Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


மலர்மதி - 8

அத்தியாயம் - 8



அலுவலறையில் நுழைந்ததுமே, “யார் இவள் என்று அவனிடம் விசாரித்தாயா?” என்ற கேள்வியோடுதான் அர்ஜுனை எதிர்கொண்டான் தன்யன்.



“ஏதேது... மதுவிற்காக...? அவருக்கு அவர் நேற்று அடித்த பிராண்டின் பெயர் கூட தெரியிவில்லை. பிறகு எப்படி?’’ என்று கிண்டலாகப் பேசிக் கொண்டே போனவனை இடைவெட்டி, “கேட்டதற்கு மட்டும் பதில்.’’ என்றான் கடுமையாய்.



லேசாக அதிர்ந்தாலும் அதனை வெளிக்காட்டாமல், “போதை தெளிந்ததும்... மலர்மதியா...? யார் அவள்... என்று கேட்கிறார் அண்ணா" உண்மையை உள்ளபடி உரைத்துவிட்டான்.



“ஸ்ரீகாந்த் எங்கே?” அடுத்த கேள்விக்குத் தாவனின்.



“இன்னமும் வரவில்லை” - கேள்விக்கு மட்டும் பதிலளித்து விட்டு தன் கோப்புகளில் மூழ்கினான். சிறிது நேரம் இருக்கையில் அமர்ந்து கோப்புகளைப் புரட்டியவன், அதில் மனம் ஒட்டாமல் மூடி வைத்தான். அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடப்பதும், பின் வாயிலைப் பார்ப்பதும் என்று இருபது நிமிடங்கள் கரைந்திருக்கும். ஸ்ரீகாந்த் கதவினைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான். இரண்டே எட்டில் அவனை நெருங்கிவிட்ட தன்யன், அவன் தோள் பற்றி, “விபரம் கிடைத்ததா?” என்று கேட்டான்.



“ம்... முதலில் இப்படி உட்காருங்கள் அண்ணா.” என்றவன், தன்யனை சோபாவில் அமர்த்திவிட்டு தானும் அமர்ந்தான்.



“பெயர் மலர்மதி... நம் அக்கெள்ண்ட்ஸ் செக்க்ஷனில், வாஞ்சிநாதன் மாமாவின் கீழ் பணி புரிகின்ற புது வரவு. நம் கம்பெனியில் சேர்ந்து ஆறு மாதம்தான் ஆகிறது. பெற்றோர் இல்லை. பெண்கள் விடுதியில் இருக்கிறாள். மாமாவிற்கு அவள் மீது அதிக மரியாதை. பாசம் எல்லாம். கூட வேலை பார்ப்பவர்களையும் ஒருவாறு இலைமறை, காய் மறையாய் விசாரித்து விட்டேன். யாருமே அந்தப் பெண்ணைப் பற்றி சிறிதும் குறை கூறவோ, முகம் கோணவோ இல்லை.” சற்று இடைவெளி விடுத்தான்.



“அப்படி என்றால்?’’



ஒருவாறு யூகித்து விட்டான் தன்யன். “அதேதான் அண்ணா தவறு நம் மதுவிடம் தான்.”



“அந்த வீணா?” சந்தேகமாய் இழுத்தான்.



“அந்த வீணாவையும், மலர்மதியையும் ஒன்றாக நினைப்பது கூட பாவம் என்றுதான் தோன்றுகிறது அண்ணா. வீணாவைப் பற்றி, பெரிய நல்ல எண்ணம் யாருக்குமே நம் அலுவலகத்தில் இல்லை. ஆனால் மலர்மதியை பற்றி தவறான எண்ணம் யாருக்குமே இல்லை.” என்று முடித்தான் ஸ்ரீகாந்த்.



இனி விளக்க ஏதுமில்லை என்பது போல் அர்ஜுனிடம் விரைந்தான். அவனது வருகைக்காகவே காத்திருந்த அர்ஜுன்.



“ஒரே தலைவலியாக இருக்கிறது.’’ என்று சிந்தனையில் மூழ்கியிருந்த தன்யனை குறிப்பாய் பார்த்துவிட்டு,



“கேண்டினில் சென்று டீ குடிப்போம் வா.’’ என்று ஸ்ரீகாந்தை இழுத்துக் கொண்டு வெளியேறினான்.



நெற்றிப் பொட்டை பிடித்துக் கொண்டு சிந்திக்கலானான் தன்யன். ஸ்ரீகாந்த் கூறுவது சரியென்றே வைத்துக் கொள்வோம். ஆனால் மலர்மதியின் கையைப் பற்றி மதுசூதனன் கூட்டத்தின் நடுவே, இழுத்துச் சென்றதை தன் கண்களாலேயே பார்த்தேனே. அது பொய்த்து விடுமா, ஒரு பெண்ணின் விருப்பமில்லாமல், அத்தனைப் பெரிய கூட்டத்தில் அவளை பலவந்தப்படுத்துவதும் நடக்க முடியாத காரியம். அதனால் தானே அவள் நெட்டித் தள்ளியதும், எட்டிப் பிடிக்க அவன் முயற்சிக்கவில்லை. இப்படி இருக்க... எது உண்மை... எது பொய் என்பதிலேயே அவன் மனம் உழன்று கொண்டிருந்தது.



சுடச்சுட ஆவி பறக்கும் டீக் கோப்பைகளை டேபிளில் வைத்துவிட்டு அமர்ந்த அர்ஜுனும், ஸ்ரீகாந்தும் சட்டென வெடித்துச் சிரித்துவிட்டனர்.



“பயங்கர தலைவலிதான் போலவே.” விஷமப் புன்னகையுடன் வினவினான் ஸ்ரீகாந்த்.



“ஆமாம், ஆமாம் விடாத தலைவலி என்று தோன்றுகிறது.’’ அர்ஜுனும் பூடகமாகவே பேச இருவரும் சட்டென சிரித்துவிட்டனர். சிரிப்பினூடே.



“சிறு தீயா? அல்லது காட்டுத் தீயா?” ஸ்ரீகாந்த்.



“காட்டுத் தீதான்... கால் தரையில் படவில்லை. நீ வரும் வரை ஒரே படபடப்பும் எதிர்ப்பார்ப்பும், ஓரக்கண்களால் பார்த்த எனக்க, சிரிப்பை அடக்க எத்தனை சிரமமாக இருந்தது தெரியுமா?” அர்ஜுன்.



“இது போல் அண்ணா இருந்ததேயில்லையே அர்ஜுன்” ஸ்ரீகாந்த்.



“ம்... நேற்று அந்தப் பெண்ணிடம் நடந்து கொண்டது சற்று அதிகப்படிதான். பேச்சு கேளாவிட்டாலும் நடந்ததை நாமும் தூரத்திலிருந்து பார்த்தோம் தானே.” அர்ஜுன்.



“ஏதோ நேற்றைக்குத்தான் சிவானந்த ஆசிரமத்தில் இரண்டு சீட் போடுவது பற்றிப் பேசினோம். இன்றே அதனை மறுபரிசீலனை செய்யும்படி ஒரு நிகழ்ச்சி நடந்துவிட்டது... பார்ப்போம், நமக்கு நல்ல நேரம் இருந்தால்.’’



சோகமாக ஸ்ரீகாந்த் முடிக்க, இருவரும் அடக்க மாட்டாமல் சிரித்தனர்.
 
Last edited by a moderator:

New Threads

Top Bottom