(Hi friends,
இன்று உங்களுக்காக சர்ப்ரைஸ் யூடி கொடுத்துள்ளேன்.படித்து விட்டு உங்கள் கருத்துக்களை கருத்து திரியில் பதிவிடவும்..)
உயிர் துடிப்பாய் நீ!
அத்தியாயம் 26
நமக்குள் ஏதோ ஒரு மூலையில் அன்பும் ,கருணையும், பிறருக்கு உதவும் நற்குணங்களும் குடி கொண்டிருப்பதால் தான் மனித குலம் தழைக்கிறது.
தெரியாதவர்களுக்கே உதவும் பொழுது நாம் உயிராய் நேசிப்பவர்களுக்காக உதவாமல் இருக்க முடியுமா..?
திகழொளி கேட்டது போல் மிகன் அடுத்த நாளே திகழொளியின் கல்லூரிக்குச் சென்றான்.
திகழொளியோ, தந்தை கல்லூரியில் இறக்கி விட்டுச் சென்றதும் ,மிகனுக்காக கல்லூரியின் நுழைவாயில் அருகிலேயே காத்து நின்றாள்.
மிகன் எப்படியும் வருவான் என்று நம்பினாள்.அவளை விட அவன் மீது அவளுக்கு அளவு கடந்த நம்பிக்கை இருந்தது.
மிகனோ, அவளின் நம்பிக்கை பொய்த்துப் போகாமல் , அறவாணன் சென்ற அடுத்த ஐந்தாவது நிமிடம் திகழொளியை காண வந்துவிட்டான்.
மிகனைக் கண்டதும் தாயைக் கண்ட சேய்யைப் போல் அவன் அருகில் மான்குட்டியாய் ஓடோடி வந்தாள்.
திகழொளியைக் கண்டதும் மிகனுமே மகிழ்ச்சியுடன் அவளை எதிர் கொண்டான்.
இருவரும் சில நிமிடங்கள் பொதுவான விஷயங்களை மட்டும் பேசியவர்கள் அதன் பிறகு மிகன் "என்ன விஷயம் ஒளி ..?" என்று கேட்டான்.
அவளோ ,அவன் கேட்டதும் ,மடை திறந்த வெள்ளமாக அனைத்ததையும் அவனிடம் கொட்டித் தீர்த்தாள்.
தன்னை கேலி செய்த மாணவர்களையும்,தன்னை நேசிப்பதாக தொந்தரவு செய்த மாணவனையும், மிகனிடம் அடையாளம் காட்டினாள்.
மிகனுக்கோ, அவள் சொன்னதைக் கேட்டதும் ! அவனுள் அளவு கடந்த ஆத்திரம் பொங்கியது. அதுவும் தான் நேசிக்கும் பெண்ணை கேலி செய்தது ஒரு புறம் ஆத்திரத்தைக் கொடுத்தாலும், இன்னொரு புறம் அவள் பின் சுற்றும் மாணவனை நினைத்து அவனின் கோபம் மேலும் கூடியது.
தன்னவளை அவன் எப்படி நேசிக்கலாம்? என்ற எண்ணம் அவனுள் எரிமலையாய் குமறியது. அவனை அப்போதே அடித்து நொறுக்க வேண்டும் என்ற வெறி அவனுள் கொழுந்து விட்டு எரிந்தது.
திகழொளியிடம் , தன் கோபத்தை காட்டிக் கொள்ளாமல் ,"ஒளி எங்கிட்ட சொல்லிட்டியில்லே? இனி நான் பார்த்துக்குறேன். நீ போ..! நிம்மதியா இரு! இனி அவனால் உனக்கு ஒரு பிரச்சனையும் வராது.." என்று அவளுக்கு உறுதி கொடுத்து, ஆறுதல் கூறி அனுப்பி வைத்தான்.
மிகன் என்ன செய்தானோ? ஏது செய்தானோ..? அதன் பிறகு அவளை கேலி செய்த மாணவர்களும் சரி! அவள் பின்னாடி சுற்றிய மாணவனும் சரி ! மிகனிடம் சொல்லிய நாளிலிருந்து அவள் இருக்கும் இடத்திற்கே வருவதில்லை..
அதுமட்டுமின்றி அவளைக் கண்டாலே பேயைக் கண்டதைப் போல் ஓடினார்கள்.
திகழொளிக்கு எப்போதுமே மிகனைப் பிடிக்கும். ஆனால் இப்போது, இன்னும்..இன்னும் , அவன் மேல் அளவுகடந்த நேசம் உண்டானது.
எந்த பெண்ணுக்குமே தனக்காக எதுவும் செய்யும் ஆண்மகனைக் கண்டால்! அவன் மீது அன்பும், மரியாதையும் கூடும்..திகழொளி மட்டும் அதற்கு என்ன விதிவிலக்கா..?
மிகன் அவள் மீது காட்டிய அக்கறை ! அவளுள் அவன் மீது பித்து கொள்ளச் செய்தது.
தனக்காக மிகன் இருக்கிறான் என்ற தைரியம் அவளுக்கு பெரும் நம்பிக்கையை விதைத்தது. நேசத்தின் சிறு துளி அவளின் நெஞ்சத்திற்குள் மகிழ்ச்சியை பெருக்கியது.நாளுக்கு நாள் உலகமே அவளுக்கு அழகா தோன்றியது.
மிகனின் நேசப் பார்வையும் அவள் மனதிற்குள் வசந்தத்தை வாரி வழங்கியது. மிகன் என்ன தான் செய்து, அந்த மாணவர்களை விரட்டினான் என்று அறிந்து கொள்ள வேண்டுமென்று பேராவல் அவளுள் எழுந்தது.
அவனுடன் பேசவேண்டும் என்று அவள் மனம் துடித்தது. ஆனால், அவனை எப்படி சந்தித்து பேசுவது என்று குழம்பியவளுக்கு சட்டென்று ஒரு யோசனை தோன்றியது.
உடனே மிகனைப் போலவே கடிதம் எழுதி புத்தகத்திற்குள் மடித்து வைத்து அமுதனிடம் கொடுத்து அனுப்பினாள்.
தன் தமக்கையின் எண்ணம் தெரியாமல், அமுதனும் இருவருக்கும் தூதுவனாக செயல்பட்டான்.
இருவரும் அதன் பிறகு அடிக்கடி திகழொளியின் கல்லூரியில் சந்தித்துக் கொண்டார்கள். அப்படி சந்தித்துக் கொண்ட சமயத்தில் திகழொளி தன் சந்தேகத்தை அவனிடம் கேட்டாள்.
"நீங்க அந்த பசங்களிடம் என்ன சொன்னீங்க.. ?இப்பெல்லாம் என்னைப் பார்த்தாலே பேய்யைக் கண்டது போல் ஓடறாங்க.."
"ஓ..அப்படியா வெரிகுட்.."
"என்ன செய்தீங்கன்னு சொல்லுங்க..?என்று குரலில் செல்ல சினுங்கலுடன் கேட்டாள்.
" ம்..! நீ சின்னப் பெண் ! அதெல்லாம் சொன்னா உனக்குப் புரியாது.."
"நீங்க சொன்னால் தானே புரியுமா? புரியாதான்னு தெரியும்.."
"ம்..! உண்மையை சொன்னேன் .."
"உண்மையா? என்ன உண்மை.."
"அது தான் சொன்னேனே! உனக்கு சொன்னா புரியாதுன்னு.."
"ஒண்ணுமே சொல்லாமல் புரியாதுன்னு சொன்னா எப்படி..?"
"சரி அதை இன்னொரு நாள் சொல்றேன் ! இப்ப எனக்கு நேரமாச்சு கிளம்புறேன்..நீயும் போ..!"
"அப்ப சொல்லமாட்டீங்க அப்படித்தானே..?"
"அப்படி எல்லாம் இல்லை . உங்கிட்ட சொல்லாமல் வேறு யார்கிட்ட சொல்லப் போறேன். இப்ப கிளம்பட்டுமா..?" என்று கூறியபடி தன் இரு சக்கர வாகனத்தை கிளப்பினான்.
அவளோ, தொங்கிப் போன முகத்துடன் உம்மென்று நின்றாள்.
அவளின் முகத்தைப் பார்த்ததும் அவனுக்கு ஏதோ போல் இருந்தது.. உடனே வண்டியை ஒரு வட்டம் அடித்து அவள் அருகில் நிறுத்தியவன். "இப்படி முகத்தை தூக்கி வைச்சுட்டு நின்னா நான் எப்படி போவது..? அப்புறம் என்னால் இன்று முழுவதும் ஆஃபிஸில் வேலையே செய்ய முடியாது.." என்று அன்பொழுக அவன் சொன்னதும்..
அடுத்த நொடி முகத்தில் மென்புன்னகையுடன்" சரி போய்ட்டு வாங்க.. நான் நல்லாத் தான் இருக்கேன்.." என்றாள்.
அவனோ, "குட் கேர்ள் மை டியர்.." என்றவன், விழிகளை லேசாக சிமிட்டியவன்,அடுத்த நொடி மின்னலென வண்டியை கிளப்பிச் சென்றான்.
திகழொளியோ அவன் செய்கையில் உறைந்து போய் நின்றாள்.அவன் 'மை டியர்' என்று சொன்னதும், விழிகளை சிமிட்டி காட்டியதும் , அவளுள் இனம் புரியாத மகிழ்ச்சியை தந்தது. கரைபுரண்டோடும் வெள்ளம் போல் அவள் உள்ளம் ஆனந்தத்தில் ஆர்ப்பரித்தது.
அன்றைய நாள் முழுவதும் அவனின் வார்த்தைகள் அவளின் செவியில் இன்னிசையாக இனித்தது.
இதுவரை அவனும் சரி! அவளும் சரி! தங்கள் நேசத்தை பறிமாறிக் கொண்டதில்லை..ஆனால், கடத்திக் கொண்டார்கள்.
அதன் பிறகு வந்த நாள்கள் இன்னும் தேனாக அவர்களுக்கு இனித்தது.
இருவரும் ஒருவருக்கு ஒருவர் சந்திக்கும் பொழுது எல்லாம் சின்ன.. சின்ன, பரிசுகளை பறிமாறிக் கொண்டார்கள். நாளொரு வண்ணமும் ! பொழுதொரு வண்ணமுமாக ! அவர்களின் நேசம் அவரவர் மனதிற்குள் வளர்ந்து கொண்டே இருந்தது.
மிகனுமே அவளை உயிராக நேசித்தான்..அவள் இல்லாத வாழ்க்கையை அவனால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை..
திகழொளியின் படிப்பு முடிந்த பின் அவளிடம் தன் விருப்பத்தை சொல்லனும்.அதன் பிறகு இருவீட்டாரிடமும் தன் விருப்பத்தைக் கூறி சம்மதம் பெற வேண்டும் என்று மனக்கோட்டை கட்டினான்.
தன் வீட்டு சாளரம் தான் எப்போதும் அவனுக்கு துணை.அங்கிருந்து தான் நாள்தோறும் அவளை ரசிப்பான்.
திகழொளியின் படிப்பு முடியும் நாளுக்காக காத்திருந்தான்.
அவளுடைய இறுதி தேர்வு நாளை எதிர்நோக்கிக் கொண்டு இருந்தான்.
அமுதனுக்கோ ,தமக்கையின் வதனத்தில் தெரிந்த மலர்ச்சியும், மிகனைக் கண்டால் அவளின் விழிகளில் தெரிந்த ஒளியும் சிறு சந்தேகத்தைக் கொடுத்தது.
அவன் ஒன்றும் இப்போது சிறு பையன் இல்லையே..அவனும் விடலை பருவத்தில் இருந்தான்.
ஒரு நாள் தன் சந்தேகத்தை தமக்கையிடம் கேட்டே விட்டான். முதலில் திகழொளி மழுப்பினாலும், தம்பியிடம் மறைக்க முடியாமல் உண்மையை கூறிவிட்டாள்.
அமுதனோ, சிறிது நேரம் எதுவும்பேசவில்லை..அவனுக்கு தமக்கை சொன்ன விஷயத்தை ஜீரணிக்க சில நிமிடங்கள் தேவைப்பட்டது.
அமைதியாக இருந்த தம்பியின் நிலையைப் பொறுக்க முடியாமல் திகழொளி "அம்மு ஏன் டா எதுவும் பேச மாட்டீங்கிறே ! உனக்கு பிடிக்கலையா..? என்று தவிப்பாக கேட்டவளிடம்..
"அக்கா அப்படி எல்லாம் இல்லை.. நான் இதை எதிர்பார்க்கவில்லை..மிகன் அண்ணா உனக்கு நல்ல சாய்ஸ் தான்..நல்ல குணம் ! எனக்கும் அவரை ரொம்ப பிடிக்கும்.ஆனால் , அம்மா , அப்பா ஒத்துக்குவாங்களா ?"
"தெரியலை டா.. ஆனால், என் வாழ்க்கை அவரோடு தான் என்பதில் நான் உறுதியாக இருக்கேன்.."
"மிகன் அண்ணா என்ன சொல்றார்.."
"எதுக்கு..?"
"எதுக்கா? உங்க கல்யாணத்தைப் பற்றி தான்.."
"தெரியலே ! இதைப்பற்றியெல்லாம் நாங்க பேசிக் கொண்டதில்லை.."
"அப்புறம் என்ன தான் பேசுவீங்க..காதலிக்கறதை பற்றி மட்டும் தான் பேசிப்பீங்களா..?"
"அச்சோ! அதெல்லாம் சொல்லிக்கிட்டது இல்லை.."
"என்னக்கா சொல்றே ? காதலையும் சொன்னது இல்லையா..? அப்புறம் எப்படி அவர் கூட வாழ்க்கைன்னு முடிவு பண்ணுனே..?அந்த அண்ணாவாவது லவ்வ சொன்னாங்களா..?"
"இல்லை.."
"என்னது இல்லையா? இதுவரை இரண்டு பேரும் லவ் பண்றேன்னு சொல்லவே இல்லையா..?"
"ஆமாம்..!"
"அக்கா உனக்கு என்ன பைத்தியமா? அவர் உன்னை விரும்புறாரான்னு தெரியாமல் , அவர் மனசுலே என்ன இருக்குன்னு தெரியாமல் , நீ என்ன தைரியத்தில் உன் வாழ்க்கையை அவரோட தான்னு முடிவு பண்றே..?"
"சொன்னால் தான் காதலா? உணர்ந்தாலே காதல் தான்.!"
" நல்லா வியக்கானம் பேசு.. ! அந்த அண்ணா நான் அப்படி நினைக்கலேன்னு சொன்னா என்ன செய்வே..?"
"அப்படி எல்லாம் அவர் சொல்ல மாட்டார்..அவர் வார்த்தையால் அதை சொல்லாட்டீயும், செயலால் அவர் என்னை விரும்புவதை உணர்த்தி இருக்கார்.."
"அக்கா எனக்கு என்னமோ இது சரின்னு படலை.. அவர் சொல்லாட்டி, நீயாச்சும் சொல்லி உன் மனசுளே இருக்கிறதை சொல்லுக்கா .."
"போடா நான் எப்படி சொல்ல முடியும்.."
"நீ சொல்லாமே யார் சொல்லுவா..?
"அவர் சொல்லட்டும்..!"
"ஆமாம், இதில் தான் நீ ஈகோ பார்ப்பீயா ..?"
"போடா லூசு ! இது ஈகோ இல்லை.. அவர் வந்து சொல்லும் போது, அந்த பீல் வேற மாதிரி இருக்கும் . அது சொன்னால் உனக்கு புரியாது.."
"எனக்கு புரியாட்டி போது ! உன் மனசு அவருக்கும், அவர் மனசு உனக்கும் புரிஞ்சா போதும்.." என்றவன்.அதன் பிறகு தன் தமக்கையை மிகனிடம் தன் காதலைப் பற்றி சொல்லச் சொல்லி கட்டாயப்படுத்திக் கொண்டே இருந்தான்.
திகழொளியும் தம்பி பக்குவமாக சிந்தித்து தான் சொல்கிறான் என்பதை புரிந்து கொண்டாள்.தம்பி கூறியதிலிருந்த உண்மையை உணர்ந்தும் கொண்டாள்.
எதையும் அறிந்து கொள்ளாமல் , தானே ஒன்றை நினைத்துக் கொள்வது தவறு ! என்று யோசித்தாள்.
மிகனிடம் தன் மனதில் உள்ளதை சொல்வும் , அவன் மனதையும் அறிந்து கொள்ளும் நேரத்திற்காகவும் காத்திருந்தாள். ஆனால், அதற்கான நேரம் தான் அவளுக்கு கிடைக்கவே இல்லை..
சமீப காலமாக மிகன் அவள் கண்களிலேயே படாமல் இருந்தான்.
பொறுத்துப் பார்த்தவள் ,காத்திருக்க முடியாமல் , அமுதனிடம் "நான் மிகனைப் பார்க்க வேண்டும் ..! நீ போய் அவரை நாளைக்கு காலேஜ் வரச் சொல் ..!"என்று சொல்லி அனுப்பினாள்.
ஆனால் அமுதனோ, மிகன் வீட்டில் இல்லை என்றும், அலுவலக வேலையாக வெளியூர் சென்று இருப்பதாகவும், தமக்கையிடம் வந்து சொன்னான்.
திகழொளிக்கோ, மனம் மிகவும் குழம்பிப் போனது. தன்னிடம் கூடச் சொல்லாமல் வெளியூர் சென்று விட்டானே! என்று வருந்தினாள்.
அதுவும் திகழொளி அவனைப் பார்த்தே பதினைந்து நாள்களுக்கு மேல் இருக்கும்.
அமுதன் சொன்னது போல் மிகனுக்கு தன் மேல் எந்த விருப்பமும் இல்லையா? நாம் தான் தவறாக நினைத்து விட்டோமா? என்று தவியாய் தவித்தாள்.
ஆனால் அவள் மேலும் அதை நினைத்து வருந்த முடியாமல் , அவளுடைய கடைசி வருடத்தின் தேர்வுகள் வந்து அவளை எதைப் பற்றியும் சிந்திக்க முடியாமல் செய்தது.
நாள்களை எப்படியோ நெட்டி தள்ளிக் கொண்டிருந்தவளுக்கு, அன்றோடு கல்லூரியின் கடைசி தேர்வு நாளும் வந்தது.
கடைசி தேர்வை வெற்றிகரமாக முடித்து விட்டு ,வீட்டிற்கு கிளம்பினாள்.
ஆனால், அன்று அவளுக்கு வீட்டில் பெரிய அதிர்ச்சி காத்திருப்பதையும், தன் நம்பிக்கை ! சுக்கு, நூறாக உடையப் போவதையும் அப்போது அவள் அறியவில்லை..
தொடரும்..
அடுத்த யூடி புதன்கிழமை..
அடுத்த யூடி நாளை வேண்டுமென்றால் படிக்கிறவர்கள் ஒரு வார்த்தையாவது கருத்து திரியில் கருத்து பதியுங்கள்..உங்கள் காமெண்ட்ஸ் தான் நான் எழுதுவதற்கு மிகப் பெரிய ஊக்கம்..காமெண்ட்ஸ் சைட்டில் அதிகம் வந்தால் நாளையே அடுத்த யூடி போடுகிறேன்..
நன்றி
அன்புடன்
இனிதா மோகன்.