Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Completed உன் மூச்சுக்காற்றாய் - ஸ்ரீஜா வெங்கடேஷ்

Status
Not open for further replies.

Srija Venkatesh

Member
Vannangal Writer
Messages
60
Reaction score
123
Points
18
அத்தியாயம் 25:

இரவு நேரம் வந்ததும் மனதில் பயம் வந்து அமர்ந்து கொண்டது வெங்கியின் மனதில். ஏதோ ஒரு குருட்டு தைரியத்தில் இங்கே தங்கி விட்டோம். சரியான காடு போலத் தெரிகிறது. ஏதேனும் வன விலங்குகள் வந்தால் என்ன செய்ய? அது கூடப் பரவாயில்லை கோயில் கதவை சாத்தி விட்டால் பாதுகாப்புத்தான். இது போன்ற காடுகளில் பல தீயவர்கள் தங்கி இருக்கலாம். அவர்களால் திவ்யாவுக்கு ஏதேனும் ஆபத்து வந்தால் ...?தெய்வமே...எங்களைக் காப்பாற்று" என மனமார வேண்டினான். ஆனால் பாலாவுக்கோ இல்லை மற்ற இருக்குவருக்குமோ இது போன்ற கவலைகள் இருப்பதாகத் தெரியவில்லை. அவர்கள் பாட்டுக்குப் பேசிக்கொண்டிருந்தனர்.

நாளை பௌர்ணமி என்பதை நிலவு சொல்லாமல் சொல்லியது. அது வேறு கவலையை அதிகரித்தது வெங்கிக்கு. நாளை முழு நிலவு வானத்தின் உச்சியில் வருவதற்குள் நாங்கள் என்னென்ன செய்ய வேண்டும்? வாளையும், குத்தீட்டியையும் கண்டு பிடிக்க வேண்டும். சிவகாமி அம்மாளும், கரியமாணிக்கமும் வர வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக வண்டி மறிச்சியம்மன் கொடுத்த அம்புகள். அவைகளைப் பற்றி இன்னமும் எதுவும் தெரியவில்லை. இது எல்லாமே நடந்து விட்டது என்று வைத்துக்கொண்டால் கூட நித்யமல்லியையும், பொன்வண்டையும் அந்தக் காட்டு பங்களாவுக்கு எப்படி வரவழைப்பது? யோசிக்க யோசிக்க குழப்பம் அதிகமானதே தவிரக் குறையவில்லை.

மெல்லிய வாசனை வருவது போலத் தோன்றியது. மனதுக்கு இதம் தரும் மணம் அது. அவனையும் அறியாமல் கண்கள் மூடி நீண்ட நித்திரைக்குப் போனான் வெங்கி. மற்றவர்கள் என்ன செய்கிறார்கள்? என்பதைக் கூட அவனால் கவனிக்க முடியாத அளவு உறக்கம் அவனை ஆழ்த்தியது. கண்கள் திறந்த போது, கரிய நிறத்தில் ஒருவர் அழகே உருவாக நின்றிருந்தார். அவரது அருகில் திவ்யா, ஜோசியர், பாலா என மூவரும் நின்றிருந்தனர். புரியாமல் விழித்தான் வெங்கி.

"நீங்க தேடுற அம்புகள் இருக்குற இடமும், நித்யமல்லியை காட்டு பாங்களாவுக்கு வரவழைக்கிற வழியும் தானே உங்களுக்குத் தெரியணும்?" என்றார் அவர். அவரைப் பார்க்கவே பரவசமாக இருந்தது. அழகென்றால் அப்படி ஒரு அழகு.

"ஆமா சார்"

"சரி அப்ப என் பின்னாடி வாங்க" என்று சொல்லி விட்டு விடு விடுவென நடக்க ஆரம்பித்தார். இரவு நேரத்தில் இப்படிக் கூட்டிப் போகிறீர்களே? எனக் கேட்க நினைத்தான் ஆனால் எதுவும் பேசாமல் பின்னால் நடந்தான் வெங்கி. அவனை மற்றவர்கள் பின் தொடர்ந்தனர். கோயிலுக்கு வெளியே சற்று தூரம் மலை ஏற்றத்தில் ஏறினார்கள். அங்கே ஒரு மரம் தனியாகத் தெரிவது போலத் தோன்றியது. அதை நோக்கித்தான் அந்த நபரும் நடந்தார்.

"உம்! இதுல ஏறு" என்றார் பாலாவை நோக்கி. அவன் திகைத்துப் போனான்.

"நான் வேணும்னா ஏறவா சார்? அவனுக்கு மரம் ஏறத் தெரியாது" என்றான் வெங்கி. அவனை விழித்துப் பார்த்தார் அந்த மனிதர். அவரது நீண்ட பெரிய வ்ழிகளில் ஏளனம்.

"நான் சொன்னதை மட்டும் தான் நீங்க செய்யணும். உம் பாலா..." என்றார்.

தயங்கித்தயங்கி மரத்தின் அருகில் சென்றான் பாலா. என்ன தோன்றியதோ தெரியவில்லை, ஏற ஆரம்பித்தான். கிளைகள் எல்லாம் வாகாக வளைந்து கொடுப்பது போலத் தோன்றியது. ஒரு குறிப்பிட்ட உயரம் வந்ததும் போதும் என்றார் அந்த நபர்.

"நீ உக்காந்திருக்குற இடத்துக்குப் பக்கத்துல ஒரும் பொந்து இருக்கா பாரு"

இருந்தது.

"அதுல கையை விடு!"

தயங்கினான் பாலா. மரப்பொந்து, அதில் என்ன இருக்குமோ? ஏதேனும் பாம்பு இருந்து கடித்து விட்டால் என்ன செய்ய? என்று அவன் யோசிக்கும் போதே பாம்பு ஒன்று சரசரவென அந்தப் பொந்திலிருந்து வெளியே வந்தது. நடுங்கிப் போனான் பாலா. கத்தவும் வாய் வராமல் அப்படியே அமர்ந்திருந்தான். ஆனால் பாம்பு அவனை ஒன்றும் செய்யவில்லை. ஒரு முறை தலையைத் திருப்பிப் பார்த்து விட்டுப் போய் விட்டது.

"அவன் தான் போயிட்டானே? இப்ப கையை விடு" என்றார் கீழே நின்றிருந்தவர். மற்றவர்களுக்கு என்ன வந்தது? என்ன போய் விட்டது? எனச் சொல்கிறார் என எதுவும் புரியவில்லை. பாலா நடுங்கும் கரங்களை அந்தப் பொந்தில் நுழைத்தான். ஏதோ தட்டுப்பட சட்டெனக் கைகளை எடுத்து விட்டான். உடலெங்கும் வியர்வை.

"தேடி அலைவீங்க! கெடச்சா கையை உதறுவியா நீ? எடு! எடு!" என்றார் அந்த நபர். மீண்டும் கைகளை விட்டுத் துழாவ ஏதோ துணி போலத் தென்பட்டது. அதை அப்படியே எடுத்தான்.

"கெடச்சிருச்சு இல்ல! கீழே இறங்கு. அவன் தூங்கணும்." என்றார் அவர். பதிலே பேசாமல் ஒரு கையால் அந்தத் துணி மூட்டையைப் பிடித்துக்கொண்டு மெல்ல இறங்கினான். பாலா கீழே இறங்கியதும் மீண்டும் அந்தப் பாம்பு வந்து பொந்தில் புகுந்து கொண்டது. கீழே நின்றிருந்தவர்களில் வெங்கி கையை நீட்டினான்.

"நீ இல்ல! திவ்யா நீ வாங்கு" என்றார் அந்த நபர். அவருக்கு அதிகாரமாகத்தான் பேச வருமோ? என நினைத்தான் வெங்கி. திவ்யா முன்னால் வந்து அந்த துணி மூட்டையை வாங்கிக்கொண்டாள். அதைத் தொட்டதும் அவளது தொண்டையில் இருந்து அலறல் கிளம்பியது. அவளது தலையில் கை வைத்தார் அந்த நபர். சட்டென அமர்ந்து விட்டாள் திவ்யா.

"சார்! நீங்க என்ன மந்திரவாதியா? என்னென்னமோ சொல்றீங்க? என்னென்னமோ செய்யுறீங்க? நீங்க யாரு சார்?" என்றான் வெங்கி சற்றே கோபமாக.

"உனக்கு கோபம் மட்டும் அடங்கலியோ? நான் யாரா இருந்தா உனக்கென்ன? உதவி தானே செய்யுறேன். பேசாம இரு." என்றவர் பாலாவை நோக்கினார்.

"கோயிலுக்குள்ள தீர்த்தம் இருக்கும். போயி எடுத்து வந்து உன் தங்கச்சிக்குக் குடு" என்றார். அப்படியே செய்தான் பாலா. ஒரு வாய் தீர்த்தம் உள்ளே போனதும் தெளிந்தாள் திவ்யா. சட்டென அந்த நபரை வணங்கினாள்.

"நீங்க யாரு என்னன்னு தெரியல்ல! ஆனா இதுக்குள்ள என்ன இருக்குன்னு எனக்குத் தெரிஞ்சிரிச்சு. வண்டிமறிச்சியம்மன் கொடுத்த அம்புகளை நான் இந்த மரத்துல தான் மறைச்சு வெச்சேன். இது என்னோட புடவை முந்தானை. எனக்கு நல்லா நினைவு வந்துட்டுது. ஆனா இத்தனை வருஷம், காத்து, மழை எல்லாத்தையும் தாங்கிக்கிட்டு, எப்படி இந்த துணி மூட்டை அப்படியே பத்திரமா இருந்ததுன்னு தான் தெரியல்ல." என்றாள்.

"நாகன் காவலா இருந்தானே? அதனால தான். சரி சரி! அம்பு கெடச்சிருச்சு இல்ல. இனிமே அடுத்ததைப் பார்ப்போம்." என்றார். அது வரையில் அமைதியாக இருந்த ஜோசியர் வாயைத் திறந்தார்.

"அம்பு கெடச்சு என்ன பிரயோஜனம்? நித்யமல்லியை வரவழைக்கணும். அதுவும் போக காட்டு பங்களாவுல வாளும், குத்தீட்டியும் எங்கே இருக்குன்னு எப்படிக் கண்டு பிடிக்க? இன்னும் ஒரு நாள் கூட முழுசா இல்லியே? நாளை ராத்திரி இந்நேரத்துக்கு நித்யமல்லியை அழிச்சிருக்கணும். நெனச்சாலே கலக்கமா இருக்கு." என்றார். மற்றவர்களுக்கும் அதே கலக்கம் தான்.

"உங்களுக்கெல்லாம் நம்பிக்கை போதாது. கடவுள் மேல நம்பிக்கை வெச்சா முழுசா வெக்கணும். இது வரையில நடந்தது எல்லாம் நீங்களாவா செஞ்சீங்க? எல்லாம் கடவுள் அருளால தானே நடந்தது இல்ல? இனியும் ஏன் அப்படி நடக்காதுன்னு நினைக்கறீங்க?" என்றார் அவர்.

"சாரி சார்! தெரியாமப் பேசிட்டோம். அடுத்தது என்னன்னு சொல்லுங்களேன்" என்றான் வெங்கி பணிவாக.

"சரி! இப்ப என்ன? உங்களுக்கு நித்யமல்லியை வரவழைக்குற வழி தெரியணும். இல்லியா?" என்றார். ஆனால் பதிலுக்குக் காத்திராமல் அவரே பேச ஆரம்பித்தார்.

"வெங்கடேஷ்! இதுக்கு நீ தான் முக்கியத் தேவை. நித்யமல்லி நீ கூப்பிட்டா மட்டும் தான் வருவா. நாளைக்கு அவ உன்னோட சேரணும்னு திட்டம் போட்டுக்கிட்டு இருக்கா. அதுக்கான இடத்தையும் அவ தேர்ந்தெடுத்துட்டா. அவ தேர்ந்தெடுத்த இடமும் காட்டு பங்களா தான். ஆனா அவ உன்னை அழைக்கிறதுக்கு முன்னால நீ அவளை அழைக்கணும். நீ அழைக்குறது அவ கூட சேரத்தான்னு அவ நம்பணும். அப்படி அவ வந்ததும், நீங்க உங்க தாக்குதலை ஆரம்பிக்கலாம். ஆனா இதுல ஒரு விஷயம் நீங்க நல்லா கவனிக்கணும்."

"சொல்லுங்க சார்!"

"வெங்கடேஷ் அவளைக் கூப்பிட்டது அழிக்குறதுக்காகத்தான், கூடலுக்காக இல்லைன்னு நித்யமல்லிக்குத் தெரிஞ்சதுமே அவளுக்கு பயங்கரமா கோபம் வரும். அந்தக் கோபத்துல அவ அவன் உசிரை எடுக்க நினைப்பா. அதனால வெங்கடேஷ் நீ நாளைக்கு அவளைக் கூப்பிடும் போது நீ உயிர்த் தியாகம் செய்யவும் தயாரா இருக்கணும். அதுக்கு நீ தயாரா?" என்றார்.

சற்று யோசித்தான் வெங்கடேஷ்.

"அனைவரது வாழ்க்கைக்கும் ஏதாவது அர்த்தம் இருக்கும். நான் கடவுளால் இந்த நல்ல காரியத்துக்காகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறேன். இதில் என் உயிர் போனால் தான் என்ன? மனித குலத்துக்கே நன்மை செய்யும் பெரும்பணியில் என் உயிர் போனால் அது எனக்குப் பெருமை தானே? ஒருவேளை நான் உயிர்த்தியாகம் செய்த பிறகும் நித்யமல்லியைக் கட்ட முடியவில்லையென்றால் என்ன செய்ய?"

"என்ன யோசிக்குற?"

"இல்ல ...வந்து.....நான் உயிர்த்தியாகம் செய்யத் தயார் தான். ஆனா....அதுக்குப் பிறகு நித்யமல்லியை அழிக்க முடியலைன்னா?"

"நல்ல கேள்வி தான். அதுக்கு திவ்யாவும், பாலாவும் தான் பதில் சொல்லணும்." என்றார் புதிராக.

"எங்களால என்ன பதில் சொல்ல முடியும் சார்? வெங்கி இல்லாத வாழ்க்கை எனக்குத் தேவையே இல்ல!" என்றாள் திவ்யா.

"சபாஷ்! இதை நீ எப்பவுமே மனசுல வெச்சிக்கோ. பாலா, திவ்யா ஒரு வேளை வெங்கி உயிர்த்தியாகம் செஞ்சுட்டான்னு வெச்சிக்குங்க. அப்ப திட சித்தத்தோட உங்களால நித்யமல்லியோட போராட முடியுமா?"

"நிச்சயமாப் போராடுவோம் சார்! ஏன்னா என் நண்பனோட தியாகம் வீண் போகக் கூடாது.! என்றான் பாலா உணர்ச்சியுடன். அவர்களை நோக்கி சிரித்தார் அவர்.

"நல்லது! இப்ப நான் வழிமுறையச் சொல்றேன். கோயிலுக்குள்ள போய் உக்காந்து பேசுவோம்" என்று அந்த நபர் அவர்களை முன்னால் போகச் சொல்லிவிட்டு தான் அடி எடுத்து வைத்தார். அவர் அந்த இடத்தை விட்டு நகர்ந்ததும் ஒரு பெரிய கிளை அப்படியே முறிந்து விழுந்தது. அவர்கள் அதன் கீழே நின்றிருந்தால் அவர்கள் கதி அதோ கதி தான்.

"ஊம்! திரும்பிப் பாக்காம போங்க" என்றார். அப்படியே செய்தனர். கோயிலுக்குள் அவரைச் சுற்றி வட்டமாக அமர்ந்து கொண்டனர்.

"நாளைக்கு மதியமே நீங்க காட்டு பங்களாவுக்குப் போயிருங்க. போகும் போது வனப்பேச்சியம்மன் கோயில்ல இருந்து பிடிமண் எடுத்துட்டுப் போங்க. அங்க உங்க கண்ணுல முதல்ல வாள் படும். வெங்கி நல்லா நினைவு படுத்திப் பாரு, நீயும் பாலாவும் முத முத கன்னிமார் துறைக்குப் போயி நித்யமல்லியோட வசியத்துக்கு ஆட்பட்டு அவ கட்டை அவுத்து விடும் போது ஒரு வாள் உங்க கண்ணுல பட்டது. அதை எடுக்கணுமான்னு கூட நீ அவளைக் கேட்ட! நல்லா நினைவு படுத்திக்கோ." என்றார்.

அவர் பேசப் பேசவே பாலாவுக்கும், வெங்கிக்கும் நன்றாக நினைவு வந்து விட்டது. அந்த பங்களாவின் கூடத்தில் மாடிப்படிக்கு எதிர்பக்கம் இருந்த சுவரில் ஒரு வாள் தொங்கிக்கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது.

"ஆமா சார்" என்றனர் இருவரும்.

"அது தான் சொரிமுத்தையன் உங்களுக்கு கொடுத்த வாள். அதை எடுத்துக்கப்பா வெங்கி நீ! நீ அதைத் தொட்டதுமே குத்தீட்டி இருக்குற இடம் உங்களுக்குத் தெரிய வரும். அதையும் எடுத்து வெச்சிக்குங்க. இப்ப அம்பும் கெடச்சிருச்சு. மூணையும் ஒண்ணா வெச்சு, கரியமாணிக்கமும் ஜோசியரும் பூஜை செய்யட்டும். வனப்பேச்சி கோயில்ல இருந்து எடுத்த பிடி மண்ணை அது மேல தடவுங்க. அப்ப அந்த ஆயுதங்களை உங்களால தடையில்லாம பயன் படுத்த முடியும். அதன் பிறகு தான் ஜோசியரே! உங்க வேலை" என்றார்.

திடுக்கிடார் ஜோசியர்.

"நானா? நான் என்ன செய்யணும்?"

"உங்க வீட்டுல பிரம்மராட்சசி அம்மன் சிலைக்குப் பின்னால ஒரு ஓலைக்கட்டு இருக்கு இல்ல?"

வியப்புக்கு மேல வியப்பு அனைவருக்கும்.

"இருக்கு! ஆனா அதை எடுக்கவே கூடாதுன்னு இல்ல, எங்கப்பா, அவருக்கு அப்பா, எல்லாரும் சொல்லி வெச்சிருக்காங்க?"

"அதே தான். அதைப் படிக்க வேண்டிய காலம் வந்தாச்சு. நீ அதைப் படி. அதுல சில குறிப்புக்கள் இருக்கும். அது படி நீ செய்யணும். அதன் பிறகு வெங்கடேஷ் கூடத்தோட நடு மையத்துல உக்காந்து நித்யமல்லியை மனதால நினைக்கணும். அதுவும் எப்படி? உன்னோட நான் சேருற நேரம் வந்தாச்சு. எனக்கு திவ்யா தேவையில்ல. நீ தான் வேணும்னு அவன் மெல்ல சொல்லிக்கிட்டே இருக்கணும். அப்ப அவ வருவா. அதன் பிறகு நடக்கப்போறது உங்களோட மன உறுதியில தான் இருக்கு." என்றார்.

மனதினுள் ஏராளமான பயம். இவர் சொல்வது எல்லாமே மிக எளிதாகத்தான் இருக்கிறது. ஆனால் செய்யும் போதல்லவா கஷ்டம் தெரியும். என யோசித்தனர்.

"எங்க எல்லாரைப் பத்தியும் தெரிஞ்சு வெச்சிருக்கீங்க. ஆனா உங்களைப் பத்தி எதுவுமே சொல்ல மாட்டேங்கறீங்களே? சொல்லுங்க! நீங்க சித்தரா? மந்திரவாதியா?" என்றான் வெங்கி.

"எப்படி வேணும்னாலும் வெச்சுக்கோ! உலகத்துலயே பெரிய மாயக்காரன் நான்." என்றார் அந்த நபர்.

அவர்கள் பேசாமல் அவரைப் பார்த்த வண்ணம் இருந்தனர்.

"என்ன அப்படிப் பார்க்கறீங்க? இப்ப தூங்குங்க. நாளைக்கு உங்களுக்கு நிறைய வேலை இருக்கு. நானும் இப்படி ஓரமா சாஞ்சிக்கறேன்." என்று சொல்லி விட்டு படுத்து விட்டார்.

அதிகாலையிலேயே பறவைகளின் சத்தம், குரங்குகளின் கத்தல் இவைகள் எழுப்ப சட்டென எழுந்து அமர்ந்தான் வெங்கி. அவனைத் தொடர்ந்து பாலா, திவ்யா, ஜோசியர் எழுந்தனர். எழுந்ததுமே அவன் பார்வை இரவு நேரத்தில் வந்த நபரைத் தேடியது. அப்படி ஒருவர் வந்ததற்கான சுவடே இல்லை.

"பாலா! நேத்து ராத்திரி வந்தவர் எங்கே?"

"அவரைத் தான் நானும் தேடுறேன். காணலியே?"

"பாலா எடுத்தானே ஒரு துணிப்பொட்டலம். அதையும் காணோமே?" என்றாள் திவ்யா. அவர்கள் விழிகளில் குழப்பம்.

சட்டென அப்படியே அமர்ந்தார் ஜோசியர்.

"என்ன ஐயா? என்ன செய்யுது உங்களுக்கு?" என்றாள் திவ்யா பயத்தோடு.

"உங்களுக்குப் புரியலியாப்பா? நாம கண்டது அத்தனையுமே கனவு. அந்த அழகிய பெருமாளே நம்ம கனவுல வந்து, வழி காமிச்சிருக்காருப்பா. அதனால தான் நம்ம நாலு பேருக்கும் ஒரே விதமான கனவு வந்திருக்கு." என்றார். அவரது உடலே ஆடிக்கொண்டிருந்தது.

சிலிர்த்துப் போனார்கள். கண்களில் நீரோடு பெருமாளை வணங்கினார்கள். சுறுசுறுப்பானார் ஜோசியர்.

"சாமி சொன்னா மாதிரி, நமக்கு நிறைய வேலை இருக்குப்பா. முதல்ல பாலா போய் அந்த அம்புகளை எடுக்கட்டும், அதை திவ்யா வாங்கிக்கட்டும். நாம கீழே இறங்கி நேரே எங்க வீட்டுக்குப் போயி, சாமி சொன்ன சுவடிக்கட்டை எடுத்துப் படிக்கறேன். அப்புறம் என்ன செய்யலாம்னு யோசிப்போம். உம் புறப்படுங்க. பாலா முதல்ல போய் அந்த மரத்துல இருந்து அம்புகளை எடு. திவ்யா அதை வாங்கிக்கோ." என்றார்.

அப்படியே ஓடினார்கள் மூவரும். இரவு அவர்கள் பார்த்த மரம் நன்றாகவே அடையாளம் தெரிந்தது. அதில் பாலா ஏற ஏற கனவில் பார்த்தது போலவே மரம் வாகாக வளைந்து கொடுத்தது. பொந்தின் அருகே வந்ததும் தயங்கினான் பாலா. அவன் எதிர்பார்த்தது போலவே பெரிய நாகப்பாம்பு ஒன்று சரசரவென இறங்கிப் போனது. மனதைத் திடப்படுத்திக்கொண்டு கைகளை உள்ளே விட துணிம்மூட்டை தட்டுப்பட்டது. அதை எடுத்ததும் மெல்லிய அதிர்வு தோன்ற அப்படியே இறங்கினான் பாலா. அதை பணிவோடு தன் கைகளில் வாங்கிக்கொண்டாள் திவ்யா. அவள் உடல் நடுங்கியது.

"முதல்ல அவளோட கண்ணைத்தான் குத்தணும். அதைத்தான் நான் முதல்ல செய்யணும்.." என சொல்லிக்கொண்டே இருந்தாள். அவளைப் பார்த்தால் ஏதோ பித்துப் பிடித்தவள் போலத்தோன்றியது. ஜோசியர் சட்டென கோயிலுக்குள் சென்று அங்கே இருந்த தீர்த்ததை எடுத்து வந்து வாயில் புகட்டினார். சற்று நேரத்தில் சரியாகி விட்டாள். நிம்மதியானது அனைவருக்கும்.

"நமக்குக் கனவுல வந்தது வெறு காட்சியில்ல! பெருமாள் நமக்குக் காட்டிய வழி! அது படியே நாம செஞ்சுக்கிட்டே போக வேண்டியது தான். இப்ப அடுத்த படி நாம கீழே இறங்கணும். ஆனா எப்படி? நடந்து போனா மாலை ஆகிருமே?" என்று கவலைப்பட்டார் ஜோசியர். அவரது கேள்விக்கு பதிலே போல ஜீப்பின் ஹாரம் ஒலி கேட்டது. அவசரமாக துணி மூட்டையை தனது பைக்குள் பத்திரப்படுத்தினாள் திவ்யா. அவர்களை முந்தைய நாள் மலைக்கு மேல அழைத்து வந்த அதே ஜீப், அதே டிரைவர். கூடவே குருக்களும். இவர்களை உயிரோடு பார்த்ததும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர் ஜீப் டிரைவரும், குருக்களும்.

"தப்பா நினைக்காதீங்க சார்! நேத்து காத்து வீசுனப்போ, எங்களுக்கு என்ன ஆச்சுன்னே தெரியல்ல. வண்டியை எடுத்துட்டுக் கீழே போகணும்னு மட்டும் தான் தோணுச்சு. அதான்....நாங்க....போயிட்டோம். நல்லவேளை, உங்களுக்கு ஒண்ணும் ஆகலையே?" என்றார் ஜீப் டிரைவர்.

"ராத்திரியெல்லாம் எனக்குத் தூக்கமே இல்லை. இப்படி வந்தவாளை நிர்க்கதியா விட்டுட்டு வந்துட்டோமேன்னு மனசு உறுத்திண்டே இருந்தது. அதுவும் சின்னப் பொண்ணு வேற இருக்கா. அதான் காலையில விடிஞ்சதும் விடியாம ஜீப்பை எடுத்துண்டு வந்துட்டோம்." என்றார் குருக்கள்.

"எங்களுக்கு எதுவும் ஆகல. எல்லாமே அந்தப் பெருமாள் அருள் தான்."

"சரி ஜீப்புல ஏறுங்கோ. கீழே போயிடலாம்" என்றார் குருக்கள். அனைவரும் ஏறிக்கொள்ள ஜீப் விரைந்தது.
 

Srija Venkatesh

Member
Vannangal Writer
Messages
60
Reaction score
123
Points
18
அத்தியாயம் 26:

காலை நேரம் அதிக டிராஃபிக் இல்லாததால் எட்டு மணிக்கெல்லாம் அம்பாசமுத்திரம் வந்து, ஜோசியரின் வீட்டை அடைந்து விட்டார்கள். அனைவரிடமும் ஒரு பரபரப்புத் தொற்றிக் கொண்டிருந்தது. மலையிலிருந்து இறங்கும் போதே வெங்கியின் ஃபோனில் அழைப்பு வந்தது. ஆச்சரியத்தோடு எடுத்துப் பார்த்தவனுக்கு இனிய அதிர்ச்சி. கரியமாணிக்கம் தான் அழைத்தார். அவர் சொன்ன விஷயம் அதை விட இன்ப அதிர்ச்சியாக இருந்தது. அதை நண்பர்கள்படு பகிர்ந்து கொண்டான்.

"பாலா! கரியமாணிக்கம் சாருக்கும், திவ்யாவோட அம்மாவுக்கும் உடம்பு நல்லா ஆயிரிச்சாம். அவங்க இன்னைக்குக் காலையில நெல்லை வந்து இறங்கிட்டாங்களாம் டிரெயின்ல. சித்தரம்மாவால தான் இந்த அதிசயம் நடந்ததுன்னு சொல்றாரு கரியமாணிக்கம் சார்." என்றான்.

மகிழ்ச்சியில் பேச்சே வரவில்லை திவ்யாவுக்கும் பாலாவுக்கும்.

"உடனடியா அவங்களை கார் எடுத்துக்கிட்டு அம்பாசமுத்திரம் வரச் சொல்லுப்பா. எல்லாரும் ஒண்ணா காட்டுபங்களாவுக்குப் போயிரலாம்." என்றார் ஜோசியர். அவ்வாறே ஃபோன் செய்து சொல்லி விட்டான் வெங்கி.

"அம்மாவுக்கு சரியாயிரும்னு டாக்டரே சொல்லிட்டாரு. ஆனா கரியமாணிக்கம் சாருக்கு குணமாக பத்து நாளாகும்னாங்களே? ரெண்டே நாள்ல எப்படி சரியானாரு?" என்றான் பாலா.

"எல்லாம் அந்த இறைவன் கருணை தான். எப்படியோ, நம்ம பிரச்சனைகளுக்கு நல்ல முடிவு வரப்போகுது." என்றார் ஜோசியர்.

அவரது வீட்டுக்கு வந்து குளித்து முதல் வேலையாக பிரம்ம ராட்சசி அம்மன் பின்னால் இருந்த ஏட்டுக்கட்டைப் பிடித்து படித்தார் அவர்.

"பாலகனின் பெயர் கொண்டவன் இந்த ஏட்டைப் படிப்பான். அவன் ஐவரை அழைத்துக்கொண்டு காட்டு விடுதிக்குச் செல்ல வேண்டும். அங்கே இருக்கும் வாளையும் குத்தீட்டியையும் எடுத்த உடன் அவற்றை பூஜை செய்யும் பொறுப்பை ஒருவன் ஏற்பான். அப்போது நித்யமல்லியின் அட்டகாசம் அதிக்வரிக்கும். அதைத் தடுக்கவே பாலகனின் பெயர் கொண்டவனின் பணி. பிரம்ம ராட்சசி அம்மனுக்கும், வனப்பேச்சிக்கும் பூஜை செய்த பூக்களை நிறைய எடுத்துச் சென்று அவற்றை சுற்றிலும் பரப்ப வேண்டும். அதோடு என்ன ஆனாலும் கண்களைத் திறவாமல் ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரித்தபடி இருக்க வேண்டும். அப்போது தான் மற்றவர்களால் நித்யமல்லியை அழிக்க முடியும். கூடுமானவரை உயிர்ப்பலி ஏற்படுவதைத் தவிர்க்க முயல வேண்டும்.

படித்ததும் திவ்யாவுக்கு மீண்டும் வெங்கியின் உயிர்த்தியாகம் செய்ய வேண்டும் என்ற பெருமாளின் வார்த்தை நினைவு வர முகம் வாடியது. அவளைத் தேற்றினான் பாலா. ஜோசியரும் பெரிய பை நிறைய பூக்களை எடுத்துக்கொண்டார். அதோடு விபூதி, ருத்திராட்சம் என எடுத்துக்கொண்டு தயாரானார். வெங்கியும் மற்றவர்களும் தயாரானார்கள். பாலாவுக்குப் பேச்சே வரவில்லை. வெங்கி திட மனதோடு இருந்தான். ஒன்பது மணிக்கெல்லாம் சிவகாமி அம்மாளும், கரியமாணிக்கமும் வந்து விட்டனர். அவசரமாக அவர்கள் ஏறி வந்த காரிலேயே மீண்டும் பாவநசம் கிளம்பினார்கள்.

செல்லும் வழியில் கரியமாணிக்கத்துக்கும், சிவகாமி அம்மாளுக்கும் நடந்தது அத்தனையும் மெல்லிய குரலில் சொன்னபடி வந்தாள் திவ்யா. அதைக் கேட்க கேட்க அவர்களுக்கும் பரபரப்பானது. பத்தரை மணி அளவில் பாவநாசத்தை அடைந்தார்கள். மலைப்பாதையில் பயணித்து சொரிமுத்தையனார் கோயில் வரை சென்று பின்னர் அங்கிருந்து கால்நடையாக காட்டுபங்களாவுக்குச் செல்ல வேண்டும்.

"சாமி கும்பிட்டுப் போகலாம். பெரிய காரியத்துக்காக வந்திருக்கோம். யாருக்கும், எந்த பாதிப்பும் இல்லாம எல்லாத்தையும் அவங்க தான் நல்ல படியா நடத்திக்குடுக்கணும்." என்றார் கரியமாணிக்கம். அதன் படியே அனைவரும் கோயிலில் நுழைந்தார்கள். கூட்டமே இல்லை. வெங்கி, திவ்யா, பாலா இதற்கு முன்னால் அந்தக் கோயிலுக்கு வந்ததில்லை என்ற போதிலும் கூட அவர்களுக்கு பழைய நினைவுகள் வந்தன. நிலம் பட விழுந்து வணங்கினார்கள்.

"சொரிமுத்தையனாரே! சங்கிலி கருப்பா! இதுவரைக்கும் எங்களை எல்லா ஆபத்துல இருந்தும் காப்பாத்துனீங்க! இப்பவும் அதே மாதிரி காப்பாதுங்க. இன்னைக்கு பௌர்ணமி. இன்னைக்குத்தான் நித்யமல்லியை அழிக்கக் கடைசி நாள். எங்களால் ஆன எல்லா முயற்சிகளையும் நாங்க செய்வோம். அதை வெற்றிகரமா முடிச்சுக்குப்பா." என்று வேண்டினான் வெங்கி. அதே போல பாலாவும், திவ்யாவும் வேண்டிக்கொண்டனர். பிரம்ம ராட்சசி அம்மன் சன்னதியில் திவ்யா அமைதியாக அமர்ந்தாள்.

"தாயே! எப்பவோ எனக்கு நீ அம்புகளைக் கொடுத்ததா நினைவுக்கு வருது. அவற்றை நான் சரியாப் பயன்படுத்தாததால எங்க அண்ணன் உசிரும், ஆதித்தன் உசிரும் போயிடுச்சு. அதுக்குப்பிறகு வாழப் பிடிக்காம நானும் போயிட்டேன். ஆனா இந்த தடவை அப்படி ஆகக் கூடாது அம்மா. பல ஜென்மங்களா நாங்க காத்திருக்கோம். மனசறிஞ்சு யாருக்கும், எந்தத் தீங்கும் செய்யல்ல. நானும் வெங்கியும் கல்யாணம் செய்துக்கிட்டு இந்த உலகத்துல வாழணும்னு எனக்கு ரொம்ப ஆசையா இருக்கு. எங்க அண்ணன் பாலாவும் அவருக்கேத்த பொண்ணோட வாழ்க்கையை ரசிக்கணும். இதெல்லாம் நீ மனசு வெச்சா நடக்கும். எனக்கும், பாலாவுக்கும், வெங்கிக்கும் மனசுல தைரியத்தையும், உறுதியையும் குடு அம்மா!" என்று வேண்டினாள்.

அங்கிருந்து நடக்க ஆரம்பித்தார்கள்.

கன்னிமார் துறையிலிருந்து தான் வெங்கியும் பாலாவும் அந்த பங்காளாவைப் பார்த்தார்கள் என்பதால் அங்கு சென்றால் தான் அவர்களுக்கு வழி தெரியும் எனத் தோன்றியது. ஆகவே அனைவரும் கன்னிமார் துறையை அடைந்தார்கள். குறிப்பிட்ட இடத்தை அடைந்ததும் வெங்கிக்கு வழி நினைவுக்கு வரவே நடந்தார்கள். சென்ற முறை நடந்த போது எதுவும் தெரியாது. ஆகையால் தயக்கம் இருந்தாலும் பயமின்றி நடந்தார்கள். ஆனால் இம்முறை நாம் எங்கே செல்கிறோம்? அங்கே என்ன நடக்கலாம்? எனத் தெரிந்திருந்ததால் நடையில் தயக்கம் இருந்தது. ஆனால் மனம் உறுதியாக இருந்தது.

நடக்க நடக்க அந்த பங்களா அவர்கள் கண் முன்னால் விரிந்தது. வெங்கியும், பாலாவும் பார்த்தத்ற்கு முற்றிலும் எதிர்மாறாக இருர்ந்தது. முட்புதர்களும் பலவிதமான காட்டுச் செடிகளும் அடர்ந்து மிகவும் பாழடைந்து கிடந்தது அது. நம்பவே முடியாமல் பார்த்தனர். தங்களது உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டனர்.

"எல்லாமே அந்த நித்யமல்லியோட மாயம் தம்பி. உங்களுக்கு நல்லா நினைவு இருக்கா? இந்த இடம் தானா?" என்றார் ஜோசியர். தலையசைத்து ஆமோதித்தனர் இருவரும். அந்தப் பகல் நேரத்திலேயே பங்களா இருண்டு காணப்பட்டது. முதலிலேயே தயாராக வந்ததால், விளக்கு, எண்ணெய், மெழுகுவர்த்தி, டார்ச் லைட் என சகல ஏற்பாடுகளோடும் வந்திருந்தனர். ஜோசியர் முதலில் டார்ச் அடித்தபடி முன்னால் செல்ல, அவரைத் தொடர்ந்து கரியமாணிக்கமும், பின்னால் வெங்கி, பாலா திவ்யா கடைசியாக சிவகாமியம்மாள் என உள்ளே நுழைந்தனர். வெளியில் இருந்ததற்கும் உள்ளேயும் கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லை. சுத்தமாக காணப்பட்டது அந்த பங்களாவின் உட்புறம். அவர்கள் முன்ன்ம் வந்த போது எடுத்த பூஜாடிகள் கீழே கிடந்தன. சட்டென நினைவு வர அதை ஒட்டிய சுவரைப் பார்த்தான் வெங்கி. நீண்ட கூர்மையான வாள் திங்கிக்கொண்டிருந்தது. ஆனால் அது பளபளப்பே இல்லாமல் கருப்பாக இருந்தது.

"இந்த வாளா இருக்க முடியாது வெங்கி. ஏன்னா சாமி குடுத்த வாள் வெள்ளியால ஆனாதுன்னு சொன்னாங்க இல்ல? இது இப்படிக் க்ருத்துப் போயி இருக்கே?" என்றாள் திவ்யா.

அவளது குரல் மெலிதாக இருந்தாலும் பயங்கரமாக எதிரொலித்தது. அவளது குரல் ஒலித்ததும், ஏதோ ஒன்று அறுபடும் சத்தம் மிகவும் மெலிதாகக் கேட்டது. சிவகாமியம்மாள் பாய்ந்து திவ்யாவை இழுத்து தள்ளினாள். அவள் நின்றிருந்த இடத்தில் மிகச் சரியாக மேலே இருந்த சாண்டிலியர் விளக்கு, மிகவும் கனமானது அப்படியே விழுந்து நொறுங்கியது. நடுங்கிப் போயினர் அனைவரும்.

"இதுக்குத்தான் ஒரு தாய் கூட வரணும்னு வனப்பேச்சி நினைச்சிருக்கா போல! தாய்க்கு மட்டும் தான் தன் குழந்தையைக் காப்பாத்தணும் என்ற போது உள்ளுணர்வு நல்ல செயல்படும்." என்றார் ஜோசியர். உடல் நடுங்கியது திவ்யாவுக்கு. வெங்கிக்கோ பேச்சே வரவில்லை. ஒரு விநாடி நேரம் தாமதித்திருந்தால் கூட திவ்யா நிச்சயம் கூழாகி இருப்பாள்.

"இனிமே நாம ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும். சின்ன சத்தம் கேட்டாக் கூட நாம நிக்குற இடத்துல இருந்து கொஞ்சம் தள்ளிப் போயிரணும். என்ன?" என்றான் வெங்கி. அனைவரும் மௌனமாகத் தலையாட்டினர். இந்த பங்களாவில்லிருந்து உயிரோடு மீண்டு போவோம் என யாருக்கும் நம்பிக்கையே இல்லை.

ஓலையில் சொன்னபடியும், மலை நம்பி கோயிலில் கனவில் வந்த இறைவன் சொன்னபடியும் பூஜைக்கான களத்தை அமைத்தார்கள். விளக்கேற்றியதுமே அந்த இடமே பிரகாசமானதாக ஆகி விட்டது. மிகுந்த பய பக்தியோடு பாலாவின் தோள்கள் மேல் ஏறி அந்த வாளை எடுத்தான் வெங்கி. அதைத் தொட்டதுமே அவன் கையில் அது வந்து விட்டது. ஆனால் மயக்கம் வர சமாளித்துக்கொண்டான் வெங்கி. வாளின் நுனி தானாக சுழல்வதாகத் தோன்ற அதை இலகுவாகப் பிடித்தான். அவனது கைகளில்,சுழன்று மாடிப்படியில் ஒரு இடத்தைக் கட்டியது அதன் நுனி. அதன் நுனியிலும் மெல்லிய அதிர்வு தோன்றியது. வாளின் நுனி காட்டும் இடத்தில் தான் குத்தீட்டி இருக்க வேண்டும் என நினைத்து அந்தப் படியைக் கவனித்தனர். மரத்தால் செய்யப்பட்ட படி. வித்தியாசமாக எதுவும் தெரியவில்லை.

படியின் மேல், பக்கவாட்டில் என எல்லா இடத்திலும் தேடிப்பார்த்தனர். பலன் இல்லை. எங்கேயும் குத்தீட்டி இருந்ததற்கான அடையாளம் கூட இல்லை. ஒரு வேளை நித்யமல்லி இருந்த அறையில் இருக்கலாமோ? ஏனெனில் வாளின் நுனி காட்டும் திசையில் தான் அந்த அறையும் இருக்கிறது என எண்ணி அதை நோக்கி நடந்தான் பாலா. அறையில் நுழவு வாயிலை நெருங்கியதுமே பலமாகத் தூக்கியெறியப்பட்டான். நுழைவாயிலின் குறுக்கே நெருப்பால் கம்பிகள் போல அமைந்திருந்தன. திரும்பிப் பார்த்த போது ஜோசியரும், கரியமாணிக்கமும் பூஜையைத் தொடங்கியிருந்தனர். தீய சக்தி இருந்த அறையின் உள்ளே போக விடாமல் தடுத்தது வனப்பேச்சி தான் எனப் புரிந்து கொண்டனர்.

நேரமோ கடந்து கொண்டே இருந்தது. இன்னமும் குத்தீட்டியைக் கண்டு பிடிக்கமுடியவில்லை. அதைக் கண்டு பிடித்ததும் தான் மூன்று ஆயுதங்களுக்கும் பூஜை செய்து இரவுக்குள் நித்யமல்லியை வெங்கி வரவழைக்க வேண்டும். இன்னமும் குத்தீட்டிக் கண்ணில் படவே இல்லையே? எனக் கவலையோடு யோசித்தனனர். சட்டென ஏதோ பொறி தட்ட, திவ்யா வாள் நுனி சுட்டிக்காட்டிய படியை கூர்ந்து கவனித்தாள். பக்கவாட்டில் நின்று பார்த்தாள். கீழே இருந்து ஐந்தாவது படியைத்தான் அவள் கவனித்தாள். பக்கவாட்டில் பார்க்கும் போது படி செவ்வகமாகக் காட்சியளித்தது. அதன் நடுவே ஏதோ வரி போலத் தென்பட உற்றுப் பார்த்தாள். சதுர வடிவம் தெரிந்தது. அந்தச் சதுரத்தின் நடுவே நுண்ணிய கைப்பிடி ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. மரத்தின் நிறத்திலேயே அது இருந்ததால் கூர்ந்து கவனித்தாலன்றித் தெரியாது. உள்ளுணர்வு உந்த அந்தக் கைப்பிடியைப் பிடித்து எல்ல இழுத்தாள். ஒரு சிறிய அறை போல திறந்து கொண்டது. அதன் நடுவே மிகவும் மங்கிய ஈட்டி ஒன்று இருந்தது.

திவ்யா செய்வதை பார்த்துக்கொண்டே வந்த பாலாவும் வெங்கியும், ஈட்டியைக் கண்டதும் ஒரே நேரத்தில் பாய்ந்தார்கள். பாலா குத்தீட்டியை மெல்ல எடுத்தான். அதைத் தொடும் போதே அதிர்வுகள் தோன்றின அவன் உடலில்.

"தாயே! வனப்பேச்சி! நன்றியம்மா! நன்றி! தம்பிங்களா! அந்த மூணு ஆயுதத்தையும் கொண்டு வாங்க. கரியமாணிக்கம், நீங்க தான் அதுல வனப்பேச்சி கோயில்ல இருந்து நாம எடுத்துட்டு வந்த பிடி மண்ணைத் தடவி சுத்தம் செய்யணும். பாலா, திவ்யா, வெங்கி நீங்க மூணு பேரும் இப்படிக் கிழக்குப் பார்க்க உக்காந்து முதல்ல வனப்பேச்சியை தியானம் செய்யுங்க. பிறகு நான் சொன்னதும் வெங்கி நீ நித்யமல்லியை நினைக்கணும்." என்றார்.

மனதில் ஒரு விதமான பாரம் அழுத்த அவர் சொன்னபடியே செய்தனர் மூவரும். கரியமாணிக்கம் பிடிமண்ணை வாங்கி அந்த ஆயுதங்களை வணங்கிப் பின்னர் தேய்க்க ஆரம்பித்தார். அவர் தேய்க்கத் தேய்க்க கரகரவெனக் கண்களில் நீர் பெருகியது. பல காலம் முன்பாக ஆதித்தனது படையில் அவர் ஒரு சாதாரண வீரனாகப் பணியாற்றியது, அவனும் அவன் தங்கையும் விளையாடியது, தாய் உணவு ஊட்ட உண்டது எல்லாம் கண் முன்னே வந்து போயின. இறுதியாக சித்தரம்மா மூலமாக தன்னைக் கட்ட ஆதித்தன் முயற்சி செய்கிறான் எனத் தெரிந்ததும் ஆத்திரப்பட்ட நித்யமல்லி சாதாரண வீரனான தன்னை வசியம் செய்ய முயன்றது. சங்கிலி கருப்பனின் பக்தையான அவனது தங்கை அதற்குத் தடையாக இருக்க, அவளை சித்திரவதை செய்து கொன்றதும்மல்லாமல், தாய் தந்தையரையும் கொன்றது என எல்லாமே நினைவு வர அவரால் கண்களின் நீரை நிறுத்த முடியவில்லை.

சாகும் தருவாயில், எப்படியாவது நித்யமல்லியை அழிக்க உதவ வேண்டும் என தான் சங்கிலிகருப்பிடம் வேண்டிக்கொண்டதும் நினைவுக்க் வர சிலிர்த்தார் கரியமாணிக்கம். இம்முறை நான் ஏமாறக் கூடாது. விழிப்பாக இருந்து உதவ வேண்டும். எனத் தீர்மானித்துக்கொண்டார். அவர் அப்படி நினைத்த நொடி, வாள், குத்தீட்டி மற்றும் அம்புகள் அப்போது தான் புதிதாகச் செய்யப்பட்டவை போல பளபளவென ஆகின. ஆச்சரியத்தோடும், பக்தியோடும் அவற்றை ஜோசியரிடம் கொடுத்தார் கரியமாணிக்கம். சிவகாமியம்மாள் கோலம் வரைந்திருந்த இடத்தில் அவற்றை வைத்து பூஜை செய்தார். மறு புறம் வெங்கி கண்களை மூடி அமர்ந்திருந்தான். அவனைப் பார்க்கப் பார்க்க திவ்யாவுக்கு கவலையும், பயமும் வந்தன. பாலாவுக்கும் அதே நிலை தான்.

எப்படியாவது வெங்கியை காப்பாற்றி விட வேண்டும். அந்த முயற்சியில் என் உயிர் போனாலும் பரவாயில்லை என நினைத்துக்கொண்டாள் திவ்யா. பாலாவும் அதையே தான் நினைத்தான். ஆனால் வெங்கி சலனமே இல்லாமல் கண்களை மூடி வனப்பேச்சி, சங்கிலி கருப்பசாமி, சொரிமுத்தையனார் என நினைத்து தியானித்துக்கொண்டிருந்தான். பயமும், பதட்டமும் கலந்து சூழ்நிலை நிலவியது அங்கு. ஜோசியர் வனப்பேச்சி கோயிலிலிருந்து கொண்டு வந்திருந்த பூக்களையும், பிரம்ம ராட்சசி அம்மனுக்குப் பூஜித்த பூக்களையும் தயாராக வைத்துக்கொண்டார். விளக்கின் மேலும் எண்ணெய் விட்டு ஐந்து முகங்களையும் ஏற்றினார். கண்களை மூடி வனப்பேச்சியையும், அகத்தியரையும் தியானித்தார்.

"இப்போ வெங்கியை நித்யமல்லியைக் கூப்பிடப் போறாரு. மத்தவங்க நல்ல கவனமாக் கேட்டுக்கோங்க. வெங்கியைத் தவிர மத்தவங்க இந்தப் பூக்களுக்குப் பின்னால தான் உக்காரணும். இந்தப் பூக்களை மீறி நித்யமல்லி கண்ணுக்கு நாம தெரிய மாட்டோம். அவ கண்களுக்கு வெங்கி மட்டும் தான் தெரிவாரு. அது தான் நமக்குத் தேவை. அவ ஆசையோட வெங்கியைத் தேடி வரும் போது, நீங்க அவளை எப்படியாவது இந்த பூஜைக் களத்துக்கு மத்தியில கொண்டு வந்துடணும். அது அத்தனை சுலபம் இல்ல தான். ஆனா அதை செஞ்சே ஆகணும். நிலவு உச்சியைக் கடந்துட்டுதுன்னா இந்தப் பூக்களுக்கு சக்தி போயிரும். நித்யமல்லியோட சக்தி மிகவும் அதிகமா ஆயிரும். அதோட இந்த ஆயுதங்களும் அவ கைக்குப் போயிரும். அப்புறம் அவளை யாராலயும் அழிக்கவே முடியாது." என்றார்.

பயத்தில் அழுகையும், கலவரமும் போட்டி போட்டுக்கொண்டு வந்தன. சிறு இழை கூடப் பிசகாமல் செய்ய வேண்டும். சற்றே தவறினால் கூட மிகுந்த அபாயம். உயிருக்கும் உத்தரவாதமில்லை. ஜோசியர் தொடர்ந்தார்.

"நித்யமல்லி வந்த உடனே மத்தவங்க தயாரா இருக்கணும். வெங்கி அவளை பூஜைக் களத்துக்கு கொண்டு வந்ததும், கரியமாணிக்கம் நீங்களும், சிவகாமியம்மாவும் இதோ இந்தப் பிடி மண்ணையும், பூக்களையும் அவ மேல போட்டுருங்க. அப்ப அவளுக்கு சக்தி சில விநடிகளுக்குக் குறையும். அந்த நேரத்தைத்தான் திவ்யா நீ பயன்படுத்திக்கணும். என்ன செய்யணும்னு உனக்குத் தெரியும். அவளைத் தொடர்ந்து பாலாவும் வெங்கியும் மலை நம்பி கனவுல சொன்னதை அப்படியே செஞ்சுட்டாங்கன்னா, நமக்கு வெற்றி தான்."

பேசியவர் சற்றே நிறுத்தி விட்டு அனைவரையும் நன்றாக ஒரு முறை பார்த்தார். மூச்சை இழுத்து விட்டவர் மேலும் தொடர்ந்தார்.

"நாம எல்லாருமே ரொம்பவும் எச்சரிகையோட இருப்போம். இருந்தாலும் ஒரு வேளை பெருமாள் சொன்னா மாதிரி வெங்கி உயிர்த்தியாகம் செய்ய நேர்ந்தால் மத்தவங்க தயங்காம நித்யமல்லியை அழிச்சுரணும். கவனச் சிதறல் இருக்கவே கூடாது. குறிப்பா திவ்யாவும், பாலாவும் இதை நினைவு வெச்சுக்கிட்டா நல்லது." என்றார். பேசும் போதே அவர் குரல் கம்மியது.

"வெங்கியை வனப்பேச்சி காப்பாற்றுவாள். அதையும் மீறி நித்யமல்லி ஏதேனும் தீங்கு விளைவித்தால், முதலில் அவளை அழித்து விட வேண்டும். பிறகு நானும் இந்த உலகத்தில் வாழ மாட்டேன். இந்த முறையும் என்னால் வெங்கியோடு இணைய முடியாமல் போனாலும், நான் அவனுக்காகக் காத்திருப்பேன்." என்று எண்ணிக் கொண்டாள் திவ்யா. அவளது மனம் உறுதிப்பட்டது. ஜோசியர் சொன்னபடி அனைவரும் அவரருக்கான இடங்களில் ஆயுதங்களோடு அமர்ந்து கொண்டனர். ஜொசியர் ஜாடை காட்ட, வெங்கி கண்களை மூடி நித்யமல்லியை அழைக்க ஆரம்பித்தான்.

சில விநாடிகளியயே மெல்லிய குளிர் காற்று வீசத் தொடங்கி அதுவே மேகமாக அடிக்கத் ஆரம்பித்தது. வானத்தில் முழு நிலவு மேலே மேலே வந்து கொண்டிருந்தது.
 

Srija Venkatesh

Member
Vannangal Writer
Messages
60
Reaction score
123
Points
18
அத்தியாயம் 30:

காட்டு பங்களாவுக்குள்ளும் சரி, வெளியிலும் சரி இறுக்கமான சூழ்நிலை நிலவியது. வெங்கி மனதில் நித்யமல்லியை நினைக்க நினைக்க காற்றின் வேகம் அதிகரித்தது. ஆனாலும் மற்றவர்களுக்கு பயத்திலும் பதட்டத்திலும் வியர்வை அரும்பியது. வெங்கி கண்களைத் திறக்கவே இல்லை. திவ்யாவின் இதயம் தாறுமாறாக அடித்துக்கொண்டது. ஜோசியரும் கரியமாணிக்கமும் பூஜையை நிறுத்தி வைத்திருந்தார்கள். பூஜை செய்யும் போது நித்யமல்லி வர மாட்டாள் என அவர்களுக்குத் தெரியும்.ஆனால் கண்களை மூடி ஐந்தெழுத்து மந்திரத்தை மனதுக்குள் உச்சரித்தபடி இருந்தனர். கவனமாக வனப்பேச்சி அம்மனின் கோயிலில் பூஜித்த பூக்களை தங்களைச் சுற்றிப் பரப்பினர். காற்றின் வேகம் விநாடிக்கு விநாடி கூடிக்கொண்டே வந்தது. ஒரு கட்டத்தில் பங்களவின் சுவர்கள் இந்தப் பேய்க்காற்றைத் தாங்குமா? என சந்தேகம் வந்தது. "வனப்பேச்சியம்மா அப்படி எதுவும் நடக்காமல் காப்பாற்று" என வேண்டிக்கொண்டனர். நேரம் ஆக ஆக மற்றொரு கவலை அவர்களை சூழ்ந்து கொண்டது. முழு நிலவு வானத்தின் உச்சிக்கு வருவதற்கு முன் நித்யமல்லி வர வேண்டுமே? இல்லையென்றால் இது அத்தனையுமே பயனற்றுப் போகுமே?எனக் கலங்கினர். வெங்கியின் கவனம் கொஞ்சம் கூடச் சிதறவில்லை. சட்டென காற்று அப்படியே நின்று போனது. வெளியில் ஏதோ ஒரு மரம் முறிந்து விழும் சத்தம்.

"இது தான்....இது தான் அந்த நொடி. நித்யமல்லி வரப்போகிறாள். முதலில் நான் தான் செயலாற்ற வேண்டும். என்னையும் என் காதலையும் பிரித்த பாதகி அவள். ஆதித்தனோடு என்னை இணைய விடாமல் தடுத்ததும் இல்லாமல், என் அண்ணனாக இருந்த வேங்கையனையும், காதலன் ஆதித்தனையும் துடிக்கத் துடிக்கக் கொன்ற கொலைகாரி வரப்போகிறாள். சென்ற முறை நாங்கள் செய்த தவறுகள் என்னென்ன எனத் தெரிந்து விட்டது. பல காலம் காத்திருந்து விட்டேன். இம்முறையும் நான் தோற்க மாட்டேன். வெங்கியின் உயிரையும், பாலாவின் உயிரையும் காப்பாற்றியே தீருவேன். என் உயிர் போனாலும் பரவாயில்லை." எனத் தீர்மானத்தோடு தயாராக நின்றிருந்தாள் திவ்யா.

அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கும் போதே திடீரென அந்தக் காட்சி அவர்கள் கண் முன்னால் விரிந்தது. வெங்கி அமர்ந்திருந்த இடத்தைச் சுற்றிலும் அழகான மண்டபம் போல மாறியது. தூண்களில் படர்ந்திருந்த மலர்க்கொடிகள் வாசத்தை அள்ளி வீசின. இப்போது வெங்கி மண்டபத்தின் மையத்தில் அமர்ந்திருந்தான். திவ்யா பாலாவைப் பார்த்தாள். பொறு எனக் கை காட்டினான். மலர்க்கொடிகள் மெல்லிய காற்றில் ஆடின. அப்போது அழகே உருவான ஒரு இளம்பெண். தங்க நிறத்தில் பழங்கால முறைப்படி உடையணிந்து, பூச்சூடி அன்னம் போல நடந்து வந்தாள். அவளுக்குப் பின்னால் மற்றொரு பெண் சற்றே குறைந்த வயதுள்ளவள் அந்தப் பெண்ணைத் தொடர்ந்தாள். முதலில் வந்தவள் நித்யமல்லி, பின்னால் வருபவள் பொன்வண்டு எனவும் புரிந்து கொண்டனர். நித்யமல்லி மட்டுமே தான் வருவாள் என எண்ணித்தானே திட்டாங்கள் வகுத்தார்கள்? இப்போது பொன்வண்டும் கூடவே வருகிறாளே? அவளை எப்படி அழிக்க? அல்லது அப்புறப்படுத்த? இதைப் பற்றி நாம் யோசிக்கவே இல்லையே? என கலவரத்தில் ஆழ்ந்தார்கள். ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள். ஜோசியர் வானத்தை நோக்கிக் கை காட்டி எல்லாம் அவன் செயல் எனச் சொல்லாமல் சொன்னார். பாலாவுக்கும், திவ்யாவுக்கும் பயமும் பதட்டமும் அதிகரித்தன. அவர்களது இதயத் துடிப்பு வெளியிலேயே கேட்கும் போல.

வெங்கிக்கும் என்ன தோன்றியதோ தெரியவில்லை. அவன் கண்களைத் திறந்தான். எதிரில் நின்றிருந்த அழகின் உருவத்தைப் பார்த்ததும் அவன் மனம் தடுமாறியது. இவளைப் போல அழகான பெண்ணை இனிமேல் பார்க்கவே முடியாது என எண்ணி அவளைப் பார்த்தபடியே நின்றான்.

"என்ன? அப்படி பார்க்குற? இதுக்கு முன்னால நீ என்னைப் பார்த்ததே இல்லியா என்ன?" என்றாள் நித்யமல்லி.

"இத்தனை அழகா உன்னைப் பார்த்ததே இல்லியே? இன்னைக்கு நீ ரொம்ப ரொம்ப அழகா இருக்கியே? உன்னைப் பார்த்துக்கிட்டே இருந்தாப் போதும் போல இருக்கு!" என்றான் வெங்கி மெல்லிய குரலில். கேட்டுக்கொண்டிருந்தவர்களுக்குத் தூக்கி வாரிப் போட்டது. "ஐயையோ! இவன் என்ன செய்கிறான்? நித்யமல்லியை மயக்கி அவளை பூஜை களத்திற்குக் கூட்டி வருவதற்கு பதில் இவன் மயங்கி விட்டான் போலயே? என எண்ணியவர்களுக்கு வியர்வை ஆறாகப் பெருகியது. ஜோசியர் கண்களில் கலக்கத்துடன் கரியமாணிக்கத்தை ஏறிட்டார். அவரும் கைகளை உதறினார். தான் தான் ஏதாவது செய்ய வேண்டும். எனத் தீர்மானித்தாள் திவ்யா. எப்படியாவது வெங்கியை அந்த பயங்கரியின் பிடியிலிருந்து மீட்டாக வேண்டும். இல்லையென்றால் பெரும் அனர்த்தங்கள் விளையும். வனப்பேச்சியம்மன் என்ன சொன்னாள்? உனது அன்பும், காதலும் தான் இவர்களைக் காப்பாற்றும் ஆயுதம் என்றாளே? அப்படியானால் என் காதல்! ஆம் அது தான் நித்யமல்லியின் மாயங்களை விடச் சக்தி வாய்ந்தது. கண்களை இறுக மூடி வனப்பேச்சியை தியானித்தாள். ஏதோ தோன்ற, குனிந்து காய்ந்த பூக்களில் ஒன்றை எடுத்தாள். தன் நெற்றியில் வைத்து வனப்பேச்சி, சங்கிலி கருப்பசாமி, சொரிமுத்தையனாரை நன்றாக தியானித்து அதை வெங்கியின் மேல் எறிந்தாள். அந்தப் பூ காற்றில் அம்பு போல விரைந்தது. நேராக வெங்கியின் நெஞ்சில் விழுந்தது. அப்படி விழும்போது சிறு நெருப்புப் பொறி தோன்றி அவனது நெஞ்சைச் சுட்டது. அந்தச் சூடு, பூவின் ஸ்பரிசம் இரண்டும் சேர வெங்கிக்கு சட்டென தன் நினைவு வந்தது.

வெங்கியின் மேல் பூ விழுந்த அதே விநாடி நித்யமல்லியும் பொன்வண்டும் எச்சரிக்கையாவது நன்றாகவே தெரிந்தது. "இவனை நம்பாதேன்னு சொன்னேன். கேட்டியா நீ? இப்போ யாரையோ கூடக் கூட்டிக்கிட்டு வந்திருக்கான். அது அவன் காதலியாகக் கூட இருக்கலாம். இன்னைக்குப் பௌர்ணமி மறந்துட்டியா நீ?" எனக் கத்தினாள் பொன்வண்டு. வெங்கியைத் தொடப்போன தன் கைகளை உதறிக்கொண்டாள் நித்யமல்லி.

"யாரைக் கூட்டிக்கிட்டு வந்திருக்கே?" என்றாள் கடுமையாக. இப்போது அவளது அழகு பல மடங்கு அதிகமாகியது. ஆனால் அந்த அழகு மனதுக்கு அமைதியோ, நிம்மதியோ தரும் அழகல்ல. பயத்தைத் தூண்டும் அழகு. பார்த்த மாத்திரத்திலேயே இதயத்தை நிற்கச் செய்யும் பயங்கர அழகு.

"பதில் சொல்லு வெங்கி! என்னை நீ கூப்பிட்டது, என் மேல உள்ள காதலால தானே?" என்றாள் நித்யமல்லி மீண்டும்.

சட்டென சுதாரித்தான் வெங்கி. பதில் சொல்ல அதிக நேரம் எடுத்துக்கொண்டால் அவளுக்கு சந்தேகம் வரும். அப்படி வந்தால் எல்லாம் வீண் தான். மூளையைக் கசக்கிக் கொண்டான்.

"நான் காதலால கூப்பிட்டேனா இல்லையான்றது முக்கியமல்லி மல்லி! நீ என் மேல காதலோட இருக்கியா? அதான் எனக்குத் தெரிய வேண்டியது" என்றான்.

நித்யமல்லியின் உதடுகள் சிரிப்பில் விரிந்தன.

"என்னை மல்லின்னு நீ இது வரை கூப்பிட்டதே இல்லையே? ஆச்சரியமாத்தான் இருக்கு. நானும் உன் மேல காதலோட தான் இருக்கேன் வெங்கி!" என்றாள் மெல்ல.

"நித்யமல்லி! நீ என்ன சொல்ற? இவனோட சேர்ந்ததும் இவனைக் கொன்னுடணும்னு சொன்னியே? இப்ப இப்படிப் பேசுற?" என்றாள் பொன்வண்டு.

பொன்வண்டின் பேச்சைக் கேட்டதும் ஆத்திரத்தில் நித்யமல்லியின் முகம் கருநீலமாக மாறி கொடூரமானது. அவளது கரங்கள் நீண்டன. அதில் நகங்கள் தொங்கிக்கொண்டிருக்க தன்னை நோக்கி நீண்ட கைகளை பயத்தோடு பார்த்தாள் பொன்வண்டு.

"நான் உனக்கு நல்லது தான் சொல்றேன் மல்லி! என்னையே அழிக்கப் பார்க்குறியே?" எனப் பேசியபடியே பயந்து பின் வாங்கினாள் பொன்வண்டு. "இவன் உன்னை ஏமாத்தப் பாக்குறான்! இவன் மனுஷன். அதை நீ மறந்துடாதே! என்ன தான் நீ மனுஷ உருவுல இருந்தாலும் நீ மனுசி இல்ல. எட்டு கிரகங்கள் சேர்ந்து உருவாக்கின சக்தி நீ! இவனோட காதல்ல நீ உன்னையே மறந்துட்ட! நீ எதுக்காக பூமிக்கு வந்தேன்றதையும் மறந்துட்ட. நான் மனுசியா இருந்தப்ப, என்னை நீ சித்திரவதை செஞ்சு கொன்ன! ஆனா நான் அதைக்கூட நினைக்காம, உனக்கு எல்லா வகையிலயும் உதவியா இருந்தேன். ஆனா இவன்? இவன் 500 ஆண்டுகளுக்கு முன்னால உன்னைக் கட்டுனான். அதை மறந்துட்டியா நீ? 500 வருசம், எப்படி தவிச்சோம் நாம? மறக்காதே நித்யமல்லி!" என்றாள்.

பொன்வண்டு பேசப் பேச நித்யமல்லியின் முகம் சாதாரணமானது. அவளது கோபம் தணிந்து விட்டது. பொன்வண்டு தைரியமாக அருகில் வந்தாள்.

"வெங்கி! உண்மையைச் சொல்லு, இங்க யாரைக் கூட்டிக்கிட்டு வந்திருக்க?" என்றாள் நித்யமல்லி.

"மல்லி! அங்க பாரு! சுவத்துல வாளைக் காணோம்!" கத்தினாள் பொன்வண்டு. எதிர்ப்புறம் இருந்த சுவரைப் பார்க்க அதில் வாள் இல்லை. அவளது பார்வை படியின் அருகே போனது. அங்கும் குத்தீட்டி இல்லை என்பதை உணர்ந்து கொண்டாள் நித்யமல்லி. ஆத்திரம், குரோதம் எல்லாம் சேர வெங்கியைப் பார்த்தாள். அவளது பார்வையிலேயே வெங்கி தத்தளிக்க ஆரம்பித்தான். அவனால் நிற்கவே முடியவில்லை. அப்படியே மண்டியிட்டு அமர்ந்தான். அவனது மூக்கிலிருந்து மெல்லிய கோடாக ரத்தம் வழிய ஆரம்பித்தது. பார்த்துக்கொண்டிந்தவர்களுக்கு உயிரே போவது போல ஆனது. இனியும் தாமதித்தால் வெங்கியை மீண்டும் இழந்து விடுவோம் என எண்ணி வண்டிமறிச்சியம்மன் கொடுத்த அம்புகளை மின்னல் வேகத்தில் எடுத்தாள் திவ்யா. இப்போது மண்டபமோ, அதில் இருந்த பூங்கோடிகளோ எதுவுமே இல்லை. பாழடைந்த அந்த பங்களாவின் கூடத்தில் வெங்கி மண்டியிட்டு அமர்ந்திருந்தான். அவனது உதட்டோரமும் இப்போது ரத்தக்கசிவு. பாலாவும் குத்தீட்டியை எடுத்தபடி பாயத் தயாரானான். அவனை தன் கைகளால் அழுத்தினாள் திவ்யா. அவளது பலம் கண்டு பிரமித்துப் போனான் பாலா.

விநாடிக்கும் குறைவான நேரத்தில் கையில் அம்புகளோடு பாய்ந்து நித்யமல்லியை நெருங்கினாள் திவ்யா. அதைப் பார்த்து விட்ட பொன்வண்டு வீறிட்டுக் கத்தினாள். நித்யமல்லி திரும்ப அவளது கண்களில் திவ்யா தென்பட்டாள். அவளது முகம் இப்போது அழகெல்லாம் போய், பயங்கரமாக மட்டுமே காட்சியளித்தது. சிவப்பு, நீலம், ஊதா என பல வண்ணங்கள் அவளது கண்களில் பிரதிபலித்தன. கண்கள் மனிதக் கண்களைப் போல இல்லாமல் வட்டமாக ஒரே நிறத்தில் காட்சியளித்தன. நடுங்கிப் போனாள் திவ்யா. கை கால்கள் செயலிழந்தாற் போலத் தோன்றியது. ஓங்கிய கைகளில் பலமே இல்லை போலத் தொய்ந்தன.

"நீயா? நீயும் வந்திட்டியா? உன் காதலனைக் காப்பாத்த முடியாது உன்னால. அவன் துடிச்சு துடிச்சுச் சாகப்போறான். அதை நல்லா வேடிக்கை பாரு! இன்னமும் நிலா உச்சிக்கு வரதுக்கு பத்து நிமிசம் கூட இல்ல. உன்னால என்ன செய்ய முடியும்?" என்றாள் நித்யமல்லி. அவளது குரல் இடி போலக் கேட்டது.

ஜோசியரும், கரியமாணிக்கமும் பூஜையைத் தொடங்கி விட்டனர். பாலாவோ வெங்கியின் அருகே செல்லத் துடித்துக்கொண்டிருந்தான். ஆனால் இப்போது அவன் போனால் அவனது உயிரும் போய் விடும் என்றும், வனப்பேச்சி சொன்னதை நினைவு படுத்திக்கொண்டு வெங்கி உயிர்த்தியாகம் செய்வதை நம்மால் தடுக்க முடியாது என்றும் சொல்லி அவனை தடுத்து விட்டனர். கண்களிலிருந்து கண்ணீர் கரகரவென வழிய குத்தீட்டியை பிடித்தபடி நின்றிருந்தான் பாலா. பூஜை செய்ய ஆரம்பித்ததும் நித்யமல்லி பதட்டமானாள். "என்னையா அழிக்கப் பாக்குறீங்க?" எனக் கத்திக்கொண்டு திவ்யாவின் மேல் பாய்ந்தாள். அதுவரையில் பயந்த்தில் உறைந்து போய் இருந்த திவ்யாவுக்கு உயிர் வந்தது போல ஆனது.

காதலன் துடித்து இறக்கப் போகிறான் என்றதும் எங்கிருந்தோ பலம் வந்து புகுந்து கொள்ள "உன்னை விட மாட்டேண்டி! இந்த நாளுக்காக பல நூறு ஆண்டுகளாக் காத்துக்கிட்டு இருக்கேன். இப்பவும் ஏமாற நான் பழைய செம்மலர் இல்ல." எனக் கத்தினாள் திவ்யா.

பொன்வண்டும் திவ்யாவை நோக்கிப் பாய, மறுபுறம் நித்யமல்லி பாய்ந்தாள். தன்னை நிதானப்படுத்திக்கொண்டாள் திவ்யா. "வெங்கியையும், மற்றவர்களையும் காப்பாற்ற என்னால் மட்டுமே முடியும். இப்போது நான் பதறினால் காரியம் கெட்டுப் போகும். தாயே வனப்பேச்சி எனக்கு பலத்தைக் கொடு என வேண்டிக்கொண்டாள். தனது ஒரு கரங்களிலும் இரு அம்புகளை எடுத்துக்கொண்டாள். வலப்புறம் நித்யமல்லியும், இடப்புறமிருந்தும் பொன்வண்டும் வந்து கொண்டிருந்தனர். இருவரது கண்களும் இவளையே வெறித்துப் பார்த்தபடி நெருங்கின. கைகள் நடுங்க இரு அம்புகளையும் ஒரே நேரத்தில் நித்யமல்லியின் வலக்கணையும், பொன்வண்டின் இடக்கண்ணையும் குத்தினாள் திவ்யா. ஓனெற பேரிறைச்சல் கேட்டது. தனது கண்களைப் பொத்திக்கொண்டு தள்ளாடியபடி திவ்யாவை மீண்டும் நெருங்கினர் இருவரும். இப்போது சற்றே தைரியம் பெற்றவளாக நின்றிருந்த திவ்யா, குறி பார்த்து மற்ற இரு கண்களையும் குத்த தடுமாறினார்கள். இப்போது பாலா, ஜோசியர், கரியமாணிக்கம் மூவரும் பாய்ந்து வந்து அவளை பூஜைக் களத்தில் அமர்த்தினர். பொன்வண்டால் நகரவே முடியவில்லை.

"வெங்கி! வெங்கிக்கு என்ன ஆச்சுன்னு பாருங்க" என்று கத்தினாள் திவ்யா. அவளது கரம் நித்யமல்லியை இறுகப்பற்றியிருந்தது. ஓடினர் மூவரும். வெங்கியின் நிலை மோசமாகத்தான் இருந்தது. மூச்சு விடவே மிகவும் சிரமப்பட்டான். கண்களின் ஓரமும் ஒரு ரத்தத்துளி எட்டிப் பார்த்தது. ஓவெனக் கத்தினான் பாலா. "வெங்கி! தைரியமா இருடா! உனக்கு எதுவும் ஆகாது." என்று நண்பனை அணைத்துக்கொண்டான். கரியமாணிக்கம் ஓடிப்போய், காய்ந்த பூக்களில் சிலவற்றை எடுத்து வந்து அவது வாய், காது, மூக்கு மற்றும் கண்களில் வைத்தார். பூவைத்ததும் ரத்தம் நின்று விட்டது. ஆனாலும் மிகவும் பலவீனமாக உணர்ந்தான் வெங்கி. அவனால் வாளை எடுத்து நித்யமல்லியை வெட்ட முடியுமா? என்பதே சந்தேகமாக இருந்தது. கோயிலிருந்து கொண்டு வந்திருந்த தீர்த்ததை அவன் வாயில் புகட்டினார் கரியமாணிக்கம். மெல்ல மெல்ல இயல்புக்கு வந்தான்.

"வெங்கி! சீக்கிரம் வா! இவளை என்னால சமாளிக்க முடியல்ல" என திவ்யா கத்தவும் முழு தெம்பும் வந்தவனாக ஓடினான் வெங்கி. அவனைத் தொடர்ந்தான் பாலா. கரிய மாணிக்கமும் , ஜோசியரும் பூஜையைத் தொடர ஓடினார்கள். நித்யமல்லி பயங்கரமாகத் திமிறிக் கொண்டிருந்தாள். அவளது வாயிலிருந்து விசித்திரமான பயங்கர சத்தங்கள் வந்தன. திவ்யா விநாடிக்கு விநாடி சோர்ந்து போய்க் கொண்டிருந்தாள். நிலவு வானத்தின் உச்சியை நெருங்கிக் கொண்டிருந்தது.

வெங்கி யோசிக்காமல் அவளது நெஞ்சில் வாளை இறக்க, அதே நேரம் பாலா அவளது கால்களை துண்டித்தான். நிதயல்லிக்கு எங்கெல்லாம் காயம் பட்டதோ? அதே இடங்களில் பொன்வண்டுக்கும் காயம் ஏற்படக் கூச்சலிட்டார்கள். தயங்காமல் அவளை மீண்டும் வெட்டினான் வெங்கி. பாலாவும் தொடர்ந்தான். அதே நேரம் ஜோசியர், கரியமாணிக்கம் மற்றும் சிவகாமியம்மாள் மூவரும் பூஜித்த மலர்களையும், பிடிமண்ணையும் அவள் மேல் தூவினர். அடுத்த விநாடி அனைவரும் தூக்கியெறியப்பட்டனர். ஐஸ் போல குளிர்ந்த காற்று புயல் போல வீசியது. யார் யார் எங்கே தூக்கியெறியப்பட்டார்கள்? யாருக்கு என்ன ஆனது என தெரியவே இல்லை. கூடத்தில் கிழக்கு மூலையில் தூக்கியெறியப்பட்டான் வெங்கி. அவன் பார்த்துக்கொண்டிருக்கும் போதே புயற்காற்றின் நடுவே நித்யமல்லி கரகரவெனச் சுழன்றாள். அவள் கொலை செய்த அத்தனை உருவங்களும் கோர வடிவத்தில் தோன்றி மறைந்தன. அந்த ஐஸ் காற்றின் நடுவே பச்சை நிறமாக நெருப்பு எரிய அதில் கருகினாள் நித்யமல்லி. "விட மாட்டேன் வெங்கி!" என்பதே அவளது கடைசி வார்த்தையாக இருந்தது. அவளது உடல் கருகியதும் சட்டென எல்லாம் நின்று போயின.

முதலில் எழுந்து நின்றவன் வெங்கி தான். அனைவரும் பத்திரமாக இருக்கின்றனரா? குறிப்பாக திவ்யா மற்றும் பாலாவுக்கு என்ன ஆனதோ? என்றகவலை உந்தித்தள்ள தூக்கியெறியப்பட்ட இடத்திலிருந்து எழுந்து மெல்ல நடந்தான். முதலில் அவன் கண்ணில் பட்டது கரியமாணிக்கமும் ஜோசியரும். கூடத்திலிருந்து படிக்கட்டு செல்லும் வழியில் விழுந்து கிடந்தனர் இருவரும். மேலாகப் பார்த்தால் எந்த அடியும் இல்லை. ஆகையால் பார்வையை ஓட்டினான். தெற்கு மூலையில் பாலாவும், வடக்கு மூலையில் திவ்யாவும், சிவகாமியம்மாளும் சுருண்டு கிடந்தனர். பயம் நெஞ்சை அடைக்க மெல்ல நருங்கினான்.

"திவ்யா! பாலா" என்றுக் குரல் கொடுக்க மெல்லிய அசைவுகள் தோன்றின. மனம் நிம்மதியாக தானாகக் கண்களில் இருந்து கண்ணீர் வெளி வந்தது. சில நிமிடங்களில் திவ்யா, பாலா, ஜோசியர் கரியமாணிக்கம் என அனைவரும் எழுந்து விட்டனர். வெங்கியை எந்த சேதமும் இல்லாமல் பார்க்கப் பார்க்க அவங்களுக்கு மகிழ்ச்சியில் பேச்சே வரவில்லை. சுற்றுமுற்றும் பார்த்தனர். பொன்வண்டு அமர்ந்திருந்த இடத்திலாவது சாம்பல் மிஞ்சியிருந்தது. ஆனால் நித்யமல்லி இருந்த இடத்தில் அது கூட இல்லை.

"வெங்கி! உனக்கு ஒண்ணும் இல்லையே? நான் ரொம்ப பயந்து போயிட்டேன் தெரியுமா?" எனக் கேவினாள் திவ்யா. ஓடி வந்து நண்பனை அணைத்துக்கொண்டான் பாலா. "டேய்! என் உயிரே என் கையில இல்லடா! சரியான நேரத்துல திவ்யா உன்னைக் காப்பாத்துனா. இல்லைன்னா என்ன ஆகியிருக்கும்?" எனக் கண்ணீர் உகுத்தான் பாலா. ஜோசியரும், கரியமாணிக்கமும் கூட அவனைத் தட்டிக் கொடுத்தனர்.

"நான் நல்லா இருக்கேன். ஆனா நாம எச்சரிகையா இருக்குறது நல்லது! பாருங்க! நித்யமல்லி இருந்த இடத்துல எதுவுமே இல்ல. ஆனா பொன்வண்டோட சாம்பல் இருக்கு." என்றான். அனைவருக்கும் வெங்கி சொல்வது சரியென்றே பட்டது. அறைகுறையாக செய்து அதனால் மீண்டும் நித்யமல்லிக்கு உயிர் வந்து விட்டால் என்ன செய்ய? எனக் கவலை கொண்டனர். வெங்கியும் திவ்யாவும் பூஜைக் களத்தில் நித்யமல்லி அமர்ந்திருந்த இடத்தை உற்றுக் கவனித்தனர். சாம்பலோ, சிறு எலும்புத்துண்டோ இப்படி ஏதேனும் இருக்குமாவெனத் தேடினர். எதுவும் இல்லை. ஆனால் ஊன்றிப் பார்த்ததில் உருளை வடிவத்தில் அதுவும் 7 உருளைகள் நடுவில் ஒரு பெரிய உருளையோடு இணைக்கப்பட்டு காணப்பட்டது.

"நித்யமல்லியோட மிஞ்சியது இது ஒண்ணு தான். எட்டு கிரகங்கள் சேர்ந்து அவளை உருவாக்குனதால இப்படி இருக்கு போல." என்றார் ஜோசியர். அதை என்ன செய்வது? எனத் தெரியவில்லை. தொடவும் பயமாக இருந்தது. வெங்கி முன்னால் போய் மெல்ல அதைக் கையில் எடுத்தான். எதுவும் ஆகவில்லை. தைரியமாக மற்றவர்கள் அவன் அருகில் வந்தார்கள். அது மரத்தாலோ, உலோகத்தாலோ இல்லை பிளாஸ்டிக்காலோ செய்யப்பட்டாற் போல இல்லை. மிகவும் வித்தியாசமான பச்சையும், நீலமும் கலந்த ஒரு வகைக் கற்களால் செய்யப்பட்டது போல இருந்தது. மெல்லிய சூடு இருந்தது அதில். இதை இப்படியே விட்டுப் போகக் கூடாது எனத் தோன்றியது.

"ஜோசியரே! இதையும், பொன்வண்டோட சாம்பலையும் நேரா களக்காடு பெருமாள் கோயிலுக்குக் கொண்டு போயிருவோம். அங்க இருக்குற தீர்த்ததுல இதை கரைக்க முயற்சி செய்வோம்." என்றான் வெங்கி.

"அதுக்குக் களக்காடு மலை வரை போக வேண்டாம்ப்பா! நான் கையோட பெரிய கூஜாவுல தீர்த்தத்தை எடுத்து வெச்சுக்கிட்டேன். அதுலயே கரைச்சுப் பார்க்கலாம்." என்றார் ஜோசியர். அவரது சமயோஜித புத்தியைப் பாராட்டினர் அனைவரும். சிவகாமி அம்மாள் கொண்டு வந்திருந்த சற்றே பெரிய பீளாஸ்டிக் டப்பில் அந்த தீர்த்தத்தை ஊற்றினார்கள். அதை பூஜையின் களத்தில் வைத்து முதலில் அந்த உருளைகளைப் போட்டான். நுரைத்து வந்தது. தொடர்ந்து பொன்வண்டின் சாம்பலையும் போட சிவப்பு நிறத்தில் மாறியது நீர். பார்த்துக்கொண்டிருக்கும் போதே உருளைகள் ஒவ்வொன்றாக கரைய ஆரம்பித்தன. ஒவ்வொரு உருளை கரையும் போதும் வேறு வேறு நிறங்கள் தோன்றி மறைந்தன. இறுதியில் பெரிதாக இருந்த உருளைக் கரைந்தது. நல்ல கரு நீல நிறத்தில் தண்ணீர் மாறி பின்னர் சில நிமிடங்களில் தெளிவான தண்ணீராக மாறியது. அந்தத் தண்ணீரை ஆற்றிலோ அல்லது கடலிலோ கலந்து விடலாம் என அபிப்பிராயப்பட்டனர் கரியமாணிக்கமும் ஜோசியரும். ஆனால் அதற்கு இஷ்டமில்லை வெங்கிக்கு. அதனை முன்னால் பூக்கள் இருந்த ஜாடியில் ஊற்றினான். அதன் மேல் பூஜைப் பூக்களையும் போட ஒரு நொடிக்குள் அத்தனை நீரையும் இழுத்துக்கொண்டன பூக்கள். ஆனால் பூக்களுக்கு எதுவும் ஆகவில்லை. முன்னை விடப் போலிவாக விளங்கின. நித்யமல்லியை ஒரேடியாக அழித்தாயிற்று என்ற நிம்மதி அப்போது தான் பிறந்தது அவர்களுக்கு. ஓவெனக் உற்சாகக் கூச்சல் எழுப்பியபடி பாலா, திவ்யா வெங்கி ஒருவரை ஒருவர் அணைத்துக்கொண்டனர். சிவகாமியம்மாள் முறைத்ததைக் கூட லட்சியம் செய்யவில்லை. ஆனந்தக் கூச்சலும் மகிழ்ச்சியுமாக மீண்டும் கன்னிமார் துறை வந்து சேர்ந்தனர். கார், அதை ஓட்டி வந்த டிரைவர் இவர்களைப் பார்த்ததும் மீண்டும் மாடர்ன் உலகத்து வந்து விட்டோம் எனக் கத்தினர் நண்பர்கள் மூவரும். ஜோசியரும், கரியமாணிக்கமும் ஃபோன் செய்து சாமிக்கண்ணு சித்தரிடம் நித்யமல்லியை அழித்தாயிற்று எனச் சொல்ல அவரும் மகிழ்ச்சியானார். சித்தரம்மாவும் கன்னிமார் துறையில் காத்திருந்தார். அவரிடம் ஆசி வாங்கிக்கொண்டுக் கிளம்பினர்.

திவ்யாவின் வீட்டில் வெங்கியின் அம்மா, அப்பா மற்றும் பாலா வீற்றிருந்தனர். வெங்கிக்கும், திவ்யாவுக்கு கல்யாணம் பேசி முடிக்கவே அவர்கள் வந்திருந்தனர். திவ்யாவின் அம்மாவுக்கு பரிபூரண சம்மதம். வெங்கியின் குடும்பம் பண்பான குடும்பமாக இருக்கவே மகிழ்ச்சியோடு தட்டு மாற்றிக்கொண்டார்கள். சிவகாமியம்மாளுக்கு பாலாவைப் பார்த்ததும் ஏதோ யோசனை பிறக்க ஃபோன் செய்து தன் தங்கையை வரவழைத்தாள். கூடவே நல்ல லட்சணமான குடும்பப்பாங்கான பெண் வந்தாள். அவளைப் பார்த்ததும் பாலாவின் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்பு போட்டாற் போல வெளிச்சம்.

"இவ பேரு, கார்த்திகா! என் தங்கச்சி மக. பி காம் படிச்சிருக்கா. ரொம்ப நல்ல பொண்ணு. இவளை பாலாவுக்குப் பார்க்கலாமா?" என்றார் சிவகாமியம்மாள். மற்றவர்கள் பதில் சொல்லு முன்பே பாலா "நான் இப்பவே ரெடி" எனவும் சிரித்தனர் மற்றவர்கள். வரும் தை மாதத்தில் அதாவது ஃபிப்ரவரி 8ஆம் தேதி இரு திருமணங்களையும் ஒரே மேடயில் நடத்தி விடலாம் எனவும், செலவை பாதிப்பாதியாக பிரித்துக்கொள்ளலாம் எனவும் முடிவு செய்து கொண்டனர் பெரியவர்கள். எல்லாம் பேசி முடித்து சிறியவர்களைத் தேடியபோது அவர்களைக் காணவேயில்லை. வாசலில் இருந்த மரத்தடியில் வெங்கி + திவ்யா, பாலா + கார்த்திகா ஜோடி தன்னை மறந்து பேசிச் சிரித்துக்கொண்டிருப்பதை மனம் நிறைய மகிழ்ச்சியோடு பார்த்து ரசித்தனர் பெரியவர்கள்.

முக்கியக் குறிப்பு:

காட்டு பங்களாவில் அந்தப் பூ ஜாடியில் இருந்த மலர்கள் மெலிதாக துற்நாற்றம் வீசத் தொடங்கின. ஒவ்வொரு துளியாக கருநீல மற்றும் பச்சை நிறத் தண்ணீர் சுரக்க ஆரம்பித்தது. வெளியில் மெல்லிய குளிர் காற்றும் வீச ஆரம்பித்தது.
 
Status
Not open for further replies.

Latest Episodes

New Threads

Top Bottom