Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Completed Manadhodu Oru Raagam - Novel

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
750
Reaction score
859
Points
93
அத்தியாயம் - 21



"பூ...ர்ர்ர்...ணி...மா... கண்ண்ண்ணைத் தி...ற...ந்ந்ந்ந்துப் பா...ரு... உ..ன...க்..கு ஒண்...ணு...ம் இல்ல்ல்ல... நீ... நல்ல்ல்லா இரு...க்...க..." தேய்ந்துப் போன ரெக்கார்டை ஓடவிட்டது போல் தூரத்தில் யாரோ பேசுவது இழுவையாகக் கேட்டது.



அவள் கண்விழிக்க முயன்றாள். தூக்கம் கண்ணை இழுப்பது போன்ற உணர்வு இமைகளைப் பிரிக்கவிடாமல் தடுத்தது.



"பூ...ர்ர்ர்...ணி...மா... கண்ண்ண்ணைத் தி...ற... யு ஆ...ர் ஆ...ல் ரை...ட் நௌ..." மீண்டும் அந்தத் தேய்ந்த ரெக்கார்ட் அவளை எழுப்பியது. இந்த முறை இன்னும் பிடிவாதத்துடன் இமைகளைப் பிரித்தாள். முதலில் மங்கலாகத் தெரிந்தக் காட்சி மெல்ல மெல்லத் தெளிவடைந்தது. எதிரில் வெள்ளை உடையில் நர்ஸ் ஒருத்திப் பளீர் புன்னகையுடன் நின்று கொண்டிருந்தாள்.



"என்னைத் தெரியுதா?" - இப்போது அவள் பேசுவது சரியான அலைவரிசையில் கேட்டது.



"என்னை ஏன் காப்பாத்துனீங்க?" - முனகலாகக் கேட்டாள்.



"உனக்கு ஆயுசுக் கெட்டி. இன்னும் நூறு வருஷத்துக்குச் சாகமாட்ட. இப்போ நாக்கை நீட்டுப் பார்க்கலாம்". நர்ஸ் சொன்னபடி பூர்ணிமா நாக்கை நீட்டினாள்.



"கையில் வலி ஏதும் இருக்கா?"



"ம்ஹும்..."



"சரி. ரெஸ்ட் எடுத்துக்க. இன்னும் கொஞ்ச நேரத்துல டாக்டர் வந்து பார்ப்பார்" என்று கூறிவிட்டு கேஸ் ஷீட்டை எடுத்து ஸ்டேட்டஸ் குறித்து வைத்தாள்.



அயர்வுடன் கண்மூடிய பூர்ணிமா அப்படியே தூங்கிப் போனாள். அவள் மீண்டும் கண்விழிக்கும் போது அவளுக்கு அருகில் பெரியம்மா சரளா அமர்ந்திருந்தாள். அவள் முகத்தில் கோபம் டன் டன்னாய் குடியேறியிருந்தது. தன்னுடைய குட்டு வெடித்துவிட்டது என்பதைப் பூர்ணிமா புரிந்து கொண்டாள். இப்போது சித்தார்த் அவளுக்குச் செய்த துரோகத்தை விட, அவள் தன் குடும்பத்திற்குச் செய்த துரோகத்தின் குற்ற உணர்ச்சிதான் விஸ்வரூபம் எடுத்து அவளை வருத்தியது.



கண் கலங்க... உதடு துடிக்க "அ...ம்...மா..." என்றாள். சரளா விருட்டென்று எழுந்து அறையிலிருந்து வெளியேறிவிட்டாள். சற்று நேரத்தில், "என்ன நல்ல தூக்கமா?" என்று கேட்டபடி உள்ளே நுழைந்தாள் நர்ஸ். அவளுக்குப் பின்னால் பெரியம்மா வந்தாள்.



"ம்ம்ம்..." என்று முணுமுணுத்தாள் பூர்ணி.



அவளுடைய உடல்வெப்பம், ரெத்த அழுத்தமெல்லாம் சோதித்துவிட்டு, இறங்கிக் கொண்டிருந்த சலைன் பாட்டிலில் இரண்டு ஊசியை ஏற்றித் தான் வந்த வேலையை முடித்துவிட்டு வெளியேறினாள் நர்ஸ். பூர்ணிமா மீண்டும் சரளாவிடம் பேச்சுக் கொடுத்தாள். அவளோ பிடிவாதமாகப் பேச மறுத்தாள். பூர்ணிமா கெஞ்சினாள்... அழுதாள்... ஆனால் சரளா கரையவில்லை. இரும்பு போல் இறுகிப் போயிருந்தாள். அவளாவது பரவாயில்லை. குறைந்தபட்சம் பூர்ணிமாவுடன் நாள் முழுவதும் ஒரே அறையில் இருந்தாள். ஆனால் வேல்முருகனும் அவருடைய அண்ணன்களும் அவளை எட்டிக் கூடப் பார்க்கவில்லை.



பூர்ணிமா வீட்டிற்கு வந்து ஒரு வாரம் கழிந்துவிட்டது. சொந்த வீட்டிலேயே அகதி போல் உணர்ந்தாள். அறையைவிட்டு வெளியே வருவதே இல்லை. வேளாவேளைக்கு உணவு மட்டும் வேலைக்காரி மூலம் வந்து சேரும். மற்றபடி உறவுகள் யாவும் அவள் செத்தாளாப் பிழைத்தாளா என்று கூடப் பார்க்காமல் ஒதுங்கியிருந்தார்கள்.



அம்மா இருந்திருந்தா இப்படி நம்மைத் தனியா விட்டுருப்பாங்களா என்கிற கழிவிரக்கத்தில் சில நேரம் அழுவாள். இப்படி ஒரு எண்ணம் தனக்கு இதுநாள் வரை வந்ததில்லை, அதற்குத் தன் தந்தை இடமளிக்கவில்லை. அப்படிப்பட்டவரை வருத்திவிட்டோம் என்கிற குற்ற உணர்ச்சியில் சில நேரம் அழுவாள். சித்தார்த்தின் நினைவில் சில நேரம் அழுவாள்... பிறக்கப் போகும் குழந்தையின் நினைவில் சில நேரம் அழுவாள். போதாததற்கு உடல் உபாதைகள் வேறு. ஏக்கமும் துக்கமும் அவளைப் பாடாய்படுத்திக் கொண்டிருந்த நாட்கள் அவை. வாழவும் பிடிக்காமல் சாகவும் முடியாமல் விதியின் பிடியில் சிக்கி உழன்று கொண்டிருந்தாள்.



"பூர்ணி..." - எங்கோ சூனியத்தை வெறித்துக் கொண்டிருந்தவளுக்கு அந்தக் குரல் கேட்டது. ஒரு நொடி உடல் விரைக்கச் சட்டென்று திரும்பிப் பார்த்தாள்.



'அ..ப்..பா...' - பல நாட்களுக்குப் பிறகு மகள் முன் வந்து நின்றார். அவன் முகத்தில் வேதனை அப்பியிருந்தது. ஆளே உடைந்து போயிருந்தார். அவர் பூர்ணிமாவை பார்த்த பார்வையில் கோபம் இல்லாமல் இரக்கம் கசிந்தது. 'எப்படி! - அவளுக்குப் புரியவில்லை.



"வாடா..." - இரண்டு கைகளையும் விரித்து மகளை அழைத்தார்.



"அ..ப்..பா..." சிட்டாய் பறந்து வந்து தந்தையிடம் தஞ்சம் புகுந்தாள். "அப்பா... ப்பா... " - அடக்கிவைத்திருந்த துக்கமெல்லாம் வெடித்துக் கொண்டு வெளிப்பட்டது. தேம்பித் தேம்பி அழுதாள்.



"பூர்ணி... பூர்ணி..." கண்ணீருடன் மகளின் தலையைக் கோதினார்.



"தப்புப் பண்ணிட்டேன் ப்பா... பெரிய தப்புப் பண்ணிட்டேன். ரொம்பப் பெரிய தப்பு... " - கண்ணீருடன் கதறினாள்.



"நீ ஒண்ணும் பண்ணலடா. விடு... அப்பா பார்த்துக்கறேன்" - மகளைத் தேற்ற முயன்றார்.



"என்னை ஒதுக்கிடாதீங்கப்பா... அப்பா... அப்பா..."



"இல்லடா... இல்ல... பூர்ணி... சொன்னாக் கேளு. அப்பா சொல்றேன்ல"



"சாரி ப்பா... சாரி... சாரி... என்னை... என்... என்னைக் கொன்னுடுங்கப்பா... நா வேண்டாம்... நா இருக்கக் கூடாதுப்பா... ப்பா..." - உணர்ச்சி வேகத்தில் அவள் உடல் நடுங்கியது. தொடர்ந்து தேம்பித் தேம்பி அழுததில் சீராக மூச்செடுக்க முடியாமல் தடுமாறினாள். நாவரண்டு, கண்களை இருட்டிக் கொண்டு வந்தது.



"அழாத பூர்ணி. பூர்ணி... பூ... பூர்ணி... பூ...ர்...ணி..." - கையொரு பக்கம் காலொரு பக்கம் என்று இழுத்துக் கொண்டு சரியும் மகளைக் கண்டு அலறினார் வேல்முருகன்.



******



ஒரு மணி நேரத்திற்குப் பிறகு பூர்ணிமாவின் அறை...



"நாந்தான் கிளியரா சொல்லியிருந்தேனே சார். பூர்ணிமாவோட ஹெல்த் கண்டிஷன் ரொம்ப வீக்கா இருக்கு. நல்ல டயட் ரொம்ப அவசியம். ஏன் நீங்க அவங்கள சரியா கவனிக்கல" - குடும்ப மருத்துவர் கண்டிப்புடன் கேட்டார்.



"இல்ல... டயட்டெல்லாம் கரெக்டா தானே!" - வேல்முருகன் திணறினார்.



"இல்ல சார்... அவங்க சரியான டயட் எடுத்துக்கல. சரியாத் தூங்கல... ரொம்ப அனிமிக்கா இருக்காங்க. இதுல மெடிசன்ஸ் எழுதியிருக்கேன். ரெகுலரா கொடுக்கச் சொல்லுங்க. கேர் ஃபுலா பார்த்துக்கங்க. நான் வரேன்" - டாக்டர் கிளம்பிச் சென்றார்.



"அண்ணீ ..." - சத்தம் போட்டார்.



வேலைக்காரப் பெண்மணி வந்து நின்றாள். "அண்ணி எங்க?"



"அம்மா கோவிலுக்கு..."



"பூர்ணி சரியாச் சாப்பிட்டாளா இல்லையா? வீட்டுல இருக்கப் பொம்பளைங்கல்லாம் என்ன பண்ணிட்டு இருக்கீங்க?" - வேல்முருகன் கடுமையாகக் கோபப்பட்டார். அந்தப் பெண் பதில் பேசவில்லை.



"பூர்ணியோட கண்டிஷன் தெரிஞ்சும் ஏன் அவளைச் சரியாக் கவனிக்கல. அதைவிட உங்களுக்கெல்லாம் இங்க என்ன வேலை?"



"ஏன், உங்க பொண்ணக் கவனிக்கிறதைத் தவிர எங்களுக்கு வேற வேலை எதுவும் இருக்கக் கூடாதா?" - சட்டென்று உள்ளே நுழைந்தாள் சரளா.
 

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
750
Reaction score
859
Points
93
அத்தியாயம் - 22



"ஏன், உங்க பொண்ணக் கவனிக்கிறதைத் தவிர எங்களுக்கு வேற வேலை எதுவும் இருக்கக் கூடாதா?" - சட்டென்று உள்ளே நுழைந்தாள் சரளா.



"அண்ணி, நீங்க கோவிலுக்குப் போகலையா!"



"கிளம்பிட்டு இருந்தேன்... இன்னும் போகல"



"அப்போ நான் கூப்பிட்டது உங்களுக்குக் கேக்கலையா?"



"கேக்காம என்ன? நீங்க கூப்பிட்டக் குரலுக்கெல்லாம் ஓடியோடி வந்து உங்களுக்கும் உங்க மகளுக்கும் சேவகம் செய்யணும்னு எங்களுக்கு என்ன அவசியம்?"



"என்னண்ணி இப்படிப் பேசுறீங்க? பூர்ணி உங்க மக-ண்ணி"



"ஹா...! நல்ல கதையா இருக்கு நீங்க சொல்றது. எம்பொண்ணு ராஜி மட்டும்தான்"



"ராஜியா!" அவர் முகத்தைச் சுளித்தார்.



"ஏன்? ராஜிக்கென்ன?" முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க மிகவும் ஆக்ரோஷமாகக் கேட்டாள் சரளா. இதற்கு முன் அவளுக்கு இவ்வளவு கோபம் வந்து வேல்முருகன் பார்த்ததே இல்லை எனலாம். அவர் சற்றுக் குரலைத் தாழ்த்திச் சாதுவாகவே பேசினார்.



அண்ணி... ராஜி..."



"சொல்லுங்க, ராஜிக்கு என்ன? அவ ஒழுக்கங்கெட்டவ... ஓடுகாலி... குடும்ப மானத்த வாங்கினவ... இதானே?"



"இந்த மாதிரியெல்லாம் பட்டங்கட்டித்தானேய்யா எம்மகள உயிரோட எரிச்சுட்டு வந்து நின்னீங்க. இப்ப உங்க மக என்ன பெரிய உத்தமப் புத்திரியா இருக்காளா? அவளுந்தானே மானங்கெட்டுப் போயி வந்து நிக்கிறா? அவளையும் கொளுத்த வேண்டியது தானே?"



"அண்ணீ...!" - வேல்முருகனின் முகம் பயங்கரமாக மாறியது. அந்த நேரத்தில்தான் ஜெயராமனும் குலசேகரனும் வீட்டிற்குள் வந்தார்கள். அங்கு ஏதோ வாக்குவாதம் நடந்து கொண்டிருப்பதைக் கவனித்துவிட்டு என்னவென்று புரியாத குழப்பத்துடன்,



"என்ன? என்ன முருகா?" என்றார் ஜெயராமன். கடைசியாகப் பேசியது வேல்முருகன் என்பதால் அவரிடமே விசாரணையை ஆரம்பித்தார். ஆனால் அவருடைய அந்தச் செயல் சரளாவின் ஆத்திரத்தை மேலும் கிளப்பிவிட்டது.



"கேளுங்க... அந்த ஆளுப் பேச்சக் கேட்டுத்தானே எம்மகளை உசுரோட எரிச்சு சாம்பலாக்குனீங்க... இப்பவும் அவனுகிட்டையேப் போயிக் கேளுங்க. அப்படியே மனசுல உள்ளதச் சொல்லிட்டுதான் மறு வேல பாப்பான். சதிகாரன்..." - ஆண்டுக் கணக்கில் அடக்கிவைத்திருந்த ஆத்திரமெல்லாம் எரிமலை போல் வெடித்துக் கொண்டு வெளியேறின.



ஜெயராமன் மனைவியைக் கண்டிக்கவில்லை. குலசேகரனும் அண்ணியின் அதிகப்படியான பேச்சை ஆமோதிப்பது போலவே நின்று கொண்டிருந்தது வேல்முருகனுக்கு அதிர்ச்சியாக இருந்தது.



"என்னண்ணா இதெல்லாம்? அண்ணி பேசிகிட்டே இருக்காங்க நீ பாத்துகிட்டு இருக்க?"



"பாக்காம என்ன செய்வாரு? இத்தனை வருஷமா உனக்கே கூஜாத் தூக்கிக்கிட்டு இருந்துட்டாரு. கடைசியில என்ன கெடச்சுது? பெத்தப் புள்ளைய பலிக் கொடுத்ததுதான் மிச்சம்"



"அண்ணா... ராஜி பண்ணினது தப்பு. அந்தத் தப்புக்கான பலனைத்தான் இப்போ பூரணி அனுபவிக்கிறா"



"இதுக்கு மேல எம்மகளைப் பத்தி ஒரு வரத்தை பேசுனா, நல்லா இருக்காது சொல்லிட்டேன். உம்மகத் திமிரெடுத்துத் தப்புப் பண்ணீட்டு வந்து நிக்கிறா, அதுக்கும் எம்மக மேலயே பழிப் போடுவியா?" - சரளா.



"அண்ணே... நா உன்கிட்டப் பேசிகிட்டு இருக்கேன். இவங்கப் பேச்ச நிறுத்தச் சொல்லு"



"எதுக்கு நிறுத்தணும்? ஏன் நிறுத்தணும்? இப்படி அடக்கி அடக்கியே தானே எங்களை ஒண்ணுமில்லாமப் பண்ணிட்ட?" சரளாவின் ஆத்திரம் கணத்திற்குக் கணம் அதிகரித்துக் கொண்டிருந்தது.



வேல்முருகன் அண்ணியின் பேச்சைப் புறந்தள்ளிவிட்டு அண்ணனிடம் பேச முயன்றார்.



"அண்ணே... எனக்கு ராஜியும் பூர்ணியும் வேறவேற இல்லண்ணே"



"......................."



"பூர்ணி பண்ணினத் தப்பு எப்பத் தெரிஞ்சதோ அப்பயிலேருந்து அவ மொகத்துலையே நா முழிக்கல. பாத்துகிட்டுத் தானே இருந்த?"



"ஆஹா... என்ன ஜாலம்...! மொகத்துலையே முழிக்கலையாம்! முழிக்காதவருதான் அவளுக்கு ஒண்ணுன்னதும் அந்தக் குதி குதிச்சாரா!" - சரளா.



"பூர்ணி ஏமாந்துப் போயிருக்காண்ணே. அவளைத் திட்டம் போட்டு ஏமாத்தியிருக்கான் அந்தக் குருவோட தம்பி. நா எல்லாத்தையும் விசாரிச்சுட்டேன். நம்மப் பொண்ணுப் பொறியிலச் சிக்குன எலியாயிட்டாண்ணே. புரிஞ்சுக்க"



"இந்த ஆளுகிட்ட உங்களுக்கு என்னங்கப் பேச்சு? விசாரிச்சாராம் விசாரிப்பு... எப்ப விசாரிச்சாரு? இந்த ரெண்டு மூணு நாள்லத் தானே விசாரிச்சிருப்பாரு. அப்போ ஹாஸ்ப்பிட்டல்ல அவ கர்ப்பத்தை ஏன் கலைக்க வேண்டாம்னுச் சொன்னாராம்?"



"அதைக் கலச்சா பூர்ணியோட உயிருக்கு ஆபத்துன்னு உங்க முன்னாடிதானே டாக்டர் சொன்னாரு?" - தன்னிலையிழந்து மனதிலிருந்ததை சொல்லிவிட்டார் வேல்முருகன். அந்த நொடியே ஜெயராமன் செத்துவிட்டார்.



'நீ பெத்தப் பொண்ணு மேல உனக்கு இருந்த கரிசனம் நா பெத்தப் பொண்ணு மேல எனக்கு இல்லாமப் போச்சே!' - அவர் மனம் அழுதது. குற்ற உணர்ச்சியும் கழிவிரக்கமும் அவர் உயிரைக் குடிக்கத் துவங்கிவிட்டது.



'போச்சு... எல்லாம் போச்சு...' - அதுவரை பார்வையாளராக இருந்த குலசேகரனின் மனமும் விட்டுப் போனது.



"ஆங்... அப்படிச் சொல்லு. பூர்ணியோட உயிருக்கு ஆஆஆபத்து...!!! உங்க பொண்ணு உயிருன்னா அது சக்கரக்கட்டி. அதுவே எங்கப் பொண்ணு உயிருன்னா ------ல்ல? நீயெல்லாம் நல்லா இருப்பியா. பழிகாரா... பாதகா... எல்லாம் இவனைச் சொல்லணும்... இவன் ஒழுங்கா இருந்திருந்தா எம்மகளுக்கு ஏன் இந்த விதி. உன்தம்பி பதவி வெறிக்கு நா பெத்த மகள பலியாக்கிட்டானே!" - கணவனைச் சட்டையைப் பிடித்து உலுக்கியவள் தானும் அடித்துக் கொண்டு கதறியழுதாள்.



"இ... இல்ல... அப்படி இல்ல..." - வேல்முருகன் உளறினார்.



"வேற எப்படி முருகா?" - முதல் முறையாகக் குலசேகரன் வாய் திறந்தார்.



"ராஜி விஷயம் அத்து மீறிப் போயி, வேற வழியில்லாம... ஆனா பூர்ணி... விசாரிக்க நெனச்சேன்..." பதட்டத்தில் ஏதோதோ கோர்வையில்லாமல் பேசினார்.



"இல்ல முருகா. அன்னைக்கு ராஜி பண்ணினத பூர்ணிமா பண்ணியிருந்தா நீ அந்த முடிவு எடுத்திருப்பியான்னு சந்தேகமா இருக்கு" - குலசேகரன்.



"அண்ணா... என்னை நம்பு... நா சொல்றதை..." - தம்பியின் முகத்துக்கு நேரே கை நீட்டித் தடுத்தார் ஜெயராமன்.



"இனி பேச எதுவும் இல்ல முருகா. ஒண்ணா இருந்த சங்கு ஒடஞ்சிடிச்சு. இனி ஒட்டாது. தப்பு உம்மேல மட்டும் இல்ல. எங்களுக்கும் அதுல பங்கு இருக்கு. இனி பேச எதுவும் இல்ல விட்டுடு"



"என்னண்ணே?"



"இன்னிக்குச் சாயங்காலமே நாங்க இந்த வீட்டுலேருந்து வெளியே போறோம். சொத்துப் பத்துப் பங்கெல்லாம் சீக்கிரமாப் பிரிச்சுக்கிட்டு அவங்கவங்க அவங்கவங்க வாழ்க்கையப் பாத்துகிட்டுப் போவோம். இது இன்னைக்கு நேத்து எடுத்த முடிவு இல்ல. என்னைக்கு நீ பூர்ணிமாவை ஹாஸ்பிடல்லேருந்து வீட்டுக்குக் கூட்டிட்டு வந்தியோ அன்னைக்கே எடுத்த முடிவு. இப்பதான் உன்கிட்டச் சொல்லறச் சந்தர்ப்பம் கிடச்சுது. சொல்லிட்டேன்" - முடிவாகக் கூறினார்.



ஜெயராமன் தம்பதியர் கூறியது போலவே அன்று மாலை தங்கள் உடைமைகளுடன் அந்த வீட்டிலிருந்து வெளியேறினார்கள். அவர்கள் கூடவே குலசேகரனும் வெளியேறினார். பலமிழந்து தனிமரமாக நின்றார் வேல்முருகன்.



 

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
750
Reaction score
859
Points
93
அத்தியாயம் - 23



ஜெயராமன் தம்பதியும் குலசேகரனும் வீட்டைவிட்டு வெளியேறி இரண்டு மாதங்கள் ஓடிவிட்டன. வேல்முருகனைப் பார்க்கச் சகிக்கவில்லை. மகள் ஏற்படுத்திய அவமானத்திலிருந்து மீள முடியாமல் உழன்று கொண்டிருந்தவர் தூணாய் நம்பியிருந்தது சகோதரர்களைத்தான். அவர்களின் துணை கொண்டுதான் அந்தக் குருவின் குடும்பத்தை வேரறுக்க நினைத்திருந்தார். ஆனால் நடந்ததோ வேறு. அவர் மலை போல நம்பியிருந்தவர்கள் இக்கட்டான நேரத்தில் அவரைக் கைவிட்டுச் சென்றார்கள். அவர் செயல்பட முடியாமல் நிலைகுலைந்து போனார்.



"மல்லிம்மா, என்னால தானே அவங்கல்லாம் போயிட்டாங்க" பூர்ணிமா ஆற்றாமையுடன் கேட்டாள்.



"எத்தன தடவ இதே கேள்வியக் கேப்ப பூர்ணி?"



"கஷ்ட்டமா இருக்கும்மா. அம்மா, பெரியப்பால்லாம் இல்லாம இந்த வீடே நல்லால்ல. எம்மேல இருக்கிறக் கோவத்துல அப்பாவையும் விட்டுட்டுப் போயிட்டாங்க. எல்லாத்துக்கும் நாந்தான் காரணம். என்னாலதான் எல்லாமே" உடைந்து அழுதாள்.



"சொன்னாக் கேளு பூர்ணி. நீயா எதையாவது நெனச்சு அழுதுகிட்டே இருந்தா என்ன அர்த்தம்? இங்க நடந்த எதுக்கும் நீ காரணம் இல்ல. எல்லாம் விதிப் படி நடக்குது. நீ அமைதியா இரும்மா" நிலவரத்தை ஓரளவுக்கு ஊகித்து வைத்திருந்த மல்லிகா அதைப் பூடகமாகப் பூர்ணிமாவிற்கு எடுத்துரைத்தாள்.



"அமைதியா!" - விரக்தியாகக் கேட்டாள்.



"அப்படியெல்லாம் நினைக்காத பூர்ணி. இதுவும் கடந்து போகும்னு நினைச்சுக்க. துக்கப் பட ஒரு காலம் வந்தா சந்தோஷப்படவும் ஒரு காலம் வந்தே தீரும். அதை யாராலும் தடுக்க முடியாதும்மா" - ஆறுதல் கூறினாள்.



பூர்ணிமாவிற்குத்தான் ஆறுதல் அடைய முடியவில்லை. அவள் வாழ்க்கைச் சிதைந்ததோடு அல்லாமல் குடும்பமும் சிதைந்துவிட்டதே. இதைச் சரி செய்தால் ஒருவேளை அவள் மனம் சற்று ஆறுதலடையுமோ! முயன்றுப் பார்க்கலாம் என்று தோன்றியது.



"மல்லிம்மா... நா போயிப் பெரியப்பாக்கிட்ட மன்னிப்புக் கேட்டு வீட்டுக்குக் கூட்டிட்டு வரட்டுமா?"



"இல்ல... அது..."



"இல்ல... நா நேர்லப் போயி நின்னா அம்மாவுக்கும் என் மேல இருக்கக் கோபம் போயிடும். பெரிய பெரிப்பாவும் அப்படித்தான். சேகரன் பெரியப்பா வேணுன்னாக் கொஞ்சம் திட்டுவாரு. அப்புறம் அவரும் சரியாயிடுவாறு" நம்பிக்கையோடு கூறியவள், அதே நம்பிக்கையை ஆதாரமாகப் பிடித்துக் கொண்டுதான் சரளாவின் முன் சென்று நின்றாள்.



அழைப்பு மணி ஒலிக்கும் சத்தம் கேட்டுக் கதவைத் திறந்த சரளா, ஓடாய் மெலிந்து, கருத்து, களையிழந்துப் போய், லேசாக மேடிட்ட வயிற்றோடு வந்து நிற்கும் பூர்ணிமாவைக் கண்டு பதறினாள். தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்பது போல் அவள் மனதில் ஆயிரம் கோபதாபங்கள் இருந்தாலும், தான் தூக்கி வளர்த்த மகள் பரதேசிக் கோலமாய் வந்து நிற்பதைக் கண்டு உள்ளம் பதறியது சரளாவிற்கு.



"பாவி மகளே! இந்தக் கோலத்துலையா உன்ன நா பாக்கணும்?" - பாய்ந்துக் கட்டிக் கொண்டாள்.



"அம்மா..." என்று பூர்ணியும் அவளோடு ஒட்டிக் கொண்டாள்.



"உனக்கு என்ன கொர வச்சேன் பூர்ணி. இந்த அம்மா நெனப்பு உனக்கு வரலையா? ஏண்டி இப்படிப் பண்ணுன? உனக்கு நல்லதுப் பண்ணிப் பாக்குற ஆசை எனக்கு இருக்காதா? ராஜி பண்ணினது ஒரு பங்கு வலின்னா நீ பண்ணினது நூறு பங்கு வலிடி எனக்கு" - சரளாவின் பிடித் தளரவில்லை. மனதில் உள்ள ஆதங்கத்தையெல்லாம் கொட்டிக் கொண்டிருந்தாள்.



பூர்ணிமா அவள் பிடியிலிருந்து நழுவி சரளாவின் பாதத்தில் முகம் பதித்தாள். மனதில் உள்ள குற்ற உணர்ச்சிக் கண்ணீராய் பெருகித் தாயின் பாதத்தைக் கழுவி மன்னிப்பை வேண்டியது.



"வேண்டாம்டா என் கண்ணே! எந்திரி. உள்ள வா" - மகளை அணைத்து உள்ளே அழைத்துச் சென்றாள். அவள் எப்படி வந்தாள் என்று விசாரித்து, நம்பிக்கையான டிரைவரோடு காரில்தான் வந்திருக்கிறாள் என்பதைத் தெரிந்து கொண்டு நிம்மதியடைந்தாள். மகளுக்குக் காபிக் கொடுத்து உபசரித்தாள். உடல் நலனை விசாரித்து, உபாதைகளுக்கு நிவாரணம் கூறினாள். ஒருவாறுத் தாயும் மகளும் பேசி அழுதுச் சமாதானமாகி இயல்பு நிலைக்குத் திரும்பியதும் பூர்ணிமா கேட்டாள்.



"நீங்கல்லாம் இல்லாம என்னால அங்க இருக்கவே முடியலம்மா. கெளம்புங்க. நம்ம வீட்டுக்குப் போகலாம்"



"இல்ல பூர்ணி. இனி இதுதான் எங்க வீடு. என்னைப் பாக்கணும்னுத் தோணுச்சுன்னா இங்க வந்து பாத்துட்டுப் போ"



"என்னம்மா? இன்னும் என் மேல இருக்கக் கோவம் போலியா?"



"உம்மேல எனக்கு என்னடாக் கோவம்? அதெல்லாம் ஒண்ணும் இல்ல"



"அப்புறம் என்ன? ஓ பெரியப்பாக் கோவப்படுவாரா. ஓகே அவர் வந்ததும் அவரையும் சமாதானம் பண்ணி நம்மலோடையே கூட்டிட்டுப் போய்டுவோம். சரியா?"



"அது இல்ல பூர்ணி... வந்து..."



"எதுக்கு மென்னு முழுங்குற? இனி உங்க குடும்பத்துக்கும் எங்கக் குடும்பத்துக்கும் எந்த ஓட்டும் இல்ல உறவும் இல்லன்னுச் சொல்லி வெட்டிவிட வேண்டியது தானே?" என்றபடி ஜெயராமன் உள்ளே நுழைய குலசேகரன் அவரைத் தொடர்ந்து வந்து கொண்டிருந்தார்.



"பெரியப்பா...!!!"



"எதுக்கு நீ இங்க வந்த? யாரு உன்ன உள்ள விட்டது? ஏய் என்னடி? ஆடு பக குட்டி உறவா?" மகளிடம் ஆரம்பித்து மனைவியிடம் முடித்தார் ஜெயராமன்.



"பெரியப்பா... நா பண்ணதுத் தப்புதான். மன்னிச்சுடுங்க"



"எம் பொண்ணையே நா மன்னிக்கல. எரிச்சுட்டேன்... உன்னைய மன்னிக்கனுமா? மரியாதையா ஓடிடு. இல்ல..." - சுட்டுவிரல் நீட்டிக் கடுமையாக எச்சரித்தார். அவர் முகத்தைப் பார்க்கவே பயமாக இருந்தது அவளுக்கு.



'இவர் என்ன பேசுகிறார்!' - ஓரிரு நொடிகள் விளங்காமல் விழித்தவள்,



"எ... என்ன? என்ன சொன்னிங்க இப்போ? ரா... ராஜிய... நீங்களேவா!!!" என்றாள் தட்டுத் தடுமாறி.



"ஆமா நாங்களேதான். அதுக்கு என்ன இப்போ?" ஆணவமாகக் கேட்டார்.



'என்ன!!!' - அவள் உள்ளம் பதறியது. எப்படி முடிந்தது! செவி வழிக் கேட்டதை இதயம் நம்ப மறுத்தது. ஆனால் அவளுடைய பாசமிகுப் பெரியப்பாவின் முகத்திலிருந்த கொடூரம், அவரால் எதையும் செய்ய முடியும் என்று எடுத்துரைத்தது. எத்தனை அதிர்ச்சியைத்தான் தாங்குவாள். யாருக்காக அழுவாள். ராஜி!!!



"ஏ...ஏன்...? ரா... ராஜி வயித்துல... தெரியாதா உங்களுக்கு?" - பேச முடியாமல் தொண்டையை அடைத்தது அவளுக்கு.



"என் வம்சத்துலக் கலப்பா! ஹா..." - அலட்சியமாகக் கூறினார்.



'என்ன மிருகத்தனம்! சொந்த மகளையே...! கடவுளே! ராஜி...! ராஜி!' உள்ளம் புலம்பக் கண்களில் கண்ணீர் கொட்டியது.



"ஏன்...? ஏன் இப்படிப் பண்ணுனிங்க? மனசுல ஈரமே இல்லையா உங்களுக்கு? ஐயோ ராஜி...! ராஜி!" வாய்விட்டு அழுதாள். உணர்ச்சிப் பெருக்கில் உடல் நடுங்கக் கால்கள் பலமிழந்துத் தொய்ந்து மடங்க, நிலைதடுமாறிக் கீழே சரிந்தாள்.



"பூர்ணி" - பாய்ந்து வந்து தாங்கிப் பிடித்த சரளா, "மனுஷனா நீ?" என்று கணவனிடம் சீறினாள்.



"திருந்தவே மாட்டியா நீயெல்லாம்? ஒரு பொண்ணத்தான் காவுக் கொடுத்துட்ட. இன்னொன்னையும் அதே மாதிரிப் பண்ணலாம்னுப் பாக்குறியா?" கடுமையாகக் கேட்டாள்.



"விடுங்கம்மா" - சரளாவின் பிடியிலிருந்து திமிறி விடுபட்டாள் பூர்ணி.



"உங்களுக்கும் தெரியும் தானே?"



"இல்ல... அப்போ இல்ல... அப்புறம்.."



"தெரிஞ்சப் பிறகு என்ன பண்ணுனீங்க?"



சரளாவிடம் பதில் இல்லை. மகளை எரித்துக் கொன்றதில் ஒரு தாயாக, பெண்ணாக அவளுக்கு நிச்சயமாக உடன்பாடில்லை. ஆனால் தன் மகள் மீதும் தவறு இருக்கிறதோ என்கிற சந்தேகமும் இருந்துள்ளது. கலப்புத் திருமணம் பெரும் குற்றம் என்கிற கூற்றை அவளும் நம்பியிருக்கிறாள். அதனால் தானே அவள் கணவன் மற்றும் கொழுந்தனை வலுவாக எதிர்க்கவில்லை. ஆனால் இப்போதோ, பூர்ணிமாவை மன்னித்தவர்கள் தன் மகளை மன்னிக்கத் தவறிவிட்டார்களே என்று கிடந்துத் தவிக்கிறாள். மற்றபடி பூர்ணிமாவையும் கொன்றிருந்தாலோ அல்லது பூர்ணிமா இந்தக் குற்றத்தைச் செய்யாமலே இருந்திருந்தாலோ ராஜியுடைய மரணத்திற்குச் சரளா எந்த நியாயமும் கேட்டிருக்க மாட்டாள்.



"இல்ல... இல்ல... விட மாட்டேன்... உங்களச் சும்மா விடவே மாட்டேன். ராஜிக்கு நியாயம் கிடைக்கணும். இப்போவே போலீஸுக்குப் போயி உங்களையெல்லாம் கம்பி எண்ண வக்கிறேன் பாருங்க. அப்படி என்ன வெறி உங்களுக்கெல்லாம்" ஆவேசத்துடன் வாசல் நோக்கி நடக்கத் துவங்கினாள்.



"போ போ... கம்ப்ளைன்ட் குடுக்கையில உங்கப்பன் பேரையும் சேர்த்துக்குடு. ஏன்னா அவன்தான் இந்தக் கேஸ்ல முதல் குற்றவாளி. அவனுக்காக... அவன் பேச்சைக் கேட்டுத்தான் நாங்க இத செஞ்சோம்" - சட்டென்று அவள் நடைத் தடைப்பட்டது. ஏற்கனவே நொருங்கிப் போயிருந்த அவள் இதயத்தில் மேலும் ஒரு பயங்கரமான சம்மட்டி அடி விழுந்தது.



"முருகனோட பதவி, கௌரவம், அங்கீகாரம் அத்தனையும் ஆட்டம் காண வச்சது ராஜியோட திருட்டுக் கல்யாணம். அவன் சொன்னான், அவனுக்காக நாங்க அமைதியா இருந்தோம்"



பூர்ணிமா மெல்ல திரும்பி தன் பெரியப்பாவின் முகத்தைப் பார்த்தாள். பெரியப்பாவைப் பார்த்தாள். மனதின் உணர்வுகளை அள்ளிப் பூசிக்க கொண்டிருந்த அவர் முகம், அவருடைய வார்த்தையிலிருந்த உண்மையை அவளுக்கு உணர்த்தியது.



"செஞ்சது உங்கப்பனோட ஆளுங்க"



"......." - மெளனமாக நின்றாள்.



"எம் மக செஞ்சது எனக்குப் பிடிக்கலதான். கலப்புக் கல்யாணம் என் குலத்துக்கு உதவாதுதான். ஆனா அவளைக் கொலைப் பண்ணனும்னு நான் நினைக்கல. அவன் நெனச்சான். அவ இருந்தா என்னைக்கி இருந்தாலும் அவனோட கட்சியில அவனுக்குப் பிரச்சனைக் கிளம்பும்னுச் சொன்னான். அவனோட கௌரவத்துக்குப் பாதிப்புன்னு சொன்னான். நம்புனேன். அவனுக்காக எம் பொண்ணையே பலிக் கொடுத்தேன். ஆனா இன்னைக்கு என்ன ஆச்சு?"



"அன்னைக்கு ராஜி பண்ணுனதத் தான இன்னைக்கு நீயும் பண்ணியிருக்க. உன்னைய கொல்லணும்னு நெனச்சானா? இல்லையே! ஏன்னா அவனுக்கு எல்லாத்தையும் விட நீ பெருசு. அப்போ எம் மக?"



"ஏன்னுக் கேட்டா 'நொண்டிக் குதிரைக்குச் சருக்குனதுதான் சாக்குன்னு', அந்தக் குருவோட தம்பி உன்னைய சதிப் பண்ணி ஏமாத்திட்டான்னுக் காரணம் சொல்றான். அதுக்கும் ராஜியோட கல்யாணம்தான் காரணமாம். ஏன், ராஜியோட சாவுதான் காரணம்னுச் சொல்லலாம்ல? அப்படிச் சொல்லிட்டாத் தப்பு அவன் பக்கம் திரும்பிடுமே! பழியையெல்லாம் எம்மகச் சுமக்கணும். பலனையெல்லாம் அவனும், அவன் மகளான நீயும் அனுபவிக்கணும். நல்லாருக்கு நியாயம்..." - இன்னும் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார். அவளுக்கு அதெல்லாம் காதில் ஏறவில்லை.



அவளுடைய மனம், 'அந்தக் குருவோட தம்பி உன்னைய சதிப் பண்ணி ஏமாத்திட்டான்னுக் காரணம் சொல்றான்' என்கிற கூற்றிலேயே நிலைக் கொண்டுவிட்டது.



'குரு...! ராஜியோட கணவனா! ஆமாம், அவர் பேர் தானே குரு. அப்போ... அவரோட தம்பிதான் சித்துவா. அப்படித்தான் இருக்கணும். அன்னைக்கு சித்து வீட்டுல ஒருத்தனைப் பார்த்தோமே! அவனை எங்கேயோ பார்த்திருக்க மாதிரித் தோணுச்சுல்ல! அவன்... அவன்... எஸ்... அவன் தானே ஒரு நாள் அருவாளோட நம்ம வீட்டுக்குள்ள நொழஞ்சான்! அப்போ! அப்போ எல்லாமே சதியா! நாடகமா! - அப்பாவைப் பழிவாங்க என்னை... இல்ல என் காதலை யூஸ் பண்ணிகிட்டானா?' தவிப்பாக இருந்தது அவளுக்கு.



திரை விலகினார் போல் அனைத்தும் தெளிவாக விளங்கிவிட்டது. எத்தனை ஏமாளியாக இருந்திருக்கிறாள். அவள் நம்பிய அனைவரும் நஞ்சாய் மாறி, நயவஞ்சகமாய் அவளை கொன்றுவிட்டார்களே! இனி யாரை நம்புவாள். கதறியழ வேண்டும் போல் இருந்தது. அழுதாலும் ஆறுதல் சொல்ல கூட ஓர் உறவில்லாமல் அனைத்தும் பொய்த்துப் போய்விட்டதே! தாள முடியாத துக்கத்தில் மூழ்கிப் போனாள். இனியும் என்ன இருக்கிறது.



'ராஜி... ராஜி... நானும் உங்கிட்டியே வந்துடறேன் ராஜி... என்னைக் கூட்டிக்க... உனக்காகச் சிந்திக்க... உன்னோட வலிய உணர, உனக்குன்னு ஒரு உறவில்லாமப் போயிட்டே...! அம்மா அப்பா குடும்பம்னு இருந்து என்ன பிரோயஜனம்? இப்போ எனக்கும் உன் கதிதான் ராஜி... உனக்காவது சாகும் போது கூடவே வர்றதுக்கு ஒரு மகத்துவமானக் காதல் இருந்துச்சு. ஆனா எனக்கு அந்தக் கொடுப்பினைக் கூட இல்ல ராஜி... நான் பாவி... பாவி... இப்படி அனாதையாப் போயிட்டேனே!' உள்ளம் நைந்துக் கண்ணீர் கசிந்தது.



 

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
750
Reaction score
859
Points
93
அத்தியாயம் - 24



பெரியப்பா வீட்டிலிருந்து வெளியே வந்த பூர்ணிமா அனிச்சையாய் நடந்து வந்து காரில் ஏறி அமர்ந்தாள். உற்றாரெல்லாம் பொய்த்துப் போன வேதனைத் தீயில் அவள் நெஞ்சம் வெந்து மாய்ந்தது. உலகமே இதுதானா! சுயநலமும் பேராசையும்தான் இங்கு விரவிக் கிடக்கிறதா. நெருக்கமான உறவுகளுக்குள் கூட அது ஊடுருவியிருக்கிறதே! - சிந்தனைகள் அவளைப் புழுவாய் அரித்தன.



குற்றம் செய்த தன் ரெத்த பந்தங்களைத் தண்டிக்க வேண்டும் என்று மனம் துடிக்கிறது. ஆனால் காவல்துறை, வழக்கு, விசாரணை இவற்றுக்கெல்லாம் அவர்களைத் தண்டிக்கும் சக்தி இருப்பதாகத் தோன்றவில்லை. மேற்கூறிய முயற்சிகள் அனைத்தும் பாறையில் முட்டிக்கொள்வதன் பலனைத்தான் தரும் என்று அவள் உள் மனம் கூறியது. அதையும் தாண்டி அவளைப் பெற்ற அப்பாவை, வளர்த்தப் பெரியப்பாக்களை அவளால் காட்டிக் கொடுக்க முடியுமா! - முடியவில்லை. அதே சமயம், உடன்பிறந்தவளைக் கொன்றவர்கள் கண்முன்னே இருக்கும் பொழுது எவ்வாறு அவர்களைத் தண்டிக்காமல் விடுவது! - மனசாட்சிச் சுட்டது. இருதலைக் கொள்ளி எறும்பாகத் தவித்தாள். இந்தத் தவிப்பைத் தாங்க இயலவில்லையே! இதிலிருந்து எப்போது அவளுக்கு விடுதலைக் கிடைக்கும்.



கிடைக்காது. சுயநலம் மிக்க உறவுகளோடு பற்றுக் கொண்டிருக்கும் வரை அவளுக்கு விடுதலை என்பதே கிடைக்காது. அனைத்தையும் அறுத்தெறிய வேண்டும். பந்தம், பாசம், உறவு எதுவும் வேண்டாம்... போய் விடலாம்... எங்காவது... கண்காணாத தொலைவிற்கு... - அவள் முடிவெடுத்த சமயம் கார் வீட்டு வாசலில் வந்து நின்றது.



"எங்கம்மாப் போயிட்ட? என்கிட்டச் சொல்லியிருந்தா நானும் கூட வந்திருப்பேன்ல?" - வேல்முருகன்.



"கொலைப் பண்ணுணீங்களா?" - முகத்துக்கு நேராகக் கேட்டாள்.



"எ... என்ன! கொலையா!" - அதிர்ந்துப் போனார்.



"ராஜிய உயிரோடு எரிச்சுக் கொன்னீங்களா?"



"ச்சே... உங்கிட்ட யாரு இது மாதிரியெலாம் சொன்னது? எங்க போயிட்டு வர்ற?" கோபத்துடன் கேட்டார்.



"சொல்லலைன்னா என்னையும் கொன்னுடுவிங்களோ!"



"பூர்ணி... என்னடா? ஏன் இப்படில்லாம் பேசுற?"



"நடிக்காதீங்க"



"நடிக்கலப் பூர்ணி. எனக்கு நீ முக்கியம். எல்லாத்தையும் விட"



"ஓஹோ... அதனாலதான் என்னை உயிரோடு விட்டு வச்சிருக்கிங்கல்ல?"



"ப்ச்... உள்ளப் போ. போயிக் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு. அப்புறம் பேசிக்கலாம்" - ஏறியிருந்த தன் முன்னந்தலையைத் தடவி கொண்டே கூறினார்.



"இந்த மாதிரி விஷயங்களையெல்லாம் ஹேண்டில் பண்றது உங்களுக்கு ரொம்ப ஈஸில்ல?"



அவர் இமைக்காமல் மகளையே பார்த்தார்.



"வெட்கப் படறேம்பா... உங்களுக்குப் போயி மகளாப் பெறந்துட்டோமேன்னு நெனச்சு வேதனைப் படறேன். நீங்க போட்டச் சாப்பாட்டுல வளர்ந்த இந்த ஒடம்பச் சொமக்குறதே பாரமா இருக்குப்பா... ஏம்பா? ஏன் இப்படிப் பண்ணுனீங்க? சொல்லுங்க... ஏன்...?" - ஆத்திரத்துடன் வார்த்தைகளை அள்ளி வீசியவளுக்குக் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. பெருங்குரலெடுத்து அழுதபடி அவர் சட்டையைப் பிடித்து உலுக்கி நியாயம் கேட்டாள்.



"பூர்ணி.. சொல்றதக் கேளுடா.. அம்மாடி... அப்பா... அப்பா சொல்றேன்ல..." - தவிப்புடன் மகள் தோள்களைப் பிடித்து உலுக்கித் தேற்ற முயன்றார்.



"தொடாதீங்க..." - அவரை உதறித் தள்ளினாள். அவர் அதிர்ந்து விழித்தார்.



"நரமாமிசம் சாப்பிடரவரு நீங்க. என்ன தொடாதீங்க" - அருவருப்புடன் கூறினாள்.



நொறுங்கிவிட்டார் வேல்முருகன். எவ்வளவு பெரிய கல் நெஞ்சக்காரனாக இருந்தாலும், எவ்வளவு பெரிய மூர்க்கனாக இருந்தாலும் அவருக்கும் ஒரு பலவீனம் இருக்குமல்லவா? வேல்முருகனின் பலவீனமாகப் பூர்ணிமா இருந்தாள்.



"நான் போறேன். இங்கிருந்து... உங்ககிட்டேருந்து... எங்காவது தூரமாப் போகப்போறேன். குறைந்தபட்சம் நா உயிரோடு இருக்கணும்னு ஆசைப்பட்டா என்ன ஃபாலோ பண்ணாதீங்க. விட்டுடுங்க" சிறிதும் தயக்கமின்றி வீட்டை விட்டு வெளியேறினாள். மனம் சற்றே லேசானது போல் இருந்தது. இப்படியே எங்காவது சென்று தன் வாழ்க்கையைப் புதிதாகத் துவங்கலாம் என்று நினைத்தாள். ஆனால் அதற்கு முன் தீர்க்க வேண்டிய கணக்கு ஒன்று பாக்கி இருக்கிறேதே. ஸ்ரீரங்கத்திற்குப் பேருந்து ஏறினாள்.



****************



அவள் விசாரித்துக் கொண்டு வந்து சேர்ந்த வீட்டு வாசலில், நான்கைந்து ஆட்கள் பந்தலைப் பிரித்துக் கொண்டிருந்தார்கள். பூர்ணிமா அந்த வீட்டுத் திண்ணையில் ஏறிய சமயம், தன் ஈரக் கூந்தலைத் துணியால் சுற்றிக் கொண்டையிட்டு, கழுத்தில் புத்தம் புது மஞ்சள் கயிற்றோடு, வகிட்டில் குங்குமமிட்டு, வேலையாட்களுக்குக் காபி கொடுப்பதற்காகக் கையில் ட்ரேயுடன் வெளியே வந்தாள் ஒரு பெண்.



பூர்ணிமாவின் இதயம் ஒரு நொடி நின்று பின் துடித்தது. அதுவரை அவளுக்குச் சித்தார்த்துடன் தன் வாழ்க்கை மீண்டும் மலர வேண்டும் என்கிற எண்ணம் தோன்றவில்லை. ஆனால் இந்தப் புதுப் பெண்ணைப் பார்த்ததும் ஏதோ ஒரு கலக்கம்.



'எல்லாம் முடிந்துவிட்டதோ!' - நாவரண்டது அவளுக்கு.



"நீங்க?" - நெற்றியைச் சுருக்கினாள் புதுப் பெண்.



"நா... நா..." பேச முடியாமல் தடுமாறினாள்.



"வாங்க வாங்க... உள்ள வாங்க" - ரவியின் குரல் அவர்களின் கவனத்தை ஈர்த்தது. பெண்கள் இருவரும் ஒருசேரக் குரல் வந்த திசையைத் திரும்பிப் பார்த்தார்கள்.



"தமிழு. என்ன பாத்துகிட்டு இருக்க.. உள்ள கூட்டிட்டுப் போ. நம்ம வீட்டுப் பொண்ணுதான்" - வந்திருப்பவள் யார் என்கிற விபரத்தைப் புரிந்து கொண்டவள் குழப்பமும் ஆச்சர்யமுமாக அவளின் மேடிட்ட வயிற்றைக் கவனித்தாள். பிறகு, "பூர்ணிமா?" என்று கேள்வியாக அவளை நோக்கினாள்.



பூர்ணிமாவிற்குப் பார்க்கும் போதே அவர்கள் கணவன் மனைவி என்று தெரிந்து விட்டதாலோ என்னவோ அவளுக்குள் ஒருவித நிம்மதிப் பரவியது. ஆசுவாசத்துடன் ஆழமாக மூச்செடுத்து "ம்ம்ம்... சித்தார்த்தைப் பார்க்க வந்தேன்" என்று தமிழியின் கேள்விக்குப் பதிலளித்தாள்.



"உள்ள வா..." - கையைப் பிடித்து உள்ளே அழைத்துச் சென்றாள். என்னவென்று புரியாத ஒருவித பதட்டத்துடன் அவள் சுட்டிக் காட்டிய இருக்கையில் அமர்ந்தாள் பூர்ணிமா.



கொல்லைப்புறத்தில் இருக்கும் மரத்தைக் கழித்துக் கொண்டிருந்த சித்தார்த்தை தேடி வந்தான் ரவி.



"இங்க என்னடா பண்ணிக்கிட்டு இருக்க?"



"ஆங்... இந்த மரம் இங்க நிக்கிறது எடஞ்சலா இருக்குன்னு கொஞ்ச நாளாவே நெனச்சுக்கிட்டு இருந்தேன். அதான்..."



"தேவையில்லாத வேலையை பார்க்கறதுக்குன்னே பொறந்தவனாடா நீ? அருவாளை தூக்கியெறிஞ்சுட்டு உள்ள வாடா..."



"என்னண்னு சொல்லு?" என்றபடி ஓங்கிய அரிவாளை மரத்தின் கிளை ஒன்றின் மீது வீசினான். அது முறிந்து விழுந்தது.



"சித்து. நா சொல்றதை கொஞ்சம் நிதானமா கேளு. உன்ன பார்க்க அந்த பொண்ணு வந்திருக்குடா" சிறு தயக்கத்துடன் சொன்னான் ரவி.



மரத்தின் மீது உக்கிரமாக அரிவாளை பிரயோகித்துக் கொண்டிருந்த சித்தார்த்தின் கை, ஓங்கிய வேகத்திலேயே தடைபட்டு நின்றது. அவனுடைய இதயம் தடதடத்தது. 'பூர்ணியா!' சுவாசத்தின் வேகம் அதிகமானது. முகம் சிவந்து காது மடல்கள் சூடாவதை உணர்ந்தான்.



"பூர்ணிமா... அதுதானே அந்த பொண்ணோட பெரு? வீட்டுக்குள்ள உக்கார சொல்லியிருக்கேன். வாடா... வந்து பேசு..." இந்த முறை தம்பியின் வாழ்க்கையை எப்படியாவது சரிசெய்துவிட வேண்டும் என்கிற பதட்டம் ரவியிடம் தென்பட்டது. ஆனால் சித்தார்த் அமைதியாக இருந்தான்.



உள்ளுக்குள் நெகிழும் உள்ளத்தை மீண்டும் கடினமாக்கிக்கொள்ள சிறு அவகாசம் தேவைப்பட்டது அவனுக்கு. ஓரிரு நொடிகள் கண்களை மூடி மனதை கட்டுக்குள் கொண்டுவந்தவன், நிதானமாக கண்களைத் திறந்து "அவ எதுக்கு இங்க வந்தா?" என்றான்.



ரவி அதிர்ந்து போனான். அவனுக்குத் தெரியும். பூர்ணிமாவை இழந்ததில் அவன் மிகவும் வேதனைப்படுகிறான். உறங்க முடியாமல் தவிக்கிறான். மதுவையும் புகைப்பழக்கத்தையும் துணையாகக் கொண்டு தன் உணர்வுகளை வெல்ல போராடிக் கொண்டிருக்கிறான். இவ்வளவு போராட்டங்களுக்கு இடையிலும் கூட தானாக தேடி வந்தவளை புறக்கணிக்கிறான் என்றால் அவனை எந்த வகையில் சேர்ப்பது!



"வேண்டாண்டா சித்து. தயவு செஞ்சு உன்னோட வாழ்க்கையை நீயே அழிச்சுக்காத. அவளை வந்து பாரு. பேசு. அந்த வேல்முருகனை பத்தி சொல்லி புரிய வையி... நீ நெனச்சா எல்லாத்தையும் சரி பண்ணிடலாம்டா" - எடுத்துக் கூறினான்.



"அவளை நான் பார்க்க விரும்பல. இங்கேருந்து போ சொல்லு..."



"நானும் உன்ன பார்க்க விரும்பல சித்து. உன்கிட்ட ஒரே ஒரு கேள்வி கேட்கணும். அதுக்கு மட்டும் பதில் சொல்லு. நான் போயிடுறேன்" - பூர்ணிமாவின் குரல் சித்தார்த்தின் ஒவ்வொரு அணுவையும் அதிரச் செய்தது. சட்டென்று அவள் புறம் பார்வையைத் திருப்பினான். திகைத்துப் போனான்.



திகைக்காமல் வேறு என்ன செய்வான். இப்போது அவன் கண் முன்னால் நிற்பது பூர்ணிமாவே அல்ல. அவளுடைய சாயலிலிருக்கும் வேறு யாரோ ஒரு பெண் என்கிற எண்ணம் ஒரு கணம் அவனுக்குள் தோன்றியல்லவா மறைந்தது!



பூர்ணிமாவின் பொலிவு... துறுதுறுப்பு... வெகுளித்தனம்... எதுவுமே இவளிடம் இல்லை. ஒளியிழந்த கண்கள்... கலையிழந்த முகம்... ஒடிந்து விழுவது போல் மெலிந்திருந்த தேகம்... இவையெல்லாம் பூர்ணிமாவின் அடையாளங்கள் அல்லவே. அவளுடைய சந்தோஷம் எங்கே போனது? எப்போதும் சிரித்துக் கொண்டே இருக்கும் கண்கள் எங்கே போயின? படபடவென்று பேசிக் கொண்டே இருக்கும் வாய்மொழிக்கு என்னவானது? - சிந்தித்தான்.



'அவை அனைத்தையுமே உன்னுடைய வன்மத்திற்கு இரையாக்கிக் கொண்டாய் சித்தார்த்...' என்று அவனுடைய மனசாட்சி உறக்கக் கத்தியது. அவனுடைய பார்வை மெல்ல கீழே இறங்கிய போது, மேடிட்டிருந்த அவளுடைய வயிறு உணர்த்திய செய்தி அவன் உள்ளத்தை உலுக்கியது. இதயத்தை மாபெரும் பாரம் அழுத்தியது. கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.



இவை அனைத்தையுமே தன்னுடைய வன்மத்திற்கு இரையாக்கிக் கொண்டுவிட்டோம் என்கிற எண்ணம் அவன் உள்ளத்தை உலுக்கியது.



"தமிழு... ஏன் பூர்ணிமாவை இங்க கூட்டிட்டு வந்த? நாந்தான் இவன வீட்டுக்குள்ள கூட்டிட்டு வர்றேன்னு சொன்னேன்ல..?" ரவியின் கேள்விக்கு தமிழி பதில் சொல்வதற்கு முன் பூர்ணிமா சித்தார்த்திடம் தான் கேட்க விரும்பிய கேள்வியைக் கேட்டாள்.



"ஏன் இப்படி பண்ணின சித்து?"



ஒரே ஒரு கேள்விதான். இந்தக் கேள்விக்கு சற்று முன்பு வரை அவனிடம் பதில் இருந்தது. அவன் பக்கம் சொல்வதற்கு ஆயிரம் நியாயங்களும் காரணங்களும் இருந்தன. ஆனால் பூர்ணிமாவை பார்த்த நொடியிலிருந்து அவனிடம் எந்த நியாயமும் இல்லாமல் போனது. பேசுவதற்கு நாயெழவில்லை. உள்ளுக்குள் வலித்தது.



"உன்ன நம்பினேன் சித்து. என்னோட நம்பிக்கையை கொன்னுட்ட. என்னுடைய உணர்வுகளை காயப்படுத்திட்ட. ஏன் இப்படிப் பண்ணின?"



"பூர்ணி..."



"எம்பேர சொல்லாத... உனக்கு அந்த உரிமை இல்ல"



"..........."



"என்னைய நீ லவ் பண்ணியிருந்தா... எம்மேல நம்பிக்கை வச்சிருந்தா... எங்கப்பாவை பத்தி எங்கிட்ட சொல்லியிருக்கலாமே சித்து. உனக்கு துணையா நா நின்னுருப்பேனே ! நீயேன் அதை செய்யல?"



"பூர்ணி ப்ளீஸ்..."



"ஏமாத்திட்டல்ல...? ம்ஹும்... நாந்தான் ஏமாந்தேன்... அதுதான் கரெக்ட் இல்ல? நானாத்தான் உன்கிட்ட பழகினேன். நானாத்தான் உன்ன லவ் பண்ணினேன்... அப்புறம் நாந்தான் உன்ன எல்லா விஷயத்துக்கும் டெம்ப்ட் பண்ணினேன் இல்ல"



"ஐயோ... பூர்ணி... இந்த மாதிரியெல்லாம் பேசாத?" - வேகமாக அவளிடம் நெருங்கி அவளுடைய கைகளை பிடித்துக் கொண்டான். அவனுடைய உடல் நடுங்குவதை அவள் உணர்ந்தாள்.



"என்ன ஆச்சு சித்து? வருத்தப்படறியா? என்னைய நெனச்சா!" - வியந்தாள். அவன் மீதான நம்பிக்கையின்மையை அவள் முகம் அப்பட்டமாகக் காட்டியது.



"இல்ல... இப்படி பார்க்காத பூர்ணி... என்னை இப்படி பார்க்காத ப்ளீஸ்..." தவிப்புடன் அவளிடம் கெஞ்சினான்.



"இத சொல்லத்தான் அன்னைக்கு வந்தியா?" - பார்வை அவளுடைய வயிற்றின் மீது நிலைத்திருந்தது.



".................." அவள் பதில் சொல்லவில்லை. அவனிடம் சிக்கியிருந்த கையை உறுவிக்கொள்ள முயன்றாள். அவனுடைய பிடி அழுத்தமாய் இருந்தது.



"கையை விடு சித்து"



"தப்புப் பண்ணிட்டேன் பூர்ணி. பெரிய தப்பு... உன்னைய நம்ப வச்சு கழுத்த அறுத்துட்டேன். ஆனா... வேணுன்னு செய்யல பூர்ணி. என்னோட அண்ணே மேல இருந்த பாசம்... உங்கப்பா மேல இருந்த வெறுப்பு... என்னைய அப்படி பண்ண வச்சிடிச்சு"



"ஹா..." - விரக்தியாக சிரித்தாள். அவனுக்கு வலித்தது. அவளை இயலாமையுடன் பார்த்தான்.



"உங்க அண்ணனோட சாவுக்கு நியாயம் கெடச்சிடிச்சு. எங்க அப்பாவை பழி வாங்கிட்ட. இப்போ திருப்தியா இருக்கல்ல? சந்தோஷமா இருக்கல்ல? நல்லா இரு" என்று வாழ்த்திவிட்டு திரும்பி வந்த வழியே நடந்தாள்.



சித்தார்த்தின் உயிரே ஒடுங்கிவிட்டது. படபடக்கும் நெஞ்சத்துடன் "பூர்ணி... எங்க போற...?" என்று பாய்ந்து வந்து அவளை வழிமறித்தான். திடீரென்று அவனுக்கு மேல் மூச்சு வாங்கியது. இனம்புரியாத பயத்தில் முகம் வெளுத்துவிட்டது.



"வழிவிடு சித்து" - கலக்கமில்லாமல் கூறினாள் பூர்ணிமா.



"இல்ல. நா உன்ன போக விடமாட்டேன். என்னைய விட்டு நீ எங்கேயும் போக முடியாது" - ஆத்திரத்துடன் கத்தினான்.



அவள் அவனை ஒதுக்கிவிட்டு வேகமாக வாசல் வரை வந்துவிட்டாள். ஓரிரு நொடிகள் திகைத்து நின்றுவிட்டவன், சுதாரித்துக் கொண்டு ஓடிவந்து அவள் கையைப் பிடித்துத் தடுத்தான்.



"போயிடாத... உன்ன கெஞ்சிக்கேக்கறேன் பூர்ணி. என்ன மன்னிச்சுடு... ப்ளீஸ்" -மனமுருகி யாசித்தான். கலங்கினான்... கண்ணீர்விட்டான்.



அன்றொருநாள் இதே போன்றொதொரு யாசகத்தோடு அவன் முன் நின்றவளை ஏறெடுத்தும் பார்க்காமல்... அவள் சொல்ல வந்ததையும் காது கொடுத்துக் கேட்காமல், கண்டபடி பேசி... கையைப் பிடித்து தரதரவென்று இழுத்து வெளியே தள்ளி கதவை சாத்திய சம்பவம் அவள் மனத்திரையில் படம் போல் ஓடியது.



"உனக்கு தெரியாது பூர்ணி. நா ரொம்ப வேதனைப்படறேன். உள்ளுக்குள்ளேயே புழுங்கறேன். தினந்தினம் செத்துக்கிட்டிருக்கேன். எல்லாத்துக்கும் காரணம் என்னோட முரட்டுப் பிடிவாதம்தான். நா இல்லைன்னு சொல்லல. ஆனா... ஒரே ஒரு தடவ... இந்த ஒரு தடவ மட்டும் என்னை மன்னிக்கக் கூடாதா பூர்ணி?"



"எனக்கு நல்லா தெரியும் சித்து. உனக்கு எம்மேல அன்பு இல்ல. அக்கறை இல்ல. பிரியம் இல்ல... காதல்... கத்திரிக்கா... எதுவுமே இல்ல..." - இதை சொல்லும் பொழுது அவள் கண்களிலிருந்து கண்ணீர் முத்து முத்தாக வடிந்தது.



அந்த நேரத்தில் அவன் மணமடைந்த வேதனையை விவரிக்க வார்த்தைகளில்லை. பூர்ணிமாவின் மீதான அவனுடைய நேசத்தின் ஆழத்தை அவனே அப்பொழுதுதான் முழுமையாக உணர்ந்தான் எனலாம்.



"என்னோட உணர்வுகளுக்கு கொஞ்சமாவது மதிப்புக்கு கொடுக்கணும்னு நீ நெனைச்சேன்னா என்னை என்னோட வழியில போக விடு சித்து" - துக்கம் நிறைந்திருந்த அவனுடைய கண்களை நேருக்கு நேர் சந்தித்தபடி இதைக் கூறினாள்.



அவனுடைய பிடி வலுவிழந்தது. அவள் சுலபமாக தன்னுடைய கையை உருவிக் கொண்டாள்.



"அம்மாடி... அவனை விட்டுத்தள்ளும்மா. நா இருக்கேண்டா ராஜாத்தி உனக்காக. இங்க பாரு... தமிழு... உனக்கு அக்காவாட்டம் இருப்பா. ரவி... உன்ன கூட பொறந்தவளாட்டம் கவனிச்சுக்குவான். நீ எங்கேயும் போக வேண்டாம்டா. இங்கேயே இருந்துரும்மா. உனக்கு இந்த பயல பாக்க பிடிக்கல...பேசப் பிடிக்கலைன்னா... அவனை இங்கேருந்து வெரட்டிடறேன். இந்த வீட்ல உன்ன பத்தி பேசாத நாளே இல்லம்மா. அதே மாதிரி... இந்த பயல நா திட்டாத நாளும் இல்லம்மா. வயித்துப்புள்ளத்தாச்சி நீ. இவ்வளவு நாளும் உங்க அப்பாகிட்ட என்ன படுபாட்டியோ தெரியல. இனிமேலும் அந்த நரகத்துக்கு போக வேண்டாம்டா கண்ணு. நா சொல்றத கேளும்மா" - சித்தார்த்தின் தாய் பூர்ணிமாவை சமாதானம் செய்ய முயன்றாள்.



அந்த தாயின் அன்பில் உடைந்து போன பூர்ணிமா அவளைக் கட்டிப் பிடித்துக் கொண்டு அழுதாள். அவளுடைய மனக்குமுறல்களும் ஆதங்கங்களும் கண்ணீராக கரைந்து கொண்டிருந்தன. அவள் முதுகை தடவிக் கொடுத்து தேற்ற முயன்றாள் பார்வதி.



தமிழியும் அவளுடைய தலை கோதி... முதுகைத் தடவி ஆறுதலளித்தாள். ரவி எதுவும் பேச முடியாமல் அமைதியாக நின்று கொண்டிருக்க... நிலைகொள்ளா தவிப்புடன் பூர்ணிமாவைப் பார்வையால் வருடிக் கொண்டிருந்தான் சித்தார்த்.



அழுதழுது ஓய்ந்து தானாக பார்வதியிடமிருந்து விலகிய பூர்ணிமா, "உங்களோட அன்புக்கு ரொம்ப நன்றி ஆன்ட்டி..." என்றாள் ஜீவனற்ற புன்னகையுடன்.



"நீ எம்பொண்ணு மாதிரிம்மா" - பார்வதி.



மீண்டும் ஒருமுறை உயிரற்ற புன்னகையை உதிர்த்த பூர்ணிமா, "என்னைய மன்னிக்கணும் ஆண்ட்டி. நீங்க சொல்றதை கேட்டுக்க முடியாத நிலமையில நான் இப்போ இருக்கேன். கிளம்புறேன்" என்று கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டாள். யாராலும் அவளுடைய முடிவை மாற்ற முடியவில்லை. சர்வமும் ஒடுங்கிப் போனவனாக நின்றுக் கொண்டிருந்தான் சித்தார்த்.



கனத்த இதயத்தோடு பூர்ணிமாவிற்கு வழிவிட்டு ஒதுங்கினர் சித்தார்த்தின் குடும்பத்தார். அவள் அவர்களிடமிருந்து விலகி சென்றுக் கொண்டே இருந்தாள். சக்திகள் அனைத்தையும் இழந்துவிட்டது போல் உணர்ந்த சித்தார்த், மலையளவு துக்கத்தை மனதில் சுமந்தபடி செய்வதறியாது சமைந்து நின்றான். அப்போதுதான் அந்த சம்பவம் கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்தது.



புயல் வேகத்தில் எங்கிருந்தோ பறந்து வந்த அம்பாஸிட்டர் கார் ஒன்று, பூர்ணிமாவின் மீது மோதி அவளைத் தூக்கியெறிந்து.



"பூ...ர்...ணீ...!!!" - சித்தார்த்தின் அலறல் சத்தம் விண்ணைக் கிழித்தது.



"ஆ... ஐயையோ....! கடவுளே! " - நான்கு திசைகளிலிருந்தும் கலவையான கூக்குரல்கள் ஓங்கி ஒலித்தன. ரெத்த வெள்ளத்தில் துடிதுடித்துக் கொண்டிருந்த பூர்ணிமாவை நோக்கிப் பறந்தோடின உறவுகள்.
 

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
750
Reaction score
859
Points
93
அத்தியாயம் - 25 (Final)



அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டிருந்தாள் பூர்ணிமா. களைந்த கேசமும், வெளிறிய முகமும், ரெத்தக் கரை படிந்த ஆடையுமாக... ஒரே இடத்தை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தான் சித்தார்த். அவனைச் சுற்றி ஆதரவாக நின்றுக் கொண்டிருந்தது அவனுடைய குடும்பம். அரை மணிநேரம் கழித்து ஐசியு-வின் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்த நர்ஸ், "யாராவது ஒருத்தர் மட்டும் உள்ள வாங்க. டாக்டரை பார்க்கலாம்" என்று கூறினாள்.



சித்தார்த்தின் இதயம் நூறு மடங்கு அதிகமாகத் துடிக்கத் துவங்கியது. அவன் ரவியின் கையை அழுத்தமாகப் பற்றிக் கொண்டான். சகோதரனின் உள்ளம் பதறுவதை புரிந்துக் கொண்ட ரவி, "டென்ஷானாகாத... ஒண்ணும் இருக்காது" என்று தைரியம் சொல்லி அவனை அணைத்துப் பிடித்துக் கொண்டான்.



அவனுடைய ஆதரவு சித்தார்த்தன் செவியைச் சிறிதும் எட்டவில்லை. அவன் தொய்ந்து விழுந்தான்.



"ஏய்... தைரியமா இருடா... பூர்ணிமாவுக்கு ஒண்ணும் ஆகாது. நா போயி டாக்டரை பார்த்துட்டு வர்றேன். நீ இங்கேயே இரு" என்று கூறினான்.



"இல்ல... நானும்... நானும் வர்றேன்..." - சித்தார் எழுந்தான்.



"அதெல்லாம் வேண்டாம். நீ இங்கேயே இரு. அம்மா... நீ இவன பார்த்துக்க. தமிழு... நீயும் இங்கேயே இரு. நான் இப்போ வந்துடறேன்" - சித்தார்த்தை தவிர்த்துவிட்டு ரவி மட்டும் மருத்துவரை சந்திக்கச் சென்றான்.



பத்து நிமிடம் கழித்து திரும்பி வந்த ரவியின் முகத்தில் சுரத்தே இல்லை.



"டாக்டரு என்னப்பா சொன்னாரு?" - பார்வதி கேட்க, சித்தார்த்தும் தமிழையும் அவனுடைய பதிலை எதிர்பார்த்தபடி அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.



"ஒண்ணும் இல்ல... பூர்ணிமாவுக்கு சீக்கிரமே குணமாயிடும்" என்றவனின் முகத்தில் ஏதோ குழப்பமிருந்தது.



"இல்ல... உன்னோட முகத்தைப் பார்த்தா ஏதோ சரியில்லைன்னு தோணுது. என்னன்னு சொல்லு ரவி"



"ஒண்ணும் இல்லடா..."



"இல்ல... நீ பொய் சொல்ற" - சத்தம் போட்டான் சித்தார்த்.



ஒரு நொடி தடுமாறிய ரவி பிறகு சுதாரித்துக் கொண்டு, "பணம் கொஞ்சம் அதிகமா செலவாகும் போலருக்கு. அதான் எப்படி சமாளிக்கிறதுன்னு யோசிச்சிட்டு இருந்தேன். வேற ஒண்ணும் இல்லடா. நீ கவலைப்படாத" என்றான்.



"நிஜமாவா? பூர்ணிக்கு ஆபத்து எதுவும் இல்லல்ல?" என்று கேட்டு அண்ணனின் கூற்றை மீண்டும் ஒருமுறை ஊர்ஜிதப்ப படுத்திக்கொள்ள முயன்றான்.



அவனுடைய கையைப் பிடித்து அழுத்திக் கொடுத்து நீ பயப்படற மாதிரி எதுவும் இல்ல. உன்னோட பூரணி சீக்கிரமே உன்கிட்ட வந்துடுவா. தைரியமா இரு" என்று உறுதிக் கொடுத்தான். அதன் பிறகுதான் சித்தார்த்தின் மனம் சற்று அமைதியடைந்து.



சித்தார்த்தின் ஆடை முழுவதும் பூர்ணிமாவின் ரெத்தம் படிந்திருந்ததால் அவனை வீட்டுக்குச் சென்று குளித்துவிட்டு வரும்படி ரவியும் பார்வதியும் கூறினார்கள். அவனோ மறுத்துவிட்டான்.



"பூர்ணியை பார்க்காம நா இங்கிருந்து எங்கேயும் போகமாட்டேன்" என்று உறுதியாகக் கூறிவிட்டான். இரண்டு மணிநேரம் கழித்து பூர்ணிமாவை அவசர சிகிச்சை பிரிவிலிருந்து தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றினார்கள். அதற்கு பிறகு ஒரு மணிநேரம் கழித்து சித்தார்த்தை மட்டும் அவளைப் பார்க்க அனுமதித்தார்கள்.



மருத்துவமனைப் படுக்கையில் அவள் அசைவின்றி கிடந்தாள். முகமெல்லாம் வீங்கியிருந்தது. மூச்சு விட ஆக்சிஜன் பொருத்தப்பட்டிருந்தது. தலைமாட்டில் நின்ற கம்பி கொடியில் தொங்கி கொண்டிருந்த இரத்தப் பையிலிருந்து இரத்தம் சொட்டுச் சொட்டாக இறங்கிக் கொண்டிருந்தது. வெளிக்காயம் பட்ட இடங்களிலெல்லாம் கட்டுப் போட்டிருந்தார்கள். சித்தார்த் மெல்ல அவளிடம் நெருங்கினான். அவளைப் பார்க்கப்பார்க்க உள்ளே வலித்தது. நெஞ்சை அடைப்பது போலிருந்தது.



"பூ...ர்ணி..." - மெல்லிய குரலில் அழைத்தான். தொண்டைக் கரகரத்தது. அழுகை முட்டியது. பெருகும் கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் "பூர்ணி..." என்று மீண்டும் அழைத்தான்.



"டிஸ்டர்ப் பண்ணாம பாருங்க சார். ரெண்டு மணி நேரத்துல கண்ணு முழிச்சிடுவாங்க. அப்போ பேசிக்கலாம்" - டியூட்டி நர்ஸின் குரல் அவனை இடையிட்டது.



சித்தார்த்தின் பார்வை பூர்ணிமாவை முழுமையாக ஆராய்ந்தது. மேடிட்டிருந்த அவளுடைய வயிற்றை அவனுடைய பார்வை எட்டிய போது அடிவயிறு கலங்கியது. உள்ளே கொந்தளித்தது. முகம் தெரியாத அந்த கார் டிரைவரின் மீது வந்த கோபத்தைக் காட்டிலும் ஆயிரம் மடங்கு அதிகமாகக் கடவுளின் மீது கோபம் வந்தது.



'பூ...ர்...ணி...' - உள்ளம் தவித்தது. வெகு நேரம் அவள் முகத்தை பார்த்துக் கொண்டே நின்றான். அங்கிருந்து நகரவே மனமில்லை.



"பார்த்துட்டீங்கன்னா கிளம்புங்க சார். டாக்டர் ரௌண்ட்ஸ் வர்ற நேரம்..." - மீண்டும் அந்தப் பெண்ணின் குரல் அவனுடைய கவனத்தைக் கலைத்தது. விருப்பமே இல்லாமல் அந்த அறையிலிருந்து வெளியேறினான் சித்தார்த்.



எதிர்பார்த்தது போல் பூர்ணிமா இரண்டு மணிநேரத்தில் கண்விழிக்கவில்லை. நேரம் சென்று கொண்டே இருந்தது. சூரியன் அஸ்தமிக்கும் நேரம் நெருங்க நெருங்க, மெல்ல மெல்லப் பதட்டம் மீண்டும் அவர்களை ஆக்கிரமிக்கத் துவங்கியது. அடிக்கு ஒருமுறை டியூட்டி நர்ஸிடம் பூர்ணிமாவின் உடல்நிலையைப் பற்றிக் கேட்டுக் கொண்டே இருந்தார்கள்.



ரவியின் கட்டாயத்தினால் வீட்டிற்குச் சென்றிருந்த சித்தார்த்தும் திரும்பி வந்துவிட்டான். அவனைச் சமாளிக்கும் வகையறியாது குழம்பிப் போய் நின்றார்கள் குடும்பத்தார்.



"உள்ள யாராவது போயி பார்த்திங்களா? முழிச்சாளா?" - சித்தார்த்தின் பார்வை ரவியைச் சந்தித்தது.



"இல்ல... இப்போ யாரும் உள்ள போக முடியாது. லேட்டா பார்த்துக்கலாம் நீ உட்காரு" - உடன்பிறந்தவனை அமைதிப்படுத்தினான் ரவி.



"ஏண்டா பார்க்கல? இந்நேரம் அவ கண்ணு முழிச்சிருக்கணுமே!" என்றபடி காவலாளியின் கட்டுப்பாட்டையும் மீறிக் கொண்டு தீவிர சிகிச்சைப் பிரிவுக்குள் நுழைந்தான்.



அதிர்ந்து போன நர்ஸ் அவனிடம் சமாதானமாகப் பேசி வெளியே அனுப்பி வைத்துவிட்டு, மருத்துவருக்குப் போனில் அழைத்து விபரத்தைக் கூறினாள். உடனே அவர் அங்கு வந்தார். பூர்ணிமாவை மீண்டும் ஒருமுறை பரிசோதித்துவிட்டு ரவியைத் தனியே அழைத்துப் பேசினார்.



அவன் திரும்பி வந்ததும் சித்தார்த் "என்னடா சொல்றாரு?" என்று அச்சத்துடன் கேட்டான்.



"ஒண்ணும் இல்ல... நீ கொஞ்சம் அமைதியா இரு" - தம்பியின் முகத்தைப் பார்ப்பதை தவிர்த்தான் ரவி.



"ரவி... நீ எதையோ என்கிட்ட மறைக்கிற. என்னன்னு சொல்லு..." - அவனுடைய குரலில் கடுமையிருந்தது.



"பூர்ணிக்கு என்ன ஆச்சு சொல்லு...?" - தமையனின் தோள்களை பிடித்து உலுக்கினான்.



அவனை ஆழ்ந்து பார்த்த ரவி, "பூர்ணிமாவுக்கு ஒண்ணும் இல்ல. ஆனா..."



"ஆனா?"



"குழந்தையை..."



"ரவி!" - அதிர்ந்து போனான் சித்தார்த்.



"சாரிடா..."



"என்னடா சொல்ற? எங்கடா அந்த டாக்டர்? ஒண்ணும் பிரச்சனை இல்லைன்னு தானேடா சொன்னான்? இப்ப என்னடா திடீர்ன்னு இப்படி சொல்றான்??" - இழப்பின் வேதனை மருத்துவரின் பக்கம் திரும்பியது.



"சித்து... அமைதியா இரு... அப்போவே குழந்தையோட கண்டிஷன் மோசமாதான் இருந்தது. நாந்தான் உன்கிட்ட சொல்லல..."



"ரவி..." - சித்தார்த்தின் குரல் உடைந்தது. தளர்ந்து போய் தரையில் சரிந்து அமர்ந்தான். அழுகையில் அவன் உடல் குலுங்கியது. மகனின் நிலையைக் காண சகிக்காமல் பார்வதியும் கலங்கிப் போனாள். தமிழி மாமியாரைத் தாங்கி கொண்டாள். ஆறுதல் மொழிகளைக் கூறி அவளைத் தேற்றினாள்.



"பூர்ணிமாவோட உயிருக்கு ஆபத்து இல்லாம போனதே! அதை நெனச்சு மனச தேத்திக்கடா சித்து" என்று தம்பியின் முதுகைத் தட்டிக் கொடுத்தான்.



அடுத்த சில மணி நேரத்தில் அறுவை சிகிச்சையின் மூலம் பூர்ணிமாவின் வயிற்றிலிருந்த குழந்தை நீக்கப்பட்டது. மறுநாள் காலையில் தான் "ம்ம்ம்..." என்றதொரு முனகல் அவளிடமிருந்து வெளிப்பட்டது. டியூட்டி நர்ஸ் கவனித்துவிட்டு அவளிடம் பேச்சுக்கு கொடுத்தாள். அவள் சுய நினைவோடு இருக்கிறாள் என்பதை உறுதிப் படுத்திக் கொண்ட பிறகு, கொடுக்க வேண்டிய மருந்துகளைச் சரிபார்த்து ஊசியில் ஏற்றி செலைன் பாட்டிலில் கலந்தாள். பிறகு மருத்துவருக்கு தொலைப்பேசியில் அழைத்து விபரம் கூறிவிட்டு வெளியே வந்து உறவினர்களிடம் தெரிவித்தாள்.



எல்லோரும் உள்ளே சென்று பார்த்தார்கள். ஏனோ சித்தார்த்துக்கு மட்டும் அவளைச் சந்திக்கும் துணிவு இல்லாமல் போனது. வெளியிலேயே தயக்கத்துடன் நின்றுவிட்டான்.



குழந்தையைப் பற்றி அவளிடம் யாரும் எதுவும் பேசவில்லை. அவளுடைய உடல் நலனை மட்டும் விசாரித்து தைரியம் கூறினார்கள். அயர்வோடு படுத்திருந்த பூர்ணிமா சிறிது நேரத்திற்குப் பிறகே தன்னுடைய அடிவயிற்றில் வலியிருப்பதை உணர்ந்தாள். அதன் பிறகுதான் மெல்ல மெல்ல அவளுக்கு அது உரைத்தது... 'குழந்தை! எங்கே என் குழந்தை!'- தவிப்புடன் வயிற்றை தொட்டுப் பார்த்தாள். அது சருகாய் ஒட்டிக் கிடந்தது.



"என்ன அச்சு? எங்க...? எங்க என் குழந்தை?" - நைந்துக் கிடந்தவளிடமிருந்து எப்படி அத்தனை வலுவான சத்தம் வெளிப்பட்டதென்பது ஆச்சர்யம் தான்.



அடுத்த சில நிமிடங்களுக்கு அவளை சமாதானம் செய்ய சுற்றியிருந்தவர்கள் மிகவும் சிரமப்பட்டார்கள். அவளுடைய கூக்குரல் கேட்டு வெளியே தயக்கத்துடன் நின்று கொண்டிருந்த சித்தார்த்தும் உள்ளே ஓடி வந்தான். அவளுக்கு ஆறுதல் கொடுக்க முயன்றான். யாருடைய முயற்சியும் அவளிடம் செல்லுபடியாகவில்லை. கடைசியில் ஊசிமூலம் கொடுக்கப்பட்ட தூக்க மருந்தே அவளை அமைதிப் படுத்த உதவியது.



கிட்டத்தட்ட பத்து நாட்கள் பூர்ணிமா மருத்துவமனையில் இருந்தாள். நொடி பொழுதும் அவளை விலகாமல் கண்ணுக்குள் வைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான் சித்தார்த். அவளுடைய ஒவ்வொரு வேதனையையும் தன்னுடயதாக்கிக் கொள்ள முயன்றான். அவளுடைய வலிகளையெல்லாம் இவன் உள்ளத்தில் தங்கினான். அவள் அழும் பொழுதெல்லாம் ஆறுதலாகத் தோள் கொடுத்தான். தற்சமயம் மாபெரும் துயரச்சுழலில் சிக்கியிருந்த பூர்ணிமாவிற்கு, பழைய துன்பங்களையெல்லாம் நினைக்கக் கூட தோன்றவில்லை. இந்த நேரம் சித்தார்த்தின் அருகாமையும் ஆறுதல் மொழிகளும் மட்டுமே அவளுக்குத் தேவையாய் இருந்தன.



உடல்நிலை ஓரளவுக்கு தேறிய பிறகு பூர்ணிமாவை வீட்டிற்கு அழைத்துக் கொண்டு வந்தார்கள். ஆனால் மனநிலை மோசமாகவேத்தான் இருந்தது. யாரிடமும் முகம் கொடுத்துப் பேசாமல் அறையிலேயே அடைந்துக் கிடந்தாள். எப்போதும் கலகலப்பாக சிரித்துக் கொண்டே இருக்கும் அந்த பழைய பூர்ணிமாவிற்காக சித்தார்த்தின் மனம் ஏங்கியது.



"இன்னும் எவ்வளவு நாளைக்கு இப்படியே இருப்ப பூர்ணி. கொஞ்சமாவது வெளியில வா. நாலு பேர பாரு... பேசு... மனசுக்குக் கொஞ்சம் ஆறுதலா இருக்கும்" - பூர்ணிமா தங்கியிருக்கும் அறைக்கு வந்த தமிழி அவளுக்கு அறிவுரைக் கூறினாள்.



அவள் பதில் சொல்லாமல் அமர்ந்திருந்தாள். அவளுக்கு அருகில் வந்து அமர்ந்து முகத்தைத் தன் பக்கம் திருப்பி மனச மாத்திக்க முயற்சி பண்ணும்மா. இப்படியே இருக்கறதுல யாருக்கு என்ன லாபம் சொல்லு?" என்றாள்.



அப்போதும் அவளிடமிருந்து எந்த பதிலும் இல்லை. சித்தார்த் உள்ளே வந்தான். அவனைப் பார்த்ததும் தமிழி எழுந்து கொண்டாள்.



"என்ன சொல்றா?"



"ஒண்ணுமே சொல்லல. நீங்க கேட்டுப்பாருங்க" என்று கூறிவிட்டு வெளியே சென்றாள்.



சித்தார்த் பூர்ணிமாவிற்கு அருகில் வந்து அமர்ந்தான்.



"சாப்பிட்டியா?"



"...................."



"எங்கேயாவது வெளியில போகலாமா? ஏதாவது கோவிலுக்கு?"



அதிருப்தியாக முகத்தை சுளித்துக் கொண்டு 'வேண்டாம்' என்று தலையசைத்தாள்.



அவளுடைய வலக்கரத்தை, தன் இருகரம் கொண்டுப் பற்றி ஆறுதலாக வருடிக்கொடுத்து முத்தமிட்டான். அதில் ஒரு நீர்மணி பட்டுத்தெரிந்தது. நிமிர்ந்துப் பார்த்தான். கோவைப்பழம் போல் சிவந்திருந்த அவள் கண்களிலிருந்து கண்ணீர் முத்து முத்தாக வடிந்தது. அவள் முகத்தைக் கைகளில் ஏந்தி விழிநீரை இதழால் ஒற்றியெடுத்தான்.



"எல்லாத்தையும் இழந்துட்டு தனியாயிட்டேன் சித்து" - உள்ளே அடக்கி வைத்திருந்த உணர்வுகள் உடைத்துக் கண்டு வெளியேறின. நொடி கூட தாமதிக்காமல் அவனுடைய கரங்கள் அவளைச் சுற்றி வளைத்து இறுக்கிக் கொண்டன.



"அப்படி சொல்லாத பூர்ணி. நா இருக்கேன் உனக்கு.... கடைசி வரைக்கும் இருப்பேன்..." என்றான்.



அவளுடைய அழுகை அதிகமானது. தன் அணைப்பிலேயே வைத்திருந்து அவளை ஆறுதல் படுத்தினான். அவளுடைய மனநிலை ஓரளவுக்கு சமாதானமடைந்த பிறகு, "நாம கல்யாணம் பண்ணிக்கலாம் பூர்ணி" என்றான்.



"கல்யாணமா!" -அவளுடைய புருவம் சுருங்கியது.



"ம்ம்ம்... ஆமா..."



"இப்போ என்ன...? திடீர்ன்னு..." குழப்பத்துடன் கேட்டாள்.



"தெரியல. நம்ம ரெண்டு பேருக்குமே கல்யாணம் ஒரு மாற்றத்தைக் கொடுக்கும்னு தோணுது"



"இல்ல... நீ அவசரப்பட்டு முடிவெடுக்கற"



"இதுல அவசரப்பட என்ன இருக்கு? என்னைக்கு இருந்தாலும் நீதான் என் மனைவி... நாந்தான் உன் புருஷன்" என்றான். அவள் அமைதியாக இருந்தாள்.



"நடந்தது எல்லாமே உனக்குத் தெரியும். நா செஞ்சது எதையும் நியாய படுத்தல. என்னுடைய முட்டாள் தனத்தை நெனச்சு வருத்தப்படறேன் பூர்ணி. நீ என்னை நம்பனும். நீ இல்லாம என்னால வாழ முடியாதுங்கறதை புரிஞ்சுக்கணும் பூர்ணி" மனதார வருத்தப்பட்டான்.



அவனை புரிந்துக் கொண்டதற்கு அடையாளமாய் அவளுடைய முகத்தில் கீற்றாய் சிறு புன்னகை தோன்றியது. அந்த சின்ன புன்னகை அவனுக்குள் அளவில்லா ஆனந்தத்தை உண்டாக்க, அவள் நெற்றியில் மென்மையாய் முத்தமிட்டான் சித்தார்த். ஸ்ருதியும் லயமும் இணைந்த இனிய இசையாக மாறியது அவர்களுடைய வாழ்க்கை.





முற்றும்
 

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
750
Reaction score
859
Points
93
Just site lerundhu forum ku move panninen pa. It is easier to read multiple episodes on the same page... adhaan...
 

Latest Episodes

Latest posts

New Threads

Top Bottom