Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


உப்பை தின்றவன்

Messages
2
Reaction score
1
Points
3
உப்பை தின்றவன் (சிறு கதை )
“பிரபல கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர் முத்துரங்கன் அவரது நிறுவனத்தின் சார்பாக புதிதாக கட்டப்பட்டு வந்த கட்டிடத்தின் எட்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்து மரணம் அடைந்தார் “ என அனைத்து செய்தி சேனல்களிலும் ஸ்க்ரோலிங் செய்தி ஓடியது. விபத்து தொடர்பாக காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் அச்செய்தி மேலும் தெரிவித்தது.
முத்துரங்கம் கட்டுமானத் தொழிலில் பிரபலமானவர். அவர் ஆரம்ப காலகட்டங்களில் சட்டத்திற்குப் புறம்பான தொழில்களில் ஈடுபட்டு , பின்னர் அரசின் பல்வேறு துறைகளிலும் சிறு சிறு ஒப்பந்த பணிகளையும் எடுத்து செய்து வந்தார். நாளடைவில் தனியார் நிறுவனங்களுக்கு கட்டிடங்கள் கட்டும் பணியை செய்து வந்தார். அவர் ஆளும் கட்சியின் அமைச்சர் ஒருவரின் பினாமி ஆகையால் தொழிலில் இருந்த சக போட்டியாளர்கள் கூட அவரிடம் சற்று ஒதுங்கியும் பயத்துடனும் பழகி வந்தனர்.
தற்போதும் கூட ஒரு தனியார் மென்பொருள் நிறுவனத்துக் காக 10 மாடி கட்டிடம் ஒன்றை கட்டி வந்தார். அதில் குருபிரசாத் சைட் என்ஜினீயராக அங்கேயே தங்கியிருந்து வேலை பார்த்து வந்தான்.
முத்துரங்கத்தின் மரணம் குறித்து அங்கு வேலை பார்த்து வந்த அனைத்து பணியாளர்கள்
மற்றும் தொழிலாளர்களிடம் விசாரணையை துவக்கிய காவல்துறை ஆய்வாளர் ராஜேந்திரன், குருபிரசாத்திடம் முதலில் விசாரணையை தொடங்கினார்.
குரு பிரசாத்திடம் “சொல்லுங்க, அன்று என்ன நடந்தது “என கேட்டார்.
அன்று ஞாயிற்றுக்கிழமை , வேலைகள் எதுவும் நடைபெறவில்லை . பொதுவாக முதலாளி ஞாயிற்றுக் கிழமைகளில் இரவு எட்டு மணி அளவில் சைட்டுக்கு வந்து கட்டுமான பணிகளின் நிலை குறித்து என்னிடம் விசாரித்து தெரிந்து கொள்வதுடன், வரும் வாரத்தில் முடிக்க வேண்டிய பணிகள் குறித்தும் அறிவுரைகள் வழங்குவார்.
அன்றைக்கும் முதலாளி வந்து கட்டுமான பணிகளை பார்த்துக்கொண்டிருந்தார் . எட்டாவது மாடியில் ஜன்னல்கள் இன்னமும் நிறுவப்படவில்லை. அந்த இடத்தில் கண்ணாடி ஜன்னல்கள் பொருத்தப்பட வேண்டும். அவை தயாராகி வராததால் அந்த இடத்தில் மர தடுப்புகள் வைத்திருந்தோம்.
என்னிடம் பேசிக்கொண்டே அந்த மரத்தடுப்பில் மேற்புறத்தில் கைகளை ஊன்றி ஜன்னலுக்கு வெளியே எட்டிப் பார்த்தார் முதலாளி, அப்போது அந்த மரத் தடுப்பு திடீரென்று முறிந்து முதலாளியின் பிடி விலகி ,தடுமாறி மேலே இருந்து கீழே விழ ஆரம்பித்தார். அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த நான் பயத்தில் அலறினேன், கீழே இறங்கி ஓடினேன் அதற்குள் கீழே நின்றிருந்த கட்டுமான தொழிலாளர்கள் முதலாளி விழுவதை பார்த்து விட்டு ஓடிப் போய் ரத்தவெள்ளத்தில் கிடந்த முதலாளியை தூக்கினார்கள்.
உடனே அவரது மகன் ரமேஷுக்கு தகவல் தெரிவித்துவிட்டு , அவரது காரிலேயே மருத்துவமனைக்கு அவரை எடுத்துச் சென்றோம். ஆனால் ,மருத்துவமனையில் அவரை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டார் என்று கூறிவிட்டார்கள் என சோகமாக கூறி முடித்தான் குருபிரசாத்.
சரி? நீங்க எந்த ஊர்? இங்க எங்க தங்கியிருக்கீங்க?”என கேட்டார் ராஜேந்திரன்,நான் சேலத்தை சேர்ந்தவன் இங்கே எனக்கு ஒரு அலுவலகமும் தங்குவதற்கான அறையும் அமைத்து தந்துள்ளார்கள். எனக்கு தேவையான உணவை நானே சமைத்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன் என்றான். ஊரில் அம்மா மட்டும் இருந்தாங்க, அவங்களும் போன வருடம் இறந்துட்டாங்க என்றான்.
கட்டுமானப் பணிகள் மீண்டும் துவக்கப்படாத நிலையில் அடிக்கடி அங்கு வந்த காவல்துறை ஆய்வாளர் ராஜேந்திரன் தொடர்ந்து அங்குள்ள பணியாளர்களிடம் விசாரணையை தொடர்ந்து மேற்கொண்டு வந்தார்.
இந்நிலையில் குரு பிரசாத் தனது தாயாரின் நினைவு நாளை முன்னிட்டு சேலம் சென்றுவர முதலாளியின் மகன் ரமேஷிடம் அனுமதி கேட்டான் . அப்போது அங்கு அமர்ந்திருந்த காவல் ஆய்வாளர் ராஜேந்திரன் எத்தனை நாளில் திரும்பி வருவீர்கள்? என கேட்டார்.
அவன் அடுத்த வாரம் திரும்ப வந்து விடுவேன் என்றான். சரி போயிட்டு வாங்க என்றார் முதலாளியின் மகன் ரமேஷ்.
சேலத்திற்கு சென்ற குருபிரசாத் அம்மாவின் நினைவு நாள் சடங்குகளை செய்வதற்காக அம்மாவின் சமாதிக்கு சென்றான். அங்கு தாயாரின் சமாதி முன் நின்று கைகூப்பி வணங்கி, கண்கலங்கியபடி அம்மா, “ அப்பாவை கொன்றவனை கொலை செய்து பழி தீர்த்துக் கொண்டேன் என கூறி கொண்டிருக்கும்போதே
திடீரென்று குருபிரசாத்தை சுற்றி வளைத்தது போலீஸ் . அதிர்ச்சி அடைந்த குருபிரசாத், நிமிர்ந்து பார்த்தபோது அங்கே நின்றுகொண்டிருந்த காவல் ஆய்வாளர் ராஜேந்திரன் அவனுக்கு கைவிலங்கு போட்டார்.
உடனே குருபிரசாத் என்னை ஏன் கைது செய்கிறீர்கள்? என திமிறியபடி அவரிடம் கேட்டான் ,
உன் முதலாளி முத்துரங்கனை மாடியிலிருந்து கீழே தள்ளிவிட்டு கொலை செய்ததற்காக உன்னை கைது செய்கிறேன் என்றார் ராஜேந்திரன்.
உடனே குருபிரசாத் , நான் அவரை கொலை செய்யவில்லை என கத்தினான் .
எதை சொல்வதாக இருந்தாலும் கோர்ட்டில் வந்து சொல்லிக் கொள் ,என கூறியபடியே அவனை வேனில் ஏற்றி சென்னைக்கு கொண்டு வந்தார்கள்.
போலீஸ் விசாரணைக்கு முதலில் ஒத்துழைக்க மறுத்த குருபிரசாத், போலீஸின் தனிப்பட்ட கவனிப்புகளுக்குப் பின் உண்மையை ஒத்துக்கொண்டு தகவல்களை சொல்ல ஆரம்பித்தான்.
“நான் அப்போது பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். என்னுடைய தந்தை குமரேசன் விருதுநகர் மாவட்டத்தில் வருவாய் துறையில் அதிகாரியாக பணியாற்றி வந்தார். நேர்மையான அதிகாரியாக இருந்ததால் பலரின் பகையை சம்பாதித்துக் கொண்டார். முக்கியமாக ஆற்றுமணல் கடத்துவதை தடுக்க பல வழிகளிலும் போராடினார், மணல் கடத்துபவர்கள் யாராக இருந்தாலும் பயமில்லாமலும் , சிபாரிசுகளுக்கு மதிப்பளிக்காமல் மணல் கடத்தும் நபர்களை பிடித்து சிறையில் தள்ளியும் , அவர்களின் லாரிகளை பறிமுதல் செய்தும் நடவடிக்கை எடுத்தார்.
ஒரு முறை மணல் கடத்தியதற்காக இறந்துபோன முத்துரங்கனின் லாரிகளை கைப்பற்றியதுடன், அவரது ஆட்களையும் கைது செய்து சிறையில் அடைத்தார் . இதனால் பாதிக்கப்பட்ட முத்துரங்கன், இடைத்தரகர் மூலம் அப்பாவிடம் லஞ்சம் கொடுக்க பேரம் பேசியுள்ளார் ஆனால், அப்பா நேர்மையான முறையில் பணியாற்றியதால் தொடர்ந்து முத்துரங்கனின் ஆட்கள் மணல் கடத்துவதை தடுத்தார்.
இதன் காரணமாக சிறிது காலம் மணல் கடத்தல் நடைபெறாமல் அமைதியாகவே இருந்து வந்தது.
அன்று ஞாயிற்றுக்கிழமை. நானும் , அப்பாவும் காலையில் மார்க்கெட்டுக்கு சென்று காய்கறி வாங்கி வருவதற்காக ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தோம்.
அப்போது, ஒரு சந்தின் முனையில் நின்றிருந்த கார் ஒன்று திடீரென்று எங்களை நோக்கி வேகமாக வந்தது, ஆபத்தை உணர்ந்த அப்பா, அவசரமாக என்னை தனது இடது கையால் ரோட்டின் இடது ஓரத்துக்கு தள்ளி விட்டார். கீழே விழுந்த நான் அதிர்ச்சியில் தட்டுத்தடுமாறி பயந்துபோய் எழுந்து பார்த்தபோது, அப்பா மீது அந்த கார் மோதி ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்தார்.
அலறி துடித்த நான் , அருகில் இருந்தவர்கள் உதவியுடன் அப்பாவை ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் சென்றபோது அப்பா இறந்து விட்டது தெரிந்தது.
அப்பாவின் அகால மரணம் அம்மாவிற்கும், எனக்கும் இடி விழுந்தது போல் ஆயிற்று.
காவல்துறை அந்த காரின் நம்பரை வைத்து அந்த காரை ஓட்டி வந்த டிரைவரையும் கைது செய்து, காரையும் பறிமுதல் செய்தார்கள்.
ஆனால், நீதிமன்றத்தில் “அந்த கார் வந்து கொண்டிருந்தபோது, திடீரென்று காரின் பிரேக் செயலிழந்து தறிகெட்டு ஓடி எனது அப்பாவின் மீது மோதி விட்டதாகவும் ,இது எதிர்பாராமல் ஏற்பட்ட ஒரு விபத்து என்று திறமையான வக்கீலை வைத்து வாதம் செய்தார்கள்.
நீதிமன்றமும் அவர்கள் சொல்வதை ஏற்றுக் கொண்டு அந்த காரின் டிரைவருக்கு அபராதம் மட்டும் விதித்து விடுதலை செய்து விட்டார்கள்.
நானும் அம்மாவும், அப்பாவிற்கு ஏற்பட்டது விபத்துதான் என்று முடிவுசெய்து, எங்கள் விதியை நொந்துகொண்டு எங்களது வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்தோம். நானும் மிகவும் கஷ்டப்பட்டு பொறியியல் பிரிவில் சிவில் இன்ஜினியரிங் படித்து தேர்ச்சி அடைந்தேன். .
இந்நிலையில் அப்பாவின் நண்பர்கள் சிலர் வீட்டிற்கு வந்தனர் . அவர்கள் அம்மாவிடம் வருத்தம் தெரிவித்து பேசும்போது அப்பாவிற்கு ஏற்பட்டது விபத்து அல்ல என்றும், மணல் கடத்தலில் ஈடுபட்ட முத்துரங்கனின் லாரிகளை பறிமுதல் செய்தது, அவர்களது ஆட்களை ஜெயிலில் தள்ளியது போன்ற நடவடிக்கைகளால் கோபமுற்ற அவர், தனது ஆட்களை ஏவிவிட்டு அப்பாவின் மீது காரை மோத செய்து அதை ஒரு விபத்தாகவும் மாற்றி விட்டார் என கூறினார்கள்.
இதைக்கேட்ட எங்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. அம்மா மிகவும் வருத்தப்பட்டு கதறி அழுதாள்.
அப்பாவின் அலுவலக நண்பர்கள் கூறியதை உறுதி செய்ய நான் அந்த காரைப் பற்றி விசாரித்தபோது, அந்த கார் முத்துரங்கனின் கார் என்பதையும் அந்தக் காரின் டிரைவர் தற்போது முத்து ரங்கனின் அலுவலகத்திலேயே வேலை செய்கிறார் என்றும் தெரிந்து கொண்டேன்.
நேர்மையாக பணியாற்றிய என் அப்பாவை திட்டமிட்டு கொலை செய்த முத்துரங்கனை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என முடிவு செய்தேன் .
அதன்படி என் அப்பா பற்றிய விவரங்களை கூறாமல், மறைத்து முத்துரங்கனின் நிறுவனத்தில் பொறியாளராக பணியில் சேர்ந்தேன். என் அப்பாவை கொலை செய்துவிட்டு, எப்படி அதை விபத்து என்று ஜோடித்- தார்களோ அதுபோலவே எந்தவித சந்தேகமும் வராமல் முத்துரங்கனையும் கொலை செய்ய வேண்டும் என்று தீர்மானம் செய்தேன். அதற்குரிய நாளை எதிர்பார்த்து காத்திருந்தேன்.
அதற்கு ஒரு வாய்ப்பாக அன்றும் எப்போதும்போல எட்டாவது மாடிக்கு வந்தவுடன் முத்துரங்கன் ஜன்னல் வைக்க வேண்டிய இடத்தில் கைகளை வைத்து கீழே குனிந்து பார்க்கும் போது தள்ளி விட வசதியாக அந்த மரப் பலகைகளை சுவற்றில் பொருத்திய ஆணிகளை பிடுங்கி விட்டு அந்த மரப்பலகையை எந்த பிடிப்பும் இல்லாமல் நிறுத்தி தடுப்பு போல் வைத்திருந்தேன்.
நான் எதிர்பார்த்தது போலவே முத்துரங்கன் அந்த பலகையின் மேல் புறத்தில் உள்ளங்கைகளை ஊன்றி குனிந்து கீழே பார்த்தபோது அவை விலகி அவரை தடுமாறச் செய்தது, அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட நான் அவர் கீழே குனிந்த நிலையிலேயே அவர் கால்களை பிடித்து ஜன்னலுக்கு வெளியே தள்ளிவிட்டேன்,
அவர் அலறிக்கொண்டே கீழே விழும்போது நானும் கூடவே பெருங்குரலெடுத்து கத்திக் கொண்டே கீழே இறங்கி ஓடினேன் . யாருக்கும் என் மேல் சந்தேகம் வராதபடி நடந்து கொண்டேன், ஆனால் நீங்கள் எவ்வாறு கண்டுபிடித்தீர்கள் என தெரியவில்லை! என்றான் குரு பிரசாத்.
உடனே ராஜேந்திரன் ,நாங்கள் போலீஸ் , உன்னை விட திறமையாக யோசிப்போம் என்றார்.
விபத்து நடந்ததற்கு மறுநாள் நாங்கள் அந்த தளத்தில் இருந்த ஜன்னல்களை பரிசோதித்த போது மற்ற ஜன்னல்களில் பொருத்தப்பட்டிருந்த மரப்பலகைகள் உறுதியாகவே சுவற்றுடன் இணைக்கப்பட்டிருந்தது. ஆனால் முத்துரங்கன் விழுந்த ஜன்னல் பலகைமட்டும் எப்படி விலகி இருந்தது என யோசித்து
மரப் பலகைகளை ஜன்னலில் பொருத்திய ஆசாரியை விசாரித்தோம், அவர் அனைத்து ஜன்னல்களுக்குமே உறுதியாகத்தான் மரப் பலகைகளை ஆணியடித்து பொருத்தியதாகவும், ஆனால் இந்த ஜன்னல் பலகைகள் மட்டும் எப்படி விலகியது என்று தெரியவில்லை என்று கூறினார்.
மேலும் சம்பவம் நடப்பதற்கு முதல் நாள் சனிக்கிழமை அன்று இரவு நீ மட்டும் இந்த தளத்தில் நடமாடி கொண்டிருந்ததை சில தொழிலாளர்கள்பார்த்துள்ளனர்.
மேலும் நாங்கள் விசாரணை மேற்கொண்டபோது உன்னிடம் ஒருவித பதட்டம் இருப்பதை கவனித்தேன். எனவே, உன்னை மட்டும் தனியாக கண்காணிக்க ஏற்பாடு செய்திருந்தேன். நான் எதிர்பார்த்தது போலவே நீ உனது அம்மாவின் நினைவு நாளுக்காக சேலம் செல்லப் போவதாக கூறினாய்.
எங்களுக்கு உன் மீது மேலும் சந்தேகம் வலுத்தது, அதற்கேற்றார் போல் நீ உன் அம்மாவின் சமாதியில் “அம்மா, நான் அப்பாவை கொன்றவனை கொலை செய்து பழி தீர்த்துக் கொண்டேன் என கூறியதை கேட்ட உடனே உன்னை கைது செய்து சென்னைக்கு கொண்டு வந்தோம் எனக் கூறி முடித்தார் ராஜேந்திரன்.
குருபிரசாத் எந்த வித சலனமுமின்றி “உப்பைத் தின்றவன் தண்ணீர் குடிப்பான்” என்பதுபோல என் அப்பாவை கொலை செய்த முத்துரங்கனை நான் கொலை செய்தேன் , அதேபோல நான் செய்த கொலைக்கும் உரிய தண்டனையை அனுபவிக்க தயாராகவே உள்ளேன் என்றான் உறுதியாக.
=============================----
 
Top Bottom