மாறாத நேசம் !
அத்தியாயம் 10
திருமண ஏற்பாடுகள் இனிதே ஒரு புறம் நடந்து கொண்டிருந்தது.
சீர்மதியன் நேசித்தவளையே மணக்க போகும் மகிழ்ச்சியில் விடலைப் பையனைப் போல வளைய வந்தான்.
தண்மதிக்கு தன்னை இப்போது பிடிக்காவிட்டாலும் கூட திருமணத்திற்கு பின்பு தன் அன்பால் அவளை மாற்றிவிடலாம் என்ற நம்பிக்கையில் இருந்தான்.
தண்மதி தனக்கு தான் திருமணம் என்ற எண்ணமே இல்லாமல் எதிலும் ஒட்டுதல் இல்லாமல் மனதிற்குள் யோசனையுடனேயே சுற்றிக் கொண்டு இருநதாள்.
அருமைநாயகத்தை தவிர அனைவருமே திருமண ஏற்பாட்டில் தங்களை புகுத்திக் கொண்டனர்.வழுதியோ தந்தைக்காக தங்கையின் திருமணம் பிடிக்காவிட்டாலும் திருமண வேலைகளை மகிழ்ச்சி இல்லாமல் செய்தான்.
காலமும் நேரமும் யாருக்காகவும் காத்திருக்காமல் எதிர்பார்த்த திருமண நாளும் வந்தது.
ஊரே மெச்சும் படி திருமணம் வெகு விமரிசையாகக் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சீர்மதியன் பட்டு வேஷ்டி சட்டையில் அளவில்லா ஆனந்தத்துடன் மணமேடையில் தன்னவளை எதிர்பார்த்து அமர்ந்திருந்தான்.
தண்மதி அழகு பதுமையாக பட்டுச்சேலை சர.. சரக்க முகத்தில் கடுகளவு மகிழ்ச்சி கூட இல்லாமல் மணமேடை வந்தமர்ந்தாள்.
சீர்மதியன் தன் அருகில் அழகு தேவதையாக அமர்ந்திருந்தவளை ஓரக் கண்ணால் ரசித்தபடியே திருமண சடங்குகளை செய்து கொண்டிருந்தான்.
இருவரின் பெற்றவர்களும் வாசலில் நின்று திருமணத்திற்கு வருவோரை ஆனந்தமாக வரவேற்றுக் கொண்டு இருந்தனர்.
தூயநாச்சி மணமேடையில் கொட்டி வைக்க இடமில்லா மகிழ்ச்சியுடன் நின்று கொண்டு மணமக்களுக்கு திருமண சடங்குகளை செய்வதற்கு சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார்.
அருமை நாயகம் தனக்கும் திருமணத்திற்கும் சம்பந்தமே இல்லாதது போல் முதல் வரிசையில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.
தூயமுல்லை குழந்தைகளை கணவனிடம் ஒப்படைத்து விட்டு தன் பாட்டியுடன் மணமேடையில் நின்றிருந்தாள்.
தமிழ் முறைப்படி தான் திருமண சடங்குகள் நடந்து கொண்டிருந்தது.முகூர்த்த நேரம் வந்தவுடன் சீர்மதியன் தன் தத்தா அருமைநாயகத்தையும்,பாட்டி தூயநாச்சியையும் மாங்கல்யத்தை எடுத்து தரச் சொன்னான்.
அருமைநாயகத்துக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை ..சீர்மதியன் இப்படி ஒரு இக்கட்டான நிலையில் தன்னை நிறுத்துவான் என்று அவர் யோசிக்கவே இல்லை.
வேண்டா வெறுப்பாக அமர்ந்து இருந்தவர். இப்போது வழி இல்லாமல் மணமேடை ஏறினார்.
மனைவியுடன் முழுமனதுடன் தன் பேத்தி நன்றாக வாழவேண்டும் என்று எண்ணி மாங்கல்யத்தை சீர்மதியன் கையில் கொடுத்தார்.
சீர்மதியன் மகிழ்ச்சியுடன் மாங்கல்யத்தை வாங்கினான். ஒரு நிமிடம் தன் கண்களை மூடி மனதிற்குள் தங்கள் வாழ்வு செழிக்க வேண்டுமென வேண்டிக் கொண்டு தன் அருகில் அமர்ந்திருந்த தண்மதியின் கழுத்தில் அணிவித்தான்.
தூய முல்லை நாத்தனாராக மூன்றாவது முடிச்சிட்டாள். மனதார தன் தமையனின் வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டுமென்று வாழ்த்தினாள்.
மணமக்களின் பெற்றவர்களோ மணமக்களை 'ஆல் போல் தழைத்து! அருகு போல் வேரூன்றி! மூங்கில் போல் சுற்றம் சூழ்ந்து !வாழையடி வாழையென பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க!' என புதுமண தம்பதிகளை மனதார வாழ்த்தி ஆசிர்வதித்தனர்.
அதிலும் சீர்மதியன் அருமைநாயகத்தையும்,தூயாநாச்சியையும் முன்நிறுத்தி ஆசிர்வாதம் வாங்கியது அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது.
திருமண சடங்குகள் ஒருவாறு முடிந்தவுடன் மணமக்கள் இருவீட்டுக்கும் சென்று பாலும் பழமும் உண்டு வந்தனர்.
நேரம் செல்ல செல்ல தண்மதியின் மனம் கலங்கிக் தவித்தது.சீர்மதியனின் வீடு அவளுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.
தன் வீட்டோடு ஒப்பிடுகையில் அவன் வீடு மாட்டு கொட்டகை போல் இருந்தது.
எப்படி தான் அந்த வீட்டில் வாழ்வது..?அதுவும் தனக்கு சுத்தமாக பிடிக்காத அவனுடன் வாழ முடியுமா?அவசரப்பட்டு இந்த திருமணத்திற்கு சம்மதித்து விட்டோமோ.?தன் அண்ணன் சொன்னது போல் யோசித்து முடிவு செய்து இருக்கலாமா? என்றெல்லாம் எண்ணி தவித்தாள்.
சீர்மதியன் தன் மனைவியின் மனத்தவிப்பு தெரியாமல் தான் மனதார நேதித்தவளையே மணந்து கொண்ட மகிழ்ச்சியில் வளைய வந்தான்.
பொன்மணி தன் அண்ணன் மகளே தனக்கு மருமகளாக வந்த ஆனந்ததில் மிதந்தாள்.
கோவழகன் தன்னால் பிரிந்த குடும்பம் தன் மகனால் ஒன்று சேர்ந்ததில் நிம்மதி அடைந்தார்.
மாலை நெருங்க நெருங்க தண்மதி மனதிற்குள் சொல்ல முடியாத தவிப்பில் இருந்தாள். அவள் எதிர்பார்த்த நேரமும் வந்தது.தன் குடும்பத்தாரை பிரியும் நேரத்தில் முழுதும் உடைந்து போனாள்.
தான் தாயை அணைத்துக் கொண்டு அழுது கரைந்தாள். மனதில் இருந்த வேதனை கண்ணீராக வடிந்தது. பெற்றவளோ, மகளின் கண்ணீரைக் கண்டு துக்கத்தில் செய்வதறியாது தவித்தாள்.
தூய்நாச்சி தான் எப்போதும் போல் அதட்டி உருட்டி புத்தி சொல்லி தண்மதியை அனுப்பிவைத்தார்.
"கடல்கடந்தா அவ போறா.?அடுத்த தெரு தானே! நினைச்சா போய் பார்த்துக்கலாம்.. அதுக்கு எதுக்கு கண்ண கசக்கிட்டு இருக்கே? போய் ஆக வேண்டிய வேலையை பார் .."என்று மருமகளை சமாதானப்படுத்தினார்.
தண்மதி சுமக்க முடியாத வேதனையுடன் தன் பிறந்த வீட்டு ஆட்களை திரும்பி..திரும்பி பார்த்த படியே காரில் ஏறினாள்.
சீர்மதியன் வீடுவரும் வரை தன்னிலை மறந்து அமர்ந்திருந்தாள்.
பொன்மணியோ, மணமக்கள் வந்தததும் வாசலிலேயே நிற்க வைத்து ஆழம் சுற்றி திரிஷ்டி கழித்தார்.
தண்மதி மனதிற்குள் சொல்ல முடியாத வெறுப்புடன் தன் புகுந்த வீட்டிற்குள் அடி எடுத்து வைத்தாள்.
சீர்மதியன் மனைவியின் மனம் தெரியாமல் தன் வாழ்வை பற்றிய கனவுடன் வீட்டிற்குள் சென்றான்.
தூய முல்லையும் பொன்மணியும் இரவு உணவை சமைத்தனர்..கோவழகனும் கனியமுதனும் திருமண வரவுசெலவு கணக்கு பார்த்துக் கொண்டு இருந்தனர்.
சீர்மதியன் தன் அக்கா குழந்தைகளை மடியில் வைத்து விளையாடிய படியே மனைவியை ரசித்துக் கொண்டு இருந்தான்.
அவளோ நெருப்பின் மேல் நிற்பது போல் அமர்ந்திருந்தாள்.அவளால் எதிலும் ஒன்ற முடியவில்லை.மனம் தன் பிறந்த வீட்டையே எண்ணி ஏங்கியது.
அவர்கள் வீட்டில் உள்ள எந்த வசதியும் இங்கு இல்லை ..இங்குள்ள யாருடனும் மனம் ஒன்றவும் இல்லை.மற்றதெல்லாம் விட இன்னும் சற்று நேரத்தில் அவனுடன் தனிமையில் இருக்க வேண்டும் என்று நினைத்தாலே அவளுக்கு வயிற்றில் புளியை கரைத்தது.
'அவன் என்ன செய்யவானோ? தன்னிடம் முரட்டு தனமாக நடப்பனா?குத்திக்காட்டி பேசுவானோ ?அவன் பார்வையே சரியில்லையே' என்றெல்லாம் எண்ணி மனதிற்குள்ளே தவித்தாள்.
பொன்மணி சமைத்து முடித்ததும் புதுமண தம்பதியை அருகருகே அமர வைத்து உணவை பரிமாறினார்.உணவு பாதார்த்தங்கள் தண்மதி க்கு பிடித்த உணவாகவே இருந்தது.
சீர்மதியனுக்கு சமையல் பாதார்தங்களை பார்த்த உடனே புரிந்து விட்டது.தன் தாய் மருமகளுக்கு பிடித்ததையே செய்து இருக்கார் என்று.
தண்மதி தனக்கு பிடித்த உணவாக இருந்தாலும் பெயரளவே சாப்பிட்டாள்.நேரத்தை நெட்டித் தள்ளினாள்.
அவள் பயந்த நேரமும் வந்தது.அவள் கையில் தூய முல்லை பால் சொம்பை கொடுத்து அவள் மாலை தங்கி இருந்த அறைக்கு அனுப்பி வைத்தாள்.
தண்மதி தயக்கத்துடன் மூடி இருந்த அறைக் கதவை திறந்து கொண்டு சென்றாள்.நல்ல வேளை அறையில் எந்த அலங்காரமும் இல்லாமல் மிக எளிமையாக இருந்தது.அதுவே அவளுக்கு மிகுந்த நிம்மதியை கொடுத்தது.
சீர்மதியனின் ஏற்பாடு தான் அந்த அறையின் எளிமைக்கு காரணம் என்று அவளுக்கு அப்போது தெரியாது. பால் சொம்பை அருகில் இருந்த மேஜை மீது வைத்து விட்டு வந்து படுக்கையில் அமர்ந்தாள்.மனமோ சுனாமியாய் சுழன்றது.
சீர்மதியன் சிறிது நேரத்தில் யோசனையுடனேயே உள்ளே வந்தான்.அவன் மனமும் நிலையில்லாமல் தவித்தது.
தண்மதி பெரியவர்களுக்காகத் தான் தன்னை மணந்தால் என்று அவனுக்கு நன்கு புரிந்தது.அதனாலேயே தன் வாழ்க்கையை அவள் மனம் தன்னை கணவனாக ஏற்கும் வரை தொடங்க வேண்டாம் என்ற முடிவுடன் தான், அறையில் எந்த அலங்காரமும் வேண்டாம் என்று உறுதியாக சொல்லியிருந்தான்.
இரு மனமும் இணைந்த பின்னரே தங்கள் வாழ்க்கையை தொடங்க வேண்டும் என்று நினைத்தான்.
சீர்மதியன் வரும் ஆரவாரம் தண்மதியின் மனதற்குள் தண்டவாளம் இல்லாமல் ரயில் ஓடுவதைப் போல் படபடத்தது.
அவனைப் பார்த்ததும் தன்னை அறியாமல் எழுந்து நின்றாள்.
அவனோ ,"வெகு இயல்பாக நீ இன்னும் தூங்கலையா..? இன்னைக்கு நல்ல அசதியாக இருக்கும் அதனால் தூங்கி இருப்பேன்னு நினைச்சேன்..நீ தூங்கு.." என்றவன் அறையின் ஓரத்தில் இருந்த பாய்யை எடுத்து விரித்தான்.
தண்மதி அவன் ஏதோ வேறு மொழி பேசியதைப் போல் கண்கள் விரிய பேந்த பேந்த விழித்த படி நின்றாள்.
அவனோ, கட்டில் மேல் கிடந்த ஒரு தலையணையையும்,போர்வையையும் எடுத்து கீழே போட்டு விட்டு, விளக்கை அணைத்து விட்டு வந்து கண்களை மூடி படுத்துக் கொண்டான்.
தண்மதி என்ன செய்வதென்று தெரியாமல் சிறிது நேரம் அப்படியே அசையாமல் நின்றாள்.
அவளுக்கு அவனை பற்றிய சிந்தனையே மேலோங்கி இருந்தது.தான் ஒன்று நினைத்து வந்தால் இங்கே ஒன்று நடக்கிறது.
அவன் தன்னை ஏதாவது சொன்னால்..வார்த்தைகளால் கொல்லாமல் என்று எண்ணி இருந்தவளுக்கு அவனின் செயல் புரியாத புதிராக இருந்தது.
ஏதாவது பேசினால் பேசலாம் .இப்படி பேசாமல் படுத்து இருப்பவனிடம் என்ன சண்டை இட முடியும்.அவளும் வேறு வழி இல்லாமல் படுக்கையில் படுத்தாள்.
அவள் மனமோ கணவனைப் பற்றியே சிந்தித்தது. இவன் என்ன மாதிரி ஆள்..!உரிமை இல்லாத பொழுது பார்க்கும் பொழுதெல்லாம் வம்பு இழுத்தவன்.இன்று உரிமை வந்த பின் இவ்வளவு அமைதியாக இருக்கானே!
ஒருவேளை நம்மைப் போல் அவனுக்கும் என்னை பிடிக்க வில்லையா..?தாத்தாவை பழி வாங்க திருமணம் செய்தானா?அப்படி இருந்தால் அன்று கோவிலில் என்னை பார்த்த போது அவன் கண்களும் முகமும் ஏன் மலர்ந்தது.
ஒன்றுமே புரியவில்லையே..
அவன் வீட்டில் கொஞ்சம் கூட கவுரவம் பார்க்காமல் கீழே படுத்து இருக்கிறான்.அது மட்டுமின்றி தனக்கு சீதனமாக வாங்கி கொடுத்த எதையுமே வேண்டாம் என்று உறுதியாக மறுத்தும் விட்டானே.
'இவன் எப்படி பட்டவன் .தன்னை இக்கட்டான சூழ்நிலையில் நிறுத்தி எதற்கு திருமணம் புரிந்தான். இவனும் இவன் தந்தையை போல் நல்ல குணம் உடையவனா? இவனின் உண்மையான குணம் தான் என்ன..?'என்று தன் நித்திரையை தொலைத்து விட்டு கணவனை பற்றிய சிந்தனையில் ஆழ்ந்தாள்.
கீழே படுத்து இருந்தவனோ கண்களை மட்டும் தான் மூடி இருந்தான்.மனம் முழுவதும் தன் மனைவியை பற்றிய சிந்தனையில் தான் உழன்றது.
அவளுக்கு என்றாவது ஒரு நாள் தன்னை பிடிக்குமா..? தன்னை புரிந்து கொண்டு தன்னுடன் மகிழ்ச்சியாக வாழ்வாளா? என்ற கேள்வி அவன் மனதை துளைத்தது.
இரண்டு உயிர்களும் தங்கள் துணையைப் பற்றிய சிந்தனையிலேயே தங்கள் நித்திரையை தொலைததார்கள்.நடுநிசிக்கு மேல் தான் உறக்கத்தை தழுவினார்கள்.
எப்போதும் போல் சீர்மதியன் அதிகாலை எழுந்து விட்டான்.தூக்க கலக்கத்தில் எழுந்து அமர்ந்தவன், கீழே பாய்யில் தான் படுத்து இருப்பதை கண்டு ஒரு நொடி குழம்பியவனுக்கு, சட்டென்று உண்மை உரைக்க திரும்பி படுக்கையைப் பார்த்தான்.
அவளின் மணையாளோ, ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்.அவளிடம் எழுந்து சென்று நின்றவன்,விடி விளக்கின் வெளிச்சத்தில் அவளின் மாசு மருவற்ற முகத்தை சிறிது நேரம் கண்கொட்டாமல் பார்த்து ரசித்தான்.
அவள் முகத்தில் விழுந்து கிடந்த முடிகளை தயக்கத்துடன் விரல்களால் மென்மையாக ஒதுக்கி விட்டான்.அவன் விரல்களின் ஸ்பரிசம் பட்டவுடன் அவளிடம் சிறு அசைவு தெரிந்தது.
உடனே தன் விரல்களை பின்னுக்கு இழுத்துக் கொண்டான்.விழிகளோ அவளின் முகத்தை விட்டு விலக மறுத்தது.
தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு அவளிடம் இருந்து அகன்று கதவை திறந்து கொண்டு வெளியில் சென்றான்.
வீட்டில் உள்ளவர்கள் எல்லாம் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர்.சீர்மதியனோ சிறிதும் சலுப்பு பார்க்காமல் தன்னுடைய பால் பண்ணைக்குச் சென்றான்.
நேசம் தொடரும்..