சிந்தா- ஜீவநதியவள் -1part-1
வானரவீரமதுரை ,வாணவன் மாமதுரை என விரித்து அதற்கென இதிகாச, வரலாற்றுப் பெயர்க் காரணங்களைக் கொண்டு மானாமதுரை என இன்றைய வழக்குப் பெயரைத் தாங்கி நிற்கும் ஊரின் சித்திரைத் திருவிழா.
தனி ஒரு பூதகணத்தின் தாகம் தணிப்பதற்காக, வை கை என மாதேவன் பணிக்க, சிகையில் இடமளித்த சிவனுக்காய், கங்கையவள் வையையாய் புவியிலிருந்து வடிவெடுத்தாள். மலையாள கரையோரம் பிறந்தவள் நிலமடந்தையாய் ஓடி, மதுரையம்பதியை வளமாக்கி கிழக்குச் சீமையில் சரண் புகுந்தாள். ஐயன் மீது கொண்ட பற்றால் நஞ்சுண்டகண்டனுக்கு, நஞ்சு தந்த கடலை காண சகியாமல் இராமன் நாமம் தாங்கிய ஊரிலேயே பாற்கடல் போன்ற ஏரியில் சங்கமம் ஆனாள்.
நல்ல மனதுடைய நங்கைக்கு ஏது மதிப்பு, வையையும் இன்று மானிடர் வஞ்சனையால் வறண்டு போனாள். ஆயினும் ஊற்றுக் கண்ணாய் இந்தப் புனித பூமியைச் சத்தமில்லாமல் ஆண்டுக் கொண்டு தான் இருக்கிறாள். அவ்வப்போது பொங்கி வந்து தரிசனம் தருவாள்.
மண்டூக மாமுனிவர் தவளையாய் மாறி வையையில் தவமிருக்க, அவருக்கு மோட்சம் அளிக்கவெனக் கள்ளழகனாய் பெருமாளே இவளில் இறங்கி சாப விமோசனம் தந்தார். செவி வழி கதையாக , தங்கை மீனாட்சி கல்யாணத்துக்காகப் புறப்படும் கள்ளழகர் வழியில் பக்தர்களின் அன்பு உபசரிப்பில் மெய் மறந்து , முகூர்த்தத்தைத் தவற விடுகிறார். தன சகோதரன் வருகைக்காக மீனாட்சியம்மை ஆவலாக நோக்கியிருப்பதைக் கண்ட சுந்தேரேசர், தன்னிலிருக்கும் பெருமாளை திருமணத்துக்கு வரவழைத்துக் கன்னிகாதானம் பெற்றுக்கொள்கிறார். இந்தச் செய்தியை, கள்ளழகரிடம் சொல்ல கோவிந்தராஜ பெருமாள் செல்கிறார், அதனால் அவரைக் கோள்சொல்லிப் பெருமாள் என்றே மக்கள் அழைத்தனர். செய்தி கேள்வியுற்ற அழகர், புதிதாய் பாயும் வைகையில் கோபித்து இறங்குவதாகக் கர்ணபரம்பரை கதை உண்டு.
இந்த விழாவை மாமதுரையில் கோலாகலமாகச் சித்திரா பௌர்ணமி அன்று விழாவாய் நடத்துவதை உலகம் அறியும். மதுரையில் மட்டுமன்று வையைப் பாயும் மானாமதுரையிலும், பரமக்குடியிலும் கூட இந்த விழாக்கள் நடக்கும்.
சித்திரைத் திருவிழாவின் பத்து நாள் விழாவும், மானாமதுரையிலும் கோலாகலமாய் நடக்கும். காலையில் அக்கரையிலிருந்த கள்ளழகர் பெருமாள் வைகையாற்றில் எழுந்தருளி இருந்தார். அவரைத் தரிசிக்க அக்கம் பக்கமுள்ள கிராமங்களிலிருந்து மக்கள் வந்திருந்தனர்.
சித்திரா பௌர்ணமி இரவைத் தான் இந்த ஊர் மக்கள் ஆவலாக எதிர் நோக்கி இருப்பார்கள். வறண்ட வைகையின் மேல்கரையில் ஆனந்தவல்லியம்மன் சோமநாதர் ஆலயம், இங்கு இவர்களே மீனாட்சி, சொக்கர். அதிலிருந்து எதிர் கரையில் பெருமாள் கோவில்.
அகன்ற வைகையில் ஓடையாய் வைகை ஒடுங்கி ஓட மீதியுள்ள இடங்கள் எல்லாம் சுத்தம் செய்து அதில் ராட்சத விளக்குகளால் இரவை பகலாக்கி, குடை ராட்டினம், ஜெயின்ட் வீல், கொலம்பஸ், சறுக்குமரம் என விளையாட்டு பொழுது போக்கு அம்சங்களை வைகை ஆற்றையே மைதானமாக்கிப் போட்டிருந்தனர்.ஒலி பெருக்கிகள் மூலம் சினிமா பாடல்கள் கத்திக் கொண்டிருந்தன.
ஐஸ் வண்டி, அப்பளக்கடை, பஞ்சுமிட்டாய், சவ்வு மிட்டாய், மசிருமிட்டாய், சுண்டல், கடலை, பணக்கிழங்கு, சோளக்கருது, சுட்டது, வேக வைத்தது, மாங்காய் கீறியது என விற்பனை செய்பவர்கள், சாப்பிடப் பஞ்சமில்லாமல் ஒலி எழுப்பிக் கொண்டு கூட்டத்தோடு திரிந்தனர்.
அக்கம், பக்கம் இருக்கும் கிராம மக்கள் குடும்பத்தோடு வந்து அமர்ந்து நிலாச்சோறு சிற்றன்னம் சாப்பிட்டுக் கொண்டு, திருவிழா கூத்தை ரசித்துக் கொண்டிருந்தனர் மக்கள்.
அந்தக் கூட்டத்தில் தான் ஆற்று மணலில் தார்ப்பாயை விரித்து, அதில் தூக்குப் போணிகள், தண்ணீர் பாட்டில் இலை எல்லாவற்றையும் பரப்பி விட்டு, ஆறு மாத தனது மகள் சத்யாவை மடியில் போட்டுக் கொண்டு அமர்ந்திருந்தாள் சிந்தா என்ற சிந்தாமணி. மாநிறம், வட்டமுகம் எடுப்பான நாசி, அகன்ற கண்கள் என இலட்சணமான முகத்துக்குச் சொந்தக்காரி. அவளது வயதை மீறிய தெளிவு.
தனது அப்பா, தம்பி, தங்கை, நான்கு வயது மகன், கணவனோடு திருவிழா காண வந்திருந்தவள், இரவு உணவாகச் சோற்றை வடித்து, ஆட்டுக்கறி குழம்பு, முட்டை அவித்துக் கொண்டு வந்திருந்தாள்.
வந்தவுடன் சாப்பாட்டை ஒரு கை பார்த்த அளவளது குடும்பம் , அப்பா அய்யனாரின் பாதுகாப்பில் ராட்டினம் விளையாடி, பொருட்காட்சியில் சுத்தி விட்டு வரச் சென்றுள்ளனர்.
ஆங்காங்கே அறிந்தவர், தெரிந்தவர் உறவினர்கள் எனப் பரிச்சயமான முகங்கள் தெரிந்தது. ஓர் சிநேகப் புன்னகையோடும் , நல விசாரிப்போடும் கடந்து கொண்டிருந்தனர். இவ்வளவு நேரம் வேடிக்கை பார்த்த அவளது ஆறுமாத மகள் தூக்கத்துக்குச் சிணுங்கவும் முந்தி மறைத்து தாய்ப்பால் ஊட்டி தூங்க வைத்திருந்தாள்.
கணவன் எடுத்துக் கொடுத்த சிவப்பு வண்ண சேலை அவளுக்கு எடுப்பாகவே இருந்தது. அதே சேலைத் துணியில் தைக்கப்பட்ட ரவிக்கை அணிந்திருந்தவள், தூங்கும் மகளை மடியில் போட்டுக் கொண்டு அமர்ந்திருந்தாள். சற்று நேரத்தில் அவளருகே இடித்துக் கொண்டு வந்து அமர்ந்தான் சிங்கார வேலு. நல்ல தேகக் கட்டுடன் அவளை விடச் சற்றே புது நிறமாக இருந்தான். ஆறடி உயரம் ,கொஞ்சம் அல்ல நல்ல முரடன், அவன் அருகிலிருந்தால் ஆண்கள் யாரும் அவளை ஏறெடுத்தும் பார்க்க மாட்டார்கள். அந்தக் கட்டிளங் காளையும் அடங்குவது தன் ஆசை மனைவி சிந்தாவிடம் மட்டுமே.
அவன் உரசிக் கொண்டு அமர்ந்த விதத்திலேயே புரிந்து கொண்டவள், அவனை முறைத்தாள். அவன் அசட்டுச் சிரிப்பு சிரித்து, "என்னா புள்ளைப் பார்க்கிற. திருவிழா கூட்டாளி பயலுங்க வந்தானுங்களா அது தான்." என அவன் இழுக்கவும், அவள் பதில் சொல்லாமல் முகத்தைக் கடுகடுவென வைத்துத் திரும்பிக் கொண்டாள்.
" பாப்பா தூங்கிடுச்சா" என அவள் மடியில் கிடந்த மகள் தலையை வருடினான் வேலு. " போ அங்குட்டு,இந்த சனியனை குடிச்சிட்டு வந்து புள்ளைய கொஞ்சாதேன்னு சொல்லிருக்கேன்ல. உன்னை நம்பி வயசு புள்ளையை வேற கூட்டிட்டு வந்தேன் பாரு. என் புத்தியை " என அவள் பேசும் போதே இடையிட்டவன்,
" ஏ புள்ளை, நான் நிதானமாத்தான் இருக்கேன்.நீ வேணா சோதிச்சு பாரு" என்றான். முகத்தில் அழகு காட்டி அவள் திருப்பவும், "அடி என் பனங்கருப்பட்டி, சீனி பாகே. முகத்தைத் திருப்பினாலும் அம்சமாத் தான் புள்ளை இருக்க " என வழிந்து அவள் முகத்தை வழித்துக் கொஞ்சினான். அரை இருளில் யாரும் கவனிக்க மாட்டார்கள் என்றாலும் சிந்தாவுக்கு வெக்கம் வந்தது, அதை மறைத்து
" அதுக்குத் தான் ஈ, எறும்பு கணக்கா ஒட்டிகிறியாக்கும். விலகுய்யா அங்குட்டு" எனக் கோபத்தை வீம்பாக இழுத்துப் பிடித்துச் சிடுசிடுத்தாள்.
" ஊர்ல இல்லாததையா செஞ்சுட்டேன். இன்னைக்குச் சுத்தி திரியிற ஆம்பளை அம்புட்டு பயலும் இப்படித் தான் இருக்கானுங்க. எம்புட்டு சரக்கடிச்சாலும் நான் நிதானமா இருப்பேன்னு உனக்குத் தெரியாதா" எனத் தற்பெருமை பேசியவன் அவள் தோளில் கை போடவும், அவன் கையை இழுத்து விலக்கி விட்டவள்,
" ஐயே, நாத்த மருந்தை குடிச்சிபுட்டு பெருமையைப் பாரு. எல்லா ஆம்பளையும் குடிச்சிருக்கான்னா, உன் வீட்டு பொம்பளைங்க மேல யாராவது கை வச்சா, என்ன பாதுகாப்பு. உன்னை நம்பி தானே என் தங்கச்சியையும் கூட்டிட்டு வந்தேன். இல்லையின்னா ஐஞ்சு மைல் தள்ளி வந்து விடியவிடிய திருவிழா பார்க்கனுமுன்ன என்ன தேவை" எனப் பொரிந்தாள்.
" அதெல்லாம் நான் இருக்கும் போது எவனும் கை வைக்க மாட்டான். வகுந்திற மாட்டேன்" என நாக்கை துருத்திக் காட்டினான். "சரக்கு உள்ளப் போகவும் உள்ளுக்குள்ளே இருக்க ரவுடிப்பய தலை காட்டுறாராக்கும்" என்றாள்,
" அட போ புள்ளை நீ ஒருத்தி, ஊருக்குள்ள கெத்தா நானும் ரவுடிண்டு திரிஞ்சிட்டு இருந்தேன். உன்னைய கட்டினேன். மீசையை மடக்குன்ன, தலை சீவுன்ன,கைலி கட்டதடாண்ட, சட்டையை மடக்காதடாண்ட என் அழகே போச்சு. இப்ப பொண்டாட்டிக்கு பயந்தவன்னு கேலி பண்றானுங்க" எனச் சோக கீதம் வாசித்தான் வேலு.
சிந்தாவுக்கு ஒரு புறம் பெருமையாகச் சிரிப்பு வந்தது, இருந்தும் காட்டிக் கொள்ளாமல், "இப்பத் தான் உன்னை மனுசரா மதிக்கிறாகன்னு சொல்லு" என்றாள்.
அதே நேரம் அவர்கள் இருந்த இடத்தை நோக்கி வந்தார் ஐம்பது வயது மதிக்கத் தக்க அய்யனார், சிந்தாவின் தகப்பன். அவர் நடையிலும் லேசான தள்ளாட்டம் இருந்ததோ எனச் சிந்தா ஊன்றிப் பார்த்தாள்.
மகளுக்குப் பயந்து பல்லில் படாமல் ஒரு குவளை உள்ளே கவிழ்த்திருந்தவர், வெற்றிலை பாக்கைப் போட்டுக் குதுப்பிக் கொண்டே வந்தார். " சிட்டு, சின்னதை நான் பார்த்துக்குறேன், நீ மாப்பிள்ளையோட ஒரு வட்டம் சுத்திட்டு வா" எனத் தார்ப்பாயில் அமர்ந்து பேத்தியைக் கேட்டார்.
" ஏன் அப்பு, வயசுக்கு வந்த பொட்டப்புள்ளையைத் தனியாவா விட்டுட்டு வந்த. அவளுக்கு என்ன தெரியும்" எனப் பெரிய மனுசியாக அப்பாவையும் கோவித்தாள் சிந்தா.
" இளந்தாரிப் பயலை நிறுத்திட்டு தானே வந்தேன். அங்குட்டுப் போய்ப் பாரு, உன் மகன் குரங்காட்டாம் தாவிக்கிட்டே திரியிறான். நீ போனா தான் வழிக்கு வருவான். பாப்பாவை குடு" என்றார்.
" இருப்பா, எம்புட்டு நேரம் மடியில வச்சிருப்ப. விரிப்பு எடுத்திட்டு வந்துருக்கேன். அதில போடுறேன். பக்கத்தில உட்கார்ந்து பார்த்துக்க. " எனக் கணவனை வேலை ஏவி பருத்தி சேலையை விரிக்கச் சொன்னாள். உண்மையில் இது தான் சிங்கார வேலுவுக்கு, அவன் செய்துக்கச் சொல்லிய சோதனை.
சற்று நிதானமாகவே சரியாக விரிப்பை விரித்துவிடச் சிந்தா மனதில் தன் கணவனுக்குப் பாஸ் மதிப்பெண் தந்தாள். மகளைப் படுக்கப்போட்டு, மேலே மற்றொரு மெல்லிய துண்டை போர்த்தி விட்டு அப்பாவிடம் ஆயிரம் பத்திரம் சொல்லிப் போனாள்.
" சிந்தாமணி, இது தான் புள்ளை, நீ என்னோட சந்தோஷமா வர்ற மொத திருவிழா. இதுக்கு முன்னாடி இரண்டு தரம் வந்தப்பவும் மூஞ்சியைத் தூக்கி வந்சிருந்த. உன்னைக் கல்யாணம் கட்டின ஐஞ்சு வருசத்தில இன்னைக்குத் தான் புள்ளை மனசு இம்புட்டு நிறைஞ்சு கெடக்கு" என அவள் கையைப் பிடித்து அவளோடு ஒட்டிக் கொண்டே நடந்தான்.
அவளும் அவனிடமிருந்து கையை உருவிக் கொள்ளவும் இல்லாமல் கூடவே நடந்தாள். அவள் தலையை வழித்துச் சீவி நீண்டபினன்னலிட்டு வீட்டில் பூக்கும் பிச்சிப் பூவையே பந்தாகக் கட்டி சடையைச் சுற்றி அதன் அடிவாரத்தில் வைத்துக் கொள்வாள். அதன் மணமே அவனைக் கிறங்கடித்து அவளிடம் இழுத்துச் செல்லும். மானாமதுரை மல்லிகைப் பூவுக்குப் பிரசித்தி நல்ல பெரிய மொக்குள்ள இருவாட்சி மல்லியைத் தொடுத்துச் சரம் சரமாக இவளது தோழிகள் வைத்தாலும், பிச்சியை இப்படிச் சூடுவதில் தான் அவளுக்கு விருப்பம். அதற்காகவே தனது வீட்டில் பந்தலிட்டுப் பிச்சிச் செடியை வளர்க்கிறாள்.
ஆங்காங்கே சீரியல் மின் விளக்குகள் அம்மன், சுவாமி, குதிரையோடு அழகர், யானை பூப் போட்டுக் கொண்டு இருப்பது நந்தி என ஒளிர்ந்து கொண்டிருந்தது. அந்த ஒளிக் கற்றைகள் சிந்தாவின் முகத்தில் பட அந்தக் கருப்புத் தங்கம் அவனுக்கு வைரமாகவே ஜொலித்தது.
அவர்களைச் சுற்றி ஆயிரம் ஒலி,ஒளிகளும், ஓசைகளும் இருந்த போதும், அவளின் அழுத்தமான உதடுகளிலிருந்து வரும் சொல்லுக்காகக் காதைத் தீட்டிக் காத்திருந்தான். இது போல் அவளோடு தனித்திருக்கும் தருணம் மிகவும் சொற்பமே. " எதுனா பேசு புள்ளை" என அவன் குழையவும், "என்னத்தைப் பேச அது தான் எனக்கும் சேர்த்து நீயே பேசுறியே" என்றாள்.
"அப்பல்லாம் என்னைக் கண்டாலே உனக்கு ஆகாதுல்ல புள்ளை, இதே இடத்தில சந்தைக்கு வந்து போவும் போது எம்புட்டு முறைச்சிருப்ப, எனக்கு என்ன தெரியாதுன்னு நினைச்சியா. " என மலரும் நினைவுகளாய் தாங்கள் சந்தித்ததைச் சொல்லவும்,
" நீ செஞ்ச சேட்டை அப்படி. வழியில போற வர்றவளை எல்லாம் வெறிச்சு பார்க்கிறவனை முறைக்காம கொஞ்சுவாகலாக்கும் " எனச் சிணந்தாள். அவன் கெக்ககெக்கவெனச் சிரிக்கவும், இவளுக்குச் சினம் ஏறியது. "இப்ப எதுக்கு மரகழன்ட மாதிரி இளிக்கிற" என்றாள்.
"அது இல்லை புள்ளை, கொஞ்சவா செய்வோமுண்டியா, அது தான் நினைப்பு முந்தாநாள் இராத்திரிக்கு போயிடுச்சு." எனத் தலையைச் சொரிந்தபடி அவன் நன்றாக உரசவும், கருத்த முகமும் பளபளக்க, " இம்புட்டு ஆளுங்க சுத்தி இருக்கையில, என்ன பேசறதுன்னு உனக்குத் தெரியாது. இதே மாதிரி அப்பையும் தான் வெக்கமில்லாம பார்த்து வைப்ப" என அவள் திட்டினாள்.
" உன்னைய மட்டும் தான் புள்ளை அப்படிப் பார்ப்பேன். உன் கண்ணாம் முழி உருண்டுகிட்டு அத்தனை சங்கதி சொல்லும், என்னைய மனசுக்குள்ள வையிவன்னு தெரியும். அப்படி என்னத்தச் சொல்லி வையிவையின்னு தெரிஞ்சுக்கத் தான் உத்து உத்துப் பார்ப்பேன் " எனச் சிரித்தான்.
" ஆத்தாடி, அப்படியே உத்துப் பார்த்து அந்தச் சங்கதியை படிச்சுபுட்ட . பொம்பளைப் புள்ளையை வெறிச்சுப் பார்த்துக் காவாளித்தனம் பண்ணிட்டு, அதுக்கு விளக்கம் வேற. பாம்பு தீண்டினது கூடவா தெரியாமலா என்னை வெறிச்ச" என அவன் கைகளில் அடிக்கவும்.
" அந்தப் பாம்பு தீண்டுனதுல தானே புள்ளை ,நீ என்னைத் தீண்டின. கெண்டக்கால்ல தடத்தைப் பார்க்கவும், பதறிகிட்டு வந்து உன் தாவணியைக் கிழிச்சு கட்டுப் போட்டு, வாயிலையை விசத்தை எடுத்தியே. அன்னைக்கே என் உசரு உனக்குண்டு முடிவு பண்ணிட்டேன்" என அவள் கையைப் பிடித்துக் கொண்டு மையலாகப் பார்த்தான்.
அவன் வார்த்தையில் நெகிழ்ந்து போனவள், "அது தான், என்னைக் கட்டிக்கிறியான்னு கேட்கவும், யோசிக்காம சரின்னு சொல்லிட்டியாக்கும், இந்த ஆத்தா சன்னதியில் வச்சு தாலி கட்டுனியே. அன்னைக்கு மட்டும் நீ என் மானத்தைக் காப்பாத்தலைனா. நான் நாண்டுகிட்டுச் செத்திருப்பேன்" என்றாள்.
" அட வாயக் கழுவு, நல்ல நாள் கிழமையில இப்படிப் பேசிக்கிட்டு உன்னை நம்பி அப்பா, மகன், மகள்னு இரண்டு ஜோடி,ஆறு உசிரு இருக்கோம். அதை நினைப்புல வச்சுக்க" என அவன் சொல்லும் போதே, அவர்களது மகன் சத்தியமூர்த்தி, என்ற சத்தி அவர்கள் முன் வந்து எங்கிருந்தோ குதித்து நின்றான்.
மகனைப் பார்க்கவும், "அடேய், சுருட்டு கருப்பன் பேரா, எங்கருந்துடா தவ்விகிட்டு வர்றவன்" என மகனைத் தூக்கிக் கொண்டான்.
" யப்போய், அந்தப் பெரிய சக்கரத்தில சுத்துவோம்பா, மாமா கூட்டிப் போகமாட்டேங்குது. நீ வந்தா தான் ஏத்துவாகலாம். வா" என்றான்.
For comments- for your valuable comments click here.