Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Maraadha nesam _7



மாறாத நேசம் !


அத்தியாயம் 7‌


சீர்மதியன் மைதானத்திற்குள் நுழைந்தவுடன் சல்லிக்கட்டு போட்டி களைகட்டியது. வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கூட்டம் விசிலடித்து அவனை உற்சாகப்படுத்தினார்கள்.



காளை வீரா பெரும் சீற்றத்துடன் ஓடிவந்தது. சீர்மதியன் அதன் திமிளை பிடிக்க பெரும் முயற்சி செய்தும், அவனால் முடியவில்லை.


வீரா சீர்மதியனை தொடவிடாமல் சிலுப்பிக் கொண்டு, அவனை கீழே தள்ளி மண்ணில் புரளவைத்தது.


ஒரு கட்டத்தில் சீர்மதியன் ஓய்ந்து போய்விட்டான். அவனுக்கு அருமைநாயகம் ஒன்றும் தன் காளையைப் பற்றி, சும்மா சொல்ல வில்லை என்று அப்போது தான் புரிந்தது.


அருமைநாயகமோ, மேடையில் அமர்ந்து பார்த்துக் கொண்டு இருந்தார். வீராவை சீர்மதியன் அடக்க பெரும் பாடு படுவதைக் கண்டு தன் மீசையை கர்வத்துடன் முறுக்கி கொண்டவர் தன் பேரன் வழுதியைப் பார்த்து அர்த்தத்துடன் சிரித்தார்.


வழுதிக்கு அப்போது தான் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.


சீர்மதியனுக்கு வீராவால் ஏகப்பட்ட காயங்கள் உடம்பில் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.


ஆனால் ,சீர்மதியன் சிறிதளவு கூட பின் வாங்காமல், தனக்குள் தண்மதியை நினைத்துக் கொண்டே உன்னால் முடியும் என்று தன்னைத் தானே தேற்றிக் கொண்டான்.


சீர்மதியனின் விடாமுயற்சி வீணாகாமல், அவனுக்கு வெற்றி வாய்ப்பை நல்கியது. ஒரு வழியாக வீராவின் திமிளை பதினைந்து மீட்டர் தொலைவுக்கு அப்பால் வரை பிடித்துச் சென்று வீராவை மண்ணை கவ்வச் செய்தான்.


அவன் காளையை அடக்கியதும் மேடையில் இருந்தவர்கள் முகத்தில் ஈயாடவில்லை.. வேடிக்கை பார்த்த இளைஞர்கள் எல்லாம் மைதான வேலியைத் தாண்டிக் குதித்து சீர்மதியனை தூக்கி கொண்டாடினார்கள்.


சீர்மதியன், வெற்றி புன்னகையுடன் அருமைநாயகத்தை பார்த்தான். அவரோ பேரதிர்ச்சியில் வாய் பேசமுடியாத ஊமையாக அமர்ந்திருந்தார். வழுதி கோபமாக அங்கிருந்து எழுந்து போய்விட்டான்.


தன்னை சூழ்ந்து கொண்டு ஆர்ப்பாட்டம் செய்த இளைஞர்களிடமிருந்து ஒருவாறு வெளியில் வந்த சீர்மதியன், நேராக அருமைநாயகத்திடம் சென்று நின்று கேள்வியாக அவரைப் பார்த்தான்.


கூடியிருந்த கூட்டமோ! கட்டுப்படுத்த முடியாத ஆர்ப்பாட்டத்துடன் அருமைநாயகத்தை பார்த்து சத்தம் எழுப்பிக் கொண்டு இருந்தது.


அருமைநாயகம் தன் அமைதியை கலைத்துவிட்டு எழுந்து சென்று, ஆயிரம் ஈட்டிகள் தன் நெஞ்சில் அடித்தது போல் ஏற்ப்பட்ட வலியை தாங்கிக் கொண்டு, ‌ஒலிப்பெருக்கியில் வெற்றி பெற்ற சீர்மதியனுக்கு வாழ்த்து கூறியவர்.. "நான் சொன்னபடி என் வாக்கை காப்பதுவேன்.கூடிய சீக்கிரம் நல்ல நாள் பார்த்து என் பேத்தி தண்மதியை சீர்மதியனுக்கு திருமணம் செய்து கொடுக்கிறேன் ."என்று உறுதி கூறியவர் தளர்ந்த நடையுடன் சென்றார்.



சீர்மதியனோ, வெற்றிக் களிப்புடன் வீட்டிற்குச் சென்றான்.அவன் வீடு போவதற்குள்ளேயே சல்லிக்கட்டில் நடந்தது வீட்டில் உள்ளவர்களுக்கு தெரிந்து விட்டது.



கோவழகனைத் தவிர அனைவரும் மகிழ்ந்தனர். அதிலும் பொன்மணிக்கு மகிழ்ச்சியில் தலைகால் புரியவில்லை. கணவனின் முகத்தை பார்த்து தன்னை‌ அடக்கிக் கொண்டார்.



மனதிற்குள் சிறு பயத்துடனேயே வீட்டிற்குள் நுழைந்தவனை கோவழகன் கோபமான‌ குரலில், "சீரா அங்கேயே நில்லு.." என்றார்.


கோவழகனுக்கு அவ்வளவு எளிதாக கோபம் வராது.ஆனால், அப்படி வந்தால் அதை கட்டுப்படுத்துவது மிக கடினம்.



சீர்மதியனுக்கு புரிந்துவிட்டது அப்பாவுக்கு விஷயம் தெரிந்துவிட்டதென்று. அசையாமல் அப்படியே நின்றவனிடம் ,ஒரு வார்த்தை கூடப் பேசாமல் தரத்தரவென கைகளை பிடித்து இழுத்தபடி மாமனார் வீடு நோக்கிச் சென்றார் கோவழகன்.


பொன்மணியோ, கணவனின் கோபத்தை கண்டு பேச்சற்றவளாக அவர்கள் பின் சென்றாள்.


தூயமுல்லை, தன் கணவன் கனியமுதனையும் அவர்களுடன் போகச் சொல்லி கண் ஜாடை செய்தாள்.


சீர்மதியன் எதுவுமே பேசாமல் தன் தந்தை இழுத்த இழுப்புக்கு கூடச் சென்றான்.


முறைவழுதி கோபத்தின் உச்சகட்டத்தில் வீட்டிற்குள் நுழைந்தான்.அவனின் முகம் பார்த்தே ஏதோ பெரிய விஷயம் என்று நினைத்த செம்பியன் என்னவென்று விசாரித்தார்.


அவன் போட்ட கூச்சலில் குடும்பமே கூடியது. முறை வழுதி சொன்னதைக் கேட்ட பூந்தாழையோ, அதிர்ச்சியில் உறைந்து போனார்.



அப்பா ஏன்‌ இப்படி ஒரு காரியம் செய்தார் என்று செம்பியன் நினைத்தாலும், தன் தங்கச்சி மகனுக்கு தன் பெண்ணைக் கொடுக்கப் போகிறோம் என்று நினைத்தவருக்கு மனதிற்குள் மகிழ்ச்சி வந்து ஒட்டிக் கொண்டது.



தூயநாச்சி விஷயம் கேள்விப்பட்டவுடன் மனதிற்குள் மகிழ்ந்து போனார். காலையில் இருந்தே கடவுளிடம் சீர்மதியன் வெற்றி பெற வேண்டுமென்று மனம் உருக வேண்டிக் கொண்டே இருந்தார்.அவர் பிராத்தனை நிறைவேறிய மகிழ்ச்சியில் 'என் பேரனா? கொக்கா? சொன்னதை செஞ்சுட்டானே என் ராசா ! இனி அவனிடம் தாத்தாவும்,பேரனும் அடக்கித் தானே வாசிக்கனும்..'என்று தான் போட்ட திட்டம் வென்ற ஆனந்தத்தில் மனதிற்குள் பெருமைபட்டுக் கொண்டார்.



தண்மதி தன் அண்ணன் கூறியதைக் கேட்டு, சர்வமும் அடங்கிப் போய், சுவரோடு சுவராக சாய்ந்த படியே தரையில் முழங்காலிட்டு சிலையாக அமர்ந்தவளின் மனமோ கூப்பாடு போட்டது.


'சீர்மதியன் சொன்னபடியே செஞ்சுட்டானே..அதுவும் மாட்டுக்கு ஈடாக தன்னை கேட்டு இருக்கிறான்‌ என்றால் ? அவன் தன்னை எவ்வளவு இழிவாக நினைத்து இருப்பான் என்று மனதிற்குள் மருகினாள்.'


அன்று ஒரு நாள் உனக்கு மூக்கனாங்கயிறு போடுவேன்னு சொன்னானே ! அதே போல் இப்படி ஒரு சூழலை உருவாக்கி விட்டானே என்று எண்ணி..எண்ணியே கழிவிரக்கம் கொண்டாள்.


வீட்டில் பேரன் ருத்ரதாண்டவம் ஆடுவது தெரியாமல் அருமைநாயகம் ஓய்ந்து போய் வந்தார்.


அவரைக் கண்டதும் வழுதி என்றுமில்லாமல் அன்று அவரை வார்த்தைகளால் குத்திக் கிழித்தான்.


"வாங்க .. எல்லாம் நல்ல படியாக பேசி முடிச்சுட்டு வந்துட்டீங்களா?"என்று குத்தலாக கேட்டான்.


செம்பியனோ,"வழுதி கொஞ்சம் அமைதியாக இரு..!"என்று மகனை அடக்க நினைத்தார்.


ஆனால் அவனோ, "அப்பா நீங்க பேசாம இருங்க..இது என் தங்கையின் வாழ்க்கை..நான் அத்தனை முறை சொல்லியும் கூட கேட்காமல் இவர் எப்படி அவனுக்கு வாக்கு கொடுக்கலாம்.."


"வழுதி நான் வேண்டுமென்றா செய்தேன்..?" என்று கலங்கிய குரலில் சொன்னார் அருமைநாயகம்.



"ஆமாம்..நான் மறுத்ததை பொருட்படுத்தாமல், உங்கள் வெட்டி கவுரவத்திற்கு தண்மதியின் வாழ்க்கையை பணையம் வைக்க உங்களுக்கு யார் உரிமை கொடுத்தார்கள்.." என்று கத்தினான்.


அவன் பேசியதைக் கேட்டு குடும்பமே செய்வதற்கு சிலையாக நின்றனர்.


யாரையும் பொருட்படுத்தாமல் ,"வயசானலே புத்தி மழுங்கிப் போய்விடும் போல்.."என்று வழுதி கூறி வாய் மூடுவதற்குள் செம்பியன் அவனை அறைந்திருந்தார்.


வழுதி அடிப்பட்ட கன்னத்தை பிடித்துக் கொண்டு தன் தந்தையை திகைப்புடன் பார்த்தான்.


"என்ன கொஞ்சம் வளர்ந்துட்டா. உன் இஷ்டத்திற்கு பேசுவீயா?யாருகிட்ட பேசறோம்ங்கிற நெனப்பு இருக்கனும்.அவர் தான் இந்த வீட்டுக்கு எல்லாமே..அவர் என்ன முடிவெடுத்தாலும் அதற்கு கட்டுப்பட்டுத் தான் நடக்கனும் .."என்று மூச்சு வாங்க ஆக்ரோஷமாக கூறினார்.



குண்டு ஊசி விழுந்தால் கூட சத்தம் கேட்குமளவு அந்த இடமே அமைதியானது. மற்றவர்கள் செம்பியன் கோபத்தைக் கண்டு கற்சிலையானர்கள்.



ஆனால், அவரோ கோபம் அடங்காமல், "உன்னை மார்லையும்,தோள்லையும் போட்டு வளர்த்த அவருக்கு தெரியாதா? எது உங்களுக்கு நல்லது கெட்டதென்று..இனி ஒரு‌ வார்த்தை அவரைப் பற்றி ஏதாவது பேசினே நான் கொலைகாரன் ஆகிடுவேன்‌ .."என்றவரை பார்க்கவே அச்சமாக இருந்தது.



கொஞ்சம் கூட செம்பியன் கோவம் குறையாமல் பேசினார் " அவரைக் கேள்வி கேட்கும் உரிமையை உனக்கு யாரு கொடுத்தது? இப்ப சொல்றேன் கேட்டுக்கோ..தண்மதியை மட்டுமில்லை, உன் கல்யாணத்தையும் முடிவு பண்ணும் உரிமை அவருக்குத் தான் இருக்கு. அதை கேட்டு நடப்பதாக இருந்தால் இரு.!இல்லைன்னா இந்த வீட்டை விட்டு இப்பவே வெளியில் போ.. எனக்கு பையனே பிறக்கவில்லைன்னு நினைச்சுக்கிறேன்‌ .."என்றார்.


அருமைநாயகம் என்றுமில்லாமல் இன்று ருத்ரதாண்டவம் ஆடும் மகனிடம், "செம்பியா கொஞ்சம் பொறுமையா இருப்பா.." என்றார்.


"அப்பா இதற்கு மேலேயும் நான் பேசுலைன்னா ! நான் உங்களுக்கு பையனாகவே இருக்க முடியாது.." என்றவர் தண்மதியை திரும்பி பார்த்து


" தணு உனக்கு வேறு தனியா சொல்ல வேண்டியதில்லைன்னு நினைக்கிறேன். தாத்தா வாக்கு கொடுத்திருக்காருன்னா அதை காப்பற்றுவது நம் கடமை.." என்ற தந்தையிடம்.


"அப்பா! நான் ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன். உங்களுக்கு தாத்தா வாக்கு பெரிசா இருக்கலாம். ஆனால் எங்க வாழ்க்கையை முடிவு பண்ணும் உரிமை எங்களுக்கு இல்லையா..? நாங்க என்ன ஆதிகாலத்திலா இருக்கோம். மாடும் நானும் ஒண்ணா? மாட்டுக்கு மூக்கனாங்கயிறு போடுவது போல், காளை அடக்கியதற்கு நான் ஈடா? என் சுயமரியாதை இழந்து இந்த கல்யாணம் நான் பண்ணிக்க முடியாது.எனக்கு அவனை பிடிக்கவே பிடிக்காதே.."


" தணு பெற்றவர்கள் எங்களை விட உங்க வாழ்கை நல்லா இருக்கனும்ன்னு யார் நினைப்பா..? நீ தேவை இல்லாததை போட்டு குழப்பிக்கிறே .உன் சுயமாரியதை இழக்கிற அளவு என்ன நடந்து விட்டது. எனக்கு தெரிந்து சீர்மதியன் நல்ல பையன்..நம் வீராவையே அடக்கி இருக்கான்னா ..அவன் எப்படி பட்ட வீரனா இருப்பான்..ஒரு வீரனை மணந்து கொள்ளப் போறேன்னு நினை.."


" அப்பா எந்த காலத்தில் இருக்கீங்க..வீரனை மணந்து நான் என்ன போர்ருக்கா அனுப்ப போறேன். கல்யாணங்கிறது ஆயிரங்காலத்து பயிர்ன்னு சொல்வாங்க.. காலம் பூரா வாழப்போறவ நான் ! எனக்கு வர கணவன் எப்படி இருக்கனும்ன்னு எனக்கும் கனவு இருக்காதா?உங்களோட கவுரவத்திற்கு என்னை எப்படி நீங்க பலிகடா ஆக்க முடியும்.என்ன பத்தி கொஞ்சம் கூட யோசிக்கலையே.." என்றாள் ஆதங்கத்துடன்.


"தணு நீ இன்னும் புரியாமல் தான் பேசறே.. உங்களை பெற்று,சீராட்டி வளர்த்த எங்களுக்கு உங்க வாழ்க்கையை எப்படி அமைத்து கொடுக்க வேண்டுமென்று தெரியாதா?நீங்க நல்லா வாழவேண்டுமென்ற ஆசை இருக்காதா?"


"ஆசை இருந்தால் இப்படி மாட்டுக்கு ஈடாக்கி இருக்க மாட்டீங்க.." என்று அவள் சொன்னதும், அதுவரை அமைதியாக இருந்த பூந்தாழை..


"தணு போதும் நிறுத்துடீ..இதுக்கு மேலே ஒரு வார்த்தை பேசினே நான் மனுசியா இருக்க மாட்டேன்.அப்பாங்கிற மரியாதை இல்லாமல் வாய்க்கு வந்ததை பேசுவியா.." என்று குரல் உயர்த்தியவரிடம் , "தாழை பொறுமையா இரும்மா எங்கிட்டத் தானே பேசறா‌.." என்றார் செம்பியன்.


"உங்ககிட்டத் தான் பேசறோம்ங்கிற நெனைப்பு அவகிட்ட இல்லையே.. இங்க பாருடீ நானெல்லாம் உங்க அப்பாவை பார்த்தது கூட இல்லை..என் அப்பா இது தான் மாப்பிள்ளைனனு சொன்னவுடன் தலையாட்டி கல்யாணம் பண்ணிட்டு வந்து இத்தனை வருசம் வாழ்ந்துட்டேன்.எங்க வீட்டில் இருந்ததை விட இங்கே ரொம்ப நல்லாத் தான் இருக்கேன்.."


"உங்க காலம் வேறு எங்க காலம் வேறும்மா.."


"என்னடி காலம் வேறு..அப்ப பெரியவர்களை மதிப்போம்.இப்ப தன்ககுத் தான் எல்லாம் தெரியும்ன்னு தெனாவெட்டல திரியறீங்க அது தான் மாறி இருக்கு.."


"அம்மா.."


"தணு ஒண்ணு மட்டும் தெரிஞ்சுக்கோ..நாம விரும்புறவங்களை விட நம்மல விரும்பி வரவங்களே கல்யாணம் பண்ணினா வாழ்க்கை நல்லா இருக்கும். இத்தனை பேசறீயே, என் அண்ணன் பையன் உப்பு ,சப்பு இல்லாத காரணத்திற்காக உன்னை வேண்டாம்ன்னு சொன்னான்.ஆனால், நீ வேணும்ன்னு நினைச்சு உயிரைக் கூட துச்சமா மதிச்சு ,காளையை அடக்கி இருக்கிறானே அவன் உன்னை சந்தோஷமா வச்சுக்குவான்னு தோணுது.."


"அம்மா நீங்க என்ன சொன்னாலும் என்னால் ஒரு‌ மாட்டுக்காரனை கல்யாணம் பண்ணிக்க முடியாது.."


"மாடுன்னா உனக்கு அவ்வளவு கேவலமா டீ.. நானும் மாட்டுக்காரன் பொண்ணு தான்.உன் அப்பாவும் ஒரு காலத்தில் மாடு வச்சு தொழில் செய்தவர் தான். அப்ப நீ யாருன்னு ஞாபகம் வச்சுக்கோ.."என்று கோவமாக கூறினார் பூந்தாழை.


தாய் சொன்தைக் கேட்டு தண்மதி எதுவும் பேசாமல் கல்லாக நின்றாள்.


தூயநாச்சி மருமகள் பேசியதை பார்த்து வாயடைத்து போனார். 'என்னமா பாயிண்ட்..பாயிண்டா பிச்சு வாங்குறா? என்னதான் இருந்தாலும், அவ என்னோட மருமகளாச்சே ! பேசறதுக்கு சொல்லியா கொடுக்க வேண்டும்..'என்று மருமகளை மனதிற்குள் மெச்சிக் கொண்டார்.


அருமைநாயகம் அதுவரை நடப்பதை இயலாமையுடன் வேடிக்கை பார்த்தவர் ஒரு நெடிய பெருமூச்சை விட்டபடி எழுந்து நின்றார்.


எல்லோரும் அவரை யோசனையுடன் பார்த்தனர்.


அவரோ தன் தொண்டையை செருமிக் கொண்டு.."செம்பியா அவர்கள் பேசியது தப்பு இல்லை.பிள்ளைகளின் திருமண முடிவை எடுக்க பெற்றவர்களுக்கே உரிமை இல்லாத போது, நான் பேத்தியின் திருமண முடிவு எடுத்தது தப்பு தான்.." என்றவரிடம்.


"அப்பா என்னப்பா இது! அப்படியெல்லாம் இல்லை.."என்ற மகனிடம்.


"கொஞ்சம் பொறுப்பா நான் பேசி முடிக்கிறேன்.. தணு சொன்னது போல் அவளை கேட்காமல், போட்டியில் அவளை பணையம் வைத்தது , நான் செய்த மிகப் பெரிய தவறு. அதற்காக உங்க எல்லோரிடமும் நான் மன்னிப்பு கேட்கிறேன்.." என்று அவர் கூறியதைக் கேட்டு எல்லோருமே பதறினார்கள்.


ஆனால், அவர் எதையும் பொருட்படுத்தாமல்.. "நான் செய்த தப்புக்கு ,நானே பிராயச்சித்தம் செய்கிறேன். ஊர் கூட்டத்தைக் கூட்டி இந்த கல்யாணம் நடக்காது என்று சொல்லி சீர்மதியனிடம் மன்னிப்பு கேட்கிறேன்.." என்று அவர் சொன்னதைக் கேட்டு துடித்துப் போன செம்பியன்.


"அப்பா என்ன வார்த்தை சொல்லிட்டீங்க..என் உடலில் உயிர் உள்ள வரை உங்களை நான் யாரிடமும் மன்னிப்பு கேட்க விடமாட்டேன்.நீங்க கொடுத்த வாக்கை கண்டிப்பா நான் காப்பாற்றுவேன்.என் பிள்ளைகளா இருந்தா? அவங்களும் காப்பாத்துவாங்க." என்று அவர் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே வெளியில் பெரிய சலசலப்பு கேட்டது.


ஆட்டத்தின் முடிவை காலத்தை தவிர யார் அறிவார்கள்?


நேசம் தொடரும்...
 

New Threads

Top Bottom