Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


காதலொரு கலைடாஸ்கோப் திருப்பம் - Story

Status
Not open for further replies.

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
709
Reaction score
1,111
Points
93
காதலொரு கலைடாஸ்கோப் திருப்பம்

எழுத்தாளர்: ஷிவானி செல்வம்


அத்தியாயம் 4


“என்ன சோஷியல் ட்ரிங்கரா? ஏன் சைன்ஸ் ட்ரிங்கர்னு சொல்லேன். ஓசில சைடிஷ் திங்கறவனெல்லாம் குடிகாரன்னு‌ சொல்லி எங்க இனத்த அசிங்கப்படுத்தாத உதி”

“அப்போ அவன் குடிக்கலையா நேத்து?”

விக்கி அவளின் ஆர்வத்தை அவதானித்துக்கொண்டே எரிச்சல்பட்டான்.

“காலைல எந்திரிச்சவுடனே வேலையப் பத்தி பேசனுமா? கொஞ்சம் குளிச்சி சாப்ட்டு ஆற அமர ஆஃபிஸ்ல போய் பேசக்கூடாதா? டேய் மட்டபந்து மண்டயா! யாரோடதுடா இந்த வேட்டி? உனக்கு போட்டுவிட வேற ட்ரெஸ்ஸே கெடைக்கலையா? ஆன்ட்டி உங்க நைட்டி ஏதாவது இருந்தா குடுங்க. இதுக்கு அதுவே பெட்டர்” எனவும், அவர் சிரித்துக்கொண்டே உத்ராவைப் பார்த்தார்.

தன் சிரிப்பை மறைத்தவளோ, “அவன் ட்ரெஸ் அந்த பால்கனில காயுது. அத எடுத்து மொத அவன் கையில குடுங்க” என்று சொல்லிவிட்டு அலுவலத்திற்கு கிளம்பத் துவங்கினாள்.

காரில் செல்லும் போது, “இவ்ளோ நாள் நீ நல்லா தான இருந்த விக்கி? இப்போ ஏன் திடீருன்னு குடிச்ச?” என்று கனிவாகக் கேட்டாள்.

அவன், “உன் ஸ்கூட்டி மெக்கானிக் ஷாப்ல தான கெடக்குது? இன்னைக்கு போய் வாங்கிரு.” என்றான் அவள் கேள்வியை தவிர்த்து சாலையிலேயே கவனமாக.

உத்ரா மெதுவாக, “அந்தப்பொண்ணு அனன்யா தான் இதுக்கு காரணமா?” என்றாள்.

அவன் அதற்கு விடை சொல்லவில்லை. உத்ராவும் சலித்துப்போய் மேற்கொண்டு பேசவில்லை.

ஆனால், தங்கள் சத்யம் டிடெக்டிவ் ஏஜென்சி வந்ததும், “சொல்லு நேத்து என்ன நடந்தது?” என்று விக்கியிடம் தீவிர விசாரணையில் இறங்கினாள்.

“நீ என்னை இப்படி குற்றவாளி மாதிரி பாக்கறது சுத்தமா சரியில்ல உதி. நேத்து நைட் நான் மகேஷுக்கு கம்பெனி குடுக்கத் தான் பாருக்கே போனேன். அவன் கம்பல் பண்ணினதால லைட்டா குடிக்கவும் செஞ்சேன். அப்பறம் என்னாச்சின்னு எனக்கே தெரியல. ஆங்! சொல்ல மறந்துட்டேன் பாரு. நேத்து ஈவ்னிங் நான் உதய்கிருஷ்ணாவ சுகுனா ஸ்டோர்ஸ் சிக்னல்கிட்ட வச்சுப் பாத்தேன். பைக்ல அவன் பின்னாடி உக்கார்ந்திருந்த பொண்ணு அவன ரொம்ப ஒட்டி ஒரசிட்டு இருந்தா.”

“நீ சொல்றது உண்மையா விக்கி? இல்ல அந்த அனன்யா மேல உனக்கிருக்க தனிப்பட்ட அக்கறைல இப்படி சொல்றியா?”

“ச்சீ! ச்சீ! என்னை என்ன இப்படி நினைச்சிட்ட உதி? அவ ஒரு ராட்சசி. அவ மேலப்போய் எனக்கு அக்கறைனு சொல்ற பாத்தியா? இப்படி பேசுறதுக்கு நீ என்ன உன் செருப்பக் கழட்டி அடிச்சிருக்கலாம். இந்த போன்ல இருக்கு உனக்கு தேவையான ஆதாரமெல்லாம்.” என்று புகைப்படம் ஒன்றை காண்பித்தான்.

அதைப் பார்த்தவளோ ஏமாற்றமாக உணர்ந்தாள்.

மேலும், “உதி, உனக்கு ஒரு பழமொழி இருக்கு தெரியுமா? உன் நண்பனை பற்றி சொல், உன்னைப் பற்றி சொல்கிறேனு. அவன் ஃப்ரெண்ட் பிரகாஷ் ஒரு போதைபொருள் ஆசாமி. அப்படியிருக்க நம்ம இவன மட்டும் எப்படி நம்ப முடியும் சொல்லு?” என்று வெடிகுண்டொன்றை பற்ற வைத்தான்.

உத்ராவின் மனமோ அவன் கூறியது எதையும் ஏற்க மறுத்தது.

“ஒருவேள இந்தப்பொண்ணு அவன் தங்கச்சி முறைல இருக்க யாராவதா இருந்தா?”

“ஆமா நீ ஏன் அந்த உதய்கிருஷ்ணா மேல இவ்ளோ ஆர்வம் காட்டுற?” திருப்பிக் கேட்டான் விக்கி.

அவள் சுதாரித்துக்கொண்டாள்.

“என்ன பேசுறோம்னு புரிஞ்சு தான் பேசுறியா விக்கி? இது ஒரு அசைன்மெண்ட். அவன் ஒரு சப்ஜெக்ட். அவ்ளோ தான். அவன் எடத்துல யார் இருந்தாலும் அவங்க கேரக்டர் பத்தி தெரிஞ்சிக்க நான் இப்படித்தான் கேட்டிருப்பேன். நீ உன் தப்ப மறைக்க என்ன பதம் பாக்காத!” என்று எச்சரித்தாள் மூச்சு வாங்க.

அவளின் பதற்றத்தை இனம் கண்டவனோ, “ஹே கூல்! கூல்! நீ கேட்டதுக்கும் நான் கேட்டதுக்கும் சரியாப் போச்சு. ஓகேவா?” என்று சமரசம் பேசினான்.

அதன் பின் தான் இயல்பானாள் உத்ரா. ஆனால், விக்கியால் அவ்வாறு இருக்க முடியவில்லை. அவளின் கண்கள் கணினியில் இல்லாமல் வேறொன்றை வெறிப்பதைக் கண்டு அவளை சீண்ட விரும்பினான்.

“அவன் இப்படி அடிக்கடி தன் மச்சானுக்காக பாருக்கு வர்றதெல்லாம் வழக்கம் தானாம் உதி. பார்ல வொர்க் பண்றவரு சொன்னாரு. நேத்து அவன் மச்சான் மேட்ரிமோனில பாத்ததா சொல்லி நாம போன் பண்ணத பத்தி சொல்றதயும் கேட்டேன்.” என்றதும்,

“அதுக்கு உதய்கிருஷ்ணா என்ன சொன்னான்?” என்று முகத்தை முன்னுக்கு நகர்த்தினாள்.

“அதுக்கு அவன் எதுவாயிருந்தாலும் உங்க இஷ்டம்னு சொல்லிட்டான். நீ சொன்னது கரெக்ட் தான். அவன் அவன் அக்காவோட தலையாட்டி பொம்மையா இருக்கான்.” என்றதும் உத்ராவின் முகம் வாடியதை அவன் கண்கள் குறித்துக்கொண்டன.

அதை கிரகித்தவள் தன் முகத்தை மாற்ற சிரமப்பட்டாள். பின், அவன் கவனத்தை திசை திருப்ப நேற்று அவன் மதுபானவிடுதியில் சுயநினைவின்றி கிடந்தது பற்றியும், தனது வீட்டிற்கு அவள் அழைத்து வந்தது பற்றியும் ஒன்றுவிடாமல் சொன்னாள். அதைக்கேட்டவனோ சகஜமாக தோள்களைக் குலுக்கினான்.

உத்ரா இவனுக்கு வெக்கம், சூடு, சுரணை என்று ஏதாவது இருக்கிறதா? இல்லையா? என்று குமுறிக்கொண்டிருந்தபோது எதிர்பாராத நிகழ்வொன்று நடந்தது. தன் கறுஞ்சிவப்பு நிற கோடுகள் ஓடிய பொன்னிற‌ ஆர்கன்ஸா துப்பட்டாவை சரி செய்தபடியே உள்ளே வந்து கொண்டிருந்தாள் அனன்யா.

உத்ரா, விக்கி இருவரின் முகத்திலும் அதிர்ச்சி அப்பட்டமாகத் தெரிய, உத்ரா தான் முதலில்‌ சுதாரித்தவளாய், "வாங்க அனன்யா, உட்காருங்க" என்றாள்.

அவள் பவ்யமாக அமரவும், உத்ராவின் அருகில் முறுக்கிக்கொண்டே அமர்ந்தான் விக்கி. உத்ரா தான் மேசைக்கு கீழே அவனது கையைப் பிடித்து சமாதானம் செய்ய வேண்டியிருந்தது. அனன்யாவுக்கும் முள் மேல் உட்கார்ந்திருக்கும் நிலை தான்.

உத்ரா சுற்றிவளைக்காமல் கேட்டாள், “சொல்லுங்க? என்ன விசயமா நீங்க இங்க வந்திருக்கீங்க?” என்று.

முதலில் தயங்கியவள்‌ பின்னர், “ஒன்னுமில்ல. எனக்குப் பாத்திருக்க மாப்பிளையப் பத்தி நீங்க என் பெரியப்பாக்கிட்ட நல்ல விதமா சொல்லனும். அதான்…” என்று இழுத்தாள்.

உத்ரா விக்கியைப் பார்க்க அவன் முகம் நிச்சலனமாக இருந்தது.

“ஏன் நீங்க அவர லவ் பண்றீங்களா?”

இதைக் கேட்கும்போது அவள்புறம் இதயத்துடிப்பு எகிறியது.

“இல்ல. பட் எனக்கு அவர பிடிச்சிருக்கு.” என்றதும், உத்ராவால் தன் கோபத்தைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை.

“பிடிச்சிருக்குன்றதுக்காக ஒருத்தன் கெட்டவனா இருந்தாலும் அவன் கூட வாழலாம்னு முடிவு பண்ணிட்டீங்களா மிஸ் அனன்யா?”

அவள் நிதானமாக பதிலளித்தாள்.

“என்ன பொறுத்த வர இந்த ஒலகத்துல யாரும் நல்லவனும் கெடையாது; கெட்டவனும் கெடையாது. இப்போ நீங்க நல்லவன்னு சர்ட்டிஃபிகேட் குடுக்குறவன் நாளைக்கே கெட்டவனா மாறிட்டா என்ன பண்ணுவீங்க?”

“யெஸ், அதுக்கு காரணம் நீங்களா கூட இருக்கலாம்.” சீறினான் விக்கி.

உத்ரா, “விக்கி” என்று அதட்டியவள், “ஒரு விபத்துக்கும், தற்கொலைக்கும் ரொம்ப வித்தியாசம் இருக்கு மிஸ் அனன்யா. அதோட மிஸ்டர் உதய்கிருஷ்ணாவுக்கும், உங்களுக்கும் பத்து வயசு வித்தியாசமிருக்கு.” என்று நினைவு படுத்தினாள்.

அனன்யா அசரவில்லை.

“இந்த மாதிரி ஆட்கள் தான் பொண்டாட்டிய தன் கொழந்த மாதிரி பாத்துப்பாங்க.” என்றபோது அவளின் தொண்டை அடைத்தது.

ஒன்றரை வருடங்களுக்கு முன் இறந்துபோன அவளின் தாயின் ஞாபகம் வந்ததோ என்னவோ?

விக்கி மேசையை குத்தியவன் உடனே அங்கிருந்து எழுந்து சென்று விட்டான்.

அனன்யா அவளிடம் மெதுவாக, “உங்கள யாராவது ஃபோர்ஸ் பண்ணி இப்படியெல்லாம் பேசுறீங்களா மிஸ் அனன்யா?” என்றாள்.

கண்கள் குளமாக நிமிர்ந்து பார்த்தவள், “இல்லங்க. அப்படியெல்லாம் இல்ல. நான் நல்லா யோசிச்சு தான்‌ இந்த முடிவுக்கு வந்திருக்கேன்.” என்றுவிட்டு உத்ராவின் பதிலை எதிர்பார்த்தாள்.

ஆனால், உத்ரா கறாராய் இருந்தாள்.

“சாரி மிஸ் அனன்யா. என்னால உங்களுக்கு ஹெல்ப் பண்ண முடியாது. என் தொழில் நம்பிக்கை சம்பந்தப்பட்டது. முக்கியமா லைஃப் சம்பந்தப்பட்டது. எனக்கு என் தொழிலுக்கு துரோகம் பண்ண முடியாது. சாரி, நாங்க குடுக்கப்போற ஸ்டேட்மெண்ட் உங்களுக்கு சாதகமாவும் வரலாம்; பாதகமாவும் வரலாம்” என்று உறுதியாய் பேசினாள்.

அவளின் உறுதியை குலைக்க முடியாது என்றுணர்ந்த அனன்யாவின் முகத்திலோ எந்தவொரு கவலையும் தென்படவில்லை. மாறாக அமைதியாயிருந்தது. உத்ரா‌ அவளை சந்தேகமாய் பார்த்துக் கொண்டிருந்தபோதே விடைபெற்றாள்.

அவள் சென்றபின் அறை நிசப்தமாய் இருக்க, விக்கி தன் வீட்டிற்கு சென்றிருப்பான் என்று கணக்கு போட்ட உத்ராவும் தனது மற்ற வேலைகளை கவனித்தாள்.

அப்போது அவளது அலுவலக எண்ணிற்கு அழைப்பு ஒன்று வர, எடுத்துப் பேசினாள்.

“ஹலோ! நான் பிடூ போலீஸ் ஸ்டேசன் எஸ்.ஐ ஜீவானந்தம் பேசுறேம்மா. நாங்க நீங்க கொடுத்த இன்ஃபர்மேசன்ல அந்த போதைபொருள் சப்ளையர் பெட்டிக்கடை முருகேசன ஆதாரத்தோட அரெஸ்ட் பண்ணி வச்சிருக்கோம்மா. உங்க ஏஜென்சியோட இந்த உதவிக்கு ரொம்ப நன்றிம்மா.” என்றார்.

அதை ஏற்றுக் கொண்டவளும், “யூ ஆர் வெல்கம் சார்” என்றுவிட்டு, புன்னகையோடு அலைபேசியைப் பார்த்தாள்.

பின், இந்த நல்ல விஷயத்தை விக்கியிடம் சொல்லியே ஆக வேண்டும் என்ற உந்துதலில் அவனுக்கு அழைப்பு விடுத்தாள். ஆனால், ‘நாட் ரீச்சபிள்’ என்ற பதிவுக்குரலே பதிலாக வந்தது.

அன்றிரவும் உத்ரா தன் வீட்டிலிருந்து அவன் எண்ணிற்கு அழைப்பு விடுக்க, அவன் அழைப்பை ஏற்றானே தவிர பேசவில்லை.

“டேய் எங்கடா இருக்க? நீ இன்னைக்கும் வீட்டுக்குப் போகலையா? அதிசயமா உங்கம்மா கால் பண்ணி நீ எங்க இருக்கன்னு கேக்குறாங்க. நான் அவங்களுக்கு என்ன சொல்ல?” என்று கடுப்பில் காய்ந்தாள்.

“ஆமா எனக்கும் கால் பண்ணாங்க. நான் எடுக்கல.” என்றான் உளறலாக.

“அப்போ நீ இன்னைக்கும் குடிச்சிருக்கியா விக்கி?” உச்சஸ்தாயில் கத்தினாள் உத்ரா.

அவனோ அக்கேள்வியை புறந்தள்ளிவிட்டு மீண்டும் உளறினான்.

“அந்த உதய்கிருஷ்ணாகிட்ட சொல்லிடனும் உதி. எத்தன பொண்ண வேணா வச்சிக்கோ. ஆனா, என் அனியையும் நல்லா வச்சிக்கோன்னு.”

“பைத்தியக்காரா! பைத்தியக்காரா! அந்த அனன்யா ஒரு ராட்சசிடா” என்று காலையில் அவன் சொன்னதை அவனுக்கே நினைவூட்டினாள் மறவாமல்.

அவனோ அலட்டிக் கொள்ளாமல், “ச்சீ! ச்சீ! என்ன பேசுற நீ? ராட்சசியா? என் அனி ஒரு ரத்தினம். நான் தான் அவள மிஸ் பண்ணிட்டேன்.” என்றான்.

“இப்ப உன்ன எங்க பாக்க முடியும் விக்கி?”

“ஏன் கேக்கற?”

“ம்? உன்ன செருப்பால அடிக்கிறதுக்கு தான்டா. காலைல நான் அவ்ளோ சொல்லியும் நீ திருந்தறதா இல்லைல? அனி சனினு அவ மேல ஏன்டா இவ்ளோ பைத்தியமா இருக்க? அவளப் பாத்துக்க அவ பெரியப்பா இருக்காரு. நீ உன் வாழ்க்கைய மொதல்ல பாருடா” என்று ஆத்திரமாகக் கத்தினாள்.

“உனக்கென்ன நீ யாரையாவது லவ் பண்ணியிருந்தா தான? அட்லீஸ்ட் உங்கிட்ட யாராச்சும் ப்ரொபோஸாவது பண்ணிருக்காங்களா உதி? உனக்கு உன் குடும்பத்துல இருக்கவங்கள அடிமைப்படுத்தி வச்சிக்கனும். தியாகத்தலைவினு பட்டம் சுமக்கனும். அதுலயே உன் ஈகோ சாடிஸ்ஃபைடு ஆகிரும். பட், எனக்கு அப்படியில்ல. மனசுன்னு ஒன்னு இருக்கு. அதுல லவ் ஃபெயிலியர்னு ஒன்னு கெடந்து டார்ச்சர் பண்ணுது. யூ நோ வாட்? இவ்வளவு சுயநலத்தோட இருக்கற உன்னால யாரையுமே லவ் பண்ண முடியாது. ஏன் உன்னையுமே யாராலயும் லவ் பண்ண முடியாது. ஐ சேலெஞ்ச் இட்!” என்று அவளை வார்த்தைகளால் ஒரேடியாய் வெட்டி வீழ்த்தினான்.

உத்ரா சளைக்கவில்லை.

“உன்ன நீயே அழிச்சிக்க காரணமா இருக்கற இந்தக்காதல் ஒன்னும் எனக்கு தேவையில்லடா” என்று தானும் ஆங்காரமாய் கத்தி உடனே இணைப்பை துண்டித்தாள்.

பால்கனியில் நின்றிருந்தவளின் கால்கள் தானாக நடுங்க, மிக பதட்டமாக உணர்ந்தாள். விக்கி குடித்துவிட்டு தன்னிலை இழந்தே இவ்வாறு பேசியிருந்தாலும் உத்ராவால் அவன் பேசியதை தாங்க முடியவில்லை.

ஏனெனில் எதைச்சொல்லி மறுத்தாலும் அவள் மீது சுமத்தப்பட்ட மிகப்பெரிய பழியல்லவா அது. தங்களை தள்ளியிருந்து பார்ப்பவன் கேட்பதையே தாங்க முடியவில்லையே. நாளைக்கு இதே கேள்வியை தன் வீட்டிலிருப்பவர்கள் கேட்டால் எனும் கேள்வி தான் அவளை வாட்டிவதைத்துக் கொண்டிருந்தது. மெதுவாக படுக்கையறைக்கு வந்து உட்கார்ந்தாள்.

எப்போதும் போல் அவளின் அம்மாவும், அவருக்கு இடப்புறம் கவிலயாவும் என ஒரு மெத்தையில் படுத்துக் கிடந்தார்கள். பெரிய மெத்தை தான் அது. கடந்த நான்கு வருடங்களாக அவளின் அம்மாவின் அருகில்கூட படுக்கத் தோன்றியதில்லை உத்ராவுக்கு. இன்றென்னவோ விக்கியின் வார்த்தைகளால் உருக்குலைந்து போன அவளின் மனம் தனக்கொரு ஆறுதலை வேண்டியது. அதற்காய் தன் தாயிடம் சென்று சரணடைந்தாள். அவரின் வலப்பக்கம் சென்று அவரை அணைத்தபடி படுத்தாள். அவரின் கையும் அவளை ஆதுரமாக தழுவிக் கொண்டது.


கலைடாஸ்கோப் திரும்பும்...


 

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
709
Reaction score
1,111
Points
93
அத்தியாயம் 3 மற்றும் 4 பற்றிய உங்களது கருத்துக்களை கீழே உள்ள டைரியில் எழுதவும் ப்ரெண்ட்ஸ். அடிக்கடி திறந்து பார்த்து மகிழ்வேன் நான்.

கருத்துத்திரி,
டைரி
 

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
709
Reaction score
1,111
Points
93
சென்ற அத்தியாயங்களுக்கு தங்களது பிடித்தம் மற்றும் கருத்துக்களை தெரிவித்த அனைவருக்கும் நன்றி ப்ரெண்ட்ஸ். நாவலின் ஐந்தாவது அத்தியாயம் இதோ உங்களுக்காக.
 

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
709
Reaction score
1,111
Points
93
காதலொரு கலைடாஸ்கோப் திருப்பம்

எழுதியவர்: ஷிவானி செல்வம்

அத்தியாயம் 5


உத்ரா மறுநாள் காலை‌ அலுவலகத்திற்கு தயாரானவள் யார் மீதும் எரிந்து விழாமல்‌ சாந்தமாக வெளியேற, வீட்டிலிருந்த அனைவரும் அவளை வியப்பாகப் பார்த்தனர்.

எப்போதும் தன் அன்னையை ‘ட்ராமா குயின்’ என்றுவிட்டு தான் இருபத்து நான்கு மணி நேரமும் நாடகத்தில் வரும் வில்லி போலவே அனைவரையும் எதை வைத்தாவது கடித்துக் குதறிக்கொண்டு திரிபவள் இன்று தன் இயல்பை தொலைத்திருந்தது அனைவருக்குமே குழப்பமாக இருந்தது.

அவள் தங்கள் டிடெக்டிவ் ஏஜென்சியை அடைந்து அதன் கதவுகளைத் திறந்தபோது உள்ளே மேசை மேல் கிடந்தவற்றையெல்லாம் இறைத்து தான் அதன்மேல், கால் மேல் கால் போட்டபடி தன் ஆப்பிள் ஐபோனை நோண்டிக் கொண்டிருந்தான் விக்கி. அருகில் பீட்சா ஹட் பெட்டியில் இரண்டு துண்டு பீட்சாக்களும், காலியான பெப்சி டின் ஒன்றும் கிடந்தன.

வந்தவள் அவனிடம் எதுவும் பேசவில்லை. சாவித்தாங்கியில் தன் ஸ்கூட்டி சாவியை மாட்டிவிட்டு நேரே தனது நாற்காலியில் சென்று அமர்ந்தாள். அவள் தன்னை காது வலிக்கும் அளவிற்கு திட்டுவாள், பத்ரகாளியாக மாறுவாள் என்று எதிர்பார்த்தவனுக்கு ஆச்சரியத்தை அளித்தது இந்த மௌனம்.

மெதுவாக, “உதி ஆர் யூ ஓகே டுடே?” என்றான்.

நிமிர்ந்து பார்த்தவள் மீண்டும் மௌனம் சாதித்தாள். பொறுமையை இழந்தான் விக்கி.

“ஸ்பீக் அவுட் உதி. யாராவது உன்ன ஏதாவது சொன்னாங்களா?” எனவும், அவளின் தலை மேலும் கீழும் ஆடியது.

“ஷிட்! யாரு என்ன சொன்னா?”

எழுந்து நாற்காலியை அவள் பக்கம் நகர்த்திப் போட்டு உட்கார்ந்தவன் மீண்டும் அழுத்திக்கேட்டான். “சொல்லு உன்ன யாரு என்ன சொன்னாங்க?”

“நான் என் குடும்பத்துல இருக்கவங்கள அடிமைப்படுத்தி வச்சிருக்கேனாம். தியாகத்தலைவி பட்டம் வாங்க ட்ரை பண்றேனாம்.”

சொல்லிவிட்டு அவனை கடைக்கண்ணில் பார்த்தாள். அவனோ தீவிர சிந்தனையில் இறங்கியிருந்தான்.

“நிச்சயம் இப்படியெல்லாம் உங்க அம்மா சொல்லியிருக்க வாய்ப்பில்ல. ஏன்னா அவங்க ஒரு மதர் தெரஸா. உன் தங்கச்சி வாயாடினாலும் இப்படி பேசுற அளவுக்கு அறிவு கெடையாது. அப்பறம் உன் தம்பி, அவன் அதிகபட்ச கோபமே ஒழுங்கா புக்ஸ தூக்கிட்டுப்போய் படிக்கறது தான். அப்போ வேற யாரு உதி உங்கிட்ட இப்படியெல்லாம் சொன்னது?” என்றவன் தீவிரமாகக் கேட்க, உத்ரா பல்லைக் கடித்தாள்.

இருப்பினும் தன் கோபத்தை வெளிக்காட்டாமல் சோகமாகப் பேசினாள். “என்ன மாதிரி ஒரு பொண்ண யாரும் லவ் பண்ண மாட்டாங்களாம் விக்கி.”

சொல்லிவிட்டு அவன் கண்களைப் பார்த்தாள்.‌ அது அதிகமாக விரிந்தது.

“ஏன்? ஏன் உன்ன லவ் பண்ண மாட்டாங்களாம்? சும்மா சொல்லக்கூடாது சூப்பர் ஃபிகர் நீ. என்னைலாம் லவ் பண்ண சொன்னா நாள் கணக்கா பண்ணிட்டு இருப்பேன். இந்த மாதிரி யாரோ ஒரு அர லூசு பேசுனதுக்கா நீ இப்படி அப்செட்டா இருக்க? ஆமா உன்ன இப்படி சொன்ன அந்த தண்டச்சோறு யாரு உதி?” எனவும்,

அதற்கு மேலும் தன்னை கட்டுப்படுத்த முடியாதவள், “நீ தான்டா அந்த தண்டச்சோறு” என்று ஆத்திரமாகக் கத்தினாள்.

அவன் இல்லையென்று மறுத்து ஒற்றைக் காலில் நின்றான்.

“ச்சீ! ச்சீ! நான் போய் இப்படியெல்லாம் பேசுவனா? அதுவும் உன்ன? நீ கனவு ஏதாவது‌ கண்டியா?”

“இதெல்லாம் உன் மனசுல உள்ள அழுக்கு தான்டா. உன்ன நான் கேள்வி கேட்டத தாங்கிக்க முடியாம, பதிலுக்கு இப்படி என் மேல வீண் பழி சுமத்தினடா நீ”

அங்கு கிடந்த கோப்பையெல்லாம் எடுத்து அவனை நன்றாக மொத்தினாள்.

அதனை தடுத்துக் கொண்டிருந்தவனோ இடையிடையே, “வன்முற எதுக்கும் தீர்வு இல்ல உதி. நாம கொஞ்சம் உக்கார்ந்து பேசலாம்” என்றான் கெஞ்சலாக.

மூச்சு வாங்கியவள் ஒப்புக்கொள்ளவில்லை.

“அதெல்லாம் காலம் கடந்து போச்சி. உங்கப்பாவும் நானும் எவ்வளவு புனிதமா இந்த எடத்த பாதுகாத்து வச்சிருந்தோம்டா. அத இப்படி நாறடிச்சிட்டியேடா.” என்று இரண்டு அடி சேர்த்து போட்டாள்.

வலி பொறுக்காமல் அவள் கைகளைப் பிடித்தான் விக்கி. அந்நேரம் பார்த்தா அவனது தாய் வேணி உள்ளே நுழைய வேண்டும்.

வேணி இவ்வாறு தங்கள் நிறுவனங்களை திடீர்சோதனையிட வருவது ஒன்றும் புதிதன்று. ஆனால், இன்றோ காரணம் எதுவும் சொல்லாமல் முழுதாக இரண்டு நாட்கள் வீட்டிற்கு டிமிக்கி கொடுத்த தன்‌‌ மகனைத் தேடித்தான் அங்கு வந்திருந்தார்.

உள்ளே நுழைந்தவர் கேட்ட முதல் கேள்வியே, “இதென்ன கூத்து?” என்பது தான்.

கோபத்தில் சிவந்திருந்த முகத்தை மருதாணி அப்பிய நரைமுடிகளாலும், ப்ராடா கூலிங்கிளாஸாலும் முழுதாக மறைக்க முடியவில்லை. வாசலை மறைத்தவாறு தொளதொளவென்று வெள்ளை நிற சட்டையும், கறுப்புநிற பலாசோ பேண்ட்டும் அணிந்து நின்றவரை கண்டு வெலவெலத்துப் போனாள் உத்ரா.

விக்கி அவளுடன் வேலை புரிய வந்த முதல்நாளே, அவனிடம் எப்போதும் ஒரு இடைவெளி கடைபிடிக்க வேண்டும். நீ இங்கு ஒரு ஊழியர் என்பதை எப்போதும் மறந்து விடக்கூடாது. உனது எல்லை அறிந்து நடந்து கொள் என்று அறிவுறுத்திச்‌ சென்றவர் தானே அவர்.

இப்போது இருவரையும் இந்நிலையில் சேர்த்து வைத்துப் பார்த்தால் அவரின் மனம் என்னென்ன கோட்டை கட்டுமோ என்று பயமாக இருந்தது உத்ராவுக்கு. மெதுவாக விக்கியின் பிடியிலிருந்த தனது கரங்களை விடுவித்தாள்.

“வாங்க மேடம்” என்று அவருக்கான நாற்காலியையும் தயார் செய்தாள்.​
 

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
709
Reaction score
1,111
Points
93
அவரோ தான் கேட்ட கேள்விக்கான விடையை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்.

இருவரும் மௌனமாக நிற்க, “இங்க என்ன நடக்குதுனு கேட்டேன்?” என்று குரலின் உஷ்ணத்தை கூட்டினார்.

“என்ன நடக்கனுமோ அது நடக்குது” இயல்பாகச் சொன்னான் மகன்.

“ராத்திரியுமா?” குதர்க்கமாய் கேட்டார் தாய்.

உத்ரா அவ்வார்த்தைகளில் துடிதுடித்துப்போனாள்.

“மேடம் நீங்க இங்க என்ன நடந்ததுனு தெரியாம…” என்றவள் ஆரம்பிக்க,

“ஷட்டப் உத்ரா! நான் தான் என் ரெண்டு கண்ணால பார்க்கறனே என்ன நடக்குதுனு. இதுக்கு மேல நீ பூசி மொழுக ஒன்னுமில்ல.” என்றார் காட்டமாக.

அவர் இடத்தில் வேறு யாராவதாக இருந்திருந்தால் இந்நேரம் நடந்திருப்பதே வேறு. ஆனால், அவர் தன் முன்னாள் முதலாளி வாசனின் துணைவியாராகப் போனதால் பல்லைக் கடித்துக்கொண்டு நின்றாள் உத்ரா.

“மாம் யூ கான்ட் டாக் லைக் திஸ் டு உதி.”

“ஏன் உன்ன அந்தளவுக்கு மயக்கி வச்சிருக்காளா இவ? உங்க அப்பாவ மயக்கின மாதிரி”

“ஜஸ்ட் கெட் அவுட் ஆப் திஸ் ப்ளேஸ் மாம்!” என்று அந்தக் கட்டிடம் அதிரக் கத்தினான் மகன்.

அதற்கு மேல் அங்கு நிற்க அவரும் கோபத்தில் அவனுக்கு சளைத்தவர் அல்லவே! வெளியேறிவிட்டார். ஆனால், காரில் வீட்டிற்கு செல்லும் அந்த நேரத்திலும் அவர்களின் நெருக்கத்தை பற்றியே யோசித்துக் கொண்டிருந்தார்.

எங்கே அவரின் கணவர் தன் கடைசி ஆசையாகச் சொன்ன, “உத்ரா தான் நம்ம வீட்டு மருமக” என்ற வாக்கியங்கள் பலித்துவிடுமோ என்று அஞ்சினார் அவர்.

வேணி சென்று முப்பது நிமிடங்கள் கடந்த பின்னும் விக்கியை முறைத்தபடியே இருந்தாள் உத்ரா. இதற்கெல்லாம் காரணம் அவன் தானே!

அவன் சமாதானம் செய்ய அருகில் வர, ”உனக்கு இப்போ சந்தோசமா?” என்றாள் வெறுப்பாக.

“இல்ல. பட், உன்ன சந்தோசப்படுத்துற மாதிரி ஒரு குட்நியூஸ் சொல்ல முடியும் என்னால” என்று பீடிகைப்போட்டான்.

“என்ன?” என்றாள் விரைப்பாக.

“அன்னைக்கு உதய்கிருஷ்ணா கூட பைக்ல வந்தப் பொண்ணு வேற யாரும் இல்லயாம். அவன் அக்கா பொண்ணு மேகாவாம்.” எனவும், மத்தாப்பு கொளுத்தின அவள் கண்கள்.

அவள் எவ்வளவு முயன்றும் அந்த மகிழ்ச்சியை அவள் கண்கள் அவனுக்கு காட்டிக் கொடுத்து விட்டன.

“பாரு உன் அவசரப்புத்தியால எவ்ளோ தப்பா நெனச்சிட்டோம்னு?”

“அடேங்கப்பா! நம்ம கல்ச்சர்ல அக்காப்பொண்ண தாய்மாமன் கல்யாணம் பண்ணிக்கற மொற இல்லையா என்ன?”

தன்னை முறைத்தவளை மேலும் கடுப்பேற்றினான்.

“ஊ சொல்றியா மாமா? ஊஊ சொல்றியா மாமா? மாமன் ஒருநா மல்லியப்பூ கொடுத்தான். அடியாத்தி அது எதுக்கு? நான் யோசன பண்ணி பாத்தேனம்மா. அவன் வாங்கிக்கச் சொல்லி தந்தானம்மா”

அவன் செய்த ரகளையில் உத்ரா மீண்டும் கோப்புகளைத் தூக்கினாள்.

“ஹே! இரு இரு. நேத்து உதய்கிருஷ்ணாவ ஃபாலோவ் பண்ணி போன நம்ம அண்டர்கவர் டிடெக்டிவ்ஸ்கிட்ட இருந்து ஒரு முக்கியமான இன்ஃபர்மேசன் வந்திருக்கு உதி. உதய்கிருஷ்ணா நாளைக்கு யார்கூட வால்பாறை ட்ரிப் போறான் தெரியுமா? நம்ம ப்ரீவியஸ் அசைன்மெண்ட் பிரகாஷ் கூட. ஏற்கனவே அவன் கேஸ வேற க்ளோஸ் பண்ண வேண்டியிருக்கு. அந்த உதய்கிருஷ்ணா கண்ல படாம மட்டும் தப்பிச்சிட்டோம்னா ஜெயிச்சிட்டோம் மாறா தான்.” எனவும், சற்று யோசித்த உத்ராவும் தற்போதைக்கு தங்களுக்கு முக்கிய வேலைகள் எதுவும் இல்லாததால் சரியென்றாள்.

விக்கியோ அர்த்தப் புன்னகையொன்றை வீசினான். அதை உணராதவள் சரியாக அவன் விரித்த வலையில் விழத் தயாரானாள்.

மறுநாள் காலை தன்னை பார்த்து பார்த்து அலங்கரித்துக் கொண்டிருந்த உத்ராவை அவளது அன்னையும் தங்கையும் ஆச்சரியமாய் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

வரவேற்பறையில் காத்திருந்த விக்கி, ”உதி டைம் ஆகிடுச்சி. சீக்கிரம் வா” என்று அவளை துரிதப்படுத்தினான்.

அவள் வீட்டிற்கு வந்தவன் இதுவரை இவ்வளவு நேரம் காத்திருந்ததே இல்லை. அதற்கான அவசியத்தை அவள் உண்டாக்கியதும் இல்லை. ஆனால், இன்றோ அவனை இப்படிப்போட்டு சோதிக்கவும் பொறுமையிழந்து அவளது அறைக்கே எழுந்து சென்றான். சரியாக அவனை‌ இடித்து நின்றாள் உத்ரா, முதுகில் ஒரு பேக்பேக்குடன்.

பிஸ்தா பச்சையில் பெப்லம் டாப்பும், வெளீர் நீல நிற ஜீன்ஸ்பேண்ட்டும் அணிந்து, வழக்கமான போனிடைலுடன் வழக்கமில்லாத ஐலைனர், லிப்பாம் தீட்டி வந்தவளைப் பார்த்து அசந்து போனவன், “கொஞ்சம் தள்ளிக்கோங்க மேடம். இங்க உத்ராங்கிற பேர்ல ஒரு உயிரினம் வாழுது. அத தேடிக்கிட்டிருக்கேன்.” என்று அவளை வெட்கப்பட வைத்தான்.

“போடா லூசு!” என்று திட்டியபடியே வந்தவளைப் பார்த்ததும் பானுமதியின் முகம் பிரகாசமானது.

அவளுக்குள்ளான இந்த மாற்றங்கள் அவளுக்கு நல்லது நடக்கச்செய்ய வேண்டும் என்று மனதார இறையை வேண்டிக்கொண்டார்.

விக்கி அவளையே வைத்தக்கண் வாங்காமல் பார்த்துக்கொண்டு நிற்க, அவன் தலையில் தட்டி, “இவ்வளவு நேரம் வா வான்னு அனத்திட்டு இப்ப பேயடிச்ச மாதிரி நிக்கிற?” என்று சொன்னபடியே வெளியேறி தன் வெள்ளை நிற சப்பாத்துகளை மாட்டினாள்.

விக்கியும், “போயிட்டு வர்றோம் ஆன்ட்டி, பை லயா, பை கவின், பை அம்மு” என்று அனைவரிடமும் விடைபெற்றான்.

வாசலில் தன் பட்டுமுடிக்கற்றைகள் முன்னால் சரிய வேகவேகமாக செயல்பட்டவளிடமிருந்து தன் கண்களை விலக்க முடியவில்லை அவனால். நிமிர்ந்தவள் அனைவருக்கும் பத்திரம் சொல்லிவிட்டு, அமிகாவை தூக்கி இரண்டு கன்னங்களையும் கடித்துவிட்டு விடைபெற்றாள்.

காரில் செல்லும் போது அவளிடமிருந்து வந்த புதிய நறுமணம் வேறு விக்கியின் நாசியை சீண்டிய வண்ணம் இருந்தது. எப்போதும் அவளை ஏதாவது சொல்லி வம்பிழுத்துக்கொண்டே வருபவன் இன்று எதுவும் பேசத்தோன்றாமல் ஏதோ ஒரு ஏகாந்தத்திற்குள் மாட்டியது போல் அமைதியாய் வந்தான். அவளும் கற்பனைக் கடலுக்குள் சிக்கியவளாய் இருந்தாள்.

அக்கணம் அந்த வால்பாறை பயணம் அவர்கள் வாழ்வில் ஒரு பெரிய திருப்புமுனையாக அமையப்போகிறது என்பதை இருவருமே உணர்ந்திருக்கவில்லை.



கலைடாஸ்கோப் திரும்பும்…
 

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
709
Reaction score
1,111
Points
93
ஐந்தாவது அத்தியாயம் பற்றிய உங்களது கருத்துக்களை தெரிவிப்பதற்கு முன்னால் நேற்றைய காதலர் தினத்திற்கு இன்று நான் வழங்கவிருக்கும் ரோஜாவை பெற்றுக்கொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்.

கருத்துத்திரி,
🌹
 

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
709
Reaction score
1,111
Points
93
சென்ற அத்தியாயத்திற்கு தங்கள் பிடித்தம் மற்றும் கருத்துகளை தெரிவித்த அனைவருக்கும் நன்றி ப்ரெண்ட்ஸ்🙂
 

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
709
Reaction score
1,111
Points
93
காதலொரு கலைடாஸ்கோப் திருப்பம்

எழுதியவர்: ஷிவானி செல்வம்

அத்தியாயம் 6



காலை எட்டு மணிக்கு புறப்பட்ட உதியும் விக்கியும் சரியாக மதியம் இரண்டு மணிக்கு வால்பாறையின் ஆரம்பத்தை அடைந்தார்கள். அதேநேரம் தானும் தனது நண்பர்களுடன் வால்பாறையை தொட்டிருந்தான் உதய்கிருஷ்ணா.

கொண்டைஊசி வளைவுகளில் எல்லாம் காணாததை கண்டவன் போல் காரை நிறுத்தி விக்கி தாமி எடுக்க, உத்ரா கேலி செய்தாள்.

“ஸ்டோரேஜ் ஃபுல்லாகி போன் வெடிக்கப் போகுதுடா” என்றாள்.

“ஸ்டோரேஜ் ஃபுல்லானா பலூன் தான் வெடிக்கும். போன் இல்ல சைண்டிஸ்ட் மேடம்.” ஒழுங்கு காட்டினான் அவன்.

புறப்பட்டதிலிருந்து தன் திருவாயை மூடிக்கொண்டு வந்தவன் வால்பாறையை நெருங்கும் சமயத்தில் தன் சேட்டையை ஆரம்பித்து விட்டானே என்று தலையில் கைவைத்தவள் இனி பயணம் முடியும் வரை அவனிடம் பேசக்கூடாது என்று மனதுள் சபதம் ஏற்றிருக்க, விநாயகர் அதனை தகர்த்தார். அவர்களின் வழியை அடைத்தபடி யானைகள் இரண்டு வர, உடனே பிரேக்கடித்தான் விக்கி.

மேலும், அவன் காரை பின்னால் நகர்த்த முயல, “விக்கி, பின்னாடியும் யானைங்க இருக்கு” என்று எச்சரித்தாள்.

கார் முன்னும் பின்னும் நகர முடியாமல் அப்படியே நிற்க, யானைகள் அவர்களை சூழ்ந்து கொண்டன. உத்ரா பீதியில் அவற்றை பார்த்தபடியிருக்க, விக்கி அவளை கட்டிப்பிடித்துக் கொண்டான். விலக முயன்றவளை அவனின் புலம்பல் தடுத்து நிறுத்தியது.

“என் பெர்த்டேவே எனக்கு டெத்டேவா ஆயிரும் போலருக்கே உதி?”

“உண்மையாவே இன்னைக்கு உனக்கு பெர்த்டேவா விக்கி? மெனி மோர் ஹாப்பி ரிட்டர்ன்ஸ் ஆஃப் த டே டா.”

“விஷ் பண்ண நேரம் பாத்தப் பாரு.”

அவனின் சூடான மூச்சுக்காற்று அவளின் காதில் பட்டுத் தெறித்தது.

நீள்தந்த யானைகள் அவர்களின் வண்டியைக் கடந்து தங்கள் பின்புறத்தை ஆட்டி ஆட்டி நடக்க, ஆசுவாசம் ஏற்பட்டது உத்ராவுக்கு.

“விக்கி யானைங்கப் போயிருச்சி.”

“தெரியும்.” என்றவன் தன்னைவிட்டு நகராமல் இருக்க, வலுக்கட்டாயமாய் அவனை பிரித்துத் தள்ளிவிட்டாள்.

அவன் தியானநிலை கலைந்தவன் போல் பேசினான்.

“இந்த பெர்ஃப்யூம் ஸ்மெல் நல்லாருக்கு உதி. நீ ஏன் உன் பெர்ஃப்யூம் பாட்டில என் பெர்த்டே கிஃப்ட்டா தரக்கூடாது?”

“அப்படின்னா அதுக்கு பேரு கிஃப்ட் இல்ல, வழிப்பறி. ஒழச்சு சம்பாரிடா.”

“நக்கலு”

“எப்பா நம்ம போற வேகத்தப் பாத்தா இன்னைக்கு ராத்திரி‌ தான்‌ ரூம் போய் சேருவோம்‌ போலருக்கு? கொஞ்சம் ட்ரைவிங்ல கான்சன்ரேட் பண்ணேன்”

“உத்தரவு மேடம்”

அதன்பின் சாளரம் வழியே வெளிப்புறத்தை ரசிக்கலானாள் உத்ரா. பசுமையான மலைகளுக்கு நடுவில் வெள்ளிக்கம்பியாய் தெரிந்த சின்னகனல் அருவி வெகுவாக கவர்ந்தது அவர்களை. அந்த குளுமையின் சிலிர்ப்புடனே விரைவில் தாங்கள் தங்க வேண்டிய விடுதியின் முன் வாகனத்தை நிறுத்தினான் விக்கி.

அச்சமயம் அவ்வீட்டைக் கடந்து சென்ற பெண்களையே வைத்தக்கண் வாங்காமல் பார்த்தவன், “கேரளாப் பொண்ணுங்க கேரளாப் பொண்ணுங்க தாய்யா” என்றான் ரசனையுடன்.

அதை உறுதிபடுத்துவது போல் அந்தப் பெண்கள் மலையாளத்தில் பேசிச்சிரிக்க, அவன் பேச்சின் உள்ளர்த்தம் புரிந்து அவன் தலையில் குட்டிவைத்தாள் உத்ரா.

வால்பாறையின் புகழ் பெற்ற ஒரு கண்ணாடி வீட்டில் தான் அவன் தங்களுக்கான அறையை முன்பதிவு செய்திருந்தான். அந்த வீட்டுச் சுவற்றின் வழியே ஒருபுறம் தேயிலைதோட்டத்தை பார்க்கலாம் என்றால், மறுபுறம் நகரத்தை காணலாம். அந்த அறையை ஒட்டிய பிரம்மாண்ட பால்கனியில் நின்று சூரிய உதயம், மறைவு என்று கூட நன்றாகப் பார்க்கலாம்.

அனைத்தையும் அதிசயித்த உத்ரா விக்கியின் ரசனையினை மனதிற்குள் மெச்சினாள். இருப்பினும், அவனிடம் சண்டைக்கு பாய்ந்தாள்.

“ஏன்டா இப்படி காசக் கரியாக்கற? சின்ன ஹோட்டல் ரூமா பிடிச்சா பத்தாதா?” என்று புலம்பினாள்.

அவளை சொடுக்கிட்டு அழைத்தவன், “ஹலோ! நான் இங்க வெக்கேஷன் எஞ்சாய் பண்ண வந்திருக்கேன். நீங்க தான் வேலைப் பாக்க வந்திருக்கீங்க. ஃபர்ஸ்ட் முதலாளிய எப்படி டிஸ்டர்ப் பண்ணாம இருக்கறதுனு கத்துக்கங்க டிடெக்டிவ் மேடம்.” என்று மெத்தையில் விழுந்தான்.

“அப்போ எனக்கு நீ தனி ரூம் போட்ருக்க வேண்டியது தானடா?”

“இப்பவும் ஒன்னும் கெட்டுப் போகல. நீ இங்க தங்க வேண்டிய அவசியமும் இல்ல. உன் கையில தான் காசு இருக்குல்ல? வேற ஹோட்டல் போய் உனக்கு பிடிச்ச ரூமா போட்டுத் தங்கிக்கோ”

“கடைசி நேரத்துல என்ன வெளிய போகச்சொன்னா எங்கடா போவேன்?”

பணம் செலவழிப்பதற்கு தயங்கி வேறு வழியின்றி அவனுடனே தங்கினாள். அவனுக்கா அவளைப் பற்றி தெரியாது.

மூன்று மணி நேர ஓய்விற்குப் பின் தங்கள் ரகசிய உளவாளிகளின் மூலம் பிரகாஷின் இருப்பிடத்தை தெரிந்துகொண்டு அவனை தொலைவிலிருந்தே கண்காணிக்கத் துவங்கினாள் உத்ரா. அவர்கள் தொழிலில் ஒரே நபரை மூன்று நான்கு பேர் வெவ்வேறு இடங்களில் நின்று கண்காணிப்பது ஒன்றும் புதிதல்ல. ஆனால், விக்கி மட்டும் இதிலிருந்து இன்று விலகி இயற்கையை ரசித்தான்.

அதிரப்பள்ளி நீர் வீழ்ச்சி அருகே ஆச்சரியமாய் அவன் மதியம் வழிந்த கேரளப் பெண்கள் நின்றிருந்தனர். அவர்கள் உதய்கிருஷ்ணாவின் நண்பர் குழாமை கடக்க, அவனின் நண்பர்களும் சொல்லி வைத்தாற்போல அந்தப் பெண்களை பார்த்து கேலிப்பேசினர். ஆனால், உதய்கிருஷ்ணாவின் கண்கள் அந்தப் பெண்களின் புறமே செல்லாதது கண்டு தன்னையும் அறியாமல் திருப்தி கொண்டாள் உத்ரா.

உதய்கிருஷ்ணாவின் நண்பர்கள் ஒருபடி மேலேப்போய் அப்பெண்களை விசிலடித்து வெறுப்பேற்ற, அவர்களுடன் கலந்து கொள்ளாமல் நீர்வீழ்ச்சியின் அழகையே ரசித்துக் கொண்டிருந்தான் அவன். அதேயிடத்தில் நின்றிருந்த விக்கி தன்னருகில் நிற்பவனை கண்டு மெதுவாக பின்வாங்கினான்.

நேரே உத்ராவிடம் சென்றவன், “என்ன உதி உன் ஆளு சரியான சாமியாரா இருக்கான்?” என்று கிண்டலடித்தான்.

அவள் கோபமாக, “இந்தப் பொறுக்கிகளப் பாரேன்” என்று உதய்கிருஷ்ணாவின் நண்பர்களை நோக்கிச் செல்ல, அவளின் நோக்கமறிந்து கையைப் பிடித்து நிறுத்தியவன் அங்கு காவலுக்கு நின்றிருப்பவர்களிடம் வம்பர்களை காண்பித்து கண்டிக்கச் சொன்னான்.

அவர்களும் ரகளை செய்பவர்களை வேறு இடத்திற்கு விரட்டி விட்டார்கள்.

சற்று சாந்தமடைந்தவளோ, “பொது எடத்துல எப்படி கேவலமா பிகேவ் பண்றாங்க பாரு?” என்று முகம் சுளித்தாள்.

விக்கி அவள் தோள்களைப் பிடித்து நடத்திச் சென்றவன் தன் காருக்குள் உட்கார வைத்து நேரே கூழாங்கல் ஆற்றிற்கு அவளை அழைத்துச் சென்றான். இருட்டும் நேரமாதலால் அவ்வளவு கூட்டம் இல்லை. கால்களை தெளிந்த நீரில் விட்டு அங்கிருந்த பாறையில் அமர்ந்தார்கள் இருவரும்.

சிறிதுநேர அமைதிக்குப்பின், “அந்த உதய்கிருஷ்ணா ரொம்ப நல்லவனா இருக்கான் இல்ல உதி?” என்று மெதுவாக ஆரம்பித்தான்.

“இல்ல எனக்கு அப்படி தோணல. அவன் தன் ஃப்ரெண்ட்ஸ் தப்பு செய்றப்போ அவங்கள தட்டிக் கேட்காம ஒதுங்கிப்போனது சரியாப்படல எனக்கு”

“அப்போ அவன் சினிமால வர்ற ஹீரோ மாதிரி தன் ஃப்ரெண்ட்ஸ்கிட்ட சட்டையக் கழட்டி சண்ட போட்ருக்கனும்னு சொல்றியா?”

“சண்ட போடனும்னு சொல்லல. ஆனா அவங்க இந்த மாதிரி கேரக்டர்னு தெரியும்போது அவங்கக்கூட ஏன் வெளியூர் வரணும்? அவங்க கூப்ட்டப்ப அவன் நோ சொல்லியிருக்க வேண்டியது தான? அவங்கக்கிட்ட மட்டும் இல்ல. அவன் அக்காக்கிட்டக்கூட அவனால நோ சொல்ல முடியாது.” என்று ஆதங்கப்பட்டாள்.

விக்கிக்கோ அவளது உணர்ச்சிகரமான நிலையைப் பார்த்து பரிதாபமாய் இருந்தது. அந்த உதய்கிருஷ்ணா அவளுக்கு யாரோ ஒருவன். ஆனால், அவன் எந்தவொரு குறையும் இல்லாமல் அவளுக்கு பிடித்த மாதிரி இருக்க வேண்டும் என்று அவள் மனம் விரும்புகிறது. அதற்கு காரணம் முதலில் புரியவில்லையானாலும் பின்பு நன்றாகவே‌ விளங்கிகொண்டான் விக்கி.​
 

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
709
Reaction score
1,111
Points
93
மறுநாள் உதய்கிருஷ்ணாவின் குழு ஆலியார் டேம் சென்றிருப்பதாக தகவல் வர, இருவரும் தாமதியாமல் அங்கு கிளம்பிச் சென்றனர். அங்கு கடல் போல் நீலநிறத்தில் காணப்பட்ட நீரோடையை இருவரும் ஆச்சரியமாகப் பார்த்தபோது அவளை ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருந்தான் உதய்கிருஷ்ணாவின் நண்பன் பிரகாஷ்.

பிரகாஷ் தன்னை அடையாளம் கண்டுகொண்டான் என்று தெரிந்தாலும் உத்ரா அவனை கண்டுகொள்ளாதவள் போல் நடித்தாள். விக்கியோ அந்த இடத்தின் அழகியலை தனது ஐபோனுக்குள் ஐக்கியமாக்குவதில் மும்முரமாயிருந்தான். அவனின் பிடிவாதத்தால் உதியும் அச்சூழ்நிலையில் போஸ் கொடுக்கும்படியானது.

பிரகாஷ் உதய்கிருஷ்ணாவை தேடிச்சென்றதும் விக்கியை கடிந்தாள் உத்ரா. “நீ எதுக்குடா என்கூட வால்பாற வந்த?” என்று.

அவன் அசரவில்லை.

“ம்? இங்க சுத்தி முத்தி நாலு வீடியோ எடுத்து ‘இரு காலின் இடையிலே உறங்கும் பூனையாய் வாழ்க்கை போதும் அடடா’னு ஸ்டேட்டஸ் வைக்கத்தான்” என்று குதூகலமாகக் கூறியதும், துப்பாத குறையாய் பார்த்தவள் பிரகாஷும் உதய்கிருஷ்ணாவும் வரும் நேரத்திற்குள் அவனுடன் மாயமாகியிருந்தாள்.

அதன்பின் தெளிவாய் உதய்கிருஷ்ணாவுக்கும் தங்களுக்கும் உள்ள இடைவெளியை அதிகப்படுத்தினாள்.

அங்கு செல்லும் வழிகள் தோரம் கடைகளாக இருக்க, ஒரு கடைக்குள் நுழைந்து அக்காவிற்கு சால்வை, அக்கா‌ கணவனுக்கு கார்டு ஹோல்டர், அக்கா மகளுக்கு ஹேண்ட் பேக், வீட்டிற்கு தேயிலை என்று தேடித் தேடி பரிசுப்பொருள் வாங்கிக் கொண்டிருந்தான் உதய்கிருஷ்ணா.

அவனின் குடும்பத்தின் மீதான அக்கறை ‘தன்னைப்போல் ஒருவன்’ என்கிற உணர்வை கொடுத்தது உத்ராவுக்கு. அந்நேரம் அவளை கலைத்தான் விக்கி.

“இவன மாதிரி ஆளெல்லாம் ஹனிமூன் வந்தா ஹனிமூனோட நோக்கமே கெட்டுப்போகும் உதி.”

“என்னைக்கேட்டா ஹனிமூனே வேஸ்ட் தான் சொல்லுவேன். டைம் வேஸ்ட், மனி வேஸ்ட், எல்லாம் வேஸ்ட்.”

“ச்சே! உன் குலம் தலைக்கிறதெல்லாம் ரொம்ப கஷ்டம் உதி. ஆமா நீ என்ன சாமியார் ஆகப்போறியா? உங்கம்மா ஆசைய கொஞ்சமாவது கன்சிடர் பண்ணேன்.”

“அட்வைஸ் பண்றது யாரு கல்யாணமாலை‌ ஓனருங்களா? சாரே ஒரு லவ் ஃபெயிலியர் கேஸு. இதுல நீங்க எனக்கு அட்வைஸ் பண்றதத் தான் தாங்க முடியல”

“உனக்கு ஒரு லவ் ஃபெயிலியர் ஆனா தான் எ‌ன் கஷ்டம் புரியும் உதி”

கோபமாக அங்கிருந்து கிளம்பினான் விக்கி. உத்ராவும் தங்கள் தங்கும்விடுதிக்கு திரும்பிவிட்டாள். ஆனால், விக்கி இரவில் அறைக்கு திரும்பியபோது குடித்துவிட்டு வருவான் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை அவள்.

தள்ளாடியபடி கையில் ஒரு விஸ்கி பாட்டிலுடன் அவன்‌ வந்திருக்க, அவனை பால்கனி தள்ளி கதவை பூட்டினாள்.

அவன் ஆர்ப்பாட்டம் எதுவும் செய்யாமல் சமர்த்தாக நிலவை பார்த்தபடி கால்களை நீட்டி கண்ணாடிச் சுவற்றில் சாய்ந்திருந்தான். அறையில் தனியாக இருந்த உத்ராவுக்கோ ஏதோ போல் இருந்தது. அறையின் வெறுமை முகத்தில் அறைய, பால்கனி கதவைத் திறந்து அவன் அருகில் வந்து உட்கார்ந்தாள். இதமான காற்றில் மிதந்து வந்த தேயிலையின் மணம் அவ்விடத்தை நிறைத்தது.

விக்கி‌ அவள் தன்னருகில் வந்து அமர்ந்ததும், “ஹ்ம் யாரு? யதி. ச்சே! உதியா?” என்றான்.

“யதியா? ஏன் சொல்ல மாட்ட? துறவி மாதிரி தெரியுரேன் இல்ல உனக்கு?” அவனை நறுக்கென்று கிள்ளி வைத்தாள்.

“ஆமா கல்யாணமே பண்ணிக்க மாட்டேனு சொல்றவள வேற எப்படி சொல்றதாம்?” வாய் குளறியது.

“ஆமா அப்படி தான் நெனச்சேன். ஆனா நீ தான் எனக்கு தியாகத்தலைவி, சுயநலக்காரினு விதவிதமா பட்டம் சூட்டி என் முடிவையே மாத்த வச்சிட்டியே. ஆனா என் கண்டிசனுக்கெல்லாம் ஏத்த மாதிரி ஒரு பெர்ஃபெக்ட்டான ஆளத் தான் நான் கல்யாணம் பண்ணிப்பேன் விக்கி. ஏன்னா ஒரு குடிகாரன கல்யாணம் பண்ணி என் அம்மாவும் சந்தோசமா வாழல. ஒரு சந்தேகப்பிராணிய கல்யாணம் பண்ணி என் அக்கா நந்திதாவும் உயிரோட இல்ல.”

“உதி நீ தேடுற அந்த பெர்ஃபெக்ட்டான ஆள் உதய்கிருஷ்ணா தான?”

திடுக்கிட்டாள் உத்ரா. கவிழ்ந்திருந்ததால் அவன் முகத்தை அவளால் சரியாக படிக்க முடியவில்லை. இந்த சிக்கலுக்கு வெறுமையே மேல் என்று அவனுக்கு பதில் சொல்லாமல் எழுந்து உள்ளே சென்று விட்டாள்.

என்றும் தன்னிலை இழக்கும் அளவிற்கு குடித்துவிட்டு வருபவன் இன்று அவள் தன்னை நம்பி ஒரே அறையில் தங்கியிருப்பதால் குடியில் நாட்டம் கொள்ளவில்லை. இருப்பினும் அவளை குடித்துவிட்டு வந்தது போல் பயமுறுத்தவேண்டும் என்று எண்ணியே இவ்வாறு நடந்துகொண்டான். ஆனால், அவன் எதிர்பாராதவிதமாய் தானாய் வந்து சிக்கினாள் உத்ரா.

“எத்தன தடவ காதலிச்சதுக்காக என்ன முட்டாள்னு சொல்லியிருப்ப உதி? இப்ப உனக்கே காதல் வந்திருச்சிப் பாரு.” என்று விதியை நினைத்து விரக்தியாக சிரித்தான்.

கலைடாஸ்கோப் திரும்பும்...​
 

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
709
Reaction score
1,111
Points
93
அத்தியாயம் ‌ஆறு பற்றிய உங்கள் விமர்சனங்களை கீழே உள்ள கருத்துப்பெட்டியில் பகிர்ந்து கொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்.

கருத்துத்திரி,
கருத்துப்பெட்டி
 
Status
Not open for further replies.
Top Bottom