காதலொரு கலைடாஸ்கோப் திருப்பம்
எழுதியவர்: ஷிவானி செல்வம்
அத்தியாயம் 8
உத்ரா கேட்டபோது சரியென்ற நந்தகோபனால் மறுநாள் தவிர்க்க முடியாத ஒரு இரங்கல் கூட்டத்திற்கு செல்லும்படி ஆகிவிட்டதால் உத்ராவை சந்திக்க முடியவில்லை.
பதிலுக்கு அனன்யாவிடம், “நீ போய் வாங்கிட்டு வாம்மா” என்றார்.
அவளும் மாலை சென்று வாங்கிக்கொள்ளலாம் என்று புறப்பட, மழை குறுக்கிட்டது. இருப்பினும், நனைந்தபடியே ஆட்டோ பிடித்து டிடெக்டிவ் ஏஜென்சிக்குச் சென்றாள். அங்கு உத்ராவிற்கு பதில் விக்கி இருக்க, வாசலிலேயே நின்றாள் ஆடைகளில் நீர் சொட்டியபடி.
நிமிர்ந்து பார்த்தவன் அவளை கண்டவுடன் இயல்பாய், “உள்ள வாங்க” என்றான்.
அவளும் தயங்கியபடியே வந்து அமர்ந்தாள். அவளிடம் எதுவும் கேட்காமலே மேசையின் மேல் உறை ஒன்றை தூக்கி வைத்தான். எடுத்துக்கொண்டவள் அப்படியே அமர்ந்திருக்க, தனது வேலையிலேயே கவனமாக இருந்தவன் சில நிமிடங்களுக்குப் பிறகு தான் நிமிர்ந்துப் பார்த்தான்.
தன்னையே அவள் இமைகள் தட்டாமல் பார்ப்பதைக் கண்டு அவன் கேள்வியாகப் புருவங்களை ஏற்றி இறக்க, அதுவொரு குளிரூட்டப்பட்ட அறையென்பதால் நடுங்கிக் கொண்டிருந்தவள் உதடு துடிக்க ஒன்றுமில்லையென்று தலையாட்டினாள். அவன் மெதுவாக இருக்கையைவிட்டு எழுந்தான்.
என்ன தான் உத்ரா கோபத்தில் அனன்யாவின் பெரியப்பாவை வரச்சொல்லியிருந்தாலும், அந்நாளில் அமிகாவின் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கூட்டம் இருந்ததை மறந்தேவிட்டாள். அக்கடமையினால் பொறுப்பை விக்கியிடம் ஒப்படைத்தவள் பள்ளியைவிட்டு வெளியே வந்தபோது அங்கேயும் மழை வெளுத்து வாங்கியது. தன் இருசக்கர வாகனத்தில் கவனமாக டிடெக்டிவ் ஏஜென்சியை நெருங்கியதும் அனன்யா தங்கள் அலுவலகத்திற்குள் செல்வதை பார்த்தவள், வாகனத்தை ஓரங்கட்டி சாளரம் வழியாக அவர்களை கண்காணித்தாள்.
சந்திப்பதாக பேசிக்கொண்டது இருவர். ஆனால், சந்தித்துக் கொண்டதோ வேறு இருவர்.
விக்கி மழையில் நனைந்து வந்த அனன்யா இடத்தில் வேறு யாராவதாக இருந்திருந்தால் மனிதாபிமான அடிப்படையில் நிச்சயம் அவர்களுக்கு உதவியிருப்பான். ஆனால், அவள் அனன்யாவாகிப் போனதால் அவன் தான் உண்டு தன் வேலையுண்டு என்றிருந்தான். இருப்பினும் அவளது பார்வை அவனையே துளைத்ததில் எரிச்சல்பட்டான். அனன்யாவிற்கோ அன்றொரு நாள் இதே மழை தானே தங்களை சேர்த்துவைத்தது என்ற மயக்கம்.
எழுந்து சாளரத்தை எட்டிப்பார்த்தவன் பழைய ஞாபகத்தில் மூழ்கியவளை, “மழ நின்னுடுச்சி. நீங்க கெளம்பலாம்” என்று கலைத்தான்.
அவனது முகத்தை நிமிர்ந்து பார்த்தவளின் கண்களிலோ நீர் பெருக்கெடுத்தது.
“சா.. சாரி… நான் பண்ணது பெரிய தப்பு தான். அத நெனச்சு நான் ஃபீல் பண்ணாத நாளே இல்ல. என் மேலயே எனக்கு இப்ப வெறுப்பாயிருக்கு விபூ. உங்க மூஞ்சில முழிக்க சங்கடப்பட்டு தான் நான் இவ்வளவு நாள் ஒதுங்கியிருந்ததே.” என்றவள் தேம்பி தேம்பி சொல்ல,
இறுகிய முகத்துடன் அவளைப் பார்த்திருந்தவனோ, “நீ இப்ப போகலாம்னு சொன்னேன்.” என்றான் தனது உடல் மொழியை மாற்றாமல்.
“நீங்க என்ன மன்னிக்கவே மாட்டீங்களா?”
“உன்னால நான் பட்ட அவமானம், வலி எதையும் என்னால மறக்க முடியாது. அண்ட் உன்ன காதலிச்சது தான் நான் என் வாழ்க்கைல பண்ண பெரிய முட்டாள்தனம்.”
“அன்னைக்கு என் நெலம அப்படியிருந்…”
“ஐ செட் கெட் அவுட்! உன்னோட எந்த வெளக்கத்தையும் நான் கேட்க தயாரா இல்ல. அது எனக்கு தேவையும் இல்ல. இங்கயிருந்து போயிடு.”
“இல்ல அன்னைக்கு என் சிட்ஷுவேஷன் என்னன்னு கேட்டீங்கன்னா நீங்க இப்படி பேசவே மாட்டீங்க.” என்றவள் ஆரம்பிக்க,
எழுந்து வலுக்கட்டாயமாக அவளது கன்னங்களைப் பிடித்து முகத்தை நோக்கி குனிந்தவன் இருவருக்கும் ஒரு இன்ச் இடைவெளியே இருந்த நிலையில் அகன்ற அவளது விழிகளைப் பார்த்து, “வெளியப் போன்னு சொன்னேன்” என்று மெதுவாக ஆனால், உறுதியாகச் சொன்னான்.
அக்குரலில் உள்ளடங்கியிருந்த கோபத்தைக் கண்டவளும் அரண்டுபோனவளாய் அங்கிருந்து கிளம்பினாள். ஆனால், வாசலில் நின்றிருந்த உத்ராவைப் பார்த்ததும் ஒரு கணம் ஸ்தம்பித்துப்போனாள். பின், விக்கியை திரும்பிப் பார்த்தவளாய் வேகவேகமாய் அவ்விடத்தை விட்டு வெளியேறினாள்.
விக்கியோ திரும்பி நின்று தன் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த போராடிக் கொண்டிருந்தான்.
ஏற்கனவே அவன் அனன்யாவை நெருங்கியது வரை தள்ளியிருந்து பார்த்த உத்ரா, அவன் முணுமுணுத்த வார்த்தைகள் எதுவும் தனக்கு கேட்காததால் அவளுக்கு அவன் முத்தம் கொடுத்து விட்டதாகவே கருதினாள்.
அதில் அவனை திட்டவே விறுவிறுவென உள்ளே வந்தவள் அவனது தோளைப் பற்றி திருப்ப, அவனோ மறுபடியும் அனன்யா தான் வந்துவிட்டதாக நினைத்து, “சொல்ல சொல்ல கேட்க மாட்டியா?” என சொல்லிக்கொண்டே அவளது கழுத்தைப் பிடித்தான்.
இப்போதும் உத்ரா அவன் தனக்கு முத்தம் கொடுக்க முயல்வதாகவே தவறாகக் கருதினாள். அவளை அவன் அரண்டு பார்க்க, உத்ரா கத்தினாளே ஒரு கத்தல்.
“எரும மாடே! கருங்கொரங்கே! எவ்ளோ தைரியம் இருந்தா எனக்கே நீ முத்தம் கொடுக்க வருவ?” என்று அவன் கழுத்தை தான் நெரிக்க முயன்றாள்.
அச்சமயம், “எஸ் க்யூஸ் மி!” என்றொரு குரல் இருவரையுமே கலைத்தது.
இருவரும் திரும்பிப் பார்க்க உதய்கிருஷ்ணா அங்கு நின்றிருந்தான்.
‘இவன் எப்போ வந்தான்? அனன்யாவ பாத்திருப்பானோ? ஒருவேள பாத்திருந்தா?’ என்று பல கேள்விகள் உள்ளே ஓடினாலும், “வாங்க! உக்காருங்க!” என்று வரவேற்றாள் உத்ரா.
உள்ளே வந்தவன், “தப்பான நேரத்துல வந்துட்டனோ?” என்று கேட்க, வேணி போலவே ஏதேனும் உள்ளர்த்தத்தில் கேட்கிறானோ என்று அவன் முகம் பார்த்தாள்.