13
குங்குமப்பூ போட்ட பாலுடன் உள்ளே நுழைந்த கிருபாகரனின் கண்கள் கட்டிலின்மேல் இருந்த பெட்டியை பார்க்கத் தவறவில்லை. இருப்பினும் அதை கண்டு கொள்ளாதவன் போல்,
“பால் ஆறிவிடுவதற்குள் குடித்து விட்டு படு மகி” என்று பாலை டிரெஸ்ஸிங் டேபிளின் மீது வைத்துவிட்டு வெளியேறுவதற்காகத் திரும்பினான்.
“ஒரு நிமிடம்” என்ற மகிமாவின் குரல் அவனை தடுத்து நிறுத்தியது.
என்ன!! என்பதுபோல் ஏறிய புருவங்களுக்கு கண்களில் கேள்வியுமாக அவளின் கண்களை ஊடுருவினான் கிருபாகரன்.
அந்தப் பார்வையின் தாக்கம் தாங்காமல் விழி தாழ்த்தியவள்.
“நான்.. நான்.. ஊருக்குப் போகிறேன். டிக்கட்டிற்கு ஏற்பாடு செய்யுங்கள்”
“தேவையில்லை”
“நான் முடிவெடுத்து விட்டேன்”
“நானும் ஒரு முடிவெடுத்த பின்புதான் உன்னை இங்கே அழைத்து வந்திருக்கிறேன். இனி அனுப்பும் எண்ணம் இல்லை. அமைதியாக இந்தப் பாலை குடித்துவிட்டு தூங்கு”
இனி பேச எதுவுமில்லை என்ற ரீதியில் மறுபடியும் கதவை நோக்கி நடக்கலானான்.
“வாழ்க்கை முழுமைக்கும் என்னால் நடிக்க முடியாது” என்று பின்னாலிருந்து கத்தினாள்.
“உன்னை யாரும் நடிக்கச் சொல்லவில்லையே”
“உங்களின் நடிப்பை ஏற்றுக் கொள்ள முடியாது. நீங்கள் என்னை அனுப்பவில்லை என்றால் இன்றிலிருந்து நான் இங்கே ஒரு சொட்டு தண்ணீர் கூட குடிக்க மாட்டேன். பிறகு நானும் இல்லை, இதோ சொந்தம் சொந்தம் என்று சொல்கிறீர்களே இந்த குழந்தை இதுவும்”
அவள் முடிப்பதற்குள் வேகமாக வந்து அவள் வாயை தன் கைகளால் மூடினான்.
“போதும் உன் பேச்சு, என் பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கிறது. அதை தாண்ட வைத்துவிடாதே, தாங்க மாட்டாய்”
கோபத்தில் அவன் கண்கள் சிவந்துவிட்டது.
“இதற்கு மேல் தாங்க முடியாத கவலையோ, நிலைமையோ என்ன இருக்க முடியும்”
“அப்படி என்ன, உலகம் இடிந்து உன் தலையில் விழுந்து விட்டது... நீ தானே சொன்னாய் காதல் தோல்வியில் இருப்பவர்கள் எல்லாம் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்தால் 75 சதவீதம் பேருக்கு இங்கு திருமணம் நடக்காது என்று! நான் காதலித்தது ஒரு குற்றமா? பிறகு மெல்ல மெல்ல நான் மாறியது ஒரு குற்றமா? இப்போது நான் உன்னைக் காதலிப்பது ஒரு குற்றமா? எஸ் ஐ லவ் யூ... ஐ லவ் யூ சோமச்....” என்று கிருபாகரன் உருக்கமாகப் பேசும் பொழுது இரண்டு கைகளையும் அவளின் காதுகளில் வைத்து இறுக்கமாக மூடிக் கொண்டவள், வேதனையுடன் தலையை மறுப்பாக அசைத்தாள்.
“போதும்... போதும் நாராசமாய் இருக்கிறது. அன்று கேட்ட அதே வார்த்தை இப்போதும் என்னை கொன்று போட்டுக் கொண்டிருக்கும் வார்த்தை”
“எது நாராசமாய் இருக்கிறது, என் பேச்சா அல்லது நான் உன்னை காதலிப்பதாகச் சொன்ன செய்தியா?”
அவளது கரங்களை அவளின் காதிலிருந்து விடுவித்தவன் அவளது தோள்களைப் பற்றி உலுக்கினான்.
சட்டென அவனது பிடியை உதறிவிட்டு இரண்டடி பின்னடைந்தவள்.
“உங்களைப் பார்த்தாலே அருவருப்பாய் இருக்கிறது. நீங்கள் தொட்டால் தூக்கில் தொங்கலாம் போல் தோன்றுகிறது”
“!!!”
“அன்றும் அப்படித்தான் மிதமிஞ்சிய குடிபோதையில் எ.. என்.. என்னை...”
வலியோடு கூடிய அழுகையைப் பார்க்கையில் கிருபாவுக்கு அவன் மீதே கோபம் வந்தது. அந்த செயலுக்காக எத்தனை நாள் வருந்தியிருக்கிறேன்
“அன்றும் இதே காதல் பாஷை பேசித்தான் என்னை நம்ப வைத்தீர்கள். காலையில்.. காலையில்..”
முடிக்க முடியாமல் குலுங்கி அழுதவளை நெருங்கியவன், அவளை ஆதரவாய் அணைக்கத் துடித்த கைகளை அடக்கிக் கொண்டு
“காலையில் என்ன மகிமா”
“அதை வேறு என் வாயால் சொல்ல வேண்டுமா? மனதில் இருக்கும் ரணம் போதாதா?”
“ப்ளீஸ் மகி.. இப்போது நீ பேசினாள் தான் எனக்குத் தெரியும்.. நிச்சயம் தெரிந்தே ஆக வேண்டும்”
“இத்தனை ஆசையா? என் பெண்மைக்கு ஏற்பட்ட அவமானத்தை என் வாயால் கேட்க வேண்டும் என்ற கொடுரமான ஆசையா. உங்களை மனதார காதலித்ததற்கு எனக்கு இன்னும் என்னவெல்லாம் தண்டனை காத்திருக்கிறதோ, நன்றாகக் கேட்டுக் கொள்ளுங்கள். இரவில் குடிபோதையில் என்னை அணைத்தவர், காலையில் புவனா புவனா என்று புலம்பியதைக் கேட்ட என் காதுகள் இன்னமும் செவிடாகவில்லையே என்பது தான் என் வருத்தம்”
குரல் இறுகி பார்வை வெறித்து எந்த உணர்வும் இல்லாமல் பேசி முடித்த மகிமாவை பார்த்தவன், அவள் பேசியதை கேட்டவுடன் நிலைகுலைந்து போனான்.
“மை காட்” என்று தலையில் கை வைத்தவன் அப்படியே சரிந்து கட்டிலில் அமர்ந்தான்.
அங்கே சில நிமிடங்கள் பயங்கர அமைதி நிலவியது. பிறகு மெல்ல எழுந்தவன். நின்று கொண்டிருந்த மகிமாவை நெருங்கி அவளது தோள் பற்றி கட்டிலில் அமர வைத்தான். அவளருகில் அமர்ந்தவன்,
“மகிமா, ப்ளீஸ் நான் சொல்வதைக் கொஞ்சம் காது கொடுத்து கேள்”
ஏதோ மறுப்பாய் பேச வந்த மகிமாவை இடைமறித்து
“நம் குழந்தைக்காக” என்று அவன் கூறவும்.
சரி என்னதான் சொல்லப் போகிறார் என்று பார்த்து விடுவோம் என்ற ரீதியில் அமைதி காத்தாள்.
“அன்று.. அன்று நான் குடித்திருந்தேன் தான். காரணம் என் மனம் அதிக குழப்பத்தில் இருந்தது. புவனாவை மறக்க முடியாமல், உன்னை நினைக்க முடியாமல். இப்படி நாட்கள் செல்ல. இப்படித்தான் என்று சொல்ல முடியவில்லை. எப்படியோ கொஞ்சம் கொஞ்சமாக என்னுள் நீ வந்துவிட்டாய். சுய நினைவில் அதைச் சொல்ல என் மனம் தடுத்தது. முதலிரவன்று வீரதீரமாக புவனாவைக் காதலிக்கிறேன், அவளை நினைத்த மனம் வேறு யாரையும் நினைக்கவே நினைக்காது. இப்படியெல்லாம் பேசிவிட்டு, தெரியாமல் தொட்டு விட்டாலும், சாரி கேட்டுக் கொண்டு இப்படி ஏட்டிக்கு போட்டியாய் நிறைய செய்து விட்டு, நான் உன்னைக் காதலிக்கிறேன் என்று சொல்ல வெட்கமாக இருந்தது”
“அன்று போதையில் ஏதோ தைரியத்தில் என் மனதிலிருப்பதை உன்னிடம் சொல்லிவிட்டேன். நம் இருவர் ஒருவரானோம். காலையில் உன்னை பார்க்கும் மன திடமின்றி தான் வேகமாக நான் அலுவலகம் கிளம்பிவிட்டேன். காலையில் நான் புவனா என்றதற்கு என் கனவு தான் காரணமாக இருக்க வேண்டும். கனவில் அவளின் முகம் வந்த போது நான் புவனா போ.. புவனா போய் விடு, புவனா ப்ளீஸ் என்று கெஞ்சியது இப்போதும் நினைவில் இருக்கிறது. ஒரு வேளை அது தான் புவனா... புவனா என்று உன் காதில் விழுந்ததோ? இப்படியும் இருக்கலாம் தானே, கொஞ்சம் யோசித்துப் பாரேன்” என்றவன் கெஞ்சல் குரலுக்கு ஏளனமாக சிரித்தாள் மகிமா.
“கதை பிரமாதம் பெரிய எழுத்தாளராகும் வாய்ப்பு உங்களுக்கு அதிகம் இருக்கிறது. அன்று உங்கள் அலுவலகத்தில் நீங்களும் புவனேஸ்வரி என்கின்ற ஈஸ்வரியும் கட்டிப்பிடித்து குலாவியதை பார்க்காமல் இருந்திருந்தால் நீங்கள் சொல்லும் இந்த அசட்டுக் கதையை நம்பி முட்டாளாகியிருப்பேன். பிறகு
உள்ளத்தில் அவள் இல்லத்தில் நான் நல்லவேளை கடவுள் என்னை அன்று அங்கே அனுப்பி, அந்த கண்கொள்ளாக் காட்சியை பார்க்க வைத்தார். இரவில் என்னை அணைத்தவர், பகலில் வேறு பெண்ணை ச்சே...”
அவளின் அருவருப்பான பார்வையில் நொந்து போனான் கிருபாகரன்.
அன்று நடந்ததை மகிமாவிடம் எப்படிச் சொன்னால் புரிந்து கொள்வாள். அவள் வேறு அதிக வேதனையில் இருக்கிறாளே. இப்போது சொல்வது சரியா என்று சில நொடி யோசித்தவன். எது எப்படி இருந்தாலும் இன்றோடு இந்த வேற்றுமைகள் ஒழியட்டும். நாளை முதல் என் மகி அழவேக் கூடாது. டாக்டரம்மா போனில் பேசிய அத்தனையும் அவன் நினைவில் வந்து மேற்கொண்டு அவன் பேசுவதற்கு சக்தியைக் கொடுத்தது.
“முதலில் என்னை நேரே பார் மகி, நான் பேசுவது உண்மைதான் என்று என் முகத்தைப் பார்த்தால் தான் உனக்கு புரியும். அன்று... அன்று நடந்தது ஒரு விபத்து என்று தான் சொல்ல வேண்டும். நானே அதிக கவலையிலும் உன்னை அன்போடு அணைக்க வேண்டிய இந்தக் கைகள் மதுவின் துணையுடன் அல்லவா அணைத்துக் கொண்டன. ஒரு பெண்ணை அது மனைவியாக இருந்தாலும் குடிபோதையில் நெருங்குவது தவறு என்பது என் கருத்து. ஆனால் நம் விதி இப்படித்தான் என்று எழுதியிருக்க யார் மாற்றுவது”
“அந்தக் கவலையில் நான் உழன்று கொண்டிருக்கும் பொழுது. காலையிலேயே கலங்கியக் கண்களோடு புவனாவைப் பார்த்தேன். ஆனால் என்னவென்று கேட்கத் தோன்றவில்லை, கேட்கவுமில்லை. ஏனென்றால் என் எண்ணம் முழுமையும் நீதான் இருந்தாய். மாலையில் எப்படி உன்னை எதிர்கொள்வது முந்தின நாள் நடந்த தவறுக்கு எப்படி மன்னிப்பு கேட்பது. எல்லாவற்றிற்கும் மேலாக, என் காதலை உன்னிடம் எப்படி சொல்லி புரிய வைப்பது. இப்படி பல குழப்பங்கள், அப்போது தான் என் அறையினுள் நுழைந்த புவனா உடைந்து அழத் தொடங்கினாள். உடனே பதறி எழுந்த நான்.. அப்படி பார்க்காதே மகி அங்கே வேறு எந்த பெண்ணாக இருந்தாலும் நான் அப்படித்தான் நடந்திருப்பேன்”
“என்ன புவனா, ஏன் அழுகிறாய் என்று அவளருகில் சென்று விசாரித்தேன். ஒரு விதவை உயிர் வாழ்வதே தவறு கரன். போகும் வரும் நாயெல்லாம் வாலாட்டுகிறது. ஏதோ விதவை என்றால் ஆள் சுகம் தேடுபவர்கள் என்ற நினைப்பு ச்சே.. வாழவே பிடிக்கவில்லை, செத்துவிடலாம் போல் இருக்கிறது என்று கதறி அழுதவள் சட்டென்று திரும்பி ‘நாம் பிரிந்திருக்கக் கூடாது கரன்’ என்று என் தோள்களில் புதைந்து அழ ஆரம்பித்துவிட்டாள்.
எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. ஒருவேளை என் மனதில் நீ இல்லாமல் இருந்திருந்தால், அடுத்த முகூர்த்தத்தில் நான் அவளுக்கு தாலி கட்டியிருப்பேன். ஆனால் நீ தானே சொன்னாய், அன்பு இல்லாமல் கட்டப்படும் தாலி வெறும் கயிர் என்று. என் காதலும் நான் கட்டிய தாலியும்... நன்றாக கவனி கயிறு இல்லை தாலி இரெண்டும் உன்னிடம் தான். நீ இப்பொழுதே என்னை முழுமையாக நம்ப வேண்டும் என்பது இல்லை. கொஞ்சம் கொஞ்சமாக என்னை புரிந்து கொள்ள முயற்சித்தாலே. என் காதல் உனக்குப் புரிந்துவிடும். காத்திருக்க நான் தயார், உன் காத்திருப்பிற்கு நான் தானே காரணம். அதற்கான தண்டனையாக நான் நினைத்துக் கொள்கிறேன்” என்று முடித்தவன் பாலை எடுத்து அவள் கையில் கொடுத்தான்.
“இப்போது இளம் சூட்டில் இருக்கிறது குடித்துவிடு”
பதில் பேசாமல் அவள் குடிக்க, குடித்து முடிக்கும் வரை அவளையே பார்த்திருந்தவன். கை நீட்டி டம்ளரை பெற்றுக் கொண்டான்.
காலி டம்ளருடன் அவன் விலக எத்தனிக்கையில் மகிமாவின் மெல்லிய மலர்க்கரம் அவன் கரத்தைப் பற்றியது. உடனே திரும்பியவன், அவள் கண்களில் எதையோ படித்துவிட்டு,
“அதுதான் சொன்னேனே மகி. இப்போதே நீ எந்த பதிலும் சொல்ல வேண்டாம் நன்றாக யோசி”
கண்களில் கண்ணீருடன் ஏக்கமாக அவனைப் பார்த்தவள் அருகில் அமருமாறு சைகை செய்தாள். மதியம் நாத்தனார் பேசியது நன்றாக நினைவில் இருந்தது. அதுமட்டுமில்லாமல், அவனது கண்களும் அவளுக்கு உண்மையை உணர்த்தி விட்டன.
உடனே அவளருகில் அமர்ந்தவன் அவள் பற்றியிருந்த கையை எடுத்து தன் கைகளுடன் வைத்துக் கொண்டாள்.
“நான் மகிமாவின் கேள்வியில் உள்ளும் புறமும் மகிழ்ந்து உடனே அவளை தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்”
பல நாள் மனதிலிருந்த கவலை, கலக்கம், வேதனை, வலி, பாரம், இப்படி எல்லாமே ஒரே நொடியில் தூள்தூளாய் சிதறி விட்டது போல் தோன்றியது மகிமாவிற்கு.
அவன் நெஞ்சில் புதைந்தவள்,
“நீங்கள் சொல்வது உண்மைதானே கிருபா?”
“என் மீது இன்னுமா நம்பிக்கை வரவில்லை”
“அதற்கில்லை கிருபா, காதல் என்பது ஒரு அற்புதமான உணர்வு. அந்த உணர்வு இல்லையென்றால் இருவர் சேர்ந்து வாழ்வதே பயனற்ற ஒன்று. என்மேல் காதல்...”
“உன்னால் என்னை விட்டு விலகியும் இருக்க முடியவில்லை. அதே நேரம் நான் காதலிப்பதாய் சொன்னதை நம்பவும் முடியவில்லை. சரி இப்போது உனக்கு புரிவது போல் தெளிவாகவே சொல்கிறேன். ம்..ஹும் எங்கே விலகுகிறாய், இது வரை விலகியிருந்து போதாதா இனி நான் சொல்வதை காதால் மட்டும் கேட்டால் போதும், என் அணைப்பில் இருந்தபடியே”
“என்னதான் பிரச்சனை என்றாலும் நீ உன் அப்பா வீட்டிற்கு போவாய் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அதிலேயே எனக்கு ஏமாற்றம்தான். ஆனாலும் உன் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து உன்னை வரச் சொல்லி யாரும் வற்புறுத்தக் கூடாது என்று கட்டாயமாக சொல்லி இருந்தேன். எப்படியும் நீ வந்துவிடுவாய் என்று கண்மூடித்தனமாக நம்பினேன். ஆனால் நீ வரவே இல்லை. பிறகு நான் அப்பாவாகப் போகும் செய்தி கேட்டு எப்படி மகிழ்ந்தேன் தெரியுமா? அதற்கு முன்னால் எங்கே என்னைவிட்டு விலகி விடுவாயோ என்ற கலக்கம் இருந்துக் கொண்டே இருந்தது. நான் என்னதான் நியாயமான விளக்கங்கள் கொடுத்தாலும் குடிபோதையில் காட்டுமிராண்டித் தனமாக நடந்து கொண்ட என்னை நீ விவாகரத்து கூட செய்யக்கூடும் என்ற பதைபதைப்பு இருந்து கொண்டே இருந்தது"
“ஆனால் அந்த நல்ல செய்தி வந்த பொழுது சந்தோஷத்தில் நான் பேசும் சக்தியை இழந்துவிட்டேன். உடனே கான்பரன்சை என் செக்கரட்டரியிடம் ஒப்படைத்து விட்டு உன்னை பார்க்க ஓடோடி வந்தேன். என் குழந்தை வளர்வதை பற்றி விபரம் அறிய, ஆசையாய் உன்னை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன் ஆனால் அன்று...”
பழைய சம்பவத்தின் வலி இருவர் கண்களிலும் நன்றாகவே தெரிந்தது.
அப்பொழுது தான், நான் உன் அருகில் இருந்தால் உன்னை நீயே வருத்திக் கொள்வாய் அது உனக்கும் நம் குழந்தைக்கும் நல்லதல்ல என்று எண்ணி ஊர் திரும்பிவிட்டேன். ஆனால் தினமும் அத்தை மாமாவிடம் உன் நலன் பற்றி விசாரித்துக் கொண்டே இருப்பேன். அதுமட்டுமல்லாமல் தினமும் உன் செல்போனுக்கு இரவு 8 மணி அளவில் ஒரு அழைப்பு வருமே!
“ஆம்.. ஆனால் யாரும் பேச மாட்டார்கள், நான் ஹலோ ஹலோ என்று கத்திவிட்டு வைத்துவிடுவேன். அது நீங்கள் தானா?” என்று உற்சாகத்தோடு துள்ளிக் குதித்து எழுந்தாள் மகிமா.
“பார்த்து நம் குழந்தை” என்று அவள் இடையை பற்றி தன் அருகில் அமர்த்தினான்.
“ஆனால் வேறு வேறு நம்பரில் இருந்து தானே வந்தது”
“ஆமாம் என் அறிவாளி பொண்டாட்டி கண்டுபிடித்து விடுவாளே என்ற பயம் தான்”
“அது சரி..” என்று வெட்கத்தோடு சிரித்தவள்
“ம்.. அப்புறம்” என்று கதை கேட்டாள்.
“பிறகு என்ன திடீர் என ஒரு நாள், உன்னை மாதம்தோறும் பரிசோதனை செய்யும் டாக்டரம்மா போன் செய்து என்னை வறுத்தெடுத்து விட்டார்கள். மனைவி தாயாகும் வேளையில் இப்படித்தான் பொறுப்பில்லாமல் இருப்பதா? அவள் உடல்நிலை மோசமாக இருக்கிறது என்று இன்னும் நிறைய.. பிறகு தான் முடிவு செய்தேன். எது எப்படி என்றாலும் நாம் சேர்ந்திருப்பது தான் சரி என்று. அதிரடியாய் உன்னை இங்கு அழைத்தும் வந்துவிட்டேன். இதோ இன்று நம் முன் இருந்த தவறான புரிதல் அடியோடு மறைந்து விட்டது. சரி தானே”
புருவம் உயர்த்தி கேள்வி கேட்டவனது கன்னங்களில் இதழ் பதித்தாள் மகிமா. இருவரின் கண்களும் ஒன்றோடு ஒன்று கலந்தன.
உருக்கமாய் அவளை பார்த்தவன். “உனக்கு ஒரு முக்கிய குறிப்பு மகி.. புவனேஸ்வரியை என்னுடைய நண்பரின் அலுவலகத்திற்கு அனுப்பிவிட்டேன். இனி அவர்களது வாழ்க்கை ஈரோட்டில். கூடிய விரைவில் ஒரு நல்லவனாக தேர்ந்தெடுத்து திருமணம் செய்து கொள்ளுமாறு பேசித்தான் அனுப்பி இருக்கிறேன்”
“நமக்குள் காதல் மலர்ந்து விட்ட பிறகு இந்த விளக்கங்களுக்கெல்லாம் அவசியமில்லை கிருபா?”
“இருந்தாலும் சொல்வது என் கடமை அல்லவா? தன் இரண்டு கைகளால் அவளின் கன்னங்களை தாங்கியவன் அவளது நெற்றியில் மென்மையாய் இதழ் பதித்தான். அந்த முத்தமே மகிமாவிற்கு பல கதைகளை விளங்க வைத்துவிட்டது”
ஆசையோடு அவன் நெஞ்சில் புதைந்தாள்.
இனி உள்ளத்திலும் இல்லத்திலும் இவள் தான், இவள் மட்டும் தான்.
*******