Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


இரும்பின் இதயம் - 11

அத்தியாயம் - 11

ஜெயச்சதிரனுக்காக சாருமதி மருத்துவமனையில் ஆவலாகக் காத்துக் கொண்டிருந்தாள்.

அவள் மருத்துவரை பார்க்க தொலைபேசியிலேயே முன்னனுமதி வாங்கிவிட்டதால் மூன்று மணிக்கு போனால் போதும். ஆனால் 'ஜெயச்சந்திரனை நம்ப முடியாது. திடீரென்று 'எனக்கு வேலை வந்துவிட்டது நீ மட்டும் மருத்துவமனைக்கு போய்விட்டு வந்துவிடு' என்று தொலைபேசியில் அழைத்து சொன்னாலும் சொல்லிவிடுவான். அதற்க்கு வாய்ப்பு கொடுக்கக் கூடாது...' என்று நினைத்த சாருமதி இரண்டு மணி வரைக்கும் 'அவன் எந்த தடையும் சொல்லிவிடக் கூடாது' என்று ஊரில் உள்ள கடவுளையெல்லாம் வேண்டிக்கொண்டிருந்தாள். இரண்டு மணி அடித்ததும் வீட்டை விட்டு கிளம்பிவிட்டாள்.



'கைபேசியை எடுத்துக் கொண்டு போனால் அதில் அழைத்து தடை சொல்லிவிடுவானே.... ' அதையும் வீட்டிலேயே வைத்துவிட்டு போய்விட்டாள். அவன் அவளை ஏமாற்றவில்லை....



அவள் பயந்த மாதிரியே அவளுக்கு தொலைபேசியில் தொடர்புகொள்ள முயற்சி செய்தான். மீண்டும் கைபேசியிலும் முயன்றான். அந்தவிதத்தில் ஏமாற்றாதவன் மருத்துவமனைக்கு வராமல் ஏமாற்றினான்.



-----------------------------------------------------------------------------------------------------------------------------------



சென்னையிலிருந்து கைது செய்யப்பட்டு திருச்சி கொண்டுவரப்பட்ட ஆறு பேரும் போலீஸ் விசாரணையில் நடிகை ரூபாவிற்கு எதிராக வாக்குமூலம் கொடுத்துவிட்டார்கள். அவர்களை நீதிமன்றத்தில் விசாரித்த நீதிபதி ரூபாவை கைது செய்ய உத்தரவிட்டார். இதை அறியாத ரூபா முன் ஏற்பாடு எதுவும் செய்யாமல் இருந்துவிட்டாள்.

---------------------------------------------------------------------------------------------------------------------------------



அமைச்சர் பழனி அரங்கசாமி இன்று திருச்சியிலிருந்து சென்னை கிளம்புகிறார். அவரிடம் ஒரு சந்திப்பிற்கு ஜெயச்சந்திரன் முன்னனுமதி கேட்டிருந்தான். அமைச்சர் தங்கியிருக்கும் ஹோட்டலிலிருந்து அவனுக்கு அழைப்பு வந்தது. "அமைச்சர் உங்களை மாலை மூன்று மணிக்கு சந்திக்க நேரம் ஒதுக்கியிருக்கிறார். " என்ற செய்தியை அமைச்சருடைய PA தெரியப்படுத்தினார். அந்த நேரம்தான் சாருமதிக்கு மருத்துவமனையில் மருத்துவரின் சந்திப்பிற்கு அனுமதி வாங்கியிருந்தது.



ஜெயச்சந்திரன் சிந்தித்துப் பார்த்தான். "அமைச்சரை இன்று விட்டால் சென்னை கிளம்பிவிடுவார். சாருமதியை நாளைக்கு மருத்துவமனைக்கு அழைத்து செல்லலாம் " என்று முடிவு செய்து கொண்டான். அவனுக்கு அமைச்சரிடமிருந்து அழைப்பு வந்ததே இரண்டு மணிக்குத்தான். அதற்கு பின் அவன் சாருமதிக்கு அழைக்கும் போது அவள் வீட்டை விட்டு கிளம்பிவிட்டாள். அவனுடைய கெட்ட நேரமோ என்னவோ அவள் கைபேசியையும் எடுத்துச் செல்லவில்லை.

அதனால் அவனால் அவளுக்கு செய்தி தெரிவிக்க முடியவில்லை.

------------------------------------------------------------------------------------------------------------------

"வாங்க ASP சார்... உக்காருங்க..." அந்த பிரம்பாண்டமான ஹோட்டல் அறையில் அமர்ந்திருந்த அமைச்சர் பழனி அரங்கசாமி தன் முன் நின்று விறைப்பாக சல்யூட் அடித்த ASP யை பார்த்து சொன்னார்.



"நன்றி சார்..." அவன் அவர் எதிரில் கம்பீரமாக அமர்ந்து கொண்டான்.



"பாதுகாப்பு ஏற்பாடெல்லாம் பிரமாதம் தம்பி... நானே உங்களை பார்க்கணும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்... நீங்களே நேரம் கேட்டு அனுப்பிட்டீங்க..." அவர் புன்சிரிப்பாக சொன்னார்.



"என்ன விஷயமா சார்..."



"நீங்க இப்போ என்ன விஷயமா என்னை பார்க்க வந்தீங்களோ அதே விஷயமா தான்..."



இப்போது ஜெயச்சந்திரன் லேசாக சிரித்துக் கொண்டான்.



"ரூபா எல்லாம் சொன்னா.. பிரச்சனை இல்லாமல் ஒதுங்கிட்டீங்கலாமே... அதுவும் என் பேர சொல்லி ஒதுங்கிட்டிங்கலாம்.... ரொம்ப சந்தோஷம்..."



அப்போதும் அவனுடைய புன்சிரிப்பு மாறவில்லை. அவர் தொடர்ந்து பேசினார்.



"உண்மைய சொன்னா... எனக்கு அவ பண்ணின வேலையில உடன்பாடு இல்லை தம்பி... பணம் சம்பாதிக்க எத்தனையோ வழி இருக்கு... இது தேவையில்லாத வேலை... அவளை நான் கண்டிச்சுக்குறேன்... உங்களுக்கு என்ன வேணும் சொல்லுங்க..."



"நீங்க ரூபா பிரச்சனையிலேருந்து ஒதுங்கிக்கணும்... அதை சொல்லிட்டு போகத்தான் வந்தேன்... "



"என்ன சொல்ற நீ... அவள் எனக்கு வேண்டியவ தம்பி... அவ மேல கைவச்சா உன் இடத்துல வேற ASP நாளைக்கே இருப்பான். அவன் நான் சொல்றத கேட்ப்பான்..." அவர் எகத்தாளமாக சொன்னார்.



"எனக்கு Transfer ஆர்டர் வருவதற்கு முன் இந்த CD வெளியே போயிடும்..." அவன் அவர் முன் ஒரு CD யை எடுத்து போட்டான்.



"என்ன CD இது...?"



"அந்த ரூபாவுக்கும் உங்களுக்குமான தொடர்பை அவளே தெளிவாக சொல்லும் CD ..."



இந்த CD விஷயம் வெளியே தெரிந்தால் அடுத்த நிமிஷமே அவர் அமைச்சர் பழனி அரங்கசாமி அல்ல, சாதாரண 'முனுசாமி' , 'கோவிந்தசாமி' மாதிரி அவரும் ஒரு பழனி அரங்கசாமியாக மாறிவிட வேண்டியதுதான்...



"அப்போ நீ அவகிட்ட சொன்னதெல்லாம் பொய்யா...? அவளை கேஸ்ல சிக்க வைக்க மாட்டேன்னு சொன்னியாமே..."



"ஆமா சொன்னேன்... அப்படி சொல்லலைன்னா அங்க கைது செய்தவனுங்களை இங்கு கொண்டுவர நான் கொஞ்சம் சிரமப்பட வேண்டியிருந்திருக்கும்.... அதை தடுக்க அப்படி சொல்லவேண்டியதாப் போச்சு... ஆனால் இவ்வளவு பெரிய கிரிமினல் வேலை சொய்பவள் நான் சொன்ன வார்த்தையை அப்படியே நம்பினது தான் எனக்கு ஆச்சர்யமாக இருக்கு...." அவன் நன்றாகவே பல்வரிசை தெரிய சிரித்தான்.



அவருக்கு எரிச்சல் வந்தது... அவனை பயங்கரமாக முறைத்தார்.



"நான் விசாரிச்சவரைக்கும் உங்களுக்கும் இந்த பிரச்சனைக்கும் சம்பந்தம் இல்லை... அதனாலதான் உங்களை ஒருமுறை எச்சரித்துவிட்டு போகலாம் என்று வந்தேன்."



"ரூபாவோட கேஸ் ரூபாவுக்கு எதிரா பக்காவா இருக்கு. நீங்க உள்ளே வந்தால்... அவளோடு சேர்ந்து உள்ளே போக வேண்டிவரும் பார்த்துக்கோங்க... CD யை கொடுத்துவிட்டேன் என்று நினைத்து விளையாடி பார்காதிங்க. இதேமாதிரி ஆயிரம் சாட்சியை என்னால உருவாக்க முடியும்... இந்நேரம் சென்னைல ரூபாவை போலீஸ் கைது செய்திருக்கும்... முடிந்தால் உங்க பேரை பயன்படுத்திக் கொண்டு உங்களோடு தொடர்பில் இருக்கும் சில பெண்கள் உங்களுக்கே தெரியாமல் செய்யும் குற்றங்களை தடுக்க பாருங்க... இல்லைன்னா ஒருநாள் இல்லை ஒருநாள் நீங்களும் ரூபாவுக்கு துணையா உள்ளே போக வேண்டிவரும்.. "



ஆளுங்கட்சி மந்திரியை ஒரு கலக்கு கலக்கிவிட்டு அங்கிருந்து அகன்றான்.



"மாவீரமும், ஒரு நேர்மையும்

கை கோர்த்து கொள்ள

அகராதியோ, அதை ஜெயச்சந்திரன்

என்று அர்த்தம் சொல்ல....



அதிகாரமோ, ஆர்பட்டமோ

இவன் பேச்சில் இல்லை

முன் ஆய்வதில், பின் பாய்வதில்

இவன் புலியின் பிள்ளை...."




இந்த வரிகள் வேட்டையாடு விளையாடு ராகவனுக்கு பொருந்தியதோ இல்லையோ... ஜெயச்சந்திரனுக்கு நன்கு பொருந்தும்...



அவன் அவ்வளவு சொன்னதற்கு பின் ரூபாவுக்கு பரிந்து பேச அவருக்கு என்ன பைத்தியமா....? என்ன ஆனாலும் அவருக்கு பதவி மிகமுக்கியம். இந்த ரூபாவுக்காக அதை இழக்க அவளிடம் அப்படி என்ன சிறப்பு...?



இந்த ரூபா இல்லையென்றால் இன்னொரு மாலா... ஷீலா... யாராவது இல்லாமலா போய்விடுவாளுங்க...?



அவர் வெற்றிகரமாக பின்வாங்கி ஒரு திறமையான அரசியல்வாதி என நிரூபித்தார்.

---------------------------------------------------------------------------------------------------------------------------

மூன்று மணியானது, மூன்று பத்து, மூன்று பதினைந்து... நேரம் தான் கடந்து கொண்டே இருந்ததே தவிர ஜெயச்சந்திரன் வந்தபாடில்லை.



மருத்துவமனைக்கு வந்ததுமே எப்படியும் ஜெயச்சந்திரன் வந்துவிடுவான் என்கிற நம்பிக்கை வலுத்துவிட அவள் சோதனைக்கு ரெத்தம் மற்றும் சிறுநீர் கொடுத்துவிட்டாள். 'அவன் வந்ததும் இருவரும் சேர்ந்து சென்று மருத்துவர் சொல்லும் நல்ல செய்தியை கேட்டுக் கொள்ளலாமே... அப்போது அவன் முகம் எப்படியிருக்கும். சந்தோஷப்படுவானா...? இல்லை எப்பொழுதும் போல இதற்கும் அழுத்தமாக இருந்துவிடுவானா...?' அவள் கற்பனை வானில் சிறகடித்துக் கொண்டிருக்கும் போது...



"சாருமதி... நீங்க உள்ளே போகலாம்..." என்று ஒரு நர்ஸ் சொன்னாள். அப்போதுதான் நடப்பிற்கு வந்து மணியை பார்த்த சாருமதி அதிர்ந்தாள். மணி மூன்று முப்பது.... 'இவ்வளவு நேரம் கனவிலேயே இருந்துவிட்டேனே... அதுசரி... இவன் இன்னும் வரவில்லையே... இப்போ தனியா தான் டாக்டரை பார்க்கனுமா...' அவளுடைய ஆசை கனவுக் கோட்டை இடிந்து விழுந்தது.



நர்ஸ் அவசரப்படுத்த வேறுவழியில்லாமல் அவள் உள்ளே சென்று மருத்துவரை சந்தித்தாள்.



"வணக்கம் மேடம்...."



"வாம்மா..." அந்த மருத்துவர் அவளை மகிழ்ச்சியாக வரவேற்று அந்த நல்ல செய்தியையும் சொன்னார்.



"வாழ்த்துக்கள்... நீங்க அம்மா ஆகப் போறீங்க..."



சாருமதிக்கு மகிழ்ச்சி ஒருபக்கம் இருந்தாலும் கணவன் மீது கோபமும் அதற்கு சரியான விகிதத்தில் இருந்தது. ஜெயச்சந்திரன் ஒரு சின்ன முயற்சி செய்திருந்தால் அவளுடைய கோபத்தையும் மகிழ்ச்சியாக மாற்றி அவளுக்கு நிம்மதி அளித்திருக்கலாம். ஆனால் தவறிவிட்டான்.



ஆம் அவள் மருத்துவமனைக்கு சென்றாளா...? மருத்துவர் என்ன சொன்னார்....? என்று கேட்டிருந்தால் அவளும் தன் கோபத்தை விட்டுவிட்டு அவனிடம் அந்த மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்து, இருவரும் மகிழ்ச்சிசூழலில் மூழ்கி முத்தெடுத்திருக்கலாம். ஆனால் அவன் அதை செய்யத்தவறி அவர்கள் இருவரின் நிம்மதியும் தொலைத்துவிட்டான்.
 

New Threads

Top Bottom