தனக்கு எதிரிலிருந்தவனின் உயிர் உருக்கும் பார்வையில், "பார்க்குறதைப் பாரு.. பட்டிக்காட்டான் மிட்டாய் கடையைப் பார்க்குற மாதிரி.." என்று முணுமுணுத்துக் கொண்ட சஞ்சனா, தானே முதலில் தொண்டையைச் செருமிக்கொண்டு பேசத் துவங்கினாள்.
"ஹாய் வருண்?.. ஐ அம் சஞ்சனா.." என்றபடியே அவனுக்கு கைநீட்டினாள்.
பிரமிப்பு நீங்காமல் அவளையேப் பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.
"ஒரு ஃபார்மாலிட்டிக்கு கூட ஸ்மைல் இல்ல.." என்று தனக்குள்ளேயே முணுமுணுத்துக் கொண்ட சஞ்சனா, ஹலோ என்று அவன் முகத்தின் முன் சொடுக்கிட்டாள்.
அவன் சுயநினைவடைந்து, "என்னங்க ப்ளீஸ் என் கைய கிள்ளுங்களேன்" என்றான்.
அவள், "வாட்?.. எதுக்கு?" என்று கண்களை அகல விரித்தபடியே கேட்டாள்.
அவன், "ப்ளீஸ்.. ப்ளீஸ்.. சொன்னதை செய்யுங்களேன்" என்று அடம் பிடித்தான்.
அவளும் வேண்டுமென்றே அழுத்தமாய் கிள்ளவும் துள்ளலுடன் சொன்னான். "ஓஹ் காட் வலிக்குது.. அப்போ நிஜந்தான்.. தேவலோகத்தில் உலாவ வேண்டிய கன்னிகையை இப்படி நேர்ல பார்த்தா எப்படிங்க நம்ப முடியும்?.. அதான் கனவா நனவான்னு செக் பண்ண கிள்ளச் சொன்னேன்" என்றவுடன், சஞ்சனாவிற்கு கன்னங்களில் ரோஜாக்கள் பூத்தாலும் 'க்கும்.. க்கும்' என்று இருமி சமாளித்துவிட்டு,
"இங்கப் பாருங்க வருண்! எனக்கு இந்த அரென்ஞ் மேரேஜ் ஸ்டஃப் எல்லாம் சுத்தமா பிடிக்காது.. சாரி ட்டூ சே திஸ் நான் உங்களை ரிஜெக்ட் பண்ண தான் இங்க வந்தேன்" என்று படபடவென பொரிந்து தள்ளினாள்.
அவன் அதில் கலவரமடைந்து, "என்னங்க இப்போ தான் பார்த்தோம்.. இன்னும் நான் என் மனசுல இருக்குறதை உங்கக் கிட்ட சொல்லக் கூட இல்ல.. அதுக்குள்ள ரிஜெக்சன்னு சொன்னா எப்படிங்க?.." எனவும்,
"இங்கப் பாருங்க வருண்! பழைய டயலாக் தான் ஆனாலும் சொல்றேன்.. இந்தக் காதல், கல்யாணம், கத்தரிக்காயெல்லாம் சுத்த டைம் வேஸ்ட் மேட்டர்ஸ்.. பொண்ணுங்களோட ஹேண்ட்பேக்ல நாப்பது கிலோ இரும்புக்குண்டைத் தூக்கிப்போட்டு எங்கேப்போனாலும் தூக்கிட்டு போன்னு சொல்ற மாதிரி.." என்றவள் முகத்தைச் சுளிக்கவும்,
"மேரேஜ் பத்தின உங்க ஒபினியன் ரொம்பத் தப்புங்க. கல்யாணங்கிறது ஆயிரம் காலத்து.." என்று ஆரம்பித்தவனை கையுயர்த்தித் தடுத்தபடியே மறுத்துப் பேசினாள் சஞ்சனா.
"ஓஹ்! ப்ளீஸ் ஸ்டாப் யுவர் லெக்சர்.. சீ! உங்க ப்ரொஃபைல் பத்தி அத்தை சொன்னதை கேட்டவுடனேயே.. தப்பா எடுத்துக்காதீங்க.. உங்கப் போட்டோ பார்க்கக் கூட எனக்குப் பிடிக்கல.. பிகாஸ் அப்போவே நீங்க என் டைப் இல்லன்னு எனக்கு புரிஞ்சுப் போச்சு.. ஃபார் எக்ஸாம்பிள் எனக்கு இடிஎம் பிடிக்கும்.. பட் உங்களுக்கு மெலோடி தான்.." என்று மேலும் ஏதோ சொல்ல வந்தவளை கலைக்கும் விதமாக மேடம் என்று வந்து நின்றார் பேரர்.
அவள் அவரிடம் ஒன் காபசீனோ என்று விட்டு எதிரில் இருந்தவனைப் பார்க்க, அவன் பேரரிடம் டூ காபசீனோ என்றான்.
பின், தன் கையிலிருந்த தட்டோடு பேரர் சென்றவுடன் அவள்புறம் குனிந்து, "யூ நோ?.. ஐ டோன்ட் லைக் காஃபி.. பட் உங்களுக்காகத் தான் ஆர்டர் பண்ணியிருக்கேன்.." எனவும்,
"இங்கப் பாருங்க நீங்க நான் சொல்ல வந்த விஷயத்துல இருந்து என்ன டைவர்ட் பண்ணிக்கிட்டு இருக்கீங்க.." என்று கோபமாக கூறியவள்,
பிறகு தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு, "ஊப்ப் இப்போ நம்ம முக்கியமான விஷயத்தைப் பத்தி பேசலாமா?" என்று கடுமையாகவேக் கேட்டாள்.
"ம்ம் தாராளமா.." என்றவன், தன் முழங்கையை டேபிளில் ஊன்றி முகத்திற்கு முட்டுக் கொடுத்து அவள் முகத்தையே தான் வெறித்து வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான்.
அவளுக்கு கடுகடுவென்று இருந்தது.
"இங்கப் பாருங்க வருண்! நான் என் அத்தைக்காகத் தான் இங்க வந்தேன்.."
"மூணு"
"என்ன மூணு?"
"இல்ல, இதோட நீங்க மூணு இங்கப் பாருங்க வருண் சொல்லிட்டீங்க.."
"யூவ்.."
"வெயிட் வெயிட்" என்றவன்,
"நீங்க என் போட்டோவையேப் பார்க்கலைல்ல?.. ரொம்ப நல்லதாப் போச்சு.. இப்போ தான் நேர்ல பார்த்துட்டீங்களே.. இப்போ சொல்லுங்க! என்னை உங்களுக்கு பிடிச்சிருக்கா இல்லையான்னு" என்று கண்ணடிக்கவும்,
"ஹெலோ எஸ்கியூஸ் மீ.." என்று கண்டிப்பு காட்டியவளிடம் மீண்டும் பிடிவாதமாய்,
"ம்ம்! சொல்லுங்க என்னை உங்களுக்கு பிடிச்சிருக்கா?.. இந்த அம்மா அத்தை மெலடி ஈடிஎம் பொடலங்கா கதையெல்லாம் விடுங்க.. என்னைப் பாருங்க!.. சொல்லுங்க என்னை உங்களுக்கு பிடிச்சிருக்கா?" என்று வலப்புற புருவத்தை ஏற்றி இறக்கியவன் மேல் அவள் பார்வை ஒரு நிமிடம் நிலை குத்தி நின்றது.
பின்பு அவள், 'நோ' என்றுவிட்டு வலப்புறம் திரும்ப, சரியாக பேரர் காபி கோப்பைகளுடன் வந்து கொண்டிருப்பது தெரிந்தது.
பேரர் காபசீனோவை டேபிளில் வந்து வைக்கவும், "ம்ம் சொல்லுங்க நீங்க இங்க வரும் போது போட்ட பிளான் பத்தி.." என்று சொல்லிவிட்டு காபசீனோவை அவன் சின்னதாய் 'சிப்'ப...
"யூ சி ஐ அம் அன் எமோஷனல் இடியட்.. என் ஃபேமிலிய என்னால ஹர்ட் பண்ண முடியாது.. முக்கியமா என் அத்தைய.. ஸோ, நீங்களே உங்க வீட்டுல இந்த மேரேஜ் வேணாம்னு சொல்லிருங்க ப்ளீஸ்" என்று அவன் முகத்தை பாவமாகப் பார்த்தாள் சஞ்சனா.
"சரி என்னை ரிஜெக்ட் பண்றதுன்னு முடிவாகிடுச்சி, உங்கக்கிட்ட ஒரு கொஸ்ட்டின்.. ஒருவேளை நீங்க ஃபியூச்சர்ல யாரையாவது லவ் பண்ணனும்னு விரும்பினா அவனுக்கு என்ன மாதிரி குவாலிஃபிகேசன் எல்லாம் இருக்கணும்னு எதிர்பார்க்குறீங்க?"
"யூஷுவலா நான் யாருக்கிட்டயும் என் பெர்சனல் விஷயங்களை ஷேர் பண்றது கிடையாது.."
"சொல்ல முடியாது போடான்னு டீசெண்டா சொல்றீங்க.."
சஞ்சனா உடனே மறுத்தாள்.
"ச்ச.. ச்ச.. அப்படியெல்லாம் இல்ல" என்று காபி கப்பிற்கு தன் லிப்ஸ்டிக்கை இடம் மாற்றிக்கொண்டே.
"அப்போ சொல்லுங்களேன்…"
"ம்ம் என்ன சொல்ல?.. பெருசா எக்ஸ்பக்டேஷன்னு எதுவும் இல்ல.. அவர் எனக்காக பொறந்திருக்கணும்.. என்கிட்ட மட்டுமே அவர் உண்மையா இருக்கணும் அவ்ளோ தான்."
"அவ்ளோ தானா?" என்றவன் மனதுக்குள் 'உண்மையா இருக்கணுமா?.. ரொம்பக் கஷ்டமாச்சே' என்று முணுமுணுத்துக் கொண்டான்.
"அ..வ்ளோ..தான்" என்றவள் அக்கு அக்காய் வார்த்தையைப் பிய்த்து சிரிக்க,
அவன், "நீங்க ரொம்ப ரொம்ப அழகா சிரிக்கிறீங்க" என்றான்.
அதில் அவளின் புன்னகை இன்னும் கொஞ்சம் விரிவடைந்தது.
"பெர்ஃபெக்ட் மௌத்.. நீங்க என்னை ட்ரை பண்றது புரியுது.. பட் எனக்கு இன்டெரஸ்ட் இல்ல.. சரி சொல்லுங்க! நீங்க எந்த மாதிரி பொண்ணை எதிர்பார்க்குறீங்க?.."
"நமக்கென்னங்க ஸ்கை ப்ளூ கலர் ஸ்கர்ட் போட்டுக்கிட்டு வலது கையில ரேபாக் வாட்ச் கட்டிக்கிட்டு முன்னம் பல் வரிசைல ஒன்னு மட்டும் வரிசை விலகி முறைக்கும் போது அழகியாவும், சிரிக்கும் போது பேரழகியாவும் பரிமாணம் எடுக்கிற பொண்ணா இருந்தா மட்டும் போதும்ங்க.. "
"ஹேய்! ஹேய்! பார்த்தீங்களா!.. என்னையே மறுபடியும் டீஸ் பண்றீங்க.. அப்புறம் நான் எழுந்து போயிடுவேன்.."
"ம்ம், இப்படித் தாங்க அவ அடிக்கடி என்கிட்ட கோவிச்சுக்கணும்.."
"அது ஏனாம்?"
"அப்போ தானேங்க ஒவ்வொரு பில்லோவ் ஃபைட்டுக்கு பின்னாடியும் ஒரு ரொமாண்டிக் எபி எழுத முடியும் நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து.." என்று கேப்பிலும் கோல் அடித்தான் அவன்.
"ஹாஹாஹா.."
"ஹான் சொல்ல மறந்துட்டேன் பாருங்க.. இடது உள்ளங்கைல மட்டும் அந்த அழகிக்கு அழகா அம்சமா ஒரு மச்சம் இருந்ததுனா யார் தடுத்தாலும் குதிரை ஏறி வந்து.. இல்ல இல்ல ஹெலிகாப்டர் ஏறிவந்து தூக்கிட்டு போயிடுவேங்க.."
வேகமாக தன் இடப்புற காதோர முடியை ஒதுக்குவது போல் இடக்கையை கொண்டு வந்தவள், தன் கோழிக்குண்டு கண்மணியை விளிம்புக்கு உருட்டினாள், புதிதாய் மச்சம் ஏதும் தன் கையில் முளைத்திருக்கிறதோ என்று சந்தேகித்து.
பெரிய ஏமாற்றம். உள்ளங்கையில் மச்சம் இல்லை.
அவள் செயலில் வாயில் காபியுடனேயே சிரிப்பையும் விழுங்கினான் அவன்.
"அது ஏன் அப்படி?.. ஜோசியக்காரர் அப்படி பொண்ணாப் பார்த்து கட்டிக்கிட்டா பெரிய ஸ்டார் ஆகிடுவீங்கன்னு சொன்னாங்களோ?" ஏமாற்றமும் எகத்தாளமும் போட்டிப்போட்டுக் கொண்டு வந்து விழுந்தது அவள் வார்த்தைகளில்.
ரசித்துச் சொன்னான் அவன். "ச்ச.. ச்ச.. அப்படியெல்லாம் இல்லைங்க.. அதெல்லாம் ஒரு ஃபீல்.."
"ஓகேங்க, எனக்கு டைம் ஆகிடுச்சு.. ஐ ஹேவ் டூ கோ.. நைஸ் டூ மீட் யூ.. அப்புறம் வருண், அம்மா வீட்டுல கேட்டா நோ சொல்லிடுவீங்கல்ல?" என்றவள் மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்திக் கொள்ள கேட்கவும்,
"ம்ம் கேட்டா நோ சொல்லிடுவேன்.. ஆனா, வருண் அம்மா எப்படி என் வீட்டுல வந்து கேட்பாங்க?.."
நக்கல் ஏகத்திற்கும் பொங்கி வழிந்தது அவன் குரலில். அவளுக்கு ஏதோ புரிவது போல் இருந்தது.
"ஹேய் யூ மீன்?.."
"யெஸ் ஐ மீன் ஐ அம் நாட் வருண்.. ஐ அம்.. வேதா.. வேதானந்த்"
இப்போதும் அவளிடம் தன் பெயரை மாற்றியே கூறினான் அவன்.
"மை காட்.. நீங்க மேட்ரிமோனியல் வருண் இல்லைன்னா இவ்ளோ நேரம் என்னை வச்சு டைம் பாஸ் பண்ணுனீங்களா?.. ஹவ் டேர் யூ?.. வந்த உடனேயே நீங்க வருண் இல்லைன்னு சொல்றதுக்கென்ன?"
"எங்கங்க நீங்க சொல்ல விட்டீங்க?.. நீங்க பாட்டுக்க தான் பேசிக்கிட்டேப் போனீங்க.."
"ஷிட்.. இனி நான் வருண் கிட்ட வேற பேசனும்.." என்றபடியே வருணிற்கு போன் போட்டு கத்தினாள் சஞ்சனா.
எதிர்புறம் அவனை ஹெலோ சொல்லக்கூட அவள் அனுமதிக்கவில்லை.
"பேசாத! பேசாத! ஷட்டப்!.. எல்லாம் உன்னால தான்.. சொன்னா சொன்ன டைம்க்கு வரத்தெரியாதா?.. நாளைக்கே நமக்கு கல்யாணமாகி நான் டெலிவரி வார்ட்ல உயிர் போகுற நிலைமைல கிடந்தாலும் நீ இப்படி தான் கேஷுவலா வருவியா?"
அவன் பயத்தில், "நான்.. நான்.. உங்க அத்தைக்கு போன் போட்டு சொன்னேனேங்க.. அவங்க உங்கக்கிட்ட சொல்லல போலங்க.. சாரிங்க" என்றான்.
"என்ன சாரி? சீக்கிரம் வாங்க.." என்று சொல்லிவிட்டு வேக வேகமாய் மூச்சுவாங்கியபடியே, 'இவ்ளோநேரம் யாருன்னே தெரியாதவன் ஒருத்தன் கூட உட்கார்ந்து காபி குடிச்சிருக்கேன்.. வந்த உடனேயே நீங்க வருணான்னு கேட்டு கன்பார்ம் பண்ணாம.. ச்சே! சரியான இடியட் நான்..' என்று சஞ்சனா தனக்குத்தானே பேசிக்கொண்டும் திட்டிக்கொண்டும் இருக்க..
என்னங்க என்றழைத்தவன் அவள் நிமிர்ந்துப் பார்க்கவும், 'கூல் கூல்' என்றான் சிரிப்பை முயன்று அடக்கிக்கொண்டே.
"என்ன கூல் கூல்?" என்று எகிறினாள் அவள்.
"இப்போ என்ன அந்த வருண் கிட்ட பேசனும், அவ்ளோ தானே? நான் பேசுறேன்.. பட் அவன் இங்க வந்துட்டுப் போற வரைக்கும் நீங்க உங்க வாயவே திறக்கக்கூடாது, ஓகேவா?" எனவும், வேறுவழியின்றி அவனுக்கு சரியென்று தலையாட்டினாள் சஞ்சனா.
டேபிளில் தாளமிட்டுக் கொண்டிருந்தவன் திடீரென, "உங்கக்கிட்ட மேக்கப் கிட் ஏதாவது இருக்கு?.." என்றான்.
அவளும் எதுக்கு என்று கேட்டுக் கொண்டே தன் கைப்பையிலிருந்ததை எடுத்து நீட்டினாள்.
அதில் பவுண்டேசன் பாட்டிலை மட்டும் தேடி எடுத்தவன், அதிலிருந்த வெளிர் மேனி வர்ண திரவக் கலவையை ஆட்காட்டி விரலால் தொட்டு, அவள் முகத்தில் ஊன்றிப் பார்த்தால் மட்டும் தெரியும்படி அங்கங்கு ஓரமாக பொட்டு போல் வைத்து விட்டான்.
மேலும் கழுத்திலும் கையிலும் கூட அதுபோலவே திட்டுத் திட்டாக வைத்துவிட்டான்.
சஞ்சனாவிற்கு ஒன்றுமே விளங்கவில்லை. சில நிமிடங்கள் முயன்று தன் ஆவலை அடக்கியவள், பின் அவனிடமே, "ஆமா எதுக்கு இப்படியெல்லாம் வச்சு விட்டீங்க?" என்றாள்.
அப்போது அவளுக்கு பதில் கூற எத்தனித்தவனை கலைக்கும் விதமாக அவர்களருகில் 'எஸ் கியூஸ் மீ' என்றொரு குரல் கேட்டது. இருவரும் திரும்பிப் பார்த்தனர்.
தலையை வழித்து சீவி, கண்ணில் சோடாபுட்டி கண்ணாடி மற்றும் நெற்றியில் திருநீறென ஒரு அக்மார்க் பழமாய் அவர்கள் முன் பிரசன்னமாகியிருந்தான் வருண் வாசுதேவன்.
வந்தவனை 'ஹெலோ மிஸ்டர் வருண்' என்று ஏதோ பத்துவருட பழக்கம் போல் கைக் குலுக்கி அணைத்து வரவேற்றான் வேதானந்த்.
'நீங்க?' என்று வருண் அவனை கேள்வியாய் பார்க்கவும்,
"நான் வேதானந்த்.. வாங்க உட்கார்ந்து பேசலாம்" என்று மழுப்பினான் அவன்.
'ம்ம்' என்றுவிட்டு உட்கார்ந்த வருணின் அருகில் மீண்டும் மெனு கார்டுடன் படையெடுத்து வந்தார் பேரர்.
வருண் எனக்கு எதுவும் வேண்டாம் என்று சொல்லிவிட, வேதானந்த், "மேடமுக்கு மட்டும் ஒரு ஆப்பிள் ஜூஸ்.." என்று பேரரை அனுப்பி வைத்தான்.
பேச்சைத் துவக்கும் விதமாக அக்கறையாக விசாரிக்கத் துவங்கினான் வேதானந்த். "என்ன வருண் என்ன பண்றீங்க?"
"நெக்ஸ்ட் மந்த் யூஎஸ் போகப்போறேங்க.. ஆமா சஞ்சனாவுக்கு நீங்க யாரு?"
ஐஸ் வாட்டரைப் பருகினாள் சஞ்சனா.
"எனக்கு எப்படி சொல்றதுன்னே தெரியல வருண்.. பட் சொல்லாம விட்டா அது உங்களுக்கு துரோகம் பண்ற மாதிரி இருக்கும்னு தான் நானே நேர்ல பார்த்து சொல்ல வந்தேன்.." என்று வேதானந்த் நிறுத்தவும்,
எதுவோ புரிந்து, "மிஸ்டர் வேதானந்த் நீங்களும் சஞ்சனாவும் லவ் அந்த மாதிரி?" என்று வருண் கேள்வியாக இழுக்கவும் வாயில் வைத்த ஐஸ்வாட்டர் புரையேறியது சஞ்சனாவிற்கு.
வருண் எடுத்துக் கொடுத்ததை தொடர முயன்றான் வேதானந்த்.
"மெதுவா ஹனி.. பாப்பா பயந்திடப் போகுது.. ஒண்ணுமில்ல வருண்.. சஞ்சுவுக்கு இப்போ த்ரீ மந்த்ஸ்.. நைன்ட்டி நைன் பெர்சென்டேஜ் சேப்டியாத் தான் இருந்தோம்.. பட், எப்படின்னு தான் எங்களுக்கேத் தெரியல. ஐ திங் அந்த ஒன் பெர்சென்டேஜ் சான்ஸ் தான் இப்படி சொதப்பிடுச்சின்னு நினைக்கிறேன்.."
"ஹெலோ சஞ்சனா! என்னங்க என்னை கூப்ட்டு வச்சு விளையாடுறீங்களா?"
சஞ்சனாவின் மேல் பாய்ந்த வருணை தன்புறம் திருப்பினான் வேதானந்த். "அய்யோ! உங்க மேல சத்தியமா இல்ல வருண்.. சிக்ஸ் மந்த்ஸா நானும் சஞ்சுவும் லிவிங் டூகெதர்ல இருக்கோம்.."
தற்போது சத்தமாய் வேதானந்த் என்று அதட்டிய சஞ்சனாவின் குரலில் அவன் அவிழ்த்தப் பொய் மூட்டையை கட்டச் சொல்லும் த்வனி இருந்தது.
"இரு சஞ்சு பேசிக்கிட்டு இருக்கேன்ல.. அவர் புரிஞ்சிக்குவாரும்மா.." என்று அசராமலிருந்தான் வேதானந்த்.
"இதுக்கு நான் உங்களை சும்மா விட மாட்டேன்.. இப்பவே உங்க வீட்டுக்கு கால் பண்றேன் மிஸ்.சஞ்சனா.." என்று தன் பேண்ட் பாக்கெட்டிலிருந்து கைப்பேசியை வெளியில் எடுத்தான் வருண்.
பதறிப்போன சஞ்சனா, "அய்யோ! வேண்டாம் வருண்!.. ப்ளீஸ்! வீட்ல யாருக்கிட்டயும் சொல்லிடாதீங்க.. மதர் ப்ராமிஸா நான் இப்போ ப்ரெக்னன்ட் இல்ல.." என்றாள் வேதானந்தை முறைத்துப் பார்த்துக் கொண்டே.
இது ஏற்கனவே வேதானந்த் எதிர்பார்த்தது தான். ஆகையால் தனது இன்னொரு திட்டத்தை செயல்படுத்தத் தொடங்கினான் அவன்.
"சாரி வருண்.. உங்கக்கிட்ட சஞ்சனா ப்ரெக்னன்ட்னு சொன்னது பொய் தான்.. ஆனா, உங்கக்கிட்ட இப்போ எப்படி உண்மைய சொல்றதுன்னு தான் எங்களுக்குத் தெரியல வருண்.. சஞ்சு கொஞ்சம் அந்த முடியை ஒதுக்கி உன் முகத்தைக்காட்டு.. ஸ்கார்ப்பை எடுத்து கழுத்தைக் காட்டு.. என்ன வருண் ஷாக் ஆகிட்டீங்களா?"
வேதானந்த் கேட்டது போலவே அதிர்ந்து போயிருந்த வருண் அகன்ற கண்களுடன், "இது என்ன இப்படியிருக்கு?.. ஸ்கின் ஸ்பெஷலிஸ்ட் கிட்ட போனீங்களா மிஸ்.சஞ்சனா.." என்று தன் அதிர்ச்சி விலகாமல் கேட்டான்.
"ஒன் வீக் முன்னாடியேப் போயிட்டோம் வருண்.. டாக்டர் ஸ்கின் பயாப்சி டெஸ்ட் எடுக்கச் சொன்னாரு.. எடுத்துப் பார்த்ததுல.."
"ம்ம்! சொல்லுங்க வேதானந்த்!.. என்னாச்சு?.."
"எடுத்துப் பார்த்ததுல சஞ்சனாவுக்கு இருக்குறது ஏர்லி ஸ்டேஜ் ஆஃப் லூகோடெர்மான்னு சொல்லிட்டாங்க வருண்.. இன்னும் கொஞ்ச நாள்ல சஞ்சனாவோட உடம்பு ஃபுல்லா இது வந்திரும்னும் சொல்றாங்க.. அதான் உங்கக்கிட்ட இதை எப்படி சொல்றதுன்னு இப்படி லவ் ப்ரெக்னன்ட்னு பொய் சொல்லி கல்யாணத்தை நிறுத்தப் பார்த்தோம். இன்னும் சஞ்சனாவோட வீட்ல இருக்க யாருக்கும் இது தெரியாது வருண்.. ப்ளீஸ் நீங்களும் சொல்லிடாதீங்க.. ஆயுர்வேதத்துல சித்தாவுலன்னு எதுல பெஸ்ட் ட்ரீட்மெண்ட் இருக்குன்னு இன்னும் விசாரிச்சிட்டு இருக்கோம் வருண்.. சஞ்சு எப்படியிருந்தாலும் அவ எனக்கு தான் சொந்தம் வருண்.." என்று தன் கண்களை துடைப்பது போல் பாவனை செய்தான் வேதானந்த்.
ஆறுதலுக்காய் டேபிளில் இருந்த அவனது கை மீது தனது கையை வைத்த வருண், "யூ ஆர் க்ரேட் மிஸ்டர் வேதானந்த்!.. அப்புறம் உங்க லவ் க்ரேட்டோ க்ரேட்!.. உங்க லவ் சக்ஸஸ் ஆக என் வாழ்த்துகள்.." என்றதோடு, வேதானந்தின் சாமர்த்தியத்தை மனதிற்குள் மெச்சியபடி உட்கார்ந்திருந்த சஞ்சனாவிடம் ஆறுதல் கூறிவிட்டு கிளம்பிவிட்டான்.
காபிஷாப்பை விட்டு வெளியே வந்த வருணிற்கு அவன் அன்னையிடமிருந்து அழைப்பு வந்தது.
எடுத்த எடுப்பிலே, "என்னப்பா பொண்ணு புடிச்சிருக்கா?" என்றவர் வினவவும்,
உள்ளே நடந்ததை நினைத்துப் பார்த்தவன், பொண்ணு பிடிக்கலைம்மா என்றான்.
"என்னடா நெனச்சிக்கிட்டு இருக்க?.. ஊரு பூரா தேடியாச்சி.. இனி வேற கிரகத்துல இருந்து தான் உனக்குப் பொண்ணுப் பார்க்கணும்.. உண்மையைச் சொல்லுடா? வேற யாரையாவது லவ் பண்றியா?" என்றவர் ஆவேசமாகவும் விரக்தியாகச் சிரித்த வருண்,
"அன்பு மட்டும் தான்மா அனாதை" என்றதோடு அழைப்பைத் துண்டித்து விட்டான்.
வருணின் போறாத காலம் அவனது தாய், "ஏங்க! இவனைப் பார்த்தீங்களா?.. யாரோ அன்பாம்.. அனாதை பொண்ணாம்.. நம்மளை மோசம் பண்ணிட்டான்ங்க இவன்.." என்று கத்தித் தீர்த்துக் கொண்டிருந்தார்.
தன் காரினுள் ஏறப்போன வருண் எதற்கும் இருக்கட்டும் என்று, கண்ணாடி சுவரின் வழியே தெரிந்த வேதானந்தையும் சஞ்சனாவையும் தனது கைப்பேசியில் படம் பிடித்துக் கொண்டான். ஆம், பின்னால் பல பிரச்சனைகளுக்கு அதுவே அஸ்திவாரமாய் மாறப் போகிறது என்பதை அறியாமல்.
வருண் கிளம்பிய பின் பொதுவாக பேசிக் கொண்டிருந்த சஞ்சனா, தான் கிளம்பும் போது மனமே இல்லாமல் அடிக்கடி வேதானந்தை திரும்பிப் பார்த்துக் கொண்டே சென்றாள்.
அவள் காபி ஷாப்பை விட்டு வெளியேறியதும் தனது கைப்பேசியிலிருந்து தன் இரட்டையனுக்கு அழைப்பு விடுத்தவன், மறுபுறம் ஏற்கப்பட்டதும் உற்சாகமாய் பதிலளித்தான். "ம்ம் ஃபைன் டா.. நீ எப்படியிருக்க?.. தாத்தாவுக்கு இப்போ பரவாயில்லடா.. அப்பலோ டாக்டர்ஸ் தான் முன்னாடியே நீங்க சென்னைக்கு அவரை கொண்டு வந்திருந்தா நிலைமை இவ்ளோ சீரியஸ் ஆகிருக்காதுன்னு அப்பாவைப் போட்டு திட்டிக்கிட்டு இருக்காங்க.. டேய் வேதா! நீ எப்போ சென்னை வர்ற?.. யூ நோ வாட்?.. இங்க பொண்ணுங்க எல்லாம் ரொம்ப பப்ளியா அழகா இருக்காங்கடா?.. உனக்கேத் தெரியாம உன் பேர்ல ஒரு கேர்ள் ஃப்ரெண்ட்டை வேற நான் சம்பாரிச்சு வச்சிருக்கேன்.. யூ மஸ்ட் தேங்க் மீ.. அவ போன் நம்பர் கூட.. ஓகே! ஓகே சாமியாரே! திட்டாதடா!.. சீக்கிரம் இந்தியா வா.." என்றதோடு கைப்பேசியை அணைத்தவன், பேசிக் கொண்டிருக்கும் போதே மேசையில் மெஜஸ்டிக் எழுத்துருவில் தான் எழுதிய 'சித்தானந்த்' என்னும் தன் பெயரை ரசித்துப் பார்த்தான்.
வாங்கலும் கொடுக்கலும் தொடரும்