Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


BK NOVEL கடவுளைச் சந்திக்கும் நாள் - Tamil Novel

Status
Not open for further replies.

RS DHAR

Member
Vannangal Writer
Messages
31
Reaction score
22
Points
8
ஒன்பதாவது அத்தியாயம்



எதிரி பிடியிலிருந்து எஸ்கேப்


குண்டு வெடித்த சப்தம் மிகத் தெளிவாகக் கேட்டது.


காவல்துறை கண்காணிப்பாளர் அவரது துணை அதிகாரி மற்றும் குழுவினர் சகிதம் உடனடியாக நிலைமையைப் பற்றி அறிய ஒரு போலீஸ் படை அங்கிருந்து நகர்ந்தது.


அவரும் அவரது உதவி ஆய்வாளரும் மற்ற இரண்டு போலீஸ் அதிகாரிகளுடன் தலைமை தபால் நிலையத்தின் மேற்குப் பகுதியில் உள்ள ஜீலம் ஆற்றங்கரை பாலத்தை அணுகினர்.



குண்டு வெடிப்பு நடந்த பகுதியில் அப்பட்டமான குழப்பம் நிலவியது. நடந்தது என்னவென்று சரிவரத் தெரியாமல் குழப்பம் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் நீடித்தது.



அதற்குள் அங்கு குவிந்த பாதுகாப்பு அமைச்சகத்தின் ஏராளமான துணை ராணுவப் படையினரும் சிறப்புப் படையினரும் அந்தப் பகுதியை காலி செய்யத் தொடங்கினர். இறந்தது எத்தனை பேர், வெடித்தது என்ன வகையான குண்டு என்பதை அறிய நள்ளிரவு கடந்துவிட்டது.


உடனே உதவிக்கு தீயணைப்புத் துறை, மருத்துவ உதவி, கூடுதல் காவல் துறை உதவி, வெடித்த குண்டின் தன்மை, அதனால் ஏற்பட்ட / ஏற்படப்போகும் விளைவுகள் பற்றி அலச வெடிகுண்டு நிபுணர்கள் என்று அலை, அலையாக கூட்டம் குண்டு வெடித்த இடத்திற்கு அருகில் கூட ஆரம்பித்தது. அருகில் வரத் துடித்த பத்திரிக்கையாளர்களின் கூட்டம் ஈவு இரக்கமின்றி கவனமாகக் கலைக்கப்பட்டது.


"என்ன நடந்தது என்று எங்களுக்கு முதலில் தெரியவேண்டும். இரண்டாவது, வெடித்த குண்டில் அணுசக்திக் கழிவுகள் ஏதேனும் இருக்குமானால் பெரும் விபரீதம் ஏற்படும். வாக்குவாதம் செய்யாமல் கலைந்துவிடுங்கள். இல்லாவிட்டால், தடியடி / கண்ணீர் புகைக் குண்டு போன்றவற்றை உபயோகிக்கத் தயங்கமாட்டோம்," போலீஸ் அதிகாரியின் குரலில் இருந்த உறுதி , செய்தி எலும்புத் துண்டுக்கு அலையும் பத்திரிக்கையாளர்களை அதிரடியாக விலகச் செய்தது.


=================================


அவினாஷ் கண் விழித்தபோது மிக அடர்த்தியான இருளை மட்டுமே உணர முடிந்தது. அவனுடைய வாய்க்குள் தசையை அசைக்க முடியாத அளவுக்கு இறுக்கமாக துணி பந்து அடைக்கப்பட்டிருந்தது.


தன்னுடய நல்ல நேரம் தன்னை முதலில் பிணைத்திருந்த தடிமனான கயிறுகளை யாரோ ஒரு புண்ணியவான் அவிழ்த்திருந்தா,ன் என்பதை அவினாஷ் உணர்ந்தான். .


தான் மயக்கமாக இருந்த நேரம் எவ்வளவு என்று அவினாஷால் தீர்மானமாகக் கணிக்க முடியவில்லை. .


மெதுவே வாயிலிருந்த துணிப் பந்தை மிகுந்த சிரமத்துடன் அகற்றிவிட்டு பெருமூச்சு விட்டான். வாயின் இருபுறமும் சொல்லொண்ணாத வலி இருந்தது. தசையைச் சிறிதளவு நகர்த்துவது கூட வலித்தது. தலையில் வலி இடித்துக்கொண்டிருந்தது. வாயைத் திறந்து அவனால் சிணுங்கக்கூட முடியவில்லை. மூச்சு விடுவதும் முதலில் சிரமமாகவே இருந்தது.


தலையில் இரண்டு இடங்களில் தொட்டுப் பார்த்தபோது கோவித்துக் கொண்டு வலித்தது. கருரத்தம் கட்டியிருக்க வேண்டும் என்று அனுமானித்தான். கழுத்திலும் வலி இருந்தது.


அவன் மிகவும் தாகத்துடன், பசியாக இருந்தான்.


உடம்பைப் பந்துபோல சுருக்கிக்கொண்டு வலியில் மெதுவே முனகினான். மெதுவாகக் கயிறு கட்டியிருந்த இடங்களை மசாஜ் செய்து கொடுத்தான். மெதுவாக, மிக மெதுவாக உணர்வு திரும்புவதை உணர்ந்தான். அவன் கண்களுக்கு வெகு அருகில் வைத்துக்கொண்டு பார்த்தபோதும் அவன் கைகளையே அவனால் பார்க்க முடியாத அளவு ஏகாந்தமான இருட்டு. சப்தமே இல்லை.


தான் படுத்திருப்பது வெறும் தரையில் என்பதை உணர்ந்து கொள்ள அவனுக்குச் சிறிது நேரம் ஆனது.


கைகளைத் தரையில் ஊன்றி எழ முயற்சித்தான். முற்றிலும் அவனுடைய தசைகள், எலும்புகள் ஒத்துழைக்க மறுத்தன.


வலியை உதாசீனம் செய்து கை கால்களைப் பலமாக உதறிக் கொண்டான். பலமுறை அவ்வாறு செய்த பின்னரே ரத்த ஓட்டத்தை உணர்ந்தான்.


தலை வலி குறையவில்லை.


மெதுவாக முன்னால் ஊர்ந்தான்.


சில நிமிடங்களில் தலையை ஒரு மரக்கதவின் மேல் இடித்துக் கொண்டான். மிக மெதுவாக அதை இருட்டில் தடவிப் பிடித்துக்கொண்டு எழுந்து நின்றான். கதவு தாழிடாமல் இருந்ததால் திறந்து கொண்டது.



வெறும் காலில் - ஷூ / சாக்ஸ் போன்றவற்றை கவனமாகக் கழற்றியிருந்தார்கள் - வெளியே வந்த போது வலது காலில் எதுவோ பட்டது. குனிந்து அதைத் தடவிப் பார்த்த போது, ரொட்டி பாக்கட் என்பது உணர்ந்தான்.


தரையில் அப்படியே அமர்ந்தவன், மீண்டும் தடவிப் பார்த்து குடிதண்ணீர் ஒரு பாட்டிலில் இருந்ததையும் உணர்ந்தான்.


=================================


.அந்த ஹாலில் யாருமே இல்லை என்பதை உணர்ந்தபோது ஆச்சரியமாக இருந்தது. மை போல சூழ்ந்திருந்த இருட்டில், காவலாளி யாருமில்லை என்பதை உறுதி செய்து கொள்ள இரண்டு மூன்று முறை "ஜெய்ஹிந்த்" என்று முடிந்த அளவு சத்தமாகக் கூவினான். எந்தவித ரெஸ்பான்ஸும் இல்லை என்பதை உணர்ந்தான்.


சற்றுமுன் சாப்பிட்டிருந்த ரொட்டி மற்றும் அருந்தியிருந்த தண்ணீர் ஆகிவற்றின் துணையுடன் சிறிதளவு நடக்க முடிந்தது. ஓரளவுக்கு மேல் நடந்ததும், ஹாலின் மேற்கூரை வழியே ஆங்காங்கே வான்வெளிச்சம் வருவதை உணர முடிந்தது. மிக அதிக அளவு இல்லை என்றாலும் சிறிதளவு பார்க்க அந்த வெளிச்சம் போதுமானதாக இருந்தது.


தன்னை எப்படி உயிருடன் விட்டுவிட்டு காலித் சென்றான் என்று எண்ணிய போது இருளில் அந்தச் சப்தம் கேட்டது.



= = = = சாகசம் நாளை தொடரும்
 

RS DHAR

Member
Vannangal Writer
Messages
31
Reaction score
22
Points
8
பத்தாம் அத்தியாயம்

உண்மை ரொம்பவே சுடும்


அந்த மங்கலான வெளிச்சத்தில் சிறிது நேரம் அவினாஷ் நிதானித்த போது, மெதுவே இருளிலிருந்து ஒரு வயதான ஆசாமி தலையில் குல்லாவுடன் தோன்றினான். அவன் அணிந்திருந்த கனமான செருப்பு தரையில் உராயும் சத்தமே அவினாஷ் தான் சற்று முன் கேட்டது என்பதை உணர்ந்தான்.


அந்த ஆசாமி அவினாஷை அருகில் வந்து பார்த்துவிட்டு, "நீதானே இந்தியாவிலிருந்து வந்திருக்கும் அவிஷான் ?" என்றான் உருது நனைந்த ஹிந்தியில்.


அவினாஷ் புன்னகையுடன் தலையாட்டிவிட்டு, "அவினாஷ், நண்பரே, அவினாஷ்" என்றான் ஹிந்தியில்.


அந்த ஆசாமி தொடர்ந்தான். "உன்னைக் கொல்லவேண்டுமென காலித் ஏற்பாடுகள் செய்த போது, திடீரென ஹெலிகாப்டரில் இருவர் வந்து அவனையும், அந்தச் சதிகாரக் கிழவன் அமானுல்லா கானையும் அழைத்துச் சென்று விட்டனர். மற்றவர்கள் இங்கேயிருந்து மிலிட்டரி டிரக்கில் சென்று விட்டனர். நான் இந்த இடத்தின் காவலாளி. உன்னுடைய பலூசிஸ்தான் ஏஜென்ட் சையத் அன்வரின் மாமா. அவனுக்கு என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. நீ இங்கு வருகிறாய் என்ற தகவலை என்னிடம் சொல்லிவிட்டு, அதே தகவலை காலித்துக்கும் சொல்லிவிட்டான். காசுக்காக எதையும் செய்யும் வேசி மகன்.....த்தூ..." என்று கீழே உமிழ்ந்தான்.


அந்த வலி, வேதனையிலும் அவினாஷால் புன்னகைக்க முடிந்தது.


"இல்லை பெரியவரே, அவனிடம் நான் தான் காலித்திடம் என்னுடைய வருகையைப் பற்றி சொல்லச் சொன்னேன். அதற்கு ஒரு காரணம் உள்ளது" என்றான் மிருதுவான குரலில்.


"நீ தான் சொல்லச் சொன்னாயா? உனக்கு என்ன பைத்தியமா? உன்னை இப்படி அடித்திருக்கிறார்கள். இதில் என்ன காரணமோ? நீங்களெல்லாம் பைத்தியக்காரர்கள்" என்றான் அந்த ஆசாமி.


"பெரியவரே, யோசியுங்கள், அவர்கள் என்னை அடிக்கும்போது, காலித்தின் உடையில் என்னுடைய கருவி ஒன்றைப் பொறுத்திவிட்டேன். அவன் எங்கே போகிறான், என்ன பேசுகிறான் என்பதெல்லாம் பதிவாகிவிடும். இரண்டாவது, நான் வரும் தகவலை முன்கூட்டியே காலித் வசம் சொல்லிவிட்டதால், காலித்துக்கு சையத் அன்வர் மீது நம்பிக்கை அதிகரிக்கும். இதனால், காலித்தின் நடவடிக்கைகளை நான் முன் கூட்டியே தெரிந்து கொள்வது சாத்தியமாகிறது. தற்போது இந்திய ராணுவத்திற்கு இது மிக அவசியமான ஒன்று" என்று புன்னகைத்தான்.

"அட பைத்தியமே, நீ அப்படியே அவன் உடையில் கருவியைப் பொருத்தியிருந்தாலும் திரும்ப உன் கைக்குக் கிடைத்தால் தானே உனக்கு நல்லது. இல்லையென்றால் என்ன புண்ணியம்?" என்றவனைப் பார்த்து கண் சிமிட்டிவிட்டு,


"அது இந்திய உளவுத்துறை இஸ்ரேலிய உளவுத்துறையான மொஸாட்டிடம் இருந்து பெற்றது. அதனால் அவன் நடவடிக்கைகளை தூரத்திலிருந்தே கண்காணிக்க முடியும். இரண்டாவது, அப்படியே ஒருவேளை, எங்கள் இந்திய அதிகாரிகளால் முடியவில்லை என்றால் காலித் அருகிலேயே என் ஒற்றன் ஒருவன் இருக்கிறான். அவன் பார்த்துக் கொள்வான்" என்றான்.


அந்த வயதான ஆசாமி தலையை இடம் வலமாக ஆட்டிவிட்டு,


"உங்கள் சங்கேத மொழி, ரகசியமான செயல் இதெல்லாம் என் போன்ற முதியவர்களுக்குப் புரியாது. விடு."


"சரியான தகவல் கிடைத்து வங்கதேசத்திற்குக் கிடைத்த சுதந்திரம் போலவே, உங்கள் நாட்டின் உதவியுடன் விரைவிலேயே பலூசிஸ்தான் சுதந்திரமடைந்தால் சரி. எங்களுக்கு பாகிஸ்தானின் அராஜக ஆட்சி அலுத்துவிட்டது" என்று சொல்லி பெருமூச்சு விட்டான்.

=====================================

பாராசூட்டில் இறங்கியவுடன், அவினாஷ் தனது சாட்டிலைட் தொலைபேசியை backpack இல் வைத்து அருகிலுள்ள புதரில் வீசியது நினைவுக்கு வந்தது.

"பெரியவரே, ஒரு உதவி. உங்கள் பெயர் எனக்கு நினைவில்லை" என்றான் அவினாஷ்.

"குலாம் காதர்" என்ற அந்த குல்லா ஆசாமி, "சொல்லு என்ன உதவி வேண்டும்?" என்றான்.

அவினாஷ் விவரம் சொன்னவுடன், "கவலைப்படாதே, இங்கு இதற்காகவே பழக்கப்பட்ட 3 நாய்கள் உள்ளன. ஒரு நிமிடம் இரு" என்று பின்பக்கம் சென்று, சிறிது நேரம் கழித்து அவன் திரும்ப வந்தபோது, மூன்று லாப்ரடார் ரிட்ரீவர் (Labrador Retriever) வகை நாய்கள் சங்கிலியில் திமிறிக்கொண்டு வந்தன.


"என்னுடைய லாப் களைப் பார். இவைகளுக்கு மோப்ப சக்தி மற்ற நாய்களை விட அதிகம்" என்று சொல்லி, மூன்றையும், தோராயமாக அவினாஷ் வந்து இறங்கிய திசையில் அவிழ்த்துவிட்டான்.


பதினைந்து நிமிடங்கள் சென்று அவற்றில் ஒரு நாய், வாயில் அவினாஷின் சாட்டிலைட் போன் சகிதம் திரும்ப வந்தது.


"என்னுடைய இர்பான்" என்று குதூகலித்தான் அந்த குலாம் காதர்.


=====================================


அவினாஷ், ப்ரியா சதுர்வேதியை அழைத்தபோது அந்த கால் செல்லவில்லை. பின் துஷ்யந்தை அழைத்தபோது, அவன் உடனே கிடைத்தான்.


"மேஜர், மேஜர், எங்கே போய்விட்டீர்கள்? என்னவெல்லாம் நடந்துவிட்டது தெரியுமா?" என்று பரபரப்புடன் ஆரம்பித்த அந்த அதிகம் அனுபவம் இல்லாத இளம் அதிகாரியின் பேச்சை இடைமறித்தான், அவினாஷ்.


"துஷ்யந்த், நான் சற்று அவசரத்தில் இருக்கிறேன். நடந்தவற்றைச் சுருக்கமாகச் சொல். பிறகு விவரமாகப் பேசலாம்" என்றான் அவினாஷ்.


சில நிமிடங்கள் துஷ்யந்த் பேசியதை இடைமறிக்காமல் கேட்டபோது தன் கண்களில் வழிந்த நீரை அவினாஷால் அடக்க முடியவில்லை.


தந்தை, தாய் என்று யாருமில்லாத அவனுக்கு எல்லாமுமாய் இருந்து அவனை உருவாக்கிய மிஸ்ராவுக்கு நடந்த கொடூரத்தைக் கேட்டபோது அவினாஷ் உடல் பதறியது.


ஒரு சில நிமிடங்கள் துஷ்யந்த் பேசி முடித்ததும், அவினாஷ் எதுவும் பேசாமல் இணைப்பைத் துண்டித்தான்.


=====================================


துஷ்யந்த்துடன் பேசியதில் கிடைத்த ஒரே நல்ல செய்தி ஸ்ரீநகரில் வெடித்த குண்டு பற்றியதுதான் என்று நினைத்துக் கொண்டான். அவினாஷ்.

அதிர்ஷ்டவசமாக, ஸ்ரீநகர் லால் சௌக் பகுதியில் வெடித்த வெடிகுண்டு எந்தவொரு ஆர்.டி.டி - R.D.D (கதிரியக்க சிதறல் சக்தி) யும் இல்லாமல், வழக்கமான ஒரு வெடிகுண்டாக இருந்ததையும், மற்றும் வெடிப்பின் பின் விளைவுகளை, ராணுவத்தின் சிறப்புப் படை, மற்றும் வெடிகுண்டு விற்பன்னர்கள் சகிதம் அருகிலிருந்த உதவியாளர்களும், போலீசாரும் எதிர்பார்த்ததைவிட வேகமாக அகற்றிவிட்டதும், பாராட்டப்பட வேண்டிய செயல்தான் . இருந்தும், அந்தச் சதிகாரச் செயலால் 6 பேர் இறந்ததைத் தடுக்க யாராலும் முடியவில்லை என்பதே சோகம்.


=====================================


இந்திய விமானப்படை அனுப்பிய சிறப்பு ஹெலிகாப்டரில், பயணம் செய்த அவினாஷ், பதிலளிக்கப்படாத பல கேள்விகள் மனதை சுற்றி வந்ததால் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தான்.


ஒன்று மட்டும் நிச்சயம் ; ஸ்ரீநகரில் வெடித்த குண்டுக்கும், தனக்கு மிக நெருக்கமான ஜெனரல் மிஸ்ராவின் மரணத்திற்கும் காரணமான காலித் மிக மோசமான விளைவுகளை சந்திக்கப் போவது நிச்சயம் என்ற உறுதியில் இருந்தான் அவினாஷ்.



= = சாகசம் நாளை தொடரும்
 

RS DHAR

Member
Vannangal Writer
Messages
31
Reaction score
22
Points
8
பதினொன்றாவது அத்தியாயம்


பின்னோக்கி ஒரு பயணம்


ஹெலிகாப்டரின் இரைச்சலையும் மீறி சில விஷயங்களை அவினாஷால் சிந்திக்க முடிந்தது:


1. அவினாஷ் காலித் அணியின் கட்டுப்பாட்டில் இருந்தபோது, அந்த அமானுல்லா கான் மற்றும் காலித்தின் கண்களில் உள்ள மகிழ்ச்சியைக் கண்டறிய முடிந்தது. காலித் தனது இரட்டையான கமால் மரணத்திற்குப் பழிவாங்க வெறியுடன் இருப்பதால் காலித் அவனை முடித்துவிடுவான் என்றே அவினாஷ் நினைத்தான். அந்தப் பயணத்தின் அபாயத் தன்மை குறித்து, மிஸ்ரா அவினாஷிடம் பேசுவது பயனற்றது என்று விட்டுவிட்டார் என்பது அவனுக்கும் தெரிந்தது. ஆனால், அவினாஷ் வருகைக்குப் பிறகு, திடீரென காலித்தும், அமானுல்லா கானும் ஹெலிகாப்டரில் புறப்பட்டுச் சென்றனர் என்பதை பின்னர் அந்தக் கட்டிடக் காவலாளி குலாம் தெரிவித்தபோது, அவினாஷுக்கு அந்தத் தகவல் வியப்பாகவே இருந்தது.


2. தன்னையும், ஜெனரல் மிஸ்ராவையும் கொலை செய்ய காலித் நிச்சயம் முயற்சி செய்வான் என்பதை அவினாஷ் அறிந்திருந்தாலு, மிஸ்ராவின் கொலையை காலித் ஏன் துரிதப்படுத்தினான்? கமாலின் மரணத்திற்கு ஜெனரல் மிஸ்ரா மற்றும் அவினாஷ் இருவரும் காரணம் என்பதால், அவர்கள் இருவருக்கும் காலித்தின் கணக்கு முடிக்கும் பட்டியலில் முன்னுரிமை இருப்பதை அவினாஷ் அறிந்திருந்தான். ஆனாலும், ஜெனரல் மிஸ்ராவை முடிக்க ஏன் இவ்வளவு அவசரம்?


3. ஸ்ரீநகரின் குண்டுவெடிப்பு பற்றிய தகவல் எதிர்பார்க்கப்பட்டது என்றாலும், பலூசிஸ்தான் உளவாளி சையத் தெரிவித்த தகவலின்படி "அழுக்கு குண்டு" க்கு பதிலாக ஒரு வழக்கமான குண்டு வெடித்தது ஏன்? வழக்கமான வெடிகுண்டு வெடிப்பு பற்றி அவினாஷ் நிம்மதியடைந்திருந்தாலும், சையத்தின் தகவல்களின் உண்மைத்தன்மை குறித்து அவன் குழப்பமடைந்திருந்தான். இத்தனை ஆண்டுகளில், சையத் பகிரும் தகவல்கள் மிகவும் துல்லியமாக இருந்ததே தவிர, அதில் எந்த ஒரு மாற்றமும் இருந்ததில்லை. இப்போது ஏன் என்பது முக்கியமான கேள்வி. .



ஹெலிகாப்டரின் பைலட் இன்னும் சிறிது நேரத்தில் டெல்லியை அடைந்துவிடுவோம் என்று காதில் இருந்த ஹெட்போன் மூலம் தெளிவான தகவல் தந்தது அவினாஷின் தூக்கத்தைக் கலைக்கவில்லை.

=====================================


அவினாஷை காலித் கைப்பற்றியதற்கும், அவன் சிறையிலிருந்து தப்பிப்பதற்கும் இடையில் இடைப்பட்ட நேரத்தில் என்ன நடந்தது என்பதை அறிய நாம் சிறிது பின்னோக்கிப் பயணிக்க வேண்டும்.


=====================================

அன்று காலையில் இஸ்லாமாபாத்தில், பாகிஸ்தான் பிரதமரின் பிரதான பணியிடமான, பிரதம மந்திரி அலுவலகம் சுறுசுறுப்பாக இருந்தது, பிரதமர் தனது அறையில் அமர்ந்திருந்தார்.

பிரதமர், அரசு நிர்வாகத்தின் தயவு பெருகிய முறையில், காலித் அடக்கமுடியாத தீய சக்தியாக மாறிவிட்டதை உணர்ந்து மிகுந்த எரிச்சலில் கொண்டிருந்தார்.


நிதானமாக, தன் எதிரே அமர்ந்திருந்த சுலைமானைப் பார்த்து புன்னகைத்தார். “சுலைமான், இது மிகவும் கொடூரமானது, இந்தியப் புலனாய்வு அதிகாரி மேஜர் அவினாஷை இப்படிப் பொறி வைத்துப் பிடிக்க அனுமதி யார் கொடுத்தது? அவினாஷ் நமது எல்லைக்குள் அத்துமீறி, அனுமதியில்லாமல் நுழைந்தது மிகப் பெரிய தவறுதான். இது தண்டிக்கப்படவேண்டிய குற்றம் என்பதும் உண்மைதான். நீங்கள் எனக்கு தகவல் கொடுத்திருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால் நான் பகிரங்கமாக, மேஜர் அவினாஷைக் கைது செய்து, சர்வதேச ஊடகங்களுக்கு முன்னால் அவருடைய அத்துமீறலை அம்பலப்படுத்தி, இந்தியப் பிரதமரையும் அவமானப்படுத்தியிருப்பேன். இப்போது, இந்த முட்டாள்தனத்தின் காரணமாக, சர்வதேச ஊடகங்கள் மற்றும் பிற நாடுகளின் பார்வையில் நம் பெயர் மிகவும் மோசமாகிவிடும். மிக முக்கியமாக, ஐ.நா…. ” வார்த்தையை முடிக்காமல் அவர் ஒரு மடங்கு தண்ணீரை எடுத்துக் குடித்துவிட்டு, மீண்டும் சிரித்தார்.


“சுலைமான், என் வசைபாடலுக்கு மன்னிக்கவும். நீங்கள் மற்றும் காலித் இருவரும் சரியாக யோசிக்காமல், இந்த அலுவலகத்திற்கு ஒரு மரியாதைக்குக் கூட எந்தவிதத் தகவலும் கொடுக்காமல் அடிமுட்டாள்தனமாக நடந்து கொண்டிருக்கிறீர்கள் ” என்று அவர் தனது மேசையில் தட்டினார்,


“ இப்போது காலித்தைத் தொலைபேசியில் அழையுங்கள். நான் அந்த முட்டாளையும் வைத்துக்கொண்டே உங்களிடம் பேசுகிறேன் ” என்றார்.


கோபத்தில் அவர் முகம் சிவந்திருப்பதைப் பார்த்து சுலைமானுக்குச் சற்று பயமாகவே இருந்தது.


சுலைமான் தனது நினைவிலிருந்து காலித் எண்ணை டயல் செய்து தொலைபேசியை பிரதமரிடம் கொடுத்தார்.


காலித் அழைப்பில் வந்தபோது, "காலித், பாகிஸ்தானின் பிரதமர் பேசுகிறேன். நீயும், சுலைமானும் செய்த முட்டாள்த்தனத்துக்குப் பிராயச்சித்தமாக உடனே, உன் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்திய மேஜர் அவினாஷை விடுவிக்க வேண்டும். நீ, உடனே, இங்கு, இஸ்லாமாபாத் வரவேண்டும். வந்து என்னைச் சந்திக்க வேண்டும். நான் உன்னிடம் பேச விரும்புகிறேன்" என்றார்.


"ஜனாப்...." என்று ஆரம்பித்த காலித்தை மேலும் பேசவிடாமல் தடுத்த பிரதமர், "காலித் , மேஜர் அவினாஷ் தண்டிக்கப்பட வேண்டியவர் என்றாலும், அதற்கான நேரம் இதுவல்ல. பாகிஸ்தான் இப்போதிருக்கும் நிலைமையில், இந்தியாவுடன் நேரடியாகவோ, திரைமறைவிலோ மோதுவதற்கு தற்போதைய நிலைமை உகந்ததல்ல என்பதால் மேஜர் அவினாஷை எந்தவித பாதிப்பும் இல்லாமல் விடுவிக்க வேண்டும்" என்றார்.


இடையே குறுக்கிடாமல் காலித் அவரின் பேச்சைக் கேட்டுவிட்டு, தன்னையும், அமானுல்லாகானையும் இஸ்லாமாபாத்துக்கு அழைத்து வர பாகிஸ்தான் விமானப்படை ஹெலிகாப்டரின் உதவி வேண்டும் என்று கோரினான்.



அந்த பயங்கரவாதியின் கோரிக்கையை பிரதமர் தயக்கத்துடன் ஒப்புக் கொண்டார். அவர் நாட்டின் நிர்வாகத்தின் தலைவராக இருந்தபோதிலும், ஒருபுறம் மதவாதி முல்லாக்களின் கட்டுப்பாட்டிலும், மறுபுறம் சக்திவாய்ந்த இராணுவத்திலும் கட்டுப்பாட்டிலும் தான் இருப்பதை உணர்ந்திருந்தார்.



மேற்கத்திய நாட்டுப் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்ற பிரதமர், மதத்தின் மீது வெறித்தனமான ஆர்வம் கொண்டவர் அல்ல. அவர் தனது நாட்டில், இந்தியாவைப் போல, இஸ்லாமியப் பெண்களுக்கு முழு சுதந்திரம், கல்வி மற்றும் சமத்துவம் ஆகியவற்றை தர விரும்பினார். பெண்களைப் பற்றிய தனது பார்வையில் அவர் ஒருபோதும் அந்த நாட்டு மதத் தலைவர்களுடன் உடன்படவில்லை;


உலக அரங்கில் இந்திய பிரதமருக்கு இருக்கும் அளவற்ற செல்வாக்கைப் பற்றி முழுமையாக அறிந்த பாகிஸ்தான் பிரதமர் வெளிப்படையான கலந்துரையாடலுக்காக தயாராக இருந்தார், அவருடைய முன்னோடிகளைப் போலல்லாமல், காஷ்மீரை பாகிஸ்தானுடன் இணைப்பதை அவர் கடுமையாக எதிர்த்தார், அதனால், பாகிஸ்தானுக்கு ஏற்படப்போகும் விளைவுகளை அவர் நன்கறிந்திருந்தார்.


அவர் பெருமூச்சு விட்டார். காலித் ஒரு பயங்கரவாதி என்பதிலும், அவனிடம் எந்த தர்க்கவாதமும் எடுபடாது என்பதையும், அவனுடைய மோசமான செயல்களுக்கு முட்டுக்கட்டை போடாவிடில், பாகிஸ்தான் மிகப் பெரிய விலையை அதற்குத் தரவேண்டியிருக்கும் என்பதை பாகிஸ்தான் பிரதமர் அறிந்திருந்தார்.


காலித் மற்றும் அமானுல்லா கானுக்கு விசுவாசமாக இருக்கும் முட்டாள் அமைச்சர்கள் சிலரால், தனது ஆட்சி சிக்கலில் இருப்பதையும் அவர் அறிந்திருந்தார். பிரதமர் தனது உயர்மட்டக் குழுவினரை அழைத்து அவர்களுக்கு சில தெளிவான உத்தரவுகளை வழங்கினார்.


= = சாகசம் நாளை தொடரும்
 

RS DHAR

Member
Vannangal Writer
Messages
31
Reaction score
22
Points
8
பன்னிரெண்டாவது அத்தியாயம்

பண்டிட் பரமஹம்ஸ துரோணாச்சார்யா


==========================================
= = மீண்டும் நிகழ்காலத்துக்குத் திரும்பலாம் = =
==========================================​

பண்டிட் பரமஹம்ஸ துரோணாச்சார்யா சலித்துக்கொண்டார்.


அவர் முன் இருந்த சிறிய மேடையில், நீல நிற உடையில் இருந்த சீனப் பேச்சாளர், நிச்சயமாக அறிவார்ந்தவர் என்பதை அவர் ஏற்றுக்கொள்ள வேண்டியிருந்தது, ஆனால் அவரது ஆங்கிலம் மிகவும் பரிதாபமாக இருந்தது.


இரண்டாவது, அவர் பேசிய வார்த்தைகளை முணுமுணுத்துக் கொண்டிருந்தார், பேச்சாளர் தெளிவாக பேசாத காரணத்தால், கூட்டத்தில் இருந்த பலருக்கு சலிப்பு ஏற்பட்டது. கூட்டத்தில் அமைதி கலைந்து ஆளாளுக்குப் பேச ஆரம்பித்திருந்தார்கள்.


பேசத் தேர்ந்தெடுத்த தலைப்பு என்னவோ மிகவும் நன்றாக இருந்தது:


"பண்டைய இந்தியாவின் பெருமை மிகைப்படுத்தப்பட்டதா?"


இல்லை, நிச்சயமாக இல்லை என்று பண்டிட் நினைத்துக் கொண்டார். உண்மையைச் சொல்லவேண்டுமென்றால், அது மிகவும் குறைவாகவே மதிப்பிடப்பட்டது.



கனடா நாட்டின், டொராண்டோவை தளமாகக் கொண்ட பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியராக இருந்த அந்தப் பிரபலமான பேச்சாளர், பேச வேண்டியதைத் தெளிவாகவே பேசினாலும், மிகவும் மெதுவான குரலில், சற்றுத் தெளிவற்ற ஆங்கிலத்தில் பேசுவது போல பண்டிட்டிற்குப் பட்டது. .



“உலோகவியலில் (Metallurgy) பண்டைய இந்தியாவின் சாதனை பற்றி எத்தனை பேருக்குத் தெரியும்?


சீனாவின் பெருஞ்சுவரைப் பற்றி மக்களுக்குத் தெரியும், ஆனால் தென்னிந்தியாவின் பெரிய கோயில்களைப் பற்றி எத்தனை பேருக்குத் தெரியும்?


ஆவணப்படுவதில் கவனம் செலுத்தாமல், பண்டைய இந்தியர்கள் வைத்திருந்த மந்தமான வரலாற்று பதிவுகள் இதற்கு முக்கியக் காரணம், தற்கால இந்தியர்கள் தங்களுடைய பண்டைய பாரம்பரியத்தை குறைத்து மதிப்பிடுவதற்கு, இரண்டு, மூன்று காரணங்களைச் சொல்லலாம் ;


இந்த அபரிமிதமான வளமுள்ள நாட்டை ஆங்கிலேயர்கள் தொடர்ந்து 200-க்கும் மேற்பட்ட ஆண்டுகள் ஆட்சி செய்து, தேவையான அளவுக்கு, இந்த மகத்தான நாட்டின் செல்வங்களைக் கொள்ளை அடித்ததோடு நில்லாமல், அடிப்படை பள்ளிக்கல்வியில் ஆரம்பித்து, அனைத்திலும் இந்த நாட்டின் சரித்திர முக்கியத்துவம், மகத்தான பாரம்பரியம் போன்ற பல விஷயங்களை மூடிமறைத்து விட்டார்கள்.


மாறாக, மேற்கத்திய கருத்துக்களையும் இலட்சியங்களையும் உயர்ந்ததாகக் கருதும் போக்கை வளர்த்துவிட்டார்கள். முன்பு ஆட்சி செய்த அரசாங்கங்கள் கூட இந்தப் போக்கை சீர் செய்யாது அலட்சியமாக இருந்துவிட்டன என்றே நான் கூறுவேன்.


தற்போதைய அரசாங்கம், இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைத்து கிட்டத்தட்ட 70+ ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவின் தொலைந்து போன மாண்பைப் பற்றிய விழுப்புணர்வைக் மீண்டும் கொண்டுவர முயற்சித்தாலும் அது முழுமூச்சாக நடைபெறாமல் அரைகுறையாக மட்டுமே நடைபெறுகிறது.


இதற்குக் காரணம், இந்தியாவின் அரசியலமைப்பு. என்னுடைய நோக்கம் அரசியல் பேசுவது அல்ல என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.. ”


பேச்சாளர் ஒரு சிறிய இடைவெளிவிட, பண்டிட் சட்ரென்று மேடையேறி, பேச்சாளர் அருகே சென்று தாழ்ந்த குரலில் பேசினார்.


பேசிவிட்டு, இறங்கி, ஏற்கனவே அமர்ந்திருந்த நாற்காலியில் உட்காராமல் வாயிலை நோக்கி நடக்க முற்படுகையில், முழுவதும் களங்கமில்லாத வெள்ளை நிற சீருடையில் ஒரு உயரமான மனிதன், மெதுவாக பண்டிதரை நெருங்கி அவர் காதில் ஏதோ கிசுகிசுத்தான்.


பண்டிட் வாசலை நோக்கி நடப்பதை நிறுத்தாமல் நடந்து சென்றார்.


நுழைவாயிலுக்கு அருகில் அவினாஷ் தூக்கமில்லாத, கலங்கிய தோற்றத்துடன் நிற்பதைக் கண்டார், பயணத்திலிருந்து நேரடியாக வந்ததனால் அவனது கண்கள் ரத்தச் சிவப்பாக இருந்தன.


பண்டிதரைப் பார்த்ததும், அவினாஷ் நிமிர்ந்து நின்று "ஜெய் ஹிந்த், குருஜி." என்றான். குரல் கூட சோர்வாக இருந்ததை பண்டிட் உணர்ந்தார்.


பண்டிட் சிரித்துக்கொண்டே அவனை உள்ளே அழைத்துச் சென்றார். “அவினாஷ், நீ சோர்வாக இருக்கிறாய், இன்னும் 20 - 30 நிமிடங்களுக்கு இங்கே காத்திருந்தால், உன்னை என் இடத்திற்கு அழைத்துச் செல்வேன். அதன்பின்னர் நாம் பலப்பல விஷயங்களை விவாதிக்க முடியும். ” என்றார்.


அவினாஷ் அவரைப் பார்த்து மரியாதையுடன் தலையசைத்தான், வேறு எதுவும் பேசவில்லை.


==============================


பண்டிதரின் அலுவலகத்திற்கு செல்லும் வழியில், அவர் அவினாஷிடம் திரும்பி, “காலித்தின் கஸ்டடியிலிருந்து நீ எவ்வாறு தப்பிக்க முடிந்தது? “ என்றார் புன்னகையுடன்.



“குருஜி, உங்கள் அலுவலகத்தை அடைந்தவுடன் எல்லாவற்றையும் விளக்குகிறேன். ஜெனரல் மிஸ்ராவின் மரணம் குறித்த செய்தியால் நான் மிகவும் வருத்தத்தில் உள்ளேன் ” என்றான் கம்மிய குரலில்.


பண்டிதர் வெறுமனே தலையை ஆட்டினார். அவினாஷ் மற்றும் மிஸ்ரா ஆகியோருக்கு இடையில், நட்பின் ஆழம் அவருக்கு நன்றாகவே தெரியும்.



= - நாளை சாகசம் தொடரும் = =
 
Status
Not open for further replies.
Top Bottom