Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Completed நிலவுக்கு ஏன் கோபம்? - இந்திரா செல்வம்

Meena

Saha Moderator
Staff
Messages
1,070
Reaction score
85
Points
48
11

கண்ணுக்கெட்டிய தூரம் வரை பறந்து விரிந்த நிலம், 50 ஏக்கர் நிலம் என்றால் வேறு எப்படியிருக்கும். ஆங்காங்கே தென்னை, பனை, மா என்று மரங்களும் இருந்தன. மேடும் பள்ளமுமாகத்தான் இருந்தது நிலம். வழிகாட்டியாக இருந்தவர் பேசிக்கொண்டே வந்தார்

‘இங்கே நிலத்தடி நீர் ரொம்ப அதிகம். ரொம்ப டேஸ்ட்டாகவும் இருக்கும். அதுக்குத்தான் இங்க ஒரு கிணறு எடுத்திருக்கிறோம். வாங்க பார்க்கலாம்.

அங்கிருந்த கிணற்றில் தண்ணீர் அதிக தூரத்தில் இல்லை. தண்ணீரை எடுத்து அனைவருக்கும் அருந்த கொடுத்தார்கள்.

‘ம்..மினரல் வாட்டர் மாதிரி இருக்கே...’ சங்கர் அதிசயித்தான்.

‘நாம் இருக்கிறது கோவையாக்கும். இங்க தண்ணீர் எப்படி நல்லாயில்லாம இருக்கும்’’ விளக்கமளித்தான் செல்வா.

‘இங்கே ஒரு ஹைவே வரப்போகுது.. அதையொட்டின மாதிரி நம்ம நிலம் இருக்கிறதால, பிற்காலத்துல நிச்சயமா விலை கூடும். இதுதான் அந்த ஹைவே பிளான்...; ஒரு பிரிண்ட் அவுட்டை எல்லோருக்கும் கொடுத்தார், விளக்கமளித்தவர்.

ஓவியா அதை கவனமாக பார்த்தாள்.

‘அதுவுமில்லாம இந்த 50 ஏக்கர் நிலத்தை ஒவ்வொரு ஏக்கரா பிரிச்சி கொடுத்திடுவோம். உங்களுக்கு எந்த ஏக்கர் வேணுமோ, நீங்களே முடிவு செய்யலாம்’

‘ரோட்டோரத்துல வாங்கினா நல்ல ரேட் போகும்தானே ஓவியா?’ ஆர்வமாக கேட்டான் செல்வா.

‘உங்க கணக்கு தப்பு செல்வா. எப்பவுமே எந்த நிலத்தையும் ரோட்டோரத்துல வாங்கக் கூடாது. அதுவும் இது ஹைவே. அதனால நிச்சயமா வாங்கக் கூடாது. பிற்காலத்துல இந்த ஹைவேயை எக்ச்டேன்ட் பண்ணுவாங்க. அப்ப கவர்மென்ட் நம்ம நிலத்தை எடுத்துப்பாங்க. அதுக்கு கவர்மென்ட் ரேட்டுதான் கிடைக்கும்.. போட்ட காசைக் கூட எடுக்க முடியாது. அதனால ரோட்டை விட்டு ஒரு ஏக்கர் தள்ளி வாங்கலாம்...’

‘இந்த டாக்குமெண்ட்ஸ் பவர்ஆப் தானே போட்டிருக்கு. அதனால எதுவும் பிரச்சனை வராதே? கேள்வி எழுப்பினான் சங்கர்.

‘பவர்ஆப்ங்கிறது ஒருத்தரோட நிலத்தை முன் பணம் மாதிரி கொடுத்து வாங்கி, அதை மத்தவங்களுக்கு வித்து, அதுல நிலத்துக்கு சொந்தக்காரர்கிட்டே பேசின பணம் கொடுத்துட்டு மீதி பணத்தை இவங்க எடுத்துக்குவாங்க’

‘செம பிசினஸ் இல்ல?’ அதிசயித்தான் செல்வா

‘ம்..இப்போ அதிக லாபம் இந்த பிசினஸ்தான்’

கண்கள் விரிய ஆர்வமாய் விளக்கியவளை கண் கொட்டாமல் பார்த்தான் செல்வா. தன் வேலையில் அவளுக்கிருந்த ஆர்வத்தை தன் மனதிற்குள் பாராட்டிக் கொண்டான். இப்படி ஒரு பி.ஏ கிடைக்க குரு கொடுத்து வைத்திருக்கனும்.

எல்லா பார்மாலிட்டீசும் முடிந்து அவரவர்களுக்கு தேவையான இடங்களை தேர்வு செய்து, முன்பணம் கொடுத்தனர். ஓவியா டாக்குமெண்ட்சை பற்றி நிறைய சந்தேகங்களைக் கேட்டு தெளிவுபடுத்திக் கொண்ட பின்னரே, 5 ஏக்கர் நிலப் பரப்பிற்கு முன் பணம் கொடுத்தாள். உடனே அதை குருவுக்கு தெரியப்படுத்தினாள்.

‘நீங்க செஞ்சா எல்லாம் சரியாகத்தான் இருக்கும் ஓவியா... போனை செல்வாவிடம் கொடுங்க. என்ன சார்.. போனையே காணோம் ... ரொம்ப பிஸியா?’

‘இல்லடா.. இங்க டவரேயில்ல. மொதல்ல அப்பா எப்படி இருக்காருன்னு சொல்லு?’

‘பரவாயில்லடா. ரொம்ப பயமுறுத்திட்டாரு...’

‘டாக்டர் என்ன சொன்னாங்க?’

‘வயசாயிட்டா இப்படித்தான்னு அசால்ட்டா சொல்றாங்க’

‘நல்லா பார்த்துக்கோடா...’

‘நான் நல்லா பாத்துக்கிறது இருக்கட்டும். என்ன ஓவியாகிட்ட ஏதாவது வாலாட்டினியா?’

‘அட நீ வேற.. நான் ஜென்டில்மேன்னு சொல்லிட்டியே.. அப்புறம் எப்படி உன் வார்த்தையை காப்பாத்தத்தான் சும்மா இருக்கேன்’

‘ச்சே.. ச்சே.. ச்சே.. நெஞ்ச தொட்டுட்ட சகல. முடியல. ஆனால் காரணம் அதுவா இருக்காது. நீ வாலாட்டினா ஓவியா ஓட்ட நறுக்கிடுவா. அந்த பயம்தான் உனக்கு. ஆனால் மறைக்கிற, சரி விடு எப்போ கிளம்புறீங்க?’

‘நாளைக்கு ரெஜிஸ்ட்ரேஷன் முடிச்சிட்டு நைட் கிளம்பிடுவோம்’

‘ஓகே டா டேக் கேர்.. பை..’ வைத்துவிட்டான்.

முன் பணம் கொடுத்ததும் அனைவரும் அந்த அடுக்குமாடி வீட்டிற்கு சென்றனர்.

கான்பரன்ஸ் ரூமில் அனைவரும் சேர்ந்துவிட்டனர். மேடையில் ஒருவன் மைக்கை பிடித்தான்.

‘ஹலோ பிரண்ட்ஸ்.... எல்லோரும் நிலம் வாங்கின சந்தோஷத்தை கொண்டாட வேண்டாமா?’

“ஆமா..’ கூட்டத்தில் சத்தம் எழுந்தது.

‘இட்ஸ் பார்ட்டி டைம்.. எல்லா வகை இன்பங்களும் இங்கு உங்களுக்காக.. என்ஜாய்...’ என்றவர் ஒரு பீர் பாட்டிலை குலுக்கிப் பீயிச்சினார்.

கூட்டத்தில் ஆரவாரம் அதிகமாகியது

‘ஆனா அதுக்கு முன்னாடி சின்ன கல்சுரல் புரோகிராம். பாடுறவங்க, ஆடுறவங்க, ஜோக்ஸ், கவிதை இப்படி உங்களோட டேலண்ட் எதுவாயிருந்தாலும் இந்த மேடை வரவேற்கிறது.

நிறைய பேர் ஆர்வமாக பங்கேற்றனர். சங்கர் சென்று ஒரு பாட்டிற்கு ஆட்டம் போட்டுவிட்டு வந்தான்.

‘நீங்களும் போய் ஏதாவது பண்ணுங்களேன் செல்வா.. ஆசையாக கேட்டாள் ஓவியா.

‘மேடம் உத்தரவுக்குதானே காத்திருக்கிறேன்’ மேடையை நோக்கி விரைந்தான்.

‘ஹலோ பிரண்ட்ஸ்.. பர்ஸ்ட் ஒரு ஜோக் பெத்த பொண்ணுக்கும், எக்ஸாம் பேப்பருக்கும் ஒரு ஒற்றுமையிருக்கு தெரியுமா?’

நிறுத்தினான் கூட்டத்தில் கேள்விக்குறி தொடர்ந்தான்.

‘ரெண்டையும் கட்டிக் கொடுக்கிற வரைக்கும் தலைவலித்தான்.

கூட்டம் ’கொல்’ என்று சிரித்தது.

அதே மாதிரி பெத்த பிள்ளைக்கும், எக்ஸாம் பேப்பருக்கும் ஒற்றுமை இருக்குது.. நிறுத்தினான்.

‘ரெண்டுமே வெண்மையா இருக்குமா பாஸ்...?’

கூட்டத்தில் ஒரு ஆண் குரல் ஓங்கியது.

சிரித்தான் செல்வா. ‘அதான் இல்ல ரெண்டையும் திருத்தவே முடியாது’

கூட்டத்தில் சிரிப்போலியோடு கரவொலியும் சேர்ந்து கொண்டது.

‘நன்றி இப்போ ஒரு கவிதை’

‘இமய மலையில் உள்ள பனிக்கட்டியும், தன் தோல்வியை ஒப்புக் கொள்ளும்.நான் உன்னைக் கண்டு உருகுவதைப் பார்த்தால்’

கூட்டத்தில் பாதி பேர் கை தட்டினார்கள். பாதி பேர் உச்சு கொட்டினார்கள். ஆனால் அவனது கண்களோ ஓவியாவை அர்த்தமுடன் நோக்கிக் கொண்டிருந்தன.

அவன் பார்வையின் கூர்மை தாங்காமல் அவளது விழிகள் பூமியை வருடியது. கன்னங்கள் சிவப்பேறின. இவர்கள் கண்கள் பேசும் பாஷையை சங்கர் பார்த்துவிட்டான்.

ஒரு ஆண் மகனின் கவிதை தன்னை வெட்கப்பட வைப்பது ஆச்சரியமாக இருந்தது ஓவியாவிற்கு. இதயத்துடிப்பு ஸ்வரம் மாறி துடிப்பதை நன்றாக உணர்ந்தாள்.

அவன் தொடர்ந்தான்.

‘இப்போ உங்களுக்காக ஒரு மெட்லி...’

கூட்டம் ‘ஓ..ஹோ..’என்று அலறியது.

புதிதான கானா பாடல்கள், குத்துப் பாடல்கள் என்று கலந்து பாடிய செல்வா, கடைசியாக மெலடிக்கு மாறினான். இறுதிப் பாட்டாக,’ஒரு பொய்யாவது சொல் கண்ணே, உன் காதல் நான்தான் என்று.. அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்...’

பாடல் முடியும்போது அவன் கண்கள் சிவந்திருந்தது. அத்தனை நேரம் ஆரவாரமாக இருந்த கூட்டம் இப்போது அமைதி காத்தது.

செல்வாவின் மனதில் உள்ள சோகம் பாடலாக வெளிவந்தது. அத்தனை முகங்களிலும் அந்த சோகம் தென்பட்டது. ஓவியாவால் அழுகையைக் கட்டுபடுத்த முடியாமல் உதட்டைக் கடித்து கொண்டாள். அதற்கு மேல் அவளால் அங்கு இருக்க முடியவில்லை. இருந்தால் தனது குட்டு வெளிப்பட்டு விடுமென்று நன்றாகவே தெரிந்தது வெளியேறிவிட்டாள்.

சங்கருக்கு அங்கு நடப்பது எதுவுமே முழுமையாகப் புரியவில்லை. இருப்பினும் இருவருக்குமிடையே ஏதோவொரு மௌன யுத்தம் நடப்பது மட்டும் நன்றாகப் புரிந்தது. பார்ட்டி முடிந்து அனைவரும் பீர் பாட்டில்களுடன் உறவாடத் தொடங்கி விட்டார்கள். சங்கர் எவ்வளவோ வற்புறுத்தியும் செல்வா குடிக்கவில்லை. அதனால் சங்கரும் ஒரு பெக்குடன் நிறுத்திக் கொண்டான்.

இரவு உணவு அமைதியாகவே முடிந்தது. இருவர் மனதிலும் அதிகமான பாரம் இருந்ததால் மனம் தனிமையை நாடியது. அவர்களின் அமைதியைக் கலைக்க சங்கர் எவ்வளவோ முயன்றும் முடியவில்லை.

கார் சீரான வேகத்தில் ஹோட்டலை நோக்கி சென்று கொண்டிருந்தது. காரிலுள்ள அமைதி பொறுக்காமல் டிரைவரே ரேடியோவை இயக்கினார்.

‘ஆறும் அது ஆழமில்லை, அது சேரும் கடலும் ஆழமில்லை ஆழம் எது அய்யா இந்த பொம்பள மனசு தான்யா..’ என்ற இளையராஜாவின் குரலில் பாடல் ஒலித்தது. அந்தப் பட்டு முடியும் வரை கண்களை மூடி ரசித்த செல்வா. பின் சங்கரை பார்த்து, ’ரொம்ப அர்த்தமுள்ள பாட்டு இல்ல சங்கர்..’ என்றான்.

அவன் இருவரையும் மாறி மாறி பார்த்து, யாருக்கு சொல்வதென்று புரியாமல் ஒருவாறு ’ஆமாம்’ என்பது போல் தலையசைத்தான்.

‘எவ்வளவு அழகா சொல்லியிருக்காங்க பாரு பெண்கள் மனசுல இருக்கிறதை வெளியே சொல்ல மாட்டாங்கன்னு...’ அவன் குரலில் வெறுமை தெரிந்தது.

‘இப்போ எதுக்கு செல்வா பெண்களைப் பத்தி.. வேற பேசலாமே..’ பேச்சை மாற்ற ஆசைப்பட்டான்.

‘இல்ல சங்கர்.. அதுலயும் ‘கண்ணுல மின்னும் மையு ,அது மையுமில்ல பொய்யுன்னு’ பாடினவரை கண்டிப்பா மனசார பாராட்டனும். அவ்வளவும் உண்மை. எதுக்கு மனசுல இருக்கிறதை மறைக்கணும்...? ஏன் வெளியே பொய் சொல்லனும்?’ அவன் கண்கள் நேராக ஓவியாவை பார்த்தது.

அவன் பேசுவது யாரையோ என்பது போல் வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்தாள்.

இதைப் பார்த்த செல்வாவிற்கு அதிகமாக கோபம் வந்தது.

‘ச்சே..சே.. இந்த பொண்ணுங்களுக்கு பசங்கள அழவெச்சு பார்க்கிறதுல அப்படி என்னதான் விருப்பமோ..’ வெறுப்போடு திரும்பி சாலையைப் பார்த்தான்.

தலையும் புரியாமல் வாலும் புரியாமல் சங்கர் விழித்துக் கொண்டிருந்தான்.

இதைப் பார்த்து ஓவியா தனக்குள் சிரித்துக் கொண்டாள். மீண்டும் அமைதி நிலவியது.
 

Meena

Saha Moderator
Staff
Messages
1,070
Reaction score
85
Points
48
12

அறைக்கு வந்ததும் தன்னிச்சையாக மின் விசிறியை இயக்கிவிட்டு, மெத்தையில் சரிந்தாள்.

உள்ளத்தில் பலவகை உணர்வுகள் உழன்று கொண்டிருந்தது. மகிழ்ச்சி.. செல்வா தன்னை எந்தளவுக்கு நேசிக்கிறன் என்பதை அறிந்த மனம் துள்ளிக் குதித்தது. தனக்காக உருகி, கவிதை சொல்லி, பாட்டுப்பாடி, தன்னையே சுற்றி வரும் அவனது மனதை மிகவும் பிடித்தது.

ஆனால் அவனுடன் எப்படி சேர்ந்து வாழ்வது. தன் தந்தையைக் கொன்றவனுடன் இல்லறம் இனிமையாக எப்படி நடத்துவது? இப்போது காதலுக்காக மணந்து கொண்டாலும், பிற்காலத்தில் என்றாவது ஒரு நாள், என் அப்பாவைக் கொன்றவன்தானே இவன் என்கின்ற நினைப்பு மேலோங்கி விட்டால் என்ன செய்வது? அது வாழ்க்கையையே அழித்துவிடுமே. நிம்மதியைத் தொலைத்து விடுமே. கூடாது இப்போதே அவனது நினைப்பை அழித்துவிட வேண்டும். மனதில் தீர்மானம் எடுத்தாள் ஓவியா.

‘டொக்.. டொக்..’

கதவு தட்டும் ஓசை கேட்டது.

செல்வாவாகத்தான் இருக்க வேண்டும். இப்படி நினைக்கும் பொழுதே அவளின் உள்ளம் துள்ளிக் குதித்தது. சற்று முன் அவள் நினைத்ததையும், அவள் எடுத்த தீர்மானத்தையும் அறவே மறந்துவிட்டாள். வெட்கத்தில் கன்னங்கள் சூடேறின ஆவலோடு கதவை திறந்தாள். அங்கே கைகளை கட்டிக்கொண்டு சங்கர் நின்றான். ஏமாற்றத்தில் முகம் வாடியது அவளுக்கு.

‘உள்ளே வாங்க சங்கர்..’ என்றாள் தீனக் குரலில்.

ஒரு சேரை இழுத்துப் போட்டாள்.

அதில் அமர்ந்த சங்கர், எதிரில் இருந்தவளின் முகத்தைக் கூர்ந்து கவனித்தான்.

அவள் மனம் அதிக குழப்பத்தில் இருப்பது புரிந்தது.

‘நீங்க செல்வாவை எதிர்பார்த்தீங்களா ஓவியா...?’

அவனது நேரடிக் கேள்வியில் விக்கித்துப் போனாள்.

‘இல்லையே..’ மழுப்பினாள்.

‘ஓ.. அப்போ உங்க பிரகாசமான முகம் என்னைப் பார்த்ததும் ஏன் வாடியது?’

என்ன சொல்வதென்றே தெரியவில்லை அவளுக்கு மௌனமாக இருந்தாள்.

‘என் மேலே உங்களுக்கு நம்பிக்கையிருக்கா ஓவியா?’

சங்கரின் இந்தக் கேள்விக்கு என்ன பொருள் என்று அவளுக்குப் புரியவில்லை. இருப்பினும் பதிலளித்தாள்.

‘என்ன சங்கர் இப்படி கேட்கறீங்க. உங்க கூட ரெண்டு நாள் கழிச்சிருக்கேன். உங்க மேலே எனக்கு முழு நம்பிக்கையிருக்கு’

‘அப்போ நான் கேட்கிற கேள்விக்கு மறைக்காம பதில் சொல்வீங்க. தானே?’ கேள்வியாய் நோக்கியவனை, சிறு கலவரத்துடன் எதிர் கொண்டாள்.

‘கேளுங்க சங்கர்..’

‘நீங்க செல்வாவைக் காதலிக்கிறீங்களா?’ கேட்டேவிட்டான்.

இதை எதிர்பாராதவள் பதில் பேச முடியாமல் தலை கவிழ்த்தாள்.

‘இந்த மௌனத்திற்கு என்ன அர்த்தம் ஓவியா?’

சில வினாடி மௌனத்திற்கு பின் இதழ் விரித்தாள்.

‘இதை செல்வா கிட்டயே கேட்கலாமே..?’

‘அங்க கேட்டுட்டுத்தான் நான் இங்கே வந்தேன்’

இப்போது ஓவியா ஆர்வமானாள்.

‘என்ன சொன்னார் செல்வா..?’

அவளின் ஆர்வத்தைக் குறித்துக் கொண்டான்.

‘நான் அவங்களைக் காதலிக்கிறேன் அவ்ளோதான் சங்கர். வேற எதுவும் என்னால சொல்ல முடியாது. ஏன்னா இதுல ஓவியாவோட வாழ்க்கையும் அடங்கியிருக்கு. இன்னிக்கு நான் ஏதாவது அவங்களை பத்தி தப்பா சொல்லிட்டா அது அவங்க லைப்பை பாதிக்கலாம். இப்போதைக்கு நான் எதையும் யோசிக்கல சங்கர். கடவுள்கிட்ட விட்டுட்டேன். அவங்க எனக்குன்னு இருந்தா கண்டிப்பா நாங்க சேருவோம்.. அவ்ளோதான்..’

‘இதைத்தான் செல்வா சொன்னாரா...?’

சிறிது நேரம் சுவரை வெறித்துப் பார்த்தாள். பிறகு ‘அவர் சொல்வதும் நிஜம்தான் சங்கர்’

‘என்ன நிஜம் ஓவியா.. உங்களுக்குள்ள ஒரு மௌன யுத்தம் நடக்குதுன்னு நல்லாவே தெரியுது. யாருக்காக நீங்க யோசிக்கறீங்க?’

ஒரு பெருமூச்சை வெளியிட்டவள்.. ‘என் மனசாட்சிக்குத்தான் சங்கர்..’

‘செல்வா உங்களுக்குப் பொருத்தமானவர் இல்லைன்னு யோசிக்கறீங்களா?’

‘ச்சே..சே..ச்சே.. அதெல்லாம் இல்ல சங்கர்..’

‘அப்புறம் என்ன ஓவியா?’

‘இப்படி சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க சங்கர்... எங்க அம்மா கிட்ட கூட சொல்ல முடியாத அளவுக்கு என் மனசு புண்பட்டிருக்கு. என் மனசு அனுபவிக்கும் வேதனையை தாங்கவே முடியலை. நான் செல்வாவை நிராகரிக்கிறதுக்கு நியாயமான காரணம் இருக்கு. அதைச் சொல்லவும் முடியாது. சொல்லவும் கூடாது. தயவு செய்து என்னைப் புரிஞ்சிக்கோங்க...’

‘இல்ல ஓவியா.. நீங்க நிராகரிக்கிறதுக்கு காரணம் எனக்கு வேண்டாம் . எனக்கு வேண்டியது ஒன்னே ஒண்ணுதான். நீங்க செல்வாவை காதலிக்கறீங்களாங்கிற கேள்விக்குப் பதில் உண்மையான பதில்..’ அழுத்தமாக கேட்டான்.

‘இந்த கேள்விக்கு இப்போதைய என்னோட உண்மையான பதில் மௌனம்தான் சங்கர்...’

‘அப்போ கன்பார்ம்தான்..’ எழுந்தான் சங்கர்.

‘என்ன கன்பார்ம்..?’

‘செல்வா உங்க மனசுல சேர் போட்டு ஸ்டடியா உட்கார்ந்திருக்காரு. இதுல டவுட்டே இல்ல..’

‘அதெல்லாம் இல்ல..’

‘பொதுவாவே பொண்ணுங்க பேசறதை நம்பக்கூடாது. அதுவும் இந்த விஷயத்துல கண்டிப்பா நம்பவே கூடாது. நான் கிளம்புறேன் குட் நைட்.. ஸ்விட் ட்ரீம்ஸ்...’ சென்றுவிட்டான்.

ஒன்றும் புரியவில்லை அவளுக்கு. இப்படியே சென்றால் தன் மனதை அடக்க முடியாமலே போய்விடும் என்பது அவளுக்கு நன்றாகவே புரிந்தது. இதற்கு கூடிய விரைவில் முடிவு கட்ட வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டாள்.

பலவற்றையும் யோசித்துக் கொண்டிருந்தவள், வெகுநேரம் கழித்து மறுபடியும் கதவு தட்டும் ஓசை கேட்டது.

எழுந்து சென்று கதவைத் திறந்தாள். இப்போது அவள் மனதில் எந்த எதிர்பார்ப்பும் இல்லை.

திறந்தவளின் முன் மூன்று ஆண்கள் நின்றிருந்தனர். கேள்வியோடு, ‘யார் வேணும்..?’ என்று கேட்டாள்.

‘நீதான் பாப்பா வேணும்..’ என்று கூறினான் ஒருவன்.

பிராந்தி வாடை நாசியைத் துளைத்தது.

முகம் சுருக்கினாள்.

அவர்கள் எதிர்பாராத நேரத்தில் சட்டென்று கதவைச் சாத்தி, மூன்று தாள்களையும் போட்டாள்.

இதயம் படபடத்தது. உடல் பயத்தில் நடுங்கியது.

வெளியில் கதவு தடதடவென்று தட்டும் ஓசை கேட்டுக் கொண்டேயிருந்தது. என்ன செய்வதென்று புரியவில்லை அவளுக்கு.

சட்டென்று அந்த யோசனை தோன்றியது. அறையிலிருந்து போனை எடுத்து ரிசப்ஷனுக்கு போன் செய்தாள். விவரம் சொன்னாள். அவர்கள் மேனேஜரை அனுப்புவதாக கூறி போனை வைத்தனர். மனம் செல்வாவை நாடியது. அவர் போன் நம்பரைக் கூட வாங்காமல் போனது எவ்வளவு பெரிய தவறு என்று உறைத்தது. மறுபடியும் ரிசப்ஷனுக்கு போன் செய்து,’ரூம் நம்பர் 203க்கு கனெக்ட் பண்ணுங்க’ என்றாள்.

‘ஒன் செகண்ட்’ என்ற இனிய குரலுக்கு பின் ரிங் போயிற்று.

‘ஹலோ..’ என்று கம்பீரமாக வந்தது செல்வாவின் குரல். அதைக் கேட்டவுடன் அழுகை அடக்க முடியாமல் வந்தது.

அவளது விசும்பலைக் கேட்ட செல்வா, ‘ஓவியா.. ஓவியா... என்னாச்சு...?’ பதறினான்.

‘அது.. அது.. என் ரூம் வாசல்ல..’ வார்த்தை வரவில்லை.

‘நீ போனை வை.. நான் நேரா வாரேன்...’ வைத்துவிட்டான்.

அவசரமாக சட்டையணிந்து வெளியே வந்தான். ஓவியாவின் ரூம் வாசலில், மூவர் தள்ளாடியபடி நிற்பதைக் கவனித்தான். நேராக ரூம் வாசலுக்கு சென்று ‘உங்களுக்கு யார் வேணும்?’ என்று கேட்டான்.

‘உன் வேலையைப் பாருடா.. ‘ என்றான் ஒருவன்.

‘என் ரூம் வாசல்ல வந்து என்னையே கேள்வி கேட்கறீங்களா? இருங்க போலீசைக் கூப்பிடுறேன்..’ செல்போன் எடுத்தான்.

‘இது உங்க ரூமா..?’ ஒருவன் பயம் கலந்த மரியாதையுடன் கேட்டான்.

‘ஆமாம்..’

‘அப்போ உள்ளே இருக்கிறது?’

‘என் மனைவி,என் கேட்கறீங்க?

‘ஓ.. டேய் நம்ம கமலா ரூம் 401 டா.. இது 201டா.. நாம தப்பா வந்துட்டோம்.. வாங்கடா போகலாம்.. சாரி சார்.. ரூம் மாறிடுச்சு..’ வழிந்துகொண்டே மூவரும் சென்றனர்.

அவர்கள் ஒரு லிப்டில் ஏறவும், மறு லிப்ட் திறந்து ஒருவர் வேகவேகமாக செல்வாவை நோக்கி வந்தார்.

‘நான்தான் ஹோட்டல் மேனேஜர்.. இங்கே ஏதோ பிராப்ளம்னு..’ இழுத்தார்.

‘ஓ.. அதுவா.. மூணு பொறுக்கி பசங்க வந்து, இந்த ரூம்ல இருந்த பொண்ணு கூட தகராறு பண்ணினாங்க. நான் வந்து மிரட்டினதும் பயந்து போயிட்டாங்க..’

‘சார்.. போலீஸ் கேஸ் எதுவும் வேண்டாம் சார். அது எங்க ஹோட்டல் பெயரையே கெடுத்துடும்.. சார் அந்த ஆளுங்களை அடையாளம் காட்டினீங்கன்னா இப்பவே ஹோட்டலை காலி பண்ண வச்சிடறேன்..’ பதற்றத்துடன் படபடத்தார்.

‘சார்.. பதட்டப்படாதீங்க, முதல்ல உள்ள இருக்கிறவங்களை பார்க்கலாம்..’ என்றபடி கதவைத் தட்டினான் செல்வா.

‘ஓவியா, நான் செல்வா.. கதவைத்திற...’ குரல் உயர்த்தி தட்டிய பிறகு தான் கதவு திறக்கப்பட்டது.

மிரட்சியான, சிவந்த கண்களுடன் உடல் எங்கும் வியர்த்து உடை நனைந்து நின்றாள். சுவாசம் சீரான நிலையில் இல்லை.

சுதாரித்துக் கொண்டான் செல்வா.

‘அவங்க எல்லாம் போயிட்டாங்க ஓவியா. ஒன்னும் பிரச்சனை இல்லை. இங்க பாருங்க மேனேஜர் வந்திருக்காரு..’

‘சார் நீங்க போங்க சார்.. கேசெல்லாம் வேண்டாம். நான் நாளைக்கு கிளம்பிடுவோம். அதுக்குள்ள கோர்ட் கேஸ்ஸுன்னு அலைய முடியாது. நான் பார்த்துக்கிறேன்..’ என்று கூற, மேனேஜர் நன்றியோடு கைகுவித்து விட்டுச் சென்றார்.

இன்னமும் அந்த அதிர்ச்சியிலிருந்த மீளாத ஓவியாவின் கரத்தை பற்றி அழைத்துக் கொண்டு சென்று படுக்கையில் அமர வைத்தான்.

அங்கிருந்த தண்ணீரைப் பருக வைத்தான். அவள் உடல் நடுக்கத்தை நன்றாக உணர முடிந்தது

‘ஓவியா, கூல் டவுன். அவங்க இனி வர மாட்டாங்க. பயப்படாதீங்க. என்னைப் பார்த்ததும் பயந்து போயிட்டாங்க. இவங்களை எல்லாம் பார்த்து பயப்பட வேண்டாம். இவங்க எல்லாம் ரோட்ல அனாதையா கிடக்கிற ஒரு ரூபாயை எடுக்கிறவங்க. இதுவே இன்னொருத்தன் பாக்கெட்ல இருந்தா எடுக்கப் பயப்படறவங்க. அதனால இனி அவங்க கண்டிப்பா வர மாட்டாங்க. அதுக்கு நான் கேரேண்டி நீங்க படுத்துக்கோங்க..’

அவளைப் படுக்க வைத்து போர்வையை போர்த்தினான்.

‘என்னோட ரூம் எக்ஸ்டன்ஷன் 5111. ஏதாவது பிராப்ளம்னா என்னை கூப்பிடுங்க. ஓகேவா.. குட் நைட்’ என்று நகர்ந்தவன் நின்றுவிட்டான்.

காரணம் அவன் கரங்களை கெட்டியாக பிடித்திருந்தாள் ஓவியா.

‘என்ன ஓவியா..?’ பிடித்திருந்த அவளின் கைகளை பார்த்தான். அது நடுங்கியது.

‘நீங்க இங்கேயே இருங்க செல்வா. எனக்கு பயமா இருக்கு ப்ளீஸ்.. குரல் நடுங்கியது.

‘இங்கயா...?’ கேள்வியாக நோக்கினான்.

‘எனக்கு உங்க மேல முழு நம்பிக்கை இருக்கு. நீங்க என்னை நம்பினா தயவு செய்து இருங்க. இது என்னோட வேண்டுகோள்’ மனம் அவள் பதட்டத்தைப் பார்த்து இளகியது.

‘சரி.. சரி.. பதட்டபடாதீங்க ஓவியா, நான் இங்கேயே தங்குறேன். என் ரூமைப் பூட்டிட்டு வந்துடறேன்...’

பாவம் ஓவியா. ரொம்பவும் பயந்து போயிருக்கிறாள். .மனதுக்குள் நினைத்தவாறு தன் ரூமைப் பூட்டிக்கொண்டு திரும்பினான். அவன் திரும்பிய பிறகுதான் ஓவியா நிம்மதியாக உறங்கினாள். அங்கிருந்த சேரில் அமர்ந்து புத்தகம் படிக்க ஆரம்பித்தவன். அப்படியே உறங்கிப் போனான்.

‘ம்..ஹம்..ம்..ஹம்..ம்..ஹம்...’

முனகல் சத்தத்தில் விழிப்பு வந்துவிட்டது செல்வாவிற்கு. சுற்றும் முற்றும் பார்த்தான். ஓவியா விடமிருந்து தான் அந்த முனகல் சத்தம். சட்டென்று எழுந்து செல்வா மெல்ல அவள் தோள்களைத் தொட்டு, ’ஓவியா..’ என்றழைத்தவன், உடனே கைகளை எடுத்துக் கொண்டான். காரணம் அவள் உடல் அனலாய் கொதித்தது.

‘மை காட்.. செம பீவரா இருக்கே.. இப்போ என்ன செய்வது?’ குழம்பினான், கடிகாரத்தைப் பார்த்தான். மணி இரவு 1.30 என்று காட்டியது.

‘ஓவியா.. ஓவியா..’ அவனின் அழைப்புக்கு பதில் வரவேயில்லை.

உடனே போனை எடுத்தான். ரிசப்ஷனை தொடர்பு கொண்டு, 24 மணி நேர டாக்டர் நம்பரைப் பெற்றுக்கொண்டான்.

எதிர்முனையில் ரிங் போயிற்று.

நீண்ட நேரத்திற்கு பிறகு ’ஹலோ..’ என்று சன்னமான குரல் வந்தது.

‘டாக்டர் சந்தோஷ்.....?’

‘எஸ்.... ஹோல்டிங்..’

‘டாக்டர் நான் நவரத்னா ஹோட்டல்ல இருந்து பேசுறேன்...’

‘ம்.. சொல்லுங்க..’

‘என் பெயர் செல்வா. என் மனைவிக்கு பீவர் அதிகமாக இருக்கு.கொஞ்சம் சீக்கிரம் வர்றீங்களா?’

‘என் கிளினிக்கு கூட்டிட்டு வந்துடுங்களேன்..’

‘இல்ல டாக்டர் அவங்க கான்சியஸ்ல இல்ல.ப்ளீஸ் டாக்டர்... கொஞ்சம் வந்துடுங்களேன்...’

‘ஓகே.. இன்னும் தர்ட்டி மினிட்ஸ்ல நான் அங்க இருப்பேன். டோன்ட் ஒர்ரி..;

‘ரூம் நம்பர் 201 சார்..’

‘ஓகே..’

தொடர்பு துண்டிக்கபட்டது.

இருப்பினும் செல்வாவால் அமைதியாக இருக்க முடியவில்லை. பேச்சு மூச்சற்று கிடக்கும் ஓவியாவை பார்க்கையில் உள்ளம் பதறியது.

அவளுக்கு ஏதேனும் நேர்ந்தால் என்னால் தாங்க முடியுமா? நான் அருகில் இருந்தும் ஒன்றும் செய்ய முடியாத பாவியாக இருக்கிறேனே. இவள் அப்பாவின் இழப்பிற்கே பதில் சொல்ல முடியாமல் தவிக்கிறேன். இதில் இவளுக்கு ஏதேனும்.. அய்யோ.. கடவுளே..தயவு செய்து ஓவியாவைக் காப்பாற்று’

மனதில் வேண்டிக் கொண்டவனுக்கு சட்டென்று ஒரு யோசனை பொறி தட்டியது.

‘எனக்கு ஜுரம் அதிகமாக இருந்தால் அம்மா ஈரத் துணியை நெற்றியில் வைப்பாளே. நாமும் அதையே செய்து பார்க்கலாமே’

யோசித்தவன் உடனே செயலில் இறங்கினான். அவன் வைக்கும் ஈரத்துணி உடனே உலர்ந்துவிட்டது. மீண்டும் மீண்டும் வைத்துக் கொண்டே இருந்தான், நாற்பது நிமிடம் சென்றதும் கதவு தட்டும் ஓசை கேட்டது. ’டாக்டராகத்தான் இருக்கும்’ என்று நினைத்தவன் ஓடிச்சென்று கதவை திறந்தான்.

டாக்டர் தான்.

அவரின் பெட்டியை கையில் வாங்கிக்கொண்டு. ‘வாங்க டாக்டர்..’ என்றபடி அவருக்கு வழிகாட்டினான்.

‘பேஷன்ட் இவங்கதானா?’ கட்டிலில் படுத்திருந்த ஓவியாவைப் பார்த்துக் கேட்டார்.

‘ஆமாம் சார்.. இவங்க பெரு ஓவியா...?’

டாக்டர் ஸ்டெதஸ்கோப்பை எடுத்து பரிசோதித்துவிட்டு இன்ஜெக்ஷன் போட்டார்.

‘நீங்க’ சொன்ன அளவு கிரிட்டிக்கலா இல்ல சார்..’

‘இல்ல டாக்டர் ரொம்ப மோசமாதான் இருந்தாங்க. நான் ஈரத்துணியை நெற்றியில் போட்டுக்கிட்டே இருந்தேன். இப்போ பரவாயில்லை’

‘ம்.. குட்.. நல்ல பர்ஸ்ட் எய்ட் பண்ணி இருக்கீங்க. எப்பவுமே அளவுக்கு அதிகமா பீவர் வந்தா மூளையைப் பாதிச்சிடும். அப்போ இந்த மாதிரி பண்றது நல்லது...’ அவர் முடிக்கும்பொழுது ஓவியா மெல்ல அசைந்தாள். எழ முயன்றாள். முடியவில்லை.

ஓடிச் சென்று அவளை தாங்கிப் பிடித்து அமர வைத்தான்.

‘ஆர் யூ ஓகே நவ்..?’ விசாரித்தார் டாக்டர்.

‘ம்..தேங்க்யூ டாக்டர்....’ ஈனக்குரலில் கூறினாள்.

நீங்க நன்றி சொல்ல வேண்டியது உங்க கணவருக்குத்தான். அவர் மட்டும் ஈரத்துணி நனைத்து உங்க நெற்றியில் வைக்காமல் இருந்திருந்தால் ரொம்ப கிரிட்டிக்கல் ஆகி இருக்கும். ஓகே ஜென்டில்மேன், நான் கிளம்புறேன்...’

வாசல் வரை சென்று டாக்டர் பீஸ் கொடுத்து, அவரை வழியனுப்பி விட்டு உள்ளே நுழைந்த செல்வா, அவளைப் பார்த்து சினேகமாய் ஒரு புன்னகை புரிந்தான்.

‘இந்தாங்க ஓவியா.. இந்த மாத்திரையை போட்டுகோங்க.. பால் ஆர்டர் பண்ணிட்டு வரேன்..’

நகர முயன்றவனைத் தடுத்தாள் ஓவியா.

‘செல்வா ப்ளீஸ்.. என் லைப்ல இருந்து போயிடுங்க. நீங்க எனக்காக செய்யும் ஒவ்வொரு விஷயமும் என்னைப் பாதிக்குது.. இது.. இப்போ அந்த டாக்டர் சொன்னாரே உங்க கணவர்னு.. முடியல செல்வா.. உயிர் போகிற வலி. நாம ஒண்ணு சேர முடியாது.. இதுதான் விதி. மனசு என்ன வேணும்னாலும் நினைக்கலாம். ஆனா கடவுள் கணக்கு தப்பாது. அப்படியே நாம சேர்ந்தாலும் வாழ்க்கை இனிக்காது. ப்ளீஸ் இந்த மாதிரி எல்லாம் என் மனசுல சாப்ட் கார்னர் கிரியேட் பண்ணி சித்ரவதை செய்யாதீங்க. நான் இம்ப்ரஸ் ஆக மாட்டேன்’

ஒன்றுமே புரியவில்லை செல்வாவிற்கு ஜுரம் அதிகமானதால் உளறுகிறாளா? இருப்பினும் மனதில் இருப்பதுதானே வாயில் வரும். இப்போது தான் அவள் என்னுடன் சகஜமாக பேசுகிறாள் என்று புளகாங்கிதம் கொண்டேனே.. எல்லாம் பகல் கனவுதானா? அவளின் அழுகை அவனை சுய உணர்விற்கு கொண்டு வந்தது.

‘ஓவியா.. ப்ளீஸ்.. உங்களுக்கு உடம்புல சக்தியே இல்ல. ரொம்ப சோர்வா தெரியுறீங்க. இந்த மாத்திரைகளை சாப்பிட்டுவிட்டு படுங்கள். மற்றதை காலையில் பேசலாம்’ என்றவன் ஒரு கையில் மாத்திரையைக் கொண்டு மறுகையால் அவள் தோளைத் தொட்டான்.

அவ்வளவுதான் ஓவியா வெறி பிடித்தவள் போல் கத்தினாள்.

‘கெட் அவுட் ஆப் மை லைப். பர்ஸ்ட்.. கெட் அவுட் ஆப் திஸ் ரூம்..’

மாத்திரைகளை அவள் அருகில் வைத்தவன். அதன் பிறகு ஒரு வினாடி கூட தாமதியாமல் வேகமாக வெளியேறினான்.
 

Meena

Saha Moderator
Staff
Messages
1,070
Reaction score
85
Points
48
13

தன் அறையில் குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருந்தான் செல்வா. நாளை விடிவது கடவுள் கையில். எது எப்படியோ இப்போ வெளியேறியதே நல்லது. வாக்குவாதம் புரியும் நிலையில் ஓவியாவின் உடல் இல்லை. அவளுக்கு ஒய்வு தேவை. டாக்டரிடம் கேட்டு ஒரு தூக்க மாத்திரை பெற்றுக் கொண்டது நல்லதாகப் போய்விட்டது. அதையும் ஓவியாவிற்கு மற்ற மாத்திரைகளுடன் கொடுத்து விட்டான். ஆனால் அவள் அதை விழுங்கி இருப்பாளா? உடனே சங்கருக்கு தொடர்பு கொண்டான்.

‘சங்கர் .. ஒரு ஹெல்ப்..’

‘சொல்லுங்க செல்வா... என்ன இந்த நேரத்துல..?’

‘இல்ல ஓவியாவுக்கு ஜுரம்.. டாக்டர் வரவழைச்சு மாத்திரை கொடுத்தா சாப்பிட மாட்டேங்கிறாங்க. எதுக்கும் நீங்க ஒரு தடவை சொல்லிப் பாருங்களேன்....’

‘ம்.. அவ்ளோதான.. நீங்க படுங்க செல்வா. நான் அவங்களை சாப்பிட வெச்சுட்டு உங்களுக்கு கால் பண்றேன்..’ போனை அணைத்து விட்டு ஓவியாவின் அறைக்கு விரைந்தான்.

‘டொக்.. டொக்..’கலவரமானாள் ஓவியா. மெல்ல எழுந்து கதவருகில் சென்று குரல் கொடுத்தாள்.

‘யார் அது...?’

‘நான் தான் சங்கர்.. கதவைத் திறங்க ஓவியா..’

சங்கரின் குரலைக் கேட்டதும் சற்று நிம்மதியானாள். கதவைத் திறந்தாள்.

‘என்ன ஓவியா பீவராமே? இப்போ எப்படி இருக்கு?’

‘யார் செல்வா சொன்னாரா?’ கோபம் வெளிப்பட்டது.

‘ஆமாம். .இப்போ அதுவா முக்கியம். என்ன ஆச்சு திடீர்னு’

‘தெரியல.. டாக்டர் இன்ஜெக்ஷன் போட்டுட்டார்..’

அவனிடம் அங்கு நடந்த பிரச்சனையை மறைத்துவிட்டாள்.

‘ஓ.. மாத்திரை கொடுத்தாரா?’

‘ம்.. அதோ டேபிள் மேல..’

‘அதை அங்க வெச்சுட்டு என்ன செய்யுறீங்க?’ அருகில் சென்று மாத்திரைகளை எடுத்தான்.

தண்ணீர் இருந்த டம்ளரை எடுத்துக் கொண்டு வந்தான்.

‘இந்தாங்க சாப்பிடுங்க..’ நீட்டினான்.

மறுக்க முடியவில்லை, வாங்கிக் கொண்டு விழுங்கினாள்.

‘நீங்க ரெஸ்ட் எடுங்க ஓவியா.. நான் கிளம்புறேன். குட் நைட் சென்றுவிட்டான் சங்கர்.

இப்போது ஓவியாவிற்கு எல்லாம் புரிந்தது.

மாத்திரை கொடுப்பதற்காக சங்கரை அனுப்பி வைத்திருக்கிறார் செல்வா. மனம் நெகிழ்ந்தது. ச்சே.. இந்த நெகிழ்ச்சி தான் சற்று முன் என் மனதை உளறிக் கொட்ட வைத்தது.

கூடாது.. கூடாது. நாளை எப்படியாவது உளறிக் கொட்டியதை சரி செய்து செல்வாவிற்கு என் மேல் வெறுப்பை உண்டு செய்ய வேண்டும். கண்களில் கண்ணீர் மட்டும் மனதிற்காக அழுதது.

செல்வாவின் இந்த அன்பை, அக்கறையை, காதலை எப்படி நான் நிராகரிக்கப் போகிறேன்..? கடவுளே அதற்கு எனக்கு வல்லமை கொடு..’ வேண்டுதல்களுக்கிடையே மாத்திரையின் வேகத்தில உறக்கம் தழுவியது.
 

Meena

Saha Moderator
Staff
Messages
1,070
Reaction score
85
Points
48
14

டீ கோப்பையுடன் ஜன்னல் வழியே வெறித்துக் கொண்டிருந்த செல்வாவின் நினைவுகளைக் கலைத்தது ஓவியாவின் குரல்.

‘உள்ளே வரலாமா?’

‘வா.. வாங்க ஓவியா’ தன் பதட்டத்தை மறைக்க முடியாமல் தோற்றான்.

‘நானே வந்து உங்களைப் பார்க்கணும்னு நினைச்சேன் ஓவியா. இப்போ உடம்புக்கு பரவாயில்லையா? உட்காருங்க...’ இருக்கையைக் காட்டினான்.

‘நான் உட்கார வரலை..’ கைகளைக் கட்டிக் கொண்டு அவனை நேருக்கு நேர் பார்த்தாள்.

‘நேற்று நான் பேசியதை ஜுர வேக உளறல் என்று நினைக்க வேண்டாம்னு சொல்லத்தான் வந்தேன். உங்களிடம் முதலும் கடைசியுமா சொல்றேன்.இனி என் மனசைப் பிடிக்க இந்த மாதிரி ரொம்ப கேரிங்கா ஆக்ட் பண்ணாதீங்க சகிக்கல அன்ட் ஐ டோன்ட் வான்ட் இட் ஆல்சோ..’

‘நான் நடிக்கலை’ அடிப்பட்ட அவமானம் அவன் குரலில்.

‘ஸ்டாப் திஸ் நான்சென்ஸ்..பெண்களை மதி இழக்க உங்கள் ஆண்கள் இனம் எதை வேண்டுமானாலும் செய்யும். வெட்கம் கேட்டா ஜென்மங்கள். காமத்தை காதல் என்று சொன்னால் மயங்கிவிடுவோம் என்ற நினைப்போ?’

‘பளார்..’ முகம் சிவந்துவிட்டது ஓவியாவிற்கு. காரணம் செல்வாவின் கை அவள் கன்னத்தைப் பதம் பார்த்தது.

‘போதும்..! இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசினா நான் மனுஷனா இருக்க மாட்டேன். உனக்கு ஜுரம் வந்ததும் நான் எப்படி துடிச்சுப் போயிட்டேன்னு தெரியுமா உனக்கு. அதைப் போய் வாய் கூசாம நடிப்புங்கறியே. உனக்கு மனசுன்னு ஒன்னு இல்லவே இல்லையா? நீ நினைக்கிற மாதிரி எந்த கெட்ட எண்ணமும் இல்லை. உன்னை காதலிச்ச பாவத்துக்காக எனக்கு கிடைச்சது பொம்பள பொறுக்கிங்கிற பட்டம். ரொம்ப சந்தோஷம் ஓவியா. ஆனா ஒன்னு மட்டும் உண்மை. நான் உன் மனசுல இருக்கேன். அது எனக்கு நல்லாவே தெரியும். ஆனா நீ அதை மறைக்கிற, பரவாயில்லை. உன்னை வற்புறுத்தி கல்யாணம் பண்ணிக்க எனக்கு இஷ்டமில்ல. உன் இஷ்டம் போல செய். எனக்காக நான் கடைசியா ஒண்ணே ஒன்னு மட்டும் கேட்டுக்கிறேன். உன்னை பத்திரமா சென்னை கொண்டு போய் விடணும். அதை என் பொறுப்புல விட்டிருக்கிறான் குரு. நீங்க போய் ரெஜிஸ்ட்ரேஷன் முடிச்சிட்டு ஸ்டேஷன் வந்துடுங்க. ட்ரெயின் ஏறிடலாம். சென்னை போனதும் உங்களுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. அதுக்கப்புறம் நான் உங்களை நிச்சயம் தொந்தரவு செய்ய மாட்டேன். இது நான் உங்கள் மேல் வைத்திருக்கும் காதல் மேல் சத்தியம்’ நிறுத்தினான் உடல் நடுங்கியது.

எதுவும் பேசாமல் நகர்ந்தாள் ஓவியா. பேச பயமாக இருந்தது கதவருகில் சென்றவளை நிறுத்தினான் செல்வா.

‘ஒரு நிமிஷம் ஓவியா..’

நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.

‘நீங்க எதிர்பார்த்ததைதானே நான் சொல்லி இருக்கேன். சந்தோஷமா? அதிர்ச்சியில் உறைந்தாள்.

‘இப்போ மட்டும் இல்லை ஓவியா. எப்பவுமே உங்க விருப்பம்தான் என் விருப்பம். நீங்க போகலாம்’ ஜன்னல்புறம் திரும்பிக் கொண்டான்.

ஒரு வினாடி அவனை ஏக்கத்துடன் பார்த்தவள், வெளியேறி விட்டாள்.

ஓவியாவின் உள் மனம் அவளை சாடியது. ‘சந்தோஷமா? உன்னை விரும்பிய ஒரு உயிரை காயப்படுத்திட்டியே?’

‘அவர் மட்டும் நேசிச்சா போதுமா?’

‘உன் மனசாட்சி நான். என்கிட்டே உன்னால் பொய் சொல்ல முடியாது’

‘நான் பொய் சொல்லல’

‘நீ செல்வாவை விரும்புற, ஆனா வெளில சொல்ல மாட்டேங்கிற. காரணம் என்னன்னு கேட்டா இப்ப இல்லைன்னாலும் என்னிக்காவது அப்பாவை கொன்னவன்னு மனசாட்சி உறுத்திட்டா இல்லறம் கெட்டுப் போயிடும்னு கட்டுக்கதை விடற..’

‘அது கதை அல்ல. என் நேர்மையான, நியாயமான பயம்தானே? மனித மனம் ரொம்ப மென்மையானது. அது உடைஞ்சிட்டா ஒட்டாது’

‘சரி, அதை விடு. இப்போ ஏன் அவரை வெறுக்கிற. அவர் உன்னை காப்பத்துனதுல என்ன நடிப்பபைக் கண்டுட்ட. அவர் உயிர் துடிக்கிறது கண்ணுல தெரியலையா?’

‘அவரை நான் வெறுக்கிற மாதிரி நடிக்க இது ஒரு நல்ல சந்தர்ப்பம்னு தோணிச்சு பேசினேன் ஜெயிச்சிட்டேன். அவரே என்ன தொந்தரவு செய்ய மாட்டேன்னு சொல்லிட்டாரு. இனி அவருக்கான வாழ்க்கையை அமைச்சுக்கட்டும்’

சபாஷ் ஓவியா உனக்கு அபார மூளை நீ ஜெயிக்கலை, உன் வாழ்க்கையில தோத்துட்ட. நேத்தே நீ உளறலாய் உன் மனதை செல்வாவிடம் சொல்லிவிட்டாய். அதை அவர் புரிந்து கொண்டார். இப்போது கூட ஒண்ணும் கெட்டுப் போகல. மறுபடியும் செல்வாகிட்ட மனசு விட்டு பேசு. எல்லாம் சரியா போகும்’

‘போதும் நிறுத்து. இனி நீ எது சொன்னாலும் நான் கேட்கவே மாட்டேன். முடிவு எடுத்தாகிவிட்டது.

எப்போதும் போல் அறிவே ஜெயித்தது. மனசாட்சி தோற்றுப்போனது, மனித வாழ்வில் பொதுவாக நடக்கும் யுத்தமும், முடிவும்தான் இப்போது ஓவியாவிற்கு நேர்ந்தது. மனதில் இருக்கும் அன்பை எல்லாம் வெறுப்பாக செல்வாவின் மேல் காண்பித்துவிட்டாள். பலனும் அவள் எதிர்பார்த்தது போலவே கிடைத்துவிட்டது. இனி எல்லாம் இறைவன் செயல்.
 

Meena

Saha Moderator
Staff
Messages
1,070
Reaction score
85
Points
48
15

கோவை ரயில் நிலையம். மதியம் 12 மணி

சென்னை ரயில் தயாராக இருந்தது. பெட்டிகளை ஏற்ற உதவிய சங்கர், ஓவியாவிடம் வந்தான்.

‘உங்க நண்பனா உங்ககிட்ட ஒண்ணே ஒண்ணு சொல்லனும்னு விருப்பப்படறேன். செல்வா ரொம்ப நல்லவர். தயவு செய்து அவரை இழந்துடாதீங்க. உயிருக்கு மேலா உங்களை வெச்சுப் பார்த்துப்பாரு பக்கா ஜென்டில்மேன்’

தலைகுனிந்து மௌனம் காத்தாள். கண்கள் கலங்கி இருந்தது.

ஓ’கே ஓவியா நான் கிளம்புறேன். ஏதாவதுன்னா கால் பண்ணுங்க. ஹேப்பி ஜார்னி’ விடைபெற்று செல்வாவிடம் வந்தான்.

இருவரும் அணைத்துக் கொண்டார்கள்.

‘நீங்க நண்பனா கிடைச்ச இந்த டிரிப்ப நான் மறக்கவே மாட்டேன் சங்கர்’

‘எது.. எது.. நல்லா கதை விடறீங்க.. ஓவியா கூட இருந்த இந்த டிரிப்பே மறக்க முடியாதுன்னு சொல்லுங்க..’

வேதனையான சிரிப்பு மட்டும் வெளிப்பட்டது செல்வாவிடம்.

சும்மா கிண்டலுக்கு செல்வா.. கவலைபடாதீங்க செல்வா. சூரியனை ரொம்ப நேரம் மேகம் மறைக்க முடியாது. அதே மாதிரிதான் காதலும், ஓவியாவோட கண்ணுல அவங்க காதல் தெரியுது. ஈகோங்கிற மேகம் ரொம்ப நாள் மறைக்க முடியாது சீக்கிரம் நல்லது நடக்கும் பி ஹேப்பி..’

‘ம்..தேங்க்யூ சங்கர்.. பி இன் டச்..’

‘ஷுயர்..’

‘டேக் கேர்.. பை/..’

‘உங்க கல்யாணப் பத்திரிக்கையை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்’

‘பார்க்கலாம்..’

இரயில் கிளம்பிவிட்டது. சங்கர் மறையும் வரை பார்த்துக் கொண்டிருந்துவிட்டு ஒரு பெருமூச்சுடன் தன் இருப்பிடம் வந்து அமர்ந்து கொண்டான்.

பத்து மணி நேரம் பத்து யுகம் போல் இருந்தது. இருவருக்கும். சென்னையை எதிர்பார்த்து நேரத்தைக் கடத்தினார்.

சென்ட்ரல் இரயில் நிலையத்தில் இரயில் நின்றது. அவசரமாக உடமைகளை எடுத்துக் கொண்டு இறங்கினாள் ஓவியா. அவர்களுக்காக குரு காத்துக் கொண்டிருந்தான். ஓவியாவைப் பார்த்துவிட்டான். குதூகலமானான்.

‘ஹாய் ஓவியா.. டிரிப் எப்படி இருந்தது?’

‘ம்.. நல்ல போச்சு சார்...’

‘எங்க நம்ம ஹீரோ..’ சுற்றும் முற்றும் பார்த்தான்.

தூரத்தில் பெட்டியுடன் செல்வா தெரிந்தான். ஓடிச் சென்று அவனை அணைத்துக் கொண்டான்.

‘எப்படிடா இருந்தது திரி டேஸ் வித் ஓவியா? ஏதேனும் நல்ல மாற்றம் தெரியுதா?’

உதட்டோரச் சிரிப்பை மட்டும் பதிலாகக் கொடுத்தான் செல்வா.

ஏதோ நெருடியது குருவுக்கு. இருப்பினும் காட்டிக் கொள்ளவில்லை.

‘சரி.. எல்லாம் அப்புறம் பேசலாம். வா போய் ஓவியாவை வீட்ல விட்டுட்டு அப்படியே உங்க வீட்டுக்குப் போயிடலாம்...’ பெட்டியை வாங்கினான் குரு.

‘இல்லடா .. எனக்கு ரொம்ப தலை வலிக்குது. நான் டாக்ஸி பிடிச்சு வீட்டுக்கு போறேன். நீ போய் அவங்களை விட்டுட்டு வந்துரு. வீட்ல வெயிட் பண்றேன்’ குருவின் பதிலை எதிர்பார்க்காமல் முன்னேறி நடந்தான்.

ஒரே ஒரு முறை ஓவியாவை ஏறிட்டுப் பார்த்தான். அவளும் பார்த்தாள். அவனின் பார்வை ஆயிரம் அர்த்தம் அடங்கியதாக இருந்தது.

அதில் ஒன்று இதுவே நம் கடைசி சந்திப்பு என்பதாக இருந்தது. அவனின் பார்வை தாக்கத்தை ஓவியாவால் தாங்க முடியாமல் தலை கவிழ்ந்தாள்.

*****​

‘என்னதான்டா நடக்குது உங்களுக்குள்ள. ஏன்டா ரெண்டு பேரும் எதையோ பறிகொடுத்த மாதிரி இருக்கீங்க. ஓவியா என்னடான்னா கார்லபுல்லா அழுதுகிட்டே தான் வந்தாங்க. அது எனக்குத் தெரியாம தொடைச்சுகிட்டாங்க. ஆனா நான் கண்ணாடில பார்த்தேன். நீ என்னடான்னா பேசவே மாட்டேங்கிற. என்ன பிரச்சனை செல்வா... எனிதிங் சீரியஸ்...?’

‘ம்.. ஹும்..’ பெருமூச்சை மட்டும் பதிலாக்கினான் செல்வா.

‘பிரேக் யுவர் சைலன்ஸ் மேன் .ஐ ஸ்மெல் சம்திங் பிஸ்ஷி, நீ அமைதியா இருக்கிறது சரி இல்ல. செல்வா ஸ்பீக் அவுட்’

‘பெரிசா எதுவும் இல்லடா. அதே விஷயம்தான். இந்த வாட்டி கொஞ்சம் அழுத்தமா இருக்கு அவ்ளோதான்.’

‘நீ புரியுற மாதிரி பேசவே மாட்டியா?’

என்னத்த சொல்றது. இவ்ளோ நாள் என்ன பிடிக்கலைன்னு ஓவியா சொன்னதுக்கு ஒரு காரணம் தான் இருந்துச்சு. இப்போ ரெண்டு காரணம். அதுவும் இனி நாங்க சேர வாய்ப்பில்லாத மாதிரி ஒரு முடிவெடுத்துட்டோம். என்னோட காதல் படத்துக்கு கிளைமாக்ஸ் போட்டாச்சு. என்ன.. ஹேப்பி என்டிங்கா இருக்கனும்னு நினைச்சேன். ஆனா சேட் என்டிங்தான்....’

செல்வா நடந்ததைக் கூறினான் சுருக்கமாக.

கேட்டு முடித்தவன், ‘சரி செல்வா, நான் புரிய வைக்கிறேன் ஓவியாவுக்கு’

‘இல்லடா இனி நான் ஓவியாவை தொந்தரவு பண்ணமாட்டேன்னு பிராமிஸ் பண்ணிட்டேன். நீ எதையும் சொல்ல வேண்டாம். இந்த மூணு நாள் அனுபவமே ஆயிசுக்கும் போதும். வாழ்க்கை முழுக்க ஓவியா கூட வாழ்ந்த திருப்தி வந்துடுச்சு குரு. முதல்ல சுந்தரேசன் அங்கிளுக்கு ஏதாவது செய்யனும்தான் நினைச்சேன். ஆனா இப்போ ஓவியா என் உயிர்ல கலந்துட்டா’ உணர்ச்சி வசப்பட்டு பேசினான் செல்வா.

‘புரியதுடா.. உன்னோட உண்மையான காதல் நிச்சயமா உங்களை சேர்த்து வைக்கும் கடவுள் மேல நம்பிக்கை வை. நல்லதே நடக்கும்...’ ஆறுதலாக செல்வாவின் கரம் பற்றினான்.

இனி கடவுள்தான் ஏதாவது செய்ய வேண்டும்.

நாட்கள் மெல்ல உருண்டது.
 

Meena

Saha Moderator
Staff
Messages
1,070
Reaction score
85
Points
48
16

வீட்டு வாசலில் அதிகமான கார்கள் நிறுத்தப்பட்டிருந்தன. வாசலில் பெரிய சாமியானா போடப்பட்டிருந்தது. நடுவில் ஒரு கருப்பு நிற கண்ணாடி பெட்டி போடப்பட்டிருந்தது. ஓவியாவின் கால்கள் பின்னிக் கொண்டான். ஒரு வகையான பயம் அவளைக் கவ்விக் கொண்டது. தனியாக வந்தது தவறோ என்று யோசித்தாள். திரும்பிச் சென்றுவிடலாமா என்று யோசித்தது மனது. உடனே அதை மாற்றிக் கொண்டாள். என்னதான் நான் இல்லை. இல்லை என்று நினைத்தாலும் என் மனதில் நுழைந்தவர் செல்வா. அவர் தந்தையின் இறப்பிற்கு கூட செல்லவில்லை என்றால் அது மன்னிக்க முடியாத குற்றம். நான் செல்வாவைப் பார்க்க வரவில்லை. அவர் வீட்டின் துக்க செய்தியில் பங்குபெறவே வந்திருக்கிறேன். என்று தன்னையே சமாதானப்படுத்தி கொண்டாள். மெல்ல கேட்டிற்குள் நுழைந்தாள். கால்கள் நடுங்கியது. இருப்பினும் சுதாரித்துக் கொண்டு நடந்தாள். கண்ணாடிப் பெட்டியின் அருகே சென்று நின்றாள்.

அவரின் முகத்தைப் பார்த்தாள். அன்று அவரை அலட்சியமாகப் பேசி விட்டு, இரண்டு இலட்சம் ரூபாயைத் தூக்கி வீசி எறிந்துவிட்டு வந்தது நினைவில் ஓடியது. மனம் வருந்தியது. இருப்பினும் வயதில் பெரியவர் என்று பாராமல் தான் குற்றம் சாட்டியது தவறுதான். அதற்கு பின் அவரை இந்த கோலத்திலா பார்க்க வேண்டும்? கண்கள் பனித்தன. சுற்றிலும் யாரையும் ஏறெடுத்துப் பார்க்கக் கூட விரும்பவில்லை. அப்படி பார்க்கும் போது செல்வா தென்பட்டால், தான் கொண்டு வந்த மாலையை அவர் காலில் போட்டுவிட்டு கும்பிட்டாள்.

‘ச்.. சனியனே.. யாருக்குடி மாலையோட வந்த.. என் புருஷனை தொடர உரிமை கூட உனக்கு கிடையாது.’ கத்திக் கொண்டு ஓடி வந்தார் தனலட்சுமி. வந்தவர் வேகமாக ஓவியா அணிவித்த மாலையை சுழற்றி தூக்கி வீசி எறிந்தார். ஒன்றும் விளங்காமல், செய்வதறியாமல் சிலையென நின்றாள் ஓவியா.

‘எல்லாம் உன்னால தான்டி. ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணுன்னு ஒரே பிள்ளை. எவ்வளவு அன்பா வளர்த்திருப்போம். அவன் மேல பாசத்தை பொழிவாறே. அவங்க ரெண்டு பேரையும் பேசவிடாம செஞ்சிட்டியே. உன் அப்பன் ஆபீஸ் பணத்தை திருடினது தப்புதானேடி. அதை போலீஸ்ல சொன்னது தப்பா. என்னவோ பெரிய குத்தம் செஞ்சிட்ட மாதிரி வந்து கத்தின. என் பையன் ஏமாளி. அதான் உன் அப்பன் ஏமாத்திட்டான். என் புருஷன் போலீஸ்ல சொல்லி அவர் மேல புகார் கொடுத்து, தப்புக்கு தண்டனை வாங்கித் தந்தாரு. அது ஒரு துரோகம்னு என் பையன் இதுவரை அவர் கூட ஒரு வார்த்தை கூட பேசல. அவர் கடைசி மூச்சு நிற்கும் போது கூட பேசலடி பாவி. எல்லாம் உன்னாலதான். மனுஷன் நிம்மதியா போகலடி. தன் பையன் தன் கூட பேசாதது பத்தி நினைச்சு நினைச்சு நொந்து தான்டி போனாரு. நீ நல்லாயிருப்பியா, நாசமா போயிடுவடி, நாசமா போயிடுவ’ என்றபடி ஓவியாவின் முதுகில் ஓங்கி அடித்தார். அத்தனையும் வாங்கிக் கொண்டு சிலையென நின்றாள். அவளுக்கோ அந்த அடிகள் சுத்தமாக வலிக்கவில்லை. மாறாக மனதில் ஒரு புகைப்படலம்.

ஏதோ வேலையாக இருந்த செல்வா கூச்சல் சத்தம் கேட்டு வாசலுக்கு வருவதற்குள் எல்லாம் முடிந்துவிட்டது. என்ன நடந்தது என்பதே விளங்கவில்லை. ஆனால் அம்மா ஓவியாவை அடித்துக் கொண்டிருக்கிறாள் என்பது மட்டும் நிஜம். நம் உடனே தடுத்தாக வேண்டும் என்கின்ற நிதர்சனம் உறைக்க, வேகமாக ஓடிச் சென்று அம்மாவின் கைகளை பற்றி கொண்டான்.

‘அம்மா! என்ன இது...? துக்கம் விசாரிக்க வந்த இடத்துல இப்படி அநாகரிகமாக நடந்துக்கறீங்க...?’

‘வாடா... வா.. இந்த சிறுக்கிக்காகத் தானே உன் அப்பாவோட கடைசி மூச்சு வரிக்கும் அவர்கிட்ட பேசாம, அவரை சாகடிச்ச.. அப்படி என்னடா இவளும், இவ அப்பனும் உன்ன மயக்கி வெச்சிட்டாங்க?’

‘அம்மா ப்ளீஸ்... இந்த மாதிரி நேரத்துல நீ உணர்ச்சி வசப்பட்டு தயவு செய்து வார்த்தைகளைக் கொட்டாதே...’

எல்லாரும் சேர்ந்து என் புருஷனை சாகடிச்சிட்டிங்களே!’ முந்தானையில் வாயைப் பொத்திக் கொண்டு அழுதாள். செல்வாவின் கண்களும் நீரில் நனைந்திருந்தது.

ஓவியாவின் முன் சென்று நின்றான். அவளோ தரையை வெறித்தபடி நின்றிருந்தாள். அவள் தோள்களைத் தொட்டான். அப்போது தான் நினைவுக்கு வந்தாள்.

ப்ளீஸ் ஓவியா.. நீங்க கிளம்புங்க. இங்க நடந்ததுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன்.. என்னை மன்னிச்சிடுங்க...’ என்றான் தழுதழுத்த குரலில்.

இயந்திரமாய் இரண்டடி எடுத்து வைத்தவளுக்கு கால்கள் தடுமாறியது. கீழே விழப் போனவளைத் தாங்கிக் கொண்டான் செல்வா. சுதாரித்துக் கொண்டு எழுந்தாள். வாசல் வரை வந்தவன் ஒரு காரை ஏற்பாடு செய்து அவளை வீட்டில் விடும்படி டிரைவரிடம் கட்டளையிட்டான். அவளும் இயந்திரமாய் காரினுள் அமர்ந்தாள் எப்போது வீடு வந்தது.எப்போது இறங்கினாள் என்று தெரியவில்லை

நேராக குளியலறைக்குள் சென்று ஷவரைத் திறந்து கீழே அமர்ந்தாள். கொட்டும் தண்ணீர் தலை வழியே உடல் முழுவதும் வழிந்து குளிரூட்டியது. மனம் அலறியது ‘’செல்வா! உங்களை போய் தப்பா நினைச்சிட்டேனே, கொலைகாரன், நம்பிக்கைத் துரோகி என்று எப்படியெல்லாம் குற்றம் சாட்டினேன். இந்த முகம் தெரியாத பெண்ணிற்க்காகவா அப்பாவிடம் பேசாமலிருந்தீர்கள். என் அப்பா மீது அவ்வளவு அன்பா? நியாயத்திற்குத் துணை நிற்பவரா நீங்கள்? உங்களையா நான் உதாசீனப்படுத்தினேன். என்னை மன்னிப்பீங்களா செல்வா? உங்கள் தோள்களில் சாய்ந்து அழ வேண்டும் போல் இருக்கிறது. செல்வா இனி நான் உங்கள் முகத்தில் எப்படி விழிப்பேன்? கடவுளே ஏன் இப்படி என்னைப் படுத்துகிறாய்? மனம் முழுவதும் செல்வா இருந்தாலும் சொல்ல முடியாத நிலை. அன்பான வாழ்க்கை எதிரில் இருந்தும், அதை தட்டி விட வேண்டிய நிர்ப்பந்தம். எந்த ஜென்மத்தில செய்த பாவமோ என்னையே சுற்றுகிறது’

கண்ணீர் தண்ணீருடன் கரைந்தது. எவ்வளவு நேரம் அப்படியே அமர்ந்திருந்தாளோ, அவளுக்கே தெரியவில்லை. திடீரென்று நினைப்பு வந்து வேகமாக உடைமாற்றி வெளியேறினாள்.

‘அக்கா.. அக்கா..’ பிரியா வேகமாக ஓடி வந்தாள். ஓவியாவின் முன்னின்று மூச்சு வாங்கியவள். ’செல்வாவின் அப்பா இறந்துட்டாராம். தெரியுமா உனக்கு?’ கேள்வியோடு நோக்கினாள்.

‘ம்..’ என்பது போல் தலையசைத்தவளின் உதடுகள் துடித்தன. கண்கள் சிவந்திருந்தது.

நீ போயிருந்தியா...?’ புருவம் முடிச்சிட கேட்டாள். அதற்கும் தலையசைத்தாள்.

‘நாங்களும் வந்திருப்போமே. குரு சொன்னவுடனே காலேஜ்லயிருந்து மார்க் சீட் கூட வாங்காம ஓடி வரேன் . டிராபிக்கில் லேட்டாயிடுச்சு. சரி, நீ இரு நானும் அம்மாவும் போயிட்டு வாறோம்.

‘வேண்டாம் பிரியா..’ அவசரமாய் தடுத்தாள்.

‘ஏன்.. என்னாச்சு...?’

‘தயவு செய்து என்னை எதுவும் கேட்காதே. நீ என்னை புரிஞ்சிப்பேன்னு நினைக்கிறேன்..’ கண்களில் நீர் அருவியாய்.

‘அக்கா..’ பதறினாள் பிரியா.

‘ப்ளீஸ்.. எதுவும் கேட்காதே. நேரம் வரும்போது நானே சொல்றேன்...’ கையெடுத்துக் கும்பிட்டுவிட்டாள். அதற்குமேல் எதுவும் செய்ய முடியாமல் விலகிச் சென்றாள் பிரியா.

பொத்தென்று படுக்கையில் விழுந்தாள்... கண்களை முடியவளின் எதிரில் செல்வா சிரித்தான்.

‘நன்றாகச் சிரியுங்கள் செல்வா. கையில் கிடைத்த வைரக்கல்லை தொலைத்துவிட்ட பாவி நான்’ பின் ஏதேதோ நினைவுகள் மனதில் மாறி மாறி வந்து சென்றது. நினைவுகளின் தாக்கத்திலும், மனம் அதிக அடிப்பட்டு சோர்ந்தாலும் அவளையும் அறியாமல் உறக்கம் அவளைத் தழுவியது.

அதே நேரம் அங்கு நடந்த அனைத்தையும் தெரிந்துகொண்ட குரு, எல்லாவற்றையும் தொலைபேசியில் பிரியாவிடம் கூறிவிட்டான். கேட்டவுடன் அதிர்ச்சியில் சிலையானாள்.
 

Meena

Saha Moderator
Staff
Messages
1,070
Reaction score
85
Points
48
17

காலிங் பெல் சத்தம் கேட்டு கதவைத் திறந்தவளுக்கு பெரும் அதிர்ச்சி.. காரணம் கைகளை கட்டிக்கொண்டு செல்வா நின்றிருந்தான். தந்தை இறந்த இந்த மூன்று நாட்களில் அதிகமாய், மாறியிருந்தான். சவரம் செய்யாத தாடை, துக்கம் தேங்கிய கண்கள், களைப்பை ஏந்திய முகம், மெலிந்த தேகம் இப்படி நிறைய மாற்றங்கள்.

அவனை வேதனையுடன் பார்த்த ஓவியாவின் விழிகள் நிறைந்து விட்டன. உடனே குனிந்தவள் ஓடி தன் அறைக்குள் புகுந்தாள். இதயத்துடிப்பு பன்மடங்கு அதிகமானது

‘உள்ளே வரலாமா ஓவியா..?’ என்ற செல்வாவின் குரல் அவள் முன் மிகவும் சன்னமாகக் கேட்டது. உடனே எழுந்து ஜன்னலருகே நின்றுகொண்டு கம்பிகளை இறுகப்பற்றி, தன் உணர்ச்சிகளைக் கட்டுபடுத்த முயன்றாள்.

‘உங்களுக்கு பிடிக்குதோ இல்லையோ, நான் சொல்ல வந்ததை சொல்லிடறேன் ஓவியா. முதலில் உங்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். எல்லோர் முன்னிலையிலும் என் அம்மா உங்களை அசிங்கமா பேசிட்டாங்க. அதுக்கு தெரிஞ்சோ தெரியாமலோ நான் காரணமாயிட்டேன். என்னை மன்னிப்பீங்களா ஓவியா. மன்னிப்புக் கேட்கிற தகுதி எனக்கு இல்லை.அந்த வார்த்தைகள் உங்களை எவ்வளவு பாதிச்சிருக்கும்ன்னு எனக்கு நல்லாவே தெரியும். உங்க மனசை புண்படுத்துனத்துக்கு என் அம்மா சார்புல நான் மன்னிப்புகேட்டுகிறேன். மன்னிச்சிடுங்க, நான் கிளம்புறேன்’ என்று செல்வா திரும்பியதும் தான் தாமதம்... ஓடி வந்து அவனின் கால்களில் விழுந்து பற்றிக் கொண்டாள்.

‘ஓ..’ என்ற அழுகையினுடே, நீங்கதான் என்னை மன்னிக்கணும் செல்வா. உங்க முகத்தைப் பார்க்கிற தைரியம் கூட எனக்கில்லை. என் அப்பாவுக்காக, எவ்வளவோ உதவியிருக்கீங்க. உங்களைப் போய் நான்...’

பேச முடியாமல் வெடித்து அழுதாள். ‘நான் எவ்வளவோ அவமானப்படுத்தியும், தப்புகள் செய்தும், தவறே செய்யாத நீங்க, எங்கிட்ட மன்னிப்புக் கேட்டு என்னை கூனி குறுக வெச்சிட்டிங்க. நான் இப்பவே செத்துட்டா ரொம்ப சந்தோஷப்படுவேன். என்னை மன்னிச்சிடுங்க... மன்னிச்சிடுங்க..’ என்றபடி தரையில் தன் நெற்றியை வேகமாக இடித்துக் கொண்டாள்.

அங்கு நடப்பதே சற்று நேரம் ஒன்றும் புரியவில்லை செல்வாவிற்கு. தன்னை ஏறெடுத்தும் பார்க்காத பெண், கால்களைக் கட்டிக் கொண்டு அழுவது அவனுக்கு அதிர்ச்சியையே கொடுத்தது. அவள் தன்னையே காயப்படுத்திக் கொண்டிருக்கிறாள் என்ற உண்மை புரிய, பதறி குனிந்தவன் அவளைத் தூக்கி நிறுத்தினான். கண்களை, மூடியபடி கைகளைக் குவித்த நிலையில் நின்றாள். அவள் கண்ணீரை தாங்க முடியாத செல்வா, உடனே தன் கைகளால் அவள் கண்ணீரை அழுந்த துடைத்தான்.

‘ஓவியா...ப்ளீஸ்.. என்ன இது சின்னபிள்ளை மாதிரி. இங்க பாரு.. தப்பு செய்தது என் அப்பா. அதுக்கு தண்டனையா நான் பேசலை. விஷயம் முடிஞ்சது. உன் இடத்துல எந்த ஒரு பெண்ணா இருந்தாலும் என்கிட்ட இப்படித்தான் நடந்திருப்பா. இது உன் தப்பில்லையே. உன் அப்பா மேல நீ வெச்ச பாசம் தான் அப்படி உன்னை நடந்துக்க வெச்சது. உன்னை நான் மன்னிக்க வேண்டிய அவசியமே இல்லை. தயவு செய்து புரிஞ்சுக்கம்மா...’ அவளின் தாடையைப் பற்றி, அவள் முகம் பார்த்தான். அந்த ஸ்பரிசத்தை அவளால் மறுக்க முடியவில்லை ஆனால் நடக்காத ஒரு விஷயத்தை தானும் நம்ப வேண்டாம். அவன் மனதிலும் அதற்கான நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டாம் என்றெண்ணி உடனே விலக எண்ணி திரும்பியவளால் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியவில்லை. காரணம் அவள் கைகளை இறுகப் பற்றியிருந்தான் ஏக்கம் நிறைந்த விழிகளுடன்.

அவனைப் பார்த்தவளால் தன் உணர்வுகளை கட்டுப்படுத்த முடியவில்லை. சற்று முன் தன் மனம் போட்ட கட்டுப்பாட்டுச் சுவர், அவர் பார்வையால் இடிந்து தரை மட்டமானது. அவன் தோள்களில் சாய்ந்து கதறி அழுதாள். அவன் கண்களும் நிறைந்துவிட்டது. எத்தனை நேரம் அவன் அணைப்பில் இருந்தாள் என்று அவளுக்கே தெரியவில்லை.

,முதலில் சுதாரித்தது அவள்தான். அவனிடமிருந்து விலக முயற்சித்தாள். ஆனால் செல்வாவின் அணைப்பு இறுக்கமானது. இனி உன்னை விடப் போவதில்லை என்று சொல்லாமல் சொல்லியது அவனின் அணைப்பு அந்த அணைப்பிலிருந்து விடுபட மனம் ஒத்துழைக்கவில்லை. ஆனால் அறிவு அதற்கு இடம் கொடுக்கவில்லை.

‘ப்ளீஸ் செல்வா..’ என்றவள் விலக முயற்சித்தாள். அப்போது தான் உணர்விற்கு வந்த செல்வா, உடனே அவளை விடுவித்தான்.

‘சாரி.. சாரி.. ஓவியா.. வேணும்னு பண்ணலை.. மன்னிச்சிடு..’ வேகமாக வெளியேறினான்.
 

Meena

Saha Moderator
Staff
Messages
1,070
Reaction score
85
Points
48
18

‘அப்போ இதுதான் உன் முடிவா..’ பிரியா எரிச்சலாக கேட்டாள். அருகில் குரு அமர்ந்திருந்தான். ஆமாம் என்பது போல தலையசைத்தாள் ஓவியா.

‘வர்ற கோபத்துக்கு உன்னை பளார் பளார்னு அறைஞ்சிடலாம் போல இருக்கு. அக்காவா பொறந்து தொலைச்சிட்டியே?’ ரத்தம் சூடேறியது பிரியாவுக்கு.

‘பிரியா கூல் டவுன். ஏன் இவ்வளவு டென்ஷன் ஆகுற..?’ சமாதானபடுத்தினான் குரு.

‘பின்ன என்ன குரு, செல்வா குடும்பம் மாதிரி ஒரு நல்ல இடம் இவளுக்கு கனவுல கூட கிடைக்க வாய்ப்பில்லை. பணத்துக்காக சொல்லலை, செல்வா மாதிரி ஒரு ஜென்டில்மேன் வேறு எங்கேயும் கிடைக்க மாட்டாங்க. அவர் இவ மேல உயிரையே வெச்சிருக்காரு. இவ்வளவு நாள் அப்பாவ கொன்னவன் கூட வாழ என் மனசு உறுத்தும்னு சொல்லி ஒரே ரகளை பண்ணினா. இப்போ அது இல்லைன்னு தெரிஞ்சவுடன் அவங்க அம்மா என்னை மனப்பூர்வமா மருமகளா ஏத்துக்க மாட்டாங்க, அப்படி இப்படின்னு இவளே ஒரு முடிவு எடுத்துட்டா.. இதுல செல்வாவோட எதிர்காலமும் இருக்கும்னு கொஞ்சமாவது யோசிச்சுப் பார்க்கிறாளா?’

‘அவர் எதிர்காலம் என்ன ஆச்சு..? வேற பெண்ணை கல்யாணம் பண்ணிக்கட்டும்,. நானா விழுந்து மறிச்சேன்....?’ வெடுக்கென கேட்டாள் ஓவியா.

‘ஏதாவது பேசின பல்ல உடைச்சிடுவேன்...’ கத்தினாள் பிரியா.

இப்போது குரு பேசினான். ‘சரி ஓவியா.. செல்வாவுக்கு தாராளமா வேற ஒரு பெண்ணை கல்யாணம் பண்ணி வைக்கலாம். அதுதான் நியாயம். நான் தரகருக்கு போன் போடறேன்...’ செல்லை எடுத்தான் குரு.

‘வேண்டாம் சார். ப்ளீஸ் வேண்டாம்..’ பதறினாள் ஓவியா.

‘வலிக்குதுல்ல ஓவியா.. மனசுல செல்வாவை வெச்சுக்கிட்டு வேற ஒருத்தரை மணக்க மனம் இடந்தரலைதானே. அப்புறம் செல்வாவை மட்டும் பண்ணிக்க சொல்றீங்க. இது எந்த வகைல நியாயம். இப்பவும் செல்வா எங்கிட்ட என்ன சொன்னான் தெரியுமா?’

‘டேய் குரு, ஓவியாவை கட்டாயப்படுத்தாதீங்கடா. அவள் மனசுக்கு ஒப்பாம என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா வாழ்க்கை இனிக்காது... எனக்கு நம்பிக்கையிருக்குடா. என் அம்மா ஓவியா தனக்கு ஒரு நல்ல மருமகள் என்று கண்டிப்பா சொல்லுவாங்க. அதுவரை நான் காத்திருப்பேன்னு’

‘இப்படி ஒரு நல்ல வாழ்க்கையை ஏன் ஓவியா கெடுத்துக்கறீங்க. உங்களுக்கு நல்ல வாழ்க்கையை அமைச்சு தருவதில் எனக்கும் பங்கு உண்டுன்னு நான் நினைக்கிறேன்...’ முடித்தான் குரு

‘எல்லோரும் என் மனசை புரிஞ்சிக்க மாட்டேங்கறீங்க. நீங்க ஏதாவது பேசி என்னை கல்யாணம் செய்ய சம்மதிக்க வெச்சாலும் செல்வா தாலி கட்டப் போறது ஒரு பிணத்துக்குத்தான்...’ வேகமாக சென்று கதவை அடைத்து கொண்டாள்.

‘பாத்தீங்களா குரு, இவ பண்றதை..?’தவித்தாள் பிரியா

‘விடு பிரியா.. இதுக்குமேல அவங்களை கட்டாயப்படுத்துவது மிகப்பெரிய தப்பு. இனிமே அந்தக் கடவுள்தான் கண் திறக்கணும்...’ குரு எழுந்து கொண்டான்.

*****​

காலம் யாருக்காகவும் நிற்கவில்லை. ஆறு மாத காலம் கண் மூடித் திறப்பதற்குள் பறந்து விட்டது. இடையில் செல்வா, ஓவியாவை பார்க்க முயற்சிக்கவில்லை.

வேலையில் மூழ்கியிருந்த ஓவியாவை குருவின் குரல் கலைத்தது.

‘சொல்லுங்க சார்..’

‘இன்னிக்கு ஈவினிங் நீங்க பஸ்ல போக வேண்டாம். எனக்கு உங்க வீட்ல கொஞ்சம் வேலையிருக்கு. கார்ல போயிடலாம்’ அவளின் பதிலை எதிர்பார்க்காமல் சென்றுவிட்டான்.

குழம்பினாள். இருப்பினும் எப்படியும் தெரியத்தான் போகிறது என்று நினைத்தபடி தன் வேலையைத் தொடர்ந்தாள்.

‘சொல்றதுக்கே கஷ்டமா தான் இருக்கு ஓவியா. ஆனா சொல்ல வேண்டிய கட்டாயத்துல இருக்கேன்...’ என்று பேரும் பீடிகை போட்டான் குரு.

அவன் எதிரில் இருந்த ஓவியாவின் நெற்றி சுருங்கியது. என்ன சொல்ல போகிறான்?

கற்பகம் சுவற்றில் சாய்ந்தபடி நின்று ஆர்வமாக குருவின் முகத்தை பார்த்தாள்.

பிரியா தன் ரூமை விட்டு வெளியே வரவில்லை.

சோபாவில் சாய்ந்து அமர்ந்தான் குரு.

‘ஓவியா.. நான் சொல்ல வந்ததை தயவு செய்து புரிஞ்சிக்க முயற்சி செய்யுங்க. என் அப்பாவின் உடல்நிலைபற்றி உங்களுக்கே நல்லாத் தெரியும். எனக்கு ஒரு கல்யாணம் பண்ணிப் பார்க்கணும்னு அவங்க ஆசைப்படறது நியாயம்தானே ஓவியா. என் விருப்பத்துக்கு பெண்ணை ஒத்துக்கிட்டவங்ககிட்ட கல்யாணம் நடக்க ஒரு வருஷம் ஆகும்னு சொன்னா ஒத்துப்பாங்களா...?’

‘ஏன் ஒத்துக்கணும். அடுத்த மாசமே கல்யாணத்தை வெச்சுக்கலாம் சார். நான் எல்லா ஏற்பாட்டையும் பண்ணிடறேன்.. இதுக்குப் போய் ஏன் சார் இப்படி பயமுறுத்தறீங்க?’ நிம்மதிப் பெருமூச்சு விட்டாள்.

‘இருங்க ஓவியா.. நான் இன்னும் முடிக்கலை. வீட்டுக்கு மூத்தப் பொண்ணு நீங்க இருக்கும் போது பிரியாவுக்கு கல்யாணம் பண்றது சரியில்லை. இது சொசைட்டிக்காக சொல்லலை, உங்க பிரியாவுக்கு நான் கொடுத்த வாக்குறுதி இது. உங்க கல்யாணம் முடிஞ்சாதான் எங்க கல்யாணம்னு நாங்க எப்பவோ முடிவெடுத்தாச்சு. அதுல எந்த மாற்றமுமில்லை. இப்போ நான் சூழ்நிலைக் கைதியாக இருக்கேன். அப்பா, அம்மாவோட நியாயமான ஆசையை என்னால ஒதுக்க முடியலை, வாக்குறுதியையும் மீற முடியலை. எங்கே என் பிரியாவை இழக்க நேரிடுமோன்னு ரொம்ப பயமா இருக்கு ஓவியா’

முகம் வெளிறி போய் அமர்ந்திருந்தாள் ஓவியா. அங்கே கனத்த அமைதி நிலவியது.

‘முடிவு உங்க கையில்தான் இருக்கு ஓவியா. எந்த முடிவானாலும் சீக்கிரம் சொல்லுங்க..’ என்று முடித்தவன் எழுந்து கொண்டான். மிகவும் சோர்வாக நடந்து வாசலைக் கடந்தான்.

பேச நா எழவில்லை அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை. என் முடிவு என்றால், நான் விரைவில் திருமணத்திற்கு சம்மதிக்க வேண்டுமென்று தானே பொருள். அப்போது தான் குரு பிரியா கல்யாணம் நடக்கும் என்று மறைமுகமாக கூறிவிட்டு செல்கிறான். சிந்தனை அலைமோதியது. அம்மாவை நிமிர்ந்து பார்த்தாள். அம்மா முந்தானையில் வாய் பொத்தி உள்ளே சென்றாள். குற்ற உணர்வில் துடித்தாள். மெல்லச் சென்று பிரியாவின் தோளைத் தொட்டாள். மேஜை மீது படுத்திருந்தவள் திரும்பி அக்காவின் இடுப்பை கட்டிக்கொண்டு கதறியழுதாள் பிரியா. செய்வதறியாது துடித்தாள் ஓவியா.

இரவு படுக்கையில் படுத்த ஓவியாவிற்கு குருவின் சோகமான முகமும், பிரியாவின் அழுது வீங்கிய முகமும், அம்மாவின் பாராமுகமுமே மாறி மாறி வந்தது. இடையில் செல்வா கை கட்டி சிரிக்கும் காட்சி வேறு. மனம் பெரிதாக அலறியது. கடவுளே, நான் என்ன செய்ய வேண்டும்? என்னால் இந்த வீட்டு நிம்மதி சிதைந்துவிட்டதே. பிரியாவின் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிட்டதே என்ன செய்வேன்? இதற்கு எப்படி பிராயசித்தம் செய்வேன். கண்களில் நீர் அருவியாய் கொட்டியது. அதிகம் குழம்பிய மனது இறுதியில் ஒரு தெளிவான முடிவை எடுத்தது.

குருவின் செல்போன் சிணுங்கியது. அதையெடுத்து காதுக்குக் கொடுத்தான்.

‘குரு, நான் ஓவியா பேசறேன்...’

‘பிரியா விஷயமா நான் ஒரு முடிவெடுத்துட்டேன்...’

‘எனக்கு புரியலை ஓவியா...’

‘நான் கல்யாணம் பண்ணிக்கிற முடிவுக்கு வந்துட்டேன்...’

இதைக் கேட்ட குரு மகிழ்ச்சியின் உச்சகட்டத்துக்கே போய்விட்டான்.

‘சூப்பர்ப் ஓவியா. அடுத்த நல்ல நாளிலேயே செல்வாவை பெண் கேட்டு உங்க வீட்டுக்கு வரச் சொல்றேன்..’ என்று உற்சாகமாக பேசிக் கொண்டே சென்ற குருவை இடைமறித்தாள்.

‘ஒரு நிமிடம் குரு. நான் கல்யாணத்துக்குத்தான் சம்மதம் சொன்னேன். செல்வாவை கல்யாணம் பண்ணிக்க இல்லை. செல்வாவைத் தவிர வேற எந்த பையனா இருந்தாலும் பரவாயில்லை. நான் பண்ணிக்கத் தயார்...’

அதிர்ச்சியில் உறைந்தான் குரு.

‘என்ன ஓவியா இது. இப்படிப் பேசறீங்க. பிரியாவுக்காக உங்க வாழ்க்கையை தியாகம் பண்றீங்களா? கல்யாணங்கிறது தியாகத்துக்காக பண்ணிக்கிறது இல்ல. மனப்பூர்வமா பண்ணிக்கிறது.

‘ப்ளீஸ் குரு. இதுக்கு மேல எந்த அட்வைசும் வேண்டாம். நான் முடிவெடுத்துட்டேன். ஒரு நல்ல பையனா பார்த்து பெண் பார்க்க ஏற்பாடு பண்ணுங்க. நான் போனை வைக்கிறேன். தொடர்பைத் துண்டித்தாள். மனம் ஓவென்று அலறியது. கதறி அழ வேண்டும் போல் தோன்றியது. இந்த உலகத்தில் தான் மட்டும் தனித்து வாழ்வது போல் பிரமை ஏற்பட்டது.ஏதோ சிந்தனையில் ஆழ்ந்தாள். வெறித்த பார்வையும் சிவந்த கண்களுமாக உலாவரும் அக்காவைப் பார்க்க வேதனையாக இருந்தது பிரியாவுக்கு.

வீட்டு வாசலில் காரை நிறுத்திவிட்டு வேகமாக உள்ளே நுழைந்தான் குரு. கற்பகம் தான் அவனை வரவேற்றார்.

‘அம்மா ஒரு நல்ல விஷயத்தோட வந்துருக்கேன். வரும் ஞாயிற்றுக்கிழமை நம்ம ஓவியாவை பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வராங்க’

‘அப்படியா தம்பி, ரொம்ப நல்ல விஷயம்பா, பையன் எப்படின்னு சொல்லுங்களேன்’

‘என் மேலே நம்பிக்கையில்லையா அம்மா. ஓவியாவுக்கு பொருத்தமான வரனைத் தான் பார்த்திருக்கேன்’

‘அதுக்கில்லை தம்பி. சும்மா தெரிஞ்சக்கலாமேன்னு கேட்டேன். உங்க மேல முழு நம்பிக்கையிருக்கு. எத்தனைப் பேர் வராங்கன்னு சொன்னீங்கன்னா, நான் டிபன் ஏற்பாடு பண்ணிடுவேன்’

‘ஒரு ஐந்து பேருக்கு மட்டும் ஏற்பாடு பண்ணுங்கம்மா போதும். பிரியா எங்க?’

‘மாடில இருக்கா தம்பி, நீங்க போங்க. நான் காபி எடுத்துட்டு வர்றேன்’

‘சரிம்மா..’ இரண்டிரண்டு படிகளாக தாவி ஏறினான்.

‘ஹேய் பிரியா, இங்க என்ன பண்ற?’

‘சும்மாதான் காத்து வாங்கலாம்னு. நீங்க எப்ப வந்தீங்க’ குரலில் சுரத்தே இல்லை.

‘இப்பத்தான் ஏன் ஒரு மாதிரி இருக்கே, உடம்புக்கு ஏதும் முடியலையா?’

‘அதெல்லாம் இல்ல குரு. என்ன திடீர்னு இந்தப் பக்கம்’

‘வருகின்ற ஞாயிற்றுக்கிழமை ஓவியாவை பெண் பார்க்க வராங்க பிரியா. அதைச் சொல்லத்தான் வந்தேன்’

‘அப்படியா...’ ஆச்சர்யமேயில்லாமல் கூறினாள்.

‘என்னாச்சு பிரியா?’

‘இல்ல குரு நாம தப்பு செய்யறோமோன்னு தோணுது. உங்ககிட்ட கல்யாணத்துக்கு சம்மதம் சொன்ன நாள்லயிருந்து அவ தினம் அழுதுக்கிட்டே இருக்கா. அவ மனசு பூரா செல்வாதான் இருக்கார். ஆனா அவ அதை மறைக்கிறா, அவளால வேற ஒருத்தரை கல்யாணம் செஞ்சுக்கிட்டு நிம்மதியா இருக்க முடியுமா. நம் கல்யாணம் மட்டும் முடிஞ்சா போதும்னு என்னால சுயநலமா இருக்க முடியல குரு’

‘புரியுது பிரியா. ஆனா இது ஓவியவே எடுத்த முடிவு. நாம எதுவும் செய்ய முடியாது. அவங்க மனசு மாறுவாங்கன்னு எனக்கு நம்பிக்கையில்லை. எல்லாம் விதிப்படி தான் நடக்கும். நம்ம கைல எதுவுமில்லை. நீ மனசை போட்டு குழப்பிக்காம இரு’ அவளை சமாதானப்படுத்தி விட்டு சென்றுவிட்டான்.

பட்டுபுடவையில் தேவதை மாதிரி இருந்தாள் ஓவியா. ஆனால் அவள் கண்களின் சோகத்தை மட்டும் எந்த ஒப்பனையாலும் சரி செய்ய முடியவில்லை. எப்போது கண்களில் மடை உடையுமென்று சொல்லவே முடியாமலிருந்தது.

மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்துட்டாங்க என்றவாறு பரபரத்தது அம்மா கற்பகம் தான். வாசலுக்கு ஓடிச் சென்று அவர்களை வரவேற்று கூடத்தில் அமர வைத்தாள். பிரியா எல்லோருக்கும் தண்ணீர் வழங்கினாள்.

இது எதுவுமே பிடிக்காமல் என்ன செய்வதென்று தெரியாமல் அமர்ந்திருந்தாள் ஓவியா. இப்பவும் ஒன்னும் கெட்டுப் போய்விடவில்லை. செல்வாவிடம் தன் விருப்பத்தை வெளியிட்டு விடலாமா என்று கெஞ்சிய மனதை அடக்கினாள். எல்லாம் என் தலைவிதி என்று ஏற்றுக் கொள்ள வேண்டியதுதான். விழிகளில் தேங்கிய நீர் சிந்திவிடாமல் துணியால் ஒத்தி எடுத்தாள்.

‘அக்கா உன்னை கூப்பிடுறாங்க’ என்றபடி அறையினுள் நுழைந்தாள் பிரியா.

இயந்திரமாய் எழுந்து நடந்தாள் ஓவியா.

தரையை பார்த்தபடி கூடத்தில் வந்து நின்றாள். ஏனோ யாரையும் நிமிர்ந்து பார்க்கும் சக்தியில்லாமல் தரையை அளவெடுத்தாள். ‘நமஸ்காரம் பண்ணிக்கோ ஓவியா’ என்ற தாயின் குரலுக்கு, எந்தவொரு சலனமில்லாமல் நமஸ்கரித்து எழுந்தாள். ’நல்லா இரும்மா’ என்ற பெண்ணின் குரல் மட்டும் கேட்டது.

‘சரி நீ உள்ளே போ ஓவியா’ என்றார் கற்பகம்.

தரையைப் பார்த்தப்படியே தன்னறைக்குள் நுழைந்தாள்.

‘ஏன் ஓவியா நீ மாப்பிள்ளையை பார்க்கவேயில்லை’ உள் மனம் வேலையை ஆரம்பித்து.

‘பிடிக்கலை’

‘எனக்கு தெரியும் செல்வாவை தவிர, அந்த இடத்தில வேற யாரையும் வெச்சு பார்க்கிற சக்தி உனக்கு கிடையாது. அதனால்தான்’

‘அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை, உன் வேலையைப் பாரு’

‘நான் என் வேலையைத்தான் பார்க்கிறேன்’

‘இன்னிக்கே உன்னால இதை ஜீரணிக்க முடியலை வாழ்க்கை பூரா எப்படி இருக்கப் போற. மனசுல செல்வாவையும், வாழ்க்கை வேறொருத்தரிடமா?’

‘நீ என்ன குழப்பாதே’

‘குழப்பலை உண்மை இதுதான். உன் மரமண்டைக்கு ஏன் ஏறல. உன்னால செல்வாவைத் தவிர. வேறு யார் கூடவும் நிம்மதியா வாழ முடியாது. மனசாட்சிக்கு துரோகம் செஞ்சீன்னா, உன்னை நிம்மதியாவே வாழ்விடமாட்டேன். தெரிஞ்சிக்கோ, அப்புறம் உன் இஷ்டம்’

‘அக்கா; என்ற பிரியாவின் குரலுக்கு சுய நினைவுக்கு வந்தாள்.

‘மாப்பிள்ளை உன் கூட ஏதோ தனியா பேசணுமாம். இங்க வர்றார் எதுவானாலும் வெளிப்படையா பேசிடு. சரியா நான் போறேன் ஓடிவிட்டாள்.

சுவரின் பக்கம் திரும்பி நின்று தன் கண்களை துடைத்து கொண்டாள்.

கதவருகில் நிழலாடியது தெரியவும் திரும்பி நின்றாள். இப்போதும் அவள் பார்வை தரையையே வெறித்தது. அந்தக் கால்கள் மெல்ல அவள் அருகில் வரவர அவனுள் என்னென்னவோ மாற்றங்கள் தோன்றியது. வேகமாக சென்ற அந்த கால்களில் விழுந்துவிட்டாள்.

‘தயவு பண்ணி என்னை மன்னிச்சிடுங்க, எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பமில்லை. என்னை பிடிக்கலைன்னு சொல்லிடுங்க. நான்.. நான் செல்வான்னு ஒருத்தரை மனதார காதலிக்கிறேன். அவரைத் தவிர வேற யாரையும் அந்த இடத்துல நினைச்சுப் பார்க்கவே எனக்கு அருவருப்பா இருக்கு. தயவு செய்து மன்னிச்சிடுங்க... என்னை பிடிக்கலைன்னு சொல்லிடுங்க, ப்ளீஸ்.. ப்ளீஸ்’ கதறியழுதாள். முதன் முறையாக தன் மனச்சாட்சி ஜெயித்துவிட்டதை உணர்ந்தாள்.

‘உன்னை எப்படி ஓவியா பிடிக்கலைன்னு சொல்வேன்’ செல்வாவின் குரல் அழுத்தமாக ஒலித்தது.

தன் காதுகளையே நம்ப முடியாமல் நிமிர்ந்து பார்த்தாள் செல்வா தான். அவரேதான் இங்கு எப்படி வந்தார். இங்க என்ன நடக்கிறது. கடவுளே தலை சுற்றுகிற மாதிரியிருக்கிறதே.

‘எழுந்திரு ஓவியா’ என்றபடி அவள் தோள்களை பிடித்து உயரத்தினான். கட்டிலில் அமர வைத்தான். அருகிலிருந்த தண்ணீரை அவளிடம் நீட்டினான்.

‘இந்தத் தண்ணீரைக் குடி.பிறகு பேசலாம்’

கடகடவென்று தண்ணீரைப் பருகினாள். என்ன பேசுவதென்றே தெரியவில்லை. இவனிடமா உளறினோம். கடவுளே என்ன நினைப்பான், முகம் கன்றி சிவந்துவிட்டது. அவனை ஏறிட்டு பார்க்க தைரியமின்றி குனிந்திருந்தாள்.

அவளின் தாடையை தொட்டு உயர்த்தினான்.

‘முதல்ல அழறத நிறுத்து’ அவள் கண்களிலிருந்து வழிந்த நீரை அழுந்த துடைத்தான்.

‘மனசு முழுக்க என்ன வெச்சுக்கிட்டு ஏன் ஓவியா உன்னை நீயே காயப்படுத்திகிற. நாம இருக்க போறது கொஞ்ச காலம்தான். இதில் நம்ம மனசுக்கு பிடிச்ச வாழ்க்கையை வாழ்ந்துட்டு சந்தோஷமா இருக்கலாமே. அதுல ஏன் இத்தனை குழப்பம்,நீ இல்லாத வாழ்க்கையை, என்னாலயும் நினைச்சு கூட பார்க்க முடியல. என் மனசுக்குள்ள ஆழமா நுழைஞ்சிட்ட கண்டிப்பா உன்ன நான் மிஸ் பண்ண மாட்டேன் ஓவியா’ என்றவன் அவள் நெற்றியில் இதழ் பதித்தான்.

அவனது ஒற்றை முத்தம் அவளுள் ஆயிரம் மாற்றங்களை நிகழ்த்தியது. உடல் முழுவதும் சிலிர்த்தது. மூடிய விழிகளிலிருந்து நீர் கசிந்தது.

‘உங்கம்மா..’ வார்த்தைகளை கோர்த்தாள்.

‘அம்மாவுக்கு மனப்பூர்வமான சம்மதம். அவங்க சம்மதம் தான் முக்கியம்னு நீ நினைக்கும் போது உன்னை எந்த குறையுமில்லாம, என் வாழ்க்கைத் துணையா வருவதைத் தான் நான் ஆசைப்படறேன்’

‘செல்வா உங்களுக்கு.. நான்.. எப்படி..’

‘ம்... நன்றியெல்லாம் வேண்டாம். ஐ லவ் யூ சொன்னாப் போதும். எங்க சொல்லு பார்க்கலாம்’ என்று சிரித்தான்.

குங்குமமாய் சிவந்தாள் ஓவியா.

‘உங்க அம்மாவ எப்படி சம்மதிக்க வெச்சீங்க செல்வா?’ படபடக்கும் விழிகளோடு வினவினான் .

அதை நீ அவங்கக் கிட்டேயே கேட்டுக்க’ என்றபடி இருவரும் வெளியே வந்தனர். அவனுடைய தாயின் கால்களில் விழுந்து ஆசி பெற்றாள்.

‘நல்லாயிரும்மா, அன்னிக்கு அப்படி நடந்துகிட்டதுக்காக என்ன மன்னிச்சுடும்மா’

‘அய்யோ ஏன்மா பெரிய வார்த்தையெல்லாம் பேசுறீங்க..’

‘இல்லம்மா நான் செஞ்சது தப்புத்தான். கடவுள் புண்ணியத்துல எங்களுக்கு பணப் பஞ்சமில்லை. ஒரே மகன் தான். இப்படி இருக்க, இந்த வயசுல என் கணவர் இறந்ததை என்னால ஜீரணிச்சிக்கவே முடியலை. இந்த ஆறு மாசம் ஆறு யுகமாக தான் கரைந்தது. அப்படிப் பாத்தா ரெண்டு பெண் குழந்தைகளை வெச்சுக்கிட்டு, பணப் பற்றாக்குறையோடு உங்க அப்பாவை இழந்து நீங்க நின்னீங்கன்னு நினைச்சா மனசுக் கலங்குது. ஏதேதோ பேசிட்டேன், இதை எனக்கு மெல்ல மெல்ல புரிய வெச்சது குருவும் செல்வாவும்தான். இப்போ ஓவியாவை நான் மருமகளா மனப்பூர்வமாக ஏத்துக்கிறேன்’

கண்கள் கலங்கியது ஓவியாவிற்கு. தனக்காக இத்தனை மெனக்கெட்டு பாடுபட்டிருக்கிறார்கள். செல்வாவும், குருவும். இவ்வளவு நல்லவர்கள் சுற்றியிருக்க தான் நிச்சயம் போன ஜென்மத்தில் புண்ணியம் செய்திருக்க வேண்டும். நன்றியோடு குருவைப் பார்த்தாள்.

‘கடைசி நேரத்துல எங்கிட்ட போன் பண்ணி சொன்னாருக்கா குரு. அதுவரைக்கும் எங்கிட்ட கூட சொல்லல’ குருவை முறைத்தாள் பிரியா.

‘சரி சரி அதான் எல்லாம் நல்லபடியா முடிஞ்சிடுசே. உனக்கு உன் அக்கா முக்கியம்னா, எனக்கு என் நண்பன் முக்கியம்தானே, கண்ணம்மா’ என்றவன் பிரியாவின் தோள் மீது கை வைத்தான். அவன் கைகளை தட்டிவிட்டாள்.

‘போதும் அம்மா இருக்காங்க’ கிசுகிசுத்தாள்.

‘ஓகே மேடம்’ அடிப்பணிந்தான்.
 

Meena

Saha Moderator
Staff
Messages
1,070
Reaction score
85
Points
48
19

நகரத்தின் பிரதான மண்டபம் அது. முழுவதும் குளிரூட்டப்பட்டிருந்தது. சங்கர் பெரிய பார்சலுடன் உள்ளே நுழைந்தான். அவன் விழிகள் செல்வாவைத் தேடியது. சிறிது நேர அலசல்களுக்கு பிறகு சிக்கினான். அவனிடம் விரைந்தான், அதற்குள் செல்வாவும் சங்கரை பார்த்துவிட்டு விரைந்தான்.

‘ஹாய் சங்கர் வாங்க வாங்க, எப்படி இருக்கீங்க?’

‘வெரி பைன் செல்வா, ஓவியா எங்கே?’

‘அதோ அங்க சேர்ல மேடம் ரெஸ்ட் எடுத்துகிறாங்க. அவங்க வேலையையும் சேர்த்து நான் தான் செய்யறேன்’ என்றபடி ஒரு சேரை சுட்டிக்காட்டினான்..

லேசாக மேடிட்ட வயிற்றுடன் சற்று மெருகேறிய முகத்துடனும் அமர்ந்திருந்தாள் ஓவியா.

‘ஹாய் ஓவியா கங்கிராட்ஸ்’

‘தேங்க்ஸ் சங்கர்’ முகம் குங்குமமாய் சிவந்திருந்தது.

கல்யாணத்தின் போது இருந்ததை விட கலர் அதிகமாயிட்டீங்க. என்ன செல்வா, சார் என்ன மாயம் செய்தீங்க’ சீண்டினான் சங்கர்.

‘அதை ஏன்டா கேட்கிற டெய்லி நான்தான் குளிப்பாட்டி விட்றேன்னா பார்த்துக்கோயேன்’

அவனும் கிண்டலில் சளைக்கவில்லை.

‘அட சும்மாயிருங்க’ செல்வாவிடம் கிசுகிசுத்தாள்.

‘ஏதோ சந்தோஷமாயிருந்தா சரிதான். ஆமாம் மாப்பிள்ளை இன்னும் வரலையா’

‘வந்துகிட்டே இருக்காங்க. வாங்க சங்கர் அப்படி போய் உட்காரலாம்’

குருவும் பிரியாவும் போட்டோக்களுக்கு போஸ் கொடுத்து களைத்திருந்தனர். இன்னும் கூட்டம் குறைந்தாற்போல் தெரியவில்லை.

சங்கரை அழைத்துக் கொண்டு ஓவியாவும் செல்வாவும் மேடை ஏறினார்கள். குருவுக்கு வாழ்த்துக்கள் கூறினான் சங்கர்.

‘நம்ம செல்வா மாதிரியே சீக்கிரம் பிரமோஷன் வாங்குங்க சார்’

‘அட நீங்க வேற சங்கர். அவன் ரொம்ப லேட். கல்யாணமாகி ஏழு மாசமாகுது. ஆனா ஓவியாவுக்கு நாலுமாசம் தான். நான் பாருங்க இன்னும் ஏழே மாசத்துல ஒரு ஜூனியரை ரெடி பண்ணி உங்க கையில கொடுக்கிறேன். உனக்கு ஓகே வா டார்லிங்’ என்று பிரியாவின் முகம் நோக்கினான். வெட்கத்தால் முகம் சூடேறிற்று. இருப்பினும்,

‘நீங்க உதைத்தான் வாங்கப் போறீங்க’ முறைத்தாள் பிரியா.

‘சரி சரி செல்வா உனக்கு என்ன குழந்தை வேணும் பையனா, பெண்ணா பேச்சை மாற்றினான் சங்கர்.

‘அந்த சாய்சே இல்ல. எனக்கு நிச்சயம் பையன்தான்’ உறுதியாகக் கூறினான் செல்வா.

‘அது எப்படி அவ்வளவு உறுதியா சொல்ற. இடை புகுந்தான் குரு’

‘அது அப்படித்தான் நீ வேணும்னா பாரேன்’

‘சரிடா எவ்வளவு பெட்’

‘என்னோட கழுத்துல இருக்கிற இந்த கோல்ட் செயின்’

‘சரி அப்படி உனக்கு பையன் பொறந்துட்டா, அவனுக்கு ஒரு செயின் வாங்கி நான் போட்டுடறேன். ஓகே’

‘அது சரி நீ செய்ய வேண்டிய முறையை பெட்டுன்னு சொல்லி ஏமாத்துறியா?’

‘எதுவானாலும் பிளான் பண்ணித்தான் செய்யனும்’ என்று வடிவேல் பாணியில் குரு கூறவும். அங்கே சிரிப்புச் சத்தம் மேலோங்கியது.
 

Meena

Saha Moderator
Staff
Messages
1,070
Reaction score
85
Points
48
20

அப்பல்லோ ஹாஸ்பிடல் பிரசவ பிரிவில் தவிப்பாய் நின்று கொண்டிருந்த செல்வாவை நோக்கி விரைந்தனர் குருவும், பிரியாவும்.

‘என்னடா சொன்னாங்க டாக்டர்’ செல்வாவின் கைகளை பிடித்தபடி கேட்டான் குரு.

‘கொஞ்சம் கிரிடிக்கல்தான்னு சொல்றாங்க குரு. எனக்கு ரொம்ப பயமா இருக்கு’ பதட்டமாக வெளிவந்தது வார்த்தைகள்.

‘டேய் சிசேரியன் எல்லாம் இப்ப ரொம்ப சிம்பிள்டா. நீ கவலையே படாதே’

ஆபரேஷன் தியேட்டரினுள்ளிருந்து ஒரு குழந்தையின் வீல் சத்தம் கேட்டது.

வெளியிலுள்ள அத்தனை பேரும் உற்சாகமானார்கள். உள்ளிருந்து ஒரு நர்ஸ் ஓடி வந்தாள்.

கங்கிராட்ஸ் செல்வா, உங்களுக்கு பையன் பொறந்திருக்கான். உங்க வொய்ப்பை ரூமுக்கு மாத்திடறோம். குழந்தையை வாஷ் பண்ணிக் கொண்டு வந்துருவாங்க ஓகே’

‘தேங்க்யூ சோ மச் சிஸ்டர்’ என்றான் சந்தோஷம் தாங்க முடியாத குரலில்.

பட்டு போன்ற மிருதுவான அந்த பிஞ்சு கால்களை தொட்ட செல்வாவிற்கு புல்லரித்தது. கடவுளின் படைப்பில் மிகவும் அதிசயமானது குழந்தைப் பிறப்பு என்பதை உணர்ந்தான். அவன் தொடுகையை உணர்ந்த குழந்தை மெல்ல அசைந்தது.

ஓவியாவை நெருங்கினான், மிகவும் களைத்திருந்தாள். கேசத்தை சரிபடுத்தி, நெற்றியில் இதழ் பதித்தான். ஓவியா கண்களை மெல்லத் திறந்தாள்.

‘ஓவியா நம்ம குழந்தை. நம்ம குழந்தையை பாரேன். எவ்வளவு அழகாயிருக்கு. அப்படியே சுந்தரேசன் அங்கிள் மாதிரி சந்தேகமேயில்லை ஓவியா. நான் ஆசைப்பட்ட மாதிரி சுந்தரேசன் அங்கிளே எனக்கு மகனா வந்து பிறந்திருக்காரு. நம்மளை விட்டு அவர் வேற எங்க போவாரு’

‘குட்டிச் செல்லம் உன் பேரு சுந்தரேசன். சுந்தரேசன் அங்கிள் என்னை வளர்த்தாருல்ல ஓவியா. இப்போ நான் அவரை வளர்க்கப் போறேன். அவர் சொன்ன கதையை அவருக்கே திருப்பிச் சொல்லப் போறேன். எங்க அப்பா செஞ்ச தப்புக்கு நான் பிராயசித்தம் செய்ய போறேன். நான் இப்போ எவ்வளவு சந்தோஷமா இருக்கேன்’ தெரியுமா. மனசு லேசாயிருக்கு. அங்கிள் இனி நம்ம கூடவே இருப்பார் இல்ல ஓவியா?’ கண்கள் கலங்க ஒரு குழந்தை போல் பேசிக் கொண்டிருந்த செல்வாவைப் பார்த்து மகிழ்ச்சியில் கண்கள் கலங்கினாள் ஓவியா.

இத்தனை நல்லவரா தன் கணவர். எனது தந்தை மேல் எனக்கு இருந்த பாசத்தைவிட அதிகம் இவர்தான் வைத்திருக்கிறார். அவரே குழந்தையாக பிறக்க வேண்டும் என்று பிரார்த்தனையும் செய்திருக்கிறார். இவரைப் போய் நான் என்னவெல்லாம் பேசிவிட்டேன். என்னை மன்னித்து விடுங்கள் அப்பா என்று தன் குழந்தையின் கன்னத்தில் இதழ் பதித்தாள்.

சுந்தரேசன் அவர்களுடன் சீரும சிறப்புமாக தனது இரண்டாவது ஜென்மத்தை ஆரம்பித்து விட்டார் என்று செல்வா ஓவியாவைப் போல் நாமும் நம்புவோம்.

●●●●●​
 

Latest Episodes

Latest posts

New Threads

Top Bottom