Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Maraadha nesam _9


மாறாத நேசம்!


அத்தியாயம் 9


தண்மதி அம்மனை வணங்கிவிட்டு கோவில் மண்டபத்தில் அமர்ந்து கொண்டு வருவோர்,போவோரை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.



அப்போது அவளின் எண்ணத்தின் நாயகனே கோவிலுக்குள் தன் வேக நடையுடன் வந்து கொண்டிருந்தான்.


அதை பார்த்தும் அவள் மனதிற்குள் இனம் புரியாத பயம் வந்து ஒட்டிக் கொண்டது.


சீர்மதியன் யாரையும் கவனிக்காமல் நேராக சென்று சாமி தரிசனம் செய்தான்.


தண்மதி அவளை அறியாமலேயே அவனையே பார்த்துக் கொண்டு இருந்தாள்.


தன்னை ஒருத்தி காண்பதை அறியாமல் சீர்மதியன் கண்களை மூடி தன் வேண்டுதலை கடவுளிடம் பட்டியலிட்டுக் கொண்டிருந்தான். தன்னை மறந்து மனம் ஒன்றி அம்மனை வணங்கினான்.


தண்மதி வியப்பாக அவனையே பார்த்துக் கொண்டு இருந்தாள்.


அவனின் முகத்தில் முதல் முதலாக அமைதியை பார்க்கிறாள். அவளைப் பார்க்கும் போதெல்லாம் நக்கல் , நையாண்டி தனத்தையே பார்த்திருந்தவள் , இன்று அந்த முகத்தில் குடி கொண்டிருந்த அமைதி அவளை வியக்கச் செய்தது.


சீர்மதியன் தெய்வத்தை வணங்கி விட்டு பூசாரி கொடுத்த திருநீற்றை எடுத்து ஒற்றை கீத்தாக நெற்றியில் வைத்துக் கொண்டு வெளியில் வந்தான்.


அவனை தாண்டி அப்போது இளம் பெண்கள் நான்கைந்து பேர் கோவிலுக்குள் சென்றனர்.ஆனால் சீர்மதியன் அவர்களை நிமிர்ந்து கூட பார்க்காமல் அவர்களை கடந்தான்.


தண்மதி இத்தனை நாள் இல்லாமல் அன்று அவனையே விழி எடுக்காமல் பார்த்தாள்.ஏனோ அன்று அவன்‌ அவளுக்கு புதிதாக தெரிந்தான்.


ஆனாலும் அவள்‌ மனதிற்குள்‌ குழப்பம் தீரவேயில்லை..எதைத் தேடி கோவில் வந்தாளோ! அது சுத்தமாக அவளுக்கு கிடைக்கவில்லை. கோவிலை சுற்றி விட்டு வீட்டிற்குச் செல்லலாம் என்று நினைத்து நடந்தாள்.


தண்மதியின் கவனம் பாதையில் இல்லாததால் வழியில் கிடந்த வாழைப்பழத் தோலில் தெரியாமல் காலை வைக்கவும் கால் வழுக்கி கீழே விழுப் போனாள்.

அப்போது காக்கும் கடவுளாக அவளை அரணாக இருகரம் தாங்கியது.


அந்த கரங்களை தன்னையறியாமல் இறுகப் பற்றி தன்னைச் சமன்ப்படுத்திக் கொண்டு கரங்களின் சொந்தக்காரன் யார் என்று நிமிர்ந்து பார்த்தாள்.



அங்கே தன் எண்ணத்தின் நாயகனைப் பார்த்ததும் திகைப்பில் விழி எடுக்காது சீர்மதியனைப் பார்த்தபடி நின்றாள்.



சீர்மதியனுக்கும் அது தண்மதி என்று தெரியாது.அவனும் யோசனையுடனே தான் கோயிலை சுற்றி வலம் வந்தான்.



எதார்த்தமாக சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே நடந்தான். அப்போது தன் முன்னால் சென்ற பெண்ணைப் பார்த்தவன் தண்மதி போல் இருக்கே என்று அவன் நினைத்துக் கொண்டு இருக்கும் போதே அவள் பாதையில் கிடந்த வாழைப்பழத்தோலை கவனிக்காமல் கால்களை அதன் மீது வைத்தாள்.


பின்னால் வந்த சீர்மதியனோ ஓடிப்போய் அவள் கீழே விழாமல் பிடித்தான்.அவன் நினைத்தது போல் அது தண்மதி தான்.


அவளைப் பார்த்ததும் அவன் முகம் பூவாய் மலர்ந்தது.தண்மதியோ திகைத்து விழித்தாள்.தன்னை சமநிலைப்படுத்திக் கொண்டு மெதுவாக அவனிடமிருந்து விலகினாள்.


சீர்மதியனும் சட்டென்று தன் மலர்ந்த முகத்தை சரிசெய்து கொண்டு அவளை விடுவித்தான்.


தண்மதி எதுவும் கூறாமல் அவனிடமிருந்து விலகி நடக்க ஆரம்பிக்கும் போது ,"பார்த்துப் போ.."என்று மட்டும் கூறியவன் ,வேகமாக அவளுக்கு முன் கோவிலிருந்து வெளியேறினான்.


தண்மதி கோவிலுக்கு வெளியில் வரும் போது சரியாக வழுதியும் வந்துவிட்டான்.வீடு வரை அண்ணனிடம் அவளும் எதுவும் பேசாமலேயே வந்தாள்.



வழுதிக்கு தங்கையின் அமைதியை பொறுக்க முடியவில்லை. என்ன தான் தந்தை அடித்ததில் கோவம் இருந்தாலும் எதிலும் கலந்து கொள்ளாமல் இருந்தாலும் இது தங்கையின் வாழ்க்கை பிரச்சினை ஆயிற்றே அதனால் அதற்கு மேல் அவனால் அமைதியாக இருக்க முடியவில்லை.


."தணு உன் முகமே சரியில்லையே ..என்ன முடிவு எடுத்து இருக்கே ?அதையே நினைத்து குழம்பிட்டு இருக்கீயா.."என்று கேட்டான்.


"அப்படி எல்லாம் இல்லைன்னா நான் நார்மலாகத் தான் இருக்கேன்.என்னால் இன்னும் முடிவெடுக்க முடியலை.." என்றவுடன் வண்டியை வேகமாக நிறுத்தினான்.


"என்னாச்சுண்ணா ஏன் வண்டியை நிறுத்துனீங்க.."என்று கேட்ட தங்கையிடம்,


"தணு ஒரு நிமிடம் இறங்கு ..நான் உங்கிட்ட கொஞ்சம் பேசணும்.." என்றான்.


அவள் வண்டியை விட்டு இறங்கியவுடன் .. "தணு இதில் முடிவெடுக்க எதுவுமில்லை..நீ வேண்டாமென்று உறுதியாக சொல்லிவிடு !உனக்கேத்த மாதிரி மாப்பிள்ளையை நான் கூட்டிட்டு வரேன்.."


"அண்ணா .. நீங்க என்ன பத்தி மட்டும் நினைக்கிறீங்க.. தாத்தா, அப்பாவைப் பற்றி யோசிச்சீங்களா.."


"அவுங்களைப் பத்தி யோசிக்க என்ன இருக்கிறது.இது உன் வாழ்க்கை! வாழப் போறது நீ தான்! அவுங்க சந்தோஷத்திற்காக உன்னை பலிகடா ஆக்க என்னால் முடியாது..அது தான் அப்பா உன் விருப்பப்படி விட்டுட்டாறே.."


"அண்ணா நீங்க ஒன்றை கவனிதீங்களா.. அப்பா நம்ம விருப்பத்துக்கு இது வரை தடை சொன்னதே இல்லை..ஆனால் நீங்க தாத்தாவை எதிர்த்து பேசியதற்கு மட்டும் உங்களை அப்பா அடிக்கவில்லை.. "என்றவள் பேச்சை நிறுத்தி தமையனை பார்த்தாள்.


வழுதி தங்கை முகத்தையே பார்த்தபடி , "வேறு என்ன காரணம்?"


"அண்ணா அப்பாவுக்கும் இந்த கல்யாணத்தில் ரொம்ப விருப்பம். கல்யாணம் எப்படியாவது நடக்கனும்ன்னு நினைக்கிறார்.."


"ம்..! எனக்கும் அந்த சந்தேகம் வந்தது. அப்பாவுக்கு தங்கச்சி பையன்னு பாசம்.அதுக்காக அந்த மாட்டுக்கார பயலுக்கு உன்னை கொடுக்க முடியுமா..?அவன் சரியான முரடனாச்சேம்மா.."


"எனக்கு ஒண்ணுமே புரியலைண்ணா..என் தலையெழுத்துப் படி என்ன நடக்கனுமோ அது நடக்கட்டும்.."என்று சலிப்பாக கூறினாள்.


"தணு நான் சொல்வதைக் கேளு..நீ அப்பாகிட்ட இந்த கல்யாணத்தில் விருப்பமிலலைன்னு சொல்லு மத்ததை நான் பார்த்துக்கிறேன்.."


"அண்ணா என்னால் அப்பா முகத்தை பார்த்து அப்படிச் சொல்ல முடியாது.என் தலையில் என்ன எழுதியிருக்கோ அதன் படியே நடக்கட்டும்‌.நீ வண்டியை எடு சீக்கிரம் வீட்டுக்கு போகலாம்..அம்மா தேடுவாங்க.." என்றபடி வண்டியில் ஏறி உட்கார்ந்தாள்.


என்ன தான் தன் அண்ணனிடம் பிடி கொடுத்து பேசாமல் போனாலும் ,அவள் அடி மனதிற்குள் சூறாவளி அடித்துக் கொண்டே தான் இருந்தது.


சீர்மதியன் மட்டும் காளையை அடக்கினால் பொண்ணை தரவேண்டுமென்று கேட்காமல் இருந்திருந்தால் அவளுக்கு இத்தனை பிரச்சினை வந்திருக்காதே.. !


எல்லாம் அவனால் வந்தது.என்று எண்ணியவளுக்கு அவன் கோவிலில் தன்னை விழுகாமல் தொட்டு பிடித்ததும் ,அவன் முகத்தில் தெரிந்த மலர்ச்சியும்‌ ஞாபகத்தில் வந்தது.


தன்னை இப்படி ஒரு இக்கட்டான நிலையில் நிறுத்தியவனை என்ன செய்தால் தகும் என்று எண்ணியவளுக்கு, உடனே மனதில் ஓர் எண்ணம் உதயமானது.அடுத்த நொடி அவள் முகமும் பூவாக மலர்ந்தது.


வீட்டிற்கு சென்றவுடன் நேராக தன் தந்தையை தேடிச் சென்று திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தாள்.


செம்பியனோ மகளின் முடிவில் மகிழ்ந்தவர் .மகளை அணைத்து உச்சி முகர்ந்தார்.தண்மதி தந்தையின் பாசத்தில் கட்டுண்டு அசையாமல் நின்றாள்.


மகளின் எண்ணம் தெரியாமல் .." இப்பத்தாம்மா எனக்கு நிம்மதியே வந்தது.உன் மனசுக்கு நீ நல்லா இருப்பே.." என்று‌ மகளை வாழ்த்தினார்.


அதன் பிறகு நடந்த நிகழ்வுகள் கனவில் நடப்பது போல் வேகமாக நடந்தது.


கோவழகன் குடும்பத்திற்கு தண்மதி திருமணத்திற்கு சம்மதித்து மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. சூட்டோடு சூடாக நிச்சயத்தை மட்டும் உடனடியாக முடித்து விட்டு திருமணத்தை முல்லையின் பிரசவத்திற்கு பின் வைத்துக் கொள்ளலாம் எனறு முடிவெடுத்தனர்.


இரு குடும்பங்களுக்குமே அது சரியென்றே‌ பட்டது. முல்லை கருத்தரித்திருப்பதால் கல்யாணச் சடங்குகள் செய்ய முடியாது, என்பதால் அவள் நல்ல படியாக பிள்ளையை பெற்றெடுக்கட்டும் என்றே நினைத்தனர்.


சீர்மதியன் மனதிற்குள் அளவுகடந்த மகிழ்ச்சியில் திளைத்தான். தண்மதி சம்மதித்து விட்டாள் என்ற செய்தியே அவனை எல்லையில்லா ஆனந்தத்தில் ஆழ்த்தியது.


தான் விரும்பியவளையே மணம் முடிக்க போகிறோமென்ற ஆனந்தம் அவன் முகத்தில் தாண்டவமாடியது.


அருமைநாயகமும் ,பேரன் முறைவழுதியும் எதிலும் கலந்து கொள்ளாமல் தனித்து நின்றனர்.


நிச்சயம் கோவிலில் வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்து இருந்ததால் இரு வீட்டாரும் இதுவரை சம்பந்தியாக யார் வீட்டிற்கும் செல்லவில்லை.


தண்மதி தனக்கும் திருமணத்திற்கும் சம்மந்தமே இல்லாத போல் பெரியவர்கள் சொன்னதை மட்டும் கடனேவென்று செய்தாள்.


நிச்சயம் எளிமையாக நடந்து முடிந்தது. நிச்சயத்திற்கு பிறகு சீர்மதியனை எதர்ச்சையாக வெளியில் எங்காவது பார்த்தால் தான் அவளுக்கு தர்மசங்கடமாக இருக்கும்.


அவனின் உரிமையான பார்வையை தவிர்க்க முடியாமல் தடுமாறுவாள். எங்கே தனது முகம் எதையாவது காட்டிக் கொடுத்துவிடுமோ என்று மிகுந்த கவனமாகவே இருப்பாள்.


சீர்மதியன் முன்பு இருந்தது போல் அவளிடம் வம்பு வளர்க்காமல் இப்போது அமைதியாகவே போய்விடுவான்.அவளைப் பார்த்தாலே போதும் என்று‌ நினைத்தான்.


நாட்கள் வேகமாக நகர்ந்தது. தூய முல்லைக்கு வீட்டளவுக்கு வளைகாப்பு நடத்தலாம் என்று எண்ணி நாள் குறித்தனர்.


தன் தாய் வீட்டை கட்டாயம் அழைக்க வேண்டுமென்று கணவனிடம் பொன்மணி சொல்லி இருந்தார்.அவரும் அதற்கு மறுப்பு ஏதும் சொல்லவில்லை.


தண்மதிக்கு பட்டுப் புடவை எடுத்துக் கொண்டு, தாய் வீட்டாரை வளைகாப்புக்கு அழைக்க பொன்மணியும் கோவழகனும் சென்றார்கள்.


திருமணமாகி பல வருடங்கள் கழித்து தாய் வீட்டிற்குள் அடியெடுத்து வைத்த பொன்மணியை அருமைநாயகத்தை தவிர அனைவருமே மகிழ்ச்சியுடன் வரவேற்றர்கள்.


வழுதி பெயருக்கு "வாங்க..!" என்றதுடன் முடித்துக்கொண்டான்.

தண்மதி திருமணம் நிச்சயமான பெண் என்ற முறையில் தயக்கத்துடன் வரவேற்றாள்.பொன்மணி கொடுத்த புடவையை பெற்றுக் கொள்ள தயங்கியவளிடம் தூயநாச்சி தான் வற்புறுத்தி பெற்றுக் கொள்ளச் செய்தார்.


கோவழகனும், செம்பியனும் இயல்பாக பேச முடியாமல் தர்மசங்கடத்துடனேயே மணித்துளிகளை கடத்தினார்கள். அருமைநாயகம் வேலை இருப்பதாக கூறிவிட்டு வெளியில் கிளம்பித் தயாரானார்.


தந்தை வெளில் செல்வதற்குள் அவரை அழைக்கவேண்டுமே என்று நினைத்து மிகுந்த தயக்கத்துடன்அருமைநாயகத்தை வளைகாப்புக்கு அழைத்தனர்.


அவரோ தலையை மட்டும் ஆட்டி விட்டு வெளியில் சென்று விட்டார்.நாச்சி தான் வற்புறுத்தி அவர்களை இருக்கச் சொல்லி சாப்பிட வைத்தே அனுப்பினார்.


செந்தாழையோ உறவுமில்லை..பகையுமில்லை என்பதைப் போல் நடந்து கொண்டார்.


அனைவரிடத்திலும் நல்லுறவு ஏற்படாவிட்டாலும் வருங்காலத்தில் உறவு மேம்பட இந்த சந்திப்பு உறுதுணையாக இருக்கும் என்று எண்ணினார்கள்.


வளைகாப்பு நாளும் வந்தது. அருமைநாயகம்,தண்மதியை தவிர அனைவரும் வந்து கலந்து கொண்டனர்..வழுதிக்கு விருப்பமில்லாவிட்டாலும் தன் தந்தைக்காக வந்தான்.


அருமை நாயகம் வராதது கோவழகனுக்கு மிகுந்த வருத்தத்தை தந்தது. இருந்த போதும் அதைக் காட்டிக் கொள்ளாமல் வந்தவர்களை இன்முகமாக வரவேற்று உபசரித்தார்.


சீர்மதியனுக்கு மட்டும் தண்மதி வராதது சிறுவருத்தமே.. நிச்சயமான பெண் என்பதால் அழைத்து வரவில்லை என்று காரணம் சொன்னார்கள்.


கனியமுதன் வழுதியிடம் வலுக்கட்டாயமாக பேசினான்.ஆனால் வழுதியோ கேட்ட கேள்விக்கு மட்டுமே பதில் சொன்னான்.அவனுக்கு அங்கே இருப்பது முள்ளின் மேல் நிற்பதைப் போல் சங்கடத்தை கொடுத்தது.


சீர்மதியனும், வழுதியும்‌ பேசிக் கொள்ளவே இல்லை..சின்ன தலையசப்புடன் நிறுத்திக் கொண்டார்கள்.



வளைகாப்பு நல்ல படியாக முடிந்த பின் இரு குடும்பமும் திருமண விசயங்களை பேசிக் கொண்டு இருந்தனர்.


தூயமுல்லைக்கு பிரசவம் முடிந்த பின் வரும் முதல் மூகூர்த்தத்தில் திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்தனர்.


சீர்மதியனுக்கு அதன் பின் வந்த நாள்கள் நத்தையாக நகர்ந்தது போல் இருந்தது.தண்மதியையும் பார்க்க முடியவில்லை.


எதிலும் ஆர்வமில்லாமலே நாள்களை நகர்த்தினான். எல்லாவற்றிக்கும் முடிவு உண்டு அல்லவா..!அது போல் அதன் பின் வந்த நாள்கள் அவனுக்கு மகிழ்ச்சியை கொடுப்பதைப் போல் நடந்தது.


தூயமுல்லை அழகான ஆண்குழந்தையை பெற்றெடுத்தாள்.தாயும் சேயும் நலமாக வீடு வந்து சேர்ந்தனர்.


விசயத்தை கேள்விப்பட்ட அருமைநாயகம் குடும்பத்தாரில் தூயநாச்சி தன் மகன் மருமகளுடன் வந்து குழந்தையை பார்த்துவிட்டு நலம் விசாரித்து சென்றனர்.


தூயமுல்லை கொஞ்சம் தேறி வந்ததும்.முடிவு செய்த படி முதல் முகூர்த்தத்தில் திருமண ஏற்பாடுகளை செய்தனர்.


விதி போடும் முடிச்சை யார் மாற்ற முடியும்.


நேசம் தொடரும்..

 

New Threads

Top Bottom