மயிலரசி 2:
அவள் என்ன கூற போகிறாள் என்ற ஆர்வத்தில் அனைத்து குழந்தைகளும் அவளையே பார்க்க,
"நீத்து குட்டி சமத்து ஊசி போட்டுக்கிட்டா அதனால ஒரு பாட்டு பாடலாம்..."
"ஹை ஜாலி" என்றதும் பொய்யாய் முறைக்க, அனைத்து மழலைகளும் வாய் மேல் விரல் வைத்து கொண்டன, பார்ப்பதற்கு விழி அசைவில் அனைத்து மழலைகளையும் ஆட்டி வைக்கும் தேவதையாய் தெரிந்தாள் அவள்.
"குழந்தை என மீண்டும்
மாறும் ஆசை
எல்லோர்க்கும் இருக்கிறதே!
சிறந்த சில நொடிகள்
வாழ்ந்து விட்டேன்
என் உள்ளம் சொல்கிறதே!
மலர்களே மலர்களே
மலர வேண்டாம் உறங்கிடுங்கள்
அவசரம் எதுவுமே
இன்று இல்லை ஓய்வெடுங்கள்..."
என்று பாடியபடி மயில் போல் உடல் வளைத்து ரசித்து ஆட மூச்சு விட மறந்து ரசித்தன குழந்தைகள்.
"போதுமா அவ்ளோ தான்..." என்றதும், "நோ நோ இன்னொரு பாட்டு..." என்று கூச்சலிட, "ஷ்..." என்றவள்,
***
"நிலா காய்கிறது
நேரம் தேய்கிறது
யாரும் ரசிக்கவில்லையே…
இந்த கண்கள் மட்டும்
உன்னை காணும்…
தென்றல் போகின்றது
சோலை சிரிக்கின்றது
யாரும் சுகிக்கவில்லையே…
சின்ன கைகள் மட்டும்
உன்னை தீண்டும்…
காற்று வீசும் வெய்யில்
காயும் காயும்
அதில் மாற்றம் ஏதும் இல்லையே…
ஆஆ.. வானும் மண்ணும்
நம்மை வாழ சொல்லும்
அந்த வாழ்த்து ஓயவில்லையே
என்றென்றும் வானில்… (நிலா காய்கிறது…)
ஆஅ..ஆஆ…
க க ம நி நி த சா நி த ப ம
க க ம நி நி த சா நி த ப ம
அதோ போகின்றது
ஆசை மேகம்
மழையை கேட்டுக்கொள்ளுங்கள்
இதோ கேட்கின்றது
குயிலின் பாடல்
இசையை கேட்டுக்கொள்ளுங்கள்
இந்த பூமியே பூவனம்
உங்கள் பூக்களை தேடுங்கள்
இந்த வாழ்க்கையே சீதனம்
உந்தன் தேவையை கேளுங்கள் (நிலா காய்கிறது…)
என்று அபிநயம் பிடித்து ஆடி பாட குழந்தைகள் மட்டும் அல்ல பெற்றோரும் அங்கிருந்த அனைவருமே மெய் மறந்து ரசித்து நின்றனர்.
ஆடி முடித்து திரும்பியவளின் பார்வையில் வாசலில் கரங்களை கட்டி கொண்டு தன்னையே அழுத்தமாய் பார்க்கும் ஆடவனை கண்டதும் அதிர்ந்து நின்று விட்டாள்.
அனைவரும் கை தட்ட நீத்து, "அபி பேபி" என்று அழைத்ததும், "எஸ் நீத்து மா. ஹாப்பியா நீ கேட்டா மாதிரி பாட்டு பாடிட்டேன். இனி ஐஸ்க்ரீம் சாப்பிடும் போது உங்க அப்பா, அம்மா சொல்றபடி கொஞ்சமா சாப்பிடணும் சரியா செல்லம்." என்றாள்.
"அப்பா சரி பேபி, அம்மா யாரு?" என்றதும் அதிர்ந்து அவள் அருகில் இருக்கும் வயதான பெண்மணியை காண, "அவங்க அம்மா இல்ல… அதான் அப்படி கேட்கிறா." என்றார் மெதுவாய்.
"ஓஹ் சாரி... சரி பேபி அப்போ நீத்து குட்டி இன்னும் குட் கேர்ளா இருந்து டேடி சொல்படி கேட்கணும்." என்று நீத்துவை அணைத்து நெற்றியில் முத்தமிட்டாள்.
வாயிலில் நின்றவனை கண்டதும், "மாமு" என்று கூவி ஓடியது குழந்தை.
நீத்துவின் மாமன் அவன் என்று அறிந்ததும் லேசாய் புன்னகைத்தவள், நீத்துவின் மாமு என்ற அழைப்பில் நீண்ட நாள் தொலைந்து மறைந்து போயிருந்த பொக்கிஷம் நினைவு வந்தது போல் மனதில் ஏதோ ஒரு உணர்வு தாக்க, மறுநொடி தன்னை நிலைப்படுத்தி கொண்டு, "ஓகே எல்லோரும் சாப்டாச்சு டேப்லெட் போட்டாச்சு இப்போ கொஞ்ச நேரம் அமைதியா தூங்கி ரெஸ்ட் எடுக்கணும். படுத்துக்கோங்க லடூஸ்." என்று ஒவ்வொரு குழந்தையிடமும் சென்று அணைத்து முத்தமிட்டு படுக்க வைத்தாள்.
"அபி" என்று பதட்டமாய் தன் அருகில் வந்து நிற்கும் மேரியை புருவம் நெரிய பார்த்தவள், "என்னாச்சு மேரி?" என்றாள்.
"உன் போன் எங்க?" என்றதும், "அது பேக்லையே இருக்கு மேரி எடுக்கலை. ஏன் என்னாச்சு?" என்றாள் லேசான பதட்டத்துடன்.
"அது உங்க பக்கத்து வீட்லர்ந்து போன் பண்ணாங்க, உங்க அப்பா திடிர்னு மயங்கி விழுந்துட்டாராம். உங்க வீட்டு பக்கத்துல இருக்க ஹாஸ்பிடல்ல சேர்த்துருக்காங்க." என்றதும் விழியில் ஒரு துளி நீர் எட்டி பார்க்க சட்டென துடைத்தவள், "சரி மேரி நான் சொல்லிட்டு கிளம்புறேன் நீ பார்த்துக்கோ." என்று வேகமாய் கிளம்பியவள் வாசலில் இருந்த நீத்துவை பார்த்ததும், "பேபி! சமத்தா இருங்க. பாட்டியும் டேடியும் சொல்றத கேட்கணும். அபி இப்போ போகணும் சரியா குட்டி பை." என்று வெளியேறினாள்.
மருத்துவமனை வாசலை தாண்டியதும் அவளின் விழிகள் நீரை கொட்ட தொடங்கின, மனம் வெறுத்து நின்ற பொழுது தோள் கொடுத்த தெய்வம் இன்று உடல்நிலை முடியாது இருக்கிறார் என்றதும் மீண்டும் தனித்து விடுவோமோ என்று ஏனோ ஒரு பயம் கவ்வ தொடங்கியது.
அந்த மருத்துவமனையில் இருந்து தனக்கு தெரிந்த மருத்துவமனைக்கு தோழனின் மூலம் மாற்றியிருந்தாள். வேகமாய் மருத்துவமைக்குள் நுழைந்து விசாரித்து அவரின் அறைக்குள் நுழைந்தவுடன் அங்கே அமர்ந்திருந்தவனை கண்டதும், "நீ இங்க என்ன பண்ற?" என்றாள் அபி அதட்டலாய்.
"அண்ணி அப்பாக்கு உடம்பு முடியலைன்னு சொன்னாங்க அதான் பார்க்க வந்தேன்." என்றான் வேதன் மெதுவாய்.
"ஹ்ம் நான் பார்த்துக்கறேன் அப்பாவை. நீ காலேஜ் கிளம்பு இது பைனல் இயர் கவனத்தை படிப்புல வை. கிளாஸ் கட் அடிக்கக் கூடாது. கேம்பஸ்ல செலக்ட் ஆகணும் உன் பியூட்சர் இதுல தான் இருக்கு புரியுதா?" என்றாள் கண்டிப்புடன்.
"சரி அண்ணி. நான் கிளம்புறேன்." என்று வெளியேற போகவும், "நில்லு சாப்டியா?" என்றாள்.
"இல்ல அண்ணி அது டென்சன்ல சாப்பிடல." என்றதும்,
தன் பையில் இருந்த டிபன் பாக்சை நீட்டி, “முதல்ல உட்கார்ந்து சாப்பிட்டு போ. நேரத்துக்கு சாப்பிடணும்னு எத்தனை முறை சொல்லிருக்கேன். படிக்கணும் தான் அதுக்கு முதல்ல நீ நல்லா இருக்கனும். உன் ஹெல்த்தையும் ஒழுங்கா பார்த்துக்கணும்." என்றாள் கோபமாக.
"சாரி அண்ணி."
"சரி பொறுமையா சாப்பிடு நான் டாக்டர்கிட்ட பேசிட்டு வரேன்." என்று டாக்டரிடம் பேச வெளியேறினாள்.
"இப்போ அப்பாக்கு எப்படி இருக்கு டாக்டர்." என்றாள் அபி கலக்கமாய்.
"அபி நான் உனக்கு டாக்ட்ரா? அடி வாங்குவ? வீட்டு பக்கம் வா உங்க அத்தைக்கிட்ட சொல்றேன்." என்றார் ராகவன் பொய்யாய் முறைத்து.
"பழைய வாழ்க்கையை மொத்தமா தலை முழுக்கிட்டேன் சார். அதுலர்ந்து எதுவுமே வேண்டாம்னு நினைக்கிறன். அப்படியே நான் பழையபடி பேசினா என்னால உங்களுக்கு தான் ப்ராப்லம். என்னால யாருக்கும் கஷ்டம் வரதை நான் விரும்பல. அதனால இந்த பேச்சை இதோட நிறுத்திட்டு இப்போ எங்க அப்பாவை பத்தி மட்டும் பேசலாம்." என்றாள் முகத்தில் லேசான இறுக்கத்தோடு.
"நீ என்ன சொன்னாலும் என்னால உன் மேல கோபப்பட முடியாதுடா. அது உனக்கே தெரியும். ஹ்ம்ம் யாரும் எதிர்பார்க்காம உன் வாழ்க்கைல என்னென்னமோ நடந்திட்டு. அதனால நாங்க எல்லாம் உனக்கு அன்னியம் ஆகிடுவோமா... உன் மேல கோபமா இருக்கேன்னு ஒருத்தன் இங்க வர மாட்டேன்னு போய் ஆஸ்திரேலியால உட்கார்ந்துட்டு இங்க வர மாட்டேன்னு சொல்லிட்டு இருக்கான். என்ன சொல்றதுன்னு தெரியல அபிம்மா." என்று பெருமூச்சு விட்டார் ராகவன்.
(ராகவன் அபியின் அம்மாவுடைய கல்லூரி சிநேகிதர். அவரின் மகன் ஹரி அபியின் தோழன். அபியின் மீது சிறு கோபம் கொண்டு வெளிநாடு சென்று வேலை புரிகிறான்.)
"சரி அப்போ நான் கிளம்புறேன்." என்று எழுந்தவளை முறைத்தவர், "கோபம் மட்டும் உங்க அம்மா மாதிரி அப்படியே இருக்கு. பேசண்ட்டை பத்தி பேசணும் உட்காரு " என்றவர்,
"அவருக்கு இப்போ வந்துருக்கிறது மைல்ட் ஸ்ட்ரோக். அவர்கிட்ட இதை பத்தி சொல்லிக்க வேண்டாம். இன்னும் டென்ஷன் கூடும். மன அழுத்தம் ரொம்ப ஜாஸ்தியா இருக்கு. ஏதோ ஒரு விஷயம் அவரை நிம்மதியில்லாம செய்திட்டு இருக்கு. இப்படியே விட்டா அவரோட ஹெல்த்கு அது நல்லது இல்ல. சோ, இனி அவரை கவனமா பார்த்துக்கம்மா." என்றார் மருத்துவர்.
"சரி டாக்டர். அப்பாவை வீட்டுக்கு கூட்டிட்டு போகலாமா?" என்றாள்.
"இன்னைக்கு நைட் இங்க இருக்கட்டும் மார்னிங் கூட்டிட்டு போகலாம். உன் குழந்தை எப்படி இருக்கா?" என்று கேட்டார்.
"ஹ்ம் ரொம்ப நல்லா இருக்காங்க." என்று வெளியேறினாள்.
அவளின் துரு துரு இயல்பிலிருந்து முற்றிலும் மாறி இன்று வேறு யாரோ ஒருத்தி போல் மாறி இருக்கும் தன் சிநேகிதியின் மகளை காணும் பொழுது மிகவும் வருத்தமாக இருந்தது. தன் தோழியின் மகளுக்கு நல்லதொரு வாழ்க்கை அமைய வேண்டுமென இறைவனை வேண்டி கொள்ள மட்டும் தான் முடிந்தது அவரால்.
காதில் இருக்கும் போனில் பேசி கொண்டிருந்தாலும் கவனம் எல்லாம் வேதனை முறைப்பதிலேயே இருந்தது.
"ஹ்ம்..."
"ஹ்ம்... சரி சரி.... நான் பார்த்துக்கிறேன்." என்று வைத்தவள்,
"சாப்பிட்டியா?"
"சாப்பிட்டேன் அண்ணி." என்றவன் மெதுவாய், "அண்ணி நான் கிளம்புறேன்."
"ஒரு நிமிஷம் இரு" என்று தன் கைப்பையில் இருந்து இரண்டாயிரம் ரூபாய் எடுத்து கொடுத்தாள்.
"வேண்டாம் அண்ணி என்கிட்டே இருக்கு." என்றான்.
"எனக்கு தெரியாம படிக்கிற நேரம் போக, நீ பார்ட் டைம் ஜாப் போறது எனக்கும் தெரியும் வேதா. உடம்பை கெடுத்துக்காத. இப்போ எக்ஸாம் தான் முக்கியம் நல்லா படி. எக்ஸாம் முடிஞ்சதும் வேலைக்கு ட்ரை பண்ணு. இது எக்ஸாம் பீஸ்." என்று மீண்டும் ஒரு ஆயிரம் ருபாய் கொடுத்து, "இது உன் செலவுக்கு. பார்த்து பத்திரமா போய்ட்டு வா. ஏதாவது வேணும்னா தயங்காம என்கிட்டே கேளு." என்றாள் அன்பாய்.
"சரிங்க அண்ணி." என்று புன்னகைத்து வெளியேறினான்.
மெதுவாய் கண் விழித்து பார்க்கும் அப்பாவை பார்த்தவள், "எழுந்துட்டீங்களா? இப்போ பரவால்லையா பா." என்று அருகில் அமர்ந்தாள்.
"இப்போ கொஞ்சம் பரவால்லம்மா. வீட்டுக்கு போகலாமா? இங்க நல்லாவே இல்ல... பாப்பா எங்கம்மா?" என்றார்.
"பாப்பாவை விக்கி வச்சிருக்கான்ப்பா. இன்னைக்கு நைட் இங்க இருந்துட்டு தான் போகணும்னு டாக்டர் சொல்லிட்டாரு. சின்ன புள்ள மாதிரி அடம்பிடிக்காம அமைதியா இருங்க. மார்னிங் டாக்டர் சொன்னதும் போய்டலாம்." என்றவள் அவருக்கு கொடுத்த சாப்பாட்டை பிசைந்து ஊட்டி விட்டாள்.