மாறாத நேசம்!
அத்தியாயம் 14
தண்மதி தந்தைக்காக கணவனுடன் விருப்பமில்லாமல் திரும்பி வந்தவள், மனதிற்குள் 'இவன் தன்னை மட்டும் இன்றி தன் குடும்பத்தையே தலையாட்ட வைக்கிறானே' என்று எண்ணிக் கருவினாள்.
மறுவீட்டுக்கு சென்று விட்டு உடனே வந்த மகனையும், மருமகளையும் என்ன செய்ய என்று தலையில் அடித்துக் கொண்டார் பொன்மணி.
பொறுக்க முடியாமல் கோவழகன் "இவ்வளவு அவசரமா வந்து என்ன தான் சாதிக்கப் போறே..உன்னைப் பற்றி மட்டுமே சிந்திக்கிறாயே ,உன்னை நம்பி ஒருத்தி வந்து இருக்காளே ! அவளைப் பற்றி நினைக்க மாட்டீயா.. ஆசை தீர பிறந்த வீட்டில் ஒரு நாள் கூட இருக்க விடாமல் கூட்டி வந்து இருக்கிறாயே.. உன்னை என்ன தான் செய்ய.." என்று சலித்துக் கொண்டார்.
தூய முல்லையும் கனியமுதனும் என்ன சொல்வதென்று தெரியாமல் அமைதியாக இருந்தார்கள்.
தண்மதி தன் மாமனாராவது தனக்காக பேசினாரே என்ற நிம்மதியுடன், தங்கள் அறைக்குச் சென்றவள் தான் எடுத்து வந்த துணிகளை அங்கே இருந்த அலமாரிகளில் அடுக்கினாள்.
சீர்மதியன் வந்த கையோடு பண்ணைக்கு சென்று விட்டான்.
பெற்றவர்கள் இருவரும் மகனின் செயல்களை கண்டு கவலையில் ஆழ்ந்தனர்.கனியமுதனும் தூயமுல்லையும் தான் அவர்களை சமாதானப்படுத்தினார்கள்.
சீர்மதியனுக்கு பண்ணையில் அன்று உண்மையாகவே சில வேலைகள் இருக்கத் தான் செய்தது. கொஞ்சம் கடைவீதி வரை போக வேண்டிய வேலையும் இருந்தது . அதனால் தான் அவன் மாமானார் வீட்டில் இருக்காமல் வந்தான்.
செம்பியன் குடும்பத்தாருக்கும் ,மருமகன் ஒரு நாள் கூட தங்காமல், மகளை அழைத்துக் கொண்டு போனது மிகுந்த ஏமாற்றத்தை தந்தது. ஆனாலும், அவர்கள் வாழ்க்கை எப்படியோ நன்றாக இருந்தால் போதுமென்று எண்ணினார்கள்.
முறை வழுதி தான் மனதிற்குள் 'மாட்டுக்காரனுக்கு எத்தனை கொழுப்பு இத்தனை பேர் சொல்லியும் கேட்காமல் போகிறான்.. 'என்றுகருவிக் கொண்டே இருந்தான்.
அருமைநாயகம் இப்போது எல்லாம் மிக அமைதியாக இருக்க கற்றுக் கொண்டார்.அதுவும் சீர்மதியன் விஷயத்தில் வாயே திறப்பதில்லை. அவனிடம் வம்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்பதில் கவனமாக இருந்தார்.
மனதிற்குள் அவன் மேல் ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வு அவரை ஆட்டிப்படைத்தது.
சீர்மதியனின் வீரமும் துணிவும் அவரை வியக்க வைத்தது. சிறு வயதில் தான் இருந்ததைப் போலவே இருக்கிறானே! என்று அவரை நினைக்க வைத்தான்.
அவரின் இளைமை கால பருவ நினைவுகள் அவர் கண் முன்னே வந்து போனது. வாழ்க்கை ஒரு வட்டம் என்று எண்ணிக் கொண்டார்.
இரவும், பகலையும் போல் வாழ்க்கை அதன் போக்கில் நகர்ந்தது.எல்லாருக்கும் எளிதாக பிடித்த வாழ்க்கை அமைந்து விடுவதில்லை.
கிடைத்த வாழ்க்கையை பிடித்த மாதிரி மாற்றிக் கொள்வது தானே புத்திசாலித்தனம்.சீர்மதியனும் அதோ போல் தனக்கு கிடைத்த வாழ்க்கையை அமைதியாக ஏற்றுக் கொண்டான்.
தண்மதிக்கு தன்னை சுத்தமாக பிடிக்கவில்லை என்று தெரிந்ததிலிருந்து, அவளிடம் எந்த பேச்சும் வைத்துக் கொள்ளாமல் ஒதுங்கியே போனான்.
மேலும்.. மேலும், அவள் மனதில் வெறுப்பை வளர்க்க அவன் விரும்பவில்லை.
இப்போதைக்கு இது தான் தனக்கான வாழ்க்கை என்று அதை முழு மனதாக ஏற்றுக் கொண்டான்.தன் அன்பு ஒரு நாள் அவளுக்கு புரியும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில் வாழ்க்கையை நகர்த்தத் தொடங்கினான்.
தண்மதி புகுந்த வீட்டில் பொருந்திப் போவதற்கு ரொம்பவே சிரமப்பட்டாள்.அவள் நினைத்து வந்த எதையும் செய்ய முடியவில்லை.
சீரமதியனை கூடவே இருந்து பழி வாங்க வேண்டும்.அவனுடைய தாய் தந்தையரை தன்னிடமிருந்த தள்ளி நிறுத்த வேண்டும் என்றெல்லாம் எண்ணி வந்தது எதுவுமே நடக்கவில்லை.
சீர்மதியன் அவளிடமிருந்து இப்போது எல்லாம் எவ்வளவு ஒதுங்கிப் போக முடியுமோ அவ்வளவு ஒதுங்கிப் போனான்.
தண்மதிக்கு அவனிடம் பேசவே வாய்ப்பும் அமையவில்லை..இனி ஒரு முறை 'பிடிக்கலைன்னா உன் வீட்டுக்கு போ ..!'என்று அவன் ஏதாவது சொல்லட்டும்! அப்புறம் பார்த்துக்கலாம் என்று நினைத்தாள்.
ஆனால்,தண்மதியால் ஒரு போதும் அவன் சொன்னதைப் போல் செய்ய முடியாது. அவள் மட்டும் அப்படி தாலியை தூக்கி எறிந்து விட்டு போனால், அவளின் தாய் தந்தை உயிரையே விட்டுவிடுவார்கள்.
அதுவும் இந்த திருமணத்தை தன் தந்தை எவ்வளவு ஆசைப்பட்டார் என்று கண்கூடாகவே பார்த்த பின் அவள் எப்படி போவாள்.
தனக்கு பிடிக்காவிட்டாலும் தன் தந்தைக்காகத் தான் திருமணத்திற்கு சம்மதித்தாள்.
பெற்றவர்களுக்காக அவள் இங்கே இருந்து தான் ஆக வேண்டும்.
சீரமதியனுடன் தன் வாழ்க்கை என்னாகுமோ? என்று அவள் இப்போதைக்கு யோசிக்கவில்லை.நடப்பது நடக்கட்டும் என்று அமைதியாக இருக்க கத்துக் கொண்டாள்.
ஆனால், அவனுடன் வாழ வேண்டுமென்ற ஆசையோ ,அவனை கணவனாக ஏற்றுக் கொள்ளவோ அவள் மனம் விழையவில்லை..வாய்ப்புக் கிடைத்தால் அவனைப் எப்படி எல்லாம் கஷ்டப்படுத்த முடியுமோ அப்படி கஷ்டப்படுத்தனும் என்று எண்ணினாள்.
புகுந்த வீட்டில் பொன்மணியும், கோவழகனும் அவளை பூப்போல் பார்த்துக் கொண்டார்கள்.அவர்களிடம் குறையே கண்டுபிடிக்கவே முடியவில்லை.
அவள் எண்ணியது எதுவுமே நடக்கவில்லை..அவள் எவ்வளவு தான் எடுத்தெறிந்து பேசினாலும், நடந்தாலும் அவர்கள் பெரிது படுத்தாமல் நடந்து கொண்டார்கள்.
தண்மதி விலகியே போனாலும் அவர்கள் நெருங்கி வந்தார்கள். எதிர்வினை காட்டினால் தானே அவளால் பேச முடியும். அவர்களிடமும் அவளால் ஏதும் செய்ய முடியவில்லை..
தன்னையறியாமலேயே அவர்கள் மீது அன்பும் மரியாதையும் அவளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக வர ஆரம்பித்து விட்டது.
தூய முல்லையோ, இவளை நல்ல தோழியாக..சகோதிரியாக நினைத்தாள்.. இவள் முகத்தை திருப்பினால் கூட வழிய வந்து பேசுவாள்.
மொத்தத்தில் புகுந்த வீட்டு உறவுகளிடம் இவள் எந்த விதத்திலும் தன் பிடித்தமின்மையை காட்ட முடியவில்லை..
எதுவுமே தனக்கு சாதகமாக நடக்காததால் வாழ்க்கையை அதன் போக்கில் ஏற்றுக் கொள்ளப் பழகிக் கொண்டாள்.
தண்மதி தன் வீட்டில் தன் மனைவியாக வளைய வந்தாலே போதும் என்கிற மனநிலையில் சீர்மதியன் இருந்தான். தன் அன்பு என்றாவது ஒரு நாள் அவளுக்கு புரியும் . அதுவுவே தங்களை சேர்ந்து வாழ வைக்கும் என்ற உறுதியான நம்பிக்கையுடன் வாழ்க்கையை வாழத் தொடங்கினான்.
அவனுக்கு அவளை அருகில் பார்த்துக் கொண்டு இருந்தாலே போதும்.அதனால் அவளிடம் எந்த பேச்சு வார்த்தையும் வைத்துக் கொள்வதில்லை.
பேசினால் தான் தேவை இல்லாத வார்த்தைகள் இருவரிடமும் வெடிக்கும்.அதனால் பேசுவதே இல்லை..
ஆனால் பேசிக் கொள்ளவில்லை என்றாலும் அவளுக்கு தேவையானதை பார்த்து பார்த்து செய்ய தவறியதும் இல்லை.
அன்றும் பக்கத்தில் இருக்கும் கடைவீதி வரை ஒரு வேலையாக போய் இருந்தான்.சும்மா கடையை வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்தவன் கண்களில், ஒரு கடையில் தொங்க விடப்பட்டிருந்த புடவை கண்ணில் பட்டு அவனை ஈரத்தது. ஆகாய நிறத்தில் கருநீலக் கரையும் ,புடவை முழுவதும் ஆங்காங்கே வெள்ளி சரிகை நூலில் தாமரையும் கண்ணைப் பறித்தது.
தண்மதியின் நிறத்திற்கு அந்த வண்ணம் மிக அழகாக இருக்குமென்று நினைத்து உடனே கடைக்குள் சென்று அந்தப் புடவையை வாங்கினான்.
முதன் முதலாக அவளுக்காக வாங்குகிறான். அவள் எப்படியோ! ஆனால் அவன் அவளை உயிராக நேசிக்கிறான். அவளுக்காக என்ன வேண்டுமானாலும் செய்ய நினைத்தான்.
புடவையின் விலை கொஞ்சம் அதிகம் தான். ஆனாலும் ,அவனுக்கு அது பெரிதாகப் படவில்லை..
தண்மதியிடம் புடவையை உடனே கொடுத்து ,அவள் முகத்தில் ஏற்படும் மாற்றத்தைக் காண அவன் மனம் துடித்தது. அதற்காகவே அன்று தன் வேலைகளை சீக்கிரம் முடித்து விட்டு வீட்டுக்கு விரைவாக சென்றான்.
சீர்மதியன் வீட்டிற்கு சென்ற நேரம் தண்மதியைத் தவிர வீட்டில் யாரும் இல்லை .
தண்மதி மட்டும் வீட்டில் உட்கார்ந்து பூக்களை தொடுத்துக் கொண்டு இருந்தாள்.
எல்லோரும் எங்கே போனார்கள்.. இவளிடம் எப்படி கேட்பது என்று குழம்பிய படியே சீர்மதியன் கை கால் கழுவி வந்தான்.
பசி ஒருபக்கம் வாட்டியது.இவள் வேறு கண்டுக்காமல் உட்கார்ந்து இருக்காளே! என்ற எரிச்சல் வேறு வந்தது.
சிறிது நேரம் அவளே ஏதாவது சொல்வாளா? என்று பொறுத்துப் பார்த்தான். அவளோ ,அவன் பொறுமையை சோதித்துக் கொண்டு இருந்தாள்.
அவனோ, மனதிற்குள் 'வாயைத் திறந்து பேசினால் என்ன? இவள் முத்தா விழுந்து விடும் என்று நினைத்தவன், பொறுக்க முடியாமல் "வீட்டில் யாரும் இல்லையா தணு ? எல்லோரும் எங்கே..?" என்று கேட்டான்.
அவளோ வேண்டா வெறுப்பாக, "கோவிலுக்கு போய் இருக்காங்க.." என்றாள்.
"நீ போகலையா..?"
"எனக்கு தலைவலி ..அது தான் போகலே.".
"ஓஓ! இப்ப எப்படி இருக்கு.. மாத்திரை போட்டையா?"
"ம்ம்.. "என்று ஒற்றை வார்த்தையில் பதில் சொல்லி அவனுடைய பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தாள்.
சீர்மதியன் தான் வாங்கி வந்த புடவையை தருவதற்கு சரியான நேரம் இது தான் என்று, உள்ளே சென்று புடவைக் கவரை எடுத்து வந்து தயங்கிய படியே அவளிடம் நீட்டினான்.
தண்மதி சீர்மதியன் கொடுத்த கவரை வாங்காமல் கேள்வியாக அவனைப் பார்த்தாள்.
அவனோ , "தணு இன்னைக்கு ஒரு வேலையாக டவுனுக்கு போய் இருந்தேன்.அங்கே ஒரு கடையில் இந்த புடவையை பார்த்தேன் .இந்த கலர் உனக்கு நல்லா இருக்கும்ன்னு வாங்கிட்டு வந்தேன். பிரிச்சுப் பாரு உனக்கு பிடிக்கும் .."
"நான் உங்ககிட்ட புடவை கேட்டேனா?"
"நீ கேட்கலே எனக்கு பிடிச்சு இருந்துச்சு. அது தான் வாங்கிட்டு வந்தேன்.."
"ஓஓ.!எனக்கு வேண்டாம்.."
"ஏன் வேண்டாம்? உனக்கு இந்த கலர் நல்லா இருக்கும் .பிரிச்சுப்பாரே உனக்கும் பிடிக்கும்.." என்று புடவையை அவளின் மடி மீது வைத்தான்.
தான் வேண்டாமென்று சொல்லியும், அவன் பிடிவாதம் பிடித்ததில் வந்த கோபத்தில் புடவைக் கவரை தூக்கி வீசினாள் தண்மதி.
சரியாக அந்த நேரம், கோவிலுக்கு போய்விட்டு வீட்டிற்குள் வந்த பொன்மணியின் காலில் புடவை விழுந்தது.
சீர்மதியன் தண்மதி செய்த காரியத்தால் அவமானத்திலும், அடங்கா கோபத்திலும் உணர்ச்சி கொந்தளிப்பில் நின்றான்.
பொன்மணி அதை குனிந்து எடுத்தவர், அது புடவை என்று தெரிந்ததும், எதுவும் சொல்லாமல் அங்கிருந்த மேஜை மீது வைத்து விட்டு சமயலறைககுள் சென்றார்.
கோவழகனும் ,தூயமுல்லையும் என்ன செய்வதென்று தெரியாமல் சிலையாக நின்றார்கள்.
மாமனைக் கண்டதும் அவனிடம் போகத் துடித்த ஏழிசையின் கைகளை இறுக பற்றி தடுத்து நிறுத்தினாள் முல்லை..
தண்மதிக்கு அப்போது தான் தன் தவறு உரைத்தது. அவசரப்பட்டு விட்டோம் என்று உணர்ந்தாள்.
சீர்மதியன் சட்டென்று அந்த இடத்தை விட்டு அகன்று சென்று விட்டான்.
தண்மதிக்கு யாரையும் நிமிர்ந்து பார்கக முடியவில்லை. தலையை குனிந்த படி தங்கள் அறைக்குச் சென்றாள்.
தங்களுக்குள் இருந்து வந்த போர் இன்று அனைவருக்கும் தெரிந்து விட்டதே ! சீர்மதியன் இனி என்ன செய்வானோ? தன்னை தன் வீட்டில் கொண்டு விட்டு விடுவானா? என்றெல்லாம் அந்த நொடி கலங்கினாள்.
சீர்மதியன் நெடு நேரம் கழித்து அறைக்கு வந்தவன், அவளிடம் ஒரு வார்த்தை கூடப் பேசாமல் ,பாய்யை எடுத்து விரித்துப் படுத்து கண்களை மூடிக் கொண்டான்.
தண்மதிக்கு அவன் திட்டியிருந்தால் கூட மனது ஆறி இருக்கும். ஆனால், அவன் ஒரு வார்த்தை கூட தன்னிடம் பேசாமல் படுத்தது, யாரோ மனதை வாள் கொண்டு அறுத்தது போல் வலித்தது.
அவளால் படுக்கவும் முடியவில்லை.. உட்காரவும் முடியவில்லை.. கொஞ்ச நேரம் பொருத்தவள் எழுந்து கணவன் அருகில் சென்று நின்றாள்.
சீர்மதியன் தூங்கவில்லை என்று தெரிந்தது. அவனை எப்படி அழைப்பது என்று குழ்மபியபடி சிறிது நேரம் நின்றாள்.
அவனோ, அருகில் அவளை உணர்ந்தாலும் கண்களை திறக்காமல் இறுகமூடியபடியே படுத்து இருந்தான்.அவனுக்கு அவள் செய்த காரியத்தால் கோபமும், வருத்தமும் மனம் முழுவதும் வலியை கொடுத்தது.
தண்மதி,என்ன சொல்லி அழைத்து பேசுவது என்று சில நிமிடங்கள் குழம்பியவள்,
ஒரு முடிவுடன் 'இப்ப பேசவேண்டாம் காலையில் அவன் விழித்ததும் பேசிக் கொள்ளலாம்'என்று நினைத்து திரும்பியவள் ,நடையில் கவனம் இல்லாமல் கால் தடுக்கி அவன் மேலேயே பூ மாலையாக விழுந்தாள்.
நேசம் தொடரும்..