Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


விடிவெள்ளி - 35

அத்தியாயம் - 35

சிவந்திருந்த கண்களும் வீங்கியிருந்த முகமும் இரவெல்லாம் பவித்ரா அழுதிருக்கிறாள் என்பதை ஜீவனுக்குக் காட்டிக் கொடுத்தது. அவளைப் பார்த்தால் அவனுக்கு பாவமாக இருந்தது. 'ஆரம்பத்துல ரொம்ப கஷ்ட்டப் படுத்திட்டோம்... அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாதுதான்... போகப்போக சரியாயிடும்... விட்டுப் பிடிப்போம்...' என்று நினைத்து தன்னை சமாதானம் செய்துக் கொண்டு "பவி... ஒரு கப் காபி கொடு..." என்று சாதாரணமாகக் கேட்டான்.



முதல் நாள் இரவு தான் நடந்து கொண்ட முறைக்கு அவன் நிச்சயம் கோபமாக தான் இருப்பான் என்கிற அவளுடைய எண்ணத்தை பொய்யாக்கி... அவன் சாதாரணமாக நடந்து கொண்டது பவித்ராவிற்கு ஆச்சர்யமாக இருந்தது. 'எதற்கெடுத்தாலும் கோபப்பட்டுக் கத்தும் முசுட்டு ஜீவன் எங்கு போனான்...!' என்று வியந்தபடி காபியை கொண்டுவந்து அவனிடம் நீட்டினாள்.



அவள் கொடுத்த கப்பை கையில் வாங்கிக் கொண்டு "கடைக்கு போகணும்... ஒரு மணிநேரத்துல ரெடியாயிடு..." என்றான்.



அவன் கோபத்தைக் கூட எதிர்கொள்ள முடியும் போலிருக்கு... இந்த புதிய நல்லவனை எதிர்கொள்வது தான் சிரமமாக இருந்தது அவளுக்கு. அவன் முகத்தைப் பார்க்காமல் "ம்ம்ம்...' என்றபடி உள்ளே சென்றாள்



கடையில் அவனுக்குத் தேவையான சிலப் பொருட்களை சிக்கனமாக வாங்கியவன் பவித்ராவிற்கு ஏகப்பட்ட பொருட்களை வாங்கிக் குவித்தான். "இதெல்லாம் எதுக்கு...?" என்று அவள் தடுத்தாலும் அவன் கேட்கவில்லை. ஷாப்பிங் முடிந்த பிறகு உணவருந்த ஹோட்டலுக்கு போகலாம் என்று அவன் சொன்னான்.



"எதுக்கு வீண் செலவு... வீட்டுக்கு போய்டாலாம் வாங்க..." அவள் மறுத்தாள்.



"டெய்லியுமா வர்றோம்... இன்னிக்குதானே... வா..." அவன் சமாதானமாக பேசி அவளை அழைத்துச் சென்றான்.



அவளுக்கு விருப்பமான உணவைக் கேட்டுத் தெரிந்து கொண்டு அதையே ஆர்டர் செய்தான். "இதை சாப்பிடு... இதை டேஸ்ட் பண்ணிப் பாரு... இது நல்லா இருக்கு... கொஞ்சம் வச்சுக்கோ..." என்று அவளை பார்த்துப் பார்த்துக் கவனித்தான்.



அவனுடைய அன்பில் பவித்ரா நெகிழ்ந்தாள். 'இவன் நம்மை நேசிக்கிறானோ...!' என்கிற சந்தேகம் கூட எழுந்தது. ஆனால் அதை அவளால் உறுதியாக நம்ப முடியவில்லை.



'முகத்தைப் பார்க்கக் கூட பிடிக்கவில்லை என்றவன்... வேறு வழியில்லாமல் ஊருக்கு பயந்து அவளோடு தனிக் குடித்தனம் வந்தவன்... கடமைக்கு அவளோடு காலத்தை ஓட்டிக் கொண்டிருப்பவன்... எல்லாவற்றிற்கும் மேலாக புனிதாவை போல் ஒரு பெண்தான் மனைவியாக வர வேண்டும் என்று காத்துக் கொண்டிருந்தவன்... இவனாவது அவளை நேசிப்பதாவது...! ஊருக்கு போகப் போகிறோம்... இனி தனியாக இருப்பாளே என்கிற கரிசனம்... அவ்வளவுதான்...' அவளுக்குக் கண்களைக் கரித்தது... என்றைக்கும் இல்லாமல் இன்று அவனுடைய காதலுக்காக அவள் மனம் ஏங்கியது. கலங்கிவிட்ட விழிகளை அவனிடமிருந்து மறைப்பதற்காக முகத்தைத் திருப்பிக் கொண்டு "ரெஸ்ட் ரூம் போயிட்டு வர்றேன்..." என்று சொல்லிவிட்டு எழுந்து சென்றாள்.



வரும் பொழுது முகம் கழுவியிருந்தாள் கண்கள் சிவந்திருந்தன. அவன் புருவம் சுருங்கியது. "என்ன ஆச்சு..?" என்றான்.



"ஒண்ணும் இல்ல..." அவள் முணுமுணுப்பாக சொன்னாள். அதற்கு மேல் அவன் அவளைக் குடையவில்லை. "சரி... சாப்பிடு..." என்று சொல்லிவிட்டு உணவில் கவனம் செலுத்தினான்.



உணவகத்திலிருந்து அவர்கள் வெளியே வரும் பொழுது பூக்கார பாட்டி வாசலில் பூக்கூடையுடன் அமர்ந்து வியாபாரத்தை கவனித்துக் கொண்டிருந்தார்கள். அதை பார்த்ததும் அவனுக்கு புதிதாக ஒரு ஆசை வந்தது.



"பவி... கொஞ்சம் இரு..." என்று சொல்லிவிட்டு பாட்டியிடம் நெருங்கி "ரெண்டு முழம் பூ கொடுங்க..." என்று வாங்கினான்.



அவனுடைய ஒவ்வொரு செயலும் அவளுக்கு ஆனந்த அதிர்ச்சியாக இருந்தது. அவள் அவனை இமைக்காமல பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே "ஹலோ... மேடம்... என்ன கனவுல இருக்கிங்களா...?" என்று கேட்டபடி அவளிடம் பூவை நீட்டினான்.



அவளுக்கு இன்பமானதொரு வலி மனதில் பரவியது. 'இவ்வளவு நாளும் இல்லாமல் ஊருக்கு போகிற சமயத்தில் ஏண்டா இப்படி உருகித் தொலைக்கிறாய்...? உனக்கென்ன... இன்றைக்கு அன்பாக பேசிவிட்டு நாளைக்கு போய்விடுவாய்... நாந்தான் இதையெல்லாம் நினைத்து நினைத்து நொந்து சாக வேண்டும்...' அவள் சோகமான முகத்துடன் பூவை வாங்க கை நீட்டினாள். அவன் தன் கையை பின்னுக்கு இழுத்துக் கொண்டான்.



அவள் அவனை நிமிர்ந்து குழப்பத்துடன் பார்த்தாள். "பூதானே கொடுத்தேன்... அதுக்கு எதுக்கு இப்படி மூஞ்ச தூக்கி வச்சிருக்க...? கொஞ்சம் சி...ரி...யே...ன்..." சிரித்துக் கொண்டே கெஞ்சலாக கொஞ்சினான்.



அவன் ராகம் போட்டு பேசியது அவளுடைய மனநிலையை மாற்றியது. மெலிதாக சிரித்தபடி கையை நீட்ட அவன் அவளிடம் பூவைக் கொடுத்தான்.



வீட்டுக்கு வந்த பிறகு இருவருமே அதிகம் பேசவில்லை. அவர்கள் வாங்கி வந்திருந்த பொருட்களை பிரித்துப் பார்த்த சிவகாமி "ஹும்... ஊருக்கு போறது நீயா... இல்ல அவளாடா...?" என்று மகனிடம் நொடித்துக் கொண்டாள்.



அவனுக்கு தாயின் பேச்சு காதில் விழவே இல்லை. 'யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் பேசிக் கொள்ளுங்கள்...' என்று விட்டத்தை வெறித்துக் கொண்டிருப்பவன் பவித்ராவின் நடமாட்டம் அந்த பக்கம் தெரிந்தால் மட்டும் தலையைத் திருப்பிப் பார்ப்பான்.



அவளும் அதே மனநிலையில்தான் இருந்தாள். யாருடைய பேச்சையும் காதில் வாங்காமல் வேலை பார்த்துக் கொண்டிருப்பவள் ஜீவனுடைய குரல் கேட்டால் மட்டும் ஹால் பக்கம் எட்டிப்பார்ப்பாள். இப்பயே ஒருவருக்கொருவர் அதிகம் பேசிக் கொள்ளாமலே மூன்று நாட்களை கழித்துவிட்டார்கள். அவன் துபாய்க்கு கிளம்பும் நாளும் வந்தது.



கணமென்றால் அப்பேற்பட்ட கணம்... தாங்க முடியாத பாரத்தை நெஞ்சுக்குழிக்குள் சுமப்பது போன்றதொரு கணம் நெஞ்சை அழுத்தியது அந்த இளம் தம்பதிகளுக்கு. இருவருக்குமே ஒருவருக்கொருவர் முகத்தைப் பார்த்துக்கொள்ளும் தைரியம் கூட இல்லை... பேக்கிங் செய்வதில் கவனம் செலுத்த முடியாமல் இவன் குழப்பியடிக்க... சிவகாமி மகனுக்கு உதவினாள். சமையலில் கவனம் செலுத்த முடியாமல் கையை சுட்டுக் கொள்வதும் பாத்திரங்களை உருட்டுவதுமாக இருந்த பவித்ராவிற்கு பாட்டி உதவினார்கள்.



பவித்ரா பார்க்காத போது அவன் அவளைப் பார்ப்பதும்... ஜீவன் கவனிக்காத போது அவள் அவனை நோட்டம் விடுவதுமாக பொழுது கழிந்துவிட மாலை வந்தது... ஜீவன் வீட்டைவிட்டு கிளம்பும் நேரமும் நெருங்கியது. அவன் குளியலறையில் இருந்தான். பவித்ரா சமையலறையில் படபடக்கும் நெஞ்சோடு நின்று கொண்டிருந்தாள்.



"பவி..." ஜீவனின் குரல் படுக்கையறையிலிருந்து ஒலித்தது. அனிச்சையாக அவள் கால்கள் குரல் கேட்ட திசையை நோக்கி ஓடி அறை வாசலில் நின்றன.



அவன் ஜீன்ஸ் மற்றும் டீ-ஷர்ட் அணிந்து ஏர்ப்போட் செல்ல தயாராக இருந்தான். எப்பொழுதும் வெளியே சென்றால் உடுத்துவது போல் தான் உடை அணிந்திருந்தான்... ஆனால் அன்று அந்த உடையில் அவனை பார்க்கும் பொழுது அவளுக்குள் ஏதோ பாய்ந்தது... இதயத்தை யாரோ கையிலெடுத்துக் கசக்குவது போல் மனம் வலித்தது... இமைக்கவும் மறந்து அவனை பார்த்துக் கொண்டே நின்றாள்.



அவன் தலையை அசைத்து அவளை உள்ளே அழைத்தான். பார்வையை அவன் கண்களிலிருந்து விளக்காமல் அவனிடம் நெருங்கி வந்தாள். இருவரும் ஒருவருக்கொருவர் கண்களால் பேசிக் கொண்டார்கள். வார்த்தைகளால் பேசிவிட முடியாத ஆயிரம் விஷயங்களை அந்த பார்வைகள் பரிமாறிக் கொண்டன. சில நிமிட நேரம் மௌனத்திற்குப் பிறகு "இருந்துடுவியா...?" என்கிற ஒற்றை வார்த்தை வெளிப்பட்டது அவனிடமிருந்து.



அவன் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தவளின் பெரிய விழிகளில் சட்டென கண்ணீர் துளித்தது... கலங்கிய கண்களும்... துடிக்கும் இதழ்களுமாக நின்றவளின் முகம் அவன் மனதைப் பிசைந்தது... பதில் பேச தோன்றாமல் பதுமை போல் சமைந்து நின்றவளை இழுத்து தன்னோடு சேர்த்து இறுக்கமாக... மிக இறுக்கமாக அனைத்துக் கொண்டான். அந்த ஒற்றை அணைப்பும் அதிலிருந்த இறுக்கமும் அவனுடைய காதலையும் பிரிவுத் துயரையும் வெளிச்சம் போட்டுக் காட்டிவிட அவள் வெடித்து அழுதபடி அவன் மார்புக்குள் இன்னும் ஆழமாகப் புதைந்து கொண்டாள். அவன் கண்களிலிருந்தும் கண்ணீர் கசிந்தது.



தன் நெஞ்சில் சாய்ந்து கண்ணீர்விட்டுக் கொண்டிருந்தவளின் முகத்தை நிமிர்த்தி நெற்றி... கண்கள்... நாசி... கன்னங்கள்... தாடை... கடைசியாக இதழ்கள் என்று முகமெங்கும் முத்த மழைப் பொழிந்து அவளைத் தினறடித்துவிட்டு மீண்டும் தன் நெஞ்சோடு அனைத்துக் கொண்டான்.



காலத்தை மறந்து காற்றைக் கூட எங்களுக்கிடையில் அனுமதிக்க மாட்டோம் என்பது போல் அவர்கள் நெருக்கமாகக் கட்டிக் கொண்டு நிற்கையில் "ஜீவா... கார் வந்துடிச்சுப்பா..." என்கிற சிவகாமியின் குரலைக் கேட்ட பவித்ராவின் உடல் நடுங்கியது.



அவள் உடல் நடுங்குவதை உணர்ந்து அதற்கான காரணத்தையும் புரிந்துக் கொண்டவன்... அவள் முதுகை ஆதரவாக வருடியபடி "என்னடா...?" என்றான் அன்பொழுகும் குரலில்.



எத்தனை அன்பு அந்த வார்த்தைகளில்... எத்தனை உருக்கம் அந்த குரலில்... எத்தனை அக்கறை அந்த வருடலில்... அவனுடைய ஒவ்வொரு செயலிலும்... வார்த்தையிலும்... குரலிலும் வெளிப்படும் பாசத்தில் அவள் திக்குமுக்காடினாள். பிரியவே மனமில்லாமல் அவன் மார்பிலிருந்து முகத்தை நிமிர்த்தி அவன் முகம் பார்த்து 'ஒன்றும் இல்லை...' என்று சொல்வது போல் தலையைக் குறுக்காக ஆட்டினாள். கண்களில் கண்ணீர் மீண்டும் கசிய ஆரம்பித்தது.



அவள் முதுகை வளைத்திருந்த கரங்களை விளக்கி அதில் அவள் முகத்தை ஏந்தி கண்களைப் பார்த்தான். கருவிழிகள் இரண்டும் கண்ணீரில் மிதக்க... அருவியாக பெருகிக் கொண்டிருந்த கண்ணீர் கன்னங்களையும் நனைத்தது. பெருவிரல்களை மட்டும் அசைத்து அதை துடைத்தபடி "நீ இப்படி அழுதுகிட்டே இருந்தா நான் எப்படி கிளம்புறது....?" என்றவனின் குரல் இறைஞ்சியது.



அவள் சட்டென்று கண்களைத் துடைத்துக் கொண்டாள். கண்ணீர் அடங்க மறுத்து மீண்டும் மீண்டும் கசிந்தது. "ஒரு நிமிஷம்..." என்று சொல்லிவிட்டு குளியறைக்குள் நுழைந்து அவசரம் அவசரமாக முகத்தைக் கழுவிவிட்டு வந்தாள். இப்போது கொஞ்சம் கண்ணீர் மட்டுப்பட்டிருந்தது.



"கிளம்பட்டுமா...?" என்றான்.



"ம்ம்ம்ம்..." என்று அவள் தலையை ஆட்டினாலும் அவன் கையைப் பிடித்திருந்தவளின் பிடி இறுகியது. அவனால் அவளுடைய தவிப்பைப் புரிந்துகொள்ள முடிந்தது. அவள் துன்பப்படுவதை அவன் விரும்பவில்லை என்றாலும்... அவளுடைய தவிப்பும் கண்ணீரும் தனக்காகத்தான் என்பதை நினைக்கும் பொழுது ஒரு விதத்தில் அவனுக்கு இதமாக இருந்தது.



"ப்ளீஸ் பவி... சிரிச்சுகிட்டே போயிட்டு வாங்கன்னு சொல்லு... அப்பதான் என்னால அங்க நிம்மதியா இருக்க முடியும்..." என்றான்.



அவளுடைய சிரிப்பில் தான் அவனுடைய நிம்மதி இருக்கிறது என்று அவன் சொன்னது பிரிவுத் துயரையும் மீறி அவளுக்கு இதமளித்தது. 'போகிறானே...' என்று தவிக்கும் மனதை இறுக்கிப் பிடித்துக் கொண்டு "பத்திரமா போயிட்டு வாங்க..." என்றாள் சிரிக்க முயன்றபடி.



அவன் மீண்டும் ஒருமுறை அவள் நெற்றியில் இதழ் பதித்துவிட்டு அவள் கையை விடாமல் பிடித்தபடியே வெளியேறினான்.



பவித்ராவின் அண்ணன் குணாவும் அண்ணி பைரவியும் ஜீவனை வழியனுப்ப வந்திருந்தார்கள். தாயிடமும் பாட்டியிடமும் விடைபெற்றவன்... பவித்ராவின் கையைப் பிடித்தப் பிடியை விடாமேலே அதுவரை முகத்தைக் கூட சரியாக பார்த்துப் பேசியிராத மச்சானிடம் நெருங்கி "பார்த்துக்கங்க... அடிக்கடி வீட்டுக்கு வந்து போங்க..." என்றான்.



அவன் "அதெல்லாம் நான் பார்த்துக்கறேன் மாப்ள... நீங்க கவலைப் படாம போயிட்டு வாங்க..." என்றான் உண்மையாக.



பைரவியிடமும் "வரேங்க..." என்று சொல்லிவிட்டு, பவித்ராவிடம் வார்த்தையால் விடைபெறாமல்... அவள் அவள் கையை பிடித்திருந்த பிடியில் ஒரு அழுத்தத்தைக் கொடுத்து... தலையை அசைத்து விடைபெற்று வெளியேறினான்.



சொந்தங்கள் அனைத்தும் அவனைப் பின்தொடர்ந்து வாசலுக்கு வந்தன. வாடகைக் காரின் பின் இருக்கயில் துரை காத்துக் கொண்டிருந்தான். அவனுக்கு அருகில் குணா ஏறிக் கொள்ள... டிரைவருக்கு அருகில் ஜீவன் ஏறி அமர்ந்தான். உறவினர்கள் அனைவரும் கையசைத்து ஜீவனுக்கு விடை கொடுக்க... அவன் பார்வையோ பவித்ராவின் பார்வையுடன் பின்னிக் கிடந்தது. கார் மெல்ல நகர்ந்து... பின் வேகமெடுத்துப் பறந்தது. தூர தூரமாக சென்று கொண்டிருக்கும் கார் கண்ணிலிருந்து மறையும் வரை பார்த்துக் கொண்டிருந்த பவித்ராவின் கன்னங்களில் கண்ணீர் உருண்டோடியது.
 

New Threads

Top Bottom