அத்தியாயம் 9
ரத்னபுரியின் வடக்கு திசையில் இருந்தது மரங்கள் சூழ்ந்த காட்டு பகுதி. அங்கே கொடிய மிருகங்களும் வன விலங்குகளும் வசித்து வந்தன. அங்கே அந்த மிருகங்களுடனும் இயற்கையான காட்டு வளத்துடனும் இணைந்து வாழ்ந்து வந்தார்கள் பளியர்கள் என்ற பழங்குடி மக்கள் . வன விலங்குகளின் தாக்குதல் நிகழாமல் இருக்க கூடிய மேட்டு பகுதியில் பளியர்கள் வசிக்கும் ஒரு கிராமம் இருந்தது. முள்வேலிகள் சூழ்ந்த குடிசைகள் நிறைந்தஅந்த கிராமத்தில் இருந்த பளியர்களின் முக்கிய தொழில் விலங்குகளை வேட்டையாடி அவற்றின் தோல், பற்கள் இவற்றை விற்பது. மாமிசம் உண்பவர்களின் தேவைக்காக பொறி வைத்து சில விலங்குகளை பிடித்து அவற்றை நகரங்களில் விற்று பொருள் ஈட்டுவது, தேன், மிளகு, ஏலக்காய், கனி வகைகள் போன்றவற்றை சேகரித்து விற்பது போன்றவை. அந்த கிராமத்தில் இப்போது அன்னியர்கள் சிலர் அடைக்கலமாகி இருந்தனர். அவர்களை பாதுகாப்பாக காப்பாற்றுவது தான் பளியர்களின் முக்கியமான வேலை. பளியர் கூட்ட தலைவன் இதற்கு முன்பு ரத்னபுரிக்கு மன்னனாக இருந்த தீரனுக்கு நெருங்கிய நண்பன். தீரன் போர்க்களத்தில் வஞ்சகமாக கொல்லப்பட்ட பின்பு ஜெயசிம்மனின் ஆளுகையை ஏற்க விரும்பாமல் இந்த காட்டிற்குள் தன் கூட்டத்தாருடன் இடம் பெயர்ந்து வந்து விட்டான்.
தீரனின் கடைசி தம்பியான பார்த்திபன் ஜெயசிம்மனை எதிர்த்து ஒரு புரட்சி படையை உருவாக்கி இருந்தான். நாட்டில் மறைந்திருந்தால் ஜெயசிம்மனுக்கு பயந்தோ அல்லது பார்த்திபனை பிடித்து கொடுத்தால் பெரும் பணம் கிடைக்கும் என்றோ துரோகிகள் காட்டி கொடுத்து விடுவார்கள் என்பதால் அவன் தான் ஒளிந்து கொள்ள இடம் கேட்டு பளியர் குல தலைவனிடம் வந்து சேர்ந்தான். எதிரிக்கு எதிரி நண்பன் என்ற பழமொழிக்கு ஏற்ப இருவரும் ஒன்று சேர்ந்து விட்டனர்.பளியர் குல தலைவன் பார்த்திபனின் குழுவினருக்கு உணவிட்டு பாதுகாப்பாக பார்த்து கொள்வதை தன்னுடைய கடமையாக கருதினான். ஆண்டவன் பெயரை சொல்லி ஆட்சி நடத்தும் ஜெயசிம்மனை எதிர்க்க துணிபவர்கள் பார்த்திபனின் குழவில் இணைந்து கொண்டிருந்தனர்.ஜெயசிம்மனின் ஆட்கள் பொது மக்களிடம் அராஜகமாக நடக்கும் போதெல்லாம் அங்கே தோன்றும் பார்த்திபன் அவர்களை விரட்டியடித்து நீதியை நிலைநாட்டுவான் .அவனது நடவடிக்கைகளால் மக்களின் அபிமானம் அவன் பக்கம் திரும்பி கொண்டிருந்தது. அப்படியான சூழலில் ஒரு நாள் விடியற்காலையில் குளிருக்கு இதமாக தீ மூட்டிவிட்டு அதை சுற்றி வட்டமாக உட்கார்ந்தபடி பார்த்திபன் தன் ஆட்களுடன் பேசிக் கொண்டிருந்தான்.
எரியும் தீ ஜுவாலையை பார்த்து கொண்டிருந்த பார்த்திபன் "நம் கோபத்தை போலவே தீயின் ஜுவாலையும் கொளுந்து விட்டு எரிகிறது " என்றான்.
"இந்த தீ நம் உடலில் உள்ள குளிரை போக்குகிறது. நம் உள்ளத்தில் எரியும் கோபத்தீ நம் மக்களின் வாட்டத்தை போக்க வேண்டும்" என்றான் குழுவில் ஒருவன்.
"அதற்கு நாம் பெரும் எண்ணிக்கையில் இருக்க வேண்டும். இங்கு நம் குழுவில் சொற்ப நபர்களே இருக்கிறோம். அங்கே நம் எதிரியிடம் ஏராளமான படை பலம் , அதிகார பலம் என்று ஏராளமாக இருக்கின்றன. இப்போது நாம் அவனிடம் மோதுவது முட்டாள்தனமானது. நம்மை முட்டை பூச்சி நசுக்குவது போல் எளிதாக நசுக்கி விடுவான்" என்றான் பார்த்திபன்.
"மலைநாட்டு மன்னன் ரணதீரனும் உன் அண்ணனும் நெருங்கிய நண்பர்களாயிற்றே? நாம் அவனிடம் உதவி கேட்டால் என்ன?"
"நமக்கு அவன் உதவி செய்ய நினைத்தாலும் அவனால் நமக்கு உதவ முடியாது. தன் நண்பனை கொன்று ஆட்சியை பிடித்த ஜெயசிம்மன் மேல் அவன் படையெடுத்து துவம்சம் செய்திருக்க வேண்டும். ஆனால் அவனோ கோபத்தை அடக்கி கொண்டு அமைதியாக இருக்கிறான்."
"அதற்கு என்ன காரணம் இருக்க முடியும்?"
"ஓரே காரணம் தான். அந்த காரணத்தின் பெயர் நித்ராதேவி"
"ஜெயசிம்மனின் மனைவி, சிங்கபுரத்தின் இளவரசி நித்ராதேவியா?" என்றவனின் குரலில் வியப்பு மண்டி கிடந்தது.
"அவளேதான் !" என்றான் அமைதியான குரலில் பார்த்திபன்.
"ஒரு பெண்ணிற்காக ரணதீரன் ரத்னபுரியின் மீது படையெடுக்காமல் இருக்கிறானா? இது என்ன புதுக்கதை?"
"இது புதுக்கதையல்ல. ரொம்பவும் பழைய கதை. . புவியியல் அமைப்பின் படி முதலில் ரத்னபுரி .ரத்னபுரியை அடுத்துமலை நாடு, மலைநாட்டுக்கு அருகே சிங்கபுரம் .அந்தசிங்கபுர சமஸ்தானத்தின் ஓரே பெண் வாரிசு நித்ராதேவி. அவளைத் தான் ஜெயசிம்மன்மணந்திருக்கிறான்.ரத்னபுரிக்கும் சிங்கபுரத்திற்கும் இடையில் அகப்பட்டி ருப்பவன் மலைநாட்டு மன்னன் ரணதீரன்.. அவன் நமக்கு உதவி செய்ய நினைத்து ரத்னபுரியின் மீது படையெடுத்தால் சிங்கபுரம் மலை நாட்டின் மீது போர் தொடுக்கும். ரணதீரன் ஓரே நேரத்தில் இரண்டு நாடுகளை வெவ்வேறு திசைகளில் எதிர்கொள்ள நேரிடும். அதனால் தான் அவன் தன் நண்பனை கொன்ற ஜெயசிம்மன் மீது போர் தொடுக்க முடியாமல் திகைத்துப் போய் அமைதியாக இருக்கிறான். ஆனால் எப்போது வேண்டுமானாலும் ரத்னபுரியும், சிங்க புரமும் இணைந்து தன் நாட்டை கபளிகரம் செய்து விடும் என்ற அச்சமும் அவனுக்கு இருக்கிறது"
"அப்படியானால் இரண்டில் ஏதாவது ஒரு நாட்டை ரணதீரன் வீழ்த்தியே ஆகவேண்டும். இல்லையென்றால் சிறிது நாட்களில் மலைநாடு என்ற நாடே இருக்காது. மலைநாடு இரண்டு நாடுகளின் அங்கமாக மாறிவிடும்."
"சரியாகச் சொன்னாய்.ரத்னபுரியின் மீது படையெடுத்தால் தன்மருமகனை காப்பாற்ற சிங்கபுரமும் மலை நாட்டின் மீது படையெடுக்கும் . இரட்டை தாக்குதல் .அவற்றை எதிர்கொள்ள ரணதீரன் தன் படைபலத்தை தற்போது அதிகரித்து கொண்டிருக்கிறான்"
"ஜெயசிம்மன் சரியான குள்ள நரிபோலிருக்கிறதே? உள்ளுர் மக்களை நான் அரசனல்ல கடவுள் தான் அரசர் நான் அவரின் அடிமை என்று ஏமாற்றுகிறான். அதே பாதுகாப்பு கவசத்தை எதிரி நாட்டு மன்னர்களிடமும் பிரயோகித்து அவர்களிடம் பயத்தை ஏற்படுத்துகிறான்.ரண தீரனையும் தன் ராஜதந்திரத்தால் முடக்கி விட்டான். இவ்வளவு சாமர்த்தியமாக காய்களை நகர்த்துபவனை நாம் எப்படி வீழ்த்த முடியும்?"
"ஏன் முடியாது? விடா முயற்சி. விஸ்வருப வெற்றி .பூட்டு உருவாகும் போதே அதற்கான சாவியும் உருவாக்கப்பட்டிருக்கும் "என்றான் பார்த்திபன்
"நான் ஒரு விசயத்தை கேள்விப்பட்டேன் பார்த்தி பா? அது உண்மையா பொய்யா என்று எனக்கு தெரியவில்லை." என்றான் மற்றொருவன்
"நீ கேள்விப்பட்ட விசயத்தை சொல் நண்பா! கேட்போம்" என்றான் பார்த்திபன்
"இரண்டு நாடுகளிடையே சிக்கி கொண்டு தான் தவிப்பதை விரும்பாத ரணதீரன் அதிலிருந்து விடுபட இரண்டு கள்வர்களை நாடியிருப்பதாக தெரிகிறது"
" கள்வர்களா?ரண தீரனுக்கு புத்தி மழுங்கி விட்டதா என்ன? கள்வர்களுக்கும் அரசியலுக்கும் என்ன சம்மந்தம்?" என்று சிரித்தான் பார்த்திபன்.
" நகைக்காதே பார்த்திபா! நீ நினைப்பதுபோல் அவர்கள் சாதாரண கள்வர்கள் அல்ல. கள்வர்புரத்தை சேர்ந்த கள்வர் தலைவனின் மகன்கள். எடுத்த காரியத்தில் தோற்காத வீரர்கள் . தண்ணீரில் தடம் பார்த்து நடக்கும் திறமைசாலிகள். அண்ணன் அரிஞ்சயனும் தம்பி ஆதித்தனும் ஒருவரை ஒருவர் மிஞ்சுவார்கள். மோகினி என்ற பெயர் கொண்ட அபூர்வ சுழி கொண்ட வெண்ணிற புரவி கூட அவர்கள் வசம் உண்டு. களவு மட்டுமல்லாமல் பல்வேறு கலைகளில் சிறந்தவர்கள். பல நாடுகளில் இவர்கள் இருவரால் ஆட்சி மாற்றம் நடந்தேறி இருக்கிறது"
" இரண்டு கள்வர்களும் அவ்வளவு வல்லமை வாய்ந்தவர்களா?"
"இல்லையென்றால் ரணதீரன் ஏன் அவர்களை அழைக்க போகிறான். போன வாரம் சகோதரர்கள் இருவரும் ரணதீரனையும் அவனுடைய அமைச்சர் பிரம்மராயரையும் சந்தித்திருக்கிறார்கள். அதன் பிறகு அவர்களைப் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை."
"இருவரும் வல்லவர்கள் போல் தான் தெரிகிறது.ஜெயசிம்மனை எதிர்க்க இவர்கள் தான் சரியான ஆட்கள் " என்றான் பார்த்திபன்.
" ஆனால் அவர்கள் இப்போது எங்கேயிருக்கிறார்கள் என்று தான் தெரியவில்லை"
"அரசாங்க அதிகாரிகளின் நடமாட்டத்தை பற்றி நமக்கு உளவு சொல்ல சில ஆட்களை நாம் வைத்திருக்கிறோமில்லையா? அவர்களில் ஒருவன் ஒரு விசித்திரமான செய்தி ஒன்றை கூறினான்"
"என்ன அது?"
"நாட்டிற்குள் புதிதாக வந்திருக்கும் ஒரு யோகி மக்களின் திருடு போன தொலைந்து போன பொருட்களை திரும்ப தருகிறாராம். மக்கள் கூட்டம் அவரைப் பார்க்க அலை மோதுகிறதாம். நகரத்தின் பெரும் தனவந்தர்கள் அவரை தங்கள் இல்லத்திற்கு அழைத்து மரியாதை செய்கிறார்களாம். நடந்தவை, நடக்க போகிறவை போன்றவற்றை அப்படியே அச்சுபிசகாமல் சொல்கிறாராம் அந்த யோகி."
"இதற்கு முன்னால் அவர் எங்கிருந்தாறாம்?" என்றான் பார்த்திபன் யோசனை செய்தபடி.
"அதைப் பற்றி எந்த விவரமும் தெரியவில்லை. அவரின் பிரதான சீடன் அவர் இமய மலையில் இருந்து வருவதாக கூறியிருக்கிறான். அதனால் மக்கள் அவரை மர்மயோகி என்ற பெயரால் அழைக்கிறார்கள்.ஜெயசிம்மன் கூட விரைவிலேயே அவரை சந்திக்க திட்டமிட்டிருக்கிறானாம்."
" அவன் அந்த மர்மயோகியை சந்திக்கும் முன்பாக நான் அவரை சந்திக்க வேண்டும்" என்றான் பார்த்திபன்.
"அவரை சந்தித்து நீ என்ன செய்ய போகிறாய்? இந்த சந்திப்பால் நமக்கு என்ன நன்மை நடக்க போகிறது?"
"அந்த யோகியின் மூலம் நமக்கு சில விசயங்கள் நடக்க வேண்டியிருக்கிறது. அவரை வைத்து நான் சிலவற்றை சாதிக்க நினைக்கிறேன். அவற்றை இப்போது இங்கே சொல்ல முடியாது"
"நமக்கு உளவு சொல்லும் ஆட்களில் யாரையாவது வைத்து துறவியை சந்திக்க ஏற்பாடு செய்கிறேன்." என்றான் கும்பலில் ஒருவன்.
"நல்லது. சந்திப்பிற்கு விரைவாக ஏற்பாடு செய். அவர் மட்டும் என் திட்டத்திற்கு சம்மதிக்காவிட்டால்?" என்ற பார்த்திபன் தன் இடையில் இருந்த குறுவாளை எடுத்து அருகில் இருந்த மரத்தை நோக்கி வீசினான். மரத்தில் ஏறிக் கொண்டிருந்த பாம்பு ஒன்று அவனது கத்தி பட்டுதலை வேறு உடல் வேறாக துண்டிக்கப்பட்டு விழுந்தது. பார்த்திபனின் உதடுகளில் ஒரு கொடுர புன்னகை மலர்ந்தது.