Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Completed Manadhodu Oru Raagam - Novel

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
749
Reaction score
859
Points
93
அத்தியாயம் - 11



"வாவ்... சீனியர்... எங்களை போட்டோ எடுத்தீங்களா...?" - பூர்ணிமாவின் உற்சாக குரலில் ஆண்கள் இருவருமே அதிர்ந்தார்கள்.



'என்ன சம்மந்தம் இல்லாம ரியாக்ஷன் கொடுக்கறா?' - சித்தார்த் பூர்ணிமாவை விசித்திரமாகப் பார்த்தான்.



'இவளுக்கு என்ன மண்டை குழம்பிடுச்சா? இல்ல நம்மள ஜோக்கராக்க பார்க்கிறாளா?' - சதீஷ் எரிச்சலானான்.



"உங்களை மட்டும் போட்டோ எடுக்கல... நீங்க அடிச்ச கூத்தையும் சேர்த்துத்தான் போட்டோ எடுத்திருக்கேன் பூரணி... சாரி... பூசணி... உனக்கு அப்படி கூப்பிட்டா தான் பிடிக்கும்ல?" - நக்கலாகப் பேசினான்.



"பூசணியா!" - பல்லைக் கடித்த சித்தார்த் "ஏய்... மரியாதையா பேசு. இல்ல மூஞ்சி முகவாயெல்லாம் பேந்துடும்." - கடுமையாகப் பேசினான்.



"அட எதுக்கு மச்சி இவ்வளவு கோவப்படர? இப்போ என்ன நான் நம்ம பூசணியோட மரியாதை பற்றி குறைவா பேசிட்டேன். நாளைக்கு நம்ம காலேஜே பேசப் போதுதே! எம்எல்ஏ பொண்ணோட மானம்... மரியாதை... கேரக்டர் எல்லாத்தை பற்றியும் அலசி ஆராயப் போகுதே! அப்போ என்ன செய்வ?"



"என்னடா சொல்ற?" - இறுகியக் குரலில் கேட்டான் சித்தார்த்.



"இந்த செல் போன்ல இருக்க போட்டோஸ் எல்லாம் நாளைக்கு காலேஜ் நோட்டிஸ் போர்ட்ல இருக்கும்னு சொல்றேன்" - கையிலிருக்கும் போனை ஆட்டிக் காட்டினான் சதீஷ்.



"சீனியர்... நிஜமாவா சொல்றீங்க?" - பூர்ணிமா மலர்ந்த முகத்துடன் மகிழ்ச்சியாகக் கேட்டாள்.



"உனக்குச் சந்தேகமா இருந்தா நாளைக்கு காலையில நோட்டிஸ் போர்டை பார்த்த பிறகு தெரிஞ்சுக்கோ பூரணி..."



"ஆஹா... செம்ம மேட்டரா இருக்கே..! சீனியர் நீங்க ஒண்ணு செய்யுங்க... உங்க போன்ல இருக்க போட்டோஸ் எல்லாம் கிளியரா இருக்கான்னு ஒரு தரம் செக் பண்ணிக்கோங்க. இல்லன்னா இன்னும் ரெண்டு மூணு போஸ் கொடுக்கறோம்... அதையும் கேப்ச்சர் பண்ணி பப்ளிசிட்டி பண்ணிடுங்க. நச்சுன்னு நாலே போட்டோ... நல்ல கிளியர் பிரிண்ட்டா இருக்கணும்... அதை பார்த்ததும் அப்படியே காலேஜே பத்திகிட்டு எறியணும்... ஓகேவா சீனியர்?" - என்று சதீஷிடம் பேச்சுவார்த்தை நடத்தினாள்.



"இப்படி வா சித்து... கையை நல்லா மேல போட்டுக்க. அப்போதானே எஃபெக்ட் நல்லா இருக்கும்" - என்று சித்தார்த்துடன் நெருங்கி நின்றுக் கொண்டு, "இந்த போஸ் ஓகேவா சீனியர்?" என்று சதீஷிடம் ஐடியா கேட்டதோடு நிறுத்தாமல் "இல்லன்னா இது ஒகேவான்னு பாருங்க..." என்று நுனி காலில் எக்கி நின்று சித்தார்த்தின் கன்னத்தில் இதழ் பதிக்கவும் செய்தாள்.



அவள் செய்துக் கொண்டிருந்த அழும்பில் அரண்டு போன சித்தார்த் "ஏய்... லூசு... என்னடி செய்ற? அவனே போட்டோ எடுத்து வச்சுகிட்டு நம்மள ப்ளாக் மெயில் பண்ணிக்கிட்டு இருக்கான். அவனுகிட்ட போயி இன்னும் ரெண்டு போஸ் சேர்த்து கொடுத்துக்கிட்டு இருக்க?" - கடுகடுத்தான்.



"என்ன சித்து நீ? சீனியர் நமக்கு எவ்வளவு பெரிய ஹெல்ப் பண்ணிக்கிட்டு இருக்கார்ன்னு புரியாம ப்ளாக் மெயில்... அது இதுன்னு..." என்று சித்தார்த்திடம் கடிந்து கொண்டதோடு "நீங்க ஒண்ணும் தப்பா நினைக்காதீங்க சீனியர்" என்று சதீஷிடமும் சமாதானமாக பேசிவிட்டு, அவள் செயலுக்கான விளக்கத்தை சொன்னாள்.



"சித்து... என்னைக்கு இருந்தாலும் உன்னை தான் நான் கல்யாணம் பண்ணிக்க போறேன். இந்த விஷயத்தை நானா அப்பாகிட்ட போயி சொன்னா, மேட்டரை கமுக்கமா வீட்டுக்குள்ளேயே முடிச்சு நம்மளை பிரிச்சாலும் பிரிச்சிடுவார். சதீஷ் சீனியர் மாதிரி யாராவது நம்ம மேட்டரை பப்ளிசிட்டி பண்ணினா அது நியூஸ் ஆயிடும். அப்புறம் நம்மளை யாராலையும் பிரிக்க முடியாது. என்ன... இன்னும் நாலு வருஷத்துக்கு அப்புறம் நடக்க வேண்டிய கல்யாணம் இப்போவே நடந்துடும். அது கூட எனக்கு வசதிதான். எக்ஸாம் முடிஞ்ச பிறகு உன்னை டெய்லி பார்க்க முடியாதேங்கற கவலைக் கூட இருக்காது பாரு" - சித்தார்த்தை பார்த்து கண்சிமிட்டி சிரித்தாள்.



சதீஷின் முகம் இஞ்சியை மென்றுத் தின்ற மந்தி போல் மாறியது.



"நீங்க கண்டினியூ பண்ணுங்க சீனியர்..." - அவனை ஊக்கப் படுத்தினாள்.



அவனோ அவள் சித்தார்த்துடன் ஒட்டிக் கொண்டு இழைவதைக் காண சகிக்காமல் முகத்தை வேறுபக்கம் திருப்பிக் கொண்டான்.



"அடடா... என்ன ஆச்சு சீனியர்...? கொஞ்சம் ஓவரா போயிடிச்சா...? ஓகே... ஓகே... இப்போ பாருங்க... இது ஓகேவா..? சீனியர்... திரும்பி பாருங்க சீனியர்..." - அவனை மேலும் வெறுப்பேற்றினாள்.



'அடிப்பாவி... பழிவாங்க வந்த என்னை வேறமாதிரி வேலை பார்க்க வச்சிருவா போலருக்கே...!' - மெல்ல அங்கிருந்து நழுவினான்.



"சீனியர்... ஹலோ... எங்க ஓடுறீங்க? சீனியர்..." - பூர்ணிமாவின் குரல் அவனைத் துரத்தியது.



"ஏய்... அவன் போகட்டும் விடுடி ரௌடி..." - சித்தார்த் சிரித்தான்.



"ச்ச... இப்படி ஏமாத்திட்டாரே...! இப்போ யாரு நம்மள போட்டோ எடுக்கறது?" - வருத்தத்துடன் கேட்டாள்.



"கொழுப்புடி உனக்கு... நம்ம போட்டோ அவன்கிட்ட சிக்கியிருக்கு. அவன்பாட்டுக்கு எக்கு தப்பா எதையாவது செஞ்சு வச்சுட்டான்னா என்ன செய்றது?"



"என்ன வேணா செஞ்சுட்டு போகட்டும் எனக்கு கவலை இல்ல..."



"அப்போ நாளைக்கே என்னை கல்யாணம் பண்ணிக்க நீ ரெடியா?"



"இன்னிக்கே ரெடி... கையில தாலி இருந்தா இப்போவே என் கழுத்துல கட்டு... இப்படியே உன் பின்னாடி வந்தடறேன்..." - விளையாட்டு போல் சொன்னாலும் அவள் உண்மையைத்தான் சொல்கிறாள் என்பதை உணர்ந்த சித்தார்த்தின் மனம் நெகிழ்ந்தது.



###



"ரிம் ஜிம்... ரிம் ஜிம்... ரிம் ஜிம்... ரிம் ஜிம்..." - தன் கைபேசியில் ஒலித்த பூர்ணிமாவின் குரலைக் கேட்டதும் சமையலறையில் தோசை வார்த்துக் கொண்டிருந்த சித்தார்த்தின் முகத்தில் பலப் எரிந்தது. ஸ்டவ்வை அணைத்துவிட்டு வேகமாக ஹாலுக்கு பாய்ந்து வந்தவன் கைபேசியை எடுத்து இயக்கி காதில் வைத்த நொடி "ஹாய் சித்து...." என்கிற அவளுடைய உற்சாகமான குரல் அவனை வரவேற்றது.



"குட் மார்னிங் பூசணி..."



"பேட் மார்னிங்டா... இன்னையோட சிக்ஸ்டி டேஸ் ஆச்சு உன்னை பார்த்து..." செமெஸ்டர் விடுமுறைக்காகச் சொந்த ஊருக்கு சென்றிருந்த பூர்ணிமா அலுத்துக் கொண்டாள்.



"நீ தானே என்னை இங்க தனியா விட்டுட்டு ஓடிப் போன? இப்ப என்ன பெருசா உருகுற?"



"சரி சரி... கோவிச்சுக்காதடா... இன்னும் ஒரே வாரம்... லீவ் முடிஞ்சிடும். உன்னை பார்க்க ஓடி வந்துடுவேன்... ஓகே?"



"இன்னும் ஒரு வாரமா! அதெல்லாம் முடியாது... நீ நாளைக்கே கிளம்பி வந்துடு..."



"நாளைக்கேவா? முடியாது முடியாது..." - அவள் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே காலிங் பெல் சத்தமிட்டது.



"முடியாதா...! ஏன்?" - கேட்டுக் கொண்டே அவன் கதவை திறந்த நொடியில் "இன்னிக்கே வந்துட்டேன்...." என்று அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டு துள்ளிக் குதித்தவள், உற்சாக மிகுதியில் அவனை இழுத்துக் கொண்டே 'லாலலா... லாலலா..." என்று பாட்டும் நடனமுமாக ஆர்ப்பாட்டத்துடன் உள்ளே நுழைந்து சோபாவில் பொத்தென்று விழுந்தாள்.



புயல் வேகத்தில் உள்ளே நுழைந்து தன்னை நிலைகுலையச் செய்துவிட்ட பூர்ணிமாவின் வருகை கனவா நிஜமா என்பதைக் கூட ஓரிரு நிமிடங்களுக்குப் பிறகே உணர்ந்த சித்தார்த், தான் இருக்கும் நிலையை உணர்ந்து அவளிடமிருந்து விலகி அமர மேலும் சில நிமிடங்கள் ஆனது. அதுமட்டுமா...? எப்படி ஊருக்கு சென்ற பூர்ணிமா எப்படி திரும்பி வந்திருக்கிறாள்....! - சித்தார்த் ஆச்சர்யத்துடன் அவளை மேலும் கீழும் பார்த்தான்.



எப்பொழுதும் ஜீன்சும் டாப்சுமாக திரிகிறவள் இன்று சுடிதாரில் வந்திருந்திருக்கிறாள். போதாக் குறைக்கு தோள்பட்டை வரை முடி வளர்த்து சென்டர் கிளிப் போட்டதோடு, நெற்றியில் சின்னதாக ஒரு பொட்டு கூட வைத்திருக்கிறாள். என்ன ஆச்சு இவளுக்கு!



"பூசணி... இது நீ தானா?" - அவனுக்குள் ஏற்பட்டிருந்த அதிர்வும் இன்ப படபடப்பும் இன்னமும் கூடக் குறையவில்லை.



"நானேதான்... ஏனிந்த சந்தேகம் தலைவா?"



"சேலத்துல இருந்தவ இங்க எப்படிடி திடீர்னு வந்து குதிச்ச? அதோட... ரெண்டே மாசத்துல ஆளே மாறிப் போயிட்ட?"



"ஏன்? பிடிக்கலையா? நீ தானே அன்னைக்குச் சொன்ன... முடி வளர்த்து... பொட்டெல்லாம் வச்சு பொண்ணு மாதிரி இருந்தா ரொம்பப் பிடிக்கும்னு... அதான்... உனக்கு ஒரு சர்ப்ரைசா இருக்கட்டுமேன்னு ஊருக்கு போய்ருந்தப்போ ஹேர் கட் பண்ணவே இல்ல... எப்படி இருக்கு? பிடிச்சிருக்கா?" - ஆசையாகக் கேட்டாள்.



"ம்ம்ம்... அழகா இருக்கு. பட் முன்னாடியும் நீ ரொம்ப அழகுதான் பூசணி. நீ எப்படி இருந்தாலும் எனக்கு பிடிக்கும். அதனால நீ எப்பவும் போலவே இரு. ஓகே?"



"என்னடா குழப்பற? இப்படி இருந்தா அப்படி இருன்னு சொல்ற... அப்படி இருந்தா இப்படி இருன்னு சொல்ற... இப்போ நான் ஹேர் வளர்க்கவா இல்ல கட் பண்ணவா? ரெண்டுல எதையாவது ஒண்ண சொல்லு..."



"எது உனக்குப் பிடிச்சிருக்கோ அதை செய்யி..."



"எனக்கு பல்சர் வண்டி ஓட்டிகிட்டு... கபடி விளையாடி கையை காலை உடச்சுக்கறதுதான் பிடிச்சிருக்கு. செய்யட்டுமா?" - முறைத்தாள். அவனுக்கு சிரிப்பு வந்தது.



"நீ எதுவும் செய்ய வேண்டாம் தாயே! இப்படியே இரு... அதுசரி.. இந்த வீட்டு அட்ரெஸ் உனக்கு எப்படி தெரிஞ்சுது?"



"ஆமாம்... இது பெரிய கம்பர் வரஞ்ச சித்திரம். எங்களுக்கு தெரியாம போறதுக்கு... போடா... போடா... போயி ஜில்லுன்னு ஒரு ஜீஸ் கொண்டுவா... வீட்டுக்கு வந்திருக்க கெஸ்ட்டை எப்படி கவனிக்கரதுன்னு கூடத் தெரியல. கேள்வி கேட்க வந்துட்டான்"



"வாய் கொழுப்பு மட்டும் உனக்குக் குறையவே இல்லடி... நீ என்ன இந்த வீட்டுக்கு கெஸ்ட்டா? கெஸ்ட்னா கூப்பிட்டா தான் வரணும். இப்படிக் கூப்பிடாமலே உள்ள வந்து உட்கார்ந்துகிட்டு அடாவடி பண்ணக் கூடாது"



"நீதான் வேலை கெடைச்சதைக்கூட என்கிட்ட சொல்லாம இப்படி ஊருக்கு ஒதுக்குப் புறமா வந்து ஒளிஞ்சுகிட்டு கிடக்கறியே... நீ எப்படி என்னை வீட்டுக்கு கூப்பிடுவ?" - மனத்தாங்கலுடன் கேட்டவள் முகத்தை திருப்பிக் கொண்டு சமையலறைப் பக்கம் சென்று குளிர்சாதனப் பெட்டியை திறந்தாள்.



'அடக் கடவுளே! வேலை விஷயமும் தெரிஞ்சு போச்சா! யார் அந்தத் துரோகி!' - மனதிற்குள் நினைத்துக் கொண்டே அவளை நெருங்கி பின் பக்கத்திலிருந்து அணைத்து "நீ மட்டும்தான் எனக்கு சர்ப்ரைஸ் கொடுக்கணும்னு நினைப்பியா?" என்று கிசுகிசுத்தான்.



இது சரியா தவறா என்பதை தாண்டி சிறு அணைப்புகள் செல்ல முத்தங்களெல்லாம் இப்போது அவர்களுக்குள் சகஜமாகிவிட்ட ஒன்று என்பதால் பூர்ணிமா இயல்பாகக் கையிலிருந்த கூல்ட்ரிங்க்சை குடித்துவிட்டு நிதானமாக அவன் பக்கம் திரும்பினாள்.



"சர்ப்ரைஸ் கொடுக்க நினைக்கறவன் அதை ஒழுங்கா செயல்படுத்தணும். இப்படிச் சொதப்பிட்டு வழியக் கூடாது..." - அவன் நெஞ்சில் கைவைத்து பின்னுக்குத் தள்ளிவிட்டுவிட்டு வீட்டைச் சுற்றி பார்த்தாள்.



"சொதப்பினது நான் இல்லடி... உன்கிட்ட என்னோட விஷயத்தையெல்லாம் போட்டுக் கொடுத்துகிட்டு இருக்கானே அந்த எட்டப்பன். அவன்தான்..." - அவளோடு சேர்ந்து நடந்தபடி பேசினான்.



"கதிர் அண்ணனையா சொல்ற?" - சர்வ சாதாரணமாக தனக்கு உதவி செய்தவனையே போட்டுக் கொடுத்துவிட்டாள்.



"நினச்சேன்... அந்தப் பயல் தானா? கவனிச்சுக்கறேன் அவனை"



"அதெல்லாம் அப்புறம் கவனிச்சுக்கோ. இப்போ எதுக்கு வீட்டை மாத்தினேன்னு சொல்லு? கதிர் அண்ணன் கூட இப்போ உன் கூட இல்ல போலருக்கு?"



"ம்ம்ம்... நான் ஆபீஸ் பக்கத்துல வீடு பார்த்துகிட்டு வந்துட்டேன். அவனுக்கு பழைய வீடுதான் வசதின்னு சொல்லி அங்கேயே இருக்கான்"



"வீடு நல்லா வசதியா தான் இருக்கு... எப்போ என் கழுத்துல தாலியை கட்டி குடும்பஸ்த்தன் ஆக போற?"



"நீ மட்டும் சரின்னு ஒரு வார்த்தை சொல்லு... நாளைக்கே குடும்பத்தோட வந்து உன் அப்பாகிட்ட பொண்ணு கேட்கறேன்"



"பொண்ணு கேக்கறதா? அதெல்லாம் சரிவராது. பேசாம ஓடிப் போய் கல்யாணம் பண்ணிக்கலாமா? அதுதான் ஈஸி..." என்று அவனை பார்த்து கண்ணடித்தாள்.



அவனோ அவளுடைய குறும்புப் பேச்சை ரசிக்காமல் பல்லைக் கடித்தான். "ஏன்...? நானெல்லாம் பொண்ணு கேட்டா உங்கப்பன் கொடுக்க மாட்டான்னு நீயே சொல்லிடுவ போலருக்கு? என்னை பார்த்தா அவ்வளவு இளக்காரமா இருக்கா உனக்கு?"



"சித்து... அப்பாவை அவன் இவன்னு பேசாதன்னு உனக்கு எத்தனை தடவ சொல்லியிருக்கேன். படிச்சுகிட்டு இருக்க பொண்ணை வந்து பெண் கேட்டா எந்த அப்பாதான் ஒத்துக்குவார்? கொஞ்சமாவது யோசிக்க மாட்டியா?" - அவளுக்கும் கோபம் வந்தது.



"அப்படின்னா இன்னும் மூணு வருஷத்துக்கு என்கிட்ட கல்யாணத்தைப் பற்றி பேசாத..." - என்று கூறிவிட்டு சோபாவில் வந்து அமர்ந்தவனுடைய கடுமை சற்றும் குறையவில்லை.



'இவனோட இது ஒரு தொல்லை... ஆஊன்னா கோச்சுகிட்டு போய் தனியா உட்கார்ந்துடுவான்...' - என்று நினைத்துக் கொண்டே வந்து அவனோடு ஒட்டிக் கொண்டு அமர்ந்தாள். அவனுடைய கையைப் பிடித்து தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டு "என்ன சித்து...? அப்பா உனக்குப் பெண் கொடுக்க மாட்டார்னு நான் சொன்னேனா? எதுக்கு இப்படி காம்ப்ளெக்ஸா ஃபீல் பண்ணற?" என்று அவனை சமாதானம் செய்ய முயன்றாள்.



"காம்ப்ளெக்ஸா...! எனக்கா! வேல்முருகன் பெரிய மகாராஜன். அவனோட பொண்ணு நீ பெரிய இளவரசி. உன்னை கல்யாணம் செய்துக்க அலையற வெட்டிப் பயல் நான்... எனக்கு காம்ப்ளெக்ஸ்... இல்ல?" - அவளிடம் சிக்கியிருந்த தன் கையை உருவிக் கொண்டு வெகுண்டு எழுந்தான்.
 

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
749
Reaction score
859
Points
93
அத்தியாயம் - 12



சித்தார்த்தின் கோபம் பூர்ணிமாவிற்குப் புதிது இல்லை என்றாலும் இரண்டு மாத பிரிவிற்குப் பிறகு சந்தித்திருக்கும் இந்த நேரத்தில் அவள் விளையாட்டாகச் சொன்ன ஏதோ ஒரு வார்த்தையைப் பிடித்துக் கொண்டு அவன் இவ்வளவு தூரம் கோவப்படுவது சற்றும் நியாயமில்லை என்று அவளுக்குத் தோன்றியது. ஆனாலும் அவள் பொறுமையைக் கைவிடவில்லை.



"ஹேய் சித்து! என்னாச்சு உனக்கு?" - என்று இயல்பாகக் கேட்டாள்.



"எனக்கு ஒண்ணும் ஆகல. ஊருக்குப் போயிட்டு வந்ததும் உனக்குத்தான் ஏதோ ஆயிடிச்சு. உன்னோடப் பேச்சு நடவடிக்கை எதுவும் சரியில்ல. உங்கப்பன் காத்து உனக்கும் அடிச்சிடிச்சு போல..."



"அப்பாவைப் பற்றிப் பேசாத சித்து"



"ஏன் பேசக் கூடாது. அப்படித்தான் பேசுவேன். அந்த ஆள்கிட்ட இன்னும் மூணு வருஷத்துக்கு நம்ம கல்யாணத்தைப் பற்றிப் பேச முடியாதுன்னு நீயே சொல்ற. அப்படின்னா என்ன அர்த்தம். அவரோடத் தகுதிக்கு நான் சமமில்லைன்னு நீ நினைக்கிற. அப்படித்தானே?"



"அப்படி நினைச்சிருந்தா உன்னை எதுக்காக சித்து நான் லவ் பண்ணனும்?"



"அது எப்படி எனக்குத் தெரியும்? சென்னைல இருக்கற வரைக்கும் என் கூடப் பழகி என்ஜாய் பண்ணிட்டு கல்யாணம்னு வரும் போது என்னைக் கழட்டிவிட்டுட்டு உங்கப்பன் பார்க்கற மாப்பிள்ளைக்குக் கழுத்தை நீட்டுவியோ என்னவோ! உங்க பணக்காரப் புத்தியைப் பற்றி எனக்கு என்ன தெரியும்?" - கோபத்தில் வார்த்தையைக் கொட்டிவிட்டான்.



பூர்ணிமாவின் சின்ன இதயம் சுக்கலாக உடைந்தது. அவளால் பேச முடியவில்லை. எவ்வளவு ஆசையாக அவனைப் பார்க்க ஓடி வந்தாள்! அவனுக்காக அவளுக்குப் பிடித்த எத்தனை விஷயங்களை விட்டுக்கொடுத்திருக்கிறாள்! அவன் மீது எவ்வளவு உயிராக இருக்கிறாள்! இது எதுவுமே அவனுக்குப் புரியவில்லையா! - துடிக்கும் இதழ்களும் கலங்கிவிட்டக் கண்களுமாக அவனை உருத்து விழித்தாள். அவளுடைய பார்வையில் இருந்த குற்றச்சாட்டில் அவன் அமைதியானான்.



வந்த போது இருந்த உற்சாகத்தில் வீட்டிற்குள் எங்கோ ஒரு மூலையில் தூக்கி வீசிவிட்டிருந்த தன் கைப்பையையும் செல் போனையும் தேடி எடுத்துக் கொண்டு விருட்டென்று வெளியேறினாள். சித்தார்த் திகைத்துப் போய் நின்றான்.



எதிர்த்து ஒரு வார்த்தைக் கூடப் பேசாமல் போய்விட்டாளே! அவ்வளவு கோவமா...! இருக்காதா பின்னே! இவனும்தான் என்னென்ன பேசிவிட்டான். அவள் முகத்தில் எத்தனை வேதனை... அந்தக் கண்களில் எவ்வளவு வலி... பாவம்... - அவளுடைய துன்பம் அவன் மனதில் பல மடங்காக அதிகரித்து அவனை வருத்தியது. கண்மண் தெரியாத கோபத்தில் வார்த்தைகளைச் சிதரவிட்டுவிட்ட தன் முட்டாள் தனத்தை எண்ணி நொந்து கொண்டான்.



பூர்ணிமா அவனை மறந்து வேறொருவனைத் திருமணம் செய்து கொள்வாள் என்று அவன் கனவிலும் நினைக்கவில்லை. அவன் பேசிய எந்த வார்த்தையும் அவனுடைய மனதிலிருந்து பேசவில்லை. ஆனால் ஏதோ ஒரு பயம்... கோவம் அவனை அப்படிப் பேச வைத்துவிட்டது. இப்போது எப்படி அவளைச் சமாதானம் செய்வது என்று புரியாமல் தலையை அழுந்த கோதிவிட்டு ஜன்னல் வழியாக வெளியே பார்த்தான். சாலையில் அவளைக் காணவில்லை. கார்மேகம் சூழ்ந்திருக்கத் தூரத்தில் மின்னல் வெட்டியது.



'மழை வரும் போலருக்கே! எப்படிப் போகப் போறா...!' - அவனுக்குள் கவலை வந்தது. சட்டென்று ஒரு டி-ஷர்ட்டை எடுத்து மாட்டிக் கொண்டு வெளியேறி வண்டியைக் கிளப்பினான். சற்றுத் தூரம் சென்று தெருமுனையில் திரும்பியதும் தூரத்தில் அவள் நடந்து சென்று கொண்டிருப்பது தெரிந்தது. அக்சிலேட்டரை முறுக்கி வேகத்தை அதிகப்படுத்திச் சென்று அவளுடைய வழியை மறித்து வண்டியை நிறுத்தினான்.



திடீரென்று ஒரு பைக் தன்னை வழிமறித்து நின்றதும் ஒரு நொடி திகைத்தவள் பிறகு சுதாரித்துக் கொண்டு, ஒற்றைக் காலை தரையில் ஊன்றி பேலன்ஸ் செய்தபடி வண்டியில் அமர்ந்திருப்பவனை நிமிர்ந்துப் பார்த்தாள்.



"ஏறு..." - சாந்தமாகச் சொன்னான்.



அவன் பேசியது காதில் விழாதது போல் அவனைச் சுற்றிக் கொண்டு நடந்தாள். அவன் மீண்டும் வண்டியை உறுமவிட்டுச் சென்று அவளுடைய வழியை மறித்து நின்றான்.



"பூர்ணி... வண்டில ஏறு..." - சற்று அதட்டலாக ஒலித்தது அவனுடைய குரல்.



'ஏற முடியாது போடா...' என்று அவள் சொல்வாள் என்று அவன் எதிர்பார்த்தான். ஆனால் அவள் பதில் பேசாமல் மீண்டும் அவனைச் சுற்றிக் கொண்டு நடக்க ஆரம்பித்தாள்.



புண்பட்ட மனதுடன் சென்று கொண்டிருப்பவளை சமாதானம் செய்ய முடியாத கையாலாகாத் தனத்துடன் சமைந்து நின்றுவிட்ட சித்தார்த்தை மழைத் தூறல் நிற்க விடவில்லை. அவன் மீண்டும் தன் முயற்சியைத் தொடர்ந்தான்.



"பஸ் ஸ்டாண்ட் போறதுக்கு இன்னும் பத்து நிமிஷம் நடக்கணும். மழை வேற தூர ஆரம்பிச்சிடிச்சு. இப்போ நீ வண்டில ஏறப் போறியா இல்லையா?" - தவறு தன் மீதுதான் என்று தெரிந்தாலும் ஏனோ அவனால் தன்னிலையிலிருந்து இறங்கி அவளிடம் கெஞ்ச முடியவில்லை.



"ஏறலன்னா என்ன செய்வ?" - அவனுடைய கண்களை நேருக்கு நேர் பார்த்துக் கேட்டாள். அதற்கு அவனிடமிருந்து வந்த பதில் அவளை மேலும் நோகடித்தது.



அவன் ஏன் அப்படிச் சொன்னான். அவளை எப்படியாவது சமாதானம் செய்ய வேண்டும் என்கிற எண்ணத்தில் இருந்தவனுடைய வாயிலிருந்து எப்படி அப்படி ஒரு பதில் வந்தது...! அது அவனுக்கே புரியவில்லை.



"ஏறலன்னா என்ன செய்வ?" என்று அவள் கேட்டதும் சற்றும் தாமதிக்காமல் "உன் மனசுல நான் இல்லவே இல்லைன்னு தெரிஞ்சுக்குவேன்... இதுவரைக்கும் நீ என்கிட்ட பழகினதெல்லாம் பொய்யின்னு புரிஞ்சுகிட்டு என் வழில போயிகிட்டே இருப்பேன்..." என்றான்.



அவள் முகத்தில் ஓர் அதிர்வு வந்து போனது. மழை வலுக்க ஆரம்பித்துவிட்டதைக் கூட உணராதவர்கள் போல இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் வெறித்துப் பார்த்துக் கொண்டு சிலை போல் நின்றார்கள். ஓரிரு நிமிடங்களுக்குப் பிறகு பூர்ணிமா பின் சீட்டில் ஏறி அமர்ந்தாள். அமைதியில்லா மனதுடன் அவன் வண்டியை வீட்டை நோக்கித் திருப்பினான்.



தொப்பலாக நனைந்துவிட்ட ஆடையுடன் இருவரும் வீட்டிற்குள் நுழைந்தார்கள். அவள் கூடத்திலேயே தயங்கி நின்றுவிட அவன் உள்ளே சென்று ஒரு துண்டைக் கொண்டு வந்து அவளிடம் நீட்டினான். அவள் பதில் பேசாமல் வாங்கித் தலையையும் முகத்தையும் துடைத்துக் கொண்டாள்.



நனைந்துவிட்ட ஆடையுடன் தன் முன் நிற்கும் பளிங்குச் சிலையை ஓரக்கண்ணால் ரசித்துக் கொண்டே மின்விசிறியை சுழலவிட்டவன், அவள் துடைத்துவிட்டுக் கொடுத்த துண்டை வாங்கி முகத்தைத் துடைத்துக் கொள்ளும் பொழுது, அதிலிருந்து புதிதாக ஏதோ ஒரு வாசம் வருவது போல் உணர்ந்தான்.



'ஒரு ஆட்டோவைப் பிடித்து ஹாஸ்ட்டலுக்குக் கொண்டு போய் விடாமத் தப்புப் பண்ணிட்டோமோ!' - பாலுக்குக் காவலிருக்கும் பூனை போல் அவன் மனம் நிலை தடுமாறியது. தலையை உலுக்கிக் கொண்டு சமையலறைக்குள் சென்றான். அவளும் அவன் பின்னாலேயே சென்றாள்.



"இங்க எதுக்கு வர்ற? ஃபேன்ல போய் உட்காரு. டிரஸ் காயட்டும்..." அவள் முகத்தைப் பார்க்காமல் கேஸ் ஸ்டவ்வைப் பற்றவைத்துப் பாலை காய்ச்சியபடிப் பேசினான்.



"நீ என்ன செய்ற இங்க?"



"என்ன சாப்பிடற? டீயா இல்ல காபியா?" அவளுடைய கேள்விக்கு நேரடியாகப் பதில் சொல்லாமல் அவன் ஒரு கேள்வியைக் கேட்டான்.



"இதையெல்லாம் இப்படி ஈரத்தோட நின்னுகிட்டு தான் செய்யணுமா? முதல்ல போய் டிரெஸ்ஸை மாத்திகிட்டு வா..." - ஒட்டாத குரலில்தான் பேசினாள் என்றாலும் அவன் மீதான அக்கறையினால்தான் அவளிடமிருந்து அந்த வார்த்தைகள் வெளிப்பட்டன.



அவன் அவளை நிமிர்ந்துப் பார்த்தான். அவன் கண்களுக்கு அவள் குழந்தை போல் தோன்றினாள். 'இவளை எதற்காக நோகடித்தோம்!' - வருந்தினான். ஆனாலும் மன்னிப்புக் கேட்க மனம் வரவில்லை. டீ போடுவதில் கவனமானான்.



"சொல்றேன்ல... போயி டிரெஸ்ஸை மாத்திகிட்டு வா..." - அவள் மீண்டும் சொன்னாள். அவள் பேசுவது அவன் காதிலேயே விழாதது போல் அவன்தான் செய்து கொண்டிருந்த வேலையிலேயே கவனமாக இருந்தான்.



சற்று நேரம் அங்கு நின்று பார்த்தவள் ஒரு பெருமூச்சுடன் அங்கிருந்து அகன்று ஹாலோடு ஒட்டியிருக்கும் பால்கனிக்குச் சென்று மழையை வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்தாள்.



"என்ன இங்க வந்துட்ட? சாரல் அடிக்குதுப் பார்... உள்ள வா" - கையில் இரண்டு டீ கப்புடன் வந்தவன் அவளிடம் ஒன்றை நீட்டியபடிக் கூறினான்.



அவன் கொடுத்த கப்பை கையில் வாங்கிச் சூடான டீயைச் சுவைத்தாள். அவள் மனதில் ஏதேதோ எண்ணங்கள் ஓடிக் கொண்டிருந்தன. அவன் கையிலிருந்த காலி கப்பையும் வாங்கிக் கொண்டு சமையலறைக்குச் சென்று கழுவி வைத்துவிட்டு ஹாலுக்கு வந்தாள். அவன் சோபாவில் அமர்ந்து டிவி ரிமோட்டைத் தட்டிக் கொண்டிருந்தான்.



"என்ன ப்ரோக்ராம் பார்க்கற?" - அவள் அவனோடு ஒட்டி அமர்ந்தபடிக் கேட்டாள்.



எப்பொழுதும் போல் இயல்பாக இருக்க முடியாமல் அவன் சங்கடத்துடன் நெளிந்தான்.



"சும்மாதான்... உனக்குப் பிடிச்ச ப்ரோக்ராம் ஏதாவது வந்தாப் பாரு..." அவன் அவள் கையில் ரிமோட்டைத் திணித்துவிட்டு எழுந்து நழுவப் பார்த்தான். அவனுடைய கையைப் பிடித்துத் தடுத்து நிறுத்தியவள் "எங்க போற? உட்காரு" என்று அவனை மீண்டும் சோபாவில் அமரவைத்தாள்.



அவன் குழப்பத்துடன் அவளைப் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே அவன் மார்பில் சாய்ந்து அவனோடு ஒட்டிக் கொண்டாள். அவன் விலகினான். அவள் விடவில்லை. அவனுடைய தயக்கங்களையெல்லாம் அவளே உடைத்து நொறுக்கினாள். வீட்டிற்கு வெளியே பெய்து கொண்டிருக்கும் மழையால் வான்மேகமும் கடல் நீரும் ஒன்றாய்க் கலந்தது. அவளுக்குள் பொங்கிய காதல் உணர்வால் வீட்டிற்கு உள்ளேயும் அதுவே நடந்தது.
 

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
749
Reaction score
859
Points
93
அத்தியாயம் - 13


'அவசரப் பட்டுவிட்டோம்... அவளுக்குத்தான் புரியவில்லை. நம் புத்திக்கு என்ன கேடு வந்தது?' - சித்தார்த்தின் மனம் குறுகுறுத்தது. நடந்து முடிந்துவிட்ட தவறை சரி செய்யும் வழி தெரியாத நிலையில் மனசாட்சி அவனைக் குத்தியது.



'ஆனால் அவள் ஏன் அப்படிச் செய்தாள்! எப்பொழுதும் போல் பதிலுக்குப் பதில் சண்டைப் போடாமல் எதற்காக எல்லை மீற தூண்டினாள்...! ' - ஹோட்டலிலிருந்து வரவழைக்கப் பட்டிருந்த உணவு வகைகளை பேப்பர் டப்பாவிலிருந்து பாத்திரத்திற்கு மாற்றிக் கொண்டிருந்தவன், ஏதோ சிந்தனையுடன் சோபாவில் அமர்ந்திருக்கும் பூர்ணிமாவைத் திரும்பிப் பார்த்தான். தனித்து விடப்பட்ட குழந்தை போல் பாவமாக அமர்ந்திருப்பவளைக் கண்டதும் அவன் மனதைப் பிசைந்தது.



அவசரமாக உணவை டைனிக் டேபிளுக்குக் கொண்டு வந்து வைத்துவிட்டு "சாப்பிட வா பூரணி..." என்றான்.



அவள் கண்களில் ஏதோ கேள்வியுடன் அவனைத் திரும்பிப் பார்த்தாள். "சாப்பிட வா..." - அவன் மீண்டும் அழைத்தான்.



பதில் பேசாமல் எழுந்துச் சென்று ஒரு சேரில் அமர்ந்தாள். அன்பு பொங்கும் மனதுடன் சித்தார்த் அவளுக்குப் பரிமாறினான்.



"நீயும் சாப்பிடு சித்து..."



"ம்ம்ம்... இதோ..." - அவள் பேச்சைத் தட்டாதவனாகத் தனக்கும் ஒரு தட்டை எடுத்துப் பரிமாறிக் கொண்டு அமர்ந்து ஒரு பிடி உணவை எடுத்து அவன் வாயில் வைத்த தருணம், அவனையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்த பூர்ணிமா கேட்டாள்... "இப்போ என்னை நம்புறியா சித்து?"



அவ்வளவுதான்... வாயில் வைத்த உணவுத் தொண்டைக் குழிக்குள் இறங்காமல் சிக்கிக் கொண்டது.

"பூர்ணி!" - அதிர்ச்சியில் பேச்சு வராமல் திகைத்து விழித்தான்.



"உன்னைத் தவிர வேறு யாருக்கும் என் வாழ்க்கையில இடம் இல்ல சித்து... இனி உன் மனசு அமைதியா இருக்குமா?" - அவன் மீதான அக்கறை மட்டுமே இருந்தது அவள் குரலில்.



'என் நம்பிக்கைக்காகவா! என் மன அமைதிக்காகவா!' - இதயத்தில் கூர்மையான ஈட்டிப் பாய்ந்தது போல் துடித்துப் போனான். கண்களில் கண்ணீர் பொலபொலவென்று உதிர்ந்தது.



"சித்து... என்ன ஆச்சு?" - அவனுடைய கண்ணீரைக் கண்டதும் தவிப்புடன் கையை உதறிவிட்டு எழுந்த பூர்ணிமா அவனுக்கருகில் வந்ததும் அவள் இடுப்பை வளைத்துப் பிடித்துக் கொண்டு குலுங்கி அழுதான்.



"சாரி... சாரி பூரணி... நான் தப்புப் பண்ணிட்டேன்... ரொம்பப் பெரிய தப்புப் பண்ணிட்டேன்..." - புலம்பினான்.



அதுவரை அவளிடமிருந்த ஒருவித இறுக்கம் அவனுடைய கண்ணீரைக் கண்டதும் கரைந்து போய்விட்டது.



"சித்து... ப்ளீஸ்... அழாத... சொல்றேன்ல... சித்து... என்னடா... எதுக்கு இப்படி அழற?" - அவன் தலையைக் கோதி, முதுகைத் தடவிச் சமாதானம் செய்ய முயன்றாள்.



ஆனால் அவன் சமாதானம் ஆகவில்லை. சிறு பிள்ளை போல் ஆத்திரம் தீரும் வரை அழுது ஓய்ந்தவன் மெல்ல நிமிர்ந்து அவள் முகம் பார்த்தான். கோவைப் பழம் போல் சிவந்திருந்த அவன் கண்கள் மீண்டும் கலங்கின.



"என்னடா... இப்போ என்ன நடந்து போச்சு? எதுக்கு இவ்வளவு வருத்தப்படற?" - ஆதரவுடன் அவன் முகத்தை வருடியபடிக் கேட்டாள்.



அவளுடைய அந்த அன்பு அவனை மேலும் வருத்தியது. "பூர்ணி... நாம எங்கேயாவது போயிடலாமா... யாருக்கும் தெரியாம... யார் கண்ணுலையும் படாதக் கண்காணாத தூரத்துக்கு... நாம ரெண்டு பேர் மட்டும்... போயிடலாம் பூர்ணி..." - கெஞ்சினான்.



எதற்காக இவன் இப்படித் தவிக்கிறான். யாருக்குப் பயப்படுகிறான்... அல்லது எதிலிருந்து தப்பிக்கப் பார்க்கிறான்! அவளுக்குப் புரியவில்லை.



"ஓடிப் போகலாமான்னுக் கேக்குறியா சித்து?" - புன்சிரிப்புடன் கேட்டாள்.



"ஆமாம்... வா... நாம எங்காவது ஓடிப் போயிடலாம். நமக்கு இந்த ஊர் வேண்டாம்... சித்தார்த் பூர்ணிமாங்கர அடையாளம் வேண்டாம். சொந்தபந்தம் எதுவும் வேண்டாம்... எனக்கு நீ... உனக்கு நான்... அது மட்டும் போதும்..." - தீர்மானமாகச் சொன்னான்.



"ஏண்டா... இதே வார்த்தயக் காலையில நான் சொன்னதுக்கு என்னென்ன ஆர்ப்பாட்டம் பண்ணின? இப்போ... நீயே இப்படிச் சொல்ற?" - அவள் இப்போது வெளிப்படையாகவே சிரித்தாள்.



உச்சந்தலையிலடித்தது போல் பிரச்சனையின் ஆரம்பப் புள்ளி அவனுக்கு உரைத்தது. அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் பதட்டத்துடன் அவளைப் பார்த்தான்.



"என்னடா? எதுக்கு இப்படி முழிக்கற?"



"நீ சின்னப் பொண்ணு பூர்ணி... உனக்கு நான் தப்புப் பண்ணிட்டேன்..." -



"நான் ஒண்ணும் விபரம் தெரியாத குழந்தை இல்ல... எனக்கு எல்லாம் தெரியும். நீதான் சின்னப் பிள்ளை மாதிரி தேவையில்லாம மனசப் போட்டுக் குழப்பிக்கற. இந்தத் தாலி கல்யாணமெல்லாம் ஜஸ்ட் ஒரு சம்பிரதாயம்தான்டா... அதைத் தாண்டி நம்ம மனசுக்குத் தெரியாதா...? உனக்கு நான்... எனக்கு நீன்னு? அப்புறம் எதுக்காக இந்தப் பயம் வருத்தமெல்லாம்? பேசாமச் சாப்பிடு..." - என்று அவனுக்கு எடுத்துக் கூறி சமாதானம் செய்து அவனைச் சாப்பிட வைத்தாள்.



அப்போதைக்குச் சற்றுத் தெளிந்தாலும் அதன் பிறகு அடிக்கடி அவன் மனம் குற்ற உணர்ச்சியில் சிக்கிக் கொண்டு தவிக்கும். மனசாட்சிக் கேள்விக் கேட்கும் போதெல்லாம் உறக்கம் வராமல் தவிப்பான். அவளுடன் ஓட்டிப் பழகவும் முடியாமல் விலகிச் செல்லவும் முடியாமல் ஒரு கூட்டுக்குள் தன்னைச் சுருக்கிக் கொள்வான்.



வாரம் முழுக்கக் காத்திருந்து சனி ஞாயிறுகளில் அவனைச் சந்திக்க அவனுடைய குடியிருப்பிற்கு ஓடி வருகிறவளுக்கு அவனுடைய விலகலை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவனைப் பழையபடி உற்சாகமும் அடாவடித்தனமும் கொண்டவனாக மாற்ற பல உக்திகளைக் கையாண்டுப் பார்த்துத் தோற்றுப் போனாள். கடைசியில் முள்ளை முள்ளால் எடுப்பது போல் நீயும் நானும் வேறல்ல... இருவரும் ஈருடல் ஓருயிர் என்று அவனோடு ஒன்றாகக் கலந்துவிடுவாள். இப்படியே அவர்களுடைய வாழ்க்கைத் தொடர்ந்தது.



ஆரம்பத்தில் அவர்களுடைய உறவு நெறிமுறைகளற்றுத் தடம் புரண்டுப் போனதில் வெகுவாய் வருந்தியவன்... தன்னவளின் மரியாதையைக் குலைத்துவிட்டோம் என்று துன்பப்பட்டவன்... அப்பாவிப் பெண்ணைப் பயன்படுத்திக் கொண்டோம் என்கிற குற்ற உணர்ச்சியில் தவித்தவன் போகப்போக இயல்பாகிவிட்டான். அவர்களுடைய புதிய வாழ்க்கை முறையை ஏற்றுக் கொண்டு அதில் வாழப் பழகிவிட்டான்.



இப்போதெல்லாம் விடுமுறை நாட்களில் அவள் இல்லாமல் அவனால் அந்த வீட்டில் தனித்து இருக்க முடிவதில்லை. ஏதாவது ஒரு வாரம் அவள் வரவில்லை என்றாலும் அவன் விடமாட்டான். விடுதிக்குச் சென்று கட்டாயப்படுத்தி அவளை அழைத்துக் கொண்டு வந்தால்தான் அவனுக்கு நிம்மதியாக இருக்கும். அவளுக்காக அவன் எதையும் செய்தான்... அவனுக்காக அவள் எதையும் விட்டுக்கொடுத்தாள். தங்களுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்கிற நினைவே அவர்கள் இருவருக்கும் இருக்கவில்லை. ஒருவர் மீது ஒருவர் கொண்ட அதீதக் காதலினால் உலகத்தை மறந்து மகிழ்ச்சியில் திளைத்திருந்தார்கள்.

###



"வணக்கம்... என் பேர் ராதாகிருஷ்ணன். தமிழியோட அப்பா..."



"சொல்லுங்க... என்ன விஷயம்?" - வாசலிலியே நிற்க வைத்துக் கேட்டான் ரவி.



"ரவி... அவரை உள்ள கூப்பிடுப்பா... நீங்க உள்ள வாங்க..." - மகனைக் கடிந்து கொண்ட பார்வதி வந்திருப்பவரை உள்ளே அழைத்தாள்.



வாசலை அடைத்துக்கொண்டு நின்ற ரவி தாயை முறைத்துக் கொண்டே விலகி வழிவிட்டான்.



"உட்காருங்க... " - அவர் சோபாவில் அமர்ந்ததும் "என்ன சாப்பிட்ரிங்க?" என்று உபசரித்தாள்.



"நான் சாப்பிடறதுக்காக வரலம்மா..." -



"அப்போ வந்த விஷயத்தைச் சொல்லிட்டுக் கிளம்ப வேண்டியது தானே?" - முகத்திலடித்தது போல் பேசினான். அவர் முகம் சிவக்க அவனை முறைத்துப் பார்த்தார்.



"ரவி...!" - மகனை அதட்டிய பார்வதி "நீங்க சொல்லுங்க..." என்று அவரிடம் தணிந்துப் பேசினாள்.



"என் மகளுக்கு என்னம்மா வழி... அவ வாழ வேண்டிய பொண்ணு. உங்க பையனை மனசுல நினச்சுகிட்டுக் கல்யாணம் பண்ணினா அவரைத் தான் பண்ணுவேன்னு பிடிவாதமா இருக்கா. ஆனா உங்க பையன்...?" - அவருடைய பார்வை அவனைக் குற்றம் சொன்னது.



"ஹலோ... உங்க பொண்ணு மனசுல நினைக்கறதுக்கெல்லாம் நாங்கப் பொறுப்பாக முடியாது. அவளைக் கல்யாணம் பண்ணிக்கறதுக்காக இங்க யாரும் தவம் கிடக்கல.. போயிச் சொல்லுங்க அவகிட்ட..." - எடுத்தெறிந்து பேசினான்.



"தெரியும் தம்பி... அவ மனசுல நினைக்கறதுக்கு நீங்க பொறுப்பாக முடியாது. ஆனா அவ மனசுல ஆசையை விதச்சதுக்கு நீங்க தானே பொறுப்பாகணும்?"



'எல்லாரும் இதையே பிடிச்சுகிட்டுத் தொங்குங்கடா...!' - அவன் பதில் பேச முடியாமல் பல்லைக்கடித்தான்.



"அடிக்கடி என் பொண்ணு உங்க வீட்டுக்கு வந்து போறா... பார்க்கறவங்க என்ன நினைப்பாங்க ?"



"அவளை ஒண்ணும் நாங்க வெத்தலைப் பாக்கு வச்சுக் கூப்பிடலங்க... அவளா வந்து தொலைச்சு எங்க உயிரை வாங்கறா. பார்க்கறவங்க அவளை மட்டும்தான் தப்பாப் பேசுவாங்களா? எங்களைப் பேச மாட்டாங்க?" - எரிச்சலுடன் வெடுவெடுத்தான்.



"இப்போ இவ்வளவு ரோஷப்படறவர் அவளை வீட்டுக்குள்ள அனுமதிச்சிருக்கக் கூடாதுத் தம்பி... அவகிட்ட ஆசைக் காட்டிப் பேசி மயக்கிவிட்டு இப்போ கைகழுவப் பார்த்தா என்ன அர்த்தம்?"



"ஆசைகாட்டிப் பேசினேனா? எப்போ? ஒரு வருஷத்துக்கு முன்னாடி நடந்த கதையெல்லாம் இப்போ பேசாதீங்க...."



"எப்போ நடந்த கதையா இருந்தா என்ன? அவ மனசைக் கெடுத்தது நீங்கதான். அதுனால அவ மனசை மாத்தற பொறுப்பும் உங்களுக்குத்தான் இருக்கு. ஒண்ணு அவ உங்கள மறந்துட்டு நாங்கப் பார்க்கற மாப்பிள்ளையைக் கல்யாணம் செய்துக்கணும்... இல்ல நீங்க அவளைக் கல்யாணம் செய்துகிட்டு ஒழுங்காக் குடும்பம் நடத்தணும். இது ரெண்டுல ஏதாவது ஒண்ணு நடந்தாகணும். அதை நீங்கதான் நடத்தணும்..."





"யோவ்... என்ன விளையாடறியா? உன் பொண்ணுக்குக் கல்யாணம் பண்ணி வைக்கறதுன்னா அதைப் பற்றி அவகிட்டப் பேசு. எதுக்கு என் வீட்டுல வந்து உட்கார்ந்துகிட்டுப் பஞ்சாயத்து வச்சுகிட்டு இருக்க? நான் உன் மகளைக் கல்யாணம் பண்ணிக்கற ஐடியால இல்ல. ஒரு நாளும் அது நடக்காது. நீ கிளம்பு..."



"ரவி... பெரியவங்ககிட்ட மரியாதை இல்லாமப் பேசுறது என்னடாப் பழக்கம்?"



"ம்மா... நீ கொஞ்சம் சும்மா இரு..."



"வாயை மூடுடா..." - என்றைக்கும் இல்லாமல் பார்வதியின் குரலில் இன்று அதீதக் கடுமை இருந்தது. தன் மகனுக்கும் ஏதோ நல்லது நடந்துவிடும் போலிருக்கே என்கிற அவளாசை அவளைப் படபடக்க வைத்தது. ரவி பதில் பேசவில்லை.



"நீங்க உண்மையா தான் சொல்றீங்களா? ரவியைப் பற்றி எல்லாம் தெரிஞ்சு தான் பேசுறீங்களா?" - தமிழியின் தந்தையிடம் கேட்டாள்.



"தெரிஞ்சுதானம்மாப் பேசறேன். எனக்கு வேற வழி இல்ல. தமிழோட மனச என்னால மாத்த முடியல. ஊர்ல இருக்கறவங்கல்லாம் தப்பாப் பேச ஆரம்பிச்சுட்டாங்க. இதை இப்படியே விட்டுட்டா என்னோட அடுத்தப் பொண்ணு வாழ்க்கையும் பாதிக்கப்படும். இதை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்தாகணும்"



"ஆனா இவன்...." - முடிக்க முடியாமல் தங்கினாள்.



"உங்க பையனை என் பொண்ணு நம்பரா... அவளோட வாழ்க்கை... அவ எடுக்கற முடிவு... இதுக்கு மேல நாம என்ன செய்ய முடியும்?"



பார்வதிக்கு ஒரு பக்கம் இவனை நம்பி ஒரு பெண்ணின் வாழ்க்கையைப் பணயம் வைப்பதா என்கிற தயக்கம் இருந்தாலும் மற்றொரு பக்கம் இவனை அவளால் மட்டுமே திருத்த முடியும் என்றும் நம்பினாள். அதனால்... "உங்க விருப்பம்ங்க... நீங்க என்ன முடிவு சொன்னாலும் எனக்குச் சம்மதம்..." என்றாள்.



அவர் ரவியைத் திரும்பிப் பார்த்தார். அவனோ இறுகிய முகத்துடன் யாரையும் நிமிர்ந்து பார்க்காமல் அமர்ந்திருந்தான். ஒரு பெருமூச்சுடன் "ஒரு நல்ல நாளை பார்த்துச் சொல்லுங்க..." என்று சொல்லிவிட்டு எழுந்தார்.



சட்டென்று நிமிர்ந்த ரவி "அவசரப்பட வேண்டாம்... நான் இன்னொரு தடவ அவகிட்டப் பேசறேன்..." என்றான். அதற்கும் சம்மதம் என்பது போல் "பேசிப் பாருங்க... இப்போ நான் கிளம்பறேன்" என்று கூறி கைகுவித்து விடைபெற்றுக் கிளம்பினார்.
 

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
749
Reaction score
859
Points
93
அத்தியாயம் - 14



தமிழை பார்த்துவிட்டு வருகிறேன் என்று நேற்று வெளியே சென்றவன் இன்னும் வீடு திரும்பவில்லை. எங்குப் போயிருப்பான்! பார்வதிக்குப் பயம் பிடித்துக் கொண்டது. தமிழிக்கு போன் போட்டுக் கேட்கலாம் என்று நினைத்தால் அவளையும் பயமுறுத்த வேண்டாமே என்கிற எண்ணம் அவளைத் தடுத்துக் கொண்டிருந்தது. ஆனால் எவ்வளவு நேரம்தான் பொறுப்பது. இதோ போனை எடுத்துவிட்டாள்.





"ஹலோ... தமிழு..."





"சொல்லுங்கத்த..."





"எப்படிம்மா இருக்க?"





"நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்கத்த?"





"நான் இருக்கறது இருக்கட்டும்... அந்தப் பய நேத்து உன்கிட்ட என்னம்மா சொன்னான். உன்னைப் பார்க்க வந்தவன் திரும்ப வீட்டுக்கு வரவே இல்லையே..."



"என்னது! வீட்டுக்கு வரலையா!" - தமிழ் அதிர்ச்சியுடன் கேட்டாள்.





'இதுக்குத்தான் இவகிட்டச் சொல்ல வேண்டாம்னு நினச்சேன்... அவனுக்கு ஒண்ணுன்னாத் துடிச்சுப் போயிடறா. இவளோட அருமை அவனுக்கு எங்க தெரியுது... ஹும்ம்ம்...' - பெருமூச்சுடன் மனதிற்குள் நினைத்துக் கொண்டாள் பார்வதி.





"அத்த... அவர் என்னைப் பார்க்க வந்தது நேத்துக் காலையில... பகல் முழுக்க வீட்டுக்கு வரலைன்னதும் எனக்கு ஒரு போன் பண்ணிச் சொல்லியிருக்க வேண்டியது தானே? இப்போ பாருங்க ஒரு பகல்... ஒரு நைட் முடிஞ்சுடிச்சு. எந்த நிலமையில எங்கப் போயி விழுந்துக் கிடக்கராரோ தெரியல... இல்லைன்னா யார்கிட்டையாவது வம்பிழுத்து அடிதடின்னு ஏதாவது.... கடவுளே...!" - அழுதுவிடுபவள் போல் பேசினாள்.





"அப்படியெல்லாம் இருக்காதும்மா. நீ மனசப் போட்டுக் குழப்பிக்காத. நேத்து உன்கிட்டப் பேசும் போது என்ன சொன்னான்"





'என்னத்த சொல்லித் தொலச்சான்!' - எரிச்சலுடன் எண்ணியவள் நேற்று தனக்கும் அவனுக்கும் நடந்த பேச்சு வார்த்தையை வருங்கால மாமியாரிடம் ஒப்புவித்தாள்.





"நீ வீண் பிடிவாதம் பிடிக்கிற தமிழ். காதல் கன்றாவின்னுச் சொல்லி உன்னோட வாழ்க்கையைக் கெடுத்துக்கப் பார்க்கற"





"என்னோட வாழ்க்கையை நான் எப்படி வேணாக் கெடுத்துகிட்டுப் போறேன். அதைப் பற்றி உனக்கென்ன கவலை?"





"நீ மட்டும் கெட்டு ஒழிஞ்சா எனக்கென்ன கவலை வரப் போகுது? ஆனா நீ என்னையும் சேர்த்து இல்ல சிக்கல்ல இழுத்துவிடப் பார்க்கற"





"ஆஹா... இவர் பெரிய கௌரவமான வாழ்க்கையை வாழ்ந்துகிட்டு இருக்காரு. எங்களைக் கல்யாணம் பண்ணிக்கிரதுனாலதான் புதுசா சிக்கல்ல மாட்டிக்கப் போறாரு... ஆளையும் மூஞ்சியையும் பாரு..." - போதையில் மினுமினுக்கும் அவன் முகத்தைக் காதலுடன் பார்த்து ரசித்துக் கொண்டே கூறினாள்.





அவளுடைய பார்வை அவனைத் தடுமாறச் செய்தது. அவளுக்குப் புத்திச் சொல்லித் திருத்த வேண்டும் என்கிற எண்ணத்தில் அவன் பேச வந்தால், அவள் அவனைப் பார்வையாலேயே மயக்கிவிடுவாள் போலிருக்கிறதே! அவன் பயந்து போனான்.





"ஏய்...! இந்தப் பருகுறப் பார்வை... கிண்டல் பேச்செல்லாம் என்கிட்ட வேண்டாம். இதுக்கெல்லாம் மயங்கற ஆள் நான் இல்ல..."





"உன்னை யாரு மயங்கச் சொன்னது. நீதான் பொழுதுக்கும் போதையில மயங்கிக் கெடக்குறியே! உனக்கு என்னைப் பார்த்து மயங்கரதுக்கெல்லாம் எங்க நேரம் இருக்கப் போகுது"





"அதைதான் நானும் சொல்லிக்கிட்டு இருக்கேன். நான் மொடாக் குடிகாரனாயிட்டேன். உன்னோட அன்பு காதல் கீதலெல்லாம் காட்டி மயக்கி என்னைத் திருத்திரலாங்கறக் கனவுலயெல்லாம் கல்யாண முடிவ எடுத்துடாத. நான் கட்டுறத்தாலி உன் கழுத்துல ஏறிடிச்சுன்னா அப்புறம் வாழ்க்கை உனக்கு நரகம்தான்..."





"மெரட்டுரியாக்கும்?" - அலட்சியமாகக் கேட்டாள்.





"உண்மையைச் சொல்றேன்..."





"ஓஹோ... அப்போ சரிங்க ஹரிசந்திரரே! எனக்கு நீங்களே ஒரு நல்ல மாப்பிள்ளையைப் பார்த்துக் கல்யாணம் பண்ணி வச்சிருங்க. உங்களோட உண்மை நேர்மையெல்லாம் பாராட்டி எங்களுக்குப் பிறக்கிற குழந்தைக்கு உங்களோட பெயரையே வச்சிடறேன்..." - அவளுடைய சொல்லம்புகள் குறித் தவறாமல் அவன் நெஞ்சில் பாய்ந்தன.





'உனக்கு மாப்பிள்ளை நான் பார்க்கனுமா! நீ... எவன் குழந்தைக்கோ என் பெயரை வைப்பியா! ராட்சசி...! எங்கேயாவது கண்காணாத இடத்துலப் போயி வாழ்ந்துத் தொலைடின்னுச் சொன்னா என்னையே மாமன் தானம் பண்ணச் சொல்லுவாப் போலருக்கே!' - கடுப்பான ரவி "ஏய்... என்னை என்ன ப்ரோக்கர்னு நெனச்சியா? அப்படியே ஓங்கி ஒண்ணு விட்டேன்னு வச்சுக்கோ... முப்பத்திரெண்டும் உதுந்துடும் ஜாக்கிரதை..." என்று அடிக் குரலில் சீறினான்.





"ரோஷம் வருதோ...! லவ் பண்ணினப் பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்காமக் கழட்டிவிடத் துடிக்கற மானஸ்தனுக்கு ரோஷமெல்லாம் வரக்கூடாது சாமி..." - அவள் பேசிய நக்கல் மொழியில் அவனுடைய தன்மானம் அடிவாங்கியது. "ஏய்..." என்று அவளிடம் கையை ஓங்கிக் கொண்டு பாய்ந்தவன் சுற்றுப் புரத்தை மனதில் கொண்டு தன்னை அடக்கிக் கொண்டான்.





'ஊர்ல இருக்க அப்பனெல்லாம் பொது இடத்துல எவனாவது தன் பொண்ணுகிட்ட வாலாட்டினா அரிவாளையும் சுளுக்கியையும் தூக்கிகிட்டு வருவானுங்க. ஆனா இவ அப்பன் மட்டும் கெடச்சுதுடா சாக்குன்னு... தேங்காப் பழத்தோட வெத்தலை பாக்கையும் சேர்த்துத் தாம்பூலத்துல அடுக்கிக்கிட்டுச் சம்மந்தம் பேசல்ல வந்துடுவான்...' - கடுகடுவென்ற முகத்துடன் அவளை முறைத்தான். அவள் முகத்தில் புன்னகையின் சாயல் லேசாகத் தெரிந்தது.





'இவ நம்மள வெறுப்பேத்திக் காரியத்தைச் சாதிக்கப் பார்க்கிறா...' - சுதாரித்துக் கொண்டான்.





"ஆமாடி... உன்னோட குரங்கு மூஞ்சியைப் பார்க்கப் பிடிக்காமதான் கழட்டி விடப் பார்க்கிறேன். போயித் தொலைய வேண்டியது தானே? எதுக்கு நாயி மாதிரி என் பின்னாடியே அலையிற..." - கடுமையான வார்த்தைகளைப் பிரயோகித்து அவன் இதயத்தைக் குத்திக் கிழித்தான்.





அவள் அழுத்தக்காரிதான். தைரியசாலிதான். ஆனாலும் மனதுக்குப் பிடித்தவனுடைய வார்த்தையம்புகளின் வலி தாங்காமல் மனம் துவண்டுவிட்டாள். நீர் கோர்த்துக் கொண்ட கண்களுடன் அவனை நேருக்கு நேர் பார்த்தாள்.





"ரோஜா பூவாய் இருந்த என் முகம் இப்போ உனக்குக் குரங்கு மூஞ்சியா ஆயிடிச்சுல்ல? செல்லக் குட்டியாய் இருந்த நான் இப்போ தெரு நாயாய் ஆயிட்டேன்ல...? பேசுடா... பேசு... இன்னும் என்ன வேணுன்னாலும் பேசு. ரெண்டுக் காதையும் நல்லாத் திறந்து வச்சுகிட்டு நீ பேசுற எல்லாத்தையும் கேட்டுக்குறேன். ஆனா உன்னோட பேச்சுக்கெல்லாம் பயந்து உன்னை விட்டுட்டு ஓடிப் போய்டுவேன்னு மட்டும் நினைக்காத. உயிரை விட்டாலும் விடுவேனே தவிர... இந்த ஜென்மத்துல உன்னை விடவே மாட்டேன்..." - தாரை தாரையாய் கன்னத்தில் வழியும் கண்ணீரைத் துடைக்கும் உணர்வு கூட இல்லாமல் பேசிக் கொண்டிருந்தாள்.





"ஏன்னுக் கேட்கறேன்...? அப்படி என்ன 'டாஷு'க்கு நீ என்னை விடாமச் சுத்துற?" - சற்றும் இலக்கமில்லாமல் அதே கடுகடுத்த முகத்துடன் கேட்டான்.





"ஏன்னா நீதான் ரவி... நீ மட்டும்தான் என்னோட ரவி... உன்னை எதுக்காகவும் யாருக்காகவும் நான் விட்டுக்கொடுக்க மாட்டேன்..." - கண்ணீரைத் துடைத்துக் கொண்டு கூறியவளின் குரலிலும் முகத்திலும் பழைய உறுதித் திரும்பிவிட்டது. ஆனால் ரவியின் மனம்தான் அலையில் சிக்கிக் கொண்ட துரும்பாகத் தத்தளித்தது.





'இப்படி ஒருத்தியை இழந்தே தீர வேண்டுமா...?' - அவன் மனம் கேள்விக் கேட்டது. ஆனால் 'அண்ணன்...? அவனுக்கு இழைக்கப்பட்ட அநீதி...? அதற்கு யார் பதில் சொல்வது?' - இருவேறுபட்ட உணர்வுகளுக்கு இடையில் சிக்கிக் கொண்டு தவித்தவன் 'இன்னும் சற்று நேரம் இவள் முகத்தைப் பார்த்துக் கொண்டு இங்கு நின்றால் அவள் காலடியில் விழுந்து சரணாகதி அடைந்துவிடுவோம் என்கிற பயத்தில் வேகமாக அங்கிருந்து அகன்றான்.





'பார்க்கிலிருந்து அப்போது சென்றவன் முழுதாக ஒரு நாள் கடந்துவிடப் பிறகும் இன்னும் வீட்டுக்குப் போகவில்லையா! எங்குப் போயிருப்பான்...!' - தமிழியின் மனம் தவித்தது. அவளுக்கு எப்படிச் சமாதானம் சொல்வது என்று புரியாமல் கையைப் பிசைந்த பார்வதி "நான் சின்னவனுக்குப் போன் பண்ணிக் கேக்குறேன்மா. நீ பயப்படாத" என்று கூறிவிட்டுப் போனை அணைத்தாள்.

###

கயல் போல் கன்னத்துத் தசையை உள்ளிழுத்து... இதழ்களைக் குவித்து மெல்ல மெல்லத் திறந்து மூடி அழகுக் காட்டி, கண்ணாடித் தொட்டிக்குள் நீந்திக் கொண்டிருக்கும் மீன் குஞ்சுகளைக் கொஞ்சிக் கொண்டிருந்த ராஜி, தன் செவ்விதழைத் தொட்டுப் பார்க்கும் ஆசையில் வேகமாய் வந்து கண்ணாடியில் முட்டிக் கொண்டு கோபத்துடன் எதிர் திசையில் திரும்பி நீந்தும் தங்க மீனைப் பார்த்துக் கலகலத்துச் சிரித்தாள்.



சிரிப்பில் சுருங்கும் காதல் மனைவியின் கண்களையும்... கொஞ்சலில் குவியும் செவ்விதழ்களையும்... மகிழ்ச்சியில் மலரும் முகத்தையும் உடனுக்குடன் கேமிராவில் பதிவு செய்து கொண்டிருந்தான் குரு.



"அக்கா... அக்கா... அக்கா..." - பால்கனியில் தொங்கிக் கொண்டிருக்கும் கூண்டிற்குள் அமர்ந்திருந்த கிளி என்னையும் கொஞ்சம் கவனி என்பது போல் அவளைக் கீச் குரலில் கூவி அழைத்தது.



"யா...ர...து...?" - தெரியாதது போன்ற பாவனையில் பால்கனிப் பக்கம் தலையைச் சரித்து எட்டிப் பார்த்துக் குரல் கொடுத்தாள்.



"சின்னு... சின்னு..." - கேரளாவிலிருந்து வாங்கிவரப்பட்ட பேசும் கிளி தனக்குச் சூட்டப்பட்டிருக்கும் பெயரை சொன்னது.



"ஓ... சின்னுவா...! சின்னு செல்லத்துக்கு என்ன வேணும்?" பேச்சுக் கொடுத்துக் கொண்டே கிளிக் கூண்டை நெருங்கினாள்.



"அக்கா... அக்கா..."



"அடடே...! அக்காதான் .வேணுமா...?" - கூண்டைத் திறந்துக் கிளியைக் கையில் எடுத்து மற்றொரு கையில் இரையை அள்ளி அதனிடம் நீட்டினாள்.



அவள் மீது சலுகையாய் அமர்ந்து கொண்டே அவள் கொடுத்த இரையைக் கொத்திக் கொரித்தது சின்னு என்னும் அவளுடைய செல்லக் கிளி. அதே நேரம் அவள் காலடியில் நின்று "வவ்... வவ்..." - என்று குரல் கொடுத்து அவள் சேலையைப் பிடித்து இழுத்துக் கொண்டிருந்த வெண்மை நிற புசுபுசு பொமரேனியன் அவள் கவனத்தைக் கவர "டேய்... டாமி... சின்னுவுக்கு ஃபீட் பண்ணும் போது தொல்லைப் பண்ணாத..." என்று செல்லமாய் அதட்டினாள்.



உடனே கோவித்துக் கொண்டு ஹாலுக்குள் ஓடிய டாமி சோபாவின் மீது ஏறி படுத்துக் கொண்டது. அவள் சின்னுவைப் பாதுகாப்பாகக் கூண்டுக்குள் அனுப்பிவிட்டு, பக்கத்துக் கூண்டிலிருந்த லவ் பேர்ட்ஸ்கும் இரை போட்டுவிட்டு ஹாலுக்கு வந்த போது அவளைக் கண்டுகொள்ளாமல் சுருண்டு படுத்திருந்த டாமியைப் பார்த்து மகிழ்ந்து சிரித்தாள்.



'என்...ன... ஊடல்!!!'



"டாமி செல்லம்... என் மேலக் கோவமா?" என்று அதைக் குழந்தை போல் கையில் ஏந்தி, நெற்றியோடு நெற்றி முட்டிச் செல்லம் கொஞ்சிச் சமாதானம் செய்தாள்.



சிறு வயதிலிருந்தே செல்லப் பிராணிகள் மீது அலாதிப் பிரியம் கொண்ட ராஜிக்கு இப்போது திருமணமாகி ஓராண்டு காலம் கழிந்துவிட்டது. பெற்றோரைவிட்டு விலகியிருக்கும் அந்தத் தம்பதிக்குத் திருமணமான ஓரிரு மாதங்களிலேயே குழந்தை ஏக்கம் வந்துவிட, அந்த ஏக்கம் அவர்களைப் பாதிக்காமல் பாதுகாப்பது அவர்கள் வளர்க்கும் செல்ல பிராணிகள்தான்.



அவற்றோடு விளையாடும் பொழுது... அவள் முகத்தில் எல்லையில்லா சந்தோஷம் மிளிரும். அதைப் பார்ப்பதற்காகவே வீடு முழுக்கச் செல்ல பிராணிகளை வாங்கிக் குவித்தான் குரு. சிட்டிக்குள் இருக்கும் நடுத்தரமான அடுக்குமாடிக் குடியிருப்புகளில் செல்லப் பிராணிகள் வளர்ப்பிற்குத் தடைவிதிக்கப்பட்டதால், புறநகர் பகுதியில் ஒரு தனி வீட்டைப் பார்த்துக் கொண்டு வந்துவிட்டான்.



இந்த ஏரியாவிலிருந்து அவனுடைய ஸ்டுடியோவிற்குச் சென்றுவரக் குறைந்தது இரண்டு மணிநேரம் ஆகும். தினமும் வேலைக்குச் செல்பவனுக்கு அலைச்சல்தான். ஆனால் அவனுக்கு அது பற்றிக் கவலை இல்லை. காரணம்... இங்குத்தானே அவனுடைய செல்ல மனைவியும், அவளுடைய செல்லப் பிராணிகளும் தனி ராஜாங்கத்தில் இருப்பது போல் சுதந்திரமாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறார்கள். அவளுடைய சந்தோஷத்திற்காகத் தானே அவன் உழைக்கிறான்! அவளுக்காகத்தானே வாழ்கிறான்!
 

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
749
Reaction score
859
Points
93
அத்தியாயம் - 15

"மேடம் எவ்வளவு நேரம் உங்க செல்லக் குட்டிகளோடவே விளையாடிட்டு இருப்பீங்க? டாக்டரை பார்க்கப் போக வேண்டாமா?" - வார்த்தைக்கு வலித்துவிடக் கூடாது என்றா... அல்லது வலுவான வார்த்தைத் தன் மனைவியின் மனதை வலிக்கச் செய்துவிடக் கூடாது என்றா... எதற்காக அவ்வளவு மென்மை குருவின் குரலில். கண்டிப்பாக இரண்டாவது காரணமாகத்தான் இருக்க வேண்டும்.



"ஒரே நிமிஷம் குரு... இதோ வந்துட்டேன்..." - கார்மேக வண்ணச் சேலைக் கட்டி, எளிமையான அலங்காரத்துடன் தேவதை போன்ற அழகுடன் அடிமேல் அடியெடுத்து வைத்து வருபவளை அள்ளிப் பருகுவது போல் பார்த்துக் கொண்டிருந்தான் குரு.



"கிளம்பலாமா?" - புன்சிரிப்புடன் கேட்டாள்.



"ம்ம்ம்... பார்த்து... மெதுவா வா..." - அவளைக் கைபிடித்து அழைத்துச் சென்று கார் கதவைத் திறந்துவிட்டு உள்ளே அமரச் சொன்னான்.



திருச்சியில் ஸ்டுடியோ வைத்திருந்த குரு... சேலத்தில் ஸ்டுடியோ வைத்திருந்த ஒரு நண்பனுக்கு உதவியாக ஒரு பெரிய வீட்டுத் திருமணத்திற்கு வீடியோ கவரேஜிற்குச் சென்றிருந்தான். உதவிக்குச் சென்றவன் அதை மட்டும் செய்துவிட்டு வராமல் அந்தத் திருமணத்தில் அழகுப் பதுமையாகச் சுற்றிக் கொண்டிருந்த ராஜியின் மீது காதல் கொண்டுவிட்டான். அவனிடம் தோன்றிய அதே அதிர்வலைகள் அவளிடமும் தோன்றிவிட்டதால் பார்வையில் துவங்கி போனில் வளர்ந்த அவர்களுடைய உறவுத் திருமணத்தை நோக்கி நகர்ந்தது.



செல்வ வளமும் அதிகார பலமும் நிறைந்த தன் குடும்பத்தார் தன்னுடைய காதல் திருமணத்திற்குப் பெரும் தடையாக இருப்பார்கள் என்று நினைத்த ராஜி... வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளையுடன் தனக்குத் திருமணம் நடக்கப் போகிறது என்கிற நெருக்கடியான சூழ்நிலையில் வீட்டுக்குத் தெரியாமல் குருவைத் தேடித் திருச்சிக்கு வந்துவிட்டாள்.



தன்னை நம்பி வந்தவளைக் கைவிடாமல் பதிவுத் திருமணம் செய்து கொண்ட குரு... திருச்சியில் நன்றாக ஓடிக் கொண்டிருந்த தன்னுடைய ஸ்டுடியோவை விற்றுவிட்டுச் சென்னையில் வந்து செட்டில் ஆகிவிட்டான். தன் குடும்பத்தார் தன்னைத் தேடி திருச்சிக்கு வந்துவிடுவார்களோ என்கிற ராஜியின் பயம்தான் அவன் ஸ்டுடியோவை விற்றதற்குக் காரணம்.



ராஜி பயந்தபடி எதுவும் நடக்கவில்லை. அவளுடைய குடும்பத்தார் அவர்களை எந்த விதத்திலும் தொந்தரவு செய்யாமல் ஒதுங்கிவிட்டார்கள். ஆனால் அவனுக்குத்தான் புது இடத்தில் தொழில் ஓடாமல் வருமானம் குறைந்துவிட்டது.



தற்பொழுது அவனுக்குக் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் சொந்தமாகக் கார் வைத்துக் கொள்வதெல்லாம் குதிரைக்கொம்புதான் என்றாலும், செல்வத்தில் சீமாட்டியாக வளர்ந்த ராஜியை ஆட்டோவிலும் பஸ்சிலும் ஏற்றிக் கஷ்ட்டப்படுத்த மனம் வராமல் போராடி ஒரு டாட்டா இண்டிகாவை வாங்கிவிட்டான். அவளை வெளியே அழைத்துச் செல்லும் போது மட்டும்தான் அந்தக் காருக்கு வேலை இருக்கும். மற்ற நேரங்களில் ஓய்வுதான்.



பெரும் சிரமப்பட்டுத் தனக்காகக் கார் வாங்கிய தன் அன்புக் கணவன், தினமும் வீட்டிலிருந்து பஸ் ஸ்டாண்ட் வரை நடந்து சென்று பஸ் பிடித்து ஸ்டுடியோவிற்குச் செல்வதைப் பார்த்துக் கொண்டிருக்கும் ராஜிக்கு அவன் மீது காதல் பலமடங்குப் பெருகும். இப்போதும் அப்படித்தான்... தனக்காகக் கார் கதவைத் திறந்துவிட்டுச் சேவகனாக மாறி நிற்பவனை மனதிற்குள் ஆராதனை செய்து கொண்டே உள்ளே ஏறி அமர்ந்தாள்.



மறுப்பக்கம் அவன் வந்து அமர்ந்ததும் அவன் தோள் மீது சலுகையாய் தலை சாய்த்துக் கொண்டவள் "லவ் யு குரு..." என்றாள். இது போன்ற அவளுடைய சின்னச்சின்ன செயல்களை மலையளவு ரசிப்பவன் இப்பொழுதும் பூரித்த மனதுடன் அவள் நெற்றியில் இதழ்பதித்துவிட்டு காரை கிளப்பினான்.



###



"சாரி மிஸ்டர் குரு..." - இரக்கம் தோய்ந்தக் குரலில் கூறினார் அந்தப் பெண் மருத்துவர்.



"இந்த மாதமும் ரிசல்ட் நெகட்டிவ் தானா!" - ராஜியின் முகம் ஏமாற்றத்தில் கலையிழந்து போனது.



பத்து நாள் தள்ளிப் போன நாள் கணக்கை நம்பிக் கற்பனையை வளர்த்துக் கொண்டு நடக்கக் கூடப் பயந்து பொத்திப் பொத்தி நடந்தாளே! அத்தனையும் கானல் நீரா! அவள் உள்ளம் ஊமையாய் அழுதது.



"உங்க மனைவிக்கு இருந்த பிரச்சனையெல்லாம் இப்போ சரியாயிடிச்சு. இனி நீங்க குழந்தை இல்லைங்கற டென்ஷன் இல்லாம சந்தோஷமா இருந்தாலே கண்டிப்பா உங்களுக்குக் குழந்தை கிடைக்கும். என்னை நம்புங்க..." - மருத்துவர் அவர்களுடைய நம்பிக்கையும் தைரியத்தையும் அதிகப்படுத்த முயன்றார்.



ராஜி கணவனை மெல்லத் திரும்பிப் பார்த்தாள். மருத்துவரிடமிருந்து பார்வையைத் திருப்பாதவனின் முகம் உணர்ச்சிகளைப் பிரதிபலிக்காமல் இறுகியிருந்தது. அவளுடைய மனம் மேலும் சோர்ந்தது.



மருத்துவர் கூறிய அறிவுரைகளைக் கேட்டுக் கொண்டு மேலும் சற்று நேரம் அந்த அறையில் அமர்ந்திருந்தவர்கள் பிறகு அவரிடம் விடைபெற்றுக் கொண்டு வந்து காரில் ஏறினார்கள். அதுவரை தன் அன்புக் கணவன் தன்னிடம் ஒரு வார்த்தைக் கூடப் பேசவில்லை என்பதை வேதனையுடன் கவனித்துக் கொண்டிருந்த ராஜிக்கு அடி வயிற்றிலிருந்து கிளம்பி வந்த துக்கப்பந்துத் தொண்டையை அடைத்தது. அவள் பூ மனம் கசங்கித் துவண்ட வேதனையில் அவளுக்கு 'ஓ'வென்று அலறியழ வேண்டும் போல் இருந்தது.



மனைவியை எப்படிச் சமாதானம் செய்து தேற்றுவது என்று புரியாமல் தனக்குள் சுருண்டு கொண்ட குரு அவளுடைய சோர்ந்த முகத்தைத் திரும்பிப் பார்க்கும் தைரியம் கூட இல்லாதவனாகச் சாலையில் பார்வையைப் பதித்துக் காரை செலுத்திக் கொண்டிருந்தான். சிக்னல் விழுந்ததும் அனிச்சையாக அவன் கால் பிரேக்கை அழுத்தியது. சாலையை ஒரு பக்கத்திலிருந்து மறு பக்கம் கடந்து கொண்டிருப்பவர்களில் ஒரு நிறை மாத கர்ப்பிணியும் இருந்தாள். கண்களில் ஏக்கத்துடன் குருவின் பார்வை அந்தப் பெண்ணைத் தொடர்ந்தது. அதைக் கவனித்துவிட்ட ராஜி துடித்துப் போனாள்.



அதுவரை அடக்கி வைத்திருந்த கண்ணீர் கரை உடைத்துக் கொண்டு அவள் கன்னத்தை நனைத்தது. முகத்தை ஜன்னல் பக்கம் திருப்பித் தன் மனப் போராட்டத்தைக் கணவனிடமிருந்து மறைக்க முயன்றவள் ஓரளவு அதில் வெற்றியும் கண்டாள். அவள் வருத்தத்தில் இருக்கிறாள் என்று உணர்ந்திருந்த குரு அவளுடைய கண்ணீரைக் கவனிக்கத் தவறிவிட்டான். அதனால் அவளுடைய கண்ணீருக்கான காரணம் குழந்தையின்மை இல்லை... தன்னுடைய நடவடிக்கைகள்தான் என்பதும் அவனுக்குத் தெரியாமல் போய்விட்டது.



அன்று இரவு உணவு இருவருக்குமே தொண்டைக் குழிக்குள் இறங்கவில்லை. முடிந்த அளவு ஒருவர் முகத்தை ஒருவர் பார்ப்பதைத் தவிர்த்தபடி எதை உண்டோம் என்கிற உணர்வின்றி எதையோ வயிற்றுக்குள் அள்ளித் தள்ளிவிட்டுப் படுக்கைக்கு வந்து சேர்ந்தார்கள். அவள் அவனுக்கு முதுகுகாட்டிக் கட்டிலின் ஒரு பக்கம் ஒதுங்கிவிட... அவன் விட்டத்தை வெறித்துக் கொண்டு மறுபக்கம் ஒதுங்கிவிட்டான். சுவர் கடிகாரத்தில் நொடிமுள் டக் டக் என்கிற சத்தத்துடன் நேரத்தைக் கடத்திக் கொண்டிருக்கப் பேச்சில்லா மௌனம் எவ்வளவு நேரம் அவர்களை ஆகர்ஷித்திருந்ததோ தெரியாது.



ஒரு கட்டத்தில் மனைவியின் முதுகு சத்தமில்லாமல் குலுங்குவதை உணர்ந்து அவள் பக்கம் திரும்பிப் பார்த்தான் குரு. லேசாக வெளிப்படும் செருமல் ஒளியை அவள் சிரமப்பட்டு அடக்கிக் கொண்டிருப்பது தெரிந்தது. பதறிப் போய் எழுந்து அமர்ந்து சட்டென்று அவளைப் பிடித்துத் தன் பக்கம் திருப்பினான்.



அழுதழுது வீங்கிச் சிவந்திருந்த அவள் முகம் அவன் பார்வைக்குக் கிடைக்கத் தவிப்புடன் "ராஜி...!" என்றான்.



அவ்வளவுதான்... கிட்டத்தட்ட ஐந்து மணி நேரமாகத் தனக்குள் அடக்கி வைத்திருந்த உணர்வுகளெல்லாம் கட்டவிழ்த்துக்கொள்ள அவன் மார்பில் முகம் புதைத்துச் சத்தமாகக் கதறியழுதுத் தீர்த்துவிட்டாள்.



"ராஜி... ப்ளீஸ்... ராஜி... வேண்டாம்... அழாத..." - அவளைச் சமாதானம் செய்யும் மார்க்கம் புரியாமல் தவித்துப் போய்க் கலங்கிவிட்ட கண்களுடன் குழந்தை போல் அவளைத் தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டு... அன்பாய் அவள் முடியைக் கோதி... ஆதரவாய் அவள் முதுகை வருடிச் சமாதானம் செய்ய முயன்றான்.



அவன் சமாதானம் செய்யச் செய்ய அவளுடைய அழுகை அதிகமானதே ஒழிய அவள் சற்றும் ஓய்ந்தாளில்லை. அவன் மனம் நொந்து போய்க் கேட்டான்.



"ஏன் ராஜி இப்படி அழற? எனக்கு நீதான் குழந்தை. உன்னையும் உன் சிரிப்பையும் பார்த்துக்கிட்டே இன்னும் நூறு ஜென்மம் நான் சந்தோஷமா வாழ்ந்துடுவேன். உன்னால என்னை அந்த அளவுக்கு ஏற்றுக்க முடியலையா? நம்ம வாழ்க்கையில நீ திருப்தியா இல்லையா?"



சட்டென்று அழுகை நின்றவளாகக் குழப்பத்துடன் அவனை நிமிர்ந்து பார்த்தாள். நனைந்த இமைகளும் சிவந்த விழிகளுமாகத் தன்னை நோக்கும் மனைவியை அன்புடன் நோக்கி "என்னடா...?" என்றான்.



"ஏன் மதியத்துலேருந்து என் கூடப் பேசல?" என்றாள்.



அவன் திகைப்புடன் "பேசலையா!" என்றான்.



"ஆமாம்... டாக்டர் ரிசல்ட் நெகட்டிவ்னு சொன்னதிலிருந்து நீங்க என் கூடப் பேசவே இல்லையே..." என்றாள்.



மானசீகமாகத் தலையிலடித்துக் கொண்டு தன்னையே நொந்துக் கொண்டவன் "அது... அது... உன்னை எப்படிச் சமாதானம் செய்யறதுன்னு பயமா இருந்துச்சு..." என்று தடுமாறினான். அவள் நம்பாமல் அவனைப் பார்த்தாள்.



"சத்தியமா ராஜி..." - அவன் அவளுடைய தலையில் கைவைத்தான்.



"சிக்னல்ல அந்தப் பெண்ணை அப்படிப் பார்த்தீங்களே...! ஒரு மாதிரி ஏக்கமா..."



"ஏக்கமாவா...! யாரைச் சொல்ற நீ?" - குழப்பத்துடன் கேட்டான்.



"அதான்... ஒரு பொண்ணு... கர்ப்பமா இருந்தாளே... நம்ம கார் சிக்னல்ல நின்னுட்டு இருந்த போது ரோட் கிராஸ் பண்ணினாளே..." - அவனுக்கு ஞாபகப் படுத்தினாள்.



"ஏய்.... அந்தப் பெண்ணை நான் எங்க ராஜி ஏக்கமாப் பார்த்தேன். அவ்வளவு பெரிய வயிற்றோடு நடந்து போயிட்டு இருக்காங்களேன்னு பாவமா இருந்தது. அதனால ஒருவேளை பார்த்திருப்பேன்" - என்றான்.



"அவ்வளவு தானா?"



"அவ்வளவேதான்... இதுக்காகத்தான் இவ்வளவு நேரமும் ஃபீல் பண்ணிட்டு இருந்தியா?"



அவள் தலையாட்டிப் பொம்மை போல் தலையை மேலும் கீழும் ஆட்டினாள். அவன் 'அப்பாடா...' - என்கிற நிம்மதியுடன் அவளை மேலும் இறுக்கிக் கொண்டான். இருவர் மனத்திலும் சூழ்ந்திருந்த கவலை மேகம் கலைந்தோடிவிடப் பழையபடி மகிழ்ச்சியும் காதலும் மேலோங்கியது.
 

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
749
Reaction score
859
Points
93
அத்தியாயம் - 16

அன்று காலை கண் விளித்ததிலிருந்தே ராஜிக்கு ஒரே பரபரப்பு... 'சொல்லிவிடலாமா? வேண்டாம் வேண்டாம்... ஒவ்வொரு மாதமும் எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாற்றமே மிஞ்சுகிறது... இந்த மாதம் கன்ஃபார்ம் பண்ணிக்கிட்டு அப்புறமா சொல்லிக்கலாம்...' - குருவிற்குக் காலை உணவை எடுத்து வைத்தபடித் தன் போக்கில் சிந்தித்துக் கொண்டிருந்தாள்.



"என்னாச்சு ராஜி...? காலையிலிருந்து ஒரே யோசனையிலேயே இருக்க?"



"அதெல்லாம் ஒண்ணும் இல்ல... நீங்கச் சீக்கிரம் சாப்பிட்டுவிட்டு ஸ்டுடியோவுக்குக் கிளம்புங்க..."



"சீக்கிரம் கிளம்பணுமா?" அவன் அவளை அதிசயமாகப் பார்த்தான். 'எப்பொழுதும் அவன் வெளியே கிளம்பும் பொழுது அனுப்ப மனம் இல்லாமல் அனுப்பும் ராஜியா இவள்...!'



"என்ன? என்ன அப்படிப் பார்க்கறீங்க?"



"இன்னிக்கு உனக்கு என்னவோ ஆயிடிச்சு... காலையிலிருந்தே நீ நார்மலா இல்ல..." - உணவை உண்டு முடித்துவிட்டுக் கைகழுவ எழுந்து சென்றான்.



அவன் பேசுவதைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் அவனுடைய தேவைகளையெல்லாம் கவனித்து அனுப்பி வைத்துவிட்டு... அவசரமாக வீட்டைப் பூட்டிக் கொண்டு வெளியே கிளம்பினாள். பக்கத்து வீட்டு அக்காவின் ஆலோசனைப்படித் தெருமுனையில் இருக்கும் மெடிக்கல் ஷாப்பிற்குள் நுழைந்து அவளுக்குத் தேவையான அந்தக் கிட்டை வாங்கிக் கொண்டு வீடு திரும்பிச் சோதித்துப் பார்த்தாள்.

"கடவுளே...! உண்மையா!" - ரிசல்ட்டைத் திரும்பத்திரும்பச் சரிபார்த்தாள். 'பாசிட்டிவ்தான்...! பாசிட்டிவேதான்...!' - அவள் மனம் சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தது.



"கடவுளே... லட்சம்... இல்ல.. கோடி.. இல்ல இல்ல.... கோடான கோடி நன்றிகள் சாமி..." - விபூதியையும் குங்குமத்தையும் நெற்றியில் அள்ளிப் பூசிக் கொண்டு கடவுள் படத்தைத் தொட்டுத் தொட்டு வணங்கினாள்.



"குரு... குருவுக்குச் சொல்லணுமே...!" - அவசரமாக டெலிபோனைத் தேடி ஓடினாள். 'ஐயோ..! பாப்பாக்குக் கஷ்டமா இருக்குமே!' - சட்டென்று அவள் நடை நின்றது. மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்து டெலி போன் மேஜையை நெருங்கி ரிஸீவரைக் கையிலெடுத்துக் கணவனுக்கு டயல் செய்தாள்.



"சொல்லு ராஜி..."



"குரு..."



"ம்ம்ம்... சொல்லும்மா..."



"குரு..." - பேச்சு வராமல் திக்கித் திணறினாள். தாளமுடியா சந்தோஷத்தில் அவள் தொண்டை அடைத்துக் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வெளிப்பட்டது. அவளுடைய உடைந்த குரலைக் கேட்டுப் பதட்டம் அடைந்த குரு... "ராஜி... என்ன ஆச்சு?" என்றான் படபடப்புடன்.



"குரு... உடனே கிளம்பி வீட்டுக்கு வாங்க... நான் உங்களை இப்போவே பார்க்கணும்..."



"உடனே கிளம்பி வரணுமா! நான் இன்னும் ஸ்டுடியோவுக்குப் போய்ச் சேரவே இல்லையேடா... இப்போதான் பஸ்ல இருக்கேன். என்ன ஆச்சு உனக்கு? ஏன் ஒரு மாதிரியாப் பேசுற? குரல்வேற அழற மாதிரி இருக்கு? உடம்பு ஏதும் சரியில்லையா? காலையிலிருந்தே நீ ஒரு மாதிரியாத்தான் இருந்த..." - அவன் மூச்சு விடாமல் பேசிக் கொண்டே போனான்.



"ஐயோ குரு... எனக்கு ஒண்ணும் இல்ல... எனக்கு உங்களை இப்போவே பார்க்கணும். ப்ளீஸ் வாங்களேன்..."



"ச்ச... ச்ச... ப்ளீஸ் எல்லாம் எதுக்குச் சொல்ற? நான் அடுத்த ஸ்டாப்லேயே பஸ்லேருந்து இறங்கி உடனே ஆட்டோ பிடிச்சு வீட்டுக்கு வந்தடறேன். நீ பத்திரமா இரு... சரியா...?" என்று அவளுக்குச் சமாதானம் சொல்லி போனை அணைத்துவிட்டு, சொன்னபடி அடுத்த நிறுத்தத்தில் பேருந்திலிருந்து இறங்கி ஆட்டோ பிடித்துக் கொண்டு அரை மணி நேரத்தில் வீடு வந்து சேர்ந்தான்.



அழைப்பு மணி ஒலிக்கும் சத்தம் கேட்டு ஆவலுடன் கதவைத் திறந்த ராஜி வாசலில் குருவைக் கண்டதும் மகிழ்ச்சியும் ஆனந்தக் கண்ணீருமாக அவன் கழுத்தை வளைத்துக் கன்னத்தில் இதழ்பதித்து... நெஞ்சோடு சாய்ந்து கொண்டாள்.



"ஹேய்... ராஜி...!" - அவள் மிக மிகச் சந்தோஷமான மனநிலையில் இருக்கிறாள் என்பதைப் புரிந்து கொண்டவன் அதற்கான காரணத்தை அறியும் ஆவலில் "என்னடா...?" என்றான்.



அவள் பதில் சொல்லாமல் அவனோடு ஒட்டிக் கொண்டே நின்றாள். அவளைத் தன் கையணைப்பிலேயே உள்ளே அழைத்துக் கொண்டு வந்தவன் சோபாவில் அமரவைத்துத் தானும் அவளுக்கருகில் அமர்ந்து கொண்டு பழையபடி அவளைத் தன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டான். சற்று நேரம் அவள் ஆசுவாசமடையட்டும். பிறகு அவளே வாய் திறந்து என்ன விஷயமென்று சொல்வாள் என்று காத்திருந்தான். அவன் நினைத்தது நடந்தது...



சில நிமிடங்கள் கணவனுடைய கையணைப்பில் இருந்தவள் பிறகு அவனிடமிருந்து விலகி உள்ளே சென்று வீட்டிலிருந்த சர்க்கரையில் கொஞ்சம் கொண்டுவந்து அவன் வாயில் போட்டுவிட்டு விஷயத்தைச் சொன்னாள்.



"நம்ம வீட்டுக்கு ஒரு குட்டிப் பாப்பா வரப்போகுது குரு... கடவுள் நமக்குக் கருணைக் காட்டிவிட்டார்"



"ராஜி...!!!" - ஆனந்தம் என்றால் அப்பேற்பட்ட ஆனந்தம் அவனுக்கு. காதில் தேன்தான் வந்து பாய்ந்ததோ...! எத்தனை இனிமையான உணர்வு அவன் நெஞ்சுக்குள் பரவுகிறது!



"நி...நிஜமா...? எப்படி ராஜி... டாக்டர்கிட்டப் போனியா?" - விலகாதத் திகைப்பும் மகிழ்ச்சியுமாகக் கேட்டான்.



"இல்லை..." என்று கூறி அவள் விளக்கம் சொன்னாள்.



அவன் வானத்திற்கும் பூமிக்கும் துள்ளிக் குதித்தான். தித்திப்பான செய்தியைச் சொல்லி அவனைத் திகைக்க வைத்தவளைக் கொஞ்சித் தீர்த்தான். கணவன் மனைவி இருவரும் அந்தச் சந்தோஷத்தின் பிடியிலிருந்து வெளியே வருவதற்கு முன் மீண்டும் அழைப்பு மணி ஒலித்தது. குருதான் கதவைத் திறந்தான். வாசலில் படு டீசண்டான ஆட்கள் நான்கு பேர் நின்று கொண்டிருந்தார்கள்.



"யார் நீங்க?"



"நீங்கதானே குரு?"



"ஆமாம்... ஏன் கேட்கறீங்க?"



"ஒரு முக்கியமான விஷயம் பேசணும். உள்ள போயிப் பேசலாமா?"



சற்று நேர யோசனைக்குப் பின் வந்திருந்தவர்களின் நாகரீகமான உருவமும் அவர்கள் முகத்திலிருந்த புன்னகையும் நம்பிக்கை அளிக்க "ஓகே... வாங்க..." என்று அவர்களை வீட்டிற்குள் அனுமதித்தான்.



கணவனுக்குத் தெரிந்தவர்கள் யாரோ வந்திருக்கிறார்கள் என்கிற எண்ணத்தில், ராஜி அவர்களுக்கு வணக்கம் சொல்லி "உட்காருங்க... என்ன சாப்பிட்ரிங்க? டீ...? காபி...?" என்று உபசரித்தாள்.



"ம்ம்ம்... டீ கொடுங்களேன்..." - வந்திருந்தவர்களில் ஒருவன் சொன்னான்.



மகிழ்ச்சிக் கடலில் மூழ்கித் திளைத்திருந்த ராஜி, நன்றாகச் சுண்டக் காய்ச்சியப் பாலில் ஸ்ட்ராங்காக டீ கலந்து... சர்க்கரையைச் சற்றுத் தூக்கலாகப் போட்டு அனைவருக்கும் விநியோகித்தாள்.



"அருமையான டீம்மா... ரொம்ப நல்லா இருந்தது... தேங்க்ஸ்..." டீயைச் சுவைத்துக் குடித்து முடித்த ஒருவன் சொன்னான்.



"தேங்க்ஸ்..." - அவள் புன்னகையுடன் கூறினாள்.



"அப்புறம்... என்ன விஷயமா என்னைப் பார்க்க வந்திருக்கிங்க?" - குரு கேட்டான். 'ஏதாவது விஷேஷத்திற்கு வீடியோ கவரேஜிற்கு ஆர்டர் கொடுக்க வந்திருப்பார்கள் என்பது அவனுடைய எண்ணமாக இருந்தது. ஆனால் விஷயம் அதுவல்ல...



வந்திருந்தவர்கள் சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டுச் செய்ய வேண்டியதைச் செய்துவிட்டு இன்முகத்துடன் அவள் கொடுத்த டீக்கு மீண்டும் ஒருமுறை நன்றி சொல்லிவிட்டு... அவர்களிடம் விடைபெற்று வெளியேறினார்கள். அடுத்த ஐந்தாவது நிமிடம் வெடி வெடிப்பது போன்ற பெரும் சத்தத்துடன் அந்த வீட்டில் தீ பிடித்துக் கொண்டது. இரு இளம் காதல் சிட்டுக்களோடு சேர்ந்து அந்த வீட்டில் வாழ்ந்த மற்ற செல்லப் பிராணிகளின் மரண ஓலமும் விண்ணைக் கிழிக்க... அவர்களைத் தனக்கு இரையாக்கிக் கொண்ட கோரத் தீயும் விண்ணை நோக்கிக் கொழுந்துவிட்டு எரிந்தது.



ஊதா நிறத்தில், காற்றின் அழுத்தத்தால் "புஷ்ஷ்..." என்ற சத்தத்துடன் ஆக்ரோஷமாக எரியும் நெருப்பை வெறித்து நோக்கிக் கொண்டிருந்த ரவியின் கண்களிலும் அந்தத் தீயின் ஜுவாலைத் தெரிந்தது.



"என்ன தம்பி... ரொம்ப நேரமா இப்படி நெருப்பையே வெறிச்சுப் பார்த்துகிட்டு இருக்கீங்க?" - அந்த வெல்டிங் பட்டறையின் உரிமையாளர் கேட்டார்.



அவன் கனவிலிருந்து விடுபட்டவன் போல் நிமிர்ந்து அவரைப் பார்த்தான். "என்ன கேட்டீங்க?"



"என்ன விஷயம் தம்பி. உங்களைப் பார்த்தா..." - அவர் முடிக்காமல் இழுத்தார்.



"ம்ம்ம்... நான் ஸ்ரீரங்கத்திலிருந்து வர்றேன். திருச்சி சைக்கிள் கடை மணியண்ணன் உங்களை வந்து பார்க்கச் சொன்னாரு..."



"மணியா!" - என்று அவனைச் சிந்தனையுடன் பார்த்தவர் "உள்ள வாங்க பேசலாம்..." என்று அவனைத் தனியாக அழைத்துக் கொண்டு உள்ளே சென்றார்.



"இப்போ சொல்லுங்க. என்ன விஷயம்?"



ஓரிரு நிமிடங்கள் அமைதியாக அவரைப் பார்த்தவன் "ஒரு கொலைப் பண்ணனும்..." என்றான்.



ஏதோ கத்திரிக்காய் வியாபாரத்தைப் பற்றிப் பேசுவது போல் சாதாரணமாகக் கொலையைப் பற்றிப் பேசுகிறவனை ஊடுருவும் பார்வைப் பார்த்தார் அந்த மனிதர்.
 

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
749
Reaction score
859
Points
93
அத்தியாயம் - 17



ஒன்றுக்கு இரண்டு தூக்க மாத்திரைகளை விழுங்கிய பிறகும் ரவிக்கு உறக்கம் வரவில்லை. கண்களை இறுக்கமாக மூடித் தலையைத் தலையணையில் புதைத்துக் கொண்டு உறக்கத்தை வரவழைக்க முயன்றான். முடியவில்லை...



"ஐயோ... தம்பி... புடிடா... தூக்குடா... முடியலடா... ரவி... தம்பி... தூக்கு... தூக்கு..." வழக்கம் போல் அழுகையினூடே புலம்பும் குருவின் குரல் அவனுடைய உறக்கத்தைக் காத தூரம் துரத்திவிட்டது.



ஆஜானுபாகுவான அண்ணன் நெருப்பில் வெந்து போய் மருத்துவமனையில் கிடந்து மூன்று மாதங்கள் துடியாய் துடித்த கோலம் அவன் கண்முன்னே வந்து போனது.



"சென்னை சிங்கபெருமாள் கோவில், தணிகாச்சலம் நகரில் அமைந்துள்ள உள்ள ஒரு தனி வீட்டில் கேஸ் சிலிண்டர் வெடித்துத் தீ விபத்து ஏற்பட்டதில் அந்த வீட்டில் வசித்து வந்த திருமதி ராஜி உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடைய கணவன் திரு குருபிரசாத் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்" - சம்பவம் நடந்த மறுநாள் அனைத்து ஊடகங்களிலும் வெளியான செய்தி அன்று போலவே இன்றும் அவனைக் கொதிக்கச் செய்தது...



'முழுப் பூசணிக்காயை ஒரே பிடிச் சோற்றில் மறைத்துவிட்டானே! பணம் பாதாளம் வரை பாய்ந்துவிட்டது...' - கசப்புடன் நினைத்துக் கொண்டான்.



இன்று அந்தப் பட்டறைக்காரன் கூடப் பணத்தில் தானே குறியாக இருந்தான்!



"பெரிய இடத்தைப் பற்றிப் பேசுறீங்க... பணம் கொஞ்சம் செலவாகும். எப்படி வசதி?"



"எவ்வளவு செலவாகும்?"



"என்ன... ஒரு முப்பது... முப்பத்தஞ்சு செலவாகும். ஏற்பாடுப் பண்ணிக்கிட்டு வாங்க. அப்புறம் பேசுவோம்..." - கொஞ்சம் செலவாகும் என்று கூறிவிட்டுத் தன்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத தொகையை இலகுவாகக் கூறிய பட்டறைக்காரனின் இறுக்கமான முகம் அவன் நினைவில் வந்தது.



'முப்பது...! முப்பத்தஞ்சு...!' - எவ்வளவு சாதாரணமாகச் சொல்லிவிட்டான். அவ்வளவு பணத்திற்கு அவன் எங்கே போவான்...! அதற்காக... ஒன்றுக்கு மூன்று உயிர்களைக் கொன்றுக் குடித்தவனை அப்படியே விட்டுவிடுவதா! பிறகு இவன் என்ன தம்பி...! இவன் என்ன ஆண்மகன்...! இவனுக்கு எதற்கு மீசை...! - தனக்குத் தானே வெறி ஏற்றிக் கொண்டான்.



மரணத்தின் பிடியில் சிக்கிக் கொண்டு... எப்போதடா இந்த உயிர் தன்னைவிட்டுப் போகும் என்று காத்துக்கிட்டந்த குரு தாளமுடியா வேதனையுடன் அவ்வப்போது பேசிய ஒவ்வொரு வார்த்தையையும் ரவியின் உயிருள்ள வரை அவனால் மறக்கவே முடியாது.



"ரெட்டை உயிர் ரவி... ராஜி வயித்துல நம்ம வீட்டு வாரிசு..." - வெந்து போயிருந்த இதழ்களைப் பிரித்து மேலே பேச முடியாமல் ஆயாசத்துடன் கண்மூடிக் கொண்டான் குரு.



அவன் அரைகுறையாய் சொன்ன விஷயத்தின் அர்த்தத்தைப் புரிந்து கொண்ட ரவியின் உள்ளம் பதறித் தவித்தது. 'குழந்தையா...! அண்ணி... அண்ணி ரெட்டை உயிரா இருந்தாங்களா! இந்த நேரத்தில் ஏன் இப்படி நடந்தது...! கடவுள் ஏன் இப்படிச் சோதித்தார்...! ' - அவன் கடவுளை நொந்து கொண்டிருந்த வேளையில் மீண்டும் கண்விழித்த குரு சோதித்தது கடவுள் அல்ல என்கிற விபரத்தைச் சொன்னான்.



"விட்டுப் பிடிச்சானுங்கலாம்! வந்திருந்தவனுங்கச் சொன்னானுங்க...!"



"வந்திருந்தவனுங்களா! யாரு? யாரு வந்திருந்தது? அண்ணா... நீ என்ன சொல்ற?" - பதறினான் ரவி. அவனுடைய பதட்டம் குருவை பாதிக்கவில்லை. அவன் சோர்வுடன் மீண்டும் கண்மூடிக் கொண்டான்.





அண்ணன் மீண்டும் கண்விழிக்கும் வரை தணல் மேல் நின்று கொண்டிருந்த ரவி அவன் கண்விழித்த அடுத்த நொடிக் கேட்டான்.



"அண்ணா... அன்னைக்கு யாரு வீட்டுக்கு வந்திருந்தது? என்ன பண்ணினானுங்க?"



அணைந்துப் போகும் நேரத்தில் ஒளிவிட்டு மிளிரும் தீபம் போல் கண்விழித்ததும் முகத்தில் ஒருவித மலர்ச்சியுடன் காணப்பட்ட குரு சற்று சிரமப்பட்டு நடந்ததைச் சொல்லி முடித்தான். அதற்காகவே காத்திருந்தது போல் அடுத்த ஓரிரு நிமிடங்களிலெல்லாம் ஊசலாடிக் கொண்டிருந்த அவன் உயிர் உடல் கூட்டைவிட்டுப் பிரிந்தது...



ரவி கொந்தளித்துப் போய்விட்டான். 'கொலையா...! காத்திருந்துப் பழி தீர்த்துக் கொண்டானா! அது வெளியே தெரியாமல் மறைத்தும் விட்டானா!' - அவனால் பொறுக்க முடியவில்லை. வீறு கொண்டு எழுந்தான். வீச்சரிவாளுடன் சேலத்திற்குச் சென்றான். வெட்டிக் கொன்றுவிடத்தான் துடித்தான். ஆனால் ஒற்றை ஆளாய் அவனால் நினைத்ததை முடிக்க முடியவில்லை. தோல்வியுடன் திரும்பி வந்தான்.



தோல்வியின் துயரம் இன்றுவரை அவனைத் துரத்திக் கொண்டே இருக்கிறது. அவனுக்குப் பணம் வேண்டாம்... பாசம் வேண்டாம்... காதல் வேண்டாம்... கல்யாணம் வேண்டாம்... குடும்பம் வேண்டாம்... எதுவுமே வேண்டாம்... அவனுக்கு வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்... உறக்கம்...! ஆண்டுக் கணக்கில் மூடாமல் விழித்துக் கிடக்கும் அவன் விழிகள் நிம்மதியான தூக்கத்தைத் தழுவ வேண்டும். அது மீண்டும் விழித்தெழும் சாதாரண உறக்கமாக இருந்தாலும் சரி... விழித்தெழவே முடியாத மீளா உறக்கமாக இருந்தாலும் சரி...



###



வேலை நேரம் முடிந்து வீட்டிற்குக் கிளம்பிக் கொண்டிருந்த சித்தார்த் எரிச்சலான மனநிலையில் இருக்கிறான் என்பதை அவனுடைய கடுகடுத்த முகம் பறைசாற்றியது. அந்த நேரம் பார்த்து அவனுடைய கைபேசி ஒலித்து அவனுடைய எரிச்சலை அதிகமாக்க 'ப்ச்... யாரது இந்த நேரத்துல..' - என்கிற முணுமுணுப்புடன் போனைக் கையில் எடுத்தான்.



"பூசணி...!" - பூசணி என்கிற பெயரைத் திரையில் பார்த்ததும் அவனுடைய கடுமைச் சற்றுக் குறைந்தது.



"சொல்லு பூசணி"



"சி...த்...து..."



"ம்ம்ம்... சொல்லு..."



"சி...த்...து... கண்ணா..."



"என்னன்னுச் சொல்லு பூர்ணி..."



அவனுடைய இறுக்கமான குரலை அவள் இனம் கண்டு கொள்ளவில்லை. "உன்னைப் பார்க்கணும் போலத் தோணுது... சனிக்கிழமை எப்படா வரும்?" - கொஞ்சலாகக் கேட்டாள்.



அவளுடைய கொஞ்சல் மொழியை ரசிக்கும் மனநிலையில் அவன் இல்லை என்பதோடு அவளுடைய அபத்தமான கேள்வி மட்டுப்பட்டிருந்த அவனுடைய எரிச்சலை அதிகப்படுத்த "அது வர்றப்போ வரும். நீ இப்போ எதுக்குப் போன் பண்ணின? அதைச் சொல்லு முதல்ல..." என்று எறிந்து விழுந்தான்.



"என்னடா ஆச்சு? எதுக்கு இப்போ டென்ஷனாப் பேசற?" - தணிந்தக் குரலில் கேட்டாள். அவன் ஒரு நொடி அமைதியானான்.



"சாரி பூசணி... வேற ஒரு டென்ஷன்ல உன்கிட்டக் கத்திட்டேன். சொல்லு என்ன விஷயம்?"



"ஒண்ணும் இல்ல சித்து... உன்கிட்டப் பேசணும்னுத் தோணிச்சு... அதான்..."



"ஓ..." - மீண்டும் அவனிடம் கணநேரம் அமைதி நிலவியது. பிறகு "நானே உனக்குப் போன் பண்ணனும்னு நினச்சுட்டு இருந்தேன் பூர்ணி..."



"அப்படியா? எதுக்குடா?"



"அவசரமா ஊருக்குக் கிளம்பிட்டு இருக்கேன் பூர்ணி உன்கிட்டச் சொல்லிட்டுப் போறதுக்காகத் தான் போன் பண்ண நினச்சேன்..."



"ஊருக்கா! எதுக்கு?"



"அது... அம்மா... அம்மாவுக்கு உடம்பு சரியில்லையாம்... போன் வந்தது..."



"அம்மாவுக்கு உடம்பு சரியில்லையா! என்ன ஆச்சு சித்து..."



"சரியாத் தெரியில பூர்ணி... போயிப் பார்த்தா தான் தெரியும்..."



"சரி சரி... நீ கவலைப்படாத... இப்போ நீ எங்க இருக்க?"



"ஆபீஸ்லிருந்து கிளம்பிட்டு இருக்கேன் பூர்ணி. வீட்டுக்குப் போயிட்டுக் கொஞ்சம் திங்க்ஸ் எல்லாம் பாக் பண்ணிக்கிட்டுக் கிளம்பணும்"



"நான் வேணுன்னா இப்போ கிளம்பி நம்ம வீட்டுக்கு வரட்டுமா சித்து..."



"வேண்டாம்.. வேண்டாம்.. நீ வர்றதுக்குள்ள நான் பஸ் ஸ்டாண்ட் போயிடுவேன். நீ அலைய வேண்டாம்..."



"சரி... எப்போ திரும்ப வருவ?"



"ஒரு வாரமாவது ஆகும்னு நினைக்கறேன்..."



"ஒரு வாரமா!" - அவள் குரலில் மலைப்புத் தெரிந்தது. முழுதாக ஏழு நாட்கள் உன்னைப் பார்க்காமல் எப்படி இருக்கப் போகிறேன் என்கிற ஆயாசத்தில் உண்டான மலைப்பு என்பது அவனுக்கும் புரியத்தான் செய்தது. ஆனால் அவனுக்கும்தான் வேறு வழியில்லையே!



"சாரி பூசணி... கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ..." - வருத்தத்துடன் கூறினான்.



"ச்ச... ச்ச... சாரியெல்லாம் எதுக்குச் சித்து? நீ போய் அம்மாவைப் பாரு. ஒன் வீக் தானே. நான் வெயிட் பண்ணறேன்" - தன் துன்பத்தை மறைத்துக் கொண்டு அவனுக்கு ஆதரவாகப் பேசிவிட்டுப் போனை வைத்தாள்.



அவள் அழைப்பைத் துண்டித்த பிறகு காதிலிருந்து எடுத்த கைபேசியைச் சற்று நேரம் வெறித்துப் பார்த்தச் சித்தார்த் பிறகு ஒரு பெருமூச்சுடன் அதைச் சட்டைப் பையில் போட்டுக் கொண்டு அலுவலகத்திலிருந்து வெளியேறினான்.

 

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
749
Reaction score
859
Points
93
அத்தியாயம் - 18



கிழக்கு மெல்ல வெளுத்துக் கொண்டிருக்கும் அதிகாலை வேளை... இரைதேடிச் சிறகடிக்கும் பட்சிகளின் ஓசை மூடியிருக்கும் அந்த அறைக்குள் ஊடுருவி, உறக்கம் வராமல் படுக்கையில் புரண்டு கொண்டிருந்த பூர்ணிமாவின் கவனத்தை ஈர்த்தது. சோர்வுடன் உடலை முறுக்கி சோம்பல் முறித்துவிட்டு எழுந்து அமர்ந்தவளுக்கு வயிற்றைப் புரட்டியது. மீண்டும் படுத்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது. ஆனால் வயிற்றுக்குச் சிறிதாவது ஈதாலொழிய இந்தக் களைப்புத் தீராது என்பது அவளுக்குத் தெரியும். அதனால்தான் பிடிவாதத்துடன் எழுந்துக் குளியலறைக்குள் நுழைந்தாள். வெளியே வரும் பொழுது அவளுடைய தோழி திவ்யா கையில் சிறு பிளாஸ்குடன் அறைக்குள் நுழைந்தாள். அவள் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.



"மெஸ் ஹால் போயிருந்தியா திவி?" பூர்ணிமா தளர்ந்தக் குரலில் கேட்டாள்.



"ம்ம்ம்..." அவளிடம் முகம் கொடுத்துப் பேசாமல் கையிலிருந்த பிளாஸ்க்கை மேஜை மீது வைத்தாள் திவ்யா.



அவளுடைய நடவடிக்கை பூர்ணிமாவை முள்ளாய் குத்தியது. அதற்கு மேல் எதுவும் பேச்சுக் கொடுக்காமல் காலணியை மாட்டிக் கொண்டு அறையிலிருந்து வெளியேற எத்தனித்தாள்.



"எங்கப் போற? அதுல காபி இருக்கு. எடுத்துக் குடிச்சுட்டுப் போ" - வார்த்தைகள் அதட்டலாக வந்து விழுந்தன.



இது போன்ற அதட்டல் உருட்டல் மிரட்டலையெல்லாம் பொடிப் பொடியாக்கி, ஊதிக் காற்றில் பறக்கவிடும் ஆற்றல் பூர்ணிமாவிற்கு உண்டு என்றாலும் இப்போது அவள் அதைச் செய்யவில்லை. மாறாகக் காபியை டம்ளரில் ஊற்றிக் குடித்தாள். ஒரு மிரடுதான் விழுங்கியிருப்பாள். உடனே "உவ்வே..." என்று மீண்டும் குளியலறைக்குள் ஓடினாள். கடுமையான உமட்டலுடன் கூடிய வாந்தி அவளை நிலைகுலையச் செய்தது.



அதுவரை திவ்யாவிடம் இருந்த கடுமை மறைந்து உண்மையான பதட்டத்துடன் "பூர்ணி... பார்த்துடி" என்று தோழியின் தலையைப் பிடித்தாள்.



"முடியல... திவி..."



"பயப்படாத ஒண்ணும் இல்ல. முகத்தைக் கழுவிட்டு வெளியே வா" - அவளைத் தாங்கிப் பிடித்து வெளியே அழைத்துக் கொண்டு வந்து படுக்க வைத்தாள்.



துள்ளலும் துடுக்குமாகவே சுற்றிக் கொண்டிருக்கும் பூர்ணிமா இப்படி வேரறுந்த கொடியாய் துவண்டுக் கிடப்பதைப் பார்க்கும் பொழுது திவ்யாவின் மனதில் இரக்கம் சுரந்தது.



"சித்தார்த்கிட்ட சொல்லிட்டியா பூர்ணி?"



"இல்ல..." என்றபடி அசதியாகக் கண்களை மூடினாள். திவ்யாவின் முகம் மீண்டும் கடுமையானது.



"ஏண்டி?" - பல்லைக் கடித்தாள்.



"சித்து இன்னும் ஊர்லேருந்து வரல திவி"



"எப்போ வருவானாம்?"



ஓரிரு நிமிடங்கள் அமைதியாகத் தோழியின் கண்களைப் பார்த்த பூர்ணிமா "போனை எடுக்க மாட்டேங்கிறான்" என்றாள்.



"பூர்ணி!" - அதிர்ந்தாள் திவ்யா.



"இதை எள்ளளவு நாள் மறைக்க முடியும் பூர்ணி? என்ன பண்ணப் போற?"



அவளுடைய பதட்டத்தில் சிறிதளவுக் கூட பூர்ணிமாவிடம் இல்லை. அவள் அமைதியாகக் கூறினாள்.



"எதுக்கு திவி இவ்வளவு டென்ஷன்? சித்து வந்துட்டா எல்லாம் சரியாயிடும்"



"வந்துட்டா சரியாயிடும்... ஆனா வருவானா?"



"நிச்சயமா" - பூர்ணிமாவின் உறுதியான பதில் திவ்யாவிற்குச் சற்று ஆறுதலாக இருந்தாலும் சித்தார்த்தை அவளால் முற்றிலும் நம்ப முடியவில்லை. ஒரு பெண்ணோடு எல்லை மீறி பழகி அவளைத் தாய்மையடையச் செய்துவிட்டு இப்போது எங்கோ ஊரில் போய் அமர்ந்து கொண்டு போனை எடுக்க மறுப்பவனை எப்படி நம்புவது?



*********



வீட்டைவிட்டுச் சென்ற ரவி எங்கு இருக்கிறான். என்ன செய்து கொண்டிருக்கிறான் என்று எந்த விபரமும் தெரியவில்லை. காணாமல் போய்விட்டானே என்று கவலைப்படுவதற்கு அவன் ஒன்றும் சிறு குழந்தையோ அல்லது வயது பெண்ணோ இல்லைதான். ஆனால் அவன் நிலையான புத்தி உள்ளவனும் அல்ல... அதிகமாகக் குடிப்பான். திடீரென்று கோபப்படுவான். யாரிடம் எந்த நேரம் சண்டைக்குப் போவான் என்று சொல்ல முடியாது. அப்படிப்பட்டவனை மூன்று நாட்களாகக் காணவில்லை என்றால் பெற்றவளுக்குப் பதட்டம் இருக்கத்தானே செய்யும். அந்தப் பதட்டத்தில்தான் தன் இளைய மகன் சித்தார்த்தைத் தொடர்பு கொண்டு வரவழைத்தாள் பார்வதி.



சென்னையிலிருந்து அவசரமாகக் கிளம்பி வந்த சித்தார்த் தன்னால் முடிந்தவரை அண்ணனைத் தேடிக் கலைத்துவிட்டான். ரவி எங்கெல்லாம் போகக் கூடும் என்று அவனுக்குத் தோன்றியதோ அங்கெல்லாம் நேரில் சென்றும்... தொலைப்பேசியில் அழைத்தும் விசாரித்துவிட்டான். ஆனால் பலன்தான் கிட்டவில்லை.



"சின்னவனே...! போலிஸ்ல வேணுன்னா கம்ப்ளைன்ட் கொடுத்திடுவோமா?" - பார்வதி கவலையுடன் கேட்டாள்.



சித்தார்த்திடமிருந்து எந்தப் பத்திலும் வரவில்லை. அவனுடைய கவலை வேறுவிதமாக இருந்தது.



'கொஞ்ச நாளாவே ரொம்ப டிப்ரஸ்டாதான் இருந்தான். எதாவது தவறான முடிவு எடுத்திருப்பானோ!' - நினைத்த கணமே மனதில் பயங்கரமான பாரம் ஏறிக் கொண்டது.



'ஒரு அண்ணனை தான் இழந்துவிட்டோம். இன்னொருவனையும் இழந்துவிடுவோமோ' என்கிற பயத்தில் அவன் உடலில் மெல்லிய நடுக்கம் ஊடுருவியது. தன்னுடைய பயத்தைத் தாயிடம் சொல்லி அவளையும் கலவரப்படுத்த விரும்பாமல் தலையை அழுந்தக் கோதியபடி ஊஞ்சலிலிருந்து எழுந்தான். அந்த நேரம்தான் அவனுடைய கைப்பேசி ஒலித்தது. எடுத்துப் பேசினான். அவன் முகம் உச்சபட்ச அதிர்ச்சியைப் பிரதிபலித்தது.



"என்னப்பா...?" - மகன் போனை அணைத்ததும் பார்வதி கேட்டாள்.



"நான் அவசரமா சேலம் கிளம்பணும்மா..."
 

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
749
Reaction score
859
Points
93
அத்தியாயம் - 19



சேலம் அரசு மருத்துவமனையில் டாக்டர் கேசவனின் அறை...



"ரவிக்கு நீங்க என்ன வேணும்?"



"தம்பி டாக்டர்"



"ம்ம்ம்"



"ரவி எப்படி இங்க?"



"சுயநினைவில்லாம ரோட்லக் கிடந்தாரு. நான்தான் இங்க அட்மிட் பண்ணினேன். ரொம்ப நாளாக் குடிக்கிறாரோ!"



"ஆமாம் டாக்டர்"



"ஓ... அவரோட உடம்பு கண்டிஷன் மோசமா இருக்குப்பா. அதைவிட மனசு ரொம்பப் பாதிக்கப்பட்டிருக்கு. பேச்செல்லாம் தப்பா இருக்கு"



"தப்பாப் பேசுறானா!" குழப்பத்தில் நெற்றிச் சுருங்கியது.



"ம்ம்ம்... சேலத்துல ஒரு முக்கியமான ஆளைக் கொலை செய்யப் போறதா உளர்றது சரியான பேச்சு இல்லையே"



சித்தார்த் உதட்டைக் கடித்தான். ரவி என்ன பேசியிருப்பான் என்பது அவனுக்குப் புரிந்தது.



"இந்த மாதிரி ஆக்டிவிட்டிஸ் அவருடைய உயிருக்கே ஆபத்தாயிடும் தம்பி. இது ரொம்ப சீரியசான விஷயம்"



"குடும்பப் பிரச்சனை டாக்டர். மத்தபடி எதுவும் இல்ல" சமாளித்தான்.



"உங்க பிரச்சனையைப் பற்றி எனக்கு எதுவும் தெரிய வேண்டியது இல்ல. ஆனா நீங்க தெரிஞ்சுக்க வேண்டியது என்னன்னா உங்க பிரதருக்கு இமீடியட்டா கெளன்ஸ்லிங் தேவைப்படுது"



"ஓகே டாக்டர்"



"நீங்க எங்க இருக்கீங்க? சொந்த ஊர் எது?"



"சொந்த ஊர் ஸ்ரீரங்கம். நான் சென்னைல இருக்கேன்"



"ரொம்ப நல்லது. சென்னைல எனக்குத் தெரிஞ்ச 'டி அடிக்ஷன் சென்டர்' ஒண்ணு இருக்கு. அங்க இந்த வாரம் 'ஆல்கஹால் ரி ஹபிட்டேஷன் கோர்ஸ்' ஸ்டார்ட் பண்ணுறாங்க. ரவியை அங்க அனுப்பறதுக்கு ஏற்பாடுப் பண்ணுங்க"



"சரியாயிடுவானா டாக்டர்"



"சின்ன வயசுதானே. ரெக்கவர் ஆயிடுவார். டிஸ்ச்சார்ஜ் பண்ணிக் கூட்டிட்டுப் போங்க"



"தேங்க் யூ டாக்டர்" அந்த அறையிலிருந்து வெளியேறினான்.



###



சென்னை... சித்தார்த்தின் இல்லம்...



"சொன்னாக் கேளு சித்து... சத்தியமா இனிமே குடிக்க மாட்டேன்டா"



"இது மாதிரி நீ ஆயிரம் சத்தியம் பண்ணிட்ட. இனி ஏமாற முடியாது"



ரவி பதில் பேச முடியாமல் தலையைப் பிடித்துக் கொண்டு சோபாவில் அமர்ந்தான்.



"எதுக்குடா நீ சேலத்துக்குப் போன? அங்க என்ன உன் மாமனாரா இருக்கான்?" எரிச்சலுடன் கேட்டான். சட்டென்று தலை நிமிர்ந்துத் தம்பியை முறைத்தான் ரவி. அவன் முகத்தில் கோவத்தின் ஜுவாலை தெரிந்தது.



"வேல்முருகன் இருக்கான்டா. அவனைக் கொன்னாத்தான் என் ஆத்திரம் அடங்கும்"



"இதுக்குத்தான்... இந்தக் கோவத்துக்குத் தான் கெளன்ஸ்லிங் தேவைன்னுச் சொல்றேன்" சித்தார்த் கிடிக்கிப்பிடிப் போட்டான்.



ரவிக்குப் பதில் சொல்ல முடியவில்லை. இயலாமையுடன் கண்களை இறுக மூடித் தலையைக் கோதினான். பெருமூச்செடுத்துத் தன் உணர்வுகளை அடக்கப் பெரும்பாடுபட்டான். அண்ணனைப் பார்க்க சித்தார்த்திற்குப் பாவமாக இருந்தது.



"நீ மாறனும் ரவி. நமக்காக இல்ல. அண்ணிக்காக..." - கெஞ்சலாகக் கூறினான்.



'முடியாது' என்பது போல் தலையைக் குறுக்காக ஆட்டிய ரவி சட்டென்று உடைந்தான். "இல்ல... இல்ல சித்து... நா... தமிழுக்கு நான் வேண்டாம்... அவ... அவ நல்லா இருக்கணும்டா" - சத்தம் போட்டு ஓவென்று அழுதான்.



"ரவி... ரவி.. என்னடா நீ? கோழை மாதிரி. உனக்கு ஒண்ணும் இல்ல. நீ அண்ணி கூடச் சந்தோஷமா இருக்கப் போற. நம்பிக்கையை விடாதடா. ம்ம்... அழுகையை நிறுத்து எழுந்திரு" - அண்ணனின் தோள்பிடித்து எழுப்பிவிட்டான்.



ரவி சுதாரித்துக் கொண்டு எழுந்தான். "குரு உனக்கு மட்டும் அண்ணன் இல்ல. எனக்கும்தான். நான் இருக்கேண்டா. விட்டுடுவேனா? போ... முகத்தைக் கழுவிட்டு வா" ஆறுதல் கூறிக் குளியலறைக்கு அனுப்பி வைத்தான்.



அந்த வேல்முருகனால்தான் இன்று தன் குடும்பத்தின் நிம்மதியே தொலைந்துவிட்டது என்கிற எண்ணம் சித்தார்த்தின் மனதில் மேலும் பகை உணர்ச்சியை அதிகரிக்கச் செய்தது. அதே நேரம் வீட்டின் அழைப்பு மணி ஒலித்தது. கதவைத் திறந்தான்.



"என்னடா ஆச்சு உனக்கு? எத்தனை தடவை போன் பண்ணறது. எடுத்துப் பேச கூட டைம் இல்லையா? கதிர் அண்ணன் சொல்லன்னா நீ வந்துருக்க விஷயமே எனக்குத் தெரிஞ்சிருக்காது. ஆமா... அம்மா எப்படி இருக்காங்க?" படபடவென்று பொரிந்து கொண்டே சித்தார்த்தின் நெஞ்சில் கைவைத்து அவனைத் தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்தாள் பூர்ணிமா.



எரிகின்ற தீயில் எண்ணையை ஊற்றுவது போல் அவன் வேல்முருகனின் மீது கொலைவெறியில் இருந்த நேரத்தில் பூர்ணிமா அங்கு வந்து சேர்ந்தது தான் தாமதம், சித்தார்த் என்னும் மனிதனுக்குள் ஒளிந்திருந்த மிருகம் சீற்றத்துடன் வெளியேறியது.



"யாருடி நீ? எதுக்கு இங்க வந்த?"



"என்ன!" - நம்பமுடியாத திகைப்புடன் அவனைப் பார்த்தாள்.



"நீ யாருன்னு கேட்டேன். எதுக்கு இங்க வந்தன்னுக் கேட்டேன்"



"என்னடா ஆச்சு உனக்கு? ஏன் இப்படியெல்லாம் பேசுற?"



"என்கிட்ட கேள்வி கேட்க நீ யாருடி? வெளியே போ முதல்ல. உன்ன பார்த்தாலே வெறி மண்டைக்கு ஏறுது" கடுமையான வார்த்தைகளை பிரயோகித்து அவள் மனதை உடைத்தான்.



கண்களில் திரண்டிருந்த கண்ணீருடன்," நீ இந்த அளவுக்கு கோவப்படற மாதிரி நா என்ன பண்ணுனேன்னே எனக்கு தெரியல. எதுவா இருந்தாலும் ஒரு அஞ்சு நிமிஷத்துக்கு அமைதியா இருந்து, நா என்ன சொல்ல வர்றேன்னு கேளு சித்து" என்றாள். அவள் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே குளியலறை கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தான் ரவி. பூர்ணிமா அவனைக் குழப்பமாகப் பார்த்தாள்.



"யார்ரா இந்தப் பொண்ணு?" - ரவி கேட்டான்.



"................." - சித்தார்த்திடமிருந்து பதில் இல்லை.



பூர்ணிமாவிற்கு அவனை எங்கோ பார்த்தது போல் இருந்தது. அவன் யார் என்கிற விபரத்தை நினைவடுக்கிலிருந்து உருவ முயன்றாள். இயலவில்லை. சித்தார்த்திடம் பார்வையைத் திருப்பினாள். அவன் முகத்தில் தெரிந்தச் சீற்றம் அவளை அச்சம் கொள்ளச் செய்தது. ஆனால் அச்சம் கொண்டு ஒதுங்கிவிடும் நேரம் இதுவல்லவே. அவள் அவனிடம் சொல்ல வேண்டியதை இன்னும் சொல்லவில்லையே.



"உன்கிட்ட தனியாப் பேசணும் சித்து. ஒரு அஞ்சு நிமிஷம்... ப்ளீஸ்..." கெஞ்சினாள்.



"மரியாதையாச் சொன்னாப் புரியாதா? ஏன் இப்படி ஸீன் கிரியேட் பண்ற? கெளம்பு..." - விரட்டினான்.



"ஏய், கேக்கறேன்ல... யார்ரா இந்தப் பொண்ணு. என்ன பிரச்சனை?" - ரவி தம்பியை அதட்டினான்.



அவன் பதில் சொல்வதற்கு முன் பூர்ணிமா பேசினாள். "ஸீன் கிரியேட் பண்றேனா! நானா? ரெண்டு வருஷமாப் பழகிட்டு இப்போ காரியம் முடிஞ்சதும் விரட்டிவிடப் பறக்கற இல்ல?" அவள் முடிக்கும் முன் சித்தார்த் கையை ஓங்கிக் கொண்டு வந்தான்.



"அப்டியே விட்டேன்னா செவுலுத் திரும்பிடும். நான் உன்கூடப் பழகினேனா? விலகிப் போகப்போக விடாம என் பின்னாடி சுத்தினது நீ.. லவ் பண்றேன்னு என்கிட்டக் கொஞ்சிக் குழாவினது நீ... ஒவ்வொரு தடவையும் அத்து மீறிப் போக என்னை டெம்ட் பண்ணினது நீ... எல்லாத்தையும் நீ பண்ணிட்டு இப்போ என் மேல குத்தம் சொல்றியா? கேவலமா இல்ல?" - வார்த்தைகளை விஷமாகக் கக்கினான்.



பூர்ணிமாவிற்கு உலகமே தலைகீழாய் சுற்றியது. நெஞ்சை அடைத்தது. 'ஹார்ட் அட்டாக்கா! சாகப் போறோமா! செத்துடு... செத்துடு பூரணி... செத்துடு...' அவள் தன்மானம் அலறியது. கண்கள் இருட்ட நிலைதடுமாறிப் பொத்தென்று சோபாவில் விழுந்தாள். வலுவிழந்த அவளுடைய நிலை இறுகியிருந்த அவன் உள்ளத்தை சிறிதும் அசைக்கவில்லை. கொலைவெறிபிடித்த அரக்கன் போல் அவள் கையைப் பற்றி இழுத்து வீட்டிலிருந்து வெளியே தள்ளி கதவை அறைந்து சாத்தினான்.



"பைத்தியமாடா நீ? ஏண்டா இப்படி நடந்துக்கற? கேக்குறேன்ல... பதில் சொல்லுடா" - ரவி தன் தம்பியை அதட்டி நியாயம் கேட்டான்.



"இப்ப என்கிட்டே எதுவும் கேட்காத. என்ன கொஞ்சம் தனியா விடு" - சித்தார்த் ரவியிடமிருந்து விலகி ஜன்னல் பக்கம் சென்று நின்றான். அனைத்தையும் இழந்துவிட்ட அபலை பெண்ணாக தளர்ந்த நடையுடன் சாலையில் சென்றுக் கொண்டிருக்கும் பூர்ணிமா அவன் கண்ணில் பட்டாள். நொடிப்பொழுதில் சுருக்கென்று அவன் இதயத்திற்குள் வலி ஒன்று ஊடுருவியது. அது அவன் கண்களையும் கலங்க செய்தது. நீர் திரையினூடே களங்களாக தெரியும் பூர்ணிமாவின் பிம்பம் அவனிடமிருந்து வெகுதூரமாக விலகிக் கொண்டிருந்தது..



 

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
749
Reaction score
859
Points
93
அத்தியாயம் - 20



வாய்விட்டுச் சொல்ல முடியாத துயரத்தை மனதிற்குள் போட்டு அழுத்தி வைத்துவிட்டு, இயல்பாக இருப்பது போல் தன்னை காட்டிக் கொள்ள முயன்றான் சித்தார்த். எதிலும் லயிக்க முடியாமல் தடுமாறும் தம்பியை நுட்பமாக கவனித்துக் கொண்டிருந்த ரவியிடம் அவனுடைய முயற்சி செல்லுபடியாகவில்லை.



"லவ்வா? நல்ல பொண்ணாத் தானேடா தெரியறா? அவளுக்கிட்ட என்ன கோவம் உனக்கு?" - ரவி.



சித்தார்த் சற்று நேரம் எதுவும் பேசவில்லை. ரவியின் பார்வை பதிலை எதிர்பார்த்து சித்தார்த்தின் முகத்திலேயேப் பதிந்திருந்தது.



"கோவம் அவமேல இல்ல. அவ அப்பன் மேல" - மெல்ல நிறுத்தி நிதானமாகச் சொன்னான்.



கணநேரத்தில் ரவியால் அனைத்தையும் புரிந்துகொள்ள முடிந்தது. இருந்தாலும் அவன் நினைப்பதை உறுதிப் படுத்திக்கொள்ளும் பொருட்டு "என்ன சொல்ற நீ?" என்றான்.



"இங்க வந்துட்டு போனவதான் வேல்முருகனோட பொண்ணு" - சொல்லும் பொழுதே அவள் வேல்முருகனின் மகளாக இல்லாமல் இருந்திருக்கக் கூடாதா என்கிற ஏக்கம் மனதில் படர்வதை அவனால் தவிர்க்க முடியவில்லை.



"என்ன!" - நம்பமுடியாத ஆச்சர்யத்துடன் கேட்டான் ரவி.



'ஆம்' என்பது போல் தலையை அசைத்தான் சித்தார்த்.



"இவ எப்படிடா உன்னோட?"



"ஒரே காலேஜ்"



"அவளைப் பயன் படுத்திக்கிட்டியா?"



".............." சித்தார்த்திடமிருந்து எந்தப் பதிலும் இல்லை.



"கேக்குறேன்ல?"



"வேல்முருகனோட வாழ்க்கை இனி நரகம்டா"



ரவியின் பார்வை தம்பியின் கண்களை ஊடுருவியது.



"பூரணியைப் பத்தி எனக்கு நல்லாத் தெரியும். நான் இல்லன்னா அவ வெறும் ஜடம். மகளுக்காகவே வாழ்க்கையை அர்பணிச்சவனாச்சே. இனி ஒவ்வொரு நிமிஷமும் அவளை நெனச்சு துடிப்பான். நரகமுன்னா என்னன்னு இனி அவனுக்குப் புரியும். அவன் சேத்து வச்சிருக்க சொத்து, பணம், புகழ், அதிகாரம் எல்லாம் அவனை பார்த்து இனி எகத்தாளமா சிரிக்கும்" - சித்தார்த்திடமிருந்து வன்மம் நிறைந்த சொற்கள் கொதிப்புடன் வெளிப்பட்டன. நொடியில் ரவியின் கைரேகை அவன் கன்னத்தில் பதிந்தது.



"தேர்ட் ரேட் பொறுக்கிப் பண்ற வேலையைப் பண்ணிருக்க. நாயே... நாயே!"



"ரவி!!!"



"ஒரு வார்த்தப் பேசாத"



"ஏண்டா? அவனைப் பழிவாங்கணும்னு தானே நீ துடிச்சுகிட்டு இருந்த? அருவாளைத் தூக்கிட்டு வெட்டப் போனியேடா!"



"அதைச் செஞ்சிருக்கணும்டா. நீ நல்ல ஆம்பளையா இருந்த அதைச் செஞ்சிட்டு வந்து என்கிட்டச் சொல்லியிருக்கணும். அதைவிட்டுட்டு இப்படிக் குள்ளநரித்தனம் பண்ணியிருக்கக் கூடாது"



"ஏன் பண்ணக்கூடாது? என் அண்ணனை அவன் கொள்ளும் போது, என் அண்ணியை அவன் உயிரோட கொளுத்தும் போது, நம்ம குடும்பத்து வாரிசைக் கருவிலேயே அவன் அழிக்கும் போது... நான் மட்டும் அவனோட பொண்ண பழிவாங்கக் கூடாதா. செய்வேன். வாய்ப்புக் கெடச்சா இன்னமும் அதிகமா செய்வேன்" - சிங்கமென கர்ஜித்தான்.



"அப்பன் பண்ணினத் தப்புக்கு மகளைத் தண்டிக்கிறது பெரிய பாவம்டா. அந்தப் பொண்ணு உனக்கு என்னடா துரோகம் பண்ணினா? அவளை ஏன் கஷ்ட்டப்படுத்தற? பொம்பளப் புள்ளைய அழுவ வைக்காதடா..."



"அதை நீ சொல்லாத. அந்த தகுதி உனக்கு இல்ல"



"சித்தூ..." - குரலை உயர்த்தி தம்பியை அதட்டினான்.



"நீயே உலகம்... நீ மட்டுமே வாழ்க்கைன்னு உன்னையே சுத்தி சுத்தி வந்த பொண்ணுக்கு நீ என்னத்த செஞ்சு கிழிச்சுட்ட? அவங்க கண்ணீர தொடச்சுவிட்டியா? இல்ல அவங்களை புரிஞ்சுக்கத்தான் முயற்சி பண்ணுனியா? எதுவும் இல்லைல? அப்போ பேசாத..."



ரவி வாயடைத்துப் போனான். உண்மைதானே! தமிழி என்ன பாவம் செய்தாள்! ஆனால் அவன் தமிழியை வேண்டாம் என்று கூறுவது அவளுடைய நலனைக் கருத்தில் கொண்டல்லவா! இவன் எதற்கு எதை இணைகூட்டிப் பேசுகிறான்....



"புரியாம பேசாதடா... தமிழிக்கு நான் இல்லன்னா வேற வாழ்க்கை அமையும். ஆனா வேல்முருகனோட பொண்ணுக்கு? அவளோட நீ அத்து மீறிப் பழகியிருக்க சித்து... அதுக்கு என்ன பதில் சொல்லப் போற?" - நியாயம் கேட்டான்.



சித்தார்த்தின் மனசாட்சிச் சுட்டது. பதில் சொல்ல முடியாமல் உதட்டைக் கடித்தான்.



"இந்தத் தப்பை எப்படியாவது சரி பண்ணிடு சித்து"



"என்னுடைய நோக்கம் பூர்ணிமாவைக் காயப்படுத்தறது இல்ல. அவ அப்பன பழிவாங்கறதுதான். இவளை அடிச்சாதான் அவனுக்கு வலிக்கும். என்னால வேற என்ன பண்ண முடியும்? எது எப்படி இருந்தாலும் குருவுக்கு நியாயம் கிடைக்கணும். கிடைச்சிடிச்சு... இதுக்கு மேல பேசறதுக்கு எதுவும் இல்ல. இதை இத்தோட விட்டுட்டு நிம்மதியா இரு" என்று தன்னுடைய இறுதி முடிவை அண்ணனிடம் கூறியவனின் மனதில் துளியளவும் நிம்மதி இல்லை. வேதனை மட்டுமே நிறைந்திருந்தது.



தலையைக் குறுக்காக ஆட்டித் தம்பியின் கூற்றை மறுத்தான் ரவி. "இப்பவும் சொல்றேன் சித்து. நீ பண்ணினது தப்பு. அதை எப்படியாவது சரி பண்ணப் பாரு" என்று கூறிவிட்டு அங்கிருந்து நகர எத்தனித்தவன் நின்று, தம்பியைத் திரும்பிப் பார்க்காமலேயே அதைக் கேட்டான்.



"அந்த ஆல்கஹால் ரி ஹாபிட்டேஷன் கோர்ஸ் எப்போ ஸ்டார்ட் பண்ணறாங்கன்னுச் சொன்ன?"



***



ஏமாற்றம்... நம்பிக்கைத் துரோகம்... அவமானம்... எப்படித் தாங்குவாள் அந்தச் சின்னப் பெண். அதனால்தான் செத்துவிட வேண்டும் என்று தோன்றுகிறதோ!



அவள்தான் அவன் பின்னால் சுற்றினாளாம்! அவள்தான் அவனைக் காதலிப்பதாக் கூறினாளாம்! அதற்கும் மேலாக அவள்தான் அவனோடு சேர்ந்து வாழவும் தூண்டினாளாம். எத்தனைக் கேவலம்...!



போன் செய்து கொஞ்சிக் கொஞ்சி அழைத்ததெல்லாம் மறந்துவிட்டதா! அவனுடைய மனக் குழப்பங்களுக்கெல்லாம் அந்த அப்பாவிப் பெண்ணை மருந்தாக்கிக் கொண்டதெல்லாம் நினைவில் இல்லையா! எல்லாவிதத்திலும் இவளைப் பயன்படுத்திக் கொண்டுவிட்டு இப்போது குப்பையைப் போல் ஒதுக்கிவிட்டானே! நினைக்கவே முடியவில்லை. கண்ணீர் வற்றிவிட்டதோ என்னவோ, விட்டத்தை வெறித்தபடி அமர்ந்திருந்த பூர்ணிமா அழவில்லை.



சித்தார்த்தா இப்படிச் செய்தான்! அவனால் எப்படி முடிந்தது? அவளுடைய களங்கமில்லா அன்பு அவன் இதயத்தைத் தொடவே இல்லையா? அவளுக்குத் துரோகம் செய்ய அவன் மனம் எப்படி ஒப்பியது! இன்னமும் அவளால் முழுமையாக நம்ப முடியவில்லை. ஒருவேளைக் கனவாக இருக்குமோ! இல்லையே... இதோ கிள்ளினால் வலிக்கிறதே! அப்படியானால் அவன் ஏமாற்றியது உண்மைதான். மீண்டும் எப்படி அவனால் முடிந்தது என்னும் கேள்வி தான் அவள் முன் வந்து நின்றது.



ஏன் முடியாது? அவள் செய்யவில்லையா? அவன்தான் உலகம் அவன்தான் வாழ்க்கை என்று நினைத்து, பெற்றவருக்கும் வளர்த்தவர்களுக்கும் துரோகம் செய்தாளே! அது எப்படி அவளுக்குச் சாத்தியமானது? காதல்!!! உலகத்தில் இல்லாத காதல்...! அது அவள் கண்ணை மறைத்தது போல் அவன் கண்ணை எது மறைத்ததோ! பேராசையும் பெண் பித்தும்தான் மறைத்திருக்கக் கூடும். வேறு என்னவாக இருக்க முடியும்? பாவிப் பாவி...!



எத்தனை ஆசைகளோடும் கற்பனைகளோடும் பட்டாம்பூச்சி போல் சிறகடித்துக் கொண்டிருந்தாள். நயவஞ்சகமாக அவள் சிறகை வெட்டி அவளைத் துடிதுடிக்க வைத்துவிட்டானே! இனி என்ன செய்யப் போகிறாள். இந்த உலகத்தை எப்படி எதிர்கொள்ளப் போகிறாள். அவளுக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கும் அப்பாவின் முகத்தில் எப்படி விழிக்கப் போகிறாள். அதைவிட வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு என்ன வழி! தெரியவில்லை. எல்லாம் முடிந்துவிட்டது. இனியும் உயிரோடு இருந்து என்ன செய்யப் போகிறோம். பேசாமல் செத்துவிடலாம். ஆம்... சாவுதான் ஒரே வழி... பூர்ணிமா அந்த முடிவை எடுத்த நொடிப் பளீரென்ற வெளிச்சம் அந்த அறையில் பரவியது.



"லைட் போடாம இருட்டுக்குள்ள உட்கார்ந்துகிட்டு என்ன செய்ற?" - திவ்யா கேட்டாள்.



"ம்ஹும்... ஒண்ணுமில்ல... சும்மாதான்" - எழுந்து பீரோவைத் திறந்து மாற்று உடையை எடுத்தாள்.



"சித்தார்த்தைப் பார்க்கப் போனியே. என்ன சொன்னான்?"



"குளிச்சிட்டு வந்து சொல்றேன்" - குளியலறைக்குள் நுழைந்துக் கதவைச் சாத்திக் கொண்டாள்.



கையில் இருந்த துணியை ஹாங்கரில் மாட்டிவிட்டுப் பைப்பைத் திறந்துவிட்டாள். மறைத்து வைத்திருந்த பிளேடை எடுத்து வலது கை மணிக்கட்டில் 'சரட்' 'சரட்' 'சரட்' என்று மூன்று முறைக் கிழித்துக் கொண்டாள். ரெத்தம் கொட்டியது. கண்களை இருட்டிக் கொண்டு வந்தது. பொருட்களெல்லாம் மங்கலாக... மேலும் மேலும் மங்கலாகத் தெரிந்துப் பின் மறைந்து போக, பூர்ணிமா சரிந்துத் தரையில் விழுந்தாள்.

 

Latest Episodes

Latest posts

New Threads

Top Bottom