Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


இரும்பின் இதயம் - 8

அத்தியாயம் - 8

"என்ன டாக்டர்... இப்போ எப்படி இருக்கான்..." அதே கட்டிடத்தில் மற்றொரு அறையில் செல்வத்துக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த மருத்துவரை பார்த்து ஜெயச்சந்திரன் கேட்டான்.



"ரெண்டு விரல் முறிஞ்சுருக்கு... கட்டு போட்டிருக்கேன். மத்தபடி பயப்பட ஒன்னும் இல்லை. எல்லாம் வெளிக்காயம் தான். ஒரு வாரத்துல ஆறிடும்..."



"ம்ம்ம்..." அமைதியாக கேட்டுக் கொண்டான்.



காவலர்களுக்கு தெரியாத வன்முறையா... அவர்களுக்கு வெளியே தெரியாமல் ஊமைக் காயம் படும்படியும் அடிக்கத் தெரியும்.... உயிருக்கு பெரிய ஆபத்தில்லாமல் வெளிக்காயங்கள் பயங்கரமாகப் படும்படியும் அடிக்கத்தெரியும்....



மற்ற மூவரையும் பயப்பட செய்வதற்காக அவன் அப்படி ஒரு நாடகத்தை நடத்தினான். அது சரியாக வேலை செய்தது.



மூவரும் அவர்களுக்கு தெரிந்த விபரங்களை அச்சு பிசகாமல் எழுதிக் கையெழுத்திட்டுக் கொடுத்தார்கள். அது ரூபாவுக்கு எதிராக அழுத்தமான ஆதாரமாக இருந்தது....

-----------------------------------------------------------------------------------------------------------------

காலையிலிருந்து அவ்வளவு கடுமையான மனநிலையிலிருந்தவன் இரவு வீட்டிற்குள் நுழைந்து மனைவியின் முகம் பார்த்ததும் அமைதியடைந்தவனாக சுகமாக உணர்ந்தான். ஆனால் அதற்க்கு எதிர்மறையாக அவள் உள்ளுக்குள் வெந்து கொண்டிருந்தாள்.



அவன் குளித்து உடை மாற்றி சாப்பிட்டு முடிக்கும் வரை அமைதியாக இருந்தவள் அவன் படுக்க செல்லும் முன் அவனை பிடித்துக் கொண்டாள்.



"ஏன் இவ்வளவு லேட்... ஞாயிற்று கிழமை கூட அப்படி என்ன தான் வேலை உங்களுக்கு..."



டிவியை அணைத்துவிட்டு படுக்கை அறைக்கு செல்ல எத்தனித்தவனை தன் கேள்வியால் நிறுத்தினாள். அவன் அவளை திரும்பிப் பார்த்தான். அவள் முகம் கோவத்தில் கடுகடுத்தது. அந்த கோவம் அவனுக்கு புது அனுபவமாக இருந்தது. இதுவரை அவனை கேள்வி கேட்க ஆள் இல்லாமல் இருந்தது. அதையே அவனும் விரும்பினான். ஆனால் இன்று அவள் அவனிடம் கோவமாக கேள்விகேட்பது கூட அவனுக்கு பிடித்தது. உள்ளுக்குள் அவள் கோவத்தை ரசித்தான்.



"என்ன சாருமதி... கோவமா இருக்க போலருக்கு..." என்றான் உதட்டில் மெல்லிய சிரிப்புடன்.



அவளுக்கு அது மேலும் எரிச்சலை ஏற்ப்படுத்தியது. "ஐயோ... ஏன் இப்படி சா...ருமதி... சா... ருமதின்னு நீட்டி முழக்கி என்னை ஏலம் விட்ரிங்க...? " என்று எரிந்து விழுந்தாள்.



"உன் பேர் சாருமதி தானே... அப்படித்தான் உன் அப்பா அம்மா என்கிட்ட சொன்னாங்க..."



"அவங்க சொன்னா அப்படிதான் கூப்பிடுவீங்களா... எல்லாரும் என்னை 'சாருன்னு' தானே கூப்பிடுறாங்க.. உங்களுக்கு மட்டும் என்ன சாருமதி வேண்டிக்கிடக்கு..." அவள் எதற்காக அவனிடம் சண்டை போட நினைத்தாளோ அதை மறந்துவிட்டு வேறு எதையோ பிடித்துக்கொண்டு சண்டை போட்டாள். ஆனால் அவன் அவளுக்கு அவள் மறந்த விஷயத்தை ஞாபகப்படுத்தினான்.



"இதை சொல்லவா என்னை ஞாயிற்று கிழமை வீட்டில் இருக்க சொன்ன...?" அவன் அவளை கேலி செய்தான். ஆனால் அவன் கேலி செய்கிறான் என்பதை அவனே உணராமல் இயல்பாக அவளிடம் வாயாடினான்.



"ப்ச்..." அவனை முறைத்தாள். "என் friends எல்லாம் சாய்ந்திரம் வரைக்கும் உங்களுக்காக வெயிட் பண்ணினாங்க தெரியுமா....?" அவள் அவனை குற்றம் சாட்டினாள்.



"நான் அவங்கள வெயிட் பண்ண சொல்லலியே..." அலட்ச்சியமாக சொன்னான்.



அவள் செய்வதறியாமல் முறைத்தாள். அவனுக்கு அவளுடைய கோவமும் முறைப்பும் இனம் புரியாத மகிழ்ச்சியை ஏற்ப்படுத்தியது. 'என்னையும் கேள்வி கேட்க ஆள் வந்தாச்சு' என்று மனதிற்க்குள் மகிழ்ந்து கொண்டான். அந்த மகிழ்ச்சியை அன்றிரவு அவளிடம் மறைக்காமல் வெளிப்படுத்தினான். ஆயிரம் ஆயிரம் முத்தங்களை வழங்கி அவளை அணைத்துக் கொண்டான். அவனுடைய கையணைப்பில் அவள் உலகத்தை மறந்தாள். அவனும் தான். ஆனால் அந்த நெகிழ்வான நேரத்திலும் அவனுடைய காதலை அவன் வார்த்தைகளால் வெளிப்படுத்தவில்லை.



அவனே அவனுடைய காதலை இனம்காணவில்லையோ...



______________________________________________________________________________



கோவிலுக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்த சாருமதி, அவர்களுடைய அறையில், காலையில் ஜெயச்சந்திரன் உடுத்திச் சென்ற காக்கி உடை 'ஹாங்கரில்' மாட்டியிருப்பதை பார்த்து விழிவிரித்தாள்.



"என்ன ஆச்சர்யம்.... இன்னிக்கு இவ்வளவு சீக்கிரம் வீட்டிற்கு வந்துவிட்டானே...! 'ச்ச....' இனிக்கு பார்த்து நான் கோவிலுக்கு போய்ட்டேனே ..." என்று தன்னை தானே கடிந்துக் கொண்டு அவனை வீடு முழுக்க தேடினாள். அவனை காணவில்லை.



"கந்தசாமி... ஐயா எங்க...?"



"இப்போ தாம்மா வந்தாங்க. உடனே காக்கி சட்டையை மாத்திகிட்டு கலர் சட்டை போட்டுக்கிட்டு வெளியே போனாங்க.... 'பாலு கீலு' எதுவும் குடிக்காம போய்ட்டாங்கம்மா..." உண்மையான வருத்தத்துடன் சொன்னான்.



சாருமதிக்கு ஏமாற்றமாக இருந்தது. "அதுதானே பார்த்தேன்... இவனாவது சீக்கிரம் வீட்டுக்கு வர்றதாவது.... சரி வந்தது வந்தான்... என்னை பார்த்துட்டாவது போகனுன்னு தோணுச்சா பார்... நான் இந்த வீட்டுல இருக்குறதும் இல்லாததும் கூட... நானா போய் இவன் முன்னாடி நிக்கலைன்னா இவனுக்கு வித்தியாசம் தெரியாது...." அவள் பொருமினாள்.



அன்று இரவு வெகுநேரம் கழித்தும் ஜெயச்சந்திரன் வீட்டிற்கு வரவில்லை. சில சமயம் இப்படித்தான் வெகுநேரம் கழித்து வருவான். சிலநாட்களில் சாரு தூங்கிவிடுவாள். அப்போதெல்லாம் அவளை தொல்லை செய்யாமல் பூனை மாதிரி தன் வேலைகளை சத்தமில்லாமல் முடித்துக்கொண்டு அவனும் உறங்கிவிடுவான். அவளுக்கு மறுநாள் காலையில்தான் அவன் வீட்டிற்கு வந்ததே தெரியும்.



அதேபோல இன்றும் "லேட்டாக வருவான்..." என்று நினைத்து சாரு தூங்கிவிட்டாள். மறுநாள் காலை கண்விழித்த போது அவன் அறையில் இல்லை. அவசரமாக கீழே இறங்கி வந்து பார்த்தால் அங்கும் அவன் இல்லை. பிறகுதான் கவனித்தாள்... அவன் வீட்டிற்கு வந்த அறிகுறியே தெரியவில்லை. அவசரமாக அவனுடைய கைபேசிக்கு தொடர்பு கொண்டால், அது அனைத்து வைக்கப்பட்டிருந்தது.



அன்று முழுவதும் அவனுடன் தொடர்புகொள்ள முடியாமல் ஒவ்வொரு நொடியும் தவித்தாள். எத்தனை சினிமா பார்த்திருப்பாள். " அதில் நேர்மையான அதிகாரிகளை வில்லன்கள் என்னென்ன மாதிரி துன்புறுத்துவார்கள்... அது போல் இவனுக்கு ஏதும் ஆகிவிட்டதோ... அய்யோ..." நினைக்கவே நெஞ்சு நடுங்கியது.



அந்த நேரத்திலும் அவளுக்கு...



"துப்பாக்கி மற்றும் தோட்டாவை தான்

காதலித்தான்

என்றாலும் காக்கி சட்டையை தான்

கைபிடித்தான்

தன் சாவை சட்டை பையில் வைத்து

எங்கேயும் செல்கின்றான்....."




என்ற பாடல் வரிகள் நினைவில் வந்தன. அதுவும் அவளுக்கு பயத்தையே ஏற்ப்படுத்தியது.



"ஏதாவது வேலையாக போனால் தகவல் சொல்லியிருப்பானே... என்ன ஆச்சோ தெரியவில்லையே..." என்று புலம்பினாள். விடாமல் அவனுடைய கைபேசிக்கு தொடர்புகொள்ள முயற்சித்துக் கொண்டே இருந்தாள்.



அவளுடைய முயற்சி வீண் போகவில்லை. அன்று இரவு அவளால் ஜெய்ச்சந்திரனுடன் பேச முடிந்தது.



"ஹலோ.. ஹலோ..." அவள் குரலில் படபடப்பு அப்பட்டமாக தெரிந்தது.



"சொல்லு என்ன விஷயம்...?" அவன் அழுத்தமாகக் கேட்டான்.



அவன் யார் என்று புரியாமல் கேட்க்கிறான் என்று நினைத்த சாரு அவசரமாக விளக்கினாள்.



"ஏங்க... நான் சாரு..."



"ப்ச்... அது தெரியாமலா பேசிக்கிட்டு இருக்கேன். என்ன விஷயம் சீக்கிரம் சொல்லு..." அவன் வேகமாக பேசினான். அவளுக்கு அவன் எரிச்சலாக பேசுவது போல் தோன்றியது.



"என்ன விஷயமா...? என்ன விளையாடுறீங்களா...? நேத்திலேருந்து வீட்டுக்கு வரல... உங்களை காணுமேன்னு நான் தவிச்சுக்கிட்டு இருக்கேன், நீங்க என்னடான்னா கூலா பேசுறீங்க...?" அவள் எரிச்சலை வெளிப்படையாக காட்டி பேசினாள்.



அவனுக்கு இப்போது உண்மையாகவே கோவம் வந்துவிட்டது.



"கவனி சாருமதி... நான் வீட்டுக்கு வரலைன்னா ஏதாவது முக்கியமான வேலையா வெளியே வந்திருப்பேன்னு யோசிக்க தெரியாதா உனக்கு. இந்த மாதிரி சின்னபிள்ளை தனமா நடந்துகொள்வதை விடு. நான் ஒரு முக்கியமான வேலையா இருக்கேன். தொந்தரவு செய்யாதே.... ம்ம்.. இன்னொரு விஷயம்... நான் வீட்டுக்கு வர இன்னும் இரண்டு நாட்கள் ஆகலாம்... இடையில் போன் செய்யாதே..." என்று அழுத்தமாக சொல்லிவிட்டு அவளுடைய பதிலை எதிர்பார்க்காமல் போனை அணைத்துவிட்டான்.



அவனை பொறுத்தவரை 'அவன் சின்ன குழந்தை அல்ல ஒரு காவல் துறை அதிகாரி. அவனுக்கு ஆயிரம் வேலைகள் திடீரென்று வரும். ஒவ்வொரு முறையும் அவளிடம் சொல்லிவிட்டு அனுமதி வாங்கிக்கொண்டு எங்கேயும் சென்று கொண்டிருக்க முடியாது. அதற்கான நேரமும் அவனுக்கு இல்லை....'



இந்த எண்ணத்தில் இருப்பவனுக்கு சாருமதியின் கவலையையும் பயத்தையும் புரிந்துகொள்ள முடியவில்லை.



"இவன் என்ன பேசுறான்னு புரிந்துதான் பேசுறானா...? இவன் ரெண்டு நாளா வீட்டுக்கு வரவில்லை, விபரமும் சொல்லவில்லை என்றால் நான் கவலை படாமல் ஜாலியா இருக்கனுமாம்மா..." என்று கோபம் வந்தாலும் அவனுக்கு ஆபத்தில்லாமல் நல்லபடியாக இருக்கிறான் என்பதே நிம்மதியளிக்க, அவளுடைய கோபம் பறந்துவிட்டது.



ஆனாலும் அவளுக்கே தெரியாமல் அவள் மனதின் ஒரு மூலையில் ஜெய்ச்சந்திரன் அவளை அலட்ச்சியம் செய்வதாக ஒரு எண்ணம் முளைவிட்டுக் கொண்டிருந்தது.
 

New Threads

Top Bottom