Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


மலர்மதி - 18

அத்தியாயம் - 18



தன்யனின் பெற்றோர் வந்து சென்ற மூன்றாம் நாள், கட்டிலில் அமர்ந்த வண்ணம் தலையணையில் கண் மூடி சாய்ந்திருந்தாள். கண்களிலிருந்து கண்ணீர் தன்பாட்டில் கொட்டிக் கொண்டிருந்தது.



கதவினைக் கூட தட்டாமல் புயலென அவளது அறைக்குள் நுழைந்தான் தன்யன். சுதாரித்து, கண் விழித்து கண்ணீரைத் துடைப்பதற்குள் டிரெஸ்சிங் டேபிளின் ஸ்டூலை இழுத்துப் போட்டுக் கொண்டு அவளெதிரில் அமர்ந்தான்.



“இப்பொழுது சொல் என்னை நிராகரித்ததன் காரணம் என்ன?’’ அவளை நேராகப் பார்க்காமல் நிலம் பார்த்து வினவினான்.



“வ....வ....வந்து...எ...என....”



“உஷ்... என்ன சொல்லப் போகிறாய், என் அப்பாவிடம், மாமாவிடம், தம்பிகளிடம் நீ கூறிய கதைகளையா. பணக்கார இடம் வேண்டாம், விருப்பமில்லை, நான் சிடுமூஞ்சி இப்படி எனக்கும் ஒரு கதை வைத்திருப்பாயே அது வேண்டாம். எனக்கு தேவை உண்மைக் காரணம்.” சிவந்த கண்களால் அவளது முகம் பார்த்தான்.



“காரணங்கள்... நான்... கூறியது தான்.” முடிக்க முயன்றவளிள் தோள் பற்றி, “எங்கே என் கண்களைப் பார்த்துச் சொல்.” எரித்து விடுவது போல் அவளை முறைத்தான்.



கண்ணீர் மட்டுமே பதிலாக வந்தது.



“இந்தக் கண்ணீரின் பொருள் என்ன?”



“இப்படி தோள் வலிக்கும் வண்ணம் அழுந்தப் பற்றியிருந்தால் கண்ணீர் வராமல் வேறு என்ன வரும்?" அழுகையினூடே வெடித்தாள்.



“அப்படியானால், நான் உள்ளே வரும் பொழுது துடைத்தாயே அது என்னவோ?”



“.....!....!!...”

மௌனம் காத்தாள்.



“முட்டாள்...” உறுமினான்.



“நான் முட்டாள் என்று தெரிந்து தானே என்னை மணக்கத் தேர்ந்தெடுத்தீர்கள்?"



“என்ன உளறல்...?’‘



“!....!!....”

முஷ்டியை இரண்டு முறை மூடித் திறந்தவன் வேகமாக சில மூச்சுக்களை வெளியேற்றினான்.



“இங்கே பார் மதி... உன் பெயரில் இருக்கும் மதி உன்னிடம் இல்லை. இருப்பினும் சற்று புரிந்து கொள்ள முயற்சி செய். நீ என் கண்களில் எதைக் கண்டாயோ ஆனால், உன் கண்களில் நான் கண்ட காதல் மெய்தான். அதில் எள்ளளவும் எனக்கு சந்தேகமில்லை. அதனால் தான் அம்மா அப்பாவை கோவையிலிருந்து சிரமப்பட்டு வரவழைத்தேன். உன் இந்த பதிலை நான் சத்தியமாக எதிர்பார்க்கவில்லை. உடைந்து விட்ட அம்மா அப்பாவை பத்திரமாக கோவைக்கு அழைத்துச் சென்று விட்டு, அவர்களுடன் இரண்டு நாள் தங்கி, எனக்கு ஒன்றும் பெரிய இழப்பு இல்லை, என்பது போல் ஒருவாறு நடித்து, அவர்களை தேற்றிவிட்டு, நேரே இங்கே தான் வருகிறேன், நீயானால்?!!”



“நடிப்பு.... நீங்கள் தான் நடிப்பதில் வல்லவராயிற்றே.”



“இன்னமும் நீ சரியான காரணத்தைக் கூறவில்லை.”



காரணம் தானே வாங்கிக் கொள்.



“வீணா!’’



“வீணாவிற்கு என்ன? அதுதான் மதுசூதனன் வாழ்விலிருந்து அவளை நீக்கி விட்டேனே!”



“ஆஹா ஹா... அவர் வாழ்விலிருந்து நீக்கி உங்கள் வாழ்வில் சேர்த்துக் கொண்டீர்களாக்கும்.”



“என்ன உளறல் மதி?”



“உளறலா... திரைப்படத்தில் கூட நிஜ அண்ணன் தம்பிகள் ஒரே கதாநாயகியுடன் படங்கள் நடித்தால் பார்க்க மனம் ஒப்பாது எனக்கு. அண்ணன் அணைத்த பெண்ணை, தம்பியும் அணைத்து ஆடும் பொழுது, குமட்டிக் கொண்டு வரும். இங்கானால் தம்பியின் காதலி உங்களுக்கு வைப்பாட்டியா?”



'பளார்...!!!' கன்னம் சூடேறுவது உரைத்தப் பிறகுதான், அவன் அடித்திருக்கிறான் என்பதே புரிந்தது.



“.....!!”



“என்ன தைரியம் உனக்கு, ச்சே... என்னைப் போய்,....... வேண்டாம் மலர்மதி. இந்த சந்தேகம் சரியல்ல, அதுவும் வாழ்வு முழுமைக்குமான பந்தத்தில் ஈடுபடவிருக்கும் நமக்குள் இப்படி ஒரு சந்தேகம் மூள்வது சரியல்ல. இன்றே இதனை தீர்த்துவிடலாம். சொல் உனக்கு என்ன தெரிய வேண்டும்?”



“எனக்கு எதுவும் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் இங்கிருந்து சென்றால் போதுமானது. அல்லது இது உங்கள் மாமன் வீடென்று உரிமை கொண்டாடினால், நான் போகிறேன். திரும்பவும் ஹாஸ்டலுக்கு.’’



“உனக்கு என் காதலை எப்படி புரிய வைப்பேன்” முடிகளுள் விரல் வைத்து கலைத்து சிந்தித்தவன் சட்டென நிமிர்ந்தான்.



மலர்மதி சுதாரிப்பதற்குள் சட்டென அவளை இழுத்து அணைத்தவன் இதழ்களில் முத்திரைப் பதித்தான். தன் பலம் கொண்டு திமிரியவளால் விடுபட முடியவில்லை. மெல்ல மெல்ல அந்த முத்தத்தில் கரைந்து போனாள். மனதின் ஆழத்தில் கொள்கையாவது, இன்னொன்றாவது எல்லாவற்றையும் மறந்து, தனாவையே மணந்து கொண்டால் என்ன? எப்படியும் சட்டப்பூர்வமான மனைவி நான்தானே, என்ற குரல் எழவும் தோய்ந்து போனாள் மலர்மதி. இறுதியில் தன்னையும் மாற்றி விட்டானே. என்ற கோபத்தோடு, அவள் திமிரி எழுவதற்குள் அவனே விடுவித்தான்.



“இப்போது புரிகிறதா மதி.” அவன் குரலில் ஒரு கிரக்கமிருந்தது.இதழ்கிடையில் ஒரு புன்னகையும்.



“நன்றாக புரிகிறது. அன்று வீணாவின் இதழ்களில் காயத்தை பார்த்தேன். அது எப்படி நேர்ந்ததென்று இப்போது புரிகிறது. இன்னமும் சற்று நேரம் நீங்கள் இங்கிருந்தால், அவளுக்கு அன்று உடையை சீர் செய்ய நானிருந்தேன். இன்று எனக்கு யார் இருக்கிறார்கள். உங்கள் பலத்தைக் கொண்டு இதைத்தவிர வேறு என்னதான் உங்களால் செய்ய முடியும்.” மீண்டும் கண் கலங்கினாள்.



“ச்சே...” ஆத்திரத்துடன் எழுந்து கொண்டான்.



“நீ இப்படி தரக்குறைவாய் சிந்திப்பாய் என்று நான் நினைக்கவில்லை. இருப்பினும் விளக்கமளிக்க வேண்டியவன் நான் என்பதால் பேசுகிறேன். அன்று லீ மெரிடியனில் நடந்தது ஒரு நாடகம். யாரோ அதனை திரித்து உன்னிடம் கூறியிருக்கிறார்கள்.”



ஒற்றை புருவம் மேல் எழ அவனை ஏளனமாய் பார்த்தவள் “நான்காவது டேபிளில் இருந்தது நான். நீங்கள் வீணாவிடம் பேசியது எல்லாம், என் செவி வாயிலாக நானே கேட்டேன். நானே பார்த்தேன். அந்த இரண்டாவது மாடி தனியறைக்கு நீங்கள் லிப்டில் செல்வது வரை...” மேலே பேச முடியாமல் விம்மி அழுதாள்.



“ஐயோ! கண்மணி வேண்டாம், எதனை உனக்குத் தெரியாமல் முடிக்க வேண்டுமென்று நான் நினைத்தேனோ, அதனை நீ பார்க்கும்படியாகிவிட்டதா?” தன்யனின் கண்களும் கலங்கின.



“அதுதான் குட்டு உடைந்து விட்டதே. நீங்கள் போகலாம்.” ஏதோ கூற முயன்ற தன்யனை வெட்டி, “நீங்கள் போகவில்லை என்றால், எனது உயிர் போய் விடும்.” என்றாள் குரலில் உறுதியோடு. மறு பேச்சின்றி வெளியேறினான் தன்யன்.



தனக்குள்ளேயே குமுறிக் கொண்டிருந்தாள் மலர்மதி. எல்லாம் முடிந்தது. இனி என்ன என்று நினைக்கும் பொழுதே அழுகை வந்தது அவளுக்கு, எனக்கே விலை பேசியவர்தானே இவர். இவரிடம் என் மனம் ஏன் சாய வேண்டும்? எல்லாம் விதி!
 

New Threads

Top Bottom