எண்ணங்களே வண்ணங்களாய்...
அத்தியாயம் 15
பானு பத்து நாட்களுக்கு பிறகு மீண்டும் பள்ளிக்கு வேலைக்கு சென்றாள்.ஹாய் பானு! புதுப்பொண்ணு எப்படி இருக்காங்க? என்று சாருவை பற்றி மற்ற ஆசிரியர்கள் நலம் விசாரித்தனர்.
அவளுக்கு என்ன? சூப்பரா இருக்கா டீச்சர் என்று பதில் கூறினாள் பானு.நாங்க கேள்வி பட்டதுலாம் உண்மையா பானு?
உனக்கும் சாருவின் வீட்டுகாரரோட ப்ரெண்ட்டுக்கும் அடுத்த மாசம் கல்யாணம் நடக்க போகுதுனு சொல்லிகிறாங்க.கல்யாணம் முடிந்த கையோட அமெரிக்காவுக்கு நீ போகிடுவனு சொல்லுறாங்க பானு என்று கூறினார்கள்.
ஆமாம் டீச்சர்.அடுத்த மாசம் இல்லை.
அடுத்த வாரமே கல்யாணம் என்று கூறிவிட்டு சிரித்தாள் பானு.
அப்படியா பானு! எங்களிடம் ஒரு வார்த்தை சொல்லனும் கூட உனக்கு தோனல பார்த்தியா? என்று கேட்டனர்.
காமெடி பண்ணாதீங்க டீச்சர். இப்போதைக்கு கல்யாணம் பத்தி எந்த முடிவும் எடுக்கல.யாரோ நல்லா கதைக்கட்டி என்னை பத்தி உங்களிடம் தப்பான தகவலை சொல்லிருக்காங்க.
நீங்க எல்லாரும் அதையும் நம்பிட்டு வந்து கேட்குறீங்க என்றாள் பானு.
இன்னும கூட ஒரு வாரம் சேர்த்து லீவ் போட்டிருந்தா கல்யாணம் முடிஞ்சு ஹனிமூன் போய்ட்டேனு சொல்லிருப்பீங்க போலயே! என்று சொல்லிட்டு வயிறு வலிக்க சிரிக்க தொடங்கினாள்.
ஈரை பேணாக்கி பேணை பெருமாளாக்குறதுல நம்ம மக்களை அடிச்சுக்கவே முடியாது டீச்சர் என்றாள் பானு.
நீங்க சொன்னதில் ஒரு விஷயம் மட்டும் உண்மை தான் டீச்சர்.எனக்கு கல்யாணம் நடந்தால் அது மனோஜ் சார் கூட மட்டும் தான்.ஆனால் கல்யாணம் இப்போதைக்கு இல்லை.
எங்க வீட்டில் பேசி சம்மதம் வாங்கிய பிறகு கல்யாண தேதி உறுதியானதும், உங்களுக்கும் என்னை பற்றி உங்களுக்கு தகவல் சொன்னவங்களுக்கும் கண்டிப்பாக பத்திரிக்கை வைப்பேன் டீச்சர் என்றாள் பானு.
அம்மா என்று கத்தும் சத்தம் கேட்டதும், சாரு வேகமாக கீழே இறங்கி வந்து மாலதியின் அறைக்கு சென்றாள்.
சந்துருவும் மனோஜூம் படிகளில் இறங்கி வந்து கொண்டிருந்தனர்.
ஐயோ அம்மா! காலு ரொம்ப வலிக்குதே! தாங்க முடியலையே என்று கத்தினார் மாலதி.ஆஸ்பத்திரி போகும் வரை கொஞ்சம் பொறுத்துக்கோங்க அம்மா என்று கூறினான் ஷ்யாம்.
சந்துரு! நீயும் ஷ்யாமும் சேர்ந்து சித்தியை தூக்குங்கப்பா.மனோஜ் நீ போய் காரை ஸ்டார்ட் செய்! என்றார் ஜானகி அம்மா.அத்தை ஒரு நிமிஷம் பொறுங்கள்.
நான் என்னனு பார்க்கிறேன் என்றாள் சாரு.
மாலதியின் காலை தன் மடி மீது வைத்து தொட்டு பார்த்தவள், ஒரு பத்து நிமிஷம் பொறுமையாக இருங்க அத்தை.மருந்து ரெடி பண்ணி எடுத்துட்டு வரேன் என்று கூறிவிட்டு சமையலறைக்கு சென்றாள்.
அம்மா நீங்க நம்ம வீட்டு முருங்கை மரத்தில் இருக்கும் முருங்கை பட்டை கொஞ்சம் எடுத்துட்டு வாங்கம்மா என்று கண்ணம்மாவிடம் கூறினாள்.
இந்தாங்க சாரும்மா என்று முருங்கை பட்டையை கொடுத்தார் கண்ணம்மா.
அம்மா! பெருங்காய டப்பா, கடுகு, சுக்கு டப்பாலாம் எங்க இருக்குனு சொல்லுங்கம்மா? என்று கண்ணம்மாவிடம் கேட்டாள் சாரு.
நானே எடுத்து தருகிறேன் சாரும்மா என்று சொன்னார்.எல்லா டப்பாவையும் எடுத்து சாருவிடம் கொடுத்தார்.
முருங்கை பட்டையோடு பெருங்காயம், கடுகு மற்றும் சுக்கை சேர்த்து நன்கு அரைத்தாள்.அவை அனைத்தையும் சூடு செய்து மாலதி அம்மா இருக்கும் அறைக்கு எடுத்து சென்றாள்.
இது என்னது சாரு? என்று ஜானகி அம்மா தன் மருமகளிடம் கேட்டார்.
இந்த மருந்தை சுளுக்கு உள்ள இடத்தில் தடவி பற்று போட்டால் சுளுக்கு சரியாகிவிடும் அத்தை.என் பாட்டி எனக்கு சொல்லி கொடுத்த கைப்பக்குவம் இது.எங்க வீட்டில் யாருக்கு சுளுக்கு பிடித்தாலும் இப்படி தான் செய்வோம் என்றாள் சாரு.
சரிம்மா...நீ மாலதிக்கு சீக்கிரமாக போட்டு விடு! என்று கூறினார் ஜானகி அம்மா.
எந்த காலத்துல இருக்கீங்க பெரியம்மா.இதெல்லாம் சரிபட்டு வராது.உடனே ஆஸ்பத்திரிக்கு போய் எலும்பு எதுவும் உடைஞ்சிருக்கானு ஸ்கேன் எடுத்து பார்க்கனும் என்று சாருவின் மீது இருந்த கோபத்தை தன் பெரியம்மாவிடம் காட்டினான் ஷ்யாம்.
கொஞ்சம் பொறுமையாக இருப்பா ஷ்யாம்.சாரு பற்று போடட்டும் என்றார் ஜானகி அம்மா.
சூடு ஆறியதும் இதமான சூட்டில் சுளுக்கு உள்ள இடத்தில் தடவி பற்று போட்டாள் சாரு.
நீங்க கவலைப்படாதீங்க அத்தை! இன்னும் அரை மணி நேரத்தில் சரியாகி பழைய படி நடக்க ஆரம்பிச்சுருவீங்க என்று மாலதியிடம் கூறினாள் சாரு.
ஆனால் ஷ்யாம் யார் சொல்வதையும் காதில் வாங்கி கொள்ளாமல் பற்று போட்டதும் அவனது அம்மாவை அழைத்து கொண்டு ஆஸ்பத்திரிக்கு கிளம்பி சென்று விட்டான்.
இளம் வயசு பசங்களுக்கு அந்த காலத்து கைப்பக்குவமும் அதோட அருமையெல்லாம் தெரியாதும்மா சாரு.சாதாரண தும்மலுக்கு கூட
ஆஸ்பத்திரிக்கு ஓடிருவாங்க என்றார் ஜானகி அம்மா.
ஷ்யாமின் கார் வீட்டு வாசலை விட்டு கிளம்பியதும் சந்துரு வீட்டின் வாசலில் மூன்று கார் வந்து நின்றது.
தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா, சித்தி, சித்தப்பா, மாமா, அத்தை, தம்பி, தங்கச்சி என்று சாருவின் வீட்டிலிருந்து அனைவரும் கல்யாண பலகாரக்
கூடையை கொடுக்க வந்திருந்தனர்.
மாலதியும், ஷ்யாமும் ஆஸ்பத்திரிக்கு வேகமாக சென்று டாக்டரை பார்த்தனர்.எப்படி இது நடந்தது? என்று ஷ்யாமிடம் விசாரித்தார் டாக்டர்.
பாத்ரூமில் வழுக்கி விழுந்து விட்டதாக கூறினார் மாலதி.காலில் போட்டிருக்கும் பற்றை பார்த்துவிட்டு இதை போட்டது யார்? என்று கேட்டார்.
நான் எவ்வளவோ சொல்லி பார்த்தேன் டாக்டர் சொல்ல சொல்ல கேட்காமல் போட்டுடாங்க என்று கூறினான் ஷ்யாம்.
நோ...நோ...அவுங்க சரியான கை வைத்தியம் தான் செஞ்சிருக்காங்க.
எப்படியாப்பட்ட சூளுக்கும் சரி, தசைப்பிடிப்பும் சரி முருங்கை பட்டை பற்று போட்டால் சரியாகிவிடும் என்று டாக்டர் சொன்னதும் அமைதியாகி விட்டான் ஷ்யாம்.
நீங்க பயப்படுவது மாதிரி ஒன்றுமே இல்லை.சாதாரண தசைப்பிடிப்பு தான்.இந்த முருங்கை பற்றுக்கே வலி குறைந்து சரியாகிவிடும்.அதையும் மீறி வலி குறையாமல் இருந்தால் மட்டும் இந்த மாத்திரையை போடுங்க என்று மருந்து சீட்டை ஷ்யாமிடம் கொடுத்தார் டாக்டர்.
மருந்து கடையில் மாத்திரை வாங்கியதும் காரில் ஏறினார்கள்.
ஏன்ம்மா கவனமாக இருக்க மாட்டீங்களா? என்று மாலதியை சத்தம் போட்டான்.
அந்த சாரு விழுவானு பார்த்தால், கடைசியாக பாத்ரூம் போன நீங்க கீழ வழுக்கி விழுந்து கிடக்குறீங்க.
இல்லடா ஷ்யாம்! எண்ணெய் ஊத்திட்டு வந்த அவசரத்துல கை கழுவ பாத்ரூம் போன போது எண்ணெய் பாக்கெட்டை பாத்ரூம்லையே வச்சுட்டு வந்துட்டேன்.
பாக்கெட் கீழே விழுந்து எண்ணெய் கொட்டி கிடப்பது தெரியாமல் அதில் கால் வச்சு வழுக்கி விழுந்துட்டேன் ஷ்யாம் என்று கூறினார் மாலதி.
" தன் வினை தன்னை சுடும்னு " பெரியவுங்க சொன்னது சரியா போச்சுல ஷ்யாம் என்றதும் மாலதியை திட்டி தீர்த்தான்.
சரி டவுனுக்கு வந்தது வந்துட்டோம்.
அப்படியே பிரியாணி வாங்கி சாப்பிட்டு போயிரலாம்டா என்றதும் ஷ்யாம் அவனது அம்மாவை முரைத்து பார்த்தான்.
இந்த ரணகளத்திலும் உங்களுக்கு குதுகலமாக இருக்குதுல.உங்களை திருத்தவே முடியாதும்மா என்று கூறிவிட்டு பிரியாணி கடைக்கு அழைத்து சென்றான்.பிரியாணி சாப்பிட்டதும் வீட்டிற்கு சென்றனர்.
வீட்டிற்குள் நுழைந்ததும் சாரு வேகமாக மாலதியிடம் சென்று இப்போது கால் வலி எப்படி இருக்குது அத்தை என்று கேட்டாள்.அதற்கு பதில் ஏதும் சொல்லாமல் இருந்தார் மாலதி.
வீட்டை விட்டு கிளம்பும் போது தாங்கி தாங்கி நடந்தவர் ஆஸ்பத்திரிலிருந்து வரும்போது நன்றாக நடந்து வந்தார்.
மாலதி அம்மாவிம் சாரு கேட்டுக்
கொண்டிருக்கும் போதே ஜானகி அம்மாவும் வந்து நலம் விசாரித்தார்.
டாக்டர் என்ன சொன்னாங்க மாலதி? என்று கேட்டார் ஜானகி அம்மா.
எக்ஸ்ரே எடுத்து பார்த்ததுல தசைப்பிடிப்பு மாதிரி தான் இருக்கு.
முருங்கை பற்றுக்கே சரியாகிவிடும் சொல்லிட்டாங்க அக்கா என்றார் மாலதி.
இதைத் தான் நாங்களும் சொன்னோம்.அவசரபட வேண்டாம்! கொஞ்சம பொறுமையாக இருங்கனு.
சரி உன் பாத்ரூம்க்கு எப்படி எண்ணெய் வந்தது மாலதி? என்று கேட்டார் ஜானகி அம்மா.அது வந்துக்கா...என்று மாலதி இழுத்ததும் நான் தான் பெரியம்மா தலைக்கு எண்ணெய் வச்சு குளிக்கனும்னு அங்க வச்சிருந்தேனு சொல்லி சமாளித்து விட்டான் ஷ்யாம்.
இன்னைக்கு காலையில் தான் வீடு முழுவதும் கண்ணம்மா துடைச்சு விட்டாள்.
பெரியம்மா மன்னிச்சருங்க... மாலதி அம்மா ரூம் மட்டும் துடைக்கலம்மா.
அவுங்க ரூமை இரண்டு தடவை தட்டி பார்த்தேன்.அவுங்க திறக்காதனலா பிறகு துடைச்சுக்கலாம்னு வந்துட்டேன் அம்மா என்றார் கண்ணம்மா.
சரி போனது போகட்டும்.பெருசா எதுவும் அடி படாமல் இருந்ததே அதுவே போதும்.நல்ல வேளை கடவுள் சாரு ரூபத்துல வந்து மாலதிக்கு மருந்து போட்டு சரியாக்கி விட்டுடாரு.அந்த ஏழுமலையானுக்கு தான் நன்றி சொல்லனும்.
நீ கொஞ்ச நேரம் ரூம்ல போய் ரெஸ்ட் எடு மாலதி.நான் சாரு வீட்டிலிருந்து வந்தவுங்களை போய் கவனிக்கிறேன் என்று கூறிவிட்டு சென்றார் ஜானகி அம்மா.
பார்த்து கவனமாக இருங்க அத்தை! என்று சாருவும் கூறிவிட்டு கிளம்பினாள்.
மாலதியும், ஷ்யாமும் அவர்களது அறைக்கு சென்றனர்.இப்போ தான் புரிஞ்சிருச்சு ஷ்யாம்.சாரு விழாததுக்கு காரணம் இந்த கண்ணம்மா வீடு துடைச்சதுனாலனு என்று கூறினார் மாலதி.
கண்ணம்மா எப்போ வந்து ரூமை தட்டுனா எனக்கு சத்தமே கேட்கலையே? என்றார் மாலதி.
நீங்க தான் எண்ணங்களே வண்ணங்களாய்... சீரியலை காதுல ஹெட்செட் மாட்டிக்கிட்டு பார்த்துகிட்டு இருந்தீங்களா அப்போவா இருக்கும்.
நான் தான் சீரியல் பார்த்தேன்.நீ என்னடா செஞ்சுக்கிட்டு இருந்த? என்று கேட்டார். நான் குளிக்க போயிருந்தேன் என்றான்ன ஷ்யாம்.
சாரு ஆஸ்பத்திரில அட்மிட் ஆகிருவானு பார்த்தால், கடைசி உங்களை ஆஸ்பத்திரித்கு கூட்டிட்டு போறது மாதிரி ஆகிடுச்சே!
இந்த பெரியம்மா வேற அவுங்க மருமகளை கடவுள் ரூபத்துல வந்து காப்பாத்திட்டானு புகழ்ந்து தலையில் வச்சு கொண்டாடுறாங்க என்றான் ஷ்யாம்.
சாரு மட்டும் முருங்கை பற்று போடாமல் இருந்திருந்தால் எனக்கு சுளுக்கு சரியாகிருக்காதுல ஷ்யாம் என்றதும் சும்மாவே செம கடுப்புல இருக்கேன்.
என் வாயை கிளறி நல்லா வாங்கி கட்டிக்காதீங்க! என்று கோபத்துடன் பேசினான் ஷ்யாம்.
சாருவை பழி தீர்க்க முடியாமல் போனதை நினைத்து அவனது கை விரல்களின் நகத்தை வேகமாக கடித்தான்.
பொண்ண நல்ல பண்போடும் பாசத்தோடும் வளர்த்திருக்கீங்க என்று சாருவின் தாத்தாவிடம் ஜானகி அம்மா சொன்னார்.
இந்த காலத்துல இப்படி ஒரு பொண்ணு மருமகளாக கிடைப்பதற்கு நாங்க கொடுத்து வச்சுருக்கனும் என்றதும் சாருவின் குடும்பத்தினர் அனைவரின் மனசும் சந்தோஷம் அடைந்தது.
சாருவின் மாமா பையன் சங்கர், பந்தை எறிந்து விளையாடி கொண்டிருந்தான்.பந்து பறந்து அங்கிருந்த ஒரு ரூமின் ஜன்னல் வழியாக அறைக்குள் விழுந்தது.
அறையின் கதவு பூட்டு போட்டு பூட்டி இருந்தது.சங்கர் சாருவிடம் வேகமாக ஓடி வந்து பந்தை எடுத்து தருமாறு அடம்பிடித்து அழத்தொடங்கினான்.
அறையின் பூட்டு சாவியை எடுத்து தருமாறு கண்ணம்மாவிடம் கேட்டாள் சாரு.சாரும்மா அந்த ரூம்க்கு போக வேண்டாமா! என்றார் கண்ணம்மா.
அந்த ரூம் சாவி சின்ன ஐயாட்ட தான்ம்மா இருக்கும் என்று கூறினார்.
காலையில் சந்துரு அந்த ரூம்மிற்குள் சென்றதும் கதவை டக்குனு மூடிக்கொண்டதையும் பார்த்தாள் சாரு.
அந்த ரூம்ல அப்படி என்ன இருக்குதும்மா? என்று கேட்டு கொண்டிருக்கும் போதே சந்துரு பந்தை எடுத்து வந்து சங்கரின் கையில் கொடுத்து விட்டு சென்றான்.
கண்ணம்மாவையும் ஜானகி அம்மா அழைத்தார்.அதனால் சாரு கேட்டதிற்கு பதில் ஏதும் சொல்லாமல் கிளம்பி சென்றுவிட்டார் கண்ணம்மா.
யாருடைய அறை அது? அந்த அறைக்கு சந்துரு மட்டும் சென்று வர காரணம் என்ன? அறைக்குள் அப்படி என்ன இருக்கிறது? என்று அடுத்து வரவிருக்கும் அத்தியாயங்களில் காண்போம்...
- தொடரும் -
* * * * * * * * * * * * * *
இத்தொடரைக் குறித்த தங்களது பொன்னான விமர்சனங்களை கீழே உள்ள நீல வண்ண எழுத்துகளை அழுத்தி அதில் பதிவு செய்யவும்.
🙏🙏🙏