உன் மூச்சுக்காற்றாய்.....
அத்தியாயம் 1.
நல்ல வெயில் காயும் மதிய நேரம். டிசம்பர் மாதம் என்பதால் சூரியனின் சீற்றம் சற்றே குறைவாக இருந்தது. பாவநாச மலைப் பகுதியின் அந்தக் காட்டின் மையப்பகுதியில் நால்வர் இளைஞர் குழாம் விடுமுறையைக் கொண்டாடிக் கொண்டிருந்தது. அவர்கள் வந்த ஜீப் சற்றே ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இளைஞர்கள் என்றாலும் பொறுப்பும், திறமையும் உள்ளவர்கள் நால்வரும். அதோ அந்தப் பாறை மேல் அமர்ந்து குளிர் பானத்தைச் சுவைத்துக்கொண்டிருக்கிறானே அவன் தான் வெங்கடேஷ். வெங்கி என்று அழைப்பார்கள் நண்பர்கள், ரீல் மன்னன் என்று அழைப்பார்கள் ஒரு சிலர். அவனுக்குப் பக்கத்தில் அமர்ந்து பிரியாணியை ஒரு கை பார்த்துக்கொண்டிருக்கிறானே அவன் தான் பாலா என்கிற பாலகிருஷ்ணன். வெங்கியின் உயிர் நண்பன். இருவரும் 5ஆம் வகுப்பிலிருந்து கல்லூரி வரை ஒன்றாகவே படித்தார்கள். பின்னர் வேலையும் ஒரே அலுவலகத்தில் கிடைக்கவே இணை பிரியவேயில்லை இருவரும்.
"டேய்! வினோ! குப்பையை அப்படிப் போடாதே! நம்ம காடுகளை நாமளே காப்பாத்தலைன்னா எப்படி? இதோ இந்த பிளாஸ்டிக் கவர்ல போடு! போற வழியில தூக்கிப் போட்டுட்டுப் போயிடலாம்" என்றான் வெங்கி.
"சாரிடா!" என்று சொல்லி விட்டு நண்பன் சொன்னதைப் போலவே செய்தான் வினோ என்கிற வினோதன். அவன் ராணுவத்தில் சேர இருக்கிறான். அவனும் அவன் நண்பன் மிக்கேலும் நல்ல கேடரில் ராணுவத்தில் சேர அழைக்கப்பட்டிருக்கிறார்கள். அதற்கு தான் இந்த பார்ட்டி.
"என்னடா இது? கொண்டு வந்த சாப்பாடு எல்லாமே தீர்ந்திருச்சே?" என்றான் மிக்கேல். அவனுக்கு அவன் கவலை. பாவம் ஒரு நாளைக்கு ஆறு வேளை சாப்பிடுபவனை கொஞ்சம் போல பிரியாணி சாப்பிடு என்றால் என்ன செய்வான்?
"இதுக்குத்தான் சொன்னேன்! நிறைய வாங்கிக்கலாம்னு! கேட்டியா நீ?" என்றான் பாலா.
"எதுக்கு இப்ப டென்ஷனாகுறீங்க? நல்ல ஹோட்டலாப் பார்த்து சிக்கன் ஃபிரை, மட்டன் சாப்ஸ் இப்படி வாங்கிக்கிட்டா போச்சு" என்றான் வெங்கி. அவன் எதற்குமே அசருபவன் அல்ல.
"ஆமா! பக்கத்துல தான் தாஜ் ஹோட்டல் இருக்கு. போயி வாங்கிட்டு வா" என்றான் வினோ.
சற்று நேரம் அமைதியாக நின்றிருந்தார்கள். பக்கத்தில் இருந்த ஒரு பாறை மேல் ஏறி நின்று பார்த்தான் வெங்கி. தூரத்தில் எங்கிருந்தோ புகை வருவது போலத் தெரிந்தது.
"கொஞ்சம் தள்ளி ஏதோ வீடு இருக்கு போல. அவங்க கிட்ட காசு குடுத்து சமைச்சுத் தரச் சொல்லுவோமா?" என்றான் வெங்கி ஆர்வமாக. அவனுக்கு இது போலச் செய்வதென்றால் விருப்பம் அதிகம்.
"இங்கே ஏதுடா வீடு? இது காட்டுப்பகுதியாச்சே?" என்றபடி தானும் அந்தப் பாறையில் ஏறிபார்த்தான் மிக்கேல். அவன் கண்களுக்கு ஒன்றும் புலப்படவில்லை.
"என்னடா கதை விடுற? மனுஷன் பசியோட இருக்கும் போது கூடவா நீ கதை விடுவ?" என்றான் எரிச்சலோடு.
"மிக்கேல்! எப்படி உன்னை ராணுவத்துல் எடுத்தாங்க. அதோ பாரு! கொஞ்சம் தள்ளி நிறைய தேக்கு மரம் தெரியுதா?"
"ஆமா தெரியுது"
"அதுக்கு நடுவுல ஒரு சின்ன கட்டிடம் மாதிரி...கட்டிடம்னு கூடச் சொல்ல முடியாது, குடிசை மாதிரி தெரியுதா? அதுல இருந்து தாண்டா புகை வருது" என்றான் உறுதியாக.
மூவரும் ஏறிப்பார்த்தனர். தேக்கு மரம் தெரிந்தது ஆனால் வெங்கி சொன்ன குடிசையும் புகையும் மட்டும் தென்படவே இல்லை.
"டேய்! இவன் தன் வேலையை ஆரம்பிச்சுட்டாண்டா! இப்படித்தான் போன மாசம் சினிமா பார்த்துட்டு வரும் போது பேயைப் பார்த்தேன். அது எங்கிட்ட டயம் கேட்டுதுன்னு சொன்னான்." என்றான் வினோ.
"ஹூம்! இதை விட்டுட்டியே? நாம காலேஜ்ல படிக்கும் போது பேய்க்கதையெல்லாம் சொல்லி ஆட்களை ஏற்பாடு பண்ணி நடிக்க வெச்சு ஒரு ரூமையே யாரும் போக முடியாதபடி செஞ்சானே? நினைவு இருக்கா?" என்றான் மிக்கேல் தன் பங்குக்கு.
"எனக்கு இருக்குற ஆத்திரத்துக்கு டெல்லிக்குப் போய்த் துப்பாக்கி வாங்கிட்டு வந்து உன்னை சுட்டுருவேன். விளையாடாதே வெங்கி" என்றான் வினோ கோபமாக.
திகைத்துப் போனான் வெங்கி. உண்மை தான். அவன் நிறையக்கட்டுக் கதைகள் கட்டுவான் தான். ஆனால் இம்முறை அப்படி இல்லையே? அதோ நிஜமாகவே குடிசை தெரிகிறதே? அதிலிருந்து புகையும் வருகிறதே? இவர்கள் மூவரும் ஏன் இப்படிச் சொல்கிறார்கள்? அவர்கள் கண்ணில் தான் கோளாறு. என எண்ணிக் கொண்டான்.
"சத்தியமாச் சொல்றேண்டா! அதோ அங்க குடிசை இருக்கு. உங்க கண்ணுக்கு என்ன ஆச்சு?" என்றான் அழுத்தமாக.
"உனக்கு சத்தியம் செய்யுறது என்ன பெரிய காரியாமா? நம்ம ஸ்கூல் வேப்ப மரத்துல முனி இருக்குன்னு வாத்தியார் சுந்தரம் மேல சத்தியம் செஞ்ச. என்ன ஆச்சு? அவருக்கு ஹார்ட் அட்டாக் வந்து எப்படியோ கடவுள் கிருபையில பொழைச்சுக்கிட்டாரு." என்றான் மிக்கேல்.
சிரித்தனர் மூவரும்.
"சே! இந்த தடவை அப்படி இல்லடா! உண்மையாத்தன் சொல்றேன். வேணும்னா எங்க அம்மா மேல சத்தியம் பண்ணட்டுமா?"
அவசரமாகத் தடுத்தான் பாலா.
"வேண்டாண்டா! உங்க அம்மா மேல மட்டும் வேண்டாம். அவங்க தான் நமக்கு அப்பப்ப வாய்க்கு ருசியா செஞ்சு குடுக்கறாங்க. அதையும் கெடுத்துராதே" என மற்றவர்கள் இன்னும் பலமாகச் சிரித்தனர்.
அந்தச் சிரிப்பு சத்தத்தில் பறவைகள் சிறகடித்துப் பறந்தன.
"சரி! நாம நாலு பேரும் சேர்ந்து போவோம். அந்தக் குடிசை இருக்குன்னு கிட்டப் பார்த்தாலாவது நம்புவீங்க இல்ல?" என்றான். அவனது குரல் சீரியசாக இருந்தது.
"என்னால முடியாது மச்சான்! பசியில காது ஞொய்னு சொல்லுது. நீங்க போயிட்டு வாங்க" என்று என்று நீட்டி அமர்ந்து விட்டான் மிக்கேல். அவனுக்குத் துணையாகத் தான் இருக்கப் போவதாகச் சொன்னான் வினோ. வாக்குவாதங்களுக்குப் பிறகு பாலாவும், வெங்கியும் போய்ப் பார்ப்பது. அப்படிக் குடிசை வீடும் ஆட்களும் இருந்தால் உணவு வாங்கி வருவது. இல்லையென்றால் வெங்கி அம்பாசமுத்திரத்தில் அனைவருக்கும் பிரியாணி வாங்கித்தர வேண்டும் என்ற ஒப்பந்தம் போடப்பட்டது.
பாலாவும், வெங்கியும் புறப்பட்டனர். சற்று தூரம் நடந்திருப்பார்கள் கறுப்பாக ஏதோ ஒன்று குறுக்கே போனது போலத் தோன்ற அப்படியே நின்றான் வெங்க்கி. பாலாவும் தான்.
"என்னடா அது?" என்றான் பாலா குரல் நடுங்க.
"பயப்படாதே! ஏதாவது காட்டுப்பன்னியா இருக்கும்" என்று சமாதானம் சொல்லியவன் மேலும் நடந்தான். சற்றே பயத்தோடு அவனைத் தொடர்ந்தான் பாலா.
"வெங்கி! நீ சொன்ன குடிசை, புகை எல்லாம் சும்மா வினோவையும், மிக்கேலையும் பயமுறுத்தத்தானே? என்றான்.
பேசியவனைத் திரும்ப்ப் பார்த்தான் வெங்க்கி.
"இல்லடா! நிஜமாவே நான் பார்த்தேன். உன் கண்ணுக்குத் தெரியல்ல?" என்றான்.
பாலாவுக்கு உடல் நடுங்கியது. அது காட்டின் குளிர்காற்றிலா? இல்லை பயத்தாலா எனச் சொல்வது கடினம்.
"எனக்கு என்னவோ பிடிக்கல்ல! பேசாமத் திரும்பிப் போயிருவோமா? வர வர சூரிய வெளிச்சமே இல்லாத மாதிரி இருக்கு" என்றான் பாலா மெல்லிய குரலில்.
"சே! கோழை மாதிரிப் பேசாத! பட்டப்பகல்ல என்ன ஆயிரும்? பேசாம வா" என்றான் வெங்க்கி.
மௌனமாக மேலும் நடந்தார்கள். நடக்க நடக்க காடு வளர்ந்து கொண்டே போவது போலத் தோன்றியது. சட்டெனத் திரும்பிப் பார்த்தான் பாலா. பகீரென்றது. காரணம் அவர்கள் வந்த பாதை மூடியிருந்தது. அது மட்டுமல்ல வினோவும், மிக்கேலும் தெரியவே இல்லை. அவ்வளவு தூரமா வந்து விட்டோம்? என நடுக்கமாக இருந்தது பாலாவுக்கு. ஆனால் வெங்கியோ செலுத்தப்பட்டவன் போல நிற்காமல் போய்க் கொண்டிருந்தான்.
"வெங்கி! தயவு செஞ்சு நில்லுடா! எனக்கென்னவோ பயம்மா இருக்கு! திரும்பிப் போயிரலாம்டா! பாரு! நாம வந்த பாதை கூடத் தெரியல்ல! இப்ப நிக்கப் போறியா இல்லியா நீ?" என்று கத்தினான். அந்த அமைதியான சூழலில் அவன் குரல் அவனுக்கே பயங்கரமாகக் கேட்டது. இல்லியா நீ...இல்லியா நீ...இல்லியா நீ...என எதிரொலித்தது. நின்று விட்டான் வெங்கி.
சுற்று முற்றும் பார்த்தான். மாலை 7 மணி போலக் காட்சியளித்தது அந்தப் பகுதி. செல்ஃபோனை எடுத்தான். சுத்தமாக சிக்னலே இல்லை. நேரம் 2 மணி எனக் காட்டியது அது. மதியம் இரண்டு மணிக்கு இப்படி இருட்டுமா? பாலா வேறு பாதை மூடுகிறது..இப்படி என்னென்னவோ சொல்கிறானே? என எண்ணித் திரும்பிப் பார்த்தான்.
நண்பன் சொன்னது உண்மை தன். அவர்கள் வந்த பாதை சுமார் பத்தடி தான் தெரிந்தது. பிறகு மரங்கள் தன் தெரிந்தன. முதல் முதலாக பயம் வந்து அமர்ந்து கொண்டது வெங்கியின் நெஞ்சுக்குழியில்.
"என்ன பாலா இது? எனக்கே கொஞ்சம் பயமாத்தான் இருக்கு. பேசாம திரும்பிருவோமா?" என்றான் மிக மெல்லிய குரலில்.
அதற்காகவே காத்திருந்தது போல நண்பனின் கைகளைப் பிடித்து திருப்பி வந்த பாதையிலேயே செல்ல ஆரம்பித்தான் பாலா. சுமார் பத்து நிமிடம் நடந்திருப்பார்கள். முன்னிலும் இருட்டாகவே இருந்தது அந்த இடம்.
"என்ன இது? கா மணி நேரமா நடக்குறோம்? இன்னமும் கன்னி மார்துறை வரலியே?" என்றான் பாலா. குரலில் அச்சம். குளிர் காற்றில் கூட அவன் முகத்தில் வியர்வை வழிந்தது.
"இன்னொண்ணு கவனிச்சியா? காட்டுல சில் வண்டு சத்தம், பறவைகள் சத்தம் இதெல்லாம் இருக்கும். ஆனா இங்கே ஒரு நிசப்தமா இருக்கே?" என்றான் வெங்கி முனகலாக.
நெஞ்சை அடைப்பது போல உணர்ந்தான் பாலா. நண்பன் சொல்வது உண்மை தான். இலை ஆடும் சத்தம் கூட இல்லை. அவ்வளவு ஏன்? ஏதேனும் உயிரினங்களோ, ஆறோ இருக்கும் எந்த ஓசையுமே இல்லை. முன்னிலும் வேகமாக நடந்தனர். இன்னமும் அவர்கள் கேம்ப் செய்த இடமான கன்னிமார் துறை வரவில்லை.
"வழி மாறி வந்துட்டோமோ? எங்கே பார்த்தாலும் காடாத்தானே இருக்கு? ஃபோன்ல கொஞ்சம் மிக்கைலைக் கூப்பிடு! அவங்க ஜீப்பை எடுத்துக்கிட்டு வரட்டும்" என்றான் பாலா.
மீண்டும் ஃபோனைப் பார்த்தான். ம்ஹூம்! சிக்னல் ஒரு கோடு கூட இல்லை. அதோடு செல்லின் சார்ஜ் வேறு மிகவும் கம்மியாக இருந்தது.
"பாலா! காலையில தான் ஃபுல் சார்ஜ் போட்டேன். இப்ப இப்படி இருக்கே?" என்றான் வெங்கி. அவன் குரலில் சற்றே கவலை, கலவரம் எல்லாம் இருந்தது.
"இரு என் ஃபோனைப் பார்க்குறேன்" என எடுத்தான் பாலா. அவனது ஃபோனில் லைட்டே வரவில்லை. சுத்தமாக செத்துக் கிடந்தது அது. வியர்வை பொங்க நிமிர்ந்து பார்த்தான் அவன்.
"என்ன செய்ய? எப்படித் திரும்பிப் போக?" என்றான் வெங்க்கி.
மௌனமாக சில நிமிடங்கள் கழிந்தன.
"இதுக்கு மேலயும் நாம நடக்க வேண்டாம். காட்டுக்குள்ளேயே தான் நாம போயிக்கிட்டு இருக்கா மாதிரி இருக்கு. கொஞ்ச நேரம் அமைதியா உக்காந்து யோசிப்போம். என்ன?" என்றான் வெங்கி. வெறுமே தலையசைத்தான் பாலா.
"இந்நேரம் மிக்கேலும், வினோவும் நம்மைக் காணலைன்னு தேடி வருவாங்க இல்ல?" என்றான் பாலா நம்பிக்கையாக.
ஏனோ அந்த நம்பிக்கை சுத்தமாக இல்லை வெங்கிக்கு. தேடி வருவார்கள் தான். ஆனால் அவர்களால் இந்த இடத்தைக் கண்டு பிடிக்க இயலுமா? தெரியவில்லை. குரல் கொடுத்துப் பார்க்கலாமா? என எண்ணினான்.
"மிக்கேல்! வினோ! நாங்க இங்கே இருக்கோம்" எனக் குரல் கொடுத்தான் வெங்க்கி. எதிரொலி கூட இல்லாமல் அசாதாரண அமைதி நிலவியது அந்த இடத்தில். அழுகையே வந்து விட்டது இருவருக்கும்.
"உன்னால தாண்டா நாம இப்படி மாட்டிக்கிட்டோம். குடிசையாம், புகையாம். எல்லாமே பொய் தானே? எதுக்குடா என்னையும் சேர்த்துக் கூட்டிக்கிட்டு வந்த? நாம காட்டுல இப்படியே கத்திக் கத்தி தொண்டை வறண்டு சாகப் போறோம். இன்னும் கொஞ்ச நேரத்துல இருட்டிடும். அப்புறம் புலிக்கு நாம தான் டின்னர்." என அழுதான் பாலா.
"நமக்குள்ள சண்டை போட்டுக்குற நேரம் இது இல்ல! வழி தவறி வந்துட்டோம். திக்கு திசை தெரியல்ல. அமைதியா இருப்போம். எப்படியும் வினோவும், மிக்கேலும் ஆட்களைக் கூட்டிக்கிட்டு வருவாங்க. அது வரைக்கும் பொறுமையா இருப்போம்" என்றான்.
சொல்லிய நண்பனைப் பிடித்துத் தள்ளினான் பாலா.
"பொறுமையாவா இருக்கணும்? நீ ஏன் சொல்ல மாட்ட? உனக்கு எந்தப் பொறுப்பும் கிடையாது.ஆனா என்னை நம்பி எங்கம்மா இருக்காங்க, என் தங்கச்சிக்குக் கல்யாணம் பேசியிருக்கேன். எனக்கு ஏதாவது ஒண்ணு ஆச்சுன்னா உன்னை நான் சும்மா விட மாட்டேன்" என்றான் கோபமாக.
"தயவு செஞ்சு பொறுமையா இருடா..." என ஆரம்பித்தவன் சட்டென நிறுத்தினான்.
"யாரோ பாடுற சத்தம் கேக்கல்ல?" என்றான் வெங்கி. அவன் குரலில் மகிழ்ச்சி. ஊன்றிக் கவனித்தான் பாலா. ஆம் யாரோ பாடும் சத்தம் கேட்கத்தான் செய்தது. பெண் குரல். கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா? என ஒலித்தது.
"டேய்! பாட்டுச் சத்தம் கேக்குது. அப்போ யாரோ ஒரு பொண்ணு இருக்காங்க! வயசானவங்களா இருப்பாங்கன்னு நினைக்கிறேன்" என்றான் வெங்கி.
"உம்! எனக்கும் கேக்குது. ஆனா குரல் இளமையா இருக்கே?"
"நல்லா யோசி பாலா! நம்மை மாதிரி யூத், இந்தப் பழைய பாட்டைப் பாடுவாங்களா?" என்றான். வெறுமே தலையாட்டினான் பாலா. அவனுக்கு இன்னமும் தயக்கமாகவே இருந்தது.
"என்னடா யோசிக்குற? ஒரு பொண்ணே இங்க தனியா இருக்காங்க! நாம ரெண்டு ஆம்பிளைங்க! நாம பயந்தோம்னா வெக்கக் கேடு" என்றான் வெங்கி.
எதுவும் பேசாமல் குரல் வ ந்த திசையை நோக்கி நடந்தனர். பத்தடி கூட சென்றிருக்க மாட்டார்கள் சட்டென அந்தக் காட்சி அவர்கள் கண் முன்னே விரிந்தது. ஒரு பழைமையான வீடு. அதை வீடு என்று சொல்வதை விட பங்களா என்றே சொல்லலாம். சுற்றிலும் ஆளுயரத்திற்கு காம்பவுண்ட் சுவர் இருந்தது. ஆனால் அவைகள் பல இடங்களில் உடைந்தும், இடிந்தும் காணப்பட்டன. சுற்றிலும் பல விதமான மரங்கள் இருந்தன. வீட்டில் வாயிலை நோக்கிச் செல்லும் பாதை அழகாக செம்மண்ணில் போடப்பட்டு விளங்கியது. சிறு குப்பை கூட இல்லை. அந்த செம்மண் சாலையில் இரு மருங்கிலும் விசிறி வாழைகள் ஒரே சீராக நடப்பட்டு அழகாகக் காட்சியளித்தன. வண்டிகள் நிற்கவென ஒரு போர்ட்டிகோ. அதிலும் பல விதமான வேலைப்பாடுகள்.
"வா! போகலாம்" என கையைப் பிடித்து இழுத்தான் வெங்க்கி. அவனது கைகளை பிடித்துத் தன் பக்கம் இழுத்தான் பாலா.
"என்னடா?"
"நல்லா யோசி வெங்க்கி! இவ்வளவு பெரிய வீடு. இதுல இந்த வாச போர்டிக்கோவில இருந்து பாடினாக் கூட பத்தடி தள்ளிக் கேக்காது. ஆனா நமக்குக் கேட்டது. இதுக்கு என்ன அர்த்தம்?" என்றான் திக்கியபடி.
"உனக்கு பயம்னு அர்த்தம். இத்தனை பெரிய வீட்டுல ஒரு மைக் இருக்காதா? என்னடா நீ?" என்றான் வெங்கி. இருந்தாலும் அடுத்த அடி எடுத்து வைக்கவில்லை.
"இப்ப நீ என்ன யோசிக்குற?" என்றான் பாலா.
"இல்ல...இந்த மதில் சுவர்களைப் பாரேன். பாழடஞ்சு இருக்கு. ஆனா பங்களா சும்மா புதுசா ஜொலிக்குது. எங்கேயோ இடிக்கல்ல?"
"யப்பா! வெங்கி! தெய்வமே! இது ஒண்ணு தானா இடிக்குது? நாம காட்டுக்குள்ள வந்ததுல இருந்து நடக்குறது எதுவும் சரியாவே இல்ல. பேசாமத் திரும்பிருவோமா? போயி மிக்கேல் கிட்டயும் வினோ கிட்டயும் நீ என்ன வேணா ரீல் விட்டுக்க. நான் கண்டுக்க மாட்டேன். உசுரோட வெளிய போவோம்டா" என்றான் பாலா. விட்டால் அழுது விடுவான் போலத் தோன்றியது.
தைரியசாலியான வெங்கிக்கே கொஞ்சம் யோசனையாகத்தான் இருந்தது. அஞ்சுவது அஞ்சாமை பேதமை என்று எங்கோ எதிலோ படித்ததாக நினைவு. பாலாவின் கைகளைப் பற்றிக் கொண்டு அப்படியே திரும்பி மீண்டும் கன்னிமார் துறையை நோக்கி நடந்தான். பாலா வேகமாக முன்னல் சென்றான். ஏறத்தாழ அரை கி மீ சென்றிருப்பார்கள். இப்போதும் அதே போல காட்சி கண்களில் அறைந்தது. அதே பங்களா. ஆனால் இம்முறை மதில் சுவர்கள் கூட பளிங்கு போலக் காட்சியளித்தன. யானையின் தந்த நிறத்தில் பெயிண்ட் அடிக்கப்பட்டு பளபளவெனக் காட்சியளித்தது. திகைத்து நின்றார்கள் நண்பர்கள் இருவரும்.