மாம்பழம்
ரயில்வே ஸ்டேசனில் இருந்து அம்மாவை அழைத்து கொண்டு பைக்கில் வந்து கொண்டிருந்தான் குமார்.
"பரீட்சையெல்லாம் நல்லா எழுதியிருக்கியா? "
"ம்.அதை தவிர வேறு எதுனா பேசேன்.கேட்க வேற விசயமே இல்லையா? "
"அதை கேட்டா மட்டும் துரைக்கு கோபம் வந்துருமே? தனியா இருக்கியே? சமைக்க தெரியுமா? "
"சுடுதண்ணி சுமாரா வைப்பேன்.ஓட்டல் சாப்பாடுதான்! "
"அதான் ஒரு சுத்து இளைச்சுட்ட.சரி! அந்த மீன் கடையில வண்டிய நிறுத்து.வாய்க்கு ருசியா மீன் குழம்பாவது வைச்சு தர்ரேன்.!"
மீன் வாங்கி கொண்டு கிளம்பிய போது "ஆமா! உங்க மாமா ஒரு மாமர செடி கொடுத்தானே? வளர்ந்திருச்சா? "
"ரெண்டு மூணு பழம் வந்திருக்கு.பாக்கவே வித்தியாசமான கலர்ல இருக்கு.!தின்னு கின்னு எதாவது ஆயிருச்சுன்னா என்ன பண்றதுன்னு இன்னும் திங்கலை.!"
அம்மாவை வீட்டில் இறக்கி விட்டு சாவியை கொடுத்தவன் "என் பிரண்டை பாத்துட்டு வர்ரேன்.நீ சமைச்சு வையுமா? "என்றபடி கிளம்பினான்.
"கால்ல சக்கரம் கட்டிட்டே சுத்துவான் போல! "என்று முணுமுணுத்தபடி கதவை திறந்தாள் அம்மா!
முரளி இவனை பார்த்ததும் "வா மச்சி! "என்றான்.
"அம்மா வந்திருக்காங்க! "
"அய்யய்யோ! பீர் பாட்டிலையெல்லாம் ஒளிச்சு வைச்சியா இல்லையா? "
"அம்மா நேத்து வர்ரேன்னு சொன்னதுமே எல்லாத்தையும் எடுத்து போட்டு சுத்தம் பண்ணிட்டேன்."
"நீ தனி வீட்டில் இருப்பது எவ்வளவு சவுரியம் பாரு! "
"அது பூர்வீக சொத்து.சரி.மேட்ரிமேனில பொண்ணு தேட சொன்னேனே? என்னாச்சு? "
"அம்மாவுக்கு தெரியுமா? "
"தெரியாது.பொண்ணை எனக்கு பிடிச்சிருந்தா எதாவது லோக்கல் புரோக்கரை வைச்சு பேசி முடிக்க வேண்டியதுதான்.பொழுது போகலைன்னா வித விதமான பொண்ணுக போட்டோவை பார்த்தாவது ரசிக்கலாமே? "
"சரியான ஆள்டா நீ! சரி நல்ல போட்டோவா ஒன்னை கொடு.ரிஜிஸ்டர் பண்ணுவோம்! "
குமார் கேலரியில் தேடி மாமரத்திற்கு அடியில் ஸ்டைலாக நின்ற போட்டோவை தேர்ந்தெடுத்து நீட்டினான்.அதை பார்த்த முரளியின் முகம் மாறியது."டேய்! இந்த மரம் எங்கிருக்கு? "
"வீட்டுலதான்! "
"உனக்கு பின்னாடி தொங்குற மாம்பழம் ஒரு ஜப்பான் வகையை சேர்ந்தது.விலை அதிகம்.கிலோ ரெண்டே முக்கால் லட்சம்! "
"என்னடா சொல்ற? நிஜமாவா? அது என்னோட மாமா கொடுத்தது."
"நான் பாட்டணி படிச்சவன் மச்சான்.அது பேரு மியாசகி மாம்பழம்.உன் வீட்டுல புதையல் கிடைச்ச மாதிரிதான்.!"
"இப்ப கூட மூணு பழம் இருக்கே? "
"வண்டிய எடுடா! ரெண்டே முக்கால் லட்சம் சும்மா தொங்குது! "
இருவரும் அடித்து பிடித்துவீட்டிற்கு வந்துவண்டியை நிறுத்தி விட்டு பின்பக்கம் போய் பார்த்த போது மரத்தில் தொங்கிய மாம்பழங்களை காணவில்லை.
"ஒரு வேளை அம்மா பறித்திருப்பார்கள் "
இருவரும் வீட்டிற்குள் நுழைந்த போது டைனிங் டேபிளில் உட்கார்ந்திருந்த அம்மா "குமாரு! இந்த மாம்பழம் ரொம்ப டேஸ்டா இருக்குதுப்பா.இந்த மாதிரி சாப்பிட்டதில்லை.மூணையும் நானே தின்னுட்டேன்.உனக்குத்தான் கொட்டைய சூப்புறதுன்னா ரொம்ப பிடிக்குமே? அதான் அதை மட்டும் உனக்காக வைச்சிட்டேன்! "
"ரெண்டே முக்கால் லட்சத்தை தின்னுட்டியேம்மா! "என்றான் குமார் கோபத்துடன்.
"தப்பு! அம்மா ஒரு லட்சத்தை கொட்டையா வைச்சிருக்காங்க.வா! ஆளுக்கொரு அம்பதாயிரத்துக்கு கொட்டையை சூப்புவோம் "என்றான் முரளி!