ஆசை 2:
சேலம், தமிழ்நாடு, இந்தியா, 1999
தமிழு பள்ளிக்கூடத்துக்கு நேரமாகுது இன்னும் என்ன செய்ற சீக்கிரம் வா என்று கத்திக்கொண்டிருந்தார் சாந்தி. இதோ வரேன் மா என்று ஓடி வந்தாள் ஒன்பது வயது தமிழ். சாந்தியிடமிருந்து சிறு டப்பாவையும் ஒரு தட்டையும் வாங்கியவள் தனது பையில் வைத்துவிட்டு தனது அம்மாவை பார்த்தபடி நின்றிருந்தாள். டப்பாவை வாங்கியவள் போகாமல் இருக்கவும், தமிழை பார்த்த சாந்தி, எதுக்கு இங்கயே நிக்குற என்று கேட்டார். அம்மா நாளைக்கு கடைசி நாள் மா, எல்லாரும் நோட்டு வாங்கிட்டு வந்துருக்கணும்னு சொல்லிட்டாங்க டீச்சர், எப்போ மா வாங்கித் தர என்று கேட்டாள்.
தமிழை சற்று அழுத்தமாக பார்த்த சாந்தி, ஏன் போன வருசம் உனக்கு எல்லாமே பள்ளிக்கூடத்துல தானே தந்தாங்க இந்த வருசம் டீச்சர் கிட்ட சொல்லி தர சொல்ல வேண்டியது தானே என்று கேட்டார். இல்லம்மா மூணாவது வரைக்கும் பள்ளிக்கூடத்துல, கொஞ்சம் பேருக்கு எல்லாமே இலவசமா தந்தாங்க. இப்போ நான் நாலாவது போறேன்ல அதனால நாமளே தான் வாங்கணும்னு டீச்சர் சொல்லிட்டாங்க. வசந்தி டீச்சர் அவங்க பொண்ணோட புத்தகம்லாம் தரேன்னு சொல்லிட்டாங்க. புத்தகம் வாங்க காசு வேணாம். நோட்டு மட்டும் வேணும் மா. நாளைக்கு வாங்கிட்டு போகலேன்னா டீச்சர் திட்டுவாங்க மா என்று சொல்லும் போதே தமிழின் கண்களில் லேசாக நீர் நின்றது.
தமிழின் கலங்கிய முகத்தை பார்த்த சாந்தி, சரி சரி நாளைக்கு வாங்கி தரேன் இப்போ கிளம்பு என்றவர், பாப்பாவுக்கும் வாங்கணுமா என்று கேட்டார். இல்லமா மதி மூணாவது தான எனக்கு போன வருசம் கொடுத்த மாதிரி அவளுக்கும் பள்ளி கூட்டத்துல கொடுத்துருவாங்கன்னு ரவி சார் சொன்னாரு. அவ பேர எழுதிக்கிட்டு போயிருக்காரு இலவச நோட்டு புத்தகத்துக்கு என்று சற்று தெளிந்த முகத்துடன் கூறினாள் தமிழ். சரி அப்போ கிளம்புங்க ரெண்டு பேரும் டப்பால இன்னைக்கு பருப்பு ஊத்திவச்சுருக்கேன். வழக்கம் போல சத்துணவுல சாப்பாடு வாங்கி சாப்பிட்டுக்கோங்க. இந்த ஐம்பது பைசா உங்களுக்கு வச்சுக்கோங்க என்று தனது முந்தானையிலிருந்து காசை எடுத்து நீட்டினார்.
அதை வாங்கிய தமிழ், அம்மா மதி பாட்டி வீட்டுல இருக்கா, அங்க போய் கூப்பிடுக்கறேன் என்றுவிட்டு, தனது பையையும், தனது தங்கையான மதியின் பையையும் எடுத்துக்கொண்டு கிளம்பினாள். அடுத்து இருக்கும் தனது பாட்டி வீட்டிற்கு சென்றவள், மதி அங்கு திண்ணையில் தங்களது பாட்டியுடன் அமர்ந்திருக்கவும், அவளிடம் அவளது பையை கொடுத்துவிட்டு, போயிட்டு வரோம் அன்னம்மா என்று பாட்டிக்கு கையசைத்துவிட்டு தங்கையுடன் கிளம்பினாள்.
அவர்கள் செல்வதை வீட்டு வாசலில் இருந்து கவனித்த சாந்தி, தனது அம்மா வீட்டிற்கு வந்தார். அன்னத்திடம் அம்மா, பெரியவளுக்கு நாளைக்கு நோட்டெல்லாம் வாங்கணுமாம். காசு வேணும், எனக்கு சனிக்கிழமை தான் சம்பளம் தருவாங்க. கைல இருபது ரூபா தான் இருக்குது. உன்கிட்ட இருந்தா கொடும்மா நான் சனிக்கிழமை தரேன் என்று கேட்டார். என்கிட்டே இருந்த காச உங்கப்பன் காலைல திருச்சி போறேன்னு வாங்கிட்டு போய்ட்டான். இரு வாரேன் என்றவர் உள்ளே சென்றார்.
அஞ்சறை பெட்டியில் தேடியவர் ஒரு மடங்கிய நூறு ரூபாய் தாள் இருந்தது. அதை எடுத்து வந்தவர் சாந்தியிடம் கொடுத்துவிட்டு, அப்பனுக்கும் மகளுக்கும் என்கிட்டே காசு இருந்தா பொறுக்காது. அந்தாளு ஊரு சுத்தியே சம்பாதிச்ச காச செலவளிக்கிறான். பெரியவளுக்கு நோட்டு வாங்கறதுக்காக தரேன், அப்பறம் இன்னிக்கு ரங்கமூட்டு காட்டுல களை எடுக்கற வேலை இருக்குது நான் போயிட்டு வரேன் என்று கதவை சாத்திக்கொண்டு அன்னமும் கிளம்பினார்.
தனது வீட்டிற்கு வந்த சாந்தி கையில் இருந்த நூறு ரூபாய் தாளை பார்த்தார். பின்பு எதையும் யோசிக்க நேரமின்றி, நேற்று இரவு தண்ணீர் ஊற்றி வைத்த சாப்பாட்டை ஒரு சிறு தூக்கு வாளியில் ஊற்றி எடுத்துக்கொண்டு தானும் வேலைக்கு கிளம்பினார். சாந்தி வெளியே வரவும், பக்கத்து வீட்டு சரசுவும் வந்தார். இருவரும் இணைந்து பேசியபடி நடந்தனர்.
மதியின் கையை பிடித்துக்கொண்டு பள்ளி வரையிலும் வந்த தமிழ், மதியை அவளுடைய வகுப்பறையில் அமர்த்திவிட்டு மத்தியானம் சாப்பாடு பெல் அடிக்கும் போது வரேன் மதி என்றுவிட்டு தனது வகுப்பறையை நோக்கி சென்றாள்.
வகுப்பறையில் தமிழின் தோழி சித்ரா அப்பொழுது தான் தனது புது நோட்டுகளை, பக்கத்தில் இருந்த மற்ற மாணவிகளிடம் காட்டிக் கொண்டிருந்தாள். தமிழை பார்த்தவள், தமிழ் இங்க வாவேன், அப்பா நேத்து ராத்திரி தான் புது நோட்டெல்லாம் வாங்கி தந்து, அதுக்கு அட்டைலாம் போட்டு ஸ்டிக்கர் லேபிள்லாம் ஒட்டி பேர் எழுதி தந்துருக்காங்க பாரேன் என்று காட்டினாள். லேசான புன்னகையுடன் அந்த நோட்டுக்களை எல்லாம் எடுத்து பார்த்தவள் நல்லாருக்கு சித்ரா என்று கூறினாள். சித்ரா தமிழிடம் நீ எப்போ வாங்க போற தமிழ் என்று கேட்டாள். அம்மா நாளைக்கு வாங்கித்தரேன்னு சொல்லிருக்காங்க சித்ரா, வாங்கிட்டு காட்டுறேன் என்றாள் தமிழ்.
பின் முதல் வகுப்பு அவர்களுடைய தமிழ் ஆசிரியர் வரவும் தொடங்கியது. அன்றைய பாதி நாள் முடிய, மதிய உணவுக்கான பெல் அடித்ததும், வேகமாக சென்ற தமிழ் தனது பையில் இருந்த தட்டை எடுத்துக்கொண்டு வரிசையில் நின்றாள். சத்துணவு ஆயாவிடம் சாப்பாட்டை வாங்கியவள், நேரே மதியின் வகுப்பறை சென்று அவளை அழைத்துக்கொண்டு சாப்பிடச்சென்றாள். ஏற்கனவே இவளுக்காக இடம் பிடித்து வைத்திருந்த சித்ராவுடன் சேர்ந்து சாப்பிட்டவர்கள், சிறிது நேரம் விளையாடிவிட்டு, வகுப்பறை சென்றார்கள்.
மாலை பள்ளி முடிந்ததும், மீண்டும் மதியை அழைத்துக்கொண்டு வீடு சென்றாள் தமிழ்....