நினைவு 3
தூக்கம் முற்றிலும் அகன்றவனாய், அப்போதே, கிளம்ப ஆயத்தமானான் வைபவ். தன்னை சுத்தப்படுத்தியவன், அங்கங்கு இரைந்து கிடந்த பொருட்களை தன் பையில் தூக்கிப் போட்டவாறு, தன் நண்பர்களுக்கு கிளம்புவதாக செய்தி அனுப்பினான். அவர்கள் இன்னமும் மருத்துவமனையில் தான் இருந்தனர் என்பதை அறிந்தும், சிறிதும் அலட்டிக் கொள்ளாமல் தன் வேலையில் கவனமாயிருந்தான் வைபவ்.
எல்லாவற்றையும் எடுத்து வைத்து, அறையைக் காலி செய்து கிளம்ப, ஒரு மணி நேரம் பிடித்தது.
அந்த விடிந்ததும் விடியாத காலைப் பொழுதை ரசிக்கக் கூட மனமில்லாதவனாய், தன் மகிழுந்திற்காக காத்துக் கொண்டிருந்தான். அப்போது தான் இன்று செல்வதை வீட்டினரிடத்தில் தெரிவிக்க வில்லை என்பது நினைவிற்கு வந்தது. உடனே அலைப்பேசியில் தன் தமையனை தொடர்பு கொண்டான்.
அவனின் போதாத காலமோ, எதிர்முனையில் அழைப்பு எடுக்கப்படவில்லை. அவனும் தொடர்ந்து முயற்சித்துக் கொண்டிருந்தான்.
அப்போது தான் தனக்கு பின்னால் கேட்ட சத்தத்தில் திரும்பிப் பார்த்தவன், ஒரு கணம் அதிர்ந்து தான் போனான்.
அவன் கண்டது இதுவே… யாரோ ஒருவன் கத்தியை தன் முதுகிற்கு குறி பார்க்க, மற்றொருவன் அவனை தடுத்துக் கொண்டிருந்தான். அதற்குள் அங்கிருந்த ஒரு சிலர் நடக்கவிருந்த விபரீதத்தை உணர்ந்து அங்கு வந்து அவர்களை விலக்கினர்.
முதலில் சற்று அதிர்ந்திருந்த வைபவ், சுதாரித்தவனாய் தன்னை குத்த வந்தவனின் சட்டையைப் பிடித்து, “ப்ளடி ராஸ்கல், ஹொவ் டேர்... யாரு டா நீ…?” என்று சில கேட்க முடியாத கெட்ட வார்த்தைகளையும் சேர்த்து அவனை காய்ச்சிக் கொண்டிருந்தான்.
அவன் கையில் சிக்கியவனோ, அவனையே முறைத்துக் கொண்டிருந்தான். அவனின் பார்வை வைபவிற்கு எரிச்சலைத் தர, அவனை அடிக்கச் சென்றவனின் கரங்களை பற்றி யாரோ தடுக்க, தன்னைத் தடுத்தவனை திரும்பிப் பார்த்தான் வைபவ். அங்கு தன் வாடா புன்னகையுடன் நின்றிருந்தான் அதர்வா.
“பாஸ்… நீங்க ஏன் இப்படி அடிச்சுக்கிட்டு உங்க எனர்ஜிய வேஸ்ட் பண்றீங்க… எதுவா இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம்…” என்று கூற…
அதர்வாவை மேலும் கீழும் பார்த்த வைபவ், ‘நீ சொல்வதை நான் கேட்பதா…’ என்ற நக்கல் பாவனையுடன் அவனை நெருங்கினான்.
அதற்குள் விஷயத்தை அறிந்து ஓடி வந்த வைபவின் நண்பர்கள், அவனின் கைகளில் சிக்கியிருப்பவனைப் பார்த்து, “ராஜேஷ், உனக்கு என்ன அவ்ளோ அவசரம்… நாங்க சொல்றத முழுசா கூட கேட்காம, இங்க வந்திருக்க…” என்று திட்ட ஆரம்பித்த நண்பர்கள் குழு, அந்த ராஜேஷ் எனப்பட்டவனின் கையிலிருந்த கத்தியைக் கண்டு நிலைமை கைமீறி விட்டதை உணர்ந்தனர்.
அதில் ஒருவன், “டேய் லூசா டா நீ… யாரு மேல தப்புன்னு தெரியாம இப்படி தான் எடுத்தோம் கவுத்தோம்ன்னு முடிவெடுப்பியா…” என்று அவனை திட்டினான்.
“இப்போ என்ன டா பண்ண சொல்றீங்க..? அதிர்ந்து கூட பேச தெரியாத பொண்ணு டா என் தங்கச்சி… அவள அப்படி ஒரு நிலைமை பார்க்க முடியல டா… பிடிக்கலனா அத பொறுமையா எடுத்து சொல்லாம்ல… எவ்ளோ ஹார்ஷா இவன் பேசியிருந்தா, அவ இந்த முடிவ எடுத்திருப்பா…” என்று கண்கள் கலங்க அவன் சொன்னதைக் கேட்டதும், ‘ஓ கனிஷ்காவோட அண்ணனா…’ என்று யோசித்தான் வைபவ்.
அப்போதும் ஒரு அலட்சிய பாவத்துடனே நின்றிருந்தான் வைபவ். சற்று முன் நடந்த சம்பவத்தை எண்ணி கோபம் கொண்டவனாக, “ஹே என்ன ஓவர் சென்டிமெண்டா பேசிட்டு இருக்க… என்னமோ டேட்டிங், மீட்டிங் எல்லாம் பண்ணி கடைசில கழட்டி விட்ட மாதிரி ஃபீல் பண்ணிட்டு இருக்க… நல்லா பணக்கார பையனா பார்த்து லவ் பண்றேன்னு சொல்ல வேண்டியது, ஷாப்பிங்னு சொல்லி அவன் காசுல ஓசில ஊர் சுத்த வேண்டியது, அப்பறம் வீட்டுல பார்த்த மாப்பிள்ளைக்கு ஓகே சொல்லி அவன கழட்டி விடவேண்டியது… உன் தங்கச்சியும் எங்கிட்ட இருக்க பணத்த பார்த்து தான என் பின்னால சுத்துனா…” என்று பேசிக் கொண்டே போக…
அவன் கூறியதில் மீண்டும் கோபமாக, “டேய் என் தங்கச்சிய பத்தி ஒரு வார்த்தை தப்பா பேசுன…” என்று கூறியவாறு வைபவின் சட்டையை பிடிக்க வர, அவர்களின் நண்பர்கள் தான் இருவரையும் பிரிக்க வேண்டியதாயிருந்தது.
அதில் ஒருவன் ராஜேஷை தனியாக அழைத்துச் செல்ல, மற்றொருவன் வைபவிடம், “நீ ஊருக்கு கிளம்பு வைபவ்… போயிட்டு கால் பண்ணு… “ என்றான். மேலும் அவன் இங்கிருந்தால், இந்த பிரச்சனை பெரிதாக வாய்ப்பிருப்பதால் அவ்வாறு கூறினான்.
வைபவும் தலையசைத்து அவனிடம் விடைபெற்று தன் மகிழுந்தின் புறம் திரும்பினான்.
அப்போது அங்கு நடந்தவற்றை ஏதோ யோசனையில் பார்த்துக் கொண்டிருந்த அதர்வா கண்ணில் பட்டான்.
அதர்வா தான் தன்னைக் காப்பற்றியது என்பது நினைவிற்கு வர, அவனிடம் சென்று “தேங்க்ஸ்…” என்று கூறினான்
அவனோ தன் ட்ரேடமார்க் சிரிப்புடன், “யு ஆர் வெல்கம்…” என்று கூறியவாறு, தன் பையை தோளில் மாட்டியவாறு, அங்கிருந்து கிளம்பினான்.
ஏதோ தோன்ற, சற்று தூரம் சென்றவனை அழைத்த வைபவ், “சென்னையா..” என்று கேட்டான்.
“ஆமா பாஸ்… இனிமே பஸ் பிடிச்சு போகணும்… இந்நேரத்துக்கு பஸ் இருக்குமான்னு கூட தெரியல…” என்று அவனின் ஒற்றை வார்த்தை கேள்விக்கு ஒரு பக்கம் அளவில் பதில் கூறினான்.
“வாங்க நானும் அங்க தான் போறேன்… உங்கள ட்ராப் பண்ணிடுறேன்…” தன் உயிர் காத்ததிற்கான உபகாரமாய் வைபவ் கேட்டான்… இன்னும் சிறிது நேரத்திலேயே ‘எதற்காக இவனை வண்டியில் ஏற்றினோம்…?’ என்று வருந்தப் போவதை அறியாதவனாய்...
வண்டியில் ஏறி அமர்ந்ததிலிருந்து இதோ சென்னையை அடைய சில மணி நேரங்களே உள்ள இப்போதுவரை வாய் ஓயாமல் பேசிக் கொண்டே வருபவனைக் கண்டு இவனை தன்னுடன் அழைத்து வந்தது தவறோ என்று ஆயிரமாவது முறையாக எண்ணிக் கொண்டான் வைபவ்.
அதர்வாவோ, அவன் கேட்கிறானா இல்லையா என்பது கூட தெரியாமல், தன் சொந்த வரலாற்றை கூறிக் கொண்டிருந்தான். அப்படி தான் அவன் சென்னையில் உள்ள தங்கள் எல் கேர் மருத்துவமனையில் வேலை செய்கிறான் என்பது தெரிந்தது.
அதன் பின் தன் அப்பாவின் ‘ஏவி டிபார்ட்மென்டல் ஸ்டோர்’ரில் துவங்கி பக்கத்துக்கு வீட்டில் இருக்கும் நாய் குட்டி வரை அதர்வாவின் கதை தொடர்ந்தது.
அவனின் பேச்சை எப்படி நிறுத்துவது என்று தெரியாமல் வைபவ் முழிக்க, அவனை காப்பாற்றவென, அவனின் அலைப்பேசியின் ரிங் டோன் ஒலித்தது. அதன் ஒலியிலேயே அழைத்தது தன் அண்ணன் தான் என்பது தெரிந்ததும், அருகில் இருப்பவனை மறந்தவனாய் அழைப்பை ஏற்று ஸ்பீக்கரை ஆன் செய்தான்.
அவன் அழைப்பை ஏற்ற அடுத்த நொடி, “சித்தூ…” என்ற மழலையின் குரல் கேட்டது.
தான் வெளிநாட்டிலிருந்து வந்ததும் வீட்டில் தங்காமல், நண்பர்களுடன் சுற்றுலா சென்றது கௌரவிற்கு பிடிக்கவில்லை என்பது வைபவிற்கு தெரியும். அதனால் அவன் தன்னிடம் பேச மாட்டான் என்பதையும் நன்கு அறிவான். தன் தந்தையையோ தாயையோ பேச வைப்பான் என்றே நினைத்திருந்தான்.
ஆனால் சுர்வி பேசுவாள் என்று அவன் நினைக்கவில்லை. ஏனெனில், அவ்வீட்டில் அவன் அடங்கும் ஒரே ஆள் சுர்வி மட்டும் தான். மற்றவர்களின் பேச்சை அலச்சியத்துடன் கடந்து செல்லும் வைபவிற்கு, சுர்வியின் பேச்சை தட்ட முடியாது… இதுவரை அவன் தட்டியதும் இல்லை...
அதனால் தான் சுற்றுலாவிற்கு செல்லும்போதும் கூட, அவள் எழுவதற்கு முன்பே அவளிடம் கூறாமல் கிளம்பியிருந்தான்.
இப்போது அவனிருக்கும் மனநிலையில், சுர்வியிடம் பேச வேண்டாம் என்று நினைத்தவன், அழைப்பை துண்டிக்க செல்ல, அதற்குள் பேச்சை துவங்கியிருந்தான் அந்த வாயாடன் (வாயாடியின் ஆண்பால்…)
“ஹாய் பாப்பு…”
தன் ‘சித்து’வின் குரல் அல்ல என்பதை உணர்ந்த சுர்வி… “யாது…?” என்றாள் மழலை மொழியில் கோபத்தை கூட்டியவாறு…
மெல்லிய சிரிப்புடன், “என் பேரு அதர்வா… பாப்பு பேரு என்ன…?” என்றான்.
“அத்…த்..வா…” என்று அவனின் பெயரை சொல்லி பார்த்தவள், பின் தனக்கு வாயில் வருமாறு சுருக்கி, “அத்து… “ என்றாள்… பின் அவளே, “பாப்பா பேது சுவி…” என்றாள்.
“ம்ம்ம் சுவி பாப்புக்கு என்ன பிடிக்கும்…?” – இப்படி ஆரம்பித்த அவர்களின் பேச்சுவார்த்தை, ஐஸ்- கிரீம், சாக்லேட், பார்க், ஊஞ்சல், டோரா, ஷின் சான் என்று ஐந்து நிமிடங்களுக்கு தொடர்ந்து கொண்டே இருந்தது.
இவர்களின் பேச்சை தடுக்காமல், ரசித்துக் கொண்டிருந்தான் வைபவ். ஏனோ இவர்களின் பேச்சு எரிச்சலாக இருந்த அவன் மனதை ஆறுதல் படுத்துவது போல் இருந்தது.
அந்த பக்கம், கௌரவோ, தன் மகள் ‘சித்து’ என்று அழைக்காமல், ‘அத்து’ என்று அழைத்து யாரிடம் பேசுகிறாள் என்ற சந்தேகத்தில் அதனை ஸ்பீக்கரில் போட்டான். அங்கு வேறு யாருடைய குரலோ கேட்க, “ஹலோ… வைபவ்…” என்றான்.
இப்போது அதர்வா அமைதியாக வைபவை பார்க்க, அவனோ “ம்ம்ம்” என்ற ஓசையில் தன் இருப்பை உணர்த்தினான்.
“இப்போ யாரு கூட சுர்வி பேசுனா…?” என்று கேட்டான் கௌரவ்.
“அது… என் பிரென்ட்…” என்று கூறுவதற்குள், தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் வேலையை அதர்வாவே எடுத்துக் கொண்டான்.
இவன் ஆரம்பித்தால் நிறுத்த மாட்டான் என்று எண்ணியவன், அவன் பேச்சின் இடைவெளியில், “இன்னும் டென் மினிட்ஸ்ல ரீச் ஆகிடுவேன்… வந்து பேசுறேன்…” என்றவாறே அழைப்பை துண்டித்தான்.
அடுத்த இரு நிமிடங்களில், “பாஸ் இங்கயே நான் இறங்கிக்குறேன்…” என்றான் அதர்வா.
வைபவும் ஓரமாக நிறுத்த, தன் பையை எடுத்து தோளில் மாட்டியவன், “பை பாஸ்… ஹாஸ்பிடல்ல மீட் பண்ணலாம்…” என்றான் புன்னகையுடன்.
வைபவ் புருவ சுழிப்புடன் அவனைப் பார்க்க, “என்ன பாஸ் கிட்டத்தட்ட சிக்ஸ் ஹவர்ஸ் ட்ராவல் பண்ணிருக்கோம்… இதை கூட கண்டுபிடிக்க மாட்டேனா… அதுவும் இன்னும் கொஞ்ச நாள்ல மிஸ்டர். வைபவ் வர்மா , எம்.எஸ் ஆன்காலஜி, எல் கேர் ஹாஸ்பிடலுக்கு வர போறாருன்னு நியூஸ் காட்டுத் தீயா பரவிட்டு இருக்குறப்போ, அவரப் பத்தி தெரிஞ்சுக்காம இருப்பேனா…” என்றான்
ஒறு நொடி அவனை மனதிற்குள் மெச்சியவன், மறுநொடியே அலட்சியத்தை முகத்தில் ஏற்றி, ஒரு தலையசைப்புடன் வண்டியை எடுத்தான்.
அதர்வாவோ அவனின் அலட்சியத்தை பொருட்படுத்தாமல், அங்கிருந்த ஒரு ஆட்டோவில் ஏறி, தன் அரட்டையை அந்த ஆட்டோ டிரைவரிடம் தொடர்ந்தான்.
வைபவோ, முதலில் மாமாவை சந்திக்கலாம் என தன் மகிழுந்தை கடற்கரை பக்கம் திருப்பினான்.
****
கடலிலிருந்து வரும் காற்று முகத்தில் அடிக்க, கடலலை ஓசையோ செவியை நிறைக்க, அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கும் வில்லாக்களில் சற்று பெரிதாக இருந்தது, கைலாஷ் வில்லா…
முழுவதும் நவீனமாக கட்டப்பட்ட அந்த வில்லாவிற்குள் நுழைந்தது வைபவின் மகிழுந்து.
அந்த வில்லாவை பார்க்கும் போதெல்லாம், “ஒருத்தருக்கு எதுக்கு இவ்ளோ பெரிய வீடு…?” என்று வைபவிற்கு தோன்றும்.
அதை தன் மாமனிடமும் கேட்டிருக்கிறான். அவரோ, “மருமகனே, நம்ம வசதியா இருந்தா மட்டும் பத்தாது… அத மத்தவங்ககிட்ட காட்டவும் தெரியணும்… நாம எத போடுறோம், எத சாப்பிடுறோம், எங்க இருக்கோம், யாரு கூட பழகுறோம்… இதை வச்சு தான் இந்த சமுதாயத்துல நம்ம மதிப்பு உயருது… இதுவும் ஒரு வித பிசினஸ் டாக்டிக்ஸ் தான் மருமகனே…” என்றார்.
இன்றும் அதே நினைப்போடு உள்நுழைந்தவனை மகிழ்ச்சியுடன் வந்து கட்டிக்கொண்டார் கைலாஷ்.
“வா வா மருமகனே… உனக்காக தான் இவ்ளோ நாள் காத்திட்டு இருந்தேன். எப்போ உன் படிப்ப முடிச்சிட்டு பிசினஸ்ல நுழைவன்னு எதிர்பார்த்துட்டு இருந்தேன்…” என்று கைலாஷ் சிரிக்கவும், வைபவும் சேர்ந்து சிரித்தான்.
அவர் பிசினஸ் என்று சொன்னதும், மருத்துவம் படிக்க வெளிநாடு செல்லும்முன் இங்கு நடந்த நிகழ்வு வைபவிற்கு நினைவு வந்தது.
மனிஷ் தன் கன்ஸ்டரக்ஷன் தொழிலை பார்ப்பதற்காக கௌரவை ஏற்கனவே பொறியியல் துறையில் சேர்ந்து படிக்கக் சொன்னார். அதே போல தன் சின்ன மகனை, தங்கள் குழுமத்திற்கு கீழியங்கும் மருத்துவமனைகளை நிர்வகிக்க வேண்டி மருத்துவ துறையை தேர்ந்தெடுக்கச் சொன்னார்.
அதைக் கேட்ட வைபவிற்கு தன் தந்தையின் மீது கோபம் வந்தது. ‘வர்மா குரூப் ஆஃப் கம்பெனிஸ்’ என்றாலே அதில் முதன்மையாக விளங்குவது அவர்களின் ‘வர்மா கன்ஸ்டரக்ஷன்ஸ்’ தான். அதை அண்ணனிடம் கொடுத்துவிட்டு தனக்கு, சேவை மனப்பான்மையுடன் இயங்கிக் கொண்டிருக்கும் மருத்துவமனையை கொடுத்தது அவனிற்கு பாரபட்சமான முடிவெனத் தோன்றியது.
உடனே தன் மாமன் வீட்டிற்கு வந்து, நியாயம் கேட்டான். அதற்கு அவரோ, “கவலைய விடு மருமகனே… உன்ன பெரிய பிசினஸ்மேனாக்குறேன் நான்…” என்றார் சிரித்தபடி…
“மாமா… நான் மெடிஸின் படிச்சா ஹாஸ்பிடல டாக்டரா தான ஒர்க் பண்ணனும்… நான் எப்படி பிசினஸ்மேன் ஆகுறது…”
“மருமகனனே… இப்போ டாப்ல இருக்க பிசினஸ் எது தெரியுமா… மருத்துவம்….”
வைபவ் புரியாத பார்வை பார்க்க… “ஆமா மருமகனே… கண், காது, தொண்டை, தோல்னு ஒவ்வொரு பார்ட்டுக்கும் தனி தனியா ஹாஸ்பிடல் வச்சு இப்போ டாக்டர்ஸ் தான் கோடி கோடியா சம்பதிக்குறாங்க… அங்க அவங்க சொல்றது தான் ட்ரீட்மெண்ட்… ஒண்ணுமே இல்லாத கேஸ் ட்ரப்பிளுக்கு, எல்லா ஸ்கேனையும் எடுக்கச் சொல்லி ஆயிரமா கொள்ளையடிப்பாங்க… நம்ம மக்களும் எதுக்கு ஏன்னே தெரியாம, அவங்க சொல்றத நம்பி பணத்த கட்டி வைத்தியம் பார்ப்பாங்க… சுருக்கமா சொல்லணும்னா ஏமாறுறவங்க இருக்க வரைக்கும் ஏமாத்துறவங்களுக்கு லாபம் தான்… நோயாளிங்கள இன்வெஸ்ட்மெண்டா வச்சு பெருசா நடக்குற பிசினஸ் டா மருமகனே, மருத்துவம்… அதுவே கைல கிடைக்குறப்போ எதுக்கு ஃபீல் பண்ணிட்டு இருக்க…” என்று நவீன மருத்துவத்தின் (!!!) விளக்கத்தை அளித்தார் கைலாஷ்.
இப்படி பால பாடம் துவங்கி, பிசினஸ் பாடம் வரை அனைத்தையும் தன் தாய்மாமனிடமிருந்து கரைத்துக் குடித்திருந்தான் வைபவ்.
இன்று கூட மருத்துவமனைகக்கு சென்றதும், முதலில் என்ன செய்ய வேண்டும் எப்படி செய்ய வேண்டும் என்று காலந்துரையாடவே இந்த சந்திப்பு.
****
“ம்மா… எனக்கு டைம் ஆச்சு… இன்னும் சாப்பாடு எடுத்து வைக்காம என்ன பண்றீங்க…” காதில் அந்த வளையத்தை போட்டுக் கொண்டே, தன் அறையிலிருந்து கத்தினாள் பாவ்னா.
“லேட்டா எழுந்ததும் இல்லாம, சாப்பாடு எடுத்து வை, தண்ணிய எடுத்து வைன்னு என் உசுர வாங்குறா…” என்று அவளின் அன்னையும் பதிலுக்கு கத்தினார்.
பின்னால் இருந்து அவரைக் கட்டிக்கொண்ட பாவ்னா, “ம்மா… என்ன பத்தி தான் பெருமையா பேசுறீங்களா…?” என்றாள்.
“விடு டி என்ன… கழுத... எத்தன தடவ சொல்றேன்… சீக்கிரமா எந்திரின்னு… ஒரு நாளாச்சும் வேகமா எழுந்து எனக்கு ஹெல்ப் பண்றீயா…” என்று புகார் பட்டியல் வாசிக்க… அங்கு வந்த தந்தையை பாவமாக பார்த்தாள் மகள்.
“மீனாம்மா விடு மா பாவம் குழந்த…”
“ஆமா குழந்த… மடில தூக்கி வச்சு தாலாட்டு பாடுங்க…” என்று சைட் கேப்பில் கணவரையும் திட்டினார்.
அன்னையின் திட்டில் களுக்கென்று சிரித்தவள், அவரின் முறைப்பில் அங்கிருந்த நழுவினாள்.
“ஹே நில்லு டி… இந்த வருஷத்தோட படிப்பு முடியுதுல…மாப்பிளை பார்க்க ஆரம்பிக்கலாமான்னு ஒரு வாரமா கேட்டுட்டு இருக்கேன்… நீ பதில் சொல்லாம எஸ்கேப் ஆகிட்டு இருக்க…”
“ம்மா நான் இன்னும் படிக்கணும்… பெரிய கைனகாலஜிஸ்ட்டா ஆகணும்…” என்று கனவுகள் மின்ன கூறிக் கொண்டிருக்க, அதை பாதியில் நிறுத்திய அவளின் தாயோ, “நீ படிச்சதெல்லாம் போதும்… நாங்க எவ்வளவோ சொல்லியும் அடம்பிடிச்சு மெடிஸின் சேர்ந்த… இப்போயாச்சும் நாங்க சொல்றத கேளு...” என்று கூறினார்.
தாயின் பேச்சில் வருந்தியவளோ, தந்தையைக் காண, அவரோ கண்களாலேயே தான் பார்த்துக் கொள்வதாகக் கூறினார். தந்தையின் செய்கையில் அவர் பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கையில் கிளம்பினாள்.
பாவ்னா, எல் கேர் மருத்துவக் கல்லூரியில் தன் மருத்துவப் படிப்பை மேற்கொள்பவள். தற்போது எல் கேர் மருத்துவமனையில் ஹவுஸ் சர்ஜனாக பயிற்சி பெற்று வருகிறாள்.
வீட்டிற்குள் நுழைந்த அதர்வாவை வரவேற்றது வெங்கடேஷின் புலம்பல்கள் தான்.
“இந்த பையனுக்கு கொஞ்சமும் சீரியஸ்னெஸே இல்ல… இவ்ளோ நேரமாகுது இன்னும் வரல… வந்ததுக்கு அப்பறம் இப்போவே ஹாஸ்பிடல் போகணும்னு நிப்பான்… அப்பாக்கு வயசாச்சுன்னு நெனப்பு இருக்கா… ஒரு கல்யாணத்த பண்ணா, என் மருமக கையால வாய்க்கு ருசியா சாப்பிடலாம்னு பார்த்தா… ஹும் இந்த ஜென்மத்துல நடக்காது போல… நான் பாக்குற பொண்ணு தான் பிடிக்கலன்னா, அவனாவது ஏதாவது பொண்ண லவ் பண்றான்னா… அதுவும் கிடையாது… ஷப்பா இந்த பையன வச்சுக்கிட்டு…” என்று அவரின் புலம்பல்கள் நீண்டு கொண்டே சென்றது.
“ப்பா… இப்போ இருக்கிற பொண்ணுங்களுக்கெல்லாம் அவ்ளோவா சமைக்க தெரியாதாம்… பேசாம எனக்கு பொண்ணு பார்க்குறத விட்டுட்டு வீட்டுக்கு நல்ல சமையல்காரிய பார்க்கலாம்னு நெனைக்கிறேன்…” என்று கண்சிமிட்டி சிரித்தான் அந்த மாயவன்...
“அத்து நீ எப்போ டா வந்த…” என்று பரபரப்பானார் வெங்கி.
“மிஸ்டர் வெங்கி… இப்போ எதுக்கு இவ்ளோ பரபரப்பு… கூல் டவுன்… “ என்றவாறே அவரை சோஃபாவில் அமரவைத்து, “ப்பா… இன்னிக்கு என்ன நடந்துச்சு தெரியுமா, நீ என்ன ‘அத்து’ன்னு கூப்பிடுற மாதிரியே ஒரு பாப்பாவும் கூப்பிட்டா…” என்று ஆரம்பித்து அனைத்தையும் கூறி முடித்தான்.
இதில் வைபவை கத்திக் குத்திலிருந்து காத்ததை மட்டும் அவரிடம் கூறவில்லை. இவ்வாறு மற்றவர்களை காக்கும் போது தன் மகன் ஏதாவது ஆபத்தில் சிக்கிக் கொள்வானோ என்று ஒவ்வொரு சராசரி அப்பாவிற்கு இருக்கும் கவலை அவருக்கும் உண்டு.
வெங்கடேஷ், நகரின் முக்கிய பகுதியில், ‘ஏவி டிப்பார்ட்மென்டல் ஸ்டோர்ஸ்’ வைத்திருக்கிறார். முதலில் சாதாரண மளிகை கடையில் ஆரம்பித்த அவரின் தொழில் இப்போது சிறிய டிப்பார்ட்மென்டல் ஸ்டோர் வைக்கும் அளவிற்கு வளர்ந்திருக்கிறது என்றால் அதற்கு அவரின் கடின உழைப்பே காரணம். அதர்வாவும் அவன் படிக்கும் காலத்தில் அவ்வப்போது அங்கு சென்று அவருக்கு உதவியாய் இருப்பான்.
ஒருவழியாக அனைத்தையும் கூறி முடித்தவன், மணியைப் பார்க்க, “அச்சோ வெங்கி எனக்கு லேட்டாச்சு… நான் ஓடிப் போய் குளிச்சுட்டு வரேன்… அதுக்குள்ள பிரேக்ஃபாஸ்ட் ரெடி பண்ணி.வைங்க…” என்று கூறியவாறே அறைக்குள் சென்றான்.
கைலாஷின் வீட்டில், மாமனும் மருமகனும் தங்கள் கலந்துரையாடலை (!!!) முடித்தனர். “மருமகனே… வா சாப்பிடலாம்…” என்று அழைத்தார் கைலாஷ்.
“மாமா… டென் மினிட்ஸ்ல வரேன்னு சொல்லிட்டு இன்னும் வீட்டுக்கு போகாம இருக்கேன்… இப்போ இங்க சாப்பிட்டேன்னு உங்க அக்காக்கு தெரிஞ்சுது அவ்ளோ தான்… டேம ஓபன் பண்ணிடுவாங்க… நான் கிளம்புறேன் மாமா… ஹாஸ்பிடல்ல மீட் பண்ணலாம்…” என்று கூறியவாறு கிளம்பினான்.
வைபவ் தன் வீட்டிற்கும், பாவ்னாவும் அதர்வாவும் மருத்துவமனைக்கும் செல்ல கிளம்பினர். இவர்கள் மூவர் செல்லும் பாதையும் ஒன்றாக அமைந்தால்… இவர்களின் சந்திப்பு எவ்வாறு அமையும்...
நினைவுகள் தொடரும்…