது.. ஆகவும் நான் விடமாட்டேன்.. நீங்க இல்லேன்னா.......” என சொல்ல சொல்ல தீவிர சிகிச்சைப் பிரிவினுள்ளே அவன் உருவம் மறைந்தது. அவனைப் பற்றிய கைகளைக் கண்டவள் அதிலிருந்த குருதியைக் கண்டு முகத்தில் அறைந்து கொண்டு அழுதபடி, தீவிர சிகிச்சைப் பிரிவின் வாசலிலேயே துவண்டு அமர்ந்தாள்.

கீழே விழுந்த போது அங்கு இருந்த சாரம் கட்டிய மூங்கில் பட்டு நெற்றியில் கிழித்திருந்தது தவிர தலையில் பெரிதாய் அடிபடவில்லை. ஆனால், வலது கை மற்றும் காலில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது. அதற்கான மருத்துவம் பார்க்கப்பட்டது. ஆனால், நரகமான அந்த நிமிடங்கள்தான் அவனுக்கு முழுமையாய் உணர்த்தியது அவளின் காதலை. ஏன் அவளுக்குமே எனலாம்

தொடரும்...
 

Megala Appadurai

Saha Writer
Team
Messages
66
Reaction score
66
Points
18
அத்தியாயம் - 13



காதல் கொண்ட மனம் பித்துக்குளித்தனம் நிரம்பியது. நிதர்சனம் மூளை உணர்ந்தாலும், மனம் உணராது. மருத்துவர் அவளை அழைத்து, “பயப்பட ஏதுமில்லை.. நெற்றியில் தையல் போட்டு இருக்கு.. கை, கால் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதால் கட்டுப்போட்டு தொடர்ந்து சில தினங்கள் மருத்துவமனையில் இருக்க நேரும்” என்று கூறிய பின்னும் அவளது அலைப்புறுதல் குறையவே இல்லை.



அவனது காயங்கள் சுத்தம் செய்யப்பட்டு, கை மற்றும் கால்களில் மாவு கட்டு போடப்பட்டு, அறைக்கு மாற்ற ஏறக்குறைய இரண்டு மணி நேரத்திற்கும் மேலானது. அதற்குள், வளவனின் தாய்க்குத் தகவல் கொடுக்கப்பட்டது, உள்ளூரில் கட்டிக் கொடுத்திருந்த வளவனின் சகோதரி வளர்மதி மற்றும் அவர் கணவரோடு வந்து சேர்ந்தார் செந்திலகம்.



அங்கு கயலை பார்த்த மாத்திரமே அவருக்கு விளங்கிப் போனது. அவர் வந்ததைக் கூட அறியாமல், அவசர சிகிச்சை பிரிவின் கண்ணாடி வழியே அவனைக் கண்டு விட மாட்டோமா? என ஏங்கி, கண்ணீர் வழிய நின்று இருந்தாள் கயல். அவள் அருகில் வந்த செந்திலகம், ‘கயல்’ என அவள் தோள் மீது கை வைக்க, மெல்லத் திரும்பியவள் அவரைக் கண்டதும் அம்மா என அலறி அவரைக் கட்டிப்பிடித்து ஓவெனக் கதறினாள்.

அதற்குள் அவசர சிகிச்சைப் பிரிவிலிருந்து தனி அறைக்கு மாற்றி ஸ்ட்ரெச்சரில் அழைத்து வரப்பட்டான் வளவன்.



அவனைக் கண்ட மாத்திரத்தில் கண்ணீர்த்துளிகள் அவள் பார்வையை மறைத்து அவனைக் காண விடாது செய்ய, சட்டெனத் துடைத்துக் கொண்டவள், கண நேரத்தில் அவள் கண்கள் அவன் உடலெங்கும் ஆராய்ந்தன. கை, காலில் கட்டு போடப்பட்டு, தலையணை வைத்து தூக்கி வைக்கப்பட்டிருக்க, நெற்றிப் பகுதியில் புருவத்தின் மேல் அடிபட்டு, கட்டு போடப்பட்டிருந்தது. புருவத்தின் மேல் பகுதியாதலால் முகம் வீங்கி இருக்க, சட்டை அகற்றப்பட்ட தேகத்தில் தோள் பகுதியிலும் காயம் பட்டிருக்க, அதில் மருந்து தடவப்பட்டிருந்தது. வலியில் அவன் முகம் சுருங்குவதைப் பார்த்த போது இவளுக்கு உயிரில் வலித்தது. சட்டென, அவன் மற்றொரு கரம் பற்றியவள், அவனுடனேயே நடக்க, அவன் அவளையே பார்த்திருந்தான்.



செவிலியர் உதவியோடு அவனை அறைக்கு மாற்றி விட்டு மருத்துவர் அழைத்ததாக கூறவும், செந்திலகம் மற்றும் வளர்மதியும் அவளது கணவன் சுந்தரமும் மருத்துவரைப் பார்க்கச் சென்றனர்.



அதுவரை, படுக்கையில் மாற்றும் வரை ஒவ்வொரு அசைவுக்கும் வலியால் துடிக்கும் அவனது முகச்சுழிவுகளைக் கண்டு வேதனையோடு பார்த்துக் கொண்டிருந்தாள். ஊசி மருந்துகளைச் செலுத்தி விட்டு “பார்த்துக்கோங்க.. ஏதும் தேவைனா கூப்பிடுங்க” என்றபடி வெளியேறினார் செவிலியர். செவிலியர்கள் சென்றதும் அவன் அருகில் வந்தாள்.



அவன் கரங்களைத் தன் இரு கைகளாலும் பற்றிக் கொண்டவள், “ரொம்ப வலிக்குதா?” எனக் கேட்கும் முன்னமே கண்ணீர் முத்துக்கள் அவனது கரங்களை வந்தடைந்தன.



"ம்..." என்றான்.



"எனக்கு உசுரே போயிடுச்சு.." என்றவளின் குரல் கமறியது.



“ஒண்ணும் இல்ல, சீக்கிரம் சரியாயிடுவேன்”



"கவனமா இருக்கக் கூடாதா..? இப்படியா விழுவீங்க? ஏதாவது ஆகி இருந்தா நான்......." என வார்த்தையை முடிக்க முடியாமல் துடித்த உதடுகளைக் கடித்து நின்றாள்.



அவன் உண்மையை மறைக்கவில்லை. “காலையிலிருந்து உன்னை காணோம்னு தேடிட்டு இருந்தேன். மெசேஜ் பண்ணேன், நீ பார்க்கல.. போன் பண்ணேன், நீ எடுக்கல.. உன் ஸ்கூட்டி சத்தம் மாதிரி கேட்டது. நீ வந்துட்டியான்னு உன்னைப் பார்க்கலாம் என்று திரும்பினேன் எப்படி விழுந்தேன்னு எனக்கே தெரியல” என்றதும்



"என்னாலா..? என்னை பார்க்கணும்னா..?" என அவள் புலம்பியபடி, "உங்களுக்கு ஏதாவது ஆகி இருந்தா.." என அவள் மீண்டும் அழத் தொடங்கினாள்.



“முதல்ல இந்த அழுகைய நிறுத்து கயல்.. எதற்கு எடுத்தாலும் மூக்கை உறிஞ்சிக்கிட்டு.. இது எனக்கு பிடிக்கவே இல்லை..” என அவன் கடிந்து கொள்ள, சட்டென அவள் கண்களைத் துடைத்துக் கொண்டாள். கைகள் பிசுபிசுத்தது அப்போதுதான் உரைத்தது அவளுக்கு. கைகளை விரித்துப் பார்க்க அதில் அவனது குருதி காய்ந்து, அதில் அவள் கண்ணீர் துளியும் பட்டு பிசுபிசுத்தது.



"கயல்.." என அவன் அழைக்க



"ம்.." என நிமிர்ந்து அவனை நோக்கினாள்.



“என் மொபைல் சிஸ்டர் கொடுத்தாங்க கொஞ்சம் எடு” என்றான். கயல் தேடி எடுத்துக் கொடுக்க, அதை தனது இடது கையில் வாங்கியவன், அதில் அவளைப் புகைப்படம் எடுத்து நீட்டினான். கேள்வியாய் நிமிர்ந்து அவனை நோக்கினாள். அவனது அர்த்தம் பொதிந்த பார்வையைக் கண்டவள், போனை நோக்க, அவளது நெற்றியில் பொட்டுக்கு மேலே குங்குமம் வைக்கப்பட்டது போல தீட்டப்பட்டிருந்தது. கன்னம் முழுக்க நலுங்கு வைத்து காய்ந்த தடம் போல் இளஞ்சிவப்பாயிருந்தது. அவன் கரம் பற்றியபோது, அவள் கையில் பட்ட அவனது குருதி அவள் நெற்றியில் எப்படி என்று அவள் யோசிக்க, முகத்தில் அறைந்து கொண்டு அழுதது அவளுக்கு நினைவு வந்தது.



"அது.." என அவள் விளக்க முயன்றாள்.



"என்னோட ரத்தம்.." என்றான் அமைதியாக.



"ம்ம்ம்.." என தலையாட்டினாள் ஆமோதிப்பது போல். அதற்குள் செந்திலகமும், வளர்மதியும் வந்து விடவும், அவனிடமிருந்து விலகி ஒதுங்கி நின்றாள்.



"பார்த்து வேலை செய்யக் கூடாதாடா கண்ணா..? இப்படி அடிபட்டு படுத்துக் கிடக்கிறியே..?” என செந்திலகம் கடிந்து கொள்ள,



வளர்மதியோ, "அண்ணன் வேணுமுன்னேவா விழுந்துச்சு.. தவறித்தானே..? விடும்மா..” என அன்னையை சமாதானப்படுத்தினாள். கயலோ, வளவனுடன் வந்த மேஸ்திரியும், மற்ற இருவரும் வெளியே இருக்க, உரிமையாக "உள்ளே வாங்கண்ணா.." என்றவள், "ரொம்ப நன்றிண்ணா.." என்றதை செந்திலகமும், வளர்மதியும் மனதில் குறித்துக் கொண்டனர்.



வளவனிடம் சில நிமிடங்கள் பேசிவிட்டு கிளம்பும் முன் அங்கிருந்த கழிவறையோடு சேர்ந்த குளியல் அறைக்குச் சென்றவள், கைகளை நன்றாகக் கழுவினாள். அங்கிருந்த கண்ணாடியில் தன் முகத்தைக் கண்டவள் ஒரு கணம் அப்படியே பார்த்துக் கொண்டே இருந்தாள். இந்த ஏழு வருடங்களில் எத்தனை நாட்கள் குங்குமம் வைக்க வேண்டி ஏங்கியிருப்பேன்..? அலங்காரமாகக் கூட அல்ல.. கோவிலுக்குச் செல்லும் பொழுதுகளில் கிடைக்கும் குங்கும பிரசாதத்தைக் கூட வைக்க இயலாமல் தவித்த நாட்கள் அவளுக்கு நினைவுக்கு வந்தது. இதுதான் தெய்வ சித்தமா..? அவனின் குருதி என் நெற்றியில் குங்குமமாய் மாறிப்போனது தன்னிச்சையானது என்றாலும் அதை அழிக்க அவளுக்கு மனம் வரவில்லை. அது அப்படியே தன் நெற்றியில் நிரந்தரமாய் தங்கி விடாதாவென ஏக்கம் கொண்டாள். தண்ணீரைக் கைகளில் பிடித்து நெற்றியில் படாமல் முகத்தை கழுவிக்கொண்டு வெளியே வந்தாள்.



அப்படி வந்தவளை வளவனும் உற்று நோக்க, அவன் எண்ணியது போல், அவள் அதை அழித்து விட வில்லை என்ற ஆனந்தம் உருவானது.



"சரிங்கம்மா.. நீங்க ஐயாவைப் பார்த்துக்கோங்க.. நாங்க கிளம்புறோம்..” என்று செந்திலகத்திடம் விடை பெற்றவர்கள், ‘வர்றேங்கம்மா’ என கயலிடமும் விடைபெற்றுக் கிளம்பினர்.



இது நாள் வரை, “வாம்மா, போம்மா” என அழைத்தவர்கள், இன்று மரியாதையோடு பன்மையில் விளித்தது அவளை வியக்க வைத்தது. கேள்வியோடு வளவனை நோக்கினாள். அவனும் அர்த்தத்தோடு, ‘அது அப்படித்தான்’ என்பது போல கண்களைத் திறந்து மூடினான். மனதில் உண்டான மகிழ்ச்சியினாலும், மருந்துகளின் வீரியத்தினாலும் மெல்ல கண்களை மூடி உறங்கத் தொடங்கினான்.



அவர்கள் கிளம்பியதும்தான் அவளுக்கு உறைத்தது, தான் எப்படி இங்கே இருப்பது? உரிமையுள்ளவர்கள் உடன் இருக்கும்போது தான் எந்த உரிமையில் அவனோடு இருப்பது? அவனோடு, அவனைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை அடக்கியபடி, "நானும் கிளம்புறேன்மா பாத்துக்கோங்க.." என்றவள் அவனைப் பார்த்துக் கொண்டே, அவ்விடத்தை விட்டு அகல இயலாமல் தவித்த மனதோடு கிளம்பினாள்.



வழியில் தென்பட்ட கோவிலில் மனப்பூர்வமாய் அவனுக்காய் பிரார்த்தனை செய்து விட்டு வீடு சென்றாள். வளவனுக்கு நேர்ந்த விபத்தை அறிந்த பிரகாசம், மறுநாளே மருத்துவமனை கிளம்ப, அவரோடு கயலும் அவர்களுக்குத் தேவையான உணவுகளையும் சமைத்து எடுத்துக்கொண்டு கிளம்பினாள்.



மரியாதை நிமித்தமாய் பிரகாசத்தோடு அவன் உரையாடிக் கொண்டிருக்க, இவள் கண்களோ அவனது காயங்களை ஆராய்ந்து கொண்டிருந்தது. நெற்றியில் அடிபட்ட காயத்தின் காரணமாய் முகம் கன்றிப் போயிருந்தது. அவனது சோர்ந்த முகத்தை கண்டவள் மனம் கலங்கிப் போனது.



சம்பிரதாயமான சில வார்த்தைகளோடு கிளம்பினாலும், அவளுடன் மானசீகமாய் உரையாடிக் கொண்டிருந்தான் வளவன். அவன் மருத்துவமனையில் இருந்த 15 தினங்களில் சிலமுறை நேரில் சென்று சந்தித்தாலும் கூட, பெரும்பாலும் உறவினர்கள் சூழ இருந்தவனிடம் நலமா என்பதைத் தவிர, வேறு எந்த வார்த்தைகளும் பேச இயலாது போயிற்று. அவ்வப்போது வழக்கம் போல குறுஞ்செய்தி பரிமாற்றத்திலேயே நாட்கள் ஓடின. கிட்டத்தட்ட 20 நாட்கள் கழித்து, அவன் மருத்துவமனையை விட்டு வீட்டிற்கு சென்று விட, அதற்குப் பிறகான ஒன்றரை மாதங்கள் அவளின் மனதை அவளுக்குத் தெள்ளத் தெளிவாகத் தெரிய வைத்தது.



ஒவ்வொரு நாளும் அவன் என்ன செய்கிறானோ? எப்படி இருக்கிறானோ? என்றே அவளின் மனம் யோசித்தது. அவளின் துடிப்பு அதிகமாகியதே தவிர குறையவில்லை. ஒரு நாள் இரவு, “எப்படி இருக்க” என்று அவனின் செய்திக்கு, “நீங்க எப்படி இருக்கீங்க” என்ற வார்த்தையிலேயே அவளது தவிப்பு அவனுக்குப் புரிந்தது.



“நல்லா இருக்கேன். சீக்கிரம் குணமாகி வந்துடுவேன். கவலைப்படாமல் இரு..” என்று சொன்னான். அந்த ஆறுதல் வார்த்தைகள் அவளுக்குப் போதுமானதாக இல்லை. பதில் தர தாமதமானதிலேயே, அவள் உள்ளம் அவனுக்கு புரிந்து விட,



"வேணும்னா வீடியோ கால் பண்றேன் நீயே பாரு.." என்று அவன் கூறியதும், அவள் மனம் மகிழ்ந்தது.



உடனே "ம்.." என்றாள்.



அடுத்த நிமிடம் அவன் வீடியோ காலில் அழைக்க, உள்ளம் பரபரக்க அதை உயிர்ப்பித்தாள். அங்கே அவளின் உயிரானவன் அவனுக்கே உரிய கன்னக்குழி சிரிப்புடன் "நல்லா பாரு நான் நல்லா இருக்கேன்” என காயம் பட்ட இடங்களைக் காண்பித்தான். நெற்றியில் தையல் பிரிக்கப்பட்ட காயம் ஆறி விட்டிருந்தது. புருவத்திற்கு மேல் தழும்பைக் கண்டவளுக்குக் கண்கள் கலங்கின. கை கட்டுகள் சிறிதாக்கப்பட்டு நடக்க ஆரம்பித்திருப்பதாக அவன் கூறிய பின் தான் அவளுக்கு மூச்சே வந்தது.



"இப்போ திருப்தியா? நான் நல்லா இருக்கேனா..?" என மீண்டும் வினவினான்.



"இன்னும் முழுசா குணமாக வில்லை.." என்றாள் கவலையான முகத்தோடு.



"கவலைப்படாதே.. சரியாகி விடும்.. ஜீவா எங்கே.."



"அப்பாவோட தூங்கறா..”



"பத்திரமா பாத்துக்கோ.."



"ம்.. நீங்க சாப்டீங்களா.."



"ம்.. நீ.."



"ம்.. மாத்திரை மருந்து இருக்கா...? டாக்டர் என்ன சொன்னாங்க..? எப்போ கண்டுபிடிப்பாங்க..?” என வரிசையாக கேள்விகளை கேட்க, அதற்கெல்லாம் பதில் அளித்தவன், “சரி தூங்கு.. காலைல கூப்பிடுறேன்” என்று அலைபேசியை வைத்தான்.



அவனைக் கண்ட பின்னரே அவளுக்கு முழுதாய் மூச்சு விட முடிந்தது. நிம்மதியாய் உறங்கிப் போனாள். அதன் பின் காலை, மாலை என அவளை வீடியோ காலில் அழைத்துப் பேசுவது வாழ்க்கையானது. அவளை நேரில் காண்பது போன்றதொரு உணர்வு அவனுக்கு. அவளுக்கும் அவன் தன்னோடு இருக்கிறான் என்ற மகிழ்ச்சி உண்டானது. அவன் அழைக்காத தருணங்களில் நிம்மதி இல்லாமல் தவிப்பாள். அவன் முகத்தைக் கண்ட பின்னரே அவள் மனம் இலகுவாகும். இப்படியே சில நாட்கள் கடந்தது. அவன் சகஜமாய் நடக்க ஆரம்பித்திருந்தான். அவளை நேரில் காண்பதற்காக வருவதாகக் கூறவே, அவளும் அந்நாளுக்காய் காத்திருந்து அவனைச் சந்திக்கத் தயாரானாள்.


தொடரும்...
 

Megala Appadurai

Saha Writer
Team
Messages
66
Reaction score
66
Points
18
அத்தியாயம் 14

இன்று...

அழகான பச்சை பசேல் என்ற போர்வை போர்த்தியது போல் இருமருங்கிலும் வயல்வெளிகள். எங்கு காணினும் ஈரோட்டு மண்ணின் மஞ்சள் தோட்டங்கள். அவளை உரசிச் சென்ற காற்றில் மெலிதான காதல் வாசனையை நுகர்ந்தான் அவன். அதைவிட அவளின் வாசனை அவனைக் கிறங்கச் செய்தது.

"ஏய்.." என்றான் காதோரம் வந்து. அவனது மூச்சுக்காற்று அவள் காதுமடலைக் கூசச் செய்தது.

"ம்.." என அவள் பதிலளிக்க

"உன் இடுப்பைப் பிடிச்சுக்கவா.." என்ற அவனது கேள்வியில் அவள் முகம் செம்மையுற்றது அவனுக்குத் தெரிந்தது.

"ப்ளீஸ் கூச்சமா இருக்கு. இது ரோடு..." என்றாள் வெட்கத்தோடு.

"பிடிமானம் இல்லாம உக்காந்து இருக்கேன். நீ வேற திடீர், திடீர்னு பிரேக் அடிக்கிற... விழுந்தா மறுபடியும் ஆறு மாசம் கட்டு போட்டுப் படுத்திருக்கணும்.." என்றான் வருத்தமானதொரு குரலில்.

"ஐயோ... சும்மா இருங்க.. இப்பதான் எழுந்து வந்து இருக்கீங்க. அதுக்குள்ள இப்படி பேசிட்டு.." என்று கடிந்து கொள்ள,

"அப்போ பிடிச்சுக்கிறேன்” என்றான் அடம் பிடிக்கும் குழந்தையாய்..

சில நிமிடத் தயக்கத்திற்குப் பிறகு, "ம்ம்ம்.." என்றாள் லேசாய்.

அவனது வலது கரத்தில் அவள் இடையைப் பற்றி, தோளில் லேசாய் தன் தாடையைப் பதித்தான். அவளுக்கோ எங்கோ மிதப்பது போன்ற பிரமை. இறகைப் போல பறந்தது அவள் மனது. சிலிர்த்து நடுங்கியது தேகம்.

"கயல்..." என மெல்ல அழைத்தான்.

"ம்.." என்றாள் ஒற்றை வார்த்தையில்..

"ஏன் உனக்கு இப்படி நடுங்குது..?” என கேள்வி எழுப்பினான்.

சில நொடிகள் மௌனித்தவள், அவளுக்குமே அதற்கான பதில் தெரியாததால், "தெரியல.." என்றாள்.

"எனக்கு எல்லாமே கனவு மாதிரி இருக்கு கயல்.." என்றான்.

"ம்.. எனக்கும்..” என கிறங்கிய குரலில் பதிலளிக்க, அவள் கழுத்து வளைவின் இறுதியில் மெல்ல தன் இதழ் பதித்தான்.

இவன் தோள் மீது நாடியை பதித்ததற்கே முடியவில்லையே? இருந்தாலும், சற்றே கவனத்தோடு அவள் வாகனத்தை செலுத்திக் கொண்டிருக்கவே, இம்முறை அவள் தடுமாறவில்லை. ஆனாலும், மேனி முழுவதும் சிலிர்த்தது. உடலெங்கும் பரவச உணர்வை அவளால் கட்டுப்படுத்த இயலவில்லை.

முத்தமிட்டவன் அவள் தோள் வளைவில் லேசாய் கடிக்க, அது மேலும் அவளை இம்சித்தது. ஒரு ஆணின் ஸ்பரிசம் இப்படி எல்லாம் உடலின் ஒவ்வொரு அங்குலத்திலும் பரவசத்தைப் பூக்கச் செய்யும் என்பதை முதன்முறையாக உணர்ந்தாள். அவள் உடல் பரவசத்தில் அதிர்ந்து நடுங்குவதை அவனும் உணர்ந்தான்.

"பேசாம வரல, வண்டியை இப்படியே எங்கேயாவது குழிக்குள்ள விட்ருவேன்.." என எச்சரித்தாள்.

"நீ ரோட்டப் பார்த்து போ தாயே.. மறுபடியும் ஆஸ்பத்திரிக்கு போக என்னால ஆகாது.." என்று கூறினாலும் அவளை ஒட்டி நெருக்கமாய் அமர்ந்தவாறு அவளின் வாசத்தை தன் சுவாசம் எங்கும் நிரப்பிக் கொண்டே வந்தான்.

அவன் வழிகாட்டியபடியே வர சற்று நேரத்தில் இடது புறமாய் விரிந்த சாலையில் சற்று தொலைவில் அவனுக்குச் சொந்தமான தோட்டம் வந்தது. தென்னந்தோப்பும், மாந்தோப்பும், ஒருபுறம் மாட்டுத் தீவனங்களும், கொய்யா, சப்போட்டா, கரும்பு பல வகையான மரங்களும், பயிர்களுமாய் பசுமையாய் இருக்க, குத்தகை எடுத்தவர்கள் தோட்டத்தை நன்றாகவே பார்த்துக் கொள்வதாய் கயலுக்குத் தோன்றியது.

வயல் வேலை செய்து கொண்டிருந்த ஒரு முதியவர் "ஆரது...?” என தன் நெற்றி மேல் கை வைத்து வந்திருந்தவர்களை அடையாளம் காணமுடியாமல் அருகே வந்தார்.

"ஐயா நான்தான் வளவன்.." என்று சற்று உரத்த குரலில் பதில் அளித்தான் வளவன்.

"ஆரு... வளவனா... வா தங்கோ... நல்லா இருக்கியா சாமி...?" என தலைக்குக் கட்டி இருந்த துண்டை உதறி தோளில் போட்டவாறு அருகே வந்தவர், "உங்க அய்யன பார்த்த மாதிரியே இருக்கு சாமி.." என்றார்.

"நல்லா இருக்கீங்களா.." அதே என உரத்த குரலில் வளவன் கேட்க

"நல்லா இருக்கேஞ்சாமி..." என்றவர் கயலைப் பார்த்து இது யாரு வூட்டம்மணியா..? கண்ணாலத்துக்குக் கூப்பிடாமலே பண்ணிட்டியா ராசா...?" என்றார்.

கயலைப் பார்த்து சிரித்தவாறு "வூட்டம்மணி ஆகப் போறவங்க.. அதான் உங்ககிட்ட காட்ட கூட்டி வந்தேன். என்றான்

"அப்படியா ராசா.‌‌. மகராசி மகாலட்சுமி கணக்கா இருக்கு. உனக்கு ஏத்த சோடி தான்.." என தன் மகிழ்ச்சியை காட்ட

"எங்களை ஆசீர்வாதம் பண்ணுங்க.." என்றபடியே கயலின் கையைப் பிடித்துக்கொண்டு அவளோடு அவரை வணங்கி எழுந்தான்.

"மகராசியா.. தீர்க்க சுமங்கலியா.. பதினாறும் பெத்து, பெருவாழ்வு வாழனும் தாயே.." என வாழ்த்தியது அந்த அனுபவ உள்ளம்.

"சித்த இரு ராசா.." என அங்கிருந்த தோப்பு வீட்டினுள் நுழைந்தவர், திருநீற்று சொம்போடு வெளியே வந்தார். இருவரது நெற்றிலும் திருநீறை இட்டவர், "அந்த வெள்ளியங்கிரி ஈசன் உங்களுக்கு எந்த குறையும் இல்லாமல் பார்த்துக்கொள்வார்.. ஆல் போல் தழைச்சு, அருகு போல் வளர்ந்து நோய்நொடி இல்லாம மகராசியா, மகராசனா இருக்கனும்.." என மனதார வாழ்த்தினார்.

கயலின் கண்களில் மகிழ்ச்சியில் நீர் திரையிட கண்களாலேயே "ம்ஹூம்.." என தலையசைக்க சிரிப்போடு கண்களை துடைத்துக்கொண்டவள் சுற்றிலும் பார்வையிட்டாள்.

"ரெண்டு இளநி பறிக்கலாம்னா.. பயலுக யாரும் இல்லையே சாமி.. நானும் மரமேறி பல வருஷம் ஆச்சு.." என வருத்தக் குரலில் முதியவர் கூறினார்.

"அதெல்லாம் ஒண்ணும் வேண்டாங்கய்யா.. நாங்க இப்போதான் குடிச்சிட்டு வந்தோம். நீங்க பாருங்க.. நான் அப்படியே தோட்டத்தை நம்ம அம்மணிக்குச் சுத்தி காட்டிட்டு வரேன்." என்றான்.

"அதுக்கென்ன கண்ணு? கூட்டிட்டு போ..” என தூரத்தில் மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளை விரட்ட இங்கிருந்தே குரல் கொடுத்தபடி கிளம்பினார் அவர்.

"வா என்றபடி அவளை அழைத்துச் சென்றான் வளவன். தென்னந்தோப்பை ஒட்டிய கிணற்றை எட்டிப் பார்த்தவன், "இந்த தண்ணீர் அவ்வளவு ருசியா இருக்கும்.." என்றபடியே அருகே இருந்த தொட்டியில் சேமித்திருந்த நீரை அள்ளி முகத்தில் அடித்து கழுவினான். சில்லென்ற நீரில் கை கால்களை கழுவிக்கொண்டு நிமிர, அவளும் தண்ணீரில் கை நனைத்தபடி அங்கே இருந்த மரங்களை வேடிக்கை பார்த்தபடி நின்றிருந்தாள். முகம் கழுவியவன் அவளது புடவை முந்தானையைப் பற்றி அதில் முகத்தை துடைக்க, அதிர்ந்து திரும்பினாள். "என்ன..?" அவன் அவள் முகத்தைப் பார்த்தபடியே புருவத்தை உயர்த்த, ஏதுமில்லை என்பதாய் மறுப்பாய் அவள் தலையாட்டினாள்.

அவளின் அதிர்ச்சியை உணர்ந்தவன் சிரித்துக்கொண்டே "வா.." என முன்னால் நடக்க அவளுக்கு மகிழ்ச்சி ஒரு புறமும், படபடப்பு ஒரு புறமுமாய் தடுமாறிக் கொண்டிருந்தாள்.

தென்னந்தோப்பைக் கடந்து இருபுறமும் ஆளுயர தீவன புற்களுக்கிடையே உள்ள வரப்பில் அவன் நுழைய, அவளும் சுற்றிலும் உள்ள பசுமையை ரசிக்கவும் முடியாமல், அவனோடான தருணத்தை மனதில் பொக்கிஷமாய் கோர்க்கவும் முடியாமல், நிலை கொள்ளாமல் தடுமாறியபடி கால்கள் மட்டும் அவன் பின்னே செல்ல, மெதுவாய் அவனை பின் தொடர்ந்து கொண்டிருந்தாள்.

முன்னே சென்றவன் சட்டென திரும்ப அவனை முட்டி தடுமாறி நின்றாள். என்ன ஆச்சு என அவள் எண்ணும் முன், அவளின் கன்னங்களை இரு கைகளாலும் தாங்கி, அவள் கண்களை நோக்கியவன், அடுத்த நொடி அவள் இதழை அழுத்தமாய் சிறை செய்திருந்தான். எதையும் தடுக்கவோ, எதிர்க்கவோ கூட தோன்றாமல் அவள் சட்டென அவனது மார்பு பகுதியின் சட்டையை இறுக தன் கைகளால் பற்ற.. அத்தனை நாட்களின் துன்பத்தையும் தன் முதல் இதழ் முத்தத்திலேயே அவளை மறக்க வைக்க நினைத்தானோ என்னவோ... சில நீண்ட நொடிகளுக்குப் பிறகே மெதுவாய் அவளை விடுவித்தான்.

எதிர்பாராத அந்த முத்தம் அவளுள் பலவித பிரளயங்களை தோற்றுவித்தது. தேகம் நடுங்க, அவள் கால்கள் நிற்க இயலாமல் துவண்டது. பெருமழையில் நனைந்த சிறு பறவை, தன் தாயிடம் அடைக்கலம் ஆவது போல் அவனிடமே சரணடைந்தாள். அவனது சட்டையை பற்றி இருந்த கரங்களை அவள் விலக்கவில்லை. அப்படியே அவன் மார்பில் முகத்தைப் புதைத்தவளின் கண்ணீர்த் துளி அவன் சட்டையை நனைத்தது.

"கயல்... என அவள் தோள் பற்றி விலக்கி நிறுத்தியவன், "நீ என்னவள்ன்ற உரிமையோட, எனக்கு சொந்தமாவன்னுதான் உன்கிட்ட இப்படி நடந்துகிட்டேன். தப்புன்னு நினைக்கிறியா..?" என்றான் அவள் முகத்தை நிமிர்த்தி.

உதடுகள் நடுங்க, நெகிழ்ச்சியோடு "ம்ஹூம்..." என தலையசைத்தவாறே மீண்டும் அவன் மார்பில் அவள் தஞ்சம் புக, அவள் உச்சியில் முத்தமிட்டவன், அவள் இடை பற்றி இறுக அணைத்துக் கொண்டான்.

"லவ் யூ டி... எங்க என்ன தப்பா நினைச்சுடுவியோன்னு ஒரு நிமிஷம் பயந்துட்டேன். உன்ன பார்க்காத வரை எனக்குள் எந்த உணர்வுகளும் எழுந்ததில்ல... ஆனா இப்போ நீ இல்லாம என்னால ஒரு நாள் கூட வாழ முடியாதுடி. இவ்வளவு நெருக்கமா உன்னைப் பார்த்ததும் என் உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியல.." என்றவன் மீண்டும் அவள் நெற்றியில் ஓர் ஆழ்ந்த முத்தத்தை பரிசளிக்க, அவளோ அவனது அகன்ற மார்பில் சத்தம் இல்லாமல் தன் முத்திரையை பதித்தாள்.

"அம்மு.." மகிழ்ச்சியில் அவன் உள்ளம் பூரிக்க அவளை அழைத்தவன் மீண்டும் அவள் இதழில் தன்னைத் தொலைத்தான். அவளோ தாங்க மாட்டாத இன்பத்தில் உடல் துவள அவன் மார்போடு ஒன்றி அவனோடு கரையத் தொடங்கினாள். நிற்கமாட்டாமல் கிறங்கித் தொய்ந்தவளை விடுவித்தவன். அவளை அப்படியே அள்ளி தன் மார்போடு அணைத்துக் கொண்டான்.

சில நொடிகள் கடந்தபின்னும் அவள் தன்னைவிட்டு அகலாதிருக்க... மனதினுள் பொங்கிய மகிழ்ச்சியோடு "எனக்கும் இப்படியே இருக்க ஆசை தாண்டி... ஆனால் யாராவது பார்த்தா தனியாக தோப்புக்கு தள்ளிட்டு வந்துட்டேன்னு சொல்வாங்க.." என அவன் கூற

சட்டென அவனை விட்டு விலகி நிமிர்ந்தவள், வெட்கத்தோடு "அப்போ இப்ப என்ன பண்ணிட்டு இருக்கீங்க... தனியாத்தானே தள்ளிட்டு வந்திருக்கீங்க.." என்றாள் குறும்பு கொப்பளிக்க

"அடியேய் நீ என் பொண்டாட்டி டீ.." என்றவன் "ஆமா நீ இப்படி எல்லாம் கூட பேசுவியா... ஒன்னும் தெரியாத மாதிரி இருந்த.. இப்ப என்னடான்னா.." என வியந்தான்.

அவன் தன்னை மனைவி என்றது அவளை திக்குமுக்காடச் செய்தது மீண்டும் அமைதியாகிவிட்டவளை பார்த்தவன், "சரி வா போவோம்.." என அவள் விரல்களோடு விரல் கோத்தவரே சிறிது நேரம் தோப்பை சுற்றிகாட்ட, அவன் கைகளைப் பற்றிக்கொண்டு நடப்பது அத்தனை பிடித்தமாயிருந்தது அவளுக்கு. சிறிது நேரத்தில் பெரியவரிடம் விடை பெற்றுக் கிளம்பினார்கள்.

கிளம்பும்போது ஸ்கூட்டி சாவியை அவள் அவனிடம் நீட்ட, "நோ.. நோ.. நீ தான் ஓட்டணும்.. இங்கே பக்கத்தில் தான் சென்னிமலை முருகன் கோவில் இருக்கு. நேரா அங்க வண்டியை விடு.." என்று அவன் சட்டமாய் பின்னிருக்கையில் அமர்ந்து விட புன்முறுவலுடன் ஸ்கூட்டியை கிளப்பினாள்.

நேராக கோவிலை நோக்கி கிளம்பியவர்களுக்கு பேச விடயங்களா இல்லை..? தன்னைப் பற்றியும், தன் குடும்பத்தைப் பற்றியும் ஒன்று விடாமல் அவன் கூற, அமைதியாய்க் கேட்டுக் கொண்டே வாகனத்தை இயக்கினாள்.

அவளைப் பற்றியும் அவன் கேட்க, கேள்விகளுக்கு பதில் அளித்தவள் சென்னிமலை அடிவாரம் வந்து வண்டியை நிறுத்தினாள்.

"என்னடா என்றவனிடம், இதை எப்படி அவனிடம் சொல்வது என யோசித்து அவள் தடுமாற, வண்டியில் இருந்து இறங்கி சுற்றிலும் நோட்டமிட்டவன் "அதோ அங்கே போ.." என்று கை காட்டினான். இவன் என் மனதைப் படிக்கிறானா என்ன என்று எண்ணியவாறே ஓரமாக வண்டியை நிறுத்திவிட்டு, ஹேண்ட் பேக்கை அவனிடம் கொடுத்துவிட்டு, அவன் காட்டிய திசையில் இருக்கும் கழிப்பிடம் நோக்கிச் சென்றாள்.

அவள் திரும்ப வரும் வரை காத்திருந்தவன் பிடி.. பிடி.. என அவசர அவசரமாய் அவளது கைப்பையோடு சேர்த்து அவன் கொண்டு வந்திருந்த பையையும் கொடுக்க, புரியாமல் விழித்தாள் அவள்.

"ஏய் எனக்கும் ச்சுச்சூ வருதுடி..." என்றவன் எவ்வளவு நேரம் அடக்கிறது..?" என்றபடியே விரைந்தான்.

வாய் வரை வந்த சிரிப்பை அடக்க முடியாமல் அவள் நகைக்க, சென்றவன் நின்று திரும்பிப் பார்த்தான். "உன் சிரிப்பு இவ்வளவு அழகா இருக்குமாடி..?" என்றவன் "இரு வந்துடுறேன்... என்றபடியே தன் அவசரத்தை இறக்கச் சென்றான்.

அவன் வந்ததும் "பஸ்ஸில் போகலாமா.." என அவள் கேட்க,

"வண்டிலயே போலாம்டீ... எனக்கு ஆசையா இருக்கு..."

"வண்டியிலேயேவா.."

"ஏன்? எத்தனை முறை நான் வரும்போது ஜோடி ஜோடியா மேல வர்றத பாத்திருக்கேன் தெரியுமா.. இப்ப நாம போகலாம் ப்ளீஸ்..." என்றான்.

புன்னகை அரும்ப "நான் இங்கு வந்து பத்து வருஷமாச்சு" என்றாள்.

"இன்னைக்கு வந்துட்டோம்ல? இனி அடிக்கடி வரலாம் வா.." என்றபடியே "வா..வா.." எனக் கிளம்ப

அவர்கள் மனதோடு சேர்ந்து வாகனமும் அந்த குன்றின் மீது பறந்தது. மலை உச்சியை அடைந்து வாகனத்தை நிறுத்தி விட்டு, அவனோடு சேர்ந்து நடக்கையில் அவள் மனம் முழுக்க மகிழ்ச்சியில் நிரம்பி இருந்தது. என்றாலும் யாராவது பார்த்து அவன் முன்னே ஏதும் கேட்டு விட்டால்? என்ற பயமும் அவளுக்குள் இருந்தது. கோபுரத்தைக் கண்டவள் மனம் உருகி நின்றாள்.

அருகில் இருந்த பூக்கடையில் அர்ச்சனைத் தட்டு வாங்கிக் கொண்டு வந்தவன் "போகலாமா.." என்றான். கோவிலினுள் நுழைந்தது முதல் அவள் உள்ளம் முழுக்க அந்த இறைவனுக்கு நன்றி மட்டுமே கூறிக் கொண்டிருந்தது. அவள் உள்ளம் உருக முருகனை வேண்டி கரம் குவித்து கண்கள் மூடி நின்றவளைப் பார்த்து இரசித்தபடியே அர்ச்சகர் கொடுத்த திருநீறு குங்குமத்தை வாங்கியவன் அர்ச்சகரிடம் ஏதோ கேட்டான்.

அவர் "ஒரே நிமிடம்.." என்று உள்ளே சென்றார்.

இன்று அவனோடு இருப்பதே கனவோ என்று நினைக்கும் அளவுக்கு அவனது ஒவ்வொரு செயலும் அவள் மீதான காதலை அப்பட்டமாய்க் காட்டிக் கொண்டிருந்ததை எண்ணி 'இத்தனை நாட்களாய் பட்ட துன்பத்திற்கெல்லாம் இவனைக் கொண்டு துடைக்க வந்தாயா இறைவா..?' என மானசீகமாய் முருகனைக் கேட்டுக் கொண்டிருந்தவளின் நெற்றியில் குங்குமத்தை வைத்தான் வளவன். அவன் செய்கை அவளுக்கு எதையோ உணர்த்த திடுக்கிட்டு கண் திறந்தவளின் நெற்றி வகிட்டில் குங்குமத்தை வைத்தான். அர்ச்சகர் கொடுத்த மஞ்சளை எடுத்து அவள் நெற்றியில் இட்டான். என்ன நடக்கிறது இங்கே..? என்ன செய்கிறான் இவன்..? இது நிஜமா? என எண்ணியபடி நெற்றியில் தன் விரல்களால் தொட்டுப் பார்த்தாள். அதில் குங்குமத்தின் சிவப்பு ஒட்டியிருந்தது.


தொடரும்...
 

Megala Appadurai

Saha Writer
Team
Messages
66
Reaction score
66
Points
18
அத்தியாயம் 15

திருமணம் என்பது இருமனங்களின் சேர்க்கை தானே..? அந்த மனங்களின் சேர்க்கைக்கு, அவரவர்களின் சாஸ்திர சம்பிரதாயங்களுக்கு ஏற்ப, தத்தம் முறைப்படி அதற்கென ஓர் அடையாளத்தை வகுத்துக் கொண்டனர். இவள் இவனின் மனையாள்.. இவளை இனி எவரும் மணந்து கொள்ளும் நோக்கோடு பார்க்கவேண்டாம் என்பதற்காக உருவாக்கபட்டவையே அனைத்து திருமணச் சடங்குகளும். ஆனால் அதுவே இன்று பெண்களுக்கு மிகப்பெரிய விலங்காகிப் போயின.

கயல் என்றும் இன்னொரு வாழ்க்கைக்காக ஏங்கியதே இல்லை. ஆனால், எல்லோரையும் போல் மகிழ்ச்சியான வாழ்வு தனக்கு ஏன் கிடைக்கவில்லை என்று மறுகியதுண்டு. கை நிறைய வளையலிட்டு, நெற்றியில் குங்குமம் வைத்து, தலை நிறைய மல்லிகை சூடி சந்தோஷமாக வலம் வர வேண்டும் என்ற ஒரு பெண்ணுக்கே உரிய நியாயமான ஆசைகள் அவளுக்குள்ளும் இருந்தன.

அவள் மனதிற்கு பிடித்தமானவனாக இல்லாவிட்டாலும் கூட பெற்றோர் ஏற்படுத்திக் கொடுத்த மணவாழ்க்கையை மனப்பூர்வத்துடன் ஏற்றுக் கொண்டாள். மற்ற எல்லோரையும் போல திருமணத்திற்கு பின் இயல்பாகவே ஏற்படும் காதலோ, ஆசாபாசங்களுமோ கூட அவளுக்கு இல்லாது போயிற்று. கணவனின் அருவருக்கத்தக்க இச்சைகளினால் அவளது வெம்மைக் கனவுகளும் வலியிலேயே முடிந்தன.

வளவன் அவனது தங்கைகளுக்கு அண்ணனாய் மட்டும் அல்லாமல், ஒரு தகப்பனாகவும் இருந்தான். அவர்களிடத்தில் அவன் காட்டும் அன்பும், அரவணைப்பும், பாசமும், மற்றவர்களிடம் அவன் காட்டும் பரிவும், மரியாதையும் அவள் மனதில் அவனுக்கென ஒரு தனி மதிப்பை உருவாக்கி இருந்தது‌. அவளிடம் தன் காதலைத் தெரிவித்த பின்னரும் கூட அவள் மனம் நோகக் கூடாதென அவன் ஒதுங்கிய பாங்கும் என இப்படி அவனது ஒவ்வொரு செயலும் அவளுக்கு இப்படியும் ஒருவன் இருக்க முடியுமா..? இப்படியும் தன்னை ஒருவன் காதலிக்க முடியுமா என எண்ணத் தொடங்கினாள். நாளுக்கு நாள் அவன் மீதான காதல் அதிகரிக்கவே செய்தது. சமூகத்திற்கு பயந்தே அவள் அவனிடமிருந்து விலகி இருந்தாள். தன்னால் அவனுக்கு அவமானம் நேர்ந்துவிடக்கூடாது என்று எண்ணினாள். அவனது உண்மைக் காதல் அவர்களை இணைத்தது. துணிந்து அவனைக் காண வந்துவிட்டாள்தான், ஆனால், ஆண்டவனின் சன்னதியில் தனக்கு அவன் மஞ்சள், குங்குமம் வைத்ததை அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவள் கண்களில் கண்ணீர் பெருகுவதை நிறுத்த இயலவில்லை.

"கயல்.. சும்மா பேருக்கு உன்னை காதலிக்கிறேன்னு சொல்லல. இத்தனை நாளா மனதார சொல்லிக் கொண்டிருந்தேன். இன்று என் செயல்களால் அதைக் காட்டுகிறேன். இறந்து போன ஒருவருக்காக மஞ்சளையும், குங்குமத்தையும் நீ இழக்க வேண்டியதில்லை. அது வேண்டுமா, வேண்டாமான்னு நீ மட்டும்தான் முடிவு செய்யணுமே தவிர, வேறு யாரும் அதை முடிவு செய்யக்கூடாது."

"மனதார உன்னை என் மனைவியா ஏற்றுக் கொண்டேன். இங்கேயே, இப்போவே உன் கழுத்துல தாலியை கட்டி கூட்டிட்டு போய்டுவேன். அப்படி செஞ்சா இந்த ஊரும், உறவும் உன்னைத் தூற்றும். இந்த ஊரைப் பற்றியோ, உறவுகளைப் பற்றியோ நாம் கவலைப்பட வேண்டியதில்லை. ஆனா, நம்ம வீட்ல உள்ளவங்க கிட்ட சொல்லி ஊரறிய சட்டப்படி உன்னை என் மனைவியாக்கிக்கணும்.


இந்த சமூகத்திற்காகத்தான் சட்டப்படி நம் திருமணம். ஆனா இன்னைக்கு இந்த கடவுள் முன்னிலையில் உன்னை என் மனைவியாக்கிட்டேன். இனி அழாதடீ.. நீ அழுத வரை போதும்.." எனக் கூறி அவள் கரங்களை ஆதுரத்துடன் இறுகப் பற்றினான். அந்த இறுக்கத்தில் அவன் மனம் உணர்ந்தாள்.

சில நிமிடங்களில் நிதானத்திற்கு வந்தவளிடம், தன் பையில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்துக் கொடுத்தான். அவள் குடித்து முடிக்கும் வரை காத்திருந்தவன் பையில் இருந்து ஒரு நெகிழிப் பையை எடுத்து அவள் கரங்களில் கொடுத்தான்.

'என்ன இது..?' என்பது போல் அவள் அவனை நோக்க..

மறுபடியும் கண்ணைக் கசக்கிடாத ஆத்தா.. ஏற்கனவே, போறவங்க வர்றவங்க எல்லாம் உன்னை நான் கடத்திட்டு வந்துட்டேனோங்கற ரேஞ்சுக்கு பாத்திட்டுப் போறாங்க என கூறவும், மெல்லிய சிரிப்போடு அவன் கொடுத்த பையைத் திறக்கும் முன்னரே அவளுக்கு தெரிந்துவிட்டது. வாழை இலையில் சுற்றப்பட்ட மல்லிகைச் சரம். திகைத்து நிமிர்ந்தாள்.

"எல்லாமே இந்த ஒரே நாளில் சாத்தியம்னு நினைக்கிறீங்களா..?

"எனக்கு வெச்சு விட தெரியாது.. இல்லைன்னா நானே வெச்சு விட்ருவேன். நீ வீட்டுக்குக் கூட வெச்சிட்டு போக வேணா.. இங்க மட்டுமாவது வை.. தலை நிறைய பூவோட உன்னை பார்க்கணும்டீ.. ப்ளீஸ்..” என்றான்.

மல்லிகைச் சரத்தைப் பார்க்கும்போதெல்லாம் எவ்வளவு ஏக்கம் கொண்டிருக்கிறாள்..? ஆனால், அதை இன்று தன் கையில் கொடுத்திருக்கிறான். தன்னவன் தனக்காக கொடுத்தது. உள்ளுக்குள் அத்தனை மகிழ்ச்சி. கரங்கள் நடுங்க அப்பூவை வெளியே எடுத்தாள். வாழை இலை அவிழ, பூக்கள் பூத்து சிரித்தது போல் அவள் கண்கள் மலர்ந்தன. .

அவள் அதையே விரிந்த கண்களுடன் பார்த்துக் கொண்டிருக்க "ம்ஹூம்...இது வேலைக்கு ஆகாது கொண்டா இங்க.." என்று அவள் தலையில் அப்பூவைச் சூட்டினான். பரவசப் பெருக்கில் கண்கள் பெருக, மனதார அவனை ஏற்றுக் கொண்டாள் கயல்.

விவாகம் என்பது இதுதானே..? இரு மனங்களின் சங்கமம்தானே..? திலகமிட்டு, பூச்சூடி அவளை அவன் காந்தர்வ மணம் புரிந்து கொண்டான். ஆம், அவர்கள் மனமார ஒருவரை ஒருவர் ஏற்றுக் கொண்டனர். அவளது இருளடைந்திருந்த மனதிற்கு விடியலின் வெளிச்சத்தையும், அவர்களின் இனிமையான காதலின் முதல் அடியையும் எடுத்து வைத்திருந்தான்.

அவன் கூறியது போலவே கோவிலில் அவனுக்காக பூவைச் சூடிக்கொண்டவள், அங்கிருந்து கிளம்பியவுடனே "மன்னிச்சிக்கோங்க.. இதை நான் இப்போ எடுத்து பைல வெச்சிக்கிறேன். என் ரூம்ல போய் வெச்சிக்கிறேன்.." என கெஞ்சியபடி கேட்க,

அதுவரை அவளைப் பூவும், பொட்டுமாய் பார்த்ததே மனதுக்கு இதமாய் இருக்க, சரியென அவளின் விருப்பத்திற்குத் தலையசைத்தான். வைத்திருந்த பூவை எடுத்து தன் கைப்பையில் பத்திரப்படுத்திக் கொண்டாள் கயல்.

வளவனுக்கு சிறிது காலமாவது காதலிக்க வேண்டும். திகட்ட திகட்ட அவளுக்கு தன் காதலைக் கொட்டிக் கொடுக்க வேண்டும். இருவருக்குள்ளும் அந்நினைவுகள் என்றுமே பசுமையாய் மனதிற்குள் பதிந்திருக்க வேண்டும் என்று எண்ணினான். உடனே திருமணத்தை முடித்துவிடலாம்தான். ஆனால் காதல் என்ற அந்த இனிமையான அனுபவங்களை சிறிது நாட்களாவது அனுபவிக்க விரும்பினான். அதைக் கயலிடமும் தெரிவித்தான்‌.

கயலுக்கும் அவன் கூறியது பிடித்திருந்தது. காதல் என்ற உணர்வு படுத்திய பாட்டை இந்த சில நாட்களாய் உணர்கிறாளே. அதனால் அவளும் அதற்கு சம்மதித்தாள்.

அன்றில் இருந்து அவர்களின் கைபேசிகள் சங்கீத ஸ்வரங்களின் கணக்குகளை எண்ணத் தொடங்கின. தினமும் அவர்களின் சந்திப்புகள் நிகழ்ந்தது. கைகோர்த்தபடி இரவில் இருவரும் சிறிது தூரம் நடப்பது வாடிக்கையானது. அவ்வப்பொழுது கயலின் அண்ணன் குழந்தைகளோடு, ஜீவாவையும், துணைக்கு கயலின் தந்தையையும் பார்க்கிற்கு அழைத்துச் செல்வதும் நடந்தது.

இதற்கிடையில் வளவன் தனியாய் தன் தொழிலை JK Construction என்ற பெயரில் தொடங்கி, அதில் பிரகாசத்தையும் ஒரு முக்கிய பொறுப்பில் அவரது சம்மதத்தோடு அமர வைத்தான். அவரின் ஆரம்பகாலத்தில் அவருக்கு இருந்த கட்டிடத்துறை மீதான மோகத்தையும், தான் அதைத்தான் படிக்க விரும்பியதாகவும் ஒருநாள் அவர் கூறியதை நினைவில் வைத்து அவன் செயல்படுத்த அவர் பூரித்துப் போனார். இன்றைய தொழில்நுட்பமும், நவீனமும், இருவரது கனவுகளும் சேர்ந்து அவனது கட்டிடங்களுக்கு உயிரூட்ட, கயல் வளவன் காதலைப் போலவே தொழிலும் அமோகமாய் வளர்ந்தது.

காதலில் வெற்றி பெற்றது போலவே, தான் தனியாக தொழிலைத் தொடங்கிய பின்னரே தங்களது திருமணம் என்பதில் உறுதியாய் இருந்தான் வளவன். அவனது எண்ணப்படியே தொழிலைத் தொடங்கி, அதை வெற்றிகரமாக நடத்தவும் ஆரம்பித்திருந்தான்.

ஏற்கனவே அவனது தாய் செந்திலகத்திற்கு இவ்விடயம் தெரியும் என்பதால், அவரும் இவன் சொல்லுக்காகவே காத்திருந்தார். வளவனின் திடமான இந்த முடிவு அவருக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்தது. திரும்பத் திரும்ப அவனிடம் கேட்டு உறுதி செய்த பின்னர், தன் மற்ற மகன்களிடமும், மகள்களிடமும் பேச அங்கேதான் பிரச்சினை ஆரம்பம் ஆனது.

தாயின் சம்மதம் இருக்கும் பட்சத்தில் தன் காதலுக்கு எந்த எதிர்ப்பும் இருக்காது என்றே எண்ணியிருந்தான் வளவன். ஆனால் அவன் அண்ணன்கள் இருவரும் கடுமையாக எதிர்த்தனர்‌.

வேறு சாதி பெண் மட்டுமல்லாமல் ஒரு குழந்தையோடு இருக்கும் விதவைப் பெண்ணை மணப்பதா..? என வானத்துக்கும், பூமிக்குமாய் குதித்தனர்‌. இது மட்டுல்லாது வீட்டு மாப்பிள்ளைகளையும் சேர்த்து தூண்டி விட அவர்களில் இருவர் இவர்களோடு சேர்த்து வளவனின் திருமணத்தை எதிர்த்தனர். தன் சகோதரன் காதலிக்கும் பெண்ணிற்கு குழந்தை இருக்கிறது என்ற செய்தியே தாமரையைத் தவிர மற்ற சகோதரிகளுக்கு குழப்பத்தை அளித்தது. இது எந்த விதத்தில் சரியாய் வரும் என்று யோசிக்க ஆரம்பித்தனர். அந்த யோசனையையே அவர்களின் சகோதரர்கள் தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டனர்.

இத்தனை ஆண்டுகளாய் வளவனுக்கு ஒரு திருமணம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் கூட இல்லாதிருந்தவர்கள் அவரவர் பங்கிற்கு வரன்களைக் கொண்டு வர, செந்திலகமும், வளவனும் திகைத்துப் போயினர். இதை எப்படி சமாளிப்பதென்று வளவன் யோசிக்கலானான்‌. ஒரே வார்த்தையில் அவளைத்தான் திருமணம் முடிப்பேன் என்று கூறி, திருமணத்தை நடத்தி விட முடியும். ஆனால் கயல் இங்கு வந்த பின் இவர்களின் சொல்லும், செயலும் எப்படி இருக்கும் என வளவன் அறிவான். அதனாலேயே அவசரப்படாமல் நிதானமாய் யோசித்தான்.

ஒருவழியாய் இப்பொழுதுதான் கயல் சம்மதித்து, அவர்களின் காதல் துளிர்விட்டு மலர ஆரம்பித்திருந்தது அதற்குள் அதை அடியோடு அழிக்கும் முயற்சியும் தொடங்கியது.

"அப்படி விதவைப் பெண்ணுக்குத்தான் வாழ்க்கை தருவேன்னு இருந்தா, எந்தங்கச்சி புருசனை இழந்துட்டு வந்து வீட்டோட இருக்கா.. பேசாம அவளைக் கட்டி வைங்க.." என செந்திலகத்திடம் நேரடியாகவே மல்லுக்கு நின்றாள் அவரின் மூத்த மருமகள்.

"எங்க ஒண்ணு விட்ட சித்தப்பா பொண்ணு முப்பது வயசாகியும் இன்னும் கல்யாணம் ஆகாம இருக்கு. அந்த பொண்ணைப் பார்க்கலாமே..?" என்று குதித்தாள் இளைய மருமகள்.

தினம் தினம் இவர்களைச் சமாளிப்பதே செந்திலகத்திற்கு வேலையாய் இருந்தது. வளவனோ இதை எதையும் கண்டு கொள்ளாது கயலுடன் காதல் மொழிப் பேசிக் கொண்டிருந்தான். துயில் கலைந்து விழிப்பதே அவள் முகத்தில்தான் என்றானது. அவனன்றி ஓர் அணுவும் அசைவதில்லை அவளுக்கு. ஈருடல் ஓருயிர் என்பது இதுதான் என இருவருக்கும் புரிந்தது. வளவனோடு வாழும் நாட்களுக்காய் கயல் காத்திருக்கலானாள்.


தொடரும்...
 
Top Bottom