மாறாத நேசம்!
அத்தியாயம் 13
சீர்மதியன் சொன்னதைக் கேட்டு பெரியவர்கள் திகைப்பில் ஒரு நொடி பேச்சிழந்து போனார்கள். முதலில் தூயநாச்சி தான் பேரன் கொடுத்த இடியிலிருந்து மீண்டார்.
"சீரா என்னப்பா இது ! வெண்ணெய் திரண்டு வரும் போது தாழியை உடைத்த கதையா இப்படி சொல்லறே.. இப்ப தான் எல்லாம் சரியாகிவிட்டதுன்னு நிம்மதியா இருந்தேன் அது உனக்கு பொறுக்கலையா.."
"பாட்டி எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு..அது தான் சொன்னேன்.."
"என்ன வேலையாக இருந்தாலும் நீ வந்துட்டு அங்கிருந்து போ .. பண்ணை என்ன அசலூரிலா இருக்கு .."என்றார் கோபமாக.
அதுவரை தன் தாய் பேசுவதை அமைதியாக பார்த்துக் கொண்டு இருந்த செம்பியன் , "மாப்பிள்ளை இதுவும் ஒரு சடங்கு..தம்பதிகளாகத் தான் மறுவீட்டுக்கு வர வேண்டும்.. நீங்கள் அங்கே வந்து ஒரு வாய் சாப்பிட்டு விட்டு எங்கு வேணாலும் போயிட்டு வாங்க.." என்று தன்மையாக சொன்னார்.
முறை வழுதியோ, சீர்மதியன் மீது வந்த அளவற்ற கோபத்தை கை முஷ்டி இறுக கட்டுப்படுத்திக் கொண்டு நின்றான்.எங்கே தான் ஏதாவது பேசி அது கைக்கலப்பில் முடிந்து விடக்கூடாதே என்ற யோசனையில் பேச்சற்று நின்றான்.
மகனின் செயலில் கோவழகனும் அளவில்லா கோபம் அடைந்தார்.
செம்பியன் பேசியும் மகன் பிடிகொடுக்காமல் இருப்பதை கண்டவருக்கு பொறுமை குறையத் தொடங்கியது.
தன் கோவத்தை அடக்கிக் கொண்டு மகனைப் பார்த்து" என்ன வேலை இருந்தாலும், நாளைக்கு பார்த்துக்கலாம் அவர்களுடன் கிளம்பு .."என்று வார்த்தைகளை கடித்து துப்பினார்.
தந்தையின் வார்த்தையை சீர்மதியனால் மீற முடியாது.இனி எது பேசினாலும் தந்தையின் கோபத்திற்கு ஆளாக வேண்டுமென்று பதில் பேசாமல் நின்றான்.
கோவழகனுக்கு அவ்வளவு எளிதாக கோபம் வராது அப்படி வந்ததால் அவ்வளவு எளிதாக தனியாது.
சீர்மதியன் அதற்கு மேல் எதுவும் மறுக்காமல் தங்கள் அறைக்கு சென்று உடைமாற்றி வந்தான்.
தண்மதியும் மகிழ்ச்சியுடன் தாய்வீடு செல்லத் தயரானாள்.
அடுத்த வீதி என்
றாலும் மணமக்களை மகிழ்வுந்தில் தான் அழைத்துப் போனார்கள்.
இருவரும் அருகருகே அமர்ந்திருந்தாலும் தங்கள் ஆடைகள் கூட உரசிவிடாமல் கவனமாக அமர்ந்து இருந்தார்கள்.
வீடு வந்ததும் புது மண தம்பதியர்களுக்கு ஆலம் சுற்றி வரவேற்றார்கள்.
அருமைநாயகம் பேத்தியையும், பேரனையும் பார்த்ததும் வரவேற்பாக தலையை மட்டும் அசைத்தார்.
தண்மதி விட்டால் போதுமென்று தன் அறைக்குச் சென்று தஞ்சம் அடைந்தாள்.சீர்மதியன், வேறு வழியில்லாமல் வரேவேற்பறையில் அமர்ந்து கொண்டான்.
அவனுக்கு தர்மச்சங்கடமாக இருந்தது.'இதற்குத் தான் வரலைன்னு சொன்னேன் யாராவது கேட்டார்களா..?'என்று மனதிற்குள் கருவிக் கொண்டு இருந்தான்.
அவனால் அங்கே பொருந்த முடியலை.. அருமைநாயகம், ஒரு வார்த்தை கூட பேசவில்லை அவன் இருக்குமிடமே வரவில்லை..முறைவழுதி ,வேலை இருப்பதை போல் நாசூக்காக நகர்ந்து கொண்டான்.
செம்பியன் மட்டுமே அக்கறையுடனும், அன்புடனும் பேசிக் கொண்டு இருந்தார்.அதுவும் பொதுவாக அவன் தொழிலைப் பற்றி மட்டுமே பேசினார்.
சீர்மதியன் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லியபடி அமர்ந்து இருந்தான்.அவன் மனமோ ! 'எப்படா இங்கிருந்து போவோம் 'என்று நினைத்தது.
செம்பியன் அவனின் நிலை உணர்ந்து பேச்சுக் கொடுத்தார்.மற்றவர்கள் எப்படியோ அவருக்கு அவன் மாப்பிள்ளை..அந்த மரியாதை நிமித்தமாக அவனுக்கு எந்த வித சங்கடமும் ஏற்படாமல் பேசினார்.
தூயநாச்சி தடபுடலாக விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். வேலை ஆட்களை வைத்து செய்தபடியே அவர்களை மேற்பார்வை பார்த்துக் கொண்டு இருந்தார்.
செந்தாழை, மாமியாருக்கு உதவியபடியே மருமகனுக்கு பழரசம் கலந்து, மகள் கையில் கொடுத்து கொடுக்கச் சொன்னார்.
தண்மதியும் எதுவும் பேசாமல் வாங்கி சென்று தந்தைக்கும் கணவனுக்கும் கொடுத்தாள்.
செம்பியன் பழரசத்தை குடித்து முடித்ததும் தனக்கு வேலை இருப்பதாக சொல்லிவிட்டு நாசூக்காக மகளுக்கும் மருமகனுக்கும் தனிமை கொடுத்து விலகிச் சென்றார்.
தண்மதிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.. ஏற்கனவே தன் மீது கோபத்தில் இருக்கிறான்.காலையில் இங்கே வரவே ஒரு பஞ்சாயத்தை கூட்டினான்.
'இதில் தானும் அவனை தனியாக விட்டுச் சென்றால், சொல்லாமல் எழுந்து போனாலும் போய்விடுவான் திமிர் பிடிச்சவன் 'என்று மனதிற்குள் கருவியபடியே அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தாள்.
அவனோ முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்குமளவு கடுப்புடன் அமர்ந்து இருந்தான்.
தண்மதி மனதிற்குள் 'இவனிடம் என்ன பேசுவது ஏதாவது பேசினால் சண்டை தான் வரும்.அப்புறம் தாலியை கழற்றி வீசிட்டு போ என்பான்.எதற்குடா வம்பு..' என்று எண்ணியவள் தொலைக்காட்சி பெட்டியை உயிர்ப்பித்து அவன் கையில் ரிமோட்டை கொடுத்தாள்.
அதை வாங்காமல் "என் வேலை எல்லாம் விட்டுவிட்டு டிவி பார்க்கத் தான் இங்கு
வந்திருக்கேனா..?" என்று சீர்மதியன் கடுப்புடன் கேட்டான்.
தண்மதிக்கு என்ன சொல்வதென்று தெரியாமல் "உங்களுக்கு போர் அடிக்குமேன்னு தான் டிவி போட்டேன்.." என்று தயக்கத்துடன் சொன்னவளிடம்,
"ரொம்ப தான் அக்கறை .. "என்று வாய்க்குள்ளேயே முனங்கினான்.
அப்போது செந்தாழை "தணு மாப்பிள்ளைக்கு உன் அறையை காட்டு. சிறிது நேரம் படுத்து ஓய்வெடுக்கட்டும். அதற்குள் சாப்பாடு தயாராகி விடும் .."என்று சமையலறையில் இருந்தபடியே மகளை ஏவினார்.
தண்மதி தாய் சொல்லைத் தட்டாமல் கணவனை தன் அறைக்கு அழைத்துச் சென்றாள்.
சீர்மதியன் அறையை நோட்டமிட்டபடியே அங்கே கிடந்த படுக்கையில் அமர்ந்தான்.
தண்மதி தயங்கிய படியே என்ன செய்வதென்று தெரியாமல் நின்றாள்.
சீர்மதியன் அவளை ஆழப் பார்த்தபடியே, "என்ன முடிவு செய்து இருக்கிறாய்.." என்று கேட்டான்.
தண்மதி புரியாமல்,"என்ன முடிவு..?" என்று கேட்டவளிடம்,
"அது தான் இந்த மாட்டுக்காரனுடன் வாழலாமா ?அல்லது உறவை முறித்துக் கொள்ளலாமா? என்ற முடிவை தான் கேட்டேன்.."
தண்மதி பதிலே பேசாமல் நின்றாள்.அவள் மனதிற்குள் 'இவன் இதை விடவே மாட்டானா?'என்று நினைத்தாள்.
உன் கூட வாழ எனக்கும் இஷ்டமில்லை என்று சொல்லத்தான் அவளுக்கும் ஆசை! ஆனால் அதன் பிறகு பெற்றவர்களிடம் என்ன சொல்லுவாள்..அதற்காகவே அமைதியாக இருந்தால் இவன் ரொம்பத்தான் போகிறான் என்று மனதிற்குள் கருவினாள்.
"இப்படி அமைதியாக நின்றால் என்ன அர்த்தம்..உனக்கு விருப்பம் இல்லாத கல்யாணத்தை ஏன் கஷ்டப்பட்டு தொடர வேண்டும் இதற்கு ஒரு முடிவு கட்டிடலாம்.." என்று அவன் கூறி முடிக்கும் முன்..
"உங்களுக்கு கல்யாணம்ன்னா விளையாட்டா..?நீங்க நினைச்சா கல்யாணம் பண்ணிக்கனும்..வேண்டாம் என்றால் விட்டுட்டு போய்டனுமா..?"என்று மூச்சு வாங்க கோபத்துடன் பேசியவளை திகைப்புடன் பார்த்தான்.
அவளோ, அடங்கா கோபத்துடன் "உங்க இஷ்டத்திற்கு நடக்க இது ஒண்ணும் பொம்மை கல்யாணம் இல்லே..பெரியவர்களின் ஆசியுடன் நடந்தது.நமக்கு பிடிக்குதோ பிடிக்கலையோ இதை என்னால் முறிக்க முடியாது.. நானும் உயிர் உள்ள மனுசின்னு முதலில் புரிஞ்சுக்கோங்க..இனியொரு முறை இதை பற்றி பேசினால் அப்புறம் நல்லா இருக்காது.." என்றவள் அதே கோபத்துடன் அறையை விட்டு வெளியே சென்றாள்.
,இவள் இப்ப என்ன சொன்னாள் .. என்னை விட்டு போகமாட்டாளா? அவளுக்கு தான் என்னை பிடிக்காதே! அப்புறம் ஏன் போக மாட்டேன்னு சொல்லாமல் சொல்கிறாள்..' என்று அவள் சொன்னதை அசைப் போட்டவனுக்கு மனதிற்குள் இனம் புரியாத நிம்மதி ஏற்பட்டது .
அதே யோசனையில் படுத்தவன் அப்படியே உறங்கி விட்டான்.
தண்மதி தோட்டத்திற்குள் சென்றவள், கிணத்தடியில் இருந்த துவைக்கிற கல்லில் அமர்ந்த படி ,கணவனை மனதிற்குள் திட்டித் தீர்த்தாள்.
'இவன் என்ன லூசா.. ?கல்யாணம் ஆகி மூணு நாள் கூட ஆகலே அதுக்குள் பிரிவை பற்றி பேசறான்.என்ன தான் நினைச்சுட்டு இருக்கான்.என்னை அனுப்பிட்டு இவன் நிம்மதியா இருக்கலாம்ன்னு நினைக்கிறானா? '
'தணு நீ ஏமாந்துறாதே ! அவனைப் பழிவாங்க இது தான் நல்ல வாய்ப்பு..கூடவே இருந்து படுத்தனும்..ஏன் டா இவளைக் கல்யாணம் பண்ணுனோம்ன்னு நினைக்க வைக்கனும்..'என்று மனதிற்குள் சபதம் எடுத்துக் கொண்டாள்.
தன் யோசனையில் சுழன்று கொண்டிருந்தவளை "தணு இங்கே என்ன பண்றே .."என்றபடி மகளருகில் வந்து நின்றாள் செந்தாழை.
"சும்மா தான் மா ..கொஞ்ச நேரம் காத்தாட உட்காரலாம்ன்னு வந்தேன்.."
"உச்சி வெய்யிலில் இங்கே வந்து உட்கார்ந்து இருக்கே..!ஏம்மா உனக்கு ஒண்ணும் அங்கே பிரச்சினை இல்லை தானே.." என்று தயக்கத்துடன் கேட்டாள்.
இந்த கல்யாணம் மகள் விருப்பம் இல்லாமல் நடந்தது. தனக்கும் அவர்களைப் பற்றி எதுவும் தெரியாது.அங்கே அவளுக்கு பிடித்த மாதிரி எல்லாம் அமைஞ்சு இருக்குமா? என்று பெற்ற மனம் துடித்தது.
எல்லாத்தையும் மனசுக்குள்ளேயே வைத்து மருகுகிறாளா? என்று செந்தாழை சந்தேகம் கொண்டாள். மகள் வேறு தனியா வந்து உட்கார்ந்து இருந்தது அவள் சந்தேகத்தை ஊர்ஜீனப்படுத்தியது.
மகளோ, " எனக்கு அங்கு எந்த பிரச்சனையும் இல்லை மா எல்லாரும் நல்லா பார்த்துக்கிறாங்க .. நீங்க எதையும் போட்டு குழப்பிக்காதீங்க மா.." என்று மகள் தாயுக்கு சமாதானம் சொன்னாள்.
"நீ சந்தோஷமாக இருந்தால், எனக்கு அது போதும் தணு .."என்று கூறியவர் மகளை அழைத்துக் கொண்டு வீட்டிற்குள் சென்றார்.
"தணு நீ போய் உன் வீட்டுக்காரனை கூட்டிட்டு வா ! சாப்பாடு போடலாம்.." என்று பேத்தியிடம் தூயநாச்சி கூறினார்.
தண்மதி மனதிற்குள், 'மறுபடியும் அவனிடம் போகனுமா ..? இப்ப என்ன சொல்லப் போறானோ?' என்று நினைத்தபடியே தன் அறைக்குச் சென்றாள்.
அவனோ தலையணையை அணைத்துக் கொண்டு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்.
அவனை எப்படி எழுப்புவது என்ற குழப்பத்தில் மெல்ல அவனிடம் சென்று நின்ற படியே யோசித்தாள்.
தொட்டு எழுப்பவும் சங்கடமாக இருந்தது. சுற்றும் முற்றும் பார்த்தாள். மேஜை மீது பழைய நாளிதழ் ஒன்று கிடந்தது. அதை எடுத்து அவன் கைகள் மீது தட்டினாள்,
சீர்மதியன் அவளின் செயலால் மெல்ல தூக்கம் கலைந்து விழித்துப் பார்த்தான்.
தண்மதி அவனையே பார்த்துக் கொண்டு நிற்பதை பார்த்து.. என்னவென்று விசாரித்தபடியே எழுந்து அமர்ந்தான்.
"சாப்பிட வாங்க பாட்டி கூப்பிட்டாங்க .."என்றாள்.
அவனோ முகம் கழுவ வேண்டும் என்றதும் குளியலறயை திறந்து விட்டாள்.
சீர்மதியன் முகம் கழுவி வந்ததும் வேண்டா வெறுப்பாக முகம் துடைக்க துண்டை எடுத்துக் கொடுத்தாள்.
அவனுக்கு பணிவிடை செய்வதை நினைத்தாலே அவளுக்கு எரிச்சலாக இருந்தது.ஆனால் பாட்டியின் ஏச்சுக்கு பயந்து செய்தாள்.
இருவரும் வந்ததும் அருகருகே அமரவைத்து விருந்து உணவை பரிமாறினார் செந்தாழை. இருவரும் அமைதியாக உண்டு முடித்தனர்.
சீர்மதியன் மற்றவர்கள் சாப்பிடும் வரை பொறுமையாக இருந்தவன்,அதன் பிறகு தனக்கு வேலை இருக்கிறது.அதனால் தான் மட்டும் கிளம்புவதாக சொன்னான்.
"சீரா இன்று ஒருநாள் இருந்துட்டு நாளை தண்மதியையும் கூட்டிட்டுப் போப்பா.." என்றார்.
" இல்லை பாட்டி எனக்கு பண்ணை வேலை நிறைய இருக்கு.. தண்மதி மட்டும் இருந்துட்டு மெதுவா வரட்டும்" என்றான் உறுதியாக!
"மாப்பிள்ளை நீங்களும் இருந்துட்டு தண்மதியை உங்களுடனேயே கூட்டிட்டுப் போனால் எங்களுக்கு சந்தோஷம்!அப்படி உங்களுக்கு வேலை இருந்தால் தண்மதியையும் இப்போதே கூட்டிட்டுப் போங்கள். தணு உனக்கு வேண்டியதை எடுத்துட்டு மாப்பிள்ளையுடன் கிளம்புமா .."என்றார் செம்பியன் தெளிவாக.
தண்மதி தந்தை சொல்லுக்கு மறுப்பு சொல்ல முடியாமல்,' யார் சொன்னாலும் கேட்கிறானா? தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் ன்னு நிற்கிறானே !'என்று கணவனை மனதிற்குள் கடிந்தபடி தனக்கு தேவையானதை எடுத்துக் கொண்டு கணவனுடன் புகுந்த வீட்டுக்கு கிளம்பத் தயாரானாள்.
சீர்மதியன் அதன் பிறகு எதுவும் பேசாமல் மனைவியை அழைத்துக் கொண்டு தன் வீட்டிற்கு கிளம்பினான்.
நேசம் தொடரும்..