பகுதி 24
ஓலையை படித்த ஆதித்தனின் முகம் இருட்டுக்கு போனது.அவன் முழுதாக வாசிக்கும்வரை காத்திருந்த மார்த்தாண்டவர்மன் “முழுவதுமாக வாசித்தீரா? உமக்கு சாதகமாக இருந்த நிலவரம் இப்போது கலவரமாக மாறி உள்ளது! “என்றான்.
“தண்ட நாயக்கன் அப்படி மாற்றி விட்டான் அரசே! ஆழித்தேர் தீப் பிடித்ததை அசுப சகுனம் என்று மகிபாலன் கருதியிருக்கிறார்.தெய்வ நிந்தனையால் நாட்டிற்கும். அரசிற்கும் எதாவது ஆபத்து வருமோ என்று மகாதேவி கோயிலில் நிமித்திகம் பார்த்திருக்கின்றனர்.அப்போது அங்கே அருள் வந்து ஆடிய ஒரு பெண் அபூர்வமான அசைந்தாடும் வெண்ணிற பொருளால் நாட்டின் நலனுக்கு ஆபத்து வரக்கூடும் என்று சொல்லியிருக்கிறாள்.நிமித்திகரும் அதையே வழி மொழிந்துள்ளார்.மோகினியை தீச்சகுனம் என்று கருதிய மகிபாலர் அதை நஞ்சிட்டு கொன்று விட்டார்.மோகினி இறந்ததாக உலகம் நினைக்கிறது.ஆனால் இறந்தது வர்ணம் மாற்றப்பட்ட என் குதிரை என்பதை நாம் மட்டுமே அறிவோம்! எல்லாம் நாயக்கனின் ஏற்பாடு! "
“போன ஜென்மத்தில் நாயக்கன் குள்ளநரியாகத்தான் பிறந்திருக்க வேண்டும்! “என்றான் அரிஞ்சயன்.
“உன் உழைப்பும், திறமையும் விழலுக்கு இறைத்த நீராகி விட்டது! “என்றான் வர்மன்.
“எதிரியை சற்று தவறுதலாக எடை போட்டு விட்டேன்.அவனோ என் திட்டங்களை கொண்டே என்னை மடக்கி விட்டான்.!”என்றான் ஆதித்தன்.
“எப்படியோ நீ தோற்று விட்டாய்.எனக்கு ஆனந்தம் தரும் செய்தி அது ஒன்றுதான்! “என்றார் மழவராயர்.
“இப்போது மோகினியின் கதி? “என்றான் ஆதித்தன்.
“வேங்கியிலிருந்து வதந்தி பரவி வருகிறது.இரட்டைசுழியுள்ள வெண் குதிரை அபச குணமுள்ளதென்று! உன் குதிரைக்கு நேர்ந்த கதிதான் மோகினிக்கும்! “
“அதை நீங்கள் நம்புகிறீர்களா? “
“கடகத்தின் மக்கள் நம்ப ஆரம்பித்து விட்டார்கள்.நாளை நாட்டில் அசம்பாவிதம் எதாவது நடந்தால் மோகினியின் ராசி என்று நானும் நம்ப கூடும்.!”
“விபரீதத்தை இதற்காகவென்றே நிகழ்த்த தயாராக இருக்கிறான் நாயக்கன்! “என்றான் அரிஞ்சயன்.
“மோகினியின் மீதான கற்பிதங்களை உண்மையென்று நம்ப வைத்ததில் தண்ட நாயக்கன் என்னை வென்று விட்டான்.!”
“அரசே! இன்னும் என்ன வீண் பேச்சு? என்னை பகடி செய்து சிரித்த இவர்களை என் வாளால் கொல்ல வேண்டும்! “என்றார் மழவராயர்.
“உம்மை உசுப்பேற்ற சொன்ன பொய் ஐயா அது.!இருவரும் ஏராளமாக உழைத்திருக்கிறார்கள்.அவர்களை கொல்ல நினைப்பேனா? உம்மை சந்தோஷப்படுத்த நான் சொன்ன சிறு பொய் அது! “என்று வர்மன் புன்னகைத்தான்.
“இப்போது என்ன செய்வது மன்னரே? “என்றான் ஆதித்தன்.
“மோகினிக்கு நஞ்சிட வேண்டியதுதான்.நல்லவேளையாக அது இன்னும் கருப்பு வண்ணத்திலேயே உள்ளது.உங்களின் திறமையை மெச்சி ஏதேனும் பரிசு தர விரும்புகிறேன்.எது வேண்டுமோ கேளுங்கள்! “
“எதுவும் வேண்டாம் மன்னரே! மோகினியை கொல்லாமல் எனக்கு பரிசாக தந்து விடுங்கள்! “என்றான் ஆதித்தன்.
“ஆமாம்! இந்த திமிர் பிடித்தவனுக்கு இதுதான் சரியான தண்டனை.தான் தோற்று போனதன் நினைவு சின்னமான குதிரையை பார்த்து தினமும் அழட்டும்.அதுதான் சரியான தண்டனை! “என்று மகிழ்ந்தார் மழவராயர்.
“அப்படியே ஆகட்டும்.!மோகினியை நீங்களே வைத்து கொள்ளுங்கள்.சிறிது நாட்கள் தங்கி போகலாமே? “என்ற வர்மனை வணங்கியவர்கள் “இல்லை அரசே! நாங்கள் உடனடியாக கிளம்ப வேண்டும்.இல்லையேல் இந்த கிழவர் எங்களை கேலி செய்து தற்கொலைக்கு தூண்டி விட்டு விடுவார்! “என்றனர்.
“ஆதித்தன் பயப்படுவதை பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.அதுவும் என்னை பார்த்து! “என்றார் மழவராயர்.
“பயணம் இனிதாகட்டும்! சென்று வாருங்கள்! “என்ற வர்மன் அரண்மனைக்குள் சென்று மறைந்தான்.
“கதையின் நாயகன் தோற்பது இதுதான் முதல்முறை.!மிகவும் கேவலமாக உள்ளது கதையின் முடிவு! “என்றார் ராயர்.
“ராயரே! நாயகன் தோற்றதாக வரலாறு கிடையாது.என்னால் இங்கிருந்தே தண்ட நாயக்கனை வெற்றி கொள்ள முடியும்! “
“அது எப்படி? “
“என்னுடன் சிறிது நேரம் பயணப்பட்டால் ரகசியம் தெரியும்! “
“அப்படியானால் வருகிறேன்.”
“ஒரே நிபந்தனை! நீர் எதுவும் பேசாமல் வேடிக்கை மட்டுமே பார்க்க வேண்டும்! “
“சம்மதிக்கிறேன்! “
“ஆதித்தா! இதென்ன விபரீதம்! இங்கிருந்து எப்படி நாயக்கனை ஜெயிக்க முடியும்? “என்றான் அரிஞ்சயன்.
“மனமிருந்தால் மார்க்கமுண்டு! பொறுத்திருந்து பார் அண்ணா! உன் தம்பி தண்ட நாயக்கனை வெற்றி கொள்வதை! “
மூவரின் புரவிகளும் கோட்டை வாயிலிலிருந்து கிளம்பின.
மூவரின் புரவியும் அங்கிருந்து கிளம்பி ஒரு காததூரம் சென்றன.அங்கேயிருந்த விடுதி ஒன்றின் முன்னால் புரவிகளை நிற்க செய்த ஆதித்தன் அங்கிருந்த காவலனிடம் ஒரு பொற்காசை கொடுத்து தன் குதிரையை மட்டும் நன்றாக குளிப்பாட்ட சொன்னான்.இரண்டு நாட்களாக கருப்பு வண்ணத்தை பூசியிருந்த மோகினி குளிப்பாட்ட தொடங்கியதும் பளீரென்ற வெண் நிறத்தில் மின்னலாயிற்று.
“இந்த விடுதிக்கு நாம் யாரை பார்க்க வந்திருக்கிறோம் ஆதித்தா? “என்றான் அரிஞ்சயன் குழப்பத்துடன்!
“மோகினியின் அருமை தெரிந்த ஒருவனை சந்திக்க போகிறோம்! ராயரே! இந்த கணத்திலிருந்து நீர் ஊமை! மறந்து விடாதீர்! “என்றான் ஆதித்தன்.
சம்மதமாக தலையசைத்தார் ராயர்.!
மூவரும் விடுதியின் உள்ளே நுழைந்த போது விடுதி காப்பாளன் “நீங்கள் யாரை பார்க்க வேண்டும்? “என்றான்.
“யவனத்திலிருந்து புரவிகளுடன் வந்திருக்கும் யவனனை சந்திக்க வேண்டும்! “
“கிழக்கு பக்கமுள்ள அறையில் தங்கியிருக்கிறார்.போய் பாருங்கள் ! “
"அவனை நாம் ஏன் சந்திக்க வேண்டும்?"என்றான் அரிஞ்சயன்.
"தற்செயலாக வந்த இந்த யவனனிடமிருந்தே மோகினி போன்ற குதிரையை வாங்குவதாக வர்மரிடம் கூறினேன்.நினைவிருக்கிறதா? அதை வேறு மாதிரி பயன்படுத்த போகிறேன் அண்ணா!"என்றான் ஆதித்தன்.
மூவரையும் கண்ட யவனனம் மரியாதையுடன் வரவேற்றான்.ஏற்கனவே ஆதித்தனையும், அரிஞ்சயனையும் கப்பலில் சந்தித்த யவனன்தான் இவன்.ஆதித்தனிடமிருந்த முத்திரை மோதிரம் யவனனிடம் மரியாதையை வரவழைத்திருந்தது.விடுதியில் ஓய்வெடுக்க பாதியில் கழன்று கொண்டு விட்டவன் இவர்களின் வருகையால் குழப்பமடைந்தான்.
“யவன வணிகனே! உம்மிடம் ஒரு வணிகத்திற்காக வந்துள்ளேன்! “என்றான் ஆதித்தன்.
“உங்களின் அரசிடம்தானே குதிரைகளை விற்க வந்துள்ளேன்! அதை பற்றி பேச போகிறீர்களா? “
“இல்லை! இது உமக்கும் எனக்குமான தனி வணிகம்! “
“அது சரி! இந்த முதியவர் யார்? “
“அவர் பெயர் மழவராயர். பிறவி ஊமை.அரண்மனையின் முக்கியஸ்தர்களில் ஒருவர்.இவர் நீரற்ற கிணற்றில் விழ சொன்னாலும் மன்னர் குதிப்பார்! “என்றான் ஆதித்தன்.
“ப்பே! “என்று பெருமையுடன் ஆமோதித்தார் ராயர்.
“வந்தனம் ஐயா! உங்களின் உறவு எனக்கு வரவு! என்னிடம் என்ன வணிகம் செய்ய வந்துள்ளீர் ஆதித்தரே? “
“ஒரு வெண்புரவியை விற்க வேண்டும்! “
“குதிரையை பார்த்த பின்பே விலை பேச முடியும்.!”
“வெளியே நிற்கிறது! வந்து பார்வையிட்டு விட்டு விலை சொல்லும்! “
வெளியே வந்து மோகினியை பார்வையிட்ட யவனனின் கண்கள் வியப்பில் விரிந்தன.
“இரட்டை சுழியுள்ள வெண்புரவி! அபூர்வ பிறவியாயிற்றே? இதை போல் ஒன்றை என் சக வணிகன் வேங்கியின் அரசரிடம் விற்றான்! “
“அதுவல்ல இது!இது வேறு குதிரை! “
“சோதித்தால் தெரிந்து விடும்! “என்ற யவனன் யவன மொழியில் சில கட்டளைகளை பிறப்பித்தான்.மோகினி கீழ் படிவதை கண்டதும் “நிச்சயமாக இது இந்த மண்ணில் பிறந்த குதிரையல்ல.சிறு வயதிலிருந்து கேட்ட யவன மொழிக்கு கீழ் படிவதால் இது யவனத்தில் பிறந்த குதிரையாகத்தான் இருக்க முடியும்! இது மோகினியாக இருக்கவும் வாய்ப்புண்டு! “
“வணிகத்தில் ரிஷிமூலம், நதி மூலம் பார்க்காதீர் யவனரே! “
“இதனால் எந்த ஆபத்தும் நேராது என்ற உத்தரவாதம் எனக்கில்லை.!”
“நான் உறுதி தருகிறேன்.உமக்கு எதுவும் நேராது! “
“எந்த வில்லங்கமும் இல்லாவிட்டால் லட்சம் பொன் தரலாம்.ஆனால் இதற்கு நான் குறைவாக தரவே விரும்புகிறேன்.!”
“எவ்வளவு தருவீர்? “
“ஐம்பதாயிரம் பொன் தரலாம்.ஆனால் கையிருப்பாக நாற்பதாயிரம் பொன்தான் இருக்கிறது.!”
“பரவாயில்லை! அதை கொடு! மீதி பத்தாயிரம் பொன்னை வாய் பேச இயலாத என் நண்பருக்கு கொடுத்து விடு! ஒரே ஒரு நிபந்தனை உண்டு.கடகத்திலும், வேங்கியிலும் இந்த குதிரையை நீ விற்க கூடாது.மீறினால் வரும் இன்னலுக்கு நான் பொறுப்பல்ல!
“இதற்கு இசைகிறேன்! வட புலத்தை நோக்கியே செல்கிறேன் “என்ற யவனன் பணத்தை எடுத்து வர விடுதிக்குள் சென்றான்.
“இலவசமாக வாங்கி வந்ததை விற்று விட்டாய்! திறமைசாலிதான்! “என்றார் ராயர்.
“கேளும் ராயரே! மோகினியை கொல்ல வேண்டும் என்பது நாயக்கனின் திட்டம்.அது தவிடு பொடியாகி விட்டது.மோகினி வேறு எங்காவது தனக்குரிய மரியாதையோடு வாழ்ந்து கொண்டிருக்கும்.வருடம் முழுக்க திருடினால் கிடைக்க கூடிய ஒரு லட்சத்து நாற்பதாயிரம் பொன்னை நான் ஒரு குதிரையில் ஈட்டி விட்டேன்.முதியவனான அனுபூதி இறந்தால் உலகில் அஸ்வசாஸ்திரம் அறிந்த ஒரே ஆள் நான்தான்.!கள்வர் புரத்தின் பெருமையை எங்களின் திறமையை இரு நாடுகளுக்கும் உணர்த்தி விட்டோம்.இப்போது கூறும் யார் தோற்றார்கள் என்று! “
“இதை கேட்டால் நாய்க்கனின் தூக்கம் இரண்டு நாட்களுக்கு பறி போகும்! “
“யவனன் விற்கும் குதிரைகளிலிருந்து பத்தாயிரம் பொன்னை வாங்கி கொள்ளும் பெரியவரே! “
“எனக்கு எதற்கு பொன்? “
“இன்னா செய்தாரை ஒறுக்க? “
வெளியே வந்த யவனன் பொன் முடிப்பை கொடுத்தான்.
“யவனரே! ஒரு வேண்டுகோள்! “
“என்ன அது? “
“என் ஊமை நண்பர் வாய் திறந்து ஒரு வார்த்தை பேசினாலும் நீர் பத்தாயிரம் பொன்னை தர வேண்டியதில்லை! இது எங்களுக்குள்ளான ஒப்பந்தம்.இதை நீர் கடை பிடிக்க வேண்டும்! “
“நிச்சயமாக! அவர் ஒரு வார்த்தை பேசினாலும் பணம் தர மாட்டேன்! “
“அவர் சற்று நேரம் சைகையில் எங்களுடன் பேசி விட்டு வருவார்.நீர் ஓய்வெடும்! “
யவனன் விடுதிக்குள் சென்றான்.
“ஆதித்தா! இது என்ன புது நிபந்தனை? “என்றார் மழவராயர்! .
“காரணமாகத்தான் ராயரே! இப்போது இங்கு இரண்டு புரவிகள் மட்டுமே உள்ளன.அவற்றில் நாங்கள் பயணப்படுவோம்.!”
“என் புரவியை நீங்கள் எடுத்து கொண்டால் நான் எப்படி கோட்டைக்கு பயணப்படுவது? “
“யவனனிடம்தான் நாற்பது குதிரைகளும்,உம்முடைய பொன்னும் இருக்கிறதே? போய் கேளும்! உதவுவான்! “
“ஆம்! சரிதான்! “
“நீர் சாடையில்தான் பேச வேண்டும் ராயரே! உணர்ச்சி வேகத்தில் ஒரு சொல்லை உதிர்த்தாலும் கோட்டைக்கு பணமின்றி நடந்துதான் போக வேண்டும்! “
“கிராதகர்களே! உங்கள் வேலையை காட்டி விட்டீர்களா? “
“சத்தமாக பேசாதீர்! யவனனின் காதில் விழுந்தால் பொன் போய்விடும்! “
மழவராயர் மவுன மொழியில் வசவுகளை உதிர்த்து கொண்டிருக்க சகோதரர்கள் இருவரும் கிளம்பினர்.”வாழ்க்கையில் உன்னை மறக்க இயலாது வெண் புரவியே!போய் வருகிறோம் மோகினி! “என்ற ஆதித்தனின் கண்கள் கலங்கின.வெகு தூரத்தில் கள்வர் புரம் அவர்களுக்காக காத்திருந்தது.
முற்றும்