11
அந்த நீல நிற காட்டன் புடவையில் தேவதை போல் இருந்தாள் தாமரை. அவள் வேலைக்கு சென்ற முதல் மாத சம்பளத்தில் வாங்கியது.அதற்கு ஏற்ற அணிகலன்களும் இருந்ததால், அவள் ஜொலித்தாள் என்றே சொல்லலாம். எல்லாவற்றையும் விட இன்று கார்த்திகேயனின் பிறந்த நாள். அதில் உண்டான சந்தோஷமும் அவளை அழகுபடுத்தவே செய்தது.
தன் வீட்டிற்கே வந்து உஷா சந்திரன் அழைத்தது. உண்மையில் இன்னமும் அவளால் நம்ப முடியவில்லை. அவள் அறிந்த வரை இது ஒரு குடும்ப விழாவே. தொழில் தொடர்பில் அவ்வளவாக அழைப்பு விடுத்தது போல் தெரியவில்லை. இருப்பினும் மேடமே வந்து நேரே அழைத்தால் நிச்சயம் போக வேணும் என்று தோன்ற அவள் கிளம்பியும் விட்டாள். கூடவே ரோஜாவையும் அழைத்து சென்றாள். திரும்ப தாமதம் ஆகி விட்டால் துணை தேவை. அத்தோடு அந்த பணக்கார விருந்தில் தனக்கு துணையாக தங்கைதான் இருக்க முடியும் என்றும் தோன்றியது. ஆனால் ஏனோ ஒரு சின்ன உறுத்தல். கார்த்திகேயன் அவளுக்கு அழைப்பு விடுக்கவே இல்லை.அட்லீஸ்ட் போனிலாவது தெரியப்படுத்தி இருக்கலாம் என்றே தோன்றியது. இருப்பினும் அவனை வாழ்த்தும் ஆவலில் புறப்பட்டு விட்டாள்
கார்த்திகேயனின் பங்களாவின் முன் ஆட்டோ நின்றதும் உண்மையில் பிரமித்துவிட்டாள் ரோஜா ”அக்கா இத்தனை பெரிய வீடா? அடடா இதை எப்படி சுத்தம் செய்வார்கள். நம் வீட்டில் உள்ள மூன்று அறைகளை துடைப்பதற்கே முடியவில்லை. இவர்களால் மட்டும் எப்படி?.. என்று அப்பாவியாய் கேட்ட தங்கையை பார்த்து சிரிப்பு தான் வந்தது.
“நீ கவலைப்படும் படி எதுவும் இல்லை ரோஜா அதற்கெல்லாம் தனி ஆள் உண்டு. சீக்கிரம் வா நேரமாகிவிட்டது”
போடப்பட்டிருந்த சீரியல் செட்டில் அந்த பங்களாவே ஜொலித்தது. இது இரவா பகலா என்றே குழப்பம் தோன்றும் அளவு பளபளத்தது.
வாயிலில் இருந்து வீட்டிற்குள் செல்வதற்குள் எதிர்ப்பட்ட சிலரை பார்க்கையில் ஒருவகையில் வெட்கமாக தான் இருந்தது தாமரைக்கு. அவர்கள் முழு முகப்பூச்சில் பளிச்சென்று தங்க கடை விளம்பர மாடல் மாதிரி இருந்தது தான் காரணம்.அவர்கள் முகத்தில் ஏளனம் வெளிப்படையாய் தெரிந்தது.
லேசான நடுக்கத்துடன் தான் வீட்டின் உள்ளே நுழைந்தாள் தாமரை. ஆனால் உஷா சந்திரன் ஓடி வந்து அவளை வரவேற்றதும் நடுக்கம் பறந்து போனது. விழிகள் கார்த்திகேயனை தேடி அலைந்தது. அந்த பெரிய ஹாலில் அன்று அவள் பார்த்த ஷோபாவை காணவில்லை. ஏன் மற்ற எந்த பொருள்களுமே இல்லை. எல்லாம் துடைத்தார் போல் இருந்த ஹாலில் ஜனகூட்டத்திற்கு மட்டும் துளியும் பஞ்சம் இல்லை. வண்ண விளக்குகளும் வண்ண காகிதங்களும் வீட்டை மேலும் அழகுபடுத்தியது. நடுவில் போடப்பட்டிருந்த டேபிளின் மேல் கேக் வைக்கப்பட்டு மெழுகு வத்திகள் கொளுத்தப்படாமல் இருந்தன.
இவை எல்லாம் கண்களில் பட்டது ஆனால் கார்த்திகேயன்... அவன் எங்கே? இந்த விழாவின் கதாநாயகன் அல்லவா அலைந்த விழிகள் ஒரு கூட்டத்தில் நிலைத்தது.
அங்கே கார்த்திகேயன் அவளையே பார்த்துக் கொண்டு நின்றான். இவள் விழி சந்திக்கவும் புருவம் உயர்த்தி சிரித்தான். உடனே முகம் சூடேறி சிவந்தது.
அப்போது தான் அவளுக்கு உரைத்தது. அவனது வெண்பற்களுக்கு மேலே கருப்பு மீசை அதை தடவியபடியே அவன் சிரித்தான். இன்னமும் சிவந்தாள். உண்மையில் மீசை வைத்தபின் கம்பீரமாய் தெரிகிறான் என்ற எண்ணம் மேலோங்கியது அருகில் இருந்த ரோஜா வேறு குறுகுறுப்பாய் பார்ப்பது போல் தோன்றவே கார்த்திகேயனிடமிருந்து தன் பார்வையை வலுகட்டாயமாக பிரித்தெடுத்தாள். அருகில் உஷா சந்திரன் பேசுவது தாமதமாக அவள் காதில் விழுந்தது.
“ஆன்ட்டி கார்த்திகேயன் மீசை வைத்த உடன் ஆளே மாறிவிட்டார். ரொம்ப ஸ்ம்மார்ட்டாய்” அங்கே விழாவில் ஒரு பெண் இப்படி கேட்டு வைக்க,
“ம்... நான் எத்தனையோ முறை சொல்லியும் மீசை வைக்கமாட்டேன் என்று அடம்பிடித்தான். ஆனால் இன்று யாரோ மீசை வைத்தால் தான் கம்பீரம் என்று கூறினார்களாம். அதனால் ஒரு மாதமாக பாடுபட்டு உரம் போட்டு இந்த மீசையை வளர்த்து வைத்திருக்கிறான் என்றால் பாரேன்” என்றவரின் குரல் இயல்புக்கு சற்று அதிகமாகவே சத்தமாக இருந்தது. வேண்டும் என்றே கத்தி பேசினாரா குழப்பமாக இருந்தது தாமரைக்கு. கூடவே தனக்காக தான் கார்த்திகேயன் மீசை வைத்தாரோ என்ற எண்ணம் திக்குமுக்காட செய்தது.
நினைவுகளை கலைத்தது கார்த்திகேயனின் குரல் “அம்மா அதுதான் முக்கியமானவர்கள் எல்லாம் வந்துவிட்டார்களே கேக் கட் பண்ணலாம் தானே” என்றவனது பார்வை தாமரையை அழுத்தமாக அளவெடுத்தது.
“இன்னும் அண்ணன் வரவில்லையேடா கார்த்தி கொஞ்சம் இரேன் இப்போது வந்துவிடுவார்” என்ற உஷா வாய்மூடும் முன் “அத்தான்” என்ற ஹனியின் கிரீச் சத்தம் காதை பிளந்தது.
“மெனிமோர் ஹாப்பி ரிட்டன்ஸ் ஆஃப் தடே அத்தான்” என்றவள் அவனை அணைத்து ஒரு பொக்கேவை நீட்டினாள்.
நாசூக்காக அவளை விலக்கி நிறுத்தி பொக்கேவை பெற்றுக் கொண்டான் உள்ளுக்குள் கோபம் பொங்கியது.
தாமரையின் முகமோ சுருங்கிவிட்டது. ச்..ச்சே.. என்ன தான் பணக்காரர்களாக இருந்தாலும் இப்படியா? கருமம்...
கேக் வெட்டி முடிந்ததும் எல்லோரும் கார்த்திகேயனுக்கு பரிசு வழங்கினார்கள் தாமரையும் தான் கொண்டு வந்திருந்த பரிசை அவனிடம் கொடுக்க அவனை நெருங்கினாள். அவளை விழுங்கி விடுவது போல் பார்த்துக் கொண்டிருந்த கார்த்திகேயனை ஹனியும் அவள் தாயும் பார்த்து உள்ளுக்குள் எரிந்து கொண்டிருந்தனர்.
படபடக்கும் இதயத்தை சிரமப்பட்டு அடக்கிக் கொண்டு அவனை வாழ்த்தினாள் தாமரை.
“பிறந்த நாள் வாழ்த்துக்கள். என்னால் முடிந்த சின்ன பரிசு” என்று பரிசை நீட்டியவளின் கையில் ஒரு ஜிகினா தாளால் சுற்றப்பட்ட பரிசுப் பொருள் இருந்தது.
“மிக்க நன்றி. பரிசில் சின்ன பெரிய என்ற பேதம் இருப்பதில்லை இதை கொடுப்பவரின் மற்றும் பெறுபவரின் மனதை பொருத்தது. அப்படி பார்த்தால் இந்த பரிசு எனக்கு மிகவும் முக்கியமானது. சம்திங் ஸ்பெஷல் ஃப்ரம் எ ஸ்பெஷல் பர்சன்” என்று கூறி புன்னகையுடன் பரிசை பெற்றவன் அவனது இடது கையை மறுபடியும் மீசையில் வைத்து அர்த்தத்துடன் சிரித்தான்.
லேசாக சிரித்தவள் “என்ன சார் இது வீரப்பன் மீசை போல், ஏன் இந்த திடீர் மாற்றம்”
“ம்.. ஏன் சொல்ல மாட்டீர்கள் மீசை வைத்தால் கம்பீரம் என்ற பேச்சை நம்பி, ஒரு மாதம் போராடி வளர்த்து ஒரு சர்ப்ரைஸ் கொடுக்கலாம் என்றால் உடனே வீரப்பன் ஆக்கி விட்டீர்களே என்னை பார்த்தால் பாவமாக தெரியவில்லை”
“பாவமா?... அது யார் நீங்களா சுத்தமாக தெரியவில்லை” அவள் பேசிக் கொண்டிருக்கும் போதே “அத்தான்” என்று கொஞ்சிக் கொண்டு ஹனி வந்துவிட்டாள். உடனே தாமரை இரண்டடி பின்னோக்கி நகர்ந்து விட்டாள். “சரி சார் நான் கிளம்பறேன் வா ரோஜா” என்று ரோஜாவை இழுக்காத குறையாய் அழைத்து சென்று விட்டாள்.
ஏனோ மனம் வலித்தது கார்த்திகேயனுக்கு ஹனியை ஓங்கி ஒரு அப்பு அப்ப வேண்டும் என்றே தோன்றியது அம்மாவிற்காக பொறுத்துக் கொண்டான்.
படுக்கையில் சரிந்தவனின் கையில் தாமரை அளித்த பரிசு அந்த பரிசில் “பேஸ்ட் விஷஸ் – தாமரை” என்ற லேபிளில் லேசாக இதழ் பதித்தான். ஆசையும் ஆவலுமாக பரிசை பிரித்தான் உள்ளே ஒரு புத்தகம் “பேசாத வார்த்தைகள்” எழுதியவர் லட்சுமி புத்தகத்தை நெஞ்சோடு அணைத்துக் கொண்டான்.
வழியில் ஆட்டோவில் ரோஜா தாமரையை கேள்வி மேல் கேள்வி கேட்டே கொன்றுவிட்டாள். “அந்த கார்த்திகேயன் சாரின் பார்வையே சரி இல்லையே அக்கா! ஏதோ மிட்டாய் கடையை என்று கூறுவார்களே அது போல் ஒரு பார்வை”
“ஏய் அதெல்லாம் ஒன்றும் இல்லை கொஞ்சம் சும்மா இரேன்”
“என்ன நீ அவருக்கு வக்காலத்தா.. ம்.. அப்படி என்றால் உனக்கும்...“ என்று இழுத்தவள் தாமரையை உற்றுப் பார்த்தாள். அதில் எதையோ படித்தவள் போன்று மீண்டும் தொடர்ந்தாள்.
“ஓ.. அதனால் தான் தனசேகரை அந்த பாடுப்படுத்தினாரா? அன்று தொலைந்தது தான் அந்த ஓட்டை டேப்ரிகார்டரையும் காணவில்லை. இந்த முட்டாளையும் காணவில்லையோ?.. சூப்பர்க்கா.. எனக்கும் மாமாவை பிடித்து விட்டது”
என்ன.. மா..மா.. வா.. முடிவே எடுத்து விட்டாளா? யாரும் இன்னும் எதுவும் முடிவு செய்யவில்லை” தாமரை பேசும் முன் ரோஜாவே தொடர்ந்தாள்.
“ஆனால் அக்கா.. அவர் பணக்காரராயிற்றே.. வரதட்சணை அது இதென்று நம்மால் அவர்களுக்கு ஈடாய் செய்ய முடியாதே! எதுவுமே இல்லாமல் போனால் உனக்கு மரியாதையும் இருக்காதே!
ஒரு வேலை படங்களில் வருவது போல் பணக்காரர் ஒரு ஏழையை மணந்து கொண்டு அவளை கொடுமைப்படுத்தி தன் இஷ்டத்துக்கு வாழ்கையை அனுபவித்துக் கொண்டிருந்தால்?.. அய்யோ நினைக்கவே பதறுகிறது. அக்கா இன்று விழாவில் கூட ஒரு பெண் அவரின் மேல் விழுந்து இழைந்தாளே இது போல் எத்தனை பெண்களோ! அக்கா பணக்காரர்களை நம்பக் கூடாது என்று நீதானே அடிக்கடி சொல்வாய் அந்த அருணாச்சலம் மாமாவையும், தனசேகரனையும் எடுத்துக்காட்டாய் கூறுவாயே. நீயே மயங்கலாமா, நன்றாக விசாரித்துவிட்டு முடிவெடு. ஆனால் நீ என்ன முடிவெடுத்தாலும் நான் உன்னுடன் நிற்பேன் என்பது உறுதி”
பதில் பேசும் நிலையில் தாமரை நிச்சயம் இல்லை. தனிமையை விரும்பினாள். தனசேகரனும், கார்த்திகேயனும் ஒன்றா? நினைக்கவே குமட்டியது. நிச்சயம் இல்லை. ஆனால் ரோஜா கூறுவது போல் பணக்காரர்களை நம்புவது கண்களை மூடி காட்டில் நடப்பது போல் தான். புலி வருமா, சிங்கம் வருமா என்று பயந்தே காலம் தள்ள வேண்டும் முடியுமா என்னால்? நிச்சயம் முடியாது படுக்கையில் கண்களை மூடினால் ஹனி கார்த்திகேயனை அணைத்தது தான் கண் முன் விரிந்தது தூக்கம் அத்துடன் பறந்தே விட்டது.