எண்ணங்களே வண்ணங்களாய்...
அத்தியாயம் 9
மாப்பிள்ளை அழைப்பின் போது செண்டா மேளம் வாத்தியத்துடனும், நடன கலைஞர்களின் நடனத்தடனும், மறுபக்கம் பட்டாசு வெடிகளின் சத்தத்தோடும் சிவப்பு கம்பளத்தில் ராஜ மரியாதையுடன் மாப்பிள்ளைக்கு மலர்கள் தூவி வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.ராஜா மாதிரி உடை அணிந்து கம்பீரமான தோற்றத்துடன் குதிரையில் வந்து இறங்கினார் மாப்பிள்ளை சந்துரு.உடைக்கேற்ப உருவமும் ஒத்து போயிருந்தது.
மண்டபத்தின் நுழைவாயிலில் நின்று கொண்டிருந்த யானை, மாப்பிள்ளைக்கு மாலைப்போட்டு ஆசிர்வாதம் செய்து வரவேற்றது.
மண்டபத்தின் அலங்காரங்கள் அனைத்தும் காண்போரின் மனதை கவரும் வகையில் மிகவும் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்திருந்தனர்.
பல வண்ண மலர்கள் மற்றும் பழங்களை கொண்டு பறவைகளின் உருவத்தை தத்தரூபமாக வடிவமைத்து வைத்திருந்தனர்.அதோடு மட்டுமல்லாமல் தாமரை, செவ்வந்தி, அல்லி, மல்லி, செம்பருத்தி மற்றும் பல வண்ண நிற ரோஜாக்கள் என அனைத்து வகையான மலர்களால் மண்டபத்தின் வாசலில் மிகப்பெரிய ரங்கோலி கோலம் மலர்களை கொண்டு வரைந்திருந்தனர்.
மண்டபத்தின் ஒவ்வொரு பகுதியும் பல வண்ண மலர்களாலும், சீரியல் பல்புகளாலும், மாவிலை தோரணங்களாலும் மிகவும் அற்புதமாக அலங்காரம் செய்யப் பட்டிருந்தது.மண்டபம் பார்ப்பதற்கு அப்படியே பூலோக சொர்க்கம் போல காட்சியளித்தது.மாப்பிள்ளைக்கு ஆரத்தி எடுக்க பதினாறு வகையான வெள்ளி தட்டுகளில் பல வகையான பொருட்களைக் கொண்டு வித விதமாக அலங்காரம் செய்து ஆரத்தி தட்டை தயார் செய்து வைத்திருந்தனர்.
சந்துருவிற்கு மச்சினிச்சி என்ற முறையில் முதல் ஆரத்தியை மதி எடுத்தாள்.ஆரத்தி எடுத்ததிற்கு பரிசாக நூறு ரூபாயை மதியின் ஆரத்தி தட்டில் வைத்தான் சந்துரு.
"மாமா! நூறு ரூபாய்லாம் வேண்டாம்...
அமெரிக்கா டாலர் இருந்தா தாங்க..." என்றாள் மதி.
"அதற்கென்ன கொடுத்துட்டா போச்சு" என்றார் ஜானகி அம்மா.
"ஏய் மதி! எந்த நேரத்தில் விளையாடனும் உனக்கு தெரியாதாடி?" என்று மதியின் அம்மா சரோஜா அவளைச் சத்தமிட்டார்.
"அதனால் என்ன சம்மந்திம்மா...மதி அவள் மாமாக்கிட்ட உரிமையாக கேட்குறா.இதுல சத்தம் போடுவதற்கு என்ன இருக்குது? அவளை சத்தம் போடாதீங்க!" என்றார் ஜானகி அம்மா.
அமெரிக்கா டாலரை தனது பர்ஸிலிருந்து எடுத்து மதியிடம் கொடுத்தான் சந்துரு.அடுத்ததாக சாருவின் தம்பி பாபு, சந்துருவிற்கு பாத பூஜை செய்தான்.அதற்கு பரிசாக பாபுவின் கழுத்தில் தங்க சங்கிலியை போட்டு விட்டான் சந்துரு.இறுதியாக தனது மாமாவாகிய சந்துருவை மண்டபத்திற்குள் கைப்பிடித்து அழைத்து சென்றான் பாபு.
சாருவிற்கு அலங்காரம் செய்து முடித்ததும், வீட்டில் உள்ள அனைத்து பெரியோர்களிடமும் ஆசிர்வாதம் பெற்றாள் சாரு.
"நல்ல நேரம் முடிவதற்குள் வண்டியில் வந்து ஏறுமா சாரு..." என்றார் சாருவின் அப்பா சுப்ரமணியன்.
"நாங்க எல்லாரும் சாருவை அழைத்துக் கொண்டு முன்னாடி கிளம்புறோம் ராஜூ.நீ வீட்டில் உள்ள மற்ற எல்லாரையும் அழைத்து கொண்டு பின்னாடி வரும் வண்டியில் சீக்கிரமாக மண்டபத்திற்கு வந்து சேர்ந்துடு" என்று சாருவின் சித்தாப்பா ராஜூவிடம் கூறினார் சுப்ரமணியன்.
சாரு வண்டியில் ஏறியதும் அவளது எண்ணமெல்லாம் சந்துருவை பற்றி சிந்திக்க தொடங்கியது.வண்டியின் ஜன்னலோரமாக அமர்ந்திருந்தாள் சாரு.சாருவை அடுத்து பானு உட்கார்ந்திருந்தாள்.சாருவின் மனம் இருக்கும் இடத்தை அறியாமல், தானாக கதை பேசிக் கொண்டும் சிரித்துக் கொண்டும் வந்தாள் பானு.
வண்டி வேக தடையைத் தாண்டி செல்லும் போது திடீரென்று போட்ட ப்ரேக்கில், வண்டி குலுங்கிய போதுதான் சுயநினைவுக்கு வந்தாள் சாரு.வண்டியின் ஜன்னல் வழியாக வானத்தையே பார்த்து சிரித்துக் கொண்டிருந்தாள் சாரு.
"ஏய் சாரு! வானத்தில் அப்படி என்னடி தெரியுது?" என்று வண்டியின் ஜன்னல் வழியாக எட்டிக் கொண்டு வானத்தை பார்த்தாள் பானு.
"வானத்துல அப்படி எதுவும் வித்தியாசமாக தெரியலையே!" என்றாள் பானு.
மீண்டும் பதில் ஏதும் சொல்லாமல் சிரிக்க தொடங்கினாள் சாரு.
"அது சரிதான்... நான் ஒரு மடச்சி.நீ கற்பனை உலகத்தில் உலாவுவது தெரியாம நான் சொல்லுவதை நீ கேட்குறயா? இல்லையானு? கூட தெரியாமல் லூசு மாதிரி தனியாக புலம்பிட்டு வந்திருக்கேன் பாரு.நீ இப்போது எதை நினைத்து சிரிக்கிறனு எனக்கு நல்லா தெரிஞ்சு போச்சு.நீ மாப்பிள்ளை சாரோடு சேர்ந்து டூயட் பாட்டுக்கு வானத்தில் ஆடிக்கிட்டு இருக்குறது போல கற்பனை செஞ்சு பார்த்துதான சாரு சிரிக்கிற..." என்று கேட்டாள் பானு.
"உனக்கு எப்போது பார்த்தாலும் டூயட் பாட்டு நினைப்பு தான் வருமாடி பானு?"
"அப்படியெல்லாம் ஒன்னுமில்ல..."
"பிறகு மேடம் எதை நினைத்து சிரிக்கிறீங்களாம்?" என்று கேட்டாள் பானு.
"ஒரு நாள் ஒரு கனவு கண்டேன். இன்றைக்கு அதை நினைத்து பார்த்தேன்.அதுதான் சிரிப்பு வந்தது."
"அப்படி என்ன கனவு சாரு அது?" என்று பானு கேட்டதும், கனவின் ஆரம்பத்திலிருந்து முடிவு வரை அனைத்தையும் சொன்னாள் சாரு.
"இதில் சிரிப்பதற்கு என்ன சாரு இருக்குது?" என்றாள் பானு.
"கனவில் காரில் வந்து இறங்கியது மனோஜ் அண்ணானு தெரியாமல் போச்சு.இப்போது பாரு நீங்கள் ப்ரெண்ட்ஸ் ஆகியாச்சு.அடுத்த கட்ட நடவடிக்கையாக இரண்டு வீட்டு பக்கமும் பேசி சம்மதம் வாங்கிட வேண்டியது தான் பாக்கி..." என்று கூறிச் சிரிக்கத் தொடங்கினாள் சாரு.
"நாணத்தில் குனிந்து கொண்டு சும்மாயிரு சாரு..." என்றாள் பானு.
வண்டி மண்டபத்தை நெருங்கியதும் சாருவின் மனம் பட படத்தது.அவளது கண்கள் தேனீக்கள் பூவை தேடுவது போல சந்துருவை தேடி ரிங்காரமிட்டது.
சாருவிற்கு ஆரத்தி எடுத்து வரவேற்று மணமகள் அறைக்கு அழைத்து சென்றனர்.
மணமகள் அறையின் எதிர்ப்புறத்தில் தான் மணமகனின் அறையும்
இருந்தது.சாருவின் உடல் மட்டும்தான் அறையில் இருந்தது.மனமும் கண்களும் அலைபாய்ந்து சந்துருவை தேடி சுற்றித் திரிந்தது.அவளை சுற்றியிருந்த உறவுகளின் சத்தம் எதுவும் அவளது காதில் விழவில்லை.
திடீரென ஜில்லுனுெ ஒரு காற்று அவளை கடந்து செல்வது போல உணர்ந்தாள்.சந்துரு மணமகள் அறையை கடந்து சென்றான்.அவன் மீது கொண்ட ஆழமான காதல்தான் சாருவிற்கு அவனது வருகையை முன்பே உணர செய்தது போலும்!
முதலில் மணமகனை அழைத்து வருமாறு புரோகிதர் கூறினார்.
மணமகன் சந்துரு மேடைக்கு வந்தார். பார்த்தவுடன் ஈர்க்கும் அளவிற்கு மாய கண்ணனை போல அவ்வளவு அழகாக இருந்தான் சந்துரு.அதன் பின்னர் மணமகளின் நிச்சயதார்த்த புடவையை கொடுத்து விட்டு மணமகளை அழைத்து வருமாறு கூறினார்.
"நாளிகை ஆகுது! மணப்பெண்ணை சீக்கிரம் அழைச்சிட்டு வாங்கோ!" என்றார் புரோகிதர்.
அழகுனா அழகு! அப்படி ஒரு அழகுடா சாமி! பௌர்ணமி நிலவு போன்று பிரகாசமான முகமும், மீன்களை போன்ற விழிகளும், செக்க சிவந்த செவ்விதழும், கட்டுக்கோப்பான உடலமைப்பும் கொண்டு நீல வண்ண சேலை அணிந்து பூமாதேவிக்கு வலிக்காதவாறு மெதுவாக அடி எடுத்து வைத்து நடந்து வந்தாள் சாரு.சாரு உடுத்தியிருந்த நீல வண்ண சேலையில் ஆங்காங்கே வெள்ளை நிற கற்கள் பதிக்கப்பட்டிருந்தது.அது பார்ப்பதற்கு வானத்தில் ஜொலிக்கும் நட்சத்திரங்கள் போல காட்சியளித்தது.
மணமகள் அறையிலிருந்து மணமேடைக்கு செல்லும் ஒவ்வொரு நொடியும் சாருவின் மனதில்,
சந்துருவை பார்க்க போகும் அந்த தருணத்தை நினைத்து மிகுந்த சந்தோஷத்துடன் ஆவலாக இருந்தாள்.
மணமேடையில் ஏறினாள் சாரு.
அவளது கண்களோ சந்துருவை உடனே பார்க்க வேண்டும் என்று கண் இமைகள் வேகமாக துடித்தது.
உதடுகளோ அவனோடு பேச வேண்டும் என்று முணு முணுத்தது.
ஆனால் சந்துருவிற்கோ, தன் எதிர்கால துனைவியை பார்க்க போகின்றோம் என்ற எந்தவித உணர்வும் எதிர்ப்பார்ப்பும் சிறுதுளி அளவு கூட இல்லாமல் எங்கேயோ வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.
சந்துருவின் அருகில் சென்று நிற்பதற்காக அடியின் மேல் அடி வைத்து நடந்து சென்ற போது சாருவின் மனதில் காதல் கீதம் அரங்கேற துவங்கியது.சந்துருவின் அருகே சென்று நின்றவள் அவனை நேருக்கு நேராக பார்க்க முடியாமல் மனதில் பரிதவித்து கொண்டிருந்தாள்.
"மாப்பிள்ளையும் பொண்ணும் மாலையை மாத்திக்கோங்கோ..." என்று சொன்னார் புரோகிதர்.
சாருவின் கழுத்தில் மாலையை போட போகும் பொழுது முதன் முறையாக சாருவை பார்த்த சந்துரு, கண் இமைக்காமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
பக்கத்திலிருந்த பானு, "மாப்பிள்ளை சார்! உன் அழகில் மயங்கி சிலையாகிட்டாரு போல சாரு.தட்டி எழுப்பிவிடு..." என்று சொல்லிக் கொண்டு சிரித்தாள்.
சந்துருவை நேருக்கு நேராக பார்த்த சாருவும் அவனது கண்களால் கவர்ந்திழுக்கப்பட்டு சந்துருவின் இதய சிறையில் கைதியாகிவிட்டாள்.
"டேய் சந்துரு! மாலையை சாருவின் கழுத்தில் போடுடா..." என்று அவனது தோள்பட்டையை தட்டினான் மனோஜ்.
தோள்பட்டையை தட்டியதும் சுயநினைவுக்கு வந்த சந்துரு டக்குனு மாலையை சாருவின் கழுத்தில் போட்டு விட்டு திரும்பிக் கொண்டான்.
சந்துருவின் கழுத்தில் மாலையை போடும் போது, சாருவின் மனதில்
இதுதானா இதுதானா
எதிர்பார்த்த அந்நாளும் இதுதானா?
இவன் தானா இவன் தானா
மலர் சூட்டும் மணவாளன்
இவன் தானா?
என்ற பாடல் வரிகள் ஓடிக் கொண்டிருந்தது.
சாருவிற்கு நிச்சயதார்த்த மோதிரம் போட அவளது கையை சந்துரு பிடித்த போது, இருவரும் பூர்வ ஜென்ம உறவு போல இருவரின் மனதிற்குள்ளும் ஏதோ ஒரு உணர்வு வந்து போனது.
உறவினர்கள் ஒவ்வொருவரும் தொடர்ச்சியாக மேடையில் வந்து வாழ்த்து தெரிவித்து கொண்டிருந்ததால், சந்துருவுடன் தனியாக பேசுவதற்கு சாரு எவ்வளவோ முயற்சி செய்தும் பேச முடியாமல் போனது.சாப்பிடுவதற்காக மாப்பிள்ளையையும் பெண்ணையும் அழைத்துக் கொண்டு சென்றனர்.
சாப்பிடும் போதாவது பேசிவிடலாம் என்று நினைத்த சாருவிற்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது.சந்துரு மற்றும் சாருவின் நடுவில் வந்து அமர்ந்தான் சங்கர்.சாப்பிட்டு முடித்ததும் எதுவுமே பேசாமல் அவரவர் அறைக்கு சென்றுவிட்டனர்.சாருவின் கண்கள் சந்துருவையே நோக்கி கொண்டிருந்தது.ஆனால் சந்துருவோ, சாருவிடம் எதுவும் சொல்லாமல் போனில் ஏதோ பார்த்துக் கொண்டே அவனது அறைக்கு நடந்து சென்றுவிட்டான்.அறைக்குள் வந்தவனால் நிதானமாக இருக்க முடியவில்லை.சாருவை பற்றி சிந்திக்க தொடங்கினான்.
"என்னடா சந்துரு! சாருவை பார்த்ததும் காதல் போதை தலைக்கேறிருச்சாடா? மாலையை போட சொன்னால் ஆடாமல் அசையாமல் அப்படியே சாருவையே பார்த்துக்கிட்டு இருந்த..." என்று கேட்டான் மனோஜ்.
"டேய்! சும்மாயிருடா.நானே ரொம்ப குழப்பத்தில் இருக்கேன்..."என்றான் சந்துரு.
"அப்படி சார்க்கு என்ன குழப்பம்னு தெருஞ்சுக்கலாமா?"
"சாருவை தொட்டதும் எனக்கு அப்படியே சஞ்சுளா கையை தொட்டது போலவே இருந்ததுடா மனோஜ்..."
"அப்படியே கண்ணத்தில் ஓங்கி ஒரு அறை விட்டேனா...நீ சுயநினைவுக்கு வந்திருவனு நினைக்கிறேன்.
விடிஞ்சதும் கல்யாணத்தை வச்சுக்கிட்டு இப்போது பேசுகின்ற பேச்சைப்பாரு.நீ இன்னுமாடா சஞ்சுளாவை மறக்காமல் இருக்க?" என்று கேட்டான் மனோஜ்.
மனோஜ் கேள்விக்கு பதில் ஏதும் சொல்லாமல் உறங்க சென்றுவிட்டான் சந்துரு.
பாட்டு பாடிக் கொண்டே சாருவின் அறைக்குள் வந்தாள் பானு.
"மேடம் ரொம்ப குஷியாக இருக்கீங்க போல...ரொம்ப நேரமாக ஆளையே காணோம்?" என்று பானுவை பார்த்து கேட்டாள் சாரு.
"அவுங்க கிட்ட கொஞ்சம் நேரம் பேசிக்கிட்டு இருந்தேன்..." என்றாள் பானு.
"அவுங்கனா... எவுங்க மேடம்?" என்று கேட்டாள் சாரு.
"மனோஜ் சார்..." என்றாள் பானு.
"நடக்கட்டும்... நடக்கட்டும்... என் கல்யாணத்துக்கு வந்துவிட்டு உன் கல்யாணத்துக்கு ப்ளான் போடுகிறாயா?" என்று பானுவை கிண்டலடித்தாள் சாரு.
"இன்னும் தூங்கவலையா சாரு? கதையெல்லாம் இன்னொரு நாள் பேசிக்கலாம்.அதிகாலையில் எழுந்து தயாராகனும்.சீக்கிரம் தூங்குங்கடா சாரு!"என்று கூறிவிட்டு அவரது அறைக்கு சென்றார் சிவகாமி அம்மா.
பொழுது விடிந்தது...மேள தாளங்களும் நாதஸ்வரமும் வாசிக்க தொடங்கிய சத்தம் கேட்டது.
புரோகிதர் மந்திரம் ஓத ஆரம்பித்தார்...
இளவரசியை அழைத்து வருவது போல சாருவை பல்லக்கில் தூக்கி கொண்டு வந்தனர்.சிவப்பு வண்ண நிற சேலை உடுத்தி பார்ப்பதற்கு சாட்சாத் மகாலெஷ்மி போலவே இருந்தாள் சாரு.பல்லக்கில் இருந்து இறங்கியதும், சாருவை மணமேடைக்கு அழைத்துச் சென்றார் சாருவின் முறைமாமன் பசுபதி.
தூரத்தில் அவள் வருவதை பார்த்தவன்.சாரு அருகில் வந்ததும் பார்த்தும் பார்க்காதது போல அமர்ந்திருந்தான் சந்துரு.
சந்துரு, சாரு இருவரும் புரோகிதர் சொல்ல சொல்ல மந்திரம் சொல்ல ஆரம்பித்தனர்.அனைத்து சாஸ்திர சம்பிரதாய சடங்குகள் முடிந்ததும், தட்டில் வைத்திருந்த திருமாங்கல்யத்தையும், அட்சதை அரிசியையும் சாருவின் அத்தை சரளாவின் கையில் கொடுத்தார் புரோகிதர்.
"அனைவரிடமும் சென்று மாங்கல்யத்தை தொட்டு ஆசிர்வாதம் பெற்று அட்சதை அரிசியை கொடுத்து விட்டு சீக்கிரம் வாங்கோ"என்றார் புரோகிதர்.
புரோகிதர் மாங்கலயத்தை எடுத்து சந்துருவின் கையில் கொடுக்க போகும் பத்து நிமிடத்திற்கு முன்னர் காவல்துறை அதிகாரி சந்துருவை தேடி மண்டபத்திற்கு வந்தார்.அவரை பார்த்த சந்துருவும் உடனே மணமேடையை விட்டு கீழே இறங்கிச் சென்றான்.
"டேய் சந்துரு! முகூர்த்த நேரத்தில் எங்கடா சந்துரு எழுந்து போற?" என்று கேட்டார் ஜானகி அம்மா.
பதில் ஏதுவும் கூறாமல் வேகமாக இறங்கி சென்றான் சந்துரு.திடீரென போலீஸ் அதிகாரியை பார்த்த அனைவருக்கும் ஒன்றும் புரியாமல் ஒரே குழப்பத்திலும் அதிர்ச்சியிலும் இருந்தனர்.
மணமேடையின் கீழே அமர்ந்திருந்த சங்கர் வேகமாக எழுந்து மணமேடைக்கு வந்தான்.சாருவின் அருகே சென்ற சங்கர், நீ எதுவும் "கவலைப்படாதே சாரு! சந்துரு போனால் போகட்டும்.உன்னை கல்யாணம் செய்து கொள்ள நான் இருக்குறேன்..."என்றான்.
"புரோகிதரே! அந்த தாலியை எடுத்து என் கையில் கொடுங்கோ..." என்றான் சங்கர்.
திடீரென போலீஸ் வந்ததற்கு காரணம் என்ன? யார் அந்த சஞ்சுளா? சாருவின் கழுத்தில் மூன்று முடிச்சு போட்டது யார்? என்று இனி வரவிருக்கும் அத்தியாயங்களில் காண்போம்.
- தொடரும் -
* * * * * * * * * * * * * *
இத்தொடரைக் குறித்த தங்களது பொன்னான விமர்சனங்களை கீழே உள்ள நீல வண்ண எழுத்துகளை அழுத்தி அதில் பதிவு செய்யவும்.
🙏🙏🙏