Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


RD NOVEL சிவதாசன் எனும் நான் - Tamil Novel

Status
Not open for further replies.

Meerajo

Member
Vannangal Writer
Messages
33
Reaction score
6
Points
8
RD-22- சிவதாசன் எனும் நான்!...- அத்தியாயம்-30

தில்லி கொட்டையின் வாசலில் மாலிக்காபூரின் தலை தொங்கப்பட்டிருந்ததை, மக்களோடு மக்களாக, சீலன், யாழ், சைந்தவனோடு இந்திரனும் பார்க்கும் பொழுதே மாலிக்காபூர் தலை மறைந்து, கோட்டை வாசலில் மற்றொரு ஆண் உடல் தொங்கிக் கொண்டிருந்தது…

மாலிக்காபூர் படை பாண்டிய தேசத்தின் எல்லைக்கு அருகில் வந்துவிட்டது…

காலாட்படை, அடுத்துக் குதிரைப்படை, யானைப்படை, தேர்ப்படை என்று வீரபாண்டியனின் படைகள், இரைக்காகக் காத்திருக்கும் வேங்கை போல் பாய்வதற்குத் தயாராக இருந்தன.

மாலிக் காபூரின் படைகளைக் கண்டதும் வில்லிலிருந்து புறப்பட்ட அம்புகள்போல் பாண்டியனின் நால்வகைப் படைகளும் சீறிப்பாய்ந்தது…

வரலாறு காணாத போராக இருந்தது… வேங்கையும் வேங்கையும் மோதிக்கொண்டதைப் போல் காணப்பட்டது, நால் வகைச் சேனைகளின் ஆக்ரோசமான மோதல்கள்.

பிரளயமே உண்டானதைப் போன்று காட்சியளித்தது போர்க்களம்.

ஒரு மாதம் காலம், யார் பக்கம் வெற்றி என்று அறுதியிட்டுக் கூறமுடியாத அளவிற்குப் போர் உக்கிரமடைந்தது.

தோடர்ந்து போர் நடந்ததால், இரு சாராரின் படைகளின் வலிமை குறைந்தது. உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டது… இதில் பெரும் பாதிப்பு மாலிக்காபூர் படைக்கே ஏற்பட்டது... பாண்டியர் படைகளுக்குச் சுற்றிலும் உள்ள ஊர்களிலிருந்து உதவி கிடைத்தது. இந்நிலையில் வீரபாண்டியனுடன் நேரடியாகப் போரிடுவது உசிதமல்ல என்று முடிவெடுத்த மாலிக்காபூர் படைகள், பல குழுவாகப் பிரிந்து நகருக்குள் ஊடுருவ முயற்சிக்க, இதை ஏற்கனவே எதிர்பார்த்த வீரபாண்டியன், நகரின் நான்கு திசையிலும் சிறு படையை நிறுத்தியிருந்தான். அதனால் மதுரை நகருக்குள் ஊடுருவ முடியாமல் மாலிக் காபூர் படைகள் பின்வாங்கினர்.

இரண்டு நாட்கள் கழித்து, மாலிக் காபூர் படைகள், எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் பாண்டியர் படைவீடுகளைச் சூழ்ந்துகொண்டு தாக்கத் தொடங்கினர்…

மறுபடியும் பாண்டிய படைகள் வீறுகொண்டு எழுந்து தாக்க,

மறுபடியும் பின்வாங்கிய மாலிக் காபூர் படையினருக்கு சுந்தரபாண்டியன் உணவு பிரச்சனையைத் தீர்க்க உதவினான்.

அடுத்த இரண்டாம் நாளில் பாண்டியர்களின் ஆயுதக் கிடங்கு, வீரர்கள் தங்கியிருந்த படைவீடுகள், உணவு தயாரிக்கும் பொருட்கள் வைத்திருக்கும் இடங்களில் நெருப்பு வைத்தனர்...

இவ்வாறாக, பின்வாங்குவதும், எதிர்பாராத நேரத்தில் தாக்குவதுமாக மாலிக்காபூர் படைகள் முன்னேறினர்.

உடனே வீரபாண்டியன் தன் படைகளுடன் கண்ணனூர் பகுதியில் பதுங்கினான்…

இனி யுத்த தர்மப்படி போர்புரிதல் நல்லதல்ல என்று புரிந்து கொண்டு, வீர பாண்டியன் கரந்தடிப் போர்முறையைக் கையாள நினைத்தான்.

போருக்காகத் தயாராகும் யானைகளுக்கு, முழுவதுமாக இரும்பு கவசம் தலை முதல் கால்வரை அணிவிக்கப்பட்டது. அதன் மேல் சிறிய அரியணைகளை ஏற்படுத்தி யானை பாகனுடன் ஒன்று முதல் ஆறு பேர்வரை வில்அம்பு, சூலாயுதம், கோடாரி, ஈட்டிகள், கம்பம் மற்றும் வாள் முதலிய போர் கருவிகளைக் கொண்டு போரிட்டனர். எதிரிகளை நேரடியாக யானைகளை வைத்துத் தாக்கவும் செய்தனர். நீண்ட விஷம் தடவிய வாளை இரும்பு கவசம் கொண்ட யானைகளின் தந்தங்களில் கட்டி அவைகளை இரும்பு அரணாகப் பயன்படுத்தினர்.

வீரபாண்டியன் படைகள் கரந்தடிப் போர்முறையில் பதுங்கித் தாக்கவும், மாலிக்காபூர் படையில் பாதி, வீரபாண்டியனுடன் போரில் ஈடுபட்டிருக்க, மீதிபேர் மதுரை கோட்டை வாசலை நெருங்கினர்.

கோட்டையின் வாயிற்கதவுகள் பிரம்மாண்டமாக இருந்தாலும், அதனை மூடி அந்தக் கதவுகளில், உள்ள மிகச் சிறய அளவுக் கதவுகள் திறந்து உபயொகத்தில் இருந்தது. எதிரிநாட்டு வீரர்கள் கோட்டைக்குள் நுழைய, சிறிய வாயில் வழியாக நகருக்குள் எட்டிப்பார்க்க முற்பட்டனர். அப்போது அவர்கள் தலை கொய்யப்பட்டது.

அதோடு கோட்டைக்குள் இருந்த விக்ரமசீலன் சிறு படையைக் கோட்டையின் மேற்புறம் நிறுத்தி வைத்திருந்தான். அந்தப் படைவீரர்களும் கோட்டையை நெருங்கிய எதிரிநாட்டு வீரர்களைத் தாக்கினர்.

இவ்வாறாக எந்தப் பக்கமும் ஊடுருவ முடியாமல் திணறிய மாலிக்காபூர் படைகள் மீண்டும் பின் வாங்கின…

தொடர்ந்து பத்துநாட்களுக்குமேல் வீரபாண்டியனின் படைகள் காத்திருந்தும், மாலிக்காபூர் போருக்கு வரவில்லை…

இனி வந்தால், தான் பார்த்துக்கொள்வதாகக் கூறிய பெருங்கிள்ளிப் பாண்டியர், வீரபாண்டியனை அரண்மனைக்கு அனுப்பி வைத்தார்.

பத்துநாட்கள் பெருங்கிள்ளிப் பாண்டியர், அடுத்தப் பத்துநாட்கள் வீரபாண்டியன் என்று மாற்றி மாற்றிப் படைவீரர்களுடன் கண்ணனூரில் இருந்தனர்.

அடுத்த பத்து நாட்கள் பெருங்கிள்ளிப்பாண்டியர், கண்ணனூர் செல்ல,

வீரபாண்டியனும், படைவீரர்களுகாகுத் தேவையான உணவு, உடைகள் அனுப்பி வைத்துவிட்டு, பாண்டிய அரண்மனையில் தங்கினான்.

அடுத்த அரண்மனையில் சிவதாசன் எனும் விக்ரமசீலன் தங்கியிருந்தான். அடுத்த மாளிகையில் யாழ்நிலா போன்ற தோழிகள் தங்கியிருந்தனர்.

நன்றாக உறங்கிக்கொண்டிருந்த யாழ்நிலாவிற்கு மனம் ஏனோ வெகுவாகப் பதட்டப்பட, எழுந்து தண்ணீர் குடித்துவிட்டு, மேல்மாடத்திற்குச் சென்று மீனாட்சி அம்மன் கோயில் கோபுரத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும்பொழுது, ஆயுதங்கள் மோதிக்கொள்ளும் சப்தம் கேட்கவே, அவசரமாக மன்னர் அரண்மனைக்குச் சென்றாள்.

அங்கே வேளிப்புற கூடத்திலே விக்ரமசீலன் மூர்க்கமாக வாளாலும், ஈட்டியாளும் எதிரிலிருந்தவர்களைத் தாக்கிக்கொண்டிருந்தான்.

"நடுநிசியில் சண்டையிடும் யார் இவர்கள்?" என்று யாழ் யோசிக்க,

"யாழ்! அரண்மனைக்குள் வாளுடன் சென்று, ருத்ரநங்கைக்கு உதவி செய்!" என்று கத்தியபடி சண்டையிட்டான் விக்ரம சீலன்.

உடனே அரண்மனைக்குள் சென்ற யாழ், அங்கிருந்த வாளை எடுத்துக்கொண்டு ஆயுத சப்தம் கோட்கும் பகுதிக்கு விரைய,

ருத்ரநங்கை இருகையிலும் வாளேந்தி பத்துக்கும் மேற்பட்ட வீரர்களுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்தாள். யாழும் உடன் சேர்ந்து கொண்டாள்.

ருத்ராவின் வாள் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல், மாலிக்காபூரின் வீரர்கள் மண்ணில் சாய, ருத்ரநங்கையின் வாள்வீச்சைக்கண்டு மிரண்ட வீரர்கள் பின்வாங்கினர்.

மற்ற வீரர்களுடன் போரிட்டுக் கொண்டிருந்த ருத்ராவின் மேல் குத்துவாளை மாலிக்கபூரின் சேனைத்தலைவன் எறிய, அது சரியாக ருத்ரநங்கையின் இதயத்தைக் கிழித்தது‌.

அதைக்கண்ட யாழ் ருத்ரநங்கையை நோக்கிச் செல்ல,

“பிடிடா இவளை!” என்று சேனைத்தலைவன் கட்டளை இட்டான். யாழின் முதுகில் கத்தித்யைத் தூக்கி எறிந்ததும், அப்படியே சாய்ந்த யாழைக் காலால் உதைத்துச் சுவரோரம் வீசிவிட்டு, ருத்ரநங்கையை நெருங்கினர்.

அப்பொழுதும் ருத்ரநங்கை வாள்வீச இரு வீரர்கள் சாய்ந்தனர்.

“இவளைப் பிடியுங்கள்!” என்று சேனைத்தலைவன் கூற,

பின்புறமாகத் திரைச்சீலையை வீசி ருத்ரநங்கையைப் பிடித்தனர். அந்தச் திரைச்சீலையாலேயே ருத்ரநங்கையின் கரங்களைப் பின்புறமாகக் கட்டினர்.

“இப்பொழுதும் ஒன்றும் மோசமில்லை! என்னுடன் வா… எங்கள் சுல்தானுக்கு உன்னைக் காணிக்கை… என்று கூறி முடிக்கும்முன்னரே, சேனைத்தலைவனைக் காலால் எட்டி ஓர் உதைவிட்டாள் ருத்ரநங்கை… இதைக்கண்ட எதிரிவீரன் கைகள் கட்டப்பட்ட ருத்ராவின் தலையில், அருகிலிருந்த தங்கக் குடுவையால் தாக்க, வலியை வெளிக் காட்டாமல்,

"ச்சீ! நீயெல்லாம் ஆண்மகனா? என் கட்டுகளை அவிழ்த்துவிட்டு போருக்கு வா…" என்று இகழ, மீண்டும் ஒரு குத்து வாளால் ருத்ரநங்கையின் மணிவயிற்றில் குத்தினர். பெண் என்றும் பாராமல் ருத்ரநங்கையைச் சுற்றிலும் நின்று, அவ்வீர மங்கையை வாளுக்கு இரையாக்கினர்.

இதைக் கண்டு துடித்த யாழ், மிகவும் கஷ்டப்பட்டுக் கைகளைத் தரையில் ஊன்றி நகர்ந்து, “நங்கை…” என்று அலறியபடி ருத்ராவின் அருகில் சென்று, ருத்ரநங்கையின் தலையைத் தன் மடிமேல் தாங்க,

"இவர்களை விட்டு விடாதே யாழ். உறங்கிக்கொண்டிருந்த மாறனை வெட்டி வீழ்த்தி விட்டனர்… படுக்கை அறை சென்று என் மன்னவனைப் பார்…" என்று கூறி கண்மூடினாள் ருத்ரநங்கை.

அவளை அப்படியே விட மனமின்றி, கஷ்டப்பட்டுத் தன் தோள்களில் தூக்கிக்கொண்டு படுக்கை அறைக்குச் சென்று பார்த்தவள் கண்களில் ரத்தம் வழிந்தது. வீரத்தின் திருவுருவம் உறங்கி விழிக்கும்முன்னே விழிமூடியிருந்தது…

மாறனின் அருகில் ருத்ரநங்கையைக் கிடத்துவதற்காக மாறனின் படுக்கையை நோக்கி யாழ் செல்ல எத்தனிக்கையில், பல வீரர்களின் காலடி ஓசை கேட்கவே, ருத்ராவோடு தூணிற்குப் பின் மறைந்து கொண்டாள் யாழ்நிலா.

மாலிக்காபூர் தலைமையில் உள்ளே வந்த படைவீரர்களிடம்,

"இவனைத் தூக்கி வாருங்கள்!" என்று கட்டளையிட்டு அறையைவிட்டு வெளியேறினான் மாலிக்காபூர்.

வீரபாண்டியனின் உடலைத் தூக்கிக்கொண்டு வீரர்கள் செல்வதைப் பார்த்த யாழ், ருத்ராவின் உடலைப் படுக்கைக்கு அடியில் கிடத்தி, திரைச்சீலைகளைக் கொண்டு மறைத்துவிட்டு, எதிரிநாட்டு வீரர்களை அவர்கள் அறியாவண்ணம் பின் தொடர்ந்தாள்.

மாலிக்காபூர், அரண்மனைக்குச் சொந்தமான பசுக் கொட்டிலுக்குச் செல்ல, வீரர்களும் பின்தொடர்ந்தனர்…

பசுக் கொட்டிலுகு அருகில் இருந்த கல்தூணில் வீரபாண்டியனை கட்டிவைத்து, அவன் வெற்றுடம்பை, உப்பு தடவிய மாட்டுத்தோலால் இறுக சுற்றிக் கட்டிவிட்டு,

“இரண்டு நாட்கள் கழித்து வருகிறேன் யாரும் இங்கே வந்துவிடாமல் கவனமாக இருங்கள்" என்று கூறிவிட்டு, மாலிக் காபூர் படைகள் சூழ கிளம்பிவிட்டான்‌.

அவர்கள் ஏன் இப்படிச் செய்கிறார்கள் என்று புரியாமல், தான் ஒருத்தியால் மட்டும் இத்தனை பேரைச் சமாளிக்க முடியாதென்று, விக்ரமசீலனை அழைத்துவர ஓடினாள் யாழ். ஆனால் அதற்குள் விக்ரமசீலனையும் வீழ்த்தியிருந்தனர்…

விக்ரமசீலனை நோக்கி ஓட எத்தனித்தவள், தன் உடலில் பட்ட காயத்தின் வேதனையாலும், இவ்வளவு நேரமும் கண்ட கோரக்காட்சியால் மனம் உழன்றதாலும், தன் இதயம் கவர்ந்தவனின் உடலைப் பார்த்த அதிர்ச்சியிலும், தனக்குப் பிரியமானவர்கள் யாருமே இல்லை என்ற எண்ணம் பெரிதாய்த்தாக்கியதாலும் யாழின் இதயம் தன் துடிப்பை தாறுமாறாகத் துடிக்க, கண்கள் இருட்டி கீழே சாய்ந்தாள்.

மீண்டும் எழுந்து பாறையாய்க் கனத்த உடலை மிகவும் கஷ்டப்பட்டு வருத்தி மெல்ல மெல்ல சீலனின் அருகில் சென்றாள்.
பெண்ணின் இளம் மனம், ஒரே நாளில் எத்தனை துன்பத்தைத்தான் தாங்கும்? அதற்குமேல் பொறுக்க இயலாமல் சீலனின் நெஞ்சில் விழுந்து கதறியவள், சீலனின் இதயம் மெல்லத் துடிப்பதை உணர்ந்தாள்…

உடனே எழுந்து, விரைந்து சென்று, அரண்மனையின் பிருந்தாவனத்தில் வளர்ந்திருந்த மயக்கம் தெளிவிக்கும் மூலிகையை எடுத்துக்கொண்டு, விக்ரமனின் அருகில் அமர்ந்து, மூலிகையைக் கசக்கி விக்ரமனின் நாசித்துவாரத்துக்கு அருகில் வைத்தாள்.

அப்படியும் விக்ரமன் கண்திறக்காமல் கிடக்கவே, தண்ணீர் எடுத்து வருவதற்காக எழுந்து சென்றவள் சிறிது தூரம் சென்றதுமே மயங்கிச் சரிந்தாள்.

அந்தோ! வீரத் தமிழினத்தின் மாட்சிமையை எட்டுத்திக்கும் பறைசாட்டிய வெற்றி வேந்தனை இந்நிலையில் பார்க்கும் மனோதிடம் எனக்கில்லை. இதோ நான் மறைந்தே போகிறேன் என்று மறைகிறான் அந்தி நேரக் கதிரவன்.

வெய்யோன் மறைய… இமைகளைப் பிரிக்க முடியாமல், மெல்ல மெல்ல இமைகளைப் பிரித்துப் பார்த்தான் விக்ரமன்... விரும்பத் தகாத நெடி மூக்கைத் துளைக்க, கண்களை மலர்த்திச் சுற்றிலும் பார்க்கிறான்…

அரண்மனையின் தர்பார் மண்டபத்தின் முன் இருந்த பெருந்திடலின் மத்தியில் தாம் கிடப்பதை உணர்ந்த விக்ரமன், "சொக்கா! இதெல்லாம் உண்மைதானோ? நான் அசுப கனவேதும் காண்கின்றேனோ? என் இனம், என் இனத்தில் பிறந்த ஒருவனாலேயே சிதைக்கப்பட்டு விட்டதா? ஏழு கடல் தாண்டி ஆட்சியமைக்க ஓடியவன், ஏழடிக்கு அருகிலேயே இருந்த புல்லுருவியை, சாதாரணமாக எண்ணியது இன்று இவ்வளவு பெரிய இழப்புக்குக் காரணமாகிவிட்டதே?” (முதல் அத்தியாயம்!)

"என்ன கொடுமை?... படைவீரர்கள் இரத்தத்தில் மிதக்கின்றனரே… துரோகத்தால் அழியப் போகிறோம் என்று தெரிந்தும் இறுதி வரை போரிட்ட என் செல்வங்கள் மண்ணில் சாய்ந்து விட்டனரே…

“அடப்பாவி துரோகி சுந்தரா! இவர்கள் எல்லாம் நமக்காக, உன் சந்ததிக்காவும்தானே பாடுபட்டனர்… நம் இரத்தத்தை, நாமே குடிப்பதைப் போன்றதடா நீ செய்த செயல்… இந்த மாபெரும் புகழுடைய வீர வம்சத்தில் இப்படியொரு பிறவி எப்படிப் பிறந்தாய்? அடேய்! அடி முட்டாளே! பிறரிடம் நம் குலத்தைக் காட்டிக் கொடுத்து நீ அடையப் போவதென்ன? வானவரே நடுங்கும் படையையும், வீரமும், தீரமும் இருந்த நம் நிலத்தையும் அழித்து விட்டு, அந்நியன், உன்னை மட்டும் நன்றாக வாழ வைப்பான் என்றா நினைக்கிறாய்?... உம்முடைய தீய ஆசைக்கு நம் மக்களை, அந்நியரிடம் பறிகொடுத்து விட்டாயே… அந்நியர் கையில் நம் மக்களின் நிலையை ஒரு முறையாவது நினைத்துப் பார்த்திருந்தால் இப்படியான ஒரு கொடூரச் செயலை நீ செய்திருக்க மாட்டாய்… உனக்காக இன்று நான் மிகவும் வேதனைப்படுகிறேன்… இன்றைய உன் செயல் காலம் காலமாக நம் தமிழ் மக்களால் தூற்றப்படும்…. மாண்டு கிடக்கும் நம் வீரர்களைப் பார். இவர்கள் எதற்காக, தம் நாட்டிற்காக உயிர் துறக்க வேண்டும்? இவர்கள் உண்ட உணவைத்தானே நீயும் உண்டாய்? இவர்களிடம் உள்ள தேசப்பற்றில் சிறிதேனும் உனக்கு இல்லாமல் போனதே…" என்று வருந்தியவன்,

"இந்திரலோகத்தையும் விஞ்ச, பார்த்துப் பார்த்து வடிவமைத்த நாடு, இனி தன் வேந்தனைப் பிரிந்த அவலத்தில் சீர்குலைந்து போகுமோ… மகாதேவரும் ஆசைப்பட்டுப் பவனி வரும் தேர்கள் வெறும் மரத் துண்டுகளாகிப் போனதே… பேணி வளர்த்து, அதன் திறமைகளைக் கண்டு பெருமையுடன் பார்த்து ரசித்த, போர் யானைகளும் குதிரைகளும் இன்று, பிணம் உண்ணும் உயிரினங்களுக்குப் பலியாவதைக் காண்கிறேனே... இப்படியொரு நாள் வரக்கூடாதென்று தானே அல்லும் பகலும் என் கண்ணைப் போல் காத்தேன்… இறுதியில் தன் விரலே தன் கண்ணைக் குத்தும் நினைத்துப் பார்க்கவில்லை…" என்று வருந்தியவன், தன்னுடைய இறுதி நேரம் நெருங்கியதை உணர்ந்ததும்,
"என்னை ஈன்ற தாயே! எமக்குத் துணை நின்ற ஈசனே! மீனாட்சி அம்மையே! இத்தனை காலம் எனைச் சுமந்த தமிழ் மண்ணே… என் இறுதி வேண்டுகோளை நிறைவேற்ற வேண்டுகிறேன்… எனக்குப் பிறகு எம் தமிழ் மண்ணை, ஆருயிர் தமிழ் மக்களை, தாயாய் அரவணைத்து, தந்தையாய் வழிநடத்தி, இறையாக நின்று காத்தருளுவீராக… வருகிறேன்." என்று கண்மூடித் தலை சாய, இருகரங்கள் அவனுடைய தலையைத் தாங்கி, மடி மீது வைத்தது...

மிகவும் சிரமப்பட்டு, 'இவ்வேளையில் தன்னை மடியில் தாங்குபவர் யார்?' கண் விழித்துப் பார்த்தான்.

விக்ரமனுடைய தாயின் முகம் கண்களில் தேங்கிய கண்ணீருடன் காட்சியளிக்க,

பிறகு, அவன் தாய் முகம் மறைந்து, வேறொரு பெண் முகம் தோன்றியது.

"யாரம்மா நீர்?" என்று விக்ரமன் கேட்டான்.

"என்றும் யாராலும் வெல்ல முடியாத என் வீரத்திருமகனே… இத்தனை காலம் உன்னைப் பெருமையுடன் தாங்கிய மீனாட்சியடா நான்!" என்று கூறினாள்.

அந்த நிலையிலும் தன் மீசையை வருடிக்கொண்டே சிரித்த விக்ரமன், "இதைத்தான் தாயன்பு என்பதா? வீழ்ந்து கிடக்கின்றேன்... என்னைப் பார்த்து யாராலும் வெல்ல முடியாதவன் என்கிறாய் தாயே!" என்றவனின் இதழ்களைத் தன் திருக்கரங்களால் மென்மையாக மூடியவள்

"அப்படிச் சொல்லாதே என் வெற்றித் திருமகனே! நீங்கள் வீழவில்லையடா... வீழ்த்தப்பட்டவர்கள்… எம் வீரத்தமிழ் மகனை இதுவரை நேருக்கு நேர் நின்று போரிட்டு வெற்றி பெற ஒருவரும் பிறக்கவில்லையடா... இனி ஒருவரும் பிறக்கப் போவதுமில்லை… இப்படிப்பட்ட துரோகிகளையும் சுமப்பதில் வெட்கத்தில் தலை சாய்கிறேன். என் தவிப்பை அறிவாயா மகனே"

"தாயே! என் இறுதி மூச்சுள்ளவரை என் தாயாகிய நீயும்… என் தமிழ் மக்களும் தலைகுனிய விடமாட்டேன்… என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள்…"

"உன்னுடைய கடமையை மறந்தாயா? அல்லது என்னை சாட்சியாக வைத்து உன் நண்பனுக்கு நீ தந்த வாக்கை மறந்தாயா? எழுந்து வா மகனே..." என்ற மீனாட்சி அம்மையின் கூற்றுகள் கொஞ்சம் கொஞ்சமாகக் காற்றில் கரைவதைப் போல் தோன்றியது...

இரண்டு தினங்கள் கழித்துக் கண்விழித்த விக்ரம சீலன் அருகில் ஒடிவந்து நின்ற யாழ், “பிழைத்து விட்டிர்களா?” என்று கண்ணிர் மல்கக் கேட்டாள்.

“ஆம் பிழைத்துக் கிடக்கிறேன். `உயிர் காப்பான் தோழன்!` என்ற நன்மொழியைப் பொய்யாக்கி மாறனைப் பறிகொடுத்து, நான் மட்டும் பிழைத்து வந்துவிட்டேன்…” என்று குறுகியவனை,

“உயிர் காப்பது மடும்தான் தோழனின் கடமையா? தோழனை வதைத்தவனுக்குத் தகுந்த தண்டனை கொடுப்பதும் தோழன்தானே?” என்று யாழ் கண்கள் சிவக்கக் கூற,

“அவனுக்குத் தண்டனை கிடைத்துவிட்டால் என் மாறன் வந்துவிடுவானா”

“ஆத்ம சாந்தி அடைவார்… `என் மன்னவனைக் கொன்றவர்களை விட்டு விடாதே யாழ்` என்று நங்கை இறுதியாக என்னிடம் கேட்டது இதுவே.” என்று யாழ் கூறிக்கொண்டிருகும் பொழுதே,

வீதியில் அலறியபடி மக்கள் ஓடுவதைப் பார்த்த விக்ரம சீலனும், யாழும், அவர்களைப் பின் தொடர்ந்தனர்.

ஊர் மக்கள் அனைவரும் கோட்டை வாசலில் பீதியுடன் இமைகளைக்கூடச் சிமிட்ட மறந்து, கண்ணீர் ஆறாய் பெருக நின்றிருந்தனர்…

என்னவென்று அருகில் சென்று பார்த்த விக்ரமனின் உதிரம் உறைந்தது.

கோட்டை வாசலில் வீரபாண்டியனின் உடல் தொங்கிக்கொண்டிருந்தது… மாறா! என்று அலறப்போனவன் தன்னை அடக்கிக்கொண்டு, வீரபாண்டியனின் உடல் அருகே சென்று பார்க்க,

அந்தோ என்ன கொடூரம்? பசுவிடம் பால் கரப்பதற்காக, இறந்துபோன கன்றின் தோலை உரித்து அதற்குள் வைக்கோலை தினித்திருப்பதைப் போல், மாறனின் தோலுக்குள் வைக்கோலை அழுத்தி வைத்துக் கோட்டை வாசலில் தொங்கவிட்டிருந்தனர்…

அதைக் கண்டு பொறுக்க முடியாத ஒருவன், “நம் அரசரின் தோலைத் தனியே உரித்திருக்கிறார்களா?… என்ன நடந்தது?” என்று பதற,

வீரத்தின் விளைநிலமாய் வீற்றிருந்த நம் வீரபண்டியரின் மேல், உப்புத் தடவப்பட்ட மாட்டின் தோலைச் சுற்றிக்கட்டி, அரண்மனை பசுக்கொட்டிலுக்கு அருகிலிருந்த கல்தூணில் கட்டி வைத்து விட்டனராம். இரண்டு நாட்கள் வெயிலில் காய்ந்து, காற்றில் உலர்ந்ததும் அரசரின் உடல்மேல் சுற்றப்பட்ட மாட்டின் தோலை அவிழ்த்து எடுக்கும்பொழுது அரசரின் தோலும் உரிந்து வந்துவிட்…”

“ஐயோ! போதும்! போதும்!” என்று கேட்டவன் அலற,

அவற்றைக் கேட்ட சீலனின் கை முஷ்டி இறுக, கண்கள் மூடிய நிலையிலும் கண்ணீர் ஆறாக,

"அடப்பாவி!" என்று ஒரே நேரத்தில் அலறினர் விக்ரமசீலனும் யாழ்நிலாவும்…

தன்னுணர்வு பெற்றுக் கண்களில் வடிந்த கண்ணீரைத் துடைத்துவிட்டுப் பார்க்க, வீரபாண்டியனின் உடல் மறைந்து, மாலிக் காபூரின் தலை, தொங்கிக் கொண்டிருந்தது…

மாலை சூரியன், கெடுமதி பிடித்தவனுக்கு, இறைவன் கொடுத்த தண்டனையால் மனம்குளிர, மேற்கே இருந்த மேகத்தில் நிம்மதியாகச் சாய்ந்தான்.

வனத்தில் இருந்த வசந்தமண்டபம், நினைவுமண்டபமாக மாறியிருக்க, மண்டபத்தைச் சுற்றிலும் பிருந்தாவனமாக மாற்றியமைத்திருந்தார் பெருங்கிள்ளிப் பாண்டியர்.

வசந்தமண்டபத்தினுள் மாறனின் சிதை இருந்த இடத்தில் ஒரு மேடையும் மாடமும் காட்டி அதில் தூண்டாவிளக்கு எரிந்து கொண்டிருந்தது, மாறனுக்கு அருகிலேயே மற்றொரு மாடத்திலும் விளக்கெரிய, கேள்வியுடன் பெருங்கிள்ளிப் பாண்டியரைப் பார்த்தான் விக்ரமன்.

“மாறன் அருகே ருத்ராதேவியைத்தவிர வேறு யார் இருக்க முடியும்” என்று புன்னகைத்தார்.

“இதெல்லாம் எப்போது செய்தீர்கள்?”

“நீ தில்லி சென்றாயே அன்றே ஆரம்பித்தேன்… எனக்குத் தெரியும் நீ வெற்றியுடன் திரும்புவாய் என்று.”
மாறனிடம், தான் கொடுத்த வாக்கை நிறைவேற்றிய தோழனாய் நின்றுகொண்டிருந்தான்.

அப்பொழுது. “இங்கே யாருடைய சிதை” என்று யாழ் கேட்பது அறிந்து அங்கு சென்று பார்த்தான்.

“இது சுந்தரபாண்டியருடையது!” என்றான் அருகிலிருந்த பணியாள்.

“அவரும் இறந்துவிட்டாரா? பொக்கிஷங்களுடன் ஓடிவிட்டதாகத்தானே தில்லி அரண்மனையில் கூறினார்கள்.”

“பொக்கிஷங்களையெலாம் மறைத்து வைத்தது நானும், மாறனும்” என்று கூறியபடியே விக்ரம சீலன் யாழ் அருகே சென்றான்.

“அப்படியென்றால் சுந்தரர் எப்படி?”

“அந்நியனிடம் தன் தேசத்தைக் காட்டிகொடுத்தவனை, அந்நியன் மட்டும் நம்புவானா என்ன? சுந்தரனிடம் நாட்டைக் கொடுப்பதற்காகவா இங்குப் படை நடத்தி வந்தார்கள்? பாண்டிய தேசத்தைக் கைப்பற்றியதும் முதல் பலியே சுந்தரன்தான்.”

மீனாட்சி அம்மன் கோயிலைச்சுற்றிலும் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது.

ஒருபுறம் உணவு தயாராகியபடி இருக்க, மற்றொருபுறம் பந்தி பரிமாறியபடி இருந்தனர்…
அரசனுக்குரிய சர்வ லட்சணத்துடன் இருந்த விக்ரமன், திரும்பித் தன்னருகில் எழில்மிகு வடிவும், அதை மிஞ்சும் நாணமுமாய் நின்றிருந்த யாழ்நிலாவைப் பார்த்தான்!
“நல்லநேரம் முடிவதற்குள் யாழ்நிலாவின் கழுத்தில் மாலையைப் போடு விக்ரமா!” என்று ஆனந்தம் பொங்க ஆணையிட்டார் இதுவரை நாம் பெரியவர் என்று அழைத்த பெருங்கிள்ளிப் பாண்டியர்.

சுபயோக சுபதினத்தில் கற்திரை அகற்றப்பட்டு, மீண்டும் பூஜை புனஸ்காரங்களோடு மாணிக்கமூக்குத்தி மின்ன மரகதச்சிலையாய் வீற்றிருந்த மீனாட்சி மனம் நிறைந்து ஆசீர்வதிக்க,

பாண்டிய தேசத்தின் பேரரசன் சிவதாசன் எனும் விக்ரமசீலன், யாழ்நிலாவின் மணிக்கழுத்திவ் மங்கலநாண் பூட்டினான்.

"இப்பாண்டிய தேசத்தையும், உன் இல்லாளையும் இருகண்களாய் பாவித்து, பல்லாண்டு நீடூழி வாழ்க மகனே!" என்று சிவனையார் ஆசீர்வதித்தார்.

பின்னர், குலகுரு கூறக்கூற விக்ரம சீலன், திருமண உறுதிமொழியைக் கம்பீரமாகக் கூறினான்…

"சிவதாசன் எனும் நான்..."
வார்த்தைகளின் எண்ணிக்கை -1848

சிவதாசனின் கர்ஜனை தொடரும்…
(...பாண்டிய தேசத்தைக் காப்பதற்காக!)
⚔️⚔️⚔️⚔️⚔️⚔️

"சிவதாசன் எனும் நான்! இனிதே நிறைவடைகிறது…"

மீண்டும் அடுத்த நாவலில் சந்திப்போம் நன்றி!
-மீராஜோ
 
Status
Not open for further replies.
Top Bottom