எண்ணங்களே வண்ணங்களாய்...
அத்தியாயம் 3
எங்கே கிளம்பிட்ட சாருமா? என்றார் சாருவின் பாட்டி.
ஸ்கூலுக்கு தான் பாட்டி! என்னோடு வேலை பார்க்கிற எல்லோருக்கும் இன்னைக்கு தான் பத்திரிக்கை கொடுக்க போகிறேன்.
அப்பாவையும், அம்மாவையும் மதியம் வரச்சொல்லியிருக்கிறேன் பாட்டி.
எல்லாரையும் கல்யாணத்துக்கு முந்தைய நாளே வரச்சொல்லிருமா சாரு! என்றார் பாட்டி.
சரிங்க பாட்டி! ஸ்கூலுக்கு டைம் ஆகிடுச்சு போய்ட்டு வருகிறேன் என்று கூறிவிட்டு கிளம்பினாள் சாரு.
விமானத்தில் ஏறி அமர்ந்தவன் கண்களை மூடியதும், மூன்று வருடங்களுக்கு முன்பு நடந்த காட்சிகள் அனைத்தும் அவன் கண் முன்னே வந்து சென்றது.
அவனை அறியாமலேயே சந்துருவின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
மனோஜ் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததால் சந்துருவின் கண்ணீரை கவனிக்கவில்லை.
இன்னும் சில மணி நேரங்களில் விமானம் தரையிறங்க போகிறது என்று விமான ஓட்டுனரும், விமான பணிப்பெண்களும் முன் அறிவிப்பு செய்து கொண்டிருந்தனர்.
மனோஜ் தூங்கி எழுந்து கண்களை திறக்கும் முன், வேகமாக தன் கண்களை துடைத்து விட்டு தண்ணீரை குடித்தான் சந்துரு.விமானம் இந்தியாவை வந்தடைந்தது.
விமான நிலையத்தில் இருந்து வீட்டிற்கு அழைத்து செல்ல, சந்துருவின் சித்தப்பா காரில் வந்திருந்தார்.
நம்ம ஊரு...
நம்ம ஊரு தான்டா மச்சான்!
அடடா! என்ன அழகு? என்ன அழகு?
பச்சை பசேல்னு கண்ணுக்கு குளுமையா, பார்க்கும் போதே மனசுக்கு நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் இருக்குதுல சந்துரு என்றான் மனோஜ்.
ம்ம்...என்ற சத்தம் மட்டும் சந்துருவிடமிருந்து வந்தது.
கார் வீட்டை நெருங்கியதும், வாசலில் வாழைமரமும், வீடு முழுக்க மாவிலை தோரணங்களாலும் மலர்களாலும் அலங்காரம் செய்து வைத்திருந்தனர்.
கல்யாண ஏற்பாடுலாம் வேகமாக நடக்குது போல சித்தப்பா என்றான் மனோஜ்.
ஆமாப்பா மனோஜ் என்றார் சந்துருவின் சித்தப்பா.
வாசலில் அம்மாவும், சந்துருவின் சித்தியும் ஆராத்தி தட்டுடன் காத்திருந்தனர்.
சந்துரு காரில் இருந்து இறங்கியதும் சந்துருவுடன் சேர்த்து மனோஜுக்கும் திருஷ்டி சுத்திவிட்டு வீட்டிற்குள் அழைத்து சென்றனர்.
உன் கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா சாரு? அடுத்த வாரம் கல்யாணம் வச்சுக்கிட்டு இன்னைக்கு ஸ்கூலுக்கு வந்திருக்க என்றாள் பானு.
எல்லா டீச்சர்களுக்கும் பத்தரிக்கை கொடுத்து விட்டு, விடுமுறை விண்ணப்பத்தையும் தலைமை ஆசிரியர் கையில் கொடுத்து சொல்லிட்டு கிளம்பலாம்னு தான் வந்திருக்கிறேன் என்றாள் சாரு.
கல்யாண கலை முகத்துல தெரிய ஆரம்பிச்சிருச்சு சாரு.இன்னைக்கு வழக்கத்தை விட ரொம்ப பொலிவாக இருக்க.
நேத்து மாப்பிள சார்க்கிட்ட பேசிய தாக்கம் முகத்துல நல்லா ஜொலிக்குதே சாரு! என்றாள் பானு.
அப்படிலாம் ஒன்னும் இல்லடி பானு.நேத்து பாட்டி நிறைய பயிறு வகையை அரைத்து முகத்துல தேய்க்க சொன்னாங்க.அதுதான் இந்த பொலிவுக்கு காரணம் என்றாள் சாரு.
அவுங்களிடம் இன்னும் பேசவே இல்லை பானு.என்னடி நீ? இந்த காலத்துல போய் இப்படி இருக்கியே சாரு?
இந்த நேரத்துக்கு வாட்ஸ்அப்,
பேஸ்புக்னு பேசி டூயட் சாங்க் பாடிருக்க வேண்டாமா?
படிப்பிலும், செய்யும் வேலையில் மட்டும் புலியாக இருந்தா போதாது சாரு என்று தொடர்ந்து பல அறிவுரைகளை அடுக்கி கொண்டே போனாள் பானு.
அவள் பேசுவது அனைத்தையும் மெல்லிய புன்கையுடன் ரசித்துக்கொண்டு கேட்டு கொண்டிருந்தாள் சாரு.
என்னடி? நான் பேசிக்கிட்டே இருக்கேன். நீ எதுவும் சொல்லாமல் சிரித்துக்கொண்டு இருக்கிற சாரு என்றாள் பானு.
"என் வருங்கால அண்ணன் ரொம்ப கொடுத்து வைத்தவர் தான்" என்று உன்னை நினைத்து பார்த்தேன்!அதனால் தான் சிரித்தேன்! என்று சாரு கூறியதும் பானுவிற்கு வெட்கம் வந்து விட்டது.
சரி சரி பானு! அப்பா, அம்மா வரும் நேரமாச்சு.நான் சென்று பார்த்து விட்டு எல்லோருக்கும் பத்திரிக்கை கொடுத்துவிட்டு அப்படியே வீட்டு கிளம்பிடுவேன்.
"கண்டிப்பாக குடும்பத்தோடு எல்லோரும் கல்யாணத்துக்கு வந்துருங்க பானு" என்றாள் சாரு.
சரி.. சரி...நீ முதலில் மாப்பிள சார்க்கிட்ட பேசுகிற வழியைப்பாரு சாரு என்றாள் பானு.
"கண்டிப்பாக கல்யாணத்துக்கு முன்னாடி பேச முயற்சி செய்கிறேன்" என்று கூறிவிட்டு சென்றாள் சாரு.
ஏன்பா மனோஜ்! நீ கூட சொல்லக்கூடாதா? தலைமுடி வெட்டாமல், தாடியும் மீசையுமா பார்க்க புதுமாப்பிள்ளை மாதிரியா இருக்கிறான்?
நான் எவ்வளவோ சொல்லி பார்த்துவிட்டேன் அம்மா! என் பேச்சை கேட்கவே இல்லை அம்மா! என்றான் மனோஜ்.
சரி...சரி...இரண்டு பேரும் போய் குளித்துவிட்டு வந்து சாப்பிடுங்க.
கொஞ்சம் நேரம் ஓய்வெடுத்த பிறகு டவுனுக்கு சென்று நல்லா மாப்பிள்ளை தோரணைக்கு தலைமுடியை வெட்டிவிட்டு தாடியை வழுச்சுட்டு வாடா சந்துரு! என்றார் சந்துருவின் அம்மா.
சரிம்மா... என்று சலிப்புடன் சொல்லி விட்டு மனோஜை அழைத்துக்கொண்டு தனது அறைக்கு சென்றான் சந்துரு.
சாருவின் கைபேசிக்கு மீண்டும் ஒரு அழைப்புமணி வந்தது.
வேறு யாருமில்லை... சாருவின் வருங்கால மாமியாரிடமிருந்துதான்.
கைபேசியை எடுத்தவுடன் முதல் வார்த்ததையாக வணக்கம் அத்தை என்று கூறிய சாருவின் மரியாதை குணம் கண்டு சந்துருவின் அம்மாவின் நெஞ்சம் நெகிழ்ந்தது.
சாருவையும் குடும்பத்தாரையும் நலம் விசாரித்து விட்டு சந்துரு வந்துவிட்ட தகவலையும் கூறினார்.
நாளைக்கு தாத்தா வீட்டிற்கு வரும்போது நீயும் சந்துருவும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்து பேச ஏற்பாடு செய்கிறேன் சாரு.
உனக்கு ஓகேவா சாரு ? என்றார் சந்துருவின் அம்மா.
கண்டிப்பாக அத்தை.இத்தனை நாட்கள் அந்த ஒரு நொடிக்காக தான் தவமாய்ய தவமிருந்து காத்துக்கொண்டிருக்கின்றேன்.
சாஸ்திர சம்பிரதாயம் மட்டும் இல்லையென்றால், நான் இப்போதே புறப்பட்டு அவரை காண அங்கு வந்துவிடுவேன் அத்தை! என்று சொல்லனும் போல அவளது மனம் துடியாய் துடித்தது.
ஆனால், அவளோ! தனது உணர்வுகளை எல்லாம் அடக்கிக்கொண்டு சரிங்க அத்தை.
தாத்தா என்ன சொல்கிறாரோ? அதன்படி செய்கிறேன் என்று கூறினாள்.
மறுநாள் காலையில் சாருவின் தாத்தாவும் பாட்டியும், அவளது அப்பா அம்மாவும் சந்துருவை பார்க்க அவனது வீட்டிற்கு சென்றனர்.
சந்துருவை பார்த்ததும், தனது பேத்திக்கு பொருத்தமான பையனை தான் தேர்ந்தெடுத்திருக்கிறோம் என்று நினைத்து மனதில் மகிழ்ச்சியடைந்தார் தாத்தா.
சந்துருவின் அம்மா, சாருவின் தாத்தவிடம் சந்துருவும் சாருவும் ஒருவரையொருவர் நேரில் சந்தித்து பேசுவதற்கு அனுமதி கேட்டார்.
நானே இது குறித்து உங்களிடம் பேச வேண்டும் என்றிருந்தேன்.
எங்களது வீட்டில் வந்து பேசினால் மாப்பிள்ளையால் சகஜமாக பேச முடியாது.
புது இடம் என்பதால் கொஞ்சம் அவருக்கு தயக்கம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
எங்கள் ஊர் எல்லையில் உள்ள மலைப்பிள்ளையார் கோவிலுக்கு, நாளை காலை பத்து மணியளவில் சாருவை அவளது சிநேகிதியுடன் அனுப்பி வைக்கிறேன் என்றார் தாத்தா.
ரொம்ப சந்தோஷம் ஐயா! அப்போ நானும் சந்துருவையும் அவனது நண்பனுடன் அனுப்பி வைக்கிறேன் என்று கூறினார் சந்துருவின் அம்மா.
அந்த காலத்து தாத்தாவாக இருந்தாலும் இந்த கால பசங்களின் மனதை நன்கு புரிந்து வைத்து அருமையாக யோசித்து முடிவு எடுக்கிறார்ல சந்துரு என்றான் மனோஜ்.
நல்ல குடும்பத்துல தான் அம்மா உனக்கு பொண்ணு பார்த்துருக்காங்க...
சரி...சரி...மறுபடியும் உன் புராணம் பாட ஆரம்பிக்காதடா மனோஜ் என்றான் சந்துரு.
சாருவின் குடும்பத்தார் கிளம்பியதும், முடிந்ததையே நினைச்சுக்கிட்டு இருக்காத சந்துரு.
மாப்பிள்ளையா இலட்சனமாக அந்த பொண்ணுகிட்ட மனம் விட்டுப்பேசுடா.
அவள் தான் இனி உனக்கு எல்லாமே.
இரண்டு பேருக்கு இடையில் எந்தவித ஒளிவும் மறைவும் இருக்கக்கூடாது சந்துரு.
உனக்கு எல்லாம் தெரியும்.பார்த்து பக்குவமாக சாருக்கிட்ட எடுத்து சொல்லு.
நீ எதுவும் சொல்ல வேண்டாம்னு சொன்னதால் தான், நான் இன்னும் எதுவும் சாருக்கிட்ட அந்த விஷயத்தை பற்றி சொல்லவில்லை.
இன்னைக்கு இல்லாட்டிலும் என்றாவது ஒரு நாள் சொல்லித்தான ஆகனும் சந்துரு என்றார் சந்துருவின் அம்மா.
சரி...சரி...அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன் என்றான் சந்துரு.
வெளிநாட்டிலிருந்து என் மருமகளுக்கு என்னடா வாங்கிட்டு வந்த சந்துரு? என்றார் சந்துருவின் அம்மா.
ஒன்றுமே வாங்கி்ட்டு வரவில்லைனு சந்துரு மட்டும் சொன்னா? சந்துருவோட சேர்ந்து இதெல்லாம் நீ எடுத்து சொல்ல மாட்டியானு? நமக்கும் சேர்த்து செம திட்டு விழும் என்று மனதில் நினைத்து பார்த்தான் மனோஜ்.
உடனே மனோஜ் அதெல்லாம் நிறைய வாங்கிட்டு வந்திருக்கிறான் அம்மா என்றான்.
கண் சைகையில் சந்துருவிடம் பேசாமலிரு! என்றான் மனோஜ்.
சாருவிற்கு புத்தகம் படிக்க ரொம்ப பிடிக்கும். அவளுக்காக ஒரு புத்தகம் வாங்கிவைத்திருக்கின்றேன்.
அதையும் நீ வாங்கிய பொருட்களோடு சேர்த்து கொண்டு போய் கொடுத்துவிடு என்றார் சந்துருவின் அம்மா.
தாத்தா என்ன கூறுவார்? என்று ஆவலாக அவரது வருகைக்காக வழியின் மீது விழியை வைத்துக்கொண்டு காத்திருந்தாள் சாரு.
தாத்தா வந்ததும், சாரு வேகமாக மான் துள்ளிக்குதித்து ஓடுவது போல வேகமாக ஓடி தாத்தவிடம் சென்றாள்.
தாத்தா மாமா பார்க்க நடிகர் அஜித் மாதிரி இருக்கிறாரா? இல்ல நடிகர் ரஜினி மாதிரி இருக்கிறாரா? என்று சிரித்துக்கொண்டே கேட்டாள் சாருவின் தங்கை மதி.
அட போடா மதி! மாப்பிள்ளை முகத்தில் நிறைய பருவும், முடி எல்லாம் கொட்டி கொஞ்சம் சொட்டையாவும் இருக்கிறார் என்று சொல்லிக்கொண்டே சாருவை பார்த்தார்.
சும்மாயிருங்க! உங்களுக்கு எப்பவும் கேலிதான் என்றார் பாட்டி.
மாப்பிள்ளை போட்டோவை விட நேரில் ரொம்ப அழகாக கதாநாயகன் போல இருக்கிறார் சாரு! என்றார் பாட்டி.
அந்த காலத்து எம்.ஜி.ஆர் போல நல்லா கலரா இருந்தாருடா என்று பாட்டி சொன்னதும் சாருவிற்கு வெட்கம் வந்து விட்டது.
நாளைக்கு காலையில் பானுவை அழைத்து கொண்டு நம்ம ஊர் மலைப்பிள்ளையார் கோவிலுக்கு ஒரு எட்டுப்போய் மாப்பிள்ளையை பார்த்துவிட்டு வந்திருடா சாரு! என்றார் தாத்தா.
சரிங்க தாத்தா... என்று கூறிவிட்டு சந்தோஷமாக தனது அறைக்கு விரைந்து சென்றாள்.
பானுவிற்கு போன் செய்து அவளிடம் எல்லா கதையையும் சொல்லி முடித்து விட்டு, நாளைக்கு காலையில் கோவிலுக்கு போகனும் நேரத்துக்கு வீட்டிற்கு வந்திரு பானு! என்றாள் சாரு.
சந்துருவின் ஹாய்! என்ற குரல் கேட்பதற்கே ஒரு நாள் இரவெல்லாம் தூங்கதவள்.
தன்னுடைய வாழ்க்கை துணையை முதன் முதலாக நேரில் சந்திக்க போகும் செய்தியை கேட்டதும் சாருவினால் இனி தூங்க முடியுமா?
சாரு, சந்துரு இவர்களின் முதல் முறை சந்திப்பு எப்படி இருந்தது? என்று அடுத்த அத்தியாயத்தில் காண்போம்....
- தொடரும் -
* * * * * * * * * * * * * * * *
இத்தொடரைக் குறித்த தங்களது பொன்னான விமர்சனங்களை கீழே உள்ள நீல வண்ண நிற எழுத்துகளை அழுத்தி அதில் பதிவு செய்யவும் .
🙏🙏🙏